Tuesday, October 30, 2012

பாரப்பா பழநியப்பா

பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா மிதக்குதப்பா
     உள்ளேநீர் நுழையுதப்பா


பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்


மழைபொழிஞ்சா ஏரியைப்போல்
     மளமளன்னு வெள்ளமப்பா
மாயாபஜார் மாளிகைபோல்
     மறைஞ்சிருக்கும் பள்ளமப்பா
ஆமையைப்போல் வாகனங்கள்
     அங்கலாய்ச்சு ஊருதப்பா
அவங்கவங்க வீட்டுக்குள்ளே
     அழுக்குத்தண்ணி சேருதப்பா

பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்

தண்ணிபோட்டு ஓட்டுவது
     தப்புன்னுதான் சொல்லுதப்பா
தண்ணிமேலெ ஓட்டுறது
     தலையெழுத்தா சொல்லுங்கப்பா
ஆளுக்காளு குழிதோண்டி
     அகழியாச்சு சாலையப்பா
ஆளிருந்தும் அம்பிருந்தும்
     செய்வதில்லை வேலையப்பா

பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா மிதக்குதப்பா
     உள்ளேநீர் நுழையுதப்பா

Monday, October 29, 2012

கமலுக்கு மணி கட்டிய முக்தா சீனிவாசன்

சினிமா குறித்து நான் வலைப்பதிவில் அதிகம் எழுதுவதில்லை. ஆனால், ‘தி ஹிந்துநாளிதழில் ‘நாயகன்படம் வெளியாகி 25 ஆண்டுகளானதை முன்னிட்டு, கமல்ஹாசன் எழுதிய ஒரு கட்டுரையில், அவர் திருவாய்மலர்ந்தருளிய சில கருத்துக்களை வாசித்தபோது, ‘இந்தப் பூனைக்கு மணிகட்ட யாருமில்லையா?என்று எண்ணியது உண்மை. முக்தா சீனிவாசன் சென்ற வார ‘தி ஹிந்துவில் கமலின் கருத்துக்களை ஆணித்தரமாக மறுத்து எழுதிய இடுகையை வாசித்ததும் சபாஷ்! இது பதில்என்று சொல்லிக் கொண்டேன். அவர்களது வாதப்பிரதிவாதங்கள் இணையத்தில் கிடைப்பதால், அவற்றை விட்டுவிட்டு, ஒரு சராசரி ரசிகனாக எனக்கு எழுந்த சில கேள்விகளை மட்டும் முன்வைக்க விருப்பம்.

      கமல் தனது கட்டுரையில், ‘நாயகன் படத்தின் வெற்றிக்குத் தான் மட்டுமே காரணம் என்பதுபோன்ற ஒரு பிரமையை உருவாக்க மிகவும் மெனக்கெட்டிருந்ததைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. ஆனால், முக்தா சீனிவாசன் தனது மறுப்பில் சொல்லியிருப்பதுபோல, அதற்காக படத்தின் தயாரிப்பாளரை மட்டம் தட்டியிருப்பது, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று திரைப்படத்துறையில் தசாவதாரமெடுத்து, விசுவரூபமாய் விண்ணளாவ நிற்கிற ஒரு ‘நாயகன்செய்யத்தக்க காரியமல்ல.

      மேற்படிக்கட்டுரையில், வாசிப்பவரைப் புருவம் சுருங்கச் செய்த சில பத்திகளைக் காண்போம்.

      //After making Vikram, in 1986, I realised I should have asked Mani to direct it. It was his cup of tea. He asked me what had happened, because the story was so different from what I’d told him. I told him that this was bound to happen. I said, “The intelligence of (the writer) Sujatha and Kamal Haasan was bound to be diluted by Kodambakkam. It will happen to you too.”//

      விக்ரம் படத்தின் கதையை சுஜாதா ‘குமுதம்பத்திரிகையில் எழுதியதைப் படித்தவர்களுக்கு, ‘காக்கிச்சட்டைபடத்தின் வெற்றியில் பிரகாசமாக இருந்த இயக்குனர் ராஜசேகரை கமல் இயக்குனராக்கியிருந்தார் என்று சுஜாதா குறிப்பிட்டிருந்தது ஞாபகமிருக்கும். என்ன செய்வது, ராஜசேகர் அகாலமரணமடைந்து விட்டதால், கமல் என்ன வேண்டுமானாலும் இப்போது சொல்லலாம்.

      அப்புறம், சுஜாதா மற்றும் கமல் இருவரின் புத்திசாலித்தனத்தை கோடம்பாக்கம் நீர்த்துவிடச் செய்தது என்று கமல் குறிப்பிட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. தன் சொந்தப்பணத்தைப் போட்டு, தானே தயாரித்த படத்தில் அவரே வியாபாரத்துக்காக, சமரசங்கள் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டுவிட்டு, இன்னொரு பழம்பெரும் தயாரிப்பாளரின் தலையை உருட்டுவது என்ன நியாயமோ? கமலின் கூற்றுப்படியே ‘ஓல்ட்-ஸ்கூல்தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் செய்தால் தவறு; ‘நியோ-ஸ்கூல்கமல் செய்தால் அது சரியா? என்ன வாதமோ, கமலுக்கே வெளிச்சம்.

      //A little later, the producer-director Muktha Srinivasan, with whom I’d made films like Simla Special, said he wanted to make another film with me.//

//Muktha Films had a reputation for being tight-fisted. When Mr. Srinivasan heard that we wanted to shoot in Bombay, he wasn’t happy. He just wanted us to make a film — any film — that would net him a profit of Rs. 5 lakh. That is how he was used to working. Films were a business. He wasn’t interested in films as art.//

      சிம்லா ஸ்பெஷல்போன்ற தனது படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் என்று சௌகரியமாக, தனது ஒரு தோல்விப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் கமல். உண்மை என்ன தெரியுமா? ‘தங்கத்திலே வைரம்,’ ‘பட்டிக்காட்டு ராஜாபோன்ற டப்பாப் படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துவந்த கமல்ஹாசனை முழுநீளப் படத்துக்கும் கதாநாயகனாகப் போட்டு எடுத்ததோடு, கமலை முதன்முதலாக ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்என்று மூக்கால் பாடவைத்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டவரும் இதே முக்தா சீனிவாசன் தான்,பாவம்!

