Sunday, April 5, 2015

கிட்டாமணியும் கிஃப்ட் வவுச்சரும்வீட்டுக்குள் நுழைந்த கிட்டாமணியின் முகம் மொட்டைமாடியில் காயப்போட்ட சுண்டைக்காய் வற்றலைப்போல சுருங்கிப் போயிருந்தது. கதவைத் திறந்த பாலாமணி, கணவனின் முகம் பிதுக்கியெடுத்த ஷாம்பூ பாக்கெட்டைப்போல நசுங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.

"என்னங்க ஆச்சு? முகம் வாடிப்போயிருக்கு," பாலாமணியின் குரல் அந்தக்காலத்து ஆகாசவாணியின் நிலைய வித்துவான் குரல்போல நடுங்கியது. "உடம்பு சரியில்லை, ஆபீசுக்குப் போக வேண்டாம்னு டாக்டர் சொன்னாரில்லை. நல்லா ரெஸ்ட் எடுத்திருக்கலாமில்லே?"

"ரெஸ்ட் எடுக்கலாம்னுதான் ஆபீசுக்குப் போனேன்," கிட்டாமணி சோர்வுடன் சொன்னார். "இன்னிக்குக் காலையிலேருந்து எவனோ ஒருத்தன் போன் மேலே போன் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டிருக்கான்."

"என்ன டார்ச்சர்?"

"முதல்ல போன் பண்ணி எடுத்த எடுப்பிலேயே 'சோத்துல உப்புப் போட்டுத்தானே திங்குறே?'ன்னு கேட்டான்.. அதுக்கு நான், ‘சார், நீங்க தப்பா நினைச்சிட்டிருக்கீங்க! எங்க விட்டுலே சோத்துல உப்புப் போடமாட்டாங்க. சாம்பார், ரசத்துல தான். அதுகூட அப்பப்போ கொஞ்சம் ஏறக்குறைய இருந்தாலும் நான் கண்டுக்காம சாப்பிட்டுக்கிட்டு போயிருவேன்னு சொன்னேன். அவன் விட்டாத்தானே? கிரிக்கெட் மேட்சுல ஒவ்வொரு ஓவருக்கும் நடுவுல விளம்பரம் வர மாதிரி நாள்முழுக்கப் போன் பண்ணி நாராசமாத் திட்டித் தீர்த்துட்டான். "

"ஐயையோ, பைத்தியக்காரனா இருப்பானோ?"

""எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது," ஆயாசத்துடன் கூறினார் கிட்டாமணி. "என்னடா, எவனோ ஒருத்தன் என்கூட எஸ்.டி.டியில பேசறானேன்னு. ஆனா, விஷயம் வேற. இந்த நம்பரை நான் மூணு மாசத்துக்கு முன்னாடிதானே வாங்கினேன். இதுக்கு முன்னாடி இந்த நம்பரை யூஸ் பண்ணினவன் அந்த ஆளுகிட்டே கடன் வாங்கியிருப்பான் போலிருக்கு. அது தெரியாம என்னைப் புடிச்சு அப்படித் திட்டுறான்."

"அவன்கிட்டே சொல்ல வேண்டியதுதானே? அந்தக் கடன்காரன் நானில்லேன்னு..."

"சொன்னேனே, 'சார் நீங்க தப்பான ஆளோட பேசறீங்க. நானே கேட்டாலும் என்னை நம்பி ஒருத்தனும் நயா பைசா தர மாட்டான். என் பேரு கிட்டாமணி'ன்னு பொறுமையாச் சொன்னேன். அதுக்கு அவன், 'ஏண்டா, உன் பெயரை கிட்டாமணின்னு மாத்தி வைச்சுக்கிட்டா நான் உனக்குக் கொடுத்த 'Money' எனக்குக் கிட்டாமப் போயிடும்னு நினைக்கிறியா? வட்டியோட பணத்தைத் திருப்பித் தரியா, இல்லை கோர்ட்டுக்குப் போகட்டுமான்னு கேட்குறான்."

"இதென்ன புது வம்பாயிருக்கு?"

