Friday, August 31, 2012

சோதனை மேல் சோதனை! போதுமடா சாமி!சோதனை மேல் சோதனை! போதுமடா சாமி!

மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!
காசுலகண் இல்லையின்னா கைமேலே சொம்பு!
மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!

துட்டை மிகத் துச்சமென்று நீ போட்டது!-பெரும்
பட்டை அது நெற்றியின்மேல் யார் போட்டது?
மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!


ஆகாயமார்க்கத்திலே அடிபோகுது-அதை
      அழகாக ஏணிவைச்சு ஜனம்வாங்குது
ஆராச்சும் டூப்புவிட்டா பணங்காசையே-கொண்டு
      ஜோராத்தான் கொடுத்துப்புட்டு தினமேங்குது
அடிமாடு பால்கறக்கும் என நம்புது-பின்னால்
      படிநூறு தினமேறி மனம்வெம்புது

மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!

போகாத ஊருக்கெல்லாம் வழி தேடுவார்-சிலர்
      பொய்களுக்கும் உண்மையைப்போல் உறைபோடுவார்
பாகாய்த்தான் பல்லிளித்துப் பலர்பேசுவார்- உங்கள்
      பைபார்த்துத் தந்திரமாய் வலைவீசுவார்
பணங்காசு கொல்லையிலே பழங்காய்க்குமா?
சுணங்காமல் பலமடங்கு பணம்வாய்க்குமா?

மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!
காசுலகண் இல்லையின்னா கைமேலே சொம்பு!
மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!


Wednesday, August 29, 2012

இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா…?            
            படம்: சாரான்ஷ்(1984) சாராம்சம்

            தயாரிப்பு: ராஜ்ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ்

            இயக்கம்: மகேஷ் பட்

            நடிப்பு: அனுபம் கேர், ரோஹிணி ஹத்தங்கடி,  
                சோனி ராஜ்தான்


           

ராஜ்ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் என்றால், ‘மைனே பியார் கியா,ஹம் சாத் சாத் ஹைன்’,‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ ‘விவாஹ்போன்ற பாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மூச்சுத்திணறிய படங்கள்தான் பலருக்கு நினைவு வரக்கூடும். ஆனால், இந்தித் திரைப்படங்களில் தவிர்க்கக் கூடாத படங்கள் என்று விமர்சகர்களால் கருதப்படுகிற பல முத்தான படங்களை, அவர்கள் 60-களிலிருந்து தயாரித்து வந்திருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு படம் என்று இன்றும் விதந்தோந்தப்படுவது ‘சாரான்ஷ்’.

      சாரான்ஷ்படத்தின் இயக்குனர் மகேஷ் பட் ஒரு சுவாரசியமான மனிதர். சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மீது மிகுந்த அபிமானமுள்ள இவர், இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் என்.டி.டிவியில் நடந்த கலந்துரையாடலில் ‘இந்தியாவில் ப்ளூ-ஃபிலிம் தயாரித்து வெளியிட அனுமதிக்க வேண்டும்என்று காரசாரமாக விவாதித்தார். (அவரது தயாரிப்பில், அவரது மகள் பூஜா பட் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த, சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த படம் ‘ஜிஸ்ம்-II’ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்!). அவர் எழுதி இயக்கிய ‘அர்த்படம் தமிழில் பாலு மகேந்திராவின் கைவண்ணத்தில் ‘மறுபடியும்என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ‘அர்த்’ ‘சாரான்ஷ்தவிர ‘ஜனம்’, ‘கப்ஸாபோன்ற படங்களை இயக்கிய இதே மகேஷ், சிரஞ்சீவியின் தயாரிப்பில் தமிழ் ‘ஜெண்டில்மேன்’- படத்தையும், ஷாரூக்கானை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ‘டூப்ளிகேட்என்ற படத்தையும் எடுத்திருக்கிறார். 60-களில் ஏ.வி.எம். தயாரித்து, ராஜ்கபூர்- நர்கீஸ் நடிப்பில் வெளியான ‘சோரி சோரிபடத்தை உட்டாலக்கடி செய்து ‘தில் ஹை கே மான்தா நஹீன்என்றும் எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் அவரது படங்களென்றாலே திகிலும், மிதமிஞ்சிய கவர்ச்சியும் என்று ஆகி விட்டது என்றாலும், அவரது ஆரம்பகாலப்படங்கள் இன்றளவிலும் விமர்சகர்களால் தூக்கிப் பிடிக்கப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க, ஒரு முக்கியமான படம் ‘சாரான்ஷ்’; அனுபம் கேர் என்ற ஒரு அற்புதமான நடிகரை அறிமுகப்படுத்தியது உட்பட இந்தப் படம் நினைவு கொள்ளத்தக்க ஒரு படம்! 