      நிறைகுடம்தொடங்கி ‘பரீட்சைக்கு நேரமாச்சுவரைக்கும் சிவாஜி கணேசனை வைத்து ஒரு டஜன் படங்கள், ‘பொல்லாதவன்,சிவப்புச்சூரியன்என்று ரஜினியை வைத்து இரண்டு படங்கள் எடுத்தவர்கள் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தினர். மீதியை கோடிட்ட இடத்தை நிரப்புவது போல நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

      கமலின் கூற்றுப்படி, முக்தா சீனிவாசனுக்கு சினிமா எடுப்பது வியாபாரம்; அப்படியென்றால், கமலுக்கு இல்லையா? அவர் தயாரித்த படங்கள், நடித்த படங்கள் எல்லாமே கலைப்படங்கள் தானா? முக்தா பிலிம்ஸை விடுங்கள்! தேவர் பிலிம்ஸில் யானைக்கு அண்ணனாக நடித்த ‘ராம்-லட்சுமண்மற்றும் ‘தாயில்லாமல் நானில்லைபோன்ற படங்களெல்லாம் கலையில் தோய்ந்து போன படங்களா? ஏ.வி.எம்-முடன் இணைந்து ‘சகலகலாவல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, பேர் சொல்ல ஒரு பிள்ளைபோன்ற படங்களில் நடித்தாரே. அவையெல்லாம் உலகத்திரைப்படங்களின் வரிசையில் வருமா?
     
      //Earlier in my career, I told Bharathiraja that the psychopathic killer in Sigappu Rojakkal should not be singing and dancing. But he deflected my objections saying that the song (Ninaivo oru paravai) was a dream song, shot from the heroine’s point of view.//

      சந்தடி சாக்கில் பாரதிராஜாவையும் உரசியாகி விட்டது. மலையாளத்தில் ‘அடிமகள்என்ற பெயரில் வெளியான படத்தை கே.பாலசந்தர் ‘நிழல் நிஜமாகிறதுஎன்ற பெயரில் எடுத்திருந்தார். அந்தப் படம் வந்த சுவடே தெரியாமல் சுருண்டு கொண்டது. காரணம், படத்தில் வந்த அனுமந்துவின் கதாபாத்திரம் 16 வயதினிலே சப்பாணியோடு அவ்வளவு ஒத்திருந்தது. பாரதிராஜா ஒரு புயல்போல தமிழ்சினிமாவில் வீசிய அந்தக் கதாபாத்திரத்தைப் போன்ற இன்னொரு பாத்திரத்தை ரசிகர்கள் ஏற்க விரும்பவில்லை. அப்படியொரு கதாபாத்திரத்தைக் கமலுக்குத் தந்த பாரதிராஜா ‘நினைவோ ஒரு பறவைபாடலை எடுத்ததிலும் கமலுக்கு ஆட்சேபணை தானாம். சரி, அவரது குருநாதரின் ‘நிழல் நிஜமாகிறது படத்தில் ஒரு அரசு அதிகாரியாக வருகிற கமல் திடீரென்று சம்பந்தா சம்பந்தமின்றி பரத நாட்டியம் ஆடுகிற காட்சிக்கு மட்டும் எப்படி ஒப்புக்கொண்டு நடித்தாரோ!

      மீண்டும் சுஜாதா எழுதிய ‘விக்ரம்படக்கதைக்கு வருவோம். ‘நாயகன் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி; அவன் நடனமாடுவது போலக் காட்டினால், சரிவராது என்பதால், படத்தின் டைட்டில் காட்சியில் புகைமூட்டத்துக்குள் ஆடுவது போலக் காட்டியதாகசுஜாதா எழுதியிருந்தார். அதே படத்தில் ‘என் ஜோடி மஞ்சக்குருவிஎன்று கமல் குத்தாட்டம் போட்டிருந்தாரே, அது எதில் சேர்த்தி?

     //Nayakan was one of the films — along with the films I’ve done with Balu Mahendra, K. Vishwanath and, of course, my guru K. Balachander — that made me decide that I should not be doing short-livedmasala movies anymore.//

      கமலுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பது எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும், இது ரொம்பவே ஓவர்! ‘நாயகன் படத்துக்குப் பிறகு, கமல் மசாலா படத்திலேயே நடிக்கவில்லையா? உலக நாயகனின் காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?

     //I told the producer that he was going to get awards. He said he hadn’t made the film to get awards, merely to make profits. And he was nervous about the film’s dark lighting and so on.//

      குணாபடம் வெளிவரும் முன்னர், ‘அது ஒரு ஆர்ட் ஃபிலிம்என்ற செய்தியை பல வாரப்பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. உடனே நமது உலக நாயகர் ஒரு பிரபல வாரப்பத்திரிகைக்குக் கடிதம் எழுதியிருந்தார். “ வினியோகஸ்தர்களைப் பொறுத்தவரை ஆர்ட் ஃபிலிம் என்பது கெட்ட வார்த்தை. எனது குணா படம் ஆர்ட் ஃபிலிம் அல்ல; இது எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட படம்,என்று பகீரங்கமாக ஒரு விளக்கம் எழுதியிருந்தார். அதாவது என் படம் கலைப்படமில்லை; வியாபாரப்படம்தான் எல்லாரும் வந்து பாருங்கோன்னு ‘அபிராமி...அபிராமி...அபிராமி...ன்னு கதறிவிட்டார் மனிதர்.