"ஆமாம். நான் என் வாழ்க்கையிலே கடனே வாங்கினதுல்லே. இந்தக் கொள்கைக்காகவே நான் கணக்குலேகூட கழித்தல் பாடத்துல பக்கத்துலேருந்து கடனே வாங்க மாட்டேன்.  அஞ்சாம் கிளாசுல ஆறு வருஷம் இருந்தேன் தெரியுமா?."

"கவலைப்படாதீங்க. உங்ககிட்டே எனக்குப் பிடிச்சதே நீங்க கணக்குல 'வீக்'ங்குறதுதான். எனக்கு எவ்வளவு சவுகரியமா இருக்கு தெரியுமா? அத விடுங்க. திரும்பி அந்தாளு போன் பண்ணினா என்ன பண்ணப்போறீங்க?" பாலாமணி பரிவுடன் கேட்டாள்.

கிட்டாமணி அதற்கு பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் அவரது செல்போன் மணியடித்தது.

"அவன்தான். அவன்தான்."

"பயப்படாம எடுத்துப் பேசுங்க," பாலாமணி உற்சாகப்படுத்தினாள். "போன்ல கொலையா பண்ண முடியும்? அதிகபட்சம் திட்டுவான். அதெல்லாம் உங்களுக்கொண்ணும் புதுசில்லையே. பேசுங்க."

மனைவி கொடுத்த தைரியத்தில், நடுங்கியபடியே கிட்டாமணி போனில் பேசினார்.

"ஹலோ! கி...கி...கிட்டாமணி பேசறேன் சார்..!"

"ஹிஹிஹி! மன்னிக்கணும் சார்! இன்னிக்குக் காலையிலேருந்து உங்களைக் கண்டபடி திட்டிப்புட்டேன். இப்பத்தான் என்கிட்டே உண்மையிலே கடன் வாங்கினவனோட புது நம்பர் கிடைச்சுது. சாரி சார்!"

இதைக்கேட்ட கிட்டாமணிக்கு அர்னாப் கோஸ்வாமியின் பேட்டியை முடித்த அரசியல்வாதியைப் போல ஆசுவாசம் ஏற்பட்டது. வாழ்க்கையில் வாத்தியார் தொடங்கி வாழ்க்கைத் துணைவி வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் திட்டு வாங்கியிருந்தாலும், திட்டியவன் அழைத்து மன்னிப்புக் கோருவது அதுவே முதல் தடவை என்பதால், கிட்டாமணியின் கண்கள் ஓட்டை விழுந்த பால்பாக்கெட்டைப்போல ஒழுக ஆரம்பித்தன.

"பரவாயில்லை சார்," கிட்டாமணி உருகிப்போனார். "ஆனாலும் நீங்க திட்டுறதை ரெண்டு மூணு ஜெனரேஷனோட நிறுத்தியிருக்கலாம் சார். அப்படியே மொஹஞ்சதாரோ ஹரப்பா வரைக்கும் போயிட்டீங்க. எனக்கு முன்னாடி இத்தனை தலைமுறை இருந்ததுன்னே நீங்க திட்டினதுக்கப்புறம்தான் எனக்குத் தெரிஞ்சுது."

"வெரி வெரி சாரி சார்! நீங்க மட்டும் நேருல இருந்தா உங்க காலைப் புடிச்சிருப்பேன் சார்."

"சரி விடுங்க சார். இனிமேலாவது யாரையாவது திட்டுறதுக்கு முன்னாடி அவரோட ஆதார் கார்டு, ஓட்டர்ஸ் .டி, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் ஒரு தடவை சரிபார்த்திட்டு திட்ட ஆரம்பிங்க சார். ஏன்னா, நீங்க ரொம்ப மெனக்கெட்டு புதுசு புதுசா திட்டறீங்க. அந்த உழைப்பு வீணாகிடக் கூடாது இல்லையா?"

"ஆமாம் சார். சார் நீங்க மதுரைப்பக்கம் வந்தா என் வீட்டுக்கு அவசியம் வாங்க சார். என் பேரு விட்டல்ராவ்."

