Friday, June 29, 2012

கண்ணா, லட்டு திங்க ஆசையா?



ஐயையோ!என்று அலறியடித்துக் கொண்டு தூக்கத்திலிருந்து கண்விழித்தார் கிட்டாமணி.

      என்னாச்சுங்க?பதறியபடி விழித்தாள் பாலாமணி. “கெட்ட கனவு ஏதாவது கண்டீங்களா? நான் பக்கத்துலே இருக்கும்போது அதெல்லாம் வராதே?

      பாலாமணி, பயங்கரமான கனவு!நடுங்கியபடி கூறினார் கிட்டாமணி. “ நம்ம பிரணாப் முகர்ஜீக்குப் பதிலா  நான் நிதியமைச்சராகுறா மாதிரி ஒரு கனவு கண்டேன்.

      அதான் பிரதமரே அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டதா நியூஸ்லே சொன்னாங்களே?

      வாஸ்தவம்தான்! ஆனா நம்ம பிரதமர் ரொம்ப நல்லவர். ஒருத்தர் ரெண்டு வேலையை எடுத்துட்டு ரெண்டையும் நாஸ்தி பண்ணுறது அவருக்குப் பிடிக்காது. அதுனாலே ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருத்தரைப் போட்டு ரெண்டுபேரும் தனித்தனியா நாஸ்தி பண்ணனும்னுதான் நினைப்பாரு!

      ஏன் கவலைப்படறீங்க? நிதியமைச்சர் வேலை ரொம்ப ஈஸியான வேலைங்க! தினமும் ஒருவாட்டியாவது டிவியிலே வருவீங்க! ஜாலியா இருக்கும்! சான்ஸ் கிடைச்சா விட்டுராதீங்க!” என்று கணவரை உற்சாகப்படுத்தினாள் பாலாமணி.

      விளையாடறியா?அரற்றினார் கிட்டாமணி. விலைவாசி சகட்டுமேனிக்கு ஏறிக்கிடக்கு. பணவீக்கம் குறைய மாட்டேங்குது. டாலரோட ஒப்பிட்டா இந்திய ரூபாயோட மதிப்பு குறைஞ்சிட்டே போகுது. உலகத் தரப்பட்டியல்லே நம்ம இந்தியாவோட பொருளாதாரத்தோட குறியீட்டைக் குறைச்சிட்டே போறாங்க! இதையெல்லாம் என்னாலே எப்படி சமாளிக்க முடியும்? பத்திரிகைக்காரனுங்க நாக்கைப் புடுங்குறா மாதிரி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லறது?

      அதைப் பத்தியெல்லாம்  ஜனங்க மேலே அக்கறை உள்ளவங்க கவலைப்படுவாங்க! நீங்கதான் மந்திரியாகப் போறீங்களே?

      நீ சொல்றதைப் பார்த்தா, எந்தப் பிரச்சினையைப் பத்தியும் நான் கவலையே படக்கூடாதுங்குற மாதிரியில்லே இருக்கு?

      ”தப்பு! எல்லாப் பிரச்சினையைப் பத்தியும் கவலைப்படணும். அப்போத்தான் நல்ல நிதியமைச்சரா இருக்க முடியும்! “ கணவரைத் திருத்தினாள் பாலாமணி.

      எப்படி?

      இப்போ நான் ஒரு பத்திரிகை நிரூபர்னு வைச்சுக்கோங்க! நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க பார்க்கலாம்.

      இந்த ஆட்டத்துலே கூட நீதான் கேள்வி கேட்பியா? கஷ்டம்! சரி, கேளு,என்று மனைவியைக் கூர்ந்து கவனித்தார் கிட்டாமணி.

      முதல் கேள்வி! டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்து விட்டதே? இதை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?

      அது வந்து... வெளிநாட்டு முதலீடுகளுக்கு உற்சாகமளித்து, ஏற்றுமதியாளர்களுக்குச் சலுகையளித்து....

      நிறுத்துங்க! என்னாது வளவளான்னு பேசிக்கிட்டு? இதுவே நம்ம பிரணாப் முகர்ஜீயா இருந்தா இந்தக் கேள்விக்கு ரெண்டே வார்த்தையிலே பதில் சொல்லியிருப்பாரு தெரியுமா?

      ரெண்டே வார்த்தையா? என்ன அது?

      ரொம்பக் கவலையாயிருக்கு!

      என்னாது?அதிர்ந்தார் கிட்டாமணி.

      ஆமாங்க!சிரித்தாள் பாலாமணி. “பிரணாப் முகர்ஜீ நிதியமைச்சரா இருந்தபோது, அவர் கிட்டே என்ன கேட்டாலும் ‘கவலையா இருக்குன்னு ரெண்டு வார்த்தையைச் சொல்லிட்டு ஜூட் விட்டிருவாரு!

      எதையாவது உளறாதே! அவர் எவ்வளவு பெரிய மனுசர்? இப்படியா பதில் சொல்லுவாரு?

      ” நம்ப முடியலியா? கேளுங்க,“ என்று பட்டியலிட ஆரம்பித்தாள் பாலாமணி. ஜூன் 13-ம்தேதி அவர்கிட்டே ‘தொழில்துறை வளர்ச்சி இப்படித் தரைமட்டமாயிருச்சேன்னு கேட்டதுக்கு அவர் என்ன பதில் சொன்னாரு தெரியுமா? ‘கவலையா இருக்குன்னுதான்!

