Sunday, January 31, 2010

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை எழுத ஆரம்பிக்கிற வரைக்கும் நானும் கேள்விப்பட்டதில்லை. இனிமேல் நிறையக் கேள்விப்படுவோம். சொறிகால் வளவன் சரித்திரத்தொடர் என்பதால், அவர் நிதானமாக வருவார். ஆத்திர அவசரத்துக்கு வடக்கிலிருந்து சுட்ட ஜோக்குகளை ரீமேக் செய்து ஒரு சமகால சரித்திர நாயகனை உருவாக்க வேண்டும் என்ற தணியாத அரிப்பின் காரணமாக, இன்று ஷாஜஹான் டீ ஸ்டாலில் சமோசா கடித்தபோது எனது கற்பனையில் ஊதுபத்திப்புகை போலத் தோன்றியவரின் உருவமே - ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.

ஐயாக்கண்ணுவுக்கு மைக்ரோஸாஃப்டில் வேலை பார்க்க வேண்டும் என்று, தச்சநல்லூர் பிரவுசிங் சென்டரில் முதல் முதலாகக் கணினியைப் பார்த்த நாளதுமுதலாக ஆசை ஏற்பட்டு விட்டது. அதற்காக மிகவும் அல்லாடித்தள்ளாடி ஒரு விண்ணப்பமும் தயாரித்து பில் கேட்ஸுக்கு அனுப்பியும் விட்டார். ஆனால், அவரது துரதிருஷ்டம், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, அமெரிக்காவிலிருந்து வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் வந்து விட்டது. அதில் இருந்ததாவது.

"Dear Mr. Aiyyakkannu",(டியர் மிஸ்டர் ஐயாக்கண்ணு)

"You do not meet our requirements", (யூ டூ நாட் மீட் அவர் ரிக்வைர்மென்ட்ஸ்)

"Please do not send any further correspondence". (ப்ளீஸ் டூ நாட் செண்ட் எனி ஃபர்தர் கரஸ்பாண்ட்ன்ஸ்)

"No phone call shall be entertained", (நோ ஃபோன் கால் ஷல் பீ என்டர்டைன்ட்)

"Thanks", (தேங்க்ஸ்)

ஐயாக்கண்ணு ஆகாசத்துக்கும் பூமிக்குமா சந்தோஷத்துலே குதிக்க ஆரம்பிச்சிட்டாரு. அவருக்கு இடுக்கண் வருங்கால் நகுக குறளும் தெரியாது; இங்கிலீஷும் தெரியாது. ஏன் குதிச்சாருன்னு கேட்கறீகளா? கேளுங்கப்பு....!


சுத்துப்பட்ட எட்டுப்பட்டியையும் கூப்பிட்டு கடாவிருந்து வச்சாரு ஐயாக்கண்ணு. பொறவு, எல்லாருக்கும் அமெரிக்காவுலேருந்து வந்த லெட்டரை எடுத்து வாசிச்சுக் காண்பிக்க ஆரம்பிச்சாரு.

"மக்கா! அமெரிக்காவுலேருந்து பில் கேட்ஸு லெட்டர் போட்டிருக்காருலே! படிக்கேன் கேளுங்க...,"ன்னு படிக்க ஆரம்பிச்சாரு.

"உங்களுக்கெல்லாம் இங்கிலீஷ் தெரியாதுன்னு தெரியும்லே. லெட்டரை வாசிக்கும்போது ஒடனுடனே தமிழிலேயும் சொல்லுகேன். கேளுங்க..."

எட்டுப்பட்டி சனமும் குத்துக்கால் போட்டுக்கிட்டு ரொம்ப கவுரதையா கேட்க ஆரம்பிச்சாங்க. ஐயாக்கண்ணு படிக்காரு கேளுங்க....!

"டியர் மிஸ்டர் ஐயாக்கண்ணு", அதாவது.........அன்புள்ள ஐயாக்கண்ணு அண்ணாச்சி.....!"

"யூ டூ நாட் மீட்.....! என்ன சொல்லுகாரு கவனிச்சீகளா? என்னைச் சந்திக்கவே மாட்டேங்குதீக....ன்னு சொல்லுகாரு."

"அவர் ரிக்வைர்மென்ட்ஸ்", நீங்க எங்களுக்கு ரொம்ப அத்தியாவசியமில்லா...?

"ப்ளீஸ் டூ நாட் செண்ட் எனி ஃபர்தர் கரஸ்பாண்ட்ன்ஸ்". சும்மா கடுதாசெல்லாம் போட்டிட்டிருக்காதீக! தேவையில்லே அண்ணாச்சி!

"நோ ஃபோன் கால்.......", "எஸ்.டி.டியெல்லாம் பண்ணாதீக! எதுக்குங்கேன்...?

"ஷல் பீ என்டர்டைன்ட்......," உங்களை மவராசனா பார்த்துக்குவோமில்லா....?

"தேங்க்ஸ்", "ரொம்ப ரொம்ப நன்றி அண்ணாச்சி....!"


ஐயாக்கண்ணு லெட்டரைப் படிச்சு முடிச்சதும் தண்ணித்தொட்டி தொறந்து வச்ச தாசுல்தாருக்குக் தட்டுனா மாதிரி மொத்த சனமும் கைதட்டுனாக...!

"அண்ணாச்சி! எப்போ போறீக அமெரிக்காவுக்கு...?"

"அறுப்பு முடிஞ்சதும் போயிர வேண்டியது தான்," என்று பெருமிதமாகச் சொன்னார் ஐயாக்கண்ணு.

போனாரா இல்லையா? பொறுத்திருந்து பார்க்கலாம்.....!!

கடன்வாங்கிய கணங்கள்

ரொம்ப மொக்கை போட்டாகி விட்டது. கொஞ்சம் சீரியசாக எழுதினால் யாரும் கழுவிலேற்ற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

நம்மால் "ஆயிரத்தில் ஒருவன்," படத்துக்கு இரண்டாயிரமாவது விமர்சனம் எழுத முடியாது. ஒரு பிராட் பேண்டும் வாசிக்க பத்து பேரும் இருக்கிறார்கள் என்பதால் தினவெடுத்து சாருவுக்கோ, ஜெயமோகனுக்கோ திறந்த மடல்கள் எழுத முடியாது; ஏழு கோடி ரூபாய்களைக் கோட்டை விட்ட ஒரு நகைச்சுவை நடிகருக்கு ஏற்படக்கூடிய மனவேதனையை ஏளனப்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் எதையெதையோ எழுதி நமது மனதின் முகவரியை பகீரங்கப்படுத்த முடியாது. இப்படிச்செய்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதிவுகளைப் படிக்க மாட்டார்கள்; படித்தாலும் கவலைப்படமாட்டார்கள் என்பது புரியாமல் இல்லை. ஆனாலும், இருக்கிற சவுகரியத்தைப் பயன்படுத்தி சில விஷயங்களை எழுதுவதால் கிடைக்கிற சில சில்லறை மகிழ்ச்சிகளைத் தியாகம் செய்கிற பெரியமனது எத்தனை பேருக்கு வரும்? எனக்கும் இல்லையென்பதை ஊர்ஜிதப்படுத்தவே இந்தப் பதிவு.

பிப்ருவரி 14 நெருங்கியிருப்பதை நாட்காட்டிகளை முந்திக்கொண்டு வலைப்பதிவுகள் சொல்லி விட்டன.

புனித வேலன்டைன் என்பவர் ரோமாபுரியில் மூன்றாவது நூற்றாண்டில் மதகுருவாக இருந்தாராம். அப்போது ரோமாபுரியின் மன்னராக இருந்த இரண்டாம் க்ளாடியஸ் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்தாராம். காரணம், திருமணமான இளைஞர்களைக் காட்டிலும் கட்டை பிரம்மச்சாரிகளே சிறந்த போர்வீரர்களாகத் திகழ்வார்கள் என்பது அவரது நம்பிக்கை. மன்னரின் எதேச்சாதிகாரமான இந்த சட்டத்தை எதிர்த்து புனித வேலன்டைன் தனது தேவாலயத்திலேயே இளைஞர்களுக்கு ரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தாராம். இது குறித்து அறியவந்த மன்னர், புனித வேலன்டைனுக்கு மரண தண்டனை விதித்தாராம். இது காதலர் தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிற வேலன்டைன்ஸ் டே குறித்து உலவுகிற பல கதைகளில் ஒன்று.

இன்னொரு கதைப்படி, வேலன்டைன் தான் முதல் முதலாக வேலன்டைன் வாழ்த்தையே அனுப்பினாராம். சிறையில் அடைபட்டிருந்த வேலன்டைனுக்கும் சிறையதிகாரியின் மகளுக்கும் காதல் மலர்ந்ததாம். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அவளுக்கு கடைசியாக அவர் எழுதிய கடிதத்தில் "இப்படிக்கு, உனது வேலன்டைன்," என்று ஒப்பமிட்டிருந்தாராம்.

வேலன்டைன் குறித்த சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், அது குறித்து இந்தியர்களாகிய நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரே ஒரு இந்தியராக இருந்திருந்தால், அவரது வரலாற்றின் இருட்டான பக்கங்களைப் பற்றிப் பேசி, எழுதி பரபரப்பை ஏற்படுத்த நிறைய பேர் முயன்றிருப்பார்கள். வேலன்டைன் ஐரோப்பியர் என்பதால்....வடை போச்சே!

புனித வேலன்டைன் செய்தது வரலாறு இதுவரை பார்த்திருக்கக்கூடிய எந்தப் புரட்சியிலும் சளைத்ததல்ல. ஒரு சர்வாதிகாரியின் கருப்புச்சட்டத்தை எதிர்த்து ஒரு தனிநபர் போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு உலக சரித்திரத்திலும், இந்திய சரித்திரத்திலும் எண்ணிலடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. அந்தப் போராட்டம் மரணத்தில் முடிவடைகிறபோது, அவரைத் தெய்வத்துக்கு ஒப்பாகக் கருதுகிற மனப்பான்மைக்கும் குறைச்சலில்லை. புனித வேலன்டைன் இந்தியாவில் பிறந்திருந்தால் இன்று காக்கை குருவிகளின் எச்சத்தால் நிறம்மாறிய பல நூற்றுக்கணக்கான சிலைகளாகி, முச்சந்திக்கு முச்சந்தி நின்று கொண்டிருந்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், எதார்த்தம் நம் தலையில் குட்டி, "அப்படியெல்லாம் நடந்திருக்காது," என்று உறைக்குமாறு சொல்லுகிறது.

இந்தியாவில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வழிகாட்டுதலுக்குரிய பல நல்ல விஷயங்களுக்காக முன்னுதாரணம் ஏற்படுத்தியவர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், புத்திசாலிகள் அவர்களை ஒதுக்க, மதம், இனம், மொழி என்ற அளவுகோல்களைக் கண்டுபிடித்து தள்ளி வைத்து விட்டார்கள். "ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே....," என்று பாரதியார் சொன்னாலென்ன? அவர் எட்டயபுரத்தின் பொட்டல் காட்டில் பிறந்தவராயிற்றே? இப்படி காந்தி தொடங்கி ஒரு நீண்ட பட்டியல் எழுதினாலும் கூட, "சே..சே! அவரைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?" என்று சொல்லி அந்த யுகபுருஷர்களை மட்டம் தட்ட சுயபட்டாபிஷேகம் செய்து கொண்ட சில சிந்தனைச்சிற்பிகள் காளான்களைப் போலத் தலைதூக்குவர். இவர்களின் பலிபீடத்திற்கு நமது மாமனிதர்களின் இரத்தத்தைக் கொடுப்பதை விட, அவர்களைப் பற்றிப் பேசாமலிருப்பதே இறந்தவர்களுக்குச் செய்கிற மரியாதை என்ற கோழைத்தனமான சமாதானத்தோடு தான் பலர் உலவிக்கொண்டிருக்கிறோம். இல்லையா?

சில விஷயங்களை நாம் நமக்கோ, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கோ நினைவூட்டுவதை விடவும் வெட்கத்தக்க காரியம் எதுவும் இருக்க முடியாது. ஜனவரி 30-ம் தேதி ஒரு பள்ளிச்சிறுவனோடு பயணம் செய்ய நேர்ந்தது. தனது பள்ளிக்கூட டைரியில் யாரிடமே வாங்கிய ஒரு கையெழுத்தை என்னிடம் காட்டினான்.

"இவர் பேர் கல்யாணம். தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்ல்; ஆனால் தமிழ்நாட்டிலே வசிக்கிறவர். மகாத்மா காந்தியின் இறுதி ஐந்து ஆண்டுகளில் அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றியவர். எங்கள் பள்ளிக்கு இன்று வந்திருந்தார். அவரிடம் வாங்கிய கையெழுத்து இது."

அந்தச் சிறுவனின் முகத்தில் தான் அப்படியொரு பெருமை. காந்தியைப் பற்றி அவன் அறிந்து கொண்ட சில விஷயங்களை என்னிடம் கேட்டான்.

"காந்திக்கு மொத்தம் எத்தனை பசங்க?"

எனக்குத் தெரியவில்லை.

"காந்தி கடைசியாக எத்தனை ரூபாய்க்கு செக் எழுதினார்?"

தெரியாது.

"காந்தி இறக்கும்போது உண்மையிலேயே "ஹே ராம்," என்று சொன்னாரா?"

தெரியாது.


"காந்தியின் நினைவு நாளை இந்தியா எந்தப் பெயரில் அனுஷ்டிக்கிறது?"

தெரியாது.

சரி, எனக்கு என்ன தெரியும்? வேலன்டைன்ஸ் டே குறித்துத் தெரியும். அன்றைய தினம் காதலர்கள் தெருக்களிலும், பொதுவிடங்களிலும் அவிழ்த்துவிடப்பட்ட கன்றுக்குட்டிகள் போலத் துள்ளித்திரிவது தெரியும். ஆற்றாமையோ, ஆத்திரமோ மேற்கத்திய கலாச்சாரம் பரவுகிறதே என்று ஆதங்கப்படுகிறவர்கள் போல சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுகிற தண்டல்காரர்களைப் பற்றித்தெரியும்.

ஆனால், எனது சொந்தக்கணங்களை மட்டும் சுருங்கிவிட்ட துணிமணிகளை எங்கு,எப்போது என்றும் நினைவுகூராத அளவுக்கு குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து விட்டது போல, தலைமுழுகி விட்டிருக்கிறேன். ஒரு பள்ளிச்சிறுவன் என்னிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டு விட்டதுபோல அகந்தையைத் தொலைத்து தலைகவிழ்ந்து நிற்கிறேன்.

"காதலர் தினம்," பற்றித் தெரியாத லட்சக்கணக்கான அறிவுசூனியங்களில் ஒருவனாக நானும் ஏன் இருந்து தொலைத்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. மேற்கிலிருந்து கடன் வாங்கிய கணங்களை ஊதாரித்தனமாகச் செலவழிப்பது எனக்கு ஏன் உறுத்தவில்லை என்ற கேள்வி மட்டும் என்னை விட உயரமாக எழும்பி நிற்கிறது.

பிப்ருவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடவிருக்கும் அக்மார்க் இந்தியர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Saturday, January 30, 2010

நடந்தாலும் நடக்கும்!

இருபது வருசம் கழிச்சு உலகத்திலே என்ன நடக்குமோ, இந்தியாவிலே என்ன நடக்குமோ தெரியாது. ஆனா, தமிழ்நாட்டுலே மட்டும் ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும். அது என்னான்னு இப்பவே சொல்லிடறேன்; இருபது வருசம் கழிச்சு எல்லாரும் சரிபார்த்துக்குங்க!

நீங்க சென்னையிலிருந்து ஒரு பேருந்துலே நீண்டதூர பிரயாணம் பண்ணிட்டிருக்கங்கன்னு கற்பனை பண்ணிக்குங்க! ஆர்வமோ, தாகமோ கொஞ்சம் அளவுக்கதிகமாத் தண்ணியைக் குடிச்சுட்டு மதுராந்தகம் தாண்டினதுலேருந்தே இடுப்புவலி வந்த கர்ப்பஸ்த்ரீ மாதிரி சீட்டுலே நெளிஞ்சிட்டிருப்பீங்க! இந்த விழுப்புரத்துக்கு வெளியிலே வண்டியை நிறுத்துவாங்களேன்னு பக்கத்துலே இருக்கிற ஆளுகிட்டே "அண்ணே, விளுப்புரம் எப்பண்ணே வரும்?"ன்னு கேட்பீங்க! அந்தாளு பொறுமையிழந்து,"யோவ், பேசாமத் தூங்கய்யா. விளுப்புரம் வந்தா எளுப்பறோம்,"னு சொல்லுவாரு.

உங்களுக்கு ஒரு கெடுதலும் பண்ணாத அந்த பஸ் டிரைவரை அன்னிக்கு மனசுக்குள்ளே நீங்க திட்டுறா மாதிரி, பின்லேடன் கூட புஷ்ஷைத் திட்டியிருக்க மாட்டாரு! உண்மையிலே பார்த்தீங்கன்னா, உங்களை விட பாவம், அந்த டிரைவருக்குத் தான் இன்னும் அவசரமாயிருக்கும்; செந்திலைக் கவுண்டமணி மிதிச்சதை விடவும் அழுத்தமா அவரு ஆக்ஸிலேட்டரை மிதிச்சிட்டிருப்பாரு! ஆனாலும் "ஏனிந்த ஆளு வில்லுவண்டி மாதிரி ஓட்டிட்டிருக்காரு?"ன்னு மனசுக்குள்ளே துர்வாசர் மாதிரி சபிச்சிட்டிருப்பீங்க!

விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறிடுச்சு; எய்ட்ஸ் மாதிரி நோய்க்கெல்லாம் கூட மாத்திரை கண்டுபிடிச்சிட்டாங்க! ஆனா, ஒவ்வொரு தடவையும் பஸ்ஸிலே போகும்போது இப்படிப் புடுங்கியெடுக்கிற அவஸ்தைக்கு எவனாவது மாத்திரை கண்டுபுடிச்சானான்னு உலகத்திலே இதுவரைக்கும் பொறந்த, இனிமே பொறக்கப்போற எல்லா விஞ்ஞானிகளையும் மனசுக்குள்ளே திட்டிக்கிட்டு இருப்பீங்க! இதுவரைக்கும் "நோபல்" பரிசு வாங்குனவங்களையெல்லாம் வரிசையா நிக்க வைச்சு, பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்து அவங்களுக்கு "No பல்" விருது கொடுக்கலாமான்னு தீவிரமா யோசிப்பீங்க! ஒழுங்கா முன்னாலேயே ரயில்லே டிக்கெட்டை வாங்கியிருந்தா சௌகரியமாப் படுத்திட்டும் போயிருக்கலாம்; இயற்கை உபாதை வந்தா இப்படி சீட்டு மேலேயே சித்ரா விஸ்வேஸ்வரன் மாதிரி பரதநாட்டியமும் ஆட வேண்டி வந்திருக்காதேன்னு உங்களையும் நல்லாத் திட்டிக்குவீங்க! சில சமயங்களிலே ஜன்னல் வழியா வெளியே குதிச்சிரலாமான்னு கூட தோணும் சிலபேருக்கு!

ஒரு வழியா பஸ் ஸ்லோவாகி, ஏகத்துக்கும் குழல்விளக்கு போட்டிருக்கிற அந்த ஹோட்டல் வாசலுக்கு முன்னாலே நிக்குறதுக்கு முன்னாடியே நீங்க கண்டக்டரோட முதுகோட முதுகா உராய்ஞ்சுகிட்டு வண்டி எப்போ நிக்கப்போவுதுண்ணு "பத்து, ஒன்பது, எட்டு, ஏழு....,"ன்னு ரிவர்சிலே எண்ணிட்டிருப்பீங்க!

"வண்ண்டி பத்த்த்துநிமிஷம் நிக்க்க்கும்; காப்ப்ப்பி,ட்ட்ட்ட்டீ,ட்ட்ட்டிபன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாப்பிடலாம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸார்ர்ர்ர்...," என்று வண்டியின் மீது கும்மாங்குத்தாகக் குத்திக் குத்தி,அடுத்த பிறவிக்கும் சேர்த்து இப்போதே குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருப்பவர்களையும் எழுப்புகிற சிறுவர்கள் பற்றியோ, "மீனாட்சி...மீனாட்சி...," என்று ஒலிபெருக்கிப்பெட்டியில் இருந்து பிளிறுகிற தேவாவின் கானாவையோ பற்றிக் கவலைப்படாமல் "எங்கே? எங்கே??" என்று உங்களது கண்கள் கட்டணக்கழிப்பறையைத் தேடி அலையும்.

