Sunday, November 24, 2013

காலத்தை வென்றவன் நீ!
சச்சினின் இறுதி டெஸ்ட் போட்டியை நேரலையில் காணுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அன்றுமுதல் இன்றளவிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடர்ந்து அந்த நெகிழ்ச்சியான தருணங்களைத் தொடர்ந்து பலமுறை காண நேரிடுகிறது. சச்சின் குறித்த எனது சில விமர்சனங்கள் இந்த உருக்கத்தில் காணாமல் போய் விடவில்லை என்றாலும் அவற்றை மீண்டும் குரூரமாக நினைவுபடுத்திப் பார்க்க இது பொருத்தமான நேரமல்ல. நமது அபிமானத்துக்குரியவர்களின் சிற்சில சறுக்கல்களை பல சமயங்களில் மறந்துவிட்டதுபோல ஒரு பாசாங்காவது செய்து, புன்னகையுடன் அவர்களுடன் கைகுலுக்குவதுபோல, இருபத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியக் கிரிக்கெட்டுடன் இரண்டறக்கலந்து நாம் கொண்டாடி மகிழ பல குதூகலமான தருணங்களை அளித்த சச்சினுக்கு நன்றிகளையும், அவரது எதிர்காலம் அமைதியுடன், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளையும் தெரிவிக்க வேண்டிய கடமை, கிரிக்கெட் அபிமானிகள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது; எனக்கும் இருக்கிறது.

      பெரும்பான்மை இந்தியர்களின் இளமையில் பொதுவான சில அம்சங்கள் இருப்பது வழக்கம். இவரோடு ஒருமுறை கைகுலுக்க வேண்டும் என்று அண்ணாந்து பார்க்கிற ஒரு அரசியல் தலைவர்; இவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏங்க வைக்கிற  ஒரு திரைப்பட நடிகர்; இவரை ஒரு முறையாவது தொட்டுப்பார்க்க வேண்டும் என்று பெருமூச்சு விடவைக்கிற ஒரு கனவுக்கன்னி நடிகை; இவரைப் போல நாமும் விளையாட வேண்டும் என்று பேராசைப்பட வைக்கிற ஒரு கிரிக்கெட் வீரர். கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த அற்ப ஆசைகள் அனைத்துக்கும் ஒவ்வொருவரின் இளமையிலும் ஒரு முக்கியமான இடம் உண்டு. அத்தகைய சின்னப்புள்ளைத்தனங்கள் எல்லாரையும் போலவே எனக்கும் இருந்ததுண்டு; அவற்றில் சில இன்றளவிலும் இருக்கிறது என்பதும் உண்மையே! வயது, வளர்ப்புமுறை, குடும்பப்பின்புலம், கல்வி, வாழ்ந்த இடம் என்று பல மாறுபட்ட காரணங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலானோரிடம் பொதுவாகக் காணப்படுகிற இந்த ஒரு சில அம்சங்கள் பல நட்புக்களுக்கும் கூட வித்திடுவதுண்டு.

      அட, நீங்களும் சச்சின் விசிறியா? கைகொடுங்க!

      மும்பையில் குப்பைகொட்டிய காலத்தில் சச்சின் மீது ஏற்பட்ட அபிமானம், தென்னிந்தியர்கள் என்றால் சற்றே அசூயையுடன் பார்க்கிற பல மராட்டியர்களுடன் எனக்கிருந்த தொடர்பை நட்பாகப் பரிமளிக்கச் செய்தது. கிரிக்கெட் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது என்று சிலர் சொல்வதை முழுக்க முழுக்க பிதற்றல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது என்றுதான் அந்த அனுபவங்கள் உணர்த்தின.

      ஒரு விதத்தில் சச்சினின் வருகை, கபில்தேவ்-காவஸ்கர் என்று பிளவுபட்டுக் கிடந்த கிரிக்கெட் ரசிகர்களை, பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் ஒருமைப்படுத்தியது என்றுகூட சொல்லலாம். (மீதமுள்ள காலம்பற்றி இப்போது பேச வேண்டாம்!)

