Sunday, March 28, 2010

ஜெகன்மோகினி

வந்த செய்தி:

முதுமையிலும் இளமை ஊஞ்சலாட்டம்: நடிகை ஆகும் ஆசையில் பணத்தை இழந்த 84 வயது பாட்டி; டைரக்டர் அரவிந்த் மேத்தா மீது புகார்









வராத செய்தி:


படத்தில் வாய்ப்பளிப்பதாகக் கூறி மோசடி:
பாட்டிகள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகை

சென்னை,மார்ச் 28. அண்மையில் படத்தில் வாய்ப்பளிப்பதாகக் கூறி, லலிதா என்ற 84 வயதுப் பாட்டி உட்பட பல பெண்களிடம் பணமோசடி செய்த போலித்தயாரிப்பாளர் கைதானது தெரிந்ததே. இந்தச் செய்தி வெளியானதும் பல பாட்டிகள் தங்களிடமும் பணமோசடி செய்திருப்பதாகப் புகார் தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதில் ஒரு பாட்டி பலமாகத் தும்மியதில் அவரது பல்செட் கழன்று விழுந்ததால் எழும்பூரில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

புளியங்குடி பூவாத்தா என்ற 93 வயதுப் பாட்டி, தன்னை "ஜெகன்மோகினி" படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதாகக் கூறி, போலித் தயாரிப்பாளர் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் வாங்கியதாகப் பரபரப்பாகக் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த விஷயத்தில் ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

"பூவாத்தாவைக் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை! நமீதாவின் தோழியாக நடிக்க வைப்பதாகக் கூறினேன்; பூவாத்தா அதற்கு மறுத்து விட்டார். நமீதாவின் தங்கையாக நடிப்பேன் என்று அடம்பிடித்தார்; அதற்கு நமீதா மறுத்து விட்டார். இப்பொழுது என்னைப் பழிவாங்க இப்படியொரு புகார் தெரிவித்திருக்கிறார்," என்று கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் பரிதாபமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் நடிகை நமீதாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டதால் அவரை விசாரிக்க, 1234 போலீஸ்காரர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 72 மணி நேரமாக நடந்த இந்த விசாரணையின் போது நடிகை நமீதாவுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தெரிய வந்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் நமீதாவின் வீட்டிலிருந்து விசேஷ ரயில் மூலம் அலுவலகம் திரும்பினர்.

சுங்கான்கடை சுப்பாயி என்ற 91 வயதுப் பாட்டி சூர்யாவுடன் கதாநாயகியாக நடிக்க விரும்பியதால், போலித்தயாரிப்பாளருக்குத் தன் காதிலிருந்த பாம்படங்கள் வரைக்கும் கழற்றி விற்றுப் பணமளித்ததாகத் தெரிகிறது. தற்சமயம் அவரது உடலின் எடை, பாம்படங்கள் இல்லாமல் கணிசமாகக் குறைந்திருப்பதால், பறந்து விடாமலிருக்க இரண்டு காதுகளிலும் படிக்கல்லைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பதாக உருக்கமாகத் தெரிவித்தார்.

இது தவிர பல்லாவரம் முதியோர் இல்லத்திலிருந்து, சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிற ஆசையில் குப்பம்மாள் என்ற 88 வயதுப்பாட்டி குட்டிச்சுவரேறிக் குதிக்க முயன்றதில் சுவர் இடிந்ததோடு, இருந்த ஒரே ஒரு கோரைப்பல்லும் உடைந்ததால், கோடம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இனி அந்தப் பாட்டிக்குப் பல்லே முளைக்காது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டதால், உறவினர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

இது தவிரவும், சூளைமேடு பகுதியில் பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கச் சென்ற பசவம்மாள் என்ற பாட்டிக்கு, சினிமா ஆசை காட்டி அவரது சுருக்குப்பையிலிருந்த இருபத்தி மூன்று ரூபாயையும், ஒரு கவளி வெற்றிலையையும் அபேஸ் செய்த பலே ஆசாமிகளை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் சுருக்குப்பை கண்டுபிடிக்கப்பட்டதால், குற்றவாளிகள் சென்னையில் தான் இருப்பார்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இது தவிரவும் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த தேவராஜன், தனது 99 வயதான மனைவி சுந்தரியைக் காணவில்லை என்றும், அனேகமாக அவரும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடிப்போயிருக்கலாம் என்று புகார் தெரிவித்திருக்கிறார். சுந்தரிப்பாட்டியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவரையே சன்மானமாக அளிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் பாட்டிகள் சென்னையை நோக்கிப் படையெடுத்திருப்பதால் திரிஷா,அசின்,பாவனா,ஸ்ரேயா போன்ற நடிகைகளுக்கு மிகுந்த கலவரம் ஏற்பட்டிருப்பதாக நமது நிருபர் அறிகிறார். இந்தச் செய்தி வெளியானதும், தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்கள் அன்டார்டிகாவுக்கு ரகசியமாகத் தப்பித்து விட்டதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

பாட்டிகளின் கலையார்வத்தைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணத்தைக் கறக்கும் போலித்தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய பாட்டிகள் சம்மேளனம் அறிவித்திருக்கிறது. இது குறித்து வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று நாடுதழுவிய போராட்டமும் அதன் ஒரு பகுதியாக, மாம்பலம் ஒன்றாவது தெருவிலிருந்து இரண்டாவது தெருவரைக்கும் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாகவும், சம்மேளனத்தின் தலைவி காரைக்கால் கமலாப்பாட்டி தெரிவித்துள்ளார்.

Thursday, March 25, 2010

பேருந்தில் காதல்! (தொ/ப‍)

தொ/ப= தொடர்பதிவு

"பேருந்தில் காதல்" என்ற தலைப்பில் என்னை(யும்) தொடர்பதிவுக்கு முன்கூட்டியே பஸ்ஸில் கைக்குட்டை போடுவது போல மின்னரட்டையில் அழைத்த சிங்கை நண்பர் பிரபாகருக்கும், பதிவிலேயே அழைத்த பனித்துளி சங்கருக்கும் எனது மனமார்ந்த நன்றி! எனக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லேங்கிறதுனாலே, இந்தத் தொடர்பதிவுலே காதலும் இருக்காது; பேருந்தும் இருக்காது! (எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கறேன்னு கேட்கறீங்களா? முழுசாப் படிச்சிட்டுக் கேளுங்க!)

தையெழுதுற ஆசையோட சென்னைக்கு வர்ற இளைஞர்களைப் பார்த்தாலே சட்டுன்னு அடையாளம் கண்டுபிடிச்சிடலாம். தண்ணின்னு நினைச்சு ஓமத்திரவத்தைக் குடிச்சவங்க மாதிரி பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு இருப்பாங்க! அப்படியொரு கதாசிரியரும் நானும், நான் சென்னைக்கு வந்த புதுசிலே, தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டருக்குப் பக்கத்துலே குடியிருந்தபோது நண்பர்களானோம்.

அவருடைய இயற்பெயர் கண்ணப்பன். பொள்ளாச்சி பக்கத்துலேருந்து தானும் ஒரு பாக்யராஜ் மாதிரி கதை,திரைக்கதை,வசனம்,டைரக்சன் எல்லாம் பண்ணணுமுன்னு ஒரு பெரிய கனவோட சென்னைக்கு வந்திருந்தாருங்க! பாக்யராஜ் முருங்கைக்காய் மகிமையைக் கண்டுபிடிச்சா மாதிரி, இவரு முட்டக்கோசைப் பத்தி ஒரு மினி-ஆராய்ச்சியெல்லாம் பண்ணி, அவர் இயக்கப்போற படத்துலே சொருகிடமுண்ணு திட்டமெல்லாம் போட்டிருந்தாரு. அலுக்காம சலிக்காம தினமும் யாராவது ஒரு தயாரிப்பாளரையோ, இயக்குனரையோ போய் பார்த்திட்டு வர்றேன்னு போயிட்டு அவங்க வீட்டு கூர்க்காவுக்கு காலேஜ் பீடி வாங்கிக்கொடுத்து சினேகிதம் பண்ணிட்டு வர்றதோட சரி! ஒரு டீயும், மசால்வடையும் வாங்கிக் கொடுத்தாப் போதும், படத்தோட கதையைச் சொல்லுவாரோ இல்லியோ, அவரோட சொந்த சோகக்கதையை ரீ-ரிகார்டிங்கோட சொல்லிருவாரு! அப்படித்தான் ஒரு நாள், தி.நகர் பஸ் டெப்போவுக்கு எதிரே இருக்கிற டீக்கடையிலே டீயும், வடையும் முடிச்சிட்டு பனகல் பார்க்குக்கு நடந்துக்கிட்டே போயிட்டிருந்தபோது.....

"பதினாறு வயதினிலே ரேஞ்சுக்கு ஒரு கதை சொன்னேன்! பிடிக்கலே! கமர்ஷியலா எழுதிட்டு வான்னு சொல்லுறாரு அந்த டைரக்டர்!"னு சலிச்சுக்கிட்டாரு!

"மச்சி! பேசாம அவரு கேட்கிறா மாதிரி ஒரு கதை சொல்ல வேண்டியது தானே?"ன்னு அனுதாபத்தோட கேட்டேன். இவரும் ஒரு நாள், பெரிய டைரக்டராயிட்டா, நானும் அஜித்,விஜய்க்குப் போட்டியா ஹீரோவாகிடாமுங்கிற நல்லெண்ணம் தான்.

"அவருக்கு 456 ரொம்ப ராசியான நம்பராம். அதுனாலே நாலு சென்டிமென்ட் சீன், அஞ்சு சண்டை, ஆறு பாட்டு வர மாதிரி ஒரு கதை வேணுமாம்!"ன்னு பெருமூச்சு விட்டாரு கண்ணப்பன்.

"இது பெரிய விஷயமா?" நான் கேட்டேன்.

"காதல் கதையா இருக்கணுமாம். முடிவுலே ரெண்டு பேரும் சாவுறா மாதிரி இருக்கணுமாம். தமிழ் சினிமாவுலே கடைசியிலே ரெண்டு பேரு செத்துப்போயி ரொம்ப நாளாச்சாம்."

"அதான் எல்லா சினிமாவுலேயும் பார்க்கிறவங்களைச் சாவடிக்கிறாங்களே? போதாதா?"

"இன்னும் கேளு! படத்தோட பெயர், அதுலே வர்ற கேரக்டரங்களோட பெயர் ரெண்டு எழுத்துக்கு மேலே இருக்கக் கூடாதாம்."

"இதெல்லாம் ஒரு பிரச்சினையா?"ன்னு அலட்சியமாக் கேட்டேன்.

"என்னடா சர்வசாதாரணமாச் சொல்லறே? அவரு சொல்லுறா மாதிரி ஒரு கதையோட அவுட்-லைன் உன்னாலே சொல்ல முடியுமா?"ன்னு சவால் விட்டாரு கண்ணப்பன்.

"ஏன் முடியாது? உட்கார்ந்து பேசுவோம். ஒரு சூப்பர் கதை சொல்லுறேன் பாரு!"

அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் பனகல் பார்க்கில் இருந்தோம்.

"படத்துக்கு முதல்லே டைட்டில் வைக்கலாமா?" நான் கேட்டேன்.

"ஓ!"

"படத்தோட பெயர் 47!"

"அதென்ன 47?"

"முதல்லே கதையை எழுதி முடிப்போம்.அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்! எழுத்துக்கூட்டிப்பாரு! சரியா ரெண்டு எழுத்துத் தானே டைட்டில்?"

"47! அட ஆமாண்டா!"

"47-ன்னா அது பஸ் ரூட்டாக் கூட இருக்கலாம்! அதுனாலே கதையிலே எப்படியாவது ஒரு பஸ் சீனைப் புகுத்திரலாம்."

"அதான் 12-B வந்திருச்சே!" என்று கண்ணப்பன் கேட்டான்.

"அதுக்கென்ன? திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருவண்ணாமலைன்னு எல்லா ஊரு பேருலேயும் படம் எடுத்தீங்க! அப்புறம் சென்னை-28, புதுப்பேட்டை, மத்திய சென்னைன்னு படம் எடுத்தீங்க! இன்னும் கொஞ்ச நாளிலே வீட்டு நம்பரைத் தான் படத்துக்குப் பெயரா வைக்க வேண்டி வரும். அதுக்கு இன்னொரு பஸ் ரூட் நம்பரை வைக்கக்கூடாதா?" என்று அறிவுபூர்வமாக (?!) கேட்டதும் கண்ணப்பன் அடங்கினான்.

"சரிடா! கதையைச் சொல்லு!"

"முதல் கண்டிஷன் ஓ.கே! அடுத்தது நாலு எமோஷனல் சீன் வேணுமா ம்...ம்ம்..ம்ம்ம்! சரி, குறிச்சுக்கோ! ஒரு கதாநாயகன், ஒரு கதாநாயகி, ஒரு வில்லன்! கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஒரு சீன், கதாநாயகிக்கும் வில்லனுக்கும் ஒரு சீன்...வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் ஒரு சீன்! அப்படிப் பார்த்தாலும் ஒரு சீன் குறையுதே! ஓ.கே! வில்லனுக்கு ஒரு தங்கை! மொத்தம் நாலு பேரு! ஆளுக்கு ஒரு எமோஷனல் சீன்! சரியா?"

"சூப்பர்!"

"அடுத்தது என்ன?"

"முதல்லே கதை என்னான்னு முடிவு பண்ணிடலாம்." என்றான் கண்ணப்பன் அவசர அவசரமாக.

"கால்குலேட்டர் வச்சிருக்கியா?" என்று கேட்டேன். "ஒரு சின்னக் கணக்குப் போட்டுப் பார்க்கணும்."

"இதோ செல்லுலே இருக்கே!"

செல்போனிலிருந்த கால்குலேட்டரை எடுத்து நாலு எமோஷனல் சீன், ஐந்து சண்டைகள், ஆறு பாடல்கள் வர வேண்டுமென்றால், அதற்கு என்னென்ன அயிட்டங்கள் வேண்டுமென்று கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கிப் பார்த்தேன்.

"மச்சி! உங்க புரொட்யூசர் சொல்லுற மாதிரி கதை வேணுமுன்னா, இன்னும் ஒரு அண்ணன், ரெண்டு தங்கச்சி வேணும் போலிருக்கேடா!"

"என்னடா சரவணபவன்லே பார்சல் ஆர்டர் பண்ணுறா மாதிரி சொல்லுறே?"

"டேய்! படம்னா ஹீரோ,ஹீரோயின் மட்டும் தானா?" என்று அதட்டினேன்.

"சரி, எதுக்கும் கதாநாயகிக்கும் ஒரு தங்கச்சியைச் சேர்த்துக்கலாமா? ரெண்டு பேருலே யாரை வேண்ணா கிட்நாப் பண்ண வில்லனுக்கு வசதியா இருக்குமே?"

"அனேகமாத் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். இதோ, ஒரு வழியா கதையோட அவுட்லைன் ரெடி பண்ணிட்டேன். குறிச்சுக்கோ!"

மாடல் கேள்வித்தாளைக் குறித்துக்கொள்ளும் ப்ளஸ் டூ மாணவனின் ஆர்வத்தோடு கண்ணப்பன் குறித்துக்கொள்ள, நான் கதைச் சுருக்கத்தைச் சொன்னேன்.

"ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுறான்! ஆனா, ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணலே! அவ லவ் பண்ணுறது வில்லனை!"

"என்னது?"

"எழுதுடா! இப்பத் தானே கதையே ஆரம்பிக்குது!"