சாரான்ஷ்கதை:

      ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பிரதானும், அவர் மனைவி பார்வதியும் மும்பை சிவாஜி பார்க்கிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். புலர்ந்தும் புலராத ஒரு காலையில் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு தொலைபேசித் தகவல் அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது. தங்களது ஒரே மகனை, அமெரிக்காவில் யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்பதே அத்தகவல். பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தில் புலம்பும் மனைவியை, பிரதான் தேற்றுகிறார். அந்த இழப்பிலிருந்து மீண்டும் இருவரும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்ப முயற்சிக்கிறார்கள். சோகத்தோடு, பணக்கஷ்டமும் அவர்களைப் படுத்துகிறது.

      மும்பைத் திரையுலகில் போராடுகிற ஒரு இளம் நடிகை சுஜாதாவும், அவளது காதலன் விலாஸும் பிரதான் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியேறுகின்றனர். திருமணமாகாமலே சேர்ந்து வாழ்க்கை நடத்தி, சுஜாதா கர்ப்பமாகி விடுகிறாள். விலாஸ், அரசியல்வாதியான தன் அப்பா கஜானன் சித்ரேயிடம் சுஜாதாவைப் பற்றி சொல்ல அஞ்சவே, பிரதான் அவர்களுக்காகப் பரிந்துபேசப் போகிறார். மிகுந்த செல்வாக்குடைய கஜானன், சுஜாதாவைக் கருக்கலைப்பு செய்துவிட வேண்டும் என்பதோடு, அந்த வீட்டைவிட்டுக் காலி செய்யச் சொல்ல வேண்டும் என்றும் மிரட்டுகிறார்.

      பிரதானும், பார்வதியும் இறந்துபோன மகன் சுஜாதாவின் வயிற்றில் மீண்டும் பிறக்கப்போவதாக கற்பனை செய்து கொண்டிருப்பதால், கஜானன் சொல்வதை ஏற்க மறுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வீட்டுக்குள் கல்லெறிவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு அடுத்தடுத்துப் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. காவல் நிலையத்தில் கஜானனுக்கு எதிராகப் புகாரைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். தங்களது இழப்பையும், வயோதிகத்தையும் தள்ளிவைத்துவிட்டு சுஜாதாவைக் காப்பாற்றுவதே தங்களது கடமை என்று பிரதானும் பார்வதியும் கஜானனுடன் போராடுகிறார்கள்.

      ஆனால், அப்பாவுக்குப் பயந்த விலாஸ், ஒரு நாள் வந்து சுஜாதாவை அழைத்துக்கொண்டு வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகிறான். மகன் இறந்து போனதைக் கேட்டதைவிடவும், கதறி அழும் பார்வதியை பிரதான் தேற்றுகிறார். வாழ்க்கையில் எதுவும் நிலையல்ல; தனிமை மட்டுமே நிலையானது, என்ற சாராம்சத்தை மனைவிக்கு விளக்குவதோடு படம் முடிகிறது.

சில குறிப்பிடத் தக்க தகவல்கள்:

      பி.வி.பிரதான் என்ற ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வேடத்தில், இப்படத்தின் மூலம் அறிமுகமான அனுபம் கேருக்கு அப்போது வயது வெறும் 29 தான். காந்தி படத்தில் கஸ்தூரிபாயாக நடித்த பிரபல மராட்டி நாடகக் கலைஞர் ரோஹிணி ஹத்தங்கடி (வசுல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் கமலுக்கு அம்மா) அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் மகேஷ் பட், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பெரிய அபிமானி என்பதால், வசனங்களில் நிறைய தத்துவார்த்த விசாரம் இருந்தது. குறிப்பாக, இறுதிக்காட்சியில்!

      1985-ம் ஆண்டுக்கான சிறந்த பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கார்விருதுக்காக இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

      தனது மகனின் அஸ்தி கலசத்தை, விமான நிலையத்தில் வாங்குவதற்காகப் போராடி, பொறுமையிழந்து அதிகாரியின் அறைக்குள் அனுபம் கேர் குமுறுகிற காட்சி கல்நெஞ்சையும் கரையச் செய்யும். இந்தப் படத்துக்குப் பிறகு, அனுபம் கேருக்குத் தொடர்ந்து ஏறுமுகம்தான்!
 

சாரான்ஷ்படத்தைத் தொடர்ந்து, ‘கர்மாஎன்ற சுபாஷ் கய்யின் பிரம்மாண்டமான படத்தில் அனுபம் கேர் வில்லனாக நடித்தார். திலீப்குமார், நசீருத்தின் ஷா, அனில் கபூர், ஜாக்கி ஷ்ரோஃப், நூதன், ஸ்ரீதேவி, பூனம் தில்லான் என்று ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், இப்படத்தில் திலீப்குமாருக்கு அடுத்தபடியாகப் பேசப்பட்டது அனுபம் கேரின் நடிப்புதான்!

