Friday, April 29, 2011

என்னாத்த சொல்வேனுங்கோ

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Saturday, April 23, 2011

வெத்துவேட்டு வெங்கி


வெத்துவேட்டு வெங்கிக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்பது, ரவா தோசைக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்பதற்கு ஒப்பாகும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

வெங்கி என்ற வெங்கடசுப்ரமணியத்தின் சொந்த ஊரு பாலக்காடு பக்கம். மயிலாப்பூரில் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் பில் போட்டுக்கொண்டிருந்தவரை, எங்க முதலாளி அழைத்துக்கொண்டு வந்து வேலைபோட்டுக் கொடுத்துவிட்டார். (எனக்கே வேலை கொடுத்தவர் தானே!). அனேகமாக, வெங்கியை சிருஷ்டி செய்து கொண்டிருந்தபோது கடவுள் டிவியில் ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தாரோ என்னமோ, மூளையை வைக்க சுத்தமாக மறந்துவிட்டார்.

வெங்கிக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது; கம்ப்யூட்டர் தெரியாது; இவ்வளவு ஏன், ஆபீஸில் புழங்குகிற சாதனங்களின் பெயர் கூடத் தெரியாது. அவரால் ஆபீசுக்கு சல்லிக்காசுக்கும் உபயோகமில்லை. இத்தனை தகுதிகளோடு ஏற்கனவே நான் ஒருத்தன் இருக்கிறபோது, முதலாளி ஏன் இந்த வால்யூ-அடிஷன் செய்தார் என்பது இன்றுவரை புரியவேயில்லை.

உதாரணத்துக்கு, சில முக்கியமான காகிதங்களை ஃபைல் பண்ணுவதற்காக, பஞ்ச் மெஷினைத் தேடிக்கொண்டிருந்தபோது, வெங்கி கடந்து போனார்.

"வெங்கி சார், கொஞ்சம் பஞ்ச் கொடுங்களேன்!"

"பஞ்சு இல்லை; தீக்குச்சி தரட்டுமா? காது குடையத்தானே?"

"சார், நான் பஞ்சு கேட்கலை சார்! பன்ச் மிஷின்...அதாவது ஃபைல் பண்ணுறதுக்கு, பேப்பரிலே ஓட்டையெல்லாம் போடுவாங்களே!" என்று எழும்பி நின்று பஞ்ச் மிஷினை அவருக்கு விளக்குவதற்காக, பரதநாட்டிய அடவெல்லாம் பிடித்து அபிநயமெல்லாம் செய்து காட்டவும் புரிந்து கொண்டார். இப்படியே அவருக்கு அலுவலகத்திலிருக்கும் ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் விளக்கி விளக்கி, பார்க்கிறவர்கள் என்னை சித்ரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யன் என்று எண்ணத்தொடங்கிவிட்டார்கள். விட்டிருந்தால் நாரதகான சபாவில் அரங்கேற்றமே நடந்திருக்கும்.

எங்கள் அலுவலகத்தில் குமாஸ்தா வாசுதேவன் தவிர மற்றவர்களுக்கு வெளியே சுற்றுகிற வேலை. நானும் மண்ணடியிலேயே ஆங்காங்கே டீ குடிப்பது, ராமபவனுக்குப் போய் தேங்காய்ச்சீடை, கீரைவடை சாப்பிடுவது போன்ற அத்தியாவசியப் பணிகளைக் கவனிக்க வெளியே போவதுண்டு. அப்போதெல்லாம் எனது கணினியை அப்படியே வைத்துவிட்டே போவது வழக்கம். (அணைத்துவிட்டுப்போனால், திரும்ப வந்து முடுக்கியதும் மிக்ஸியில் சாம்பார்பொடி அரைப்பது போன்ற சத்தம் கேட்கும்.) அப்படியொரு முறை காளிகாம்பாள் கோவிலுக்கு அருகிலிருந்த பெங்காளி ஓட்டலில் மோச்சர் சாப் மென்று கொண்டிருந்தபோது, கைபேசியில் அழைத்தார் வெங்கி!

