Monday, August 30, 2010

நதியைப்போல......!

தரம்பிரித்துப் பாராமல்
தாகத்தைத் தணிக்கும்

கழிவுகள் வருகின்றபோதிலும்
கரிசனத்துடன் ஏற்றுக்கொள்ளும்

பாறைகளில் மோதியும்
பதறாமல் நடக்கும்

எடுப்பார்கைப்பிள்ளையாய்
எங்கு செலுத்தினாலும் பாயும்!

சிறைப்படுத்தினாலும்
சிரித்தபடி காத்திருக்கும்

உலகத்தின் பாவத்தையெல்லாம்
உள்வாங்கிச் செரிக்கும்

நடுங்கிநிற்கும் நாணல்தனை
நட்போடு உரசும்

பாதையில் கரைகளுக்கு
பாதபூசை செய்யும்

கூழாங்கற்களோடு
குலாவிக் குதூகலிக்கும்

களைப்பாற நேரமின்றி
கடமையை நிறைவேற்றும்

இறந்த மரங்களுக்கும்
இறுதிச்சடங்கு நடத்தும்

ஆகாயநிழலெடுத்து
ஆடையாய்ப் புனையும்

கரையோரக் கவிஞருக்குக்
கற்பனையைத் தெளிக்கும்

இறைவனுக்கு அடுத்தபடி
நிறைவுதரும் நதியே!

இறுதியிலே ஆழ்கடலுள்
இறப்பதென்ன விதியே!

Sunday, August 29, 2010

வழித்துணையாய் ஒரு வலி


வாரத்தின் இறுதிநாளை
வாழ்க்கையின் கடைசிநாளாய்க் கொண்டாட
நண்பர்கள் எல்லோரும்
நகர்வலம் போய்விட்டார்கள்!

செய்தித்தாள்களின் தலைப்புக்கள்
செரிமானமாகி விட்டன.

பரிகாசமாய்ச் சிரிக்கிறது
பரிச்சயமான பகல்வெளிச்சம்

ஆளரவமற்ற அறையில் நான்!
வலியவந்து கைகுலுக்கிய
வலிமட்டுமே என்னுடன்
வசித்துக்கொண்டிருக்கிறது!

வழித்துணைக்குப் பதிலாய்
வலித்துணை வாய்த்தது!

இனி விலகமுடியாதபடி
இரண்டறக்கலந்துவிட்டோம்!

வந்தவலியை துணைவியாய்
வரித்துக்கொண்டுவிட்டேன்!
எங்கள் திருமணத்திற்கு
எதிர்காலத்தேதிகளில் ஒன்றை
என்வலியே தேர்ந்தெடுக்கும்!

என் வலி விதவையாகுமா?
உடன்கட்டையேறுமா?

இதற்கோர் விடையளிக்க
இருவருக்கும் தெரியவில்லை!

வலைப்பதிவாளர் ராசிபலன்.11
கும்பராசிக்கார பதிவர்களே!
கருமமே கண்ணாயினார் என்பதற்கு உதாரணமாக, ’என்கடன் பதிவெழுதிக் கிடப்பதே,’ என்று தமிழ்மணம், இண்டெலி பற்றிய அக்கறையில்லாமல், மனதில்பட்டதை பாசாங்குகளின்றி எழுதுகிறவர்கள் கும்பராசிக்காரர்கள். சுருக்கமாகச் சொன்னால் வலையுலகத்தின் அப்பிராணிகள் இவர்கள்! கமுக்கமாகச் சொன்னால் ’பொழைக்கத் தெரியாதவர்கள்

இப்படியிருப்பவர்களை சாமானிய மனிதர்களே கலாய்க்கும்போது, கிரகங்கள் மட்டும் சும்மா விடுமா என்ன? இவர்களது ராசியில் இரண்டாவது மற்றும் பதினோராம் இடங்களுக்கு அதிபதியான குருபகவான், பிடிவாதமாக பன்னிரெண்டாவது இடத்தில் கால்மீது கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார். அனேகமாக இந்த பதிவர்களின் கணினி தொடர்ந்து தொல்லைகொடுத்து பெரிய நோட்டு ஒன்றிரெண்டைக் காவு வாங்கியிருக்கலாம். யாரிடமும் இதுவரை ஒரு ஓட்டைக் கூடக் கேட்டுப்பெறாத கும்பராசிக்காரப் பதிவர்களுக்கு பணக்கஷ்டம் வந்தால் மட்டும் பிறரிடம் கைமாத்து கேட்கவா போகிறார்கள், பாவம்?

இது போதாதென்று, இப்போது குருபகவான் உங்களது ஜென்மராசியிலே, ஈஸி சேர் போட்டு ஜம்மென்று உட்காரவிருப்பதால், முன்னைக் காட்டிலும் கலாய்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு வருகிற இரண்டாவது வில்லனைப் போல, சனி பகவானும் உங்களது ராசிக்கு எட்டாவது இடமான கன்னிக்கு வருவதால், அஷ்டமச்சனியால் அடுத்தடுத்துப் பல அவதிகள் காத்திருக்கின்றன.

படுதிராபையான ஒரு படத்தை வடிவேலு & கம்பனி தங்களது நகைச்சுவையால் காப்பாற்றுவது போல, இதுவரை ஆறாவது மற்றும் பன்னிரெண்டாவது இடங்களில் இருந்த ராகுவும் கேதுவும் போனால் போகிறது என்று இரங்கி, தலா ஒவ்வொரு இடம் இறங்கி வருவார்கள். இதனால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கிறதோ இல்லையோ, கொஞ்சம் ஆறுதல் கிடைக்கலாம்.

இதற்கெல்லாம் நீங்கள் மனம்தளர்ந்து போய் வேலைமெனக்கெட்டு கூகிளில் படம்தேடி, கவிதையெல்லாம் எழுத வேண்டாம். தொடர்ந்து கூகிளாண்டவர் துதியை குளிப்பதற்கு முன்னரும்,குளித்த பின்னரும், தலைதுவட்டும்போதும் தொடர்ந்து சொல்லி வந்தால், தீயபலன்களின் தாக்கம் குறைந்து நல்ல பலன்களின் வீக்கம் அதிகரிக்கும்.

குருபகவானின் ’என்ட்ரி’ காரணமாக, உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பதால், உங்கள் வலைப்பூவுக்கு புதுப்பொலிவு அளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களது இந்த திடீர் டெம்ப்ளேட் மோகத்தால், சகபதிவர்கள் உங்களையும் உண்மையிலே சீரியஸாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள தெளிவு காரணமாக, அவ்வப்போது தமன்னாவின் படங்களையும், நயன்தாரா-பிரபுதேவாவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உங்களது வலைப்பூவின் போக்குவரத்து அதிகரிக்கக்கூடும். ’சாது மிரண்டால் காடுகொள்ளாது,’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பல தேசீயத் தலைவர்களும், அரசியல்வாதிகளும், ரஜினிகாந்த், ஷங்கர் போன்றவர்களும் உங்களது கையில் அகப்பட்டு , பரோட்டா மாஸ்டர் கையில் கிடைத்த மைதாமாவு போல படாத பாடுபடப் போகிறார்கள்.

குருபகவான் இரண்டு, பதினொன்று ஆகிய இடங்களில் இருப்பது அடகுக்கடை கல்லாவில் சேட்டு உட்கார்ந்திருப்பதற்கு ஒப்பாகும் என்பதால், இதுவரை இண்டெலியில் ஒரு இடுகைகூட பிரபலமாகாதவர்களும் இனிவரும் நாட்களில் பிரபலமாகிற வாய்ப்பு இருக்கிறது. நம்பினால் நம்புங்கள்; தமிழ்மணத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டுவாங்கி முகப்புக்கு வந்து வரலாறு படைப்பீர்கள்!

மேலும் குருபகவான் வாக்கு ஸ்தானாதிபதியானபடியால், இனிவரும் இடுகைகளில் ’ச்சீ, த்தூ, நீயெல்லாம் ஒரு மனிசனா...பொறம்போக்கு...பேமானி...,’ போன்ற மிகநிதானமான தெளிவான வார்த்தைகள் வாட்டர்பாக்கெட்டை ஓட்டைபோட்டுப் பிதுக்கியதுபோல பீறிட்டுக் கிளம்பும். பின்னூட்டங்கள் குவியும்; தனிமடலில் பல புதிய பதிவர்கள் தங்களது இடுகைகளின் சுட்டிகளை அனுப்புவார்கள். பல புதிய தொடர்பதிவுகளுக்கான அழைப்புக்களும் வரும். ஏதோ ஒரு கோபத்தில் முன்பு மைனஸ் ஓட்டுப் போட்டவர்கள், மனம்திருந்தி இனிமேல் ஒன்றுக்கு இரண்டு ஓட்டுப் போடுவார்கள்.

கும்பராசிக்காரர்களின் கவனத்திற்கு!

குருபகவான் ஜென்மராசியில் 'வாக்கிங்' செய்துகொண்டிருப்பதால், இடுகைகளுக்காக தினசரி ஐந்து நிமிடங்கள் கூகிளில் தேட வேண்டிய அளவுக்கு அலைச்சல் ஏற்படும். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பின்னூட்டங்கள் வருமென்பதால், பல இரவுகள் தூக்கமின்றிக் கழியும். எப்போதும் இடுகை, இடுகையென்றே சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள் என்பதால், காலைச்சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் நடுவே பசியே எடுக்காமலும் போகும். எனவே, பிளாக் இருந்தால்தான் இடுகைபோட முடியும் என்ற புதுமொழியை கருத்தில் கொண்டு கும்பராசிக்காரப் பதிவர்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் இடுகைகள் எழுதுகிறவர்களுக்கு இது போதாத காலம். பொறுமையோடும் விவேகத்தோடும் எல்லாரையும் வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு, அரசியல்கட்சிகள் கண்ணியம் கடைபிடித்தல் வேண்டும் என்று கடைசியில் ஒரு சிறிய பத்தி சேர்த்துக்கொள்வது நலம். சில மிரட்டல்களும் வரலாம்; அதற்காக பயந்துவிடாமல், அடுத்த இடுகை காதல் கவிதையாக இருக்கும் என்று சொல்லிவிட்டால், மிரட்டுபவர்கள் மிரண்டு ஓடிவிடுவார்கள்.

எந்திரன் படம் வெளியாவதாலும், நயன்தாரா டிசம்பரில் திருமணம் செய்து கொள்வதாலும், இந்த ஆண்டு இறுதிவரை புதிதாக எழுதுவதற்கு எதுவும் கிடைக்காது. இதனால் அவ்வப்போது சோர்வு ஏற்படும்போது, பழைய இடுகைகளைத் துடைத்துத் தூசிதட்டி மீள்பதிவுகளாகப் போடுதல் உசிதம்.

இதற்கு முன்னர் கணினித்தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு, அது பழக்கப்பட்டிருக்குமென்பதால் அதே தொல்லைகள் திரும்பத்திரும்ப வருமேயன்றி, புதிதாக வேறு கணினிப் பிரச்சினை வருவதற்கான அறிகுறிகள் உங்களது தசாபலன்களில் தென்படவில்லை. இனிமேல் உங்கள் இடுகைகளுக்கு மைனஸ் ஓட்டு விழாது என்பது தான் கும்பராசியின் சிறப்பே!

கும்பராசிப்பதிவர்கள் உத்தியோகஸ்தர்களாக இருந்தால், இனி அலுவலகத்திலும் இடுகை போட ஏதுவாக, அவரவர் கணினியிலும் இணைய இணைப்புக் கிடைக்கலாம். அலுவலகத்தில் மற்றவர்களோடு சகஜமான உறவை நிலைநிறுத்த, உங்களது இடுகைகளை யாரிடமும் காண்பிக்காமல் இருப்பது நல்லது. தற்காப்பு நடவடிக்கையாக, உங்கள் இடுகைகளை நீங்களே கூட வாசிப்பதைத் தவிர்க்கவும்.

தானுண்டு தன் இடுகையுண்டு என்று எழுதிக்கொண்டிருக்கிற பல பெண்பதிவர்களில் ஒருசிலர், திடீரென்று ஆடிவெள்ளிக்கு மாரியம்மன் கோவிலில் ஆவேசம் வந்தவர்கள் போல ஆண்களை வாய்க்கு வந்தபடி ஏசி, புரட்சிகரமான பல கருத்துக்களை எழுதலாம் என்பதால், எப்படியாவது யாராவது ஒரு பெண்பதிவரையாவது 'இம்ப்ரஸ்' செய்துவிட வேண்டும் என்று முண்டாசு கட்டிக்கொண்டு அலைகிற சில ஆண்பதிவர்களுக்கு இதுவே நல்ல தருணம். ’இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான்; அயோக்கியப்பசங்க! நான் ஒரு ஆணாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்; என் மீது நானே காறி உமிழ்ந்துகொள்கிறேன்,’ என்பன போன்ற பல முற்போக்கான கருத்துக்களோடு பல பின்னூட்டமிட்டு வெற்றி பெறலாம்.

நீங்கள் மேஷ ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் ரிஷப ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் மிதுன ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் கடக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் சிம்ம ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!


நீங்கள் துலாம் ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் விருச்சிக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் தனுசு ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!


