Wednesday, March 30, 2011

சேட்டை டிவியின் கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை கி.பி.17-ம் நூற்றாண்டுமுதலாகவே துல்லியமாகச் சொல்லி வரும் தொலைக்காட்சி உங்கள் சேட்டை டிவி!

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 2011 ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சேட்டை டிவி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதன் முடிவுகளை, பொருத்தமாக ஏப்ரல் 1 அன்று வெளியிடலாம் என்று எண்ணியிருந்தபோதும், தினசரி தமிழகத்தின் அரசியல்கட்சிகள் தேர்தல் களத்தில் செய்து வரும் உட்டாலக்கிடி வேலைகள் காரணமாக, கருத்துக் கணிப்பு முடிவுகளை முட்டாள்கள் தினம் வரைக்கும் தள்ளிவைப்பது அவசியமற்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டதால், இந்த திடீர் வெளியீடு!

இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொண்டபோது, தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கு.மு.க.தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியுடன் தேர்தல் உடன்படிக்கைக்காகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும், அப்போது இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக விஜய டி.ராஜேந்தர் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவற்றிற்கு மேற்குறிப்பிடப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க அரசியல் நிகழ்வுகளே காரணம் என்று சான்றோர் அறிவர்.

இந்த மெகாசர்வேயில் சேட்டை டிவியும், பிளஃப்மாஸ்டர் பிரைவேட் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனமும் இணைந்து களத்தில் இறங்கினர். தொகுதி ஒன்றிற்கு ஒருவர் வீதம் 234 தொகுதிகளில் 1638 பேர்கள் அயராது பணியாற்றியதோடு, அவர்களே கருத்துக்கணிப்புக்கான கேள்விகளுக்கு பதிலும் அளித்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு தொகுதிக்கு 200 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண் என்ற பாகுபாடேயின்றி இந்த சர்வே நடத்தப்பட்டது. அத்தோடு படித்தவர், பாமரர், கிராமம், நகரம், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் தவிரவும் கிரிக்கெட் பார்ப்பதற்காக விடுப்பெடுத்து வீட்டிலிருப்பவர்கள், டாஸ்மாக்கின் ஆயுட்கால உறுப்பினர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், வலைப்பதிவில் மொக்கை போடுகிறவர்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் அவர்களது பெயர்,வயது, பாலினம், வசிப்பிடம் போன்ற தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, மேலும் அவர்களுக்கு சிரமமளிக்க விரும்பாமல் எல்லாக் கேள்விகளுக்கும் நமது ஆய்வுக்குழுவே பதிலளித்திருக்கின்றனர் என்பதை அறிக!

குறிப்பாக டாஸ்மாக் கடைகளில், மப்பேறியவர்கள், மிகவும் மப்பேறியவர்கள் ஆகியவர்களிடமிருந்து அவர்களது பெயர் போன்ற விபரங்களும் கிடைக்காததால், தோராயமாக ’இன்னின்ன மூஞ்சிக்கு இன்னின்ன பெயர் இருக்கலாம்,’ என்ற தீர்க்கதரிசனத்தோடு விபரங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆக, மொத்தம் 20 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களிடமிருந்து அதிகபட்சமாக நான்கு கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள் பெறப்பட்டுள்ளன என்பதால், இப்படியொரு கருத்துக்கணிப்பை ஓபாமா தேர்தலின்போது அமெரிக்காவில் கூட நடத்தியதில்லை என்று பல அரசியல்கட்சித்தலைவர்கள் விழுந்து விழுந்து சிரித்தவாறே தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ள ஆதரவு, அவர்கள் கைவசம் உள்ள பிரியாணிப்பொட்டலங்கள், மூட்டை மூட்டையாக மறைவிடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள ரொக்கப்பணம், சின்டெக்ஸ் டாங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள சரக்கின் கொள்ளளவு, இது தவிர காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தலா ஒரு தொகுதிக்கு எத்தனை கோஷ்டிகள், எத்தனை போட்டி மனுக்கள், எத்தனை டம்மி வேட்பாளர்கள், எத்தனை சட்டைகள் இதுவரை கிழிபட்டன, எத்தனை வேட்டிகள் இன்றுவரை உருவப்பட்டன என்பதோடு, தேர்தலுக்குப் பிறகு புதிதாக உருவாகப்போகிற கோஷ்டிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்த துல்லியமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இந்தக் கருத்துக்கணிப்பின்போது சத்தியமூர்த்தி பவனில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 4321 கொடும்பாவிகளைத் தவிரவும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான கொடும்பாவிகளின் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிற திடுக்கிடும் தகவலையும் கண்டறிய முடிந்தது.

இதன்படி, கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் தலைமையிலான குடிமக்கள் முன்னேற்றக் கழகம் 176 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணியும் அ.தி.மு.க கூட்டணியும் தலா 29 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதனை ஏற்கனவே ஹிஹிலீக்ஸ் தளமும் வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கு.மு.கவுக்குப் பெண்கள் மத்தியிலே பலத்த ஆதரவு இருப்பது வியப்பைத் தருகிறது. இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச கம்ப்யூட்டர் என்று பல கட்சிகள் அறிவித்திருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் இலவச மனைவிகள் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்ற அச்சத்தில், பெண்கள் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் புறக்கணித்து, குடிமக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பெருமளவில் ஆதரவளித்திருக்கலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கு.மு.க.தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு டாஸ்மாக் கடைகளின் வாசலில் பீடி கொளுத்தி கொண்டாடி வருகிறார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

Monday, March 28, 2011

தண்டநாளங்கள்

சென்னையும், இந்த மின்சார இரயில் பயணங்களும் எனது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிப்போய் விட்டன. பல விடுமுறைகளில் ஏதோ ஒரு தினசரிக்கடமையிலிருந்து தப்பித்து வந்த குற்ற உணர்ச்சி போல உணர்ந்ததுண்டு. இந்த சகபயணிகளோடு ஒரு இனம்புரியாத பரிச்சயம் ஏற்பட்டு விட்டதுபோலத் தோன்றுவதுண்டு. பலருக்கும் எனக்கும் இடைப்பட்ட உறவு ஒருசில புன்னகைகள் மட்டுமே என்றாலும், பார்த்தால் அவர்களுக்காய் இடம்பிடித்து அமரச்சொல்கிற ஒரு அலாதியான நட்பு நாளடைவில் உருவாகி விட்டது.

இந்தப் பயணத்தின் ஆரம்பக்கட்டங்களில் ஏற்பட்ட பிரமிப்புகளும், எரிச்சல்களும் முற்றிலும் அடங்கிவிட்டன. எதுவாயிருப்பினும் சற்றே தலைதூக்கிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் கவனம் செலுத்த விரும்பாமல் அவரவர் கையில் இருப்பதை வாசிக்கவோ, அலைபேசியில் பண்பலை கேட்பதோ, எதுவுமேயில்லாமல் போனாலும் ’நான் இதில் சம்பந்தப்பட விரும்பவில்லை,’ என அழிச்சாட்டியமாய் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதோ, தொடர்ந்து இரயில் பயணத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு ஏற்பட்டு விடுகிற தவிர்க்க முடியாத குணாதிசய மாற்றம்!

இந்தப் பயணத்தில் தினசரி வந்துபோகிற பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம் ஒரு குரூரமான சுவாரசியத்தைச் சேர்க்கிறார்கள். அனுதாபத்துக்குப் பதிலாக, அவர்களது பாணியை அன்றாடம் கவனித்து வருவதால், அவர்களது யுக்தி சிரிப்பை வரவழைக்கிறது. எப்போதாவது தன்னிச்சையாக கை சட்டைப்பையிலிருந்து ஒரு நாணயத்தை அகழ்ந்தெடுத்து அவர்களது டப்பாக்களில் சத்தமாகப் போடுகிறது. சற்றே நெரிசல் அதிகமாகி, நின்று பயணிக்கிற சூழலில் அவர்கள் மீது புதிதாய் ஒரு எரிச்சல் ஏற்படுகிறது.

ஆனால், இத்தனை எரிச்சல்கள், அருவருப்புகள், அவமானங்கள் எல்லாவற்றையும் கடந்து அவ்வப்போது இரயிலில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதானிருக்கின்றது.

சில நாட்களாக தாம்பரம்-கடற்கரை தடத்தில் புதிதாக ஒரு பிச்சைக்காரர் வந்து கொண்டிருக்கிறார். கையில் மரத்தாலான, தட்டையான, தந்திகள் கொண்ட ஒரு வினோதமான இசைக்கருவியுடன்! ஒருவர் ’சந்தூர்’ என்றார்; மற்றொருவர் ’சரோத்’ என்றார். எனக்குப் பெயர் பிடிபடவில்லையென்றாலும் அவர் வாசித்த ’ரகுபதி ராகவ ராஜாராம்,’ பிடித்திருந்தது.

தினசரியும் இரயிலில் போயே தீரவேண்டிய கட்டாயம் இருப்பவர்களுக்கு, நாளடைவில் பிச்சைக்காரர்கள் மீதான சலிப்பு மறைந்து போய் விடுகிறது. வினோதமாக, சில சமயங்களில் ஏதேனும் ஒருசில பிச்சைக்காரர்களுக்காக, சட்டைப்பையில் கொஞ்சம் சில்லறை வைத்துக்கொள்ளுகிற பழக்கமும் ஏற்பட்டு விடுகிறது.

ஓரிரு மாதங்களாக புல்லாங்குழல் இசைத்தவாறு வருகிற பார்வையற்ற பிச்சைக்காரருக்கு, நான் அவ்வப்போது சில்லறை போடுவதுண்டு. முதல்முதலாக கோடம்பாக்கம் நிலையத்தில் அவரது குழலிசையைக் கேட்டேன். ’ராஜாதிராஜா’ படத்தின் ’மீனம்மா..மீனம்மா..கண்கள் மீனம்மா,’ பாட்டை அசத்தலாக வாசித்தபடி பெட்டிக்குள் நுழைந்தார். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடைப்பட்ட சங்கதியைக் கூட அதன் நெளிவுசுளிவுகளுடன் அவர் புல்லாங்குழலிலேயே இசைத்தபோது சற்றுக் கிறங்கித்தான் போனேன்.