      இந்தியாவில் வெற்றியின் உச்சத்துக்குச் செல்பவர்களை முன்மாதிரியாகக் கொள்வதென்பதெல்லாம் வர்ணனையாளர்களின் பேராசை மட்டுமே என்றுதான் கருதுகிறேன். பெரும்பாலானவர்களுக்கு, அவர்கள் சினிமா ரசிகர்களாக இருந்தாலும் சரி; கிரிக்கெட் ரசிகர்களாக இருந்தாலும் சரி கொண்டாடுவதற்கு ஒரு வானளாவிய தனிமனிதன் தேவைப்படுகிறான். அப்படி நேர்கிறபோது அவனது நெடிய நிழலில் இருப்பதில் அற்பசுகம் காணுவதும் இளமைக்காலங்களின் இன்னோர் தவிர்க்க முடியாத அம்சமாகி விடுகிறது. ராஜேஷ் கன்னாவின் காரில் லிப்ஸ்டிக் பதித்த பெண்களாகட்டும்; சந்தீப் பாட்டீலின் அறையை முற்றுகையிட பெண்களாகட்டும்; அல்லது குஷ்புவுக்குக் கோவில் கட்டிய ரசிகர்களாகட்டும்; இன்றளவிலும் பெரிய நடிகர்களின் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்கிறவர்களாகட்டும். அனைவருமே தங்களுக்குப் பிடித்தமானவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, அவர்களது வாழ்க்கையிலிருந்து பாடம்பெற்று, அதை முன்னெடுத்துச் சென்று அதே வெற்றியை நாமும் அடைய வேண்டும் என்றெல்லாம் எண்ணியவர்கள் அல்லர். அவர்களுக்கு தங்களது நாயகர்கள் அல்லது நாயகியரின் வெற்றியும் புகழும் ஒரு வினோதமான மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அளித்தது. விதிவிலக்காக, ‘இவரைப் போல நாமும் ஆக வேண்டும்என்று இளைஞர்களை உந்துவித்த, பேராசைப்பட வைத்த, டாக்டர் அப்துல் கலாம் போன்ற சில பிரபலங்கள் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சச்சின் தெண்டுல்கர்.

      கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் நான் ஒரு பழமைவாதி. வானொலியில் பாதி ஆங்கிலத்திலும், பாதி (அப்போது புரியாத)  இந்தியிலும் வர்ணனை கேட்டு வளர்ந்தவன். அதன்பிறகு, தூரதர்ஷனின் அழிச்சாட்டியத்தில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளை முக்கால்வாசி மட்டுமே காணமுடிந்த ஒரு காலத்தில், ஒரு 14 அங்குல டெக்ஸ்லா கருப்பு-வெள்ளை டிவியில் கண்டு பிறவிப்பயனை எய்த தலைமுறையைச் சேர்ந்தவன். 20-20 போன்ற மசாலாக்கள் எல்லாம் கிரிக்கெட்டை ஃபாஸ்ட்-ஃபுட் போலக் கொன்றுவிடும் என்று நம்புகிறவன். ஒவ்வொரு கட்டத்திலும் கிரிக்கெட் கண்ட மாற்றங்களுக்கெல்லாம் சாட்சிகளாக இருந்ததில், இருப்பதில் பெருமையடைகிற ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன். அந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் நிச்சயமாக காலத்தை வென்றவன் தான்!