      ஏதோ ஒருவாட்டி வாய்தவறிச் சொல்லியிருப்பாரு!


      அது போன மாசம்; நான் சொல்றது இந்த மாசம்!


      ஐயையோ!


      ஆஹா!கிட்டாமணி முகம் மலர்ந்தார். “அப்படீன்னா,  நிதியமைச்சர்னா ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் கவலைப்பட்டா மட்டும் போதுமா?

      சுத்தப் புரியாத ஜன்மமா இருக்கீங்களே?எரிந்து விழுந்தாள் பாலாமணி. “உங்களை யாரு கவலைப்படச் சொன்னாங்க? அதுக்குத்தான் நூறு கோடிக்கும் மேலே  மக்கள் இருக்காங்களே? மந்திரியா லட்சணமா ‘கவலையா இருக்குன்னு கவலைப்படாமச் சொல்லிட்டு கவலையில்லாம இருந்தாப் போதும்! என்ன கண்ணா, லட்டு திங்க ஆசையா?

      பாலாமணி! எனக்கு இந்த நிதியமைச்சர் வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு!என்று ஆர்வம் ததும்பக் கூறினார் கிட்டாமணி. “சொல்லப்போனா, உன்னோட குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுறதுக்குப் பேசாம சாமியாராப் போயிடலாம்னு முன்னெல்லாம் நினைப்பேன். இப்போ, நிதியமைச்சராப் போயிடலாம்னு தோணுது!

      உங்களுக்கு ஜாலியாத் தான் இருக்கும்,என்று அங்கலாய்த்தாள் பாலாமணி. “ஆனா, ஜனங்க பாட்டைப் பத்தி யோசிச்சீங்களா?

      யோசிக்கிறதா? அவங்க நிலைமையை நினைச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

      ஐயையோ, எதுக்கு அழறீங்க?

      பின்னே நானும் சும்மா ‘கவலையா இருக்குன்னு வாய்வார்த்தையா சொன்னாப் போதுமா? கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்றேனே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

      வெரிகுட்! இப்படியே ப்ராக்டீஸ் பண்ணினீங்கன்னா, ஈஸியா பிக்-அப் பண்ணிடுவீங்க!

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

      இத பாருங்க, அப்படித் தப்பித்தவறி நீங்க டெல்லி போறதா இருந்தா, கிளம்புறதுக்கு முன்னாடி ஒருவாட்டி ஷாப்பிங் போயிட்டு வரணும். சரியா?

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Wednesday, June 27, 2012

வைகுண்டத்தில் வையாபுரி


வைகுண்டத்தின் வாசலையடைந்த வையாபுரி, பீக்-அவரில் காலியாக வந்த மகளிர் ஸ்பெஷல் பஸ்ஸைப் பார்த்ததுபோலத் திடுக்கிட்டான்.

      நரனே, யார் நீ? எமலோகத்திலிருந்து எஸ்கேப் ஆகி வந்து விட்டாயா?என்று வினவினார் துவாரபாலகர்.

      என் பேரு வையாபுரி! மகாவிஷ்ணுவைப் பார்க்குறதுக்காக வந்திருக்கேனய்யா,என்று அறிமுகப்படுத்திக் கொண்ட வையாபுரி, “அது சரி, நான் பார்த்த படத்துலே எல்லாம் வைகுண்டம்னா ஒரே புகைமண்டலமா இருக்குமே? இப்போ நீங்களும் மைக்ரோ-வேவ் ஓவனுக்கு மாறிட்டீங்களா? புகையே காணோம்?

      அற்பமானிடா! எங்குவந்து என்ன பேசிக்கொண்டிருக்கிறாய்? எங்கள் பரந்தாமனின் சக்கராயுதம் கிளம்பினால் உன் கழுத்தை வெள்ளரிப்பிஞ்சு போல நறுக்கிவிடும்! என்று உறுமினார் இன்னொரு துவாரபாலகர்.

      அடப்போய்யா, நானே சகுனி படம் பார்த்துட்டுத்தான் வைகுண்டத்துக்கே வந்திருக்கேன். உங்க சக்ராயுதம் என்னை என்ன பண்ணிடும்?

      என்ன கூச்சல் இங்கே?என்று கேட்டபடி, சங்குசக்ரகதாபாணியாக வெளியே வந்தார் மகாவிஷ்ணு.

      ஆஹா! மகாவிஷ்ணுவா?என்று அவர் காலில் விழுந்து எழுந்து கும்பிடு போட்டான் வையாபுரி. “சாமி, கர்ணன் படத்துலே வந்த என்.டி.ராமராவ் மாதிரியே இருக்கீங்க! என் பேரு வையாபுரி! இந்த உலகத்துலேயே என்னை மாதிரி உங்களுக்கு ஒரு பக்தன் இருக்க முடியாது. என்னைப் போயி எமலோகத்துக்குப் போகச்சொல்றாங்களே! இது நியாயமா?

      பக்தா! எதை வைத்து நீ தான் சிறந்த பக்தன் என்று சொல்கிறாய்?என்று கேட்டார் பகவான்.