பொதுவாக, ஒரு ஆர்மோனியத்துடன் வந்து, பெரும்பாலும் இரண்டுகட்டைகளுக்கு மேல் பயன்படுத்தாமல் பாடிக்கொண்டு பிச்சையெடுக்கிற பிச்சைக்காரர்கள் நாளடைவில் அலுப்புத்தருகிறார்கள். சில சமயங்களில் அவர்களது அபசுரங்கள் அவர்கள் மீது நமக்கு இயல்பாக வர வேண்டிய பச்சாதாபத்தைச் சற்றே குறைத்து விடுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பிச்சைக்காரர்களிடம் கூட சுத்தத்தை எதிர்பார்க்கிற அபத்தமான குணம் மனிதனுக்கு இருப்பதை என்னவென்று சொல்ல..?

பிறரின் அனுதாபத்தைப் பெற்று சில்லறை தேற்றுகிற இவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று சொல்ல மனம் தயங்குகிறது. ஆனால்...

தினசரி கடலை பர்பி வியாபாரம் செய்ய வரும் அந்த மூன்று பார்வையற்றவர்கள். இருவர் ஆண்கள்; ஒருவர் பெண்! கடற்கரையிலிருந்து எழும்பூர் வரைதான் அவர்களது வியாபாரம்; பயணம்! அதிலும் பூங்கா ரயில் நிலையம் வரைக்கும்தான் விற்பனை. பிறகு, இருக்கையிருந்தால் அமர்ந்து கொள்வார்கள். அவர்களுக்குள் எதையோ பேசிச் சிரித்துக் கொள்வார்கள். அவர்களது சிரிப்பைப் பார்க்கும்போது யாரோ தொண்டைக்குள் கையை விட்டு இதயத்தைப் பிழிவதுபோல ஒரு மெல்லிய வலியை ஏற்படுத்தும். எழும்பூர் வந்ததும் இறங்கிச்சென்று விடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருப்பேன்.

சென்னை என்ற நகரத்தை சிலர் விதண்டாவாதமாக கழித்துக்கட்ட எண்ணுகிறார்களோ என்ற ஆதங்கம் இன்னும் இருக்கிறது. சொல்லப்போனால், சென்னையின் இரத்த ஓட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் இந்த மின்சார இரயில் பயணங்களில், மாங்குமாங்கென்று உழைக்கிற வர்க்கத்தையும், இரத்தத்தை உறிஞ்சுகிற வர்க்கத்தையும் அடுத்தடுத்த இருக்கைகளில் காண முடிகிறது.

சாமானிய மனிதன் முதல், பிச்சைக்காரன் வரை பெரும்பாலானோர் இந்த நகரத்தில் எப்படியோ கவனத்தை ஈர்த்து, எதையோ செய்து, வயிற்றைக் கழுவிக்கொண்டிருப்பதை ஓரிரு இரயில் பயணங்களிலேயே புரிந்து கொள்ள முடிகிறது.

அதே சமயம், எவரது கவனத்தையும் ஈர்க்க விரும்பாமல், கூட்டத்தினுள் தனித்திருந்து மவுனம் காத்து, எவருடனும் அல்லது எதனுடனும் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்பாமல், மிதந்து கொண்டிருக்கிற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், அவர்கள் அனைவருமே என்றோ ஒருநாள், இந்த இரயில் பயணங்களின்போது எவரது கால்களினாலோ மிதிபட்டிருப்பார்கள். அன்றி நிச்சயம் எவரையாவது ஒருமுறையாவது மிதித்திருப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்!

Sunday, March 27, 2011

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்.04

Justify Fullமுன்கதைச் சுருக்கம்:

ஒரு கட்சிகூட ஆரம்பிக்காமல், கருமுத்துவைத் தவிர ஒரு தொண்டனும் இல்லாமல், வெறும் பரபரப்புச் செய்திகளின் உதவியாலேயே ஐயாக்கண்ணு பிரபலமாகிவிட்டார். புது தில்லிக்கு வரச்சொல்லி செய்தி வந்து அவரும் போய்ச் சேர்ந்தாயிற்று: அவரை வரவேற்று அழைத்துப்போக தமிழ்தெரிந்த ஒரு டிரைவருடன் வண்டியும் வந்தாயிற்று. இனி.....!

"லேய் மக்கா!" காரில் போய்க்கொண்டிருந்தவாறே கருமுத்துவிடம் கூறினார் ஐயாக்கண்ணு. "எல்லாரும் டெல்லி எருமை டெல்லி எருமைன்னு சொல்லுதாகளே, ரெண்டு வாங்கிட்டுப் போவமா? கறவைக்கு ஒதவுமில்லா?"

"ஐயோ அண்ணாச்சி, இப்பம் நீங்க பெரிய அரசியல்வாதி! எருமை, பசுவெல்லாத்தையும் மறந்திட்டு, சுருக்குன்னு கையிலே நாலு காசைத் தேத்தப்பாப்பியளா? இன்னிக்கு காந்தி சமாதிக்குப் போயி மலர்வளையம் வைக்கப்போறீங்க! அப்பத்தான் ஐயாக்கண்ணுன்னா யாருன்னு எல்லாருக்கும் தெரியும்," என்று நினைவூட்டினான் கருமுத்து.

"சரி, தம்பி டிரைவர், டெல்லியை ஒரு ரவுண்டு அடிச்சிட்டே போ! என்னெல்லாம் இருக்குன்னு பார்க்கலாம்," என்று உற்சாகமாகச் சொன்னார் ஐயாக்கண்ணு.

"இதோ பாருங்கய்யா, இதுக்குப் பேருதான் ஜும்மா மஸ்ஜித்!" என்று கூறினார் டிரைவர்.

"அப்படியா? இதை எத்தனை நாளிலே கட்டினாங்க?"

"அம்பது வருசமாச்சுங்கிறாங்க!"

"எங்கூரு கொத்தனாரு குப்புசாமி இதை ரெண்டு வருசத்துலே கட்டிருவாரு! இதுக்கு அம்பது வருசமா?"

மிகவும் கடுப்பாகிப்போன டிரைவர் சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக வந்தார். வண்டி குதுப் மினாரைக் கடந்தபோது...

"டிரைவர் தம்பி, இதென்ன செங்கல் சூளையா? எம்புட்டு ஒசரமாட்டிருக்கு? இது என்ன மக்கா?"

எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்ட டிரைவர், நிதானமாகச் சொன்னார். "தெரியலே அண்ணாச்சி! இத நேத்திக்கு நான் பாக்கலே. ராத்திரியோட ராத்திரியா கட்டிட்டாங்க போலிருக்குது!"

ஒருவழியாக காந்தி சமாதியை அடைந்ததும், ஐயாக்கண்ணுவும், கருமுத்துவும் மலர்வளையத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்.

"அண்ணாச்சி," கருமுத்து கிசுகிசுத்தான். "பார்த்தீகளா டெல்லியை? காந்தி சமாதியிலே கூட கையிலே துப்பாக்கியை வச்சுக்கிட்டு எம்புட்டு போலீஸ் நிக்குது பாருங்க!"

"அது ஏன் தெரியுமாலே?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"

ஐயாக்கண்ணு மலர்வளையத்தை வைத்தபோது ஒளிந்துநின்று பலர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் கிளம்பியபோது கருமுத்துவின் அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.

"யெஸ்ஸு! ஓ.கே! ஆல்ரைட்டு! யெஸ்ஸு!" என்று பேசிவிட்டு வைத்தான் கருமுத்து. "அண்ணாச்சி, மேடம் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திட்டாங்க! நேரா அவங்களப் பார்த்து பேசி முடிவு பண்ணிரலாம்."

"அப்புடியா?" ஐயாக்கண்ணு அதிர்ந்தார். "லேய், நமக்கு இங்கிலீஸ் தெரியாது. அவங்களுக்கு தமிழ் தெரியாது. என்ன பேசி, என்ன முடிவு பண்ணுறது...?"

"பேசல்லாம் வேண்டாம் அண்ணாச்சி! சும்மா ஒரு போட்டோ எடுத்துக்குவோம். பொறவு பாருங்க உங்க காட்டுலே அடைமழைதான்!"

"வேண்டாம்லே, காட்டுலே கெழங்கு போட்டிருக்கம்லே! இப்பம் மழை பெஞ்சா பயிரெல்லாம் போயிரும்!" என்று பதறினார் ஐயாக்கண்ணு.

"அண்ணாச்சி, பணமழை பெய்யுமுன்னு சொன்னேன்!" என்று விளக்கினான் கருமுத்து. "அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே செய்யணும் அண்ணாச்சி! எதிர்த்துப் பேசப்படாது. சரியா?"

"கொஞ்சம் கஷ்டமான வேலைதான். என் வீட்டுலே நான் என்ன சொல்றேனோ அதைத் தான் சம்சாரம் செய்யும். வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,"ன்னு சொன்னா, உடனே வெந்நீர் கொணாந்து கொடுத்திரும் சம்சாரம்!" என்று பெருமைப்பட்டார் ஐயாக்கண்ணு.

"சந்தோசம் அண்ணாச்சி! எதுக்கு வெந்நீர் கேட்பீங்க அண்ணாச்சி?"

"பிசுக்குப் பிடிச்ச் பாத்திரத்தை பச்சைத்தண்ணியிலே கழுவக்கூடாது மக்கா. வெந்நீர் போட்டுக்கழுவினா பளபளன்னு சுத்தமாயிரும்!"

"சரிதான் அண்ணாச்சி!"

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே, அவர்களது வண்டி ஒரு வீட்டின் வாசலை அடைந்தது. பொன்னெழுத்தில் பெயர்ப்பலகை மின்னியது.

"மீரா கேடியா!"

"மக்கா, என்னலே இதென்ன வீடா கொட்டாயியா? தமிழ்ப்படம் பெயரெல்லாம் போட்டிருக்கு...?"

