Tuesday, January 12, 2010

எழுதாத சட்டம்

இந்தியாவிலே கிட்டத்தட்ட துறைமுகம் இருக்கிற எல்லா ஊருக்கும் போயிருக்கேன்; அலுவலக வேலையாகத் தான்! ஒவ்வொரு ரயில் பயணமும் ஒவ்வொரு விதமான அனுபவமாயிருக்கும். எத்தனையெத்தனை விதமான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது? மனிதர்களில் இத்தனை நிறங்களான்னு தோணும்.

பெப்சியில் விஸ்கி கலந்து திருட்டு முழியோடு குடிக்கிற புத்திசாலிங்க; ஒரு டிக்கெட் வாங்கிட்டு மொத்த ரயிலுமே அவங்களுக்குச் சொந்தமாயிட்டது போல அலம்பல் பண்ணுறவங்க! வண்டி கிளம்பினதும் உற்சாகமா அந்தாக்ஷரி ஆரம்பிச்சிட்டு ஒரு மணிநேரத்துலே தொண்டை வறண்டு போய் பர்த்துலே சுருண்டுக்கிற வடநாட்டுப் பொண்ணுங்க; ஃபிரெடிரிக் ஃபோர்சித்தையும் ஷிட்னி ஷெல்டனையும் பரீட்சைக்குப் படிக்கிறா மாதிரி படிக்கிற மூக்குக்கண்ணாடிங்க; திருட்டு தம்மடிச்சிட்டு டாய்லட்டிலேருந்து அஞ்சலி படத்திலே வர்ற பேபி ஷாமிலி மாதிரி புகைமண்டலத்திலிருந்து வெளிப்படுற பேர்வழிங்க; காப்பி, டீ வரும்போது வாங்கலாமா வேண்டாமான்னு கலந்தாலோசித்து வெண்டர் அடுத்த பெட்டிக்குப் போனதுக்கப்புறம் அல்லாடுற புத்திசாலிங்க; பழங்கதையும் சுயபிரதாபங்களையும் சொல்ல யாராவது கிடைப்பாங்களான்னு மூக்கு வியர்த்துக் காத்திருக்கிறவங்க; சீட்டுக்கச்சேரி நடத்துறவங்க; இந்த உலகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லேங்கிறா மாதிரி காதுலே இயர்போனை மாட்டிக்கிட்டு பாட்டுக்கேட்குறவங்க; ஜன்னல் சீட்டுக்காக சினேகம் பிடிக்கிற சின்னஞ்சிறுசுங்க!

அப்பப்பா! இந்த உலகம் நம்முளுது மாத்திரமில்லேன்னு உணர ஒரு ரயில் பயணம் போதாதா?

அப்படிப்பட்ட பயணங்களிலே தவறாமல் எல்லாருக்கும் ஏற்படுற ஒரே மாதிரியான அனுபவங்களை விரல்விட்டு எண்ணிடலாம்.

"ஹலோ! இது எங்களோட பர்த்!"

ரெண்டு பேர் கிளம்பியிருப்பாங்க ஊருக்கு; எட்டு பேர் வழியனுப்ப வருவாங்க! பிரயாணம் பண்ணுறவங்க அமைதியா உட்கார்ந்திருக்க, வழியனுப்ப வந்தவங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியாது.

"யூ ஸீ! பர்த் நம்பர் ட்வென்ட்டி எய்ட், ட்வென்ட்டி நைன் அண்ட் தர்ட்டி...ஆல் அவர்ஸ்...!"

சில பேரு வீட்டுலே நாய்கிட்டேயும் ரயிலிலே மனிசன் கிட்டேயும் ஏன் இங்கிலீஷிலே பேசுறாங்கன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கய்யா!

வழியனுப்ப வந்தவங்க சிக்னல் போட்டதும் அவசர அவசரமா, சிஸ்டம் ஷட்-டவுண் பண்ணப்போறது மாதிரி பரபரப்பா இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுப்பாங்க! அவங்க கிளம்பிப்போனதுக்கப்புறம் ரயில்பெட்டியிலே இருக்கிற அமைதி ராமகிருஷ்ணா மிஷன்லே கூட கிடைக்காது.

அதுக்கப்புறம் சகபயணிகளின் பரஸ்பர அறிமுகம். நீங்க எங்கே போறீங்க? பர்த் கன்ஃபர்ம் ஆயிருச்சா? டி.டி. எப்போ வருவாரு? உங்களுக்கு ஆட்சேபணையில்லேன்னா அப்பர்-பர்த்தை நீங்க எடுத்துக்கறீங்களா, எனக்கு ஆர்தரைடிஸ்! இட்ஸ் ஓ.கே! ஒரே பெட்டி தானே, இங்கேயே இருக்கட்டும், சிரமப்படாதீங்க!

