Sunday, October 20, 2013

மதுரைக்கு வந்த சோதனை!இதனால் சகலருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்,

      வருகிற 22-10-2013 முதல் அடியேன் சில பல நாட்கள், ஏன், ஒரு சில மாதங்கள் கூட கூடல்நகரில் வசிக்க வேண்டியிருப்பதால், மதுரைவாசிகள் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

      மதுரை மாநகரில் இருந்தவாறு இடுகைகளை எழுதுகிற வசதியோ வாய்ப்போ கிடைக்குமா கிடைக்காதா என்று தற்போது தெரியாததால் (அட, இதுக்கெல்லாமா கை தட்டுவாங்க?), அவ்வப்போது சென்னைக்கு வரும்போதெல்லாம் கிடைக்கிற நேரத்தில் எதையேனும் எழுதி, எனது புஜபலபராக்கிரமத்தை நிலைநாட்டுவேன் என்று எனது ஆரவல்லியின் மீது (எனது புராதன கணினி!) ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்.

நன்றி!

அட, அதுக்குள்ளே சென்னைவாசிகள் பட்டாசு வாங்கக் கிளம்பிட்டாங்களா?

Saturday, October 12, 2013

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

முற்குறிப்பு:  வலைத்திரட்டி ஓட்டுப்பட்டைகளை நீக்க, கணினி அஞ்ஞானியான அடியேன் எதையோ செய்யப்போக, எனது வலைப்பக்கத்தையே காக்காய் கொத்திக் கொண்டு போய்விட்டது. உங்களது துரதிருஷ்டம், இன்று ஒருவழியாய் மீட்டுவிட்டேன். இரண்டு நாட்களாகத் தப்பித்த பாக்கியசாலிகளுக்கு எனது பாராட்டுக்கள்!


சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

மிக்ஸி கிரைண்டரும் தையல் மிஷின்களும்
விலையின்றித் தருவார்- பஸ்
நிற்கும் இடத்தில் பாத்ரூம்போக
நிதமும் காசுகள் பெறுவார்
ரோட்டோரத்தில் நிற்குது கூட்டம்
பார்த்தால் முகம் சுளிக்கும்-நாம்
இதற்கும்கூட லஞ்சம் தரணுமா?
கேட்டால் ஊர்சிரிக்கும்

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

பயணம்கூட நம்தமிழ்நாட்டில்
பாவம்தானடா- செய்யும்
பாவம்தானடா
விடுதியென்ற பேரினில் எங்கும்
கூவம்தானடா- நாறும்
கூவம்தானடா
நடத்துனர்க்கும் ஓட்டுனருக்கும்
ஓசிதானடா-எல்லாம்
ஓசிதானடா
நம்மை மட்டும் இம்சை செய்வது
ஈசிதானடா-ரொம்ப
ஈசிதானடா

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

கொண்டையிலே பிச்சிப்பூவாம்
உள்ளேபார் ஈறும்பேனும்
ஓடுதுபார் பாலும்தேனும் என்று சொல்வாங்க- நம்
ஓட்டுக்காய் இலவசத்தைத் தந்து வெல்வாங்க
துட்டுக்கேட்கும் கழிப்பறையும் தூய்மையற்ற மோட்டல்களும்
தட்டித்தான் கேட்போரின்றி எங்கும் இருக்கு-வீண்
தம்பட்டத்தில் விழுந்தேமகிழும் ஆட்சியிருக்கு!

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

வேண்டுகோள்: தயவுசெய்து யாரும் திரட்டிகளில் சேர்க்கவோ, ஓட்டு அளிக்கவோ வேண்டாம். விரைவில் அந்த நிரலிகளை அகற்றப்போகிறேன். நன்றி!

Saturday, October 5, 2013

16 வயதினிலே- என்றும் இனிக்கும்!
கன்னியாகுமரி கடற்கரையில் சிப்பிகள் விற்கிற (கோழை) கதாநாயகனும் கதாநாயகியும்; நாயகியை மோப்பம் பிடித்துத் துரத்துகிற பீடி குடிக்கிற வில்லன். ஆரம்பத்தில் நாயகனை வெறுத்து ஒதுக்கி, பின்னர் அவனை விரும்புகிற நாயகி ஒரு கட்டத்தில் திருமணத்துக்குச் சம்மதிக்க, இதையறிந்த வில்லன் நாயகியை பலாத்காரமாக அடைய முயல, அங்கு வருகிற கோழை கதாநாயகன், காதலியின் கற்பைக் காப்பாற்றுவதற்காக, அருகிலிருக்கும் ஒரு பெரிய கல்லை எடுத்து வில்லனின் தலையில் போட்டுக் கொலைசெய்கிறான். பிறகு, ஜெயிலுக்குப் போன நாயகன் திரும்பி வருவதற்காக, கன்னியாகுமரி கடற்கரையில் சிப்பிகளை விற்பனை செய்தவாறு நாயகி காத்திருக்கிறாள். இதுதான் கதை!

      ஹலோ! 16 வயதினிலேஎன்று தலைப்புப்போட்டுவிட்டு, கன்னியாகுமரி, கடற்கரை, சிப்பி வியாபாரம் என்று மூடிதிருகிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்கிறீர்களா? என்ன செய்ய, கே.எஸ்.சேதுமாதவன் இயக்கி, கமல்ஹாசன் மற்றும் ரீடா பாதுரி நடித்து வெளியான ‘கன்னியாகுமரிஎன்ற மலையாளப்படத்தின் கதையைச் சொன்னேன் சாமி! (1974-ம் ஆண்டில் ஏதோ ஒரு ‘பிலிமாலயாமாத இதழில் படங்களுடன் கதையும் போட்டிருந்தார்கள்!) இந்தப் படம் வெளியானது 1974-ல்; 16 வயதினிலேவெளியானது 1977-ல்! அனேகமாக கன்னியாகுமரிபடம் மலையாளத்தில் பணால் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆகையால், அதிகம் மெனக்கெடாமல் கதையை நைஸாக லவட்டிக்கொண்டு வந்து சிக்கனமாக இட்லி உப்புமாவாகக் கிண்டி விட்டார்கள். சினிமாவில் இதெல்லாம் சகஜம் அண்ணே!