ஐயாக்கண்ணு சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பலகை இருந்தது. அதில், இந்தி, ஆங்கிலம் தவிர தமிழிலும் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

"தில்லுமுல்லு-திங்கள், புதன்,வெள்ளி
தில்லாலங்கிடி -செவ்வாய்,வியாழன்,சனி
சில்லறை எண்ணும் பணிக்காக
ஞாயிறு விடுமுறை!"

Friday, March 25, 2011

சமூகப்பருப்பு

இன்று காலையில் கண்விழித்ததுமே நான் ஒரு உறுதியோடுதான் எழுந்தேன். "கூகிள் சும்மாக் கொடுத்திட்டா இப்படியா மொக்கை போடுவே? சமூகத்துக்கு ஏதாச்சும் செய்ய வேண்டாமா?" என்று பத்துவருசத்துக்கு முன்னாலே செத்துப்போன என்னோட பாட்டி புதுசா பல்செட் மாட்டிக்கிட்டு வந்து கனவுலே திட்டினாங்க! அதுனாலே, தினமும் சமூகத்துக்கு ஏதாவது ஒரு நன்மையாவது செய்யாமல் தூங்கக்கூடாதுன்னு கஜேந்திரன் டீ ஸ்டால் வாசலிலே சபதம் மேற்கொண்டேன். தினமும் ஒரு நல்ல காரியமாவது செய்யணும். சமூகத்துக்கு எதையாவது செய்யணும். என்ன செய்யலாம்? எவன் மாட்டுவான்...?

யோசனையோடு டீக்கடையிலேருந்து நடக்க ஆரம்பிச்சபோது, எதிரே ஒரு பஜாஜ் எம்-80 யிலே பின்னாடி நிறைய நியூஸ்பேப்பர் கட்டுக்களை வச்சுக்கிட்டு ஒரு அண்ணாச்சி வந்திட்டிருந்தாரு. அவர் வண்டியிலே ஹெட்-லைட் இன்னும் எரிஞ்சிட்டிருந்தது.

"ஐயகோ, பகல் ஏழுமணிக்கு ஹெட்-லைட் போட்டுக்கிட்டுப் போறாரே? எதிர்ப்பக்கத்துலேருந்து வர்றவனுக்குக் கவனம் பிசகுமே? ஆக்ஸிடெண்ட் ஆக வாய்ப்பிருக்கே? சமூகப்பொறுப்பு...சமூகப்பொறுப்பு!"

"அண்ணாச்சி!" என்று கையசைத்தேன். "வண்டி லைட்டு எரியுது பாருங்க. அணைச்சிட்டு ஓட்டுங்க!"

தேர்தல் பிரசாரத்துக்குப் போன டிவி சீரியல் நடிகை மாதிரி நான் கையசைக்கவும், அண்ணாச்சி வேகத்தைக் குறைத்து, புரிந்து கொண்டு ஹெட்-லைட்டை அணைத்துவிட்டு, லுங்கி கட்டிய சினேகா போல புன்னகைத்து விட்டுப்போனார். அப்பாடா, என் பங்குக்கு சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய டீயை, அதாவது சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றிவிட்டேன். இத்தோடு விடுவதா? அடுத்த கடமை எங்கே?? சமூகப்பொறுப்பு.!! சமூகப்பொறுப்பு...!!

அலுவலகத்துக்குக் கிளம்பினேன். வழியில் எங்காவது சமூகக்கடமையாற்ற வாய்ப்பிருக்கிறதா என்று நான் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே போனபோது அந்த சின்னப்பையன்..ஐயோ, வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து விழுந்த பந்தை எடுப்பதற்காக இப்படித் தலைதெறிக்க ஓடி வருகிறானே! எதிர்த்திசையில் குப்பைலாரி வந்து கொண்டிருக்கிறதே! ஒரே ஜம்ப்ப்பு.....!

"என்ன தம்பி இப்படியா ஓடிவருவே? நான் மட்டும் பிடிக்கலேன்னா என்னாயிருக்கும்?"

"ஙொய்யால, என்னைக் காப்பாத்தினது இருக்கட்டும். பந்து லாரி டயருலே நசுங்கிருச்சே! எங்கப்பன் கிட்டே எப்புடிக் காசு கேப்பேன்?"

லாரியில் அடிபட்ட பந்தையும் என் மூஞ்சியையும் ஒரே மாதிரி பார்த்தவாறே அந்தச் சிறுவன் வீட்டுக்குள் திரும்பினான். ஒரு சின்னப்பையன், இப்படிப் பேசிட்டானே? போகட்டும், நாம சமூகத்துக்கு இன்னிக்கு ரெண்டாவது கடமையை ஆற்றியாச்சு! அது தான் முக்கியம்! பாட்டி, உங்க பேராண்டியோட தொண்டைப் பார்த்துட்டு பெருமைப்படுவீங்கதானே?

இப்படியே தினசரி ரெண்டு கடமை செஞ்சாப்போதும். சண்டேயன்னிக்கு ஒருநாள் ஹாலிடே விட்டிரலாம் - என்று முடிவெடுத்தேன். ஆனால், மாலை ........

வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி ஸ்கூட்டியில் எதிரே வந்து கொண்டிருந்தார். அவர் வண்டியை எடுக்கும்போது ஸ்டாண்டை சரியாக நீக்கவில்லை போலிருக்கிறது; அது சாலையை ஏறத்தாழ உரசியபடி மிகவும் தாழ்ந்திருந்தது. ஐயையோ, வண்டி திரும்பும்போது ஸ்டாண்டு சாலையோடு உராய்ந்தால் குடைசாய்ந்து தலைகுப்புற விழ வேண்டி வருமே! சமூகப்பொறுப்பு...சமூகப்பொறுப்பு...!

"மேடம்..மேடம்..மேடம்! ஸ்டாண்டு! ஸ்டாண்டு!"

அந்த அம்மணி என்னைக் கடந்தவாறே திரும்பிப்பார்த்து, நான் சொல்வது புரியாமல், கிட்டத்தட்ட என்னை மாதிரியே பேந்தப்பேந்த விழிக்க, இந்தக் களேபரத்தில் எதிரே வந்த காய்கறிவண்டியும் ஸ்கூட்டியும் மோத....

"நான் பாட்டுக்குப் போயிட்டிருந்தேன். இந்த ஆளுதான் கத்திக் கூப்பிட்டான். திரும்பிப் பார்த்தேன். எதிரே வண்டி வந்ததைக் கவனிக்கலே!" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்மணி சிட்டாகப் பறந்தாள்.

"ஏண்டா டேய்.....!" என்னை நோக்கி ஒரு கூட்டம்.......

எப்போது மயக்கமடைந்தேன், எப்படி.....

"பாட்டி! கடைசியிலே ஒன் கிட்டேயே வந்திட்டேன் பாட்டி!"

"மிஸ்டர் சேட்டை! கேன் யூ ஹியர் மீ? மிஸ்டர் சேட்டை!"

"யாரு இங்கிலீஷ்லே பேசறது?" முணுமுணுத்தேன். "அப்ப நான் இன்னும் சாகலியா?"

"நோ மிஸ்டர் சேட்டை! நீங்க அம்பேலோ ஆஸ்பத்திரியிலே இருக்கீங்க!"

"அப்ப கண்டிப்பா செத்திருவேன்!"

"உங்களை யாரோ அடிச்சுப்போட்டுட்டாங்க, நாங்கதான் ஆம்புலன்ஸ்லே அள்ளிப்போட்டுக்கிட்டு வந்தோம். இப்போ எப்படியிருக்கு!"

"ரொம்ப பயமாயிருக்கு டாக்டர், எனக்கு சொத்துபத்து கூட கிடையாது!"

"பயப்படாதீங்க சேட்டை, எங்களுக்கும் சமூகப்பொறுப்பு இருக்கு!"

"நிறுத்துய்யா," என்று கூவினேன். "எவனாச்சும் இனிமே சமூகப்பொறுப்பு, உளுத்தம்பருப்புன்னு பேசினீங்க நான் பொல்லாதவனாயிருவேன்!"

பட உதவி: கூகிள் சமூகம்

Tuesday, March 22, 2011

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்.03

முன்கதைச் சுருக்கம்:

பாவம் ஐயாக்கண்ணு! அரசியல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறவரை, பரபரப்புக்காக குஸ்கா தத் தவறான செய்தியைப் பரப்பி பிரபலமாக்கிவிட்டார். ஆந்தைக்கண்ணுவும் ஒரே நாளில் தலைப்புச்செய்தியாகி விட்டார்! இனி...

யாரிந்த ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு? ’லத்திகா’ படம் வெளியாவதையறிந்து ரஜினியும் கமலும் திடுக்கிட்டது போலவே தமிழக அரசியல் வட்டாரங்கள் கிடுகிடுத்தன. ’ஐநூறா? நான் ஆயிரம் கொடுக்கிறேன்," என்று ஆனா ஆவன்னா கட்சியும், "ரெண்டாயிரம் கொடுக்கிறேன்," என்று ஈனா ஈயன்னா கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு ஐயாக்கண்ணுவை மொய்த்தன. ஐயாக்கண்ணு தங்கியிருந்த லாட்ஜ் சனிக்கிழமை மாலை டாஸ்மாக் போல மிகுந்த பரபரப்போடு காட்சியளித்தது. குஸ்கா தத் கென்னத் சந்தைவிட்டு நகராமல், ஐயாக்கண்ணுவின் நடவடிக்கைகளையே கண்காணித்துக்கொண்டிருந்தாள்.

"அண்ணாச்சி! இம்புட்டுப் பணம் வந்திருச்சே! தேர்தல் அறிக்கையிலே என்ன இலவசமுண்ணு சொல்லப்போறீங்க?" என்று களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவின் காதில் கிசுகிசுத்தான்.

"அஸ்கு புஸ்கு! நா ஏம்லே கொடுக்கணும்? ஆளுக்கு ஒரு பீடிக்கட்டும் வத்திப்பொட்டியும் கொடுக்கேன்!" என்று அவனைக் கடிந்து கொண்டார் ஐயாக்கண்ணு.