பேசின் பிரிட்ஜ் அல்லது அதிகபட்சம் திருவள்ளூர் தாண்டுறதுக்குள்ளாற எல்லாரும் சினேகமாயிடுவோம். அதுவரைக்கும் நம்மளை ஆட்டோ சங்கரைப் பார்க்குறா மாதிரிப் பார்க்கிற பொண்ணுங்க கூட "எதுக்கும் இருக்கட்டும்,"னு ஒரு புன்னகை சிந்துவாங்க!

எல்லாமே பழகிப்போச்சுது! பார்க்கப்போனா ரயில் சினேகிதமும் யாக்கை நிலையாமையும் கிட்டத்தட்ட ஒண்ணு தான். யாராவது தமிழ்ப்புலமையிருக்கிற ஒரு டி.டி.முயற்சி பண்ணினா பட்டினத்தாரை விட நல்லாவே எழுதலாமுன்னு தான் தோணுது.

இந்த ஆரம்பக்கணங்களின் இறுக்கம் அப்புறம் அங்குலம் அங்குலமா விரிஞ்சு, அடுத்த ஜங்ஷனிலே வாங்கின கொய்யாப்பழத்தை நறுக்கி நமக்கும் ஒரு பீஸ் கொடுத்து உபசரிக்கிற அளவுக்குப் போவுது பாருங்க - அது தான் சுவாமி விவேகானந்தர் சொன்ன முதல் வாழ்க்கைச் சட்டம்.

Love Is The Law Of Life:

All love is expansion, all selfishness is contraction. Love is therefore the only law of life. He who loves lives, he who is selfish is dying. Therefore, love for love's sake, because it is law of life, just as you breathe to live.

இதை அனுபவிச்ச பெரியவங்க அனுபவமில்லாத நமக்குச் சொல்லும்போது கொஞ்சம் ஈகோ பிரச்சினை ஏற்படுது. எல்லாரும் ஒரு தடவை ஒரு நீண்டதூர ரயில் பயணம் செய்திட்டு வந்தா நம்மை விட உலகம் விசாலம்னு புரியும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு ரயில் பயணமும் வாழ்க்கைங்கிற பெரிய பயணத்தோட ஒரு ப்ரோட்டோ-டைப்புன்னு தான் தோணுது.

ரயிலிலே சுவாமி விவேகானந்தரோட வாழ்க்கைச்சட்டங்களை எழுதினா பிரச்சினை வரலாம். ஆனா,நான் என் டைரியிலே எழுதி வச்சிருக்கேன். அதைக் கடைபிடிக்க நிறைய நல்லவங்க, பெரியவங்க எனக்கு உதவி செய்துகிட்டே இருக்காங்க! அவங்களும் எனக்கு விவேகானந்தர் மாதிரி தான்.

12-01-2010 அன்று சுவாமி விவேகானந்தரோட பிறந்தநாள்.நான் ராமகிருஷ்ணா மிஷன் போனேன். நீங்க போனீங்களோ?

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அவங்க கிளம்பிப்போனதுக்கப்புறம் ரயில்பெட்டியிலே இருக்கிற அமைதி ராமகிருஷ்ணா மிஷன்லே கூட கிடைக்காது.//

என்ன ஒரு உவமை.. அட்டகாசமா.
இட்லி இப்ப ரயில் எதையும் வாழ்க்கை தத்துவமா பாக்கறீங்க.. நல்லது..
இந்த எளுதி வைக்கலாமே வை எழுதி வைக்கலாமேன்னு மாத்துங்களேன்.. இணையத்தில் நாளை தமிழறியாதவங்க எளூதியா எழுதியான்னு தேடும் போது இதும் நிறைய இருந்தா எது சரியானதுன்னு குழம்பி போயிடுவாங்க.. லேபிளா எழுதி வைக்கலாமேங்கறது கூட நல்லாத்தான் இருக்கும்.. :)

settaikkaran said...

நன்றிங்கோ முத்துலட்சுமி அவர்களே!

இப்போ கொஞ்சம் மாறுதல்கள் செய்திருக்கேன். இன்னும் கொஞ்ச நாளிலே முழுசாத் திருந்திருவேன்னு எதிர்பாருங்க! :-)

Aba said...

//12-01-2010 அன்று சுவாமி விவேகானந்தரோட பிறந்தநாள்.//

அடப்பாவி, விவேகானந்தர் 2010ல தான் பொறந்தாரா? ஹையா, அவரு நமக்கு தம்பி!