Sunday, January 10, 2010

வாழ்க்கை இட்டிலி மாதிரி

வாழ்க்கைக்கும் இட்டிலிக்கும் என்ன சம்பந்தம், இப்படி எத்தனை பேரு
கிளம்பியிருக்கீங்கன்னு கேட்கக்கூடாது. என்னைப் பேச வுடுங்க!

இட்டிலின்னாலே எனக்கு அப்பத்தா ஞாபகம் தான் வரும். வூட்டுலே கிரைண்டரு
வந்தபொறவும் கூட அப்பத்தா கல்லுரல்லே தான் இட்டிலிக்கு மாவு அரைக்கும். அம்மா
அரச்சாக் கூட அப்பத்தாவுக்கு திருப்தி இருக்காது. ஒரு வாய்கிள்ளி வாயுலே
போட்டுட்டு "உளுந்து எவ்வளவு போட்டே?"ன்னு சி.பி.ஐ.மாதிரி கேள்வி கேக்கும்.
எங்க வூட்டுலே கல்லுரல் தான் அலாரமே! அப்பத்தா இட்டிலிக்கு அரைக்கிற சத்தம்
கேட்டா கும்பகர்ணன் கூட எழுந்திரிச்சு உட்கார்ந்திருவான். பத்து நிமிசத்துக்கு
ஒருவாட்டி ஜிலேபி பதம் பார்க்குறா மாதிரி மாவு எப்படி வந்திருக்குன்னு
பார்க்கும். திருப்தி வர்றவரைக்கும் அரைச்சிட்டேயிருக்கும். அப்புறமா,
அம்மியிலே சட்னி அரைச்சா களத்துமேடு வரைக்கும் மிளகாய் நெடியடிக்கும். எவ்வளவு
இட்டிலி சாப்பிட்டாலும் சரி, எளுந்திருக்கிறதுக்கு முன்னாலே ரெண்டு இட்டிலி
நல்லெண்ணை தடவி எல்லாரும் சாப்பிட்டே ஆகணும்.

"இட்டிலின்னா வகிறு தெரியாமத் தின்னுபோட்டு பொறவு நோவுதுன்னு சொல்லுவே,"ன்னு
கண்டிசனா நல்லெண்ணை தடவுன இட்டிலி ரெண்டை வாய்க்குள்ளே வச்சுத்திணிச்சே போடும்.
நெசமாவே வகிறு வலிச்சதில்லீங்கோ! அதுவும் இட்டிலி ஒவ்வொண்ணும் பறக்கும் தட்டு
கணக்கா இருக்கும்.

வகிறை நிரப்புனது இட்டிலியா, அப்பத்தாவோட பாசமான்னு இப்போ தோணுது.
பள்ளியோடத்துக்கு இட்டிலியைப் பொட்டலமாக் கட்டுனாக் கூட வாழையெலையிலே
தண்டைக்கீறிவிட்டு, முந்தானையாலே துடைச்சு, நல்லெண்ணை போட்டுப் பூசி, கொதிக்குற
இட்டிலியை கைசுடுமேன்னு கூடப் பார்க்காம வைச்சு, சட்டினி, கருவாட்டுக்கொழம்பு
வைச்சு கரிசனையா கட்டிக்கொடுக்கும்.

ஒரு தீவாளியன்னிக்குத் தான் அப்பத்தா போய்ச் சேர்ந்திருச்சு. "எலே, தலைக்கு
எண்ணை வச்சுக் குளிலே,"ன்னு என் கிட்டே சொன்னது தான் அது கடைசியா பேசுன
வார்த்தை. கிணத்தடிக்குப்போச்சுது, அப்பாரும் அத்தானும் பத்து நிமிசம்
கழிச்சுத் தூக்கிட்டு வந்து போட்டாங்க!

"லே மண்டைக்குக் குறுக்காலே ஒரு துணியைக் கட்டுலே,"ன்னு சொல்லிப்போட்டு
அப்பச்சி முகத்தைத் திருப்பிக்கிட்டாரு. ஆறு பிள்ளைங்களும் ஓறவாளிகளும்
வந்திருக்கையிலே அழுறதைக் காட்டக்கூடாதுன்னு அவருக்கு ரோசம்!