சும்மாயிருப்பாளா குஸ்கா? எதையாவது சொல்லி எப்படியாவது மீட்டரை ஏற்ற வேண்டும் என்று அறுந்துபோன பல்லிவால் போலத் துடிக்கிறவளாயிற்றே? உடனே செய்தியைப் பரப்பி விட்டாள்.

"ஐயாக்கண்ணுவின் தேர்தல் அறிக்கை வெளியீடு! இலவசமாக பீடிக்கட்டும் வத்திப்பெட்டியும்!"

இதைக் கேட்ட பொதுமக்கள் சிரித்தனர். ஆனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெருங்கவலையில் ஆழ்ந்தனர்.

"இந்த ஐயாக்கண்ணை என்னமோ காமெடி பீஸ்னு நினைச்சோமே? இலவச பீடியாம்; இலவச வத்திப்பொட்டியாம்! என்ன மூளை இந்தாளுக்கு?"

"ஆமாண்ணே! இதைக் கேட்டதும் பீடி குடிக்கிறவனெல்லாம் கண்டிப்பா ஓட்டுப்போடுவானோ?"

"அது மட்டுமா? பீடி தயாரிக்கிறவங்கல்லாம் போயி பொட்டி கொடுப்பானுங்க! ஐயாக்கண்ணுவோட திட்டம் அமுலுக்கு வந்தா தமிழ்நாட்டுலே சிகரெட்டுக்கு சங்கு ஊதிருவாங்கன்னு சிகரெட் பண்ணுறவனும் பொட்டி பொட்டியா எடுத்திட்டுப் போவானுங்க! ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா அடிச்சிட்டாரே இந்த ஐயாக்கண்ணு?"

அப்படியே நடந்தது. அடுத்த சில மணிநேரங்களில் ஐயாக்கண்ணு தங்கியிருந்த லாட்ஜ் வாசலில் சேட்டைக்காரனின் இடுகையை விடவும் நீளமாக வரிசையில் கார்கள் வந்து நின்றிருந்தன. குஸ்கா அடிக்கடி வழக்கம்போல எசகுபிசகாக தன் பங்குக்கு பரபரப்பை அதிகரிக்கிற செய்திகளாய் அளித்தவண்ணமிருந்தாள்.

"அண்ணாச்சி! தில்லிக்கு உடனே கிளம்பி வரச்சொல்லி போன் வந்திருக்கு!" என்று பதைபதைப்போடு ஓடிவந்தான் கருமுத்து. "கூட்டணி பத்திப் பேசணுமாம்! கிளம்புங்கண்ணே, டாக்ஸியைப் புடிச்சு ஏர்போர்ட்டுக்குப் போயிரலாம்!"

"சே! நாம ஆட்சிக்கு வந்தா ஆட்டோ மாதிரியே ஏரோப்ளேனும் வீட்டு வாசலுக்கு வர்றா மாதிரி பண்ணிரணும்," என்று ஐயாக்கண்ணு முணுமுணுத்தது, குஸ்காவின் காதில் விழவில்லை. இல்லாவிட்டால், இன்னும் என்னென்ன புரளி கிளப்பியிருப்பாளோ?

டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது......

"அண்ணாச்சி! உங்களைப் பத்தி டெரரா பில்ட்-அப் பண்ணி, இப்படி பேமஸ் ஆக்கின அந்த குஸ்காவுக்கு நாம ஏதாவது செய்யணும்," என்று கருமுத்து சொன்னதும் ஐயாக்கண்ணு மறுத்தார்.

"லேய், நம்ம பொழைப்பை நாம பார்க்கணும்லே! அந்தம்மா என்ன எளவை வேண்ணாப் பேசிப் பொழச்சிட்டுப்போவட்டும்."

ஏர்போர்ட்டை இருவரும் அடைந்தபோது, ஐயாக்கண்ணு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழைவதுபோல அசட்டையாக உள்ளே செல்ல முயலவும், பாதுகாப்பு அதிகாரி நிறுத்தினார்.

"வெயிட் ப்ளீஸ்!"

"எழுபத்தி அஞ்சு கிலோ!"

"உங்க வெயிட் எவ்வளவுன்னு கேட்கலே சார்! பொறுங்கன்னு சொன்னேன்!" என்று விளக்கிய அதிகாரி கையிலிருந்த கருவியால் ஐயாக்கண்ணுவைத் தடவி பரிசோதனை செய்தார்.

"என்ன மக்கா, கரண்டியாலே சொறண்டுகான்?"

"குண்டிருக்கான்னு பாக்காங்க!"

"லேய் நான் குண்டுன்னு பார்த்தாலே தெரியாதா? தடவிப்பாக்கணுமோ?"

ஒருவழியாக டெல்லி தயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிக்கெட் உதவியுடன், விமானநிலையத்துக்குள் நுழைந்து, விமானத்துக்காகக் காத்திருந்தார்கள்.

"கழுத்துலே என்னலே மாட்டியிருக்கே?"

"பைனாகுலர் அண்ணாச்சி! தூரத்துலே இருக்கிறவங்க கிட்டத்துலே தெரிவாங்க!"

"கொடு பார்ப்போம்!" என்று வாங்கிய ஐயாக்கண்ணு பைனாகுலரை வாங்கிப் பார்த்தார்.

"எலேய்! இந்த எளவெடுத்த பொம்பளை என்னலே எங்கண போனாலும் பொறத்தாலயே வருகுது?"

"யாரு அண்ணாச்சி!"

"அதாம்லே குஸ்கா! ரொம்பத் தொலவுலே நிக்கி, இல்லாட்டா கூப்புட்டு வெசாரிக்கலாம்."

"அதுக்குத்தானே இத வாங்குனேன்! பாருங்க அண்ணாச்சி!" என்று பைனாகுலரைத் திரும்பப் பெற்ற கருமுத்து, பைனாகுலர் வழியாகக் குஸ்காவை நோக்கியபடியே அழைத்தான். "குஸ்கா மேடம்..குஸ்கா மேடம்!"

Sunday, March 20, 2011

வீட்டுக்கு வீடு வாசப்படி

"ஆரம்பிச்சிட்டீங்களா? காலைலே எழுந்திரிச்சதும் காளைமாடு கழநீரு குடிக்கிறாமாதிரி காப்பியை உறிஞ்ச வேண்டியது, கையிலே பேப்பரை எடுத்து வச்சுக்கிட்டு பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் படிக்கிறா மாதிரி படிக்க வேண்டியது. வயசாச்சே தவிர கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? சுறுசுறுப்பா போயி காய்கறி வாங்கிட்டு வருவோம், சமையலுக்கு ஒத்தாசையா நறுக்கிக் கொடுப்போமுன்னு தோணுதா மனுசனுக்கு?"

சமையலறையிலிருந்தவாறே, புடவைகட்டிய சித்துவைப்போல பொளந்துகட்டிக்கொண்டிருந்த மனைவி பார்வதியின் கமெண்டரியைக் கேட்டு எரிச்சலுற்ற ஜம்புநாதன், பையை எடுத்துக்கொண்டு தோளில் ஒரு துண்டைப்போட்டுக்கொண்டு காய்கறி வாங்கக்கிளம்பினார். அவரது மனசாட்சி தொண்டையைச் செருமிக்கொண்டு எஃப்.எம்.ரேடியோ போலப் பேச ஆரம்பித்தது:

"அவ எவ்வளவு திட்டினாலும் எதிர்த்துப் பேசக்கூடாது. இன்னும் கொஞ்சநாளைக்கு அவ மனசு நோகும்படியா எதையும் செய்யக்கூடாது. கொஞ்சநாள்தானே...இன்னும் கொஞ்சநாள் தானே...?" பெருமூச்சுடன் வெளியேறினார் மனைவியிடம் டோஸ் வாங்கி சொம்புநாதனாகிய ஜம்புநாதன்.

அவர் வெளியேறியதும் பார்வதியின் கவனம் கால்முதல் தலைவரை போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த மகள் சொர்ணாவின் மீது திரும்பியது.

"அடியேய் சின்னவளே! மணி ஏழாகப்போகுது. இன்னும் என்னடி தூங்கிட்டிருக்கே? நாளைக்கு இன்னொருவீட்டுக்குப் போறவ இப்படியா இருக்கிறது? உனக்கு சொர்ணான்னு பேரு வச்சதுக்குப் பதிலா கொர்ணா-ன்னு பேரு வச்சிருக்கணும். ஆம்புள மாதிரி கொர்கொர்னு கொறட்டை விட்டுக்கிட்டு....! எழுந்திரு சோம்பேறி!"

"இன்னிக்கு சண்டே தானேம்மா....ஏம்மா இப்படி..?" என்று தூக்கக்கலக்கத்தில் புரண்டு, கோபத்தோடு கண்விழித்த சொர்ணாவுக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.

"சண்டேயன்னிக்கு சண்டை போடக்கூடாதுன்னு இண்டியன் பீனல்கோடுலே சொல்லியிருக்காங்களா? எழுந்திருடீ!"

சொர்ணாவின் தூக்கம் கலைந்துபோகவும், குறட்டைவிட்டுக்கொண்டிருந்த அவளது மனசாட்சி கொசுக்கடி பட்டதுபோல விசுக்கென்று விழித்துக்கொண்டது.

"திட்டினால் திட்டட்டும். பதிலே சொல்லக்கூடாது. இன்னும் கொஞ்ச நாட்கள்தானே? அம்மா எவ்வளவு கோபப்பட்டாலும் எதிர்த்துப் பேசக்கூடாது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் கொஞ்சநாட்களுக்குத் தானே?"

ஆனால், அசோக் முன்கோபக்காரனாச்சே! அடுத்து அம்மா அவனைத்தானே எழுப்புவாள்?

"டேய் கடன்காரா, ராத்திரி முழுக்க கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கொள்ளுதின்ன கோவேறு கழுதை மாதிரி இக்கிக்கிக்கின்னு இளிக்க வேண்டியது. காலையிலே பத்துமணிவரைக்கும் கும்பகர்ணன் மாதிரி தூங்க வேண்டியது. இப்புடியிருந்தா சரஸ்வதி எப்படிரா அண்டுவா?"

