Tuesday, January 26, 2010

கூகிளில்லாருக்கு இவ்வுலகில்லை!

2012-லே உலகம் அழிஞ்சிருமுன்னு புரளியைக் கிளப்பி வயித்துலே புளியைக் கரைச்ச புண்ணியவானுங்களுக்கு ஒரு கேள்வி. உலகத்தை விடுங்க, 2012-லே கூகிள்னு ஒரு சங்கதி இல்லாமப் போனா என்னண்ணே பண்ணுவீங்க?

அதுவும் நம்ம இந்தியாவுலே இருக்குறவங்க கதி என்னாகும்னும் நினைச்சாலே கதிகலங்குதய்யா! இந்த கூகிள்லே போயி நம்மாளுங்க என்னவெல்லாம் தேடியிருக்காங்கன்னு பார்த்தா, ஆச்சரியத்துலே நம்ம விரல் மேலே மூக்கை வைக்கிறதுக்குப் பதிலா பக்கத்து சீட்டுலே இருக்கிறவன் மூக்கு மேலே விரலை வச்சாலும் வச்சிருவோம். அவ்வளவு அறிவுப்பசி நம்மாளுங்களுக்கு! எப்படியெல்லாம் கூகிள்ளே போயி கேள்வி கேட்டிருக்காங்கன்னு நீங்களும் பாருங்களேன்.

கூகிளிடம் இந்தியர்கள் அதிகமாகக் கேட்ட கேள்விகளாவன:

1. ஒடம்பு ஊதிப்போச்சுண்ணே, எப்புடி எளைக்க?

2. ஹி..ஹி..எப்படிண்ணே முத்தம் கொடுக்கணும்?

3. நிறய பணம் வேணுமண்ணே, ஒரு வழி சொல்லுங்கண்ணே!

4. கர்ப்பமாகணுமுண்ணா என்ன செய்யலாமண்ணே?

5. இங்க்லீஷே வரமாட்டேக்கு! எப்படிப் பேசலாமண்ணே?

6. ஒடம்பு பருக்க ஒரு வழி சொல்லுங்கண்ணே!

7. அண்ணே, கிடாரு எப்படி வாசிக்கிறதுண்ணே?

8. வலைத்தளம் எப்படிப்போடுறதண்ணே?

9. அண்ணே, பொண்ணுங்களே எப்புடி நைஸ் பண்ணுறதுண்ணே?

10. 'டை" கட்டுறது எப்படிண்ணே?

இவ்வளவு கேட்டவங்களெல்லாம் எப்படிப் பல்லுவிளக்குறது, எப்படி அடிபம்புலேருந்து தண்ணியடிக்கிறது, எப்படி பீடி பத்த வைக்குறது, எப்படி விசில் அடிக்கிறது மாதிரி மிக முக்கியமான கேள்வியை எப்படிக் கேட்காமல் விட்டாங்கன்னு தான் தெரிய மாட்டேக்கு.

ஒடம்பை எப்படி இளைக்க வைக்கிறதுண்ணும் கேட்டிருக்காங்க; பருக்க வைக்க என்ன செய்யுறதுண்ணும் கேட்டிருக்காங்க. இத வீட்டுலே அப்பத்தா கிட்டே கேட்டிருந்தா, சுக்கும் தேனும் போட்டுக் கஷாயம் காய்ச்சிக் கொடுத்து உடம்பிலிருக்கிற ஊளைச்சதையெல்லாத்தையும் ஒரு மாசத்துலே விரட்டி அடிச்சிருக்குமில்லா? ஒடம்பு பருக்கணுமுன்னா தினமும் காலையிலே கம்பாங்களியும், வாரத்துக்கு ரெண்டு நாளு ஆட்டுக்கால் சூப்பும், கறிக்கொளம்பும் வச்சு ரெண்டு மாசத்துலே கழுத்தே கண்ணுக்குத் தெரியாத மாதிரி உடம்பப் பருக்க வச்சிர மாட்டாங்களா? சரி, கறி திங்காதவங்கன்னா கொண்டைக்கடலையும், பயறும் மொச்சைக்கொட்டையும் தெனமும் சமையல்லே சேர்த்து உடம்பைக் கொளுகொளுண்ணு செனமாடு மாதிரி ஆக்கியிருப்பாங்களே!

பொண்ணுங்களை எப்படி நைஸ் பண்ணுறது, முத்தம் எப்படிக் கொடுக்குறது, கர்ப்பமாகுறது எப்படி? மேட்டருக்கு வந்திட்டாங்க பார்த்தீங்களா? இதுக்கெல்லாம் வாத்ஸ்யாயனர் தொடங்கி, டாக்டர்.நாராயண ரெட்டி வரைக்கும் ஓலச்சுவடியிலேருந்து நெட்டுலே பி.டி.எஃப் வரைக்கும் தினுசு தினுசாக் கிடைக்குதா இல்லையா? என்னவோ போங்கய்யா, எவ்வளவு கிடைச்சாலும் திருப்திங்குறது மட்டும் வள்ளிசா கிடையாது.

