Thursday, August 25, 2016

ஜோக்கர் – எதிர்மறை கோடல்


இது - திரைப்படம் என்பது அடிப்படையில் கேளிக்கையாக இருத்தல் போதுமானது என்ற எளிமையான அணுகுமுறையுடன் சினிமா பார்த்து வருகிற ஒரு சராசரி மனிதனின் விமர்சனம். ஆகவே, ‘சினிமா விமர்சனத்துக்கு நாங்கள்தான் அதாரிட்டி’ என்று கூரைமேல் ஏறி நின்று கூவுகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல், அடுத்த படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதி சமூகத்தொண்டு ஆற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம், அடியேன் காலிவுடத்திலிருந்து(Hollywood) கரைபுரண்டோடி வருகிற ஆங்கிலப்படங்களைக் கண்டுகளித்துக் கொண்டிருப்பவனல்லன்; கொரிய மொழிதனில் கொட்டிக்கிடக்கிற அரிய படங்களை அள்ளித்தின்று அஜீரணத்தில் அவதிப்படுபவனும் இல்லை; கிறித்தோபர் நோலனார்(Christopher Nolan), இசுடீவன் இசுபீலபர்க்(Steven Spielberg) இன்னாரன்னோரின் இணையற்ற திரைக்காவியங்களைக் கண்டு இன்புற்றவனும் அல்லன். சிதபீளடர்(Sydfield) எழுதிய திரைக்கதைச் சாத்திரத்தைக் கரைத்துக் குடித்து, அனைத்து சினிமாக்களுக்கும் பிரேதப்பரிசோதனை செய்கிற திறனும் எனக்கில்லை. சராசரி, அல்லது அதற்கும் கீழான ரசிகன் என்பதில் எனக்கு ஒரு வெட்கமும் இல்லை.
சத்யத்ஜித் ரே, மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், பார்த்தோ கோஷ், கிரீஷ் கர்னாட் போன்ற அதிமேதாவிகளின் படங்களைப் பார்ப்பது எனக்கு அல்சரில் அவதிப்படுவதற்கு ஒப்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிறைவேறாத ஆசையுடன் அகாலமரணம் அடைந்த இந்த ‘ஆர்ட் ஃபிலிம்’ என்பதன் ஆவி, அவ்வப்போது தலைகாட்டியபோதெல்லாம் அந்தப் பக்கம் நான் நடமாடுவதையே தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவது வழக்கம்.
மனோதத்துவத்துவத்தில் ‘எதிர்மறை கோடல்(Negative Bias)’ எனப்படுகிற ஒரு சங்கதி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சில அழகான ஓவியங்களையும் சில அலங்கோலமான ஓவியங்களையும் காட்டுகிறபோது, இரண்டாம் ரக ஓவியங்கள் மூளையில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சற்று உடல்கூறியலும் தெரிந்தவர்களிடம் உரையாடினால், இந்த எதிர்மறை கோடல் எனப்படுவது மனிதனின் தற்காப்பு உணர்ச்சியை வளர்த்துக் கொள்வதற்காக இயற்கையாகவே சற்று அதிகப்படியாக அளிக்கப்பட்டிருப்பதை அறிய நேரிடும். ‘ஜோக்கர்’ திரைப்படம் என்னைப் பொறுத்தமட்டில், அனேகமாக தமிழ்த் திரையுலக வரலாற்றில், அலுப்பூட்டுகிற அளவுக்கு எதிர்மறைக்கோடலைக் கையாண்ட படமாக இருக்கிறது. ஒரு எழவு வீட்டுக்குச் சென்று வந்தது போலிருக்கிறது.
அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமங்கள் இந்த நாட்டில் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இந்த ஒற்றைக்கருவை வைத்துக் கொண்டு, அதில் உலகமயமாக்கல், மணல் கொள்ளை, நிலத்தடி நீர் பிரச்சினை, மூட நம்பிக்கை, லஞ்சம், ஊழல், அலட்சியம் என்று எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் தலா ஒரு துளி சேர்த்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட இருளோவியத்தை வரைந்து, ‘எல்லாரும் ஜோக்கர்கள்’ என்று முடித்திருக்கிறார்கள்.