"சும்மாயிரும்மா!" அசோக் முணுமுணுத்தான். "நேத்து ராத்திரி முச்சூடும் சரஸ்வதியோடத்தான் சாட் பண்ணிட்டிருந்தேன். செல்போன் நம்பர் கூடக் கொடுத்திருக்கா தெரியுமா?"

"அடப்பாவி, இது வேறே நடக்குதா, உருப்பட்டா மாதிரித்தான்!" என்று மகனின் தலையில் ஒரு குட்டு வைத்ததும், அசோக் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். ஆத்திரம் கொப்பளித்த அதே நேரத்தில், அவனது மனசாட்சியும் ஐ.ஜியின் ஜீப்பைப் பார்த்ததும் சல்யூட் அடிக்க எழுந்திருக்கிற சார்ஜண்டைப் போல வீறுகொண்டது.

"ஊஹும்! ஆத்திரம் கோபம் எதுவாயிருந்தாலும் ஒரு அஞ்சுநிமிஷம் தள்ளிப்போடுன்னு காதலன் படத்துலே பிரபுதேவா சொல்லியிருக்காரு! அதைப் பின்பற்றினா நமக்கும் ஒரு நயன்தாரா கிடைக்காமப் போகலாம்; ஆனா கோபப்படுறது பயன்தாரா..." என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.

ஜம்புநாதன் பைநிறைய காய்கறியும் இரண்டுதோள்களிலும் விசிறிமடிப்பு அங்கவஸ்திரத்துக்குப் பதிலாக புடலங்காய்களுடனும் வீட்டுக்குத் திரும்பியபோது, கூட்டணியிலிருந்து கடைசிவினாடியில் கழற்றிவிடப்பட்ட உதிரிக்கட்சியின் அலுவலகம்போல, வீடே அமைதியாக இருந்தது.

"புடலங்காயா? ஆ வூன்னா ஒரு புடலங்காயை வாங்கிட்டு வந்திருவீங்களே? அத வச்சு அரைக்காம என்னத்தைப் பண்ணறது?" என்று கணவன் மீது எரிந்து விழுந்தார் பார்வதி.

"ஒரு சேஞ்சுக்கு புடலங்காய் போட்டு ஒரு ரசம் வையேன்!"

"புடலங்காய் போட்டு ரசமா? பண்ணறேன், கூடவே புதீனா போட்டு ஒரு பாயாசமும் பண்ணறேன். எல்லாம் என் தலையெழுத்து. ஒழுங்கா ஒரு வெந்நீர்கூட வைக்கத்தெரியாத மனிசன்!"

ஜம்புநாதன் ஆட்டமிழந்த கிரிக்கெட் வீரரைப் போல தலையைக் குனிந்தவாறே, சத்தமின்றி காய்கறிகளை சமையலறையில் வைத்துவிட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்த மகன், மகளுடன் சேர்ந்து கொண்டார்.

"டாடி, அம்மா காலைலேருந்து ரொம்பத் திட்டுறாங்க!" என்று பரிதாபமாகச் சொன்னாள் சொர்ணா.

"என் தலையிலே எப்படிக் குட்டியிருக்கான்னு பாருங்கப்பா!" என்று அம்மா தன் தலையில் குட்டியதுபற்றி அப்பாவிடம் முறையிட்டான் அசோக். "என்னிக்காவது உங்க தலை இப்படி வீங்கியிருக்கா?"

"வீங்காட்டி என்ன, வழுக்கை விழுந்திருச்சே போதாதா?" என்று குமுறலுடன் சொன்னாள் சொர்ணா.

"கொஞ்சநாள் தாண்டா! எல்லாமே கொஞ்சநாளைக்குத்தாண்டா...," என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னார் ஜம்புநாதன்.

"என்னது கொஞ்சநாள்?" என்று சமையலறையிலிருந்து பார்வதி குரல்கொடுத்தாள்.

"இல்லை, இன்னும் கொஞ்ச நாளிலே சொர்ணாவும் சமையல் பண்ணக் கத்துக்குவா. உனக்கு ஒத்தாசையா இருக்குமுன்னு சொன்னேன்!" என்று வாய்தவறிச் சொன்ன ஜம்புநாதன், மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார்க்க விரும்பாமல் தன் கால்விரல்களை வாழ்க்கையில் முதல்முதலாக எண்ணிப்பார்க்கத்தொடங்கினார்.

"ஓஹோ! இன்னும் கொஞ்சநாள் கழிச்சுத்தான் கத்துக்குவாளோ? அடியேய் , வந்து இந்த கீரையை ஆய்ஞ்சுகொடு! இந்த வெண்டைக்காயை நறுக்கு!" என்று பார்வதி உத்தரவிடவும், போட்டுக்கொடுத்த அப்பாவை சொர்ணா, சொர்ணாக்காவைப் போல முறைத்தபடியே கிளம்பினாள்.

"பார்வதி, நான் வேண்ணா உனக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணட்டுமா?" என்று கனிவுபொங்கக் கேட்டார் ஜம்புநாதன்.

"ஒண்ணும் வேண்டாம். மசக்கைக்காரி மாதிரி உக்காந்திட்டிருக்காம காலாகாலத்துலே குளிச்சிட்டு வந்து டிபனைச் சாப்பிடுங்க!"

"அதுவும் சரிதான்," என்று முணுமுணுத்தார் ஜம்புநாதன். "நீ பண்ணுற டிபனைச் சாப்பிடறதை விட பெரிய ஒத்தாசை வேறே என்ன இருக்க முடியும்?"

"மெதுவாப் பேசுங்கப்பா! அம்மா காதுலே விழப்போவுது!" என்று எச்சரித்தான் அசோக். "ஏற்கனவே இன்னிக்கு டிபன் ஜவ்வரிசி உப்புமாவாம்!"

"ஜவ்வரிசி உப்புமாவா? அதைச் சாப்பிட ஏழு ஜென்மத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணுமேடா!"

"நெஜமாவா அப்பா?"

"ஆமாம். செத்துச் செத்துப்பொழைச்சாத்தானே ஏழு ஜென்மம் எடுக்கலாம்?"

காலரா தடுப்பூசி முகாமுக்குப் போய்க் காத்திருப்பவர்கள் போல, ஜம்புநாதனும் அசோக்கும் முகத்தில் எவ்வித எக்ஸ்பிரஷனும் இல்லாமல் சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு, ஜம்புநாதன் மனதைத் தேற்றிக்கொண்டு பானிபட் போருக்குக் கிளம்புகிறவரைப்போல, துண்டை எடுத்து வீசியவாறு பாத்ரூமை நோக்கி நடந்தார். குளித்துத் தயாரானவர் டைனிங் டேபிளில் அமர்வதற்கு முன்னர் பாலகணபதியிலிருந்து பாடீகார்டு முனீஸ்வரன் வரைக்கும் எல்லா தெய்வங்களையும் தொழுதுவிட்டு உப்புமா சாப்பிட உட்கார்ந்தார்.

"அப்பா, நான் குளிக்கக் கிளம்பறேன்," என்று அசோக் சொன்னபோது அவர் எதையும் சொல்லுகிற நிலைமையில் இல்லை என்றாலும் கமல்ஹாசனைப்போல கண்களாலேயே அனுமதி வழங்கினார். குளித்துக்கொண்டிருந்தவனுக்கு, இந்த உப்புமாவுக்கு ஐ.நா.சபை மூலம் உலகளவிலே பரவலான தடையுத்தரவு கொண்டுவர டிவிட்டரில் ஒரு சுட்டிதொடங்க வேண்டும் என்று தோன்றியது.

ஒருவழியாக, எல்லாரும் குளித்து, டிபன் சாப்பிட்டு, பெரிதாகச் சொல்லிக்கொள்ளுகிற மாதிரி எவ்வித விபரீத பின்விளைவுகளும் ஏற்படாமல், சொர்ணாவும் பார்வதியும் சமையலையும் முடித்து அக்கடாவென்று உட்கார்ந்து ஆசுவாசப்பட்டனர்.

"என்னங்க? இன்னிக்கு ஜவ்வரிசி உப்புமாவை வித்தியாசமாப் பண்ணியிருந்தேனே, கவனிச்சீங்களா?" என்று ஆசையோடு கணவரைக் கேட்டாள் பார்வதி.

"அதை இப்போவே சொல்லணுமா? நாளைக்கு லீவு போடாம இருந்தா சொல்லலாமுண்ணு இருந்தேன்," என்றார் ஜம்புநாதன்.

"கேலிபண்ணாம சொல்லுங்க," என்று பார்வதி கெஞ்சவும், "இன்னும் கொஞ்ச நாள்...," என்பது ஜம்புநாதனுக்கு ஞாபகம் வந்தது.

"உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கிரீடம் ராஜ்கிரணைப் போல நாத்தழுதழுத்த ஜம்புநாதன்,"இன்னிக்கு உப்புமாவைச் சாப்பிடும்போது எங்கம்மா ஞாபகம் வந்தது." என்றார்.

"எனக்கும் பாட்டி ஞாபகம் வந்ததும்மா," என்று ஒத்து ஓதினான் அசோக்.

"ஏண்டி சொர்ணா, நீ ஏண்டி எதுவும் சொல்ல மாட்டேங்குறே?" என்று மகளை வினவினாள் பார்வதி.

"எனக்கு இன்னிக்கு என்னவோ செத்துபோனவங்க ஞாபகமெல்லாம் வரலே!" என்று உண்மையை உடைத்தாள் சொர்ணா. "ஆனா, ஒருவாட்டி நீ ராய்ச்சூர் ரவா உப்புமான்னு பண்ணினியே, அன்னிக்கு கண்டசாலா கனவுலே வந்து உலகே மாயம் வாழ்வே மாயம்னு பாடினாரு!"

"நல்ல பாட்டு!" என்று சொன்ன ஜம்புநாதன் உடனே திருத்தினார். "நல்ல உப்புமா!"