      அனுபம் கேரை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்தவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் தான்! ஒரு கைதியின் டைரிபடத்தை இந்தியில் ஆக்ரி ராஸ்தாஎன்ற பெயரில் கே.பாக்யராஜ் இயக்கியபோது, ஜனகராஜ் ஏற்றிருந்த பாத்திரத்தில் நடித்து அசத்தினார் அனுபம் கேர். குணச்சித்திரம், வில்லத்தனம், நகைச்சுவை என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிற ஒரு சிறந்த நடிகராக அவர் இன்னும் கருதப்படுகிறார்.

      சாரான்ஷ்’-ன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய டேவிட் தவன், பின்னாளில் கோவிந்தா-கரிஷ்மா கபூர், கோவிந்தா-ரவீணா தண்டன் ஜோடிகளை வைத்துப் பல நகைச்சுவை மசாலாக்களை இயக்கி, இந்தித் திரையுலகின் ‘மினிமம் கேரண்டி டைரக்டர்என்று அறியப்படுபவராய் இன்னும் திகழ்கிறார்.

      பாலிவுட்டில் கால்பதிக்க விரும்புகிற இளம்பெண்ணாக நடித்த சோனி ராஜ்தான், பின்னாளில் மகேஷ் பட்-டின் மனைவியானார். ஏற்கனவே மகேஷ் பட்-டுக்கும் மறைந்த நடிகை பர்வீன் பாபிக்கும் இருந்த உறவு பாலிவுட்டில் மிகப்பிரபலமானது. அதை மையமாக வைத்தே ‘அர்த்’(மறுபடியும்) படத்தை எடுத்திருந்ததாக, மகேஷ் பட்டே பல பேட்டிகளில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.    

(இந்த வரிசையில் அடுத்து நான் எழுதவிருப்பது ‘சோட்டி ஸி பாத்படமாக இருக்கலாம்.)


Tuesday, August 28, 2012

மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? - மெட்டு

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

வானவெளியில் 2G-யில் வேட்டை
பூமிக்குள்ளும் போடுவோம் ஓட்டை
வந்தவரைக்கும் லாபம் என்று
வாயில்போட்டுத் தீர்ப்போம் தின்று
வாயில்போட்டுத் தீர்ப்போம் தின்று
புறங்கை முழுதும் வடியும் தேனே!
புண்ணியபாவம் பார்ப்பது வீணே!

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

ஊழல் எமது வாடிக்கையாச்சு!
உண்மை நேர்மை வேடிக்கையாச்சு!
நாட்டில் ஜனங்கள் நம்பிக்கை குலைத்து
நடத்தும் ஊழல் கேளிக்கையாச்சு!
நடத்தும் ஊழல் கேளிக்கையாச்சு!
கரங்கள் மீது படிந்தது கரியா?
கணக்கைச் சொன்னால் சீறுதல் சரியா?

நிலக்கரி மிரட்டுதே!
நிதமுமே அதட்டுதே!
ஓய்வின்றிப் படுத்துதே!

Monday, August 27, 2012

பதிவர் திருவிழா – பனிக்கும் விழிகள்!


26-08-2012 அன்று நிகழ்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா, எனது வலையுலகப் பிரவேசத்துக்குக் கிடைத்த ஒரு அங்கீகார முத்திரை என்றே கருதுகிறேன். தமிழ் வலையுலகத்தில் தமக்கென்று இடம்பிடித்திருக்கும் எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் ‘ நிறைகுடம் நீர் தளும்பலில்என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய், அனைவரிடமும் சரளமாகப் பேசிப் பழகிய விதமும், என்னிடம் காட்டிய அன்பும் கரிசனமும் நேற்றைய பொழுதை நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இனிவரும் நாட்களில் என்னால் நினைவுகூர முடியும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறது.

       நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களைச் சந்தித்து உரையாடும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. எவர் பெயரைச் சொல்வது? எவரை விடுவது? அனுபவத்தில் பழுத்த பதிவர்கள் தொடங்கி, அண்மையில் ஆர்வத்துடன் எழுத வந்திருக்கும் பதிவர்கள் வரை அத்தனைபேரும் என்மீது அன்புமழை பொழிந்து, அதில் நனைந்து, ஜலதோஷம் பிடித்து, இந்த நிமிடம் வரை நான் தும்மிக் கொண்டிருக்கிறேன். ஆச்ச்ச்ச்ச்ச்ச்!