      பரவாயில்லை! இந்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி அசடுவழிந்ததும், அமிதாப் பச்சன், “ரஜினிகாந்த், கோவிந்தா நடித்ததும், முகுல் ஆனந்த் இயக்கத்தில் உருவானதுமான ‘ஹம்படத்தின் கதையை உட்டாலக்கிடி செய்து ‘பாட்ஷாஎன்று எடுத்து வெளியிட்டு சில்லறை பார்க்கவில்லையா? அப்புறம், ‘சந்திரமுகிபடத்தின் கதைக்காக நடந்த குடுமிப்பிடி சண்டையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா? மற்ற விஷயத்தில் எப்படியோ, இதில் உலக நாயகனுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறதுங்கோ! நல்ல விஷயம்!

      சரத் சந்திரரின் ‘தேவதாஸ்தெலுங்கிலும், தமிழிலும் வரவில்லையா? அதே சாயலில் எத்தனை கதைகள் வெளிவந்திருக்கின்றன? கன்னியாகுமரியும், ஹம் படமும் சாதிக்க முடியாததை, 16 வயதினிலேயும் பாட்ஷாவும் சாதித்தது என்றால், அதில் இருந்த முனைப்புகளைப் பாராட்டியே தீர வேண்டும்.
      ’16 வயதினிலே சினிமா நூற்றாண்டில் தமிழின் சிறந்த பத்துப்படங்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், எனது பட்டியலில் அவசியம் இடம்பெறும். காரணம், தமிழ் சினிமாவை அந்தப் படம் புரட்டிப்போட்டதுபோல வேறெந்தப் படமும் செய்ததில்லை. நடிப்பு, இசை, ஓளிப்பதிவு, இயக்கம், வசனம் என்று எந்த அம்சத்தை அளவுகோலாக வைத்துப் பார்த்தாலும் அது ஒரு மைல்கல்லாக அமைந்த படம்.

      பெல்பாட்டமும், தொங்குமீசையுமாக டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த ‘காதல் இளவரசன்கமலை, கோவணத்தோடு வருகிற சப்பாணியாகக் காட்டுவதெல்லாம் சாமானியமான இயக்குனர்களால் ஆகாத காரியம். இதையும் செய்து பார்த்துவிடுவோம்என்று இமேஜ் பற்றியெல்லாம் யோசிக்காமல், அப்படி நடித்துக் காட்டிய கமல் ஒருவிதத்தில் தமிழ் சினிமாவில் நாயகன் என்பவனுக்கு வரையறுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளையெல்லாம் தகர்த்து எறிந்திருந்தார். இவனை எங்கோ பார்த்ததுபோலிருக்கிறதே என்று இன்றைய படங்களில் சில ஹீரோக்களைப் பார்க்கும்போது நமக்குத் தென்படுகிற அந்தப் பரிச்சயத்தின் முதல் புள்ளி 16 வயதினிலேபடத்தில்தான் வைக்கப்பட்டது.

      1975-ல் வெளியாகி இந்தியாவை ஒரு கலக்குக் கலக்கிய ‘ஷோலேபடம் எப்படி, இந்தித் திரைப்படங்களின் உருவாக்கத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அத்தகைய தாக்கத்தை 16 வயதினிலேதமிழில் ஏற்படுத்தியது என்று உறுதியாகச் சொல்லலாம். ஆகவே, குறைகள் அதிகமில்லாத தமிழ்ப்படங்களுக்கு ஒரு முன்னோடியாக 16 வயதினிலேஇருந்தது என்பதையும், அதிநாயகர்களை ஆராதித்துக் கொண்டிருந்த திரையுலகத்தில் சாமானியர்களும் தங்கள் வரவை அறிவிக்க வழிவகுத்தது என்பதையும் இன்றைய சினிமாவின் அபிமானிகள் நன்றியோடு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

      இப்போதெல்லாம் வருகிற பெரும்பாலான சினிமாக்களில் நம்மால் அவசியம் காணமுடிகிற ஒரு சொதப்பல் அம்சம் பாத்திரப்படைப்பு! விஜய், அஜித், சூர்யா போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்களில் கூட காணக்கிடைக்கிற இந்தக் குறைபாடுக்கு ஒரு உதாரணம்; நாயகன் அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து எத்தனைபேர் வந்தாலும் அடித்துத் துவைத்து விடுவான்; ஆனால், பரிதாபத்துக்குரிய காமெடியனை மட்டும் எப்போதும் அடியாட்களிடம் மாட்டிவைத்துவிட்டு செமத்தியாக மொத்து வாங்க விட்டு விடுவான். ஒரு கதாபாத்திரம் என்பது, இயல்பான முரண்பாடுகள் தவிர்த்து, கதையில் எப்போதும் ஒரே மாதிரியான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்-என்ற அடிப்படையிலேயே கோட்டை விடுவதை நாம் பல படங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 16 வயதினிலேபடத்தைப் பற்றி யோசித்தால், சட்டென்று முதலில் நினைவுக்கு வருவது அதன் துல்லியமான பாத்திரப்படைப்புகள் தான்!

       நாயகன், நாயகி, வில்லன், நாயகியின் அம்மா, அந்த டாக்டர் என்று ஒவ்வொரு பாத்திரமும் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை முதலிலேயே படுலாவகமாகக் காட்டியதோடு, படம் முழுக்க அவரவர் அந்தந்த இயல்புகளுடனேயே இருப்பதாகவே சித்தரித்திருப்பார்கள். அதற்கு முன்பெல்லாம் சில வித்தியாசமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது, ஒரு ஃப்ரேமை ஃபீரீஸ் செய்து, வாய்ஸ் ஓவரில் கதாகாலட்சேபம் நடத்துவார்கள். விஷுவலாக பார்வையாளர்களை ஒவ்வொரு பாத்திரம் குறித்தும் உஷார்ப்படுத்துகிற உத்தி நிச்சயம் 16 வயதினிலேபடத்தில்தான் குறிப்பிடத்தக்க விதத்தில் கையாளப்பட்டது. கிராமத்துக்கு வருகிற டாக்டர் பாராட்டுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நாயகியைப் பார்த்துத் தடுமாறுகிற காட்சி ஒரு சின்ன உதாரணம்.