"என்னாச்சு உங்க மூணு பேருக்கும்? நார்மலா உங்கப்பா காப்பியைச் சாப்பிட்டுட்டே தண்ணியா இருக்கு, டிகிரி காப்பி மாதிரியில்லேன்னு ஆயிரம் நொள்ள சொல்லுவாரு. இன்னிக்கு ஒண்ணுமே சொல்லலே! என்ன விஷயம்?" பார்வதிக்கு ஏதோ பொறிதட்டியது.

"அப்படீன்னா காலையிலே நீ கொடுத்தது காப்பிதானா?" என்று வாய்தவறிக்கேட்டுவிட்டார் ஜம்புநாதன்.

"சரியாப்போச்சு!" என்று தலையிலடித்துக்கொண்டாள் பார்வதி. "இந்த வீட்டுலே கொஞ்ச நாளா என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலே! ஒரே மர்மமாயிருக்கு! சொல்லப்போறீங்களா இல்லியா?"

"கோவிச்சுக்காதே பார்வதி," என்று குழைந்தார் ஜம்புநாதன். "இதுக்கு மேலேயும் உன்கிட்டே மறைக்கிறது சரியில்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச நாளிலே...."

"அப்பா..ப்ளீஸ்..வேண்டாம்பா," என்று இடைமறித்தாள் சொர்ணா. "விளைவு விபரீதமாயிடும்!"

"ஆமாம்பா!" என்று ஆமோதித்தான் அசோக்.

"உண்மையைச் சொல்லப்போறீங்களா இல்லையா?" என்று கர்ஜித்தாள் பார்வதி.

"சொல்லறேன் பார்வதி சொல்றேன்," என்று குரலைத்தாழ்த்தினார் ஜம்புநாதன். "இன்னும் ரெண்டு நாளிலே கிரிக்கெட் வேர்ல்டு கப் குவார்ட்டர் ஃபைனல்ஸ் ஆரம்பிக்கப்போகுது. அதுனாலே, நீ இனிமே உன்னோட மெகாசீரியலைப் பார்க்கிறதுக்கு கீழ்வீட்டுக் கோமுப்பாட்டி வீட்டுக்குப் போயிரு. கொஞ்ச நாளைக்குத்தான்...ஃபைனல்ஸ் முடிஞ்சதுக்கப்புறம் நீ முன்னைப்போல நம்ம வீட்டுலேயே எல்லா சீரியலும் பார்க்கலாம். இதை உன்கிட்டே நேரடியா எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் முழிச்சிட்டிருந்தோம். இன்னிக்குக் காலையிலே கூட சொல்லியிருப்போம். ஆனா, தொண்டையிலே இன்னும் ஜவ்வரிசி உப்புமா ஜிவ்வுன்னு நின்னுக்கிட்டிருக்கு! இப்போ நீயே கேட்டதுனாலே சொல்லிட்டோம். எங்களுக்காக நீ இந்தத் தியாகத்தை செய்வியா பார்வதி?"

"இவ்வளவு தானா?" என்று சிரித்தாள் பார்வதி. "இதை வெளிப்படையாக் கேட்டிருக்கலாமே? உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம். உங்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியாதா?"

’அப்புறம் ஏன் இன்னிக்கு ஜவ்வரிசி உப்புமா?’ என்ற கேள்வி நாக்கின் நுனி வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டார் ஜம்புநாதன்.

"நீங்க தாராளமா கிரிக்கெட் பாருங்க! நான் கோமுப்பாட்டி வீட்டுக்குப் போயி சீரியல் பார்க்கிறேன். சரியா?"

அழைப்புமணி ஒலித்தது. பார்வதி எழுந்து சென்று கதவைத் திறந்தபோது, பக்கத்துவீட்டு, எதிர்வீட்டுப் பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

"பார்வதி ஆன்ட்டி! ஒரு சின்ன ஹெல்ப்! எங்க வீட்டு ஆம்பிளைங்கெல்லாம் டிவியிலே கிரிக்கெட் தான் பார்ப்பாங்களாம். சரி, கோமுப்பாட்டி வீட்டுலே சீரியல் பார்த்துக்கலாமுன்னு நினைச்சா, அவங்களும் கிரிக்கெட் முடியுற வரைக்கும் சீரியல் பார்க்க மாட்டாங்களாம். தயவு செய்து உங்க வீட்டுலேயே நாங்கல்லாம் சீரியல் பார்க்கலாமா?"

ஜம்புநாதன், அசோக், சொர்ணா மூவருக்கும் ஜவ்வரிசி உப்புமா தன் வேலையைக் காட்டத்தொடங்கியது.

Saturday, March 19, 2011

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்.02

முன்கதைச்சுருக்கம்:

"அடைந்தால் அமெரிக்கா; இல்லையேல் ஆந்தைக்குளம்," என்று சூளுரைத்த ஐயாக்கண்ணு, ஊருக்குத் திரும்பி தனக்குச் சொந்தமான செங்கல்சூளை மற்றும் ஓட்டுத்தொழிற்சாலை இரண்டையும் கவனித்துக்கொண்டாலே போதுமென்ற முடிவுக்கு வருகிறார். இதைத் தற்செயலாகக் காதுகொடுத்துக் கேட்ட (இன்னும் பெயரிடப்படாத) அரசியல் கட்சியின் செயலாளர் கொக்கிரகுளம் கோவிந்தன், கூரைக்குப் போடுகிற ஓட்டை தேர்தலில் போடுகிற ஓட்டு என்று தவறாகப் புரிந்து கொள்கிறான். உடனே, தன் தலைவரிடம் ஐயாக்கண்ணு குறித்துச் சொல்கிறான்.அதன் விளைவாக, ஐயாக்கண்ணுவுக்கு ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட தலைவர் கடியப்பட்டணம் கந்தப்பன், முன்பணமாக ஒரு பெட்டியையும் கொடுத்து விடுகிறார். இனி...!

ஓசியில் கிடைப்பதை விடுவானேன் என்று ஐயாக்கண்ணு ஏகத்துக்கும் குடித்துத் தொலைத்துவிடவும், போதை மிகவும் அதிகமாகி, தனது இயல்புக்கு மாறாக மிகவும் தெளிவுடன் பேச ஆரம்பித்துவிட்டார். நல்ல வேளை, கடியப்பட்டணம் கந்தப்பனும், கொக்கிரகுளம் கோவிந்தனும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உருண்ட வைக்கோல் டெம்போக்களைப் போல கவிழ்ந்து கிடந்தனர்.

"அண்ணாச்சி, வாங்க கெளம்புவோம்," என்று களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவை தரதரவென்று இழுத்துச் சென்று, ஒரு ஆட்டோவில் உட்காரவைத்து, எழும்பூர் கென்னத் சந்திலிருந்த ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவர்களது ஆட்டோவை ஒர் மர்ம உருவம் பின்தொடர்வதை இருவரும் கவனிக்கவில்லை. கடியப்பட்டணம் கந்தப்பனும், ஐயாக்கண்ணுவும் அந்த பாருக்குள் நுழைந்ததுமுதலாகவே, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அந்த உருவம் கண்காணித்துக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தது. அது யார்?

குஸ்கா தத்! இந்தியத் தொலைக்காட்சியில் ’கோலங்கள்’ அபிக்குப் பிறகு மிகவும் பிரபலமான் பெண்மணி! புது தில்லியிலிருந்து வரும் "கண்டி-டிவி"யின் நிரூபர். இந்தியில் கண்டி என்றால் மணி. காசை வாங்கிக்கொண்டு பத்திரிகை தர்மத்துக்கு ’சாவுமணி’யடிக்கிற கடமையைச் செவ்வனே செய்ததால் இப்படியொரு பெயர். மேலும் ஏறக்குறைய ஐம்பது வயதாகிவிட்டாலும், தனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூசுகிற வழக்கமுள்ளவர் என்பதால் ’தலைமை நிரூபர்" என்றும் அழைக்கப்படுகிறார். தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அவரை கொஞ்சநாள் சென்னையிலேயே இருந்து வசூலைக் கவனித்துக் கொள்ளுமாறு மேலிடம் உத்தரவு போட்டிருந்தது.

"சரியான ஸ்கூப்!" குஸ்கா தத் மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டார். "இதை வைச்சு ஒரு அமவுண்ட் வாங்கி, நாம தனியா சேனல் ஆரம்பிச்சிர வேண்டியதுதான்!"

ஐயாக்கண்ணுவும், கருமுத்துவும் லாட்ஜுக்குள் நுழையவும், குஸ்கா தத் தனது அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தார்.

"ஜீ! மே குஸ்கா போல்ரஹீ ஹூம்! தமிழ்நாட்டு அரசியலிலே ஒரு புது திருப்பம்-னு உடனே Flash போடுங்க! சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஏரியாக்களிலே ஆளுங்கட்சிக்கு ஐயாக்கண்ணுன்னு ஒருத்தர் மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தப்போறாரு! ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய்னு பேரம் பேசிட்டாங்க!" என்று தகவல் அளித்துவிட்டு, லாட்ஜ் வாசலிலேயே காத்திருந்தபோதுதான் அது நடந்தது.

நடிப்பால் பிரபலம் ஆக முடியாவிட்டாலும், அவ்வப்போது ஏதேனும் பிராப்ளத்தில் மாட்டிப் பிரபலமான நடிகை பிஷ்கு, அந்த லாட்ஜிலிருந்த ஹோட்டலில், அளவுச்சாப்பாட்டை அளவுதெரியாமல் சாப்பிட்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார். குஸ்காவுக்கு உடனே பொறிதட்டியது.

"ஹலோ! அடுத்த Flash News போடுங்க! ஐயாக்கண்ணு கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை பிஷ்கு!"

அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசியல் அல்லோலக்கல்லோலப்படத்தொடங்கியது.