      இன்னா அப்படிக் கேட்டுட்டே? பூலோகத்துலே நான் பினாமி பேருலே நடத்திட்டிருக்கேனே அந்தக் காலேஜுக்கு திருமால் கல்லூரின்னுதான் பேரு வைச்சிருக்கேன்! அப்புறம் என்னோட கந்துவட்டிக் கடைக்குப் பேரு கூட கோவிந்தா அண்ட் சன்ஸ்! மணல் திருடுற லாரியிலே கூட ‘ நமோ நாராயணான்னுதான் எழுதியிருக்கேன்! இவ்வளவு ஏன், என் பொஞ்சாதிக்குத் தெரியாம வைச்சிருக்கேனே ஒரு சின்ன வீடு, அதுக்குக் கூட கிருஷ்ண விலாசம்னுதான் பேரு வச்சிருக்கேன்!

      அட மானிடா! என் பெயரைச் சொல்லி செய்யக்கூடாத செயல் அனைத்தும் செய்து கொண்டிருக்கிறாயே?என்று சினந்தார் பகவான்.

      உருப்படியா உழைக்கிறவனுக்கு பகவானெல்லாம் எதுக்கு சாமி? இந்த மாதிரி டகால்டி வேலைக்குத்தான் சாமி பேரையோ, ஆசாமி பேரையோ சொல்லி எல்லாரும் பொழைப்பு நடத்திட்டிருக்கோம்!

      சரியப்பா,என்று சலித்துக் கொண்டார் பகவான். “ நீ சொல்வதுபோல உண்மையிலேயே நீதான் சிறந்த பக்தன் என்றால் அதை நிரூபிப்பாயா? எனது சோதனையை ஏற்றுக்கொள்வாயா?

      சொல்லுங்க சாமி! இன்னா பண்ணனும்? சிறை நிரப்பணுமா? உண்ணாவிரதம் இருக்கணுமா? தீக்குளிக்கணுமா? எவனையாவது போட்டுத் தள்ளணுமா? கட்டளையிடு தலைவா, கபால்னு புடிச்சுக்கிறேன்.

      அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்!என்று பகவான் கையை நீட்டவும், அவரது கையில் ஒரு கிண்ணம் நிறைய எண்ணை தோன்றியது.

      மானிடனே! இந்தக் கிண்ணத்தைக் கையில் ஏந்திக்கொண்டு வைகுண்டத்தை ஒரு முறை வலம்வர வேண்டும். ஒரு துளி எண்ணை கூட கீழே சிந்தக்கூடாது. சரியா?

      சர்தான் தலீவா, கொடு!என்று வாங்கிக் கொண்டு வையாபுரி வைகுண்டத்தை வலம்வரத் தொடங்கினான். சற்று நேரத்தில்....

      நாராயண.... நாராயண...!என்று உச்சரித்தபடி வந்தார் நாரதர்.

      வா நாரதா! பார்த்து வெகு நாளாகிவிட்டதே!

      அதையேன் கேட்கிறீர்கள் பிரபோ? பூலோகம் சென்றிருந்தேன்! தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு! சூரியபகவான் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறார்! தங்கும் விடுதியில் ஒரே புழுக்கமாய் இருந்தது. அங்கிருந்த உழியரை அழைத்து, ‘ஒரே புழுக்கமாயிருக்கிறது. கதவைத் திறங்கள்; காற்று வரட்டும்,என்று யதார்த்தமாகச் சொன்னேன். அடுத்த கணமே காவல்துறை வந்து குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.என்று புலம்பினார் நாரதர்.

      என்ன கொடுமையிது? வரவர வாயைத் திறந்தாலே வம்பாகி விடும் போலிருக்கிறதே?என்று அலுத்துக் கொண்டார் பகவான்.

      என் கதையிருக்கட்டும்! எமலோகத்திலிருந்து ஒரு நரன் தப்பித்து வைகுண்டம் வந்து விட்டானாமே? யார் அவன்?என்று வினவினார் நாரதர்.

      யாரோ வையாபுரியாம்!

      என்னது? வையாபுரியா?அதிர்ந்தார் நாரதர். “அவன் எங்கே?

      ஏன் பதறுகிறாய் நாரதா? தன்னை சிறந்த பக்தன் என்று கூறினான். நானும் முன்பொரு முறை உன்னைச் சோதித்ததுபோலவே, ஒரு கிண்ணம் எண்ணை கொடுத்து வைகுண்டத்தை வலம்வரச் சொல்லியிருக்கிறேன்.

      காரியத்தைக் கெடுத்தீர்கள் போங்கள்! அவனை எண்ணைக்கொப்பரையில் போட்டு வறுத்து தண்டிப்பதை விட்டுவிட்டு, அவன் கையில் எண்ணையையா கொடுத்தீர்கள்? அவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருப்பானோ தெரியவில்லையே!”

       நாரதர் பதறியபடியே ஓட, பகவானும் வேறு வழியின்றிப் பின்தொடர்ந்தார். சிறிது தூரம் சென்றதும் இருவரும் அதிர்ந்து போய் நின்றார்கள்.

      கோபால் எண்ணை மண்டிஎன்று ஒரு போர்டு மாட்டப்பட்டிருக்க, அதில் கல்லாவில் வையாபுரி உட்கார்ந்திருந்தான்.