4ஜி செல்போன் புழங்குகிற கிராமத்தில் கழிப்பறை கிடையாது. அதனால், நாயகி திருமணத்துக்கு முதலில் மறுத்து, பிறகு சம்மதித்து, அதே கழிப்பறையில் காயமுற்று கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறாள். உடனே நாயகன், ஒரு செல்போன் கோபுர உச்சியிலிருந்து நாட்டின் குடியரசுத்தலைவராகப் பிரகடனம் செய்து கொண்டு, உத்தரவுகளாகப் பிறப்பித்துத் தள்ளுகிறார். இந்த அபத்தமான கற்பனையின் அடிப்படையில், ஒரு மேடை நாடகத்தின் பாணியில் எல்லாரையும் கலாய்த்து, எல்லாவற்றையும் குற்றம்சாட்டி ஒரு மிகையான ஆவணப்படத்தை எடுத்து இம்சித்திருக்கிறார்கள். நல்ல வேளை, பாத்திரப்படைப்பில் இருக்கிற குறைபாடுகள் தெரியாதபடி, நடித்தவர்கள் மெனக்கெட்டு ஒப்பேற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு நம்மை பாப்பிரெட்டிபட்டியில் வலம்வரச் செய்திருக்கிறது. பாடல்கள் சற்றே கேட்கும்படியாக இருக்கிறது. (பின்னணி இசை நாராசம்)
அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட பல வசனங்களை எடுத்துக் கையாண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. திரையரங்கில் பலர் வலிந்து வலிந்து கைதட்டினார்கள். இது போன்ற படங்களில் அமங்கலமான வார்த்தைகளைப் புழங்க விடுவது ஒரு நல்ல வர்த்தக உத்தி. ’இங்கே வாழறதுதான் கஷ்டமா இருக்குன்னா, இப்ப பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்க’ என்று ஒரு வசனம் ஒரு சாம்பிள். என்னவோ இதையெல்லாம் ராஜு முருகன் சொல்லித்தான் தமிழ்கூறும் நல்லுலகமே புரிந்து கொண்டிருப்பதுபோல, அதற்கு ஜல்லியடிக்கிற ஒரு முகநூல் கும்பல் வேறு!
நிலத்தடி நீரை பாட்டிலில் அடைக்கிற தொழிற்சாலையில் வேலைபார்த்து, லாரியில் ஏறி அரசியல் கூட்டங்களுக்குப் போய், முண்டியடித்து குவார்ட்டரையும் பிரியாணியையும் வாங்குகிற நாயகனுக்கு, தன் வீட்டில் ஒரு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான், ஞானோதயம் பிறக்கிறது. இவனுக்கும் சராசரி மசாலாப்பட நாயகனுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறதோ தெரியவில்லை. (யாராவது ஆராய்ச்சி பண்ணி எழுதுவார்கள் என்று நம்புவோம்). ஒவ்வொரு சராசரி மனிதனும் தனக்கு ஒரு இடையூறு ஏற்படுகையில்தான், எதிர்க்கிற எண்ணம் துளிர்க்கும் என்பது இயல்பு. சில சினிமாக்காரர்கள் அவரவர் படங்களின் திருட்டு விசிடி வந்தால் குய்யோ முய்யோவென்று கத்துவார்கள் இல்லையா, அது போல! உலகமெங்கும் இதே விதிப்படித்தான் மனித சமூகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
ஏதோ ஒரு ஊரில் எவனோ ஒரு கிறுக்கன் எதையெதையோ உளறித் திரிவதையெல்லாம் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பக்ருதீன் அலி அகமது அவசரநிலைப் பிரகடனத்தைப் பிறப்பித்தார் என்பதை வைத்து நாயகன் தன்னை ஜனாதிபதியாக அறிவிப்பதாகக் காட்டியிருப்பதெல்லாம் சரியான காமெடி. ஆகவேதான், மன்னர் மன்னன் நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதாக அறிவிக்கிறபோதும் எனக்கு ஒரு நமுட்டுச் சிரிப்பே வந்தது. டைரக்டர் சார், ராணுவ ஆட்சி அமல்படுத்தினால், நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று எந்த வரலாற்றில் படித்தீர்கள்? ஒரு எமர்ஜென்ஸி இந்த நாட்டை எப்படிப் புரட்டிப் போட்டது என்று தெரியுமா?