யார் இந்த ஐயாக்கண்ணு? - என்று டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. "ஐயாக்கண்ணுவுக்கு சொந்தமான கறவைமாடுகள் மற்றும் காளைமாடுகளைப் பாருங்கள்! இதில் ஒன்றாவது அவரைப்போல சட்டை போட்டிருக்கிறதா? வேட்டி கட்டியிருக்கிறதா? இவரா தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகிறார்?" என்று அருணாப் கோஸ்வாமி எட்டுக்கட்டையில் முழங்கிக்கொண்டிருந்தார்.

சி.என்.என்.ஐபி.என்னில் சுஹாசினி ஹைதர்,"இவரது பண்ணையில் மொத்தம் இரண்டே இரண்டு காளைகள் தானிருக்கின்றன. மற்றவையெல்லாம் பசுமாடுகள். இப்படியொரு ஆணாதிக்கவாதியையா தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்?" என்று கேள்வியெழுப்பியதோடு, ’தி சந்து’ ராமையும் பேட்டிகண்டனர்.

"This is an ample example of the systemic deterioration of the polity in a state that has been traditionally supporting untainted regionalistic and chauvnistic approach in total contravention to the federal ideologies of a country that has been at best known and hailed by the international community as the champion of democray and which is facing a crisis that is peculiar and impending to threaten the multi-linguistic fibre of the society that has its roots in our longstanding values epitomized by our ancestors who have advocated clean adherence to the ethical values preached by our forefathers and backfathers for several centuries..." என்று ஒரு கவுளி கும்பகோணம் வெற்றிலையை மெல்பவர்போல வாயை அஷ்டகோணலாக அசைத்தவாறே ஆங்கிலத்தில் பொளந்து கட்டத்தொடங்க, அவரது பதில் முடிவதற்குள் டூட்டி முடிந்ததால், சுஹாசினி ஹைதர் ஸ்டூடியோவை விட்டே கிளம்பிவிட்டார்.

ஹெட்லைன்ஸ் டுடே-க்குப் பேட்டியளித்த டக்ளஸ் ஆசிரியர் ஜோ "எல்லா மாடுகளுக்கும் நான்கு கால்கள் இருக்கின்றன; எல்லா மாடுகளுக்கும் தலா ஒவ்வொரு வால் இருக்கிறது. எல்லா மாடுகளும் சாணிபோடும். ஆனால், இந்த மாடுகள் எங்கே சாணிபோடும் என்பதை யாராவது கண்காணிக்க வேண்டும்." என்று நகைச்சுவையோடு பேசி அவரே சிரித்துக்கொண்டார்.

ஆனால், லாட்ஜுக்குள்ளே குப்பென்று மப்பேறியதால் குப்புறக்கவிழ்ந்திருந்த ஐயாக்கண்ணுவுக்கு, ஒரு ஜீப்பில் ஏறியதால் தான் எவ்வளவு பிரபலமாகிவிட்டோம் என்ற உணர்வே இல்லாமல் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். தற்செயலாக தொலைக்காட்சியை முடுக்கிய களக்காடு கருமுத்து அசந்தே போய்விட்டான். ஐயாக்கண்ணுவை எழுப்ப மிகவும் முயன்றவன் இறுதியில் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தான். ஐயாக்கண்ணு அரைத்தூக்கத்தில் அலறினார்.

"லேய் கருமுத்து, இந்த எளவெடுத்த மாட்டைப் புடிச்சுக் கட்டு மக்கா. வயலிருக்கு வரப்பிருக்கு, எங்கண வந்து என்ன செய்யுது...?"

"அண்ணாச்சியோ, மாடில்லே அண்ணாச்சி, நான்தேன் தண்ணிதெளிச்சேன். எளுந்திரிச்சுப் பாருங்க. எல்லா டிவியிலேயும் உங்க பேருதான்....!"

"என்னலே சொல்லுதே?" ஐயாக்கண்ணு அதிர்ந்துபோய் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்தார்."லேய் என்ன மக்கா இங்கிலீஷுலே விடாம ஏசுதாக? என்னலே நடக்கு?"

"அண்ணாச்சி! இன்னும் கொஞ்ச நேரத்துலே இந்த ரூமுக்கு யாரெல்லாம் வரப்போறாகன்னு பாருங்க! சீக்கிரமா குளிச்சிட்டு வாங்கண்ணாச்சி! மப்போட இருந்தா தப்பாயிருமில்லா?"

"போயி நல்லெண்ணை வாங்கிட்டு வா மக்கா," என்று ஐயாக்கண்ணு குளிக்கத்தயாராகவும், கருமுத்து மின்னல் வேகத்தில் போய் நல்லெண்ணை வாங்கி வந்து கொடுத்தான்.

"லேய் கருமுத்து! எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு ஏச்சுப்புடலாமுன்னு பார்க்கியா? இதுலே என்னலே போட்டிருக்கு, கூடவே ஒரு இலவசப்பரிசுன்னு போட்டிருக்கில்லே..அது எங்கேலே?"

"ஐயோ அண்ணாச்சி, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே அண்ணாச்சி! ஒரு இலவசமும் இல்லே அண்ணாச்சி வேண்ணா கடைக்காரன்கிட்டே கேளுங்க!"

"யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"

கருமுத்து ஏறக்குறைய மூர்ச்சையடைகிற நிலைக்குவந்தபோது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

Thursday, March 17, 2011

கல்யாணம் (attend) பண்ணிப்பார்!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Tuesday, March 15, 2011

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்


வரலாற்றுச்சுருக்கம்: ஆந்தைக்குளம் என்னும் சிற்றூரில் அவதரித்த திருவாளர் ஐயாக்கண்ணு, பில் கேட்ஸ் எழுதிய ஒரு கடிதத்தை எதிர்மறையாகப் புரிந்துகொண்டு, அமெரிக்காவுக்குச் சென்று மைக்ரோஸாஃப்டில் பணிபுரிய ஆசைப்படுகிறார். ஆனால், சென்னைக்கு வந்த அவருக்கு விசா வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

இனி.....!

"அமெரிக்கா ஒரு அறிவாளியை இழந்திருச்சு அண்ணாச்சி," களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவுக்கு ஆறுதல் சொன்னான். "அப்படி அவங்க என்ன கேட்டு நீங்க தப்பா பதில்சொல்லிட்டீய அண்ணாச்சி?"

"அத ஏம்லே கேக்க? சிங்கிளா-ன்னு கேட்டாக. சரி, சிங்கிள் டீ கொடுப்பாகளோன்னு நெனச்சுக்கிட்டுகட்டிங்னு சொல்லிப்போட்டேம். விசா கெடயாதுன்னு சொல்லிட்டாக!" என்று விசனப்பட்டுக்கொண்டார் ஐயாக்கண்ணு.

"ஐயையோ அண்ணாச்சி! ஒங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு தெரிஞ்சுக்கத்தான் சிங்கிளா-ன்னு கேட்டிருக்காக!" என்று விளக்கினான் கருமுத்து. "ஒண்டிக்கட்டையா இருந்தா இங்கிலீஷுலே சிங்கிள்; கல்யாணம் ஆயிருச்சுன்னா மேரீட்(Married)-னு சொல்லணும்."

"இந்த எளவெல்லாம் எனக்கு என்னலே தெரியும்?" ஐயாக்கண்ணு சலித்துக்கொண்டார். "அது போவட்டும். என்னலே ஆட்டோ போய்க்கிட்டேயிருக்கு? இப்போ எங்க போறோம்?"

"கடியப்பட்டணம் கந்தப்பனைப் பார்க்க!" என்று பதிலளித்தான் கருமுத்து. "அவரு மனசு வச்சா நீங்க அமெரிக்காவென்ன, அம்பாசமுத்திரத்துக்கே போவலாம்!"

கருமுத்து இவ்வளவு நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில், தனது அலுவலகத்தில் கடியப்பட்டணம் கந்தப்பன் மிகுந்த கோபத்தில் ஆழ்ந்திருந்தார்.

"தமிள்நாட்டுலே இத்தனை கட்சியிருந்தும், எனக்கு ஒருத்தனும் சீட் தரமாட்டேன்னுட்டானே?" என்று காலேஜ்பீடியை உறிஞ்சியவாறே புகைந்தார். "நாமளே கட்சி ஆரம்பிச்சு மூன்னூத்தி நாற்பத்தி ரெண்டு தொகுதியிலேயும் ஆளை நிறுத்திருவோம். அப்பத்தான் நம்ம பலம் புரியும்!"

"அண்ணே, மொத்தமே தொகுதி இருநூத்தி முப்பத்தி நாலுதாண்ணே!" என்று கூறியவாறே, சந்தடி சாக்கில் தலைவரின் பீடிக்கட்டிலிருந்து ஒன்றை உருவினான் கொக்கிரகுளம் கோவிந்தன்.

"இப்போ குறைச்சிட்டாங்களா?" என்று கந்தப்பன் அசடுவழியக் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அலுவலகத்தில் இருவர் நுழைவதைக் கவனித்தார். "யாரோ வர்றாங்க, என்னான்னு போய்க்கேளு!"

கொக்கிரகுளம் கோவிந்தன் எழுந்து வரவேற்கப்போனபோது, ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவும் களக்காடு கருமுத்துவும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.

"அண்ணாச்சி! இப்பம் நாம பாக்கப்போற ஆளு எந்தக் கட்சிலயும் இல்லே,"ஐயாக்கண்ணுவின் காதில் கிசுகிசுத்தான் களக்காடு கருமுத்து. "ஆனா, எல்லாக் கட்சிலேருந்தும் பொட்டி வாங்கிருவாரு!"

"ஓஹோ! சுருட்டு ரொம்ப குடிப்பாரோ?" ஐயாக்கண்ணு புரியாமல் வினவினார்.

"அட தீப்பொட்டியில்லே அண்ணாச்சி; பணப்பொட்டி!" என்றான் கருமுத்து. "இவுரு கிட்டே ஒரு கடுதாசி வாங்கிப்புட்டோமுன்னா டெல்லிக்குப்போயி மிசா வாங்கிரலாம்."