இதுவே இப்போதைய தமிழகமாக இருந்தால், ஒரு ரூபாய் கொடுத்து விட்டு அதுவரை உங்களது உடம்புக்குள்ளிருந்து ஆட்டிவைத்த பிசாசை வெளியேற்றிவிட்டு "அப்பாடா, வாட் ய ரிலீஃப்?" என்று வேலூர் சிறையிலிருந்து விடுதலையான கைதி போல மகிழ்ச்சியடையலாம். ஆனால், நாம் இருபது வருடங்கள் கழித்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்தல்லவா நமது திவ்விய திருஷ்டியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்? எனவே, இருபது வருடம் கழித்து நீங்கள் பேருந்திலிருந்து துள்ளியிறங்கியதும், சகபயணிகள் ஓடோடிச் சென்று ஒரு வரிசையில் நிற்பதைப் பார்ப்பீர்கள். ஒரு சிலர் மட்டும் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் நேராகக் கட்டணக்கழிப்பறையை நோக்கிச் சென்று, அங்கு வாசலில் வைக்கப்பட்டிருக்கிற "ஸ்வைப்பர் ஸ்லாட்டில்" ஒரு அட்டையை வைத்துத் தேய்த்ததும், கதவு திறந்து அவர்களுக்கு வழிவிடுவதைப் பார்த்து அதிசயிப்பீர்கள்!

உங்களது அவசரத்துக்கு அது என்ன கார்டு என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமோ, பொறுமையோ இருக்காதென்பதால், மைக்கேல் ஜோர்டானை விடவும் வேகமாக ஓடுவீர்கள். ஆனால், கழுத்தில் டை கட்டிய ஒரு இளைஞர் உங்களை வழிமறிக்கக் கூடும்.

"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்! கார்டு வச்சிருக்கீங்களா?"

"ஓ! விசா கார்டு, மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு, ஏ.டி.ஏம்.கார்டு, டேட்டா கார்டு, சவுண்டு கார்டு, போஸ்ட் கார்டு எல்லாம் வச்சிருக்கேன்," என்று பொறுமையிழந்து ஒப்பிப்பீர்கள்.

"ஓ! சாரி சார், உங்க கிட்டே பி.சி.கார்டு இருந்தாத் தான் இந்த என்ட்ரன்ஸ் வழியாப் போக முடியும். இல்லாட்டி அதோ பாருங்க, நிக்குதே க்யூ, அதுலே போயி நூறு ரூபாய் கொடுத்து ஒரு டோக்கன் வாங்கிட்டுப் பின்பக்கமாப் போகணும்."

பி.சி.கார்டு என்றால்? பப்ளிக் கன்வீனியன்ஸ் கார்டாம்!

"என்னய்யா அநியாயம் இது? இதுக்கெல்லாமா கார்டு வச்சிருக்கணும்!"

"சார், ப்ளீஸ் டோன்ட் வேஸ்ட் டைம்! வரிசை பெரிசாயிட்டிருக்கு! சீக்கிரம் போயி டோக்கன் வாங்கிட்டு வாங்க!" என்று அந்த இளைஞர் மிகவும் சமூக அக்கறையோடு அறிவுரை கூறுவார். அவர் சொல்வது உண்மைதான் என்று புரிந்து கொண்டு நீங்களும் அந்தக் க்யூவில் போய் கடைசியாக நிற்பீர்கள்.

"யோவ்! நடுவுலே பூராதேய்யா! பின்னாடி நிக்குறவனெல்லாம் மனுசனாத் தெரியலியா?" என்று சிலர் முன்னாலே குரல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். அதே நேரம் உங்களுக்குப் பின்னால் அதற்குள் இன்னும் பத்து பேர் வந்து நின்றிருப்பார்கள். அதில் ஒருவர் உங்களது முதுகைச் சுரண்டியபடி, "எக்ஸ்க்யூஸ் மீ சார், நம்பர் ஒன்,நம்பர் டூ ரெண்டுக்குமே இதே வரிசையா, இல்லே தனித்தனியா வச்சிருக்காங்களா?" என்று கேட்டு ஏற்கனவே கலங்கியிருக்கிற உங்களது வயிற்றை மேலும் கலங்க வைப்பார்.

"ரெண்டுக்கும் ஒரே க்யூ தான்! நான் நேத்துக் கூட வாங்கினேனே," என்று அவருக்குப் பின்னாலிருந்து ஏற்கனவே டோக்கன் வாங்கி அனுபவப்பட்டவர் சொல்லவும் ஆறுதலடைவீர்கள். டோக்கன் கொடுக்கிற கவுன்ட்டர் நெருங்க நெருங்க முதல் நாள் ரஜினி படம் பார்க்கப்போன ரசிகனைப் போல உங்களை ஒரு பரபரப்பு பற்றிக்கொள்ளும். "இங்கே ஹவுஸ்ஃபுல் போர்டு போடாம இருக்கணுமே," என்று ஓவர்-ஃப்ளோ ஆகக் காத்துக்கொண்டிருக்கிற உங்கள் மனமானது எல்லா தெய்வங்களிடத்தும் குடலுருகப் பிரார்த்தனை மேற்கொள்ளும்.

"ரெண்டு ஃபுல், ஒரு ஹாஃப், ஒரு சீனியர் சிட்டிசன்.எல்லாமே நம்பர் ஒன்." என்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருப்பவர் டிக்கெட் வாங்குவதைப் பார்த்து, இதில் இவ்வளவு சட்டதிட்டங்கள் இருக்கிறதா என்று மனதுக்குள் வியப்பீர்கள்.

ஒரு வழியாக நூறு ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கியதும், உங்கள் முகத்தில் தோன்றுகிற புன்னகைக்கும் ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் புன்னகைக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க ஒரு போட்டியே வைக்கலாம். எப்படியோ, மதுராந்தகத்தில் தொடங்கி உங்களுக்குத் தீராத மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த உபாதையை ஒருவழியாகத் தணித்து விட்டு நீங்கள் வெளியே வரும்போது, ஊருக்குத் திரும்பியதும் முதல் வேலையாக பி.சி.கார்டுக்கு விண்ணப்பித்து விட வேண்டியது தான் என்று முடிவெடுப்பீர்கள்.

"எக்ஸ்க்யூஸ் மீ! புதுசா ஒரு பிசி.கார்டு வாங்கணுமுன்னா என்ன ஃபார்மாலிட்டீ?" என்று அந்த டை கட்டிய இளைஞனிடம் கேட்பீர்கள். அவன் புன்னகையோடு ஒரு சிறிய படிவத்தை எடுத்துக் கொடுத்து, "இதை நிரப்பி, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அட்ரஸ் புரூஃப், ஐந்நூறு ரூபாய்க்கான காசோலையோட சேர்த்து, பின்னாலே இருக்கிற அட்ரஸுக்கு பதிவுத் தபால்லே அனுப்புங்க! வெப்சைட்டிலே போயி ஆன்லைனிலேயே கூட அப்ளை பண்ணலாம். அதிகபட்சம் இருபது நாளுக்குள்ளே வீடுதேடி வந்திடும்!" என்று பொறுமையாக விளக்குவான்.

"ஹூம்!" என்று பெருமூச்சு விடுவீர்கள் நீங்கள். "தமிழ்நாட்டுலே வீட்டுக்கு வீடு மாருதி கார் இலவசமா எப்படிக் கொடுக்குறாங்கன்னு யோசிச்சிட்டிருந்தேன்.. இந்தப் பணம் தானா அது?"

Friday, January 29, 2010

ஜிம்மாயணம்-01

திடீர்னு நண்பர்கள் எல்லாருக்கும் கனவுலே திருமூலர் வந்து,"மக்கா, உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே,"ன்னு அருள்வாக்கு சொன்னா மாதிரி, 2009 டிசம்பர் 31-ந்தேதி நாங்க மூணு பேரும் ஒரு முடிவெடுத்தோம். இந்தப் புத்தாண்டு முதல் தினமும் ஜிம்முக்குப் போயி உடம்பை நல்லாத் தேத்திக்கிட்டு, ஆறுமாசத்திலே ஆர்னால்டு மாதிரி ஆகணுமுண்ணு ஏகமனதா தீர்மானத்தை நிறைவேத்தினோம். (அதுக்கு முன்னாலே எவ்வளவு ஏத்துனீங்கன்னு கேட்கப்படாது!)

"எடுத்த எடுப்புலேயே பாடி-பில்டிங்கிலே எறங்கப்படாது. முதல்லே நம்ம உடம்பை கொஞ்சம் கொஞ்சமா பதப்படுத்திக்கணும்," என்று வைத்தி என்ற நண்பன் சொன்னபோது, எங்கள் மூவரில் அவன் உடம்பில் தான் கொஞ்சம் சதை எனப்படுவதாகிய சங்கதியிருந்தபடியால் ஒப்புக்கொண்டோம்.

"சரிடா! நீ சொல்லுற மாதிரியே செய்யுறோம்," என்று அவனிடம் சரண்டர் ஆகி விட்டோம். "என்னவாவது பண்ணி நாமும் சிக்ஸ்-பேக்காயிரணும். அதுக்கு என்ன வேணும் சொல்லு!"

"நல்லா ஓடுற ஒரு அலாரம் டைம்பீஸ் வேணும்," என்று படுசீரியசாகச் சொன்னான்.

"என்னது?"

"ஆமாண்டா! காலையிலே அஞ்சு மணிக்கு எந்திரிச்சு ஓட வேண்டாமா? நம்ம மூணு பேரோட அலாரம் டைம்பீஸும் இத்தனை நாளிலே ஒருவாட்டியாவது இந்திய நேரத்தைக் காட்டியிருக்காடா?" என்று அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. எங்கள் மூவரிடமும் மூன்று அலாரம் டைம்பீசுகள் இருந்தபோதிலும், எங்களுக்கிருந்த ஒற்றுமை அந்த மூன்றுக்கும் எப்போதும் இருந்தது கிடையாது. வைத்தியின் கடியாரம் T20 உலகக்கோப்பை நடந்தகாலத்திலிருந்து ஜோஹானாஸ்பர்க் நேரத்தையே காட்டிக்கொண்டிருக்கிறது. சுரேந்திரனின் கடியாரத்துக்கு மேன்சனில் "செங்கோட்டை பாஸஞ்சர்," என்று செல்லப்பெயர். என்னுடைய கடியாரம் என்னைப்போலவே எப்போது ஓடும், எப்போது உறங்கும் என்று கண்டுபிடிக்க முடியாதபடி படுத்துவதால் அதை நம்பிப்பயனில்லை. எனவே வைத்தி சொன்னது போல ஒரு நல்ல அலாரம் டைம்பீஸை காலகாலமாக மக்கள் கடியாரம் வாங்குகிற பி.ஆர்.அண்டு சன்ஸ் போயாவது வாங்கியே தீர்வது என்று முடிவானது.

அடுத்து....?

"எக்சர்சைஸ் பண்ணி முடிக்கிறவரைக்கும் டீ,காப்பி எதுவும் சாப்பிடக்கூடாது," என்று வைத்தி சொன்னதும் எங்கள் இருவரது முகங்களும் கணேஷ்விலாஸ் ரவாதோசை போல சுருங்கிப்போனது.

"டேய், காலையிலே காப்பி சாப்பிடாத்தாண்டா எனக்குப் பல்லு விளக்கவே தெம்பு வரும்," என்று உண்மையை ஒப்புக்கொண்டான் சுரேந்திரன்.

"எனக்கும் தான்," என்று நானும் ஒத்து ஊதினேன்.

"காப்பி குடிச்சிட்டு எக்சர்சைஸ் பண்ணினா உடம்பு இன்னும் மோசமாயிடும்," என்று பேரிடியாக ஒரு செய்தியைச் சொன்னான் வைத்தி.

"சரி, சமாளிக்கிறோம்! அடுத்தது என்ன?"

"ஆறுமாசத்துக்கு பொண்ணுங்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது!" என்று அடிமடியிலேயே கைவைத்தான் வைத்தி. பெயருக்கேற்ற மாதிரியே வைத்தீ வயிற்றில் தீ வைத்து விட்டான்.

"இந்த ஆட்டத்துக்கு நான் வர்லே போடா," என்று நான் வெளிநடப்பு செய்ய முற்பட்டேன். என்ன அநியாயம் இது? பொண்ணுங்க தான் எங்களைப் பார்க்கிறதில்லை; நாங்க பொண்ணுங்களைப் பார்த்தா என்ன குடியா முழுகிப்போயிடும்.

"அடேய்! பொண்ணுங்க நினைப்பு வந்தாலே உடம்பு என்ன எக்சர்சைஸ் பண்ணினாலும் தேறாதுடா! ஒரு ஆறுமாசம் மனசையும் கண்ணையும் கட்டுப்படுத்திக்க முடியாதா?"

"சரி!" வேண்டாவெறுப்பாக ஒப்புக்கொண்டோம். "அடுத்தது என்ன?"

"நிறைய சாப்பிடணும்," என்று வைத்தி சொன்னபோது அவனை அப்படியே கட்டிப்பிடித்து உச்சிமோந்து பாராட்ட வேண்டும்போலிருந்தது. இந்த ஒரு விஷயத்தில் எங்களை கடோத்கஜனாலும் வெல்ல முடியாது.

"கவலையை விடு!" என்று ஒருமித்த குரலில் கூவினோம். "தேவைப்பட்டா கூட ரெண்டு வேளை சாப்பிடலாம்."

"அப்புறம், மத்தவங்க மாதிரி பேண்ட்-ஷர்ட் போட்டுக்கிட்டு எக்சர்சைஸ் பண்ணக்கூடாது," என்றதும் திடுக்கிட்டுப்போனோம்.

"என்னடா விளையாடுறியா?"

"அவசரப்படாதீங்கடா!" என்றான் வைத்தி. "அததுக்குன்னு டிரஸ் இருக்கு! அதை வாங்கிப் போட்டுக்கிட்டுத் தான் எக்சர்சைஸ் பண்ணனும்."

"ஒரு சந்தேகம்! வாங்குற டிரஸை இப்போ போடுற சைஸுக்கு வாங்குறதா? இல்லை ஆறுமாசம் கழிச்சு நாம ஆகப்போற சைஸுக்கு வாங்குறதா?" என்று இப்பொழுதே ஆர்னால்டு ஆகிவிட்டது போல எண்ணியபடி கேட்டான் புத்திசாலி சுரேந்திரன்.

"ஃப்ரீ சைஸா வாங்கிக்கலாம். ஆறு மாசத்துலே உடம்பு எக்கச்சக்கமா ஆயிட்டாக் கூட போட்டுக்கலாம்," என்று நானும் என் பங்குக்கு ஒரு யோசனை தெரிவித்தேன்.

"ஏண்டா வைத்தி? காலையிலே அஞ்சு மணிக்கே எழுந்திரிச்சா தெருவிலே தூங்கிட்டிருக்கிற நாயெல்லாம் டிஸ்டர்ப் ஆகி எந்திரிச்சு நம்மளைத் துரத்திக்கிட்டு வராது?" என்று மீண்டும் ஒரு தீர்க்கதரிசனம் நிறைந்த கேள்வியைக் கேட்டான் சுரேந்திரன்.

"டேய்! நம்ம லொக்காலிட்டியிலே இருக்கிற எல்லா நாய்க்கும் நம்ம மூணு பேரையும் நல்லாவே தெரியும். அந்தக் கவலை உனக்கு வேண்டாம்," என்று டாக்-சைக்காலஜியில் "டாக்"டரேட் வாங்கியவன் போல மிகவும் நம்பிக்கையோடு பதிலளித்தான் வைத்தி.

"டேய் சுரேன்! தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதே! வைத்தி கூட இருக்கிறபோது நாம நாயைப் பத்தியெல்லாம் கவலைப்படக்கூடாது," என்று நான் சொன்னதை, அவனைப் புகழ்ந்து கூறுவதாக எண்ணி மகிழ்ந்தான் வைத்தி. வாலை ஆட்டாதது தான் மிச்சம்.

"ஸோ, இது தான் நம்மளோட நியூ இயர் ப்ளெட்ஜ்! எல்லாரும் கை கொடுங்க," என்று ஏதோ சாணக்ய சபதம் போல கையை நீட்ட, அவன் மீது இருந்த பழைய வயிற்றெரிச்சலையெல்லாம் சேர்த்து வைத்து இருவரும் அவனது உள்ளங்கையில் ஓங்கி அடித்தோம்.

"நாளைக்கு ஒருநாள் தான் கன்செஷன்! எல்லாரும் அவங்க அவங்க வெயிட்டை ஏதாவது ரயில்வே ஸ்டேஷனிலே பார்த்துக் குறிச்சு வைச்சுக்கோங்க! வாரத்துக்கு ஒரு தடவை எவ்வளவு எடை கூடியிருக்குன்னு நோட் பண்ணி வைச்சுக்கணும்." என்றான் வைத்தி.

"நான் வேண்ணா ஒரு புரோகிராம் எழுதிடறேன்," என்றான் சுரேந்திரன். அவனை விட்டால் மேன்சனில் நாளொன்றுக்கு எத்தனை கொசு கடித்தது, எத்தனை அடிக்கப்பட்டது என்று ஓரக்கிளில் புரோகிராம் எழுதி, விஸுவல் பேசிக்கில் மெனுவெல்லாம் வைத்து விடுவான்.

"சரி, நாளைக்கு புதுகடியாரம் வந்தாகணும்!" என்று உத்தரவிட்டான் வைத்தி.

"அதுக்கு நான் கேரண்டி!" என்றேன் நான்.

அதன்பிறகு ஆறுமாதம் கழித்து சிக்ஸ்-பேக்குடன் சென்னை நகர வீதிகளில் நாங்கள் மூவரும் உலா வருவது போலவும், டெர்மினேட்டர்-V யில் ஆர்னால்டைத் தூக்கி விட்டு என்னைக் கதாநாயகனாக நடிக்க வற்புறுத்தி ஹாலிவுட்டிலிருந்து ஒரு தயாரிப்பாளர் பரங்கிமலையில் பாராசூட்டில் வந்து குதித்து பொடிநடையாக எங்கள் மேன்சனுக்கு வருவதாவும் கனவு கண்டபடியே நான் உறங்கி விட்டேன்.

மறுநாள் கண்விழித்து முண்டாபனியனுடன் கண்ணாடிமுன்பு நின்றபோது எனது பனியனுக்குள்ளே இன்னும் இரண்டு பேரை வாடகைக்கு வரச்சொல்லலாம் போலத்தோன்றியது.

Thursday, January 28, 2010

ஆசை,தோசை,அப்பளம்,வடை!

ஆசை,தோசை,அப்பளம்,வடை! -எல்லாமே சுட்டது தான்!

ஆசைங்குறது ஆணுக்கும் உண்டு; பெண்ணுக்கும் உண்டு! ஆனா, பாருங்க எல்லாரும் பெண்களுக்குத் தான் ஆசை அதிகமுன்னு எழுதுறாங்க. (அப்பாடா, இனிமேலாவது வலையுலகத்துலே நம்மளைக் கொஞ்சம் கண்டுக்குறாங்களான்னு பார்ப்போம்!)

ஒரு ஊருலே புதுசா ஒரு கடை திறந்தாங்களாம். நம்ம பிக்-பஜார் மாதிரி ஒரு அடுக்குமாடிக்கட்டிடம்; மொத்தம் ஆறு மாடிங்க! ஆனா, அங்கே விற்பனைக்கு வச்சிருந்தது என்னவோ ஒரே ஒரு பொருள் மட்டும் தானாம் - கணவர்கள்! ஆமாம், அந்தக் கடைக்குப் போயி பொண்ணுங்க அவங்களுக்குப் புடிச்சா மாதிரி கணவனைப் பார்த்து பில் போட்டு, பிளாஸ்டிக் பையிலே தூக்கிட்டு வந்திரலாம்.

ஆனா பாருங்க, இதுலே ரொம்ப முக்கியமான விஷயம் என்னான்னா, வாங்க வர்றவங்க மேலே மேலே தான் போக முடியுமே தவிர கீழே வர முடியாது; ஒரு தளத்துலேருந்து அதுக்கு முந்தின தளத்துக்கு வர முடியாது; நேரா கீழ்த்தளத்துக்கே வந்திர வேண்டியது தான்.

ஒவ்வொரு தளத்துலேயும் ஒவ்வொரு மாதிரி கணவர்களை விற்பனைக்கு வச்சிருந்தாங்களாம். தரம் தரமாப் பிரிச்சு, பார்-கோடிங் பண்ணி, லேபல் தொங்க விட்டு வச்சிருந்தாங்களாம். இதைக் கேள்விப்பட்ட ஒரு அம்மணி, சரி, நாமும் போய் சல்லிசா நல்ல புருசனாக் கிடைச்சா வாங்கிட்டு வந்திரலாமேன்னு கிளம்பிப்போனாங்களாம்.