"விட்டல்ராவா? திட்டல்ராவ்னு வைச்சிருக்கலாம்," என்று முணுமுணுத்த கிட்டாமணி, "மதுரையா? இனிமேல் மறக்கவே மாட்டேன் சார்!" என்று பேச்சைத் துண்டித்தார்.

"என்னங்க ஆச்சு?" பாலாமணி ஆச்சரியத்துடன் கேட்டாள். "அந்தாளு பயந்திட்டானா?"

"என்னையும் மன்மோகன்சிங்கையும் பார்த்து எவன் பயந்திருக்கான்?" கிட்டாமணி பெருமூச்சுடன் பதிலளித்தார். "அவன் உண்மையான கடன்காரனைக் கண்டுபிடிச்சிட்டான். தப்பிச்சோம்."

கிட்டாமணியின் மனதில் விட்டல்ராவின் பெயரும் நம்பரும்  ஷகீலா படத்து ஜல்சா காட்சியைப்போல பசுமையாகப் பதிந்து விட்டிருந்தன

"இனிமேல் யாராவது திட்டினா நீங்களும் பதிலுக்குத் திட்டுங்க," பாலாமணி ஆலோசனை கூறினாள். "நீங்க மனசு வைச்சா திரும்பவும் அந்த கோபம் ரோஷம் எல்லாம் திரும்பி வராதா?"

"செத்துப்போன என் பாட்டி வேண்ணா திரும்பி வருவா," விரக்தியுடன் சொன்னார் கிட்டாமணி. "எனக்குக் கோபம் ரோஷம் திரும்பி வரது இருக்கட்டும்; வந்து பத்து நிமிஷம் ஆச்சு; இன்னும் காப்பியே வர மாட்டேங்குது."

"இருங்க, எடுத்திட்டு வரேன்," என்று பாலாமணி திரும்பவும், மீண்டும் கிட்டாமணியின் செல்போன் அடித்தது.

"இன்னொரு புது நம்பர். இது யாருன்னு தெரியலியே," என்று முணுமுணுத்தபடியே பேசினார் கிட்டாமணி. "ஹலோ!"

"ஹலோ!" மறுமுனையில் ஒரு பெண்குரல்.

"பாலாமணி, யாரோ ஒரு பொண்ணு பேசுறா," கூவினார் கிட்டாமணி."இது எந்த ராவ்னு தெரியலியே."

"யாருன்னு கேளுங்க," எரிந்து விழுந்தாள் பாலாமணி. "இத்தனை வயசுக்கு மேல உங்களை அதிதி ராவா கூப்பிடப் போறா?"

"ஹலோ," எதிர்முனையில் அந்தப் பெண் பேசினாள். "மிஸ்டர் கிட்டாமணிதானே பேசறது..?"

"ஆமாம்," குழப்பத்துடன் பதிலளித்தார் கிட்டாமணி. "நீங்க யாரு ஏசறீங்க... மீன் யாரு பேசறீங்க..?"

"சார், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சார்?"

"என்னது?" அதிர்ந்தார் கிட்டாமணி. "அது ஆகி ரொம்ப வருஷம் ஆயிருச்சு. நீங்க வேற இடம் பாருங்க."

"சார் சார்," பதறினாள் அந்தப் பெண். "நாங்க ஒன் பை டூ கம்பனியிலிருந்து பேசறோம் சார். போன மாசம் சூப்பர் மார்க்கெட்டுல நீங்க சாமான் வாங்கினீங்க இல்லையா? ஒரு கிப்ட் வவுச்சர்கூட கொடுத்தாங்களே? உங்களுக்குக் குலுக்கல் முறையிலே பரிசு விழுந்திருக்கு சார்."

"அப்படியா?" சுரத்தில்லாமல் பதிலளித்தார் கிட்டாமணி. "எங்க வீட்டுலே ஏற்கனவே நிறைய பிளாஸ்டிக் டப்பா இருக்கும்மா. நீங்களே வைச்சுக்கோங்க."

"சார், பரிசு அம்பது லட்சம் சார்!"