      நாயகன்படம் தயாரிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை கமலும் முக்தா சீனிவாசனும் மற்றவர்களும்தான் அறிவார்கள். ஆனால், நினைவு தெரிந்த நாள் முதல் தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம் என பலமொழிகளில் பல படங்களைப் பார்த்துக்கொண்டு வரும் எனக்கு உலக நாயகன் கமல்ஹாசனின் படங்களை ரா.பா-வுக்கு முன், ரா.பாவுக்குப் பின் என்று தலைகீழாகத் தெரியும். (ரா.பா ராஜபார்வை).

       நான் இணையத்தில் எழுத வந்த நாள்முதலாகவே, கமல்ஹாசனின் படங்கள் குறித்த அபரிமிதமான மெய்சிலிர்ப்புகளையும், நேர் எதிர்மறையான மூர்க்கத்தனமான விமர்சனங்களையும் வாசித்து வருகிறேன். அவரது படங்கள் தொடர்புடைய செய்திகள் இணையமெங்கும் விரவிக் கிடந்தாலும், ஒரு ரசிகனாக அவரது படத்தை மட்டுமே விமர்சிப்பது என்று அவர் குறித்த எதிர்மறையான செய்திகளை வைத்து இடுகை எழுத முயற்சித்ததில்லை.

      ஆனால், ‘நாயகன்படம் பற்றிய கமலின் கட்டுரை, மீண்டும் மீண்டும் அவரது இரட்டை நிலையையும், ஓல்ட்-ஸ்கூல் என்று ஏற்றிய ஏணியைத் தூற்றி, தன்னை மேதாவி என்று நிலைநிறுத்த முயல்கிற அனாவசியமான ஈகோவையுமே வெளிப்படுத்தியது. ஒரு திரைப்பட ஆர்வலன் என்ற முறையில், இந்த இடுகையை எழுதுவதற்கு அவரது இந்த விபரீத முரண்பாடே காரணமாகவும் இருந்தது.

      கலைஞானி! உங்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவருக்கு வந்தால் தக்காளிச்சட்னியா?

***********

Saturday, October 27, 2012

யார் தருவார் இந்த ’கடி’யாசனம்?

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Friday, October 26, 2012

கேஜ்ரிவாலும் கேப்பையில் நெய்யும்!
முஸ்கி: 
எதிர்வினைகளை எதிர்பார்த்துத்தான் இதை எழுதியிருக்கிறேன்;
ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க முடியுமோ, முடியாதோ;
 ஆனால், கருத்துக்களை வரவேற்கிறேன்; மதிக்கிறேன்.
                 


      எப்படி அண்ணா ஹஜாரே குறித்த எனது அனுமானங்கள் பின்னாளில் அவ்வண்ணமே இனிதே நடந்து முடிந்ததோ, அப்படியே இது விஷயத்திலும் நடக்குமென்றெல்லாம் ஆருடம் சொல்லவில்லை. தற்போதைய கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் உண்டாக்கக்கூடிய பின்விளைவுகளைப் பற்றிய எனது கணிப்புகள் தவறானால், அதற்காக வருந்தவோ, வெட்கப்படவோ நான் அரசியல் ஆய்வாளன் அல்லன். இன்றைய சூழலில் அர்விந்த் கேஜ்ரிவால் செய்துகொண்டிருக்கும் சாகசங்கள் அவர் கொண்டுவர விரும்புகிற மாற்றத்தை முளையிலேயே கிள்ளி எறிவதைத் தவிர வேறு எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதே எனது உறுதியான நம்பிக்கை. அதற்கான முகாந்திரங்களை முடிந்தவரை கோர்வையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.


     ஊழல் மட்டும்தான் பிரச்சினையா?

      சுதந்திர இந்தியாவில் ஊழல் எப்போதுமே ஒரு தற்காலிகமான பிரச்சினையாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. இந்திரா காந்தி அம்மையாரின் நகர்வாலா ஊழல் குறித்து இன்று எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்? லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், சர்வ வல்லமை படைத்த காங்கிரஸ் அரசை நீக்குவதற்காக போராடியபோது, அவரது முக்கியமான குற்றச்சாட்டுகள் இந்திரா காந்தியின் ஊழல் குறித்து மட்டும்தானே? அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதனால் கிலியில் இந்திரா அம்மையார் பிரகடனம் செய்த அவசர நிலை, மிசா ஆகியவற்றின் காரணமாகவே ஜனதா கட்சி ஆட்சியமைத்தது என்பது வரலாறு.

      போபர்ஸ் ஊழல்! ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இருந்த வி.பி.சிங்கே வெளியேறி, தேசமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, காங்கிரஸ் ஆட்சியை அகற்றியதும் இன்னொரு வரலாறு.

      கொஞ்சம் தமிழகத்தின் சமீபத்திய வரலாற்றையும் பார்க்கலாமா? செல்வி ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்ன கொஞ்சமா? அதைத் தொடர்ந்து தி.மு.க-த.மா.கா கூட்டணியமைத்து கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்ததே! அதன்பிறகு இன்றுவரை தி.மு.க, அ.தி.மு.க என்று மாற்றி மாற்றி ஆட்சியமைக்கிறார்களேயன்றி, இரு கட்சிகளின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நாளாவட்டத்தில் மக்களால் மறக்கடிக்கப்படுகின்றன என்பது தானே உண்மை?