முதல் தளம். வாசல்லே ஒரு பெரிய அறிவுப்புப்பலகை இருந்திச்சாம். என்னான்னு அம்மணி பார்த்தாங்களாம்: "இந்தத் தளத்தில் இருக்கிறவங்கோ நல்ல சோலியிலே இருக்காங்க."

"அட, இது பரவாயில்லையே,"ன்னுச்சாம் அம்மணி. "நமக்கு வந்து வாய்சசவனுங்கெல்லாம் அப்பனோட பணத்தை வச்சுக்கிட்டு அலம்பல் பண்ணுறவனுங்கோ! பாக்கெட் மணி கிடைக்கலேன்னா பத்து நாளைக்கு போன் கூட பண்ண மாட்டானுங்கோ! ஆனாலும், அடுத்த மாடிக்கும் போய்த் தான் பாப்பமே?"

இரண்டாவது தளம். அறிவிப்புப்பலகை "இங்கே இருக்கிறவங்களுக்கு வேலைவெட்டியிருக்கு. பொஞ்சாதின்னா உசிரு!"

"அட, நல்லாருக்கே,"ன்னுச்சாம் அம்மணி. "ரெண்டாவது தளத்திலேயே இப்படீன்னா மூணாவது இதை விட நல்லாத்தானே இருக்கும்?"

மூணாவது தளம்: "இங்கே இருக்கிறவங்களுக்கு வேலையிருக்கு; பொஞ்சாதின்னா உசிரு; பார்க்கவும் சும்மா கிண்ணுன்னு இருப்பாங்க!"

"இது தான் மேட்டரா?" அம்மணி யோசிச்சுது. "மேலே போகப்போக அயிட்டம் நல்லாவே இருக்குது."

அத்தோட நிக்காம அடுத்த தளத்துக்கும் போச்சுது அம்மணி.

"இங்கே இருக்கிறவங்களுக்கு நல்ல வேலையிருக்கு; பொஞ்சாதின்னா உசிரு; பார்க்க ராசாவா இருப்பாங்க; சமையல் கூட பண்ணுவாங்க!" -அப்படீன்னு நாலாவது தளத்து போர்டு சொல்லிச்சு.

"கிட்டத்தட்ட ஷாப்பிங்கே முடிஞ்சா மாதிரி தான்,"ன்னு கூச்சலே போட்டாங்க அம்மணி. "எதுக்கும் அஞ்சாவது மாடிக்கும் போய்த்தானே பார்ப்போமே? இதை விட பெட்டராக் கிடைச்சா வேண்டான்னா இருக்கு...?"

அஞ்சாவது மாடியிலே அறிவுப்புப் பலகை என்ன சொல்லிச்சு? "இவங்கெல்லாம் நல்ல வேலையிலே இருக்காங்க, பொஞ்சாதின்னா உசுரு, சமையல் தெரியும். அத்தோட குழந்தைகளை நல்லாக் கவனிச்சுப்பாங்க!"

"யுரேகா!"ன்னு கத்தினாங்களாம் அம்மணி. "ஆனா, இதை விடவும் நல்ல புருஷன் ஆறாவது மாடியிலே இருந்தாகணுமே! இவ்வளவு தூரம் வந்திட்டு அதை ஏன் மிஸ் பண்ணனும்? போயிர வேண்டியது தான்."

ரொம்ப ஆசையாசையா அம்மணி ஆறாவது மாடிக்குப் போனாங்களாம். வெளியே பெரிய போர்டு மாட்டியிருந்துச்சு. என்னா...?

"நீங்க இந்த மாடிக்கு வந்த 34,56,789,012-வது பெண்மணி. இங்கே விற்பனைக்கு எந்த ஆம்பிளையும் இல்லை. பொண்ணுங்களைத் திருப்திப்படுத்தவே முடியாதுன்னு புரிய வைக்கிறதுக்காகத் தான் இவ்வளவு பெரிய மாடியைக் காலியா வச்சிருக்கோம். போயிட்டு வாங்க!"

இந்தக் கதையைப் படிச்சிட்டு, எப்படி நீ பொண்ணுங்களை மட்டம் தட்டி எழுதலாமுன்னு கோபப்படாதீங்க! உண்மையிலேயே இந்தக் கதையிலிருந்து என்ன தெரியுதுன்னா, இந்த உலகத்துலே ஒரு நல்ல ஆம்பிளை கிடைக்குறது குதிரைக்கொம்பு மாதிரி. அதுனாலே என்னை மாதிரி நல்ல ஆளுங்களை ஆதரிச்சு, என்னோட பதிவையும் ஒரு வாட்டி தமிழ்மணத்துலே "இந்த வார நட்சத்திரம்," ஆக்கி விட்டிருங்க! தாய்க்குலம் ஓட்டுலே ஆனாத் தான் உண்டு. வணக்கம்!

பி.கு: இதைப் படிச்சிட்டு இது ஆங்கிலக்கதையை உல்டா பண்ணினதுன்னு பின்னூட்டம் போட்டு நேரத்தை விரயம் பண்ணாதீங்க! குறிப்பா அந்த ஒரிஜினல் கதையைப் படிக்காம சும்மானாச்சுக்கும் இதை நான் எங்கேயோ படிச்சிருக்கேனேன்னு அலப்பறை பண்ணுற வேலையெல்லாம் வேணாம்.

என்ன வெளாடறாங்களா?

இப்படியெல்லாம் மனுசங்க ஏன் பேசறாங்கன்னு சொல்லுங்கய்யா!

"திருமணங்கள் சொர்க்கத்துலே நிச்சயிக்கப்படுது,"ங்கறீங்க! அப்புறம் எதுக்கையா நங்கநல்லூர் நாராயணசாமி வீட்டு முன்னாலே ஜாதகத்தைத் தூக்கிட்டுப்போயி, தர்மாஸ்பத்திரியிலே டோக்கன் வாங்க நிக்குறா மாதிரி நிக்குறீங்க? வெளாடுறீங்களா?

இது மட்டுமில்லேண்ணே! எதையாவது அழுத்தம் திருத்தமாச் சொல்லணுமுண்ணா உடனே ஏதாவது பழமொழியை அவிழ்த்து விட்டுற வேண்டியது.

"கூரையேறி கோழி பிடிக்கமுடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்."

சரி, அந்தாளு ஏன் வைகுண்டம் போனான்னு யாராவது யோசிச்சீங்களாய்யா? கோழி புடிக்குறதுக்காகக் கூரை மேலே ஏறி குப்புற விழுந்தா நேரா வைகுண்டம் போகாம வேறே எங்கய்யா போவான்?

"அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பான்னு கூப்பிடலாம்."

எங்க சித்தப்பாவுக்கு மீசையே கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு வேளை குளிக்காரு; மூணு வேளை திங்காரு; நாலு வேளை சவரம் பண்ணுதாரு! அவரை அத்தைன்னு கூப்பிடவா முடியும்? கோட்டித்தனமால்லே இருக்கு?

"வித்தாரக்கள்ளி வெறகெடுக்கப்போனாளாம்; கத்தாழை முள்ளு கொத்தோட தைச்சுதாம்."

ஒரு ஹவாய் சப்பல் வாங்கிக் கொடுத்திருந்தா கத்தாழை முள்ளு கொத்தோட தைக்குமாங்கேன்?

சரி பழமொழி தான் பாட்டன் ஊட்டன் சொல்லிக்கொடுத்ததுன்னா, இவுங்களா ஏதேதோ பேசி உசிரை எடுக்குறாங்க!

"நீ தலைகீழா நின்னாலும் நினைக்கிறது நடக்காது."

தலைகீழா நின்னா அவனே முதல்லே நடக்க முடியாது; அப்புறம் அவன் நினைக்கிறது எங்கய்யா நடக்குறது?

"உன்னைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டாரு,"

என்னமோ கடவுள் தெனமும் இவங்க கிட்டே வந்து யாரை மன்னிக்கணும், யாரை மன்னிக்கக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டு அவரோட ஐ-போட்லே குறிச்சிட்டுப்போயி மேலேருந்து ஆர்டரைக் கொரியர்லே அனுப்புறா மாதிரியில்லே பேசுதாக?

"துண்டு துண்டா வெட்டுனாலும் நீ சொல்றதை நான் செய்ய மாட்டேன்."

இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன்! துண்டு துண்டா வெட்டுனா அப்புறம் இவங்களாலே என்ன செய்யமுடியும்? இவங்களையே ஒரு கூடையிலே அள்ளியெடுத்துக்கிட்டுத் தான் போகணும்.

இனிமேலாவது இப்படியெல்லாம் பேசாதீங்க! எதைச் சொன்னாலும் பொருத்தமாச் சொல்லுங்க! என்னை மாதிரி எப்படிப் பேசுறதுன்னு கத்துக்குங்க! இந்த மாதிரியெல்லாம் நான் பேசுவேன்னா நினைக்கறீங்க? அது தான் இல்லை!

"உயிரே போனாலும்" இந்த மாதிரியெல்லாம் நான் பேச மாட்டேன். சொல்லிப்புட்டேன்.

Wednesday, January 27, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.04

(இடம்: அந்தப்புரம்)

(மன்னர் சொறிகால்வளவன் வருவதைக் கண்டு, அரசியார் உலக்கைநாயகி எழுந்து நிற்கிறார்)

சோ.சொ.வ: ராஜநர்த்தகியின்றி ஒரு அரசவையா? வெட்கம்! யாரங்கே? பழரசம் கொண்டு வாருங்கள்!

உ.நா:அரசே! அந்தப்புரத்தில் நம் இருவரையும் தவிர யாரும் இல்லை. சேடியர்கள் அனைவரும் நீங்கள் இந்தப்பக்கம் அரசவைக்குக் கிளம்பியதுமே சாளரம் வழியாகச் சாடிக்குதித்துச் சென்று விட்டனர்.

சோ.சொ.வ:என்ன? அப்படியென்றால் நீ இவ்வளவு நேரம் தனிமையிலா இருந்தாய்?

உ.நா:என்செய்வேன் மன்னா! எனக்கு சாளரம் எட்டவில்லையே!

சோ.சொ.வ:நீ சாதாரண ராணியல்ல;சாம்பிராணியென்று அடிக்கடி நிரூபிக்கிறாய்!

உ.நா:அரசே! உங்களை விட்டு நான் எங்கு செல்வது? எனக்குக் குதிரை ஓட்டவும் தெரியாதே?

சோ.சொ.வ:அது தெரிந்து தானே உன்னை இந்நாட்டின் பட்டத்து ராணியாக்கினேன்? நீயாவது பசியோடு வந்திருக்கும் எனக்கு ருசியாக பழரசம் கொண்டு தருவாயா?

உ.நா:நேற்றுத் தயாரித்த பருப்புரசம்தான் இருக்கிறது. பழரசத்திற்குப் பதிலாக பழைய ரசத்தைப் பருகுகிறீர்களா...?

உ.நா:வெட்கம்! நாடாளும் மன்னனுக்கு நாவுக்கு ருசியாக அருந்துவதற்கும் ஒன்றுமில்லையா?

சோ.சொ.வ:என்செய்வேன் பிரபு! நாளைக் காலை நீங்கள் அருந்தப் பருத்திப்பாலும் இல்லையே! அரண்மனைத் தோட்டத்திலிருந்து அருகம்புல் பறித்து வாருங்கள்! அரைத்துக் கொதிக்க வைத்து அருந்தத் தருகிறேன்.

உ.நா:ரசம் அருந்துவது இருக்கட்டும்! நாளைக் காலை அடங்காவாயர் யானையின் காலில் மிதிபட்டு குழம்பாகப் போகிறார்!

உ.நா:ஐயகோ! என் அண்ணனா?

சோ.சொ.வ:அடடா! அவர் உன் அண்ணன் என்பதை மறந்தே விட்டேனே?

உ.நா:நீங்களும் உங்கள் மறதியும்! இப்படித்தான் அன்றொரு நாள் மறந்துபோய் என் தோழி வேம்பரசியைப் போய் அன்பே ஆருயிரே கட்டிக்கரும்பே என்றெல்லாம் அழைத்தீர்கள்.

சோ.சொ.வ:அது மறந்துபோய் அழைக்கவில்லை

உ.நா:பின்னே?

சோ.சொ.வ:ஆமாமா! மறந்து போய் அழைத்தது தான்! மறந்தே போய்விட்டேன்.

உ.நா:அண்ணா! உங்களுக்கா இந்த கதி? அந்தோ! சொல்லச் சொல்லக் கேட்காமல் என்னைச் சோற்றுப்புதூர் மன்னனுக்குத் தாரை வார்த்ததைத் தவிர நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையே?

சோ.சொ.வ:உலக்கைச்செல்வி! உனக்கு இங்கு என்ன குறை? பரந்து விரிந்து கிடக்கும் இந்த சோற்றுப்புதூர் சாம்ராஜியத்துக்கே நீ மஹாராணி!

உ.நா:போதும் உங்கள் பெருமை! பரந்து விரிந்து கிடக்கிறதாம்! அடுத்த நாட்டில் எவரேனும் மிளகாயை வறுத்தால் இங்கு கமறுகிறது. நீங்களே கூட மறதியில் அண்டை நாட்டு அந்தப்புரத்துக்குள் சென்று விட்டு கண்டபடி அடிவாங்கிப் புறமுதுகிட்டு ஓடிவந்தீர்கள். இவ்வளவு ஏன்? நான் நந்தவனத்தில் நீராடுவதை அண்டைநாட்டு மன்னர் உப்பரிகையிலிருந்து எட்டிப் பார்க்கிறார்!

சோ.சொ.வ:அவனைத் தவறாக எண்ணாதே! அவனது ரசனை என்னிலும் மோசமானது.

உ.நா:போதும் உங்கள் கேலி! எங்கள் அண்ணனுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்போகிறீர்களா இல்லையா?

சோ.சொ.வ:ஒருக்காலும் நடக்காது! எனது செங்கோல் வளைந்ததாகச் சரித்திரமேயில்லை.

உ.நா:போதுமே உங்கள் பிரதாபம்! உங்களது செங்கோலை விற்றுத்தானே போன மாதம் அரிசி பருப்பு வாங்கினோம். அதற்குள்ளாகவே மறந்து விட்டீர்களா?

சோ.சொ.வ:சரி, எனது வெண்கொற்றக்குடை சரிந்ததாக வரலாறே இல்லை.

உ.நா:உங்கள் வெண்கொற்றக்குடையில் விரிசல் விழுந்து அதைப் பற்ற வைக்க ஈயம் கிடைக்காமல் பரணிலே தூசி படிந்து கிடக்கிறது மன்னா!

சோ.சொ.வ:நீ என்ன சொன்னாலும் சரி! விதித்த தண்டனையை மாற்ற மாட்டேன். நாளைக்காலையில் அரசவைக்கு ராஜநர்த்தகி வரவில்லையென்றால் அடங்காவாயரை யானைக்காலில் வைத்துக் கொல்வேன் என்று என் வீரத்தின் மீது ஆணையிடுகிறேன்.

உ.நா:அப்பாடா! உங்கள் வீரத்தின் மீது தானே ஆணையிடுகிறீர்கள்? எனக்குக் கவலை விட்டது.

(தொடரும்)

சூடா ஒரு சாயா

எல்லா ஸ்டேஷன் வாசல்லேயும் டிக்கெட் கலெக்டர் நிக்குறாரோ இல்லையோ, கையிலே தினுசு தினுசா நோட்டீஸ் வைச்சுக்கிட்டு ஆளுங்க நிக்குறாங்க! வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்பதில் ஆரம்பித்து திருத்தணியில் புதிதாக முளைத்திருக்கிற வள்ளலார் நகரில் பிளாட் விற்பனை வரைக்கும் கலர் கலராக் கிடைக்குது. இன்னிக்குப் பாருங்க, ஏதோ புது இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சிருக்காங்களாம். டிப்ளமா இன் பி.பி.ஓ மேனேஜ்மென்ட்! சிப்பு சிப்பா வருதுங்க! இப்படியே போச்சுன்னா எதுக்கெல்லாம் புதுசு புதுசாப் படிப்பு வருமுன்னு யோசிச்சேன்.

நம்ம அங்கமல்லி அப்புக்குட்டன் கூட ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சு டிப்ளமா இன் டி.எஸ்.எம்முன்னு ஒரு புதுப்படிப்பை ஆரம்பிக்கலாம். (Dip.in.Tea Shop Management). அட, நக்கல் பண்ணலீங்க! டீக்கடை நடத்துறது ஒண்ணும் விளையாட்டில்லே! அதுலே எவ்வளவு கஷ்டநஷ்டங்களிருக்குன்னு தெரிஞ்சுக்கணுமுன்னா ஒரு நாளைக்கு ஒரு பத்து நிமிஷம் ஏதாவது டீக்கடையைக் கவனியுங்க!

கூட்டமா இருக்கிற ஒரு டீக்கடையிலே, பெரும்பாலும் தோளிலே ஒரு துண்டும், மடிச்சுக்கட்டின லுங்கியுமா, எல்லாருக்கும் டீ போடுறவரை எல்லாரும் மரியாதையா "மாஸ்டர்"னு சொல்லுவாங்க. ஹெட்மாஸ்டர், ரிங் மாஸ்டர், ட்ரில் மாஸ்டர், கராத்தே மாஸ்டர், சரக்கு மாஸ்டர், க்விஸ் மாஸ்டர் மாதிரி இவரும் ஒரு மாஸ்டர் தான். இந்தப் பட்டம் கிடைக்குறதுக்கு அவருக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கணும் தெரியுமா? சாம்பிளுக்கு.......!

* மாஸ்டர், லைட்டா ஒரு டீ
* எனக்கு ஸ்ட்றாங்கா ஒரு டீ
* இங்கே ஒரு மீடியம் டீ...
* அண்ணே, எனக்கு லைட் டீ..சர்க்கரை போடாம...
* எனக்கு மீடியம் டீ...ஆத்தாமக் கொடுங்க..
* எனக்கு ஸ்ட்றாங் டீ...ஆடை போட்டுக் கொடுங்க...


நீங்களும் நானும் டீ மாஸ்டரா இருந்தா குழம்பிப்போயி யாருக்கு என்ன கொடுக்கிறதுன்னு தெரியாம, குறைஞ்சது ஒருத்தருக்காவது வெறும் கிளாஸை மாத்திரம் கொடுத்துருவோம். இன்னும் மோசமானவங்களாயிருந்தா "யோவ், உள்ளே வந்து உனக்கு எப்படி வேணுமோ நீயே போட்டுக்கய்யா,"ன்னு சலிச்சுக்கிட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸைப் பிடிச்சுக் கேரளாவுக்கே ஓடியிருப்போம்.

ஆனா, நம்ம அப்புக்குட்டன் மகா பொறுமைசாலி! யாருக்குக் காப்பி, யாருக்கு டீ, அதுலே எத்தனை பேருக்கு ஸ்ட்றாங், எத்தனை லைட், எத்தனை மீடியமுன்னு கரெக்டா ஞாபகம் வச்சு சரியாப் போட்டுருவாரு. எல்லா டீக்கடையிலும் இந்த மாஸ்டருக்கு உதவி செய்ய ஒண்ணோ ரெண்டோ மைனருங்க இருப்பாங்க! (இவங்களையெல்லாம் குழந்தைத்தொழிலாளர் தடுப்புச்சட்டம் ஒண்ணும் பண்ணாதோ?)

அம்பது பைசாவிலேருந்து மூணு ரூபா வரைக்கும் பிஸ்கெட்டை கண்ணாடி பாட்டில்லே வச்சிருப்பாங்க! சில டீக்கடையிலே காலையிலே மசால்வடை, மெதுவடையும் சாயங்காலமானா வாழைக்காய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி சீசன் சமயத்துலே மிளகாய் பஜ்ஜி சுடச்சுடக் கிடைக்கும். எந்த நேரம் எவ்வளவு கூட்டம் வரும், எவ்வளவு வியாபாரம் ஆகும், எவ்வளவு பால், தேயிலைத்தூள், சர்க்கரை, கடலைமாவு, வாழைக்காய்னு எல்லாத்தையும் அப்புக்குட்டன் விரல்நுனியிலே வைச்சிருப்பாரு.