      இப்படியொரு நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்துவதென்பது எளிதான காரியமல்ல! இதற்காக எத்தனை நாள், எத்தனை பேர் ஊண் உறக்கமின்றி அலைந்து திரிந்திருப்பார்கள் என்பதை இப்போது எண்ணினாலும் மெய்சிலிர்க்கிறது. அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வார்த்தைகளை இனிமேல் புதிதாகக் கண்டுபிடித்தால்தான் உண்டு. இவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டு, திட்டமிட்டபடியே செயலாற்றி, சற்றும் காலதாமதமின்றி, குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிப்பதென்பதெல்லாம் கற்பனைக்கெட்டாத செயல்! அதை நடத்திக்காட்டியிருக்கிற விழாக்குழுவினர்களை அஹமதாபாத் இண்டியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்-டில் அழைத்து சொற்பொழிவு ஆற்றச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு திறமையான நிர்வாகம்! செயலாற்றும் திறன்! ஒருங்கிணைப்பு! அர்ப்பணிப்பு!

      அன்புள்ளங்களே! உங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல ஆரம்பித்தால், அடுத்த சந்திப்பு வரைக்கும் நீள்கிற வாய்ப்பிருக்கிறது. ஆகவே, விழாக்குழுவினர், பங்கேற்ற பதிவர்கள், அவர்களுடன் வந்த பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர் ஆகிய அனைவருக்கும் ஒரு எட்டு மணி நேரத்தை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தமைக்காக எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      அத்துடன் என்னையும் மேடையேற்றி அழகுபார்த்த உங்கள் அனைவருக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(டி-சர்ட்டும் ஜீன்ஸும் போட்டுக்கொண்டு, திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களிடமிருந்து சகோ. தென்றல் சசிகலாவின் “தென்றலின் கனவு” நூலைப் பெற்றுக்கொள்ளும் வாலிபன் யாரென்று தெரிகிறதா..? ஹிஹிஹி!)

நன்றி! வணக்கம்!

நன்றி: திரு.உலகநாதன் முத்துக்குமாரசாமி - புகைப்படத்துக்காக!
 

பி.கு.01:    எனது சூழ்நிலையைப் பொறுத்து, இனி இதுபோன்ற சந்திப்புகள் எங்கு நிகழ்ந்தாலும் கட்டாயம் வர முயற்சி செய்வேன்.

பி.கு.02    எனது முன்வழுக்கையையும், நரையையும் நேற்று எல்லாருக்கும் காட்டிவிட்டேன் என்பதற்காக, இனி ஸ்ரேயாவைப் பற்றி எழுத மாட்டேன் என்று யாரும் பகல்கனவு காண வேண்டாம்.

Friday, August 24, 2012

பரமசிவன் கழுத்திலிருந்துசெய்தி:


      இதை வாசித்ததும் என் மனதில் தோன்றிய பாட்டு இது.

      இதை “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டதுஎன்ற மெட்டில்   பாடிப்பார்க்கவும்!

அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்
      முடிச்சுப்போட்டீங்க மிகவும் ஜாலியா!


அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்
      முடிச்சுப்போட்டீங்க மிகவும் ஜாலியா! இன்று
அடிச்சுப்புரண்டு கதறும்போது
      ஊரில் கேட்கிறார்-இதுதான் ஜோலியா?
      உங்க வாழ்க்கை கேலியா?

'லாயர்' (Lawyer) என்ற பொய்யைச் சொல்லி
      லவட்டினாளே காசை அவள்
'லைய்யர்' (Liar) என்று தெரிந்தபின்னே
      எதுக்கு இன்னும் மீசை?

இருநிமிட நூடுல்ஸ்போல் திருமணங்கள் பண்ணி
தெருவோரம் புலம்புகிறார் தவறினை எண்ணி!
      இவர் அலம்பல் தந்தது பெரும் புலம்பல் வந்தது

(அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்)

பெண்ணைக் கண்ட மாத்திரத்தில்
      இளிக்கிறார்கள் பல்லை இங்கு
பெரும்படிப்பைப் படித்தவர்க்கும்
      ஜொள்ளினாலே தொல்லை!

பொறுக்காமல் அலைபவரை இலக்காக்கிச் சாய்த்து
பொருளெல்லாம் சுருட்டிடுவார் பலரிங்கு ஏய்த்து
      இவர் நேற்று மாப்புதான்! இன்று சூப்பர் ஆப்புதான்!

(அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்)
காதலென்னும் பொய்வலையில்
      வீழ்த்திவிட்டாள் நைசா- இப்போ
கடலினிலே கருப்பட்டிபோல்
      கரைஞ்சுபோச்சு பைசா!