"லேய் அது மிசா இல்லே மக்கா; விசா!" என்று திருத்தினார் ஐயாக்கண்ணு. "இதுதாம்லே கடேசி. இங்கண சோலி நடக்கலீண்ணா, நான் ஊருக்குப்போயி செங்கச்சூளையையும் ஓட்டு ஃபேக்டரியும் கவனிச்சுக்கிடுதேன். அமெரிக்காயாவது பேரிக்காயாவது..."

"என்ன அண்ணாச்சி, இப்புடிப் பொசுக்குண்ணு சொல்லிப்புட்டீயளே! அமெரிக்காவுக்குப் போயி காசை எண்ணுவீயளா ஆந்தைக்குளத்துக்குப் போயி செங்கலையும் ஓட்டையும் எண்ணிட்டிருப்பீயளா?"

இருவரும் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டிருந்தபோதே, கொக்கிரகுளம் கோவிந்தன் இடைமறித்தான்.

"யாருங்க நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?"

"இவரு பேரு ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. தலைவரைப் பார்க்க வந்திருக்கோம்," என்று களக்காடு கருமுத்து அறிமுகப்படுத்தியதும், கோவிந்தன் அவரை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். பிறகு...

"உட்காருங்க, போய் சொல்லிட்டு வர்றேன்!" என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக கந்தப்பனை நோக்கி விரைந்தான்.

"அண்ணே! நம்ம கட்சி சார்பா போட்டியிட முத வேட்பாளர் கிடைச்சாச்சு! அதோ முட்டக்கோசை முழுசா முழுங்கினது மாதிரி முழிச்சிட்டிருக்காரே, அவரு பேரு ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு!"

"யாரு அந்த வழுக்கைத்தலையா? பார்த்தா முள்ளம்பண்ணித்தோலிலே வடிகட்டுன முட்டாளாட்டம் இருக்காரு!"

"அந்த மாதிரியாளுங்கதான் நமக்கு சரிவரும் அண்ணே!" என்று காதில் கிசுகிசுத்தான் கோவிந்தன். "விபரமுள்ளவன் எவனாவது நம்ம கட்சிக்கு வருவானா?"

"என்னது?"

"அதாவது, விபரமுள்ளவன் நம்ம கட்சிக்கு வந்தா, சீக்கிரமே தொழில் கத்துக்கிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சிருவான். நம்ம ஓட்டு பிரிஞ்சிரும். இந்த மாதிரி ஆசாமின்னா, உடல் மண்ணுக்கு, குடல் பீருக்குன்னு கோஷம் போடுவானுங்க. என்ன சொல்றீங்க?"

"அதுவும் சரிதான்!"

"அண்ணே! போதாக்குறைக்கு அந்தாளுக்கு ஊரு முழுக்க ஓட்டு இருக்கும்போலிருக்கு. நான் போகும்போது ஓட்டைப்பத்திக் கிசுகிசுன்னு பேசிட்டிருந்தாங்க!"

"அப்படியா? ஓண்ணு பண்ணுவோம்! அவங்களை ஒரு நல்ல பாருக்குக் கூட்டிட்டுப்போயி தண்ணி வாங்கிக்கொடுத்து அப்படியே அமுக்கிரலாம்!"

அடுத்த கணமே கடியப்பட்டணம் கந்தப்பனும் கொக்கிரகுளம் கோவிந்தனும் ஐயாக்கண்ணுவை நெருங்கினர்.

"வாங்க ஐயா!" என்று கும்பிட்டார் கந்தப்பன். "மனு கொடுக்கவா வந்திருக்கீங்க? ஜீப்புலே ஏறுங்க; பேசிட்டே போலாம்!" என்று வாசலை நோக்கி விரையவும், ஐயாக்கண்ணு வழக்கம்போல பேந்தப் பேந்த விழித்தார்.

"என்னலே, ஜீப்புலேயே அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போயிருவாகளோ?"

"பேசாம வாங்க அண்ணாச்சி!" என்று கருமுத்து ஐயாக்கண்ணுவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று ஜீப்பில் அமரவைக்கவும், கந்தப்பனின் ஜீப் நகரின் பிரபலமான பாரை நோக்கி விரைந்தது. இறங்கி உள்ளே நுழைந்ததும், ஐயாக்கண்ணு சற்று மிரண்டு போனார்.

"லே கருமுத்து, என்ன மக்கா ஒரே இருட்டாயிருக்கு? வெனையை வெலை கொடுத்து வாங்கிப்புட்டமா?"

"பயராதீங்க அண்ணாச்சி! இது பெரிய மனுசங்க வாற எடமில்லா? இருட்டாத்தான் இருக்கும்!" என்று ஆசுவாசப்படுத்தினான் கருமுத்து.

நால்வரும் ஒரு மேஜையில் அமர்ந்ததும், பார் சிப்பந்தி அவர்களை நெருங்கி ஆர்டர் கேட்கத்தொடங்கினார்.

"சிங்கிள் லார்ஜ் நெப்போலியன்!" என்றார் கந்தப்பன்.

"சிங்கிள் லார்ஜ் ஜானி வாக்கர்!" என்றான் கோவிந்தன்.

மீண்டும் சிங்கிள்....! இம்முறை ஐயாக்கண்ணு சொதப்பத்தயாராயில்லை. ஏற்கனவே கருமுத்து விளக்கியிருந்ததால், அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பார் சிப்பந்தியிடம் சொன்னார்.

"மேரீட் லார்ஜ் ஐயாக்கண்ணு!"

"வாட்?" என்று குழம்பினார் சிப்பந்தி.

"என்னங்க ஐயா, எதுக்கு உங்க பேரைச் சொல்றீங்க? என்ன குடிக்கப்போறீங்கன்னு சொல்லுங்க!" என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கோவிந்தன் விளக்கினான். ஒருவழியாக, கருமுத்துவே ஆர்டர் கொடுத்து முடித்ததும், ஐயாக்கண்ணுவும் கந்தப்பனும் அரசியல் குறித்து உரையாடத்தொடங்கினார்கள்.

"ஐயாக்கண்ணு! என்னவோ ஓட்டைப் பத்திப் பேசிட்டிருந்தீங்களாமே? உங்களாலே எவ்வளவு ஓட்டைத் தேத்த முடியும்?" என்று விஷயத்துக்கு வந்தார் கந்தப்பன்.

"என்ன அப்படிக் கேட்டுப்புட்டீய? எங்கூரு மட்டுமில்லே, சுத்துப்பட்ட பத்துப்பட்டியிலேயும் ஐயாவுக்குத் தெரியாம ஒருபய ஓட்டை மாத்த மாட்டான் தெரியுமா?" என்று கருமுத்து விளக்கவும், கந்தப்பன் அசந்துபோனார்.

"அப்படியா? கடைசியா எத்தனை ஓட்டை மாத்தியிருப்பீங்க அண்ணாச்சி?" என்று சற்று பணிவுடனும் பயத்துடனும் கேட்டார் கந்தப்பன்.

"கடைசியா...., எப்படியும் ஒரு அம்பதுலேருந்து அறுபதினாயிரம் ஓட்டை மாத்தியிருப்போம்!" என்று பெருமிதத்துடன் சொன்னார் ஐயாக்கண்ணு.

"அடேங்கப்பா, அப்போ நீங்க ஒருவார்த்தை சொல்லிட்டா ஓட்டுக்குப் பஞ்சமேயிருக்காதுன்னு சொல்லுங்க!" என்று வியப்புடன் கேட்டார் கந்தப்பன். "இப்படியொருத்தரைத் தான் நான் தேடிட்டிருந்தேன்!"

"அது போகட்டும் அண்ணாச்சி, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கேப்பீங்க?" என்று கிசுகிசுப்பாகக் கேட்டான் கோவிந்தன்.

"உங்களுக்கு எம்புட்டு வேணும்?"

"மொத்தமும் எங்களுக்கே வேணும் அண்ணாச்சி! ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் தர்றேன். போதுமா?"

"..நூறா...?" ஐயாக்கண்ணு அயர்ந்துவிட்டார். "எதுக்கு அம்புட்டு?"

கருமுத்து இடைமறித்தான். "சரி, அண்ணாச்சி ஏற்பாடு பண்ணிருவாரு! முதல்லே ஒரு பொட்டிக்கு ஏற்பாடு பண்ணிருங்க!"

"அதுக்கென்ன, இன்னிக்கே பண்ணிருவோம்!"

ஐயாக்கண்ணு கருமுத்துவின் காதைக்கடித்தார். "லேய் கோட்டிப்பயமக்கா, அம்புட்டு ஓட்டையும் ஒரு பொட்டியிலே எப்படிலே...? என்னலே பெனாத்துகே...?"

"அண்ணாச்சி! அவுக சொல்லுறது வேறே; நீங்க பேசுறது வேறே! வலிய வர்ற சீதேவியை விட்டுப்புடாதீக! பேசாம தலையாட்டிட்டிருங்க! நடக்குறதப் பாருங்க!"

"அண்ணாச்சி!" கோவிந்தன் பேச ஆரம்பித்தான். "நீங்க எங்க கட்சியிலே இணைஞ்சது பத்தி பேப்பரிலே செய்தி கொடுக்கணும். உங்க போட்டோ இருக்குமா?"

சற்றே தயங்கினாலும், அருகிலிருந்த கருமுத்து ஜாடை காட்டவே, ஐயாக்கண்ணு தன்னிடமிருந்த ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொடுத்தார்.

"நல்லாயிருக்கே படம்!" கந்தப்பன் படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். "இம்புட்டு மாடு வளர்க்கறீங்களா அண்ணாச்சி? ஒரு பெரிய பண்ணையே வச்சிருப்பீங்க போலிருக்குதே!"

"ஆமா," என்று புன்னகைத்தார் ஐயாக்கண்ணு. "பத்திரிகையிலே போடுறதாயிருந்தா மறக்காம கீழே ஒரு குறிப்பு போடணுமுன்னு சொல்லுங்க! படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு கண்டிசனா போட்டிரணும்."

தொலைக்காட்சியில் பாடல் ஒலித்தது: "சிங்கமொன்று புறப்பட்டதே!"

(தொடரும்)