      என்ன துணிச்சல் இந்த மானிடனுக்கு? வைகுண்டத்திலேயே வந்து வியாபாரம் ஆரம்பித்து விட்டானே?என்று பொரிந்தார் நாரதர்.

      நாரதா, இவனுக்கு நான் ஒரு கிண்ணம் எண்ணை தானே கொடுத்தேன்? அதை வைத்துக் கொண்டு அவன் இத்தனை பெரிய கடையை எப்படி உருவாக்கினான்?குழம்பினார் பகவான்.

      சரிதான்! பூலோகவாசிகளால்தான் இவன் போன்றவர்கள் எப்படி வளர்ச்சியடைகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பரந்தாமன் உங்களுக்குமா புரியவில்லை?

      இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த வையாபுரி, கையை உற்சாகமாக அசைத்தான்.

      ஹலோ விஷ்ணு! ஹாய் மிஸ்டர் நாரதர்! வாங்க சார்! நல்ல நயம் எண்ணை சார்! வாங்கிட்டுப் போய் வீட்டுக்காரிகிட்டே கொடுங்க சார்! பஜ்ஜி போட்டா சூப்பராயிருக்கும்!

      நாராயணா! நாராயணா!என்று தலையிலடித்துக் கொண்டார் நாரதர். நாராயணன் வந்தவழியே வைகுண்டத்தைப் பார்த்து ஓடிக்கொண்டிருந்தார்.

(டிஸ்கி: இதைப் படிச்சுப்போட்டு, ‘ஆஹா, சேட்டை கடவுளை நக்கல் பண்ணிட்டான்ன்னு சண்டைக்கு வராதீக அப்பு! சாமி பேரைச் சொல்லிக்கிட்டுத் திரியுற பல பயலுவ பண்ணுற சலம்பலுக்கு முன்னாடி, என்னோட ஒரு இடுகையெல்லாம் வெறும் ஜூஜூபி!)

Sunday, June 17, 2012

விஜய் டி.வி.க்கு என்னால் ஒரு கோடி லாபம்!-03


எஸ்.ஆர்.எம்.ஹோட்டலை நெருங்கும்வரைக்கும் காலிஃப்ளவரைப் போல மலர்ந்திருந்த எங்களது முகம், உள்ளே நுழைந்த அடுத்த வினாடியே கருவாடு போலச் சுருங்கிப் போனது. அட்வான்ஸ் புக்கிங் செய்யாமல் ஆல்பர்ட் தியேட்டருக்கு ரஜினி படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்க்கப்போனது போல, அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் மலைத்துப் போய் விட்டோம். சல்வார் தொடங்கி மடிசார் வரை, வாலிபம் தொடங்கி வழுக்கைத்தலை வரை, டீன்ஏஜ் தொடங்கி கூன்ஏஜ் வரை கும்பகோணம் அடுக்கு மாதிரி தினுசுவாரியாய், சைசுவாரியாய், மானாவாரியாய் கூட்டம் நின்று கொண்டிருந்தது.

       நாமெல்லாம் ஒண்டியா வந்திருக்கோம். இங்கே வண்டி வண்டியா வந்திருக்காங்களேய்யா!என்று புலம்பினார் உடன்வந்த ஒருவர்.

       டோண்ட் வொர்ரி, செண்ட்ரல் ஸ்டேஷனிலே ஊருக்குப் போக ஒருத்தர் போனா, வழியனுப்ப பத்து பேரு வர்றதில்லையா? அதுமாதிரி, பாதிப்பேரு கூட வந்தவங்களா இருப்பாங்க,என்று இன்னொருவர் சொல்லி, எங்கள் வயிற்றில் பாலை டிக்காஷனும், சர்க்கரையும் கலந்து வார்த்தார். அவர் சொன்னது சரிதான் என்று விரைவிலேயே தெரிந்தது. தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர, பிறர் ஹோட்டலின் வெளியிலேயே காத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டார்கள். ஹோட்டலின் செக்யூரிட்டி நடையாய் நடந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

       கண்டம்ஸ் மட்டும் நில்லுங்க! மத்தவங்க தள்ளிப் போய் உட்காருங்க!

       ஐயா செக்யூரிட்டி,என்று அழைத்து விளக்கினேன். “கண்டம்ஸ் இல்லை; கண்டெஸ்டண்ட்-ன்னு சொல்லுங்க! செலக்ட் ஆகலேன்னா நாங்களே Condemn-ஆகிருவோம். முதல்லேயே சொல்லி வயத்துலே புளியைக் கரைச்சு ஈயச்சொம்புலே கொதிக்க வைக்காதீங்க! (மனதுக்குள் ‘ நல்ல வேளை, கண்டம்ஸ் என்று சொன்னார். கானாவுக்குப் பதிலாக, காவன்னா சொல்லித் தொலைத்திருந்தால், காஜாமலையில் ஒரு கலவரமே ஏற்பட்டிருக்கும்என்று எண்ணிக் கொண்டேன்.)