கல்யாணம் டி-ட்வெண்ட்டி மேட்சு போல ஆச்சே!
கைக்காசு திரும்பிடலாம் கவுரவம் போச்சே!
      அவர் மனசு வெம்புது! தலைக் கணக்கு அம்பது!

(அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்)

Wednesday, August 22, 2012

சேட்டை@சென்னை பதிவர்கள் திருவிழாஎச்சரிக்கை

பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளவிருக்கும் சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில், சும்மா ஒரு லுல்லுலாயிக்காக நானும் கலந்து கொள்ளப்போகிறேன். இருப்பதிலேயே கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன்.

ஆகஸ்ட் 26 அன்று 
மாம்பலத்தில் சந்திப்போமா? 
ரைட்டு....!

Thursday, August 9, 2012

ஒட்டகத்தைக் கட்டிக்கோ

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Monday, August 6, 2012

ஜிஸ்ம் - சன்னி லியோனிஸம்


ஜிஸ்ம்-1 படத்தை எப்படி பிபாஷா பாசுவுக்காகப் பார்த்தேனோ, அதே போல ஜிஸ்ம்-2 படத்தை சன்னி லியோனுக்காகவே பார்த்தேன் என்ற உண்மையைச் சோற்றில் மறைக்க விரும்பவில்லை. ‘பிக் பாஸ்நிகழ்ச்சியில் அம்மணி பங்கேற்றபோது, இயக்குனர் மகேஷ் பட் அவரை ஒப்பந்தம் செய்த நாளிலிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இந்தப் படத்தைப் பற்றிய சிறிய, பெரிய தகவல்களை இணையத்திலும், ஆங்கில ஏடுகளிலும் பார்ப்பதைத் தவிர்க்க முடியாத அளவுக்குத் திகட்டத் திகட்டப் புகட்டி விட்டிருந்தார்கள்.

       கரேன் மல்ஹோத்ரா என்ற இயற்பெயர் கொண்ட இந்த சன்னி லியோன் அமெரிக்காவில் மிகப்பிரபலமான பலான பலான படத்து நடிகை என்பதனால், பிபாஷாவையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விடுவார் என்பது முதலிலேயே தெரிந்து விட்டிருந்தது. முன்று வருடங்களாக கூகிளாரில் அதிக பக்தகோடிகளால் தேடப்பட்ட கத்ரீனா கைஃபை கத்தரித்து விட்டு 2011-ல் முண்டியடித்து முன்னேறியிருந்தார் சன்னி லியோன். போதாக்குறைக்கு, இணையத்தில் கசாப்புக்கடையில் தொங்கும் உரித்த ஆடு போல சன்னி லியோனின் படங்கள் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தன. இப்போதெல்லாம் இந்தி சினிமாக்களில் தாராளமயமாக்கல் கொள்கை தண்ணீர்பட்ட பாடாகிவிட்டதால், ‘வந்ததும் பார்த்துடணுமய்யாஎன்று நண்பர்கள் வட்டாரத்தில் ஏகோபித்த தீர்மானம் எப்போதோ நிறைவேற்றப்பட்டிருந்தது. ஓ.சியில் பார்த்ததாலோ என்னவோ, படமும் எனக்கு அவ்வளவு மோசமாக இருப்பதாய்ப் படவில்லை.

       விமர்சனம் என்று வந்துவிட்டால், கதையைப் பற்றி இரண்டு வரியாவது எழுதாவிட்டால், ‘மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்என்ற கிண்டலுக்கு ஆளாக நேரிடும். எனவே....

       இஸ்னா (சன்னி லியோன்) ஒரு ஆபாசப்பட நடிகை. அவரது முன்னாள் காதலனும் இன்னாள் கொலைகாரனுமான கபீர் (ரந்தீப் ஹூடா) தேசத்தின் பிரமுகர்களைக் குறிவைத்துத் தீர்த்துக் கட்டுகிறவன். வயிற்றுப்பிழைப்புக்காக (?) தினம் ஒரு ஆடவருடன் புழங்கிக்கொண்டிருக்கும் இஸ்னாவை அணுகுகிறான், ஒரு அனாமத்து ரகசிய புலனாய்வுத்துறையில் பணிபுரியும் கதாநாயகன் அயான் (அருணோதய் சிங்). கபீரின் ரகசியங்களைக் கண்டுபிடித்து நாட்டைக் காப்பாற்ற இஸ்னாவின் உதவியை நாடுகிறான் அயான். அதைத் தொடர்ந்து இருவரும் கபீரைத் தேடி இலங்கைக்குச் சென்று சிலபல முத்தங்கள் பரிமாறி, ஓரிரு டூயட்டுகளுக்கு உதடசைத்து, முக்கோணக்காதலில் திக்குமுக்காடி, உணர்ச்சிமயமாக வசனம் பேசி, பெரும்பாலான காட்சிகளில் போனால் போகிறதுஎன்பதுபோல குறைந்தபட்ச உடைகளோடு நடமாடி, ஒருவழியாக தங்களது தேசபக்தியை இறுதியில் நிலைநாட்டுகிறார்கள்.

