Sunday, April 22, 2012

மாப்பிள்ளை வந்தார்..! மாப்பிள்ளை வந்தார்..!!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Tuesday, April 17, 2012

ஆடிய ஆட்டமென்ன…?


என்ன பாடு படுத்திவிட்டதய்யா இந்த நிலநடுக்கம்?

       ஏப்ரல் 11 அன்று அலுவலகம் போகவில்லை என்றாலும், வழக்கத்தை மாற்ற முடியாமல் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தேன். நண்பகல் 12 முதல் 2 மணிவரைக்கும் மின்வெட்டு என்பதால், அந்த இரண்டு மணி நேரமும் பொதுவாக யாரும் கனவில் வருவதில்லை. அப்படியொரு முறை மின்வெட்டில் கனவு வந்ததும் திடுக்கிட்டு விழித்துவிட்டேன். பின்னே? ஓரிரு நாட்கள் கழித்து கே-டிவியைப் பார்த்தபோதுதான், கனவில் வந்தவர் பெயர் கே.என்.கோமளம் என்ற பழைய காலத்து நடிகை என்று அறிந்து கொண்டேன். (என் அட்ரஸ் அவருக்கு எப்படிக் கிடைத்தது என்றுதான் புரியவில்லை.)

       ஆனால், ஏப்ரல் 11 அன்று நடந்ததே வேறு! ரெடி படத்தில் பஸ்ஸின் மீது ஆடுவது (?) போல என் கட்டிலின் மீது ‘தின் கா சிக்கா.. தின் கா சிக்கா.. தின் கா சிக்கா.. தின் கா சிக்கா..ஹே..ஹேஹே..ஹே! ஹே..ஹேஹே..ஹே!என்று அசின், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் என்று ஒரு பெரிய பட்டாளமே ஆடுவதுபோல ஒரு உணர்வு.

       ஆடுறதுதான் ஆடறீங்க, கட்டிலை விட்டுக் கீழே இறங்கி அலேக்ரா மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடலாமில்லே?என்று தூக்கத்திலும் எனது ஸ்ரேயாசையை, அதாவது பேராசையை விடாமல் நான் முணுமுணுத்தேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் எனது கட்டிலும் ஆட ஆரம்பித்ததும்தான், நான் சட்டென்று கண்விழித்தேன். துவைத்து ஹாங்கரில் காயப்போட்டிருந்த எனது பேண்ட் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. மேஜையில் வைத்திருந்த ஏர்டெல் தொலைபேசியின் கேபிள்கள் தின் கா சிக்கா தின் கா சிக்கா என்ற பாட்டுக்கு ஏற்றமாதிரி ஆடியது. அதே சமயம், வெளியே யாரோ திபுதிபுவென்று ஓடுவது போல சத்தம் கேட்டது. என்ன ஆச்சு?

       தூக்கம் போச்சேஎன்று முணுமுணுத்தவாறே சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியதும், வாசலருகே கீழ்வீட்டு ராமாமிர்தம் வழக்கத்தைவிட அதிகமாகவே திருட்டுமுழி முழித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன்...

       என்ன சார்? ஆட்டம் எப்படி இருந்திச்சு?என்று அவர் கேட்டதும் நான் அதிர்ந்து விட்டேன். இவருக்கு எப்படி நான் ‘தின் கா சிக்கா...தின் கா சிக்காஆட்டம் பார்த்தது தெரியும்?

       சார், உங்க வீட்டு மாமி சொன்னதை வைச்சு உங்களையும் என்னை மாதிரியே ஒரு வடிகட்டின இடியட்னு நினைச்சிட்டிருந்தேன். எப்படி சார் கண்டுபிடிச்சீங்க? உங்களுக்கு இந்த மாதிரி எத்தனை சித்தி தெரியும் சார்?

       ஒரே ஒரு சித்தி, அம்பத்தூரிலே இருந்தா, அவளும் போயிட்டா! நான் ஆட்டம்னு கேட்டது....

       அவர் முடிப்பதற்குள், செல்போன் மணியடித்தது. வைத்தி!

       டேய் சேட்டை, மத்தியானம் இரண்டு மணிக்கு எங்கடா இருந்தே?

       ஏண்டா, ரெண்டு மணிக்கு யாராவது சுரேந்திரனை மர்டர் பண்ணிட்டாங்களா?

       டேய், டோண்ட் ஜோக்! நாங்கல்லாம் தெருவிலே நிக்கிறோண்டா! தெரியுமா?

    அப்படியா? ஒரு நா இல்லாட்ட ஒரு நா நீ தெருவுலே நிப்பேன்னு எனக்கு எப்பவோ தெரியுண்டா!

       மகாபாவி, சென்னையிலே நிலநடுக்கம் வந்திருக்கு!

       என்னது நிலநடுக்கமா? யூ மீன் எர்த் க்வேக்?

