Friday, December 31, 2010

பத்தோட பதினொண்ணு....!

ஆயிற்று! 2010-க்கு ’வணக்கம்’ சொல்லி, 2011-க்கு ’நல்வரவு’ சொல்ல வேண்டிய நாள் இது. ஒவ்வொரு டிசம்பர் 31 வரும்போதும் பெரும்பாலானவர்கள் ஏதாவது தீர்மானம் எடுப்பதுண்டு. அதே போல, இந்த வருடமும் பலர் அவரவர் தீர்மானங்களை அவரவர் வலைப்பூக்களில் எழுதியிருப்பதை வாசித்தேன். அவர்களது தீர்மானங்களை இனிவருகிற நாட்களில் உறுதிபட கடைபிடிக்க இறைவன் துணையிருப்பானாக! நல்வாழ்த்துகள்!

இந்த புத்தாண்டு தீர்மானங்கள் குறித்து மார்க் ட்வயின் என்ன சொல்லியிருக்காருன்னா....(அடப்பாவி, நீ எப்போ மார்க் ட்வயினையெல்லாம் படிச்சே என்று கேட்காதீங்க, எல்லாம் கூகிளாண்டவர் கருணை!)

"புத்தாண்டு என்பது உங்களது வாடிக்கையான, வருடாந்திர தீர்மானங்களை மேற்கொள்ளுவதற்கு ஏற்ற தருணம். அடுத்த வாரம் முதல், இவற்றின் துணையோடு நரகத்துக்குப் போகிற வழியை நீங்கள் அமைக்கலாம்." - மார்க் ட்வயின்

என்னய்யா இப்படி குண்டக்க மண்டக்கன்னு சொல்லியிருக்கிறாரேன்னு நினைக்காதீங்க! என்னுடைய சொந்த அனுபவத்துக்கும், மார்க் ட்வயின் சொன்னதுக்கும் இருக்கிற தொடர்பு, மார்கெட் போன நடிகருக்கும் அரசியலுக்கும் இருக்கிற தொடர்பை விடவும் நெருக்கமானது. உதாரணத்துக்கு....

கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் சரி, இந்த புது வருசத்துலேருந்து சிகரெட் பிடிக்கிறதில்லை- என்று ஒரு முறை சூளுரை மேற்கொண்டேன். அதை நிறைவேற்றுகிற வெறியில், என்னிடமிருந்த தீப்பெட்டியை தலையைச் சுற்றித் தூக்கி எறிந்தேன். இனிமேல் எப்படி சிகரெட் பற்றவைக்க முடியும்? ஹாஹாஹா! புகையிலை அரக்கனே! ஓடிவிடு! இனி உன்னைத் தொடவே மாட்டேன். குட் பை என்று மனதுக்குள்ளே கொக்கரித்துக்கொண்டிருந்தபோது செல்போன் மணியடித்தது.

"சேட்டை, நான் தான் ஐ.டி.ஸி.கம்பனி சேர்மன் பேசறேன். இனிமே சிகரெட் பிடிக்க மாட்டேன்னு முடிவெடுத்திட்டீங்களாமே? ஏன் இந்த விபரீத முடிவு? உங்களை நம்பித்தான் முப்பதாயிரம் தொழிலாளர்கள் இருக்காங்க! ஏறக்குறைய மூணரை லட்சம் பங்குதாரர்கள் இருக்காங்க! திடீர்னு நீங்க பாட்டுக்கு சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டா, எங்க டர்ன்-ஓவர் என்னாகிறது? ஷேர்-மார்க்கெட்டே ஸ்தம்பிச்சுப் போயிருமய்யா! இந்தியாவோட ஜி.டி.பியே இறங்கிப்போயிரும். அப்புறம் பிரணாப் முகர்ஜீ என்னன்னு பட்ஜெட் போடுவாரு? கொஞ்சம் கூட தேசப்பற்றே இல்லாம இப்படியொரு அவசர முடிவு எடுக்கலாமா? இதைக் கேள்விப்பட்டதிலேருந்து மான்டேக் சிங் அஹுலுவாலியா பத்து நிமிஷமா ஒண்ணுமே சாப்பிடலியாம்! தயவு செய்து உங்க முடிவை மாத்திக்குங்க! இந்தியாவோட பொருளாதாரம் உங்க கையிலே தானிருக்கு!" என்று நாத்தழுதழுக்கப் பேசி, எனக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த தேசப்பற்றை எழுப்பிவிடவும், பொதுநலன் கருதி எனது புத்தாண்டுத் தீர்மானத்தை காலவரையின்றி தள்ளிப்போட்டுவிட்டேன். மேலும், அந்தப் புத்தாண்டிலும் சூரியன் மேற்கே உதிக்காமல், மீண்டும் மீண்டும் கிழக்கிலேயே உதித்ததும் நான் சிகரெட்டை நிறுத்தாமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமாகும்.

சரி, இந்தத் தீர்மானம் தான் இப்படி புஸ்வாணம் ஆகிவிட்டது என்று அடுத்த ஆண்டே இன்னொரு தீர்மானம் மேற்கொண்டேன். ’தலையில் இடியே விழுந்தாலும் சரி; இந்தப் புத்தாண்டு முதல் தினமும் டயரி எழுதாமல் இருக்க மாட்டேன்!

இது கொஞ்சம் விவகாரமான தீர்மானம். காரணம், காசு கொடுத்து டயரி வாங்குவது கஞ்சமாபாதகம், அதாவது பஞ்சமாபாதகம் என்று கடலங்குடி ஜோசியர் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லியிருந்தார். எனவே, ஓசியில் எவனாவது டயரி தரமாட்டானா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஏன் காத்திருக்க வேண்டும்? காரணம், டயரி என்றால் எப்படியிருக்க வேண்டுமென்று கிட்டத்தட்ட ஒரு சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் மாதிரி வைத்திருக்கிறேன்.

ரொம்ப குண்டாவும் இல்லாம, ரொம்ப ஒல்லியாவும் இல்லாம, குள்ளமாவும் இல்லாம, உயரமாவும் இல்லாம, கிட்டத்தட்ட மணல்கயிறு படத்துலே எஸ்.வி.சேகர் போடுற எட்டு கண்டிசன் மாதிரி டயரின்னா இப்படித்தானிருக்கணும் என்று ஒரு முன்முடிவோடு இருந்தேன். ஆனால், நடந்தது என்ன?

"ஹேப்பி நியூ இயர் சார்! புத்தாண்டுக்கு ஒரு சின்ன பரிசு!" என்று ஒருமுறை, ஒருவர் கொண்டுவந்து கொடுத்த டயரியைப்பார்த்து ஒரு வினாடி அரண்டே போய் விட்டேன். பிறகு என்னய்யா, ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குப் போக ஆட்டோ பிடிக்க வேண்டும் போலிருந்தது. இந்த அழகுலே அதைப்போய் ’சின்ன பரிசு' என்று வேறு சொல்கிறார்!

ஒன்று, சீசன் டிக்கெட் கவருக்குள்ளே நுழைகிற மாதிரி சின்னதாக தருகிறார்கள்; இல்லாவிட்டால், ஒரேயடியாக பெரியதாக, முத்தண்ணா மெஸ் பரோட்டாக்கல் அளவுக்குத் தருகிறார்கள். கொஞ்சம் இடைப்பட்ட அளவாக இருந்தால், உள்ளே எனக்குத் தேவைப்படுகிற விவரங்கள் இருப்பதில்லை. ஓரளவு எனது எதிர்பார்ப்புகளோடு ஒத்துப்போகிற மாதிரி இருந்தால், அட்டை சொதப்பலாய் இருக்கிறது. இப்படியே, இதுவரை ஓசியில் கிடைத்த எல்லா டயரிகளையும் நொள்ளை சொல்லி, யாருக்காவது கொடுத்து விட்டு, எனது ’லட்சிய டயரி’க்காக இன்னும் காத்திருக்கிறேன். சொல்லப்போனால், இந்த டயரி ஆசையால், ஒவ்வொரு வருடமும் டயரியாவால் பாதிக்கப்பட்டது போல, சோர்ந்து போய் விடுகிறேன்.

இதையெல்லாவற்றையும் விட, ’டயரியில் தினசரி ஒரு நல்ல விசயத்தையாவது எழுத வேண்டும்,’ என்று ஒரு அனுபவஸ்தர் சொன்னார். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? இதெல்லாம் ஆகிற காரியமில்லை என்று டயரி எழுதுகிற எண்ணத்தையே அடியோடு ஒழித்துவிட்டேன்.

ஓரளவு நான் நினைத்த மாதிரியே நிறைவேறியது ஒரே ஒரு தீர்மானம் தான். சென்ற ஆண்டின் இறுதியில், ’வலையுலகில் புத்திசாலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே! இதை இப்படியே விட்டால், எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்களே,’ என்ற ஆதங்கத்தில் நானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து, இங்கு புத்திசாலிகளின் ஆதிக்கத்தைக் குறைத்தே தீருவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன். விளவு? இப்போது வலையுலகில் புத்திசாலிகள் மட்டுமல்ல; நானும் இருக்கிறேன்.

இந்த ஆண்டில் என்ன தீர்மானம்/ சபதம் மேற்கொள்வது? - யோசிக்கவே விடாமல், ஒரு நல்ல யோசனையை நம்ம ’அட்ரா சக்கை’ சி.பி.செந்தில்குமார்,சென்னிமலை தெரிவித்து விட்டார்.

"இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு." தனது இடுகையில் என்னைப் பற்றி அவர் எழுதிய இடுகையில், உரிமையோடு என்னிடமிருக்கும் பல குறைகளில் ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். மிகவும் சரி!

அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இப்படி, கமெண்ட்ஸ்களுக்கு பதில் எழுதாமல் இருப்பதற்கு உள்நோக்கம் எதுவுமில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல அதற்கு சரியான காரணமும் இல்லை என்பதும் அவ்வளவு உண்மை. இந்தக் குறை மட்டுமின்றி, இன்னும் என்னிடம் இருக்கிற வலைப்பூ தொடர்புடைய குறைகளையும் இனிவரும் நாட்களில் சரிசெய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானம் / சபதம் எடுத்துக் கொள்கிறேன். தல செந்தில்குமாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

இந்த 2010 என்னளவில் எப்படியிருந்தது, எப்படி முடிந்தது என்று ஒரு சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். வலையுலகத்தில் எனது முதலாண்டான 2010-ன் முத்தாய்ப்பாக, சில நெகிழ்ச்சியான சந்திப்புக்கள் நிகழ்ந்தேறின.

மெய்யுலகில் பெற்றதாயின் பாசத்தை அனுபவிக்கிற பாக்கியம் இல்லாது போனாலும், மெய்நிகர் உலகில் என்மீது பாசத்தைப் பொழிந்து, உரிமையோடு அவ்வப்போது கண்டித்து, எனக்கு அறிவுரை கூறிய சீதாம்மாவை நேரில் சந்தித்தது இவ்வாண்டில் எனக்குக் கிடைத்த பெரிய மகிழ்ச்சி! ஒரு வெற்றிடத்தை அம்மா நிரப்பி விட்டார். வேறென்ன வேண்டும்? ’அம்மா என்றால் அன்பு’ என்று பாடல் உண்டு. இந்த அம்மா அன்பும், கண்டிப்பும், இரக்கமும், உற்சாகமும் என உணர்ச்சிக்குவியலான அம்மா!

எத்தனையோ பேர் வலைப்பூ ஆரம்பித்து, எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றபோதும், எத்தனை பேருக்கு மோதிரக்கையால் குட்டு கிடைக்கிறது என்பது பெரிய கேள்வி! சிங்கைப் பதிவர் அன்புக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கே’ பிரபாகர் என்னை ’வலைச்சரம்’ இடுகையில் குறிப்பிடாதிருந்தால், பின்னாளில் அதே வலைச்சரத்தில் ஒரு வாரம் பணியாற்றுகிற வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே! அவர் அண்மையில் சென்னை வந்திருந்தபோது, அவரை சந்தித்ததும் இவ்வாண்டில் ஒரு மறக்க முடியாத, இனிவரும் நாட்களில் நினைவில் எப்போதும் வைத்திருக்கத்தக்கதோர் நிகழ்ச்சி!

சிலரைப் பற்றி எழுத வேண்டுமென்றால், எப்படித் தொடங்க, எப்படி முடிக்க என்று குழப்பம் ஏற்படுமளவுக்கு அடியெது, முடியெது என்று புரியாத அளவுக்கு விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபம் எடுத்தாற்போல வியாபித்து நிற்பார்கள். அத்தகையவர்களில் முதன்மையானவர் என்று நான் கருதுவது ’பாமரன் பக்கங்கள்’ வானம்பாடிகள் ஐயா அவர்கள்! அவர்களுடன் உரையாடி மகிழ ஒரு வாய்ப்புக் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறு என்று கருதுகிறேன்.

ஈரோடு சங்கமம் சென்றிருந்தால், பலரைச் சந்தித்திருக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். அது இயலாமல் போனது இவ்வாண்டின் இறுதியில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்! ஆனால், இனியொரு வாய்ப்பு அமைந்தால், அவர்கள் அருகில் நின்று அளவளாவுகிற மகிழ்ச்சியை ஒருபோதும் தள்ள முடியாது!

என்னை வழிநடத்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இறைவன் அருளால், அனைவரும் இனிவரும் நாட்களில் அனைத்து நலங்களையும் பெற்று வாழ அன்னை காளிகாம்பாளின் பாதகமலங்களைப் பணிந்து வேண்டுகிறேன்.

எனது 2011-க்கான தீர்மானத்தை அறிவித்து விட்டேன். இனி, உங்களை டபாய்க்க முடியாது என்று அறிவேன். இருந்தாலும், இந்த மாதிரி புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து இன்னொருவர் சொன்னதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

"நல்ல தீர்மானங்கள் எனப்படுபவை, வங்கிக்கணக்கே இல்லாமல் காசோலை கொடுப்பது போன்றது!" -ஆஸ்கார் வொயில்ட்.

:-))

அன்புள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சேட்டைக்காரன்

Thursday, December 30, 2010

பிணந்தின்னும் சாத்திரங்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன்னர், விதிவிலக்கின்றி அனைத்து ஆங்கிலத்தொலைக்காட்சிகளிலும் அல்லோலகல்லோலப்பட்ட ஒரு பரபரப்பான நிகழ்வு-புது தில்லியருகே ஆருஷி தல்வார் என்ற ஒரு 14 வயது சிறுமியின் படுகொலை! கொடுமை என்னவென்றால், ’இது போன்ற கொலைகள் தினசரி தென்னகத்திலும் நடப்பதை ஏன் இந்த ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை?’ என்று குரலெழுப்புமளவுக்கு, பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள் தேசமெங்கும் பன்றிக்காய்ச்சலை விடவும் பயங்கரமாகப் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இன்றும் அந்த இழிநிலை தொடர்கிறது.