"சரி!"

"எழுதிட்டியா? ஹீரோயின் வில்லனை லவ் பண்ணுறா. ஆனா, வில்லன் லவ் பண்ணுறது ஹீரோவோட தங்கையை!"

"டேய்....!"

"குறுக்கே பேசாம எழுது! வில்லன் ஹீரோவோட தங்கச்சியை லவ் பண்ணறான். ஆனா, ஹீரோவோட தங்கச்சி ஹீரோயினோட அண்ணனை லவ் பண்ணுறா!"

"பைத்தியமே பிடிச்சிடும் போலிருக்கே!"

"லவ் ஸ்டோரின்னா அப்படித்தாண்டா இருக்கும். எழுதிக்கோ! ஹீரோவோட தங்கச்சி ஹீரோயினோட அண்ணனை லவ் பண்ணுறா! ஆனா, ஹீரோயினோட அண்ணன் வில்லனோட தங்கச்சியை லவ் பண்ணுறான்."

"சுத்தம்! வெளங்கிரும்!"

"ஹீரோயினோட அண்ணன் வில்லனோட தங்கச்சியை லவ் பண்ணுறானா? ஆனா வில்லனோட தங்கச்சி ஹீரோவோட அண்ணனை லவ் பண்ணுறா!"

"நான் அம்பேல்"

"அவசரப்படாதேடா! வில்லனோட தங்கச்சி ஹீரோவோட அண்ணனை லவ் பண்ணுறா. ஆனா, ஹீரோவோட அண்ணன் ஹீரோயினை லவ் பண்ணுறான்."

"அடேய்! ஏற்கனவே ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுறானேடா?"

"ஓ! இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கியா? அப்படீன்னா ஜனங்களும் ஞாபகம் வச்சிருப்பாங்க! இருந்தா என்னடா? பழைய படங்களிலே இது மாதிரி எத்தனை கதை வந்திருக்கு? அண்ணன், தம்பி ரெண்டு பேருலே ஒருத்தன் தியாகம் பண்ணுவான்! உனக்கு எப்படியும் ரெண்டு பேரு சாகணுமே, இவங்க ரெண்டு பேருலே ஒருத்தரை குளோஸ் பண்ணிடலாம்."

"அதெல்லாம் சரி? பஸ் ரூட்டுக்கும் கதைக்கும் என்னடா சம்பந்தம்?"

"இது ஒரு பெரிய விஷயமா? ஹீரோ டிரைவர், வில்லன் கண்டக்டர்! ஹீரோயின்...."

"செக்-இன்ஸ்பெக்டரா?"

"இல்லைடா! ஹீரோயின் பாசஞ்சர்! ஹீரோயின் நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குறா! வில்லன் டிக்கெட்டுக்குப் பின்னாலே பேலன்ஸ் எழுதறதுக்குப் பதிலா அவரோட செல் நம்பரை எழுதிக்கொடுத்திடறாரு! இங்கேருந்து தான் கதை ஆரம்பிக்கிறது.."

"இந்த இடத்துலே ஒரு டூயட் வைக்கலாம் இல்லே?" கண்ணப்பனுக்கு ஒரே குஷி!

"வச்சுக்கலாமே! இதோ பாரு! இனிமே அன்னக்கிளி படம் எடுத்தாலும் அமெரிக்காவிலே ஒரு பாட்டு எடுக்கணும். மச்சானப் பாத்தீங்களா பாட்டுன்னாலும் மன்ஹாட்டன்லே போயி எடுக்கணும். சரியா?"

"டேய்! எங்க புரொட்யூசர் வேளச்சேரியே தாண்டக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு! நீ பாட்டுக்கு வெளிநாட்டுலே ஷூட்டிங்குன்னு சொல்லறே...?"

"மச்சி! இதுவரை தமிழ்ப்படத்துலே வராத கற்பனை! டூயட் பாடிக்கிட்டிருக்கும்போது பஸ் அப்படியே இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கே போயிடறா மாதிரி...."

"என்னடா உளர்றே? பஸ் அமெரிக்கா எப்படிப் போகும்...?"

"ஏன் போகாது? கொலம்பஸ் போகலியா என்ன....?"

"சரி சரி, சொல்லித் தொலை!" கண்ணப்பன் தலையில் அடித்துக்கொண்டான்.

"மச்சி! பார்த்தேன் ரசித்தேன்னு ஒரு படம் வந்தது தெரியுமா? பிரசாந்த் நடிச்சது! லைலாவும் பாத்திமா பாபுவும் பஸ்ஸிலே வரும்போது பின்னாடியே போயி லவ்ஸ் வுடுவாரே! அதை விட பிரமாதமா பண்ணனும். ஹீரோயின் லைலாவை விட அழகா போடணும்."

"எங்க புரொட்யூசர் காதுலே விழுந்தா ஃபாத்திமா பாபுவையே ஹீரோயினாப் போட்டுருவாருடா!"

"அட கஷ்டமே! எப்படியோ, இந்த லவ் ஸ்டோரிக்கும் பஸ்ஸுக்கும் கனெக்ஷன் இருக்கிறா மாதிரி கதை வந்திருச்சில்லே...அது போதும்!"

"ஹும்! ஒரு வகையிலே கரெக்டு தாண்டா! ஃபார்ட்டி செவன் பஸ் மாதிரியே உன் கதையிலேயும் உட்கார்ந்திட்டிருக்கிறவங்களை விடவும் தொங்கிட்டு வர்றவங்க தான் அதிகம்!" என்று ஒப்புக்கொண்டான் கண்ணப்பன்.

"மொத்தம் மூணு ஆம்பிளை, மூணு பொம்பிளை, மாத்தி மாத்தி ஈஸியா ஆறு பாட்டு போடலாம்," என்று யோசனை தெரிவித்தேன் நான்.

"அஞ்சு சண்டை?" கண்ணப்பன் சந்தேகமாகக் கேட்டான்.

"எழுதிக்கோ! ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரு சண்டை! ஹீரோவோட அண்ணனுக்கும் வில்லனுக்கும் ஒரு சண்டை! ஹீரோவுக்கும் ஹீரோவோட அண்ணனுக்கும் ஒரு சண்டை!"

"அண்ணன் தம்பி எங்கேயாவது சண்டை போடுவாங்களாடா?"

"மச்சி! அவங்க தாண்டா வில்லனை விட ஆக்ரோஷமா பறந்து பறந்து அடிப்பாங்க!"

"சரி! அப்படியும் மூணு சண்டை தானே ஆச்சு! மீதி மூணு....?"

"இன்னும் மூணு சண்டை வேணுமா?" நான் யோசித்தேன். "பேசாம வில்லனுக்கும் ஒரு அண்ணனோ தம்பியோ சொருகிடலம். அவன் ஹீரோவோட தங்கச்சி, ஹீரோயினோட தங்கச்சி ரெண்டு பேரையுமே லவ் பண்ணுறான்னு வச்சுக்கலாம்."

"ஐயையோ! வேண்டாம்! இப்போ சொன்னியே இந்த மூணு சண்டையையே கூட ஒருவாட்டி போட வச்சிடறேன். இதுக்கு மேலே யாராவது யாரையாவது லவ் பண்ணினா கடவுளுக்கே அடுக்காது!"

"ஓ.கே! ஒரு வழியா கதையோட அவுட்-லைன் ரெடியாயிடுச்சு!"

"டேய்! எல்லாருக்கும் பெயர் வைக்கணுண்டா!"

"இப்போதைக்கு டம்மியா பேர் சொல்லறேன். குறிச்சுக்கோ! ஹீரோ பெயர் ராஜா! ஹீரோவோட அண்ணன் பெயர் ஓஜா!"

"ஓஜாவா? வடநாட்டுப் பெயர் மாதிரி இருக்கு?"

"தமிழ் சினிமாவுலே ஒரு புதுமை வேண்டாமா?"

"சரி, வில்லனுக்கு என்ன பெயர்?"

"வில்லனுக்குப் பெயர்....தேஜா! ஹீரோயினோட அண்ணன் பெயர் கூஜா!"

"சரி! மத்தவங்க பெயரையும் சொல்லிடு!" கண்ணப்பன் கண்ணும் கருத்துமாகக் குறிப்பெடுத்துக்கொண்டான்.

"ஹீரோயின் பெயர் பூஜா! ஹீரோவோட தங்கை பெயர் ஸ்ரீஜா! வில்லனோட தங்கை பெயர் மாஜா!"

கண்ணப்பன் இனிப் பேசிப் புண்ணியமில்லை என்பது போல நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டிருந்தான்.

"சரி, இப்போ பெயரோட கதையைச் சொல்லுறேன். எழுதிக்கோ சரியா?"

"சரி!"

"ராஜா பூஜாவை லவ் பண்ணுறான். ஆனா பூஜா தேஜாவை லவ் பண்ணுறா. தேஜா ராஜாவோட தங்கை ஸ்ரீஜாவை லவ் பண்ணுறான். ஆனா ஸ்ரீஜா பூஜாவோட அண்ணன் கூஜாவை லவ் பண்ணுறா. பூஜாவோட அண்ணன் கூஜா தேஜாவோட தங்கை மாஜாவை லவ் பண்ணறான். தேஜாவோட தங்கை மாஜா ராஜாவோட அண்ணன் ஓஜாவை லவ் பண்ணுறா. ராஜாவோட அண்ணன் ஓஜா கூஜாவோட தங்கை பூஜாவை லவ் பண்ணுறான்."

"நல்ல வேளை! அவ்வளவு தானே கதை?" கண்ணப்பனின் முகம் வெயிலில் காயப்போட்ட வேட்டி போல வெளிறிப்போயிருந்தது.

"டேய்! காமெடி வேண்டாமா?"

"இதுக்கு மேலே என்னடா காமெடி?" கண்ணப்பன் முகத்தில் பார்த்திபனிடம் அகப்பட்ட வடிவேலுவைப் போல விரக்தி தொனித்தது. "உலக வரலாற்றிலேயே முதல் முறையா ஒரு லவ் ஸ்டோரியைப் பார்த்து ஜனங்களெல்லாம் வயிறு குலுங்கச் சிரிக்கப்போறாங்கடா!"

"அது சரி! காமெடி தனி பிட்டா பின்னாடி கூட சேர்த்துக்கலாம்."

"ஆமாண்டா! கதை சொன்னது போதும். ரூமுக்குப் போயிடலாமாடா? என்னமோ தெரியலே! நீ கதை சொன்னதைக் கேட்டதுலேருந்து கடுக்காய் சாப்பிட்டது மாதிரி குடலுக்குள்ளே கொடக்கு மொடக்குன்னு சத்தம் கேட்குதுடா!"

"மச்சி! லவ் ஸ்டோரின்னா அப்பா, அம்மா வேண்டாமா?" நான் விடுவதாயில்லை.

"உன்னோட லவ் ஸ்டோரிக்கு லவ்வே வேண்டாமேடா!"

"இப்படியெல்லாம் வெறுத்துப்போய்ப் பேசாதே மச்சி! இந்தக் கதையை மட்டும் படமா எடுத்தேன்னு வையி, இந்த உலகமே உன்னைப் பத்திப் பேசும் தெரியுமா?"

"ஓ! ரொம்ப நல்லாத் தெரியும்! அதுக்கப்புறம் என்னாலே வெளியே தெருவிலே நடமாடவே முடியாதுன்னு இப்பவே புரிஞ்சுக்கிட்டேன்."

"இதோ பாரு! ஹீரோ,ஹீரோயின்,வில்லன்னு மொத்தம் மூணு குடும்பம் இருக்குதில்லையா? அட் லீஸ்ட் ஒரு அப்பாவையாவது சேர்த்துக்கலாண்டா!"

"என்னது, மூணு குடும்பத்துக்கும் ஒரு அப்பாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்!!"

"அவசரப்படாதே! மூணு குடும்பத்துக்கும் தலா ஒரு அப்பா!"

"டேய்! ஏண்டா இப்படி இம்சை பண்றே?"

"என்னடா நீ? அப்பா-அம்மா கேரக்டர் இருந்தாத் தானே நீ கேட்கிறா மாதிரி ரெண்டு பேரு சாக முடியும்?"

கண்ணப்பன் பொறுமையிழந்து உறுமினான்.

"டேய்! போதும் நிறுத்துடா! கடைசியிலே சாகப்போற ரெண்டு பேர் யாருன்னு எனக்குத் தெரியுண்டா!"

"யாரு?" என்று நான் குழம்பியபடி கேட்டேன்.

"உன்னைக் கொலை பண்ணிட்டு நானும் தற்கொலை பண்ணிக்குவேன்."

அதற்கு மறுநாள் பொள்ளாச்சிக்குப் பொடிநடையாகவே போனவன் அதன்பிறகு சென்னை திரும்பவேயில்லை. ஆனால் ’47 - பேருந்தில் காதல்’ என்ற கதையை நான் முழுமையாக்கி, எவனாவது இளிச்சவாயன் தயாரிப்பாளராகக் கிடைத்தால் அவருக்குச் சொல்லி ஒரு காதல் காவியமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருக்கிறேன்.

இன்னொரு தடவை கதை கேட்கறீங்களா...?

பி.கு (அ) நற்செய்தி: இந்தத் தொடர்பதிவைத் தொடர நினைப்பவர்கள் பாண்டிபஜாரில் 12B பிடிக்க நினைப்பவர்களைப் போல அதிகமாக இருப்பதால், யார் வேண்டுமானாலும் ஃபுட்போர்டில் தொங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

Monday, March 22, 2010

இன்னாண்ணறே?

செய்தி: பிச்சைக்காரர்களுக்கு பஞ்சாபில் ஐ.டி.கார்டு

இன்னா நயினா, பஞ்சாபுலே இருக்குற பிச்சைக்காரங்க தான் ஒஸ்தியா? இந்த டகால்டி வேலை தானே வேணாங்கிறது?

தமில்நாட்டை அல்லாத்துலேயும் ஃபஷ்டு மாநிலமாக்கணுண்ணு அல்லாரும் சொல்றாங்கோ!


அதிகாரி: வணக்கம், நாங்க சமூகநலத்துறையிலேருந்து வர்றேன்!

பிச்சை: வா நயினா! இன்னா மேட்டரு? மாமுலெல்லாம் போலீசுக்கு ஒண்டி தான் கொட்பேன்!

அதிகாரி: ஐயையோ, நான் மாமூல் எல்லாம் வாங்க மாட்டேன்.

பிச்சை: ஐயே! அதான் நம்ம கிட்டே வந்துகீறே! இப்போ சங்கத்துலே ஒண்ணும் வேக்கன்ஸி இல்லியே நைனா? திருநீர்மலை, மாங்காடு பக்கம் போறேன்னா சொல்லு! அங்கே ரெண்டு மூணு துண்டு போட எடமிருக்குதாம். செவ்வாய், வெள்ளி நல்லா சில்லறை தேறும்

அதிகாரி: அடடா, உங்க கிட்டே வெபரம் கேட்கலாமுன்னு வந்திருக்கேன்.

பிச்சை: ஓ அப்படீண்ணறியா! சரி, கேளு நயினா! தெரிஞ்சதைச் சொல்றேன்! இது கூட சொல்லாங்காட்டி பி.ஏ.படிச்சு இன்னா புண்ணியம்?

அதிகாரி: என்னது பி.ஏ.வா?

பிச்சை: ஏன் நயினா அதுந்து பூட்டே! உனக்கு திர்லக்கேணி திருப்பதி தெர்மா? அவ்ரும் பிச்சைதான் எடுக்கிறாரு! எம்.ஏ.படிச்ச ஆளு!