       ஆடிஷனுக்காக வந்திருந்தவர்களை அகரவரிசையில் நாலைந்தாகப் பிரித்து நிற்க வைத்திருந்தார்கள். வரிசை மெல்ல நகர ஆரம்பித்ததும், திருப்பதியில் தர்மதரிசனத்துக்கு நிற்கிற ஞாபகத்தில், நான் ‘கோவிந்தா கோவிந்தாஎன்று கொஞ்சம் உரக்கச் சொல்லவும், கோடீஸ்வரராக வந்தவர்கள் அனைவரும் என்னைப் பார்த்துப் பசுபதியைப் போல முறைத்தனர்.

       வரிசையில் நின்றபோதுதான் கவனித்தேன். ஒருவர் கையில் காம்பெட்டிஷன் சக்சஸ் என்றால் இன்னொருவர் கையில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை கைடு! ஒருவர் கையில் ஐ.ஏ.எஸ். எண்ட்ரன்ஸ் புத்தகம் என்றால் இன்னொருவர் கையில் ஐ.ஐ.டி. எண்ட்ரன்ஸ்! ஆளாளுக்குப் பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி தலையிலடித்து அடித்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். (அவரவர் தலையில் தான்!)

       நீங்க புக் ஒண்ணும் கொண்டுவரலியா சார்?என்று என்னைக் கேட்டார் ஒருவர்.

       ஓ!என்று சொல்லியபடி, சட்டைப்பையிலிருந்து சினிக்கூத்துஎடுத்து வாசித்தேன்.

       இன்னொருவரோ “காக்க காக்க...கனகவேல் காக்க...தாக்க தாக்க...தடையறத் தாக்க... “ என்று பக்திப்பரவசத்துடன் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தவர், திடீரென்று கண்விழித்து, “அடடா, மறந்துட்டேனே, ஏன் சார்? தடையறத் தாக்க-வுக்கு அப்புறம் என்ன வரும்?என்று வினவினார்.

       தடையறத் தாக்க-வுக்கு அப்புறமா சகுனி, பில்லா-II வரும்னுதான் பேசிக்கிறாங்க!என்று நான் பதிலளித்ததும், அத்திப்பூக்கள் சீரியலில் வரும் வில்லியைப் போல என்னை முறைத்துப் பார்த்தார்.

       நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிநிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களைச் சும்மாச் சொல்லக் கூடாது. கொஞ்சம் கூட குழப்பம் ஏற்படாதவாறு ஏற்பாடுகளை படு பக்காவாகச் செய்திருந்தார்கள். முதலில் ஒரு மேஜைக்குச் சென்று, பெயரையும் ஊரையும் சொன்னதும், அச்சிடப்பட்ட பட்டியலைச் சரிபார்த்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறியீட்டு எண்ணைச் சொன்னார்கள். அந்த எண்களையும் 1-100, 101-200, 201-300 என்று இன்னொரு இடத்தில் வரிசையாக நிற்கவைத்து, வந்த ஒவ்வொருவரின் அடையாள ஆதாரங்களையும் சரிபார்த்து ஆளுக்கு ஒரு கவரைக் கையில் கொடுத்தார்கள். பையை வாங்கியதும், ஹோட்டலின் வலது பக்கத்தில் இருந்த அரங்கத்துக்குச் செல்லச் சொன்னார்கள். அரங்கத்தின் வாசலில், வருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு பரீட்சை அட்டையும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள். (மிக்ஸிங் பண்ணவும், சைட்-டிஷாகவும் ஏதாவது தந்திருக்கலாம் தான்!) எல்லாவற்றையும் வாங்கி உள்ளே நுழைந்ததும், உள்ளே மலையாள பாணியில் வெளிர்மஞ்சள் புடவையுடன் நின்றிருந்த பெண்கள் உட்கார வைத்தனர். ஏறக்குறைய நானூறு பேர் உட்கார்ந்தவுடன், முன்னால் வைக்கப்பட்டிருந்த திரையில், ஒரு காணொளி காட்டப்பட, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பல சின்னத்திரைகளிலும் அதே காணொளியைக் காண முடிந்தது.

       ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கவருக்குள் ஏழு படிவங்கள் இருந்தன. ஒவ்வொரு படிவத்தையும் எப்படி நிரப்புவது என்று ஒரு இளம்பெண் மிகப் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். போட்டோ ஒட்டுவதற்குக் கூட, பசையைக் குழப்பமில்லாமல் வினியோகித்தார்கள். (எனக்கு சல்லிக்காசு கிடைக்காவிட்டாலும், அவ்வ்வ்வ்வ்வ்......), இவ்வளவு துல்லியமாய், இத்தனை பேர்களைத் திறமையாகச் சமாளித்த அந்தக்குழுவினரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

       அடுத்து, பரீட்சை! பத்து கேள்விகள்! பெரும்பாலானவை ஓரளவு சுலபமாகவே இருந்தபோதிலும், ஒரே ஒரு கேள்வியில் போட்டாங்கய்யா கூக்ளி! அது, ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் யார்?’. இந்தக் கேள்விக்கு அம்மாவாலேயே பதில் சொல்ல முடியாதே சாமீ! எம்புட்டு வாட்டி மாத்திட்டாய்ங்க!

       எப்படியோ, பரீட்சை எழுதி முடித்தபோது மணி பன்னிரெண்டாகி விட்டது. ( அரங்கத்துக்குள் ஏ.சி.இருந்ததோ தப்பித்தோமோ? என்ன வெயிலய்யா திருச்சி வெயில்!)