அண்மையில் செல்வி.ஜெயலலிதா அரக்கோணத்தில் "பெண்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை," இருப்பதாக, தனது தினசரி அறிக்கைகளில் ஒன்றில் தெரிவித்தபோது, "சென்னையில் மட்டும் என்ன வாழ்கிறது? மாலை ஆறுமணிக்கு மேல் கலங்கரை விளக்கம் தொடங்கி பெருங்குடி வரையிலான ரயில் நிலையங்களில் நடக்கிற அட்டூழியங்கள் எத்தனை?" என்று கேட்கத்தோன்றியது. இதுதான் தமிழகத்தலைநகரத்தின் லட்சணம் என்றால், மற்ற ஊர்களைப்பற்றி என்னவென்று சொல்ல...?

சரி, ஆருஷி வழக்கிற்கு வருவோம்!

T.R.P என்ற மூன்றெழுத்து மந்திரச்சொல்லுக்காக, தொலைக்காட்சிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போவார்கள், எப்படியெல்லாம் வக்கிரமாக இட்டுக்கட்டித் தனிமனிதர்கள் மீது சேற்றை வாரியிறைப்பார்கள் என்பதற்கு ஆருஷி தல்வார் கொலைவழக்கு ஒரு வேதனையான உதாரணம்; வெட்கத்தகுந்த முன்னுதாரணம் என்றும் கூறலாம்.

எடுத்த எடுப்பிலேயே, உ.பி.காவல்துறை "வேலைக்காரனுக்கும் அந்தச் சிறுமிக்கும் தொடர்பு," என்று துப்பறிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டதுபோல, பத்திரிகையாளர்களுக்கு பிஸ்க்ட், டீயுடன் இந்தத் தகவலையும் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து ’பத்திரிகை சுதந்திரம்,’ என்ற பெயரில் என்.டி.டி.வி, சி.என்.என்.ஐ-பி.என், டைம்ஸ் நௌ, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஆங்கிலத்தொலைக்காட்சிகள் அரங்கேற்றிய அசிங்கங்கள் கொஞ்சமா நஞ்சமா?

அந்தச் சிறுமியின் தாயாருக்கும், இன்னொருவருக்கும் தொடர்பு என்று ஊகித்துப் பேசியது ஒரு தொலைக்காட்சி!

இல்லை, இல்லை! அந்த சிறுமியின் பெற்றோர்கள் இருவருமே ஒழுக்கம் கெட்டவர்கள்; ஜோடி மாற்றக் கேளிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் என்ற அபாண்டத்தைக் கூறியது ஒரு அடாத ஆங்கிலச்செய்தித் தொலைக்காட்சி!

ஹரியானாவில் நடக்கிற கௌரவக்கொலைகளைச் சாடுகிற இதே தொலைக்காட்சிகள், விசாரணை துவங்குமுன்னரே, அந்தச் சிறுமியின் பெற்றோர்களுக்கு ஒழுக்கச் சான்றிதழ் வழங்கி அவர்களது கௌரவத்தை ஏறக்குறைய படுகொலை செய்தன.

அதெல்லாம் இல்லை! அந்தப் பெண்ணுக்கும், அவளது தகப்பனுக்குமே.....என்று தனது ஞானதிருஷ்டியில் கண்டுபிடித்து விஷம்பரப்பியது இன்னொரு தொலைக்காட்சி!

இந்தப் போட்டாபோட்டியில், அந்தப் பெற்றோர்களின் இழப்பும், ஒரு சிறுமியின் படுகொலையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வக்கிரமான கற்பனைக்கதைகள் வலம்வந்து கொண்டிருந்தன. ஆண்மையற்ற பிரஸ் கவுன்சில், ஒரு ம**க் கூட பிடுங்க வக்கில்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. விளைவு...?

அந்தப் பெண்ணின் தகப்பனே சிறைசெல்ல நேர்ந்தது. ஒரே மகளையும் இழந்து, கணவனும் சிறைக்குப் போகவும், அந்த தாய் ஏராளமான எமன்களோடு போராடி, கணவனை விடுவித்தார். யாராயிருந்தாலும் இயல்பாக எதிர்பார்ப்பதுபோல, உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று அவர்களும் எதிர்பார்த்திருக்கலாம்.

ஆனால், ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிற தறுவாயில், "எந்த ஆதாரமுமில்லை; எந்த சாட்சியமும் இல்லை! இந்த வழக்கில் தொடர்ந்து புலன்விசாரணை செய்ய முடியாது. எனவே, வழக்கை முடித்துக்கொள்ளலாம்,என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கோரிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

வெட்கக்கெடு!

சி.என்.என்.ஐ.பி.என் தொலைக்காட்சியில் புளுகுமூட்டைகளை அவிழ்த்த சர்க்கார் என்ற செய்தியாளர், ’நான் சொன்னதெல்லாம் உண்மை,’ என்று அடம்பிடித்தார். (சாயம் வெளுத்துப்போன) என்.டி.டிவியின் பர்கா தத் இதை வைத்து இரண்டொரு நிகழ்ச்சிகள் நடத்தி, தன்னை ஒரு தேவதையாகக் காட்டிக்கொண்டார்.

அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும் இன்றைய ஊடகங்களில் கைகோர்த்துக்கொண்டு உண்மையை எப்படிக் குழிதோண்டிப்புதைக்கின்றன என்பதற்கு ஆருஷி தல்வார் கொலைவழக்கை விடவும் சிறந்த அல்லது மோசமான உதாரணம் வேறு என்ன இருக்க முடியும்?

கோயபல்ஸின் கொள்ளுப்பேரர்களான இந்தத் தொலைக்காட்சிகள், வெட்கம், மானம், சூடு,சொரணையின்றி ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல், துடைத்துப்போட்டுவிட்டு பிசாசுகளைப் போல, அடுத்தவர்களின் இரத்தம் குடிக்கிற கொடுமை தொடர்கிறது. அதிகார புரோக்கர்களான வீர் சங்க்வீ, பர்கா தத் போன்ற இந்தப் பன்னாடைகள் தான் பத்திரிகை சுதந்திரத்தின் பிரதிநிதிகள் என்பது நமது நாட்டின் தலையெழுத்து.

நம்மூர் தொலைக்காட்சிகள் மட்டுமென்ன குறைச்சலா? ஒரு சாமியாரின் படுக்கையறைக்குள்ளே கேமிராவை வைத்து, அவரும் ஒரு நடிகையும் பகிர்ந்த அந்தரங்கங்களை உலகத்தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டது. ’நான் ரொம்ப ஒழுங்காக்கும்,’ என்று எல்லாரும் அவர்களைப் பழித்து, காறி உமிழ்ந்து தத்தம் ஒழுக்கத்தையும், அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

2010-ம் ஆண்டின் மிகப்பெரிய வில்லன் - செய்தித் தொலைக்காட்சிகள் தான்! கண்ணில் படுகிறவற்றையெல்லாம் கபளீகரம் செய்கிற இந்த அரக்கனை, கொட்டடியில் கட்டி, லாடமடிக்க வேண்டும்!

"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது!" என்று சொல்வதுண்டு. ஆருஷி தல்வார் வழக்கில் யார் தப்பித்தாரோ இல்லையோ, குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள். நிரபராதிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் தூண்களின் மீது சாமானியனுக்கு இருக்கிற நம்பிக்கை மெல்ல மெல்ல தனது இறுக்கத்தை இழந்து வருகிறது. இது நல்லதல்ல!

Monday, December 27, 2010

சேட்டை @ சென்னைத் திரைப்படவிழா!

-என்னண்ணே, மன்மதன் அம்பு பார்த்தாச்சா?

-பாத்திட்டோமில்லே, அப்படியே Stupid Sparrow-ங்கிற ஹாலிவுட் படத்தைக் காப்பியடிச்சிருக்காய்ங்க!

-லேய் மக்கா, அது ஸ்டுப்பிட் ஸ்பாரோ இல்லே; Cupid's Arrow

-என்ன எளவோ, என்னதான் சொல்லு மக்கா, இங்கிலீஷ் படம் மாதிரி வரலே! சொதப்பிட்டாய்ங்க!

-நம்ம பலவேசம் படத்தைப்பார்த்திட்டு வேறே ஏதோ பேரு சொன்னாமில்லா? என்னவோ salt flour needle gone-ங்கிற படமாமே?

-நீ ஒருத்தன், அவன் கீதா மெஸ்ஸிலே உப்புமா(Salt flour) தின்னுப்புட்டு அது ஊசி-போச்சுன்னு(needle gone) அவனுக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்லே சொல்லியிருக்கான். உடனே அதையும் இங்கிலீஷ் படத்தோட பேருன்னு சொல்லுவியா?

நானும் வலையுலகத்திற்கு வந்தநாள் முதலாகவே கவனிக்கிறேன். ஒரு தமிழ்ப்படம் வந்தால் போதுமே, "ஹாலிவுட் படத்தைச் சுட்டுப்புட்டாங்க!" என்று சொல்லி, சைனீஸ் ரெஸ்டாரண்ட் மெனு மாதிரி எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத பெயர்களைச் சொல்லி, குண்டுக்கட்டாக அதலபாதாளத்தில் உருட்டி விடுவார்கள்.

இவர்களுக்கெல்லாம் இதுவரை வெளிவந்த அல்லது ஒருபோதும் வெளிவராத படங்களின் பெயர் எப்படித் தெரிந்திருக்கிறது? இத்தனை படங்களையும் பார்க்கிறார்கள் என்றால், அனேகமாக இவர்கள் வீட்டுக்குப் பல்விளக்க மட்டும்தான் போகிறார்களா?

அல்லது, இத்தனை டிவிடி வாங்கிப் பார்க்க முடிகிறது என்றால், இவர்கள் சம்பளத்தில் சீசன் டிக்கெட் வாங்கவாவது காசு மிஞ்சுமா?- என்றெல்லாம் எனக்கு சந்தேகம் இருந்ததுண்டு. அந்த சந்தேகம் கடந்த வாரத்தில் இரண்டே நாட்களில் கொஞ்சம் தீர்ந்தது.

புதன், வியாழன் இரண்டு நாட்களும், சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் சிம்பனி திரையரங்கில் ஒரு சில உலக்கை, மன்னிக்கவும், சில உலகப்படங்களைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. படங்களை ரசித்ததை விடவும், அங்கு சுற்றும் முற்றும் கண்ணில்பட்டதை வெகுவாக ரசித்தேன். ஏன் மாட்டேன்?

திரைப்படத்துறையில் பல பிரபலங்களை அருகிலிருந்து பார்க்க முடிந்தது. சிவாஜியில் ஸ்ரேயாவின் அம்மாவாக நடித்த உமா பத்மநாபனைப் பார்த்ததும், மெய்யாலுமே அருகில் போய் ’பழக வரலாமா?’ என்று கேட்க ஒரு நப்பாசை ஏற்பட்டது உண்மை. ஹிஹி! (எனக்கு ரொம்பவும் பயந்த சுபாவம் என்பதால், யாரையும் மிகவும் நெருங்கவில்லை! போதாக்குறைக்கு பெரும்பாலான நடிகைகள் மேக்-அப் இல்லாமல் வேறு வந்திருந்தார்கள்!)

வலையுலகின் பிரபல பதிவர்களும் வந்திருந்ததை உடனிருந்தவர் சுட்டிக்காட்டினார். (அவர்கள் என்னைப்பார்த்து பயந்துவிடக் கூடாதே என்று அவர்கள் அருகிலும் போகவில்லை!)

சரி, உலகத்திரைப்பட விழாவுக்குப் போனாயே, என்னென்ன படம் பார்த்தாய்? என்று கேட்கிறீர்களா? அதையெல்லாம் இப்போது சொல்வதாக இல்லை. அடுத்து யாராவது கொஞ்சம் உருப்படியாக தமிழ்ப்படம் எடுக்கும்போது, நான் பார்த்த உலகத்திரைப்படத்தோடு ஒப்பிட்டு எழுதுகிறேன். அது தான் பண்பாடு! இதற்காகவே, கொத்தமல்லிச் சட்னியிலிருந்து கொத்துப்பரோட்டா வரையிலும் பலவற்றின் ஆங்கிலப்பெயர்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்; ஜாக்கிரதை!

இருந்தாலும் கிட்டத்தட்ட முழுமையாகப் பார்த்த ஒரு படத்தின் கதையை சொல்கிறேன்.

ஒரு கணவன்; ஒரு காதலன்! இறந்து போன பெண்மணியின் உடலை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, ஒரு காரில் வைத்துக் கொண்டு எடுத்துப்போகிறார்கள். வழியில் பேசுகிறார்கள்; கொசுவத்தி சுற்றுகிறார்கள். பிறகு அவளை ஒரு ஆற்றங்கரையில் எரித்து, சாம்பலை தண்ணீரில் கரைத்துவிட்டு, திரும்புகிற வழியில் தலா ஒரு பாலியல் தொழிலாளியோடு பொழுதைக் கழித்துவிட்டு, ஊருக்குப்போகிறபோது, அவர்களது கார் விபத்துக்குள்ளாகி, அதே ஆற்றில் விழுந்து அவர்கள் மூழ்குகிறார்கள். அம்புட்டுத்தேன்!

அது ஜெர்மன் படமா, பல்கேரியன் படமா, ரஷியப் படமா என்றெல்லாம் தெரியவில்லை சாமீ! (தெரிஞ்சிட்டா மட்டும்? )

படம் முடிந்ததும் ஒரு சிலர் கைதட்டினார்கள். பாவம், படம் எப்படா முடியும் என்று ரொம்ப நேரம் காத்திருந்தார்கள் போலிருக்கிறது.

படம் முடிந்து வெளியேறியதும், யாரோ வெளிநாட்டுப் பெண் இயக்குனர் நாற்காலியில் அமர்ந்திருக்க, நம்மூர் பத்திரிகையாளர் (அ) ரசிகர் அவரைப் பார்த்து, ’இப்படியொரு படம் எடுக்க உங்களுக்கு எப்படித் தோன்றியது?’ என்று (இங்கிலிபீஷில்) கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்படி நறுக்குன்னு கேளு ராஜா-நாக்கைப் புடுங்கிக்கிறாப்புலே!