      ஆக, ஊழலை மட்டுமே முன்னிறுத்திப் போராடினால், நிகழ்கிற ஆட்சி மாற்றங்கள் தற்காலிகமானவை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஜெ.பி அரும்பாடு பட்டு காங்கிரஸ் அரசை அகற்றியும் கூட,கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியினர் தவறி விட்டனர். ராஜீவ் காந்தி எதிர்ப்பு அலையில் ஆட்சிக்கு வந்த வி.பி.சிங்காலும் அதிக நாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இவர்கள் செய்த குளறுபடிகளின் காரணமாக, ‘இவர்களுக்கு ஊழல் காங்கிரஸ் ஆட்சியே மேல்என்ற முடிவுக்கு வாக்காளர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதுதானே உண்மை? சிறுபான்மையோ, பெரும்பான்மையோ தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் மீண்டும் அமர்ந்திருப்பது காங்கிரஸ் தானே? தொன்றுதொட்டு ஊழல் செய்துவரும் காங்கிரசுக்கு இது சாத்தியமாகிறது என்றால், ஊழலைக் காட்டிலும் மக்களை நேரிடையாக பாதிக்கிற பிரச்சினைகள் உள்ளன என்பதுதானே பொருள்?

      (மக்கள் காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டதால்தான் இந்த காங்கிரஸ் அசம்பாவிதங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்று சொல்பவர்களுக்கு அப்படியென்றால் அர்விந்த் கேஜ்ரிவால் முதலில் வாக்காளர்களைத் திருத்த வேண்டும்; அதற்கு முன் அரசியல் கட்சிகளைக் குறிவைப்பது ஒன்று அறியாமை அல்லது மோசடி வேலை என்றுதான் பொருள்.)


     மாற்று அரசியல் இருக்கிறதா?

      லோக்நாயக் ஜெ.பி காங்கிரஸை எதிர்க்க, அப்போதைய ஜனசங்கத்தின் ஆதரவையும் நாடினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சூழலில், காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவது ஒன்றே குறிக்கோள் என்று, நேரெதிர் துருவங்களாக இருந்த கட்சிகளையும் இணைத்துத்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. தமிழகத்திலும் கூட, தி.மு.கவையும், த.மா.கா-வையும் இணைத்து ஒன்றுபட்ட கூட்டணியாக்கியதால்தான் அப்போது அ.தி.மு.க-வை முறியடிக்க முடிந்தது. இவ்வளவு ஏன்? முந்தையை தி.மு.க.ஆட்சியை அகற்றுவதற்கும் கூட, அ.தி.மு.கவுக்கு (அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட!), தே.மு.தி.க போன்ற கட்சிகளுடனான கூட்டணிதான் முக்கியமான காரணமாக இருந்தது.

      அண்ணா ஹஜாரே, ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதமிருந்தபோது காங்கிரஸுக்குக் கிலி பிடித்ததற்கு முக்கியமான காரணம், அப்போது பா.ஜ.க. உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மன்மோகன் சிங்குக்கு எதிரான அண்ணாவின் ‘சத்யாகிரஹ(?!?!) போராட்டத்தைஆதரித்தன என்பதுதான். ஏற்கனவே உட்கட்சிப்பூசல், விலைவாசியேற்றம், கூட்டணிகளின் மிரட்டல், கட்டுப்படாத அமைச்சர்கள் என்று எல்லாப் பக்கமும் இடிவாங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ், அண்ணாவின் போராட்டத்தினால் ஏற்பட்ட எழுச்சி(?!)யைக் கண்டு மிரண்டு, அடிபணிந்தது. (அதன்பிறகு நடந்தேறிய சம்பவங்களின் பின்னணியைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? அண்ணாவுக்கும் தம்பி கேஜ்ரிவாலுக்கும் இடையே ஆயிரம் இருக்கும்; அதெல்லாம் நமக்கு எதற்கு? :-))  )


      இப்போது கேஜ்ரிவால் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளையும் குறிவைத்து, தொடர்ந்து ‘கன்னித்தீவுகதை மாதிரி, பிட் பிட்டாக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இதில் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பலன் என்னவென்றால், மத்தியில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிக்கும் இடையிலிருக்கிற வினோதமான ‘நெருக்கம்வெளிப்பட்டிருக்கிறது. அதைத் தவிர, அர்விந்த் கேஜ்ரிவால் சாதித்தது என்ன?

      2014-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று திக்விஜய்சிங் கூட நம்ப மாட்டார். எமர்ஜென்ஸிக்குப் பிறகு, காங்கிரஸை உ.பியில் ஒரு கட்சியாகவே எவரும் மதிப்பதில்லை என்பது அடுத்தடுத்த தேர்தல்களில் நிரூபணமாகி விட்டது. இடதுசாரிகளும் ஒதுங்கியாகி விட்டது. போதாக்குறைக்கு உலகத்தில் எப்படியெல்லாம் ஊழல் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து, எப்படியெல்லாம் செய்ய முடியாதோ அவற்றையும் செய்து உலக அரங்கில் ஊழல்திலகங்களாகப் பரிமளிக்கிறது காங்கிரஸ். ஆகவே, அடுத்த தேர்தலில் காங்கிரஸை முறியடிப்பதுதான் குறிக்கோள் என்று கேஜ்ரிவால் சொல்வது, ஏதோ ஒரு படத்தில் வடிவேலு ஓமகுச்சி நரசிம்மனை விதவிதமாக அடித்துப் போட்டோ பிடித்துக் கொள்வதுபோல நகைச்சுவையாக இருக்கிறது.

      சரி, அப்படியே காங்கிரஸை ஒழிப்பதுதான் லட்சியம் என்று வைத்துக் கொண்டால், பா.ஜ.க மீதும் குற்றம் சாட்டி இந்த மனிதர் என்ன சாதித்து விட்டார்? ‘அடப் போங்கப்பா, எல்லாக் கட்சியும் ஊழல் கட்சிதான்!என்ற ஒரு விரக்தியைத்தான் பொதுமக்களுக்கு அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இதன் நேரிடை விளைவு ரொம்பவும் வேடிக்கையாக இருக்கப்போகிறது; காங்கிரஸ்-பா.ஜ.க இரண்டு கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுகளையும் இவர் பிரித்து, மீண்டும் இரண்டு கட்சிகளுக்கும் ‘உபகாரம்செய்யப்போகிறார்.