சும்மா ஆளுக்கொரு ERP வச்சுக்கிட்டு பந்தா பண்ணிட்டிருக்கிற பன்னாட்டு நிறுவனங்களெல்லாம் இவங்க கிட்டே போய் Customer Retention பத்தித் தெரிஞ்சுக்கணும். ரெண்டு நாள் ஒரே டீக்கடைக்குப் போயிப் பாருங்க, மூணாவது நாள் நம்ம தலை தெரிஞ்சதுமே "மாஸ்டர், சாருக்கு ஒரு மீடியம் சாயா!" என்று கல்லாப்பெட்டியிலிருந்து போபிக்குட்டி அப்புக்குட்டனுக்கு ஆர்டர் கொடுத்து விடுவார். இன்னும் கொஞ்ச நாளாச்சுன்னா, "அம்பது ரூபாய் நோட்டா? சில்லறை இல்லையே சார், நாளைக்குக் கொடுங்க; குழப்பமில்லா..." என்று பெருந்தன்மையாக புன்னகையோடு சொல்லுவார் கல்லாப்பெட்டிக்காரர்.

ஒவ்வொரு டீக்கடையிலும் ஒவ்வொரு மாஸ்டரும் ஒவ்வொரு மாதிரி டீ ஆத்துவாரு! இவங்க டீ ஆத்துற ஸ்டைல் இருக்கே, அது அவங்களோட தனித்தன்மையை நிரூபிக்கிறா மாதிரி இருக்கும். ஒரே தெருவிலே ரெண்டு டீக்கடை இருந்தா ரெண்டு மாஸ்டரும் ரெண்டு விதமா டீ ஆத்துவாங்க!

எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் இருக்குன்னா, அது இது தான்! ஒரு பாய்லர் ரெண்டு பாத்திரம், ஒரு டஜன் கிளாஸோட அஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ஆரம்பிச்ச டீக்கடையிலே இப்போ சுவத்துலே டைல்ஸ் பதிச்சிருப்பாங்க! சில கடைகளே ரெண்டாப் பிளந்து ஒரு பாதியிலே ஜூஸ், சாண்ட்விச் எல்லாம் கிடைக்கும். இதை விட Business Diversification-க்கு வேறே என்ன உதாரணத்தை நம்மாலே தெருவுக்குத் தெரு காட்டமுடியும்?

அதுனாலே, அப்புக்குட்டன் சேட்டா! ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சிருங்க! வேலையை ரிஸைன் பண்ணிட்டு முதல்லே நான் வந்துருவேன் டிப்ளமா படிக்க...!

தவம்

போகுமிடமெங்கும்
பொறுமையுடன் காத்திருப்பதாய்
நாளும் நடித்தபடி
காதலர்கள் காத்திருக்கிறார்கள்
எப்போதோ நான் இருந்த
வெயில்விரதங்களுக்கு
விளக்கமளித்தபடி...!

நேற்றுப்போலவே இன்றும்
காத்திருந்த கணங்களை கழித்துவிட்டு
கனவில் சந்திப்போமென
காரிருளில் காணாமல் போகிறார்கள்

தனிமையின் இருட்டில்
குமுறும் நெஞ்சத்தினுள்
குச்சியொன்றினைக் கொளுத்தி
கோபத்தில் சில நிமிடங்கள்
குளிர்காய்கிறார்கள்

அவளாய் அழைக்கும்வரை
தீண்டமாட்டேன் உன்னையென
கைபேசியிடம் கடிந்துகொள்கிறார்கள்

ஆனால்...

இந்த
திருநீலகண்டர்களின் திமிர்
அடுத்த நாளின் விடியலில்
அனாதையாகி விடுகிறது

பள்ளிச்சிறுமியின் தலையில்
பளிச்செனச் சிரித்த
ஒற்றை ரோஜாவைப் பார்த்ததும்
சினத்தைத் துறந்த ராஜரிஷிகள்
மேனகைக்கு
கூச்சத்தை விட்டு
குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்

Tuesday, January 26, 2010

கூகிளில்லாருக்கு இவ்வுலகில்லை!

2012-லே உலகம் அழிஞ்சிருமுன்னு புரளியைக் கிளப்பி வயித்துலே புளியைக் கரைச்ச புண்ணியவானுங்களுக்கு ஒரு கேள்வி. உலகத்தை விடுங்க, 2012-லே கூகிள்னு ஒரு சங்கதி இல்லாமப் போனா என்னண்ணே பண்ணுவீங்க?

அதுவும் நம்ம இந்தியாவுலே இருக்குறவங்க கதி என்னாகும்னும் நினைச்சாலே கதிகலங்குதய்யா! இந்த கூகிள்லே போயி நம்மாளுங்க என்னவெல்லாம் தேடியிருக்காங்கன்னு பார்த்தா, ஆச்சரியத்துலே நம்ம விரல் மேலே மூக்கை வைக்கிறதுக்குப் பதிலா பக்கத்து சீட்டுலே இருக்கிறவன் மூக்கு மேலே விரலை வச்சாலும் வச்சிருவோம். அவ்வளவு அறிவுப்பசி நம்மாளுங்களுக்கு! எப்படியெல்லாம் கூகிள்ளே போயி கேள்வி கேட்டிருக்காங்கன்னு நீங்களும் பாருங்களேன்.

கூகிளிடம் இந்தியர்கள் அதிகமாகக் கேட்ட கேள்விகளாவன:

1. ஒடம்பு ஊதிப்போச்சுண்ணே, எப்புடி எளைக்க?

2. ஹி..ஹி..எப்படிண்ணே முத்தம் கொடுக்கணும்?

3. நிறய பணம் வேணுமண்ணே, ஒரு வழி சொல்லுங்கண்ணே!

4. கர்ப்பமாகணுமுண்ணா என்ன செய்யலாமண்ணே?

5. இங்க்லீஷே வரமாட்டேக்கு! எப்படிப் பேசலாமண்ணே?

6. ஒடம்பு பருக்க ஒரு வழி சொல்லுங்கண்ணே!

7. அண்ணே, கிடாரு எப்படி வாசிக்கிறதுண்ணே?

8. வலைத்தளம் எப்படிப்போடுறதண்ணே?

9. அண்ணே, பொண்ணுங்களே எப்புடி நைஸ் பண்ணுறதுண்ணே?

10. 'டை" கட்டுறது எப்படிண்ணே?

இவ்வளவு கேட்டவங்களெல்லாம் எப்படிப் பல்லுவிளக்குறது, எப்படி அடிபம்புலேருந்து தண்ணியடிக்கிறது, எப்படி பீடி பத்த வைக்குறது, எப்படி விசில் அடிக்கிறது மாதிரி மிக முக்கியமான கேள்வியை எப்படிக் கேட்காமல் விட்டாங்கன்னு தான் தெரிய மாட்டேக்கு.

ஒடம்பை எப்படி இளைக்க வைக்கிறதுண்ணும் கேட்டிருக்காங்க; பருக்க வைக்க என்ன செய்யுறதுண்ணும் கேட்டிருக்காங்க. இத வீட்டுலே அப்பத்தா கிட்டே கேட்டிருந்தா, சுக்கும் தேனும் போட்டுக் கஷாயம் காய்ச்சிக் கொடுத்து உடம்பிலிருக்கிற ஊளைச்சதையெல்லாத்தையும் ஒரு மாசத்துலே விரட்டி அடிச்சிருக்குமில்லா? ஒடம்பு பருக்கணுமுன்னா தினமும் காலையிலே கம்பாங்களியும், வாரத்துக்கு ரெண்டு நாளு ஆட்டுக்கால் சூப்பும், கறிக்கொளம்பும் வச்சு ரெண்டு மாசத்துலே கழுத்தே கண்ணுக்குத் தெரியாத மாதிரி உடம்பப் பருக்க வச்சிர மாட்டாங்களா? சரி, கறி திங்காதவங்கன்னா கொண்டைக்கடலையும், பயறும் மொச்சைக்கொட்டையும் தெனமும் சமையல்லே சேர்த்து உடம்பைக் கொளுகொளுண்ணு செனமாடு மாதிரி ஆக்கியிருப்பாங்களே!

பொண்ணுங்களை எப்படி நைஸ் பண்ணுறது, முத்தம் எப்படிக் கொடுக்குறது, கர்ப்பமாகுறது எப்படி? மேட்டருக்கு வந்திட்டாங்க பார்த்தீங்களா? இதுக்கெல்லாம் வாத்ஸ்யாயனர் தொடங்கி, டாக்டர்.நாராயண ரெட்டி வரைக்கும் ஓலச்சுவடியிலேருந்து நெட்டுலே பி.டி.எஃப் வரைக்கும் தினுசு தினுசாக் கிடைக்குதா இல்லையா? என்னவோ போங்கய்யா, எவ்வளவு கிடைச்சாலும் திருப்திங்குறது மட்டும் வள்ளிசா கிடையாது.

நிறைய பணம் வேணுமாம் அண்ணாச்சிங்களுக்கும் அக்காங்களுக்கும்! இருக்கிறத வுட்டுப் பறக்குறதுக்கு இல்லே ஆசைப்படுதாக? போய்ப் பொளப்பப் பார்ப்பீங்களா!

இங்க்லீஷ் பேசணுமாம். லேய், அங்கிட்டு என்ன ஆவுடையப்பன் வாத்தியாரு டியூஷனா எடுக்காரு? எங்க வாத்தியாரு சொல்லுவாரு, வாரத்துக்கு ஒரு நாள் தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ் ரெண்டு பேப்பரும் வாங்கி ரெண்டுலேயும் தலையங்கம் மட்டும் படிக்கணும். ஏமுண்ணா, மொழிபெயர்த்துத் தான் போட்டிருப்பாங்க! தினமும் பத்து வார்த்தையாவது படிக்கணும்! எங்க ஊருலே யாரு ஸ்போக்கன் இங்க்லீஷ் சொல்லிக்கொடுத்தா? கையைக் காலை அடிச்சுக் கவுந்து எந்திருச்சா இங்கிலீஷ் தானா வருமில்லா...?

கிடாரு வாசிக்கணுமாம். வாசிச்சிட்டாலும்....! உடனே இளையராசாவாகிரவா போறீங்க?

"டை" கட்டுறது எப்படின்னு அடுத்த வூட்டு அந்தாணிசாமிகிட்டே கேட்குறத வுட்டுப்போட்டு கூகிள்ளே போய் கோட்டித்தனமாக் கேட்டுக்கிட்டிருக்காக.

இப்படியே போச்சுன்னு வையிங்க, பொறவு எப்படி சோறு திங்கணும், எப்படி தலை சீவணும், எப்படித் தாலிகட்டணுமுன்னு கூட கூகிள்ளே போயிக் கேட்டுக்கிட்டிருப்பாக!

அட, முக்கியமானதை வுட்டுப்போட்டேனே? எப்படிச் சாகணுமுன்னு கூட கூகிள்ளே போய் கேட்டிருக்காகன்னா பார்த்துக்குங்க!

நல்லா கேட்குறாங்கய்யா கேள்வி....!


பின்குறிப்பு: இதெல்லாம் 2008-லே கேட்ட கேள்விங்க! 2009-லே என்னென்ன கேட்டிருக்காங்களோ நம்மாளுங்க! பொறுத்திருந்து பார்க்கலாம். சரியா?

நாய் வளர்ப்போமாக!

இதுவும் சில தினங்கள் முன்பு நடந்த உண்மை நிகழ்ச்சிதான்.....! பெயர்களை மாற்றியே தீர வேண்டும் என்பதால், செய்திருக்கிறேன்.

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு நேர் எதிராக இருந்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் என்னால் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியவில்லை. மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஐந்து ஆறை நிறுத்த இடமிருந்தும் எனது ஸ்ப்ளெண்டரை வாசலில் நிறுத்தி விட்டுத் தான் உள்ளே நுழைந்தேன்.ஒன்றுக்கு இரண்டாக பாதுகாவலர்கள். ஒருவர் என்னை ஆதியோடந்தமாக விசாரித்துக்கொண்டிருக்க, இன்னொருவர் வருகைப்பதிவேட்டில் எதையோ எழுதி, கயிறுகட்டிப் பாதுகாப்பாக இருந்த ஒரு பேனாவைக் கொடுத்துக் கையெழுத்துப்போடச் சொன்னார். சரி, இத்தோடு முடிந்ததா என்றால் இல்லை. லிஃப்ட் அருகே பல பொத்தான்கள் இருந்த ஒரு செவ்வகப்பெட்டியில் எதையெதையோ அழுத்தியதும் அதில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் எனக்குப் பரிச்சயப்பட்ட குரல் கேட்டது.

"சொல்லுங்க வாட்ச்மேன்!"

"உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கிறார்," என்று அந்த "வாட்ச்மேன்" எனது விபரங்களைச் சொல்லவும், "அடடே, எங்க ஊருக்காரர் தான்.மேலே வரச்சொல்லுங்க," என்று அனுமதியளித்தது எங்க ஊர்க்காரரின் குரல். லிஃப்டில் நுழைந்ததும் ஜாம்நகருக்கு விமானத்தில் போனதை நினைவூட்டும் வகையில் ஆங்கிலத்தில் பெண்குரலில் பதிவு செய்த சில அறிவிப்புக்கள். அந்த வளாகத்தில் நான் அதுவரை பார்த்தவற்றில் பாதுகாப்பு குறைவாயும், பகட்டு அதிகமாகவும் தான் தென்பட்டது. அல்லது இயல்பாகவே வசதியானவர்களின் மீது அவ்வப்போது ஏற்படுகிற வயிற்றெரிச்சலும், எப்போதும் ஏற்படுகிற பொறாமையும் தான் என்னை அப்படி எண்ண வைத்ததோ-தெரியவில்லை. பணக்காரர்களை வெறுக்கிற கம்யூனிஸ்ட் நானில்லையென்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அளவுக்கு அதிகமாக வசதியாயிருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாமலிருக்க, வயிற்றெரிச்சல் படாமலிருக்க-நான் ஞானியல்ல என்பதும் உண்மையே!

எங்க ஊர்க்காரரின் வீட்டுக்கதவருகிலிருந்த பொத்தானை அழுத்தியதும் மெல்லிய இசை கேட்டது. அதைத் தொடர்ந்து பெர்முடாவும், "Yes. I love cheese," என்று அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுமாக கதவைத் திறந்தவன் செண்பகராஜன்- எனது பால்ய சினேகிதனின் அண்ணன். செம்மண் தரையில் பம்பரம்,கோலி,குரங்குப்பெடல் போட்டு சைக்கிள் என்பன முதல் ஆண்டுக்கணக்காக பரஸ்பரம் பகிர்ந்த கணங்களின் ஒரு பகுதியானவன். எட்டு அல்லது ஒன்பது வருடங்கள் கழித்து சந்திக்கிறேன் அவனை. ஆனால்...

அவனை முந்திக்கொண்டு என்னை வரவேற்கத் தாவியது, பஞ்சுப்பொதி போலிருந்த ஒரு வெள்ளைநாய்க்குட்டி. அது குரைத்த சப்தம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. குழந்தைகளின் மழலைப்பினாத்தலைப் போல இருந்தது அதன் குரைப்பு.

அண்மையில் வட இந்தியாவிலிருந்து ஒரு தனியார் வங்கியில் உயர்பதவியோடு மாற்றலாகி சென்னை வந்திருக்கிற செண்பகராஜனை மரியாதை நிமித்தம் காணச்சென்றிருந்தேன். அவனது நடையுடைபாவனைகள் நாகரீகமாகத் தென்பட்டாலும், இன்னும் பம்பரத்துக்கு ஆக்கர் அடிக்கப் பரபரத்த கிராமத்துப்பிராயத்தின் சிற்சில ரேகைகள் அவன் கண்களில் இருந்தன.

அந்த நாய்க்குட்டி சிறிது நேரம் கழித்து என்னை விருந்தாளி என்று ஒப்புக்கொண்டு வாலாட்டியது. அது குரைத்துக்கொண்டிருந்ததால் எங்கள் பேச்சு தடைப்படவே, அதனிடம் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கொடுக்கப்பட்டதும் அது விளையாடத் தொடங்கியது. ஆனால், பேச்சை விடவும் அந்த நாய் பிளாஸ்டிக் பாட்டிலோடு ஆடிய விளையாட்டு சுவாரசியமாகவும் உயிரோட்டமாகவும் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

செண்பகராஜனின் பேச்சில் இருந்த கரிசனம்; அவன் மனைவி தேவையில்லாமல் குழந்தைகளிடம் பேசிய ஆங்கிலம் மற்றும் இந்தி; அந்தக் குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்தபோது அவர்கள் முகத்தில் தோன்றிய புன்னகை; தேநீருடன் வைத்த பலகாரங்களைச் சாப்பிடச் சொல்லிய உபசாரம் - எல்லாவற்றிலுமே பாசாங்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

பாசாங்கு செய்வதற்குரிய திறமை அன்றாடங்காய்ச்சிகளுக்கு வராது. அது பணம் செய்கிற ரசவாதங்களில் ஒன்று. நாசூக்காக பசியை ஒதுக்கி வைத்து விட்டு, நாகரீகமாக சாப்பிடுவது பசித்தும் சாப்பாடு கிடைக்காதவர்களால் செய்ய முடியாத ஒன்று. இந்த பாசாங்குகளும் ஷோ-கேஸ்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி அடுக்கப்படுகிற பொம்மைகளைப் போல பார்க்கிறவர்களைக் குழப்புகிற ஒரு குயுக்தியான தந்திரம்.

செண்பகராஜன் செய்த பாசாங்குகளிலேயே மிகவும் கொடுமையானது, தனது உடன்பிறந்த தம்பியும், எனது நெருங்கிய நண்பனுமான செல்வத்தைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட விசாரிக்காதது தான். அண்ணன் திருமணத்தின்போது பெண் வீட்டுக்காரனைப் போல சுழன்று சுழன்று வேலை பார்த்த செல்வத்துக்கும் செண்பகராஜனுக்கும் சில வருடங்களாகக் கருத்து வேறுபாடு என்பது மட்டும் தெரியும். அதற்கு என்ன காரணம் என்று மூக்கை நுழைக்கிற அநாகரீகத்துக்குப் பயந்து, அண்ணன் பணக்காரன், தம்பி பரம ஏழை என்ற வர்க்கபேதம் தான் காரணமாக இருக்கக்கூடும் என்று ஒப்புக்கு ஒரு காரணத்தை எனக்கு நானே சொல்லி வைத்திருக்கிறேன். இதுவும் என்னிடம் இருக்கும் இன்னொரு அசிங்கமான பழக்கம்- காரணங்கள் புரியாத சிக்கல்களுக்கு ஏதாவது சுலபமான காரணத்தைக் கற்பித்து அது குறித்துக் கவலைப்படுவதன் அத்தியாவசியத்தைக் குறைத்துப்போட்டு விடுவேன்.

செண்பகராஜன் வீட்டு நாய் பிளாஸ்டிக் பாட்டிலோடு விளையாடிச் சோர்ந்து போவதற்கு முன்னர், எங்களது பழங்கதைகளில் சிலவற்றை நினைவு கூர்ந்து விட்டிருந்தோம். அந்த நாய் ஏர்-கண்டிசனரை நெருங்கி தனது நகத்தால் பிறாண்டத்தொடங்கியது.

"பதினோரு மணியாச்சுன்னா செல்லத்துக்குத் தூக்கம் வந்திருமே!," என்று செண்பகராஜனின் மகள் சொல்லவும், அவளின் அப்பாவும் மகளும் உலகமகா நகைச்சுவையைக் கேட்டது போல சிரித்தனர். செண்பகராஜனின் மனைவி ஏ.சியை முடுக்கி விடவும் அந்த நாய் தொலைக்காட்சிப்பெட்டிக்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலியின் கீழ்த்தட்டில் துள்ளியேறி சுருண்டு படுத்துக்கொண்டது. சிறிது நேரத்தில் உறங்கவும் ஆரம்பித்து விட்டது.

ஏறக்குறைய முப்பது நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறியபோது, வாசலில் வைத்தாவது செல்வத்தைப் பற்றி விசாரிக்க மாட்டானா என்ற எனது நப்பாசை நிறைவேறவில்லை. வெளியேறி வண்டியை முடுக்கிக் கொண்டு அறைக்குத் திரும்பியபோது, தெருவில் அனாமத்தாக ஓடித்திரிந்து கொண்டிருந்த சில தெருநாய்களைக் காண நேர்ந்தது.

அடுத்த முறை செல்வத்தை சந்திக்கும்போது அவனிடம் "உன் அண்ணனுக்கு நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம்," என்று சொல்வதா வேண்டாமா என்ற புதுக்கேள்வியுடன் புகைமண்டலமாயிருந்த சென்னையின் தெருவில் என் வண்டி விரைந்தது.