      சற்றே உணர்ச்சிவசப்பட்டு, அளவுக்கதிகமாகப் புகழப்படுவதிலிருக்கும் மிகைகளை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், சச்சின் தெண்டுல்கருடன் நாமும் பயணித்ததுபோல, அவரது வெற்றிகளை, தோல்விகளை, உச்சங்களை, கண்ணீரை அருகாமையிலிருந்து பார்த்ததுபோன்ற ஒரு அன்னியோன்னியம் இருப்பதாக உணர முடிகிறது. தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, இங்கிலாந்து திரும்பி, உலகக்கோப்பை ஆட்டத்தில் சதமடித்து, விண்ணை அண்ணாந்து நோக்கி சச்சின் கண்கலங்கியபோது, எனது சொந்தங்களில் ஒருவருக்கு ஏற்பட்ட துயரில் பங்கேற்பதுபோல எனக்கும் கண்கள் நீர்த்தன. மேற்கு இந்தியத் தீவில் நடந்த உலகக்கோப்பையில் படுமோசமாக ஆடிய இந்திய அணியின் தோல்வியைப் பார்த்து, பெவிலியனில் இருந்தவாறு சச்சின் கண்ணீர் சிந்தியபோது, அது எனது கண்ணீர் என்று தோன்றியது. இறுதியாக இந்தியாவுக்காக ஆடிவிட்டு, வான்கெடே மைதானத்திலிருந்து சச்சின் கண்ணீர்மல்க கிளம்பியபோது ‘வி வில் மிஸ் யூ சச்சின்!என்று தன்னையறியாமல் வாய் முணுமுணுத்தது.

      இந்தியக்கிரிக்கெட்டைப் புரட்டிப்போட்ட இரண்டு தருணங்கள் என்று சொல்ல வேண்டிவந்தால், 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதையடுத்து, சச்சின் தெண்டுல்கரின் வருகையென்று நிச்சயமாகக் கூறுவேன். இந்த இரண்டு நிகழ்வுகளுமே கிரிக்கெட்டில் ஏற்படத் தொடங்கியிருந்த சில தலைமுறை மாற்றங்களின் அடையாளக்குறிகள்! இவை இரண்டுமே இந்தியாவைக் கிரிக்கெட்டின் வல்லரசாக மாற்றிய அற்புதத்தை நிகழ்வித்த திருப்புமுனை சம்பவங்கள்.

      இந்தியாவும் பாகிஸ்தானும் அவரவர் மாமியார்களை அனுப்ப வேண்டிய நாடுகள்என்று இயன் போத்தம் இன்னோரன்னார் இகழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்த நிலையை மாற்றி, ஜெஃப்ரி பாய்காட், ஜாஹீர் அப்பாஸ், பில் லாவ்ரி, ரிச்சர்ட் ஹாட்லீ, டோனி கோஸியர் போன்ற நிரந்தர இந்திய துவேஷிகளுக்கு சில்லறை ஆசை ஏற்படுத்தி, அவரவர் கைகளில் ஒரு மைக்கைக் கொடுத்து கொச்சிக்கும், கட்டாக்குக்கும் அலைய வைத்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்த நிகழ்வுகள்! இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்களில் விரல்விட்டு ஆட்டுகிற அடாவடித்தனத்தை இந்தியா செய்ய முடிவதற்கு 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றியும், தெண்டுல்கர் என்ற இளம்புயலின் வரவும் உதவியதுபோல வேறெதுவும் உதவவில்லை. லார்ட்ஸ் மைதானத்தின் ஒரு குளிரூட்டப்பட்ட அறையிலிருந்துகொண்டு, கிரிக்கெட் உலகைக் குற்றேவல் செய்துகொண்டிருந்த இங்கிலாந்தை ஒப்புக்குச் சப்பாணியாக்கி ஓரங்கட்டிய பெருமையை இந்தியத் துணைக்கண்டத்துக்கு அளித்ததில், சச்சின் ரமேஷ் தெண்டுல்கரின் வருகையும், வெற்றியும் ஒரு முக்கிய திருப்புமுனை என்று அடித்துச் சொல்லலாம்.

