Thursday, September 29, 2011

மிஷ்டிதோயும் ரசகுல்லாவும்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Tuesday, September 27, 2011

அன்னை காளிகாம்பாள்


ஆழியலை சூழ்ந்த அவனிதனை உருவாக்கி
      அண்டிவருவோரை அன்னையென ஆதரித்து
ஊழின்வலி போக்கி உவகைபெறச்செய்பவளே
      உள்ளந்தனில் நிறைந்த மாகாளிகாம்பிகையே!
வேழின் உருக்கொண்ட வினைநீக்கும் கணநாதன்
      வெற்றிவடிவேலன் கதிர்காம முருகனுடன்
தோழியென நிற்கும் வைணவியும் புடைசூழ
      தோன்றி அருள்புரியும் மாகாளிகாம்பிகையே!

அண்டந் தனையாக்கி அகிலமதைக் காத்தருளி
      அல்லல் அளித்தகொடும் அரக்கர்தமையழிக்கக்
கொண்டாய் காளியெனும் கோலமதை அம்பிகையே
      கோவிலுற்ற அடியோரின் குறைதீர்க்கும் மாகாளி
விண்ணோர் வேந்தன்முதல் வியாசபராசரரும்
      விசுவகருமருடன் வேதமுனி அகத்தியனும்
மண்ணில் மழைபொழியும் வருணனுமே வணங்கினரே
      மாயை நீக்குமெங்கள் மாகாளி அம்பிகையே!

சென்னை எனும்பெயரை இந்நகர்க்கு ஈந்தவளே!
      செம்மை அருள்பவளே சென்னம்மா மாகாளி
மின்னும் பொற்தாலி மூக்குத்தி கங்கணமும்
      மிஞ்சியுடன் சிலம்புணிந்தே உவந்திருக்கும் மாகாளி!
கன்மம் மாயையுடன் ஆணவமாம் மும்மலத்தை
      கண்ணால் அழிப்பவளே கமடேசுவரி தாயே!
தொன்மை மிக்கதொரு திருக்கோவில் தனிலுறைந்தே
      தொழுவோர் குறைதீர்க்கும் தூயவளே மாகாளி!

செல்வந் தனையருளும் மலைமகளே ஓர்கண்ணாம்
      செம்மைக் கல்விதரும் அலைமகளும் ஓர்கண்ணாம்
கல்வி செல்வமுடன் வீரமென மூன்றுமிகக்
      கருணையுடனருளும் மாகாளிகாம்பிகையே!
பல்கி அருளவெனப் பாங்குடனே உறையீசர்
      பாகமுறைந்தவொரு பார்வதியே மாகாளி!
சொல்வர் பரதபுரி சொர்ணபுரி எனபலவாய்
      சோர்வு பிணிநீக்கும் மாகாளிகாம்பிகையே!

தஞ்சம் புகுந்தவர்க்குத் தாயாகி நின்றவளே!
      தரணியைக் காப்பவளே தாயே மாகாளி
நெஞ்சம் தனிலுனையே நிதமும் நினைப்பவர்க்கு
      நெற்றிச் சக்கரத்துள் நின்றுலவும் மாகாளி
பஞ்சம்பசியின்றிப் பாரெங்கும் செழித்திடவுன்
      பார்வைத் திருவருளைப் பாலிக்கும் மாகாளி
அஞ்சும் அடியார்க்குன் அபயக்கரங்காட்டி
      அன்னை எனவிளங்கும் அம்பிகையே மாகாளி!

Friday, September 23, 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

முந்தைய ஆட்சியில் பக்கத்து வீட்டுக் குழந்தையிடமிருந்து குச்சிமிட்டாயை அபகரித்ததால், தற்போது ’அரெஸ்டோபோபியா(Arrestophobia)’ என்ற விபரீதநோயால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சிப் பிரமுகருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார் பிரபல மனநல மருத்துவர் ஊளம்பாறை உலகப்பன். அப்போது......!

"டாக்டர்! ஒரு அர்ஜண்ட் கேஸ்!" என்று நர்ஸ் நாகம்மா பரபரக்க ஓடிவந்தார். "பார்த்தா மொழி படத்துலே வர்ற எம்.எஸ்.பாஸ்கர் மாதிரி கேஸ் போலிருக்கு. உடனே வாங்க டாக்டர்!"

எதிர்க்கட்சிப் பிரமுகரை, அவரது கட்சித்தலைவரைப் போலவே ’அம்போ’வென்று விட்டு விட்டு, டாக்டர் உலகப்பன் அவசரசிகிச்சைப் பிரிவுக்கு விரைந்தார். நோயாளி கிட்டாமணி படுக்கையில் படுத்திருக்க, பக்கத்தில் அவரது மனைவி பாலாமணி மதியத்தில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் அம்மாவைப்போல விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்.

"அதோ அந்த பேஷியன்ட் தான் டாக்டர்! திடீர்னு எல்லாத்தையும் மறந்திட்டாராம். பழசைப் பத்தி மட்டுமே பேசிட்டிருக்காராம் டாக்டர்."

"என்னாச்சுங்க?" டாக்டர் உலகப்பன் கிட்டாமணியின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தவாறே கேட்டார்.

"தெரியலே டாக்டர்!" பாலாமணி விசும்பினார். "டிவியிலே நியூஸ் பார்த்திட்டு டிபன் சாப்பிட்டுக்கிட்டிருந்தாரு! திடீர்னு சம்பந்தா சம்பந்தமில்லாம பேசறாரு!"

"என்ன டிபன் சாப்பிட்டாரு?"

"ஜாம்ஷெட்பூர் ஜவ்வரிசி உப்புமா!"

"ஐ ஸீ! அனேகமா அதுதான் காரணமாயிருக்கும்னு நினைக்கிறேன். பேரு என்ன?"

"அவர் பேரு கிட்டாமணி; என் பேரு பாலாமணி!"

’நல்லவேளை, ரெண்டுபேருகிட்டேயும் money இருக்கு.பில் கட்டாம ஓடிர மாட்டாங்க,’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட டாக்டர் உலகப்பன் கிட்டாமணியிடம் பேச்சுக்கொடுத்தார்.

"மிஸ்டர் கிட்டாமணி! எப்படியிருக்கீங்க? உங்களுக்கு என்ன பண்ணுது?"

"எனக்கு ஒண்ணுமில்லே டாக்டர்! என்னை வீட்டுக்குப் போக விடுங்க! இன்னிக்கு கல்கத்தாவுலே இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஃபைனல்ஸ் ஆடுறாங்க! தூரதர்ஷன்லே லைவ் ரிலே இருக்கு! என்னைப் போக விடுங்க!" கிட்டாமணி எழ முயன்றார்.

"ரிலாக்ஸ் மிஸ்டர் கிட்டாமணி! கல்கத்தாவுலே ஃபைனல்ஸா? நீங்க ஏதோ குழம்பியிருக்கீங்கன்னு நினைக்கிறேன். இன்னிக்கு என்ன தேதின்னு சொல்லுங்க பார்க்கலாம்."

"இன்னிக்கு நவம்பர் 8. வருசம் 1987. இது கூடவா தெரியாது?" என்று கிட்டாமணி சொல்லவும், பாலாமணி தாழையூத்து சிமெண்ட் ஃபேக்டரியில் சாயங்கால சைரன் ஊதுவதுபோல உரக்க அழத்தொடங்கினார்.

"அழாதீங்கம்மா! நீங்க பாட்டுக்கு ஜாம்ஷெட்பூர் ஜவ்வரிசி உப்புமா, கோரக்பூர் கோதுமைக் கிச்சடின்னு எதையாவது டிபன்னு கொடுக்க வேண்டியது. அப்புறம் எங்க உசிர வாங்க வேண்டியது. பொறுமையா இருங்க. அவர் போக்குலேயே விட்டுப் பிடிப்போம்," என்று கடிந்து கொண்ட டாக்டர் உலகப்பன், முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்தபடி மீண்டும் கிட்டாமணியோடு பேசினார்.

"மிஸ்டர் கிட்டாமணி! உங்களுக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்குமோ?"

"என்ன அப்படிக் கேட்கறீங்க டாக்டர்? கிரிக்கெட்னா உயிரு எனக்கு. அதுவும் இந்த வருசம் நம்ம டீம் சூப்பரா வெளாண்டிருக்கானுங்க. ஜனவரிலே நம்ம கபில்தேவ் 300-வது விக்கெட்டை எடுத்தாருன்னா, மார்ச்சுலே கவாஸ்கர் 10000 ரன் அடிச்சு உலக சாதனை பண்ணியிருக்காரு! என்ன, ரிலயன்ஸ் வேர்ல்ட்-கப் செமிஃபைனலிலே கோட்டை விட்டுட்டாங்க!"

"ஓஹோ!" என்று அர்த்தபுஷ்டியாகப் புன்னகைத்த டாக்டர் உலகப்பன், பாலாமணி பக்கம் திரும்பி வினவினார். "உங்க புருஷன் கிரிக்கெட் ரொம்பப் பார்ப்பாரோ?"

"அதையேன் கேட்கறீங்க டாக்டர்? அவரு ஒரு வாட்டி கிரிக்கெட் மேட்சு பாத்திட்டிருந்தாரு! கஞ்சிக்காக வச்சிருந்த புழுங்கலரிசியைக் கொடுத்து, மேட்சைப் பார்த்திட்டே கல் பொறுக்குங்கன்னு கொடுத்தேனா, அவரு பாட்டுக்கு ஆட்டத்தைப் பார்க்கிற சுவாரசியத்துலே மொத்த அரிசியையும் வாயிலே போட்டு பச்சையாவே மென்னு தின்னுட்டாரு!"

"ஐயையோ, அப்புறம் என்னாச்சு?"

"அப்புறம் என்ன, கொஞ்சம் உப்பும் வெந்நீரும் கொடுத்துச் சாப்பிடச்சொன்னேன். உள்ளே போய் எல்லாம் சேர்ந்து கஞ்சியாயிருக்கும்."

’நல்ல வேளை, அவரை அடுப்புலே உட்கார்த்தி சூடு பண்ணாம இருந்தவரைக்கும் சரி,’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார் டாக்டர் உலகப்பன். பிறகு,

"ஏன் மிஸ்டர் கிட்டாமணி? கிரிக்கெட்டுன்னா அவ்வளவு ஈடுபாடா?" என வினவினார்.

"டாக்டர், எனக்கு டென்னிஸ் கூடப் பிடிக்கும் டாக்டர்!" என்று துள்ளியெழுந்தார் கிட்டாமணி. "இந்தவாட்டி பிரெஞ்சு ஓப்பனிலே ஸ்டெஃபி கிராஃப் ஜெயிச்சதைப் பார்த்தீங்களா? ஆனானப்பட்ட மார்ட்டினா நவரத்திலோவாவையே மண்ணைக் கவ்வ வச்சிட்டாங்க பார்த்தீங்களா?"

"க்கும்! நீங்க எங்கே ஆட்டத்தைப் பார்த்தீங்க?" என்று முகவாய்க்கட்டையை வெடுக்கென்று திருப்பிக்கொண்டார் பாலாமணி. "ஸ்டெஃபி கிராஃபையே கண்கொட்டாம இஞ்சிதின்ன குரங்கு மாதிரி பார்த்திட்டிருப்பீங்க!"

"சும்மாயிரு பாலாமணி! ஏன் ஸ்டெஃபி கிராஃப் மேலே உனக்கு இவ்வளவு பொறாமை. அவங்க அழகாயிருக்காங்கன்னுதானே? உன் வயித்தெரிச்சலாலே தான் பாவம் விம்பிள்டனிலே அதே நவரத்திலோவா கிட்டே தோத்துப் போயிட்டாங்க!"

"மிசஸ் பாலாமணி! பேசாமயிருங்க!," என்று கையமர்த்திய டாக்டர் உலகப்பன், "ஏன் மிஸ்டர் கிட்டாமணி? சினிமா பார்ப்பீங்களா?"

"ஓ! மாசத்துக்கு ரெண்டு சினிமா போவோம் டாக்டர்," என்று உற்சாகமானார் கிட்டாமணி. "நான் ரஜினி ரசிகன். பாலாமணி கமல் ரசிகை. அதுனாலே ரெண்டு பேர் படத்தையும் விடுறதில்லை! மனிதன் படமும் பார்த்தோம். நாயகனும் பார்த்தோம்."

"சரிதான், கமல் ரஜினி படம்தான் பார்ப்பீங்களோ?"

"இல்லை டாக்டர்! எங்க ரெண்டு பேருக்குமே பாலசந்தர், பாக்யராஜ், பாலுமகேந்திரா படம் எல்லாம் புடிக்கும். அதுனாலே எங்க சின்ன ராசா, மனதில் உறுதி வேண்டும், ரெட்டைவால் குருவி எல்லாம் பார்த்தாச்சு! அப்புறம், மிஸ்டர் இந்தியா-ன்னு ஒரு இந்திப்படம் வந்திருக்கு டாக்டர். ஹிஹிஹி!"

"அதுக்கு என் சிரிக்கிறீங்க?"

"அதுலே ஸ்ரீதேவி ரெட் கலருலே ஷிபான் ஸாரி கட்டிக்கிட்டு ஒரு பாட்டுலே வருவாங்க தெரியுமா?"