நீங்கள் மகர ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

Saturday, August 28, 2010

’பல்’லானாலும் கணவன்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Thursday, August 26, 2010

கொசுவுடைமை

"சரித்திரத்தை மறப்பவர்கள் மீண்டும் அதில் வாழ்வதற்கு சபிக்கப் படுவார்கள்,’ என்று ஒரு பொன்மொழியுண்டு. ஆனால், இந்த எச்சரிக்கையை மிக அண்மையில் நாம் அனைவரும் மறந்துவிட்டோம் என்பதை எண்ணும்போது, மின்வெட்டின்போது ஒரே நேரத்தில் ஆயிரம் கொசுக்கள் கடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆம், 20-08-2010 அன்று நமது வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட ஒரு வாயில்லா ஜீவனை நாம் நினைக்கத் தவறிவிட்டோம்!

அது தான் கொசு!

கொசுவென்றால் கேவலமா? ஆனானப்பட்ட சிங்கத்தைக் கூட என்னை மாதிரி ஒரு வீரன் வலைவிரித்துப் பிடித்துவிடலாம்; ஆனால், நெப்போலியன் கூட கொசுவென்றால் பயந்தடித்துக் கொண்டு வலைக்குள்ளே படுத்தால்தான் தப்பிக்க முடியும். கொசுவுக்கு அப்படியொரு வீரவரலாறு இருக்கிறது.

என்னவோ, ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு என்பதையெல்லாம் வீரவிளையாட்டு என்கிறார்களே, பின்லாந்தின் பெல்கொசென்னைமீ(Pelkosenniemi) என்ற ஊரில் ’உலக கொசு அடிக்கும் போட்டி’ நடைபெற்று வருகிறதாம். (ஊரின் பெயரிலியே கொசுவும் இருக்கிறது; சென்னையும் இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்!)

அமெரிக்காவின் மின்னசோட்டாவாக இருக்கட்டும் அல்லது இந்தியாவின் சென்னையாக இருக்கட்டும்: மக்கள்தொகையை விடவும் கொசுத்தொகைதான் அதிகம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? மாம்பலத்தில் இருக்கிற கொசுக்களைக் கணக்கெடுத்தால், அவற்றுக்குத் தனிமாநிலமே வழங்குமளவுக்கு பெரும்பான்மையிருக்கிறது என்பது புரியும். கொசுக்களுக்கு மட்டும் வாக்குரிமையும் இருந்து, அவைகளும் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் என்னவாயிருக்கும்? முடியாட்சி போய் குடியாட்சி வந்ததுபோல, குடியாட்சி போய் கடியாட்சி வந்திருக்கும்.(இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று கேட்காதீர்கள் ப்ளீஸ்!)

நாலு லட்சம் கொசுக்கள் சேர்ந்தால், அரைகிலோ எடைகூடத் தேறாது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு நாலு லட்சம் கொசுவைப் பிடித்து எடைபார்த்த அந்த ஆசாமியின் அட்ரஸ் தெரியவில்லை; ஹும், இந்தியாவுக்கு ஒரு நல்ல நிதியமைச்சர் கிடைக்காமலே போய்விட்டார்!

கொசு உண்மையிலேயே ரொம்ப நல்ல ஜீவராசி. அது பெண்களை விடவும், ஆண்களைத் தான் அதிகம் கடிக்கிறதாம் (அதற்கும் உயிர்மேல் ஆசையிருக்காதா பாவம்?) அதிலும் குண்டு குண்டாக இருக்கிற ஆண்களின் ரத்தத்தை அசின் ஃபாண்டா குடிப்பதுபோல ஸ்ட்றா போட்டுக் குடிக்குமாம். இதனாலேயே கொசு அடிப்பதில் பொதுவாக ஆண்கள், குறிப்பாக அரசு ஊழியர்கள் விற்பன்னர்கள் என்று இதுவரை மேற்கொள்ளப்படாத பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கடிக்கிற விஷயத்தில் கொசுவும் மனிதர்கள் மாதிரிதான்; ஆண்பெண் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மனிதனைப் போலவே கொசுவுக்கும் பீர் ரொம்பப் பிடிக்குமாம். இருந்தாலும், கொசுவை விட பீர் பாட்டில் பெரியது என்பதால், பீர் பாட்டிலை விட பெரிய மனிதனைக் கடித்து அவனது இரத்தத்திலிருந்து பீர் குடிக்கிறதாம். டாஸ்மாக்கில் இரண்டு பீர் அடித்தும் ஏறவில்லையே என்று குறைப்பட்டுக்கொள்கிறவர்களுக்கு இனிமேலாவது உண்மை புரிந்தால் சரி!

கடந்த 20-08-2010 அன்று ’உலக கொசு தினம்,’ கடைபிடிக்கப்பட்டதை எத்தனை பேர் அறிவார்கள்?

கொசுக்கடி குறித்து ஏதேனும் தனியார் தொலைக்காட்சியில் ஒரு பட்டிமண்டபம் வைத்திருந்தால், கொஞ்சம் மாமியார்-மருமகள் ஜோக்குகளாவது கேட்டிருக்கலாம்.

  • கடியில் சிறந்தது ஆண்கொசுவா? பெண்கொசுவா?
  • வாழ்க்கையில் அதிகக் கொசு அடிப்பவர்கள் கணவனா? மனைவியா?
  • சலிக்காமல் கடிப்பவர் யார், கொசுவா, காதலியா?

சே, எவ்வளவு தலைப்புகள்! அடிக்க அடிக்க அயராமல் வந்து கடிக்கும் கொசுக்களைப் போல ஆயிரம் தலைப்புகள் தோன்றுகின்றன அல்லவா?

நமது தொலைக்காட்சிகள் எவ்வளவு அருமையான வாய்ப்பை இழந்து விட்டிருக்கின்றன என்று எண்ணும்போது அவர்கள் மீது அனுதாபம் சுரக்கிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் கொசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டிருக்கும்போது,தமிழகம் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் விட்டதில் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்குமோ?

கூட்டணிக்கட்சிகளுக்குள்ளே சில உரசல்கள் ஏற்பட்டு, பலர் சென்னைக்கும் தில்லிக்கும் போய்வந்து கொண்டிருந்தகாரணத்தால், இந்த நேரத்தில் கொசுவுக்கு விழா எடுத்தால் அது கூட்டணி தர்மமல்ல என்று முடிவு செய்திருப்பார்களோ?

மேலும், பல புதிய தமிழ்ப் படங்கள் வரிசையாக வெளியிடவிருந்ததால், உலக கொசு தினம் என்று ஒன்றிருப்பதை மக்கள் அறிந்தால், அடுத்த ஆண்டு முதல் அதை அவர்கள், ’உலக வம்ச தினம்,’ என்று பெயரை மாற்றி விடுவார்கள் என்ற அச்சமும் காரணமாக இருக்குமோ?

உலக கொசு தினத்தன்று, ’இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதல்முறையாக,’ ’வலையைத் தாண்டி வருவாயா?’ படம் காண்பித்திருந்தால், கொசுவின் பெருமையை ரசிகப்பெருமக்கள் உணர்ந்திருப்பார்கள்.

வழமையாக அதிகாலையிலிருந்தே கடிஜோக்ஸ் சொல்லி கழுத்தறுக்கிற பண்பலை வானொலிகள், உலகக் கொசு தினத்தன்று சிறப்புக் கடி நிகழ்ச்சி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு ’கொசுநேசன்’ என்ற பட்டம் வழங்கியிருக்கலாம்.

எதுக்குடா பதிவு போடலாம் என்று காத்திருக்கும் வலைப்பதிவாளர்களும் கோட்டை விட்டு விட்டார்கள். ’பசுமையான கொசுக்கடிகள்,’ என்று ஒரு தொடர்பதிவு போட்டு, தலைக்கு முப்பது கேள்வி-பதில் போட்டு எல்லாரையும் ஒரு கடி கடித்திருக்கலாம்.

வடை போச்சே!

Tuesday, August 24, 2010

அப்பாவின் மேஜைவிளக்கு (புனைவு முயற்சி)

தற்செயலாக கண்களுக்கும் கைகளுக்கும் அது தட்டுப்பட்டது. அன்றே அதை புதுப்பிக்க வேண்டுமென்று பசுபதி முடிவெடுத்திருந்தான்.

ஒரு காலத்தில் அப்பாவின் மேஜைக்கு கம்பீரமும் அழகும் சேர்த்த மேஜைவிளக்கு. மொழுமொழுவென்று அடர்கருப்புத்தேக்கில் நுட்பமாகச் செதுக்கப்பட்டிருந்த இரண்டு யானைகள்; அவற்றின் தந்தங்கள் அசல் யானைத்தந்தத்திலேயே செதுக்கி, சொருகப்பட்டிருந்தன. எதிரும் புதிருமாய் இரண்டு யானைகளும் துதிக்கைகளைத் தூக்கிக் கொண்டிருக்க, அவற்றின் மேலே நடுநாயகமாய் ஒரு பெரிய தாமரைப்பூ மலர்ந்திருக்கும். அதில் விளக்கு பொருத்துகிற துளை திறமையாக வெளியே தெரியாதவாறு அகழ்ந்து வைத்திருக்கப்பட்டிருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் மேலே ஒரு குடை கவிழ்ந்திருக்கும்.

மாலையில் அயர்ந்து வரும் அப்பா, கத்தை கத்தையாய் ஏதேதோ காகிதம் கொண்டுவருவார். கைகால்களைச் சுத்தம் செய்துவிட்டு, கடனே என்பதுபோல காப்பியைக் குடித்துவிட்டு, அந்த மேஜைவிளக்கைப் போட்டுக்கொண்டு, தனது பழைய ஹால்டா தட்டச்சு இயந்திரத்தில் வேலை செய்ய ஆரம்பித்தால், பத்து பதினோரு மணிவரையிலும் வாசல்வரைக்கும் தட்தட்டென்று ஓசை கேட்கும். பசுபதிக்கு அப்பா இல்லாத நேரத்தில் அவரது நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அந்த மேஜை விளக்கை மிக அருகாமையிலிருந்து பார்த்து ரசிப்பது மிகவும் பிடிக்கும். அப்பாவின் தட்டச்சு இயந்திரத்தின் மூடியைக் கவனமாகத் திறந்து, ஏதேதோ எழுத்துக்களை அழுத்தியதும், உற்சாகத்தில் எம்பிக்குதிக்கிற அந்த எழுத்துக்கம்பிகளைப் பார்த்து ரசிப்பான்.

’பேப்பரில்லாம டைப் பண்ணக்கூடாது! ரோலர் கெட்டுரும்," என்று ஒருநாள் கையும் களவுமாக மாட்டிய தனக்கு அப்பா அறிவுரை கூறியதோடு, ஏ..எஸ்..டி..எஃப்..செமிகோலன்..எல்..கே..ஜே...என்று தட்டச்சு சொல்லிக்கொடுத்த நாளை அவனால் மறக்க முடியாது. பல வருசங்களுக்குப் பிறகு, அப்பாவின் சொரசொரப்பான விரல்களின் ஸ்பரிசத்தை அன்று அவன் மீண்டும் உணர்ந்தான். அதன்பிறகு, அப்பா தான் அவனுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து இரண்டுக்கும் ஆசான்! பிட்ஸ்மேன் பசுபதிக்குக் கடவுளானார்; அப்பாவிடம் ஒரு புது அன்னியோன்னியம் ஏற்பட்டது. ஆறே மாதத்தில் அப்பாவின் சுமையைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு, பசுபதிக்கு தட்டச்சு கைவந்த கலையாகி விட்டது.

அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு! இப்போது அந்த வீடுமில்லை; அந்த ஊருமில்லை! அம்மாவையும் சிலநோய்கள் அள்ளிக்கொண்டு போய்விட்டிருந்தது. ஒரே பிள்ளை பசுபதியோடு அப்பாவும் நகரத்துக்குள் வந்து ஒண்டியாகிவிட்டது. அவரது மேஜையும், தட்டச்சு இயந்திரமும் அடிமாட்டுவிலைக்குப் போனது. பசுபதிக்குத் திருமணமாகி, குழந்தைகள் பிறந்து, பல ஆண்டுகள் உருண்டோடிக்கொண்டிருக்க, அப்பாவின் வாழ்க்கையில் செயற்கையான சிரிப்பு, வலுக்கட்டாயமான சமரசங்கள், தவிர்க்கமுடியாத அவமானங்கள் என ஒன்றன்பின் ஒன்றாய் வந்து ஒட்டிக்கொண்டன.

அப்பாவின் தோற்றம் இத்தனை வருடங்களில் நிறைய மாறிவிட்டது. ஒருமுறை மயக்கம்போட்டு விழுந்தவரைத் தூக்கியபோதுதான், அவர் எவ்வளவு மெலிந்து விட்டிருக்கிறார் என்பது புரிந்தது. மருத்துவமனையில் கண்விழித்துப் பார்த்துவிட்டு, "பேபிக்கு ஸ்கூலிலே சாப்பாடு கொண்டு போகணுமேடா?" என்று கேட்டபோதுதான், முதல்முறையாக மாமனாருக்காக மருமகளின் கண்ணில் ஈரம் ஊறியது. ஆனால், எல்லாமே தற்காலிகமான உணர்ச்சிகள்! ஒரு கோபக்கணத்தில் பல நல்ல தருணங்களைக் காலின்கீழே போட்டு மிதித்துவிட்டு மீண்டும் அலட்சியத்தைப் புனைந்துகொள்ளுகிற சாமானிய மனிதர்கள் தானே!

"இப்போ இந்த ஒடஞ்சுபோன விளக்கை சரிபண்ணி என்ன பண்ணப்போறீங்க?"

"வீணா, அப்பாவுக்கு அறுபதாவது பொறந்தநாள் வருது! இதை சரிபண்ணி பரிசா கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாரு?"