"சேட்டை, ஓசூருலேருந்து ஈ-மெயில் அனுப்பியிருக்காங்களாம். முதலாளி உடனே பார்க்கச் சொன்னாரு!"

"சரி வெங்கிசார், ரெண்டு நிமிஷத்துலே வர்றேன்!"

"உடனே பார்க்கணுமாம்!"

"அப்படியா? சரி, கம்ப்யூட்டர் ஆன் பண்ணித்தானிருக்கு! முதல்லே என்ன பண்ணறீங்க, எல்லா விண்டோவையும் குளோஸ் பண்ணுங்க!"

"ஒரு நிமிஷம் சேட்டை!"

ஒன்று...இரண்டு...மூன்று நிமிடங்களாகியும் வெங்கட் பேசக்காணோம். "ஹலோ..ஹலோ.." என்று நான் அழைத்துக்கொண்டிருக்க, காளிகாம்பாள் தவிர மற்றவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தபடி போனார்கள்.

"குளோஸ் பண்ணிட்டேன் சேட்டை," என்று பேசினார் வெங்கி. "விண்டோவை குளோஸ் பண்ணினாப் போதுமா, கதவையும் குளோஸ் பண்ணட்டுமா?"

"ஓய், என்னவே பண்ணினீரு?"

"ஜன்னலையெல்லாம் சாத்தினேன்!"

"சுத்தம். அப்படியே ஷட்டரையும் இறக்கி விடுமய்யா! மானிட்டர்லே எத்தனை விண்டோ ஓப்பனாயிருக்கு?"

"மானிட்டரா? அது எங்கேயிருக்கு?"

"நாசமாப்போச்சு! கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பாரும் வேய்!"

"ஓ! அதுவா, அதை எப்படி குளோஸ் பண்ணறது?"

"கீழே மல்கானி அண்டு சன்ஸ் கடையிருக்கில்லே, அங்கே போயி ஒரு சுத்தியலை வாங்கிட்டு வந்து ஒரு போடு போட்டா குளோஸ் ஆயிரும்!"

"என்ன சேட்டை, இப்படிப்பேசறீங்க...?"

"சரி, ஒண்ணு பண்ணுமய்யா! முதலாளி கிட்டே போயி கிருஷ்ணகிரியிலே பவர்-கட்டாயிருச்சாம். அதுனாலே ஈ-மெயில் சென்னை வந்து சேர நேரமாகுமாம்னு சொல்லுங்க. அதுக்குள்ளே நான் வந்து சேர்றேன்!"

"அவரு நம்பிருவாரா?"

"நம்ம ரெண்டு பேரை நம்பி வேலைகொடுத்தவரு மாப்பிள்ளை நல்ல படம்னாலும் நம்புவாரு!"

ஒருவழியாக நான் அலுவலகத்துக்குப் போய், ஈ-மெயிலைப் பார்த்து மேற்படித்தகவலை முதலாளியிடம் தெரிவித்தேன். அதன்பிறகு, வெங்கிக்கு கம்ப்யூட்டரைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் என் தலையில் வந்து விழுந்தது. ஆறுமாதத்தில் தடவித் தடவி கம்ப்யூட்டரை எப்படி இயக்குவது என்று சுமாராகக் கற்றுக்கொண்டு விட்டார்.

ஒருமுறை, திருப்பதி வெங்கடாசலபதியின் ஒரிஜினல் புகைப்படத்தை முதலாளிக்கு யாரோ ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் சரவணபவனில் மினி-மீல்ஸ் சாப்பிடப்போயிருக்கவே, வெங்கியிடம் சொல்லி அந்த மெயிலைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். நம்ம வெங்கி, மிகச் சரியாக மெயிலை திறந்து, படத்தையும் தரவிறக்கம் செய்து விட்டார். ஆனால், எக்குத்தப்பாக எதையெதையோ அழுத்தி கம்பீரமாக நின்று கொண்டிருந்த திருப்பதி வெங்கடாசலபதியின் படம், பள்ளிகொண்ட அரங்கநாதர் போல நெடுஞ்சாண் கிடையாகப் படுத்து விட்டது. நான் உள்ளே நுழையும்போது, என் முதலாளியும், வெங்கியும் இடுப்பில் கைவைத்தபடி உடம்பை ஒருக்களித்துச் சாய்த்தவாறு படுத்திருந்தபடத்தைக் கிட்டத்தட்ட படுத்தபடியே பார்த்துக்கொண்டிருந்தனர்.