"என்னது?" ஆச்சரியத்தில் திறந்த கிட்டாமணியின் வாய்க்குள் அனாமத்தாகச் சுற்றிக் கொண்டிருந்த அரை டஜன் கொசுக்கள் அக்ரிமெண்ட் போடாமலே குடியேறின.

"அம்பது லட்சமா? எனக்கா?"

"என்னது அம்பது லட்சமா?" பாலாமணி அலறியடித்துக் கொண்டு ஓடி வந்ததில், அமிஞ்சிக்கரையில் நிறைய வீட்டுச் சுவற்றில் விரிசல் விழுந்திருக்கும்.

"ஹலோ, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க," கிட்டாமணியின் இதயம் பழைய ரெமிங்க்டன் டைப்ரைட்டரைப் போல கடகடவென்று அடித்துக் கொண்டது."அதுக்கு ஏன் கல்யாணமாச்சான்னு கேட்டீங்க?"

"சார், எங்க கம்பனியிலே கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும்தான் பரிசு கொடுப்போம்!"

"நியாயமான பாலிசி,"என்றார் கிட்டாமணி. "கஷ்டப்படறவங்களுக்குத்தான் உதவி பண்ணனும். ரொம்ப சரி."

"சார், உடனே நீங்க உங்க சம்சாரத்தையும் கூட்டிக்கிட்டு எங்க ஆபீசுக்கு வரணும்."

"வந்திட்டாப்போச்சு," உச்சநீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட அரசியல்வாதியைப்போல கிட்டாமணியின் குரலில் உச்சபட்ச உற்சாகம் தொனித்தது."உங்க ஆபீஸ் எங்க இருக்கு?"

"சார், மயிலாப்பூருக்கு வரணும்."

".கே. மயிலாப்பூர் குளம் பக்கத்திலயா?"

"இல்லை சார், அந்தக் குளத்தைத் தாண்டி வரணும்."

"ஐயையோ," அலறினார் கிட்டாமணி. "அவ்வளவு பெரிய குளத்தைத் தாண்ட நான் என்ன அனுமாரா? என்னை விடுங்க, என் சம்சாரம் கோலம் போடுறதுக்குக் கூட லிப்டுலே தான் இறங்குவா. அவளை மாதிரி ஒரு படிதாண்டாப் பத்தினியைப் பார்க்க முடியாது. அவ எப்படித் தாண்டுவா?"

"சார், நான் சொல்றதைக் கேளுங்க சார்!"

"நான் பாலாமணியைத் தவிர யாரு சொல்றதையும் கேட்க மாட்டேன். தாண்டும்போது தொப்பக்கடீர்னு குளத்துக்குள்ளே விழுந்திட்டா? எங்களுக்கு நீச்சல் கூடத் தெரியாது."

"சார், நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிடீங்க!"

"என்னது, குளத்துல தண்ணி இல்லையா? அது இன்னும் ஆபத்து."

"சார், நீங்க குளத்தை ஒட்டி நடந்தே வந்தாப்போதும். ராமகிருஷ்ணா மிஷன் தெரியுமா? அதுக்கு நேர் எதுத்தாப்புலதான் எங்க ஆபீஸ்."

"பாலாமணி," கிட்டாமணி மனைவியைப் பிடித்துக்கொண்டு தட்டாமாலை ஆடினார். "அம்பது லட்சம். அம்பது லட்சம்."

"கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்ச்சுக் கொடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க?" பாலாமணி கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

"கூரையைப்  பிச்சுக்கிட்டுக் கொடுக்குமா?" கிட்டாமணி குழம்பினார். "இப்படீன்னு தெரிஞ்சிருந்தா மேல் மாடிக்குக் குடி வந்திருக்கலாமே? இப்போ அவருக்கு மூணு கூரையைப் பிச்சிட்டு வரணுமே.!"

"ஒரு பேச்சுக்குச் சொன்னேங்க," பாலாமணி பரபரத்தாள்."இருங்க, நான் ரெடியாகிட்டு வரேன். உடனே கிளம்பிடலாம்."

"காப்பி..?"