அன்று மாலை வரை, எஜமான் படத்தில் ரஜினி ஒவ்வொருத்தரது சாப்பாட்டிலிருந்தும் கொஞ்சம் ருசிப்பதுபோல, எல்லா படத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பார்த்துவிட்டு, கடைசியாக ஒரு படத்தைப் பார்க்க நான் போய் உட்கார்ந்த நேரம் எல்லாரும் கைதட்டினார்கள். படம் முடிஞ்சிருச்சாம்! என்ன கொடுமை சரவணன்?

ஆண், பெண் வித்தியாசமின்றி, வயது வேறுபாடின்றி எல்லாத் தரப்பிலிருந்தும் பார்வையாளர்களைப் பார்க்க முடிந்தது. மீசையை வைத்துத்தான் ஆண் என்று கண்டுபிடிக்குமளவுக்கு, பாராசூட் தேங்காய் எண்ணை விளம்பரத்துக்கு இலவச விளம்பரம் தருகிறவர்கள் போல அள்ளி முடிந்து கொண்டிருந்த பல ஆண்களைப் பார்த்தேன். அதே சமயம், வெளிநாட்டு இயக்குனர்கள் அல்லது குழுவினர் சர்வசாதாரணமாக பெர்முடாவும் டி-சர்ட்டும் அணிந்து கொண்டு கவலையில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

இது மாதிரி திரைப்பட விழாவுக்குப் போனால், தமிழில் பேசுபவர்களை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். ’இதையெல்லாம் கலைக்கண் கொண்டு பார்க்க வேண்டும்,’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எனது துரதிர்ஷ்டம், ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து, ஜாம்பஜார் வரைக்கும் நடையாய் நடந்தும் ஒரு ஜோடி கலைக்கண் கூட கிடைக்கவில்லை. ’மன்மதன் அம்பு’ ரிலீஸ் ஆகியிருந்ததால், கமல் ரசிகர்கள் மொத்தமாக அள்ளிக்கொண்டு போய்விட்டதாக, ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே விழாவில் ’அங்காடித்தெரு,’ ’மைனா,’ ’நந்தலாலா’ போன்ற தமிழ்ப்படங்களும் திரையிடப்பட்டிருந்தன என்பது பெருமைக்குரிய தகவல் தான். ’முற்றத்து முல்லைக்கு மணமில்லை,’ என்று போய் விடாமல், தமிழ்த்திரைப்படங்களில் எப்போதாவது சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபோது, அவற்றை ரசிகர்கள் மட்டுமன்றி, உலகத்திரைப்பட ஆர்வலர்களும் உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். சில சமயங்களில் வர்த்தகரீதியாக வெற்றி பெறாத திரைப்படங்களை எடுப்பவர்களை, தட்டிக்கொடுத்து உசுப்பி விட வேண்டியதும் அவசியம். இல்லாவிட்டால், அரைத்த மாவையே அரைக்கிற வாடிக்கை தொடர்ந்து நமக்கு எரிச்சலூட்டும் என்பது தான் உண்மை.

நல்ல வேளை, ரசிகர்களைப் போலவே இதுபோல சிந்திக்கிற ஆர்வலர்களும் இருக்கிறார்கள்! உதாரணத்துக்கு, இந்த விழாவுக்கு சற்று முன்பு எனக்குப் பரிச்சயமாகி, நண்பராகி விட்ட திரு.வேல்முருகன்! அவரது ’சதர்ன் மன்ஸூன் மீடியா & எண்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்தார் இந்தத் திரைப்படவிழாவில் பரீட்சார்த்தமான, துணிச்சலான தமிழ்ப்படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ’சிறந்த படம்,’ என்ற விருதை வழங்கி வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இருவருக்கும் தலா இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இவ்வாண்டு ’ஓர் இரவு,’ என்ற வித்தியாசமான தமிழ்ப்படத்துக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகையைக் காட்டிலும், சற்றே மாறுபட்டு சிந்திக்கிற இயக்குனர்களுக்கும், வர்த்தக வற்புறுத்தல்கள் இருந்தாலும் புதுமுயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிற தயாரிப்பாளர்களுக்கும், இது போன்ற விருதுகள் உற்சாகமளிக்கும்; அளிக்க வேண்டும். உலகளாவிய திரைப்படங்களைப் பார்த்து உச்சுக்கொட்டிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், நமது உள்ளூர்த் திறமைகளை உசுப்பிவிடுகிற இத்தகைய முயற்சிகள்தான், நல்ல சினிமாவை எளிதில் நமக்குக் கொண்டுவருகிற வாகனங்களாய் இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்காகவே திரு.வேல்முருகன் போன்றவர்களின் முயற்சிகளை தாராளமாகப் பாராட்ட வேண்டும்.

இது போன்ற உலகத்திரைப்படவிழாக்களில், பிரபலங்களை அருகிலிருந்து பார்ப்பதும், முன்பின் கேள்விப்பட்டிராத பல உலகப்படங்களைப் பார்த்து மலைத்துப்போவதும், சில நேரங்களில் உண்மையிலேயே நமது திரைப்படங்கள் நமக்கு நியாயம் செய்கின்றனவா என்று யோசிப்பதும் சரியே! ஆனால், ஒவ்வொரு விழாவிலும் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்றால், பாசாங்குகளின்றி, உண்மையிலேயே வித்தியாசமான பார்வையோடு எடுக்கப்படும் தமிழ்ப்படங்களை ஊக்குவிப்பதே நம்மால் இயன்றது!

செய்வோம்!

Sunday, December 26, 2010

மன்மதன் அம்பும் மசானத்தில் முத்தமும்

நேற்று (25-12-2010) 'ஆதித்யா’ டிவியில் இரவு "காதலிக்க நேரமில்லை," படத்தை ஒளிபரப்பினார்கள். அதில் செல்லப்பா (நாகேஷ்) தனது ஓஹோ புரொடக்ஷன்ஸ் கம்பனி எடுக்கப்போவதாக இரண்டு படங்களின் பெயர்களைக் குறிப்பிடுவார்:

மசானத்தில் முத்தம்
கத்திமுனையில் ரத்தம்

"நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!" என்று ஒரு காட்சியில் நாகேஷ் சச்சுவிடம் கூறுவார்.

ஒன்று நேற்று நான் அந்தப் படத்தைப்பார்த்திருக்கக் கூடாது; அல்லது இன்று ’மன்மதன் அம்பு’ படத்தையாவது பார்க்காமல் இருந்திருக்க வேண்டும். இரண்டையும் செய்து விட்டதால், இன்று மன்மதன் அம்பு படம் பார்த்துக்கொண்டிருந்தபோதெல்லாம் எனக்கு நாகேஷ் பேசிய வசனம் நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது.

’நான் என்ன எடுக்கிறேனோ..............................................’

வழக்கம்போலவே, இந்தப் படமும் கமல் ரசிகர்களுக்கு பிடித்திருப்பதில் வியப்பில்லை; வழக்கம்போலவே ’இந்தப் படத்தை ரசிக்கிறதுக்கு மேல்மாடியிலே சரக்கு வேணும்,’ என்று ரசிக்கமுடியாமல் உதட்டைப் பிதுக்கிறவர்களை எகத்தாளம் செய்வதிலும் வியப்பில்லை. வழக்கம்போலவே, மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு போன்ற படங்களை வரவேற்காத தமிழர்களின் ரசனை எவ்வளவு கீழ்த்தரமாகி விட்டது என்று தாடி சொறிகிறவர்கள் வலைப்பூக்களிலும், வாரப்பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் அங்கலாய்க்கப்போகிறார்கள். இவையனைத்துக்கும் நடுவிலே, "உலகநாயகன்" படம் என்ற எதிர்பார்ப்பில் போய், செமத்தியாக பல்பு வாங்கிவந்த சாமானிய ரசிகன், காசையும் தொலைத்து விட்டு, முட்டாள் என்ற பட்டத்தையும் இலவச இணைப்பாக வாங்கிக்கொண்டு வந்திருப்பதுதான் மிச்சம்!

அவ்வளவு மோசமான படமா இது என்றால் நிச்சயம் இல்லை. அரிவாளும் ரத்தமும் மீண்டும் அதிகரித்துக்கொண்டு வருகிற தமிழ் சினிமாவில் ஓரளவு சௌகரியமாக உட்கார்ந்து நெளியாமல் பார்க்கிற ஒரு படம்தான் மன்மதன் அம்பு என்பதில் துளியும் சந்தேகமில்லை! ஏறக்குறைய ராமேஸ்வரம் லின்க் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகரும் முன்பாதி, இயல்பாக இருப்பதான பாசாங்கில் இறைக்கப்பட்டிருக்கிற ஆங்கில சம்பாஷணைகள், கமலுக்கும் கமல் சார்ந்தோருக்கும் மட்டுமே புரிகிற முற்போக்கு சிந்தனைத்துளிகள் என தொடரும் பல நெருடல்களைப் புறந்தள்ளினால், இறுதி இருபது, இருபத்தைந்து நிமிடங்களில் வாய்விட்டு சிரித்தது மட்டுமே நினைவிலிருக்கிறது. வார்த்தைகளை வைத்துக்கொண்டு விளையாடுகிற கிரேஸி மோகனின் நகைச்சுவைக்கு பதிலாக, சம்பாஷணைகளில் சுருக்கென்று இறக்குகிற நாசூக்கான நகைச்சுவை (ஒருசில புரியாதபோதும்) சுவாரசியமாக இருக்கின்றது.

கதை, இசை, நடிப்பு என்று ஆளாளுக்கு எழுதி அலசி, துவைத்து காயப்போட்டு விட்டதால், எனது கருத்து என்ற அளவில் இந்த விமர்சனத்தை எழுத விருப்பம்.

மாதவன், திரிஷா இருவரும் தங்களது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்த மிகவும் முயன்றிருக்கிறார்கள். ரமேஷ் அர்விந்த்-ஊர்வசியும் கிட்டத்தட்ட அனுதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள். இசை படத்தில் பல வெற்றிடங்களை நிரப்பியிருக்கிறது; பாடல்கள் படத்தைத் தூக்கி நிறுத்த பகீரதப்பிரயத்தனம் செய்திருக்கின்றன. ஒளிப்பதிவு படம் முழுவதுமே, பார்வையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. ஆனால், ஒலிப்பதிவில் தான் திடீர் உப்புமா போன்று எதையோ முயன்று முதலுக்கே மோசமாகியிருக்கிறது! சில இடங்களில் கமல் பேசுகிற தமிழ் வசனங்களே புரியவில்லை. ஒரு வேளை, திரும்ப வந்து புரிந்து கொள்ளட்டும் என்ற வர்த்தக தந்திரமா என்று தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். அப்புறம், ஆங்கிலம் கரைபுரண்டு ஓடுகிறது!

’அவ்வை சண்முகி,’ ’தெனாலி,’ ’பஞ்சதந்திரம்,’ படங்களில் தென்பட்ட கே.எஸ்.ரவிகுமாரைக் காணவில்லை. (தசாவதாரம்? ஹிஹி, அது வேறே இருக்கில்லே?)

கமலின் நடிப்பு குறித்து புதிதாக என்ன எழுதுவது?

கமல்ஹாசன்- சற்றே அபரிமிதமாக கொண்டாடப்படுகிற ஒரு நடிகர் (over-rated) என்பது தான் எனது கருத்து. முறைப்படி இசை, நாட்டியம் பயின்றவர்; நடிப்பு, எழுத்து, இயக்கம் என்று பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்துகிறவர் என்று சொல்வோமேயானால், ஆமாம், கண்டிப்பாக பன்முகத்திறமைகளை உள்ளடக்கிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் அவர்தான் வரிசையில் முதலில் தென்படுகிறார் என்பது மிகவும் உண்மை. ஆனால், உலகநாயகன்....? மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ள முடியாது! அதுவும், மன்மதன் அம்பு படம் பார்த்தபிறகு, முடியவே முடியாது!

தான் இயல்பாய் நடிப்பதாய், எதையுமே இயல்பாய் செய்வதாய் வெளிக்காட்டும் பிரயத்தனங்களில் தன்னையுமறியாமல் சில தவிர்க்க முடியாத செய்ற்கைத்தனங்களை அவர் சுவீகரித்துக்கொண்டு விட்டார். மன்மதன் அம்பு படத்தில் பல இடங்களில் அவரது நடிப்பு மிகவும் ஊகிக்கத்தக்கதாக, சலிப்பூட்டுவதாக இருக்கிறது.

எண்பதுகளில் சிவாஜி ரசிகர்களுக்கே அவரது நடிப்பு குறித்து ஏற்படத்தொடங்கிய அதே சலிப்பின் அறிகுறிகள் இப்போது கமலின் நடிப்பு குறித்தும் தலைதூக்கியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ, வெறும் நடிப்பு போதாது என்று கதை, வசனம், பாடல்கள் என்று பல விசயங்களைக் கையாண்டு இதை ஒரு கமல் படமாக்க அவர் மிகவும் முயற்சி எடுத்திருக்கிறார். அதன் பலன் என்னவென்று, ஞாயிறன்றும் காலியாக இருக்கிற அரங்கங்கள் தெரிவித்திருக்கும்.

அதையும் மீறி, இந்த ’மசானத்தில் முத்தம்,’ படத்தை அடுத்து, ’கத்திமுனையில் ரத்தம்,’ என்று அவர் இதே மாதிரி ஒரு படத்தைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். அப்போதும் அதை வானளாவப்புகழ்கிற புத்திஜீவிகளுக்கும், ’புரியலியே’ என்று விழிக்கிற ரசனைகெட்ட ஆசாமிகளுக்கும் பஞ்சமிருக்காது.

Thursday, December 23, 2010

அரசியல்லே இதெல்லாம்.......!

ஒரு ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்த செய்தியை வாசித்து விட்டு, (ஐ நோ இங்கிலீஷ்!) மிகுந்த சமூகப்பருப்போடு, அதாவது மிகுந்த சமூகப்பொறுப்போடு நான் "இந்தியா 2020" என்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஸ்டைலில் ஒரு இடுகை எழுத உட்காருவதற்கு முன்பு, இன்னொரு செய்தியைப் பார்த்து வெலவெலத்துப்போய்விட்டேன்.