       அடுத்து நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆடிஷன்!என்றார் நிகழ்ச்சி இயக்குனர். அப்பாடா, சீக்கிரம் முடிந்தால், திருவரங்கனையோ, சமயபுரம் அம்மனையோ தரிசித்துவிட்டு, ராத்திரி பஸ் பிடித்து சென்னை திரும்பி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே....

       முதலில் பெண்களுக்கு முன்னுரிமை. அப்புறம் ஐம்பத்தி ஐந்து வயதானோருக்கு முன்னுரிமை. மீதமுள்ளவர்கள் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள். ஆகவே, மற்றவர்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்.என்று அவர்கள் சொல்லி வாய்மூடுவதற்குள், நான் வெளியே ஓடிவந்து, பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடிச் செல்லப் பரபரத்தேன். ஏழுமணிக்கு ஹோட்டலில் இருக்க வேண்டும் என்று சொன்னதால், ஆறு மணிக்கு ஒரு காபி குடித்ததோடு சரி. பசி வயிற்றைக் கிள்ளியது என்று சொல்வார்களே, இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால், என்னுடைய பசி பக்கத்திலிருந்தவரின் வயிற்றையும் கிள்ளியிருக்கும்.

                பொதுவாக ஹோட்டல்களில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதை விரும்பாத நான், அன்று ஸ்பெஷல் மீல்ஸ், எக்ஸ்ட்ரா அப்பளம், எக்ஸ்ட்ரா தயிரோடு ஒரு வெட்டு வெட்டிவிட்டு, வாசலில் கிடைத்த பனாரஸ் பானையும் மென்றுவிட்டு, மீண்டும் பஸ் பிடித்து எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் சென்றடைந்தேன். அரங்கத்துக்குள் நுழைந்து, ஏசியின் சுகத்தில் காலை நீட்டி அமர்ந்து உறங்கியே போனேன். கனவு வந்ததா என்றுதானே கேட்கிறீர்கள்? ஹிஹி! உங்களுக்குத் தெரியாதா என் கனவின் லட்சணத்தைப் பற்றி?

       ஏறத்தாழ மூன்று மணிக்கெல்ல்லாம் அரங்கம் முகூர்த்தம் முடிந்த கல்யாண மண்டபம் போல கந்தர்கோளமாகியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் ஆடிஷனுக்குப் போயிருக்கவே, பலர் ஒரு நாற்காலியில் தலையும், இன்னொரு நாற்காலியில் காலும் வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் காப்பி, டீ சாப்பிடலாமென்றால், விலையைக் கேட்டதும் தலை சுற்றியதில் என் முதுகை என்னாலேயே பார்க்க முடிந்தது. அக்கம்பக்கத்தில் டீக்கடை வேறு இல்லையா, இருந்த கொஞ்ச நஞ்ச மூளையும் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் பசுமாடு போல மண்டையோட்டுக்குள் மல்லாந்துவிட்டது. ஆனால், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு ஃப்ளாஸ்க் மேல் ஃப்ளாஸ்காக டீ போய் வந்து கொண்டிருக்கவே, அவர்களில் ஒரு பெண் பக்கத்தில் வந்ததும் நிறுத்தினேன்.

       சிஸ்டர், டீ குடிக்கிறதுதான் குடிக்கறீங்க. கொஞ்சம் அந்த ஸ்க்ரீனுக்குப் பின்னாலே போய் குடியுங்களேன்! நாங்கல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர் டீ குடிக்கிற ஆசாமிங்க! கொடுக்காமக் குடிக்கிறதை விட பெரிய பாவம், மத்தவங்க பார்க்கக் குடிக்கிறது. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க,என்று சொன்னதும், அந்தப் பெண் தாயுள்ளத்தோடு என்னைப் பார்த்தார். அங்கிருந்து நகர்ந்து போனவர், நிகழ்ச்சிக் குழுவினரிடம் எதையோ சொல்ல, ஓரிருவர் எழுந்து பார்த்தார்கள்.

       ’அவ்வளவுதான், ஒரு டீக்கு ஆசைப்பட்டு, கோடி ரூபாயைக் கோட்டை விடப்போறோம்,என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே, மீண்டும் ஃப்ளாஸ்க் வர ஆரம்பித்தது. இம்முறை கூடவே ஏகப்பட்ட டிஸ்போஸபிள் தம்ளரும் வர, அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் அவுன்ஸ் டீ வழங்கப்பட்டது. மாடர்ன் டிரஸில் நின்றிருந்த அந்த மதர் தெரஸாவுக்கு நான் இங்கிருந்தே ஒரு கும்பிடு போட, என் புண்ணியத்தில் டீ குடித்த பலர் என்னை எஜமான் ரஜினியைப் பார்ப்பது போலப் பார்த்துப் பார்வையாலேயே நன்றியைத் தெரிவித்தனர்.