Saturday, January 23, 2010

பெத்தமனம்

கட்டிடத்திற்கு நேர் எதிராக இருக்கிற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிற பெரும்பாலான பெண்மணிகளின் பெயர் முதற்கொண்டு எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமல்ல, அனேகமாக அவர்களைக் குறித்து அறிந்திராதவர்கள் தெருவில் மிகக்குறைவானவர்களே இருக்கக்கூடும். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இல்லத்தரசிகள்; குழந்தைபராமரிப்பு,கணவனை அலுவலகத்துக்கு அனுப்புதல், துணிகளை மொட்டைமாடியில் காயப்போடுதல், பால்கனியில் நின்றபடி அவரவர் வீட்டுச்சமையல்கள் குறித்த தகவல் பரிமாற்றங்கள்; குப்பை வண்டி சென்று சில நிமிடங்களானபிறகும் கைகளில் பிளாஸ்டிக் டப்பா சகிதம் நேற்று இரவு விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடருதல், ரேஷன், சமையல் கேஸ் குறித்த கவலைகள், மேல்நிலைத்தொட்டியில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனால் ஏற்படுகிற சில்லறை வாக்குவாதங்கள் என்று தங்களுக்கேற்ற உலகத்தைச் சமைத்துக்கொண்டு அதற்குள் மகிழ்ச்சியாக, மனக்குறைகளா என்ற மர்மத்தை வெளிப்படுத்தாமல் பெரும்பாலும் உரக்கப்பேசி, உரக்கச்சிரித்து உறவாடிக்கொண்டிருக்கிற ஜீவன்கள். ஒன்பது மணிக்கு மேல், ஆறு மணிவரை அவர்களின் வெடிச்சிரிப்பும் பேச்சும் பல சமயங்களில் எரிச்சலும் சில சமயங்களில் ஒரு இனம்புரியாத பரிதாபத்தையும் ஏற்படுத்துவதுண்டு. விடுப்பெடுத்து ஓய்வெடுக்கிற நாட்களில் இவர்களின் பேச்சுக்களைக் கூர்ந்து கேட்டு, அவர்களுக்குள்ளே இன்னும் பெண்களுக்கே உரித்தான அப்பாவித்தனம் இன்னும் மிச்சமிருக்கிறது என்று எண்ணி மனதுக்குள் சிரித்ததுமுண்டு.

காரணம் தெரியாது. ஆயினும், இவர்களின் இடைவிடாத பேச்சுக்களுக்கும், அபரிமிதமான உரத்த சிரிப்புக்களுக்கும் பின்னால், வெளியே சொல்ல விரும்பாத சில குடும்பத்துயரங்களோ அல்லது பிற பெண்களோடு ஒப்பிடுகையில் தாங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மையோ இருத்தல் சாத்தியமே.

அவர்களுக்குக் குறிப்பாக இன்னது தான் பேச்சுக்குரிய பொருளாக இருக்க வேண்டும் என்ற வரைமுறைகள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் மோர்க்குழம்பு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். எல்லாருக்கும் பொதுவாக இருப்பது, அவ்வப்போது அவர்கள் தங்களைப் பிடித்து வைத்திருக்கிற நான்கு சுவர்களின் மீதான கோபம் மட்டும் தான் என்று அடித்துச் சொல்லலாம். சில சமயங்களில் எரிச்சல்பட்டு "இதுங்களையெல்லாம் எங்கேயாவது வேலைக்கு அனுப்பித் தொலைச்சிருக்கக் கூடாதா?" என்று அவர்களின் எஜமானர்கள் மீது கோபம் ஏற்பட்டதுமுண்டு.

அந்தக் கட்டிடத்துக்கு அடிக்கடி காலை நேரங்களில் வந்துபோகிற ஒரு பாட்டியைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வரும்போதும் கையில் ஏதாவது கொண்டுவருவார். சில சமயங்களில் கீரை, சில சமயங்களில் வேறு ஏதாவதோ?

அந்தப் பாட்டி இரண்டு தெருக்கள் தள்ளி வசித்து வருகிறார் என்பதையும், அவரது மகன் திருமணமாகி, மனைவி மகளுடன் இந்தக் குடியிருப்பில் வசித்து வருகிறார் என்பதையும் சில நாட்கள் கழித்துத் தான் புரிந்து கொண்டேன். அவர் பெரும்பாலும் மாடிப்படியேற மாட்டார். கையில் எதையோ வைத்துக்கொண்டு, முதல் தளத்தில் இருக்கும் தன் மருமகளின் பெயரைச் சொல்லி அழைப்பார். சில சமயங்களில் ஓரிரு முறை அழைத்ததுமே மருமகளின் தலை பால்கனியில் தெரிந்து விடும். சில சமயங்களில் அந்தப் பாட்டி பலமுறை அழைக்க நேரிடுவதையும் கவனித்திருக்கிறேன். அவரது மருமகள் மாடிப்படியில் விரைந்தோடி வருவார்.

"என்னம்மா?"

"மாம்பலத்துலே கீரை மலிஞ்சு கிடந்ததுன்னு இவர் வாங்கிட்டு வந்தார். அவனுக்கு கீரைன்னா உயிரு! அடுப்படியிலே வேலை அதிகமாயிருந்தது,இல்லாட்டி ஆய்ஞ்சே கொண்டு வந்திருப்பேன்."

"நீங்க ஏம்மா இந்தக் காலோட ரெண்டு தெரு நடந்து வர்றீங்க?"

"அதுக்கென்ன? டாக்டர் வாக்கிங் போகணுமுன்னு சொல்லியிருக்காரே! அதான் அப்படியே இதையும் கொடுத்திட்டுப்போகலாமுன்னு...."

"சரிம்மா! இருங்க, உங்க பிள்ளை கிட்டே சொல்லி உங்களைக் கொண்டு விடச் சொல்லுறேன்."

"அதெல்லாம் வேண்டாம். பாவம், பத்து மணிக்கு வந்தானோ பதினோரு மணிக்கு வந்தானோ? அவனைத் தொந்தரவு பண்ணாதே! எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் போயிடுவேன்."

கையில் கீரைக்கட்டோடு மருமகள் மாடிப்படியில் வந்ததை விட வேகமாக ஏறுவதையும், அந்தப் பாட்டி வாசல் வரைக்கும் வந்து அடி-பம்பைப் பிடித்துக்கொண்டு ஒரு சில கணங்கள் இளைப்பாறி விட்டு மெல்ல மெல்ல நடந்து தெருமுனையில் திரும்புவதையும் ஒரு சில தடவை பார்த்தேன்.

அப்புறம், இந்தக் காட்சியையும் ஒரு நாள் பார்த்தேன்.

"ஏம்மா? மஞ்சள் கொத்து பிள்ளையார் கோவில் வாசல்லேயே கிடைக்குது. இதை நீ கொண்டு வந்து கொடுக்கலேன்னு யார் அழுதா? ரோடு முழுக்கக் குண்டும் குழியுமா இருக்கு. விழுந்து கிழுந்து தொலச்சா என்னாகிறது? உன்னோட பெரிய ரோதனையா இருக்குதும்மா..."

அந்தப் பாட்டி எதையோ சொல்ல முயல, கணவரின் முதுகுக்குப் பின்னாலிருந்து மருமகள் "எதுவும் பேசாதீர்கள்," என்பது போல சைகை செய்வதைப் பார்த்து மௌனமாவதையும், அதன் பின்னர் மகன் கடுகடுவென்ற முகத்தோடு தனது மோட்டார் சைக்கிளை முடுக்கி அம்மாவை உட்கார வைத்துக்கொண்டு வீட்டில் கொண்டு விடச் செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

"அவரே ஆயிரம் டென்சன்லே இருக்காரு! இவங்களை யாரு இப்போ மஞ்சக்கொத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க? காலங்கார்த்தாலே அவரோட மூடை ஸ்பாயில் பண்ணிட்டாங்க வந்து! இன்னிக்கு நாள் முழுக்க அவர் சிடுசிடுன்னு எரிஞ்சு விழுவாரு!" என்று அந்த மருமகள் சற்றும் விதரணையின்றி இன்னொரு பெண்மணியிடம் சொல்லிக் குறைப்படுவதையும் கேட்டிருக்கிறேன்.

ஆனால், எல்லாக் கடைகளிலும் ஏதோ ஒரு தாய் எதையோ வாங்கிக்கொண்டிருப்பதை தினசரி பார்க்கிறேன். அவர்கள் வாங்குகிற பொருள் எதுவாகினும், அதைப் பார்த்ததும் அவர்களுக்குத் தங்களது பிள்ளையோ, பெண்ணோ ஞாபகம் வருகிறார்கள் போலிருக்கிறது.

அவர்களில் பெரும்பாலானோர்கள் அந்தப் பாட்டியைப் போலவே தங்களது பாசத்தை வெளிப்படுத்தி மகனின் மூடை ஸ்பாயில் செய்திருப்பார்களோ என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

ஆமைபோல பொறுமைகொள்ளு!

தாடிமீசை வச்சிடாம தவமெதுவும் செய்திடாம
தத்துவமாக் கொட்டுறானே மேதையாட்டமா-அட
ஓடியாடும் வயசுலேயே ஓஞ்சுபோன கெழவனாட்டம்
ஓரத்துலே ஒதுங்குறானே பேதையாட்டமா

கூனுபோட்டு தலகுனிஞ்சு குத்துயிராக் கொலையுயிரா
குறுகிப்போயி வாழ்க்கைசிலரு நடத்துறாங்களே-அட
தானும்நொந்து தனிமையாகி தக்கநண்பர் துணையும்போயி
தளர்ந்துபோயி நாளதெனமும் கடத்துறாங்களே

பாதிதூரம் வந்தபின்னே பயந்துபோயி சுவத்தில்பட்ட
பந்துபோல பறந்து திரும்பி போகலாகுமா?-அட
ஊதினாலே பறந்துபோகும் இலவம்பஞ்சு போலிருந்து
உள்ளுக்குள்ளே தினம்பொசுங்கி சாகலாகுமா?

கண்முழிச்சு ஜன்னலுக்கு வெளியிருக்கும் உலகம்பாரு
காற்றைக் கொஞ்சம் நெஞ்சுக்குள்ளே சேகரிக்கலாம்
எண்ணுவதில் தெளிவிருந்தா எதுவந்தாலும் துணிவிருந்தா
எப்போழுதும் குழந்தைபோல நீ சிரிக்கலாம்

ஆமைபோல பொறுமைகொள்ளு ஆலைப்போல உறுதிகொள்ளு
ஆசைப்படுவ தத்தனையும் ஓடிவந்திடும்-அட
தீமையின்றி மனசிருக்க தினமும்கோவில் சென்றுவந்தா
தெய்வகுணம் அத்தனையும் ஒடிவந்திடும்

Thursday, January 21, 2010

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

மஞ்சக்கறுப்புச் சாயம்பூசி மனசுபோல மனுசங்களை
பஞ்சுமூட்டை போல்திணிக்கும் ஷேர் ஆட்டோவே-போட்டுப்
பழரசம்போல் பிழியுறியே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

அஞ்சுபத்துக்கு எங்களப்போல அலயுறியே நாள்முழுக்க
பிஞ்சுபோன சீட்டுமேலே ஷேர் ஆட்டோவே-எங்களப்
பிதுங்கி இருக்கச் சொல்லுறியே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

பேருந்துநிறுத்தம் அருகில்வந்து பெரிய ஆரனை அடிச்சுக்கிட்டு
பெருச்சாளிபோல நிக்கும் ஷேர் ஆட்டோவே-வித்தாப்
பேரீச்சம்பழம் தேறிடுமா ஷேர் ஆட்டோவே!

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

அம்பத்தூர் ஓட்டியில் ஏறுனவங்க அண்ணாசாலையில் இறங்கையிலே
ரொம்பத்தான் மெலிஞ்சு போனதுபோல் ஷேர் ஆட்டோவே-பொலம்பி
ரோதனையாச் சொல்லுறாங்க ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

மோசமான ரோட்டுமேலே மொதமொதலா ஏறிவந்த
மாசமான கர்ப்பிணிக்கும் ஷேர் ஆட்டோவே-வண்டியில்
மகப்பேறு நடத்திப்புடுறே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

வெடலப்பையன் பக்கத்துலேதான் வெவரமில்லாப் பொண்ணயிருத்திக்
கடலபோட வைக்குறியே ஷேர் ஆட்டோவே-உன்னால்
காதலிப்போ கூடிப்போச்சுது ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.03

காட்சி.03

(தளபதி அடங்காவாயர் அரசரின் உத்தரவைக் குறித்து தனது இல்லத்தரசி குக்கரசியுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்)

குக்கரசி: அந்தோ! இதென்ன கொடுமை! இத்தனையாண்டு காலமாக....

த.அ.வாயர்: (இடைமறித்து) குக்கி! நீளமான வசனம் பேசுவதாக இருந்தால் எனக்கு ஒரு குவளை பருத்திப்பால் கொடுத்து விட்டுத் தொடர்வாயாக. தொண்டை வறண்டுகிடக்கிறது.

குக்கரசி: ஐயகோ! ஒருவேளை நாளைக்குள் ராஜநர்த்தகி கிடைக்காவிட்டால் உங்கள் தலையை யானையின் காலில் வைத்து நசுக்கி விடுவார்களா?

த.அ.வாயர்: இப்படியென்று தெரிந்திருந்தால் இருக்கிற ஒரு யானையையும் பாதிவிலையில் விற்று பால்காரன் கணக்கையாவது பைசல் செய்திருப்பேனே?

குக்குரசி: பேசாமல் அந்த யானைக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டால்...?

த.அ.வாயர்: எனக்குப் பருத்திப்பாலே வேண்டாம் பத்தினித்தெய்வமே! எதற்கும் சற்றுத் தள்ளி நின்றே உரையாடு!

குக்கரசி: ஏன் சுவாமி?

த.அ.வாயர்: உனக்குக் குக்கரசிக்குப் பதிலாக மக்கரசி என்று பெயர் வைத்திருக்கலாம். நம் நாட்டில் மனிதன் உண்ணவே விஷமில்லை! உள்ளூரில் அரளிவிதைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு கள்ளச்சந்தையில் கனஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதில் யானைக்கு அளிக்க வேண்டுமானால் குறைந்தது ஒரு மூட்டையாவது வேண்டாமா?

குக்கரசி: நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?

த.அ.வாயர்: இப்போது நானிருக்கும் நிலையில் யானையே யோசனை சொன்னாலும் கேட்பேன். சொல்.

குக்கரசி: நாளை என்னையே நீங்கள் ராஜநர்த்தகியாய் நியமித்து விடுங்கள்

த.அ.வாயர்: என்னது? நீயா?

குக்கரசி: மறந்து விட்டீர்களா? எங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது என்னைக் கடத்திவந்து மணம் முடித்தீர்கள்?

த.அ.வாயர்: ஆமாம்! முதல்முறையாக போரில் வென்ற மகிழ்ச்சியில் எதையாவது கவர்ந்து வரவேண்டுமென்பதற்காக செய்த ஏடாகூடமான காரியம் அது அரையிருட்டு வேறு. சரியாகப் பார்க்காமல் ஆளை மாற்றிக் கடத்தி வந்து விட்டேன்.

குக்கரசி: விளையாடாதீர்கள்! என்னை ராஜநர்த்தகியாக்கினால் உங்களது தலையும் பிழைக்கும். இன்னொரு வருமானமும் கிடைக்கும்.

த.அ.வாயர்: அடுத்த மாதம் ஊதியமளிப்பதற்காக பாசறையிலிருக்கிற எல்லா ஆயுதங்களையும் பக்கத்து நாட்டில் எடைக்கு எடை போட்டு கிடைப்பதை வாங்கிவருமாறு ஆட்களை அனுப்பியிருக்கிறோம்.

குக்கரசி: அது போகட்டும்! இதில் ஒரே ஒரு சிக்கல் தான்! உங்கள் மன்னர் என்னைக் கண்டு பேதலித்து விட மாட்டாரே?

த.அ.வாயர்: பேதலிப்பதா? பேயறைந்தது போலானாலும் வியப்பில்லை.

குக்கரசி: போதும் கேலி! மன்னர் என் அழகில் மயங்கி விடக்கூடாதே என்று நான் பயந்து கொண்டிருக்கிறேன். கேலி செய்கிறீர்களே?

த.அ.வாயர்: அந்த பயமே உனக்கு வேண்டாம். எங்கள் மன்னர் மடையரே அன்றி குருடர் அல்லர்.

காட்சி.04

இடம்: யானைக் கொட்டில்

(நிதியமைச்சர் தில்லாலங்கடியூர் திருவாழத்தான் யானைப்பாகன் கன்னக்கோலனைத் தேடிவருகிறார்)

தி.திவாழத்தான்: அடேய் கன்னக்கோலா!

கன்னக்கோலன்: அமைச்சர் பெருமானே! வருக வருக!

தி.தி: நான் வருவது இருக்கட்டும்! எங்கேயடா இங்கிருந்த யானை?

கன்னக்கோலன்: அதோ, தொழுவத்தில் வைக்கோல் தின்று கொண்டிருப்பதைப் பாருங்கள் அமைச்சரே!

தி.தி: என்ன? இதுவா நம் யானை? என்னடா இது? எது வால் எது தும்பிக்கை என்று கண்டுகொள்ள முடியாதபடி இளைத்துத் துரும்பாகி விட்டதே?

கன்னக்கோலன்: ஆம் மன்னா! அரண்மனையிலிருந்து உண்டைச்சோற்றைக் கொண்டு வருகிறவர்கள் வழிநெடுக அதைத் தின்றுவிட்டு இங்கு வெறும் கூடை மட்டும் தான் வந்து சேர்கிறது. பட்டத்து யானை பட்டினியில் பப்படம் போல இளைத்து விட்டது.

தி.தி: கன்னக்கோலா! இது எழும்பி நிற்கவே ஏழுநாட்களாகும் போலிருக்கிறதே! இதால் நமது தளபதியின் தலையை மிதிக்க முடியுமா?

கன்னக்கோலன்: என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?

தி.தி: எனக்கும் ராஜநர்த்தகி வரலட்சுமிக்கும் மாத்திரமே தெரிந்த ஒரு ராஜாங்க ரகசியத்தை அறிவுகெட்ட அவியலூராரும் அவசரக்குடுக்கை அடங்காவாயருமாகச் சேர்ந்து மன்னரிடம் சொல்லி விட்டனர். அதன் விளைவாக நாளை தளபதியாரின் தலையை யானையின் காலில் வைத்து மிதிக்க வேண்டும் என்று மன்னர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கன்னக்கோலன்: ஐயோ, எழுந்து நின்றால் நமது யானை சுருண்டு விழுந்து செத்துவிடுமே?

தி.தி: சே! தளபதி அடங்காவாயரை அப்புறப்படுத்தி அவருக்குப் பதிலாக உன்னை தளபதியாக நியமிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

கன்னக்கோலன்: உண்மையாகவா?

தி.தி: இதில் சந்தேகமென்ன? என் திட்டத்தை நிறைவேற்றினால் சோற்றுப்புதூர் சாம்ராஜியத்துக்கு நீயே அடுத்த தளபதி!

கன்னக்கோலன்: நம்ப முடியவில்லையே அமைச்சரே! தளபதி என்றால் என்ன செய்ய வேண்டும்.

தி.தி: நம் நாட்டைப்பொறுத்தமட்டில் தளபதி ஒன்றும் செய்ய மாட்டார். சுற்றியிருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

கன்னக்கோலன்: போருக்குப் போக வேண்டியிருக்குமா?

தி.தி: இந்த நாட்டின் மீது யார் போர் தொடுக்கப்போகிறார்கள்? அமைச்சரவையில் தினசரி ஏற்படுகிற அக்கப்போரை சமாளித்தாலே போதாதா?

கன்னக்கோலன்: அப்படியென்றால், உடனடியாக இரண்டு கூடை சோறும் ஒரு வண்டி கரும்பும் கொண்டு வரச் செய்யுங்கள். சோர்ந்து கிடக்கும் யானையை எழுப்பி வீறு கொள்ளச் செய்கிறேன்.

தி.தி: இதையெல்லாம் சாப்பிட்டால் ஒருவரது தலையை மிதிக்கிற பலம் நமது யானைக்கு வந்து விடுமா?

கன்னக்கோலன்: இதிலென்ன சந்தேகம்? முதலில் உணவை அனுப்புங்கள்! வேண்டுமானால் ஒரு முறை உங்கள் தலையை மிதித்தே அதன் பலத்தை நிரூபித்து விடுகிறேன்.

தி.தி: இன்னும் தளபதியாகவேயில்லை, அதற்குள்ளாகவே ராஜதந்திரமா? சரி, உடனடியாக சோற்றையும் கரும்பையும் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.

கன்னக்கோலன்: கூடவே ஒரு சட்டி சாம்பாரும், பொறியலும் அனுப்புங்கள் அமைச்சரே! சாப்பிட்டு நான்கு நாட்களாகின்றன.

(தொடரும்)

திரைவிமர்சனம் எழுதுவது எப்படிங்கேன்?