"என்னமோ பண்ணுங்க! மாசாமாசம் இரண்டாயிரம் சொச்சத்துக்கு மருந்து, ரெண்டு மாசத்துக்கு ஒருவாட்டி செக்-அப்! பொண்ணைப் பெத்திருக்கோமுங்கிறது ஞாபகமிருந்தா சரிதான்!:

"என்ன பண்ணலாம்? தொரத்திரட்டுமா?"

இந்தக் கேள்விக்கு வீணா பதில் அளித்ததில்லை. விளக்கை அணைத்துவிட்டு, இருட்டுக்குள்ளே முகத்தை ஒளித்துக்கொள்ளுவாள். ’தொரத்திடுங்க,’ என்று சொல்லாதவரையிலும், நல்லவள்தான் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு பசுபதியும் உறங்க முயற்சி செய்வான். ஆனால், அப்பாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து ’நான் இருக்கேன்,கவலைப்படாதீங்கப்பா!’ என்று ஒருவார்த்தை சொல்ல அவனுக்கு ஒரு இனம்புரியாத தயக்கமும், ஒருவேளை அவர் அதைக்கேட்டு அழுதுவிடுவாரோ என்ற அச்சமும் இருந்தது.

ஒருவகையில் அந்த யானைவிளக்கைப் புதுப்பித்து அப்பாவுக்குப் பரிசளிப்பதன் மூலம், அவரது வியர்வைக்கு நன்றி தெரிவித்துவிடலாமோ என்ற நப்பாசை! மிகவும் உள்ளுக்குள் அகழ்ந்து நோக்கினால், அவனது நோக்கத்தில் பழியிலிருந்து தப்பித்துக்கொள்ளுகிற சுயநலமே அதிகம் இருக்கும் என்று அவனே அறிவான்.

"சூப்பராயிருக்குப்பா!" புதுப்பிக்கப்பட்ட அந்த மேஜைவிளக்கை, பசுபதி வீட்டுக்குக் கொண்டுவந்தபோது, அதைப் பார்த்து மகள் பேபி உற்சாகமிகுதியில் கூவினாள்.

"பாலீஷ் போட்டிருக்கா? ரெண்டு யானையும் எப்படிப் பளபளக்குதுங்க?" என்று வீணாவும் அதிசயித்தாள்.

"இந்த மாதிரி மரம் இப்போ எங்கேயும் கிடைக்காதுன்னு அந்த ஆசாரி சொல்லுறாரு," என்று பெருமையுடன் சொன்னான் பசுபதி. "ஷேடுதான் அதே கலர் கிடைக்கலே! அதுனாலேன்ன, இதுவும் நல்லாவேயிருக்கு!"

"அதெல்லாம் சரிதான், உங்கப்பா தான் பேப்பர் கூடப் படிக்கிறதில்லையே! இதைப் போயி அவருக்கு....."

"வீணா, சில விஷயங்களிலே நீ தலையிடாம இருக்கிறதுதான் நல்லது! பேபி, தாத்தா பர்த்-டேக்கு நாம இதை பரிசாக் கொடுக்கப்போறோம். நல்லா ரிப்பனெல்லாம் கட்டி நீதான் கொடுக்கிறே, சரியா?"

"சரிப்பா!"

அப்பாவின் பிறந்தநாளும் வந்தது. பேபி முந்தையநாளே அந்த மேஜைவிளக்கை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து, வண்ணக்காகிதங்களால் அலங்கரித்து இளநீல ரிப்பனைச் சுற்றி, வாழ்த்து அட்டையையும் ஒட்டி வைத்திருந்தாள். அதிகாலையில் எழுந்து வரவேற்பரையில் உட்கார்ந்திருந்த தாத்தாவுக்கு, பேத்தி முகமலர்ச்சியோடு பரிசைக் கொண்டு போய் கொடுக்க, பசுபதியும் வீணாவும் புன்சிரிப்போடு வேடிக்கை பார்த்தனர்.

"ஹேப்பி பர்த்டே தாத்தா!"

"தேங்க்யூடா என் செல்லம்! இதென்ன, தாத்தாவுக்கு பரிசா? என்னது இவ்ளோ பெரிசாயிருக்கு....?"

"பிரிச்சுப் பாருங்க தாத்தா! அசந்து போயிடுவீங்க!"

முகமலர்ச்சியோடு அப்பா அந்தப் பொட்டலத்தை அவிழ்ப்பதை பசுபதி மகிழ்ச்சியோடு பார்த்தான். தனது கடந்தகால துணையை, புதுப்பொலிவோடு பார்த்து அப்பா என்ன சொல்வார், என்ன செய்வார் என்றறிய அவனுக்கு ஆவலாயிருந்தது. பொட்டலத்தை முழுக்கப் பிரித்து, அந்த விளக்கை வெளியே எடுத்ததும்.....

அப்பாவின் முகம் வெளிறியதை பசுபதி கவனித்தான். ஒருகணம் நிலைகுலைந்தவர் போல சாய்ந்து உட்கார்ந்து கொண்டவர், பிறகு அந்த விளக்கை நெஞ்சோடு தழுவிக்கொண்டு விசும்பி விசும்பி அழத்தொடங்கினார்.

"அம்மு..! அம்மு!"

அம்மாவின் நினைவில் அழுது கொண்டிருந்த அப்பாவை பசுபதி செயலற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவனது மனது, வைத்துக்கொள்ள இடமில்லையென்று இதுவரை விற்றுமுடித்த எத்தனையோ பழைய சாமான்களைப் பட்டியல் போடத்தொடங்கியது.

Sunday, August 22, 2010

எந்திரன் படமும் எல்லீஸ்பேட்டை ஏகாம்பரமும்!

எந்திரன் படம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவையாவன:

"எந்திரனும் ஏகாதிபத்தியத்தின் எளக்காரமும்," என்ற தலைப்பில் தோழர் தோசையூர் தொண்டைமான், பொதுவுடமைத் தத்துவத்தை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு மாதிரி புட்டுப் புட்டு வைத்து ஒரு இடுகை போடப்போகிறாராம்.

"எந்திரனும் எட்டுக்கால்பூச்சியும்," என்ற தலைப்பில் அழிந்துவரும் எட்டுக்கால்பூச்சிகள் காரணமாக, இயற்கையின் எழில் எவ்வளவு சீரழிந்து வருகிறது என்று பேய்வீடு பெரியகருப்பன் என்ற பதிவர் அடுத்த இடுகை ரெடி பண்ணி விட்டாராம்.

"எந்திரன் செய்த எள்ளுருண்டை," என்று சமையல்குறிப்பு இடுகையும் சுடச்சுட பரிமாறத்தயாராக இருப்பதாக, சமையல் திலகம், மோர்க்குழம்பு மோகனா குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

"எந்திரனும் எரித்ரோமைசினின் பின்விளைவும்,’ என்று டாக்டர் எமதர்மராஜன், மன்னிக்கவும், டாக்டர்.எம்.தர்மராஜன் ஒரு புது இடுகை எழுதப்போவதாக, இன்னும் உயிரோடிருக்கும் அவரது சில நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இத்தனை பேர் எழுதும்போது, நமது ஆரூடஜோதி, ஜோதிடமாமணி நங்கநல்லூர் நரசிம்மன் மட்டும் சும்மாவா இருப்பார்? அவரும் "எந்திரனும் ஏழரைநாட்டுச் சனியும்," என்று ஒரு இடுகையை இராகுகாலத்துக்கு முன்னால் நாளை பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களெல்லாம் இவ்வளவு சுறுசுறுப்பாக வலைப்பணி ஆற்றும்போது, நான் மட்டும் சும்மாயிருந்தால் நல்லாவாயிருக்கும்? அதனால், நானும் எழுதிவிட்டேன்.

நேற்று சென்னை மாநகரத் திரையரங்குகளில் பிளாக்கில் டிக்கெட் விற்போரின் அவசரக்கூட்டம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு எல்லீஸ்பேட்டை ஏகாம்பரம் தலைமை வகித்தார்.(அப்பாடா, எனக்காவது ஒருவழியா தலைப்புக்குப் பொருத்தமா வந்திருச்சு!). அவர் நிகழ்த்திய உரையிலிருந்து.....

எந்திரன்’ திரைப்படங்கள் குறித்து உலக வரலாற்றிலேயே முதல்முறையாக 1,23,456 இடுகைகளை வலைப்பதிவர்கள் எழுதி சாதனை நிகழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிளாக்கினால்(Blog) ஏற்பட்டுள்ள பரபரப்புக் காரணமாக, பிளாக்கில்(Black) டிக்கெட்டுகளின் டிமாண்டு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதனால் கள்ளமார்க்கெட்டில் அட்வான்ஸ் புக்கிங் செய்ய புதிய இணையதளம் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகத்திலேயே முதல்முறையா பிளாக்-டிக்கெட் விற்பனையில் ’வெயிட்டிங் லிஸ்ட்,’ ’ஆர்.ஏ.ஸி(R.A.C),’ மற்றும் ’தாத்கால்(TATKAL),’ முறைகள் கடைபிடிக்கப்படும் என்று அவர் உறுப்பினர்களின் ஆரவாரத்துக்கிடையே அறிவித்தார்.

இதுவரை வலைப்பதிவுகளில், இன்னும் படம் வெளிவராத நிலையிலேயே குருட்டாம்போக்கில் எழுதப்பட்ட 3579 விமர்சனங்கள் ஒரு புதிய உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு வலைப்பதிவர் தனது விமர்சனத்தை 1967-லேயே எழுதிவிட்டதாகக்கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்றும், அப்போது ரஜினிகாந்த் நடிக்கவே வரவில்லையென்றும், ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் திரைப்படம் வெளியானதும், படத்தின் உண்மைக்கதையோடு குத்துமதிப்பாக ஒத்துப்போகிற முதல் மூன்று வலைப்பதிவர்களின் விமர்சனங்களுக்கு முறையே ஒரு ஃபுல், ஒரு ஹாஃப் மற்றும் ஒரு குவார்ட்டர் பரிசாக வழங்கப்படும் என்றும், ஆறுதல் பரிசுகளாக பத்து பேருக்கு மிச்ஸர் பொட்டலங்களும் வழங்கப்படவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

விஜயார்கே என்ற எழுத்தாளர் தனது கதையைத் திருடித்தான் ’எந்திரன்’ படம் எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதை எல்லீஸ்பேட்டை ஏகாம்பரம் வன்மையாகக் கண்டித்தார். இதே போல பாட்டி வடை சுட்ட கதையை எழுதிய எழுத்தாளரும், ’எந்திரன்’ படத்தயாரிப்பாளர்கள் தனது வடையை, அதாவது கதையைத் திருடிவிட்டதாகக் கூறியிருப்பதாகவும், ஆதாரமாக ஒரு ஊசிப்போன வடையுடன் உலாத்திக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

’பாட்டி வடைசுட்ட கதைக்கும் எந்திரன் படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை; இந்தப் படத்தில் பாட்டி கதாபாத்திரமே கிடையாது என்பதோடு ஒரு காட்சியில் கூட வடை,போண்டா,பஜ்ஜி போன்ற பண்டங்களைக் காண்பிக்கவில்லை,’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

எந்திரன் படத்தின் பெயரை உபயோகித்து, சில வலைப்பதிவர்கள் குடுமிப்பிடி சண்டைபோடுவதை ஏகாம்பரம் வன்மையாகக் கண்டித்தார். "160 கோடி ரூபாய் முதலீட்டில் எடுத்த படத்தின் பெயரை உபயோகித்து நயா பைசா செலவில்லாமல் பதிவர்கள் சண்டைபோட்டுக்கொள்வது விஷமத்தனம்,’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சப்பைமூக்கன் என்ற பதிவர் தனது ’எந்திரன்’ பதிவில் நொள்ளக்கண்ணன் என்ற பதிவருக்கு, ஆறுவருடமாக ஆஸ்துமா நோய் இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருப்பது, பதிவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பதிலளித்துள்ள நொள்ளக்கண்ணன், ஒரு வருடத்துக்கு முன்னர், இதே சப்பைமூக்கனுக்கு மெரீனா கடற்கரையில் தான் மசாலாபொறி வாங்கிக் கொடுத்ததையும், அதற்கு ஆதாரமாக பொட்டலக்காகிதத்தை 'ஸ்கேன்' செய்து வெளியிட்டுள்ளதாலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகிற அபாயம் இருக்கிறது.

"வலையுலகத்தில் என்ன நடக்கிறது?" என்று அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்து, இன்று மாலை முந்திரிக்கொட்டை என்ற பெயரில் வலைப்பூ ஆரம்பித்த அவசரக்குடுக்கை என்ற பதிவர்(?!) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

’எந்திரன்’ படத்தின் பெயரை உபயோகித்து பல்லாயிரக்கணக்கான இடுகைகள் எழுதப்படுவதால், ’திரைமணம்’ என்று தனியாகத் தொடங்கியது போதாதென்று, அடுத்தடுத்து ’ரஜினிமணம்,’ ’ஐஸ்வர்யாமணம்,’ ’ஷங்கர்மணம்,’ என்று பலமணங்கள் புரிய வேண்டிவருமோ என்று வலைத்தொகுப்புத் தளங்கள் கலவரமடைந்துள்ளதாகவும் ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இன்னும் ’எந்திரன்’ வெளிவராத நிலையில் ’சுல்தான்-தி-வாரியரும் சுண்டல்கவிஞர்களும்,’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இடுகை வலையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பி.கு: இந்த இடுகையில் உபயோகிக்கப்பட்ட வலைப்பதிவுகளின் பெயர்களும், வலைப்பதிவர்களின் பெயர்களும், இடுகைகளின் தலைப்புகளும் முழுக்க முழுக்க எனது கற்பனையே! உண்மையிலேயே இப்படி யாராவது இருந்து, இதே பெயரில் இதே தலைப்பில் எழுதியிருந்தால் என்னை விட்டிருங்கய்யா! என்னையும் புரட்சியாளர்கள் லிஸ்டுலே சேர்த்திராதீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்!