வேறு ஒன்றுமில்லை! நம்ம இளவரசர் ராகுல் காந்தி சென்னைக்கு வந்திருந்தபோது, ’அரசே மது விற்பனை செய்வது தவறு; எனக்கு ஏற்புடையதல்ல!’ என்று பேசியிருந்தார் அல்லவா?. அந்தச் செய்தியைப் படித்துத்தான் நான் ஒரு விநாடி குழம்பி, பிறகு சுதாரித்துக் கொண்டு, ’முதலில் வந்த செய்தியின் அடிப்படையில் இடுகையை முடித்து விட்டு, பிறகு ராகுல் காந்தி சொன்னது பற்றி யோசிக்கலாம்,’ என்று முடிவு செய்தேன்.

இந்தியா 2020- பப்பர பப்பர பாய்ங்ங்ங்க்.....!


"மாமி, இந்த மனுசனுக்கு வரவர நாக்கு ஜெயா டிவியிலே வர்ற அம்மாவோட அறிக்கை மாதிரி நீண்டுக்கிட்டே போகுது. போனாப்போகுதுன்னு ஆசையா பைன்-ஆப்பிள் ரசம் பண்ணிக்கொடுத்தா, ’அன்னிக்கு பர்வதம் மாமி கொடுத்தனுப்பினா மாதிரி அவ்வளவு டேஸ்ட்டா இல்லேன்னு சொல்றாரு! இருக்கட்டும், நாளைக்கு வேப்பம்பூ ரசமும், பாகற்காய் பொறியலும் பண்ணி பழிக்குப் பழி வாங்குறேன்!" என்று பொருமினாள் கோமதி.

"அடி அசடே! பைன்-ஆப்பிள் ரசம் பண்ணினியா? என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கப்படாதோ? அதொண்ணுமில்லேடி கொழந்தே, தாளிக்கிறச்சே ரெண்டே ரெண்டு ஸ்பூன் ஒயிட் ரம்மையும் சேர்த்தேன்னு வச்சுக்கோ! ரசம் அமர்க்களமா இருக்கும்!" என்று விக்கிலீக்ஸ் போல ’டாப் சீக்ரட்’டை வெளியாக்கினார் பர்வதம் மாமி.

"ஓஹோ! இது தெரியாமப்போச்சே? நான் நேத்துத்தான் ரங்கநாதன் ஸ்ட்ரீட்டுக்குப் போயி, ரெண்டு ஃபுல் வொயிட் ரம்மும், ஷிவாஸ் ரீகல் விஸ்கியும் வாங்கிட்டு வந்தேன்!"

"ஷிவாஸ் ரீகலா? ரெண்டு ஃபுல் விஸ்கி வாங்கினா ஒரு குவார்ட்டர் ஃப்ரீன்னு பேப்பர்லே போட்டிருந்தானே? கிடைச்சுதோ?"

"ஓ கிடைச்சுதே! அப்புறம் வொயிட் ரம் வாங்கினா, கூடவே ஒரு குவார்ட்டர் வாட்கா ஃப்ரீ மாமி!"

"இது எப்போலேருந்து? நேக்குத் தெரியவே தெரியாதேடீ?"

"எனக்கும் தெரியாது மாமி. கடைக்குப் போனதும் தான் சொன்னாங்க. அனேகமா ஆடித்தள்ளுபடின்னு நினைக்கிறேன்."

"நன்னாப்போச்சு போ! வேப்பம்பூ ரசத்துக்கு துளியூண்டு ஷிவாஸ் ரீகல் விஸ்கியும் சேர்த்துக் கலக்கி அப்புறமாக் கொதிக்க வச்சேன்னா, கசப்பே தெரியாது. கமகமன்னு மணம் தூக்கும்!"

"அப்படியா? இன்னிக்கு உங்க வீட்டுலே என்ன சமையல் மாமி?"

"வெண்டைக்காய் போட்டு ஜானக்ஷா மோர்க்குழம்பு; ஆஃபீஸர்ஸ் சாய்ஸ் அகத்திக்கீரை; காஸ்மோபாலிடன் கத்திரிக்காய்க் கூட்டு! அப்புறம் ஃபிரஷா நெப்போலியன் நெல்லிக்காய் ஊறுகாய் போட்டேன். மாமா ஒரு பிடி பிடிச்சுட்டு கேஸுவல் லீவு போட்டுட்டு சிவனேன்னு படுத்துண்டு கொறட்டை விட ஆரம்பிச்சுட்டார்னா பார்த்துக்கோயேன்!"

"என்ன இருந்தாலும் உங்க கைப்பக்குவம் மாதிரி வருமா மாமி?"

"கோமதி, ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்கோ! உளுந்து வடைக்கு ஊறப்போடறச்சே, அதுலே அரை தம்ளர் மானிட்டர் பிராண்டி விட்டு அரைச்சேன்னு வை; மாவு மை மாதிரி இருக்கும்."

"இதையே தான் எதிர்த்த வீட்டு அக்காவும் சொன்னாங்க மாமி! ஆனா, இங்கே ஒரு கடையிலேயும் மானிட்டர் பிராண்டி கிடைக்கவே மாட்டேங்குதே?"

"கெல்லீஸ்லே கிடைக்கிறதே! எங்காத்து மாமா நேத்து கூட ஒரு குவார்ட்டர் வாங்கிண்டு வந்தார். நாளைக்கு வடைக்கு ஊறப்போடலாம்னு இருக்கேன்!"

"உங்க வீட்டு மாமா கடைகண்ணிக்குப் போயி வீட்டுக்குத் தேவையான விஸ்கி, பிராண்டியெல்லாம் கரெக்டா வாங்கிட்டு வந்திடறாரு! எங்க வீட்டுக்காரர் இத்தனை வருசத்துலே ஒரு குவார்ட்டர் விஸ்கியோ, பிராண்டியோ கூட வாங்கிட்டு வந்தது கிடையாது. ஒவ்வொரு வீட்டுலேயும் ஆம்பிளைங்க எப்படி வீட்டுக்கு வேண்டிய சாமானெல்லாம் வாங்கிப்போடறாங்க. எனக்குன்னு இப்படி ஒருத்தர்..."

"வருத்தப்படாதே, எத்தனை நாளைக்கு ஆம்பிளையா பொறுப்பில்லாம இருக்கப்போறா? பகவானை வேண்டிக்கோ, கூடிய சீக்கிரமே உங்காத்துக்காரரும் பொட்டி பொட்டியா விஸ்கி வாங்கிண்டு வந்து அசத்தப்போறாரு பாரேன்!"

"அட நீங்க வேறே மாமி, இவரைக் கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? ஒரு பெக் பிராண்டியுண்டா, ஒரு லார்ஜ் விஸ்கியுண்டா? ஒரு பீர்தான் உண்டா?"

"அததுக்கு ஒரு நேரம் காலம் வர வேண்டாமா? மாம்பலம் போஸ்டல் காலனியிலே மதுசூதனன்னு ஒரு ஜோசியர் இருக்காரு! அவர்கிட்டே உங்காத்துக்காரர் ஜாதகத்தைக் காட்டு! அப்புறம் பாரேன், தினமும் உங்காத்துலே காக்டெயில் சமையல் தான்!"

"சரி மாமி, அப்புறம் இந்த ப்ளூ-ரிபாண்ட் ஜின்னை வச்சிக்கிட்டு என்ன பண்ணலாம்?"

"நன்னாக் கேட்டே போ, புதீனாத் துவையல், பிரண்டைத்துவையல் அரைக்கிறச்சே ரெண்டு டீ ஸ்பூன் ப்ளூ-ரிபாண்ட் ஜின்னும் சேர்த்து அரைச்சா மணம் அப்படியே தூக்கும். அடை பண்ணும்போது, கல்லுலே ஒரு ஸ்பூன் ஜின் விட்டேன்னா, விள்ளாம முழுசா வரும். டேஸ்ட்டும் பிரமாதமாயிருக்கும் தெரியுமோ?"

"புதுசு புதுசா என்னென்னமோ சொல்றீங்க மாமி! இன்னிக்கு மார்க்கெட்டுக்குப் போவீங்களா?"

"இல்லேடீ கொழந்தை, இன்னும் ஒரு வாரத்துக்கு வேண்டிய விஸ்கி, பிராண்டி, ரம், ஜின் எல்லாம் எங்காத்து மாமா வாங்கிப்போட்டுட்டார். வேணுமுன்னா ஞாயிற்றுக்கிழமை போகலாமா?"

"சரி மாமி, எனக்கு இந்த வோட்கா தான் சரியா பார்த்து வாங்கவே தெரியலே!"

"அதுக்கென்ன, நான் சொல்லித் தர்றேன். அப்புறம், என்ன சொல்றா பக்கத்தாத்து பங்கஜம்?"

"ரொம்பத் தொல்லை பண்ணுறாங்க மாமி. பொழுது விடிஞ்சாப் போதும், ஒரு பாத்திரத்தைத் தூக்கிட்டு வந்து கொஞ்சம் விஸ்கி கொடுங்கோ, ரம் கொடுங்கோன்னு ஒரே தொல்லையாப் போச்சு! மொத்தம் ரெண்டு பேர் தானே அவங்க வீட்டுலே? ரேஷனிலே வாங்குற விஸ்கி, ரம்மையெல்லாம் என்னதான் பண்ணுவாங்களோ?"

"ஆத்துலே போட்டாலும் அளந்து போடு கோமதி! நீ பாட்டுக்குக் கொடுத்துண்டேயிருந்தா, அவா பாட்டுக்குக் கேட்டுண்டேயிருப்பா! இரவல் கொடுக்கிறதும் தப்பு; இரவல் வாங்கறதும் தப்பு! விஸ்கி விக்கிற விலைக்கு இப்படி தினமும் இரவல் கொடுத்தா கட்டுப்படியாகுமா?"

"அதுவும் சரிதான். சரி மாமி! நாளைக்குப் பேசுவோம்!"

"சரி, அப்புறம் கோமதி! பைன்-ஆப்பிள் ரசத்தை ஃபிரிட்ஜிலே வைக்கிறதுக்கு முன்னாடி, ரெண்டு ஸ்பூன் வொயின் கலந்து வை. சாயங்காலமா எடுத்துக் கொதிக்க வச்சேன்னா, அப்பத்தான் பண்ணினா மாதிரி இருக்கும்!"

"ரொம்ப தேங்க்ஸ் மாமி!"

******

யோவ் சேட்டை, என்ன கொடுமை இது?-ன்னு கேட்கறீங்களா?

ஹிஹி! ஒண்ணுமில்லீங்க! இந்த இடுகையை எழுத என்னைத் தூண்டிய செய்தி:

புது தில்லியில் பெண்களுக்கென்றே சூப்பர் மார்க்கெட்களில் மதுபான விற்பனை நிலையங்களை தில்லி அரசே ஆரம்பித்திருப்பதாக வந்த செய்தியைப் படித்ததால் விளைந்த கற்பனை இது!

அப்படியென்றால், ராகுல் காந்தி சென்னையில், ’அரசே மது விற்பனை செய்வது தவறு,’ என்ற செய்தி என்ன பீலாவா?

அவரது கட்சி ஆளுகிற மாநிலத்தில், அதுவும் நாட்டின் தலைநகரத்தில், அதுவும் ஒரு பெண்மணி முதல்வராக இருக்கிற மாநிலத்தில் அரசே மதுக்கடைகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, இங்கே வந்து நீட்டி முழக்கிப் பேசுவது என்ன இரட்டை வேஷம் என்று கேட்கிறீர்களா?

அப்படியென்றால், நீங்கள் "இன்னும்" அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.

குனிஞ்சு எல்லாரும் கொக்குப் பிடிங்க பார்க்கலாம்!

Tuesday, December 21, 2010

2G-திடுக்கிடும் தகவல்கள்!

சந்தைக்குப் போய் பைநிறைய காய்கறியோடு ஸ்கூட்டரில் வந்து இறங்கியவர், எதையோ மறந்துவிட்டதுபோல, பதட்டத்தோடு மீண்டும் கிளம்பினார்.

"என்ன சார், செல்போனைத் தவற விட்டுட்டீங்களா?"

"என்னை என்ன அவ்வளவு அஜாக்கிரதையான ஆசாமின்னா நினைச்சே? அது பத்திரமாத்தானிருக்கு! ஆக்சுவலி சந்தைக்கு என் வீட்டுக்காரியையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன். மறந்துபோய் அவளை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன்!"

நீதி:01-கைபிடித்தவளை மறந்தாலும், கைபேசியை மறவாதே!

"நேத்து பஸ்ஸுலே வந்திட்டிருந்தேனா? உளுந்தூர்ப்பேட்டை தாண்டினதுலேருந்து விக்கிரவாண்டிவரைக்கும் டவரே கிடைக்கலேடா! பாட்டுக்கேட்க முடியலே! ஃபிகரோட பேச முடியலே! ஒரு எஸ்.எம்.எஸ்.கூட பண்ண முடியலேடா!"

நீதி.02: செல் போனா சொல் போச்சு

"பெட்ரோல் தானே போடப்போறே? நான் ரோட்டுலேயே நிக்குறேன். அங்கே சுவிட்ச்-ஆஃப் பண்ணச்சொல்லுவானுங்க!

நீதி.03: போனைப் பிடித்தவன் பாக்கியசாலி

"எப்போ போன் பண்ணினாலும் என்கேஜ்டுன்னே வருது! அப்படி யாருகூடதான் பேசிட்டிருப்பியோ? இத பாரு, உனக்கும் எனக்கும் ஒத்து வராது. ஒண்ணு ட்யூவல் சிம்கார்டு உள்ள போனா வாங்கு. இல்லாட்டா, உன்னைக் கட் பண்ணிக்கிறேன்."

நீதி.04: ட்யூவல்-சிம் புருஷலட்சணம்

இப்படியெல்லாம் அன்றாடம் நிகழ்வுகள் நடக்கக்காரணம் 2G ஸ்பெக்ட்ரம் தானே?

நமது வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட இந்த அலைபேசியால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் கொஞ்சமா நஞ்சமா? நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறதே!!

அலைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படுகிறது என்று சில மாதங்களுக்கு முன்னரே ஒரு செய்தி வெளியானது.