       இப்போதெல்லாம் தீவிரவாதம், தேசபக்தி ஆகிய கருவேப்பிலை, கொத்துமல்லி இல்லாமல் இந்தியில் பக்த பிரகலாதா படம்கூட எடுக்க முடியாது போலிருக்கிறது. ஒரு வித்தியாசத்துக்காக இலங்கைப்பக்கமாகப் போய், கண்ணுக்குக் குளிர்ச்சியாக பளிச்சென்ற இயற்கைக்காட்சிகளைப் படம்பிடித்து வந்திருக்கிறார்கள். அப்புறம், இது போன்ற B-Complex தேசபக்திப்படங்களில் இருந்தே தீர வேண்டும் என்பது போல கதாநாயகியின் முதுகை எல்லா கோணங்களிலும் படம்பிடித்து ‘சாவுங்கடா என்று காண்பிக்கிறார்கள். முதுகுக்கும் தேசபக்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமெனில், தெரிந்தவர்கள் சட்டைபோட்டுக் கொண்டு வந்து விளக்கவும்.

       பொதுவாக கதையில் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பது விமர்சகர்களின் முக்கிய வேலை. இயக்குனர் பூஜா பட் நமக்கு அந்த சிரமத்தை வைக்காமல், எக்கச்சக்க ஓட்டைகளை வைத்தே ஒரு கதையை ஒப்பேற்றி இருக்கிறார்.

       இந்தப் படத்தை இறுதிவரை பொறுமையாக பார்க்க வைத்த அம்சங்கள் (சன்னி லியோன் தவிர) ஒளிப்பதிவும், இசையும் தான். திரைக்கதை ஆங்காங்கே முக்கிய கதாபாத்திரங்கள் போலவே திருதிருவென்று விழித்தாலும், அதிக வளவளப்பில்லாத வசனங்களும், படப்பிடிப்பும், முக்கியமாக படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கின்றன.

       இந்தப் படத்தைப் பெரும்பாலானவர்கள் சன்னி லியோனுக்காகவே பார்க்க வந்திருப்பார்கள் என்பதால், முதலில் அவரைப் பற்றிச் சொல்லி விடலாம்.
      
       அறிமுகக் காட்சியிலேயே ‘பைசா வசூல்என்பதைப் புரிய வைக்கிற திடுக்கிட வைக்கும் கவர்ச்சி! உடை விசயத்தில் அதிக செலவு வைக்கவில்லை என்றாலும் ஓரிரு காட்சிகளுக்குப் பிறகு அவரது தோற்றமும் உடல்மொழியும் சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துவது உண்மை. நடிக்க முயன்றிருக்கிறார் என்பது தெரிவதோடு, சில இடங்களில் அந்த முயற்சி நகைப்புக்குரியதாகியிருப்பதுதான் கொடுமை! அனேகமாக யாரோ டப்பிங் செய்திருப்பார்கள் என்றாலும், இப்படி தூரதர்ஷனில் செய்தி வாசிக்கிற மாதிரி பேசி கடுப்பேற்றியிருக்க வேண்டாம். ஆனால், வருகிற ஒவ்வொரு காட்சியிலும் திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஊடகங்களில் அவரது நடிப்பு எள்ளி நகையாடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. ( இந்த CNN-IBN  ராஜீவ் மசந்தை எப்பய்யா நாடுகடத்தப் போறீங்க?)

       படம் பார்த்துவிட்டு வருகிறவர்களிடம் யாராவது போய் ‘சன்னி லியோன் நடிப்பு எப்படி?என்று கேட்டால், அவர்கள் அசடுதான் வழிய வேண்டும். இந்த விமர்சகர்கள் ஏன் இப்படி புகாரி ஹோட்டலுக்குப் போய் புளியோதரை கேட்கிறார்களோ தெரியவில்லை.

       இந்திய சினிமாவுக்கு இப்படத்தில் வருகிற சில காட்சிகள் ரொம்பவே துணிச்சலாகப் படம்பிடிக்கப் பட்டவைதான்! ஆனால், இயந்திரத்தனமாக இருப்பதனாலோ என்னவோ சுவாரசியம் தட்டவில்லை. கதாநாயகன் நாயகி கெமிஸ்ட்ரி என்று சொல்வார்களே, அது எந்தக் காட்சியிலும் தென்படாததால் ஒட்டவில்லை.
      