Friday, August 20, 2010

பிரதமன்

என்னது, ஓணம் பண்டிகை வருதுன்னுறதுனாலே ’பிரதமன்’னு தலைப்பு வச்சு, சேட்டை இந்த வாட்டி ’அடைப்பிரதமன்’, ’சக்கைப்பிரதமன்’-னு கேரளாவோட பாயசங்களைப் பத்தி எழுதப்போறானோன்னு யாரும் சந்தேகப்படாதீங்க! ரொம்ப நாளைக்கு முன்னாடி, அர்ஜுன் ஒரு நாள் முதல்வரா ’முதல்வன்’ படத்துலே நடிச்சாரில்லே; அதே மாதிரி நான் ஒரு நாள் பிரதமரா இருந்ததை ’பிரதமன்’னு எழுதியிருக்கிறேன்.

உண்மையிலேயே அன்னிக்கு என்ன நடந்ததுன்னா....!

ஞொய்ய்ங்....ஞொய்ய்ங்....ஞொய்ய்ங்....ஞொய்ய்ங்....!

இடம்: புது தில்லி பிரதமர் அலுவலகம்

சேட்டை: சே! ஆபீஸ் வேலையா டெல்லி வந்தோமா.சோலே பட்டூரே சாப்பிட்டோமா, கனாட் ப்ளேசுக்குப் போயி பீர் குடிச்சோமா, கரோல்பாக்லே கலர்பார்த்தோமான்னு இல்லாம, பிரைம் மினிஸ்டரை ஒருவாட்டி பார்க்கலாம்னு வந்ததுக்கா இந்த ஒரு நாள் பிரதமர் தண்டனை?

காரியதரிசி: சேட்டைஜீ! நமஸ்தே! ஆப் கோ ஹிந்தி சமஜ் மே ஆத்தா ஹை?

சேட்டை: ஆத்தாவையெல்லாம் ஆபீஸ் வேலையா வரும்போது கூட்டிக்கிட்டு வர முடியாது.

காரியதரிசி: க்யா பாத் ஹை?

சேட்டை: பிஸிபேளாபாத் ஹை! கூடவே ரெண்டு பொரிச்ச அப்பளமும் கொண்டுவரச் சொல்லு!

காரியதரிசி: நஹீ சம்ஜா!

சேட்டை: போச்சுடா, முதல்லே பாத்துன்னான், இப்போ சமோசாங்கிறான்! சதா திங்குறதப்பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க போலிருக்கு! யூ ஸ்பீக் நோ இங்கிலீஷ்? ஐ ஸ்பீக் நோ ஹிந்தி!

காரியதரிசி: அச்சா!

சேட்டை: பார்றா, முதல்லே ஆத்தா, இப்போ அச்சாவா? அச்சனெல்லாம் ஓணத்துக்கு லீவு போட்டு கேரளாவுக்குப் போயிருப்பாங்க! யாராவது தமிழ் தெரிஞ்ச ஆளை வரச்சொல்லுய்யா! யூ கோயிங் அண்டு டமில் பர்சன் கமிங்! அண்டர்ஸ்டாண்ட்?

காரியதரிசி: ஓவர்ஸ்டாண்ட்!

(தமிழ்மொழிபெயர்ப்பாளர் வருகிறார்)

மொ.பெ: வணக்கம் சார்! என் பேரு சொரிமுத்து! இந்த ஆபீஸுலே அஞ்சுவருசமா சொரிஞ்சிட்டிருக்கேன்..சாரி, அதாவது வேலைபார்த்திட்டிருக்கேன்! உங்களுக்கு ஹிந்தி தெரியாதுன்னுறதுனாலே எல்லா மினிஸ்டருங்களும், அவங்கவங்க பிரச்சினையை அவங்க சார்பா உங்ககிட்டே என்னையே பேசச் சொல்லி அனுப்பியிருக்காங்க!

சேட்டை: குட்! ஒவ்வொரு பிரச்சினையா சொல்லுங்க!

சொரிமுத்து: முதல்லே, பாகிஸ்தான் பார்டர் பிரச்சினை! எல்லையிலே எங்கே பார்த்தாலும் பாகிஸ்தான் படை ரொம்ப அதிகமாயிருக்கு சார்!

சேட்டை: அப்படியா? கத்திரிக்காய் சாப்பிடறதை நிறுத்தச் சொல்லுங்க! சில பேருக்கு அலர்ஜீனாலே கூட படை,சொரி,சிரங்கெல்லாம் வரும்.

சொரிமுத்து: நான் சொல்ல வந்தது என்னான்னா...

சேட்டை: அடுத்த பிரச்சினைக்குப் போங்க சார்! ஒரு பிரச்சினைக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கக் கூடாது.

சொரிமுத்து: நம்ம கிட்டே இருக்கிற ஆயுதங்களைப் பார்த்து சீனா பொறாமைப்படுதாம் சார்! இந்தப் பேப்பரிலே செய்தி போட்டிருக்கு பாருங்க!

சேட்டை: என்னய்யா இது? என்னவோ கன்னாபின்னான்னு எழுதி மேலே கோடு கோடாப் போட்டிருக்கு!

சொரிமுத்து: அது ஹிந்தி சார்! எழுத்துக்கு மேலே கோடுவரும்!

சேட்டை: முதல்லே ஹிந்தி எழுத்து சீர்திருத்தம் செய்யணும். உடனே அலஹாபாத்துலே ஒரு மாநாடுக்கு ஏற்பாடு பண்ணுங்க! தீபிகா படுகோன், கரீனா கபூர், கத்ரீனா கைஃப் எல்லாரோட டான்ஸும் அமர்க்களமா இருக்கணும்! நிறைய சரக்கு வாங்கி கங்கோத்ரியிலேயே ஊத்தி விட்டுருங்க! அப்படியே அது கங்கையோட கலந்து வந்திரும்; மக்களெல்லாம் மொண்டு மொண்டு குடிப்பாங்க சரியா?

சொரிமுத்து: சரி சார், அடுத்தது நிதி!

சேட்டை: யோவ், டெல்லிக்கு வந்தப்புறமும் எதுக்குய்யா அந்தப் பேரை ஞாபகப்படுத்தறே?

சொரிமுத்து: சார் நான் சொன்னது நிதியமைச்சகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைன்னு சொன்னேன்!

சேட்டை: சொல்லுங்க, என்ன பிரச்சினை?

சொரிமுத்து: நாடு முழுக்க பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே இருக்கு. என்ன சார் பண்ணலாம்?

சேட்டை: எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு டப்பா 'அயோடக்ஸ்' இலவசமாக் கொடுங்க, கொறஞ்சு போயிடும்.

சொரிமுத்து: சார், (அழாக்குறையாக) அடுத்தது உணவுப்பிரச்சினை சார்! இதை கவனமா கேளுங்க! மகாராஷ்டிரத்துலே திரும்ப பட்டினி சாவு ஆரம்பிச்சிடுச்சு; ஆனா, பஞ்சாபுலேயும் ஹரியானாவுலேயும் கோதுமையை வைக்க இடமில்லாம திறந்தவெளியிலே வச்சு பெருச்சாளிங்கெல்லாம் திங்குது சார்! என்ன சார் பண்ணலாம்?

சேட்டை: ஒண்ணு பண்ணுங்க, அதையெல்லாம் கூட்ஸ் வண்டியிலே ஏத்தி மகாராஷ்டிராவுக்கு அனுப்பிடுங்க

சொரிமுத்து: பெருச்சாளிங்களையா?

சேட்டை: யோவ், கோதுமையைச் சொன்னேன்யா! அங்கே பட்டினிச்சாவும் இருக்காது. இங்கே பெருச்சாளித் தொந்தரவும் இருக்காது.

சொரிமுத்து: ஆமா சார், இடமும் காலியாயிடும்; கிரிக்கெட் ஆடலாம். நம்ம மினிஸ்டர் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாரு. ஆனா, இவ்வளவு கோதுமையையும் கூட்ஸ் ரயில்லே அனுப்பறதுன்னா.....??

சேட்டை: ஏன்? ரயில் கிடைக்காதா?

சொரிமுத்து: ரயில் மந்திரி கிடைக்க மாட்டாங்க சார்! கெஞ்சிக்கூத்தாடி கல்கத்தாவிலேருந்து ஒருவாட்டி வந்து அட்டண்டன்ஸ்லே கையெழுத்துப் போடச் சொல்லியிருக்கோம் சார்.

சேட்டை: வரும்போது ஒரு கிலோ ரசகுல்லா வாங்கிட்டு வரச்சொல்லுங்க!

சொரிமுத்து: சார், ரசகுல்லான்னதும் தான் ஞாபகம் வருது! டெல்லியிலே காமன்வெல்த் விளையாட்டு நடக்குதில்லியா? துவக்க விழாவுக்காக குமிளியிலேருந்து பத்து யானையைக் கூட்டிட்டு வந்திருக்காங்க! அதுக்கு குலோப்ஜாமூனும் சமோசாவும் வாங்கின கணக்குலே ஒரு நூறு கோடி ரூபாய் உதைக்குது சார்!

சேட்டை: எங்க ஊருலே யானைக்கு அல்வாய் கொடுத்ததா எழுதுவாங்க, இது வடநாடில்லையா? அதான் குலாப்ஜாமூன், சமோசான்னு எழுதியிருக்காங்க! யானை சாப்பிடற சமோசான்னா பெருசாத் தான் இருக்கும். அதுனாலே நூறுகோடி ஒரு பெரிய மேட்டரில்லை!

சொரிமுத்து: அப்புறம் ஒரு நல்ல செய்தி சார்! இந்த காமன்வெல்த் விளையாட்டுக்காக நம்ம ஏ.ஆர்.ரஹமான் ஒரு பாட்டுப் போட்டிருக்காரு! அதை நீங்க இன்னிக்கு ரிலீஸ் பண்ணப்போறீங்க!

சேட்டை: யோவ், உருப்படியா இருந்த டெல்லியை ஒரு இடம் விடாம தோண்டி மேடும் பள்ளமுமாக்கியாச்சு! பாட்டா கேட்குது? இந்த விளையாட்டு முடியுற வரைக்கும் எல்லா டெல்லிக்காரங்களையும் ’கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை; ஏத்தி விடய்யா...தூக்கி விடய்யா,’ன்னு பாடிட்டு இருக்கச் சொல்லுங்க! அது போதும்! அடுத்தது என்ன?

சொரிமுத்து: அணு ஆயுத ஒப்பந்தம் சார்! அதுலே புதுசா ஒரு ’கமா’ சேர்த்திட்டோம்னு எதிர்க்கட்சிங்க ஒரே அலப்பறை பண்ணிட்டிருக்காங்க சார்!

சேட்டை: இவ்வளவு தானே? ஒப்பந்தத்துலே கமா, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, அரைப்புள்ளி எல்லாத்தையும் எடுத்திருங்க. ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் இடைவெளி கூட இருக்கப்படாது. இவ்வளவு ஏன், ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் நடுவுலே கூட ஸ்பேஸ் இருக்கக் கூடாது.

சொரிமுத்து: ஐயோ, கசகசன்னு ஆயிருமே, யாருக்கும் புரியாதே?

சேட்டை: இப்போ மட்டும் எவனுக்கய்யா புரிஞ்சது? அடுத்த பிரச்சினைக்குப் போங்க!

சொரிமுத்து: பாகிஸ்தானுலே வெள்ளமுன்னு நிதியுதவி தர்றதாச் சொன்னோம்! அதை வேண்டாமுன்னு மூஞ்சியிலே அடிச்சா மாதிரி சொல்லிட்டாங்க சார்!

சேட்டை: இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? அதை அப்படியே தமிழ்நாட்டுக்கு அனுப்பிட்டாப் போச்சு! வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்களுக்கு ஆளுக்கு ஒரு நானோ கார் இலவசமாக் கொடுத்திரலாம்.

சொரிமுத்து: இந்த தெலுங்கானா பிரச்சினை பெரிய தலைவலியா இருக்கு? என்ன சார் பண்ணறது?

சேட்டை: இதெல்லாம் சிம்பிள் மேட்டர்யா! தெலுங்கானா கொடுக்கிறதா இருந்தா மேற்கு தெலுங்கானா, கிழக்கு தெலுங்கானான்னு ரெண்டாப் பிரிச்சுத்தான் கொடுப்போமுன்னு சொல்லுங்க! ஜனங்க ரெண்டாப் பிரிஞ்சுபோயி அடிச்சிப்பாங்க. ரெண்டு பத்தாது, நாலாப் பிரிச்சுக்கொடுன்னு சொல்லுவாங்க! தெலுங்கானாவை மறந்திடுவாங்க! நெக்ஸ்ட்..?

சொரிமுத்து: இந்த போபால் விவகாரத்துலே ஆண்டர்சனை தப்பிக்க விட்டது நரசிம்ம ராவ்னு சொன்னதுக்கப்புறமும் எதிர்க்கட்சிங்க குதிக்கிறாங்க! என்ன சார் பண்ணலாம்?