"ஓ! நீங்க ஸ்ரீதேவியோட ஃபேனா?"

"சாதாரணம் ஃபேன் இல்லே டாக்டர். நான் ஸ்ரீதேவியோட கைத்தான் ஃபேன்."

"நர்ஸ்!" என்று நர்ஸ் நாகம்மாவை அழைத்த டாக்டர் உலகப்பன் ரகசியமாக எதையோ சொல்ல, கிட்டாமணிக்கு ஒரு ஊசிபோடப்பட்டது.

"மிஸ்டர் கிட்டாமணி! இன்னும் கொஞ்ச நேரத்துலே தூங்கிருவீங்க! முழிச்சதுக்கப்புறமா வீட்டுக்குப்போகலாம் சரியா?"

டாக்டர் உலகப்பன் அங்கிருந்து நகர, பாலாமணியும் பின்தொடர்ந்தார்.

"டாக்டர், என் புருஷனுக்கு என்னாச்சு டாக்டர்?"

"அவருக்கு பழசெல்லாம் மறந்திருச்சு!"

"அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே! இந்த ஞாயிற்றுக்கிழமை கூட ஹிண்டுவுலே மேட்ரிமோனியல் பார்த்திட்டிருந்தாரே!"

"இல்லீங்க, நான் சொல்றது சீரியஸான விசயம்! அவரு இப்போ 1987 வருசத்துலேயே இருக்காரு! அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் அவருக்குத் திடீர்னு மறந்திருச்சு!" என்று விளக்கினார் டாக்டர் உலகப்பன்.

"ஐயையோ! எப்படி டாக்டர்?"

"சில பேருக்குச் சின்ன வயசுலே மண்டையிலே அடிபட்டா, பல வருஷம் கழிச்சு அவங்க மூளையிலே பாதிப்பு ஏற்படுறதுண்டு. அது மாதிரிதான் இதுவும்."

"என்ன டாக்டர், சின்ன வயசுலே மண்டையிலே அடிபட்டா, இத்தனை வருஷம் கழிச்சா பாதிப்பு ஏற்படும்?"

"ஏன் ஏற்படாது? மண்டை அதே மண்டை தானே?" என்று மேலும் விளக்கினார் டாக்டர். "அது போகட்டும், அவருக்கு 1987-ம் வருஷத்துலே தான் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்குது. உங்களுக்குத் தெரிஞ்சு அந்த வருஷம் அந்த மாதிரி ஏதாச்சும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துதுன்னு சொல்ல முடியுமா?"

"அந்த வருஷம்தான் எங்களுக்குக் கல்யாணமே ஆச்சு டாக்டர்!"

"ஓ ஐ ஸீ!" என்று வெற்றிப்பெருமிதத்துடன் புன்னகைத்தார் டாக்டர். "எனி வே, ஒரு நாலு மணி நேரம் அவர் தூங்கட்டும். முழிச்சதும் அவர் எப்படியிருக்காருன்னு பார்த்திட்டு மேற்கொண்டு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணுவோம். சரியா?"

பாலாமணி கவலைதோய்ந்த முகத்தோடு போக, டாக்டர் உலகப்பன் தனது ஓய்வறைக்குச் சென்றார். மேஜை மீதிருந்த செய்தித்தாளைப் பார்த்தவர் அதையெடுத்து வாசிக்க ஆரம்பித்தவர் தலைப்புச் செய்தியைப் பார்த்த அடுத்த கணமே அதிர்ந்து போனார்.

"ஒரு நாளைக்கு ரூ.32 செலவழிக்கிறீர்களா? நீங்கள் ஏழையில்லை! இந்திய திட்டக் கமிஷன் அறிக்கை!"

அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தொடர்ந்து செய்தியை வாசித்தார் டாக்டர் உலகப்பன்.

"இந்தியாவின் திட்டக்கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்துக்கு ரூ.965 செலவழிக்கும் நகரவாசிகளும், ரூ.781 செலவழிக்கும் கிராமவாசிகளும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கருதப்பட மாட்டார்கள். அதாவது நாளொன்றுக்கு ரூ.32 செலவழிக்கும் நகரவாசிகளும், ரூ.26 செலவழிக்கும் கிராமவாசிகளும் அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் பலன்களை அனுபவிக்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்."

டாக்டர் உலகப்பனுக்குத் தலைசுற்றியது. சமாளித்தபடி மேலும் வாசித்தார்.

"மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.3860 செலவானால், அவர்கள் ஏழைகள் என்று கருதப்பட மாட்டார்கள்."

டாக்டர் உலகப்பனுக்கு வியர்க்கத் தொடங்கியது. தொடர்ந்து செய்தியை வாசித்தார்.

"நாளொன்றுக்கு ரூ.5.50 அரிசி/கோதுமைக்குச் செலவழித்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். ரூ. 1.02 பருப்புக்காகவும், ரூ.2.33 பாலுக்காகவும், ரூ.1.55 சமையல் எண்ணைக்காகவும் செலவழித்தாலே ஒரு குடும்பம் ஊட்டச்சத்துடன் திகழும். இத்துடன் காய்கறிகளுக்காக ரூ.1.95 மற்றும் பழவகைகளுக்காக 44 பைசாவும் செலவழிப்பவர்களும் ஏழைகளாய்க் கருதப்பட மாட்டார்கள்."

டாக்டர் உலகப்பனுக்குக் கண்கள் இருளத்தொடங்கின. துணிச்சலை வரவழைத்து மேலும் செய்தியை வாசித்தார்.

"மருத்துவச்செலவுக்கு ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு ரூ.39.70 செலவழித்தாலே போதுமானது. கல்விக்கு ஒரு நாளைக்கு 99 பைசா போதுமானது..."

"அடப்பாவிகளா! இந்தச் செய்தியை டிவியில் பார்த்துத்தான் கிட்டாமணிக்கு இந்த கதி ஏற்பட்டதா? 1987-ல் கூட சென்னையில் ஒரு மாதத்துக்கு 965 ரூபாய் போதாதே சாமிகளா!" என்றெல்லாம் யோசித்த டாக்டர் உலகப்பனுக்கு திடீர் என்று பகீர் என்றது.

"ஒரு வேளை கிட்டாமணி முப்பத்தி ஒன்பது ரூபாய் எழுபது பைசாவை முப்பதாலே வகுத்து நமக்கு பீஸ் கொடுத்தாலும் கொடுப்பாரோ?"

அடுத்த கணமே அவர் மயங்கி விழுந்தார். அடுத்த நாள் காலை செய்தித்தாள்களில் தலைப்பு.....

"பிரபல மனோதத்துவ டாக்டருக்கு ’திடீர்’ பைத்தியம்!"

Wednesday, September 21, 2011

மூக்கு ஜோசியம்

மனிதனுக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு இதழ்கள், இரண்டு புருவங்களைக் கொடுத்த இறைவன் ஒரே ஒரு முக்கை மட்டும் ஏன் வைத்தான் என்பது புரியவில்லை. (மூளையும் ஒன்றே ஒன்றுதானே என்று கேட்பவர்களுக்கு-உங்களுக்கு இருக்கிறது என்பதற்காக, என்னைக் கடுப்பேற்றாதீர்கள்!).

இந்த மூக்கு என்பதை இலக்கியமோ, சினிமாப்பாடல்களோ கண்டுகொள்ளுவதேயில்லை. கண்ணை மலரோடு ஒப்பிடுகிறார்கள்; புருவத்தை வில்லோடு ஒப்பிடுகிறார்கள்; இதழ்களை குங்குமச்சிமிழ் என்கிறார்கள்; பற்களை முத்துக்கள் என்கிறார்கள்; ஆனால், ஒருபாவமும் அறியாத மூக்கைப் பற்றி யாரும் வருணிக்காமலிருப்பதன் காரணமென்ன என்று பலமுறை கஜேந்திரன் டீ ஸ்டாலில் மூக்கைப்பிடித்தபடி கட்டிங்-சாயா குடிக்கையில் நான் மும்முரமாக யோசித்ததுண்டு.

மூக்கு என்றால் சாதாரணமா?

-அவனுக்கு ’மூக்கில் வியர்த்து விடும்’ என்று ஒருவரின் உள்ளுணர்வைப் பாராட்டுவார்கள்.

-’மூக்கு முட்டச் சாப்பிட்டேன்,’ என்று நிறைவோடு ஏப்பம் விடுவார்கள்.

-’அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே,’ என்று நாகரீகத்தைக் கற்றுக்கொடுப்பார்கள்.

-’மூக்கிருக்கிறவரைக்கும் ஜலதோஷமிருக்கும்,’ என்று வாழ்க்கைத்தத்துவத்தை விளக்குவார்கள்.

ஆனாலும், மனித சமுதாயம் மூக்குக்கு இலக்கியத்திலோ, வரலாற்றிலோ அதற்குரிய இடத்தை வழங்காமல் வழிவழியாக வஞ்சித்து வந்திருப்பதை எண்ணினால் அதை நினைத்து மூக்கால் அழ வேண்டும் போலிருக்கிறது. மூக்கை கவுரவிக்காவிட்டாலும் பரவாயில்லை; மூக்கை வைத்து மனிதர்களைக் கேலி செய்பவர்களின் மூக்கறுக்க என்னதான் வழி?

சப்பைமூக்கு, போண்டாமூக்கு, கிளிமூக்கு என்றெல்லாம் சொல்லி மனிதர்களுக்கு அவரவர் மூக்கின்மீதே மூக்குக்கு மேல் கோபத்தை வரவழைப்பவர்களை என்ன செய்யலாம்? மண்ணடியில் ராக்கெட் ராமானுஜம் என்று ஒருவர் மிகப்பிரபலம். அவருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்றாலும், அவரது நீளமான மூக்கு காரணமாக அவரை ராக்கெட் ராமானுஜம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் அது குறித்துக் கவலைப்பட்டதேயில்லை.

"இத்தனை வருஷத்துலே நான் ஒருவாட்டி கூட ஆபீசுக்கு லேட்டாப்போனதில்லை தெரியுமா? நானே லேட்டாப்போனாலும் என் மூக்கு முன்னாடியே போயிருக்கும்!" என்று பெருந்தன்மையோடு தனது மூக்கு குறித்த கிண்டலை அலட்சியம் செய்வார்.

இதே போலத்தான், போண்டாமூக்கு புண்ணியகோடியும்! மயிலாப்பூர் கற்பகம் விலாஸில் மசால்தோசை போடுவதை மந்தவெளி பஸ் ஸ்டாண்டிலேயே கண்டுபிடித்து விடுவார். இந்த ஒரு திறனாலேயே, இரவு வீட்டில் என்ன டிபன் என்பதை அறிந்து வீட்டுக்குள் நுழையும்போதே ’வயிறு சரியில்லை; வெறும் மோர் கொடு,’ என்று இத்தனை நாட்களாய்த் தப்பித்து வருகிறார் என அறிக.

ஆனால், மூக்கின் முக்கியத்துவத்தைக் குறித்து நம்மை விட மேல்நாட்டவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். ’நெஸ்லே’ நிறுவனத்தில் காப்பி ருசிப்பாளராகப் பணியாற்றும் டேவ் ராபர்ட்ஸ் என்பவர், காப்பியை முகர்ந்து பார்ப்பதற்கு உதவும் தனது மூக்கை 2.7 மில்லியன் டாலர்களுக்குக் காப்பீடு செய்திருக்கிறாராம். அதைத் தொடர்ந்து, பல காப்பீடு நிறுவனங்கள் மூக்குக்கென்றே பல்வேறு காப்பீடு திட்டங்களை மூக்கீது, அதாவது தாக்கீது செய்திருக்கிறார்களாம்.

அது மட்டுமா?

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் குற்றவாளிகளின் மூக்கை வைத்தே அவர்களை மூக்கும் களவுமாய்ப் பிடிப்பதற்காக ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை கைரேகையை நம்பியிருந்த காவல்துறையினர் இனிமேல் குற்றவாளிகளின் மூக்குகளையும் படம்பிடித்து வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, எங்காவது எசகுபிசகாய் ஏதேனும் நடந்தால், சந்தேகத்துக்கிடமான மூக்குகளைக் கைது செய்து, அதாவது அந்த மூக்குக்கு சொந்தக்காரர்களைக் கைது செய்து விடுவார்களாம். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்க போலிருக்குது)

இதற்காகவே, மனிதர்களின் மூக்குகளை ஆறுவகையாகத் தரம்பிரித்திருக்கிறார்களாம். அவையாவன:


ரோமன்(Roman), க்ரீக்(Greek), நூபியன்(Nubian), ஹாக்(Hawk), ஸ்னப் (Snub) மற்றும் டர்ன்ட்-அப் (Turned-up).

பாத் பல்கலைக்கழகத்தின் டாக்டர். அட்ரியன் இவான்ஸ்,"முக்கைப் படம்பிடிப்பது சுலபம்; மூக்கை மறைப்பது மிகக்கடினம். ஆகவே, மூக்கோடு மூக்கை ஒப்பிடுவதன் மூலம் பல குற்றங்களைத் துப்புத்துலக்கி விடலாம்," என்கிறார். அது மட்டுமா? கிரெடிட் கார்டு, ஏ.டி.ஏம்.மோசடிகளில் ஈடுபடுகிறவர்களின் மூக்கை அடையாளம் காணும் வழிமுறைகள் பற்றியும் பேச் ஆரம்பித்து விட்டார்கள்.