"மயிலாப்பூருல குடிச்சுக்கலாம். ஒரு நாள் காப்பி குடிக்கலேன்னா செத்தா போயிடுவோம்..?"

"குடிச்சே சாகலியே..?"

"என்னது?"

"நீ முதல்ல கிளம்பு. நல்ல காரியத்துக் கிளம்பும்போது எதுக்கு நம்ம வீட்டுக் காப்பியைப் பத்திப் பேசிக்கிட்டு.."

கிட்டாமணியின் வரலாற்றில் முதல் முறையாக, பேரம் பேசாமல் ஆட்டோக்காரர் சொன்ன ரேட்டை ஆண்டவன் வாக்காக ஏற்றுக்கொண்டு மனைவி அமர்ந்ததுபோக மீதமிருந்த இடத்தில் இடுங்கியபடி மயிலாப்பூரை நோக்கி மகிழ்ச்சியுடன் கிளம்பினார். ஐம்பது லட்சம் கைக்கு வந்ததும் முதல் வேலையாக கோடவுன் ஸ்ட்ரீடுக்குப் போய் அரை டஜன் 'குல்ஷன்' மார்க் முண்டா பனியனும், 'ஹன்ஸ்' மார்க் ஜட்டிகளும் வாங்கிக் கொண்டு விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். பாலாமணி ஆட்டோ போன திசையின் இரு பக்கமும் இருந்த ஜவுளிக்கடைகளின் பெயர்களை தனது மண்டைக்குள் இருந்த மெமரி கார்டில் டவுண்லோட் செய்து கொண்டிருந்தாள். ஒரு வழியாக ஆட்டோ மயிலாப்பூரை அடைந்தபோது ரத்னா கபேயில் காலி டேபிளைப் பார்த்தது போல இருவரது மனங்களும் களிப்பில் நனைந்து தும்மவே ஆரம்பித்து விட்டார்கள்.

"வாங்க வாங்க," அந்த ஆபீசின் வாசலில் காத்திருந்த பெண் பல்லெல்லாம் வாயாக வரவேற்றாள். கையைப் பிடித்து இழுக்காத குறையாக இருவரையும் அழைத்துச் சென்று அமர வைத்து தானும் எதிரே அமர்ந்து கொண்டாள்.

"கன்கிராசுலேஷன்ஸ்! முதல்ல உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சில கேள்விகள் கேட்கணும்."

"தப்பாப் பதில் சொன்னா அம்பது லட்சத்துலே கழிச்சிற மாட்டீங்களே?" பாலாமணி சந்தேகத்துடன் கேட்டாள்.

"அதெல்லாம் மாட்டோம்," என்றாள்  அந்தப் பெண், "உங்களுக்குக் கல்யாணம் ஆனதும் ரெண்டு பெரும் தேன் நிலவு போனீங்களா?"

"அது ரொம்பப் பழைய படமாச்சே," சிரித்தார் கிட்டாமணி. "நாங்க புன்னகை மன்னன் படத்துக்குப் போனோம்."

"! நீங்க கூட அசப்புல புன்னகை மன்னன் கமல் மாதிரியே இருக்கீங்க சார்," என்ற அந்தப்பெண், கிட்டாமணி புளகாங்கிதப்பட்டு புல்லரிப்பதற்கு முன்னமே, "உங்களைப் பார்த்தா அப்படியே அந்த சாப்ளின் செல்லப்பாவைப் பார்த்த மாதிரி இருக்கு." எனவும் உப்பி வந்த சோலாப்பூரியை ஊசிக்கரண்டி வைத்துக் குத்தியது போல இருந்தது கிட்டாமணிக்கு.

"நான் அதைக் கேட்கலை சார், கல்யாணம் ஆனதும் ஏதாவது ஊருக்குப் போவாங்களே, அந்த மாதிரி நீங்க எங்க போனீங்க?"

"பழனிக்குப் போனோம்," என்றார் கிட்டாமணி. "போய் நான் மொட்டை அடிச்சுக்கிட்டேன்."