"என்ன சார் ஆச்சு?"

"என்ன சேட்டை, படம் படுத்திருச்சு?"

"இப்ப வர்ற படமெல்லாமே படுத்திருது சார், நீங்க எந்தப் படத்தைச் சொல்றீங்க?" என்று கேட்டவாறே கம்ப்யூட்டர் மானிட்டரைக் கவனித்தபோதுதான், வாழ்க்கையிலேயே முதல்முறையாக திருப்பதி வெங்கடாசலபதியின் பள்ளிகொண்ட திருக்காட்சியைப் பார்த்தேன். பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, பெருமாளை மீண்டும் எழுப்பி நிற்கவைத்தபோது நினைத்துக்கொண்டேன்.

"நல்ல வேளை, வெங்கடாசலபதி படம் மட்டும் தலைகீழாக இருந்திருந்தால், இன்னேரம் ஆபீஸில் இரண்டு பேர் சிரசாசனம் செய்து கொண்டிருந்திருப்பார்கள்."

டிஸ்கி: இது எனது 250-வது இடுகை. தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்புள்ளங்களுக்கு நன்றி!

Wednesday, April 20, 2011

மணமகள் தேவை


"என்னாங்க இது? அத்துவானக் காடாயிருக்குதே?" மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் தப்பாக டிக்கெட் வாங்கி, தெலுங்குப்படம் பார்க்க உட்கார்ந்தது போல குஞ்சுமணி மலங்க மலங்க விழித்தாள்.


"கிராமம்னா அப்படித்தானிருக்கும். வந்தவேலையைக் கவனிப்போம் வா," என்று கூறிய செல்லமணி, அங்கு நின்றிருந்த பெரியவரை நெருங்கினார்.

"பெரியவரே, இங்கே கறார் கந்தசாமி வீடு எங்கேயிருக்கு?"

"நேராப்போனீங்கன்னா கந்தசாமி வீட்டு நெலப்படியிலே தான் முட்டணும்," என்று வழிசொன்னார் பெரியவர். "பொண்ணு பார்க்கவா வந்திருக்கீங்க? என்னங்க, புள்ளையைப் பெத்தவங்களுக்கு பொறுப்பு வேண்டாமா? இவ்வளவு லேட்டாவா வர்றது? அங்கே காலையிலே அஞ்சு மணியிலேருந்து எல்லாரும் கியூவிலே நிக்கிறாங்க!"

"ஐயையோ! சீக்கிரம் வா போகலாம்," என்று செல்லமணி விரைய, குஞ்சுமணியும் வேட்பாளருக்குப் பின்னால் போகும் தேர்தல் அதிகாரி போலப் பின்தொடர்ந்தாள்.

"ஐயையோ, என்னது இத்தனை க்யூ நிக்குது?" என்று மலைத்துப்போன செல்லமணி, ஏதோ ஒரு வரிசையில் இடையில் புக முயற்சிக்கவும், ஒருவர் சீறினார்.

"யோவ், பின்னாலே போய் நில்லுய்யா! மனசுக்குள்ளே பெரிய புத்திசாலின்னு நினைப்போ?"

"இல்லீங்க, நானும் உங்களை மாதிரித்தானுங்க! அதாவது, உங்களை மாதிரி பொண்ணு பார்க்க வந்தவன்னு சொல்லவந்தேனுங்க!" என்று கெஞ்சினார் செல்லமணி.

"யோவ், இந்த கியூவிலே எம்.பி.ஏ.படிச்ச பிள்ளைங்களைப் பெத்தவங்கதான் நிக்கணுமாம். உன் பிள்ளை என்ன படிச்சிருக்கான்?"