மன்னர் மன்னனை அனைவரும் காமெடிப்பீஸ் என்று கருதுவதில் எந்தத் தவறும் இல்லையென்றே நான் கருதுகிறேன். ஒரு கழிப்பறை விஷயத்தில்கூட இந்த நாட்டில் பல அவலங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது என்பதுவரையில் மறுப்பதற்கில்லை. ஆனால், அங்கிருந்து பிரச்சினைகளை நேர்கொள்ள நாயகன் மேற்கொள்ளுகிற உத்திகள், அவனது குறிக்கோள் தீர்வுகள் காண்பதா அல்லது வெறும் விளம்பரம் தேடலா என்பதைத் தெளிவாகச் சொல்லித் தொலைத்திருக்கலாம். காரணம், அவ்வப்போது ‘ஃபேஸ்புக்’ ‘வாட்ஸாப்’ நிலவரங்களை அறிந்து கொள்கிறார். சரி, அவருக்குத்தான் மறைகழண்டு போயிருக்கிறது என்றால், அவரது அபத்தமான போராட்டங்களுக்கு ரெண்டு பேர் சப்போர்ட் வேறு! தும்மினால் வழக்குப்போடுகிற பொன்னூஞ்சல் என்ற கதாபாத்திரம், திடீரென்று ஒருவன் ‘ நான் பிரெசிடெண்ட் பேசுகிறேன்’ என்று போன் செய்தவுடன், அகமும் முகமும் மலர்ந்து ‘சொல்லுங்க பிரெசிடெண்ட் சார்’ என்று அவரது தலைமையில் போராட்டத்தில் குதிக்கிறாராம். இப்படியொரு அபத்தத்தை ஒரு பக்கா மசாலாப்படத்தில்கூட நான் பார்த்ததில்லை.
மன்னர் மன்னனாக நடித்திருக்கும் சோமசுந்தரம், மல்லியாக வருகிற ரம்யா பாண்டியன், இசையாக வரும் காயத்ரி கிருஷ்ணா, பொட்டி கேஸ் பொன்னூஞ்சலாக வருகிற ராமசாமி இவர்கள் இந்தப் படத்துக்கு தங்களது நடிப்பால் நிறையவே ஆக்ஸிஜன் ஏற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இடைவேளையோடே தேவி பாலாவை விட்டு தலைதெறிக்க ஓடித் தப்பித்திருப்பேன்.
ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்புகளிலும் வருகிற ‘மீம்ஸ்’களைத் தொகுத்து ஒரு படம் எடுத்தால், அது எப்படியிருக்கும் என்பதற்கு இந்த ‘ஜோக்கர்’ ஒரு உதாரணம். வேடிக்கை என்னவென்றால், கடவுள் தொடங்கி கடைக்கோடி குடிமகன் வரை அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் இயக்குனர் நிறுத்தியிருப்பதால், நிறைய பேருக்கு ‘இந்தப் படம் பிரமாதம்’ என்று சொல்லுவதன்மூலம் தங்களைத் தாமே தூக்கிப் பிடிக்க வசதியாக இருக்கிறது. ஆனால், நம்மைச் சுற்றி நிகழும் பல அவலங்களுக்கு நானும் பொறுப்பானவன் என்ற சொரணை எனக்கு இருப்பதால், இதுபோன்ற பொத்தம்பொதுவான மூர்க்கத்தனமான விமர்சனங்களை ‘பலே’ என்று பாராட்டி, ‘இது திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போடப்போடுகிற படம்’ என்றெல்லாம் கொடிதூக்கிக் கூவ முடியவில்லை.

இதுபோன்ற படங்கள் நிறைய வர வேண்டும் என்று ஊடகங்களில் நிறைய எழுதுகிறார்கள். அப்பாடா, சினிமாவை இப்படி ஒழித்தால்தான் உண்டு; நடக்கட்டும்.