அதிகாரி: தலை சுத்துது! இவ்வளவு படிச்சவரு ஏன் பிச்சையெடுக்கிறாரு?

பிச்சை: அத்தக் கேக்கிறியா? சொல்றேன் கேளு, படா டமாஸான் ஷ்டோரி! திருப்பதியும் உன்னை மாதிரி டீஜண்டான ஆளாத் தான் இருந்தாரு! பல்லாவரம் டேஜன்லே தினம் போவனா, அவரும் தெனம் ரெண்டு ரூபா போட்டுக்கினே இருப்பாரு! அப்பாலே ரெண்டு ரூபா ஒரு ரூபா ஆயிருச்சு! இன்னான்னு கேக்க ஸொல்லோ அவ்ரு புள்ளை டாக்டருக்குப் படிக்கிறதாங்காட்டி செலவு ஜாஸ்தியாயிடுச்சுன்னாரு! பின்னாலே ஒரு ரூபா அம்பது பைசா ஆனதும் இன்னான்னு கேட்டா, வாத்யாரு சின்ன வூடு வச்சிருக்கக் கண்டி, செலவு ஜாஸ்தியாயிருச்சுப்பான்னு சொல்லிட்டாரு.

அதிகாரி: அதெல்லாம் சரி, அவரு ஏன் பிச்சையெடுக்க வந்தாரு?

பிச்சை: சின்ன வூட்டுக்காரியோட கொளந்தையை எல்.கே.ஜி. படிக்க வச்சாரா? பாவம், நடுரோட்டுக்கே வந்திட்டாரு நயினா!

அதிகாரி: ஓஹோ! உங்க பேரு என்ன?

பிச்சை: வூட்டுலே வச்சது ஏழுமலை! அல்லாரும் கூப்புடறது எல்லீஸ்பேட்டை ஏகா!

அதிகாரி: உங்களோட நிரந்தர முகவரி என்ன? இதே பிளாட்பாரம் தானா?

பிச்சை: இன்னா நயினா, இது பிசினஸ் பண்ணுற எடம். வூடு அட்யாறுலே பழைய டெப்போவாண்ட கீது! ஒரு எம்.என்.சிக்கு வாடகைக்குக் குட்த்துக்கீறேன். இப்போ கண்டி பெருங்களத்தூருலே ஒரு கிரவுண்டு வாங்கிக்கீறேன்.

அதிகாரி: உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சா?

பிச்சை: அத்த ஏன் கேக்குறே நயினா? ரெண்டு தபா பண்ணிகினேன், ஒத்து வரலே!

அதிகாரி: ஓஹோ! கொழந்தை குட்டிங்க இருக்குதா?

பிச்சை: ஓ! அதிருக்குது ஏழெட்டு!

அதிகாரி: அவங்களும் இதே தொழில் தானா?

பிச்சை: டமாஸ் பண்ணாதே நயினா! அதுங்கெல்லாம் பெரிய பெரிய இஸ்கூலிலே பட்சிட்டிருக்குது!

அதிகாரி: சரி! உங்களுக்கெல்லாம் அட்டை கொடுக்கப்போறோம். அதுக்காகத் தான் விவரம் கேட்கிறேன்.

பிச்சை: அதான் வாக்காளர் அட்டை இருக்குதே!

அதிகாரி: என்னது வாக்காளர் அட்டையா?

பிச்சை: பத்தாதா நயினா? ரேஷன் கார்டு வச்சுக்கீறேன். காட்டவா?

அதிகாரி: ரேஷன் கார்டு வேறேயா?

பிச்சை: இன்னா பண்றது நயினா? இது ரெண்டும் இல்லேன்னா பேங்குலே கணக்கு வச்சுக்க முடியாதே!

அதிகாரி: பேங்க்....அக்கவுண்டா?

பிச்சை: ஆமாம் நயினா...ஒரு சேவிங்க்ஸ் அக்கவுண்டு...ஒரு கரண்ட் அக்கவுண்டு வச்சிருக்கேன். ஏ.டி.எம். கார்டு கூட இருக்கு!

அதிகாரி: ஏ.டி.எம்.கார்டா?

பிச்சை: கேளு நயினா! இந்த வர்சம் சிங்கப்பூரு போகணுமுன்னு மாஸ்டர்-கார்டும் வாங்கிட்டேன்.

அதிகாரி: என்னாது? சிங்கப்பூரா? நான் சிங்கப்பெருமாள் கோவில் கூட போனதில்லையே?

பிச்சை: இன்னா ஆபீசர் நீ? பதவிலே இருக்க ஸொல்ல நாலு காசு பாக்கத் தாவலே? எப்போ ரிட்டயர் ஆவப்போறே?

அதிகாரி: இன்னும் ஒரு வருஷம் தானிருக்கு!

பிச்சை: கேக்கவே மனசுக்கு பேஜாரா கீதுபா! ரிட்டயர் ஆனதுக்கு அப்பாலே என்ன வந்து பாரு! எங்காளு ஒருத்தர் வி.ஆர்.எஸ்.வாங்கிக்கினு அரசியல்லே சேரப்போறாராம். அவரு இடத்துலே நீ துண்டு விரிச்சு உட்காரு! ஒரு வருசத்துலே திருவாமியூர்லே வூடு கட்டிரலாம்..இன்னாண்ணறே நீ?

Saturday, March 20, 2010

காக்கா...காக்கா!

இது ஒரு வித்தியாசமான காக்காய்-நரி கதை! மனதைத் தேற்றிக்கொண்டு படிக்கவும்.

தமிழ்நாடு-ஆந்திரா எல்லையிலே இருந்த ஒரு மரத்துலே, ஒரு காக்காய் உட்கார்ந்திட்டிருந்ததாம். அந்தப் பக்கமா போன ஒரு நரிக்கு, அந்தக் காக்காய் வெளியூர் காக்காய்னு சட்டுன்னு புரிஞ்சிருச்சு! எப்படீன்னு கேட்கறீங்களா, எல்லாக் காக்காயும் "கா..கா..கா,"ன்னு கரையும்; இந்தக் காக்காய் "க்யா...க்யா..க்யா,"ன்னு கரைஞ்சிட்டிருந்ததாம். அனேகமா இது இந்திக்காக்காய்னு புரிஞ்சுக்கிட்டு நரி நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு மரத்தடியிலே போய் நின்னு அண்ணாந்து பார்த்துச்சாம்.

ஏய் காக்கா! உன்னை இதுக்கு முன்னாலே நான் பார்த்ததேயில்லையே! வெளியூரா?-ன்னு நரி கேட்டுதாம்.

ஆமாம் நரிபாய்! நான் லக்னோவிலிருந்து வர்றேன். சென்னைக்குப் போயிட்டிருக்கேன்-னு காக்கா சொல்லிச்சாம்

நரிக்கு இந்தி தெரியுமா? காக்காய்க்குத் தமிழ் தெரியுமா? மிருகங்களும் பறவைகளும் பேசுமான்னு கேட்கிறவங்க, பேசாம ரஷியன் கலாச்சார மையத்துக்குப் போயி ஏதாவது குறுந்தாடி டைரக்டருங்க எடுத்த கலைப்படத்தைப் பார்க்கப்போயிடுங்க! லாஜிக்கைப் பத்திக் கவலைப்படாத தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் மேலே படிச்சா போதும்!

சரி, கதைக்குப் போகலாம்! லக்னோ காக்கா சென்னைக்குப் போறேன்னு சொன்னதும் நரிக்கு பெரிசா ஆச்சரியம் ஏற்படலே! அதுக்குத் தெரியாதா என்ன, தமிழ்நாட்டுலே காக்காய்க்குப் பஞ்சமேயில்லைன்னு!

ஏன் காக்கா? இப்படி ஒரு வயசுக்கு வந்த காக்கா தன்னந்தனியா உ.பியிலேருந்து தமிழ்நாட்டுக்குப் பறந்து வந்திருக்கியே? உனக்குப் பயமாயில்லே?-ன்னு நரி கேட்டுச்சாம்.

"அது ஒரு பெரிய கதை,"ன்னு காக்கா பெருமூச்சு விட்டுதாம். நரிக்கு பக்குன்னு ஆயிடுச்சாம்! இந்தக் காக்காய்க்கு ஏதோ ஒரு சோகமான ஃப்ளாஷ்-பேக் இருக்கும் போலிருக்கேன்னே நினைச்சிட்டிருக்கும்போதே பரத்வாஜ் பின்னணி இசையிலே "ஓ...ஓ..ஓஓ..ஓஓ..ஓஓஓ!"ன்னு கோரஸ் சத்தத்தோட காக்கா கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுதாம்.

ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...!


உத்திரப்பிரதேசத்துலே, நாடு முழுக்க இருக்கிற மனுசங்களோட பாவத்தைக் கழுவிக் கழுவி அழுக்கா ஒடிட்டிருக்கிற கங்கைநதிக்கரையோரத்தில் இருக்கிற கௌவாநகர் கிராமத்து வேப்பமரம் தான் அந்தக் காக்காயோட பூர்வீகம்! அந்த மரத்துலே உச்சாணிக்கிளையிலே தன்னோட குடும்பத்தாரோட அது ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருந்தபோது தான், நம்ம காக்கையோட வாழ்க்கையிலே புயலடிச்சா மாதிரி அந்த சம்பவம் நடந்தது.

காக்காயோட அம்மா காக்காய் காக்காஜீ கடையிலேருந்து கபளீகரம் பண்ணிட்டு வந்த சமோசாவை நம்ம ஹீரோயின் காக்காய் கொத்திக் கொத்திச் சாப்பிட்டுக்கிட்டிருந்தபோது, "ஞொய்ங்ங்ங்,"னு பெருசா சத்தம் கேட்டுது. மரத்துலேயிருந்த எல்லா காக்காய்ங்களும் பயந்து போய் "க்யா..க்யா..க்யா,"ன்னு கரைய ஆரம்பிச்சுது. தூரத்துலே மணிக்கு ஐந்நூறு கி.மீ.வேகத்துலே கறுப்பா மேகம் திரண்டுகிட்டு வர்றா மாதிரி இருந்தது. கிட்டத்துலே வர வரத் தான் அது மேகமில்லை; தேனீக்கூட்டமுன்னு புரிஞ்சுது. எல்லாத் தேனீக்களும் தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியமுன்னு பறந்துக்கிட்டிருக்க, ஒரே ஒரு வயசான தேனீ மட்டும் களைப்பாகிப் போய் காக்காய் இருந்த மரத்துலே உட்கார்ந்தது.

"தேனீஜீ! என்னாச்சு, எல்லாரும் ஊரையை காலி பண்ணிட்டுப் போறீங்க போலிருக்கே? என்ன சமாச்சாரம்?"னு காக்காய் ரொம்ப அக்கறையாக் கேட்டுதாம்.

"அத ஏன் கேட்கறீங்க காக்கா? நம்ம முதலமைச்சர் மாயாவதி கலந்துக்கிட்ட பொதுக்கூட்டதுலே எங்காளுங்க தெரியாத்தனமா பறந்து போயிட்டாங்களாம். அதுக்காக, உ.பி.போலீஸோட தனிப்படை எங்களைத் துரத்திக்கிட்டு வருது,"ன்னு மூச்சிரைக்கச் சொல்லிச்சாம் தேனீஜி!

"அடடா, பொதுவா நீங்க யாரு வம்புக்கும் போக மாட்டீங்களே? எதுக்கு பெஹன்ஜீ பேசற கூட்டத்துக்கெல்லாம் போறீங்க? அவங்க படத்து மேலே ஹோலிப்பண்டிகை அன்னிக்கு சாயம் வீசிட்டாங்கன்னு ப்ளஸ் டூ படிக்கிற மாணவங்களையே பிடிச்சு ஜெயில்லே போட்டவங்களாச்சே?"ன்னு காக்காய் ரொம்ப கவலையோட கேட்டுதாம்.

"என்ன பண்ணறது? அன்னிக்கு பெஹன்ஜீ போட்டிருந்த மாலை வித்தியாசமா இருந்ததா? இந்த மாதிரி பெரிய பெரிய பூவை நாங்க பார்த்ததேயில்லையா? இதுலே கண்டிப்பா நிறைய தேன் இருக்குமோன்னு ஒரு நப்பாசையிலே பக்கத்துலே போய்ப் பார்க்கப்போனோம். அப்புறம் தான் தெரிஞ்சது, அது பூமாலையில்லே; ரூபாய் நோட்டு மாலைன்னு! எல்லாம் எங்க தலைவிதி!"ன்னு அங்கலாய்ச்சுக்கிச்சாம் தேனீஜீ!

"அப்புறம் என்ன நடந்தது?"ன்னு காக்காய் கேட்டுதாம்.

"என்ன நடக்கும்? பெஹன்ஜீ ’இது எதிர்க்கட்சியோட சதி,’ன்னு சொல்லிட்டாங்களாம். உ.பி.போலீஸைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? உடனே கேஸ் போட்டுட்டாங்க! எந்த மரத்துக்குப் போனாலும் துரத்தித் துரத்தி விரட்டறாங்க! சரி, இனிமே இங்கே இருந்தா பொழைப்பு நடக்காதுன்னு கூட்டம் கூட்டமா உ.பியை விட்டே எல்லாரும் தப்பிச்சுப் போயிட்டிருக்கோம்."

"தேனீஜி! அதோ தூரத்துலே பாருங்க! உ.பி.தனி போலீஸ் வந்திட்டிருக்கு!"ன்னு காக்காய் அலறிச்சாம்.

"ஐயோ! நான் கிளம்பறேன் காக்காய்! இங்கே இருந்தா என்னைப் பிடிச்சிட்டுப் போயி ஜெயில்லே போட்டுருவாங்க!"ன்னு பாவம், அந்த வயசான தேனியும் பறந்தே போயிருச்சாம்.

கொஞ்ச நேரத்துலே உ.பி.தனி போலீஸ் வந்து மரத்தை ரவுண்ட் பண்ணிச்சாம்.

"ஏய் காக்கா! இந்தப் பக்கமா தேனீ போனதைப் பார்த்தீங்களா?"ன்னு கேட்டாராம் ஒரு போலீஸ்காரர்.

"இல்லீங்களே! நாங்க இப்போத் தான் கண் முழிச்சு ப்ரேக்-ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்,"னு காக்காய் பதில் சொல்லிச்சாம்.

போலீஸ்காரங்கெல்லாம் அவங்களுக்குள்ளே என்னமோ ரகசியம் பேசினாங்களாம். அப்புறமா, அந்த போலீஸ்காரர் காக்காயைப் பார்த்துக் கேட்டாராம்.

"ஏய் காக்கா! இந்த மரத்துலே மொத்தம் எத்தனை காக்காய்ங்க இருக்கீங்க?"ன்னு கேட்டாராம்.

"நாங்க ஒரு நூற்றைம்பது பேர் இருக்கோம். ஆம்பிளைக்காக்காயெல்லாம் லஞ்சுக்கு ஏற்பாடு பண்ண வெளியே போயிருக்காங்க. ஏன்? என்ன விஷயம்?"னு கேட்டுதாம் காக்காய்.

"ஓஹோ! உ.பி.முழுக்க பெஹன்ஜீயோட சிலை வரப்போகுது தெரியுமில்லே? சிலை திறந்ததுக்கப்புறம் நீங்க அது மேலே எச்சம் போட்டா என்னாகிறது? அதுனாலே இந்த மரத்துலே இருக்கிற எல்லாக் காக்காயையும் நாங்க தற்காப்பு நடவடிக்கையா கைது பண்ணுறோம்,"ன்னு சொன்னாராம் போலீஸ்காரர்.

