Tuesday, June 28, 2011

"கம்"னு கெட!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Sunday, June 26, 2011

சேட்டை ஊஞ்சலாடுகிறது!

பிரபல எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "ஊஞ்சல்" மாத இதழின் ஜூன் 2011 இதழில் எனது "கல்யாணம் (attend) பண்ணிப்பார்," வெளியாகியுள்ளது.

"ஊஞ்சல்" மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு அளித்திருக்கிற உற்சாகத்தை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.

சேட்டையை ஊஞ்சலாடுமளவுக்கு ஊக்குவித்த அன்புள்ளங்களுக்கு இருகரம்கூப்பி எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Wednesday, June 22, 2011

வாகனயோகம்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Tuesday, June 14, 2011

பாபா பிளாக்-ஷீப்

(நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்பதாலும், தொடர்ந்தும் ஒரு நீண்ட இடைவெளி இருக்கலாம் என்பதாலும், சற்றே நீ...ண்ட இடுகை! மன்னிக்கவும்!)

பொழுதுபோகாமல் மெரீனா கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு வினோதமான காட்சியைக் கண்டேன். உடனே....

“ஹலோ! ஒண்டி டிவியா? என் பேரு சேட்டைக்காரனுங்க! இங்கே காந்தி சிலை பக்கத்துலே ஒரு சாமியார் திடீர்னு உண்ணாவிரதம் ஆரம்பிச்சிட்டாருங்க!

அட போய்யா, அதெல்லாம் டெல்லியிலே தான் பண்ணுவாங்க! இது ஏதோ டுபாக்கூர் சாமியாரா இருக்கும்! எங்களுக்கு வேறே வேலையிருக்கு!என்று பொட்டிலடித்தாற்போல் பதில் வந்தது.

“உங்க இஷ்டம்! ஏற்கனவே சேட்டை டிவியோட அவுட்-டோர் வேன் வந்திருச்சு! உங்க டி.ஆர்.பிக்கு உதவுமேன்னு போன் பண்ணினா....

“என்னது? சேட்டை டிவிலே ஓ.டி.வேன் வாங்கிட்டாங்களா? எப்போ? எப்படி?

“எல்லாம் பேங்கிலே ஓ.டி.வாங்கித்தான் வாங்கினாங்க. இப்போ பேங்க் அவங்க பின்னாலே ஓடோ ஓடுன்னு ஓடிட்டேயிருக்கு பாவம்!

“இதோ எங்க வண்டி கிளம்பிட்டேயிருக்கு! மிஸ்டர் சேட்டைக்காரன், அங்கே வர்றதுக்கு முன்னாலே அந்த சாமியாரைப் பத்திக் கொஞ்சம் தகவல் சொல்றீங்களா? அவரு பேரு என்ன?

“அவரு பேரு வந்து....ஆங்...பாபா லங்கணானந்தா!

“புதுசாயிருக்கே, இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே?

“இருந்தாத்தானே?

“என்னது?

“அதாவது அவரு ஊருலே இருந்தாத்தானே? எப்பவும் ஏதாவது மலையுச்சியிலே தவம் பண்ணிட்டிருப்பாரு! கடைசியாக் கூட ஏதோ ஒரு சிகரத்துலே போய் குப்புறப்படுத்துக்கிட்டே தவம் பண்ணினாரு! அந்த சிகரத்தோட பேரு ஞாபகம் வரமாட்டேங்குது!

“தொட்டபெட்டாவா?

“என்னாது, விட்டா பரங்கிமலையான்னு கேட்பீங்க போலிருக்குதே? அவரு தவமிருந்தது இமயமலை சிகரத்துலே! அதோட பேருகூட கஞ்சாவுலே ஆரம்பிக்கும்...!

“கஞ்சாஞ்ஜங்காவா?

“அதே தான்! சாமிக்கு உலகம் முழுக்க சொத்து இருக்குது! அவரு வாக்கிங் கூட ஹெலிகாப்டருலே தான் போவாரு! வாரணாசி பக்கத்துலே பெருசா ஒரு பங்களா இருக்குது. அங்கே பால் காச்சின அன்னிக்கு சாமி பாத்ரூம் போனாரா, திரும்பி வர வழிதெரியாம அவர் வீட்டுக்குள்ளேயே அவரு காணாமப்போயிட்டாரு! அப்பாலே போலீஸ் நாயோட வந்து அவரோட கப்பை வச்சுக் கண்டுபிடிச்சாங்க!