இவ்வளவு ஆபத்தான தகவலை நான் ஏன் உடனடியாகத் தெரிவிக்கவில்லை என்பதற்கு, பொதுவாக மூளை சம்பந்தப்பட்ட எந்த நோயும் எனக்கு வருவதற்கு சாத்தியமில்லை என்பதால், அதை நான் அலட்சியப்படுத்தி விட்டேன் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

அதாவது, அதிகமாக அலைபேசியில் பேசப்பேச, நமது மூளையில் மைக்ரோ-வேவ் என்ற நுண்ணலையின் தாக்கம் ஏற்படுகிறதாம். நமது மண்டையோட்டுக்குள் இரண்டு அங்குலங்கள் வரைக்கும் இந்த மைக்ரோ வேவ்கள் ஊடுறுவுகின்றனவாம். (ஹும், பாழாய்ப்போன மைக்ரோ வேவ் சமையலறைக்குள் வந்து படுத்துவது போதாது என்று இது வேறா என்று சம்சாரிகள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.)

நிறைய மூளையிருப்பவர்களுக்கு அதிகம் போக உள்ளே இடம் இருக்காது என்பதால் தப்பித்தார்கள்; என்னைப் போன்றவர்களின் மண்டையோடுகளுக்குள்ளே ஒரு விஜயசேஷ மஹாலே இருக்கிறதே சாமி!

இதை எனது நண்பரிடம் சொன்னபோது அவர், "சே, வர வர இந்த விஞ்ஞானிகள் தொல்லை தாங்ங்க முடியலேப்பா. நீ என்னடான்னா, செல்போன் உபயோகிச்சா மூளையிலே கட்டி வருமுன்னு சொல்றே! இன்னொருத்தரு செல்போன், மடிக்கணினி உபயோகிச்சா ஆண்மைக்குறைபாடு ஏற்படும்னு சொல்லுறாங்க. மனுசன் அப்புறம் எதைத் தானய்யா உபயோகிக்கிறது? சே!" என்று அலுத்துக்கொண்டார்.

’எதுக்கு வம்பு? எனக்கு அலைபேசியே வேண்டாம்,’ என்று ஓடித்தப்பிக்கலாமுன்னு பார்க்கறீங்களா? ஹை, அது தான் நடக்காது! அடுத்த மிரட்டல் இதோ:

அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படுகிற கதிர்வீச்சும் உடல்நலத்துக்கு மிகுந்த கெடுதல் விளவிக்குமாம். இப்போ என்ன பண்ணுவீங்க? கோவில் இல்லாத ஊரில் குடியிருந்து விடலாம். ஆனால், அலைபேசி கோபுரம் இல்லாத ஊரு எங்கே இருக்குதாம்? நல்லா மாட்டிக்கிட்டீங்களா? அனுபவிங்க!

’என்ன சேட்டை ஒரேயடியா பயமுறுத்துறானே,’ன்னு நினைக்காதீங்க! மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து இன்னும் பல காரசாரமான சர்ச்சைகளும், அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம். என்ன தான் முடிவா சொல்லுறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னதான் சொல்லுங்க, விஞ்ஞானம் எவ்வளவு அற்புதமான விஷயத்தைக் கண்டுபிடிச்சாலும், அதைத் தவறாகப் பிரயோகம் பண்ணுறதுலே நம்ம ஆளுங்களை மிஞ்ச யாராலும் முடியாது. சமீபத்துலே செல்போன் சார்ஜரில் வெடிகுண்டு வைத்து, காதலிக்க மறுத்த பெண்ணைப் பழிவாங்க முயற்சி செய்திருக்கிறாரு ஒரு குடியாத்தம் ஆசாமி! யாராவது கோடு போட்டாப் போதுமே, உடனே ஒரு டெண்டர்போட்டு, கான்டிராக்ட் வாங்கி ரோடு போடுறதுலே நம்ம ஆளுங்க கில்லாடிங்க!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய காதலாயிருந்தாலும், இன்றைய காலகட்டத்துலே செல்போன் இல்லாமல் போயிருந்தால், மெரீனா கடற்கரையில் மதியம் பன்னிரெண்டு மணி வெயிலில் காயப்போட்ட கருவாடுபோல காதலர்கள் காய்ந்து கொண்டிருப்பார்களா? அதே மாதிரி காதல் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தால், பல அலைபேசி நிறுவனங்கள் வருமானமின்றி போண்டியாயிருக்காதோ?

அதனால் தான், இந்த கைபேசிக்கும் காதலுக்கும் அரசியல்வாதிக்கும் ஊழலுக்கும் இருப்பதுபோன்ற மிக நெருங்கின தொடர்பு இருக்கிறது என்று, உத்திரப்பிரதேசத்தில் முஜபர்நகர் என்ற ஊரில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவே கூடாது என்று பஞ்சாயத்தில் தீர்ப்பளித்திருக்கிறார்களாம்.

அத்தோடு விட்டார்களா என்றால் இல்லை! லேட்டஸ்ட் அதிரடித் தகவல் என்ன தெரியுமா?

திருமணத்துக்கு முன்பே உறவு: செல்போன் பெருக்கத்தால் கள்ளத்தொடர்பு அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

இப்படியே போனா, சுனாமி வருவதிலிருந்து சேட்டைக்காரன் வலைப்பூ எழுதுவது வரைக்கும் அனைத்துக்குமே அலைபேசிதான் காரணம் என்று இனிவரும் நாட்களில் யாராவது ஆராய்ந்து சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே, மேற்கூறிய இவை எல்லாவுமே 2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசையால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

(அப்பாடா, ஏன் இன்னும் 2G ஸ்பெக்ட்ரம் பற்றி எதுவும் எழுதவில்லை என்று யாரும் இனிமேல் என்னைக் கேட்க முடியாது. நான் தப்பிச்சேன்!)

Saturday, December 18, 2010

அஞ்சு பைசா திருடினா குத்தமா?

"ஹலோ! யாரு அம்பியா?"

"யோவ், நான் அம்பி இல்லை; அந்நியன்!"

"வணக்கம் அந்நியன் சார்! நல்லாயிருக்கீங்களா? சதா சௌக்கியமா இருக்காங்களா?"

"ஹலோ, நீங்க யாரு பேசறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?"

"என் பேரு கொப்பம்பட்டி கோவாலு! நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரு லஞ்சம் வாங்கிட்டாரு! அதான் தகவல் தெரிவிக்கலாமுன்னு கூப்புட்டேன்."

"என்னது, லஞ்சம் வாங்கிட்டாரா? என்னய்யா, என்னவோ புதுவருச காலண்டர் வாங்கிட்டாருங்கிற மாதிரி சாதாரணமா சொல்றே?"

"இப்போ லஞ்சம் வாங்குறதெல்லாம் சர்வசாதாரணம் தானுங்களே! அது போகட்டும், அஞ்சு பைசா திருடினா குத்தமா அந்நியன் சார்?"

"திஸ் இஸ் டூ மச்! என்னோட "பிட்"டை என்கிட்டேயே போடறீங்களா? அஞ்சு பைசா திருடினாலும் தப்புத்தான். அஞ்சு கோடி பேரு அஞ்சு பைசாவை...."

"ஸ்தூ! ஸ்தூ!! ரொம்ப நீளமான டயலாக்கெல்லாம் கேட்க முடியாது. செல்போனை டாப்-அப் பண்ண மறந்திட்டேன். தப்பா இல்லையா?"

"பெரிய தப்பு! கருட புராணப்படி அந்தாளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது தான். அவரு அட்ரஸைச் சொல்லுங்க!"

"எழுதிக்கோங்க! கொப்பம்பட்டி கோவாலு, கேர் ஆஃப் கோவிந்தா, டுபாக்கூர் பை-பாஸ் ரோடு, கொப்பம்பட்டி! பஸ் நம்பர் 420-ஐப் புடிச்சா எங்க வீட்டுலே தான் வந்து முட்டும்!"

"என்ன கோவாலு? உங்க அட்ரஸையே சொல்லுறீங்க?"

"லஞ்சம் வாங்கினதே நான் தான்! என் அட்ரஸைக் கொடுக்காம வேறே ஏதோ டில்லி அட்ரஸையா கொடுக்க முடியும்?"

"நீங்களே லஞ்சம் வாங்கிட்டு நீங்களே என்கிட்டே புகார் கொடுக்கறீங்க? மனசாட்சி உறுத்திடுச்சா?"

"யோவ் அந்நியன்! என்னை என்ன மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையர்னு நினைச்சுக்கிட்டியா? பண்ணின தப்புக்கு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு மனசாட்சி தெளிவாயிருக்குன்னு புளுகுறதுக்கு?? நான் சோறு திங்கிறேன் சாமி! இப்போ கருடபுராணத்துலே சொல்லியிருக்கிறா மாதிரி தண்டனை கொடுப்பியா மாட்டியா?"

"என்னய்யா இது? நீ லஞ்சம் வாங்கிட்டு என்னை மிரட்டறே?"

"இப்பல்லாம் லஞ்சம் வாங்குறவன் மிரட்டறதுதானய்யா லேட்டஸ்ட் ஃபேஷன்! சொல்லு, நான் சொன்ன அட்ரஸுக்கு வந்து தண்டனை கொடுப்பியா? வரதுக்கு முன்னாடி ஒரு மிஸ்டு கால் கொடு! நான் வாசல்லே வந்து நிக்கிறேன்!"

"என்னய்யா குழப்பறே? இது லஞ்சக்கேசுலே மாட்டுனவங்களை ஒரு பதவியிலேருந்து தூக்கி இன்னொரு பதவியிலே உட்கார வைக்கிற சீசனாச்சே? எதுக்கு வலிய வந்து மாட்டிக்கிறே?"

"என்னய்யா நீ? நம்ம நாட்டு சி.பி.ஐ.மாதிரி சும்மா கேள்வி மேலே கேள்வி கேக்குறியே தவிர ஒண்ணும் பண்ண மாட்டேங்குறியே? எனக்கென்னவோ உன் மேலேயே டவுட்டாயிருக்குது! சொல்லுய்யா, நீயும் மாமன் மச்சான் பேருலே கம்பனி தொடங்கி கருப்புப்பணத்தை வெள்ளோட்டம் விட்டிருக்கியா?"

"மிஸ்டர் கோவாலு! மரியாதையா பேசு! இல்லாட்டி உனக்கு என்ன தண்டனை தெரியுமா? பரிபாதனம்!"

"பரிபாதனமா? அப்படீன்னா?"

"எரிமலைக்குழம்பைக் குடிக்கிற தண்டனை!"

"அடப்போய்யா, நான் என் பொஞ்சாதி பண்ணுற வெந்தயக்கொழம்பையே சாப்பிட்டவன். ஏதோ பெரிய தண்டனை கொடுப்பேன்னு பார்த்தா, காமெடி பண்ணிக்கிட்டு...!"

"கோவாலு! நான் கொடுக்கிற தண்டனையைக் கிண்டல் பண்ணாதீங்க! ’அந்நியன்’ படம் பார்த்தீங்களா இல்லியா?"

"பார்த்தேன்! பார்த்தேன்! எதுக்கும் ஒரு வாட்டி திருப்பிச் சொல்லேன். மொத்தம் எவ்வளவு தண்டனை? எத்தனை அயிட்டம் இருக்கு?"

"அயிட்டமா? யோவ், இதென்ன செட்டிநாடு ரெஸ்டாரண்டா? விட்டா இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் உண்டான்னு கேட்பே போலிருக்கே?"

"கோவிச்சுக்காம சொல்லுய்யா!"

"அந்தகூபம்-அதாவது இருட்டுக்குகையிலே தள்ளி எருமை மாடுங்களை விட்டு மிதிக்கிறது!"

"சரிதான், லாக்-அப்புலே போலீஸ்காரங்க மிதிக்கிறா மாதிரி...!"

"அடுத்தது கிருமிபோஜனம்! இரத்தம் உறிஞ்சுற அட்டைகளால உடம்பு முழுக்கக் கடிக்க விடறது...!"

"ஓஹோ! நாங்க வாங்குற லஞ்சத்துலே கீழேயிருந்து மேலே வரைக்கும் பர்சன்டேஜுன்னு எல்லாரும் உறிஞ்சி எடுக்கிறா மாதிரி...!"

"கும்பீபாகம்! எண்ணையிலே போட்டு வறுத்தெடுக்கிறது!"

"இது ஞாபகமிருக்கு! பாருங்க அந்நியன்! என்னையும் இதே மாதிரி வறுக்கிறதா இருந்தா, அதிகம் மிளகாய் சேர்க்காதீங்க. ஏன்னா எனக்கு அல்சர். காரம் ஒத்துக்காது!"

"யோவ், உன்னைத்தான் வறுக்கவே போறேன்!"

"இப்போ மட்டும் என்ன வாழுதாம்? வாங்கினா ஜனங்க வறுத்தெடுக்கிறாங்க; வாங்கலேன்னா மேலதிகாரிங்க வறுத்தெடுக்கிறாங்க! மொத்தத்துலே வறுபடுறது என்னவோ நிச்சயம்!"

"அடுத்தது தாமிஸ்ரம்! மண்டையிலே குண்டாந்தடியாலே அடிக்கிறது!"

"ஊஹும்! புதுசா ஏதாவது சொல்லு! இதுதான் வீட்டுலே தினப்படி நடக்குதே!"

"என்னய்யா இது? கொஞ்சம் கூட பயப்படவே மாட்டேங்குறியே!"

"அந்நியன்! உன்னோட தண்டனையெல்லாம் படத்துலே பார்க்க சவுண்டு எஃபெக்டோட நல்லாயிருந்திச்சு! கேட்கும்போது பயமே வரமாட்டேங்குது! இருக்கிறதுலேயே நல்ல தண்டனையாப் பார்த்து செலக்ட் பண்ணி சாயங்காலத்துக்குள்ளே ஒரு எஸ்.எம்.எஸ்.அனுப்பு! ஓ.கேவா?"

"எஸ்.எம்.எஸ்.அனுப்பவா? கோவாலு சார்! என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?"

"அட இல்லைய்யா, நம்பு!"

"பேசாம நீங்க போலீஸ்லே போய் சரண்டர் ஆயிருக்கலாமே? அவங்க பார்த்து உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பாங்களே? எதுக்கு என் உசிரை எடுக்கறீங்க?"

"போலீஸா? என்ன விளையாடுறியா? நான் வாங்கியிருக்கிற நூறு ரூபாய் லஞ்சத்துக்கெல்லாம் போலீஸுக்குப் போறதா? லஞ்சமுன்னா ஒரு மரியாதை வேண்டாம்? ஏதோ லட்சக்கணக்குலே, கோடிக்கணக்குலே இருந்தா, கோர்ட், கேஸு, விசாரணைக்கமிசன்னு போறதிலே ஒரு நியாயமிருக்கு!"

"அடப்பாவிகளா!"