சேட்டை: அதையும் நம்பலேன்னா சந்திரகுப்த மௌரியர் தான் காரணம்னு சொல்லிடுங்க! அதுக்கும் மசியலேன்னா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யப்போறோம்னு சொல்லுங்க! அப்புறம் மாயாவதி, லாலு, அத்வானி முலாயம் எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்குவாங்க! போபாலைப் பத்திக் கேட்க நாதியே இருக்காது.

சொரிமுத்து: தமிழ்நாடு முதல்வர் ஒரு கடிதம் எழுதியிருக்காரு! அதாவது....

சேட்டை: இதுக்கு முந்தி எழுதின பதிலை ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிருங்க!

சொரிமுத்து: சரி, இதுவரைக்கும் வெளியுறவு, பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறைன்னு பல பிரச்சினைகளை டக்கு டக்குன்னு சால்வ் பண்ணிட்டீங்க! இனிமே கொஞ்சம் கட்சி விவகாரத்தையும் பார்க்கலமா? தமிழ்நாட்டுலே கலைஞரும் செல்வியும் நேருலே சந்திக்கப்போறாங்களாம். கேள்விப்பட்டீங்களா?

சேட்டை: இப்படியெல்லாம் நடக்குமுன்னு ரொம்ப வருசத்துக்கு முன்னாடி நாஸ்ட்ரடாமஸ் எழுதியிருக்காரு! நீங்க கவலைப்படாதீங்க! அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா அவங்க வீட்டு கூர்க்காவைத் தான் அனுப்புவாங்க!

சொரிமுத்து: நம்ம கட்சி ஆளுங்கெல்லாம் தி.மு.கவைத் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க! என்ன பண்ணலாம்?

சேட்டை: இதையெல்லாம் உடனே கண்டிக்கணும்! இன்னிக்கு தி.மு.கவைத் திட்டுறவங்க, நாளைக்கு நம்மளையே திட்டினாலும் திட்டுவாங்க! ரோசப்படுறது நம்ம கட்சிக்கொள்கைக்கே விரோதமானதுன்னு கண்டிச்சு வையுங்க!

சொரிமுத்து: பரவாயில்லையே, ஒரு நாளிலே முடிக்க வேண்டிய பிரச்சினையெல்லாத்தையும் பத்து நிமிசத்துல முடிச்சிட்டீங்களே? நீங்க கிளம்பலாம் சார், உங்களை எங்கேயாவது ட்ராப் பண்ணச் சொல்லணுமா?

சேட்டை: ஆமாய்யா, என்னை ஐ.எஸ்.பி.டியிலே கொண்டு போய் விட்டிருங்க! ஹரித்வார் போகணும்!

சொரிமுத்து: ஆனாலும் உங்களுக்கு ரொம்ப கடவுள் பக்தி சார்!

சேட்டை: யோவ், கடவுள் பக்தியெல்லாம் ஒண்ணுமில்லே! ஹரித்வார்-லே தான் ஸ்ரேயா பொறந்தாங்க! சிவாஜி படம் ஹிட்டானா அவங்க வீட்டு வாசல்லே அங்கப்பிரதட்சிணம் பண்ணி, தேங்காய் உடைக்கிறதா வேண்டுதல். அதுக்கு இப்பத்தான் வேளை வந்திருக்கு!

பி.கு (அ) டிஸ்கி: மெய்யாலுமே இந்த மாசக்கடைசியிலே நான் டெல்லி போறேன்! அதைப் பத்தியே சிந்திச்சிடிருந்தேனா, அதோட விளைவு தான் இது!

Wednesday, August 18, 2010

150-வது சேட்டை!

வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டி.வியின் ’வாங்க வம்பளக்கலாம்’ நிகழ்ச்சி! இன்றைக்கு நம்முடன் கலந்துரையாட வந்திருப்பவர் ஒரு பிரபல வலைப்பதிவாளர்! வணக்கம்!

வணக்கம்! என்னை மட்டும் தானே பேட்டி எடுக்கிறதா பேச்சு? இப்போ புதுசா யாரோ பிரபல பதிவாளரையும் கூப்பிட்டிருக்கீங்களா?

ஐயோ! நான் உங்களைத் தான் பிரபல பதிவாளர்னு சொன்னேன் சேட்டைக்காரன்!

ஓ! என்னைத் தான் சொன்னீங்களா? அதாவது எனக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்! யாராவது என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டா கூட கூச்சப்பட்டுக்கிட்டு லீவு போட்டு வீட்டுக்குப் போயிடுவேன்.

நீங்க வலைப்பதிவு ஆரம்பிக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?

அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. நானும் நிறையபேரை மாதிரி சும்மா ஒரு உல்லுலாயிக்குத் தான் ஆரம்பிச்சேன்! நீங்க சந்தேகப்படுறா மாதிரி சின்ன வயசுலே மண்டையிலே அடிபட்டதுனாலே ஏற்பட்ட பின்விளைவோ, செகண்ட்-ஷோ சினிமா பார்த்திட்டு வரும்போது நாய்கடிச்சதோ காரணமில்லை!

உங்க வலைப்பதிவை நீங்க புத்தாண்டிலேருந்து ஆரம்பிச்சதைப் பத்தி ஒரு குற்றச்சாட்டு இருக்கு! ஒருத்தரையும் நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு புத்தாண்டு சபதம் எடுத்துக்கிட்டு நீங்க வலைப்பதிவு ஆரம்பிச்சதாகச் சொல்லுறாங்களே! அது பத்தி நீங்க என்ன சொல்லறீங்க?

இது தவறான தகவல்! ஏன்னா நான் ஜனவரி ஏழாம் தேதி நண்பகல்லேதான் பதிவை ஆரம்பிச்சேன்! உடனே ஏழரைச்சனி ஆரம்பிச்சிட்டுதுன்னு கூட சிலர் என்காதுபடவே பேசினாங்க! நான் என்னிக்குப் பதிவு ஆரம்பிச்சிருந்தாலும் வாசிக்கிறவங்களோட தலைவிதி மாறியிருக்கப்போறதில்லை! அதுனாலே ரெண்டுமே ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்!

வலைப்பதிவு ஆரம்பிக்கிறதுக்கு தமிழறிவு ரொம்ப முக்கியம்னு சொல்லுறாங்களே? இது உண்மை தானா?

நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இப்படியொரு மூடநம்பிக்கை இருந்தது உண்மைதான்! நான் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் தான் நிறைய பேருக்கு வலைப்பதிவுக்கும் தமிழறிவுக்கும் மட்டுமில்லே, வலைப்பதிவுக்கும் அறிவுக்குமே எந்த தொடர்பும் கிடையாதுங்கிற உண்மை புரிஞ்சுது.

உங்க இடுகைகளுக்கான விஷயத்தை எப்படி தேர்வு செய்யறீங்க?

இப்போ மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பாரத்துலே நீங்க சும்மா நின்னாலே போதும்; கூட்டமே உங்களை ரயிலுக்குள்ளே தள்ளிக்கொண்டு போயிடுது இல்லியா? அதே மாதிரி வலைப்பதிவு ஆரம்பிச்சா சப்ஜெக்டும் தானா கிடைக்கும்!

சமீபத்துலே உங்களோட 150-வது இடுகை எழுதியிருக்கீங்க! இதுக்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தாராமே?

ஆமாம்! ரொம்பப் பாராட்டினாரு! ’சேட்டை, உங்களை மாதிரி ஒவ்வொருநாட்டிலும் நாலு வலைப்பதிவருங்க இருந்தாப்போதும்; அமெரிக்காவை யாராலேயும் அசைச்சுக்க முடியாது,’ன்னு சொன்னாரு!

இதுதவிர வேறே யார் யாரெல்லாம் வாழ்த்துச் செய்தி அனுப்பினாங்க?

ஒவ்வொண்ணாப் படிக்கிறேன் கேளுங்க!

வலையுலகம் என்பது
வஞ்சிகள் நடனமிடும் அரங்கு!
சேட்டையே! நீ மட்டும்
வழிதவறிப்போய்
வனத்திலிருந்து
வராண்டாவில் குதித்த குரங்கு!
வாசகர்கள் பாவம்!
வாஞ்சையாய் மனம் இரங்கு!
கண்டேன் உன் வலைப்பதிவை!
கண்ணுக்குள் வந்தது சிரங்கு!

....அப்படீன்னு கவிஞர் சுக்ரீவன் எழுதியிருக்காரு! அடுத்ததா....

போதும், போதும்! ஒரு பானைக் கவிதைக்கு ஒரு சோறுபதம்! இதுவரை நீங்க போட்ட இடுகைகளிலேயே ரொம்பவும் பிரபலமானது எது?

கொஞ்ச நாளைக்கு முன்னாலே இனிமே எழுதமாட்டேன்னு ஒரு இடுகைபோட்டேன். அதுக்காக, ராணி சீதை அரங்கத்துலே ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடு பண்ணி, சால்வையெல்லாம் போர்த்திப் பாராட்டினாங்க!

சேத்துப்பட்டு மேம்பாலத்துலே பிரம்மாண்டமா ஒரு ஃபிளக்ஸ் வச்சிருந்தாங்களாமே? அதை வச்சதுக்கப்புறம் அந்த ரோட்டுலே ஒரு விபத்து கூட நடக்கலேன்னு சொல்லுறாங்களே, உண்மையா?

இருக்காதா பின்னே? குழந்தைங்க பார்த்தா பயப்படுவாங்கன்னு, எல்லாரும் பூந்தமல்லி ஹைரோடு வழியா சுத்திப்போக ஆரம்பிச்சிட்டாங்க! தப்பித்தவறி அந்தப் பக்கமாப் போனவங்களையும் போலீஸ் ஸ்பர்டாங்க் ரோடு வழியா போகச் சொல்லி எச்சரிக்கை பண்ணிட்டாங்களாம். அப்புறம் எப்படி விபத்து நடக்கும்?

உங்களுக்கு டாக்டர் பட்டம் யாரு கொடுத்தாங்க?

சிட்லபாக்கம் சித்தப்பா பல்கலைக்கழகத்துலே ஏப்ரல் ஒண்ணாம் தேதி கொடுத்தாங்க! இது தவிர கண்ணம்மாபேட்டை கபாலி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துலே ’கம்பவுண்டர்’ பட்டமும் கொடுக்கிறதா லெட்டர் போட்டிருக்காங்க! இதோ பாருங்க, தர்மாமீட்டர், ஸ்டெதாஸ்கோப்பெல்லாம் கூட முன்கூட்டியே கொரியர்லே அனுப்பியிருக்காங்க!

நீங்க அமாவாசைக்கு அமாவாசை கவிதை எழுதுறதா சொல்றாங்களே? அதுக்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா?

இருக்கு! ஏன்னா அன்னிக்குப் பெரும்பாலானவங்க கோவிலுக்குக் கண்டிப்பா போவாங்க! அதுனாலே கடவுள் அவங்களையெல்லாம் காப்பாத்துவாருன்னுற நம்பிக்கைதான்.

வலையுலகத்துலே ஜனநாயகம் எப்படியிருக்குது?

ரொம்ப நல்லாயிருக்கு! இங்கேயும் கள்ள ஓட்டுப் போடலாம். ’உன் ஜாதி, என் ஜாதி,’ன்னு சண்டை போடலாம். வாய்புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசலாம். கோஷ்டி சேர்க்கலாம். படிக்காமலே எழுதலாம். ரெண்டு பேருக்கு சண்டையை மூட்டிவிட்டுட்டு வேடிக்கை பார்க்கலாம். அடுத்தவன் வேட்டியை உருவுறது தவிர ஜனநாயகத்துலே சராசரி குடிமகன் என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் வலையுலகத்துலேயும் செய்யலாம்.

150 பதிவுகளை எழுதிட்டீங்க! உங்களோட அடுத்த உடனடி லட்சியம் என்ன?

151-வது இடுகை எழுதணும்! இன்னிக்கு ’தட்ஸ் டமில்’ பார்த்திட்டு எழுதிட வேண்டியது தான்!

உங்க வலைப்பதிவை இதுவரை 53000 பேர் படிச்சிருக்காங்க! 175 பேர் உங்களைப் பின்தொடர்ந்து வர்றாங்க! இதுக்கு என்ன காரணமுன்னு நினைக்கிறீங்க?

இதுக்கெல்லாம் எப்படி பதில் சொல்றது? காளஹஸ்தி கோபுரம் இடிஞ்சதுக்கு என்ன காரணம்? பாகிஸ்தானிலே வெள்ளம் வந்ததுக்கு என்ன காரணம்னு நான் எப்படி சொல்ல முடியும்? எல்லாம் இறைவன் செயல்- அவ்வளவு தான்!

இவ்வளவு நேரம் பொறுமையாக பதில் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சேட்டைக்காரன்! ஸ்டூடியோவை விட்டுப் போறதுக்கு முன்னாடி கோட்டைக் கழட்டித் திருப்பிக் கொடுத்திட்டுப் போங்க! வேறே ஸ்பேர் கோட்டு இல்லை! நீங்க 300-வது இடுகை எழுதினதுக்கப்புறமும் இதே கோட் போட்டுக்கிட்டுத்தான் பேட்டி கொடுக்கணும்.

சேட்டை டிவி நேயர்களுக்கு மிக்க நன்றி!

Tuesday, August 17, 2010

மெய்யாலுமா....?