      இல்லை; கேஜ்ரிவால் உண்மையிலேயே பா.ஜ.கவின் ஊழலையும் எதிர்க்கிறார்,என்றால், டிசம்பரில் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறப்போகிறது; அங்கு போய்ப் பிரச்சாரம் செய்வாரா? தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது; அங்கு போனாரா?

      விஷயம் இதுதான்! அர்விந்த் கேஜ்ரிவால் குறிவைப்பது தில்லிக்கு மட்டும்தான்! தில்லியில் நடக்கப்போகிற தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்றுதான், அங்கு எலெக்ட்ரீஷியன், பிளம்பர் வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்னர், தன் சொந்த ஊரில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த புண்ணியவான், பூனேயில் நடந்த இடைத்தேர்தலுக்கு ஏன் போகவில்லை?

      லாவாஸா நில அபகரிப்பு குறித்து ஆண்டாண்டு காலமாக எழுதப்பட்டு வருகிறது. ஆனால், ஷரத் பவார் குறித்து கேஜ்ரிவால் வாயே திறக்கவில்லை. ஏன் இந்த ‘செலக்டிவ் அம்னீஷியாஎன்று கேட்டால் பதிலுமில்லை. சல்மான் குர்ஷித் பதவி விலகும்வரை ஓயமாட்டேன் என்றேல்லாம் சவடால் பேசிவிட்டு, ‘அப்புறம் பார்த்துக்கறேன்என்று ஜகா வாங்கியாகி விட்டது. மொத்தத்தில் அண்ணா ஹஜாரேயும் சரி, தம்பி கேஜ்ரிவாலும் சரி, ‘வாய்ச்சொல்லில் வீரரடிஎன்பதற்கு உதாரணமாக இருப்பதைத்தவிர உருப்படியாக எதையும் செய்கிறவர்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

      இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், ‘இனி ஊழலுடன் சமரசம் செய்துகொண்டுதான் தீர வேண்டும்,என்ற விபரீதமான மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதுதான். காரணம், ஊழல்வாதி அரசியல்வாதிகளைப்போலவே ஊழல் எதிர்ப்புவாதிகளும் சந்தர்ப்பவாதிகளாக இருப்பதே காரணம்.

      சினிமாவில் ஹீரோக்கள் பத்து பேரைப் பந்தாடுகிறதைப் பார்த்து விசிலடித்துக் கரவொலி எழுப்புகிற பார்வையாளர்களாய், அர்விந்த் கேஜ்ரிவால் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

*************

Tuesday, October 23, 2012

ஆயிரம் பொய்=ஒரு கல்யாணம்


ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Thursday, October 18, 2012

என்னம்மா கண்ணு சௌக்யமா?


என்னம்மா கண்ணு சௌக்யமா?

                ஓரிரு தினங்களுக்கு முன்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது இன்னும் பெயரிடப்படாத அரசியல்கட்சியின் பெயருள்ள தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அந்தப் புயல் இன்னும் ஓயாத நிலையில், இன்று பா.ஜ.க. தலைவர் நித்தின் கட்கரி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

      இந்த நிலைமையில், காங்கிரஸின் சல்மான் குர்ஷிதும், பா.ஜ.க-வின் நித்தின் கட்கரியும் சந்தித்தால் எப்படியிருக்கும்?

      மிஸ்டர் பாரத்படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ் சந்தித்துப் பாடுகிற ‘என்னம்மா கண்ணு சௌக்யமா?மெட்டில் ஒரு கற்பனை!சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   கேஜ்ரிவாலு செஞ்ச வம்புதான்இனிமேல்
            கேள்விமேல் கேள்வியாக அம்புதான்

நித்தின்:    ஊழலும் வடியாத குட்டைதான்நாமும்
            ஊறிப்போய்க் கிடக்கின்ற மட்டைதான்

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!
  

சல்மான்:   வேலியிலே போகுறதை வேட்டிக்குள் விட்டு
           வேதனைதான் படூறீங்க பேராசைப்பட்டு

நித்தின்:    அன்னாவுக்குப் பின்னால்போயி ஆப்பு வாங்கிட்டோம்
            ஆமைமுயல் கதையைப்போல் கொஞ்சம் தூங்கிட்டோம்

சல்மான்:   எங்களைப்போல் நீங்க.....ஓஹோ..ஹோஹோ..ஹோ
            திங்க முடியாது...ஆஹா..ஹாஹா..ஹா

நித்தின்:    சோர்ந்துவிட மாட்டோம்.... ஓஹோ..ஹோஹோ..ஹோ
            சோடைபோக மாட்டோம்.... ஆஹா..ஹாஹா..ஹா

சல்மான்:   சாமர்த்தியம் போதாதே! ஆகாதே!
நித்தன்:    டிரெய்லர்தானே போட்டிருக்கு; பிக்சர் பாருங்க...ஹோய்!


சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

  
சல்மான்:   கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
            கொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை

நித்தின்:    சண்டைக்காரர் போல நாமும் கோஷம் போடலாம்
            சைவப்பூனை போல நாமும் வேஷம் போடலாம்

சல்மான்:         மாத்தி மாத்தி வந்து....ஓஹோ..ஹோஹோ..ஹோ
            போட்டுவைப்போம் பொந்து...ஆஹா..ஹாஹா..ஹா

நித்தின்:    ஆசை நல்லாக் காட்டி...ஓஹோ...ஹோஹோ..ஹோ
            ஆளாளுக்கு லூட்டி...ஆஹா..ஹாஹா..ஹா

சல்மான்:         நம்மை விட்டா ஆளேது...கூடாது

நித்தின்:    காத்துவீசும் எப்பவுமே நம்ம பக்கம்தான்...ஹோய்!