அதெல்லாம் சரி, மூக்கு ஜோசியம் என்ற தலைப்புக்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

ஹிஹி, நம்மாளுங்க விஞ்ஞானம் எதைக் கண்டுபிடித்தாலும் அதை வைத்து, சுலபமாக ஒரு ஓட்டு ஓட்டுவதில் விற்பன்னர்கள் ஆயிற்றே! சென்னை வொயிட்ஸ் சாலையில் ஒரு ஜோசியர் மனிதர்களின் தலைமயிரை வைத்து ஜோசியம் சொல்கிறாராம். (கேட்டால் DNA விஞ்ஞானத்தின் அடிப்படை என்பாரோ என்னமோ)

சைமன் பிரவுன் என்பவர் "தி சீக்ரெட்ஸ் ஆஃப் ஃபேஸ் ரீடிங்," என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாராம். அதில், மனிதரின் மூக்கை வைத்தே, அவர்களது குணாதிசயத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று விளக்கியிருக்கிறாராம். உதாரணத்துக்கு....

ஆறாம் வகையான டர்ன்ட்-அப் (Turned up) மூக்கை உடையவர்கள், "மிகவும் இனிமையானவர்கள்;உற்றார் உறவினருடன் அன்போடு இருப்பவர்கள்; புதிது புதிதாக ஏதேனும் செய்யத் துடிப்பவர்கள்; திருமண உறவில் அதிக நாட்டமும் நம்பிக்கையும் உள்ளவர்கள்," என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். இதற்கு அழகி மர்லின் மன்றோவை உதாரணமாக வேறு காட்டியிருக்கிறார்.

அப்புறம் என்ன, ஆறு வகை மூக்குகளுக்கும் ஆறு இந்தியப் பெயரிட்டு விட்டால் போயிற்று!

கைரேகை ஜோசியம் கொடிகட்டிப் பறக்கும்போது மூக்கு ஜோசியம் சோடையா போய்விடும். வேண்டுமென்றால், பொடிபோடுகிறவர்களுக்கு எக்ஸ்டிராவாக தட்சிணை வாங்கிவிட்டால் போயிற்று!

ஜாதகங்களில் வேண்டுமானால் தோஷம் இல்லாமல் போகலாம். ஆனால், மூக்கு என்று இருந்தால் கண்டிப்பாக ஜலதோஷம் வந்தே தீருமல்லவா? அது போன்ற சமயங்களில் ஸ்பெஷலாக ’சளிப்பெயர்ச்சி’ என்று ஒரு கையடக்கப் புஸ்தகம் போட்டால் பட்டிதொட்டியெங்கும் பெட்டிக்கடைகளில் விற்பனை அமோகமாயிருக்கும்.

தொலைக்காட்சிகளில் ’பிரபல நாசி ஜோசியர்,’ தினசரி மூக்குப்பலன்களைச் சொல்லி காலைமலர்-ல் கலக்கலாம். யார் கண்டார்கள்? இனிவரும் நாட்களில் மூலை முக்கெல்லாம் மூக்கு ஜோசியர்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பி.கு: இந்த இடுகையை வாசித்து விட்டு, வியப்பில் மூக்கின் மீது விரலை வைப்பவர்கள், கவனமாக அவரவர் மூக்கின் மீது அவரவர் விரல்களை வைக்குமாறு கோரப்படுகிறார்கள்.

Monday, September 19, 2011

கவிதையா எளுதறீங்க கவிதை...?

ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

Thursday, September 15, 2011

ஒப்பாரிச்சத்தம்

மந்தாரம்பூவிருக்க மகிழம்பூதானிருக்க

மல்லியப்பூ பிச்சியுடன் செம்பருத்திதானிருக்க

செந்தூரப்பொட்டிருக்க செம்புமெட்டி காலிருக்க

சேலையிலே கையகலச் சரிகையுந்தான் நெய்திருக்க

வந்தார்க்குப் பரிமாற வகைவகையாச் சமைத்திருக்க

வாசலிலே நீர்தெளித்துக் கோலமும்தான் போட்டிருக்க

சொந்தமென்று நீயிருக்க சொக்கனிடம் போனதென்ன

சொல்லாமக் கொள்ளாம மாண்டதென்ன மகராசா?

சின்னப்பிராயத்தில் இதுபோலப் பல பாட்டுக்கள், பற்பலமுறை கேட்டுக் கேட்டு மனனமாயிருந்தன. ஒரு நாள் தற்செயலாக, விளையாட்டாக அதை முணுமுணுக்கவும் அம்மா ’நறுக்’கென்று தலையில் குட்டி ’கடன்காரா!’ என்று பல்லைக்கடித்தபடி எரிந்துவிழுந்ததும் ஞாபகத்துக்கு வருகிறது.

அதன் பெயர் ஒப்பாரி; அது பாடப்படுவது மகிழ்ச்சியிழந்த சந்தர்ப்பத்தில்; அதைப் பாடுவதைத் தொழிலாய்க் கொண்டிருந்த முத்தாளுப்பாட்டியின் முகத்தில் விழிப்பது அமங்கலம்; அவள் எதிர்ப்பட்டால் அபசகுனம் என்பதெல்லாம் ’ஏன்’ என்று விளங்காதபோதும், ’அது அப்படித்தான்,’ என்று கற்பிக்கப்பட்ட பருவம் அது. பார்த்தால் பயமும், பார்க்காத தருணங்களில் பரிகாசமும்தான் அந்த ’வெளங்காமூஞ்சி’யின் அடையாளங்களாய் இருந்தன.

கிராமப்புறங்களில் பிள்ளைகள் சாவுநிகழ்ந்த தெருக்களுக்கும் போகக்கூடாது என்று பெற்றோர்கள் அஞ்சுவார்கள். மரணம் என்ற அதிர்ச்சி குறித்துப் புரிந்து கொள்ளத்தக்க அறிவோ, துணிவோ குழந்தைகளுக்கு இல்லை என்பது அவர்களின் புரிதலாய் இருந்திருக்கக் கூடும்.

"செத்துப்போறதுன்னா என்ன?"

இந்தக் கேள்வியை எளிதில் யாரிடமும் கேட்டுவிட முடியாது. வீட்டில் கேட்டால் மொத்துவார்கள் அல்லது ’நல்ல விசயமாப் பேச மாட்டியா?’ என்று கடிந்து கொள்வார்கள். ஆகவே, அவ்வப்போது நிகழும் மரணமும், தெருக்களில் தென்படும் விசனம்சுமந்த முகங்களும், தலைவிரிகோலங்களும், இறுதியாத்திரைக்கான ஆயத்தங்களும், துக்க வீட்டில் வாசல் தெளிக்கப்படும்வரை வீட்டுக்குள் அடைத்துவைக்கப்பட்ட அனுபவங்களுமே குழந்தைப்பருவத்தில் மரணம் குறித்த சிந்தனையின் குறியீடுகளாய் இன்னும் இருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக - மரணத்தைப்போலவே அல்லது மரணத்தைக் காட்டிலும் பயங்கரமாகச் சித்தரிக்கப்பட்ட முத்தாளுப்பாட்டி!

பாதிகருமையும், பாதிநரையுமாய் தோளளவுக்கே இருந்த முடியின் நுனியில் ஒரு கொண்டை; காதிலும் மூக்கிலும் முன்பு எப்போதோ நகைகள் அணிந்திருந்ததன் ஆதாரமாக சிறிய துளைகள்; ஆணியால் அழுத்திக் கோடுபோட்டதுபோல முகமெங்கும் சுருக்கம் விழுந்த சருமம்; எப்போதும் வெற்றிலை குதப்புகிற வாய்; பெரும்பாலும் சுங்கிடிச்சேலை என்று இத்தனை வருடங்களுக்குப் பிறகும் முத்தாளுப்பாட்டியின் உருவத்தை ஓரளவு கண்ணுக்கு முன்பு கொண்டுவந்த நிறுத்த முடிகிறது. ஆனால், அவளைப் பார்த்து பயந்து ஓடியதும், அவள் முகத்தில் விழித்தால் அமங்கலம் என்று நம்பியதும் வாழ்க்கையின் வலுக்கட்டாயமான பல அசட்டுத்தனங்களில் ஒன்றாகத் தெரிகிறது. ஆனாலும், சமரசங்கள் நிரம்பிய வாழ்க்கையில், சராசரி மனிதனாகத் தினமும் தெரிந்தே செய்கிற பல அசட்டுத்தனங்களுக்கு முன்பு, குழந்தைப் பருவத்தின் அறிவின்மை எவ்வளவோ மேல் என்றும் தோன்றாமல் இல்லை.

மங்கலநிகழ்ச்சிகளுக்கு முத்தாளுவை யாரும் அழைத்தது கிடையாது. ஏதேனும் ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால் பெரும்பாலும் யாரும் அழைக்காமலே வந்து விடுவாள். சிலர் அவளை வாசலிலேயே வழிமறித்து, கையில் காசைத்திணித்துத் திருப்பியனுப்பி விடுவார்கள். அப்படியில்லாதபோது, வீட்டுக்குள் விடுவிடுவென்று நுழைந்து, தாழ்வாரம் வரைக்கும் சென்று கால்நீட்டி அமர்ந்துகொள்வாள். பிறகு, சாவகாசமாக இடுப்பிலிருந்து ஒரு பனையோலைப்பையை எடுத்து, அதிலிருந்து வாழைமட்டையில் சுற்றப்பட்டிருக்கும் புகையிலையைக் கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மெல்வாள். சிறிது நேரம் எச்சில் ஊற ஊற சவைத்தபிறகு, மெதுவாய்க் குரலெடுத்து ஒப்பாரியைத் தொடங்குவாள்.

சில சமயங்களில், களைத்துப்போயோ அல்லது ’எப்படியோ செத்து ஒழிஞ்சுதே,’ என்ற அயர்ச்சி காரணமாகவோ அழுவதை நிறுத்தியிருக்கிறவர்களும் முத்தாளுப்பாட்டியின் ஒப்பாரி ஆரம்பித்த சில நேரத்தில் மீண்டும் அழத்தொடங்குவார்கள். அழுவதற்குத் திராணியற்றவர்களும், அமைதியை விரும்புகிறவர்களும் ’அந்த முண்டச்சிக்குக் காசை க் கொடுத்து அனுப்பு,’ என்று சலித்துக்கொள்வதுமுண்டு. என் பாட்டி இறந்தபோது இதில் எல்லாவற்றையும் மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அப்போது, என் பாட்டியின் பிரேதத்தைக் காட்டிலும், உயிரோடிருந்த முத்தாளுவின் முகமே என்னை அதிகமாய் அச்சுறுத்தியிருக்கிறது.

இப்போது யோசித்தால், முத்தாளு போன்றவர்களுக்கு இப்படியொரு பிழைப்பைக் கொடுத்துவிட்டு, அவர்கள் மீதே சலித்துக்கொள்ள என்ன நியாயமிருக்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது. அவமானம், வெறுப்பு எல்லாவற்றையும் தினசரியும் சகித்துக்கொண்டு, உதாசீனப்படுத்துவதன்றி வேறு கௌரவமே கிட்டாத ஒரு பிழைப்புக்கு ஆட்பட எத்தனை பேரால் முடியும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. தெருவில் நாம் நடக்கும்போது, நம்மை விடியாமூஞ்சி என்று யாரேனும் சொன்னாலோ, நாம் எதிர்ப்படுவது அபசகுனம் அல்லது அமங்கலம் என்று சொன்னாலோ நம்மில் எத்தனை பேரால் பொறுமையாய், காறித்துப்பாமல் கடந்துபோக முடியும் என்று கேட்கத்தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால், முத்தாளுப்பாட்டியின் பிழைப்பு ஒரு வேசியின் வாழ்க்கையைக் காட்டிலும் அதிக அனுதாபத்துக்குரியது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

ஐம்பதோ, நூறோ வாங்கிக்கொண்டு தெருமுனைக்கடையில் போய், அரை கிலோ அரிசி, பருப்பு, புளி, உப்பு, மிளகாய் தலா ஒரு ரூபாய்க்கும், சற்றே ஆடம்பரமாய் கொஞ்சம் பன்னீர்ப்புகையிலையும் வாசனைச்சுண்ணாம்பும் வாங்கிக்கொண்டு போகிறவளைப் பார்க்கும்போது, ’இன்னிக்கு இவளுக்கு யோகம்தான்,’ என்று மனம் குரூரமாய்ச் சொல்லிக் கேலி செய்யும்.

இதெல்லாம் எப்போதோ, எத்தனை வருடங்களுக்கு முன்னர் என்று சட்டென்று ஞாபகப்படுத்திச் சொல்ல முடியாத மிகத் தூரமாகச் சென்றுவிட்ட கடந்தகாலத்தின் நிகழ்வுகள். அப்போதெல்லாம் ’அடுத்து எவர் வீட்டில் யார்...?’ என்றுதான் அவள் கணக்குப் போட்டிருப்பாளோ என்று இரக்கமில்லாத மனம் அவளின் மனவோட்டம்குறித்த கேள்வி எழுப்பும்.