"டாக்டர், நாடு எவ்வளவு சுபிட்சமாயிடுச்சுன்னு பார்த்தீங்களா? தெருவெல்லாம் பாலும் தேனும் வழிஞ்சு ஓடிட்டிருக்கு! ஆனா, ஒருத்தரும் கண்டும்காணாத மாதிரி போயிட்டே இருக்காங்களே, ஏன் டாக்டர்?"

அரோகரா ஆஸ்பத்திரியின் எமர்ஜன்ஸி வார்டில் படுத்திருந்த சேட்டைக்காரன், அங்கிருந்த டியூட்டி டாக்டர் குஞ்சிதபாதத்திடம் இப்படிக் கேட்கவும், அவரது நெற்றி பார்சலில் மடக்கிய பரோட்டாவைப் போல சுருங்கியது. 'மெகா டிவி'யில் ’ஆலயமணி’ படம் பார்த்துவிட்டு வந்தவரைப் போல, அருகிலிருந்த சேட்டையின் நண்பர்கள் சுரேந்திரனையும், வைத்தியையும் சிவாஜி மாதிரி புருவத்தை உயர்த்தியபடி பார்த்தார்.

"உங்க ஃபிரண்டு எவ்வளவு நாளா இப்படிப் பேசிட்டிருக்காரு?" என்று கிசுகிசுப்பாகக் கேட்டார் குஞ்சிதபாதம்.

"இன்னிக்கு சாயங்காலத்துலேருந்து தான் டாக்டர்," என்று விசனத்தோடு சொன்னான் சுரேந்திரன்.

"ஆனா, இப்படியெல்லாம் ஆகும்னு நேக்கு முந்தியே தெரியும் டாக்டர்," என்று இடையே புகுந்தான் வைத்தி. "இவன் ஒரு ஆறுமாசமா வலைப்பதிவெல்லாம் எழுதிண்டிருக்கான்! வேண்டாம் வேண்டாம்னா கேட்டானா அபிஷ்டு? அந்தப் பாவமெல்லாம் சும்மா விடுமா? பாருங்கோ, புத்தியே பேதலிச்சுப் போயிடுத்து!"

"அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடாதீங்க! எங்க சீனியர் டாக்டர் ஊளம்பாறை உலகப்பனுக்கு போன் போட்டிருக்கேன்! அவர் வந்து பார்த்து என்ன சொல்றாருன்னு பார்ப்போம்! அது சரி, சமீபத்திலே சேட்டைக்காரன் அதிர்ச்சி அடையுறா மாதிரி ஏதாவது சம்பவம் நடந்ததா?"

"நார்மலாவே அவன் மூஞ்சி இப்படித்தான் பெயின்ட் வச்சிருந்த பிளாஸ்டிக் பக்கெட் மாதிரி இருக்கும்! ஆனா, 'ராவணன்' படம் பார்த்திட்டு தாத்தா,பாட்டி ஞாபகமெல்லாம் வந்திருச்சிடான்னு ஓன்னு அழுதான். அடுத்தநாள் ஆஃபீசுக்குப் போயி பிராவிடண்டு ஃபண்ட் பேப்பரெல்லாம் வாங்கிக் கையெழுத்துப் போட்டுட்டான்னா பாருங்களேன்! அவனோட பதிவைப் படிச்சு அவனே சிரிச்சுக்குவான்! இண்ட்லீலேருந்து இடுகை பாப்புலர் ஆயிடுச்சுன்னு மடல் வந்தா ’ஆத்தா,நான் பாஸாயிட்டேன்,"னு கூவுவான். ஆனா, இன்னிக்கு சாயங்காலத்திலேருந்து தான் இந்த மாதிரி புதுசு புதுசாப் பேத்த ஆரம்பிச்சான்!"

"தட்ஸ் ஓ.கே! பிளாகர்ஸ்னா கொஞ்சம் அப்படி இப்படித் தான் பேசுவாங்க! எக்ஸாக்டா அவர் என்ன சொன்னாருன்னு சொல்லுங்க!" என்று மேஜர் சுந்தர்ராஜனைப் போல தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"ரூமுக்குள்ளே வந்ததுமே, இன்னிக்கு உடுப்பி கிருஷ்ணபவனுக்குப் போயி, காண்டாமிருக காரக்குழம்பும், அனக்கோண்டா அவியலும் சாப்பிடணும்னு சொன்னான் டாக்டர்!"

"என்னது?" டாக்டர் குஞ்சிதபாதம் கூவியே விட்டார். "அப்புறம்?"

"சீக்கிரம் குளிச்சிட்டுக் கிளம்பணும், கேட்டுலே பில் கேட்ஸ் ஆட்டோவிலே வெயிட் பண்ணிட்டிருக்காருன்னான்!" தயங்கித் தயங்கிச் சொன்ன சுரேந்திரனுக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது.

"யாரு பில் கேட்ஸா?"

"ஆமாம் டாக்டர்," என்று வலுக்கட்டாயமாக சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசிய வைத்தி, "என்னடா கன்னாபின்னான்னு உளர்றேன்னு கேட்டா, ஸ்ரேயா இவனைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு ரஜினிகாந்தைத் தூது அனுப்பியிருக்கிறதாகவும், அதைக் கேட்டதுலேருந்து தலைகால் புரியலேன்னும் சொல்லுறான் டாக்டர்!"

"ஐயையோ, இது முத்திடுச்சு போலிருக்கே!" என்று டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சேட்டைக்காரன் மீண்டும் முனகும் சத்தம் கேட்டது.

"டாக்டர், சீக்கிரமா டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க டாக்டர்! முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் கம்பனியை என்கிட்டே கொடுத்திட்டு சந்நியாசம் வாங்கிட்டு ரிஷிகேசம் போகப்போறாராம். நான் போய் சார்ஜ் எடுத்துக்கணும் டாக்டர்!"

"மிஸ்டர் சேட்டை! உங்களுக்கு என்ன பண்ணுது? தலைசுத்துதா? மயக்கமா வருதா?"

"ஆமா, கொஞ்சம் அசந்தா மாங்காய் வேணுமா, சாம்பல் வேணுமான்னு கேட்பீங்க போலிருக்கே? சும்மா சிவனேன்னு கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு இந்தப் பாவிங்க கூட்டிட்டு வந்தா, டைனோசருக்கு டயரியா வந்தா போடுற ஊசியைப் போட்டுட்டீங்களே டாக்டர்! டேய், நண்பர்களாடா நீங்க? நாளைக்கு பிரணாப் முகர்ஜீ எல்.ஐ.சி.பில்டிங்கை எனக்கு எழுதி வைக்கப்போறாரு! உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு அஞ்சு மாடியைக்கொடுத்திட்டு, எனக்கு நாலுமாடி மட்டும் போதுமுன்னு பெருந்தன்மையா நினைச்சிட்டிருக்கேன். போங்கடா, உஙக்ளுக்கு பேஸ்மெண்ட் கூட கிடையாது போங்கடா!"

"திஸ் ஸீம்ஸ் டு பீ ய டெர்ரிபிள் கேஸ் ஆஃப் சிவியர் சைக்கோஸோமேட்டிக் டிஸீஸ்!" என்று கொலம்பஸின் கொள்ளுப்பேரன் போலக் கூறினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"அப்படீன்னா ஆபத்துதான், எதுக்கும் தமிழிலே ஒருவாட்டி சொன்னீங்கன்னா நாங்களும் புரிஞ்சுப்போம்," என்று அடக்கமாகச் சொன்னான் சுரேந்திரன்.

"உங்க ஃபிரண்டுக்கு மறை கழண்டிருக்குன்னு சொன்னேன்," என்று டாக்டர் குஞ்சிதபாதம் சற்றே உரக்கக் கூறவும், 'காக்க காக்க' கிளைமேக்ஸில் சூர்யா எழுவது போல, படுக்கையிலிருந்து துள்ளியெழுந்த சேட்டைக்காரனைப் பார்த்து அனைவரும் வெலவெலத்துப்போயினர்.

"யாருக்கு மறைகழண்டிருக்கு? இதோ நிக்குறானே வைத்தி, இவன் இன்ஃபோசிஸ் சேர்மேன் தானே?"

"டேய், நான் இன்ஃபோசிஸ் சேர்மேன் இல்லேடா! இண்டியன் காப்பி ஹவுஸ் வாட்ச்மேன்!" என்று அலறினான் வைத்தி.

"பொய் சொல்றான் டாக்டர்! இதோ இந்த சுரேந்திரன், கேரளாவோட முக்கிய மந்திரி தெரியுமா?"

"எண்டே குருவாயூரப்பா, என்னை ரட்சிக்கணே!" என்று குருவாயூரப்பனை வேண்டியபடி கும்மிடிப்பூண்டியின் திசையை நோக்கிக் கும்பிட்டான் சுரேந்திரன்.

"பார்த்தீங்களா டாக்டர், மலையாளத்துலே ஆமான்னு எவ்வளவு சுருக்கமா சொல்றான் பாருங்க!"

"மிஸ்டர் சேட்டை, நீங்க சொல்றது எதுவுமே நம்புறா மாதிரியே இல்லையே?" டாக்டர் குஞ்சிதபாதம் படுகிற அவஸ்தையைப் பார்த்து, எமர்ஜன்ஸி வார்டில் பம்மியபடி நின்றுகொண்டிருந்த நர்சுகள் பன்றிக்காய்ச்சல் வந்தவர்கள் போல வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தனர்.

"டாக்டர், பவுன் தங்கம் விலை பத்து ரூபாய்! நம்புறீங்களா...?"

"பத்து ரூபாயா...ஹிஹி..எப்படி நம்புறது...?"

"ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கினா ரெண்டு கிலோ வெண்டைக்காய் ஃப்ரீ! நம்புறீங்களா...?"

"என்ன விளையாடறீங்களா சேட்டை? இதை எப்படி....நம்புறது...? ஹிஹிஹி...!"

"தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாரும் பக்கத்துப் பக்கத்துலே உட்கார்ந்து தமிழ்நாட்டு வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தியிருக்காங்க! நம்புறீங்களா?"

"சேட்டை!" டாக்டர் குஞ்சிதபாதத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "நீங்க ஒரு பேஷியண்டா இருக்கீங்களேன்னு பார்க்கிறேன்! ஜோக் அடிக்கிறதுக்கு ஒரு அளவில்லையா? பவுன் தங்கம் பத்து ரூபாய் விக்கலாம்; ஒரு கிலோ கத்திரிக்காய்க்கு ரெண்டு கிலோ வெண்டைக்காய் ஃப்ரீயாக் கிடைக்கலாம். ஆனா, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் மேலே விளையாட்டுக்காகக் கூட இப்படியொரு அபாண்டமான பழியைப் போடாதீங்க! உங்க நாக்கு அழுகிடும்! தி.மு.கவும், அ.தி.மு.கவும், காங்கிரஸும், கம்யூனிஸ்டும் உட்கார்ந்து பேசினாங்களாம். அதுவும், தமிழ்நாடு வளர்ச்சியைப் பத்திப் பேசினாங்களாம்! இன்னொருவாட்டி இப்படி சொன்னீங்க, அவுட்-பாஸ் போட்டு கீழ்ப்பாக்கத்துக்கே அனுப்பிடுவேன்! ஆமா!" என்று தாள முடியாமல் பொரிந்து தள்ளினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"டாக்டர்! இதோ பாருங்க! நியூஸ் வந்திருக்கு!" என்று சேட்டைக்காரன் காட்டவும், டாக்டர் குஞ்சிதபாதமும், வைத்தியும் சுரேந்திரனும் உரலில் அகப்பட்ட உளுத்தமாவு போல இடிந்து போய் நின்றனர்.

தமிழக திட்டங்கள் தொடர்பான ஆலோசனை-திமுக,அதிமுக பங்கேற்பு

"சே..ட்..டை....!" குற்றாலமலை போல நிமிர்ந்திருந்த குஞ்சிதபாதம் கூவத்தைப்போல குறுகிவிட்டார். நோயாளியைக் குணப்படுத்த வேண்டிய டாக்டரே நொந்து நூலாய் விட்டதைப் பார்த்த வைத்தியும், சுரேந்திரனும் திறந்தவாய் மூடாமல் திகைத்துப்போய் நின்றனர்.

அதே சமயம்...!

"எஸ் டாக்டர் குஞ்சிதபாதம்! எங்கே நான் பார்க்க வேண்டிய பேஷியன்ட்...?" என்று கேட்டபடி நுழைந்தார் டாக்டர்.ஊளம்பாறை உலகப்பன்.

"டாக்டர்!" தமிழ்சினிமாவில் வில்லனிடம் கத்திக்குத்து வாங்கிய கதாநாயகனின் அப்பாவைப் போல இரைத்து இரைத்துப் பேசினார் குஞ்சிதபாதம். "இவர் தான் உங்க பேஷியன்ட் சேட்டைக்காரன்! நான் கிளம்பறேன் டாக்டர்!"

"எங்கே கிளம்பறீங்க டாக்டர் குஞ்சிதபாதம்..?"

"பவுனு பத்து ரூபாய்க்கு விக்குறாங்களாம். போய் ஒரு அரை டன் வாங்கிப் போடணும். ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கினா ரெண்டு கிலோ வெண்டைக்காய் ஃப்ரீயாம்! ரெண்டும் ஒவ்வொரு குவிண்டால் வாங்கி வீட்டுலே கொடுத்துக் கொழம்பு வைச்சா ரிட்டயர் ஆகிற வரைக்கும் வச்சுச் சாப்பிடலாம். இன்னிலேருந்து எனக்கு பத்துவருஷம் கேஷுவல் லீவு டாக்டர்....!"