"என்னது? கைதா?"ன்னு காக்காய் அலறிச்சாம். அடுத்த நிமிஸமே அந்த மரத்திலிருந்த காக்காய் எல்லாம் தப்பிச்சோம், பிழைச்சோம்னு பறந்து உ.பியை விட்டே வெளியேறிடுச்சாம்.

இது தான் காக்காயோட ஃபிளாஷ்-பேக்! கேட்டதும் நரியோட கண்ணுலேருந்து தண்ணியாக் கொட்ட ஆரம்பிச்சுதாம்.

"உன் கதையைக் கேட்டா ரொம்ப வருத்தமாயிருக்கு காக்காய்! நீ எடுத்தது ரொம்ப சரியான முடிவு! தமிழ்நாடு காக்காய்களுக்கு சொர்க்கம் மாதிரி! இங்கே மனுசன் இல்லாத இடத்துலே கூட சிலையிருக்கும். நீ இஷ்டம் போல மிச்சம் மீதி வைக்காம எச்சம் போட்டு சந்தோஷமாயிருக்கலாம். யாரு கண்டா? உனக்கும் எனக்கும் கூட சிலை வைப்பாங்க தமிழ்நாட்டுலே! அதுனாலே நீ நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுலே சந்தோஷமா, புது வாழ்க்கை தொடங்கு!"னு நரி சொல்லிச்சாம்.

"நான் மட்டுமா? மாயாவதி அம்மாவோட போஸ்டரை ஒரு கழுதை தின்னுருச்சுன்னு இப்போ எல்லாக் கழுதையையும் கைது பண்ணப்போறாங்களாம். ஒரு நாய் மாயாவதியோட காரைப் பார்த்துக் குரைச்சதுன்னு நாயைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைச்சிருக்காங்களாம். இவங்க எல்லாரும் எங்களை மாதிரியே தமிழ்நாட்டுக்கு வந்தா என்னாகிறது?"னு காக்காய் கவலையோட சொல்லிச்சாம்.

"அதைப் பத்தியெல்லாம் நீ ஏன் கவலைப்படுறே? தமிழ்நாட்டுலே இருக்கிற மனுசனை மாதிரி எதைப் பத்தியும் கவலைப்படாம நீ பாட்டுக்கு வந்தியா, வடையைத் தின்னியா போனியான்னு இருக்கக் கத்துக்க! இந்த சமுதாயத்தை நாம திருத்த முடியாது!" னு ஆறுதல் சொல்லிச்சாம் நரி.

"பகோத் சுக்ரியா நரிபாய்!"னு காக்காய் சொல்லிச்சாம்.

"காக்கா, காக்கா! நீ நல்லாப் பாடுவியே! ஒரு பாட்டுப்பாடேன்,"னு இளிச்சுதாம் நரி.

உடனே காக்காய் பாடிச்சாம்.

"தும் பாஸ் ஆயே..பேல்பூரி காயே! குச் குச் ஹோத்தா ஹை!"

Friday, March 19, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.07

அடுத்து நாம் காணப்போகிறவர்கள், ஹி..ஹி.ஹி! துலாம் ராசிக்காரர்கள்! இவர்கள் இருக்கிறார்களே, ஹி..ஹி..ஹி! அவர்கள் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் மகா கெட்டிக்காரர்கள்! ஆனால், மற்றவர்களைச் சிரிக்க வைக்கிற இவர்களைச் சிரிக்க வைப்பது பெருங்கஷ்டம்!

இவர்கள் வலைப்பதிவு ஆரம்பிக்கப் பட்ட பாட்டைக் கேட்டால் கண்ணப்பன்மெஸ் இட்லி கூடக் கரைந்து விடும். ஆனால், தற்சமயம் இவர்கள் நிச்சயம் மிகவும் பிரபலமாகியிருப்பார்கள் என்பது உறுதி!பதிவு எழுதாவிட்டால் அதிக பின்னூட்டங்கள் போட்டாவது இவர்கள் தமிழ்மணம் முகப்பில் இருந்தே தீருவார்கள். மிகுந்த பொறுப்புணர்ச்சி உள்ளவர்கள் என்பதால், தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்பதைக் கூட புத்தகத்தை சரிபார்த்தோ, வாத்தியாரைக் கேட்டோ உறுதிப்படுத்திக்கொண்டு தான் எழுதுவார்கள். இவர்களது பதிவுகளால் சர்ச்சை வராது என்றாலும், பின்னூட்டத்தில் அவ்வப்போது பல மொக்கைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். துலாம் ராசிக்கார பதிவர்கள் எப்பொழுது பதிவு எழுதுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது என்பதும் இவர்களது தனிச்சிறப்பாகும். சொந்த வலைப்பதிவில் எழுதுவது போதாதென்று நண்பர்களின் பதிவுகளிலும் இவர்கள் அவ்வப்போது தத்தம் கைவரிசையைக் காட்டுவதுமுண்டு.

துலாம்ராசிக்கார வலைப்பதிவர்கள் இயல்பாகவே மிகவும் நேர்மையானவர்கள் என்பதால், அவர்களது பதிவுகளுக்கு அவர்களே "மொக்கை" என்று பின்னூட்டம் போட்டுக்கொள்ளுவார்கள். இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது சகபதிவர்களுக்கு இயலாத காரியமாக இருக்கும் என்பதால், பின்னூட்டம் போட்டு விட்டு எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுவார்கள். துலாம் ராசிக்காரப் பதிவர்கள் எழுதுகிற பதிவுகள் எங்கிருந்து சுடப்பட்டவை என்பதை மற்றவர்களால் ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியாது. போதாக்குறைக்கு, எவ்வளவு மொக்கையான பதிவைப் போட்டாலும், அதற்குப் பின்னாலே ஏதாவது சமூகநோக்கு இருக்கிறது என்று சர்வசாதாரணமாக சால்ஜாப்பு சொல்லி சமாளிக்கும் திறன் படைத்தவர்களாயிருப்பார்கள். தட்ஸ் டமில், மாலைமலர், தினமலர் இணையதளங்களில் இருந்து சுட்டிகளைச் சுட்டுப்போடுவது இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி!

இவர்களுக்கும் புத்தகங்கள் என்றால் கொள்ளைப்பிரியம். புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, அது குறித்து ஒரு பதிவு கண்டிப்பாக எழுதியே தீருவார்கள். அப்படியே புத்தகம் வாங்கி விட்டாலும் கூட, வாங்கிய அதே ஆர்வத்தோடு படிக்க மாட்டார்கள் என்பதால் ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாங்குகிற அபாயமும் இருக்கின்றது. இவர்களில் பலருக்கு எண்கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும் என்பதால், மூட நம்பிக்கைகளை எதிர்க்கிற பதிவுகளைக் கூட பஞ்சாங்கம் பார்த்து, முகூர்த்த நேரத்தில் தான் போடுவார்கள். பெரும்பாலும் பேருந்து, இரயில் பயணங்களின் போதே அடுத்த பதிவுக்கான கரு இவர்களுக்கு உதயமாகும் என்பதால்,உற்சாக மிகுதியில் தன் தொடை என்று எண்ணி பக்கத்து சீட்காரரின் தொடையில் தட்டி விடுவார்கள். மேலும் உட்கார்ந்தபடியே உறங்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதால், இவர்களது பதிவுகளில் இரண்டு பத்திகளுக்கு நடுவே உள்ள இடைவெளியில் ஒரு பாய் விரித்து படுத்து உறங்கலாம்.

திட்டமிடுவதில் மட்டுமின்றி, திட்டுவதிலும் இவர்கள் படு கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். கடமையுணர்ச்சி, நியாயம் ஆகியவற்றை இவர்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள்(மற்றவர்களிடமிருந்து மட்டும்!). இவர்களை நன்கு அறிந்தவர்கள் முதுகுக்குப் பின்னால் "பழைய பஞ்சாங்கம்," என்று பகடி செய்தாலும், ஓட்டுப்போடுவதிலும், பின்னூட்டம் இடுவதிலும் இவர்கள் காட்டும் அக்கறைக்காக மரியாதையுடன் வைக்கப்பட்டிருப்பார்கள்.

துலாம் ராசிக்காரர்களே! பதினோராம் இடத்திலிருக்கிற சனி பன்னிரெண்டாவது இடத்துக்குச் செல்வதால், உங்களுக்கு விரயச்சனி என்று சொல்லப்படுகிற ஏழரைச்சனி ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும், இது குறித்து நீங்கள் கவலைப்படத்தேவையில்லை( வந்து படிப்பவர்கள் தான் கவலைப்பட வேண்டும்!). தவறுதலாக, ஏற்கனவே போட்ட பதிவையே திரும்பவும் போடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அலைச்சல் அதிகமாகி, கூகிளில் எதையோ தேடப்போய் காணாமல் போய் விடுகிற வாய்ப்பிருக்கிறது. எந்தப் பதிவைப் போடுவதாக இருந்தாலும், ஒரு முறைக்குப் பல முறை யோசித்து விட்டு, போடாமல் இருப்பதே சாலச் சிறந்தது. பல புதுப்புது சிந்தனைகள் உருவாகினாலும் கூட, சரியான தலைப்பு கிடைக்காமல் அல்லாடுவீர்கள்! கணினியால் சில்லறைச் செலவுகள் ஏற்படும்; பென் டிரைவால் வைரஸ் வரும். எதற்கும் எல்லாப் பதிவுகளிலும் வரிக்கு ஒரு நகைப்பானைப் போட்டு வைப்பது நல்லது. வாசகர்களின் ஓட்டளிப்பும், பின்னூட்டங்களும் தாமதமாகலாம்.

குறிப்பாக, பிற பதிவர்களுக்கு ஓட்டளிக்கும்போது, முழுமையாகப் படித்து விட்டு ஓட்டளிப்பது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் இரண்டு வலைப்பதிவர்களின் குடுமிப்பிடி சண்டை மடல்களுக்கு ஓட்டளித்து "அருமையான பதிவு" என்று பின்னூட்டம் போட்டுப் பின்னால் வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்.

நீங்கள் எழுதவிருக்கிற பதிவை உங்கள் நண்பர் எவரேனும் எழுத வாய்ப்பிருக்கிறது என்பதால், உங்கள் அடுத்த பதிவு குறித்து யாரிடமும் சொல்லாமலிருப்பது நல்லது. எழுதாமலே விட்டு விட்டால் அதை விட நல்லது.

காதல் கவிதைகள் முன்போல் எழுத வராமல் மிகவும் கஷ்டப்பட நேரிடலாம். ஒரு வாரம் "பதியா விரதம்," கடைபிடித்தால் தோஷங்கள் விலகலாம். கூகிளில் இன்விசிபிளாக இருப்பது சென்சிபிளாக இருக்கும்.

இருந்தாலும் உங்களது இந்தத் தற்காலிகப் பின்னடைவுகள் விரைவில் சரியாகி, முன்னைப் போல பல அறுவையான, மன்னிக்கவும், அருமையான பதிவுகளை எழுதி ஓட்டு மேல் ஓட்டு வாங்குவீர்கள். சிரமதசை முடிந்ததும், புதிய டெம்ப்ளேட்டுகளும், மேலதிகமான இன்னபிற கேட்ஜெட்டுகளும் உங்கள் வலைப்பதிவுக்கு அழகு சேர்க்கும்.

மொத்தத்தில் நேர்மையைத் தனிக்குணமாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள், நேர்மையாய் இருப்பவர்கள் சந்திக்கிற எல்லா சோதனைகளையும் சந்திப்பார்கள். (இந்தப் பதிவைப் படிக்கிற சோதனை உட்பட!)

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

மற்ற ராசிக்காரர்களுக்குச் சொல்லவா வேண்டும்? உங்கள் பலன்களும் வந்தே தீரும்!

Wednesday, March 17, 2010

ஜலமஹாத்மியம்


திமிகிட திமிகிட வாத்யம்ருதங்கம்!
திமிகிட திமிகிட வாத்யம்ருதங்கம்!
ஜலானந்தஹரே! அக்வா ஃபினா
பிஸ்லேரிவாட்டர் ஹரே!

ஆதௌ கீர்த்தனாரம்பத்துலே, அவா அவா வாட்டர் பாட்டில்கள் ஜாக்கிரதை! முன்னெல்லாம் பொன்னையும், பொருளையும், பொண்ணையும் திருடிண்டிருந்தா. இனிமேல் வர காலத்துலே தண்ணியையே திருட வேண்டி வந்துடுமோன்னு ஒரு பயம் வந்துடுத்தே! லோகத்துலே தண்ணி எவ்வளவு குறைஞ்சிண்டே போறதுன்னு நம்ம வின்சென்ட் மாதிரி அக்கறையுள்ள மனுஷாள் எழுதறதைப் படிக்கறச்சே மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்கிறதே!

இயற்கையாகப்பட்டது லோகத்துக்கு கொடுத்திருக்கிற வரங்களிலே ரொம்பவும் பெரிய வரமாச்சே இந்தத் தண்ணீர்! தாகத்தைத் தீர்த்துக்குறதுலேருந்து டாஸ்மாக்குலே மிக்ஸிங் பண்ணறது வரைக்கும் இந்த தீர்த்தமில்லாம காரியம் நடக்காதோன்னோ? இப்பேர்ப்பட்ட தண்ணீருக்கு, நம்ம முத்துலட்சுமி சொல்லற மாதிரி நாமெல்லாம் எவ்வளவு கடமைப்பட்டிருக்கணும்?


இப்படியே நீர்வளத்தைப் பத்திக் கவலைப்படாம, இயற்கையை நாம சுரண்டிண்டிருந்தா அது எதுலே கொண்டு போய் விடும் தெரியுமோன்னோ? அதை ஞாபகப்படுத்தறதுக்காகவே தான் இந்த "ஜலமஹாத்மியம்," என்கிற கதாகாலட்சேபத்தை நடத்தப்போறேன். கேட்கறதுக்கு முன்னாலே, எல்லாரும் ஒரு நூற்றாண்டு தள்ளிப்போயிடுவோமா? நாமெல்லாரும் இப்போ இருக்கிறது 22 -ம் நூற்றாண்டுலே! அப்போ என்ன நடக்கறதுன்னு பார்க்கலமா?

கலியாகப்பட்டது முத்தினதாலே, ஜீவநதிகளும், ஏரிகளும்,குளங்களும் வறண்டு போயிட்டதால், மனுஷாளுக்கும் குளியலுக்குமே ஸ்நானப்பிராப்தி இல்லாமப் போயிடுத்து. முன்னெல்லாம் தீபாவளிப்பண்டிகை கொண்டாடறச்சே, "ஏண்ணா, கங்கா ஸ்நானம் ஆயிடுத்தா?"ன்னு விஜாரிப்பா! இந்தக் காலத்துலே பாருங்கோ, "வேக்கூம் ஸ்நானம் ஆயிடுத்தா?"ன்னு கேட்கும்படியாயிடுத்து!

இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே, அத்திப்பட்டி அத்திப்பட்டிங்கிற ஊருலே, சுட்டிப்பொண்ணு சுமதியாகப்பட்டவள், ஒரு தீபாவளியன்னிக்கு தன்னோட தாயாரண்ட போயி, "ஏம்மா, போன தீபாவளியின் போது, அடுத்த தீபாவளிக்கு குளிப்பாட்டறேன்னு சொன்னியே! இன்னிக்காவது என்னைக் குளிப்பாட்டுவியா?"ன்னு கேட்டா பாருங்கோ! நம்ம நாட்டுலே எது இருக்கோ இல்லியோ, கண்ணுலே ஜலம் வரதுக்கு மட்டும் குறைச்சலே இருக்காதோன்னோ? சுமதியோட ஆசையைக் கேட்டதும், தாயாரான ஆனந்தவல்லி மனசு நொந்துபோயி, கண்ணீரும் கம்பலையுமா, "கண்ணன் வருவான், கதை சொல்லுவான்,’ மெட்டுலே பாட ஆரம்பிச்சுட்டா! என்ன பாட்டு?

தண்ணிவருமா தாகம்தீருமா
தம்ளர்தண்ணி கண்ணில்படவில்லை இங்கே!
குழாயினிலே காத்து மட்டும்தான்
குடிக்கவே தண்ணியில்லை!குளியல் எங்கே?

தாயாரோட சஞ்சலத்தைப் பார்த்ததும், சுட்டிப்பொண்ணு சுமதி மனசைத் தேத்திண்டு, அந்த தீபாவளியும் குளிக்காமலேயே கொண்டாடலாமுன்னு முடிவு பண்ணிட்டா! ஆனா, அந்தக் கொழந்தைக்கு லோகத்துலே ஏன் இவ்வளவு தண்ணிப்பஞ்சம் வந்ததுன்னு தெரிஞ்சுக்கணுமுன்னு ஒரே ஆசை! அதுனாலே பட்டாசு வெடிக்காம, அம்மா பக்கத்துலே உட்கார்ந்துண்டு ’நானொரு சிந்து காவடி சிந்து,’ மெட்டுலே பாட்டாவே கேள்வி கேட்டாள்! எப்படி....?

ஏனில்லை தண்ணீர்?
ஏனிந்தக் கண்ணீர்?
ஏனில்லை தண்ணீர்?
ஏனிந்தக் கண்ணீர்?
யார்செய்த வேலையிது?-இங்கு
யார்செய்த வேலையிது?
தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரைக்காணோம்
யார் செய்த லீலையிது?-இங்கு
யார் செய்த லீலையிது?

மகளோட தாகத்தைத் தீர்க்க தண்ணியில்லாமப்போயிட்டாலும், அவளோட அறிவுதாகத்தையாவது தீர்க்கலாமேன்னு ஆனந்தவல்லியாகப்பட்டவள், சுட்டிப்பொண்ணு சுமதிக்கு லோகத்துலே எப்படித் தண்ணீர்க்கஷ்டம் வந்ததுன்னு சொல்லத் தொடங்கினாள். என்னான்னு.....? கேளுங்கோ!!

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
முன்னோர் செய்த லீலையடி
முடித்து வைத்தார் வேலையடி!

நிலத்தடிநீர் உறிஞ்சியதால்
நீர்வளங்கள் குறைந்ததடி
கழிவுத்தண்ணீர் ஆற்றில்விட்டுக்
காய்ந்துவறண்டு போனதடி
கழிவுத்தண்ணீர் ஆற்றில்விட்டுக்
காய்ந்துவறண்டு போனதடி

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
முன்னோர் செய்த லீலையடி
முடித்து வைத்தார் வேலையடி!

ஏரிகளைத் தூரெடுக்க எவருக்குமே கவலையில்லை
எவருக்குமே பயன்படாமல் கடலில்விழுந்த கணக்குமில்லை
மரங்கள்நட்டு வனம்வளர்த்து
மழைபெருக்க முயலவில்லை
மனதுவைத்துக் கிணறுவெட்டி
மனிதன்நீரைச் சேர்க்கவில்லை!

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
முன்னோர் செய்த லீலையடி
முடித்து விட்டார் வேலையடி!

ஆனந்தவல்லி இப்படிச்சொன்னதும், சுட்டிப்பொண்ணு சுமதிக்குட்டிக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. இருக்காதா பின்னே? அவளோட தாத்தா, கொள்ளுத்தாத்தா பண்ணின தப்புக்கு அவ தானே அவஸ்தைப்பட்டிண்டிருக்கா தண்ணியில்லாம?

இதெல்லாம் கனவோ கற்பனையோ இல்லேங்காணும்! மனுஷாள் பொறுப்பில்லாம இருந்தா இதெல்லாம் நடந்தே தீரும்! அப்படி நெஜமாகவே நடக்காம இருக்கணுமுண்ணா, நாமெல்லாம் தண்ணீரை விரயம் பண்ணாம மிச்சம் பிடிக்கணும்! உங்க வருங்கால சந்ததிக்கு சொத்து,சுகம்,ஆஸ்தி,பாஸ்தி சேர்த்து வச்சிட்டுப்போகாட்டாலும் பரவாயில்லை! அவா இருக்கப்போற லோகத்தை நாஸ்தி பண்ணாம இருக்கணுமோன்னோ?

"தண்ணிபட்ட பாடு, தண்ணிபட்ட பாடு,"ன்னு சொல்றோமோன்னோ? தண்ணிக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு ஸ்வாமி? இப்போ தண்ணிக்காக மாநிலங்கள் சண்டை போடறா; நாளைக்கு தேசங்கள் சண்டை போடற காலம் வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை! நம்ம முகுந்தம்மா இதைப் பத்தி எவ்வளவு அழகா எழுதியிருக்கார்னு சித்த வாசியுங்கோ!

அதுனாலே...

ஷவரிலே குளிக்கிறவா பக்கெட்டுலே தண்ணியைப் பிடிச்சு வச்சிண்டு குளிங்கோ! இல்லை, ஷவரிலே குளிச்சாத் தான் என் சரீரத்துலே இருக்கற அழுக்கு போகுன்னு சொல்லறவா, அட் லீஸ்ட் குளிச்சுட்டு சுருக்குன்னு வெளியே வந்துடுங்கோ! ஷவருக்கடியிலே நின்னுண்டு ’சலங்கை ஒலி’ ஜெயப்ரதா மாதிரி "மவுனமான நேரம்,"னு பாட்டெல்லாம் நாராசமாப் பாடி அக்கம் பக்கத்துலே இருக்கிறவாளோட பிராணனை வாங்காதேள்!

குழாயைத் திறந்து வச்சிண்டு கண்ணாடியிலே அவா அவா அழகு சொரூபத்தையே அரை மணிநேரம் பாத்துண்டு நிக்காதேள்! இப்பவே கேன்-லே தண்ணி விற்கறா! பாட்டில்லே தண்ணி விற்கறா! பாக்கெட்டிலே தண்ணி விற்கறா! இப்படியே போச்சுன்னா சாச்செட்-லே தண்ணி விற்கற நாள் வந்துடும் தெரியறதோன்னோ? அப்புறம் குளிக்கிறதுக்கு ஷாம்பூ வாங்குற மாதிரி ஒரு சாச்செட் தண்ணி வாங்க வேண்டி வந்திடும்!

வேனல் காலத்துலே சோடா குடிக்கிறதுக்குப் பதிலா, சந்திரமண்டலத்துக்குப் போறவா மாதிரி குட்டி குட்டி மாத்திரை தான் கிடைக்கும். ஒரே கோலாவிலே ரெண்டு ஸ்ட்றா போட்டுச் சாப்பிடற காதல் ஜோடிகளே! உங்க பேரன் பேத்தி காலத்துலே பெப்ஸியும் இருக்காது, ஸ்ட்றாவும் இருக்காது. Straw(வைக்கோல்) தான் மிச்சமிருக்கும்!

ரேஷன் கடையிலே அரிசி,பருப்பு,மண்ணெண்னை வாங்குற மாதிரி தண்ணியும் மாசத்துக்கு ஒரு குடும்பத்துக்கு அஞ்சு லிட்டர்னு கொடுக்கிற காலம் வந்துடும்.

தேர்தல்லே புடவை,வேஷ்டி கொடுக்கிறா மாதிரி தொகுதியெல்லாம் தண்ணிக்கே தண்ணிபட்ட பாடா விநியோகம் நடக்கும்.

வீட்டுலே கிணறு வச்சிருக்கிற மாப்பிள்ளை தான் வேணுமுன்னு பொண்ணுங்கல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுவா! வரதட்சணையா டாங்கர் டாங்கரா தண்ணி கொடுக்க ஆரம்பிச்சுடுவா!

இப்போதைக்கு சந்திரமண்டலத்துலே தண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கா! அப்புறம், அங்கிருந்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வர்றேன்னு அரசியல்வாதியெல்லாம் திட்டம் போடுவா! அப்புறமென்ன, டெண்டர் தான், காண்ட்ராக்ட் தான்! கமிஷனிலே ஆரம்பிச்சு விசாரணைக் கமிஷன் வரைக்கும் போகும்! இதெல்ல்லாம் தேவையா?

எல்லாரும் தண்ணீரை மிச்சம் பண்ணுங்கோ! லோகத்தைக் காப்பாத்துங்கோ! வரப்போற சந்ததி நம்பளை நினைச்சுப் பெருமைப்படறா மாதிரி பண்ணுவோம். மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம்! ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் மிச்சம் பிடிக்கறதுன்னு நாம எல்லாரும் ஒரு பிரதிக்ஞை எடுத்துப்போம்!

வலைப்பதிவாளர்களே! உங்களுக்கும் இந்த சேட்டைக்கார பாகவதரோட ஒரு கோரிக்கை! எல்லாரும் உலக தண்ணீர் தினம் பற்றி ஒரு பதிவு போட்டு, லோகத்துலே இருக்கிறவாளுக்கு தண்ணீரின் மகத்துவம் குறித்து, ஏதோ நம்மால் முடிந்த அளவு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோமே!

வலைப்பதிவாளருக்கும் வாசிக்கவந்தவர்க்கும்
களிப்புடன் செல்பவர்க்கும் கடுப்புடன் போனவர்க்கும்
மங்களம் சுப மங்களம்! நித்ய சுப மங்களம்! சுப மங்களம்!

Monday, March 15, 2010

ஜிம்மாயணம்-03







இதுவரை.....

மேன்சன்வாசிகளான நான், நண்பர்கள் வைத்தி, சுரேந்திரன் மூவரும் கொத்தவரங்காய் போலிருந்த அவரவர் உடம்புகளை இறுக்கி,பெருக்கி கார்த்தவராயன் போலாக வேண்டும் என்பதை 2010-ம் ஆண்டு பிறந்தவுடன் செயல்படுத்தத் திட்டமிட்டோம். உடலை வலுவாக்கத் தேவையான அலாரம் டைம்பீஸையும், உடற்பயிற்சி செய்ய மிகவும் முக்கியமான உடைகளையும் வாங்கிமுடித்தபோது, ஜனவரி 1 பிறந்து விட்டது. சரி, ஜனவரி 2-ம் தேதி முதல் துவங்கலாம் என்று எண்ணியிருந்தபோது, அதிகாலையில் வெறும்வயிற்றில் சாப்பிட வேண்டிய பாதாம்பிசின் என்ற வஸ்து இல்லாததால், அதை வாங்கியபிறகு 3-ம் தேதி முதல் துவங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மூன்றாம் தேதியாவது தொடங்கினோமா? பார்க்கலாம்!


நல்ல வேளை! பாதாம் பிசின் மண்ணடியிலே பிராட்வே திரையரங்குக்கு அருகேயே கிடைத்தது. எதற்கும் இருக்கட்டுமே என்று நான் அரை கிலோ கொடுங்கள் என்று துவரம் பருப்பு வாங்குகிறவன் போலக் கேட்கவும், கடைக்காரர் என்னை ஒரு டைனோசரஸைப் பார்ப்பது போலப் பார்த்தார். அவர் ஏன் அப்படி என்னைப் பார்த்தார் என்பதன் பொருள் ஜனவரி மூன்றாம் தேதி காலையில் தான் தெரிந்தது.

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் தேவையென்று வைத்தி சொன்னது மறுநாள் முதல் அமலுக்கு வருமென்பதால், அன்று பிஸ்மில்லாவிலிருந்து காரசாரமாக பிரியாணி வரவழைத்துச் சாப்பிட்டேன். (நாளையிலிருந்து நோ காரம்!). அன்று மாலை சானட்டோரியத்தில் இறங்கியதும் மெனக்கெட்டு சாலையைக் கடந்து சென்று பானிப்பூரி,பேல்பூரி,தகிப்பூரி என எல்லாப் பூரிகளையும் ஒரு ப்ளேட் வெட்டினேன்.(நாளையிலிருந்து நோ சாட் அயிட்டம்!). டாக்டர் பட்டம் வாங்கிய நடிகரைப் போல கையில் பாதாம்பிசினுடன் மேன்சனுக்குள் பூரிப்புடன் நுழைந்தேன்.

அன்று இரவு உணவில் அரை டஜன் தோசையும், முக்கால் பக்கெட் சாம்பாரும், ஏறக்குறைய கால் கிலோ சட்டினியும் சாப்பிட்டது போதாதென்று, வெளியே வந்து இரண்டு வாழைப்பழத்தையும் விழுங்கிமுடித்ததும், கால்கள் தாம்பரத்திலும் வயிறு விழுப்புரத்திலும் இருப்பது போல ஒரு உணர்வு. நடக்க சிரமமாக இருந்ததால் ஏறக்குறைய ரோடு ரோலர் போல நகர்ந்து ஒருவழியாக மேன்சனை அடைந்தோம்.

அடுத்து பாதாம்பிசின் குறித்த வைத்தியின் செயல்முறை விளக்கம் இருந்ததால், நானும் சுரேந்திரனும் பயபக்தியுடன் கையதுகொண்டு வாயதுபொத்தி(எங்கள் கையால், எங்கள் வாயை) வைத்தியின் விளக்கத்துக்காகக் காத்திருந்தோம்.

நான் வாங்கி வந்த பாதாம்பிசின் பொட்டலத்தை வைத்தி திறந்ததும் எங்கள் மேன்சனில் பேசின் பிரிட்ஜின் வாசனை அடித்தது. பாதாம்பிசினிலிருந்து வந்த கடுமையான நெடியில், அதுவரை எங்களது இரத்தத்தைக் குடித்துக்கொண்டிருந்த சிலபல கொசுக்கள் கூட்டம் கூட்டமாக விழுந்து செத்துப்போயின. முருகவிலாஸ் ஹோட்டல் முறுகுதோசையை பார்சலாக வாங்கி மூன்று மாதம் கழித்துத் திறந்தால் வருவது போல அப்படியொரு கப்பு குப்பென்றடித்தது.

"என்னடா பொணநாத்தம் நாறுது? இதையெல்லாம் ஆர்னால்ட் சாப்பிட்டிருப்பாங்கிறே?" என்று சந்தேகத்துடன் வைத்தியைக் கேட்டேன்.

"டேய், இதை அப்படியேவா சாப்பிடச் சொன்னேன்? இதை இப்போ தண்ணியிலே ஊற வச்சிட்டு நாளைக்குக் காலையிலே எழுந்து சாப்பிடணும்! அப்பத்தான் உடம்பு கிண்ணுன்னு ஆகும்," என்று விளக்கினான் வைத்தி. ஆனால், பாதாம்பிசினின் நெடியில் அவனது முகமானது கிருஷ்ணவேணி திரையரங்கின் கிழிந்த திரைபோல ஆகியிருந்ததை நாங்கள் கவனிக்கத்தவறவில்லை.