      தமிழ் சினிமாவில் பாத்திரங்களின் பெயர்களை வைத்தே அவர்களது குணாதிசயங்களைக் கணிக்க முடிந்த காலமும் ஒன்றிருந்தது. நாகலிங்கம் என்று பெயர் வைத்திருந்தால், அவர் பெரும்பாலும் மீசைவைத்துக் கொண்டு, அடியாட்களை வைத்து கிராமத்துப் பெண்களைக் கடத்திச் சென்று துகிலுரிபவராக இருப்பார். அதுவே தர்மலிங்கமாக இருந்தால் பரோபகாரியாக, ஊருக்காக பனியன், அண்டிராயரைக் கூட தியாகம் செய்யத் தயாரானவராக இருப்பார். கலைஞர் வசனம் எழுதிய படங்களில், வில்லனுக்கு அவர் வைக்கிற பெயர்களைக் கேட்டாலே மலேரியா வந்துவிடும். இதையெல்லாம் தகர்த்துக்காட்டிய படம் 16 வயதினிலே’. சப்பாணி, பரட்டை, மயிலு, குருவம்மா என்று டைட்டிலிலேயே போட்டுக்காட்டி ‘ரொம்ப ஓவரா எதிர்பார்க்காதீங்க கண்ணுகளாஎன்று உஷார்ப்படுத்திய படம். ‘இனிமே உன்னை யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறைஞ்சிடுஎன்று மயிலு சொன்னாலும், படம் பார்த்து இத்தனை வருடங்களாகியும், நம் மனதில் கோபாலகிருஷ்ணன் பதியவில்லை என்பதும், சப்பாணிதான் உலாத்துகிறார் என்பதும்தான் பாரதிராஜாவின் வெற்றி அல்லது பா.ராஜா & கமலின் வெற்றி!

      காலாபத்தர்’, ‘மேரே அப்னேபோன்ற படங்களில் சத்ருகன் சின்ஹா அறிமுகமாகும்போது அரங்கம் அதிரும் கரவொலியைக் கேட்டு அதிசயித்ததுண்டு. தமிழிலும் ‘ஆயிரத்தில் ஒருவன்நம்பியாரும், ‘ரிக்‌ஷாக்காரன்அசோகனும், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்வீரப்பாவும் அறிமுகமாகும் காட்சியிலேயே அப்ளாஸை அள்ளுவார்கள். ஆனால், ஒரு படத்தின் நட்சத்திர அந்தஸ்தை அதிகரித்த வில்லன் என்றால், என்னைப் பொறுத்தவரையில், தமிழில் ரஜினி அடைந்த வெற்றிதான் குறிப்பிடத்தக்கது! அதன்பிறகு, சத்யராஜ் கொஞ்சம் கிட்டத்தில் வந்தார் என்றாலும், ரஜினியின் வில்லத்தனம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் என்பது, மறுக்க முரண்டு பிடித்தாலும், மறுக்க முடியாத உண்மை.

      ஸ்ரீதேவியைப் பற்றி என்ன சொல்ல? ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு பெருமூச்சுகளாக இடுகை போட்டாயிற்று! ’16 வயதினிலேபடத்துக்குப் பிறகு, எந்தப் படத்தில் யார் மஞ்சள் தாவணி கட்டிக்கொண்டு வந்தாலும், ‘ஹை மயிலுஎன்று சொல்லுமளவுக்கு அந்தப் பாத்திரத்தை உயிர்ப்பித்தவர்! கமல், ரஜினி இருவர் இருக்கிற படத்தில், ஒரு கதாநாயகி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார் என்பதே போதுமே! சிவாஜியைப் போலவே, ஸ்ரீதேவியும் பாத்திரத்தின் தன்மை சற்று மாறும்போது, குரலைச் சற்றே மாற்றுவதில் கெட்டிக்காரர்! ’16 வயதினிலேபடத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் இந்த வித்தியாசத்தை கவனிக்க முடியும். ஆரம்பக்காட்சிகளில், கமலை அவர் கலாய்க்கும்போதெல்லாம் நமக்கு ஏற்படுகிற எரிச்சலையும் மீறி, மயிலுவைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும். இடைவேளைக்குப் பிறகு, பாவாடை தாவணியிலிருந்து கண்டாங்கிக்கு அவர் மாறும்போது, திடீரென்று அந்தப் பாத்திரத்துக்கு சற்று கண்ணியம் கூடியதுபோல இருக்கும். மலைக்கோவில் படிக்கட்டில், ‘தாலி வாங்கிட்டு வாஎன்று சொல்லும்போது, சப்பாணிக்கு ஏற்படுகிற அதே மகிழ்ச்சி நமக்கும் ஏற்படும். ’16 வயதினிலேபடத்தின் ஆணிவேர் என்றால், மயிலுதான்; ஸ்ரீதேவிதான்! Pivotal character என்பதற்கு அந்தக் கதாபாத்திரம் ஒரு சிறப்பான உதாரணம். (இந்தக் கதாபாத்திரத்தில் ஒரு நெருடலும் உண்டு; அது பின்னால்!)

      ஆத்தா!வாக வந்த காந்திமதி! இந்த எளவெடுத்த கோழி எங்கடா இருந்திச்சு?என்று பதைபதைப்போடு கேட்கிற காட்சியிலும் ‘பக்கென்று சிரிக்க வைத்தார். ‘நீ வாடா என் ஆசை மருமகனே!என்று கமலின் முதுகில் ஓங்கி அறைகிற காட்சியாக இருக்கட்டும்; ‘எங்க இருந்து பார்த்தாலும் ஆடறபடம்தான் ஆடும்என்று ஸ்ரீதேவியிடம் எகத்தாளமாகச் சொல்கிற காட்சியாக இருக்கட்டும்; அப்படியே ஒரு கிராமத்து ஆத்தாவைக் கண்முன்பு கொண்டுவந்து நிறுத்தினார். இந்தப் பெண்மணியை இதற்கு முன்பு ஏன் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டு விட்டார்கள்?என்று கேட்க வைத்த படம் 16 வயதினிலே’.

      அந்த டாக்டரை எனக்கு ஏனோ பிடிக்கவில்லை! கொஞ்சம் பார்க்கபிளாகவும், சஹிக்கபிளாகவும் ஒரு நடிகர் கிடைக்காமல் போய்விட்டாரா என்ற ஆதங்கம் எனக்கு இன்றளவிலும் இருக்கிறது. அதுவும் மயிலுவுக்கே கண்டதும் காதல் வருகிற அளவுக்கு அந்த டாக்டரிடம் கண்ணாடியைத் தவிர்த்துப்பார்த்தால், பெரிதாக எந்த பர்சனாலிட்டியும் கிடையாது. இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படம் என்பதால், அந்த வயிற்றெரிச்சல் கடைசியில் காணாமல் போய்விட்டது.

      வசனத்திலும் 16 வயதினிலேஒரு முன்னோடிதான்! ‘ஆத்தா ஆடு வளர்த்தா; கோழி வளர்த்தா; நாய் வளர்க்கலேஒரு சோறுபதம்! பரட்டையும் அவரது அடிபொளிகளும் அவ்வப்போது அடிக்கிற சில்லறைக் காமெடிகள் (கவுண்டமணியாக்கும்!) அப்படியே கிராமத்து வாசனையடிக்கிற சங்கதிகள்!