எல்லாரும் தமிழ்ப்படங்களைப் பத்தி விமர்சனம் எழுதி ஒரு பதிவை ஒப்பேத்துற மாதிரி நாமளும் செஞ்சா என்னன்னு தோணுச்சு! முயற்சி பண்ணித்தான் பார்ப்போமேன்னு நான் சமீபத்துலே பார்த்த "குட்டி" படத்துக்கு விமர்சனம் எழுத முயற்சி பண்ணுனா, பாளாப்போன புத்தி ஸ்ரேயாவை விட்டு அங்கிட்டு இங்கிட்டு நகர மாட்டேக்கு! எப்புடித்தான் அலுக்காம சலிக்காம எல்லாப் படத்தைப் பத்தியும் விமர்சனம் எழுதுறாங்களோ? இதுக்கெல்லாம் கோச்சிங் கிளாஸ் இருக்கான்னு விசாரிச்சு, கோடம்பாக்கம் கோந்துசாமி சனி,ஞாயிறுலே சாயங்காலம் ஆறுலேருந்து ஏழுவரைக்கும் எடுக்காருன்னு கேள்விப்பட்டு முன்கூட்டியே அப்பாயின்மென்டெல்லாம் வாங்கிட்டுப்போனேன். அவருக்குத் தெரியாம அவர் வகுப்பு எடுக்கையிலே அதை திருட்டுத்தனமா பதிவு பண்ணிட்டேன். நீங்கள்ளாம் படிக்காண்டாமா?

சே.கா: வணக்கம் அண்ணே! எல்லாரும் சினிமா விமர்சனம் எழுதுறாவிய. எனக்கு மட்டும் வரவே மாட்டேக்கு.

கோ.கோ.சாமி: உன்னை ஒரே நாளுலே பெரிய விமர்சகனாக்கிருவேன் பாரு. இதுக்கு முன்னாடி எந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதினே?

சே.கா: சமீபத்துலே "குட்டி" படம் பார்த்து எழுதினேன்.

கோ.கோ.சாமி: கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. விமர்சனம் எழுதினியான்னு தானே கேட்டேன். படம் பார்த்தியான்னா கேட்டேன்?

சே.கா: அண்ணே....?

கோ.கோ.சாமி: படம் பார்க்குறது வேறே; விமர்சனம் எழுதுறது வேறே. படம் பார்த்திட்டுத் தான் விமர்சனம் எழுதணுமுன்னு ஏதாவது சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருக்கா?

சே.கா: அதெப்படி படம் பார்க்காம விமர்சனம்...?

கோ.கோ.சாமி: நீயோ படம் பார்த்திட்டே தானே? அப்ப விமர்சனம் எழுதறது உனக்காகவா மத்தவங்களுக்காகவா?

சே.கா: மத்தவங்களுக்காகத் தாண்ணே!

கோ.கோ.சாமி: மத்தவங்களுக்காக விமர்சனம் எழுத நீ ஏன் உன் காசை செலவு பண்ணிப் படம் பார்க்கணும்? லூசா நீ?

சே.கா: விமர்சனம் எழுத ஏதாவது தெரிஞ்சுக்க வேண்டாமா?

கோ.கோ.சாமி: அதுக்குத்தான் ஆயிரக்கணக்குலே வலைப்பதிவு இருக்கில்லே? பத்து மணி ஷோ பார்த்திட்டு, பன்னிரெண்டு மணிக்கே வலைப்பதிவுலே விமர்சனம் வருதா இல்லியா? அதுலே நாலஞ்சு விமர்சனத்தைப் படிச்சீன்னா, உனக்கே படம் இப்படித்தானிருக்குமுன்னு குத்து மதிப்பாத் தெரிஞ்சிராது...?

சே.கா: சுமாராத் தெரிஞ்சிருமண்ணே!

கோ.கோ.சாமி: சுமாராத் தெரிஞ்சதை வச்சு சுமாரா விமர்சனம் எழுத வேண்டியது தானே?

சே.கா: அப்போ, இன்னிக்கு இவ்வளவு தான் டியூஷனுங்களா?

கோ.கோ.சாமி: உனக்கு எந்த ஊரு? சுத்த வெவரமில்லாத ஆளாயிருக்கியே? தமிழ் சினிமாவைப் பத்தி விமர்சனம் பண்ணனுமுன்னா அதுக்கு என்னெல்லாம் செய்யணும் தெரியுமா?

சே.கா: என்னண்ணே செய்யணும்?

கோ.கோ.சாமி: உனக்கு அகிரா குரோசாவா தெரியுமா?

சே.கா: எனக்கு காரசேவு தான் தெரியும்.

கோ.கோ.சாமி: ஐயையே! உனக்கு உலக சினிமா பத்தி ஒண்ணுமே தெரியலியே! ஆறுமாச சர்டிபிகேட் கோர்ஸ் படிச்சாத் தான் சரியாகும் போலிருக்குதே!

சே.கா: இல்லேண்ணே! ஏதோ கொஞ்சம் சொல்லுங்கண்ணே போதும். மத்ததை நான் தேத்திக்கிடுவேன்.

கோ.கோ.சாமி: சரி, குறிச்சுக்க! எந்தத் தமிழ்ப்படத்தைப் பத்தி விமர்சனம் பண்ணுனாலும் முதல்லே ஆரம்பிக்கும்போது எடுத்த எடுப்புலேயே அந்தப் படத்தைப் பத்தி எளுதாதே!

சே.கா: சரிண்ணே!

கோ.கோ.சாமி: கும்பிள்டன் கூட்டர்சனின் "வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன்?" படத்தை நம்மால் எளிதில் மறந்திருக்க முடியாதுன்னு ஒரு ’பிட்’டோட ஆரம்பிக்கணும்.

சே.கா: அந்தப் படம் எப்போ வந்ததுண்ணே?

கோ.கோ.சாமி: இருந்தாத் தானே வர்றதுக்கு? சும்மா வாயிலே வந்த ஒரு பெயரை எழுது. ஓஹோ, இப்படியெல்லாம் ஹாலிவுட் படங்க வந்திருக்கு போலிருக்குதுன்னு நினைச்சுக்கிட்டு நிறைய பேரு பேசாம இருந்திருவாங்க!

சே.கா: ஹாலிவுட் படத்தைப் பத்தித் தெரிஞ்சவங்க பார்த்தாங்கன்னா?

கோ.கோ.சாமி: கிறுக்கனா இருக்கியே? நிஜமாவே ஹாலிவுட் படத்தை நிறையப் பார்க்குறவன் தமிழ் சினிமா விமர்சனத்தைப் படிச்சிட்டிருப்பானா?

சே.கா: ஓஹோ! இப்படியொண்ணு இருக்குன்னு தெரியாது எனக்கு.

கோ.கோ.சாமி: நவசினிமா, எதார்த்த சினிமா, குமுகாயம், பின்நவீனத்துவம், அதிநாயகத்துவம், அதீதம் இந்த மாதிரி வார்த்தையெல்லாம் ஒவ்வொரு பத்திக்கும் ஒவ்வொண்ணா சேர்த்துக்கணும். சாப்பாட்டுக்கு உப்பு எப்படியோ அதே மாதிரி இதெல்லாம்.

சே.கா: இதுக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாதுங்களே?

கோ.கோ.சாமி: எழுதுறவன் மட்டும் தெரிஞ்சா எழுதுறான்? எந்த ஒரு பழைய வார்த்தையா இருந்தாலும் சரி, அதுக்கு முன்னாலே ஒரு முன், ஒரு பின் அல்லது ஒரு நவ, இந்த மாதிரி சேர்த்துக்கோ! ரெண்டே ரெண்டு எழுத்து தானே?

சே.கா: இன்னும் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்களேன்!

கோ.கோ.சாமி: உனக்குக் கொஞ்சம் வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டியது தான். உன் வீட்டுக்குப் போனதும் ஒரு நோட்டுலே பின்நாற்காலி, முன்மேஜை,நவகண்ணாடி,அதிவாளி இப்படி ஒரு நாளைக்குப் பத்து வாட்டியாவது எழுது.

சே.கா: சரிங்க!

கோ.கோ.சாமி: அப்புறம் விஜய் நடிச்சா இப்படி, அஜித் நடிச்சா இப்படித் தான் இருக்குமுன்னு உனக்குத் தெரியுமில்லே?

சே.கா: தெரியுமுங்க!

கோ.கோ.சாமி: அத வச்சு ரெண்டு மூணு பிட் போடு

சே.கா: படிக்கிறவங்க கண்டுபிடிக்க மாட்டாங்களா?

கோ.கோ.சாமி: யோவ், படம் பார்க்குறவனுக்கே அதுலே இருக்கிற குறை தெரியாமத் தானே விமர்சனம் படிக்க வறான்?

சே.கா: சரியண்ணே! அடுத்தது....

கோ.கோ.சாமி: அடுத்ததை அடுத்த வகுப்புலே பார்க்கலாம். நான் சொன்ன வீட்டுப்பாடத்தைத் தவறாம எழுதிட்டு வா!

சே.கா: சரிண்ணே! வாறேன்.

எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது மீண்டும் போக?

நடிப்பு, இசை,ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு இப்படி எல்லா விஷயம் குறித்தும் எழுத தமிழில் நிறைய வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுதிப்பழகி விட்டேன். எல்லாவற்றையும் உங்களிடம் சொன்னால், கோடம்பாக்கம் கோந்துசாமியின் பிழைப்பில் மண் விழுந்து விடாதா? அதனால், மற்றவற்றை அவரிடம் போய்க் கற்றுக்கொள்ளவும்; அல்லது, இணைய வரலாற்றில் எனது முதல் விமர்சனத்துக்காகக் காத்திருக்கவும்.

அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது.................! :-))

Tuesday, January 19, 2010

உறங்குதல் போலும்.!

அதிகாலை ஐந்து மணிக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்தாக வேண்டும். கால் டாக்ஸி சரியான நேரத்தில் வரவேண்டும்; அதற்குள் எழுந்து தயாராக வழக்கமான தூக்கத்தில் ஒரு சில மணிநேரங்களைத் தியாகம் செய்தாக வேண்டும். சற்றே சீக்கிரமாகக் கிளம்பி, சீக்கிரமாக அறைக்கு வந்து, சீக்கிரமாக இரவுணவை முடித்தும், முதல் விமானபயணம் என்கிற பரபரப்பு முகத்துக்கு நேர் எரிகிற குழல்விளக்காய் பரபரப்பேற்றிக்கொண்டிருந்ததால், வருந்தியழைத்தும் வாராத உறக்கம் ஜன்னலுக்கு வெளியிலிருந்து கெக்கலி கொட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறது. திட்டமிட்டு சில செயல்களை நிறைவேற்ற நினைக்கையில், கதவைத் தட்டியபடி உள்ளே நுழைகிற எரிச்சல்கார சினேகிதனாய் வேடத்தை மாற்றுகிற இந்த உறக்கத்தை, நாளைக்கு உறங்கியாக வேண்டும் என்பதால் சபிக்கவும் வழியில்லை.

"நீ தேடும்போது வருவதுண்டோ? விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ?" என்ற பாடல்வரிகள் பணத்துக்குப் பொருந்துவது போலவே உறக்கத்துக்கும் பொருந்துமோ?

இவ்வளவு தீவிரமாக யோசிப்பதன் நோக்கம், மூளை அயர்ச்சியடைந்து "போதும், படுத்து உறங்கு," என்று ஒரு அம்மாவின் அக்கறையோடு கட்டளையிடாதா என்ற நப்பாசையோ?

இந்தத் தூக்கத்தைக் குறித்து பல தகவல்களைக் கேள்விப்பட்டதுண்டு; படித்ததுண்டு. இதில் எத்தனை உண்மை, எத்தனை பொய்யென்று தோல்சீவுகிற பொறுமையின்றி, செரித்தாலும் செரிக்கலாம் என்ற அசட்டு நம்பிக்கையில் அப்படியே மென்றதே அதிகம்.

தூக்கம் என்றதும் உடனே குறட்டையும் "உள்ளேன் ஐயா," என்று கைதூக்கி நிற்கிறது. உறக்கக் குறட்டை விடுபவர்களுக்கு "ஸ்லீப் அப்னியா," என்ற உடல்நலக்குறைவு இருக்கிறதாம். ஒரு குடும்பத்தில் குறட்டை விடுபவர்கள் ஒருவர் இருந்தால், மற்றவர்களின் வாழ்நாளில் சராசரி இரண்டு வருடங்களுக்கு சமமான உறக்கம் குறைகிறதாம். ஆதாரம்: (BSASAA-British Snoring And Sleep Apnoea Association)

இந்தத் தூக்கம் எப்போதெல்லாம் நம்மை வஞ்சித்திருக்கிறது என்று கொஞ்சம் கணக்கெடுத்தால், ஏறக்குறைய எல்லா சுகதுக்கங்களின் போதும், நம்மை பலமணி நேரங்கள் தனிமையில் தவிக்க விட்டு, "வராவிட்டால் போய்த் தொலை," என்று கதவைச் சாத்துகிற நேரத்தில் ஒரு விசுவாசமான நாய்போல வாலைக்குழைத்துக்கொண்டு எனது காலைச் சுற்றிவந்திருப்பதை நினைவுகூர முடிகிறது.

இந்த உறக்கத்திலும் கடன் இருக்கிறது. வாரநாட்களில் சரிவர உறங்காமல், வார இறுதிகளில் ஈடு செய்தே தீர வேண்டியிருக்கிறது. நிறைய பேருக்கு இந்த உறக்கக்கடனும் ஏழுமலையானின் திருமணக்கடன் போலவே தீராமல் இருக்கிறது என்று தோன்றுகிறது.

வலுக்கட்டாயமாக வரவழைக்கப்படுகிற வாலிபக்கனவுகளைப் பற்றிக் குறிப்பிடாமல் உறக்கம் பற்றிய சிந்தனை நிறைவுறாது. நல்ல வேளை, தன்னிச்சையாக வரும் பல கனவுகள் எனக்கு என்றுமே நினைவில் இருந்ததில்லை; நிம்மதி! ஆனால், உறக்கத்துக்கு முன்னாலேயே என்னால் உற்பத்தி செய்யப்படுகிற கனவுகளின் ஆரம்பக்காட்சிகள் சராசரி தமிழ்த்திரைப்படங்களைப் போல என்னை ஒரு அதிநாயகத்துவத்தின் பிரதிநிதியாய் வரைந்து காட்டுகிறது. அந்தக் கனவுகளில் நான் காண விரும்புபவை தான் எனது குறிக்கோள்களா அல்லது அவை என்னை நானே எள்ளிநகையாடிக்கொள்ள செய்து கொண்ட இயல்பான ஏற்பாடுகளா என்பது எனக்கே புதிர்களாய் உள்ளன. இத்தனை ஆண்டுகள் கழிந்து மொத்தம் எத்தனை கனவுகள் மிஞ்சியிருக்கின்றன என எண்ணிப்பார்ப்பதற்கு பத்து விரல்களே தாராளமாயிருக்கும் போலிருக்கிறது.

எல்லாக் குழப்பமான கனவுகளையும் சுயநினைவின் ஆரவாரச்சிரிப்பு வந்து விரட்டுகிறது; அதிகாலையில் முகம் கழுவுகிறபோது முந்தைய இரவில் கனவில் நானே கற்பனை செய்து கொண்ட எனது முகத்தைக் கண்ணாடியில் காண முடிவதில்லை. உனக்கேன் இந்த ஆசையெல்லாம்? என்ற கேள்வியை எனது பிம்பத்தை நோக்கி தூக்கம் தெளியாத கண்கள் வினவுகின்றன. ஆனால், அன்றிரவு உறங்குவதற்கு முன்பு இன்று என்ன கனவுகாணலாம், அதில் யார் வர வேண்டும்,அது எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும் என்று திட்டமிடுவதற்குள்ளாகவே, வழக்கம்போலவே திட்டத்தைக் குலைத்துவிட்டு உறக்கம் வந்து என்னை இருட்டுக்குள்ளே இழுத்துச் சென்று விடுகிறது.

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.02

காட்சி.02

சோ.சொ.வ: உம்! அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகட்டும்.

த.அ.வாயர்: சோற்றுப்புதூர் பெருங்குடிமக்களே! உங்களுக்கு.....

சோ.சொ.வ:(இடைமறித்து) ஓய் தளபதியாரே! சிறிது நாட்கள் நான் சபைக்கு வரவில்லையென்றால் அரசமரபையே அலங்கோலம் செய்து விடுவீர் போலிருக்கிறதே? எங்கே அரசநர்த்தகி வரலட்சுமி?

த.அ.வாயர்: வேந்தே! இதற்குத் தான் நீங்கள் அடிக்கடி அரசவைக்கு வர வேண்டும் என்று நான் விரும்புவது. மன்னர் பெரும்பாலான நாட்கள் வருவதில்லையென்பதால் வரலட்சுமி வரவர வராதலட்சுமியாகி விட்டாள்.

சோ.சொ.வ:(அதிர்ச்சியுடன்) என்ன?

(ஆஸ்தானப்புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞர் மன்னரை நெருங்கிக் காதோரம் ஏதோ கிசுகிசுக்கிறார்.)

ஆ.அ.கவிஞர்: மன்னா! வரலட்சுமி பிரசவ விடுப்பில் சென்றிருக்கிறார்.

சோ.சொ.வ: என்ன? பிரசவமா? இது எப்போது நிகழ்ந்தது?

ஆ.அ.கவிஞர்: நீங்கள் தற்காலிகமாக நிதியமைச்சர் திருவாழத்தானைத் தலைமை மந்திரியாக நியமித்தீர்களே! அப்போது தான்...

சோ.சொ.வ: அடப்பாவிகளா! அப்படியென்றால் ஒன்றுமே கிடையாதா?நேரடியாக அமைச்சரவைக் கூட்டமா?

ஆ.அ.கவிஞர்: வேந்தே! நான் வேண்டுமானால் உங்கள் மீது நெடிலடி கழலடியில் ஒரு நேரிசை வெண்பா இயற்றிப்பாடட்டுமா?

சோ.சொ.வ: நிறுத்தும்! நீர் நெடிலடியில் பாடியபோதெல்லாம் அது அடிதடியில் தான் முடிந்திருக்கிறது.

த.அ.வாயர்:(சிரித்தபடி) ஹாஹா! சரியாகச் சொன்னீர்கள் மன்னா!

சோ.சொ.வ: ஆஸ்தான புலவராய் லட்சணமாய் அமைதியாய் இரும். இனி நீர் ஒவ்வொரு பொங்கலுக்கு மட்டும் வாயைத் திறந்தாலே போதும்.

த.அ.வாயர்: அதுவும் பொங்கலைத் தின்பதற்கு மட்டும்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லி விடுங்கள் மன்னா! இல்லாவிட்டால் இவர் எழுதுகிற ஆசிரியப்பாக்களைப் படித்து ஊர்சிரிக்கிறது.

சோ.சொ.வ: அப்படியே ஆகட்டும்! தளபதியாரே, வழக்கமாக எனக்கு அங்கவை,சங்கவை என்று இரண்டு பெண்கள் சாமரம் வீசுவார்களே? அவர்களும் பிரசவ விடுப்பில் போயிருக்கிறார்களா?

த.அ.வாயர்: இல்லை மன்னா! சாமரம் பிய்ந்து விட்டது. புதிதாக சாமரம் வாங்குமளவுக்கு நிதிநிலை சரியில்லையென்பதால் அங்கவையையும், சங்கவையையும் இனி தங்கவைத்துப் பயனில்லை என்று விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.

சோ.சொ.வ: ஹூம்! சோற்றுப்புதூர் சாம்ராஜ்யம் நிதிப்பற்றாக்குறையால் சோகப்புதூராக மாறிவிட்டதே ஐயா! மக்கள் என்ன நினைப்பார்கள்?

ஆ.அ.கவிஞர்: மன்னர் மன்னா! மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். பெண்கள் துணிச்சலாக இரவு நேரத்திலும் வெளியிலே வருகிறார்கள். திருட்டு,கொள்ளை,வழிப்பறி அனைத்தும் முற்றிலும் ஒழிந்தே விட்டது.

சோ.சொ.வ: இதில் ஒன்றும் உள்குத்து இல்லையே?

ஆ.அ.கவிஞர்: இல்லவே இல்லை மன்னா! இனி திருடவோ கொள்ளையடிக்கவோ எதுவுமில்லையென்பதால் திருடர்களெல்லாரும் விட்டால்போதுமென்று விதேசம் சென்று விட்டனர். சிறைச்சாலைகளெல்லாம் காலியாகி விட்டன.

சோ.சொ.வ: இப்படியே போய்க்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் சரித்திரம் நம்மைத் தூற்றாதா? ஏதாவது செய்ய வேண்டாமா? எனது ராஜபரிபாலனம் என்னாவது?