"எனக்குத் தண்ணியே பிடிக்காதுடா! சோடாவிலே மிக்ஸ் பண்ணிச் சாப்பிடட்டுமா?" என்று கேட்ட சுரேந்திரனை வைத்தி கொங்கணவ முனிவரைப் போல முறைத்தான்.

"ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடணும்?" என்று சமாளிக்கிற மாதிரி, அடுத்த அறிவுபூர்வமான கேள்வியைக் கேட்டான் சுரேந்திரன்.

"எவ்வளவு பிடிச்சிருக்கோ அவ்வளவு சாப்பிடு! தப்பில்லை," என்று கூறியபோது வைத்தி வைரஸ் காய்ச்சல் வந்தவன் போல நடுநடுங்கத் தொடங்கியிருந்தான். எவ்வளவு பிடிச்சிருக்கோ அவ்வளவு சாப்பிடறதா? இது என்ன பாதாம் பிசினா? பால்கோவாவா??

"முதல் நாள் அதிகம் சாப்பிட வேண்டாம்! ஆளுக்கு ஒரே ஒரு கரண்டி மட்டும் சாப்பிடலாம்," என்று நான் மிகவும் சமயோசிதமாக யோசனை தெரிவித்தேன். அதன்படி, ஆளுக்கு ஒரு தம்ளர் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி பாதாம்பிசினைப் போட்டு, பிறகு தம்ளர் முழுக்க தண்ணீரால் நிரப்பினோம்.

"அலாரத்தை மறக்காமல் அஞ்சு மணிக்கு வச்சிடணும்!" என்று வைத்தி கண்டிப்பாகக் கூறினான்.

அவனது உத்தரவை சுரேந்திரன் சிரமேற்கொண்டு செய்யவும், அவரவர் படுக்கையில் விழுந்த நாங்கள் மறுநாள் முதல் எங்களது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற பரபரப்பில் சிறிது நேரம் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தோம். சிக்ஸ்-பேக்கானதும் நேராக ஹரித்வார் போய் ஸ்ரேயாவின் பெற்றோர்களிடம் பெண் கேட்பது மாதிரியும், அவர்கள் சம்மதித்ததும் நானும் ஸ்ரேயாவும் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் டூயட் பாடுவது போலவும் கூட உறங்கியபோது ஒரு கனவு வந்தது. இத்தோடு ஆந்திராவிலிருந்து திம்மன்சேரலா டுமீல் ரெட்டி என்ற தயாரிப்பாளர் என்னை "இப்புடு செப்புடு," என்ற படத்தில் கதாநாயகனாக என்னை புக் செய்ய கரோலாவில் வந்து காத்திருப்பது மாதிரி ஒரு டிரைலர் கனவும் இடைவேளையில் வந்தது.

மறுநாள் எங்கள் எல்லாரது கனவுகளையும் கலைத்தபடி அலாரம், சரியாக அதிகாலை ஐந்து மணிக்கு அடித்துக் கழுத்தறுத்தது. பதறியடித்துக்கொண்டு நாங்கள் எழுந்து கொண்டபோது, ஏற்கனவே விழித்திருந்த வைத்தி எதையோ மிகுந்த யோசனையுடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தான். தூக்கக்கலக்கத்திலிருந்து விடுபட்டு, நான் எழுந்து கொண்டதும் என்னைத் திரும்ப நோக்கியவன் ஒரு கேள்வியை எழுப்பினான்.

"ஏண்டா, ஒரு தம்ளருக்கு ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் தானேடா போட்டே?"

"ஆமாம்..நீ கூட பார்த்தியேடா! ஏண்டா, என்னாச்சு....?"

"இங்கே வந்து பாரு இந்தக் கொடுமையை....!"

உற்றுப்பார்த்தேன்! மூன்று தம்ளர்களிலுமிருந்த தண்ணீர் முழுவதையும் நன்றாக உறிஞ்சியெடுத்துக்கொண்டு பாதாம்பிசின் உப்பி தம்ளர்களிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.

"ஐயையோ! எப்படிடா இவ்வளவு ஆச்சு?"

சுரேந்திரன் தயங்கித் தயங்கி அவனது தம்ளரை எடுத்து, சற்றே துணிவுடன் அதை மோந்து பார்த்தான்.

"டேய்! புளிச்சுப்போன தோசை மாவு மாதிரி வாசனை வருதுடா! வயித்தைக் குமட்டுதடா! எனக்கு வேண்டாம் போடா! நான் இப்படியே இருந்திட்டுப்போறேன்!"

சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு அவன் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

ஆனால், நானோ வைத்தியின் முன்னர், பலியிடுவதற்குக் குளிப்பாட்ட ஆட்டுக்குட்டியைப் போல வெடவெடவென்று நடுங்கியபடி நின்று கொண்டிருந்தேன்.

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.05

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.02

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.03

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.04



இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை இதுவரை படிக்காதவர்களுக்காக, சில முக்கியமான குறிப்புகள்.

பாத்திரங்கள்

சொறிகால்வளவன் - சோற்றுப்புதூர் சாம்ராஜ்யத்தின் அரசன்
உலக்கைநாயகி - சொறிகால்வளவன் மனைவி/அரசி
அடங்காவாயர் - தளபதி / உலக்கைநாயகியின் அண்ணன்
குக்கரசி - அடங்காவாயரின் மனைவி
திருவாழத்தான் - நிதியமைச்சமர்
அவியலூர் அடுப்பங்கவிஞர் - ஆஸ்தான புலவர்
வரலட்சுமி - ஆஸ்தான நர்த்தகி
கன்னக்கோலன் - யானைப்பாகன்
மெய்யாமொழி - ஓற்றன்

இது தவிர இந்த வரலாற்றுக்காவியத்தில் ஏறக்குறைய யானை போலவே இருக்கிற ஒரு யானையும் முக்கிய அங்கம் வகிக்கிறது.
கதைச்சுருக்கம்

நிதியமைச்சர் திருவாழத்தான், சொறிகால்வளவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் நர்த்தகி வரலட்சுமியை காந்தர்வமணம் புரியவே, வெகுண்டு போன மன்னன், மறுநாள் அரசவையில் ராஜநர்த்தகியின் நடனம் நடைபெறாவிட்டால், (கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்) தளபதி அடங்காவாயரை யானையின் காலில் வைத்து மிதிக்குமாறு உத்தரவு பிறப்பித்து விடுகிறார். அடங்காவாயரின் மனைவி குக்கரசியை சோற்றுப்புதூரில் வேறு யாரும் பார்த்ததில்லை என்பதால், தானே ராஜநர்த்தகியாகி மன்னரை ஆடி மகிழ்விப்பதாகக் கணவருக்கு ஆறுதல் கூறுகிறார். தன்னை மன்னரிடம் காட்டிக்கொடுத்த அவியலூர் அடுப்பங்கவிஞர் மற்றும் தளபதி அடங்காவாயரைப் பழிவாங்க நிதியமைச்சர் திருவாழத்தானும், யானைப்பாகன் கன்னக்கோலனும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி, புரண்டு படுக்கவும் தெம்பின்றி மெலிந்து போன யானைக்கு உணவளித்து அதனை எழுப்பி நிற்க வைக்க முயற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்படுகிறது. தன் கணவனே தனது ஒரே ஒரு அண்ணனையும், இருந்த ஒரே ஒரு யானையின் காலில் வைத்து மிதிக்குமாறு உத்தரவிட்டதையெண்ணி அரசி உலக்கைநாயகி உள்ளம் குமுறுகிறார். இனி.....!

இடம்: அரசவை

(நிதியமைச்சர் திருவாழத்தான் ஓடோடி வருகிறார்)

திருவாழத்தான்: ஆபத்து!ஆபத்து!!

அவியலூர் அடுப்பங்கவிஞர்: ஆஹா! திருவாழத்தாரே! வரலட்சுமியை நீர் மணமுடிக்கும்போதே இப்படியொரு நாள் அலறியடித்துக்கொண்டு வருவீர் என்பதை யாம் அறிவோம்.

திருவாழத்தான்: புலவரே! வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் வெந்தபுண்ணிலே வெண்பா எழுதாதீர்! மன்னர் எங்கே?

அ.அ.கவிஞர்: அவர் நித்திராதேவியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

திருவாழத்தான்: யார்? நித்திராதேவியா? அப்படியென்றால் மகாராணியார்...?

அ.அ.கவிஞர்: நீர் நிதியமைச்சரல்ல, என் தலை விதியமைச்சர்! மன்னர் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னேன். கொஞ்சம் கவிதைநயமாகப் பேச விட மாட்டீரே?

திருவாழத்தான்: ஓய் புலவரே! ஊரே அமளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. உமக்குக் கவிதைநயமா கேட்கிறது. எனக்கு வருகிற கோபத்திற்கு உம்மை உதைத்து எனது கழுதைநயத்தைக் காண்பித்து விடுவேன்!

அ.அ.கவிஞர்: அப்படியென்ன ஆபத்து வந்து விட்டது?

திருவாழத்தான்: அரண்மனைக்கு வெளியே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அ.அ.கவிஞர்: என்னது? நிலநடுக்கமா? அட, ஆமாம் திருவாழத்தாரே! நான் கூட நேற்று இரவு அருந்திய பானத்தின் பக்கவிளைவாயிருக்குமோ என்று கவனிக்காமல் இருந்து விட்டேன். ஐயையோ! அரண்மனை குலுங்குவது போலிருக்கிறதே!

(உறக்கத்திலிருந்து விழித்த சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் வருகிறார்)

திருவாழத்தான்: புலவரே, மன்னர் வந்து கொண்டிருக்கிறார்!

அ.அ.கவிஞர்: வாழ்க சொறிகால்வளவன்! வளர்க புகழ்! ஓங்குக....

திருவாழத்தான்: நிறுத்துக புலவரே! இந்த இக்கட்டான நேரத்தில் இதெல்லாம் தேவையா? விஷயத்தைக் கூறும்!

சோ.சொ.வளவன்: யாரது? திருவாழத்தானா? ராஜதுரோகியே! எனது அரசவையில் இருந்த ஒரே ஒரு நர்த்தகியையும் நயவஞ்சமாகத் திருமணம் செய்து கொண்ட பாவியே! உம்மை என்ன செய்கிறேன் பாரும்!

அ.அ.கவிஞர்: அரசே! சொந்தப் பிரச்சினையைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். நாடே பூகம்பத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறது.

சோ.சொ.வளவன்: என்னது? பூகம்பமா? நான் கூட அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து வந்ததால் தான் இப்படித் தோன்றுகிறதோ என்று எண்ணி விட்டேன்.

திருவாழத்தான்: மன்னா! ஏதாவது செய்யுங்கள் மன்னா!

சோ.சோ.வளவன்: வாருங்கள், வேகமாக வெளியே ஓடி விடலாம்.

(பாகன் கன்னக்கோலன் ஓடி வருகிறார்)

கன்னக்கோலன்: அரசே! ஆபத்து! ஆபத்து!!

சோ.சொ.வளவன்: தெரியும்! பூகம்பம் வந்திருக்கிறது என்று சொல்லப்போகிறாய்? அது தானே?

கன்னக்கோலன்: இல்லை மன்னா! இன்று தளபதியின் தலையை மிதிப்பதாக இருந்த யானை தப்பித்துத் தலை தெறிக்க ஓடி விட்டது.

அ.அ.கவிஞர்: என்னது? யானை ஓடி விட்டதா? அதைப் பிடித்து நிறுத்த வேண்டியது தானே?

கன்னக்கோலன்: அது யானையாய் இருந்திருந்தால் பிடித்திருப்பேன். மாசக்கணக்கில் பட்டினியாய் இருந்து மான் போல இளைத்துத் துரும்பாகி விட்டது. அது ஓடிய வேகத்துக்கு இன்னேரம் அது ஒரிசாவுக்கே போய்ச் சேர்ந்திருக்கும்.

அ.அ.கவிஞர்: அடப்பாவி! இருந்த ஒரு யானையையும் தொலைத்து விட்டாயே! இப்போது தளபதிக்கு அளிக்க வேண்டிய தண்டனையை எப்படி நிறைவேற்றுவது?

கன்னக்கோலன்: கவலைவேண்டாம் மன்னா! என் வீட்டருகில் ஒருவர் பத்து வருடங்களாக யானைக்கால் நோயால் அவதிப்படுகிறார். அவரை வைத்துத் தளபதியை மிதித்து விடலாமா?

திருவாழத்தான்: என்னது? நம் தளபதியையா?

அ.அ.கவிஞர்: பிறகென்ன அண்டைநாட்டுத் தளபதியையா?

சோ.சொ.வளவன்: நிறுத்துங்கள்! பூகம்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் பூசல் செய்கிறீர்களே?

(ஒற்றன் மெய்யாமொழி ஓடி வருகிறான்.)

மெய்யாமொழி: அரசே! ஆபத்து! ஆபத்து!!

சோ.சொ.வளவன்: வாடா மெய்யாமொழி! தாமதமாகச் செய்தி கொண்டுவரும் தறுதலை ஒற்றனே! பூகம்பம் வந்திருக்கிறது என்று சொல்லப்போகிறாய், அது தானே?

மெய்யாமொழி: இல்லை மன்னா! நீங்கள் நினைப்பது போல அது பூகம்பம் இல்லை. தளபதி அடங்காவாயரின் வீட்டில் யாரோ நடனப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆடுகிற அதிர்வில் கோட்டை கொத்தளங்கள் அப்பளங்களைப் போல தவிடுபொடியாகி விடும்போலிருக்கிறது மன்னா!

சோ.சொ.வளவன்: சபாஷ்! அடங்காவாயரின் கடமையுணர்ச்சியைப் பாராட்டுகிறேன்.

மெய்யாமொழி: அரசே! அது அப்புறமாகப் பாராட்டலாம்! உடனடியாக நடனத்தை நிறுத்தாவிட்டால் அண்டைநாட்டின் அணைக்கட்டு உடைந்து ஊரே வெள்ளபெருக்காகி விடும்.

அ.அ.கவிஞர்: அப்படியாவது நமக்குத் தண்ணீர் கொடுத்தால் சரிதான்!

திருவாழத்தான்: மன்னரே! அரண்மனைக் கூரையில் விரிசல் ஏற்பட்டு விட்டது பாருங்கள்! காரை பெயர்ந்து விழத்தொடங்கி விட்டது. உடனடியாக ஆட்டத்தை நிறுத்தச் சொல்லி உத்தரவு பிறப்பியுங்கள்!

சோ.சொ.வளவன்: ஐயையோ! இந்த ஒரு அரண்மனை இருப்பதனால் தானே என்னையும் மன்னன் என்று பக்கத்து நாட்டுக்காரர்கள் பரிவோடு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்? அடே மெய்யாமொழி! நீ உடனடியாக அடங்காவாயர் வீட்டுக்குச் சென்று நாட்டிய ஒத்திகையை உடனே நிறுத்தச் சொல்!

மெய்யாமொழி: எனக்கு பயமாக இருக்கிறது மன்னா! வெளியே போனால் பூமி பிளந்து என்னை விழுங்கி விடும்.

சோ.சோ.வளவன்: நீ இங்கிருந்தால் உன்னை நானே விழுங்கி விடுவேன்! ஓடு! ஆட்டத்தை நிறுத்து!

(தளபதி அடங்காவாயர் ஓடி வருகிறார்)

அடங்காவாயர்: மன்னா! ஆபத்து! மன்னா!! ஆபத்து

சோ.சொ.வளவன்: என்னாலே முடியலே!

Sunday, March 14, 2010

எனக்குப் பிடித்த பத்து பெண்கள்


எனக்குப் பிடித்த பத்து பெண்களைப் பற்றி எழுதணுமுன்னு ஒருத்தருக்கு மூணு பேர் தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருந்தாங்க!