“அதெல்லாம் இருக்கட்டும்! எதுக்காக சென்னைக்கு வந்து உண்ணாவிரதம் இருக்காரு?

“எல்லாம் ஊழலை ஒழிக்கத்தான்! வேறே காரணத்துக்காக உண்ணாவிரதம் இருந்தா நம்மாளுங்க சாவட்டும்னு விட்டிருவாங்களே! அதுலே பாருங்க, நம்ம அரசியல்வாதிங்க ஊழலையும் சாக விட மாட்டாங்க, ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறவங்களையும் சாக விட மாட்டாங்க! அவங்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா பாவம்?

“இவருக்கு யாராவது ஆதரவு தெரிவிச்சாங்களான்னு தெரியுமா?

“ஓ! அண்ணா ஹஜாரே லெட்டர் போட்டிருக்காரே!

“வர வர இந்த அண்ணா ஹஜாரே ஏகாதசியன்னிக்குப் பட்டினியா இருக்கிறவங்களுக்குக் கூட ஆதரவு தெரிவிக்க ஆரம்பிச்சிட்டாரு!

“இல்லியா பின்னே? அவரு ஆதரவு தெரிவிச்சிட்டாருன்னு சொன்னதுமே இங்கே கூட்டம் சேர்ந்திருச்சு! பழம்பெரும் நடிகர் விஷ்ணுகுமார் வந்திருக்காரு! படமெடுத்தே போண்டியாப் போன தயாரிப்பாளர் குட்கா தீனிவாசன் வந்திருக்காரு! அப்புறம் திர்லக்கேணி, ஜாம்பஜார், ஐஸ்ஹவுஸ் பக்கத்துலேருந்து ஈவ்னிங் வாக்கிங்குக்கு வந்த மாமா, மாமி, தாத்தா பாட்டியெல்லாம் வந்து உட்கார்ந்திட்...அட, வந்திட்டீங்க போலிருக்கே! அப்படியே வலதுபக்கம் திரும்புங்க! கையிலே போர்டோட, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தமில்லாம ஒரு உருவம் தெரியுதா? அது தான் நானு! வாங்க!

“தேங்க்ஸ் மிஸ்டர் சேட்டைக்காரன்!என்று சிரித்தாள் ஒண்டி டிவியின் சென்னை நிருபர் விசாலாட்சி சகாதேவன்.

“யூ ஆர் வெல்கம் மேடம்,என்று நான் ஈயென்று இளித்தேன். “உங்களைப் பார்த்தா ஸ்ரேயா ஞாபகம் வருது மேடம்!

“உண்மையாவா?

“ஆமாம் மேடம்! நாலு ஸ்ரேயாவும் சரி, நீங்க ஒருத்தரும் சரி!

அடடா, ஒரு பொலிட்டிஷியன் கூட வந்திட்டாரு போலிருக்குதே?என்று கூறிய விசாலாட்சி அவரை நோக்கி ஓடினார். அரசியல்வாதியா? யார்??

எனக்குப் பக்கத்தில் கையில் மெழுகுவர்த்தியுடன் ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

“சார், நீங்களும் ஊழலை எதிர்க்கிறீங்களா?என்று கேட்டேன். “கேட்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க! ஒரு மெழுகுவர்த்தியை ஏத்திட்டா ஊழல் ஒழிஞ்சிருமா?

“என்ன சார் ஒரு மெழுகுவர்த்தின்னு சாதாரணமா சொல்லிட்டீங்க? இந்த ஒரு மெழுகுவர்த்தியை வச்சுக்கிட்டே இதுவரை நாலு கண்டனப்பொதுக்கூட்டத்துலே நான் கலந்திக்கிட்டாச்சு தெரியுமா? இந்த வருசம் பூராவும் இதை வச்சே ஊழலை எதிர்த்திர மாட்டேன்? என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு இளம்பெண் அவரை நெருங்கினாள்.

“வேர் தி ஹெல் ஆர் யூ? ஐ டோல்ட் யூ டு பீ ஹியர் அட் ஃபைவ் தர்ட்டி ஷார்ப்! வாட் டூ யூ திங்க்? ஐயம் டிஸ்கஸ்டட்! யூ ஆர் யூஸ்லெஸ்!என்று தமிழ்ப்பெண்ணாய் லட்சணமாய் கோபத்தைத் தாய்மொழியில் காட்டாமல் ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளியபடி போக, அந்த இளைஞன் மெழுகுவர்த்தியை ஊதியணைத்துப் பையில் போட்டுக்கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான். அட பாவி, பிகரைப் பார்க்கிறதுக்காக மெரீனா பீச்சுக்கு வந்துவிட்டு, ஊழல் ஒழிப்பு என்று நாடகம் வேறா?

