Thursday, January 28, 2010

என்ன வெளாடறாங்களா?

இப்படியெல்லாம் மனுசங்க ஏன் பேசறாங்கன்னு சொல்லுங்கய்யா!

"திருமணங்கள் சொர்க்கத்துலே நிச்சயிக்கப்படுது,"ங்கறீங்க! அப்புறம் எதுக்கையா நங்கநல்லூர் நாராயணசாமி வீட்டு முன்னாலே ஜாதகத்தைத் தூக்கிட்டுப்போயி, தர்மாஸ்பத்திரியிலே டோக்கன் வாங்க நிக்குறா மாதிரி நிக்குறீங்க? வெளாடுறீங்களா?

இது மட்டுமில்லேண்ணே! எதையாவது அழுத்தம் திருத்தமாச் சொல்லணுமுண்ணா உடனே ஏதாவது பழமொழியை அவிழ்த்து விட்டுற வேண்டியது.

"கூரையேறி கோழி பிடிக்கமுடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்."

சரி, அந்தாளு ஏன் வைகுண்டம் போனான்னு யாராவது யோசிச்சீங்களாய்யா? கோழி புடிக்குறதுக்காகக் கூரை மேலே ஏறி குப்புற விழுந்தா நேரா வைகுண்டம் போகாம வேறே எங்கய்யா போவான்?

"அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பான்னு கூப்பிடலாம்."

எங்க சித்தப்பாவுக்கு மீசையே கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு வேளை குளிக்காரு; மூணு வேளை திங்காரு; நாலு வேளை சவரம் பண்ணுதாரு! அவரை அத்தைன்னு கூப்பிடவா முடியும்? கோட்டித்தனமால்லே இருக்கு?

"வித்தாரக்கள்ளி வெறகெடுக்கப்போனாளாம்; கத்தாழை முள்ளு கொத்தோட தைச்சுதாம்."

ஒரு ஹவாய் சப்பல் வாங்கிக் கொடுத்திருந்தா கத்தாழை முள்ளு கொத்தோட தைக்குமாங்கேன்?

சரி பழமொழி தான் பாட்டன் ஊட்டன் சொல்லிக்கொடுத்ததுன்னா, இவுங்களா ஏதேதோ பேசி உசிரை எடுக்குறாங்க!

"நீ தலைகீழா நின்னாலும் நினைக்கிறது நடக்காது."

தலைகீழா நின்னா அவனே முதல்லே நடக்க முடியாது; அப்புறம் அவன் நினைக்கிறது எங்கய்யா நடக்குறது?

"உன்னைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டாரு,"

என்னமோ கடவுள் தெனமும் இவங்க கிட்டே வந்து யாரை மன்னிக்கணும், யாரை மன்னிக்கக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டு அவரோட ஐ-போட்லே குறிச்சிட்டுப்போயி மேலேருந்து ஆர்டரைக் கொரியர்லே அனுப்புறா மாதிரியில்லே பேசுதாக?

"துண்டு துண்டா வெட்டுனாலும் நீ சொல்றதை நான் செய்ய மாட்டேன்."

இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்! துண்டு துண்டா வெட்டுனா அப்புறம் இவங்களாலே என்ன செய்யமுடியும்? இவங்களையே ஒரு கூடையிலே அள்ளியெடுத்துக்கிட்டுத் தான் போகணும்.

இனிமேலாவது இப்படியெல்லாம் பேசாதீங்க! எதைச் சொன்னாலும் பொருத்தமாச் சொல்லுங்க! என்னை மாதிரி எப்படிப் பேசுறதுன்னு கத்துக்குங்க! இந்த மாதிரியெல்லாம் நான் பேசுவேன்னா நினைக்கறீங்க? அது தான் இல்லை!

"உயிரே போனாலும்" இந்த மாதிரியெல்லாம் நான் பேச மாட்டேன். சொல்லிப்புட்டேன்.

10 comments:

MyFriend said...

”பழமொழி சொன்னா ரசிக்கணும்.. ஆராயக்கூடாது”-ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே.. அதுக்கு என்ன சொல்றீங்க? :-)

settaikkaran said...

//பழமொழி சொன்னா ரசிக்கணும்.. ஆராயக்கூடாது”-ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே.. அதுக்கு என்ன சொல்றீங்க? :-)//

இப்படியெல்லாம் வேறே சொல்லியிருக்காங்களா? அதுக்கு இன்னொரு பதிவு எழுதிட்டாப் போச்சு!வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க!

Yoganathan.N said...

//"உயிரே போனாலும்" இந்த மாதிரியெல்லாம் நான் பேச மாட்டேன். சொல்லிப்புட்டேன்.//

உயிரே போச்சு... அப்புரம் எப்படி பேசுவீங்க??? ஹிஹிஹி

Nice write-up. Enjoyed reading.

hiuhiuw said...

வாழ்த்துகள்

settaikkaran said...

//உயிரே போச்சு... அப்புரம் எப்படி பேசுவீங்க??? ஹிஹிஹி

Nice write-up. Enjoyed reading.//

பார்த்தீங்களா, இவங்களோட பேசிப்பேசி எனக்கும் வந்துருச்சு!:-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

கட்டபொம்மன் said...

போட்டுத் தாக்கியிருக்கீங்க ...

கட்டபொம்மன் said...

நல்ல தகவல் சொல்லி மன்னனை காப்பாத்தியதற்கு வெகுமதிகள் உண்டு .

வாழ்க வளமுடன் .

settaikkaran said...

//வாழ்த்துகள்//

நன்றி ராஜன்!!!

settaikkaran said...

//போட்டுத் தாக்கியிருக்கீங்க ...//

நன்றிங்க, கட்டப்பொம்மன்!

settaikkaran said...

//நல்ல தகவல் சொல்லி மன்னனை காப்பாத்தியதற்கு வெகுமதிகள் உண்டு .

வாழ்க வளமுடன் //

ஆஹா! தலைகீழாத் தொங்கவிட்டு மூக்குப்பொடியைத் தூவிர மாட்டீங்களே, கட்டப்பொம்மண்ணே!