அகல்விளக்கு

சைவக்கொத்துப்பரோட்டா

இளந்தென்றல்

நான் கூட யோசிச்சேன்(மெய்யாலுமே யோசிச்சேன், நம்புங்க!). "நூற்றுப் பத்து கோடி ஜனத்தொகை இருக்கிற நம்ம நாட்டுலே வெறும் பத்துப் பேரை மட்டும் எப்படி எழுதுறது"ன்னு! ஆனா, இதை வெளியிலே சொன்னா "பரவாயில்லே சேட்டை, ஐம்பத்தி ஐந்து கோடி பெண்களைப் பற்றியும் எழுதிருங்க,"ன்னு யாராவது சொல்லிட்டா என்ன பண்ணறது? அதுனாலே வெறும் பத்துப் பேரைப் பத்தி மட்டும் எழுதி ’S' ஆகிடலாமுன்னு முடிவு பண்ணினேன்.

ஆனா, என்ன அநியாயம் பாருங்க! சரோஜினி நாயுடுவுலே தொடங்கி சமீரா ரெட்டி வரைக்கும் எல்லாரைப் பத்தியும் யாராவது ஒரு பதிவர் ஏற்கனவே பதிவு எழுதியிருக்காங்க! சரி, சாதனையாளர்களைப் பத்தி எழுதினாத் தானே இந்தப் பிரச்சினை, சாமான்யர்களைப் பற்றி எழுதலாமுன்னு பார்த்தா, நம்ம "சினேகிதன்" அக்பர் தயிர்க்கார அம்மாலேருந்து, இட்டிலி விக்குற ஆத்தா வரைக்கும் எல்லாரைப் பத்தியும் எழுதிப்புட்டாரு!

இது ஆவுறதில்லை! சந்தடி சாக்குலே எல்லாரும் தாய்க்குலத்தை ஒரேயடியா காக்கா புடிக்கறீங்க, இது அழுகுண்ணி ஆட்டம், நான் வர்லேன்னு சொல்லி விலகலாமுண்ணு பார்த்தா, அதுக்கும் வழியில்லை.

எனக்குப் பிடிச்ச பத்துப் பெண்களைப் பற்றி எழுதணும், அவ்வளவு தானே? இதோ எழுதி விட்டேன்.

1.ஷகீலா

உங்க மனசுலே என்ன கேள்வி எழுதுன்னு என் காதுலே விழுது!

"அடப்பாவி, நீ ஷகீலா படம் பார்க்கிறவனா? உன் ரசனை இவ்வளவு மட்டமா? "எக்ஸட்டரா..எக்ஸட்டரா தானே? ஒண்ணு கேட்டாத் தப்பா நினைக்கக் கூடாது!

இன்று உங்கள் வீட்டு வரவேற்பரையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிற எத்தனையோ "தமிழ்"ப் படங்களில் வருகிற காட்சிகளை விடவுமா ஷகீலா ஆபாசமா நடிச்சிட்டாங்க?

ஷகீலா நடித்த படங்கள் எல்லாமே தணிக்கைக்குழுவினரால் சான்றிதழ் வழங்கப்பட்டு, கேரளாவில் முதலில் மலையாளத்தில் வெளியாகி, மம்மூக்கா, லாலேட்டன் போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களை முறியடித்து, பின்னர் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் சக்கைபோடு போட்டவை. ஆக, ஒரு விதத்துலே ஷகீலா என்ற ஒரு பெண்மணி இரண்டு சூப்பர் ஸ்டாருங்களையே மண்ணைக் கவ்வ வைச்சவங்க! அதுக்காகவே எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்!

சராசரி ஆண் சராசரி தூண்டுதலுக்கு சுலபமான அடிமை என்பதை உலகத்துக்கு உரக்க உரக்கக் கூறிய ஷகீலா எனக்குப் பிடித்த பெண்மணி!

2. ரேஷ்மா

ஷகீலா பெயரைச் சொல்லிட்டு, ரேஷ்மா பெயரைச் சொல்லாமல் விடக் கூடாதுன்னு குறிப்பிடலை. சமீபத்துலே கேரளாவுக்குப் போயிருந்தேன். தமிழர்களை "பாண்டி"ன்னு கேவலமாகப் பேசுற மலையாளிங்க சிலர், நித்தியானந்த சுவாமி மேட்டரைச் சுட்டிக் காண்பிச்சு, தமிழ்நாட்டைப் பற்றிப் படுகேவலமாகப் பேசினாங்க! போன வேலை கெட்டுருமேன்னு பேசாம இருந்தேன். சரி, அதுக்கும் ரேஷ்மாவுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்கறீங்களா?

ஷகீலாவையும் ரேஷ்மாவையும் உலகத்துக்கு அறிமுகப்படுத்தின புண்ணியவானுங்க "கடவுளின் தேசம்" என்று சொல்லப்படுகிற "காட்டான்களின் தேசம்" கேரளாவில் தான் இருக்காங்க! சராசரி இந்தியனுக்கு செக்ஸ் என்றால் இருக்கக்கூடிய அரிப்பை மூலதனமாக்கி பகல்காட்சிப் படங்களை எடுத்துப் பணம் செய்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான்! அது மட்டுமல்ல, அந்த ரேஷ்மாவை போலீஸ்காரர்கள் கைது செய்தபோது கூட, அதையும் வீடியோவாக எடுத்து யூட்யூபிலே போட்டவனும் மலையாளிதான்! அந்த வீடியோவைப் பார்த்தவங்களுக்குத் தெரியும்! மத்தவங்க மாதிரி முக்காடு போட்டுக்கிட்டோ, கையாலே முகத்தைப் பொத்திக்கிட்டோ, அல்லது காமிரா லென்ஸைக் கையாலே மறைக்கவோ செய்யாம, ரேஷ்மா சிரிச்சுக்கிட்டே நின்னுக்கிட்டிருப்பாங்க!

இதுக்கு மேலே என்ன நடந்தா என்ன? இதுவரை பார்க்காத அவமானமா இனிமேல் பார்க்கப்போகிறேன்? வெளியிலே அனுபவிக்காத கொடுமையையா ஜெயிலிலே அனுபவிக்கப்போகிறேன்? ஜெயிலிலிருந்து வெளியே வந்திட்டா திரும்பவும் இதே மனிதர்கள் மத்தியில் தானே வாழப்போகிறேன்? - என்று மனதுக்குள் நினைத்தோ அல்லது.......

"அட பாவீங்களா! இப்போ கூட என்னைப் படம் பிடிச்சுப் பொழைப்பு நடத்துற ஆசை தீரலியா?"ன்னு முகத்துலே காறித்துப்புறா மாதிரி இருக்கும் அந்தச் சிரிப்பு!

3. புவனேசுவரி

இவங்களைப் பத்தி என்ன சொல்ல? அதான் எல்லாருமா சேர்ந்து நாறடிச்சுட்டாங்களே! "வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத் தான் தண்டனை,"ன்னு கவிஞர் கண்ணதாசன் சும்மாவா எழுதினாரு! நாம வேணா சொல்லிக்கலாம் - பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர், பெண் கவர்னர், பெண் சபாநாயகர், பெண் போலீஸ் அதிகாரின்னு! ஆனால், இன்னும் கற்பகோடி காலமானாலும் இந்த ஒரு விஷயத்துலே பெண்ணை மட்டும் குற்றவாளிக் கூண்டுலே நிறுத்துற குருட்டாம்போக்கிலிருந்து விடுபட முடியுமா? சந்தேகம் தான்!

ஆனா, புவனேசுவரியைச் சும்மாச் சொல்லக் கூடாது! சட்டுன்னு ஒரு அரசியல் கட்சியிலே சேர்ந்திட்டாங்க! ஐயையோ, இவங்க அரசியலுக்கிருந்த மரியாதையைக் கெடுத்திட்டதாக நிறைய பேரு எழுதினாங்க! இல்லேண்ணே! இவங்க போய்ச் சேர வேண்டிய இடத்துக்குத் தான் போய்ச் சேர்ந்திருக்காங்க! நேத்து வரை இவங்களை பழிச்சுப் பேசினவங்க, நாளைக்கு கட்-அவுட் வைப்பாங்க! ஆளுயர மாலை போடுவாங்க! இருக்கிற இடத்துக்குத் தான் மரியாதைங்கிறதை இவங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க!

சராசரி மனிசன் திருந்தாமல் சமுதாயம் திருந்த முடியாதுங்கிற உண்மையை உலகத்துக்கு உணர்த்துகிற பெண் புவனேசுவரி! அதனால் இவங்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

4. ராக்கி சாவந்த்

தொலைக்காட்சிக்கு Idiot Box என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று ஒரு சுயம்வரம் நடத்தி நூறு கோடி இந்தியர்களுக்கும் புரிய வைத்த புண்ணியவதி ராக்கி சாவந்த். கல்வி, சமூக அந்தஸ்து, பதவி இவையெல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, சராசரி மனிதன் விளம்பரத்துக்காக எவ்வளவு கீழே இறங்குவான் என்பதற்கு உதாரணமாக இரண்டு மாதங்களில் நாற்பதாயிரம் முட்டாள்கள், விண்ணப்பங்கள் என்ற பெயரில் அவரவர் ஒப்புதல் வாக்குமூலங்களை அளிக்க வைத்த அயிட்டம்-கேர்ள் ராக்கி சாவந்த்! இத்தனை விண்ணப்பங்களிலிருந்து ஒரு அடிமடையனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கும் கடைசியில் பட்டை நாமம் சாத்தி, அதுவரை சற்றும் ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கு அவரவர் மேதாவித்தனத்தைப் புரிய வைத்தவர் அல்லவா இவர்? இவரை எப்படி மறக்க முடியும்?

5. குஷ்பூ

முன்னாள் தெய்வம் இவங்க! கோவிலே கட்டிப்புட்டாய்ங்களே நம்ம மக்கள்ஸ்? இவங்க "வெளிப்படையா" நடிச்சபோது தெய்வமாக்கினாங்க; வெளிப்படையா ஒரு கருத்துச் சொன்னதும் தெய்வத்தையே சைத்தானாக்கி, தினமும் கோர்ட்டுலே ஏறி எறங்க வச்சாங்க! அப்துல் கலாம் ராக்கெட் பத்திப் பேசுனபோது, நாமெல்லாம் குஷ்பூவோட ஜாக்கெட் பத்திப் பேசிட்டிருந்தோம்! சினிமா மோகம்ங்கிற தொழுநோய் எந்த அளவுக்கு நம்மை பாதிச்சிருக்குங்கிறதை மும்பையிலிருந்து வந்து முழுசா உணர்த்தினவங்க குஷ்பூ!

6. நமீதா

தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலாச்சாரம்-னெல்லாம் பேசுறோமே? அதை நமீதா கடைபிடிக்கிறா மாதிரி இன்னொருத்தர் கடைபிடிக்கிறாங்கன்னா சொல்லுங்க! எல்லா விழாவிலேயும் இவங்க ஆடி ஆடியே தமிழை வளக்குறாங்க! அந்த ஒரு காரணத்துக்காகவே இவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

7. ரகஸியா

என்ன படமாக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் சரி, சதையில்லாவிட்டால் படம் ஓடாது என்று தமிழ்கூறும் நல்லுலகுக்கு சிரிச்சுச் சிரிச்சு வந்து சொன்னவர்! இவர் புண்ணியத்தில் தானே எல்லாப் படங்களிலும் ஒரு குத்துப்பாட்டாவது சேர்க்கப்பட்டு கண்ணையும் கருத்தையும் கவர்ந்து கொண்டிருக்கிறது.


8.போலி ஐ.பி.எஸ். சாரு

இவங்களைப் பத்தி இங்கே ஏற்கனவே எழுதிட்டேன். நம்ம ஊருலே ஏமாந்த சோணகிரிங்களுக்குப் பஞ்சமேயில்லேன்னு மீண்டுமொரு முறை நிரூபிச்சவரு!

9. மாயாவதி

மக்கள் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவு செய்து தனக்குத் தானே சிலைகளை எழுப்பிக்கொண்டுவிட்டு, அதை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்டையும் உதாசீனம் செய்து, கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட ஏழை மக்களுக்கு நஷ்ட ஈடு தர கஜானாவில் நிதியில்லை என்று அறிக்கை விட்ட அரசியல்வாதி!

10. ரஞ்சிதா

நித்தியானந்தா யாரையாவது கொலை பண்ணியிருந்தாலோ, பணமோசடி பண்ணியிருந்தாலோ கூட இவ்வளவு பரபரப்பாகியிருக்காதுங்க! இந்த விஷயத்துலே ரஞ்சிதா சம்பந்தப்படாம இருந்திருந்தா, இன்னிக்கு இத்தனை பேருக்குப் பொழைப்பு நடந்திருக்குமா? எனக்குத் தெரிஞ்சு ஆஸ்திகர்களையும், நாஸ்திகர்களையும் ஒரே அணியிலே திரட்டிய பெருமை நடிகை ரஞ்சிதாவுக்குத் தான் இருக்கு!

டீக்கடையிலே நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு ஓசியிலே பேப்பர் படிக்கிறவங்க தொடங்கி, டிப்-டாப்பா டை கட்டிக்கிட்டு வேலைக்குப் போற பெரிய பெரிய ஆளுங்க வரைக்கும் இன்னிக்கு சுவாமி நித்யானந்தாவைத் திட்டித் தீர்த்திட்டிருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் அம்மணிதானே!

இந்தப் பட்டியலில் இருக்கிற பத்துப் பெண்களில் எத்தனை பேரை, வாசிக்கிற எத்தனை பேருக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பெண்களைப் பற்றி இங்கு எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இடைப்பட்ட நிலையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகுவது என்பது மிகவும் கஷ்டமான விசயம். ஒன்று, தீவிரமாக விமர்சிக்கணும், இல்லாட்டி கண்மூடித்தனமாக ஆதரிக்கணும் என்கிற கூட்ட மனப்பான்மை தான் பெரும்பான்மையான சமூகத்தின் அணுகுமுறையாக இருந்து வந்திருக்கிறது; இருக்கிறது, இனிமேலும் இருக்கும்.

மேலே நான் குறிப்பிட்டுள்ள பெண்களை எனக்குப் பிடித்திருப்பதற்கோ, மற்றவர்களுக்குப் பிடிக்காமல் இருப்பதற்கோ பல காரணங்கள் இருந்தாலும், இவர்களும் நமது சமூகத்தின் கண்ணாடிகள் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. எல்லாரும் பெண்களை உயர்த்தி எழுதி விட்டார்கள் என்பதற்காக, நான் வித்தியாசமாக முயன்ற முயற்சியல்ல இது. இந்தப் பத்துப் பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் என்னைப் போன்றவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கும் நான் என்னளவில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன் என்பதே பொருள்.

இது யாரையும் வருத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. வருந்தி எழுதியது. இவர்களும் பெண்கள் தான், இவர்களை உருவாக்கியதும் நாம் தான், இவர்களைப் போன்றவர்களையும் நம்மில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதும் நமது சமூகப்பொறுப்புதான்! அஃதன்றி, சிகரத்தை எட்டியவர்களை மட்டும் சிலாகித்துக்கொண்டு, நமது கண்ணெதிரே சின்னாபின்னமாகிற பெண்களை உதாசீனப்படுத்துதல் தான் உசிதம் என்றால், அந்த சமூகத்தை என்னவென்று சொல்வது?