 
சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

சல்மான்:   கேஜ்ரிவாலு செஞ்ச வம்புதான்இனிமேல்
            கேள்விமேல் கேள்வியாக அம்புதான்

நித்தின்:    ஊழலும் வடியாத குட்டைதான்நாமும்
            ஊறிப்போய்க் கிடக்கின்ற மட்டைதான்

சல்மான்:   என்னய்யா நித்தின் சௌக்யமா?
நித்தின்:    ஆமாய்யா சல்மான் சௌக்யம்தான்!

*****************************************************
 Tuesday, October 16, 2012

கன்னமிட்ட கை

ருளடைஞ்சான்பேட்டை காவல் நிலைய வாசலில், மனைவியிடம் குட்டு வாங்கிய கணவனின் மண்டை போல ஒரு திடீர் கூடாரம் முளைத்திருந்தது. தமிழக முற்போக்குத் திருடர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிச்சுவா பக்கிரி, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் கச்சேரி நடத்தவந்த வித்வானைப் போலக் கம்பீரமாக அமர்ந்திருக்க, பக்கவாத்தியங்களைப் போல அவனைச் சுற்றி, பொருளாளர் அரைபிளேடு அண்ணாவி, செயலாளர் குத்தூசி குப்புசாமி மற்றும் மகளிரணித் தலைவி கொண்டையூசி கோதண்டம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பின்னாலிருந்த சுவற்றில் ‘மின்வெட்டைக் கண்டித்து த.மு.தி.ச-வின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம்என்று எழுதப்பட்டிருந்த பேனர் மாட்டப்பட்டிருந்தது. பந்தலிலிருந்த ஓட்டை வழியாக விழுந்த சூரிய ஒளி, பக்கிரியின் பளிங்கு மண்டையில் பட்டதால், அது ஏ.வி.எம்.ஸ்டூடியோவின் ஃபோகஸ்-லைட் போலாக, பேனர் குளோசப்பில் காட்டிய  ஹன்சிகா மோட்வானியின் முகம்போலப் பளபளப்பாய்த் தெரிந்தது.

      வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு! மின்வெட்டை வாபஸ் வாங்கு!

      வழங்கு! வழங்கு! மின்சாரத்தை வழங்கு!

                ஸ்டேஷன் வாசலில் காவலுக்கு நின்றிருந்த ஏட்டு திருப்பதிசாமி, திருதிருசாமியாகி, ஓரிரு கணங்கள் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டருக்குத் தகவல் தெரிவிக்க உள்ளே ஓடினார்.

      ஐயா! இந்த அதிசயத்தைப் பார்த்தீங்களா?

      ஆமாய்யா!அலுத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர். “நேத்து ராத்திரி நம்ம ஏரியாவுலே ஒரு திருட்டுக்கூட நடக்கலை. அதுக்கென்ன இப்போ?

      எப்படிய்யா நடக்கும்? எல்லாத் திருட்டுப்பயலுவளும் ஸ்டேஷன் வாசல்லே இருக்காங்கய்யா!

      ஐயையோ, திருந்திட்டாங்களாமா? என்னையா அக்கிரமம்? இவங்களை நம்பி தீபாவளிக்கு நான் நிறைய பட்ஜெட் போட்டிருந்தேனேய்யா!

      இன்ஸ்பெக்டரும் ஏட்டும் பேசிக்கொண்டிருக்கும்போதே, குத்தூசி குப்புசாமி கையது கொண்டு மெய்யது பொத்தியபடியே ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

      வணக்கம் ஐயாமாருங்களே! நம்ம தலைவரு மின்வெட்டைக் கண்டிச்சு உண்ணாவிரதம் இருக்காருங்க! பெரியமனசு பண்ணி நீங்க ஒரு தபா பந்தலுக்கு வந்து எங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணி விழாவைச் சிறப்பிக்கணும்.

      யோவ் குப்புசாமி!இன்ஸ்பெக்டர் சீறினார். “என்னய்யா இது, என்னமோ சடங்குக்கு வந்து மொய் எழுதிட்டுப் போங்கன்னுறா மாதிரி கூப்புடுறே? மரியாதையாக் கலைஞ்சு போறீங்களா இல்லையா?

      ஐயா! நாங்க ஜனநாயகவழியிலே அறப்போராட்டம் நடத்திட்டிருக்கோம். எங்களைக் கலைஞ்சுபோகச் சொன்னா, அது மனித உரிமை மீறலாயிடும்! என்று எச்சரித்துவிட்டு குத்தூசி குப்புசாமி வெளியேறவும், இன்ஸ்பெக்டரும் ஏட்டும் மல்டிப்ளெக்ஸில் தியேட்டர்மாறிப்போய் மாற்றான் படம் பார்த்தது போல மலங்க மலங்க விழித்தார்கள்.

      என்ன கொடுமை சார்?ஏட்டையா குமுறினார். “இந்தப் பயலுகளைப் பிடிச்சு உள்ளே போடுங்க சார்.

      நாட்டு நடப்புத் தெரியாமப் பேசாதேய்யா! சும்மா உண்ணாவிரதம் மட்டுமிருந்தா அவனுக காமெடியனுங்க! அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டா ஹீரோவாயிடுவானுங்க! என்னதான் பண்ணுறாங்கன்னு பார்க்கலாம்!

      என்னமோ திட்டம் போட்டிருக்கானுங்க! மஃப்டியிலே யாரையாவது அனுப்பி இவங்க பிளான் என்னான்னு கண்டுபிடிப்போமா சார்?

      யோவ், இவனுங்கல்லாம் ப்ரொஃபஷனல் திருடனுங்க! போலீஸ் காட்டான்குளத்தூருல இருந்தா, கத்திப்பாரா ஜங்க்‌ஷனுலேயே மோப்பம் பிடிச்சிருவானுங்க!

      அப்போ ஒண்ணு பண்ணலாம் சார், எனக்குத் தெரிஞ்சு சேட்டைக்காரன்னு ஒரு ஆளு இருக்காரு! எப்பப் பார்த்தாலும் உடுப்பி ஹோட்டல்லே காப்பி டம்ளர் திருட வந்தவரு மாதிரியே முழிப்பாரு! அவரை அனுப்பி இவனுங்க திட்டமென்னான்னு தெரிஞ்சுக்கலாமா?