      வைத்தியராக ஓரிரு காட்சிகளில் டைரக்டர் கே.பாக்யராஜ். இப்போது 16 வயதினிலேபடத்தைப் பார்த்தால், ஒரு நட்சத்திர இரவு பார்க்கிற அனுபவம் கிடைத்தாலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

      ’16 வயதினிலேபடம் வெளியாகி, ஒரு காய்ச்சல்போல அது குறித்த செய்திகள் பரவி, மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால், 16 வயதினிலேபடத்தை, முதல் நாள், முதல் காட்சியே பார்க்கத் தூண்டியது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான்! ‘அன்னக்கிளியில் தான் அடைந்த வெற்றி வெறும் ஃப்ளூக் அல்ல என்று இளையராஜா நிரூபித்திருக்கிறார்என்று ஆனந்த விகடன் விமர்சனத்திலேயே பாராட்டுமளவுக்கு!

      கொஞ்சம் சலங்கைபடத்தின் ‘சிங்காரவேலனே தேவாபாடலுக்குப் பிறகு, பாடகி எஸ்.ஜானகிக்கு தமிழில் விருதுகளைக் குவித்த ‘செந்தூரப்பூவேபாடல் ஒன்றுபோதும்! சோளம் வெதக்கையிலே...தான் இளையராஜா முதன்முதலாக சொந்தக்குரலில் பாடிய பாடல். ரீரிகார்டிங்கில் இன்றைய தேதியிலும் ராஜாவை மிஞ்ச ஆளில்லை என்பது எனது கருத்து. 16 வயதினிலே’ படத்தில் அவ்வப்போது பின்னணியில் வயலின் இசையில் ஒலித்த மெட்டையே பின்னாளில் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் ‘வீட்டுக்கொரு மகனைப்போல’ என்ற பாடலுக்கு ராஜா உபயோகப்படுத்தியிருந்தார். (இதே போல ‘பத்ரகாளி’ படத்தின் ரீரிகார்டிங்கையே ‘பெண் ஜென்மம்’ என்ற படத்தில் ‘ஒரு கோவிலில் இரு தீபங்கள்’ என்று பாட்டுக்கு மெட்டாகவும் உபயோகித்திருப்பார். ஜீனியஸ்!)


      மஞ்சக்குளிச்சு அள்ளிமுடிச்சுபாடலும், அதை பாரதிராஜா படமாக்கியிருந்த விதமும் புதுசு கண்ணா புதுசு! அதிலும், இடையில் கமல் தலையில் ஸ்ரீதேவி மஞ்சள் நீரைக் கொட்டுவதுபோல ஒரு குட்டி இடைச்செருகலைக் காட்டி, அதற்கு கமல் தலைசிலுப்புவது போலக் காட்டியிருந்தது அட்டகாசம்! ‘செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்காபாடலைப் பார்க்கும்வரை, க்ரூப் டான்ஸ்கள் என்றால் ஐ.வி.சசியைப் போலப் படமாக்க முடியாது என்று எண்ணியிருந்தேன். பாரதிராஜா அந்தப் பாடலைப் படமாக்கியிருந்த விதம் அபாரம்! ஆனால், 16 வயதினிலேபடத்தைக் குறித்த ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்திய ஒரு பாடல் உண்டென்றால் அது ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டுதான்!

      வொய் திஸ் கொலவெறி,’ ‘எவண்டி உன்னைப் பெத்தான்போன்ற வரிகளுடன் ஒரு பாடல் தொடங்கினால், அது எப்படி கேட்பவர்களின் ஆர்வத்தைக் கிளப்புகிறதோ, அதேபோல ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டுஎன்ற பல்லவியைக் கேட்டதுமே ‘என்னய்யா பாட்டு இது? எந்தப் படம்?என்று கேட்க வைத்து, அந்தப் பாட்டுக்காகவே வேறேந்த எதிர்பார்ப்புமின்றிப் பார்த்த படம் 16 வயதினிலே’. பார்த்தால், அந்தப் படத்தில் ‘ஆட்டுக்குட்டியைத் தவிர ஆச்சரியப்படுத்த பல்வேறு அம்சங்கள் இருந்தன; இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் இருக்கின்றன.

                ’16 வயதினிலேபடத்தின் ஆரம்பக்காட்சி எனக்குப் பிடித்தமான ஒன்றல்ல. ஒரு ரயில் நிலையத்தில், ஒரு பெண் நின்று கொண்டிருந்தாலே, அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்பது பார்வையாளர்களுக்குப் புரியாமலா போய்விடும்? அப்புறம் எதுக்குங்காணும் அந்த ‘யார் வரவையோ ஆவலோடு காத்திருக்கும் கண்கள்...என்று வாய்ஸ் ஓவர் போட்டு, டைரக்டரின் குரலில் ஒரு ரன்னிங் கமெண்டரி? ‘ஒரு பாலசந்தர் போதாதா சாமி?என்ற சலிப்போடுதான் படம் பார்க்கத் தொடங்கினேன். மீதிப்படத்தையும் பார்த்து முடித்ததும் அந்தச் சலிப்பு மாயமானது என்னமோ உண்மைதான்!

      மயிலோட அழகுக்கும் படிப்புக்கும் சீமையிலேருந்து சூட்டுக்கோட்டு போட்ட ஒருத்தன் வருவான்என்று  நாயகி பருவமடைந்ததும் யாரோ சொல்ல, அதைக் கேட்ட மயிலு, கிராமத்துக்கு வந்த டாக்டரைப் பார்த்ததும், இன்ஸ்டண்ட் காதல்வசப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்! (மீண்டும் இந்த இடத்தில் அந்த டாக்டராக நடித்தவர் கொஞ்சம் பர்சனாலிட்டியாக இருந்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது!).