"அவன் படிக்கவெல்லாம் இல்லீங்க! ஆனா, எம்.எஸ்.சி பாஸ் பண்ணிட்டான்," என்று பரிதாபமாகக் கூறினார் செல்லமணி.

"எம்.எஸ்.சியா? யோவ், எம்.டெக், எம்.பி.ஏ, ஸி.ஏ மாதிரி பிள்ளைங்களுக்கு மட்டும் தான் கியூ!" என்று அலட்சியமாகச் சிரித்தார் அந்த நபர்.

"ஐயோ, அப்போ ஆர்ட்ஸ் குரூப், சயின்ஸ் குரூப் படிச்ச புள்ளைங்களுக்கு....?" செல்லமணி பதறினார்.

"அதுவா, கொஞ்ச நேரம் கழிச்சு பொண்ணைப் பெத்தவரு வந்து பத்து டோக்கனை வீசி எறிவாரு! எப்படியாவது முண்டியடிச்சு ஒரு டோக்கனை எடுத்திட்டீங்கன்னா, உங்க புள்ளை பெயரை வெயிட்டிங் லிஸ்டுலே வச்சிருப்பாராம்!"

"கடவுளே!" குஞ்சுமணி கண்ணீர் மல்கினார். "எப்படியாவது இந்தப் பொண்ணாவது என் புள்ளைக்குக் கிடைக்கிறா மாதிரி பண்ணினா, பழநிக்கு வந்து என் புருசனுக்கு மொட்டையடிக்கிறேன்!"

"என்னாது?" செல்லமணி சீறினார். "இப்படி ஒவ்வொண்ணுத்துக்கும் மொட்டையடிக்க என் தலைதான் கிடைச்சுதா? கடைசியா நான் எப்போ ஹேர்-கட் பண்ணினேன்னே எனக்கு மறந்து போச்சு! பேசாம வாயை மூடிட்டு வா! உன் புள்ளைக்கு விதிச்சிருந்தா கல்யாணம் ஆகும்."

"யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!" நாட்டாமை விஜயகுமார் போல வீட்டிலிருந்து கைகூப்பியபடி வெளிவந்தார் கறார் கந்தசாமி. "இன்னிக்கு என் பொண்ணுக்கு லேசா ஒத்தத்தலைவலி இருக்கிறதுனாலே பொண்ணு பார்க்கிற புரோகிராம் கேன்சல்! எல்லாரும் போயிட்டு அடுத்த வாரம் வாங்க!"

"ஐயையோ!"

"அட கடவுளே!"

கூட்டத்தில் எல்லாரும் பெருமூச்சுடன் கூறிக்கலையத் தொடங்கினர்.

"ஏனுங்க, நம்ம பிள்ளைக்குக் கல்யாணமே ஆகாதா?" யாரோ ஒரு பெண்மணி கண்களைத் துடைத்துக்கொண்டு கணவனிடம் கேட்டார்.

"ஆம்பிளையாப்பொறக்கவே கூடாது!" என்று யாரோ ஒருவர் புலம்பிக்கொண்டே போனார்.

வந்தவழியே திரும்ப நடந்து, செல்லமணியும் குஞ்சுமணியும் பஸ் நிறுத்தத்தை அடைந்தபோது, அங்கே ஒருவர் எல்லாருக்கும் ஒரு விசிட்டிங் கார்டு கொடுத்துக்கொண்டிருந்தார்.

"சார், இந்தப் பொண்ணு கிடைக்கலேன்னு மனசைத் தளர விடாதீங்க சார்! எப்படியும் உங்க புள்ளைக்கும் பொண்ணு கிடைச்சு, அவருக்கும் கல்யாணம் ஆகாமப் போகாது. அப்படிக் கல்யாணம் ஆகி, அவருக்கும் ஆண்குழந்தை பொறந்து, அது வளர்ந்ததும் பொண்ணுக்காக இப்படி அலையக்கூடாதில்லீங்களா? அதுனாலே இன்னும் பொறக்காத உங்க பேரனுக்கு எங்களோட ஜெயவிவாஹ் மேட்ரிமோனியல் சர்வீஸ்லே ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிருங்க சார்!" என்று சொல்லிச் சொல்லி எல்லாருடைய கைகளிலும் ஒரு விசிட்டிங் கார்டை திணித்துக்கொண்டிருந்தார்.