       ஐந்து ஐந்து பேர்களாக ஆடிஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒவ்வொருத்தருக்கும் தலா இருபதிலிருந்து அரை மணி நேரம். மொத்தம் ஐந்து ஸ்டூடியோக்கள்! மொத்தம்  நானூறு கண்டம்ஸ், அதாவது கண்டெஸ்டண்ட்ஸ்! எவ்வளவு நேரம் ஆகுமென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால், வேலை வெட்டியில்லாதவர்கள் கணக்குப் போட்டுப் பாருங்கள். நானும் இன்னும் நால்வரும் இறுதியாக அரங்கத்தை விட்டுக் கிளம்பியபோது மணி மாலை ஆறு! ஒவ்வொரு ஸ்டூடியோ வாசலிலும் பத்துப் பேர் ஏற்கனவே காத்திருந்தனர்.

       ஸ்ரீரங்கமாவது, சமயபுரமாவது! நள்ளிரவுக்குள் திருச்சியிலிருந்து கிளம்ப முடிந்தாலே பெரிய விஷயம் என்றாகி விட்டது. ஒவ்வொரு ஸ்டூடியோ வாசலிலும், பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் புருசனைப்போல எல்லாரும் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

       கடைசியாக நான் ஆடிஷனுக்கு உள்ளே போனபோது, மணி எட்டே கால்! போனவுடன் முன்னாலே ஒரு மைக்கை வைத்தார்கள். காமிரா ஓடிக் கொண்டிருக்க, இரண்டு பேர் என்னிடம் இயல்பாகப் பேச்சுக் கொடுத்தார்கள். என்னைப் பற்றி விசாரித்தார்கள். பேச்சுவாக்கில் நான் சேட்டைக்காரன் என்ற பெயரில் ஒரு பிளாக் எழுதிவருவதைச் சொன்னதும், இருவரின் முகமும் கடுக்காய் சாப்பிட்டதுபோல மாறியதைக் கண்டுபிடித்தேன். இருபது நிமிடங்கள் பேச்சு முடிந்ததும், ‘ தேங்க் யூஎன்று அவர்கள் சொன்னதுமே, ‘போதும் சாமீ, நடையைக் கட்டு,என்று சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வெளியே வந்தேன்.

       டிபனைச் சாப்பிட்டுவிட்டு, சென்னைக்குப் பஸ்பிடித்து, ஜன்னலோரம் உட்கார்ந்ததும், அன்று நடந்ததெல்லாம் கனவு போலிருந்தது.  நான் தேர்வு செய்யப்படாதது குறையாக இருந்தாலும், அந்த அனுபவம் நன்றாகத் தான் இருந்தது. பாருங்களேன், அதை வைத்து மூன்று மொக்கைகளை எழுதினேனா இல்லையா?

       எப்படியும் ஒருவராவது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில், ஒரு கோடி வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை! அப்படி வெல்பவரை ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் ஜெயித்தார் என்று சொன்னால், என்னால் ஏற்க முடியாது. காரணம், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைத் தேர்ந்தெடுக்கிற முறையை அனுபவத்தில் பார்த்ததால், இறுதியாக சூர்யாவுக்கு முன்போய் நிற்பவர்கள் அனைவருமே தகுதியுடையவர்கள் என்பதே எனது கருத்து.

       அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! விஜய் டி.வி.க்கு எனது நன்றிகள்!

       சூர்யாவைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? ஹும், நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! J

Wednesday, June 13, 2012

விஜய் டி.வி.க்கு என்னால் ஒரு கோடி லாபம்!-02


எழுமணிக்கெல்லாம் எஸ்.ஆர்.எம்.ஹோட்டலுக்குள் நுழைய வேண்டுமென்பதால், ஆறு மணிக்கெல்லாம் டிப்-டாப்பாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள் வந்துபோகும் இடத்தில் போய் நின்றாகி விட்டது.

     எக்ஸ்கியூஸ் மீ சார், காஜாமலைக்கு எந்த பஸ் போகும்?

     யாரோ தோளைச் சுரண்டிக் கேட்கவே திரும்பிப் பார்த்தேன்.

     நீங்க சென்னையா?

     எப்படி ஸார் கண்டுபிடிச்சீங்க? அவருக்கு ஆச்சரியம்!

     காலையிலே ஆறுமணிக்கு தலையிலே அடிடாஸ் தொப்பியைப் போட்டுக்கினு, பாடி-ஸ்ப்ரே பூசிக்கினு நிக்கிறீங்களே?

     ஹிஹிஹி! நீங்களும் சென்னையா ஸார்?

     எப்படிக் கண்டுபிடிச்சீங்க?எனக்கு ஆச்சரியம்.

     கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம, சம்பந்தா சம்பந்தமில்லாமப் பேசறீங்களே? அதை வைச்சுக் கேட்டேன்.

     இதற்கு மேல் சென்னையின் மானத்தை, திருச்சியில் வாங்க விரும்பாமல் வினவினேன்.

     “தம்பி, நானும் காஜாமலைக்குத் தான் போகணும். நீங்க விஜய் டி.வி. புரோகிராம் ஆடிஷனுக்கா வந்திருக்கீங்க?

     ஆமா சார், நீங்க...?

     பயப்படாதீங்க! நான் ஒண்ணும் சூர்யா இல்லை. நானும் உங்களை மாதிரி ஆடிஷனுக்குத்தான் வந்திருக்கேன்.