Saturday, March 13, 2010

மந்திரம் சொல்லுங்கோ!


ஐ.பி.எல்.சீசன் 3 இன்று முதல் ஆரம்பித்து விட்டது என்றபோதும், எங்கள் மேன்சனின் கிரிக்கெட் அபிமானிகளின் முகங்கள் மொட்டைமாடியில் காயப்போட்ட மோர்மிளகாய் வற்றல் போலச் சுருங்கியிருந்தன. அதிலும் என் அறைத்தோழன் வைத்தியின் முகத்தில் செல்போனைத் தொலைத்த சோகம் தென்பட்டதும் ஆவலை அடக்க முடியாத நான் (வழக்கம்போலவே!) அவர்களிடம் விபரம் கேட்டேன்.


"தம்பிக்கு இந்த ஊரு படம் பார்த்திட்டு வந்தது மாதிரி ஏண்டா தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கீங்க? அதான் கிரிக்கெட் ஆரம்பமாயிடுச்சே!"

"சே! ஆரம்பமாயி என்ன புண்ணியம்? பேதி இல்லைடா!"

"பேதி இல்லேன்னா என்னா? ஒரு சொட்டு விளக்கெண்ணை சாப்பிடு! தானா வரும்!"

"சண்டாளா! நான் மந்திரா பேதியைப் பத்திச் சொல்லறேண்டா!"

"மந்திரா பேதியா? எந்த டீமுக்கு ஆடுவாங்க?"

என் நண்பன் வைத்திக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால் இன்னேரம் நான் பெசன்ட் நகர் போகாமலே பொசுங்கியிருப்பேன்.

"பாவி! கிரிக்கெட் தெரியாட்டிப் பரவாயில்லை; மந்திரா பேதியைக் கூடவா தெரியாது? சிம்புவோட ஒரு படத்துலே கூட நடிச்சாங்களேடா!"

"சிம்பு படமெல்லாம் என்னோட சிலபஸிலே கிடையாது!"

என் கையாலேயே என் கண்ணைக் குத்துவது மாதிரி, எனது கணினியைத் தட்டியெழுப்பி, திரையில் மந்திரா பேதியின் படத்தைக் காட்டினான் வைத்தி.

"ஓ! இதுவா மந்திரா பேதி? சரி,அவங்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?"

"கிரிக்கெட் பார்க்காதவங்களைக் கூட பார்க்க வைச்ச புண்ணியவதிடா மந்திரா! உலகக்கோப்பையிலே இந்தியா தோத்துப்போனதுக்கப்புறமும் நானெல்லாம் உயிரோட இருக்கேன்னா, அதுக்கு மந்திராவை அடுத்த தடவை பார்க்கலாமுங்கிற நம்பிக்கை தாண்டா காரணம்!"

"இவங்க கிரிக்கெட் ஆடுவாங்களா?"

"இவங்க ஆடமாட்டாங்கடா! இவங்களப் பார்த்தாலே ஆடாத மனமெல்லாம் ஆடும்! விதவிதமா டிரஸ் பண்ணிக்கிட்டு கையிலே மைக்கைப் புடிச்சிட்டு ஓடிக்கிட்டேயிருப்பாங்க! ஒவ்வொரு நாளும் இவங்க என்ன கலர் டிரஸ் போடுவாங்க, ஸாரியா, ஜீன்ஸான்னு எல்லாரும் பட்டிமண்டபமெல்லாம் நடத்துவோம்."

"அதெல்லாம் சரி! இவங்க ஏன் வரமாட்டாங்க? உடம்பு சரியில்லையா?"

"இல்லைடா! லண்டன் டிவியிலே கமெண்ட்டரி கொடுப்பாங்களாம். இந்தியாவிலே கமெண்ட்டரி கொடுக்க மாட்டாங்களாம்! கேள்விப்பட்டதிலிருந்து யாரோ வாய்வழியாக் கையை விட்டு மனசைப் போட்டுப் பிசையுறா மாதிரியிருக்கு!"

"இதுக்கெல்லாம் நம்பிக்கையைத் தளர விடலாமா? வாழ்க்கைன்னா இன்பம் துன்பம் ரெண்டும் மாறி மாறி வரத்தான் செய்யும்!"

"உண்மைதாண்டா! எங்கப்பா மெனக்கெட்டு ஊரிலேருந்து போன் பண்ணிச்சொன்னாரு! எனக்கு இப்போ நேரம் சரியில்லே, யாருக்காவது வஸ்திர தானம் பண்ணினாத் தான் தோஷம் தீருமுன்னு சொன்னாரு! மறந்திட்டேன்!"

"ஒண்ணும் கவலைப்படாதே ராஜா! பேசாம மந்திரா பேதிக்கே வஸ்திர தானம் பண்ணிடேன்! பார்த்தாலே சரியாத் துணிமணியில்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க போலத் தெரியுதே!"

"டேய்! இதையெல்லாம் கலைக்கண்ணோட பார்க்கணுண்டா! உனக்குக் கொஞ்சம் கூட அழகுணர்ச்சியே இல்லை!"

"காலையிலே பத்துமணி வரைக்கும் குளிக்காம பேசிட்டிருந்தா அழுக்குணர்ச்சி தான் இருக்கும்; அழகுணர்ச்சி இருக்காது!"

"நான் எவ்வளவு வேதனையோட புலம்பிட்டிருக்கேன். ஒரு வார்த்தை ஆறுதலாச் சொல்லாம, கிண்டல் பண்ணறியே? இனிமேல் வாழ்க்கையிலே கிரிக்கெட்டே பார்க்கப்போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேண்டா!"

"டேய் டேய்! அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடாதே! இந்த மந்திரா இல்லாட்டி என்ன, அவளுக்குப் பதிலா இன்னொரு அழகான பொண்ணைப் போடப்போறாங்க! நீ மனசைத் தளர விடாதே! இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு, நல்லா சாப்பிட்டு நல்லாத் தூங்கு! ஒரு நாள் ஓய்வு எடுத்தா மனசுக்கு ஆறுதலா இருக்கும்!"

"வயித்தெரிச்சலைக் கொட்டிக்காதேடா! மந்திராவுக்குப் பதிலா இந்த வருஷம் யாரு வரப்போறாங்கன்னு தெரியுமா? இதோ பாரு!"

என் நண்பன் கணினியைத் தட்டி ஒரு படத்தைக் காண்பித்தான்.

"இந்த மூஞ்சியைக் காட்டுறதுக்காக, மந்திரா பேதியைத் தூக்கிட்டாங்கடா படுபாவிங்க!"

நான் பார்த்தேன். என் கண்கள் இருண்டு கொண்டு வருவது போல.....

யாராவது ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்கப்பா! ஐயையோ...! என்னவோ பண்ணுதே எனக்கு....!!

Friday, March 12, 2010

மனிதராய்ப் பிறப்பதற்கே!


எனக்குப் பிடித்த பத்து பெண்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர்பதிவுக்காக, எனது சகபதிவாளர் நண்பர்கள் அழைத்ததன் பேரில், இந்திய அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் பலவற்றின் வலைத்தளங்களுக்குச் சென்று சில முக்கியமான தகவல்களைக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான புகைப்படங்களை கூகிளில் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக எனது கண்களில் ஒரு இழை தட்டுப்பட்டது. சொடுக்கி உள்ளே நுழைந்தேன். அதில் விவரிக்கப்பட்டிருந்த ஒரு செய்தி என்னை ஒரு கணம் நிலைகுலையச் செய்து விட்டது.

"கொ********ல் வசிக்கிற ம********** என்ற வாலிபர், அண்மையில் ரா** என்ற பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த தம்பதியருக்கும், அவர்களது குடும்பத்துக்கும் அவர்களது அக்கம்பக்கத்தாரும், அவர்கள் சார்ந்த சமூகமும் பெருந்தொல்லையளித்து வருகின்றனர். இந்த இளம்ஜோடிகளுக்கு நமது ஆதரவு தேவையென்பதோடு, அவர்களை குறித்து மகிழ்ச்சி அடைபவர்களும், அவர்களை வாழ்த்துபவர்களும் நிறைய உள்ளனர் என்ற நம்பிக்கைய அளிக்க வேண்டும். தயவு செய்து இந்த வாலிபரைத் தொடர்பு கொண்டு அவருக்குத் தைரியம் அளிக்கவும். அவரது மின்னஞ்சல் முகவரி *******@sify.com."

அத்தோடு அந்த தம்பதியரின் கைபேசி எண்களும் அளிக்கப்பட்டிருந்தன.

இதைப் படிப்பவர் எவராக இருந்தாலும், வழமை போல மனதுக்குள்ளே இயல்பான மனக்குமைச்சலும், எளிதில் உணர்ச்சிவசப்படுகிற என்னைப்போன்றவர்களுக்கு உடனடியாக ஆத்திரமும் ஏற்படுமல்லவா? ஒரு கணம் அந்த வாலிபனின் தியாகத்தை எண்ணி மலைத்துப்போனேன்; மறுகணம், மாறுதல்களை மறுதலிக்கிற மனிதர்களின் மடமையை எண்ணி கோபமுற்றேன். பிறகு, தனிமைப்படுத்தப்படுகிற இந்த ஜோடிகளுக்காக, இணையத்தில் ஆதரவு தேடுகிற அந்தப் பெண்ணின் துணிவை எண்ணி வியந்தேன். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய், நாமும் ஊமை சாட்சியாய் இருப்பதைக் காட்டிலும், அந்த இளம்ஜோடிகளுக்கு ஏதேனும் உதவி செய்தாலென்ன என்று தாமதமாக உறைத்தது. சிகரெட்டுக்கும், டாஸ்மாக்குக்கும், சினிமாவுக்கும் கணக்கு வழக்குப் பாராமல் செலவழிக்கிற பணத்தில், முடிந்தால் சிறிது பொருளுதவியோ அல்லது தெரிந்தவர்களின் மூலம் வேறு ஏதேனும் உதவியோ செய்யலாமே என்று எண்ணினேன்.

நல்ல வேளை! எனக்குள்ளே ஒரு எச்சரிக்கை மணி அடித்தது! இந்த இழையில் கொடுக்கப்பட்டிருந்த அந்த வாலிபரின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன். என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன், நான் வாசித்த இழை குறித்தும், அதனால் எனக்கு ஏற்பட்ட மனக்கிலேசம் குறித்தும், என்னால் ஆன உதவியை அவர்களுக்குச் செய்ய விரும்புவது குறித்தும் தெரிவித்தேன். ஆனால்....

"சார்! நீங்கள் வாசித்த செய்திகள் முழுக்க முழுக்கப் பொய்! எங்களுக்கு வேண்டாதவர்கள் யாரோ திட்டம் தீட்டி இப்படியொரு பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து நாங்கள் சைபர் குற்றப்பிரிவில் புகார் பதிவு செய்திருக்கிறோம். நாங்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப் பட்ட புரளிகளை நம்பி அவ்வப்போது எவரேனும் தொலைபேசியில் அழைத்து விசாரிப்பது மனதை நோகடிக்கிறது. உங்கள் அழைப்புக்கு நன்றி!"

நான் அதிர்ந்து போனேன். இணைப்பைத் துண்டித்து ஒரு சில நிமிடங்கள், அந்த வாலிபர் அங்கு என்ன செய்து கொண்டிருப்பார் என்று யோசிக்கத் தொடங்கினேன். எவனோ ஒருவன் சென்னையிலிருந்து அழைத்து தன்னிடம் அனுதாபம் காட்டுகிறானே என்று எண்ணி ஆறுதலடைவாரா? அல்லது, தன் மனைவி பாலியல் தொழிலாளி என்று பரப்பப்பட்ட புரளியை மீண்டும் ஒருவன் நினைவுறுத்தி விட்டானே என்று வேதனைப்படுவாரா? அல்லது, ஆடு நனைகிறதே என்று அழுகிற ஓநாய் போல, இந்த தகவலை சாக்காக வைத்துக்கொண்டு, எவளேனும் கிடைத்தால் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள அலைகிற ஒரு சாமானிய மனிதனின் வக்கிரபுத்தியை நான் ஜாடைமாடையாய் தெரிவித்ததாக எண்ணிக் குமுறுவாரா? இவையெதுவுமேயில்லாமல், சிறிது நேரம் செய்து கொண்டிருக்கிற எல்லாப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி விட்டு, எங்கேனும் ஒரு ஆளரவமற்ற மூலைக்குச் சென்று, மவுனமாக தனக்காகவும் தன் மனைவிக்காகவும் இரண்டு சொட்டுக் கண்ணீரை வடிப்பாரா? எனக்குத் தெரியவில்லை!

ஆனால், குற்ற உணர்வு மிகுந்து விட்டது. "The Way to the hell is paved with good intentions" என்ற கார்ல் மார்க்ஸின் பொன்மொழி என்வரையில் இன்றைய தினம் நிஜம் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதோ என்ற ஆதங்கமும், அடக்கவொணா ஆத்திரமும் ஏற்படுகிறது.

இணையத்தில் இந்த வதந்தியைப் பரப்பியிருப்பது ரீட்டா பானர்ஜீ என்ற பெண்மணி(அல்லது பெண்ணின் பெயரில் ஒளிந்து கொண்டு இணையத்தை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு புல்லுருவி!) அதை விடக் கொடுமை, இந்தப் பதிவு இடப்பட்ட தேதி:

26-01-2010 - இந்தியாவின் குடியரசு தினம் அன்று!

ஆணாய்ப் பிறந்ததற்காக அவ்வப்போது அற்ப சந்தோஷப்பட்டதுண்டு. இன்று அந்த வாலிபரைப் பற்றி எண்ணும்போது, மனிதனாய்ப் பிறந்ததற்கே வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது.

கடவுளே! என்ன கொடுமை இது?

Wednesday, March 10, 2010

நான் கல்வியமைச்சரானால்.....!!


+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!)

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது?

(அ) தமிழ் (ஆ) துளு (இ) பாரசீகம்

2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது?

2(ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான, மூன்றெழுத்துத் திரைப்படம் எது?

(i) மெட்டி
(ii) சட்டி
(iii) பெட்டி
(iv) குட்டி

3.கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது?

(அ) புல் வெட்டுவது
(ஆ) பஞ்சர் ஒட்டுவது
(இ) ஊதுபத்தி விற்பது
(ஈ) கவிதை எழுதுவது

4. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது?

(அ) இன்பத்துப்பால்
(ஆ) மசாலா பால்
(இ) ஆவின் பால்

5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்)

6. கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்)

7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை?

8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்?

(அ) வட இந்தியர்கள்
(ஆ) பஜ்ஜி இந்தியர்கள்
(இ) போண்டா இந்தியர்கள்

9. எது பல்குத்த உதவும்?
(அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு

10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
(அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை

11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?

12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன?

13. இந்தியாவின் தேசியப்பறவை எது?

(அ) மயில் (ஆ) காக்காய் (இ) இரண்டும் இல்லை

14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா? முடியாதா?

(அ) முடியும் (ஆ) முடியாது

15. பதினான்கு தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது?

16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும்?

(அ) கரடி (ஆ) காண்டாமிருகம் (இ) ஆடு

17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது?

(அ) துவரங்குறிச்சி
(ஆ) ஆழ்வார்குறிச்சி
(இ) கல்லிடைக்குறிச்சி

18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால், மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?

19. BBC (Briish Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன?

20. உங்களது முழுப்பெயரை எழுதுக (எழுத்துப்பிழை தவிர்க்கவும்)