      கமலுக்கு அப்போதெல்லாம் அழுகையே வராது என்பது ஜெகப்பிரசித்தம்! ‘ஏழாம் அறிவுபடத்தில் சுருதிஹாசன் ஒரு காட்சியில் அழுததைப் பார்த்தபோது, 16 வயதினிலேபடத்தின் இறுதிக்காட்சியில் கமல் அழுததையும், தியேட்டரில் பார்வையாளர்கள் ‘ஓவென்று ஊளையிட்டதும் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், ‘சத்யம்’, ‘பட்டாம்பூச்சிபோன்ற படங்களில் தான் அழுது பார்வையாளர்களைச் சிரிக்க வைத்த கமல், இந்தப் படத்தில் கொஞ்சம் அழுகையில் முன்னேற்றம் அடைந்திருந்தார் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். விதிவிலக்காக அமைந்த இந்த ஒரு காட்சி தவிர, சப்பாணியாகக் கலக்கியிருந்தார் கமல் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதே படம் ‘சோல்வா சாவன்என்ற பெயரில் வெளியானபோது, இந்தியின் நிரந்தர இடிச்சபுளி அமோல் பாலேகர் சப்பாணி பாத்திரத்தையே நிர்தாட்சண்யமாகக் கொன்றே போட்டு விட்டார்.

      ’16 வயதினிலேபடத்துக்குப் பிறகு, விளம்பரங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் கூட சப்பாணி, மயிலு உபயோகப்படுத்தப்பட்டார்கள். ‘இந்தக் கடையிலேதான் 100% பட்டுச்சேலை கிடைக்கும்னு மயிலு சொல்லிச்சுஎன்றும் ‘இந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடணும்னு மயிலு சொல்லிச்சுஎன்றும் ஆளாளுக்கு எவ்வளவு வம்புக்கு இழுக்க முடியுமோ வம்புக்கு இழுத்தார்கள்.

      ’16 வயதினிலேபடத்தால் தமிழ் சினிமாவில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, கிராமத்துக்கதை எடுக்கிறேன் பேர்வழி என்று ஆட்டுப்புளுக்கை போல அடுத்தடுத்து கிராமத்துப்பின்னணியில் அறுவைப்படங்களாக எடுத்துத் தள்ளியது. கே.பாலசந்தர் கூட ‘எங்க ஊர் கண்ணகிஎன்ற ஆகச்சிறந்த படத்தை எடுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார். இது போதாதென்று, கிராமத்து ஐதீகம் என்ற பெயரில் பல பேத்தல்களை மையமாக வைத்தும் சில படங்கள் வெளியாகின. ‘பொண்ணு ஊருக்குப் புதுசுஎன்ற ஒரு படத்தில், ஒரு கிராமத்தில் 999 பேர் மட்டும்தான் இருக்க முடியும் என்ற ஐதீகம் இருப்பதாகவெல்லாம் காதிலே பூ சுற்றினார்கள்.

      கிழக்கே போகும் ரயில்படத்தில், நாயகன் பரஞ்சோதியின் தங்கைக்குத் திருமணம் நடைபெறுகிற காட்சியில், மொய் எழுதுபவர்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதில் ‘பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணியோட மொய் பத்து ரூபாய்என்று யாரோ ஒலிபெருக்கியில் சொல்வார்கள். நிச்சயம் சப்பாணி வருவான்; மயிலின் வாழ்வு மலரும்என்று முடித்த பாரதிராஜா, தனது அடுத்த படத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதை உறுதி செய்திருப்பார்.

      மயிலின் வாழ்வு மலர்ந்ததோ இல்லையோ, நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்தது. அதை மலர வைத்தவர் பாரதிராஜா என்பதால் அவர் எத்தனை ‘அன்னக்கொடி’ எடுத்தாலும் மறந்து பாராட்டலாம். (ஒரு ஃபார்மாலிட்டிக்காகச் சொன்னேன் பா.ராஜா சார்!)

***************************

Wednesday, October 2, 2013

கண்ணைத் தொறக்கணும் சாமீ
பகவான் தோசாராமின் ஆசிரமத்துக்கு முன்னால், எலிமெண்டரி ஸ்கூல் வாசலில் எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு நிற்பதுபோல ஏகத்துக்கும் க்யூ நின்று கொண்டிருந்தது. சுடலையும் கருமுத்துவும் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தெருவில் கிடத்தப்பட்ட தௌசண்ட்வாலாவின் திரியைப் போலக் கடைசியில் நின்று கொண்டிருந்தனர். தரிசனம் முடிந்த பக்தகோடிகளில் பலர், பிள்ளை நிலாசீரியல் பார்த்ததுபோலப் பிழியப் பிழிய அழுதவாறு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

      எதுக்கு அழறாங்க? சுடலை கருமுத்துவிடம் குழப்பத்துடன் கேட்டான். “உள்ளே சினிமா நூற்றாண்டுக்காக, நண்பகல் காட்சியிலே நல்ல தங்காள் படமா காட்டுறாங்க?

      சுடலை! வலியில்லாம சந்தோஷமில்லைங்குறதுதான் பகவான் தோசாராமோட தத்துவம்! சுடலைக்குக் கருமுத்து விளக்கினான். “அதுனாலே அவர் எல்லாருக்கும் வலிக்கிறாமாதிரிதான் ஆசீர்வாதம் பண்ணுவாரு! காதைப் பிடிச்சு முறுக்குவாரு, கன்னத்துலே கிள்ளுவாரு, முதுகுலே ஓங்கி ஒரு மொத்து வைப்பாரு! ரொம்பப் புண்ணியம் செஞ்சிருந்தா அவங்க மண்டையிலே நறுக்குன்னு குட்டுவாரு! கருமுத்து சொல்லச் சொல்ல, சுடலையின் அடிவயிறு கலங்கியது.

      இதுக்கு நான் பாவியாவே இருக்கலாம் போலிருக்கே? முணுமுணுத்தான் சுடலை. “என்ன ஆசீர்வாதம்டா இது? பகவான் முன்னாடி கணக்கு வாத்தியாரா இருந்தாரா?

      இல்லைடா! உடுப்பி கிருஷ்ணபவன்லே தோசை மாஸ்டரா இருந்தாரு! அதான் சன்னியாசம் வாங்கினதும் பகவான் தோசாராம்னு பெயரை மாத்திக்கிட்டாரு!

      டேய் கருமுத்து! காதல் விசயமா வந்திருக்கேண்டா! இவர் ஆசீர்வாதம் பண்ணியே எனக்குப் பக்கவாதம் வர்றா மாதிரிப் பண்ணிடப்போறாரு!

      ஏய்! பகவானைப் பத்தி அப்படியெல்லாம் பேசாதே! அவரு மனசு வைச்சார்னா, அந்தப் பொண்ணு அப்படியே மயங்கி பின்னாடியே வர ஆரம்பிச்சிடுவா!

      அட பாவி! அவர் பின்னாடியே அவ வர்றதுக்காடா இவ்வளவு செலவுபண்ணி நான் இங்கே வந்திருக்கேன்?

      அடேய், அவ உன் பின்னாடி வருவான்னு சொன்னேண்டா! இந்த பகவான் அப்படிப்பட்டவரில்லை! ஆசிரம போர்டை நல்லாப் பாரு! பெருசா Uன்னு போட்டிருக்கு கவனிச்சியா? இந்த ஆசிரமத்துலே ‘அடல்ட்ஸ் ஒன்லிமேட்டரே கிடையாது.

      பக்தர்கள் நின்றிருந்த வரிசையானது, அரசு அலுவலகத்துக்கு அனுப்பிய மனுவைப் போல ஆமைவேகத்தில் மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டம் அவ்வப்போது தோசாராமுக்கு ஜே!என்று கூவிக்கொண்டிருந்தது.

      கருமுத்து! எப்படியாவது என் திவ்யா எனக்குக் கிடைக்கணும்டா! அப்புறம் என் ஆயுசுமுழுக்க இந்த தோசாராமுக்கு சாம்பாரா, ஐ மீன், அடிமையா இருப்பேண்டா!என்று உருக்கத்துடன் கூறினான் சுடலை.

      பகவானுக்கு இதெல்லாம் பிரியாணி சாப்பிட்டுட்டு பல்குத்தற மாதிரி,என்று சிரித்தான் கருமுத்து. “அவரோட குரு அல்வானந்தாவுக்குத் தெரிஞ்ச எல்லா வித்தையும் இவருக்கும் தெரியும்!

      அப்ப உண்மையாவே திவ்யா என்கிட்டே மயங்கி என் பின்னாடியே வருவாளா?

      என்ன அப்படிக் கேட்டுட்டே?கருமுத்து சுடலையின் கழுத்தைப் பிடித்துக் குலுக்கினான். “உன் திவ்யா போடற துணிமணி ஏதாவது கிடைச்சாப் போதும். அதை வைச்சே அவளை வசியம் பண்ணிருவாரு பகவான்!

      மொதல்லே அவ துணிமணி எனக்குக் கிடைக்கிறதுக்கு என்னடா வழி? சுடலை அப்பாவியாய்க் கேட்டான். “இதுக்குன்னு தனியா இட்லிராம், பொங்கல்ராம்னு வேறே சாமியாருங்க இருக்காங்களா?

      கடவுளே!கருமுத்து நொந்துகொண்டான். “ஒரு பொண்ணோட மனசைத்தான் திருட முடியலே; டிரஸ்ஸைக் கூடவா திருட முடியாது? சரி, இன்னொரு ஆப்ஷன் இருக்கு! திவ்யாவோட ஒரே ஒரு தலைமயிர் கிடைக்குமா?

      டேய்!அலறினான் சுடலை. “உங்க பகவான் என்னை அடிக்கப்போறாரோ, கடிக்கப்போறாரோ தெரியாது. ஆனா, திவ்யாகிட்டே செமத்தியா செருப்படி கிடைக்கப்போவுது.

      நல்லதாப் போச்சு!என்று கூவினான் கருமுத்து. “செருப்படி வாங்கினா வேலை இன்னும் சுலபமா முடிஞ்சிடும். டேய், நீ  திவ்யாகிட்டே செருப்படி வாங்கும்போது நான் சொல்றமாதிரி செய்!
      டேய்! நான் என்னமோ பாண்டிபஜார்லே பனியன்  வாங்கப்போறா மாதிரிப் பேசறே? செருப்படி வாங்கப்போறேண்டா! பல்லைக்கடித்து இரைந்தான் சுடலை.

      கத்தாதேடா!கருமுத்துக் கிசுகிசுப்பாகச் சொன்னான். “திவ்யா செருப்பாலே அடிக்கும்போது, அவ காலடி மண்ணு உன் கன்னத்துலே ஒட்டிக்கும் இல்லையா? அதை அப்படியே ஒரு பேப்பர்லே பொட்டலமாக் கட்டி எடுத்துட்டு வந்து பகவான்கிட்டே கொடுத்தாப் போதும்! அவளோட காலடி மண்ணை வைச்சே அவளை வசியம் பண்ணிடுவாரு பகவான்!

      அப்படியா?சுடலை வியந்தான். “காலடிமண்ணுக்கு அவ்வளவு பவரா? அதுக்கு ஏண்டா செருப்படி வாங்கணும்? அவ செவ்வாய், வெள்ளின்னா அம்மன்கோவிலுக்குப் போவா! அப்ப நைஸா அந்தச் செருப்பைத் திருடிட்டு வந்துடறேனே?

      அதெல்லாம் வொர்க்-அவுட் ஆவாதுடா!சட்டென்று கூறினான் கருமுத்து. “அம்மன் கோவில் வாசலிலே ஏகப்பட்ட பொண்ணுங்களோட காலடிமண்ணு இருக்கும். அப்புறம் ஆள் மாறிட்டாப் பிரச்சினையாயிடும். செருப்படிதான் இருக்கிறதுலேயே ரொம்ப ஸேஃப்! நியாயமாப் பார்த்தா நீயெல்லாம் காதலிக்கிறதுக்கு நானே உன்னைச் செருப்பாலே அடிக்கணும். காதலிக்கிற பொண்ணேதானே அடிக்கப்போறா. வாங்கிக்கோயேன்!

      சரிடா, முதல்லே பகவான் என் பிரார்த்தனையை நிறைவேத்தணுமே?

      டோண்ட் வொரி!சிரித்தான் கருமுத்து. “பகவான் சம்மதிக்கலேன்னா, அவரோட சம்சாரத்துகிட்டே சொல்லி காரியத்தை நிறைவேத்திடறேன்.

      என்னது? சாமியாரு கல்யாணம் வேறே கட்டிக்கிட்டாரா?

      பின்னே? சாமியார்னா ஆசிரமம் கட்டி, கல்யாணம் கட்டி, மெடிக்கல் காலேஜ் கட்டி, இஞ்ஜினீயரிங் காலேஜ் கட்டி, கோர்ட்டுலே ஜாமீனுக்குப் பணம் கட்டின்னு எவ்வளவு பண்ண வேண்டியிருக்கு?

      என்னமோடா! என் காதல் உன் கையிலேதான் இருக்கு!

      இல்லை!திருத்தினான் கருமுத்து. “திவ்யா காலிலேதான் இருக்கு!

      வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது.

      டேய் கருமுத்து! எனக்கொரு சந்தேகண்டா!

      நீ என்ன கேட்கப்போறேன்னு தெரியும்! இடதுகால் செருப்படியா, வலதுகால் செருப்படியான்னு தானே?

      இல்லைடா! செருப்பாலே கன்னத்துலே அடிச்சா காலடிமண்ணு ஒட்டிக்குமாடா?

      நியாயமான சந்தேகம்தான்!என்ற கருமுத்து பக்கத்தில் நகர்ந்துகொண்டிருந்த வரிசையிலிருந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டான். “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! என் ஃபிரண்டுக்கு ஒரு சின்ன டவுட்டு! க்ளியர் பண்ணுவீங்களா?

      என்ன டவுட்டு? அந்தப்பெண் வினவினாள்.

      நீங்க வரும்போது பாஸஞ்சர் டிரெயினிலே வந்தீங்களா, கூட்ஸ் வண்டியிலே வந்தீங்களா?

      என்னது?அந்தப் பெண்மணி, சட்டென்று காலிலிருந்த செருப்பைக் கழற்றி சுடலையின் கன்னத்தில் அடித்தாள். “இப்ப டவுட்டு கிளியராச்சுதா?

      ஒரு நிமிடம் சுடலையின் கண்முன்னால் இந்திரலோகத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் அமர்ந்துகொண்டு ‘வதனமே சந்த்ரபிம்பமோஎன்று பாடுவதுபோலவும், அதற்கு ரம்பை,ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் ஆடுவதுபோலவும் காட்சி தோன்றி மறைந்தது. ஊத்தப்பத்தைப் போல வழவழவென்றிருந்த அவனது கன்னம், செருப்படியில் சில்லி பரோட்டாவைப் போலச் சின்னாபின்னமாகியது.

      ஆச்சா?என்று கருமுத்து ஆர்வத்தோடு கேட்க, சுடலை கன்னத்தைத் தடவிப்பார்த்துவிட்டு “ஆஹா, கிளியர் ஆயிடுச்சு! ரொம்ப தேங்க்ஸ் மேடம்! நீங்க நல்லாயிருக்கணும்!என்றான்.

      லூசு!என்று அந்தப் பெண்மணி வெடுக்கென்று திரும்பி ‘தோசாராமுக்கு ஜே!என்று கோஷமிட்டாள்.

      பார்த்தியா? செருப்படி வாங்கினாக் காலடிமண்ணு கண்டிப்பாக் கிடைக்கும்என்று அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் போல அகமகிழ்ந்து சொன்னான் கருமுத்து.

      ஆனா என் திவ்யா இந்தம்மா மாதிரி இல்லையேடா!சுடலைக்கு இன்னும் சந்தேகம் இருந்தது. அவ அடிச்சா இம்புட்டு வலிக்குமா, இம்புட்டுக் காலடி மண்ணு ஒட்டுமான்னு தெரியலியே!

      அதுக்கென்னடா? பகவானோட பக்தைகள் நிறைய பேரு நின்னுட்டிருக்காங்க! இன்னும் எத்தனை செருப்படி வேணும்னாலும் வாங்கி ட்ரையல் பார்க்கலாம். நமக்கும் பொழுது போனமாதிரி இருக்கும்! நம்பிக்கையில்லாம எந்தக் காரியத்துலேயும் இறங்கக்கூடாதுன்னு பகவான் சொல்லுவாரு!

      போதுண்டா!காதைப் பிடித்துக் கொண்டான் சுடலை. “இன்னும் சாமியார்கிட்டே வேறே ஆசீர்வாதம் வாங்கணும். சும்மா டிபனே சாப்பிட்டுக்கிட்டிருந்தா லஞ்ச் டயத்துலே என்ன பண்றது?

      ஒருவழியாக கருமுத்துவும், சுடலையும் உள்ளே சென்றதும், பகவான் தோசாராம் டார்பாலின் போட்டு மூடப்பட்ட டெம்போ டிராவலர் போல வீற்றிருந்தார். அவர் பக்கத்தில் அவரது சகதர்மிணி, ஆரணிப்புடவை கட்டிய ஆட்டோ ரிக்‌ஷாபோல அமர்ந்திருந்தார்.

      குருவே! இவன் பேரு சுடலை! இவன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறான். அந்தப் பொண்ணே இவனுக்குக் கிடைக்க நீங்கதான் அருள்பாலிக்கணும்!

      ஓ!பகவான் தோசாராம் முகத்தில் எந்த ஹாஸ்யமுமின்றி மந்தகாசப்புன்னகை புரிந்தார். “மங்களம் பிராப்தி ரஸ்து!

      அவ பேரு திவ்யா!என்று இடைமறித்தான் சுடலை. “மங்களம்கிறது அவ அம்மா பேரு!  நீங்கதான் எப்படியாவது என் திவ்யாவை வசியம் பண்ணி என்கூட சேர்த்து வைக்கணும். என்னைப் பார்த்தாலே அவ மயங்கணும்.

      குழந்தாய்! பள்ளிக்கூடத்தில் ஆஜர் சொல்லும் பையனைப் போலக் கையை உயர்த்தினார் பகவான் தோசாராம். “இப்போதே உன்னைப் பார்த்தால் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் அலறி மயங்கி விழுகிற மாதிரித்தானே இருக்கிறாய்?

      குருவே, எனக்குக் காதல் பிச்சை போடுங்க!சுடலை கெஞ்சினான்.

      விதி வலியது!என்று தாடியை நீவினார் பகவான் தோசாராம். “உனக்குத் தனியாக விசேஷ ஆசீர்வாதம் செய்ய வேண்டும். அந்தத் தனியறையில் போய் உட்கார்!

      குருவே! நானென்ன செய்ய வேண்டும்?குருபக்தியில் கருமுத்துவின் முதுகு காற்றுபோன சைக்கிள் டியூப் போல வளைந்தது.

      ஆசிரம வளாகத்திலிருக்கும் மருந்துக்கடைக்குச் சென்று அரை டஜன் பாட்டில் அயோடெக்ஸ் வாங்கி வா!
      கருமுத்து ஆசிரம மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று ‘ஆறு அயோடக்ஸ்!என்று சொன்னதும் கடையிலிருந்த சிப்பந்தி கன்னத்தில் போட்டுக்கொண்டு எடுத்துக் கொடுத்தார்.

      அமாவாசையன்னிக்கு அயோடக்ஸ் பூஜை பண்ணினா நினைச்ச காரியம் நடக்கும் சார்! பக்கத்துலே பாத்ரூம் கட்டி வைச்சிருக்கு பார்த்தீங்களா? அங்கே போயி ஒரு பக்கெட் வென்னீருக்கு நூத்தியோரு ரூபா தட்சணையைக் கட்டுங்க! அனேகமா ஒத்தடபூஜையும் பண்ண வேண்டிவரும்!

      பகவானும் சுடலையும் இருந்த அறைக்குள் கருமுத்து நுழைந்தபோது, அறையின் ஒரு மூலையில் அவிழ்த்துப்போட்ட பழம்துணிபோல சுடலை குவிந்து கிடந்தான். இன்னொரு மூலையில் பகவான் தோசாரம் ஆசீர்வாதம் செய்த களைப்பில் மூச்சுவாங்கியபடி வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தார்.

      டேய் சுடலை!எழுப்பினான் கருமுத்து. “ரொம்பக் கொடுத்து வைச்சவண்டா நீ! பகவான் நிறைய ஆசீர்வாதம் பண்ணிட்டார் போலிருக்கே?

      அது இருக்கட்டும்டா!என்று மெதுவாக எழ முயன்றான் சுடலை. “நீ எதுக்குடா தலைகீழா நின்னுட்டிருக்கே?

      என்னது? தலைகீழா நிக்குறேனா?அதிர்ந்தான் கருமுத்து. “நான் நேராத்தாண்டா நிக்குறேன். உனக்கு என்னடா ஆச்சு?

      எல்லாம் பகவானோட ஆசீர்வாத மகிமைடா!சுடலை ஈனசுரத்தில் முணுமுணுத்தான். “எல்லாம் தலைகீழாத் தெரியுதுடா! அதுவும் கண்ணாடி போடாம 3D படம் பார்க்குறா மாதிரி கொசகொசான்னு தெரியுது. என்னா ஆசீர்வாதம் தெரியுமாடா? ஏழெட்டு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாத்தான்எது எது எங்கெங்கே இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்னு நினைக்கிறேன்.

      வலியில்லாம சந்தோஷமில்லேடா!என்று வாஞ்சையோடு கூறினான் கருமுத்து.

      அதுக்குன்னு இப்படியாடா? காதல் மேட்டரா வந்தவனை கஞ்சாக்கேசுலே பிடிபட்டவனை உதைக்கிற மாதிரி மிதிமிதின்னு மிதிச்சிட்டாருடா! ஆஸ்ரமத்துலே ஆம்புலன்ஸ் இருந்தா அட்வான்ஸ் கொடுத்துட்டு வாடா!

      இதுக்கே அலுத்துக்கிட்டா எப்படி?கருமுத்து உசுப்பேத்தினான். “இன்னும் திவ்யாகிட்டே செருப்படி வேறே வாங்கணும். மறந்திட்டியா?

      ஆளை விட்றா சாமி!கையெடுத்துக் கும்பிட்டான் சுடலை. “எனக்குக் காதலும் வேண்டாம்; காலடி மண்ணும் வேண்டாம்! இந்த பகவான் கிட்டே ஆசீர்வாதம்கிற பேருலே உதை வாங்கினதுக்கு திவ்யாவோட அப்பாகிட்டேயே உதை வாங்கியிருக்கலாம் போலிருக்குடா! நானும் சன்னியாசம் வாங்கிட்டு, சாமியாராப் போறேண்டா!

      குழந்தாய்!பகவான் தோசாராம் சிரித்தவாறு வந்தார். “சாமியாராப் போறது ரொம்பக் கஷ்டம்பா! ஒரு லோட்டோ ஷூ போட்டுக்க முடியுமா? ஒரு டபுள் புல் ஜீன்ஸ் போட்டுக்க முடியுமா? ஒரு ரீபோக் டி-ஷர்ட் போட முடியுமா? ஃபேஸ்புக்குலே போயி ஸ்டேட்டஸ் போட முடியுமா? அட் லீஸ்ட், ஒரு ‘லைக்காவது போட முடியுமா? காதலிக்கிறது சுலபம்; சாமியாராப் போறது ரொம்பக் கஷ்டம்!“

      ”இந்த ஆசிரமத்துக்கு யாரு ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்தாங்க?தேம்பினான் சுடலை. “இங்கே நடக்குற வயலென்ஸுக்கே டபுள் ‘ஏசர்டிபிகேட் கொடுக்கணுமே? இப்படியா ஒரு பக்தனை உதைப்பாங்க?

      அதுக்குக் காரணமிருக்கு!என்றார் தோசாராம். “ஒரு பொண்ணை மந்திரத்தாலே மயக்க நினைக்கிறது ரொம்பத் தப்பு! ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் ஒருத்தர் பஸ் ஸ்டாப்புலேருந்து காதலியோட காலடி மண்ணை எடுத்திட்டுப் போயி ஒரு சாமியார்ட்டே கொடுத்து வசியம் பண்ணச் சொன்னாரு. கடைசியிலே பார்த்தா, அது அதே பஸ்-ஸ்டாப்புலே இருந்த பிச்சைக்காரியோட காலடி மண்ணு! அந்தப் பிச்சைக்காரி அந்தாளைத் துரத்தோ துரத்துன்னு துரத்தி, ஊரே சேர்ந்து அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க!

      ஹாஹா!வலியிலும் சந்தோஷமாகச் சிரித்தான் சுடலை. “சுத்த கூமுட்டையா இருப்பான் போலிருக்கே அந்தாளு?

      வாயை மூடு!கர்ஜித்தார் பகவான் தோசாராம். “அந்தக் கூமுட்டை வேறே யாருமில்லே. நானே தான்! என் ஆசையிலே மண்ணள்ளிப்போட்ட அந்த சாமியாரையும், எனக்குக் கட்டாயக் கல்யாணம் பண்ணிவைச்ச ஊரையும் பழிவாங்கத்தான் சாமியாரா மாறினேன். அந்தக் கடுப்புலேதான் இந்த ஆசிரமத்துக்கு வர்ற எல்லாரையும் நல்லா அடிச்சு, கிள்ளி, உதைச்சு என் கோபத்தைத் தீர்த்துக்கறேன். அதைக்கூடப் புரிஞ்சுக்காம இந்த ஜனம் எல்லாம் ஆசீர்வாதம்னு சொல்லிக்கிட்டுத் திரியுது. என் வாழ்க்கையே பாழாப்போச்சு! “

      கருமுத்துவும் சுடலையும் ஆசிரமத்திலிருந்து வெளியேறியபோது, க்யூவில் ஒரு இளைஞன் கையில் துப்பட்டாவுடன் நின்றிருந்தான்.

      பிரதர்! போயி அரை டஜன் பாட்டில் அயோடக்ஸ் வாங்கிட்டுப் போங்க! மருந்துக்கடையிலே ஸ்டாக் குறைச்சலாத்தான் இருக்கு!

*******************