      எதுக்குடா மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழிலயும் இங்கிலீஷ்லயும் கேட்டுக் கழுத்தறுக்கிறே? வீட்டுலே இருக்கியே, விசாரிக்கலாமுன்னு கூப்பிட்டா, வழக்கம்போல இப்பவும் ஜிங்குஜிக்கா ஜிங்குஜிக்கான்னு துள்ளறியே!

       அது ஜிங்குஜிக்கா இல்லேடா! தின் கா சிக்கா!

       ரொம்ப முக்கியம்! சுரேந்திரன் போனை எடுக்க மாட்டேங்குறான்! அவனுக்குப் போன் பண்ணி பத்திரமா இருக்கானான்னு கேளு!

       உசிரோட இருந்தாக் கேட்டுத் தகவல் சொல்றேன்.

       டேய்ய்ய்ய்ய்ய்!வைத்தி பேச்சைத் துண்டித்தான். என்ன செய்வது, சுரேந்திரனின் நம்பரைப் போட்டுப் பேசினேன்.

       ஹலோ, பறையூ!என்று சுரேந்திரன் குரல் கேட்டது.

       இப்ப எங்கடா இருக்கே?

       வடபழனி ஹண்டரட் ஃபீட் ரோடு? எந்து பற்றி?

       வடபழனியா? அங்கே நல்ல நாள்லே நடந்துபோனாலே நிலநடுக்கம் மாதிரித்தான் இருக்கும். அவ்வளவு பள்ளம். டேய், கொஞ்ச நேரம் முன்னாடி நிலநடுக்கம் வந்துச்சாம். தெரியுமா?

    ஆணோ? எனிக்கு அப்போழே சம்ஸயம் உண்டாயிருன்னு! எந்தா, வண்டி ஓட்டிட்டிருக்கும்போதே திடீர்னு ரொம்ப ஆடுதேன்னு...

       டேய், உன் வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தினாலும் அது ஆடிக்கிட்டுத்தான் இருக்கும்!  நீ பத்திரமா இருக்கேல்ல, அது போதும்! சென்னை முழுக்க நிலநடுக்கம்னு எல்லாரும் பயந்து நடுங்கிட்டிருக்காங்க! நீ வேறே உன் வண்டியை ஓட்டிக்கிட்டுப் போயி கலவரத்தைப் பெரிசாக்கிடாதே!

       பேசிமுடித்துவிட்டுப் பார்த்தபோது, ராமாமிர்தம் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்.

       பூஜா! உங்க வீட்டுலே ஆட்டம் வந்ததா?

       ஹேமா! உங்க வீட்டுலே ஆட்டம் வந்ததா?

       சரண்யா, உங்க வீட்டுலே ஆட்டம் வந்ததா?

     பல்லைக் கடித்துக்கொண்டேன். நிலநடுக்கத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ஃபிகர் வீட்டுக்கதவையும் தட்டி, இவர் பண்ணுகிற அலப்பறையை எப்படியாவது நிறுத்தணுமே? என்ன செய்யலாம்?

       தூரத்தில் பாகீரதி ஆண்ட்டி ஆட்டோவிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

       ஆண்ட்டி, உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே!பதட்டமாய் விசாரித்தேன். “ஊரெல்லாம் நிலநடுக்கம்னு ஒரே கலவரமா இருக்கு.

       எனக்கு ஒண்ணுமே தெரியலையே!

       எப்படித் தெரியும், நிறைய பேரு பூகம்பம் வந்ததுக்கே உங்க மேலேதான் சந்தேகப்பட்டுக்கிட்டிருப்பாங்கஎன்று மனதுக்குள் எண்ணினாலும்...

       நல்லதுதான்! ஆனாலும் ஆண்ட்டி, ராமாமிர்தம் அங்கிள் மாதிரி ஒருத்தரைப் பார்க்கிறது அபூர்வம். ஒவ்வொரு வீடாப் போயி, அதுவும் வயசுப்பொண்ணுங்க இருக்கிற வீடாப் போயி எவ்வளவு அக்கறையோட விசாரிக்கிறாரு பாருங்க!

       பாகீரதி ஆண்ட்டி ராமாமிர்தத்தை முறைத்துப் பார்த்தாள்.

       ஓஹோ! என்னை மாம்பலத்துக்கு அனுப்பிட்டு, இந்த மனுசன் இந்த வேலை பண்ணிண்டிருக்காரா? கவனிச்சுக்கிறேன்!

       மாமி படியேறுவதைப் பார்த்த ராமாமிர்தத்தின் முகம், ‘3படத்தை முதல்காட்சி பார்த்ததுபோல வெளிறிப்போனது. ‘ராமாமிர்தம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பஞ்சாமிர்தம் ஆகப்போகிறார்! உண்மையான நிலநடுக்கம் இனிமேல் தான் அவருக்கு!

       சாயங்காலம் பார்த்தால் அவரிடம் கண்டிப்பாய் விசாரிக்க வேண்டும்.

       என்ன சார்? ஆட்டம் எப்படி இருந்திச்சு?