"டாக்டர் குஞ்சிதபாதம்!...டாக்டர்! .டாக்டர்...!" என்று ஊளம்பாறை உலகப்பன் அழைப்பதைப் பொருட்படுத்தாமல், 'டெர்மினேட்டர்-III' அர்னால்டைப் போல இயந்திரமாக நடந்து வெளியேறினார் டாக்டர் குஞ்சிதபாதம்.

"டாக்டர் குஞ்சிதபாதத்துக்கு என்ன ஆச்சு டாக்டர்?" என்று அக்கறையோடு கேட்டான் வைத்தி.

வாசலையே கண்ணிமைக்காமல் பார்த்தவாறே, பெருமூச்சுடன் டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் சொன்னார்:

"திஸ் ஸீம்ஸ் டு பீ ய டெர்ரிபிள் கேஸ் ஆஃப் சிவியர் சைக்கோஸோமேட்டிக் டிஸீஸ்!"

Wednesday, August 11, 2010

'குடி' உயர கோன் உயரும்

வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்

-என்று சொன்ன ஔவையார் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், புல்லரித்துப் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து புன்னகை சிந்தியிருப்பார். (சே! செம்மொழி மாநாட்டை மிஸ் பண்ணிட்டேனே!)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தத்தை அரசின் உதவியோடு மதுமக்கள், அதாவது பொதுமக்கள் முறியடித்து வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றனர். சொல்லப்போனால், ஆகஸ்ட் 11, 2010 ஆகிய இந்த தினத்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும். ஆனால், யாராவது பொன்னைச் சுரண்டி விற்று அதில் க்வார்ட்டர் வாங்கி அடித்து விடலாம் என்பதால் இத்தோடு விட்டுவிடலாம்.

உலகத்திலேயே போலீஸ் பாதுகாப்போடு சரக்கடித்த பெருமை தமிழனையே சாரும் என்பதை எண்ணும்போது, தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போன்றவர்களின் வீரவரலாறுகளெல்லாம் விகடனின் இலவச இணைப்புப் போலக் கைக்கடக்கமாகத் தெரிகின்றதல்லவா?

அடாத வெயிலுக்கும், விடாத மழைக்குமே அஞ்சாத மொடாக்குடியர்களா இது போன்ற போராட்டங்களுக்கு அஞ்சுபவர்கள்?

இன்று ஸ்டிரைக் என்பதால் மதுகிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும், முன்னெச்சரிக்கையுடனும் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் அலை மோதியது. இது தவிர தினசரிக் குடிகாரர்கள் நேற்று இரவில், டாஸ்மாக் கடைகளருகேயிருந்த நடைபாதைகளில் அவரவர் வேட்டி, லுங்கியை விரித்துப் படுத்துக் கொண்டதால், குழம்பிப்போன தெருநாய்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்றைக்கு அதிகாலை முதலே தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகளின் முன்னால் குடிமக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கியிருந்ததால், புதிதாக பல்பொடி வியாபாரம் படுஜோராக நடந்ததாக நமது நிரூபர் மந்தாரம்புதூர் மப்பண்ணன் அறிகிறார்.

நீண்ட வரிசையில் நின்று விரும்பிய மது பானங்களை வாங்கிக் கொண்டு திருப்திகரமாக சென்றனர் குடிகாரர்கள். அவ்வப்போது ’கோவிந்தா..கோவிந்தா,’ என்ற கோஷங்களும் விண்ணைப் பிளந்தன. கடை திறக்கும் வரைக்கும் குடிமக்கள் மிகுந்த சிரத்தையுடன் ’வசந்தமாளிகை’ மற்றும் ’வாழ்வே மாயம்’ படத்திலிருந்து பக்திப்பாடல்களைப் பாடி பஜனையில் ஈடுபட்டனர். முடிவில் அனைவருக்கும் ஊறுகாய்ப் பாக்கெட் பிரசாதமாக வழங்கப்பட்டது.

வழக்கத்திற்கு மாறாக கூட்டம் நிரம்பி வழிந்ததால் போலீஸார் வரவழைக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்து குடிகாரர்களுக்கு அவர்கள் விரும்பிய மதுபானங்கள் கிடைக்க வழி செய்யப்பட்டது. விரும்பிய சரக்கு கிடைத்த உற்சாகத்தில் குடிமக்கள் ’காவல்துறை வாழ்க!’ என்று கோஷம் எழுப்பி, போலீசாருடன் கைகுலுக்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

குடிமக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி, கொருக்குப்பேட்டை டாஸ்மாக் கடை திறந்ததும் முதல் க்வார்ட்டர் வாங்கி பக்தகோடிகளின் தலைகளில் தெளித்து ஆசிவழங்கியபோது, கரவொலி விண்ணைப்பிளந்தது.

இதே போல தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கு.மு.கவின் பிரமுகர்கள் கடைதிறந்தவுடன் முதல் விற்பனையைத் தொடங்கியதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மதுரையில் கு.மு.க.பொருளாளர் பகார்டி பக்கிரிசாமியின் கட்-அவுட்டுக்கு பீரால் அபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தொண்டர்கள் வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த மனோகரன் (32) என்ற டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயன்றதாக செய்தி பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர் ’டீ குடிக்கப் போகிறேன்,’ என்று சொன்னதை "தீக்குளிக்கப் போகிறேன்,’ என்று அங்கிருந்த காவலர் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பம் என்பது புரிந்தது. அனேகமாக அந்தக் காவலருக்கு முந்தைய நாள் சரக்கின் போதை தெளியாமல் இருந்திருக்கலாம் என்று சந்தேகித்த உயர் அதிகாரிகள் அவரை டாஸ்மாக் பாதுகாப்புப் பணியிலிருந்து அப்புறப்படுத்தி, ஆர்.எஸ்.புரத்தில் போக்குவரத்துக் கண்காணிப்புப் பணிக்கு அனுப்பியிருப்பதாக ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் பிசுபிசுத்தது பொறுக்காமல், எதிர்க்கட்சியினர் பல திடுக்கிடும் வதந்திகளைப் பரப்பி பொதுமக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருவதாக, கு.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி டாஸ்மாக்கில் ஆம்லேட் மாஸ்டராகப் பணிபுரிபவர் பேக்பைப்பர் பெரியகண்ணு! இன்று இவரது வீட்டிலிருந்து பெருத்த உரத்த அழுகுரல் கேட்கவும், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை அரசு போலீஸ் உதவியோடு முறியடித்ததால், மனமுடைந்த பெரியகண்ணு தற்கொலை செய்து கொண்டதாக ஊருக்குள்ளே வதந்தி பரவியது. விரைந்து வந்த அரசு அதிகாரிகள் விசாரித்ததில் நண்பகலில் ஒளிபரப்பாகும் நகைச்சுவைத் தொடரைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற அபாயகரமான வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தழுதழுத்த குரலில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கு.மு.கவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் விஷமிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோல்கொண்டா கோவிந்தசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இன்று வழக்கத்தை விடவும் அதிகமாகவே டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் நடந்ததாகவும், பெரும்பாலான போலீஸ்காரர்கள் மதுக்கடைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."

"குடிமக்களின் நலத்தினைக் கருதி டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபட வைத்த தமிழக முதல்வருக்கு ’குடிகாத்த கோமகன்’ என்ற விருதை காந்தி ஜெயந்தி அன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் கோல்கொண்டா கோவிந்தசாமி தெரிவித்தார்."

கு.மு.கவின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க மயிலாப்பூரிலிருந்து பாதயாத்திரையாக கோட்டைக்கு செல்லவிருப்பதாகவும், ஊர்வலம் முடியும்வரையிலும் தொண்டர்கள் வழியிலிருக்கிற டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்றமுறை இது போல ஒரு பாதயாத்திரையை மந்தவெளியில் தொடங்கி அது மயிலாப்பூரிலேயே பாதியாத்திரையோடு முடிந்தது குறிப்பிடத்தக்கது.

"இனிமேல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், அவர்களை விடவும் திறமையாக காவல்துறையினர் செயல்படுவார்கள் என்பதற்கு இன்றைய தினம் ஒரு சான்று,’ என்று பெருமிதத்தோடு குறிப்பிட்ட கு.மு.க.இணைச்செயலாளர் நெப்போலியன் நெடுவளவன், "இது போன்ற போராட்ட மிரட்டல்களுக்கு அஞ்சி, பெட்டி பெட்டியாக கு.மு.க.தொண்டர்கள் பாட்டில்களை வாங்குவது கழகத்தின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது,’ என்றும் குறிப்பிட்டார்.

கடைசியாகக் கிடைத்த தகவல்: "டாஸ்மாக் ஸ்டிரைக்கின்போது காவல்துறை ஒத்துழைத்தது போல், இனிவரும் காலங்களில் காவல்துறை வேலைநிறுத்தம் செய்தால், எல்லாக் காவல்நிலையங்களிலும் கு.மு.க.தொண்டர்கள் பணியாற்றுவார்கள்" என்று கு.மு.கவின் தலைமைச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Tuesday, August 10, 2010

கீதாஞ்சலி (ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி)


( இது தமிழ் ஒளி கூகிள் குழுமத்தின் ஆகஸ்ட் மாத மின்னிதழில் பிரசுரிக்கப்பட்டது)

விழித்துக்கொள் தேசமே!

உள்ளமதனில் அச்சமென்னும்
உணர்விலாத தெவ்விடம்
கொள்கைகொண்டு தலைநிமிர்ந்த
கூட்டம்வாழ்வ தெவ்விடம்
கள்வர்போலே சிறையினுள்ளே
கால்விலங்குமின்றியே
வெள்ளம்போலே விரையுஞானம்
வேகங்கொள்வ தெவ்விடம்

சொந்தவீடு ஒன்றுமட்டும்
சொர்க்கமென்று எண்ணிடா
எந்தைதாயை ஈன்றநாட்டில்
இயைந்திருப்ப தெவ்விடம்
நொந்துபோக வைத்திருக்கும்
நோயையொத்த பிரிவினை
வந்திடாது மனிதர்கூடி
வாழ்ந்திருப்ப தெவ்விடம்

வாக்கிலென்றும் மெய்யறங்கள்
வாழ்ந்திருப்ப தெவ்விடம்
ஊக்கமுற்று உண்மைமாந்தர்
உயருகின்ற தெவ்விடம்
தேக்கமற்றுத் தெளியுமுண்மை
தேடுவோர்கள் எவ்விடம்
மாக்களேத்தும் பழமைநீங்கி
மனிதங்காண்ப தெவ்விடம்

விண்ணளாவும் பார்வைகொண்டு
விரியுமுள்ளமொன்று கொண்டு
எண்ணுமோர் இலக்கிலெம்மை
எவ்விடம் இருத்தினாலும்
கண்ணெனுஞ் சுதந்திரத்தைக்
கண்டுயாம் விழித்தெழுந்து
மண்மிசை இருப்பதற்கே
மனமிரங்கி யருளுமையா

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments
by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the
dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening
thought and action-
Into that heaven of freedom, my Father, let my country awake.

Sunday, August 1, 2010

பூர்வஜென்மத்திலே....!

நேற்று எழுதிய இடுகையில் மருந்துக்குக் கூட நடிக,நடிகையரைப் பற்றி எழுதவில்லை என்று கண்டனம் தெரிவித்து அடுக்கடுக்காய் பல தனிமடல்கள்; தொலைபேசி அழைப்புக்கள். 'விஜயகாந்த், சரத்குமார், விஜயசாந்தி இவர்களெல்லாம் நடிகர்கள் தானே?’ என்று கேட்டதால் கோபமடைந்த ஒரு நண்பர் ’வேலாயுதம்’ படத்தின் முதல் டிக்கெட்டை எனக்கு அனுப்புவதாக 'பகீர்’ மிரட்டல் விடுத்துள்ளார். 'இது என்ன சோதனை,’ என்று நொந்து கொண்டிருந்தபோதுதான், நான் தயாரித்த ஒரு ரிப்போர்ட்டைப் படித்துவிட்டு எனது மேலாளர் "எல்லாம் நான் போன ஜென்மத்தில் செய்த பாவம்," என்று தலையிலடித்துக் கொள்வதைப் பார்த்தேன்.

ஒரு வேளை நானும் போன பிறவியில் செய்த பாவத்தின் பலனாகத் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ? போன பிறவியில் நான் என்னவாக இருந்திருப்பேன்? எங்கு இருந்திருப்பேன்? என்ன செய்து கொண்டிருந்தேன் என்று ஆழமாக சிந்தித்தபோது (சிரிக்காதீங்க..ப்ளீஸ்! சீரியசா சொல்லிட்டிருக்கேன்!) எனது பூர்வஜன்மத்தின் சரித்திரம் எனக்குப் புலப்பட்டது. அதை உங்களுக்கு அப்படியே தந்திருக்கிறேன்.

எனது இதற்கு முந்தைய பிறவி 16-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது. (அப்பவும் இங்கே தானா? ஒரு மாறுதலுக்காக சுவிட்சர்லாந்திலே பிறந்து தொலைத்திருக்கக் கூடாதா?)

அந்தப் பிறவியில் நான் சாலைகளையும், பாலங்களையும், துறைமுகங்களையும் கட்டியிருந்திருக்கிறேன். (அது போன பிறவியில்! இந்த பிறவியில் என்னால் ஒழுங்கா வட்டி கூட கட்ட முடியவில்லையே!)

மிகவும் அபாரமான உற்சாகமும், திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வையிடுதலில் மிகுந்த திறமையும் கொண்டிருந்திருக்கிறேன். (அதையெல்லாம் இந்தப் பிறவியில் எந்தக் காக்காய் கொத்திக் கொண்டு போனதோ? யாருய்யா ஆட்டையைப் போட்டது?)