த.அ.வாயர்: ஆம் மன்னா! வறுமையை ஒழிக்க வேண்டும். சுபிட்சம் நிலவ வேண்டும். பாலும் தேனும் நம் நாட்டில் எங்கணும் ஓட வேண்டும்.

சோ.சொ.வ: வரலட்சுமி ஏன் உம்மைப் போன்ற இளைஞரை விடுத்து திருவாழத்தான் போன்ற அரைக்கிழத்திடம் மயங்கினாள் என்று இப்போதல்லவா புரிகிறது எமக்கு?

த.அ.வாயர்: மன்னிக்க வேண்டும் மகாபிரபு!

சொ.சொ.வ: அமைச்சர் பெருமக்களே! நாளை அரசவை கூடும்போது இங்கு ஒரு ராஜநர்த்தகி இருந்தாக வேண்டும். இல்லையேல், நமது தளபதியாரின் தலை யானையின் காலில் வைத்து மிதிக்கப்படும்.

த.அ.வாயர்: மன்னா!

சோ.சொ.வ: சபை கலையலாம்

(தளபதியாரும் ஆஸ்தான புலவரும் சிந்திக்கிறார்கள்.)

ஆ.அ.கவிஞர்: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இது தான் தளபதியாரே!

த.அ.வாயர்: யோவ் புலவரே! நானே ஏகக்கடுப்பிலே இருக்கிறேன். எம்மை வெறுப்பேற்றினால் உமது மனைவியை ராஜநர்த்தகியாக நியமனம் செய்து நாளை மன்னர் முன்னாலே ஆட வைத்து விடுவேன். ஜாக்கிரதை.

ஆ.அ.கவிஞர்: அதற்கு நீர் யானையின் காலிலே மிதிபடுவதே சாலச் சிறந்தது.

(திரை)

Monday, January 18, 2010

தள்ளாட்டம் தள்ளாட்டம்

தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்
கொளுத்தும் வெயிலில் குடிக்கிறான்
கோல்டுபீரை அடிக்கிறான்
சனிக்கு சனி குடலைரொப்பி சாக்கடையிலே விழுந்து புரண்டு
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

சாக்குத்தேடி அலையுறான் சந்தோசன்னு நினைக்கிறான்
சாயங்காலமாகிட்டா சரக்குலேதான் நனைகிறான்
அவுச்சமுட்டை வறுத்தமீனு பொரிச்சகோழி கடிக்கிறான்
ஆரம்பிச்சு அடுத்தடுத்து பாட்டில் வாங்கிக்குடிக்கிறான்
மாஞ்சுமாஞ்சு குடிச்சுப்புட்டு ஓஞ்சுபோயி உருப்படாம
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

காசில்லாமப்போச்சுன்னா கடனவாங்கிக் குடிக்குறான்
கண்டபடித்திட்டுறான் பொஞ்சாதியை அடிக்குறான்
கழுத்துச்சங்கிலி கைக்கடியாரம் சேட்டுக்கடையில் வைக்குறான்
கடைசியிலே கிறுக்குப்புடிச்சுத் தெருமுனையில் நிக்குறான்
வீடுவாசல் தாலிவரைக்கும் வித்துக்குடிச்சு விரயமாக்கித்
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

குந்தித்தின்னா கரைஞ்சிடும் குன்றுங்கூட கேளுங்க
குடியினாலே தெருவிலே குடும்பம்நிக்குது பாருங்க
பச்சைப்புள்ளே பிச்சையெடுக்க வைக்குமிந்தக் குடியும்தான்
பழக்கத்துக்கு அடிமைப்பட்டா வாழ்க்கைவிரைவில் முடியும்தான்
காசைத்தொலச்சு கருமங்குடிச்சு காணும்பேர்கள் காறித்துப்பிட
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

தீ....நகர்!

ஊருக்குள்ளே சனமெல்லாம் வூட்ட இளுத்துப் பூட்டிக்கினு
உசுமாரோட்டுக்கு வந்திருச்சா பையைத் தோள்லே மாட்டிக்கினு
அல்லாக்கடயும் பார்க்கசொல்ல கூட்டம் தலையைப் பிய்க்குதே!
எல்.கே.எஸ்சிலும் ஜி.ஆர்.டியிலும் சனங்க நகைக்கு மொய்க்குதே!

கிஜ்ணா சூட்டுக்கடயிலே மாசூர் பாகு வாங்குது
கிஜுணவேணித் தேட்டராண்ட மல்லிகைப்பூ வாங்குது
நல்லிஜில்கிலே பொண்ணுங்கோ பொடவைரவுக்க வாங்குது
நாய்டுஹாலில் ஒண்டியிலே இன்னாத்தையோ வாங்குது

சென்னஜிலுக்கு சரவணா போத்தீஜிலும் கூட்டம்தான்
செருப்புப்போட கோவிலாண்ட சேர்ந்துநிக்குது கூட்டம்தான்
கரும்புசூஸ் பழரசத்துக்கு டோக்கன்வாங்கக்கூட்டம்தான்
காயிவாங்க மார்க்கெட்டுலே காலைமரிக்கும் கூட்டம்தான்

காலேஜுக்குக் கட்டடிச்சு சைட்டடிக்கும் ஆளுமுண்டு
கவனம் கொஞ்சம் பெசகினா ஜேப்படிக்கிற ஆளுமுண்டு
கடைக்கு வெளியே மனைவிக்காகக் காத்திருக்கும் ஆளுமுண்டு
காசில்லாம சும்மானாச்சும் நோட்டம் வுடுற ஆளுமுண்டு

பணமில்லேன்னு பொலம்புறான் பாதிப்பேரு வெளியிலே
பாண்டிபஜாரு ரோட்டாண்டதான் நடக்கக்கூட முடியலே
தேஞ்சுதேஞ்சு சேர்த்த பணத்தைத் டிநகருலே தொலைக்குறோம்
தெருவில்பிச்சை கேட்குறவனை எமனப்போல முறைக்குறோம்

Sunday, January 17, 2010

தாம்பரம் டு பீச்

தளயத் தளய பொடவ கட்டி
தலயில் மல்லிப்பூவும் வச்சி
தாம்பரத்துலே ஏறினாளே தங்கமீனா-அவ
தங்கநிறத்தில் தகரம்நானும் ஒட்டுவேனா?

சருகைவேலை சல்வார்போட்டு
சல்லுன்னு வெள்ளிக்கொலுசும்போட்டு
சானடோரியம் டேசனில் வந்தா புஷ்பலதா-நான்
சப்புக்கொட்டியே பாத்துக்கிட்டே நிக்குறதா?

குனிஞ்சதலை நிமிராமலே
குறுகுறுன்னு பார்க்காமலே
குரோம்பேட்டையில் ஏறினாளே குமுதினி-ஒரு
கூட்டம்தினம் அவளைப் பார்க்க வருமினி

கல்லாப்பெட்டி குலுங்குனாப்புலே
கலகலன்னு சிரிச்சுக்கிட்டே
பல்லாவரத்தில் ஏறினாளே பத்மாவதி-அவ
பார்க்குறவரை மனுசுக்குள்ளே பாடாவதி

திமுசுக்கட்டை ஜீன்ஸுமாட்டி
டி-சர்ட்டையும் போட்டதுபோல
திரிசூலத்துலே திவ்யாப்பொண்ணு ஏறுனா-என்
திருட்டுப்பார்வை பாத்து முகம்மாறினா

மீனம்பாக்கம் டேசனில்வந்து
மிதிச்சுப்புட்டா மனசிலேறி
மினுமினுக்கும் கண்ணுக்காரி மைதிலி-பஞ்சு
மிட்டாய்ச்சிரிப்பில் மனசுமாச்சு நரபலி

பழவந்தாங்கல் வந்தாப்போதும்
பசங்களுக்கு வரும்சந்தோஷம்
பரிமளான்னு பொண்ணொருத்தி ஏறுவா-அவ
பக்கத்தில்போனா பூனைபோல சீறுவா

பாந்தமாக நடந்துவந்து
பதவிசாக ஏறுவாளே
பரங்கிமலை கனவுக்கன்னி பூங்கொடி-அவ
படபடன்னு பேசுறப்போ சரவெடி

கீச்சுக்குரலில் பேசுவாளே
கிறுக்கனாக்கிப் போடுவாளே
கிண்டியிலே கீதாப்பொண்ணு தெனசரி-நான்
கிட்டேவந்து பேசுறப்போ அனுசரி

சைதாப்பேட்டை வந்தாப்போதும்
சத்தமெல்லாம் அடங்கிப்போகும்
மைதாமாவு பொம்மைபோல மதுமிதா-என்
மனசுக்குள்ளே விறகடுப்பு எரியுதா

ஆம்பல்போல மொவ்வல்போல
அழகழகா தாவணிபோட்டு
மாம்பலத்துலே மஞ்சுவந்தா புழுக்கந்தான்-மனசு
மடிஞ்சுசுருண்டுபுலம்புறது வழக்கந்தான்

கோணல்சிரிப்பு சிரிச்சுக்கிட்டு
கொழஞ்சு வளைஞ்சு பேசிக்கிட்டு
கோடம்பாக்கம் டேசனிலே காஞ்சனா-நான்
குத்துப்பட்டவன் போலத்தரையில் சாஞ்சேனா?

தங்கம்மான்னு பொண்ணொருத்தி
தலவிரிச்சுப்போட்டுக்கிட்டு
நுங்கம்பாக்கம் டேசனிலே வாராளே-மனசை
நுங்குபோல நோண்டியெடுத்துப்போறாளே

சேலைக்கடை பொம்மையாட்டம்
செவத்தபொண்ணு சங்கீதாவும்
சேத்துப்பட்டிலே ஏறினதப் பார்த்தேனே-நான்
செங்கச்சூளையில் விழுந்தவனா வேர்த்தேனே

எக்மோர்டேசன் வந்ததும்
எறங்கத்தொடங்கும் பொண்ணுங்க
ஏறிப்போகும் மனசில்ரொம்ப பாரந்தான்-அவுங்க
என்னைவிட்டுப் போறாங்க வெகுதூரந்தான்

பார்க்குடேசன் வந்ததும்
பறவையெல்லாம் பறந்திடும்
பரிதவிச்சுப் பார்த்திருப்பேன் சோகமா-இந்தப்
பயணமும்தான் முடியுதுவெகுவேகமா

கோட்டையிலே பொட்டியிலே
கோட்டானைப்போல் நானிருப்பேன்
கூட்டுவண்டிப்பயணம் முடியப்போவுதே-மனம்
குழைஞ்சுபோன சாதம்போல ஆவுதே

வந்திருச்சு பீச்சுதான்
வருதேபெருமூச்சுதான்
வாழ்க்கையிலே பயணமபல பாக்கிதான்-நான்
வாழ்ந்திருப்பேன் காரணம் உருவாக்கிதான்

Saturday, January 16, 2010

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

பாலுக்கொரு காலிருக்கு பல்லுக்கில்லே காலு-நீ
பாலைப் பல்லா எளுதிப்புட்டா கொறயும் மார்க்கு நாலு
காலுக்குமே காலிருக்கு கல்லுக்குக் கிடையாது-நீ
காலின் காலை வெட்டிடாதே தமிழில் எழுதும்போது

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

சோத்துக்கொரு காலிருக்கும் சேத்திலது இல்லை-மழை
சோண்ணுகொட்டும்போதுவரும் காலுக்குத்தான் தொல்லை
காளைக்குண்டு நாலுகாலு களைக்கு உண்டா கண்ணு-நீ
கருத்தாக எழுதையிலே காளைக்குக் கால் ஒண்ணு

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

காதுலேதான் போட்டுக்கோ காலப்போடத் தெரிஞ்சுக்கோ
காலுக்கு மேல் காலு போட்டா கர்வமுண்ணு புரிஞ்சுக்கோ
கடைக்குப்போயி காலுபாட்டில் நாமவாங்கிக் குடிக்குறோம்
காரசாரமாகக் கோழிக்கால வாங்கிக் கடிக்குறோம்

காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-எழுத்துலே
காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ-அதனால்
கவனமாக எழுத்தில் காலைப்போட்டுக்கோ! போட்டுக்கோ!

கப்படிக்குது கப்படிக்குது

கப்படிக்குது கப்படிக்குது ஒத்திக்கோ-நீ
கச்சீப்புலே மூக்கையும்தான் பொத்திக்கோ
ஒன்னச் சுத்தி ஊர்முச்சூடும் நாத்தம்தான்-இப்போ
ஒதவாக்கரை பசங்களுக்கு ஏத்தம்தான்

சாமியத்தான் கும்புடுற சாக்குலே-சிலபேர்
சைட் அடிப்பான் கோவிலுக்குள்ளே சோக்குலே
வாரத்துக்கு பொண்ணொருத்தி மாத்துறான்-கொஞ்சம்
வாயிளிச்ச பொண்ணாப்பாத்து தேத்துறான்

ரெட்டைஜடை யூனிபார்மும் ட்ரவுசரும்-துணிஞ்சே
கட்டடிச்சுப் படத்தைப் பார்க்க தெனம்வரும்
சாதுவான பசங்களெல்லாம் ஒதுக்கமா-பொகையை
ஊதுறானே இன்ஜினாட்டாம் அமுக்கமா

பட்டணத்து வாழ்க்கை கட்டமண்ணுதான்-இதுலே
படிச்சவனும் பாமரனும் ஒண்ணுதான்
ஆங்கிலத்தில் பேசுறவன் ஞானிதான்-இங்கே
அம்மான்னு சொன்னா அவன் பேமானிதான்

கப்படிக்குது கப்படிக்குது ஒத்திக்கோ-நீ
கச்சீப்புலே மூக்கையும்தான் பொத்திக்கோ
ஒன்னச் சுத்தி ஊர்முச்சூடும் நாத்தம்தான்-இப்போ
ஒதவாக்கரை பசங்களுக்கு ஏத்தம்தான்

அப்பா, நீ எப்போ வருவே?

புலம்பெயர்ந்த தந்தைக்காக ஒரு குழந்தை புலம்பினால்....

கரடிபொம்மையைக் கட்டிக்கிட்டு தூங்குவேன் அப்பா-என்
கனவில் வந்து ஒரே ஒரு கதை சொல்லேன் அப்பா
கடல்பலவும் கடந்துதான் இருக்குறே அப்பா-வீட்டுக்
கண்ணாடிக்கூட்டில் புகைப்படமா சிரிக்குறே அப்பா

வண்டியிலே பள்ளிக்கூடம் அழைச்சுப்போவியே-உன்
வாசனைநான் மோப்பம்புடிச்சு வருஷமாச்சுதே
பச்சைக்குதிரை ஓடலை பார்க்குப்பக்கம் போகலே
பாடப்புத்தகம் அட்டைபோட நீயில்லே அப்பா!

அம்மா சிரிச்சு நானும் பார்க்க ஆசை வருகுதே-தெனம்
ஆத்திரமாப் பேசுறாங்க அளுகை வருகுதே
காசுபணம் அனுப்புறே! கணினியிலே பேசுறே!
கரடிபொம்மை தவிர எனக்கு யாருமில்லையே

Friday, January 15, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01

காட்சி.01

சோ.சொ.வ அரசவைக்குள்ளே நுழைகிறார். தளபதி அடங்காவாயர் உடன் வந்து கொண்டிருக்கிறார்.

சோ.சொ.வ: தளபதியே! வழக்கமாக யாம் அரசவைக்கு வருகையில் ஊதினால் உயிர்போகிறவன் போல ஒல்லியாக ஒருவன் கட்டியம் சொல்லுவானே? இன்று அவன் எமது கண்களுக்குத் தென்படாத காரணம் யாதோ?

த.அ.வாயர்: மன்னா! உங்களுக்கு மட்டுமா? என் கண்களுக்கும் தான் தென்படவில்லை. ஆறுமாதங்களாக ஊதியம் கிட்டாததால் அவன் அண்டைநாட்டுக்குச் சென்று தண்டோரா போட்டுப் பிழைப்பதாகக் கேள்வி.

சோ.சொ.வ: என்ன? ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையா? கஜானா அத்தனையும் காலியாகி விட்டதா?

த.அ.வாயர்: திறமைமிக்க நமது நிதியமைச்சர் தில்லாலங்கடியூர் திருவாழத்தான் இருக்கையில் அவ்வாறு நடக்க விடுவாரா?

சோ.சொ.வ: ஹாஹா! அது தானே பார்த்தேன்? இப்போது நமது கருவூலத்தின் மொத்த இருப்பு என்ன?

த.அ.வாயர்: நான்கு சாவிகளும் மூன்று பூட்டுகளும் பத்திரமாக உள்ளன மன்னா!

சோ.சொ.வ: வெட்கம்! ஒரு பூட்டு எண்ணிக்கை குறைகிறதே!

த.அ.வாயர்: ஆம் மன்னா! அனைத்துப் பேரீச்சம்பழங்கக்கடைகளுக்கும் ஒற்றர்களை அனுப்பிக் கண்டுவர உத்தரவிட்டிருக்கிறேன்.

சோ.சொ.வ: அது சரி, இப்போது எவரேனும் ஒருவர் கட்டியம் கூறாமல் யாம் அரசவைக்குள் நுழைவது அரசபரம்பரைக்கே இழுக்காய் அமைந்து விடுமே?

த.அ.வாயர்: ஒரு யோசனை மன்னா! நமது ஆஸ்தான புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞர் சிறிது நாட்களாக எதுவும் செய்யாமல் தண்டச்சம்பளம் மற்றுமே பெற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்த சேவகன் கிடைக்கும்வரை அவரையே கட்டியம் கூறச் செய்தாலென்ன?

சோ.சொ.வ: உமது சமயோசிதம் எமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விரைவில் உம்மைத் தலைமைத்தளபதியாக்கி விடுகிறேன்.

த.அ.வாயர்: அது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் வேந்தே! பல மாதங்களாக நமது படையில் ஒரு வீரர் கூட இல்லாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறேன். ஆத்திர அவசரத்துக்கு அண்டை நாட்டிலிருந்து பத்துப் பன்னிரெண்டு வீரர்களை இரவலாகவாவது வாங்கித் தாருங்களேன்.

சோ.சொ.வ: அவசியம் கவனிக்கிறேன் அடங்காவாயரே! முதலில் கட்டியத்துக்கு ஏற்பாடு செய்யும்.

த.அ.வாயர்: இதோ செய்கிறேன் மன்னா! யோவ் அவியல்!

சோ.சொ.வ: என்னது...?

த.அ.வாயர்: மன்னிக்க வேண்டும் மன்னா! ஒவ்வொரு முறையும் நமது மந்திரிகளின் முழுப்பெயரையும் சொல்லிச் சொல்லி தாவாங்கட்டையில் தாளாத வலி ஏற்படுகிறது. வாங்குகிற ஊதியமெல்லாம் வைத்தியர் விடாக்கண்டருக்கே விரயமாகிவிடுவதால் அனைவரையும் சுருக்கி அழைத்து வருகிறேன்.

(ஆஸ்தான புலவர் அவியலூர் அடுப்பங்கவிஞர் ஓடோடி வருகிறார்)

அ.அ.கவிஞர்: வாழ்க மன்னர்! வளர்க வீரம்! ஓங்குக புகழ்! உயர்க உமது எலிக்கொடி!

சோ.சொ.வ: புலவரே! உமது தமிழ்ப்புலமைக்கு எமது நன்றி! அடுத்த புத்தாண்டில் உமக்கு ஓயாவாய்ப்புலவர் என்ற பட்டமளிப்பதாக இருக்கிறேன்.

அ.அ.கவிஞர்: யான் தன்யனானேன்!

த.அ.வாயர்: நீங்கள் தன்யனாகி விட்டீர்கள்! மன்னர் தான் தனியனாகி விட்டார். கட்டியம் கூறவும் ஆளில்லாத நிலை.

சோ.சொ.வ: ஆம் புலவரே! பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கிற உமது கெட்டித்தயிர் போன்ற தமிழால் எமக்கு ஒரு கட்டியம் கூறும். அரசவைக்குள் வந்து விடுகிறேன்.

அ.அ.கவிஞர்: மன்னா! விருத்தமாகப் பாடட்டுமா?

த.அ.வாயர்: நீர் வருத்தமாகப் பாடாமல் இருந்தால் சரி!

சோ.சொ.வ: பொருத்தமாகச் சொன்னீர் தளபதியாரே! புலவரே, இத்தனை ஆண்டுகளாக அரசவைக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறீர்! தினசரி கேட்கும் கட்டியத்தைக் கூடவா சட்டென மறந்தீர்!