       அயானாக வரும் அருணோதய் சிங்கும், கபீராக வரும் ரண் தீப்ஹூடாவும் சட்டை போடுவது பஞ்சமாபாதகம் என்பதுபோல பெரும்பாலான காட்சிகளில் தங்களது புஜபலபராக்கிரமங்களைக் காட்டியவாறே வருகின்றனர். இருவரில் நடிப்பில் தேறுபவர்கள் ரண்தீப் ஹூடா தான்!

       மொத்தத்தில், இந்தப் படத்தைப் பார்ப்பதனால் யாரும் அந்தகூபத்துக்குச் செல்லப்போவதில்லை என்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

       அது சரி, நம்ம ஊர் ஷகீலா, கின்னாரத்தும்பிகள் போன்ற படங்களில் நடித்துவிட்டு, ஊர் ஊராக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, அமெரிக்காவிலிருந்து பலான பலான படத்து நடிகையை இறக்குமதி செய்து எடுத்த படத்தை மல்ட்டிப்ளக்ஸுகளில் ஆணும் பெண்ணும், கோக்கும் பாப்கார்னும் காம்போவில் வாங்கிக்கொண்டு, கண்டு களிப்பது நமது ரெண்டுங்கெட்டான் கலாச்சாரத்துக்கு ஒரு நல்ல சான்று!

       அடுத்து யாரை வைச்சுப் படம் எடுக்கப்போறீங்க சாமிகளா? பீ குவிக்! :-)

Thursday, August 2, 2012

ரசிகர்களை ஏமாற்றிய பில்லா-IIபடம்: பில்லா-II
தயாரிப்பு: ஜந்தர் மந்தர் பிக்சர்ஸ்
எடிட்டிங்: பிரசாந்த் பூஷண்
ஒலிப்பதிவு: அர்விந்த் கேஜ்ரிவால்
ஓளிப்பதிவு: கிரண் பேடி
கதை,திரைக்கதை,வசனம் & டைரக்‌ஷன்: அண்ணா ஹஜாரே

நடிகர்கள்: அண்ணா ஹஜாரேயும் 40 தொண்டர்களும்.

      பிரபலமான கதாநாயகன், கனல்பறக்கும் வசனங்கள், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், திகிலூட்டும் சண்டைகள் என்று பல அம்சங்கள் இருந்தாலும், வலுவான திரைக்கதை இல்லாவிட்டால், எவ்வளவு பிரம்மாண்டமான தயாரிப்பாக இருந்தாலும், படுத்துவிடும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

      கதை: கதாநாயகன் அண்ணா ஹஜாரே திருமணமாகாத ஒரு முன்னாள் ராணுவ வீரர்! (இதை எல்லா காட்சியிலும் திரும்பத் திரும்பச் சொல்லியிருப்பது அலுப்பூட்டுகிறது.) அண்ணாவின் ஊரில் காங்கிரஸ் என்ற ஒரு பண்ணையார் தனது 15 அடியாட்களுடன் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார். இதைக் கண்டு பொங்கியெழும் அண்ணாவும், அவரது தம்பிகளும், தங்கைகளும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.

      15 அடியாட்களும் அவர்கள் மீது அவர்களே வழக்குப்போட்டு, அவர்களை அவர்களே குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கி, அவர்கள் கையில் அவர்களே விலங்கு போடும்வரை நாங்கள் மம்மம் சாப்பிட மாட்டோம் என்று சபதம் மேற்கொள்கிறார்கள். அத்தோடு முந்தைய படத்தில் அந்தப் படத்தின் வில்லன் கடத்திக் கொண்டுபோன கதாநாயகி லோக்பாலையும் மீட்டு வருவதாகச் சூளுரைக்கின்றனர். இறுதியில், ‘அந்தக் கதாநாயகி வரமாட்டாள்; நாங்கள் இன்னொரு படம் எடுத்து புதிய கதாநாயகியை அறிமுகப்படுத்துகிறோம்என்று வில்லன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுச் சொல்லிவிட்டு, ஊரை விட்டே ஓடுகிறார்கள்.

      இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ராஜ்காட்டில் கதாநாயகன் ‘ நானடிச்சா தாங்க மாட்டே; நாலுமாசம் தூங்க மாட்டே!என்று கூட்டத்தோடு பாடிக்கொண்டு வருவதுபோலப் படமாக்கப்பட்ட விதம் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், பாடல் முடிந்ததும் துணை நடிகர்கள் உட்பட அனைவரும் மாயமாய் மறைந்து போனதும், அதைத் தொடர்ந்து கௌரவ நடிகராக வரும் பாபா ராம்தேவ் வந்து என்கிட்டே மோதாதே!” என்று பாடி கைதட்டலை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார். இந்த இடத்தில் திரைக்கதையில் ஏற்படும் தொய்வு இறுதிவரை தொடர்கிறது.