காலம் செல்லச் செல்ல, மரணம் குறித்த அதிர்ச்சிகளும், குழப்பங்களும், வியப்புகளும் மெல்ல மெல்லக் குறைந்துவிட்ட நிலையில், அவள் அப்போது அப்படியெல்லாம் யோசித்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் புலப்படுகிறது. ஒருவேளை, சராசரி மனிதர்களைப் போலவே அவளும் தனது சாவைப்பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கக் கூடும்.

Sunday, September 11, 2011

மேரே பிரதர் கி துல்ஹன்-கத்ரீனாவுக்கு ஜே!

மேரே பிரதர் கி துல்ஹன் (என் அண்ணனின் மணப்பெண்-என்று மொழிபெயர்த்தால் சற்றே டகால்டியாய் தொனிக்கிறது) ஒரு பதினைந்து வருடங்களுக்கு முந்தைய பாணியைப் பின்பற்றி, படம் முழுக்க வசவசவென்று பாடல்களை வைத்துத் தாளித்த ஒரு படம். ஆனால், இசை தவிரவும் இந்தப் படத்தில் கவனிக்கத்தக்க சில அம்சங்கள் இல்லாமல் இல்லை. (குறிப்பாக, கத்ரீனா கைஃபின் பக்தகோடிகள் தவறாமல் பார்த்து விடவும்; இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தும்!)

கதை என்று வியந்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. யுகயுகமாய் அரைத்துப் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு தொன்றுதொட்டு விற்பனையாகிவரும் அதே முக்கோணக்காதல் மாவுதான்! இருந்தாலும், திரைக்கதையை சாமர்த்தியமாக, ரசிகர்களை இழுத்துப் பிடித்து வைக்குமளவுக்கு நகர்த்தியிருக்கிறார்கள்.

லவ், குஷ் இருவரும் அக்னிஹோத்ரி குடும்பத்தில் சகோதரர்கள். லண்டனில் வசிக்கும் லவ் காதலியோடு ஏற்பட்ட பிணக்கினால், ஒரு வீம்பில் தன் தம்பி குஷ்ஷிடம் தனக்காக ஒரு பெண் தேடுமாறு சொல்கிறார். பாலிவுட்டில் உதவி இயக்குனராய் இருக்கும் குஷ், அண்ணனுக்காக பெண்தேடும் படலத்தில் மும்முரமாக இறங்குகிறார். இந்தத் தேடலில் பல சுவாரசியமான சம்பவங்கள், சில மொக்கை காமெடிகளுக்குப் பிறகு கதாநாயகி டிம்பிளைச் சந்திக்கிறார். இங்கு ஒரு சிறிய கொசுவத்தி சுழல்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே டிம்பிளை குஷ் சந்தித்திருக்கிறான். அண்ணனுக்கு அவள் பொருத்தமாக இருப்பாள் என்றெண்ணி, திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்கிறவனுக்கு, தன்னையுமறியாமல் அவள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருப்பது புரிகிறது. அதன்பிறகு, விறுவிறுவென்று கதையில் ஏற்படும் சில சின்னச் சின்னத் திருப்பங்களும், படம் நெடுக விரவிக்கிடக்கின்ற பாடல்களுமாய், எல்லாருக்கும் தெரிந்த முடிவை நோக்கியே படத்தை முடிந்தவரை கழுத்தறுக்காமல் நகர்த்தியிருக்கிறார்கள்.

இந்த மாதிரி ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸும், யஷ்ராஜ் பிலிம்ஸுமே கூட ஏகப்பட்ட படங்களை எடுத்திருக்கிறார்கள் என்றாலும், இந்தப் படத்தை நடிகநடிகைகளும், இயக்குனர்களும் பிரமாதமாகத் தேற்றியிருக்கிறார்கள். லவ் அக்னிஹோத்ரியாக நடித்திருக்கிற அலி ஜபர், தம்பி குஷ்ஷாக நடித்திருக்கும் இம்ரான் கான், டிம்பிளாக நடித்திருக்கிற கத்ரீனா கைஃப் ஆகிய மூவரும் கொஞ்சம் கூட தளர்ச்சி காட்டாமல், கொடுத்த பாத்திரத்தை பெரும்பாலும் கனகச்சிதமாகவும், சில இடங்களில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகவும் செய்திருக்கிறார்கள்.

குஷ் அக்னிஹோத்ரியாக வருகிற இம்ரான் கான், அவருக்கென்றே உருவாக்கப்பட்டது போன்ற கதாபாத்திரம் என்பதால், மனிதர் அனாயாசமாக ஊதித்தள்ளியிருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல சீனியர் நடிகர்களுடன் நடித்த கத்ரீனாவுக்கும் இவருக்கும் தென்படும் பிரமிக்கத்தக்க ஜோடிப்பொருத்தம்.

அண்ணனாக வரும் அலி ஜபர் பாகிஸ்தானிய நடிகராம். அதிகம் வசனம் இல்லாதபோதும், அவரது டைமிங் காமெடியும், மெனக்கெடும் நடிப்பும் அவரது திறமையை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றன.

பெரும்பாலும் கண்களைச் சிமிட்டிக்கொண்டு, பார்பி பொம்மை போலச் சிரித்து வந்து போகும் கத்ரீனா கைஃப் இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு, ஓரிரு காட்சிகளில் சற்று ’ஓவரோ?’ என்றுகூட யோசிக்க வைக்கிற அளவுக்கு நடித்திருக்கிறார். வெறும் சிக் உடை சிங்காரியாய் இதுவரை வலம்வந்த கத்ரீனா இந்தப் படத்தில் திரையிலிருந்து மனதுக்குள் இறங்கி நிரம்பிவிடுகிறார். தைரியமாக இது கத்ரீனா கைஃபின் படம் என்று (அவரைப் போல) கண்சிமிட்டாமலே சொல்லிவிடலாம்.

சுமாராக இந்தி தெரிந்தவர்களும் புரிந்து கொள்கிற அளவுக்கு எளிமையாகவும், நறுக்கென்றும் வசனம் இருப்பது இன்னொரு நல்ல விஷயம். இயல்பான, மெலிதான நகைச்சுவைக் கதையென்பதால், தனது வரம்பினை அறிந்து வசனகர்த்தா பணியாற்றியிருப்பது புலப்படுகிறது.

ஒளிப்பதிவு பளிச்சென்று, கண்ணுக்குக் குளுமையாய் ஜிகினா வேலைகள் காட்டாமல் கதைக்களத்தையும், பாத்திரங்களையும் இயல்பான அழகாய்க் காட்டியிருப்பது இன்னொரு ஆச்சரியம். (கத்ரீனா முன்னை விட அழகாய்த் தெரிவதற்கும் அதுதான் காரணமோ?)

இயக்குனர் அலி அப்பாஸ் ஜபருக்கு இது முதல் படமாம்! இருந்தபோதிலும், நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாரையும் செமத்தியாக வேலை வாங்கியிருப்பதற்கே ஒரு பாராட்டுத் தெரிவித்தாக வேண்டும். பலமுறை பார்த்த கதையை, விதிவிலக்காய் சில காட்சிகள் தவிர, பெரும்பாலும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியபடி கோர்வையாகச் சொல்லியிருப்பது அழகு! இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு, சற்றே வேகம் குறைந்து, அங்கங்கே தலைசொரிய நேரிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தை தலைமேல் சுமந்து கொண்டு போகிற இன்னொரு அம்சம் சொஹைல் சென்-னின் இசை! நகைச்சுவைக் கதைக்கு ஏற்றவாறு, வேடிக்கையும் இனிமையும் கலந்து சற்றே திரைக்கதை தளரும்போதெல்லாம் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

பெரிதாகக் கதைபற்றிய கவலையில்லாமல், முகம் சுளிக்க வைக்கிற வசனங்களோ, காட்சியமைப்போ இல்லாத ஒரு பொழுதுபோக்குப் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இது குஷி தருகிற படம். கூடவே கத்ரீனாவின் விசிறியாய் இருந்து தொலைத்துவிட்டால், ’முடிந்தால் இன்னொரு தடவை பார்க்கணும்,’ என்று ஆசைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - என்னை மாதிரி!

Friday, September 9, 2011

உடல்நல விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட டாஸ்மாக்


சென்னையிலிருந்து நமது சிறப்பு நிருபர்: மந்தாரம்புதூர் மப்பண்ணன்.

சென்னை அண்ணா சாலையில் புதிதாக எழும்பியுள்ள அடுக்கு மாடிக்கட்டிடத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகிலேயே மிகப்பெரிய கட்சிக்கட்டிடத்தை எழுப்பிய பெருமிதம் குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் முகத்தில், பொட்டென்று திறந்த பீர்பாட்டிலைப் போலப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

"மற்ற கட்சிகளைப் போல நாங்கள் தொண்டர்களிடமிருந்து நிதிவசூலித்து இந்தக் கட்டிடத்தை எழுப்பவில்லை," என்று உணர்ச்சிபொங்கக் கூறிய கிருஷ்ணசாமி, "எமது கட்சித்தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும் கால்கடுக்கக் காத்திருந்து சேகரித்த காலிபாட்டில்களைக் காயலான்கடையில் விற்ற பணத்தில்தான் ஒரே ஆண்டில் இப்படியொரு கட்டிடத்தைக் கட்ட முடிந்தது." என்று குறிப்பிட்டபோது, கு.மு.க தொண்டர்கள் குதூகலத்தோடு "சியர்ஸ்! சியர்ஸ்!!" என்று கூக்குரல் எழுப்பினர். இருக்காதா பின்னே? சென்ற 2009-10 நிதியாண்டில் காலி பாட்டில்களை விற்ற கணக்கில் மட்டும் அரசுக்கே ரூ.500 கோடி வருவாய் கிடைத்ததாமே?

இதைத் தொடர்ந்து நமது கேள்விகளுக்கு, கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி அளித்த பதில்கள் பின்வருமாறு:

கேள்வி: இந்த ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ.14,965 கோடி வருமானம் தமிழக அரசுக்குக் கிடைத்திருப்பதாக, சட்டசபையில் விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே? இது குறித்து உங்களது கருத்தென்ன?

பதில்: மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு ரவுண்டிலும் மப்பு அதிகரிப்பது போல ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு வருமானமும் அதிகரித்து வருவது எங்கள் கட்சித்தொண்டர்களுக்கு மாநிலத்தின் மீதுள்ள அக்கறையைப் பறைசாற்றுகிறது. 1995-96-ம் ஆண்டில் இந்த வருவாய் வெறும் ரூ. 1,425 கோடியாக இருந்ததைக் கவனித்தாலே, இந்த ஐந்தாண்டுகளில் எங்களது கட்சியின் வளர்ச்சியை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி: அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க தகவல்கள் இருக்கின்றனவா?

பதில்: தொடர்ந்து பீர்வகைகளின் விற்பனை இரண்டாவது இடத்திலேயே இருப்பது கவலை தருவதாக உள்ளது. மதுவகைகள் கடந்த நிதியாண்டில் 480.46 லட்சம் பெட்டிகள் விற்பனையாகியிருக்கும்போது, பீர் வகைகள் வெறும் 270.88 லட்சம் பெட்டிகள் மட்டுமே விற்பனையாகியிருப்பது, இன்னும் எங்களது கட்சிக் கொள்கைகள் தமிழகத்தை முழுமையாகச் சென்றடையவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, எங்கள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் "சாண்ட்பைப்பர்" சபாபதியின் தலைமையில் "பீரின்றி அமையாது உலகு," என்ற கோஷத்தை முன்னிறுத்தி ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் குடிமக்களும் இந்தப் போராட்டத்துக்கு பீராதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி: இப்படியொரு விழிப்புணர்ச்சி தேவைதானா?

பதில்: என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட ’தினமும் பீர் குடிப்பது உடல்நலத்துக்கு நல்லது,’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்களே? அதனால் தான் ’உடல் மண்ணுக்கு; குடல் பீருக்கு," என்பதை எங்கள் கட்சியின் கோஷமாகவே வைத்திருக்கிறோம்.

கேள்வி: இப்படியொரு விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தை மேற்கொண்டால், பிற மதுவகைகளின் விற்பனை பாதிக்கப்படாதா?

பதில்: அது எப்படி பாதிக்கும்? அதே டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்களே? ’ஒரு நாளைக்கு இரண்டு ரவுண்டு மது அருந்துவதும் இருதயத்துக்கு மிகவும் நல்லது என்று?

கேள்வி: ஆனால், உங்கள் தொண்டர்கள் இரண்டு ரவுண்டோடு நிறுத்துவதில்லையே?

பதில்: அப்படியெல்லாம் அபாண்டமாகச் சொல்லக்கூடாது. எங்கள் தொண்டர்கள் ஒரே கடையில் இரண்டு ரவுண்டுக்கு மேல் அடிக்கக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். இரண்டு ரவுண்டு போதவில்லையென்றால், அடுத்த கடைக்குப் போய் மேலும் இரண்டு ரவுண்டு அடிக்கலாம். அது கட்சியின் விதிமுறை மீறலாகக் கருதப்பட மாட்டாது.