“சேட்டை!என்று பரிச்சயமான குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தால், அந்த அரசியல்வாதி..அட, நம்ம ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு!

“என்ன மக்கா கண்டும் காணாம நிக்கே? இப்பம்தான் அரசியலுக்கு வந்தேன். அதுக்குள்ளே இந்த சாமியாரு உண்ணாவிரதம் இருக்காரு பாருலே! லேய் சேட்டை, நாங்க அரசியல்வாதிங்க சாமியாருங்க ஜல்சா பண்ணக்கூடாதுன்னு எப்பமாச்சும் உண்ணாவிரதம் இருந்திருக்கோமாலே?என்று பொரிந்து தள்ளினார்.

“அட விடுங்க அண்ணாச்சி!என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு எனது சந்தேகத்தைக் கேட்டேன். “ஏன் அண்ணாச்சி, நானும் பாக்கேன், பதிவருங்களும் சரி, இந்த மாதிரி பண்டாரங்களும் சரி, கூட்டமுண்ணா காந்தி சிலைக்கு ஏம் வாறாங்க?

“அது வந்து மக்கா, காந்தி அஹிம்சாவாதியில்லா? கையிலே தடி வச்சிருந்தாலும் எறங்கி வந்து அடிக்க மாட்டாருன்னு ஒரு தகிரியம் தான்!என்று குட்டை உடைத்த ஐயாக்கண்ணு, “ நானும் அதாம்லே வந்தேன்!என்று ஒப்புக்கொண்டார்.

“மக்கா சேட்டை! இந்தாளோட உண்ணாவிரதத்தை முறிச்சுப்போடணும்லே! ஏதாவடு செய்யி!என்று கெஞ்சினார் ஐயாக்கண்ணு. “இவங்க ஒரு நா சாப்பிடாம இருந்திட்டு எங்க சாப்பாட்டுலே மண்ணைப் போட்டா எப்படி?

“அதெல்லாம் ஜூஜூபி!என்றேன் நான். “அவருக்குப் பக்கத்துலே உட்கார்ந்து நாம ஒரு உண்ணுற விரதம் ஆரம்பிக்கலாம்.

“என்னது?

“ஆமா அண்ணாச்சி! நீங்க என்ன பண்ணுறிய, கற்பகத்துலேருந்து ஒரு பத்து பொங்கல், மெதுவடை ஆர்டர் பண்ணுங்க! அஞ்சப்பருலேருந்து ஒரு இருபது பிளேட் கொத்துப்பரோட்டாவும் பாயாவும், கல்யாண் பிரியாணிலேருந்து ஒரு முப்பது பிளேட்டு, பொறவு புகாரியிலே சிக்கன் லாலிபாப் ஒரு இருபத்தஞ்சு பிளேட் வரவழைங்க! வேடிக்கையைப் பாருங்க!

“என்ன மக்கா செலவு வைக்கே?

“உண்ணாவிரதத்தைத் தோற்கடிக்கணுமா வேண்டாமா?என்று மிரட்டவும், ஐயாக்கண்ணு செல்போனில் நான் சொன்னதையெல்லாம் ஆர்டர் செய்தார். இதற்குள் காந்தி சிலையைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர, போலீஸ் கெடுபிடியும் அதிகமானது.

சாப்பாடு வந்ததும் சாமியாரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களிடம் சைவமா, அசைவமா என்று விசாரித்து ஆளுக்கு ஒரு பொட்டலத்தைக் கொடுத்தேன்.

“என்னது, உண்ணாவிரதப்போராட்டத்துலே போயி...?

“சாமியாருதானே உண்ணாவிரதம் இருக்காரு? நீங்க சாப்பிட்டு தெம்பா கோஷம் போடுங்க! எல்லாரும் பட்டினியா இருந்தா போராட்டம் பிசுபிசுத்துப் போயிராது...?

ஆளுக்கொரு பொட்டலமாக எல்லாரும் அள்ளியள்ளி சாப்பிட ஆரம்பிக்க, சுவாமி லங்கணானந்தா எச்சில்விழுங்கியபடி எல்லாரையும் எரிச்சலோடு பார்த்தார்.