      கதாநாயகி லோக்பாலை முதலில் மீட்பதா அல்லது 15 அடியாட்களைப் பழிவாங்குவதா என்று கதாநாயகனும் அவரது சகாக்களும் சண்டையிட்டு மூக்கிலிருந்து ரத்தம் வடிகிற காட்சிகள் இதுவரை காணாத நகைச்சுவை! இது தவிரவும் படத்தில் ஆங்காங்கே வருகிற பல வீராவேசமான வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறது.

      நானும் ரவுடிதான்! என்னையும் ஜீப்புலே ஏத்துங்க!என்று அர்விந்த் கேஜ்ரிவால் உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைகிற காட்சியில், பக்கத்திலிருந்தவர் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்ததில் அவரது பல்செட்டு கழன்று பக்கத்துத் திரையரங்குக்குள் சென்று விழுந்து விட்டது.

      அடிவாங்குனது நாங்க! கப்பு எங்களுக்குத்தான்!என்று பிரசாந்த் பூஷண் கோதாவில் இறங்கி கர்ஜிக்கும்போது, ‘இது கார்ட்டூன் நெட்வொர்க் படத்தை விட நல்லாயிருக்கு,என்று குழந்தைகளும் குதூகலிப்பதைக் காண முடிந்தது.

      கூட்டமே வரவில்லையே என்று கேட்டவுடன், ‘பன்னிங்கதான் கூட்டமா வரும்; சிங்கம் வரவே வராது,என்று அண்ணா கூறிய பஞ்ச் டயலாக் ஆரவாரமாக வரவேற்கப்பட்டதையும் காண முடிந்தது.

      இப்படியே பட்டினி கிடந்தால் உயிருக்கு ஆபத்தாச்சே?என்று கேட்டதும், ‘பட்டினி கிடந்து செத்தாலும் சாக மாட்டோம்,என்று கிரண் பேடி பதிலளிக்கிற காட்சியில் ஆபரேட்டரே அரண்டுபோய் அரங்கத்தைவிட்டு ஓடிவிட்டதாக அரசல்புரசலாகப் பேசிக் கொள்கிறார்கள்.

      ஆனாலும், இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் பார்க்க அடுத்த படத்தையும் பார்க்க வேண்டும் என்று இடைவேளையிலேயே கார்டு போடுவது மோசமான டைரக்‌ஷன் ஆகும்! இருந்தாலும், பின்பாதியில் வருகிற சில உருக்கமான வசனங்கள் கல்மனதையும் கரைய வைப்பதாய் இருக்கின்றன.

      எங்க காலில் வந்து விழுங்கன்னு எம்புட்டு நாளா காலை நீட்டிட்டுப் படுத்திருக்கோம். ஒரு பய கூட வரலியே! இந்த வில்லனுங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதா? “ என்று அண்ணா ஹஜாரே கேட்கிற காட்சியில் ஆளாளுக்குக் கர்ச்சீப்பைப் பிழிந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

      மரியாதையா எங்க காலில் வந்து நீங்க விழுங்க! இல்லாட்டி உங்க காலில் நாங்க வந்து விழணும்னாவது சொல்லுங்க! இப்படி ஒண்ணுமே சொல்லாட்டி எப்படி?என்று கிரண்பேடி கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்கிற காட்சி லேடீஸ் ஆடியன்ஸுக்கு மிகவும் பிடித்தமான செண்டிமெண்ட் காட்சியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

      பொதுவாக, நல்லவனாக இருக்கும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் வில்லனை எதிர்கொள்ள கெட்டவனாக மாறுவது பன்னெடுங்காலமாக திரைப்படங்களில் காணப்படுகிற உத்தி. ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை, கதாநாயகனின் மாற்றத்தை அடுத்த படத்துக்கு ஒத்தி வைத்திருப்பதுதான் படத்தின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

      படம் பார்க்கிற ஜனங்களே! நீங்களே சொல்லுங்க! நாங்க இருக்கிறதா, சாவுறதா? என்று பார்வையாளர்களைப் பார்த்து இறுதிக்காட்சியில் கதாநாயகன் கேட்பதும், அதைப் பார்த்துக்கொண்டு வில்லன் கோஷ்டி தலையிலடித்துக் கொண்டு சிரிப்பதும் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு சற்றும் ஒவ்வாத காமெடி!

      இந்தப் படம் எல்லா அரங்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம். திருட்டு விசிடிக்க்காரர்கள் கூட இப்படத்தைப் பகீஷ்கரித்து விட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, ஜந்தர் மந்தர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு வெளிவரும் வரையில், பார்வையாளர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று தில்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.