"கலிகாலம்!" என்று தலையிலடித்துக்கொண்டார் செல்லமணி. "நான் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நினைச்சபோது பொண்ணைப் பெத்தவங்க என் வீட்டு வாசலிலே கியூவிலே நின்னாங்க. இப்போ என் புள்ளைக்கு பொண்ணு தேடி நான் வீடு வீடாப்போயி க்யூவிலே நிக்க வேண்டியிருக்கு!"

"அதெல்லாம் இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாலே சார்! இப்போ 2035 நடந்திட்டிருக்கு! உங்க தலைமுறை பெண்சிசுக்களைக் கருவிலேயே கொன்னதாலே தான் இந்த கூத்தெல்லாம் நடக்குது. இன்னும் உங்க பேரன்பேத்தி காலத்துலே என்னென்ன நடக்குமோ?" என்று யாரோ ஒரு வழிப்போக்கர் கூறிச்செல்லவும் செல்லமணியும், குஞ்சுமணியும் தலைகவிழ்ந்தனர்.

Monday, April 18, 2011

எச்சரிக்கை: இது 100% மொக்கை

"சேட்டை! சேட்டைக்காரனைக் காணோம்!" நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்னஞ்சலைத் திறந்ததும், சகபதிவர் ஒரு பெட்டிச்செய்தி அனுப்பினார்.

"யோவ், சேட்டைக்காரன்கிட்டேயே சேட்டைக்காரனைக் காணோமுன்னு சொல்றே? நல்லாத்தானே இருந்தே, ஏன் திடீர்னு எஸ்.வி.சேகர் மாதிரி பேசறே?"

"ஐயோ, சேட்டை, உன் பிளாகைக் காணோம் சேட்டை! தி.மு.க.காங்கிரஸுக்கு ஓட்டுப்போடாதேன்னு பேனர் போட்டியே. வச்சிட்டாங்களா ஆப்பு?"

"அட, என்னையெல்லாம் அவங்க சீரியஸா எடுத்துக்கிறாங்களா? இரு பார்க்கிறேன்," என்று உடனடியாக பிளாகருக்குள்ளே லாக்-இன் செய்தால் "URL not found" "page does not exist" என்று விதவிதமாக கலவரமூட்டும் செய்திகளாகவே வந்து கொண்டிருந்தது.

"ஐயையோ, என் பிளாகைக் காணோமே? யாராவது சூனியம் வச்சிட்டாங்களோ?"

"உன் பிளாகுக்கு இன்னொருத்தர் வேறே தனியா சூனியம் வைக்கணுமா? உடனடியா அதை ரிட்ரீவ் பண்ணப்பாரு சேட்டை!"

கையெல்லாம் கள்ள ஓட்டுப்போடப்போனதுபோல படபடத்தது. என்ன செய்ய? தொண்டை வறள்வது போலிருந்தது. வெளியே போய் ஒரு டீயோ, ஜூஸோ குடித்தால் தான் சரியாகும் போலிருந்தது. மேனேஜரிடம் விரைந்தேன்.

"சார், வெளியே போய் சூடா ஒரு சாத்துக்குடி ஜூஸ் சாப்பிட்டுட்டு வர்றேன் சார்!" உளறினேன்.

"ஓ யெஸ், அப்படியே எனக்கும் நிறைய ஐஸ் போட்டு சூடா ஒரு கிரிணிப்பழ ஜூஸ் கொண்டுவரச் சொல்லேன்!"

என் பாஸ் மட்டும் என்ன புத்திசாலியாகவா இருக்கப்போகிறார்?

வெளியே இறங்கி நடந்ததும், நேரம் காலம் தெரியாமல் இஷ்டசித்தி விநாயகர் தும்பிக்கை வைத்த சினேகா போல புன்னகைத்துக்கொண்டிருந்தார்.