“சார், பிரியாணியிலே முட்டை இருக்கா?

“பெரியவரே, எக்ஸ்ட்ரா வெங்காயம் வேணுமா?

“பொங்கலுக்கு சட்னியிருக்கா?

“எனக்கும் ஒரு பொட்டலம் கொடுங்க!

திரும்பிப் பார்த்தேன். சுவாமி லங்கணானந்தா.

“தம்பி, எனக்கும் ஒரு பொட்டலம் கொடுங்க!

“சுவாமி, நீங்க உண்ணாவிரதம் இருக்கீங்களே?

“யாரு சொன்னா? நான் பாட்டுக்கு காத்தாட காந்தி சிலைகிட்டே கால் நீட்டிப் படுத்திட்டிருந்தேன். உடனே உண்ணாவிரதமுன்னு எவனோ புரளியைக் கிளப்பி விட்டுட்டான். தம்பி, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு, இட்லியும் கெட்டிச்சட்னியும் இருந்தாக் கொடுங்க தம்பி!

“சாமி...சாமி!கூட்டத்திலிருந்து பலர் குரல் எழுப்பினர். “போராட்டத்தைக் கைவிட்டிராதீங்க சாமி! உங்களை மாதிரி நாலு பேரு உண்ணாவிரதம் இருந்தாத்தான் ஊழல் ஒழியும். மனசைத் தளர விடாதீங்க! செத்தாலும் சரி, தொடருங்க உங்க போராட்டத்தை! ஏம்பா, யாருகிட்டேயாவது எக்ஸ்ட்ரா சட்னி இருக்கா?

ஊழலாவது ஒழிப்பாவது?சுவாமி லங்கணானந்தா சீறினார். மரியாதையா எனக்கு ஒரு பொட்டலம் கொடுக்கலே! நீங்கல்லாம் அடுத்த ஜென்மத்துலே உ.பியிலே பொறக்கணுமுன்னு சாபம் போட்டிருவேன்!

விசாலாட்சி சகாதேவன் சைகை செய்ய ஒண்டி டிவியின் கேமிரா சுவாமியின் ஆவேசத்தைப் படம்பிடித்துக்கொண்டிருந்தது. கூட்டத்தில் சலசலப்பேற்பட்டது.

“டேய், இவன் போலிச்சாமிடா! இவனை உதைங்கடா!

“இவன் போலிச்சாமியாரில்லே!என்று கூறியபடி வெள்ளைச்சீருடையணிந்த இருவர் கூட்டத்தில் நுழைந்தனர். “இது எங்க பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலேருந்து ரெண்டு நாளைக்கு முன்னாடி தப்பிச்சிருச்சு! இது பூர்வஜன்மத்துலே ஜமதக்னி முனிவரா இருந்தேன்னு சொல்லிட்டுத் திரியுது. நல்ல வேளை, ஒண்டி டிவியிலே லைவ்-டெலிகாஸ்ட் பண்ணினபோது கண்டுபிடிச்சிட்டோம்! பெரிய ஆபத்துலேருந்து தப்பிச்சிட்டீங்க! எல்லாரும் வீட்டுக்குப் போங்க சார்! ஏய், வந்து வண்டியிலே ஏறு!

கூட்டம் கலையத்தொடங்கியது. இவ்வளவு தெளிவாகப் பேசிய லங்கணானந்தாவை, பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஊழியர்கள் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்கள்.

என்னவோன்னு எதிர்பார்த்திட்டு வந்தா, இது பைத்தியமாமே? ஹூம், நம்ம நாட்டுலே இருக்கிற லஞ்சம் ஊழலெல்லாம் எப்போத்தான் ஒழியுமோ? யாரு வந்து உண்ணாவிரதமிருந்து ஒழிப்பாங்களோ? ஒண்ணும் புரியலே போங்க!

“மிஸ்டர் சேட்டைக்காரன்! உண்மையோ பொய்யோ, இன்னிக்கும் எங்க டி.ஆர்.பி. பட்டையைக் கிளப்பப்போகுது பாருங்க!என்று சொல்லிவிட்டு விசாலாட்சி கிளம்பினாள். கூட்டத்தில் யாரோ முணுமுணுத்துக் கொண்டே போனார்கள்.

‘சே! போயும் போயும் ஒரு லூசை நம்பிட்டோமே?

எனக்குச் சிரிப்பாய் வந்தது.

“லூசாம்? யார் லூசு?