      சுனில் காவஸ்கர் சிறந்த பேட்ஸ்மேன்; ஆனால், ஜாஹீர் அப்பாஸும் கிரேக் சேப்பலும் அவரைவிட சிறந்தவர்கள். கபில்தேவ் சிறந்த பந்துவீச்சாளர்தான்; ஆனால், அவரை விட ரிச்சர்ட் ஹாட்லியும் இம்ரான் கானும் சிறந்தவர்கள். சையத் கிர்மானி சிறந்த விக்கெட் கீப்பர்தான்; ஆனால், ஜெஃப் டூஜானும் ரோட்னி மார்ஷும் அவரைவிட சிறந்தவர்கள் இப்படியெல்லாம் இந்தியாவின் திறமையான வீரர்கள் பெரும்பாலும் மட்டம்தட்டப் பட்டு வந்த காலத்தில்தான், பழையன கழிந்து புதியன புகுந்த தொண்ணூறுகள் இந்தியக் கிரிக்கெட்டில் தனது வியத்தகு மாற்றங்களை வெளிப்படுத்தின. தொடர்ந்து முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த முகமது அஜாருதீன் போன்றவர்கள், பழம்தின்று கொட்டைபோட்ட காவஸ்கர், விஸ்வநாத், மதன்லால், அமர்நாத், கீர்த்தி ஆசாத் போன்ற தலைமுறையினரின் தோள்களுடன் உராய்ந்தபடி கிரிக்கெட் ஆடத் தொடங்கினர். கிரிக்கெட்டுக்கு ரசிகைகளையும் பெருக்கிய ரவி சாஸ்திரி போன்ற சாக்லெட் பையன்கள் புகுந்தனர். 83 உலகக்கோப்பை வெற்றியும் ஆசிய விளையாட்டுப்போட்டியின் புண்ணியத்தால் தேசம் முழுவதும் அத்தியாவசியப் பொருளாக மாறிப்போன தொலைக்காட்சிப் பெட்டிகளுமாகச் சேர்ந்து, செய்தித்தாள்களில் கருப்பு வெள்ளைப்படங்களாகக் காட்சியளித்து வந்த கிரிக்கெட் வீரர்களை, கந்தர்வபுருஷர்களாக வீட்டின் வரவேற்பறையில் உலவ விட்டன. தூரதர்ஷனின் கொட்டம் அடங்கி, தனியார் தொலைக்காட்சிகள் துளிர்விட ஆரம்பித்ததும், சினிமாவுக்கு நிகராக இருந்த கிரிக்கெட் மோகம் சினிமாவையும் மிஞ்சியது. யுகம் மாற மாற, இந்தியக் கிரிக்கெட்டின் தரமும் மெல்ல மெல்ல மாறியது. பிஷன்சிங் பேடி, எம்.எல்.ஜெய்சிம்ஹா,  நவாப் பட்டோடி, டாக்டர் நரோத்தம் பூரி ஆகியோரின் கொட்டாவி வர்ணனைகளுக்குப் பதிலாக ஹென்றி ப்ளோஃபெல்ட், டானி க்ரேக், இயன் சேப்பல், ஹர்ஷா போகலே போன்ற தேர்ந்த வர்ணனையாளர்கள் கிரிக்கெட் வர்ணனையின் இலக்கணங்களைக் கிழித்துப்போட்டு, புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தனர். ஆட்டத்தை மட்டுமே படம்பிடித்துக் கொண்டிருந்த கேமிராக்கள், பார்வையாளர்களின் உற்சாகத்தையும், ரசிகைகளின் காதணிகளையும், பால்கனியில் அமர்ந்திருந்த பாலிவுட் நட்சத்திரங்களையும், நிழலுலக தாதாக்களையும் படம்பிடித்துக் காட்டின. கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமின்றி, கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் சில ஜிகினா வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. தென் ஆப்பிரிக்காவில் உலகக்கோப்பைப் போட்டி நடைபெற்றபோது ஆட்டத்தைக் காண்பதற்கு இருந்த அதே ஆர்வம், மந்திரா பேதியைப் பார்ப்பதற்கும் ஏற்பட்டது அல்லது ஏற்படுத்தப்பட்டது. BTW, where is she?