அ.அ.கவிஞர்: மன்னிக்க வேண்டும் மன்னா! நீங்கள் அரசவைக்கு வந்து நெடுங்காலமாகிவிட்டதல்லவா? அதனால் மறந்து விட்டேன்.

சோ.சொ.வ: பாதகமில்லை புலவரே! மரியாதையெல்லாம் பார்த்தால் மன்னராக இருத்தல் இயலாது. உமது அழைப்பை ஏற்று நாம் அரசவைக்குள்ளே வருகிறோம். தளபதியாரே வாழ்த்துச் சொல்லும்!

த.அ.வாயர்: தளபதி அடங்காவாயர் வாழ்க! மன்னிக்கவும் மன்னா, சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வாழ்க!

(சோ.சொ.வ அரியணையில் அமர்கிறார்)

சோ.சொ.வ: உம்! அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகட்டும்.

(தொடரும்)

(ஆதாரம்: சொறிகால்வளவனும் சோளக்கொல்லை பொம்மையும் என்ற புலவர்.விடாப்பொய்யர் வீரவநாதனின் ஆராய்ச்சி நூல் மற்றும் ஹிஹிபீடியா வலைத்தளம்.)

ஒண்ணுக்குமேலே பொண்ணப் பாத்தா

ஒண்ணுக்குமேலே பொண்ணப் பாத்தா கொளப்பந்தான்-ஒரு
ஒல்லிப்பொண்ணுண்ணா குண்டுப்பொண்ணுங்க எளப்பந்தான்

பனகல்பார்க்குப் பக்கத்துலே எளநீக்கடலே பாத்தேனெ
பளபளப்பா சிரிச்சுநிண்ணா பார்வதி-அவ
பக்கத்திலொரு தோழிநிண்ணா யார்விதி?

வடபளநி டெப்போலதான் வந்துநிண்ணா வாணிதான்
வால்புடிச்சுக் கூடநிண்ணா சாரதா-நான்
வாணிய வுட்டு இவபின்னாலே போறதா

ஜெமுனிசிக்னலில் நிக்கசொல்ல ஜெயந்திநிண்ணா பக்கத்துலே
ஜெனிலியாபோல் பின்சீட்டுலே காவியா-என்
ஜேப்பு காலியானா வுட்டுப்போவியா?

ஒண்ணுக்குமேலே பொண்ணப் பாத்தா கொளப்பந்தான்-ஒரு
ஒல்லிப்பொண்ணுண்ணா குண்டுப்பொண்ணுங்க எளப்பந்தான்

இந்த ஏழு நாட்கள்

பகவான் ரமண மகரிஷியைத் தரிசிக்க ஒரு இளைஞன் சென்றானாம். ஆன்மீகம் குறித்துப் பலரிடமும் கேட்டு சரியான பொருள் புரியாமல், திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து வசித்து வந்த ரமண மகரிஷியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவராவது தனது சந்தேகங்களுக்கு ஒரு தெளிவான விடையளிப்பாரா என்று அவரை அணுகினானாம்.

"பகவானே! மிகவும் குழம்பியிருக்கிறேன். என்னை நல்வழிப்படுத்துங்கள். நான் செல்ல வேண்டிய வழி எது?" என்று சஞ்சலத்தோடு வினவினானாம்.

பகவான் ரமணர் அவனைப் பார்த்து சிரித்து,"நீ வந்த வழியே போ," என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டாராம். குழம்பிப் போயிருந்த இளைஞன் நெடுநேரமாக அங்கேயே நின்றிருக்க, நீண்ட நேரத்துக்குப்பிறகு ரமணரின் பிரதம சீடர்களில் ஒருவர் வெளிப்பட்டாராம்.

"தம்பி! பகவான் ஒன்றும் விளையாட்டாகச் சொல்லவில்லை. உங்களது கேள்வியென்ன? "நான்" எந்த வழியே போக வேண்டும் என்பது தானே? நான் யார் என்ற சுயபரிசோதனையே பகவான் ரமணமகரிஷியின் உபதேசங்களின் சாரம். இந்த "நான்" எங்கிருந்து வந்தது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அதனால் தான் "நான்" வந்தவழியே போக வேண்டும் என்று பகவான் சொன்னார் என்று விளக்களித்தாராம்.

இந்த ஒரு வாரத்தில், தனிமடல் அனுப்பி நான் வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பியவர்கள் இருக்கிறார்கள். எனது வலைப்பதிவில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியவர்கள் இருக்கிறார்கள். பல வலைப்பதிவுகளின் இழைகளை எனக்கு அனுப்பி அவற்றிலிருப்பதைப் படித்துப் பயன்பெறுவாயாக என்று ஆசிவழங்கியவர்கள் இருக்கிறார்கள். உனக்குப் பெயர் கிடையாதா, அல்லது சொந்தப்பெயரையும் வெளியே சொல்ல இயலாத அளவுக்கு நீ ஒரு கேவலமான பிறவியா என்று என் குடும்பத்தையே இழித்தெழுதிய ஓரிருவரும் (அதில் ஒருவர் பெண்) இருக்கிறார்கள்.

ஆனால், பெரும்பாலானோரது கருத்து: உனது எழுத்து இவரை அல்லது அவரை ஒத்து இருக்கிறது. அல்லது நீ தான் அவர்; வேறு பெயரில் எழுதி யாரையோ குழப்ப முயன்று கொண்டிருக்கிறாய்; அல்லது நீயே குழம்பியிருக்கிறாய். உன் எழுத்து எங்கேயோ, எப்போதோ படித்த எவர் ஒருவருடையதோவான ஒரு படைப்பை நினைவுறுத்துகிறது.

இப்போது ரமணமகரிஷியின் ஆசிரமத்தில் உபதேசம் கேட்டுச்சென்ற அந்த நபரின் நிலையில் நானிருக்கிறேன். இதுவரை எனது எழுத்துக்களில் வேறு எவரது முகமோ அல்லது குரலோ தென்பட்டிருக்கிறது அல்லது ஒலித்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

நான் எந்த வழியே செல்ல வேண்டும்? வந்த வழியே செல்கிறேன். எனது குப்பைகளைக் கிளறிப் புடைத்துக் கழுவி மீண்டும் எனது எழுதுமேஜையின் மீது அலங்காரப்பொருளாய் அடுக்கி வைக்கிறேன்.

பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்

இது என் இணையநண்பர் மும்பைவாசி எழுதின பாடல்:

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…

கண்களாலே பேசிக்கிறோம் நாலு மாசமா
அதை சொல்லாமலே மூடிவைச்சா காதலாகுமா
நாள்முழுதும் காத்திருக்கும் என்னைப்பாருமா
நீயும் கண்டுக்காம போனா இந்த ஜீவன்வாழுமா

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…

பொய்யும் புரட்டும் சொல்லிப் பலரும் காதலிப்பாங்க
நீயோ, நடந்துபோக பின்னால் வந்து பேசிப்பார்ப்பாங்க
காதல்கடிதம் திரும்பதிரும்ப கொடுத்துநிப்பாங்க
நீயும் திருமணத்தின் பேச்செடுத்தா ஓடிப்போவாங்க

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…

காதலதை எனக்குத் தர தயங்கலாகுமா
அடி காதலியே உன் மனதில் இன்னும் குழப்பமா
மனமிரண்டும் ஒத்தபின்னும் மௌனமாகுமா
மனதின்காதல் சொல்லியென்னைநீயும் வாழவையம்மா…

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்
காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை
மூடிவைச்சா உயிரும் வாழுமா…இதுக்குப் போட்டியா நான் எழுதின பாடல் இதோ:

நாஷ்டா எறங்கலே நாலுநாளா ஒறங்கலே
வேஷ்டா கூவாங்கரையிலே குந்திநிக்குறேன்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா-கெல்லீஜ் போவலாம்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா

நானாங்காட்டி நாயாட்டந்தான் பின்னால் சுத்துறேன்-உன்
நைனாவந்து ஒதக்கச்சொல்ல பேயாக்கத்துறேன்
தேனாம்பேட்டே சிக்னலாட்டம் மனசு கொமயுதே-நீ
தேவித்தேட்டராண்ட வந்தா மனசு நிறயுதே (நாஷ்டா எறங்கலே)

ஆவ்டியிலே பாத்தபோது சிரிச்ச பொண்ணுதான்-இப்போ
அண்ணாநகரு வந்தாங்காட்டி மொறச்சகண்ணுதான்
வேளச்சேரி ரயிலப்போல மனசு காலிதான்-உனக்கு
வேணுமுன்னா மாயாஜாலு போயி ஜாலிதான்

நாஷ்டா எறங்கலே நாலுநாளா ஒறங்கலே
வேஷ்டா கூவாங்கரையிலே குந்திநிக்குறேன்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா-கெல்லீஜ் போவலாம்
கொருக்குப்பேட்டை கோமளாவே வா

பொங்கல்-உண்ட களைப்பு

பண்ருட்டிமுந்திரிப்பருப்புப்போட்டு
பச்சையேலக்காயும் இடிச்சுப்போட்டு
மண்டவெல்லத்தையும் பொடிச்சுப்போட்டு
மனசுபோல பாலையும் ஊத்தி
வெண்கலப்பானையில் சக்கரைப்பொங்கலை
வெந்தப்புறமா இறக்கிவச்சு
குண்டாநெய்யோட குழைச்சடிச்சா
களச்சுடுச்சு சிங்கமெல்லாம்?

பொறியல்கூட்டு அவியல்வச்சு
பொரிச்ச உளுந்து அப்பளத்தோட
கறிவடாமும் காரக்கொழும்பும்
கறுக்குன்னிருக்கும் மெதுவடையும்
உறியுலொறஞ்ச கெட்டித்தயிரும்
ஊறுகாயும் வெளுத்துக்கட்டி
முறிச்சகரும்புச் சாறுங்குடிச்சா
முடங்கிருச்சு சிங்கமெல்லாம்?

கல்லடக்குறிச்சி வெத்தலையெடுத்து
கச்சிதமாச் சுண்ணாம்புமிட்டு
மெல்லறதுக்குப் பாக்கைப்போட்டு
மேலேஜாதிக்காயையும் போட்டு
பல்லிடுக்கிலே பன்னீர்ப்பொவையிலெ
பக்குவமாத்தான் போட்டுமென்னு
எல்லாருவீட்டிலுமே பாயைவிரிச்சுப்
படுத்திருச்சா சிங்கமெல்லாம்?

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!

கதிரறுத்துத் தலயில் வச்சிக்
களத்துமேட்டில் அடிச்சுப்போட்டு
முதிர்ந்தநெல்லை மூட்டைகட்டு முத்தம்மா-நமக்கு
முடிஞ்சுபோச்சு கஸ்டமெல்லாம் முத்தம்மா

சாணமிட்டுத் தரைமெழுகி
சந்தோசமாக் கோலமிட்டு
சாமங்கிப்பூ தூவிடலாம் முத்தம்மா-கும்பிட்ட
சாமியெல்லாம் கைகொடுக்கும் முத்தம்மா

வெளஞ்சநெல்ல அடிச்சுக்குத்தி
வெள்ளித்துண்டா அரிசியெடுத்து
களஞ்சுபோட்டுப் பொங்கலிடு முத்தம்மா-இனிக்கும்
கரும்பெடுத்துப் பானையில் கட்டு முத்தம்மா

பாற்கடலாப் பொங்கிவரும்
பச்சரிசிப் பொங்கலைத்தான்
படச்சிடுவோம் சாமிக்குத்தான் முத்தம்மா-எங்குமே
பஞ்சமில்லாதிருக்கணுமே முத்தம்மா

தைபொறந்தா வழிபொறக்கும்
தரணியெல்லாம் மனம்செழிக்கும்
தமிழரெல்லாம் தலைநிமிர்வார் முத்தம்மா-தமிழைத்
தாயைப்போலக் கும்பிடுவோம் முத்தம்மா

Thursday, January 14, 2010

ஆர்க்குட்டுலே அமுருதா

ஆர்குட்டிலே அமுருதா அழைக்கிறா-தெனம்
ஆஷாப்பொண்ணு ஃபேஸ்புக்கிலே குழைகிறா- நான்
அவங்களிலே ஒருத்தி பின்னால் போகவா?-இல்லே
அமிஞ்சிக்கரையில் தனிமையிலே வேகவா?

நூறடிரோடுபோல் மனசாச்சு பள்ளம்-மாகி
நூடுல்ஸ்போல் வெந்துபோச்சே உள்ளம்

மாம்பலன்னா ரங்கநாதன் ஸ்ட்ரீட்டுதான்-அங்கே
மண்டே முதல் சண்டேவரை ட்ரீட்டுதான்-நம்ம
மயிலாப்பூரு தெப்பக்குளம் ஸ்டாப்புதான்-அங்கே
மாஞ்சுபோயி நின்னிருப்பான் மாப்புதான்

திர்லக்கேணி போனா உண்டு ரத்னா கஃபே-பணத்
திமிரெடுத்து நீ துண்ணே பஃபே

பிஸ்ஸாவத் தான் துண்ணுவேன்னு சொல்லுறா-தெனம்
பிக்சருக்கு அழைச்சிட்டுப்போய் கொல்லுறா-புது
செல்லுவாங்கிக் கொடுத்ததொரு குத்தமா-ரீசார்ஜ்
செய்யலேன்னா திட்டுறாளே சத்தமா

ஆரும் பண்ணாதீங்க லவ்வு தொல்லையப்பா-வெறும்
அல்டாப்பெல்லாம் காதல் இல்லையப்பா

வல்லான் வகுத்ததே வழி

"ஏய், நீ ரொம்ப அழகாயிருக்கே!"

இயல்பா இருக்கிற ஒரு பெண்ணை உசுப்பேத்தி விட சில சமயம் அடிக்கடி பிரயோகப்படுத்தப்படுகிற இந்தப் புகழ்வீச்சு போதும். ஒவ்வொரு முறை அவள் கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் பரு வந்துவிட்டதா என்று பயப்படுவாளோ என்னமோ? அல்லது ஒரு அதீதமான நப்பாசையில் புருவத்தை வில்லாக்க முயன்று "Nil" ஆக்கியவர்களும் நிச்சயமாக இருப்பார்கள்.

இப்போது நானும் அதே போல ஒரு கண்ணாடியில், பாதரசப்பூச்சின் முதுகில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது போல இருக்கிறது. சும்மானாச்சும் எதையாவது எழுதுவோமே என்று தொடங்க, அதில் எங்கேயோ யாரோ, எண்ணி, எழுதுவதைத் தள்ளிப்போட்ட ஏதோ ஒரு விஷயத்தை நான் தொட்டிருப்பது தான் அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது போலும். பனம்பழம் விழுந்திருக்கிறது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.

எல்லா இரவுகளும் போலவே, இன்றும் மதில்களில் குறிக்கோளற்று ஓலமிட்டுப்போகிற பூனையின் சத்தம் கேட்கிறது. அதன் மீது இரக்கம் வைப்பதா அல்லது அதன் பசிக்கு இரையாகப் போகும் ஜந்துவுக்காகப் பரிதாபப்படுவதா என்று புரிந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.

ஜீவகாருண்யத்தின் நிறத்தையும் எச்சில் தொட்டு அழித்து அவரவர் விரும்புகிறாற்போல மாற்றலாம். பிரியாணியில் "லெக் பீஸ் எங்கே?" என்று கேட்பவனையும், மாமிசக்கடையில் "நல்ல குடலாக அறுத்துக் கொடு," என்று கேட்கிறவனையும் காட்டுமிராண்டி என்று சொல்ல முடியாது. ஒரு பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையின் மீது ஏற்படுகிற பரிதாபம் பூனையின் நகங்களால் அழுத்தப்பட்டிருக்கும் எலியின் மீது ஏற்படாமல் போகிறது.

கல்வெட்டுகளுக்கும், சுவடிகளுக்கும் அடுத்தபடியாக தெருமுனைகள் மனிதநாகரீகத்தின் சில உண்மைகளை உடைத்துப்போட்டுக் காட்டுகின்றன.

தினசரி எங்கள் தெருவுக்கு சைக்கிளின் மணியடித்துக்கொண்டு வருகிற அந்த மீன் வியாபாரி, இரண்டு வருடங்களில் நிச்சயம் அங்கிருந்த மனிதர்களை அடையாளம் கண்டுவைத்திருப்பார். ஆனால், அவனது வருகையின் போதெல்லாம் எனக்கு "எளியோர்-வலியோர்," என்ற இரண்டு வர்க்கத்தின் விபரீதப் போராட்டங்கள் கண்கூடாக நடைமுறையில் புரிந்தன.

அந்தப் பகுதியிலே குடியிருக்கப்போனபோது, அந்த மீன் வியாபாரி வரும்போதெல்லாம் காக்கைகளின் சத்தம் தான் அவனது வரவை குடியிருந்தோருக்கு அறிவிக்கும். முச்சந்தியில் சைக்கிளை நிறுத்தி, அவன் அவரவர் விருப்பம் போல மீன்களை அறுத்தும் நிறுத்தும் கொடுத்துக்கொண்டிருக்கும்போது காக்கைகள் பரபரப்பாய்க் கரைந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். எப்போதாவது ஒரு முறை ஒரு பூனையும் வந்து தனக்கும் இதில் ஒரு பங்கு வேண்டும் என்பது போல வாலை செங்குத்தாக நிறுத்தியபடி அவனது அனுதாபத்தை வேண்டி அலறியபடியே நிற்கும்.

அதன் பிறகு, இன்று கேட்டது போலவே பல இரவுகளில் பூனைகளின் எரிச்சலூட்டும் கத்தல் சத்தங்கள் தொடர்ந்தன. "இதுங்களுக்கு என்ன கொள்ளை?" என்று எரிச்சல்பட்டு ஜன்னல்களை மூடி உறங்கியதுமுண்டு. ஆனால், நாள்பட நாள்பட, மீன் வியாபாரிக்காகக் காத்திருக்கும் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போவதையும், மெல்ல மெல்ல தங்களது சேனையின் பலமிழந்து வருவதை அறிந்த காக்கைகள் ஒதுங்குவதையும் கவனித்திருக்கிறேன். பின்னாளில், மீன் வியாபாரியின் வருகையை எல்லாருக்கும் பூனையின் சத்தங்கள் அறிவிக்கத் தொடங்கின. அவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல்
அதிகரித்தபோது காக்கைகளுக்கு கீழே இறங்குகிற தைரியம் குறைந்து விட்டது போலும்.

மீன் வியாபாரி அறுத்து விற்றது போக மீதமுள்ள துண்டுகளை தெருமூலையில் எறிந்துவிட்டுப்போக பூனைகள் பசியாறும். கிளைகளிலிருந்து காக்கைகள் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றுவது போல உரக்கக் கரைந்து கொண்டிருக்கும். ஒரு வேளை அது அவர்கள் பூனைகளின் அநீதிக்கு எதிராக எழுப்பிய அபயக்குரலா என்று புரியவில்லை.

ஆனால், பூனைகளின் சாம்ராஜ்ஜியம் நீண்டநாள் செல்லுபடியாகவில்லை. தெருவைச் சொந்தம் கொண்டாட சில நாய்கள் வரத்தொடங்கின. பூனைகள் செய்வதறியாது சின்டெக்ஸ் தொட்டியின் மீது பொதுக்குழு கூட்டி அவர்களின் சோகக்கதையைப் பகிர்ந்து கொள்வது போல சத்தமிட்டுக்கொண்டிருக்கும். பூனைகளை நாய் துரத்துவதையும் பார்த்திருக்கிறேன். கடித்துக் குதறி விடக் கூடாதே என்று ஒரு விதமான தயை பிறக்கும்.
இன்று கூட அந்த மீன் வியாபாரி வந்திருந்தான். இப்போதெல்லாம் என் கண்களுக்கு நாய்கள் மட்டுமே தென்படுகின்றன. இரவில் பூனைகளின் கூச்சல்கள் கேட்காமல் இல்லை.ஆனால், பகலில் அவை வாகனங்களுக்குக் கீழே பதுங்கியிருப்பதை மட்டுமே அவ்வப்போது பார்க்க முடிகிறது.

இப்போது காக்கைகளை விடவும், பூனைகளை விடவும் பலமாக, நாய்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வல்லான் வகுத்ததே வழி என்பதை அந்த மீன் வியாபாரியின் சைக்கிள் மணி கேட்கிறபோதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன்.

நீங்களும் பார்த்திருப்பீர்கள்! மீன் வியாபாரியை! அவன் வந்ததும் அவனை மொய்க்கிற காக்கைகளை அல்லது பூனைகளை அல்லது நாய்களை...அல்லது, இன்று நான் பார்த்தது போல ஏதோ ஒரு நாயால் குதறப்பட்டுக் கிடந்த ஒரு சின்னஞ்சிறு பூனைக்குட்டியை....!