இன்னும் சொல்லப்போனால், எங்களது கட்சி நிர்வாகிகளில் பலர் தினமும் இரண்டு ரவுண்டு விஸ்கியும், ஒரு பாட்டில் பீரும் குடித்து அவரவர் உடல்நலத்தைச் சிறப்பாகப் பேணி வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: அப்படியென்றால், அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த ஆண்டும் மொத்தம் எத்தனை வெள்ளரிக்காய், கொய்யாக்காய், மாங்காய் விற்பனையாகியது என்ற விபரத்தை அரசு தரவில்லை. அதே போல எத்தனை ஆம்லெட், எத்தனை ஆப்பாயில் என்ற கணக்கும் வெளியிடப்படவில்லை. குறைந்தபட்சம் எத்தனை டன் ஊறுகாய் விற்பனையாயிற்று, அதில் மாங்காய் ஊறுகாய் எவ்வளவு, எலுமிச்சை ஊறுகாய் எவ்வளவு என்பன போன்ற அத்தியாவசியத் தகவல்களையாவது அரசு வெளியிட வேண்டாமா?

கேள்வி: உங்களது கட்சி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்குவதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டுமுதல் எட்டு நாட்கள் விடுமுறையாமே?

பதில்: இது ஜனநாயக விரோதப்போக்கு! குடியரசு நாட்டிலே, குடியரசு தினத்தன்று குடிக்க முடியாது என்பது எதேச்சாதிகாரம் அல்லவா? இதைக் கண்டித்து எமது பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி காலவரையற்ற "ஜின்"னாவிரதம் இருக்கப்போகிறார். எமது கோரிக்கையை அரசு ஏற்கும்வரையில் அவர் ஜின் தவிர பிற சரக்குகளை மட்டுமே அருந்துவார்.

கேள்வி: உங்கள் கட்சி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து எதிர்க்கிறதே? திடீரென்று தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தி விடும் என்ற பயமில்லையா?

பதில்: டாஸ்மாக் கடைகள் விஷயத்தைப் பொறுத்தவரையில் அனைத்துக் கட்சிகளுமே எங்களது கொள்கையைத் தான் கடைபிடிக்கின்றன. நாங்கள் இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு இலவசங்கள் அளிக்க அரசுக்கு ஏது நிதி? ஆகையால், மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.

கேள்வி: ஆனால், உங்களது கட்சியின் கோரிக்கைகள் தொடர்ந்து அரசால் நிராகரிக்கப்படுகின்றனவே?

பதில்: உண்மைதான்! ஒரு குவார்ட்டருக்கு ஒரு வாட்டர் பாக்கெட் இலவசமாகத் தருவதாக தேர்தலின்போது வாக்களித்ததை, அரசியல்வாதிகளின் பேச்சு விடிஞ்சால் போச்சு என்ற பழமொழிக்கேற்ப மறந்துவிட்டார்கள்.

கேள்வி: உங்களது கட்சியில் உங்களது குடும்பத்தாருக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகக் கூறி, முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி போர்க்கொடி உயர்த்தியிருக்கிறாரே?

பதில்: இது அபாண்டமான குற்றச்சாட்டு! ஒரு முறை எனக்கு மப்பு கொஞ்சம் அதிகமாகியிருக்கவே, நள்ளிரவுக்கு மேல் என்னை கோவிந்தசாமி ஒரு மீன்பாடி வண்டியிலே வீட்டுக்குக் கொண்டு சேர்த்தார். கதவைத் திறந்த என் மனைவி, தூக்கக்கலக்கத்தில் எனக்குப் பதிலாக கோவிந்தசாமியை நையப்புடைத்து விட்டார். இதற்காக, என் கட்சியில் என் குடும்பத்தாரின் தலையீடு இருப்பதாகச் சொல்வதா?

கேள்வி: கடைசியாக, அரசு உடனடியாக கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டி ஏதேனும் கோரிக்கைகளை வைப்பீர்களா?

பதில்: நிச்சயம்! ’இந்தியா கிராமங்களில் வாழ்கிறது,’ என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். ஆனால், அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, நகரங்களில்
3,562 டாஸ்மாக் கடைகள் இருக்கையில், கிராமப்புறங்களில் வெறும் 3,128 கடைகள் மட்டுமே இருப்பதாக அறிய முடிகிறது. படித்தவர்கள் பெரும்பாலும் வசிக்கும் நகரங்களில் இருப்பதை விடவும், ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் இன்னும் பல கடைகளைத் திறந்தால், இனி வருகிற தேர்தல்களில் இலவச ஹ்யூண்டாய் கார்கள் அளிப்பதாகவும் வாக்குறுதியளிக்க முடியும். எனவே, மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இதுகுறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுவோம்.

பேட்டியின் முடிவில், நிருபர்களுக்கு மார்கோ போலோ பீரும், காரசேவும் வழங்கப்பட்டது.

Tuesday, September 6, 2011

வாஜி வாஜி வாஜி!

விநாயகர் சதுர்த்தி முடிந்து, களைத்துப்போய் ’அக்கடா’வென்று உட்கார்ந்திருந்த இஷ்டசித்தி விநாயகருக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு, பாண்டிபஜாரில் பஸ்ஸுக்குக் காத்திருப்பவனைப் போலப் புலம்ப ஆரம்பித்தேன்.

"பிள்ளையாரப்பா! இத்தனை வருசமா கும்புடுறேன். பேருமட்டும் பெரிசா இஷ்டசித்தி விநாயகர்னு வச்சிக்கிட்டு எனக்கு இப்படிக் கஷ்டசித்தியை மட்டுமே கொடுக்கிறியே! இவ்வளவு புலம்பியும் கண்டுக்காம இருந்தா இனிமேலு உன்னை மன்மோகன்சிங் விநாயகர்னுதான் கூப்பிடுவேன் சொல்லிட்டேன்!"

"சேட்டை!" என்று என் நெற்றியில் விபூதியைத் தீட்டினார் சிவாச்சாரியார். "இஷ்டசித்திப் பிராப்தி ரஸ்து!"

"சித்தியாவது பெரியம்மாவாவது! இத்தயேதான் அஞ்சு வருசமா நீங்களும் சொல்றீங்க!" என்று அபிராமிவாசல் வரைக்கும் போய் ஹவுஸ்புல் போர்டு பார்த்தவனாய்ச் சலித்துக்கொண்டேன்.

"இஷ்டசித்திங்குறது ரொம்ப பெரிய விஷயம்!" என்று விளக்கினார் சிவாச்சாரியார். "முதல்லே அஷ்டசித்திக்கு ட்ரை பண்ணு!"

"அஷ்டசித்தியா? அந்தப் புள்ளையார் எந்த ஏரியாவுலே இருக்காரு?"

"இவர்கிட்டேயே கேளு! அதுக்கு முன்னாலே அஷ்டசித்தின்னா என்னான்னு தெரியுமா?"

"இல்லை சாமி, எனக்கு அம்பத்தூர் சித்தியை மட்டும் தான் தெரியும்."

"அபிஷ்டூ! மொத்தம் எட்டு சித்தியிருக்குடா! முதலாவது சித்தியோட பேரு அனிமா!"

"அனிமாவா? ஆஸ்பத்திரியிலே டியூபைச் சொருகிக் கொடுப்பாங்களே அதுவா?"

"அது இனிமாடா! அனிமான்னா..உடம்பை எவ்வளவு வேணுமோ அவ்வளவு சின்னதாக்கிக்கலாம்!"

"இதுக்கு மேலே என் உடம்பைச் சின்னதாக்கினா, எங்க ஜி.எம். என்னை வச்சுக் காதுகுடைய ஆரம்பிச்சிருவாரு! அடுத்தது....?"

"அடுத்தது மஹிமா..!"

"யாரு நம்ம மஹிமா சௌத்ரியா? பர்தேஸ் படத்துலே ஷாருக் கான் கூட நடிச்சாங்களே?"

"கோவிலாச்சேன்னு பார்க்கிறேன். நீ உருப்படவே மாட்டியா? மஹிமா-ன்னா உடம்பை எவ்வளவு வேணுமோ அவ்வளவு பெரிசாக்கலாம்."

"அது வேணாம் சாமி! துணிமணி வாங்குறதும் கஷ்டம்;தோய்க்கிறதும் கஷ்டம்!"

"சரி, உனக்கு உடம்பு சம்பந்தமான சித்தி பிடிக்கலே போலிருக்கு! மூணாவது சித்தி கரிமா - உடம்போட எடையை அதிகமாக்குறது. நாலாவது லஹிமா - உடம்போட எடையை சல்லிசாக்கிக்கிறது."

"என் உடம்பு ஏற்கனவே பாப்புலர் அப்பளம் மாதிரி சல்லிசாத்தானிருக்கு! அடுத்தது...?"

"அடுத்தது பிராப்தி! நினைச்ச நேரத்துலே நினைச்ச இடத்துக்குப் போறது...!"

"ஹை! இது நல்லாயிருக்கே! டிக்கெட்டே வாங்க வேண்டாம்! சீசன் டிக்கெட்டுக்கு வரிசையிலே நிக்க வேண்டாம். இது எனக்குக் கிடைக்க நான் என்ன பண்ணனும் சாமி?"

"சுத்தமான மனசோட பகவானைப் பிரார்த்திக்கணும்."

"சுத்தமான மனசா? அது கிடைக்க ஏதாவது ஷார்ட்-கட் இருக்கா? ஒரு சாய்ஸ் கொடுங்க சாமி!"

"இதென்ன பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சையா? மனசிலே எந்தக் களங்கமும் இல்லாம கண்ணை முடி பகவானைப் பிரார்த்தனை பண்ணினா கண்டிப்பா பிராப்தி கிடைக்கும்!"

"தேங்க்ஸ் சாமி! ட்ரை பண்றேன்!"

"மீதி ரெண்டு...?"

"நாளைக்கு கேட்டுக்கறேன். இன்னிக்கு இவ்வளவு போதும்!"

வீடு திரும்பி, அடுத்த பதிவுக்கு ஐடியாவுக்காக, எல்லா தொலைக்காட்சிகளையும் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு சேனலில் ’பணம் படைத்தவன்’ படத்திலிருந்து ’பவழக்கொடியிலே முத்துக்கள்..." பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஆஹா! தலைவர் ஷாஜஹான் மாதிரியும், கே.ஆர்.விஜயா மும்தாஜ் மாதிரியும் கெட்-அப்பில் தாஜ்மஹாலில் பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், மனதுக்குள் இன்னும் தாஜ்மஹாலை முழுசாகப் பார்க்கவில்லை என்ற பழைய ஏக்கம், ஊறுகாய் பாட்டிலின் மூடியைத் திறந்ததும் குப்பென்று பீறிட்டுக் கிளம்பும் நெடிபோலக் கிளம்பியது.

ஒருசில வருடங்களுக்கு முன்னர் தில்லி சென்றிருந்தபோது, கன்னாட் பிளேசில் ஒரு பாடாவதி டிராவல்ஸின் பஸ்-சில் ஏறி ஆக்ரா-மதுராவெல்லாம் பார்க்கக் கிளம்பியிருந்தேன். அன்று பவுர்ணமியாக இருந்ததால், நிலவொளியில் தாஜ்மஹாலைக் காட்டப்போவதாகச் சொல்லிய படுபாவிகள், ஒருவழியாக தாஜ்மஹாலுக்குத் திரும்பியபோது, மழை கொட்டோ கொட்டேன்று கொட்டிக்கொண்டிருக்க, மின்தடை காரணமாக தாஜ்மஹாலே இருளில் மூழ்கியிருந்தது. வேறு என்ன செய்ய, தாஜ்மஹாலை முடிந்தவரை தடவிப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டி வந்தது.

ஆனால், ஒன்று! இந்தியாவிலேயே தாஜ்மஹாலில் சோப்புப் போட்டுக் குளித்தவன் நான் ஒருவனாகத் தானிருப்பேன்; தாஜ்மஹாலின் மேல்தளத்திலிருந்து குற்றால அருவிபோல அவ்வளவு தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.

வாழ்க்கையில் ஒருமுறையாவது தாஜ்மஹாலைப் பகல்வெளிச்சத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டபடியே உறங்கப்போனேன். சற்றே கண்ணயர்ந்ததுதான் தாமதம்....

"சேட்டைஜீ! சேட்டைஜீ!"

திடுக்கிட்டுக் கண்விழித்தேன். யாரது இந்தியிலே அழைப்பது? இதுவரை மார்வாடியிடம் கடன் எதுவும் வாங்கவில்லையே?

"சேட்டைஜீ! உட்டியே சேட்டைஜீ!"

"உட்டியேவா? என்னத்தையா உட்டேன்? யாருய்யா ராத்திரிலே வந்து கிருஷி-தர்ஷன் புரோகிராம் நடத்துறது?"

"சேட்டைஜீ! நம்மள் லக்னோ, உ.பி-லேருந்து வர்றான். நிம்மளை ஆக்ராவுக்குக் கொண்டு போறான்!"