      உடனே பண்ணு!

      அடுத்த சில நிமிடங்களில், பிச்சுவாப் பக்கிரியின் அருகில் சேட்டைக்காரன் அமர்ந்துகொண்டு பேச்சுக் கொடுக்க...

      மிஸ்டர் பிச்சுவாப் பக்கிரி! கேட்கறேன்னு கோவிச்சுக்கக் கூடாது! உங்களுக்கும் மின்சாரத்துக்கும் என்ன சம்பந்தம்?

      என்ன அப்படிக் கேட்டுட்டீங்க?எரிந்து விழுந்தான் பக்கிரி. “உங்க வீட்டுக்குக் கம்பி வழியாத்தானே மின்சாரம் வருது? அதே மாதிரி நாங்களும் கம்பி வழியாவோ, பைப் வழியாவோ தான் உள்ளே புகுந்து வர்றோம். இந்த ஒரு சம்பந்தம் போதாதாய்யா?

      இருந்தாலும், திருடறதைத் தொழிலா வச்சுக்கிட்டு, இப்படி சமூக அக்கறை இருக்கிறா மாதிரி பீலா வுட்றது கொஞ்சம் ஓவரா இல்லையா?

      யோவ் சேட்டை! உங்க வீட்டுலே எத்தனை ஜன்னல் இருக்கு? யோசிக்காம சொல்லு பார்க்கலாம்.

      ஜன்னலா...அது வந்து..ஒண்ணு, ரெண்டு...

      என்னய்யா எண்ணிக்கிட்டு? நான் சொல்லட்டுமா? மொத்தம் உங்க வீட்டுலே நாலு ஜன்னல், ஒரு கதவு, ஒரு வெண்டிலேட்டர் இருக்கு.

      எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க பக்கிரி?

      யோவ், திருட்டுன்னா சும்மாவா? அதுக்கு எம்புட்டு ஜெனரல் நாலெட்ஜ் வேணும் தெரியுமா? யார் யார் வீட்டுலே எத்தனை ஜன்னல், கதவு இருக்கு? யார் வீட்டுலே கடிக்கிற நாயிருக்கு? யார் வீட்டுலே குரைக்கிற நாய் மட்டுமிருக்கு? எந்த வீட்டுலே புருஷன் குறட்டை வுடுவாரு, எந்த வூட்டுலே பொஞ்சாதி குறட்டை விடுவாங்க? யார் யார் எத்தனை மணிவரைக்கும் என்னென்ன சீரியல் பார்ப்பாங்க? இந்த மாதிரி எல்லா இன்ஃபர்மேஷனையும் கலெக்ட் பண்ணி, அதை Robbetix-ன்னு ஒரு ஸாஃப்ட்வேருலே ஃபீட் பண்ணி வைக்கணும்.

      திருடறதுக்கு ஸாஃப்ட்வேரா?

      உங்களை மாதிரி நெட்டுலேருந்து டோரண்ட் டவுண்லோட் பண்ணி க்ராக் பண்ணின ஸாஃப்ட்வேரில்லைய்யா! நெத்தி வேர்வை நிலத்துலே சிந்த அடுத்தவன் வூட்டுலே ஆட்டையைப் போட்ட காசுலே வாங்கின ஒரிஜினல் ஸாஃப்ட்வேர்!

      செய்யுறது திருட்டு! அதுக்கு இம்புட்டு பில்ட்-அப்பா?

      யோவ் சேட்டை! பார்த்தா பூட்டைத் தொறக்குற கம்பி மாதிரியிருக்கேன்னு சும்மா விடுறேன்! உனக்கென்னய்யா தெரியும் திருடனுங்களைப் பத்தி? எங்களை அரெஸ்ட் பண்ணினா, ‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சின்னு எந்தத் தலைவராவது கண்டனம் தெரிவிக்கிறாங்களா? நாங்க திருடிட்டு ஹாங்காக், பேங்காக், துபாய்னு போய் ஜாலியா இருக்க முடியுமா? ஒரு பாஸ்போர்ட் உண்டா? எங்களுக்கெல்லாம் ஸ்விஸ் பேங்குலே கூட அக்கவுண்ட் கிடையாது தெரியுமா? நாங்க இங்கேயே திருடி, திருடின பணத்தை இங்கேயே புழங்க விடறோம். எங்களாலே இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏதாவது பாதகம் இருக்கா சொல்லு?

      பக்கிரி அண்ணே? இதெல்லாம் டூ மச்!

      என்னய்யா டூ மச்? நாங்க ஒண்ணுமண்ணா, உள்ளூர்க்காரனுங்களோட கூட்டுச் சேர்ந்துதான் திருடறோம். எங்க தொழிலிலே அன்னிய முதலீடு உண்டா? ஃபாரின் கொலாப்ரேஷன் உண்டா? எந்த பேங்குலேயாவது எங்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்திருக்காங்களா? ஐ.பி.ஓ-வுக்குப் போயி எங்க கம்பெனியோட பங்குகளை ஷேர்மார்க்கெட்டுலே வித்திருக்கோமா? இந்தத் திருட்டுத் தொழிலை நாங்க இவ்வளவு வருஷமா எவ்வளவு நேர்மையா நடத்திட்டிருக்கோம்? எங்களைப் பத்தி ரிசர்வ் பேங்கோ, சி.ஏ.ஜியோ ஏதாவது குத்தம் சொல்லியிருக்காங்களா இதுவரை?

      ஆனாலும் இவ்வளவு பெருமை கூடாதுசார் உங்களுக்கு?