நான் ஒரு குப்பையள்ளுகிறவனாக இருந்திருந்தாலும், தலைசிறந்த குப்பையள்ளுகிறவனாக இருந்திருக்கிறேன். (இந்தக் குப்பையள்ளுற மேட்டர் மட்டும் தான் இரண்டு பிறவிகளுக்கும் இருக்கிற ஒற்றுமை!)

போன பிறவியிலிருந்து இந்தப் பிறவிக்கு நான் கொண்டுவந்த பாடம் என்ன? இதையும் எனது ஞானதிருஷ்டி சொன்னது. அதாவது......

"பிறமனிதர்களைப் படித்து, அவர்களைப் புரிந்து கொள்ள முயல்வேன்; வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியான மனதுடன் எதிர்கொள்வேன்: மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளித்து அவர்களுக்கு உதவுவேன்."

எங்கேயோ உதைக்குதே! ஒருவேளை ’சங்கரா நேத்ராலயா’ போயி என்னோட ஞானதிருஷ்டியையும் செக் பண்ணி கண்ணாடி மாட்டணுமோன்னு தோணிச்சு! சரி, நம்மளை மாதிரி நொந்தவங்களோட பூர்வஜென்ம வரலாற்றையும் பார்ப்போமே! ஒத்துவருதுன்னா, நம்முளுதும் சரியாத் தானிருக்குமுன்னு யாரெல்லாம் நொந்து போயிருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்து, அவங்கவங்க பூர்வஜென்மவரலாற்றையும் சுருக்கமாக் கொடுத்திருக்கேன் பாருங்க!

இப்போதைக்கு ரொம்ப நொந்து போயிருக்கிறவங்க, நம்ம நமீதா தான்! ’இளைஞன்’-ன்னு ஒரு படத்துலே அம்மணி வில்லியா நடிக்கிறாங்களாம்; "வில்லியாக நடிப்பதால் ரசிகர்கள் யாரும் என்னை வெறுத்திடாதீங்க."-ன்னு அறிக்கை விட்டிருக்காங்க! இதைக் கேட்டதுலேருந்து ஆபீஸிலே தூக்கம் வரமாட்டேங்குது! பாதி ராத்திரியிலே ஃபுல் ப்ளேட் பிரியாணி இறங்க மாட்டேங்குது! ஒரு ஆறடி பெண்மணியே அசந்து போயிட்டாங்களேன்னு அவங்களோட பூர்வஜன்ம வரலாற்றை என்னோட ஞானதிருஷ்டியாலே கண்டுபிடிச்சேன். அது என்னான்னா.....

"நமீதா இதற்கு முந்தைய பிறவியில் பெண்ணாக இருந்திருக்கிறார். (அப்படீன்னா இந்தப் பிறவியிலே என்னான்னு நக்கல் பண்ணாதீங்க! இதற்கு முந்தைய பிறவியிலும் பெண்ணாகத் தான் இருந்திருக்கிறார். போதுமா?)

அவர் கி.பி.450-ல் வட ஆப்பிரிக்காவில் பிறந்திருக்கிறார். (மறுபடியும் சொல்றேன். சீரியசாப் பேசிட்டிருக்கும்போது சிரிக்கப்படாது.) அனேகமாக அவர் ஒரு நூலகக்காப்பாளராகவோ, மதபோதகராகவோ அல்லது பண்டைய பொருட்களின் பாதுகாவலராகவோ இருந்திருக்கலாம். (ஓஹோ! அதனால் தான் இந்தப் பிறவியில் அவருக்குக் கோவில் எழுப்ப முயன்றார்கள் போலிருக்கிறது!)

முந்தைய பிறவியில் அவர் உண்மையையும் ஞானத்தையும் தேடியிருக்கிறார். (இந்தப் பிறவியிலும் அவங்க ஒரு துறவி மாதிரித்தானே?) தனது வருங்கால வாழ்க்கை குறித்து அறிந்திருக்கிறார். (அதுனாலே தான் இந்தப் பிறவியிலும் குஜராத்துலேருந்து தமிழ்நாட்டுலே வந்து குதிச்சிட்டாங்களோ?) போனபிறவியில் மற்றவர்கள் இவரைப் பின்பற்றியிருக்கிறார்கள். (ஆப்பிரிக்காவிலே தானே? இருக்கும் இருக்கும்! ஃபோட்டோவெல்லாம் பார்க்கத்தானே செய்யுறோம்?)

இந்தப் பிறவியில் மிகுந்த கருணை உள்ளவங்களா இருப்பாங்களாம். ஓரளவு சரியாத்தானிருக்கு! அவங்க வர்ற டி.வி.அப்படி...!!

பி.கு: நமீதா வில்லியா நடிக்கிற "இளைஞன்" முதல்வர் கலைஞர் வசனம் எழுதுற படமாச்சே! அப்படீன்னா, இந்தப் படத்தோட முதல் காட்சியை அவர் பக்கத்துலே உட்கார்ந்து பார்க்கப்போற கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இப்பவே நொந்து போயிருப்பாங்களே! அவங்க பூர்வஜென்ம வரலாற்றைப் போடலியான்னெல்லாம் கேட்கப்படாது; சொல்லிப்புட்டேன்.

சரி, அடுத்ததா நொந்து போயிருக்கிறவரு நம்ம இளையதளபதி விஜய்! (நம்ம வேதனை இப்போவாச்சியும் புரிஞ்சா சரிதான்!). ஒரு படத்துலே அசின் கூட நடிக்கிறாருன்னுறதுனாலே..................அட இருங்கப்பா, அசின்னு சொன்னதுமே ’சேட்டைக்காரனைப் புறக்கணிப்போம்,’னு கோஷம் போடாதீங்க! சொல்ல வர்ற விஷயத்தை முழுசாக் கேட்டுட்டு அப்புறமா கொடிபிடியுங்க! விஜயோட அடுத்த படத்துலே அவருக்கு ஜோடி அசினாம்.அதுனாலே, "அசினால் விஜய் படத்துக்கும் தலைவலி!"

இப்போ இளையதளபதி விஜய் பூர்வஜென்ம வரலாற்றைப் பார்க்கலாமா?

’நம்ம விஜய் இதற்கு முந்திய பிறவியில் ஒரு பெண்ணாக இருந்தாராம். (இக்கி..இக்கி..இக்கி!) கி.பி.1825-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் (இவரும் ஆப்பிரிக்காவா?) ஒரு நாட்டுவைத்தியராகவோ, அறுவை சிகிச்சை நிபுணராகவோ, மூலிகை வைத்தியராகவோ இருந்தாராம்."

இவருடைய அண்மைக்காலப் படங்களைப் பார்ப்பவர்களின் சந்தேகம் இப்போது உண்மையிலேயே ஊர்ஜிதம் ஆகிவிட்டது. பூர்வஜென்மத்தில் 'அறுவை’ சிகிச்சை நிபுணராக இருந்தவரின் படங்களென்றால் கத்தி வைக்கத்தானே செய்வார்கள்? - அது போகட்டும்! முற்பிறவியில் நமது விஜய் எப்படிப்பட்டவராக இருந்திருக்கிறார் என்று பார்க்கலாமா?

’சிக்கலான கட்டங்களில் முடிவுகளை மிக கவனமாக எடுப்பவராம். அதிரடி ஆசாமியாம். மிகுந்த மன உறுதியும் சுய கட்டுப்பாடும் கொண்டவராம். இப்படிப் பட்ட மனிதர்களை மற்றவர்களுக்குப் பிடிக்கும் என்றாலும் ரொம்பவும் விரும்பவும் மாட்டார்களாம்’

கரெக்ட்! சுறா க்ளைமேக்ஸ் ஒண்ணு போதாதா இதெல்லாம் சரியென்று சொல்வதற்கு? போகட்டும். முற்பிறவியிலிருந்து இப்பிறவிக்கு விஜய் கொண்டுவந்தது என்னவோ?

மிக மிக சாதாரணமான சூழலிலும் இவரிடம் ஏதோ ஜாலம் இருக்குமாம். (இத்தனை மொக்கைப் படங்களுக்கு அப்புறமும் பில்ட்-அப்பு தூக்கலா இருக்கிறதைச் சொல்லுறாங்களோ?) இந்த ஜாலத்தை இவர் அறிந்து கொள்வதோடு, அதை மற்றவர்கள் பார்க்கவும் உதவி செய்ய வேண்டுமாம். (இதற்காகத் தான் கொஞ்ச நாளா அரசியல் பேசிட்டிருந்திருக்காரு, நாம சரியாப் புரிஞ்சுக்காம போட்டு மொத்து மொத்துன்னு மொத்தியிருக்கோம். சே!)

ஆக, நமீதா, விஜய் இரண்டு பேருடைய பூர்வஜென்ம வரலாற்றுக்கும், இந்தப் பிறவியோட தொடர்பும் சரியா ஒத்து வருதே! எதுக்கும் இன்னொரு வரலாற்றைப் பார்த்திருவோமா? யார் தலையை உருட்டலாம்?

ஏற்கனவே நொந்து போனவங்க ரெண்டு பேரோட வரலாற்றைப் பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக இனிவரும் நாட்களில் நொந்து நூடுல்ஸாகப் போறவர் ஒருத்தரோட பூர்வஜென்ம வரலாற்றைப் பார்க்கலாமா?

அது யார்? நம்ம கார்த்தி தான்! 'பையா’ சக்கை போடு போட்டுது! 'நான் மகான் அல்ல’ வரப்போகுது! அவரு ஏன் நொந்து நூடுல்ஸ் ஆகணுமுன்னு கேட்கறீங்களா? உங்களுக்கு விஷயமே தெரியாதா? இதைப் படியுங்க!
பெருகி வரும் வதந்திகள்-கார்த்திக்குப் பெண் தேடும் தாயார்

என்னாதிது, கல்யாணம் பண்ணிக்கிட்டா நொந்து நூடுல்ஸ் ஆயிருவாங்கன்னு எப்படிச் சொல்லலாமுன்னு என் கிட்டே சண்டைக்கு வர நினைக்கிறவங்களுக்கு, குறிப்பா பெண்களுக்கு என்னோட வேண்டுகோள்! செய்தியை முழுசா படியுங்க!

அதாவது, நம்ம கார்த்தியைப் பத்தி நிறைய வதந்திகள் வர்றதுனாலே அவங்க வீட்டுலே மும்முரமா பொண்ணு பார்த்திட்டிருக்காங்களாம். சரி, பார்க்கட்டும்; தப்பில்லை! கார்த்திக்காக அவங்க அம்மா தமிழ்நாடு முழுக்க பெண் தேடிட்டிருக்காங்களாம். நியாயம் தான்; உங்களுக்கும் தெரிஞ்ச நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க; நல்லது தான்! இதுவரைக்கும் ஓ.கே! இதுக்கப்புறம் கார்த்தி விட்டிருக்காரு பாரு ஒரு ஸ்டேட்மெண்ட்!

"வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன்." - இதற்கு என்ன பொருள்?

வேலைக்குப் போகிற பெண் வீட்டுக்கு அடங்கி இருக்க மாட்டாளா? அல்லது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டாளா? ஆணும் பெண்ணும் சமம் என்று அகிலமெங்கும் அவரவர் அறைகூவல் விடுத்துக்கொண்டிருக்கையில், கார்த்தி இப்படிப் பேசியிருப்பதனைக் கண்டிக்க தமிழ் கூறும் நல்லுலகிலுள்ள பெண்கள் எவரும் இதுவரையில் முன்வராதது ஏன்?

வானகமே! வையகமே!

ஆராய்ச்சிமணி கட்டி ஆண்டுவந்த தென்னகமே!புறாவுக்காகத் தன் சதையையும், முல்லைக்குத் தேரையும், மூலைக்கு மூலை டாஸ்மாக்கும் தந்த தமிழகமே!

இஃதென்ன கொடுமை? இந்த ஆணாதிக்கத்தின் கோரத்தாண்டவத்தை இன்றளவிலும் எந்தப் பெண்ணியப் போராளிகளும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லையே, அந்தோ! (சே! எவ்வளவு நல்லா சாவி கொடுக்கிறேன்!)

ஹலோ, இருங்க! இருந்து கார்த்தியோட பூர்வஜென்ம வரலாற்றைக் கேட்டுட்டுப் போங்க! என்னது, விட்டா வேறே யாராவது பதிவு போட்டிருவாங்களா? அப்ப சரி, போய் இடுகை போட்டுட்டு வாங்க! அப்பாலே கார்த்தியோட பூர்வஜென்ம வரலாற்றை சொல்லுறேன்.

கவனம்! என்னோட ஞானதிருஷ்டி ரகசியத்தைச் சொல்லப்போறேன்!

கார்த்தி மட்டுமில்லே; இன்னும் யார் யாரோட பூர்வஜென்ம வரலாறு தெரியணுமின்னாலும் 'இங்கே’ போங்க! அவங்களோட பிறந்தநாள், மாதம், வருடம் மூன்றையும் நிரப்பி ஒரு சொடுக்கு சொடுக்கினீங்கன்னா, புட்டுப் புட்டு வைக்கிறாங்க! :-)

(அப்புறம், சும்மா பொழுது போகலியேன்னு உசுப்பி விட்டேனுங்க! பாவம் கார்த்தி, நல்ல புள்ளை! நல்லா நடிக்கிறாரு! ஒண்ணும் பண்ணிராதீங்க....!)