      ப்ரையன் லாராவின் வரவினால் மேற்கு இந்தியத் தீவுகளிலோ, இன்ஜமாம் உல்-ஹக்கினால் பாகிஸ்தானிலோ, ரிக்கி பாண்டிங்கினால் ஆஸ்திரேலியாவிலோ நிகழாத மாற்றம், சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் என்ற பொடியனால் இந்தியாவில் ஏற்பட்டது என்றால் அதை அவரது கொடூரமான விமர்சகர்களாலும் மறுக்க முடியாது. இன்றைய நிலையில், சச்சின் என்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ஓய்வுபெற்ற நிலையில், அவரது ஆட்டம் குறித்த புள்ளி விபரங்கள், அவரது பலவீனங்கள் என்று கருதப்படுகிற சில அலட்சியப்படுத்த முடியாத சறுக்கல்கள், ஒப்பீடுகள் என அனைத்தையும் தாண்டி, மற்ற எவரும் ஏற்படுத்த முடியாத ஒரு வெற்றிடத்தை சச்சின் ஏற்படுத்திச் சென்றிருப்பது புலப்படுகிறது. ஒருவிதத்தில், இன்னொரு சச்சின் தேவையில்லை என்று அடுத்த தலைமுறையினர் அந்தப் பிம்பத்துக்குள் கூடுவிட்டுக் கூடுபாய முனையாமல், தங்களது தனித்தன்மையை மட்டுமே நம்பி முயற்சி செய்தால் அது அவர்களுக்கும், இந்தியக் கிரிக்கெட்டுக்கும் நன்மை பயக்கும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, சச்சின் விட்டுச் சென்ற சிம்மாசனம் அப்படியே இருக்கட்டும்! அடுத்த தலைமுறை நிர்மாணிக்க வேண்டிய புதிய சாம்ராஜ்யங்களும், கம்பீரமாக அமர்வதற்குப் புதிய சிம்மாசனங்களும், முற்றுகை இடுவதற்கான புதிய இலக்குகளும் இயல்பாகத் தோன்றி சவால்களாக அமையப்போவது உறுதி. எனவே, பிடிவாதமாக சச்சினுடன் ஒப்பிடுகிற மூர்க்கத்தை அலட்சியம் செய்துவிட்டு, அடுத்து வரப்போகிறவர்கள் தங்களுக்கென்று புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதே நல்லது. இதற்கான பாடம் சச்சினின் பயணத்திலேயே இருக்கிறது.

      சச்சின் ஆடத்தொடங்கிய காலத்தில் சுனில் காவஸ்கருடன் அவரை ஒப்பிட்டு அவர்மீது அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தியதுண்டு. அதிலிருந்து அவர் மீண்டதும், காவஸ்கரின் பல சாதனைகளை அவர் கடந்ததும் வரலாறு. சாதனைகள், புள்ளி விபரங்கள், வெற்றி தோல்வி குறித்த விவாதங்கள் எல்லாவற்றையும் விட, சச்சின் பிற வீரர்களிடமிருந்து விலகி, வித்தியாசமாகக் காணப்படுவதற்கு, கிரிக்கெட் தவிரவும் அவர் தனிப்பட்ட முறையில் தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட விதமும், சில விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர்த்து பெரும்பாலும் அவர் வெளிப்படுத்திய அடக்கமும், கண்ணியமும் முக்கியமான காரணங்கள். சாரதாஸ்ரமம் பள்ளியிலிருந்து அவருடன் பயணித்து இந்திய அணிக்குள் வந்த வினோத் காம்ப்ளி, ப்ரவீண் ஆம்ரே ஆகியோர் திறமையிருந்தும் ஏன் சச்சின் அளவுக்கு உயரத்தை எட்டவில்லை என்ற கேள்வியின் விடைதான், சச்சினின் வெற்றியின் ரகசியம்.

      இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வெற்றியும், பெருகிவரும் ரசிகைகளின் எண்ணிக்கையும் சச்சினின் உடம்புக்கு நல்லதில்லைஎன்று குமுதம் இதழில் சுஜாதா எழுதியிருந்தார். எதுவும் சச்சினை பாதிக்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் வெளிப்படுத்திய அதே பதவிசும், கண்ணியமும் சச்சினின் நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்தது. இன்றைக்கு மைதானத்தில் ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொண்டு அசிங்கப்படுகிறவர்களும், பாலிவுட் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுகிறவர்களும், மலிவான விளம்பரத்துக்காக தொலைக்காட்சிகளில் வந்து புளுகுகிறவர்களும் சச்சினின் வாழ்க்கையை அவர் செதுக்கிக் கொண்ட விதத்திலிருந்து கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் ஒன்றல்ல; ஓராயிரம் இருக்கின்றன.

       நான் எவ்வளவுக்கு எவ்வளவு சிவாஜியின் ரசிகனோ, அவ்வளவுக்களவு சச்சினின் விசிறியும் கூட! சிவாஜி 200+ படங்களில் நடித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியோ, அதே அளவு மகிழ்ச்சி சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டிருப்பதும் அளிக்கிறது. சிவாஜி ஜெயமாலினியுடன் ‘குத்தால அருவி குடிசையிலிருக்குஎன்று குத்தாட்டம் போட்டபோது எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டதோ, அதே எரிச்சல் சச்சின் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஓரிரு ஆண்டுகளாக ஏற்படத்தான் செய்தது. ஆனால், இன்றும் ‘கர்ணன்படமோ, ‘வசந்த மாளிகைபடமோ வெளியானால், பார்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று கிளம்புவதுபோல, சச்சின் மீதான எனது அபிமானமும் அசைக்க முடியாத அளவுக்கு இருக்கத்தான் செய்கிறது; இனியும் இருக்கும். சச்சினைப் பற்றிய எனது முந்தைய விமர்சனங்களுக்கு இது ஒரு சால்ஜாப்பு போலத் தோன்றினாலும் அதில் வெட்கப்பட எதுவுமில்லை. நான் முன்பே எழுதியிருப்பதுபோல, சச்சின் மீதான எனது விமர்சனங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், கண்மூடித்தனமாக சச்சினை ஆராதிக்கிறவர்கள்களின் கட்சியில் நான் இல்லை. You are entitled to your opinion and I am entitled to mine!

                ஆனால், சச்சின் தெண்டுல்கர் எனக்குப் பிடித்த பத்து இந்தியர்களில் முதல் ஐந்தில் வருவார் என்பதிலோ, எனக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் இருப்பார் என்பதிலோ எந்த மாற்றமும் நேரப்போவதுமில்லை!

      இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற எனது கனவு பலித்து விட்டது,என்று, சுருள் சுருளாகத் தலைமயிருடன், கூச்சத்துடன் தூரதர்ஷனில் மராட்டியில் பேட்டியளித்த அந்தப் பதினேழு வயதுப் பையன், தனது பயணத்தில் பல மைல்கல்களைக் கடந்தபோது, ‘உடம்பு சரியில்லைஎன்று பொய்சொல்லி வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தது இன்றளவிலும் எனக்குப் பித்துக்குளித்தனமாகத் தெரியவில்லை. சச்சின் முஷ்டாக் அஹமதையும், அப்துல் காதரையும் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்ததை நான் வானொலியில் கேட்டேன்என்று சொல்வதில் எனக்கு இன்னும் பெருமையாக இருக்கிறது. உறக்கத்தில் சச்சின் கனவில் வந்து என்னை பயமுறுத்தப் போகிறார்என்று ஷேன் வார்ன் சொல்லுமளவுக்கு அவரது பந்துவீச்சை துவம்சம் செய்த சச்சினின் ஆட்டத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்; ‘We were beaten by a great player’ என்று ஷார்ஜாவில் மணல்புயலுக்கு மத்தியில் சச்சின் ஆடிய ருத்ரதாண்டவத்துக்குப் பிறகு ஸ்டீவ் வாவ் சொன்னது எனது காதுகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