"அப்படியே கேஸ் போட்டா மட்டும் என்னாயிரும்? உதாரணத்துக்கு தமிழ்நாட்டுலே கூத்தபெருமாளுன்னு ஒருத்தரு அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கினாரு! பதினேழு வருசம் கேஸ் நடந்து இப்போத்தான் சுப்ரீம் கோர்ட்டுலே ஒரு வருஷம் ஜெயிலுன்னு தீர்ப்பாயிருக்கு! பதினோரு வருசமா சம்பளமும் கிடையாது; கிம்பளமும் கிடையாது! சோத்துக்கு என்னய்யா பண்ணுவான் ஒரு மனிசன்? அம்பது ரூபாய்க்கு பதினேழு வருசமுன்னா, நான் நூறு ரூபாய் வாங்கியிருக்கேன். எனக்கு முப்பத்தி நாலு வருசமா?"

"கோவாலு????"

"அதுனாலே தான், இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு உனக்கு போன் பண்ணினேன். மரியாதையா சட்டுப்புட்டுன்னு வந்து தண்டனை கொடுத்துரு! இல்லாட்டி, சாகுறதுக்கு வேறே வழியா இல்லே எனக்கு? ஏதோ ’காவலன்’ படம் பொங்கலுக்குத்தான் வருதுன்னு சொன்னாங்களென்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். நீ வந்தா வா; வராட்டிப்போ!"

கோவாலு போனைத் துண்டித்தார்.

Friday, December 17, 2010

அனாமிகா! அடங்குங்க அக்கா!

பிரபல பதிவாளர் அனாமிகா துவாரகன் எனது "பெரிய இடத்து சம்பந்தம்" இடுகைக்கு போட்டிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு:

"டிஸ்கி: ஸ்ரேயா படம் போட்டு ஆம்பிளையாளை உன் பதிவு படிக்க வைக்கறதெல்லாம் ஒரு பிழைப்பா த்தூன்னு யாரும் காறிததுப்பிட்டுப் போன கம்பனி பொறுப்பேற்காது.

எப்பூடி!"

எப்பூடியா? மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது டிஸ்கி! ஒரு பதிவர் இதை விடவும் தனது தரத்தை எளிமையாக, வெட்ட வெளிச்சமாக மற்றவர்களுக்குப் பறைசாற்ற முடியுமா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

அனாமிகா துவாரகன் அவர்களே!

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு நடிகையின் படத்தைப் பார்த்தால் இப்படி பின்னூட்டம் இடத் தோன்றுகிறதென்றால், நீங்கள் போய் எழுத வேண்டிய வலைப்பூக்கள் எத்தனையென்று உங்களுக்குத் தெரியுமா?

ஸ்ரேயா படத்தைப் போட்டால், ஆண்கள் வந்து குவிந்து விடுவார்கள் என்று எழுதி என்னவோ ஆண்கள் எல்லாரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அது உண்மையானால், பெரும்பாலும் படுகவர்ச்சியான உடைகளை அணிகிற ஒரு நடிகையின் படு பதவிசான படத்தை போட வேண்டிய அவசியம் இல்லை.

இதோ, இன்னும் சில நாட்களில் ஒரு வருடமாகப் போகிறது எனது வலைப்பதிவுக்கு. இத்தனை நாட்களில், தரக்குறைவாக ஒரு இடுகையோ, முகம் சுளிக்க வைக்கிற மாதிரி ஒரு படமோ எனது வலைப்பூவில் இடம்பெற்றதாக யாராலும் சொல்ல முடியாது என்பதை நினைவுறுத்துகிறேன்.

அந்த நம்பிக்கை இருப்பதனால் தான் இன்னும் ஓராண்டு கூட முடியாதபோதிலும், எனது வலைப்பதிவை 230+ பேர் பின்தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று காறித்துப்புகிற நேரம் போக, உபரி நேரம் இருந்தால் பாருங்கள் அக்கா!

உங்களைப் போல ’நாசமாகப் போக,’ என்றெல்லாம் தலைப்பு வைத்து இடுகை எழுதுபவன் நான் அல்ல. எவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமென்றாலும் அதை நக்கலாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலத் தான் எழுதிப்பழக்கமே தவிர உணர்ச்சிகளை வார்த்தையில் கொட்டி, பரபரப்புக்காக அலைகிறவன் நானில்லை.

குறுகிய காலத்தில் எனது வளர்ச்சி பொறுக்காமல், சிலர் செய்கிற வேலைகள் எனக்குத் தெரியும். இந்த வலைப்பதிவு, வலையுலகம், தமிழ்மணம், இண்டெலி தவிரவும் எனக்கு வாழ்க்கை, கடமைகள் இருக்கின்றன.

உண்மையிலேயே உலகத்தைத் திருத்துகிற உயர்ந்த நோக்கம் இருந்தால், நீங்கள் போய் காறித்துப்ப வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.

நீங்கள் பிரபல பதிவர் என்பதால் அல்ல, ஒரு பெண் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

எனவே, அனாமிகா அக்கா, அடங்குங்க அக்கா! ஓவரா படம் காட்டாதீங்க!

Thursday, December 16, 2010

பெரிய இடத்து சம்பந்தம்

"யோவ், நீ சொன்ன தகவல் சரிதானய்யா! இந்த ஊருலேயே இதுதான் பெரிய வீடு போலிருக்குது!" என்று மலைப்போடு கூறினார் கந்தசாமி.

"அது மட்டுமில்லே சார், நான் சொன்ன எல்லாத் தகவலுமே சரிதான்! அந்த வீட்டுலே வேலைபார்க்குறவங்களே என் கிட்டே சொன்னாங்க!" என்றார் கோவிந்தசாமி.

"அப்படீன்னா இன்னிக்கு செமத்தியான வேட்டைதான்! ஆனா ஒண்ணு, நாம திட்டம்போட்ட மாதிரியே பேசுவோம். அவங்க வாயாலேயே உண்மையை வரவழைச்சதும் கப்புன்னு நம்ம வேலையைக் காட்டணும். சரியா?"

"சரி சார்!" என்றார் கோவிந்தசாமி.

காம்பவுண்டுக்குள்ளே அவர்களது கார் நுழைந்ததுமே, உள்ளேயிருந்து பெரியசாமி ஓடோடி வந்தார்.

"வாங்க வாங்க!" என்று வாயெல்லாம் கடவாய்ப்பல்லாக வரவேற்று கந்தசாமியையும், கோவிந்தசாமியையும் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.

"மிஸ்டர் பெரியசாமி! என் பேரு கந்தசாமி; இது என் தம்பி கோவிந்தசாமி! உங்க பொண்ணு செல்லத்தாயியோட ஜாதகத்தை எங்க ஜோசியர் வெள்ளைச்சாமி கிட்டே காட்டினோம். அது நம்ம கோவிந்தசாமி பையன் கோபாலசாமியோட ஜாதகத்தோடு ரொம்ப நல்லாப் பொருந்தியிருக்காம். பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்காம்!"

"பத்துப்பொருத்தமா? மொத்தமே எட்டுன்னு தானே சொல்லுவாங்க?"

"அதுவந்து, இப்போ ரீசன்டா இன்னொரு கிரஹம் இருக்கிறதா நாசாவிலே கண்டுபிடிச்சிருக்காங்களாம். எதுக்கு வம்புன்னு அதுக்கும் இடமிருந்து வலம், மேலிருந்து கீழா ரெண்டு பொருத்தம் பார்த்திட்டோம்."

"ரொம்ப சந்தோஷங்க! உங்க பையன் ஜாதகத்தைக் கொடுங்க! நானும் எங்க ஜோசியர் கருப்பசாமி கிட்டே ஒருவாட்டி காட்டிடறேன்." என்று மகிழ்ச்சியோடு கூறினார் பெரியசாமி.

"தாராளமாப் பாருங்க!" என்று ஜாதகத்தை எடுத்து நீட்டினார் கோவிந்தசாமி. "என் பையன் ஜாதகம் யோகஜாதகமுங்க! எந்த தோஷமும் கிடையாது. ஜலதோஷம் கூட இருக்கக்கூடாதுன்னு அவன் குளிக்கிறதே இல்லை!"

"கேட்கவே சந்தோஷமாயிருக்கு! குடிக்கிறதுக்கு ஜில்லுன்னு மோர் கொண்டுவரச் சொல்லட்டுங்களா?" என்று உபசரித்தார் பெரியசாமி.

"மிஸ்டர் பெரியசாமி! ரொம்ப தூரம் காருலே வந்ததுனாலே வயிறு கொடமொடங்குது. மோரு கூட ஒரு ஸ்பூன் வெந்தயமும் கிடைக்குமா?" என்று அடிவயிற்றைத் தடவியவாறே கேட்டார் கோவிந்தசாமி.

"அதுக்கென்ன, கொண்டுவரச் சொல்லுறேன்," என்று பணியாளை அழைத்து உத்தரவிட்ட பெரியசாமி, பிறகு புன்னகைத்தவாறே,"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன-ன்னு ஒரு பாட்டு இருக்கே, கேள்விப்பட்டிருக்கீங்களா?" என்று கேட்டார்.

"சார்...," என்று எதையோ சொல்ல வாயெடுத்த கோவிந்தசாமியை, கந்தசாமி கையமர்த்தினார்.

"மிஸ்டர் பெரியசாமி! இந்த ஊருலேயே நீங்க தான் பெரிய பணக்காரருன்னு கேள்விப்பட்டோம். வீடு கூட அரண்மனை மாதிரியிருக்கு!"

"என்ன பணக்காரன்? என்ன வீடு? எல்லாம் மாயை தானுங்களே! சும்மாவா பாடி வச்சாங்க? உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது....!" என்று சிரித்தார் பெரியசாமி.

"நல்ல காரியம் பேசுறபோது எதுக்கு சார் வெங்காயத்தைப் பத்திப் பேசுறீங்க? மனுசன் சாப்புடுற காய்கறிக்கும் கூட சத்வம், ரஜோ, தமோ குணமுண்டாம். வெங்காயமும் பூண்டும் தமோகுணமுள்ள சங்கதியாம். அதுனாலே தான் சுபகாரியங்களிலே அதைத் தவிர்க்கிறாங்க தெரியுமா மிஸ்டர் பெரியசாமி?"

"இதெல்லாம் மூடநம்பிக்கை சார்! அதுனாலே தான் பெரியார் கூட நொடிக்கொருவாட்டி ’வெங்காயம்’னு சொல்லுவாராம். தெரியாதா உங்களுக்கு?" என்று சொன்ன பெரியசாமி, கந்தசாமியின் தொடையில் கோவிந்தசாமி தட்டுவதைக் கவனித்துவிட்டார்.

"என்ன கோவிந்தசாமி சார், எதுக்கு அண்ணன் தொடையைத் தட்டுறீங்க?"

"இல்லை, அண்ணனை கொசு கடிச்சா மாதிரி இருந்தது...!"

"ஆஹா, கொசுக்கடி வாங்குனவரே சும்மாயிருக்கும்போது, தம்பியா லட்சணமா நீங்க அடிக்கிறீங்களே? இந்த மாதிரி பாசமாயிருக்கிற குடும்பத்துலே வாழ்க்கைப்பட என் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்."

"அது போகட்டும்! உங்க பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?"

"என்ன அப்படிக் கேட்டுப்புட்டீங்க? அவ வெங்காய சாம்பார் வச்சா, ஊரு முழுக்க வாசனையடிக்குமே? அவ உப்புமாவுக்கு வெங்காயக் கொத்சு பண்ணுவா பாருங்க, அப்படியொரு ருசியா இருக்கும். அது மட்டுமில்லை, இட்டிலி தோசைன்னா அவ கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து ஒரு வெங்காயத்தொக்கு அரைப்பா...பிரமாதமாயிருக்கும் போங்க!"

"அண்ணே, மறுபடியும் கொசு!"

"கடிக்கட்டும் விட்டிரு! மிஸ்டர் பெரியசாமி, உங்க பொண்ணுக்கு வெங்காயத்தைத் தவிர வேறு எதுவுமே சமைக்கத் தெரியாதா?" என்று சற்றே எரிச்சலோடு கேட்டார் கந்தசாமி.

"அப்படியில்லீங்க! பொதுவா வெங்காயமுன்னாலே நிறைய பேருக்கு அலர்ஜி! உரிச்சாக் கண்ணுலே தண்ணி வருமுன்னு சோம்பல்படுவாங்க. ஆனா, என் பொண்ணு அப்படியில்லேன்னு சொல்ல வந்தேன். அப்படியே எங்கம்மா மாதிரி! எங்கம்மாவும் அப்படித்தானுங்க! பழைய சோத்தொட சின்ன வெங்காயத்தை பச்சைமுளகாயோட சேர்த்து நசுக்கிக் கொடுப்பாங்க பாருங்க, அப்படியே தேவாமிர்தம் தாங்க!"

"மொத்தத்துலே உங்க ஃபேமிலேயே வெங்காய ஃபேமிலின்னு சொல்லுங்க!"

"கரெக்டாச் சொன்னீங்க! அதுலே பாருங்க, என் ஒரே பையன் டில்லியிலே இருக்கிறான். அவன் அங்கே ஆனியன் இன்ஃபோடெக்குன்னு ஒரு ஸாஃப்ட்வேர் கம்பனி ஆரம்பிச்சு, ஆறுவருசத்துலேயே முன்னூறு கோடி சம்பாதிச்சிட்டான்."

"ஓஹோ!" என்று கந்தசாமி, கோவிந்தசாமியை அர்த்தபுஷ்டியோடு பார்த்துப் புன்னகைத்தார்.

"அப்படீன்னா உங்களுக்கு டில்லியிலே நிறைய தொடர்பு இருக்குன்னு சொல்லுங்க! பிரைம் மினிஸ்டரைத் தெரியுமா?"

"என்னங்க இது, நம்ம மன்மோகன்சிங் தானே பிரைம் மினிஸ்டர். வெள்ளையும் சொள்ளையுமா இருந்துக்கிட்டு இதைப்போயி என்கிட்டே கேட்கறீங்களே?"

இப்போது உள்ளேயிருந்து மோர் வரவும், பெரியசாமி பணியாளைக் கடிந்து கொண்டார்.

"என்னப்பா இது, நான் மோருன்னு சொன்னா மோரை மட்டும்தான் கொண்டு வருவியா? போய் சூடா வெங்காய பஜ்ஜி போட்டுக் கொண்டுவரலாமில்லே? இல்லாட்டி நேத்து நான் வாங்கிட்டு வந்தேனே, வெங்காய பக்கோடா, அதையாவது கொண்டுவரலாமில்லே?"