      ஏன் கூடாது? எங்க ஆளுங்க எத்தனையோ பேரு கட்சியெல்லாம் ஆரம்பிச்சு பெரிய ஆளாயிருக்காங்க! சுதந்திர இந்தியாவுலே எங்களாலே எவ்வளவு சமுக அரசியல் மாற்றமெல்லாம் நடந்திருக்கு? இம்புட்டுப் பெரிய நாட்டுலே எங்க ஆளுங்க யாராவது ஒருத்தருக்கு ஒரு சிலையாவது வைச்சிருக்காய்யா இந்த சமூகம்?

      அதெல்லாம் விடுங்க! இப்போ மின்வெட்டைக் கண்டிச்சு எதுக்கு நீங்க உண்ணாவிரதம் இருக்கீங்க?  நியாயமாப் பார்த்தா ஊரு இருட்டா இருந்தா உங்க தொழிலுக்குத்தானே ரொம்ப வசதி?

      சேட்டை! நீரு சென்னையிலே இருக்கீரு! ஜாலியா ஒரு மணி நேரம் மட்டும்தான் கரண்ட் இல்லாம, 23 மணி நேரம் நோகாம நோம்பு கும்புடறீரு! மத்த ஊருலே எப்போ கரண்ட் வரும், எப்போ போகும்னு யாருக்குமே தெரியலய்யா! சில ஊருலே ஒரு மணி நேரம்தான் கரண்டே வருதாம். இதுனாலே எங்க தொழில் எம்புட்டு பாதிச்சிருக்கு தெரியுமா?

      எப்படி?

      எப்படியா? ஆரம்பத்துலே இத்தனை மணியிலேருந்து இத்தனை மணிவரைக்கும்தான் பவர்-கட்டுன்னு அறிவிச்சிருந்தாங்க! அதை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஜனங்க அந்த நேரம் மட்டும் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிட்டிருந்தாங்க. நாங்களும் டென்சன் இல்லாம அந்தந்த நேரத்துலே திருடிட்டிருந்தோம். இப்போ அப்படியா? போன கரண்ட் இப்ப வரும், அப்ப வரும்னு எல்லாரும் கொட்டக் கொட்ட முழிச்சிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்காங்க! அப்புறம் நாங்க எப்படி வீடுபுகுந்து திருடறது? எங்க புள்ளைகுட்டியெல்லாம் பட்டினியாக் கிடக்குது தெரியுமா?பிச்சுவா பக்கிரியின் குரல் தழுதழுத்தது.

      ஓஹோ! பவர்கட்டுனாலே யாரும் தூங்காம இருக்கிறது உங்க தொழிலுக்கு இடைஞ்சலாயிருக்குன்னு சொல்லுங்க!

      அது மட்டுமா? நிறைய ஊருலே எல்லாருக்கும் பவர்-கட் பழகிப்போயி, கரண்டு வந்து ஃபேன் சுத்த ஆரம்பிச்சா, ஸ்வெட்டரும் குரங்கு குல்லாவும் போட்டுக்கிட்டு கொடைக்கானல் ஊட்டி மாதிரி வெளியே வாக்கிங் போயிடறாங்க. இவங்க வீட்டுலே ஆளு இருக்காங்களா, இல்லையான்னு எப்படிய்யா கண்டுபிடிக்கிறது?

      அடடா, கேட்கவே ரொம்ப சங்கடமாயிருக்கே!

      இதை விட சங்கடம் இருக்கு கேளுய்யா! இப்பல்லாம் எவனும் வீட்டுலே பணத்தை வைச்சுக்கிறதில்லை.பிச்சைக்காரன் கூட கார்டுதான் வைச்சிருக்கான். எங்களுக்குக் கிடைக்கிறதெல்லாம் மிக்ஸி, கிரைண்டர், வாக்யூம் க்ளீனர், டெலிவிஷன், ஃபிரிட்ஜ் மாதிரி சாமானுங்கதான். கரண்டுதான் வர்றதேயில்லையேன்னு எல்லாரும் வீட்டுலே இருக்கிற எலெக்ட்ரிக் சாமான் எல்லாத்தையும் வித்துப்புட்டு அம்மி, ஆட்டுக்கல், உரலுக்கு மாறிட்டாங்க! அதையெல்லாம் எப்படிய்யா திருடுறது?

      கேட்கவே பரிதாபமாயிருக்கு பக்கிரி அண்ணே!

      சொன்னா நம்ப மாட்டீங்க! வசந்த் & கோவுக்குப் போட்டியா கடைபோடுற அளவுக்கு எங்ககிட்டே ஏகப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், டிவி எல்லாம் இருக்கு! இந்தக் காலத்துலே போய் இதையெல்லாம் எவன்யா வாங்குவான்?ன்னு எல்லாரும் சிரிக்குறாங்கய்யா! இப்படியே போச்சுன்னா, இந்தத் தொழிலே நசிஞ்சு போயி நாங்கல்லாம் நடுத்தெருவுக்கு வந்திருவோமய்யா! பிச்சுவா பக்கிரி விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.

      பேசாம நீங்க உங்க போராட்டத்தை டெல்லியிலே போய் நடத்தலாமே பக்கிரி அண்ணே?

      பர்மிஷன் கேட்டிருக்கோம்; ஆனா கிடைக்கலை! நாங்க அங்கே போயி போராட்டம் நடத்தி, அப்புறமா கட்சி ஆரம்பிச்சு, தேர்தல்லே நின்னு ஜெயிச்சு ஆட்சியைப் பிடிச்சிருவோமோன்னு பயப்படுறாங்கன்னு நினைக்கிறோம். நாங்க திருடங்கதான், ஆனா அந்த அளவுக்கு அவங்க மாதிரி மனசாட்சியில்லாம நடந்துக்குவோமா? சொல்லுங்க சேட்டை!

      எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. கூட்டம் மட்டும் சேர்ந்து கொண்டேயிருந்தது. கோஷமும் வலுத்துக் கொண்டே போனது.

      வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு! மின்வெட்டை வாபஸ் வாங்கு!

********************