"என்னது? ஆக்ராவுக்கா? தாஜ்மஹால் இருக்கே அந்த ஆக்ராவுக்கா?"

"ஹான் சேட்டைஜீ! உட்டியே ஜீ! ஆவோஜீ!"

"இருய்யா, எழுந்துக்கிறதுக்குள்ளே ஆவோஜீ, பார்லே-ஜீ, டூ-ஜீன்னு அடுக்கிட்டே போறியே? இந்த நேரத்துலே டிரெயின் கூட இல்லையே?"

"ஃபிகர் மத் கரோஜீ!"

"என்னது? ஃபிகரா? அடப்பாவி, யாருய்யா ஃபிகரைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க?"

"நான் சொல்றான் - கவலைப்படாதீங்கஜீ! நம்மள் பிரைவேட் ஜெட் பிளேன் கொண்டுவந்திருக்கான் ஜீ! உட்டியேஜீ! ஆவோஜீ!"

ஆஹா! சிவாச்சாரியார் சொன்னது மாதிரியே எனக்கு பிராப்தி சித்தி கிடைத்து விட்டதா? சற்று முன்புதான் தாஜ்மஹால் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்; அதற்குள் பிரைவேட் ஜெட் பிளேன் வந்து விட்டதே! பிள்ளையாரப்பா, யூ ஆர் ரியலி கிரேட்!

மீனம்பாக்கத்துக்கு விரைந்து, அந்த ஆசாமியுடன் ஆடம்பரமான பிரைவேட் ஜெட் விமானத்தில் ஏறியமர்ந்ததும், விட்ட இடத்திலிருந்து உறக்கத்தைத் தொடர்ந்தேன். கனவில் ஷாஜஹான் போல நானும், மும்தாஜ் போல சரியாக முகம் தெரியாத ஒரு சுமாரான பெண்ணும் (அது போதாதா?) "பவழக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகையென்றே பேராகும்..." பாடினோம். ஒரு வழியாக விமானம் ஆக்ராவைத் தொட்டதும் கண்விழித்தேன்.

"சேட்டைஜீ! ஆக்ரா வந்திட்டான்ஜீ! உட்டியேஜீ! உத்தர்ஜாயியேஜீ!"

கீழே இறங்கியதுதான் தாமதம்; வெள்ளைச்சீருடையும், தொப்பியும் அணிந்த சிலர் என்னைக் குண்டுக்கட்டாகத் தூக்கி, ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

"யோவ், யாருய்யா? வீட்டுலே சிவனேன்னு தூங்கிட்டிருந்தவனை பிளேனிலே கூட்டிக்கிட்டு வந்து எங்கேய்யா தள்ளிட்டுப்போறீங்க?"

"டேய் சேட்டை!" என்றான் என்னை அழைத்துவந்த ஆசாமி. "எங்க பெஹன்ஜீ மாயாவதியைப் பத்தி ஒருவருசத்துக்கு முன்னாலே காக்கா..காக்கா-ன்னு எழுதினே இல்லே? அதுக்குத்தாண்டா உன்னை அவங்களோட பிரைவேட் ஜெட்டுலே தூக்கிட்டு வந்திருக்கோம்."

"என்னது? ஒரு இடுகை எழுதினதுக்கா என்னை ஜெட் பிளேன்-லே தூக்கிட்டு வந்திருக்கீங்க? யோவ், நான் அவ்வளவு ’வொர்த்’ எல்லாம் கிடையாதுய்யா! என்னை விடுங்க!"

"வாயை மூடு! உனக்கு வொர்த் இல்லேன்னு தெரியாதா எங்களுக்கு? எங்க பெஹன்ஜீ அவங்களுக்குப் பிடிச்ச செருப்பைக் கொண்டுவர்றதுக்கே லக்னோவிலேருந்து மும்பைக்கு பிரைவேட் பிளேனை அனுப்புறவங்க! உன்னைக் கொண்டு வர்றதா பெரிய விஷயம்?"

"ஐயையோ, அப்படீன்னா என்னை மாயாவதி மேடம் கிட்டேயா கொண்டு போறீங்க?"

"இவரு பெரிய வி.ஐ.பி, மேடம் கிட்டே கொண்டு போறதுக்கு! ஆக்ரா-ன்னா தாஜ்மஹால் மட்டும்தான் பிரபலம்னு நினைச்சியா சேட்டை? இன்னொரு பிரபலமான சமாச்சாரமும் ஆக்ராவுலே இருக்கு; பைத்தியக்கார ஆஸ்பத்திரி! அங்கேதான் உன்னை அட்மிட் பண்ணக் கூட்டிக்கிட்டுப் போறோம். புரியுதா?"

"ஐயையோ!" அலறியபடி நான் உறக்கத்திலிருந்து கண்விழித்தேன். "என்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணாதீங்க! அட் லீஸ்ட், அங்கே இருக்கிற பைத்தியங்க மேலே கருணை காட்டியாவது என்னை விட்டிருங்க! ப்ளீஸ்!! என்னை விடுங்க! முஜே சோடோ! சோடோ!"

அலறிமுடித்தபிறகுதான் புரிந்தது - அட, எல்லாம் கனவு!

நான் சென்னையில்தான் இருக்கிறேன்! ஆஹா, விக்கிலீக்ஸ் மாயாவதி பற்றி வெளியிட்ட தகவல்களைக் கண்டித்து, மாயாவதி விக்கிலீக்ஸ் அஸாஞ்சைஆக்ரா பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அனுமதிக்கத்தயார்’ என்று சொன்னதையும், ’மாயாவதியின் பிரைவேட் ஜெட் பிளேனை அனுப்பினால் இந்தியாவுக்கு வரத்தயார்,’ என்று அசாஞ்ச் சொன்னதையும் பற்றி யோசித்தபடியே உறங்கியதால், இப்படியோரு பயங்கரமான கனவு வந்திருக்குமோ?

ஐயா சாமி, இனிமேல் பெஹன்ஜீ மாயாவதியைப் பற்றி ஒரு இடுகை கூட எழுதக்கூடாது! இனிமேல் ஆக்ராவும் வேண்டாம்; தாஜ்மஹாலும் வேண்டாம்.

இனிமேல், தாஜ்மஹால் டீ கூட குடிக்க மாட்டேன் சாமி! ஆளை விடுங்க!

Sunday, September 4, 2011

பேல்பூரி-ஸ்டால்:04-09-11

குருவே சரணம்!

எப்போதோ படித்து அரைகுறையாய் ஞாபகமிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை; கிட்டத்தட்ட இப்படி இருக்கும்...!

படித்துப் படித்துச் சொன்னார்
கணக்கு வாத்தியார்
"பக்கத்திலிருந்து கடன் வாங்கு"
அப்போது புரியவில்லை
இப்போது
வாங்கிக்கொண்டிருக்கிறேன் கடனை!

வாத்தியார்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் எப்பொழுதோ உருப்பட்டிருப்போம்,’ என்று புலம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். ஆகவே, என்னைப் போன்றவர்களும், ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு உருப்பட்டவர்களும் 05-09-2011 அன்று நமது அனைத்து வாத்தியார்களுக்கும் மனதாற ஒரு வார்த்தை ’நன்றி’ யாவது சொல்வோமாக!

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

தகவல் நேரம்

என்சைக்ளோபீடியா, விக்கிபீடியா என்று பல ’பீடியா’க்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது தெற்கு ஆசிய வழக்குச் சொற்களைச் சேகரிக்கிற ஒரு புதிய முயற்சிக்கு ’சமோசாபீடியா’ என்று பெயர் சூட்டி, இதுவரை 2700 வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

இதோ, சமோசாபீடியாவின் வலைத்தள முகவரி!

இதே போல, தமிழகத்தில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற வார்த்தைகளை யாராவது ’இட்லிபீடியா’ அல்லது ’பொங்கல்பீடியா’ என்று தொகுத்தால், என் போன்ற வலைப்பதிவர்களுக்கு மொக்கைபோட உதவியாய் இருக்கும்.

நியூஸ் ரீல்!

கணவரை பழிவாங்க அவரது மொபைல்போனில் இருந்து முதல்வருக்கு மிரட்டல் விடுத்த மனைவி சென்னையில் கைது

அம்மா ஆட்சிக்கு வந்ததுலேருந்து அம்மணிங்கல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க! ஆம்புளைங்கல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்கப்பு!

முதலாவது ஒரு நாள் போட்டி- இந்தியாவின் வெற்றியைத் தடுத்த மழை!

அவங்க ஜெயிச்சிருந்தாத் தானே மழை வந்திருக்கணும்? - என்று அலுத்துக்கொள்கிறார் சகபதிவர் ’கவிச்சோலை’ எல்.கே!

கர்நாடகா பா.ஜ.கவிலிருந்து எம்.எல்.ஏ பதவியிலிருந்து ஸ்ரீராமுலு விலகல்

பா.ஜ.கவுக்கும் "ஸ்ரீராமுக்குமே" தகராறு வந்திருச்சா? பேஷ்!

கர்நூல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 சிசுக்கள் மரணம்-கடவுள் காரணம் என அமைச்சர் பேச்சு!

ஓ அப்படியா? இதுவரை அரசு மருத்துவமனைக்குப் போய் பிழைத்து வருவதற்கு மட்டும்தான் கடவுள் காரணம் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்

இதை வாசித்து விட்டு ’ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,’ என்றாராம் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்று தமிழக ஆளுனரான ரோசையா!

லோக்சபாவில் குறட்டை விட்டுத் தூங்கிய லாலு பிரசாத்

நிதிஷ்குமார் பாராளுமன்றத்தில் இல்லாதது, லாலுவுக்கு ரொம்பத்தான் குளிர்விட்டுப் போச்சு!

திப்பு சுல்தான் வேடத்தில் கமல் ஹாஸன்!

பொதுவாக, கமலை வைத்துப் படமெடுக்கிற தயாரிப்பாளர்கள் மொட்டையடித்துக் கொள்வார்கள். ஒரு மாறுதலுக்காக, கமல் இந்தப் படத்துக்காக மொட்டையடிக்கலாம்.

இந்திய வீரர்களை கழுதை என்று கூறிய நாசர் உசேனுக்கு கிரிக்கெட் வாரியம் கண்டனம்

கழுதைன்னு சொன்னதுக்கு வெறும் கண்டனம் தானா? "உதைக்க" வேண்டாம்...?

எதுக்கு இதெல்லாம்...?

முதலில் நடிகர் ஓம்பூரி, முன்னாள் தில்லி காவல்துறை ஆணையர் கிரண் பேடி, அடுத்து பிரசாந்த் பூஷண் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் என்று அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தில் பங்கு வகித்த பலருக்கு உரிமை மீறல் பிரச்சினையில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையை பா.ஜ.க.மிகவும் அடக்கி வாசிக்கிறது என்பதிலிருந்து, ராம்லீலா மைதானத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பேற்றி விட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. வழக்கம்போல இதை ஆதரித்தும், எதிர்த்தும் பத்திரிகைகள் இருகூறாகப் பிரிந்திருக்கின்றன. இது குறித்து இணையத்தில் துழாவியபோது, கிடைத்த ஒரு சுவாரசியமான தகவல்:

அமெரிக்க அரசைப்பற்றி பி.ஜே.ஓ’ரூர்க் என்பவர் "பார்லிமெண்ட் ஆஃப் வோர்ஸ்(Parliament of Whores)" என்ற பெயரில் நையாண்டியாய் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறாராம். (Whores என்பதன் பொருளை கூகிளில் தேடவும்!)

நம்மாளுங்களும் அதைப் பார்த்து, கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டு, சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருப்பதே அவர்களுக்கு மரியாதை என்று தோன்றுகிறது.

"நச்" என்று ஒரு வலைப்பதிவு

எனக்கும் கவிதைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதனை நான் எழுதிய கவிதைகளை வாசித்தவர்கள் சூடனை அமுத்தி சத்தியம் செய்வார்கள் என்பது உறுதி. அப்படியிருந்தும், நப்பாசையில் சில பதிவுகளுக்குச் சென்று சந்தடியில்லாமல் கவிதை வாசித்துவிட்டு, கொஞ்சம் கூடுதலாய் தைரியமிருந்தால் பின்னூட்டமும் இடுகிற ரகசியப்பழக்கம் எனக்கு உண்டு.

அவ்வகையில், சமீபத்தில் நான் வாசித்த வலைப்பதிவர்:

தமிழ் வாசல் - இமலாதித்தன் கிறுக்கல்கள்

எனக்’கே’ புரிகிற மாதிரி எழுதுகிறார்! வாழ்த்துகள்!

ரசித்த வீடியோ

நாய்பட்ட பாடு என்பது இதுதான் போலிருக்கு..! :-)

Saturday, September 3, 2011

அண்ணா ஹஜாரே– ”துக்ளக்” தலையங்கம்

துக்ளக்பத்திரிகைக்கும் எனக்கும் இதுவரையில் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒரு ஒற்றுமை மட்டுமே இருந்து வந்திருக்கிறது. இப்போது, இன்னொரு ஒற்றுமையாக அண்ணா ஹஜாரே!

கொஞ்சம் பெரிய தலையங்கம்! இருந்தாலும் நேரமிருப்பவர்கள் வாசிக்கலாம்.