      எல்லாவற்றையும் விட, வடிகட்டிய இந்திய துவேஷியான ஜாவேத் மியான்தாத், சச்சின் ஆடிய முதல் தொடரின்போது, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இன்னும் என் கண்களுக்கு முன் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

“BEWARE! SACHIN TENDULKAR IS AROUND”

அது 24 ஆண்டுகளுக்கு முன்பு! எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வருவதுபோல, சச்சினின் ஆட்டமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், சச்சின் அளித்த குதூகலமூட்டும் ஞாபகங்கள் பொக்கிஷம்போல எனது அடிமனதில் மிகவும் பாதுகாப்பாக, பெருமையளிப்பதாக இருக்கின்றன.

சச்சின்! உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்!    

Sunday, November 10, 2013

நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...!
மு.கு: காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் மாற்றாக ‘மூன்றாவது அணிநடத்திய கூட்டம் முடிந்து பல நாட்களாகி விட்டாலும், தாமதாகவே இது குறித்து எழுத முடிந்திருக்கிறது. பரவாயில்லை! இந்தப் பத்து நாட்களாவது இவர்கள் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பாராட்டுக்குரிய விஷயம்!


நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...!


நாங்க புதுசா...
நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

ஆ! புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!
ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!


முன்னாடி சிலமுறை கூட்டுவைச்சோம்-சண்டை
முத்திப்போயி எங்களுக்கே வேட்டுவைச்சோம்
ஒத்துமைன்னா என்னான்னு தெரிஞ்சுக்காமே-வெறும்
ஓட்டுக்காக கையைக்கோர்த்து படம்பிடிச்சோம்
எப்போதும் கெடுப்பது எங்க வாயிதான் சும்மா
எம்பியெம்பிக் குதிப்பது லுல்லுலாயிதான்
ஆளாளும் உள்ளுக்குள்ளே திட்டம்போட்டு-எங்க
ஆளுக்கேதான் ஆப்புவைப்போம் கட்டம்போட்டு

நாங்க புதுசா...
நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

கூடுவிட்டு கூடுதாவும் கில்லாடிங்க நாங்க
கொள்கையைத்தான் கேட்டுப்புட்டாத் தாங்கமாட்டோம்
நல்லாத்தான் மத்தவரைக் கடுப்பேத்துவோம்- நாங்க
நாட்டுக்கென்று வேறொண்ணும் பண்ணமாட்டோம்
அடிக்கடி போராட்டம் தர்ணா செய்வோம்- நாங்க
அதைத்தாண்டி மக்கள்பக்கம் போகமாட்டோம்
கூச்சலிட்டு காட்டமாக வைவோமுங்க-அவர்
கூட்டணிக்கு வந்துப்புட்டா பேசமாட்டோம்

நாங்க புதுசா...
நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க


பலசரக்குப் போட்டிருக்கும் பாயாசம்தான் - இதைப்
பார்த்தாலே மக்களுக்கு ஆயாசம்தான்!
அவரவர்க்கு பேராசை தாசில்பண்ண-சிலர்
அதுக்குன்னே வருவாங்க காசுபண்ண
இப்போது போடுவது நாடகம்தான்- இது
இங்கிருக்கும் ஆளைப்பார்த்தா பூடகம்தான்
சர்க்காரு வந்தாலே கழண்டுக்குவார்- இவர்
சரக்கு என்னன்னு மக்கள் புரிஞ்சுக்குவார்


நாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

ஆ! புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச
நாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

டமுக்கடிப்பான் டியாளோ
டமுக்கடிப்பான் ஆயாளோ!

ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!
ஏ ஜிக்கு! ஏ ஜிக்கா!