     க்ளாட் டு மீட் யூ சார்!என்று நாங்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோதே, ஒரு பேருந்து வர ஏறிக்கொண்டோம். எங்களுக்குப் பின்னால் இன்னும் சில அடிடாஸ் தொப்பிகளும் பாடி ஸ்ப்ரேக்களும் ஏறிக்கொள்ள, டிரைவரும் கண்டக்டரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

     எங்கே சார் போகணும்?

     காஜாமலை!

     இது போகாது சார், மன்னாபுரம் நாலுரோட்டுக்கு அடுத்த ஸ்டாப்புலே இறங்கிக்கோங்க! அப்படியே நடந்து போனா காஜாமலை வந்திரும்!

     அதுவே வரும்போது நாங்க எதுக்கு நடக்கணும்?என்று கேட்க ஆசைதான். ஆனால், ஒரு பாவமும் அறியாத ஒரு திருச்சி கண்டக்டருக்கு அதிகாலையிலேயே கொலைவெறியை ஏற்படுத்த விரும்பாமல் பேசாமலிருந்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது, சென்னையிலிருந்து படையெடுத்து வந்திருந்த பலர் முதுகில் ஒரு பெரிய ஏர்-பேகைச் சுமந்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை, ஒரு கோடியையும் சில்லறையாகக் கொடுத்துவிடுவார்களோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

     ஒரு வழியாக பஸ் ஸ்டாப்பில் இறங்கியதும், நாலாபுறமும் பொட்டல்காடாக இருந்தது.

     என்னையா இது? ஒரு கோடிக்காக ஊருவிட்டு ஊருவந்தா, ஊர்க்கோடியிலே இறக்கி விட்டுட்டாங்க போலிருக்கே?

     யோசித்துக் கொண்டிருக்கும்போதே, குஜராத்தி பாணியில் புடவையணிந்தபடி ஒரு பெண்மணி எதிர்ப்பட்டார்.

     எக்ஸ்கியூஸ் மீ!உடன்வந்த ஒரு இளைஞர் துணிச்சலாக அந்தப் பெண்ணிடம் விசாரித்தார். “வேர் இஸ் காஜாமலை? எஸ்.ஆர்.எம்.ஹோட்டல்...?

     நோ இங்கிலீஷ்! நோ டமில்!என்றாள் அந்தப் பெண்மணி.

     இருங்க, நான் பெங்காளியிலே கேட்கறேன்,என்று முன்வந்தேன் நான்.

     ஹலோ சார், அவங்க குஜராத்தி; அவங்களுக்கு பெங்காளி தெரியாது.என்றார் ஒருவர்.

     அதுனாலேன்ன? எனக்கும்தான் பெங்காளி தெரியாது.என்றேன் நான்.

     அந்த நேரம் பார்த்து ஒருவர் வேப்பங்குச்சியால் பல்விளக்கியபடியே வந்தார்.

     சார், காஜாமலை எஸ்.ஆர்.எம்.ஹோட்டலுக்கு எப்படி சார் போகணும்?

     இதே ரோட்டுலே நடந்திட்டேயிருங்க... ஒரு அரை மணி நேரம் நடந்தீங்கன்னா.....

     கால்வலி வந்திரும்..என்று முனகியபடி நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் உதிரி உதிரியாகப் பலர் கையில் பையுடன் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தார்கள்.

     எல்லாருமே நம்மளை மாதிரி கோடீஸ்வரங்களாகப் போறவங்க போலிருக்கு,என்று ஒருவர் சொல்லவும், இன்னொருவர் உரக்க, “ஹலோ, வாங்க சார், எல்லாரும் சேர்ந்தே போகலாம். வருங்கால கோடீஸ்வரர்கள் திருச்சியில் ஊர்வலம்னு பேப்பர்லே நியூஸ் போடுவாங்க!என்று கலகலப்பூட்டவும், ஏறக்குறைய பதினைந்து பேர் கும்பலாக எஸ்.ஆர்.எம்.ஹோட்டலை நோக்கி நடக்கவும், தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒருவிதமாகப் பார்க்க ஆரம்பித்தனர்.

     ஏறக்குறைய அரை மணி நேரம் நடந்திருப்போம்.

     என்னய்யா இது? இன்னும் கொஞ்சம் நடந்தா தஞ்சாவூர் வந்திரும் போலிருக்கே?என்று புலம்பிக்கொண்டிருக்கும்போதே, தூரத்தில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் என்று ஒரு உயர்ந்த கட்டிடம் தென்பட்டது.

     அதோ! அதோ!என்று நான் உற்சாகமிகுதியில் கத்தியபடி, கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

     சார், அது என்ன ஸ்ரீரங்கம் ராஜகோபுரமா? எதுக்கு சார் கன்னத்துலே போட்டுக்கறீங்க? என்று ஒருவர் நக்கலடித்தார்.

     ஒருவழியாக, எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் வளாகத்துக்குள் நுழைந்ததும்....அனைவரும் விக்கித்துப்போய் நின்று விட்டோம்.

     ஏறக்குறைய ஆயிரம் பேர்கள், விஜய் டி.வி பேனர்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய வெளியில், நான்கு வரிசைகளில் நின்று கொண்டிருந்தனர். கண்ணுக்கெட்டிய திசையெல்லாம் சூர்யா கைகட்டிக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ஃப்ளக்ஸில்!

(தொடரும்)