நன்றி: "துக்ளக்" (ஆசிரியர் வக்கீல்; கேசு போடாம இருக்கணும்)

வெற்றி; சுபம்!

பிரதமரின் பெயர் ‘மன்மோகன் சிங்கா, அல்லது ‘மண்மகான் கிங்கா என்று பத்திரிகையாளர்களோ, விவரஸ்தர்களோ, மற்றவர்களோ குழம்புவதில்லை; அவர் பெயர் பிரபலம் ஆன ஒன்று. இப்போது, அன்னா ஹஸாரேவில் உள்ளது, ‘அன்னாவா, ‘அண்ணாவா என்ற குழப்பம் நீடிக்க, தினமணி அது ‘அண்ணாதான் என்று விளக்கியிருக்கிறது. எழுத்தில் அண்ணாவாக இருந்தாலும், வட இந்தியர்கள் ‘அன்னாஎன்றுதானே உச்சரிக்கிறார்கள்? எது சரி?என்ற கேள்விக்கு இன்னமும் விடையில்லை.

எதற்கு இதைச் சொல்ல நேர்ந்தது என்றால் அன்னா அல்லது அண்ணா ஹஸாரேவின் பெயர் இன்னமும் நாடு முழுவதும் முழுமையாக பிரபலம் ஆகாத ஒன்று. சொல்லப்போனால் சில மாதங்களுக்கு முன்னால், நாட்டின் சில பகுதிகளில் மட்டும், அறிமுகமாயிருந்த பெயர் அது. டெலிவிஷன் நடத்திய மெகா சீரியல் புண்ணியத்தில், இப்போது நாடெங்கும் அப்பெயர் பிரபலமாகியுள்ளது. சாதாரண பிரபலமல்ல; ‘அன்னா தான் இந்தியா; இந்தியா தான் அன்னா என்று அவருடைய ஆதரவாளர்கள் முழங்குகிற அளவிற்குப் பிரபலம்.

அவருடைய உண்ணாவிரதமும் பிரபலமே. கிரிக்கெட் மேட்சில் அம்பயர் அவுட் கொடுக்கிற மாதிரி, ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டி நிற்கிற அவருடைய ‘போஸ்பிரபலமே. அவருடைய ஆதரவாளர்களில் டி-20 கிரிக்கெட் மேட்சில் பங்கேற்கிற ‘சியர் லீடர்ஸ்பெண்மணிகள் குஷிப்படுத்துகிறவர்கள் மாதிரி, கொடியை வீசிக்கொண்டு ‘ஜதிபோடுகிற கிரண் பேடியும் பிரபலமே...!

இப்படி பல பிரபலங்கள் அடங்கிய, இந்த ஊழல் ஒழிப்புப் போராட்டத்தின் கோரிக்கை என்ன என்பது மட்டும் இன்னமும் பிரபலம் ஆகவில்லை. அவர்களுடைய ‘ஜன் லோக்பால்மசோதா என்ன சொல்கிறது என்பதும் பிரபலம் ஆகவில்லை. ‘ஊழலை ஒழிக்கத்தான் போகிறார்கள். அதனால் ஆதரிப்போம்,என்றுதான் இதை ஆதரிக்கிற பொதுமக்களில் பலர் நினைக்கிறார்கள். ஆகையால், இந்த ‘போராட்டம்,என்ன கோருகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் அயுக்தா என்பது 1966-ல் நிர்வாக சீர்திருத்த கமிட்டி (தலைவர்; மொரார்ஜி தேசாய்) செய்த சிபாரிசு. அதன் பிறகு இதை நிறைவேற்ற பல முறைகள் அரைகுறை முயற்சிகள் நடந்தன. ஒரு முறை லோக்சபையில் கூட லோக்பால் மசோதா நிறைவேறியது; ராஜ்ய சபையில் நிறைவேறாததால், சட்டம் வரவில்லை. இப்போது லோக்பால் அமைப்பை உண்டாக்குகிற சட்டத்திற்கான மசோதாவை அரசு தயாரித்தது. அப்போது ஹஸாரே அதைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண், கர்நாடக லோக் அயுக்தா தலைவராக இருந்த சந்தோஷ் ஹெக்டே, ஒரு தன்னார்வ அமைப்பைச் சார்ந்த கெஜ்ரிவால் ஆகியோர் சேர்ந்து ஒரு மசோதாவைத் தயாரித்து, அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர். அதன்பிறகு, அவர்கள் அன்னா ஹஸாரேவின் தலைமையைப் பெற்று அரசு தங்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும் என்று கோரினர்.

அந்த ‘விவாதிக்க அழையுங்கள்,கோரிக்கைக்காக, அன்னா ஹஸாரே ஒரு சிறிய உண்ணாவிரதம் இருந்தார். அன்னா ஹஸாரே ‘எங்கள் மசோதாவை ஏற்க வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை; விவாதிக்க ஒரு மேடை கோருகிறோம். அவ்வளவு தான்,’ என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். விவாதம் நடந்தது. பயனில்லை. பின்னர் கோரிக்கை, ‘மசோதாவை ஏற்றாக வேண்டும்,என்று மாறியது.

அதாவது தனது நிலையை ‘மசோதாவை ஏற்கத் தேவையே இல்லைஎன்பதிலிருந்து, ‘மசோதாவை அப்படியே ஏற்றாக வேண்டும்என்று போராட்டக்குழு மாற்றியது; அடிப்படைக் கோரிக்கையே மாறிவிட்டது. இதுதான் ‘காந்தீயம்என்று பாராட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, அரசின் லோக்பால் மசோதா, படுபலவீனமானது என்பது பற்றி சர்ச்சைக்கே இடமில்லை. அதை நிறைவேற்றுவதால், ஒரு பயனும் இருக்கப்போவதுமில்லை அரசின் ஆசிபெற்ற சிலர் பதவிகளைப் பெறுவார்கள் என்பதைத் தவிர. ஆனால், அதற்கு மாற்றாக அன்னா ஹஸாரே குழு அளிக்கிற மசோதா எப்படிப்பட்டது?

சுப்ரீம் கோர்ட்டிற்குப் புதுவேலை

முதலில், லோக்பால் அமைப்பிற்கான நீதிபதிகள் (அவர்களுக்கு நீதிபதி என்ற பெயர் கிடையாது அவர்கள் லோக்பால்) தேர்வு. இதற்கு ஒரு தேர்வு கமிட்டி. முதலில் இந்தத் தேர்வு கமிட்டியில், நோபல் பரிசு பெற்ற இந்தியர்களும், மாகஸேஸே பரிசு பெற்ற இந்தியர்களும் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. நல்ல வேளை அது கைவிடப்பட்டது. ஆனால், இப்போது ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.வம்புதான்.

தேர்வு செய்யப்படுகிறவர், ஊழலை ஒழிக்கத் தீர்மானம் கொண்டவராகத் தன்னை ஏற்கனவே காட்டிக்கொண்டிருக்க வேண்டும். இதை எப்படி நிர்ணயிப்பது என்பதற்கு, மசோதா வழி சொல்வதாகத் தெரியவில்லை. ‘ஊழலை ஒழிக்க உறுதிகொண்டவன்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ‘ என்று அவர் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டுமா? அல்லது ஊழலை ஒழிக்க ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருக்க வேண்டுமா? அல்லது ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டுமா? தெரியவில்லை. ஊழலை ஒழிக்க உறுதி கொண்டவர் என்று காட்டிக்கொண்டவராக இருக்க வேண்டும் அவ்வளவு தான் சொல்லப்பட்டிருக்கிறது.

சரி, அப்படி ஒருவர் தேர்வானால், என்ன ஆகும்? அதை எதிர்த்து யார் வேண்டுமானாலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யலாம். எடுத்த எடுப்பில், நீதிமன்றம் அந்த நிராகரிக்க முடியாது. விசாரிக்க வேண்டும் அதற்காக ஒரு விசேஷ விசாரணைக் குழுவைக் கூட சுப்ரீம் கோர்ட் நியமிக்கலாம். இப்படி எத்தனை தேர்வுகளுக்கும் வழக்கு வரலாம். சுப்ரீம் கோர்ட் விசாரித்துத்தான் ஆக வேண்டும். அதற்குப் பிறகும் நேரம் இருந்தால் சுப்ரீம் கோர்ட், தனது மற்ற வேலைகளைக் கவனிக்குமோ என்னவோ!

தேர்வு ஆகிறவர்களை, மிரட்டுவது வெகு எளிது. ‘சுப்ரீம் கோர்ட்டில் மனு போடுவேன்,என்று ப்ளாக் மெயில் செய்யப்பட்டால், அசிங்கத்திற்குப் பயந்து, தேர்வு ஆனவர் பணிய வேண்டியதுதான். இது, ஜன் லோக்பால் மசோதாவின் முதல் கோணல்.

போலீஸ்+ ப்ராஸிக்யுஷன்+ நீதிமன்றம் = லோக்பால்!

சரி, எப்படியோ விசாரணைக்குத் தப்பி, 10 லோக்பால்கள் ஒரு தலைவருடன் சேர்ந்து அமர்கிறார்கள். அவர்கள் போலீஸ் என்று சட்டத்தினால் கருதப்பட வேண்டும் என்று மசோதா கூறுகிறது. அதாவது, 11 போலீஸ்காரர்கள் சேர்ந்து ஒரு லோக்பால் அமைப்பு! அவர்களுக்குப் போலீஸுக்கு உள்ள எல்லா அதிகாரமும் உண்டு. விசாரிக்கலாம்; டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்கலாம். ( போலீஸ்கூட இதை உடனே செய்ய முடியாது லோக்பால் செய்யலாம்). ஸி.பி.ஐ. கூட லோக்பாலுடன் சேர்ந்து விடும். லோக்பால்தான் ஸி.பி.ஐ; ஸி.பி.ஐதான் லோக்பால்!

இப்படி போலீஸ் அதிகாரம் பெறுவதுடன், லோக்பால் உறுப்பினர்கள், பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்களாகவும் செயல்படுவார்கள்; ஏனென்றால், நீதிமன்றத்திற்கு வழக்குகளை லோக்பால் அனுப்பலாம்; நீதிமன்றம் அவற்றை விசாரித்தே ஆக வேண்டும். ஆக, போலீஸும், ப்ராஸிக்யூஷனும் சேர்ந்தது லோக்பால்!

அதோடு முடியவில்லை லோக்பாலின் பரந்து விரிந்த அதிகாரம்! நீதிமன்றமும் அதுவே! எப்படி என்றால் நீதிமன்றத்திற்கு வழக்குகளை அனுப்புவது மட்டுமில்லாமல், தாமே கூட சஸ்பென்ஷன், சொத்து முடக்கல் போன்ற தண்டனைகளை வழங்கலாம். ஆக, போலீஸ் வேறு, ப்ராஸிக்யூஷன் வேறு, நீதிமன்றம் வேறு என்ற அடிப்படை தத்துவமே கோவிந்தா! மூன்றும் ஒன்று த்ரீ இன் ஒன், சைக்கிள் ஆயில் போல!

இன்னமும் லோக்பாலின் மகிமை முடியவில்லை. யார் வேண்டுமானாலும், எந்த அதிகாரி மீது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். அதற்கு முன் அனுமதி எதுவும் தேவையில்லை. புகாரை லோக்பால் விசாரணைக்கு ஏற்றவுடன், ஒரு ஆரம்ப விசாரணை நடக்கும். இது புகார் கொடுத்தவருக்குத் தெரிந்துதான் நடக்கும்; அவருக்கு என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும். ஆனால், யார் மீது புகார் வந்திருக்கிறதோ அவருக்கு ஆரம்ப விசாரணை தொடர்பான விபரங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை. இது முடிந்து, முழு விசாரணை. இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் தன் பக்கத்தைக் கூற வாய்ப்பு உண்டு.

தண்டனை வரும் முன்னே, குற்ற நிரூபணம் வருமா பின்னே?

இப்படி ஒரு விசாரணை நடக்கிறபோதே சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்கிற உத்தரவை லோக்பால் பிறப்பிக்கும். அவருடைய சொத்தின் எந்தப் பகுதி லஞ்ச சம்பாத்தியம் என்று கருதப்படுகிறதோ, அதை முடக்கி விடும். இவை எல்லாம், அந்த அதிகாரி மீது குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பு!

விசாரணை முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரியால் தரப்பட்ட கான்ட்ராக்ட்டை லோக்பால் ரத்து செய்துவிடலாம்; சம்பந்தப்பட்ட கம்பனியை ‘ப்ளாக் லிஸ்ட்செய்து, இனி அதற்கு அரசு கான்ட்ராக்ட்கள் கிடைக்காமல் செய்யலாம். இந்த நடவடிக்கையும் கூட, குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே!

ஜன் லோக்பால் மசோதாவின் இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பார்த்தால், ஒரு அதிகாரியை ப்ளாக் மெயில் செய்ய நினைப்பவர்களுக்காக தீட்டப்பட்ட மசோதா மாதிரி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிப்பதற்கு முன்பாகவே சஸ்பென்ஷன் உட்பட சொத்து முடக்கம்வரை நடக்கலாம் என்றால், எந்த அதிகாரிக்குத்தான் உதறல் எடுக்காது? அப்பீல் வேறு கிடையாது (சொத்து முடக்கத்துக்கு மட்டும் அப்பீல் உண்டு). லோக்பால் நடவடிக்கையை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. ப்ளாக்மெயிலர்களுக்கு லட்டு!