"வாவ்! கல்யாணம் ஆன சூட்டோட மொட்டை அடிச்சுக்க நிறைய துணிச்சல் வேணும் சார்."

"கல்யாணத்துக்கே துணிஞ்சவனுக்கு மொட்டை எம்மாத்திரம்?"

".கே சார், இப்போ நீங்க பழனிக்குப் பதிலா ஊட்டிக்குப் போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?"

"மொட்டை அடிச்சிருக்க முடியாது."

"நீங்க மொட்டையை விடுங்க சார், கண்டிப்பா ஏதாவது லாட்ஜ்ல ரூம் எடுத்துத்தானே தங்கியிருப்பீங்க? உங்களுக்குன்னு ஊட்டியிலே சொந்தமா ஒரு வீடு இருந்திருந்தா எவ்வளவு வசதியா இருந்திருக்கும்?"

"ஐடியா நல்லாயிருக்கே," என்றார் கிட்டாமணி. "நீங்க அம்பது லட்சம் கொடுங்க, உடனே ஊட்டியிலே வீடு வாங்கிடலாம்."

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலாமணியின் கண்முன்னே  திடீரென்று 'முரசு' டிவி ஓடத்தொடங்க, கிட்டாமணியும் பாலாமணியும் 'ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி' என்று டூயட் பாடுவது போல காட்சி தோன்றியது.

"கவனமாக் கேளுங்க சார்," என்ற அந்தப் பெண் திடீரென்று ராணுவ ரகசியத்தை ராயப்பேட்டை மணிக்கூண்டு சிக்னலில் பேசுவதுபோல குரலைத் தாழ்த்திக் கொண்டாள். "எங்க கம்பனி ஊட்டியில நிறைய ப்ராஜெக்ட் வைச்சிருக்காங்க சார். ஒரு தனி வீடு வெறும் நாலே நாலு கோடி ரூபாய்தான். நீங்க சரின்னு சொன்னா, உங்களுக்காக மூணு கோடி அம்பது லட்சத்துக்குத் தருவோம் சார். என்ன சார் சொல்றீங்க?"

"அடக் கடவுளே," என்று கிட்டாமனியும் பாலாமணியும் ஹோம் தியேட்டரின் இரண்டு ஸ்பீக்கர்கள் போல ஒரே நேரத்தில் கூவினார்கள். "அப்போ இதுதான் பரிசா? வீடு வாங்கினா அம்பது லட்சம் தள்ளுபடியா? பரிசை ரொக்கமா தர மாட்டீங்களா?"

"எல்லாம் ஒண்ணு தானே சார், மாம்பழத்தை உடனே சாப்பிட்டிருவோம்; மாங்காயா இருந்தா ஊறுகாய் போட்டு மாசக்கணக்கா வைச்சுக்கலாமில்லே?"

"மாம்பழமாவது மாங்காயாவது! இன்னும் கையிலே ஒரு மாங்கொட்டையைக் கூட கொடுக்காம பேச்சா பேசறீங்க?" கிட்டாமணி எரிந்து விழுந்தார். "அம்பது லட்சம் பரிசுன்னு சொல்லி ஆசை காட்டிட்டு, இப்போ ஊட்டியில வீடு வாங்கு, கொடைக்கானல்ல காடு வாங்கு, குத்தாலத்துல மாடு வாங்குன்னா எப்படி? ஏன் இப்படி மோசடி பண்ணிட்டுத் திரியறீங்க? என் பேரு கிட்டாமணி; முட்டாமணி இல்லை."

"ஏன் சார், ஒரு லிட்டர் பினாயில் வாங்கினதுக்கு அம்பது லட்சம் ரொக்கப்பரிசு கொடுப்பாங்களா சார்?" அந்தப் பெண் கிட்டாமணியை சமாதானப்படுத்த முற்பட்டாள்.

"வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங்...?" அன்று முழுக்க அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் முந்தின நாள் அரைத்த தோசைமாவைப்போல பொங்க, கிட்டாமணிக்குள் அதுவரை தூங்கிக் கொண்டிருந்த மிருகம் எழுந்து 'மியாவ் மியாவ்' என்று கத்தலாயிற்று. "யூ டோன்ட் நோ ஹூம் யூ ஆர் டாக்கிங் டு......." கிட்டாமணியின் வாயிலிருந்து ஆங்கிலம்,பிரேக் இல்லாத சைக்கிளைப்போல கன்னாப்பின்னாவென்று விரைந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

"மைண்ட் இட்" என்று முத்தாய்ப்பாக கிட்டாமணி தனது ஆங்கில வசையை முடித்தபோது, கேட்டுக்கொண்டிருந்த பாலாமணிக்கு மூச்சு இரைத்தது.

"பாலாமணி, வா போகலாம்," என்று கிளம்பினார் கிட்டாமணி. "சரியான பிராடு கம்பனி."

"ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்," பாலாமணி அங்கலாய்த்தாள். "எதுக்கு அந்தப் பொம்பளையை இங்கிலீஷுல திட்டினீங்க..? அவளுக்குப் புரிஞ்சிதோ புரியலியோ..."

"பாலாமணி," பல்லைக்கடித்தார் கிட்டாமணி. "மூச்சு விடாம மூணு நிமிஷம் திட்டின எனக்கே நான் பேசின இங்கிலீஷ் புரியலை, அவளுக்குப் புரியலேன்னு நீ கவலைப்படுறியா? பேசாம வா..."

இப்போது கிட்டாமணி பாலாமணி ஒழுக்கமாக பஸ் பிடித்து, அதைவிட ஒழுக்கமாக டிக்கெட் வாங்கி வீடு நோக்கி விரைந்தனர். பஸ்சிலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்ததும்....

"ஏங்க, மனசும் சரியில்லை; உடம்பும் டயர்டா இருக்கு,"பாலாமணி முணுமுணுத்தாள். "இன்னிக்கு ஒரு நாள் சேமியா உப்புமா பண்ணிரட்டுமா?"

"ஹூம்!" கிட்டாமணி பெருமூச்செறிந்தார். "இன்னிக்குக் காலைலேருந்து ஒவ்வொண்ணும் விபரீதமா நடக்கும்போதே தெரியும். இப்படித்தான் முடியும்னு. சரி, அப்படியே செய்..!"

வழியிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் சேமியா வாங்கிக்கொண்டு பில் கொடுக்கச் சென்றபோது.....

"சார், இந்த கிப்ட் வவுச்சர்ல உங்க பேரு செல்போன் நம்பர் எழுதிக் கொடுங்க சார்..." அந்தப் பெண் ஒரு வழவழ தாளை நீட்டினாள்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..." என்று எரிச்சலுடன் பேசிய பாலாமணியை  கிட்டாமணி கையமர்த்தினார்.

"ஏம்மா பொண்ணு? மதுரை அட்ரசா இருந்தா பரவாயில்லையா...?"

" எஸ்!"

"அப்போ கொடுங்க," என்று அந்த கிப்ட் வவுச்சரை வாங்கி 'பெயர்' என்று அச்சிடப்பட்டிருந்த இடத்துக்கு நேராக 'விட்டல்ராவ்' என்று எழுதி, கீழே அவரது செல்போன் நம்பரையும் எழுதினார் கிட்டாமணி.

"தேங்க் யூ சார்,' அந்தப் பெண் தனது இருபத்தொன்பதரைப் பல்லையும் காட்டி இளித்தாள்.

கணவனின் திட்டத்தைப் புரிந்து கொண்ட பாலாமணி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா கண்ணீர் மல்குவதுபோல உருகினாள்.

"ஆனாலும் உங்களுக்கு உடம்பெல்லாம் மூளைங்க!"

"தேங்க்ஸ் பாலாமணி," என்று பெருமிதத்துடன் கூறிய கிட்டாமணி ஓரிரு அடிகள் முன்னால் வேகமாகச் சென்று விடவேபாலாமணி  அந்த வாக்கியத்தை முடித்ததை அவரால் கேட்க முடியவில்லை.

"அப்படியே கொஞ்சம் தலையிலும் வைச்சிருக்கலாம்.."

*******************************************************