"மிஸ்டர் பெரியசாமி!" என்று மிடுக்காகக் கூறியபடி எழுந்தார் கந்தசாமி. "எங்களுக்குக் கிடைச்ச தகவல் ஊர்ஜிதமாயிடுச்சு! உங்க வீட்டை சோதனை போடணும்."

"என்னது?" பெரியசாமி அதிர்ந்தார்.

"நீங்க நினைக்கிற மாதிரி நாங்க சம்பந்தம் பேச வரலே! வருமான வரி அலுவலகத்திலிருந்து வர்றோம். உங்க வீட்டுலே சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் நடக்கிறதா தகவல் கிடைச்சுது. அது தான் வாரண்டோட வந்திருக்கோம்."

"ஐயையோ, என்ன அநியாயம் இது? என் வீட்டுலே அப்படி எந்தத் தப்பும் நடக்கலியே?" என்று அலறினார் பெரியசாமி.

"ஏன் சார் பொய் சொல்றீங்க? வெங்காயம் கிலோ எழுபத்தி அஞ்சு ரூபா விக்குது. உங்க வீட்டுலே பாயாசம் தவிர எல்லாத்துலேயும் வெங்காயம் போட்டுச் சமைக்கிறதா எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு. போதாக்குறைக்கு முந்தாநாள் ஒரு மூட்டை வெங்காயம் கோயம்பேட்டிலே வாங்கியிருக்கீங்க! அதை எங்க ஆளுங்க ரகசியமா போட்டோ எடுத்திருக்காங்க! சொல்லுங்க, இவ்வளவு வெங்காயம் வாங்க உங்க கிட்டே ஏது பணம்?" என்று உறுமினார் கந்தசாமி.

"அட கடவுளே!"

"சொல்லுங்க மிஸ்டர் பெரியசாமி!" என்று ஒத்து ஊதினார். "நேர்மையா பணம் சம்பாதிக்கிறவங்களாலே ஒரே நாளிலே இவ்வளவு வெங்காயம் வாங்கவே முடியாது. உங்க பையன் டெல்லியிலே என்ன பிஸினஸ் பண்ணுறாரு? அவருக்கும் நீரா ராடியாவுக்கும் என்ன தொடர்பு? நீங்க கடைசியா வெங்காயம் வாங்குறதுக்கு யாரு பணம் கொடுத்தாங்க? அது ஹவாலாவுலே வந்த பணம் தானே?"

பெரியசாமி மூர்ச்சையடைந்தார்.

பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!

Tuesday, December 14, 2010

ஏனுங்கோ, ஈரோடு போறீங்களாக்கும்...?

"சேட்டை, டிசம்பர் மாசக் கடைசியிலே என்ன பண்ணுறதா உத்தேசம்?"

"வேறே என்னா, எவனாவது அகப்பட்டா கைமாத்து வாங்கறதா உத்தேசம்!"

"நீ ஏன் உருப்படலேன்னு இப்பத்தானே தெரியுது. டிசம்பர் 26-ம் தேதி ஃப்ரீயா இருப்பியா?"

"நான் எப்பவுமே ஃப்ரீ தான். இப்போ மட்டுமென்ன டிக்கெட் வாங்கிட்டா பார்க்க வர்றே?"

"முடியலே சேட்டை, நான் மேட்டருக்கே வர்றேன். டிசம்பர் 26-ம் தேதி ஈரோடு பதிவர் குழும சந்திப்புக்குப் போலாமா?"

"டேய், நமக்கும் ஈரோட்டுக்கும் என்ன சம்பந்தம் சாமி? அது அந்த ஊருக்காரவுங்க சந்திச்சுப் பேசப்போறாங்க...!"

"ஆமாம், ஈரோட்டுலே இருக்கிற பதிவருங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து மஞ்சள் மண்டி வைக்கிறதைப் பத்திப் பேசப்போறாங்களாக்கும். அதுதான் பதிவருங்க, வாசகருங்க எல்லாரும் வாங்கன்னு ஆளாளுக்கு விலாவரியா இடுகை போட்டிருக்காங்கல்லே?"

"ஆமாமா, நான் கூட பார்த்தேன்! நம்ம அகல்விளக்கு கூட "நிஜத்தில் ஸ்பரிசிக்கலாம்,"னு கவிதையாவே அழைப்பு விடுத்திருந்தாரு!"

"கவிதையா, விடு, அதுதான் உனக்குப் புரியாதே! நம்ம டாக்டர் ஐயா கூட ஒரு இடுகை போட்டிருந்தாரே?"

"யாரு, டாக்டர் ராமதாஸா?"

"சேட்டை, அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு நேருலே வந்து உன் மண்டையிலே குட்டுவேன். நான் சொல்லுறது நம்ம ’சாமியின் மன அலைகள்,’ டாக்டர் ஐயா...!"

"ஓ சரி சரி! "ஈரோடு ஈரோடு ஈரோடு,"ன்னு காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுலே சவுண்டு விடுறா மாதிரியே இடுகை போட்டு அழைச்சிருந்தாரு! அதுலே பாரு, அவரு போனவாட்டி சென்னை வந்தப்போ, சந்திக்கிறேன்னு சொல்லிப்புட்டு ஜகா வாங்கிட்டேன். மனுஷன் கோவிச்சுக்குவாரோன்னு பயமாயிருக்கு!"

"அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாரு! நீ ஒரு சொதப்பல் கேசுன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே! உன் கிட்டே அதையெல்லாம் அவங்க எதிர்பார்க்க மாட்டாங்க!"

"அதுவும் சரிதான்!"

"அப்புறம் சேட்டை, நம்ம ஈரோடு கதிர் "சங்கமம் 2010 – தயாராகுங்கள்!"னு எழுதியிருந்தாரே, படிச்சியா?"

"படிச்சேன்! அதுலே அவரு,"நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும் எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்,"னு எழுதியிருந்தாரு! அதான் யோசிக்கிறேன்! பள்ளிப்பாளையம் பாலத்துக்குக் கீழே காவேரி வேறே கரைபுரண்டு ஒடுதாம். ஏதோ வலையுலகத்துக்கு ஒரு நல்ல காரியம் பண்ணலாமுன்னு என்னை, காவேரியிலே புடிச்சுத் தள்ளிருவாரோன்னு பயமாயிருக்கு!"

"சேச்சே, அதெல்லாம் பண்ணமாட்டாரு, அந்த ஊருக்காரங்களோட விருந்தோம்பல் பத்தித் தெரியாதா உனக்கு?"

"ஆமாண்டா!"

"சேட்டை, பள்ளிப்பாளையமுன்னா காவேரி மட்டும்தானா? எக்கச்சக்கமா தேங்காய் போட்டு, செமத்தியா காரம்போட்டு பள்ளிப்பாளையம் சிக்கன் கிடைக்கும் தெரியுமா? வா, போய் ஒரு வெட்டு வெட்டலாம்!"

"எனக்கும் ஆசைதான்! அத்தோட போனவாட்டியே திண்டல் முருகன் கோவிலுக்குப் போகாம வந்திட்டேன். பவானி சங்கமத்தைப் பார்க்கணும்! பெரியார் வீட்டைப் பார்க்கணும். பெரிய மாரியம்மன் கோவிலுக்குப் போகணும்னு தோணுது. எங்கேடா முடியப்போவுது...?"

"பவானின்னதும் ஞாபகம் வருது! நம்ம சங்கவியோட வலைப்பதிவை எவனோ ஆட்டையைப் போட்டுட்டானேடா சேட்டை?"

"ஆமாண்டா, என்னை மாதிரி மொக்கையோட வலைப்பதிவையே ஒருவாட்டி திருடிப்புட்டானுக. அவரு மாதிரி உழைச்சு, உருப்படியா எழுதுறவங்களை விட்டு வைக்கவா போறாங்க? ஆனா ஒரு நல்ல செய்தி, அவரோட பதிவு திரும்பக் கிடைச்சிருச்சாம். "எனக்கு வடை கிடைச்சிருச்சு.."ன்னு இடுகை போட்டிருக்காரு!"

"சந்தோஷண்டா! அவரும் "26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்" னு இடுகை எழுதியிருந்தாரு!"

"ஓ! படிச்சேனே!"

"அப்புறம், நம்ம ’அட்ரா சக்கைசி.பி.செந்தில்குமார், சென்னிமலை கூட பக்கத்துலே தானே இருக்காரு. அவரையும் போய்ப் பார்க்கலாமே?"

"சர்தான், அவரு ஏதாவது தியேட்டருலே விமர்சனம் எழுதுறதுக்குன்னே படம் பார்த்திட்டிருப்பாரு! அவரை எப்படி சந்திக்கிறதாம்...?"

"இதுக்குத்தான் உன்னை மாதிரி படமே பார்க்காம விமர்சனம் எழுதணும்கிறது. அது போகட்டும், இப்போ நீ என்னதான் சொல்லுறே? வர்றியா இல்லையா?"

"வரணுமுன்னு ஆசைதான். ஆனா, டிசம்பர் 26 அன்னிக்கு எங்க கோவில்லே மண்டல பூஜை நடக்குது. நான் போகாம இருக்க முடியாது. ஊருலேருந்து கிளம்பினாலும் ஈரோடு போய்ச் சேர ராத்திரி ஆயிடும்."

"ஓஹோ!"

"அதுனாலே என்ன, நீங்கல்லாம் போய் பட்டையைக் கிளப்பிட்டு வாங்க! சென்னை ஆளுங்க கூட அப்படியே கிறிஸ்துமஸ் லீவுக்கு ஜாலியா சேர்ந்து ஈரோடு போயி ஒரு ரவுண்டடிச்சிட்டு வரலாமே?"

"சென்னையிலிருந்தா?"

"நிறைய பேரு போவாங்கன்னு எனக்குத் தெரியும். அட, நம்ம பிரபாகர் கூட சிங்கப்பூருலேருந்து போறாரு, சென்னையிலிருந்தா போக மாட்டாங்க?"

"பார்த்தேன் பார்த்தேன்! சங்கமத்துக்கு வாரீயளா?-னு இடுகை போட்டிருந்தாரு!"

"சரி நண்பா, நல்லபடியா போய் கலந்துக்கோ! நிறைய ஈரோடு பதிவர்களைப் பத்திப் பேச முடியலே. அவங்களுக்கும் என்னோட வணக்கங்களைச் சொல்லு! விழா நல்லபடியா நடக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்!"

"சரிடா சேட்டை, ஈரோட்டுலேருந்து ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"

"அந்த ஊருக்காரங்க எல்லாருமே சூப்பரா எழுதுறாங்களே? அதுக்கு ஏதாவது ரகசிய ஃபார்முலா வச்சிருந்தா, நைஸா அபேஸ் பண்ணிட்டு வந்திரு! நாமளும் எத்தனை நாளுதான் மொக்கை போடுறதாம்...?"

"ஓ.கே!"

Saturday, December 11, 2010

எங்கே பாரதி?

சிக்குபுக்கு’ படத்தைப் பார்த்துவிட்டு, முந்தைய நாளிரவு முழுவதும் கண்ணீரும் கம்பலையுமாய் ’பேசாமல் ஸ்ரேயா ரசிகர் மன்றத்தைக் கலைத்து விடலாமா?’ என்று யோசித்துக்கொண்டிருந்ததால், இன்று வழக்கத்தை விடவும் சீக்கிரமாக, அதிகாலை எட்டே முக்கால் மணிக்கே எழுந்து விட்டேன். கட்டிங் சாயா குடித்து விட்டு, கணினியை முடுக்கியதும் பல சகபதிவர்கள் பாரதியார் குறித்து இடுகைகள் எழுதியிருப்பதைக் கண்டேன்.

அடடா, இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாளாயிற்றே! சென்ற பாரதியாரின் நினைவுநாளன்றுதான் விஷயம் தெரியாமல் ஸ்ரேயாவின் பிறந்தநாள் குறித்த சிறப்பு இடுகை எழுதித் தொலைத்து விட்டேன். இன்றாவது, பாரதியாரைப் போய் தரிசித்து விட்டு, முடிந்தால் உருப்படியாக ஒரு காரியம் செய்யலாம்; அதாவது எந்த இடுகையும் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதன் படியே, அடுத்த பஸ்ஸைப் பிடித்து மெரீனா கடற்கரையை அடைந்து, பாரதியாரின் சிலை இருந்த இடத்தை நோக்கி விரைந்தேன்.

ஐயோ!


பாரதியாரின் சிலையைக் காணவில்லையே!

"சார், சார், இங்கே ஒரு பாரதியார் சிலை இருந்திச்சே? பார்த்தீங்களா?" உடம்புக்கும் வயதுக்கும் சற்றும் சம்பந்தமேயில்லாமல், ஆங்கிலத்தில் அபத்தமாக ஏதோ வாசகம் போட்டிருந்த டி-ஷர்ட் அணிந்த பெரியவரைக் கேட்டேன்.

"அட ஆமாம்! எங்கே போச்சு?" என்று சுற்றும் முற்றும் கரைந்துகொண்டிருந்த காக்கைகளை சந்தேகத்தோடு பார்த்தவாறே கேட்டார். "கலி முத்திடுச்சி! சரி, அவர் சிலையில்லாட்டி என்ன, அது தான் இவ்வளவு சிலையிருக்கே, பார்த்திட்டுப் போய்ச் சேருங்க!"

அதெப்படி எளிதில் விட முடியும்? ’அவசர போலீஸ் உதவி’ என்று கண்ணில் தென்பட்ட அறிவுப்புப்பலகையிலிருந்த எண்ணைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

"சார், என் பேரு சேட்டைக்காரன்! மெரீனா பீச்சிலேருந்து பேசுறேன். இங்கே இருந்த பாரதியார் சிலையைக் காணோம் சார்!" என்று அழாக்குறையாகச் சொன்னேன்.

"என்னய்யா பேத்தறே? கடை திறந்தாப்போதுமே, உடனே ஏத்திட்டு பாரதியார் சிலையைக் காணோம், விட்டா மெரீனா கடற்கரையையே காணோமுன்னு புகார் கொடுத்திருவீங்களே...?"

"சார் சார், சொல்லுறதை நம்புங்க சார், மெய்யாலுமே சிலையைக் காணோம் சார்!"

"என்னய்யா இது புதுப்பிரச்சினை! இன்னிக்கு வி.ஐ.பிங்கெல்லாம் மாலை போட வேறே வருவாங்க! பெரிய தலைவலியா ஆயிரும் போலிருக்கே! அங்கேயே இருய்யா...இதோ வர்றோம்..!"