நிறைய பணம் வேணுமாம் அண்ணாச்சிங்களுக்கும் அக்காங்களுக்கும்! இருக்கிறத வுட்டுப் பறக்குறதுக்கு இல்லே ஆசைப்படுதாக? போய்ப் பொளப்பப் பார்ப்பீங்களா!

இங்க்லீஷ் பேசணுமாம். லேய், அங்கிட்டு என்ன ஆவுடையப்பன் வாத்தியாரு டியூஷனா எடுக்காரு? எங்க வாத்தியாரு சொல்லுவாரு, வாரத்துக்கு ஒரு நாள் தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ் ரெண்டு பேப்பரும் வாங்கி ரெண்டுலேயும் தலையங்கம் மட்டும் படிக்கணும். ஏமுண்ணா, மொழிபெயர்த்துத் தான் போட்டிருப்பாங்க! தினமும் பத்து வார்த்தையாவது படிக்கணும்! எங்க ஊருலே யாரு ஸ்போக்கன் இங்க்லீஷ் சொல்லிக்கொடுத்தா? கையைக் காலை அடிச்சுக் கவுந்து எந்திருச்சா இங்கிலீஷ் தானா வருமில்லா...?

கிடாரு வாசிக்கணுமாம். வாசிச்சிட்டாலும்....! உடனே இளையராசாவாகிரவா போறீங்க?

"டை" கட்டுறது எப்படின்னு அடுத்த வூட்டு அந்தாணிசாமிகிட்டே கேட்குறத வுட்டுப்போட்டு கூகிள்ளே போய் கோட்டித்தனமாக் கேட்டுக்கிட்டிருக்காக.

இப்படியே போச்சுன்னு வையிங்க, பொறவு எப்படி சோறு திங்கணும், எப்படி தலை சீவணும், எப்படித் தாலிகட்டணுமுன்னு கூட கூகிள்ளே போயிக் கேட்டுக்கிட்டிருப்பாக!

அட, முக்கியமானதை வுட்டுப்போட்டேனே? எப்படிச் சாகணுமுன்னு கூட கூகிள்ளே போய் கேட்டிருக்காகன்னா பார்த்துக்குங்க!

நல்லா கேட்குறாங்கய்யா கேள்வி....!


பின்குறிப்பு: இதெல்லாம் 2008-லே கேட்ட கேள்விங்க! 2009-லே என்னென்ன கேட்டிருக்காங்களோ நம்மாளுங்க! பொறுத்திருந்து பார்க்கலாம். சரியா?

8 comments:

அகல்விளக்கு said...

//இவ்வளவு கேட்டவங்களெல்லாம் எப்படிப் பல்லுவிளக்குறது, எப்படி அடிபம்புலேருந்து தண்ணியடிக்கிறது, எப்படி பீடி பத்த வைக்குறது, எப்படி விசில் அடிக்கிறது மாதிரி மிக முக்கியமான கேள்வியை எப்படிக் கேட்காமல் விட்டாங்கன்னு தான் தெரிய மாட்டேக்கு.//

ஹாஹாஹாஹா

நீங்க செம சேட்டை பண்றீங்கண்ணா....

உங்க டிரெயினர் யாருண்ணா.....??

settaikkaran said...

//ஹாஹாஹாஹா

நீங்க செம சேட்டை பண்றீங்கண்ணா....

உங்க டிரெயினர் யாருண்ணா.....??//

நாங்கெல்லாம் சுயம்புலிங்கமுங்க! தெனம் ரெண்டு பேருக்கு டிரைனிங் கொடுத்திட்டிருக்கோமில்லா...?

அகல்விளக்கு said...

//தெனம் ரெண்டு பேருக்கு டிரைனிங் கொடுத்திட்டிருக்கோமில்லா...?//

சங்கத்தில என்னையும் சேத்துக்கங்க அண்ணா....

தமிழ் பொண்ணு said...

நான் உங்கள் வலை பின்னல் பாத்து ரொம்ப நேரம் சிரிச்சுகிட்டே இருந்தேன்.நல்லா இருக்கு உங்க வலை பின்னல்.இது போலவே நிறைய எழுதுங்க

settaikkaran said...

//சங்கத்தில என்னையும் சேத்துக்கங்க அண்ணா....//

அப்பப்போ வந்து போயிட்டிருந்தீங்கன்னா, குருவையே மிஞ்சிருவீங்க! நானும் அப்படித்தானே ஆனேன்.!

settaikkaran said...

//நான் உங்கள் வலை பின்னல் பாத்து ரொம்ப நேரம் சிரிச்சுகிட்டே இருந்தேன்.நல்லா இருக்கு உங்க வலை பின்னல்.இது போலவே நிறைய எழுதுங்க//

கவலையே படாதீங்க! நானே முயற்சி பண்ணினாலும் வேறே உருப்படியா என்னாலே எழுதவும் முடியாது. ரொம்ப நன்றிங்க!

நீச்சல்காரன் said...

ரசிக்க வச்ச பதிவுண்ணா super

settaikkaran said...

//ரசிக்க வச்ச பதிவுண்ணா super//

நீச்சல்காரர் அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி