Sunday, December 2, 2012

நளபாகம்-வெந்நீர் போடுவது எப்படி?


தமிழில் வெந்நீர்எனப்படுவது ஆங்கிலத்தில் ஹாட் வாட்டர்,’ என்றும், ஹிந்தியில் கரம் பானி,என்றும் ஜப்பானிய மொழியில் ஹை-யை-யோ என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். ஆண்களாகிய நமக்கும் அவ்வப்போது சவரம் மற்றும் குளியல் வரைக்கும் தேவைப்படுகிற இந்த வெந்நீரானது நமது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாகி விட்டது என்றால் மிகையாகாது. வெந்நீர் போடுவது எப்படியென்பதை அறிந்து கொள்வதற்குள்ளாக, வெந்நீர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே, அவசர அவசரமாக அடுக்களை சென்ற ஆண்கள், திரும்பி வந்து, ஆற அமர இந்தப் பதிவைப் படிப்பது வெந்நீர்குறித்த அவர்களது பொது அறிவை வளர்க்கும்.

     வெந்நீர் மனிதனின் கண்டுபிடிப்பில் மிக அரியது.என்று கி.பி.1567-ம் ஆண்டு வாழ்ந்த ஹாட்லாண்டைச் சேர்ந்த டாக்டர்.பாயில்மேன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

     இதே போல பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுக்குநீரகர் என்னும் சித்தர் இது வரை யாராலும் கண்டு பிடிக்க முடியாத தனது சுவடியில் வெந்நீரின் சிறப்பு குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதைப் படித்தறிக:

     "ஈரமுடன் இருப்பதற்கே எருதுகளுங் குளித்திடவே
     ஊரதனில் உள்ளதன்றோ ஓர்குளமே-சாரமுறு
     சொதிக்குண்டு சுடுதோசை சோறுண்ணப்போவதன்முன்
     கொதிக்கின்ற நீரில் குளி"

(நன்றி: புரூடா பதிப்பகம்)

     தோசையோ,சொதியோ,சோறோ உண்ணுகிற பொருள் எது சூடாயிருந்தாலும் அதை உண்பதற்கு முன்னர், சுடுதண்ணியில் குளித்திட வேண்டுமென்று வலியிறுத்தியிருப்பதைக் காண முடிகிறதல்லவா? எனவே, ஆணாகப் பிறந்த நாமெல்லாம் வீணாகக் காலத்தைக் கடத்திடாமல் வெந்நீர் போடுவதைப் பற்றி அறிந்து கொள்வது நமது தன்னம்பிக்கையை வளர்த்திடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

     வெந்நீர் போடுவதற்கு முன்னர், நாம் ஏன் வெந்நீர் போடுகிறோம் என்ற குறிக்கோள் நமக்குப் புரிந்திருத்தல் மிக அவசியம். குடிப்பதற்கா குளிப்பதற்கா என்று புரியாமல் வெந்நீர் போடுவது போன்ற விரயமான செயல்களை ஆண்கள் செய்யாதிருத்தல் நலம். குடிப்பதென்றால் குண்டா; குளிப்பதற்கு அண்டா,என்ற குளித்தலை குளியாமொழியின் கூற்றை இவ்வமயத்தில் நினைவில் நிறுத்துவது நன்று.

     வெந்நீரைப் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து கொண்டு விட்டபடியால், அடுத்து வெந்நீர் போடுவதற்குத் தேவையான பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு காகிதத்தில் பின்வருகிற பொருட்களின் பட்டியலைக் குறித்து வைத்தல் சாலச் சிறந்தது.வெந்நீர் போடத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள்:-

1. பர்னால் அல்லது ஏதாவது ஒரு ஆயின்மென்ட் (எசகுபிசகாக காலில் வெந்நீரைக்     கொட்டிக் கொண்டு விட்டால் போட்டுக்கொள்ள)

2.டெலிபோன்டைரக்டரி-அருகிலிருக்கிற மருத்துவமனைகள் / டாக்டர்கள் / ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றின் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொண்டாலும் போதும்) தீயணைப்புத் துறை /காவல்துறை தொலைபேசி எண்களையும் வைத்திருந்தால் பாதகமில்லை.

3. பாதுகாப்பு அங்கி(கோணிப்பையையும் உபயோகிக்கலாம்)

4. ரப்பர் காலணிகள்

5.கையுறைகள் மற்றும் கால்மறைப்புகள். (மகனின் கிரிக்கெட் சமாச்சாரங்களையும் பயன்படுத்தலாம்)

6.ஹெல்மெட்(துணிச்சலானவர்கள் இதைத் தவிர்க்க விரும்பினால் அது அவர்கள் தலைவிதி!)

7. தர்மாமீட்டர்
  
* விளக்கப் படத்தைப் பார்க்கவும்

     #இது தவிர பொசுங்கலூர் வெந்தசாமி எழுதிய தீக்காயமா? என்ன செய்ய வேண்டும்?’ என்ற புத்தகத்தை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பதும் நன்மை பயக்கும்.

     மேற்கூறிய பொருட்கள் தவிரவும், வெந்நீர் போட மேலும் சில பொருட்களும் தேவைப்படுகின்றன். அவையாவன:1.         பாத்திரம் (தேவைக்கேற்ப அண்டா அல்லது குண்டா)
2.         தண்ணீர் (அதுவும் தேவைக்கேற்பவே!)
3.         இடுக்கி (இது இல்லாமல் வெந்நீர் போடுவது அபாயகரமானது)
4.         நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி அல்லது நல்ல லைட்டர்.


இடுக்கியொன் றிருப்பின் இன்முகங்கொண்டுதினம்
அடுக்களை போவான் ஆண்  என்ற திரிக்குறளை நினைவில் கொள்ளுக.

     மேற்கூறிய பாதுகாப்பு சங்கதிகளை அணிந்து கொண்டபின், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றவும். பிறகு, அடுப்பைப் பற்ற வைத்து விட்டு தண்ணீர்ப் பாத்திரத்தை அடுப்பின் மீது வைக்கவும். அல்லது அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை அதன் மேல் வைத்து அப்புறமாக அதில் தண்ணீரை ஊற்றுவதாலும் பாதகமில்லை. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்களுக்கும் அடுப்புக்கும் இடையே குறைந்தபட்சம் ஒன்றரையடியாவது இடைவெளியிருக்க வேண்டும். முதல் முறையாக வெந்நீர் போடுபவர்கள், தரையில் சரியான தூரத்தை அளந்து, சாக்பீஸால் கோடு போட்டு வைத்துக்கொள்வது நல்லது.

     சிறிது நேரத்திலேயே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சிறியதும் பெரியதுமாகக் கொப்பளங்கள் வருவதைக் கண்டு பயந்து விடக்கூடாது. பயந்த சுபாவமுள்ளவர்கள் வெந்நீர் தயாராகும் வரையில் அச்சம் என்பது மடமையடா.என்ற பழைய பாடலையோ, ’அச்சம் தவிர்,’ என்ற புதிய பாடலையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கலாம். நம்பிக்கையுள்ளவர்கள் அவரவர் இஷ்டதெய்வத்தை வணங்கிவிட்டு வெந்நீர் போட ஆரம்பிப்பதிலும் எந்தத் தவறுமில்லை.

     நிமிடத்துக்கொரு முறையாவது கொதிக்கின்ற பாத்திரத்துக்கு நேராக, சுமார் ஒண்ணேகால் அடி தூர உயரத்தில் தர்மாமீட்டரை வைத்து, வெந்நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது என்று பரிசோதித்துக்கொள்வது நலம். உங்களுக்கு எவ்வளவு சூடான வெந்நீர் வேண்டுமென்பது, உங்களுக்கு இருக்கிற தனிப்பட்ட (அ) சூடு, (ஆ) சொரணை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதால் தேவைக்கேற்பக் கொதிக்க வைக்கவும். ((அ) மற்றும் (ஆ) இவையிரண்டும் இல்லாதவர்கள் கட்டுரையாசிரியரைப் போல வெந்நீர் போட்டு நேரத்தை விரயம் செய்யாமல், குளிர்ந்த நீரில் குளிப்பதே சாலச் சிறந்தது.)

     உங்களுக்குத் தேவையான சூட்டோடு வெந்நீர் தயாரானதும் மறக்காமல் அடுப்பை அணைத்து விட்டு, இடுக்கியால் பாத்திரத்தை இறுக்கமாகப் பிடித்து இறக்கி வைக்கவும்.

     இதோ, சுடச்சுட வெந்நீர் தயார்!

     இம்முறைப்படி வெந்நீரை வெற்றிகரமாகத் தயாரித்தவர்களே, அடுத்து டீபோடுவது எப்படி என்று பார்க்கலாமா? அதுவரை, சூடுபட்ட உங்களது விரல்களுக்கு பர்னால் போட்டுக்கொண்டிருக்கவும்.


பின்குறிப்பு: இது 20.07.2009 அன்று நான் கூகிள் குழுமங்களில் எழுதியது. (அப்போ ஆரம்பிச்சவன் இன்னும் திருந்தலை!)

Tuesday, November 27, 2012

ராஜா என்பார் மந்திரி என்பார்
நண்பர் கும்மாச்சியின் சச்சினின் சோககீதம்இடுகையை வாசித்ததும், சில வருடங்கள் முன்பு கூகிள் குழுமங்களில் நான் எழுதிய ஒரு பாடலையே கொஞ்சம் மாற்றி அளித்திருக்கிறேன். சச்சின் பக்தர்கள் மன்னிப்பார்களாக! (காட்டமாக ஒரு இடுகை எழுதலாம் என்று ஆசைதான்; இப்போது இயலாது என்பதால் இந்தப் பாடல்!)


மெட்டு- ராஜா என்பார் மந்திரி என்பார்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்
ஒரு செஞ்சுரியில்லை; ஒரு ஃபிஃப்டியுமில்லை
பல்புமேலே பல்பாய் வாங்குகிறேன் நானும்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

பந்தினைத் தீண்டவில்லை பவுண்டரி தாண்டவில்லை
சொந்தவூர் திரும்பிவந்தும் சொதப்புவது மாறவில்லை
அன்றோ நான்தான் ஆட்டத்தில் மாஸ்டர்
இன்றோ எனக்கு போட்டார் பிளாஸ்டர்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

வார்னேயை உதைத்ததெல்லாம் பழங்கதையாச்சுதடா
பானேஸர் பந்தைக்கண்டா பயம்பெருகிப்போச்சுதடா
அடிக்கடி நானும் ஆகுறேன் பௌல்டு
அடடா நானும் ஆயிட்டேன் ஓல்டு

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

நாற்பது நெருங்கிருச்சு ஆட்டமும் சுருங்கிருச்சு
நாளொரு மேனியுமாய் விளம்பரமும் குறைஞ்சிருச்சு
கைத்தடி ஊன்றி பல்செட்டும் மாட்டி
களத்தில் இருப்பேன் தொடர்ந்திடும் லூட்டி!

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்
ஒரு செஞ்சுரியில்லை; ஒரு ஃபிஃப்டியுமில்லை
பல்புமேலே பல்பாய் வாங்குகிறேன் நானும்
 

Sunday, November 18, 2012

RIP பால் தாக்கரே
சாலைவழியாக மும்பைக்குள் நுழைவதாயிருந்தால், ஆர்.கே.ஸ்டூடியாவுக்கு முன்பாக, தேவ்னார் சந்திப்பில் அமைக்கப்பட்டிருக்கிற சத்ரபதி சிவாஜி சிலையைக் கடந்தே அனைவரும் சென்றாக வேண்டும். சராசரியை விடவும் உயரமான பீடத்தின் மீது, குதிரையில் சவாரி செய்யும் சிவாஜியின் உருவச்சிலையைக் கவனிக்காமல் மும்பை நகரத்துள் நுழைவது கடினம். அந்தச் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பால் தாக்கரே அப்போது சொன்னது: “நமது மும்பை நகரத்துக்குள் எவர் வந்தாலும் சரி, சத்ரபதி சிவாஜியின் காலடியைப் பாராமல் உள்ளே செல்ல முடியாது.

     மும்பை-பூனே முக்கிய சாலையில், போக்குவரத்து ஆமைவேகத்தில் ஊர்ந்துகொண்டிருக்க, பாலாசாஹேபின் சூளுரையைக் கேட்டு சேனாக்காரர்கள் ஆரவாரம் எழுப்பியபோது, மராட்டி புரியாதபோதிலும் அவருக்கும் மக்களுக்கும் இடையிலிருந்த உணர்ச்சிகரமான பிணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. சிவசேனாவைக் குறித்து எனக்கிருந்த அச்சத்துடன், சற்றே பிரமிப்பும் உண்டாகிய தருணம் அது.

            பால் தாக்கரேயை விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, பெரும்பாலும் வெறுக்கிறவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். அவரை ஒரு மராட்டிய சிங்கமாக உருவகித்து, அதற்கு ஆதாரமாக நேற்றுமுதல் மாதோஸ்ரீயின் முன்பு கூடிய கூட்டத்தையும், பிரபலங்களின் இரங்கல் செய்திகளையும் கலந்துகொட்டிப் பரிமாறிக் கொண்டிருக்கிற தொலைக்காட்சிகளின் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மறைந்த தலைவர்களை சற்றே அதீதமாகப் புகழ்வது மரபு என்பதை ஒப்புக்கொண்டாலும், மும்பையில் சில வருடங்கள் வசித்தவன், சிவசேனா ‘மந்த்ராலயாவுக்குள் ஆட்சிபீடத்தில் அமர்ந்தபோது ஆயாசத்துடனும், கொஞ்சம் அச்சத்துடனும் குழம்பியவன் என்ற முறையில், தாக்கரேயின் அரசியலும் அணுகுமுறைகளும் என்னை ஒருபோதும் ஈர்த்ததில்லை.

     சிவசேனா அரசியல் கட்சியாக உருமாறும் முன்னரே, மும்பையைத் தனது கிடுக்கிப்பிடியில்தான் வைத்திருந்தது. ‘ஷாகாஎன்றழைக்கப்படுகிற கிளை அலுவலகங்களை எங்கெங்கும் காண முடிந்தது. ‘ஜெய் மகாராஷ்ட்ராஎன்று ஒருவருக்கொருவர் வந்தனம் சொல்லும் சிவசேனைக்காரர்களை அங்கெங்கெனாதபடி எங்கும் பார்க்கலாம். ‘குட் மார்னிங்என்று ஆங்கிலத்தில் பேசுகிறவர்களை அவர்கள் பார்க்கிற பார்வையில் ஒரு அந்நியம் இருக்கும். இரண்டு மராட்டியர்கள் சந்தித்தால், சுற்றியிருப்பவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, தங்களது சம்பாஷணைகளை மராட்டியிலேயே தொடர்வதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இது மொழிப்பற்றா அல்லது மொழிவெறியா என்பதை அவரவரின் புரிதலுக்கு விட்டுவிடுதலே நல்லது.

            ஒரு தமிழனாக, பால்சாஹேபின் ‘லுங்கி ஹடாவோ(வேட்டியை ஒழி!)என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கு எதிரான, குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையும் இயல்பாகவே ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது உண்மைதான்.  நாளாவட்டத்தில் அவரது அசூயை மராட்டிய மண்ணின் மைந்தர்கள் தவிர்த்து அனைவரின் மீதும் பாரபட்சமின்றிப் படர்ந்திருந்தது என்பதைப் புரிந்தபோது, இப்படிப்பட்ட கண்ணோட்டம் கொண்ட ஒரு மனிதரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும் என்ற சந்தேகமும் எல்லாரையும் போலவே எனக்கும் எழுந்ததுமுண்டு. மும்பையைத் தவிர சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஏனைய பகுதிகளில் செல்வாக்கு இல்லை என்பதும் ஒரு பொதுப்படையான கருத்தாக முன்வைக்கப்பட்டது. கொங்கண் தவிர, கரும்பாலை முதலைகளின் கைப்பிடிக்குள் சிக்கியிருந்த மராட்வாடா, விவசாயிகளும் தொழிலாளிகளும் மிகுந்திருந்த விதர்பா ஆகிய பகுதிகளில் சிவசேனா தவழும் குழந்தையாயிருந்த சூழலில், ‘மண்ணின் மைந்தன் என்ற ஒற்றைக்கொள்கையை மட்டும் வைத்து தேசீயக் கட்சிகளுக்கு இவர் எப்படி முட்டுக்கட்டைகள் போடப்போகிறார் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், அவரால் அது அவரால் முடிந்தது. சிவசேனா ஆட்சிக்கு வந்தது ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ‘களப்பணியை முடித்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறியது என்றால், அது பால் தாக்கரே என்ற ஒற்றை மனிதருக்காகவே!

     இந்த மிரட்டல் அரசியல் மும்பைவாழ் மராட்டியர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னணியில் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸும், தொழிலாளர்களின் நலத்தைப் புறக்கணித்துவிட்டு, தொழிலதிபர்களுடன் கைகோர்த்துவிட்டு சொகுசுவாழ்க்கையில் ஈடுபட்ட ஒருசில தொழிற்சங்கத் தலைவர்களும் இருந்ததை இப்போது நினைவுகூர பலர் தயாராக இல்லை. ஆனால், இந்தியாவிலேயே பிற மாநிலத்தவர் மிகமிக அதிகமாக வாழ்கிற மும்பையென்ற நகரத்தில், மராட்டியர்களில் பெரும்பாலானோரை ஒன்றிணைக்க ‘ஜெய் மகாராஷ்ட்ராஎன்ற கோஷம் மட்டுமே உதவியது என்று சொன்னால், அது மூர்க்கத்தனமான வன்மத்தில் சொல்வதாகவே இருக்கும். பால்தாக்கரேயை மராட்டியர்கள் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்வதற்குப் பல உளவியில்ரீதியான காரணங்கள் இருந்திருக்கலாம். அவர் மீது அவர்களுக்கு இருந்த அச்சத்தைக் காட்டிலும் அவரவர்க்கு எதிர்காலம் மீதிருந்த அச்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

     பால்தாக்கரேயை எதிர்மறையாக விமர்சிக்கக் காரணங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், சற்று யோசித்தால் அவரது அரசியல் அணுகுமுறைகளில் பலவற்றை, பலர் பல்வேறு கட்டங்களில் தங்களால் இயன்றவரைக்கும் முலாம் பூசிப் பயன்படுத்தியதை நாம் அறிந்திருக்கிறோம். ‘அம்ச்சி மாத்தி அம்ச்சி மாணூஸ்’ (எனது மண்; என் மக்கள்) என்ற கோட்பாடு பால்தாக்கரேவுக்கும் மகாராஷ்ட்ராவுக்கும் மட்டுமே பொருந்தக்கூடிய உதாரணங்களல்ல.

            பம்பாய் மும்பை ஆனதும் அதைத் தொடர்ந்து வேறு சில  மாநிலங்களிலும் சில நகரங்களின் பெயர்கள் மாறின. அறிவிப்புப்பலகைகள் மராட்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டை, பின்னாளில் பல மாநிலங்களிலும் பின்பற்றினார்கள். எல்லாத் திரையரங்குகளிலும் மராட்டிப் படங்களுக்கென்று குறிப்பிட்ட காட்சியில் எண்ணிக்கை வரையறுத்தே ஆக வேண்டும் என்பதும் பின்னாளில் மகாராஷ்டிரம் தாண்டிப் பரவியது. இவையெல்லாம் சின்னச் சின்ன உதாரணங்கள் என்றாலும், நமக்கும் பரிச்சயமான நிகழ்வுகள்.

     பால் தாக்கரே ‘சாம்னாவில் எழுதிய தலையங்கங்களைப் போல வேறு எவரேனும் எழுதியிருந்தால் பல உரிமைப்பிரச்சினைகளைச் சந்தித்திருப்பார்கள். அவர் ஒவ்வொரு விஜயதசமியன்றும் சிவாஜி பார்க்கில் ஆற்றிய உரைகளில் அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களைச் சொல்ல பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அஞ்சியிருப்பார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவே அரசுகளும் அரசியல்வாதிகளும் அஞ்சின. சொல்லப்போனால், அவரைப் பற்றி பெருவாரியான மக்களுக்கு இருந்த அச்சமே அவரது வெற்றியோ என்று எண்ண வேண்டிய துரதிருஷ்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை.

            பால் தாக்கரேயின் இறுதி யாத்திரையை, பல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தனர். (கலைஞர் டிவி உட்பட!).

     அவரை விரும்பலாம்; வெறுக்கலாம்; ஆனால், புறக்கணிக்க முடியாது; முடியவில்லை என்பதே பால் தாக்கரேயின் வாழ்வும் மரணமும் உணர்த்துகிற உண்மை.

Tuesday, November 13, 2012

எண்ணை தாண்டி வருவாயா?

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும் மன்னிக்கணும்!

Tuesday, November 6, 2012

#ட்வீட்டுக்கு #ட்வீட்டு வாசப்படி!
பொதுவாகவே கல்லூரியிலிருந்து சோர்ந்துபோய் வீடுதிரும்புகிறபோது திருப்பதியின் முகம் பஞ்சரான பால்பாக்கெட் போலிருக்கும். அன்று வழியில் பெட்டிக்கடை சண்முகம் அழைத்து, ‘வாத்தியாரய்யா, உங்க வீட்டு விலாசத்தைப் போலீஸ்காரர் விசாரிச்சிட்டுப்போனாருய்யா! கொஞ்சம் உஷாரா இருங்க,என்று சொன்னதும், அடிவயிற்றில் ஒரு பால்குக்கரே  விசிலடிப்பது போலிருந்தது. ‘போலீஸா? என்னையா? எதற்கு?

      வீட்டை அடைந்து, அழைப்புமணியை அழுத்திவிட்டு, மனைவி கதவைத் திறப்பதற்காகக் காத்திருந்தபோது வயிற்றுக்குள் வலையப்பட்டி தவிலின் தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தது. போதாக்குறைக்கு, கதவைத் திறந்த மனைவி மங்காவின் முகம்,  நாலாக மடித்த நமுத்துப்போன அப்பளத்தைப் போலிருக்கவே, திருப்பதியின் மனதுக்குள் கிலி பரவியது. வீட்டுக்குள் நுழைந்தவாறே, சட்டையைக் கழற்றினான்.

      இது உங்களுக்கே நல்லாயிருக்கா? எடுத்த எடுப்பிலேயே, சின்னத்திரையிலிருந்து வீட்டுக்குள் குதித்துவந்த சீரியல் நாயகிபோல மங்கா மூக்கைச் சிந்தினாள்.

      நல்லாயில்லைதான். ஆனா, வேறே  நல்ல சட்டையில்லையே!

      அதில்லீங்க! நான் ரேஷன் கடைக்குப் போயிருந்தபோது நம்ம வீட்டுக்குப் போலீஸு வந்திட்டுப் போயிருக்காங்களாம். இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

      ஏற்கனவே என் குடலுக்குள்ளே யாரோ தேங்காய் துருவுற மாதிரியிருக்கு. நீ வேறே அதுலே பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து சட்னியரைச்சிடுவே போலிருக்குதே!

      நீங்க என்னவோ தப்புப் பண்ணியிருக்கீங்க,விசும்பினாள் மங்கா. “என் தலையிலே அடிச்சுச் சத்தியம் பண்ணுங்க!

      தலையிலே அடிக்கிறதா? வேணாம்! நீ வேறே பார்லருக்குப் போயி மருதாணியைத் தடவிக்கிட்டு வந்து நிக்குறே! கையெல்லாம் அசிங்கமாயிடும். என்று சொல்லியவாறு, உள்ளே சென்று கைகால் கழுவிவிட்டு திருப்பதி ஹாலுக்குத் திரும்பியபோது, மங்கா கையில் சர்க்கரை இல்லாமல் காப்பியுடனும், கண்ணில் கிளிசரின் இல்லாமல் கண்ணீருடனும் நின்றிருந்தாள்.

      இப்போ எதுக்கு சரண்யா மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாம அழறே? போலீஸ் எதுக்கு வந்தாங்களோ யாருக்குத் தெரியும்? காப்பியைக் கொடுத்திட்டு டிவியைப் போடு! வரவர நீ ஆதித்யா டிவி பார்த்தாலும் அழ ஆரம்பிச்சிட்டே!

      டிவியைப் பார்த்தவாறே, காப்பியைப் பருகிய கணவன் திருப்பதியிடம் ரகசியமாகக் கேட்டாள் மங்கா.

      ஏங்க, காலேஜ்லே ஸ்டூடண்ட்ஸ் யாரையாவது அடிச்சிட்டீங்களா?

      அவங்ககிட்டே நான் அடிவாங்காம வந்தாப் பத்தாதா?என்று எரிந்து விழுந்தான் திருப்பதி. “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னிக்கு எனக்கு அஞ்சு பீரியட் இருந்திச்சு. ஒவ்வொரு பீரியட்லேயும் நாப்பது நிமிஷம் தொண்டைத்தண்ணி வத்துற அளவுக்குக் கத்திப் பாடம் எடுத்திருக்கேன் தெரியுமா?

      இது எல்லா வாத்தியாரும் பண்றதுதானே?

      முழுசாக் கேளு! அஞ்சு பீரியட்லே ஒண்ணுலேகூட ஒரு ஸ்டுடண்ட் கூட வகுப்புலே கிடையாது. கண்டக்டர் செல்லாத நோட்டைக் கொடுத்திட்டாருன்னு ஸ்ட்ரைக் பண்ணப்போயிட்டாங்க. ஆனாலும் நான் கடமைதவறாம பாடம் நடத்தினேன். காலியாயிருந்த கிளாசுலே கூட போர்டை அஞ்சு பீரியட்லேயும் அம்பதுவாட்டி துடைச்சிருப்பேன் தெரியுமா?

      அப்புறம் எதுக்கு போலீஸ் வருது?

      நீ தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் பண்ணுற நியூஸ் லீக் ஆயிருக்கும் போலிருக்குது. ஏதாச்சும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்திருமோன்னு முன்னெச்செரிக்கை நடவடிக்கையா இருக்கலாம். இப்போ என்னை நியூஸ் பார்க்க விடு!

      என்னங்க, ஒண்ணு கேட்டாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?என்று தயக்கமாகக் கேட்டாள் மங்கா. “நம்ம வீட்டுலேருந்து புழலுக்கு எந்த பஸ்சிலே வரணும்? தெரிஞ்சுக்கிட்டா உங்களைப் பார்க்க ஜெயிலுக்கு வர்றதுக்கு வசதியாயிருக்குமேன்னு....

      முடிவே பண்ணிட்டியா?அலறினார் திருப்பதி. “உனக்குப் புழலுக்கு வர அவ்வளவு ஆசைன்னா, அடுத்தவாட்டி வேப்பம்பூ ரசம் வைக்கும்போது கொஞ்சம் விஷத்தைக் கலந்திரு!

      சும்மாயிருங்க! விஷமெல்லாம் எதுக்கு? வெறும் ரசமே போதும்,என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு மங்கா அமைதியாக, திருப்பதி செய்திகளைக் கேட்க ஆரம்பித்தான்.

     அரசியல் பிரமுகரைப் பற்றி அவதூறாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டவர் கைது!

     ஐயையோ!அலறினான் திருப்பதி. “நான் கூட டிவிட்டர்லே அப்பப்போ எதையாவது எழுதுவேனே? அதுக்காகத்தான் போலீஸ் தேடி வந்துட்டுப்போச்சோ?

      என்னது?மங்கா அதிர்ந்தாள். “நீங்க டிவிட்டர்லே எழுதினீங்களா? என்ன எழுதினீங்க?

      நிறைய எழுதியிருக்கேன்,திருப்பதி தலையைப் பிடித்துக் கொண்டான். “ஆனா, எல்லாருக்கும் பயன்படுற விஷயங்களைத்தானே எழுதியிருக்கேன்.

      குடியைக் கெடுத்தீங்களே!அலறினாள் மங்கா. “யாராவது டிவிட்டர்லே போயி உருப்படியான விஷயங்களை எழுதுவாங்களா? இப்படிப் பத்தாம்பசலியா இருக்கீங்களே?

      மங்கா! நானே கலங்கிப்போயிருக்கேன். நீ வேற பத்தாம்பசலி, பருப்பு உசிலின்னு என் உசிரை வாங்காதே!என்று புலம்பினான் திருப்பதி.

      ஏங்க, உங்க ஃபிரண்டு தளபதிக்குப் போன் பண்ணுங்க!

      ஐயோ, அவன் ஒரு வடிகட்டின முட்டாளாச்சே!

      உங்க ஃபிரண்டு தானே, ஆபத்துக்குப் பாவமில்லை. கூப்பிடுங்க!

      இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக மங்கா உருப்படியாக ஒரு யோசனை சொல்லியிருக்கவே, வேறு வழியின்றி நண்பன் தளபதிக்குப் போன் செய்யவும், உடுக்கை இழந்த நண்பனுக்குக் கடுக்காய் கொடுக்காமல், சொடுக்குப் போடுகிற நேரத்தில் மிடுக்காய் வந்து நின்றான் தளபதி.

      டேய் தளபதி, பெரிய சிக்கல்லே மாட்டிக்கிட்டேண்டா! என்னைத் தேடிட்டு போலீஸ் வந்து போயிருக்குது.

      என்னாச்சு? தப்புப் பண்ணுற சாமர்த்தியமெல்லாம் உனக்குக் கிடையாதே, கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர!

      டிவிட்டர்லே போயி எதையாவது உளறிட்டேன் போலிருக்குதுடா.

      அது தப்பில்லையே! அதுக்கா போலீஸ் தேடுது? உன்னோட லாப்-டாப்பை எடு. அப்படி என்னதான் எழுதியிருக்கேன்னு பார்க்கலாம்.

      திருப்பதி லாப்-டாப்பை எடுத்து இணையத்தைப் பிடித்து, தனது டிவிட்டர் கணக்குக்குள் நுழைந்து தனது எழுத்துக்களைக் காட்டினான். ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டுவந்த தளபதியின் முகம், திடீரென்று காய்ந்த கல்லில் கவனிக்கப்படாமலே விடப்பட்ட தோசையைப் போலக் கறுத்தது.

      டேய் திருப்பதி! உன்னை போலீஸ் தேடுறதுலே தப்பேயில்லைடா! இது என்னடா எழுதியிருக்கே? எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்படி எழுதியிருப்பே?

      தளபதியின் கோபத்தைப் பார்த்து திருப்பதியும், மங்காவும் அதிர்ந்தனர்.

      டேய், இது திருக்குறள்டா! இதை எழுதினதுக்கா இவ்வளவு கோபப்படுறே?

      திருப்பதி!தளபதி விரலைச் சொடுக்கினான். “கவர்ன்மெண்ட் பஸ்சுலே எழுதியிருந்தா அது திருக்குறளாயிடுமா? ‘கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்னு பஸ்சுலே எழுதியிருக்கில்லே, அந்தத் திருக்குறளை டிவிட்டர்லே போட்டியா?
‘சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்னு போட்டிருக்குமே, அந்தத் திருக்குறளை டிவிட்டர்லே போட்டியா? அதையெல்லாம் விட்டுட்டு இதை ஏண்டா எழுதினே?

      டேய், இது ஒரிஜினல் திருக்குறள்! நம்ம ஊருலே மழை பெஞ்சபோது, திருவள்ளுவர் மழையைப் பத்திச் சொன்னது ஞாபகம் வந்தது. அதுனால தான் எழுதினேன்.

      ஓஹோ! எங்க தலைவரைப் பத்தித் தப்பா எழுதிட்டு, பழியைத் தூக்கித் திருவள்ளுவர் மேலே போடறியா? என்ன எழுதியிருக்கே? ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை ஏண்டா, உனக்கு அவ்வளவு திமிரா? ரிலீஸ் ஆகறதுக்குள்ளேயே துப்பாதவங்களும் துப்புவாங்கன்னா எழுதறே? அதாண்டா எங்காளு யாரோ போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க!

      டேய் நீ சொல்றே துப்பாக்கி வேற; இந்தத் துப்பாக்கி வேறடா!

      அப்படீன்னா இது கள்ளத்துப்பாக்கியா? அது இன்னும் மோசம்!தளபதியின் குரல் தழுதழுத்தது. “உன் பேரு திருப்பதி. உன் சம்சாரம் பேரு மங்காத்தா! அப்படியிருந்தும் இன்னிவரைக்கும் உன்னை நான் விரோதியாப் பார்த்திருக்கேனாடா? நான் இவ்வளவு பெருந்தன்மையா இருக்கும்போது நீ மட்டும் இப்படி எழுதலாமாடா? துரோகி!

      ஐயோ! இதுக்குத்தான் தலை மேலே சத்தியம் பண்ண மாட்டேன்னு சொன்னீங்களா?மங்கா மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

      என்னது?சீறினான் தளபதி. “இது வேறயா? டேய், இது சைபர் கிரைம் இல்லேடா, ஹண்ட்ரட் கிரைம், தௌசண்ட் கிரைம், டென் தௌசண்ட் கிரைம்!

      மங்கா! அலமாரியிலே திருக்குறள் பரிமேலழகர் உரை இருக்கு. எடுத்திட்டு வந்து இவன்கிட்டே கொடு! என்னைத் திட்டினாக்கூடப் பரவாயில்லை. படுபாவி, திருக்குறளுக்கு புதுசு புதுசா விளக்கம் சொல்றானே? இதுக்கு போலீஸ் பிடிச்சிட்டுப் போனாலே பரவாயில்லை போலிருக்கே?

      டிங் டிங்! அழைப்பு மணி சத்தம் கேட்டு புலம்பலை நிறுத்தினான் திருப்பதி. மங்கா போய் கதவைத் திறக்கவும், முகம் எது, மீசை எது என்று தெரியாத ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அச்சத்தில் திருப்பதியின் உடம்பு அம்பத்தூர் மெயின்ரோட்டில் ஆட்டோவில் போவதுபோலக் குலுங்க ஆரம்பித்தது.

      மிஸ்டர் திருப்பதி வீடு இதுதானே?

      ஆமாம்! மங்காவின் முகத்தில், பதற்றம் ‘ஹவுஸ் ஃபுல்போர்டு போட்டது. “என்னங்க, உங்களைப் பார்க்க போலீஸ் வந்திருக்கு!

      வணக்கம் சார்!திருப்பதியின் பற்கள், விக்கு வினாயகத்தின் கடம் போலச் சத்தம் போட்டன. “என்ன விஷயம்?

      என் பையன் மாமூலன் உங்க கிளாசுலேதான் படிக்கிறான். தெரியுமோ?

      அப்படியா? ஆச்சரியமாயிருக்கே? என் கிளாசுலே ஒருபயலும் படிக்கிறதேயில்லேன்னு நினைச்சிட்டிருக்கேன்.

      ஹிஹி! அதான் சார்,போலீஸ்காரர் தொப்பியைக் கழற்றித் தலையைச் சொரிந்தார். “அந்தக் காலேஜ்லேயே நீங்க ஒருத்தர்தான் பொழைக்கத் தெரியாத, அதாவது புத்திசாலி லெக்சரர்னு சொன்னாங்க. நீங்க என் பையனுக்கு டியூஷன் எடுத்தீங்கன்னா, அவனும் உருப்பட்டிருவான்.கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்!

      இதுக்குத்தான் எங்க வீட்டை விசாரிச்சு வந்தீங்களா?திருப்பதி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். “நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். சரி சார், நீங்க கவலைப்படாதீங்க! உங்க பையனை ஒருவழியாக்கி, அதாவது ஒரு வழிக்குக் கொண்டுவந்திடறேன்.

      தேங்க்ஸ் சார், வர்றேன் சார்!என்று சல்யூட் அடித்துவிட்டுக் கிளம்பினார் போலீஸ்காரர்.

      அப்பாடா தலைக்கு வந்தது..........,என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவன், தளபதி இருப்பதை அறிந்து பழமொழியைப் பாதியிலேயே நிறுத்தினான்.

      டேய் திருப்பதி!தளபதி எழுந்தான். “உன்னை போலீஸ் விட்டிரலாம். ஆனா நான் விடமாட்டேன்! நீ போட்ட ட்வீட்டுக்கு எனக்குச் சரியான பதில் கொடுத்தே ஆகணும்.

      பதில்தானே? தர்றேன்,என்று ஆசுவாசமாக அமர்ந்தான் திருப்பதி. “மங்கா, தளபதிக்கு பதில் வேணுமாம். அந்த வேப்பம்பூ ரசத்தைக் கொண்டா.

***********************