போலீஸுக்காகக் காத்திருந்தபோது, ’ஒரு வேளை பாரதியார் உயிர்த்தெழுந்து காந்தி சிலைக்கு வணக்கம் செலுத்தப்போயிருப்பாரோ?’ என்ற சந்தேகமும், கூடவே ’காந்தி சிலையாவது இருக்கிறதா?’ என்ற பயமும் ஏற்பட்டது.

"சார், இங்கேயிருந்து பெசன்ட் நகருக்கு எப்படிப்போகணும்?" என்று என் நிலைமை புரியாமல் ஒருவர் வந்து வழிகேட்டதும் எனக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது.

"பஸ் வர்ற நேரமாப் பாத்து போய் நடுரோட்டுலே நில்லுய்யா! ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் வழியா அவங்களே பெசன்ட் நகருக்கு அனுப்பிருவாங்க!" என்று எரிந்து விழுந்தேன்.

சிறிது நேரத்தில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து வினு சக்கரவர்த்தியின் ஒன்று விட்ட சித்தப்பா போலிருந்த ஒருவர் காக்கிச்சீருடையில் இறங்கினார்.

"வணக்கம் சார், நான் தான் சார் போன் பண்ணுனேன்! நேத்து சாயங்காலம் கூட பார்த்தேன் சார்! ஏகத்துக்கும் காக்காய் எச்சம் போட்டு சிலையே வெள்ளை வெளேருன்னு இருந்திச்சு! இன்னிக்குப் பார்த்தா சிலையையே காணோம் சார்!" என்று அவரிடம் தெரிவித்தேன்.

யோசனையோடு காலியாயிருந்த மேடையையே பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை அழைத்தார்.

"ஒன் நாட் த்ரீ! நீங்க வண்டியை எடுத்திட்டு அப்படியே போய் விவேகானந்தர் இல்லம், மெட்றாஸ் யூனிவர்சிட்டி, அண்ணா சமாதி, லைட் ஹவுஸ் எல்லாம் பத்திரமாயிருக்கான்னு பார்த்திட்டு வாங்கய்யா. அப்படியே நம்ம ஐ.ஜி.ஆபீஸையும் ஒருவாட்டி நோட்டம் போட்டுட்டு வாங்க!"

"என்ன அநியாயம் சார் இது? வர வர தமிழ்நாட்டுலே திருட்டு ரொம்ப அதிகமாயிடுச்சு சார்! பொதுமக்களுக்குத் தான் பாதுகாப்பில்லைன்னா, தலைவர்களோட சிலைக்குமா ஆபத்து?"

"என்னய்யா ஜெயா டிவி நியூஸ் மாதிரி பேசறே? உங்க பாடு எவ்வளவோ தேவலாம். திண்டுக்கல் பக்கத்துலே ஒருத்தரு போலீஸ் ஸ்டேஷனையே திருட்டுப்பத்திரம் ரெடி பண்ணி வித்துப்புட்டாரு தெரியுமா? நாங்களே அரண்டு போய் கிடக்கோம்."

"இது பொறுக்குதில்லை; எரிதழல் கொண்டுவா!" என்று வாய்தவறிச் சொல்லிவிட்டேன்.

"என்னதுய்யா இது?" இன்ஸ்பெக்டர் எரிச்சலோடு கேட்டார்.

"பாரதி பாட்டு சார்!"

"அட, இதெல்லாம் படிப்பியா நீ? எங்கே, திருவிளையாடற்புராணத்துலேருந்து ஒரு பாட்டு சொல்லு!"

"பாத்தா பசுமரம், படுத்துவிட்டா நெடுமரம்...!"

"அடச்சீ! நீதான் நேரங்கெட்ட நேரத்துலே கவிதை சொல்லுறேன்னா, உங்கிட்டே அது தெரியுமா இது தெரியுமான்னு நானும் கேட்டுக்கிட்டிருக்கேன் பாரு!" என்று சலித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

ஜீப் திரும்பி வர, அதிலிருந்து இறங்கிய கான்ஸ்டபிள் "சார், எல்லாம் அதது இருக்க வேண்டிய இடத்துலே தான் இருக்கு சார், ஐ.ஜி.ஆபீஸ், டெலிவிஷன் ஸ்டேஷன், லைட்-ஹவுஸ், விவேகானந்தர் இல்லம், அண்ணா சமாதி எல்லாம் இன்-டாக்டா இருக்கு சார்!" என்று தகவல் தெரிவித்தார்.

"சார்...சார்...க்வீன் மேரீஸ் காலேஜ் இருக்கா பார்த்தீங்களா சார்?" என்று அவசரக்குடுக்கைத்தனமாய் நான் கேட்கவும், இன்ஸ்பெக்டர் என்னை முறைத்தார்.

"இதென்னய்யா புதுப்பிரச்சினை? ஐம்பொன் சிலையைத் தான் திருடுறாங்கன்னா இதையுமா? இவங்க கான்சப்டே புரிய மாட்டேங்குதே?" என்று அலுத்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர்.

"சார், பாரதியார் அமரகவியாச்சே, ஒரு வேளை உயிர்வந்து ஊருக்குள்ளே போயிருப்பாரோ?" என்று கேட்டேன்.

"விளையாடுறியா? அந்த மாதிரியெல்லாம் நடக்கக்கூடாதுன்னு தானே நாங்க, ஸ்ட்றாங்கா கான்க்ரீட் போட்டு ஆழமாக் குழிதோண்டி, பலமா அஸ்திவாரம் போட்டு சிலையை வைக்கிறோம். அதையும் மீறி எப்படிய்யா உயிர்வந்து போயிருவாங்க?"

"சார், இன்னும் கொஞ்ச நேரத்துலே வி.ஐ.பிங்கெல்லாம் மாலை போட வருவாங்களே, வந்து சிலை எங்கேன்னு கேட்டா என்ன சார் பதில் சொல்லுறது?" என்று கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டர் காதில் கிசுகிசுத்தார்.

"ஆமாய்யா...பெரிய வில்லங்கமாப்போச்சே!" என்று தலையைச் சொரிந்தார் இன்ஸ்பெக்டர்.

"எனக்கொரு ஐடியா இருக்கு சார்," என்று நான் யோசனை தெரிவித்தேன். "பேசாம திரு.வி.க.சிலைக்கு மீசை வச்சு இது தான் பாரதியார் சிலைன்னு சொல்லிடலாம். யாரு கண்டுபிடிக்கப்போறாங்க?"

"யோவ் சேட்டைக்காரா, இப்பவாவது என்னை தர்மபுரி பக்கம் டிரான்ஸ்பரோட நிறுத்துவாங்க. நீ சொன்ன மாதிரி பண்ணினா, என் சீட்டையே கிழிச்சிருவாருங்கய்யா!"

"சார், சென்னையிலே எங்கெங்கே பாரதியார் சிலையிருக்குதுன்னு பார்த்து, ஒரு நாளைக்கு இரவல் வாங்கிட்டு வரலாமா சார்?"

"என்னய்யா, மாசக்கடைசியிலே கைமாத்து கேக்குறா மாதிரி சொல்லுறே? சென்னையிலே ரெண்டோ, மூணோ சிலையிருக்கும். எல்லாரும் இன்னிக்கு ஒருநாளுதான் விழுந்து விழுந்து மாலைபோட்டுக் கும்பிடுவாங்க! இன்னி பூராவும் பாரதி சிலை ரொம்ப பிஸியா இருக்கும்யா!"

"அதுவும் சரிதான்," என்று வாயை மூடிக்கொண்டேன். வருடத்தில் ஒருநாள் தான் பாரதியார் சிலைக்கே மவுசு வருகிறது. அன்றைக்கா அவரது சிலை காணாமல் போக வேண்டும்?

"திருடினவன் வேறே ஏதாவது சிலையைத் திருடிட்டுப் போயிருக்கக் கூடாதா?" என்று புலம்பினார் இன்ஸ்பெக்டர்.

"சார், கடைசியா ஒரு ஐடியா!" என்றேன் நான்.

"என்ன?"

"அதோ தூரத்துலே ஒருத்தரு கருப்புக்கோட்டு, முண்டாசோட போயிட்டிருக்காரு! அவரை இந்தப் பீடத்தின் மேலே நிறுத்தி, நிறைய மாலைபோட்டு முகத்தைத் தவிர மத்தது எல்லாத்தையும் மூடிருவோம். வர்றவங்க அவங்க பாட்டுக்கு மாலையைப்போட்டுட்டுப் போயிருவாங்க!"

"யோவ் கான்ஸ்டபிள், போய் அந்தாளைக் கூப்பிட்டுக்கிட்டு வாங்க, அவருக்கு மீசை இருக்கா பாருங்க!"

பொம்மண்டபள்ளியிலிருந்து சென்னையைச் சுற்றிப்பார்க்க வந்த அந்த ஆளை வலுக்கட்டாயமாக மேடையின் மீது ஏற்றி சிலைபோல் நிற்கவைத்து, அவர் மீது ஏகத்துக்கும் மாலைகளைப்போட்டு மூடி மறைத்ததும், ஒவ்வொருவராக வந்த வி.ஐ.பிக்கள் மாலையணிவித்து விட்டு, போட்டோவுக்குப் போஸ் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.

"அப்பாடா! யோவ், அந்தாளை இறங்கச் சொல்லுய்யா! இனி ஒருவருசத்துக்கு டென்சன் இல்லை! அடுத்த பிறந்தநாள் வர்றதுக்குள்ளே பாரதிக்கு ஒரு புது சிலை வச்சிட்டாப்போகுது!"

"அது சரி சார், யாராவது சிலை எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?" என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.

"சிலை காணலேன்னு போன் பண்ணினது யாரு? நீ தானே? அப்போ நீதான் திருடியிருக்கே! கான்ஸ்டபிள், இந்தச் சேட்டைக்காரனைப் பிடிச்சு ஜீப்புலே ஏத்து!"

"ஐயையோ! நான் திருடலே சார்! சத்தியமா நான் திருடலே சார்! என்னை விட்டுருங்க சார்!"

முகத்தில் யாரோ தண்ணீர் தெளிக்கவும் விழித்தேன். அட, வைத்தி! சுரேந்திரன்!!

"சேட்டை, ஏண்டா தூக்கத்துலே கத்துனே? கனவா?"

ஆஹா! அப்படியென்றால் நான் கண்டது கனவா?

"தனியாவெல்லாம் போயி விருதகிரி பார்க்காதே, பார்க்காதேன்னு சொன்னாக் கேட்கிறானா? எதையோ பார்த்து நல்லா பயந்திருக்கான். காலையிலே சிவா விஷ்ணு கோவிலுக்குக் கூட்டிட்டுப்போயி திருநீறு பூசி விடணும்!"

Thursday, December 9, 2010

மண்-"மத" வம்பு!

(இது "கமல"ர்களுக்குப் புரியும் என்று தான் எழுதியிருக்கிறேன்!)

கவிதைகளென்றுதான் காதினில் ஈயம்
கலந்து கொட்டிடும் மாந்தரைக் கண்டால்
கண்கள் மூடிடும் பெருவரம் வேண்டும்!
ஆனையின் சாணியை மிதித்துபோலே
அருவருப்பின்றிச் சென்றிடல் வேண்டும்

அழுக்குகள் எழுத்தாய் வருகிறபோழ்தில்
அமைதியாய் ஒதுங்கிடும் பொறுமையும் வேண்டும்
இருக்கிற சரக்கை விரிக்கிற அவர்மேல்
இரக்கம்கொள்கிற ஈரமும் வேண்டும்

மேதை நானெனும் பேதையர் பேச்சை
மெத்தனமாகவே கேட்டிடல் வேண்டும்
தானே அனைத்தும் அறிந்தவனென்று
தலைக்கனம் மிகுந்தோர் தம்பட்டமிட்டால்
போய்வா என்றவர் இருப்பிடம் விலகும்
பொன்னான குணமும் வாய்த்திடல் வேண்டும்

நாளும் நடிப்பு நாவில் நெருப்பெனும்
நச்சுப் பாம்பினை ஒறுத்தல் வேண்டும்
சொல்வது ஒன்றாய் செய்வது வேறாய்
சுயநலம்பேசும் மனிதர்கள் சொல்லைச்
சுட்டுப்பொசுக்கிடும் நெருப்பும் வேண்டும்

இப்படிப் பலதும் தரவேண்டும் என
எத்தனையோ நாட்கள் நோம்பு இருந்தேன்
ரதமேறி வருவாள் ராஜலட்சுமியென
சீக்கிரமாய்ப் போனேன் சீனிவாச அய்யங்கார் ஊருக்கு

பரமக்குடியர்களைப் பழித்திடுமொருவனின் ஊராம்
பரமக்குடி எங்கும் பார்த்தேன் சுவரொட்டி
கோவணங்கட்டிய சப்பாணிகள் பலர்
கூட்டம் கூட்டமாய்ப் போவது கண்டேன்
பிட் படங்களின் போஸ்டர்கள் வீட்டில்
சட்டம்போட்டு மாட்டியிருந்தன
அண்ணனின் ஆளுயரப் போஸ்டரின் மேலே
ஆணுறைமாலைகள் போட்டிருந்தார்கள்

மூன்றோ நாலோ முடிந்தவரை மனைவியரைத் தேற்று
முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்து வாழ்க்கையை ஒப்பேற்று
ஊருக்கு இளைத்த பிள்ளையார்கோவில் ஆண்டியைத் தூற்று!

வரவர கவிதை எழுதித் தொலைப்பவர்
வகைதொகையில்லாமல் மிகமிக அதிகம்
வசூல்ராஜாவே உனக்கு மட்டும் வாட்டசாட்டமாய்
கவிதைப்பொருள் கிடைப்பதெப்படி?
ஆழ்வார்பேட்டையில் அரிசிமண்டியில்
சில்லறையாய் யாரும் விற்கிறார்களோ?
வரைமுறையின்றி வார்த்தையைச் செலவழித்து
வாழுமனிதர் தொழும் தெய்வந்தனை இகழ்ந்து
வக்கிரம்குழைத்துக் கவிதை புனைபவருமுண்டோ?
நம்பிக்கையற்றதனாலேயே நம்புவோர் மனதில்
நஞ்சம்பினைத் தொடுக்கிற கோழையருமுண்டோ?
என்னையும் அதுபோலாக்கு கமலானந்தாவே!
ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன் நமோஸ்துதே!