"ஓய் பிள்ளையாரே, என் பிளாகைக் காணோமுன்னு நான் பதறிட்டுக்கேன். என்னவே சிரிச்சிட்டிருக்கீரு?"

"அட, உன் பிளாகைக்காணோமா? அதான்...காலையிலேருந்து புதுசு புதுசா யாரெல்லாமோ வந்து தேங்க்ஸ் சொல்லிட்டு தேங்காய் உடைச்சிட்டுப்போனாங்க!"

"பிள்ளையாரே, மெய்யாலுமா?"

"அட ஆமா சேட்டை, ஒரு தேங்காய் பார்சல்லே கூட வந்ததுன்னா பாரேன்!"

"உமக்கு இதுலே ஒரு அற்பசந்தோஷமா? ஏதாவது வழி சொல்லுங்க புள்ளையாரே!"

"த பாரு சேட்டை, இப்போ ப்ளஸ் டூ ரிசல்டு, தேர்தல் ரிசல்டு, ஐ.பி.எல்.ரிசல்டுன்னு ஏகப்பட்ட அப்ளிகேஷன் வர்றதுனாலே, கொஞ்ச நாளைக்கு சிங்கிள்-விண்டோ சிஸ்டத்தை நிறுத்தி வச்சிருக்கேன். நீ வேண்ணா தரமணி ஹாக்கரநிவர்த்தி கணபதியைப் போய்ப் பாரேன்!"

பிறகென்ன, அரை நாள் காஸுவல் லீவு போட்டு விட்டு, கடற்கரைக்குப் போய் ரயிலைப் பிடித்தேன். வழிநெடுக திடீரென்று எனது வலைப்பதிவு ஏன் காணாமல் போனது என்று படமெடுத்துத் தியேட்டர் கிடைக்காத புரொட்யூஸர் மாதிரி குழம்பியபடியே போனேன்.

"நடிகைபடத்தைப் போட்டுப் பதிவு எழுதுகிறவனே! உனது வலைப்பதிவு காணாமல் போகக் கடவது!"

ஐயையோ, பகலிலேயே பயங்கரமான கனவெல்லாம் வருகிறதே! தரமணியில் இறங்கி பிள்ளையார் கோவிலுக்குப் போனபோது அங்கே கதவு சாத்தியிருந்தது. லஞ்ச் டயமாம்!

"எக்ஸ்கியூஸ் மீ," பிள்ளையார் கோவில் வாசலில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தவரிடம் கேட்டேன். "இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க!"

"சாயங்காலம் தான் திறப்பாங்க, என்னாச்சு தம்பி? டாஸ்மாக்குலே பீர் கிடைக்காதவன் மாதிரி தத்தளிக்கிறீங்க?"

"என்னோட பிளாகைக் காணோம்மா! அதான் மண்ணடிப்பிள்ளையார் கிட்டேயிருந்து ஒரு ரெகமண்டேஷனோட வந்திருக்கேன்!"

"ஓ ஐ ஸீ!" என்று ஆங்கிலத்தில் பேசி அசத்தினார், "இதுலே ஒரு பூசணிக்காயை எடுத்திட்டுப்போய் வாசல்லே தொங்க விடு! காத்து கருப்பு எதுவும் அண்டாது. மீறித் தொட்டா கண்ணுலே அல்சர் வந்து அழுது அழுதே அம்பேலாயிருவாங்க!"

ஹாக்கரநிவர்த்தி விநாயகரே தர்பூசணி விற்பவராக வந்து சொன்னதுபோலிருக்கவே, அந்தப் பூசணிக்காயை வாங்கிவந்து, இதோ என் வலைப்பூவில் போட்டுவிட்டேன்.

யாருக்கு வேண்டுமென்றாலும் தனிமடல் எழுதுங்கள். தட்சணை கேட்க மாட்டேன். இலவசம்!

பின்குறிப்பு: பூசணிக்காயில் வரையப்பட்டிருகும் அழகான படம் எனதல்ல!