ஏன் சொல்லுகேமுண்ணா, இப்போ இட்டிலின்னா குழி இட்டிலி, மினி இட்டிலி, இட்டிலி
மஞ்சூரியன் கூட வந்திருச்சு! பொட்டிக்கடையெல்லாம் இட்டிலி மாவு பொட்டலம் போட்டு
விக்கான். ஆனா, அப்பத்தாங்களெல்லாம் தாம்பரம், குரோம்பேட்டை,மதுராந்தகம்
பக்கத்துலே முதியோர் இல்லத்துலே இருக்காங்க!

பிரஷர் குக்கர், மைக்ரோவேவ் ஓவன் எல்லாம் இருக்குது. பத்து நிமிசத்துலே
இருபத்தி நாலு இட்டிலி கிடைக்குது. பத்து வருசமா அப்பத்தா கைமணத்துக்காக
ஏங்குகேன்.

தலைநோவையிலே அப்பத்தா சித்தரத்தை அரச்சு நெத்தியிலே பத்துப்போடும். வகுறு
வலிச்சா வெளக்கெண்ணையைத் தொப்புளிலே தடவும். பூண்டு, வெந்தயம்,இஞ்சி
சேர்த்தரைச்சு துளியோல கருப்பட்டியும், நெய்யும் சேர்த்து மிட்டாயி மாதிரி
உருட்டிக் கொடுக்கும்.

இப்போ பிளாஸ்டிக் டப்பா முழுக்க க்ரோசின்,அனாசின்,டைஜீன் வச்சிருக்கேன். இது
பிளாஸ்டிக் யுகம். அப்பத்தாவும் இல்லை; இட்டிலியும் இல்லை.

ரெடிமேடா எல்லாம் கிடைக்குது! பாசம் தவிர....

புரியுதா இட்டிலிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமை...?

9 comments:

பிரசாத் said...

நயினா… கயக்கிட்ட போ… இன்னாத்த சொல்ல… இன்னாம்மா எளுதுறியே கண்ணு…

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க.. பாட்டியின் பாசம் கலந்த இட்லியை இப்ப எங்க போய் தேடுறது..

settaikkaran said...

பிரசாத்! நெசமாலுமேயா? டாங்க்ஸ்பா!!

settaikkaran said...

முத்துலட்சுமி அவர்களே, நீங்க யாருன்னு பெயரைச் சொடுக்கிப் பார்த்தேன். பயந்தே போயிட்டேங்க! இவ்வளவு பெரிய பதிவாளரா இருந்துக்கிட்டு என்னையும் பாராட்டியிருக்கீங்களே! எப்படி நன்றி சொல்வேன்?

சிட்டுக்குருவி said...

அப்பத்தா இட்லி பார்சல் கிடைக்குமா

duraian said...

அருமை நண்பரே

நான் சொல்வது முந்திரிக்கொட்டைத்தனமாக இருக்கலாம் . ஆனாலும்

உங்களுக்குள் ஒரு வேகம் இருப்பதை உணர்கிறேன் . தாங்கள் சாதனைகள் பல படைப்பீர்கள் . வாழ்த்துகள்
( ஞாபகம் வச்சுக்கோங்க எங்கள :)

settaikkaran said...

சிட்டுக்குருவி! கிளறிப்போட்டீங்களே!!

எங்க அப்பத்தா செத்துப்போயி பத்து வருசமாச்சு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

settaikkaran said...

துரை அண்ணே! நீங்க வந்ததே போதுமண்ணே! மனசுக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு! மத்ததெல்லாம் ஆண்டவன் கையிலே இருக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களூக்கு முன்பே ப்ளாக் பத்தி தெரியவந்து எழுதிட்டிருக்கறேன் அவ்வளோ தான்.. பெரிய பதிவர் என்று எல்லாம் ஏன் சொல்லிக்கிட்டு.. :)
(வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்துவிடுங்களேன்..பின்னூட்டமிட கஷ்டம் )