ஜன் லோக்பால் இன்னொரு புதுமையையும் புகுத்தியிருக்கிறது. லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்சம் வாங்கிய ஒருவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கிற லஞ்சம் கொடுப்பவருக்குத் தண்டனை கிடையாது; லஞ்சம் கொடுப்பவருக்குத் தண்டனை என்றால், லஞ்சம் வாங்கியவரின் குற்றத்தை நிரூபிப்பது கடினமாகும் என்பதால் , இம்மாதிரி ஏற்பாடு சட்டத்தில் இருக்கிறது. ஆனால், ஜன் லோக்பால் மசோதாவின்படி, லஞ்சம் கொடுத்தவரும் தண்டனைக்குள்ளாவார். ஆகையால் சாட்சியம் அளிக்க அவர்கள் முன்வரவே மாட்டார்கள்.

கழுதை தேய்ந்து, கொசு ஆன கதை

இப்படி பல பிரிவுகள் உள்ள ஜன் லோக்பால் மசோதா, அப்படியே முழுமையாக ஏற்கப்படாவிட்டால் அதுவும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் ஏற்கப்படா விட்டால் உண்ணாவிரதம் முடிக்கப்படாது,என்று அன்னா ஹஸாரே அறிவித்தார். இதில் எந்த வித மாறுதலுக்கும் இடம் கிடையாது என்பது, அவருடைய பிரதம ஆதரவாளர்களால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இறுதியில் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்த பின்னர், ‘முழு ஏற்புகோரிக்கை கைவிடப்பட்டது; பிரதமர் லோக்பால் விசாரணைக்கு உட்பட்டவர் என்பது போயிற்று; நீதித்துறையும் போயிற்று. இந்த நிலையில் அன்னா ஹஸாரே மூன்று நிபந்தனைகளை மட்டும் விதித்தார்; ‘மாநிலங்களில் லோக் அயுக்தா வர வேண்டும்; கீழ்மட்ட அதிகாரிகளும் லோக்பால் சட்டத்தின் கீழ் வர வேண்டும்; அரசு காரியாலயங்களில் இத்தனை நாட்களில் இன்னின்ன பணிகள் செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் என்ன தண்டனை என்றும் அறிக்கை நோட்டீஸ்கள் வைக்கப்பட வேண்டும், என்ற மூன்று விஷயங்களை ஏற்கிறவகையில், ஒரு தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அன்னா ஹஸாரே அறிவித்தார். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையல்ல இது; கழுதை தேய்ந்து கொசு ஆகிவிட்டது, இங்கே!

அதாவது, ‘தன் மசோதா முழுமையாக ஏற்கப்பட வேண்டும்; ஆகஸ்ட் 30-க்குள் அது நடக்க வேண்டும்; எந்தவித மாறுதலும் கிடையாது...,என்பதையெல்லாம் அவர் கைவிட்டார். அத்துடன், தனது மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற, பா.ஜ.கவின் ஒத்துழைப்பைய்ம் அவர் நாடினார்.

குஜராத் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறியதையும்; பா.ஜ.கவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியதையும்; அப்படிக் கூறியவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் என்று கூறியதையும்-அவர் மறந்தார். பா.ஜ.கவும் மறந்தது. ‘அக்கட்சியின் ஒத்துழைப்பு கிட்டியவுடன், அவருடைய ‘வைராக்கியம்அதிகமாகியது; முன்று நிபந்தனைகளை அவர் விதிக்க, காங்கிரஸ் அதை ஏற்றது அதாவது ஏற்ற மாதிரி காட்டிக்கொண்டது.

‘தீர்மானம் என்பதே சந்தேகம்

மேலே பார்த்த அந்த மூன்று நிபந்தனைகள் பாராளுமன்றத்தில் ஏற்கப்பட வேண்டும்; அதற்கு அந்த நிபந்தனைகள் ஏற்கப்படுவதாக ஒரு தீர்மானம் வர வேண்டும்; அந்தத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க வேண்டும்; லோக்பால் சட்டத்தில் அந்த மூன்று அம்சங்கள் இடம்பெற்றாக வேண்டும் என்பது அன்னா ஹஸாரே குழுவின் இறுதிக் கோரிக்கை. அரசு தரப்பு, ‘ஓட்டெடுப்பு முடியாது; இந்த அம்சங்கள் பற்றி சபையில் உணர்வு வெளிப்படுத்தப்படும்; அது போதும்,என்று கூறியது. அன்னா ஹஸாரே தரப்பு, அதெல்லாம் முடியாது; ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வந்தால்தான் ஏற்போம்; இல்லாவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்என்று கடைசி நிமிடம்வரை கூறிவந்தது.

நடந்தது என்ன? ஓட்டெடுப்பு இல்லை; ‘அன்னா ஹஸாரே குழுவின் மூன்று அம்சங்களுடன் பொதுப்படையாக இந்த சபை ஒத்துப்போகிறது,என்று ஒரு தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. (தீர்மானமே நிறைவேறவில்லை உணர்வுதான் வெளிப்படுத்தப்பட்டது என்று பிரணாப் முகர்ஜி விளக்கியிருக்கிறார் என்பது வேறு விஷயம்). குரல் வாக்கெடுப்பாவது நடத்த வேண்டும் என்று அன்னா ஹஸாரே தரப்பு கூறியது கூட நிறைவேறவில்லை.

சரி, ‘உணர்வுதீர்மானமாவது உருப்படுமா? எப்படி உருப்படும்? பிரணாப் முகர்ஜி மிகத் தெளிவாக சபையிலேயே இந்த சமாச்சாரத்தை பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். ‘லோக்பால் மசோதா பற்றிய தனது கருத்துக்களை ஸ்டாண்டிங் கமிட்டி வடிவமைக்கிறபோது, பரிசீலிக்கப்படுவதற்காக இந்த சபையின் உணர்வு பற்றிய தகவல் அக்கமிட்டிக்கு அனுப்பப்படும்,என்றார் அவர்! ஆக, மேலும் ஒரு பரிசீலனை இருக்கிறது. அந்தப் பரிசீலனை முடிந்தபிறகு மீண்டும் சபையில் இன்னொரு பரிசீலனை நடக்கும். பரிசீலனைக்கு மேல் பரிசீலனை.

இத்துடனாவது பிரணாப் முகர்ஜி நிறுத்தினாரா என்றால் இல்லை. இன்னமும் சொன்னார்: ‘இதைப் பரிசீலிக்கிறபோது இதனுடைய (அதாவது அன்னா ஹஸாரே குழுவின் மூன்று அம்ச நிபந்தனையினுடைய) நடைமுறை சாத்தியக்கூறு, செயல்படுத்தப்படக்கூடிய தன்மை, அரசியல் சட்ட சார்புடைமை ஆகியவற்றை ஸ்டாண்டிங் கமிட்டி கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

அதாவது, ‘மாநிலங்களில் லோக் அயுக்தாவை பாராளுமன்றம் நிறைவேற்ற முயற்சிப்பது அரசியல் சட்ட சார்புடைமை அல்ல; காரியாலயங்களில் செயல்முறை பற்றிய நோட்டீஸ்களை வைப்பதில் நடைமுறை சிக்கல் வரும் என்பதால், அதற்கு நடைமுறை சாத்தியக்கூறு இல்லை; கீழ்மட்ட அதிகாரிகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவருவது செயல்படுத்தப் படக்கூடிய தன்மை அற்றது என்று ஸ்டாண்டிங் கமிட்டி சொன்னால்....? அப்புறம் மீண்டும் கிரண் பேடி தேசியக்கொடியுடன் டான்ஸ் ஆட, ஆமீர்கான் வந்து பாட, அன்னா ஹஸாரே தாளம்போட, மக்கள் மகிழ்ச்சி பொங்க குதித்து ஆட, டெலிவிஷன் சேனல்கள் இந்தக் கேளிக்கையை இடைவிடாது ஓளிபரப்ப ஊழல் ஒழிப்புப் போர் மீண்டும் தொடங்க வேண்டியதுதான்! அன்னா ஹஸாரே வேண்டுமானால் தன் திருப்திக்கு ‘இது மூன்றாவது சுதந்திரப் போர்என்று அறிவிக்கலாம். அப்போது எல்லாமே முழுமையடையும்.

பிரதமர் சொன்னது, நடந்தது

இப்படிப்பட்ட ஒரு மாய்மால வேலையை அரசு செய்திருக்கிறது; பிரதமர் முதலில் ‘பாராளுமன்றம் இந்த விஷயம் பற்றி விவாதம் நடத்தும். அந்த விவாதத்தின் விபரங்கள் ஸ்டாண்டிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்என்று சொன்னார். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. இதைத்தான் போராட்டத்தின் வெற்றி, அன்னா ஹஸாரேவின் வெற்றி, இந்தியாவின் வெற்றி, மக்களின் வெற்றி என்று பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் கொண்டாடுகின்றன. ‘எங்களுடைய ஜன் லோக்பால் மசோதா முழுமையாக ஏற்கப்பட்டாக வேண்டும் அதுவும் ஆகஸ்ட் 30 க்குள். இல்லையென்றால், காலவரையற்ற உண்ணாவிரதம்தான்,என்ற கெடுபிடியுடன் கூடிய சவால் விட்ட அன்னா ஹஸாரே குழுவினர் அதை அடியோடு மறந்தனர்; மூன்று அம்சங்கள் ஏற்கப்பட்டாக வேண்டும் என்ற இறுதி நிபந்தனையையும் அவர்கள் மறந்தனர். மூன்று நிபந்தனைகள் பற்றி ஓட்டெடுப்பு நடக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் மறந்தனர். கடைசியில் பிரதமர் முதலிலேயே சொன்ன மாதிரி ஒரு ‘உணர்வு வெளியீடு’; அதுவும் கூட ஸ்டாண்டிங் கமிட்டியின் பரிசீலனைக்கு விடப்பட்டாகி விட்டது.

இது அன்னா ஹஸாரேவுக்கும், அவர் குழுவினருக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்துக்கும் வெற்றி. ‘ஆரம்ப கோரிக்கையும் விட்டுக் கொடுக்கப்பட்டு கடைசி நிபந்தனைகளும் விட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் இது என்ன வெற்றி?என்று கேட்பவன் ஊழல் ஆதரவாளன். நாம் ஊழல் ஆதரவாளர்கள் அல்ல என்பதால், நாமும் இது வெற்றி தான், வெற்றிதான் என்று கொண்டாடுவோம்.

ஒரே ஒரு மனவருத்தம். இங்கிலாந்தில், நான்கு டெஸ்ட்களில் தோற்ற இந்தியக் கிரிக்கெட் அணி, கடைசி டெஸ்ட் மாட்சில், ஒரு ரன் எடுத்து விட்டு, ‘வெற்றி, வெற்றி,என்று கத்திக்கொண்டே, இந்தியாவுக்கு விமானம் ஏறியிருக்கலாம்! அன்னா ஹஸாரே போராட்ட வெற்றி போல, இந்தியாவிற்கு மற்றொரு வெற்றியும் கிடைத்திருக்கும். சான்ஸ் போச்சு! அது கிடக்கட்டும்; ‘இரண்டாவது சுதந்திரப்போர்வெற்றியைப் பார்ப்போம்.

இது கொண்டாட்ட நேரம்

ஒரு வழியாக ஊழல் எதிர்ப்பு உற்சவம் சுபமாக முடிந்திருக்கிறது. தங்களுடைய ஜன் லோக்பால் மசோதா முழுமையாக ஏற்பு என்ற முடிவை அன்னா ஹஸாரே ஆதரவாளர்கள் இப்போது நினைவில் கொள்ள மாட்டார்கள்; இது கொண்டாட்ட நேரம்; பல்டிகளை நினைவு கொள்ள வேண்டிய நேரம் அல்ல. டெலிவிஷன் சேனல்களும் அதை நினைக்கப் போவதில்லை. ஆக வெற்றிதான்.

இந்தத் திருவிழா முடிவதில், சிலருக்கு வருத்தம் இருக்கும். 2-ஜி ஊழல்வாதிகள், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்வாதிகள், ஆதர்ஷ் ஊழல்வாதிகள் போன்றவர்கள் இனி வருத்தப்பட வேண்டியதுதான்; அவர்களுடைய விவகாரங்களை மறைக்கவும், அவை பற்றிய செய்திகளை அமுக்கி விடவும், இந்த அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் உதவியது. இப்போது நாடு மீண்டும் அவற்றை நினைவு கொள்ளும்.

ஊழல்? இனி ஊழல் என்ன ஆகும்? உஸ்! அதைப் பற்றிப் பேசுகிற நேரம் இதுவல்ல. இது கேள்வி நேரம் அல்ல; கொண்டாட்ட நேரம்.

ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே!

இரண்டாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்

என்று, ஆடுவோம், ஆடுவோம்,

ஆடுவோமே, ஏ...ஏ...ஏ....!