Tuesday, April 12, 2011

குப்பனும் சுப்பனும்

குப்பனும் சுப்பனும் நண்பர்கள்! ஒரு நாள் குப்பன் கோவிலில் ஆன்மீகச்சொற்பொழிவு கேட்கப்போனான். சுப்பன் தாசி வீட்டுக்குப்போனான். குப்பன் மனம் ஆன்மீகச்சொற்பொழிவில் லயிக்கவில்லை. மாறாக, அவன் சுப்பன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பான் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருந்தான். சுப்பனோ தாசி வீட்டில் புழுங்கிக்கொண்டிருந்தான். ’அடடா, குப்பனோடு கோவிலுக்குப் போயிருக்கலாமே? இப்படிப் பாவச்செயல் செய்து கொண்டிருக்கிறோமே?’

குப்பனும் சுப்பனும் இறந்துபோனார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் பிறந்தார்கள். ஒரு நாள்....!

"சுப்பா! மெரீனா கடற்கரைக்குப் போகலாமா? அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தை ஆதரித்து ஒரு கூட்டம் இருக்கிறது. போகலாமா?"

"குப்பா! நானும் கேள்விப்பட்டேன்! நாம போயி ஒரு ரெண்டு ரூபாய் மெழுகுவர்த்தி ஏத்தினா ஊழல் ஒழிஞ்சிடுமா? கேட்டாலே கேனத்தனமா இருக்கு! நான் படத்துக்குப் போறேன்!"

குப்பன் மெரீனா கடற்கரைக்குப் போனான். சுப்பான் சினிமாவுக்குப் போனான்.

"எடுபட்ட பய சுப்பா! தினமும் தானே சினிமா பார்க்குறே? ஒரு நாள் பாசாங்குக்காகவாவது இங்கே வந்து கூட்டத்தோட கூட்டமா நின்னிருக்கலாமே?" இது குப்பன்.

"வெவரங்கெட்ட குப்பா! இந்த லஞ்ச ஊழலையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியுமா என்ன? ஜாலியா சினிமா பார்த்திட்டு, கிரிக்கெட் பார்த்திட்டு, நுனி நாக்கு இங்கிலீஷுலே "this country sucks...." ன்னு பேசிட்டிருக்கிறதை விட்டுப்புட்டு, வேலைவெட்டியில்லாத பசங்களோட மெழுகுவர்த்தியைப் பிடிச்சிட்டிருக்கியே? so sad...."

இது நடந்த சில தினங்களில் குப்பனும் சுப்பனும் ஒரு வாக்குச்சாவடியை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவன் வாக்குப்போடலாம்; இன்னொருவன் நழுவலாம். அல்லது இருவருமே ஒத்த முடிவை எடுக்கலாம்.

ஆனால், எத்தனை காலங்கள் மாறினாலும் கோவிலும் தாசிவீடும் இருக்கும்.

மெரீனா பீச்சும், சினிமா தியேட்டரும் இருக்கும்!

குப்பனும் சுப்பனும் இருப்பார்கள் - வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு ஊர்களில்! மெழுகுவர்த்திகளும் இருக்கும்! தேர்தலும் இருக்கும்!

இவர்கள் அப்போதும் வெவ்வேறு கோணங்களில் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் என்பதால், அப்போதும் ஊழல் இருக்கும்!

இருந்துவிட்டுப்போகட்டுமே!

Monday, April 4, 2011

அப்பாலிக்கா மீட் பண்றேன்!

நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகிறது. அன்னை காளிகாம்பாளின் அருளால், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலயதரிசனம் செய்யப்போகிறேன். உங்கள் அனைவருக்கும் சேர்த்துத்தான் சாமி கும்பிடப்போகிறேன்.

தேர்தலுக்கு ஓட்டுப்போட சரியாக வந்துவிடுவேன்! :-)

பத்து நாளைக்குப் பிறகு சந்திப்போம் நண்பர்களே! என்ஜாய்....!

அன்புடன்

சேட்டை