Sunday, January 30, 2011

இது பொறுக்குதில்லை! #TNfisherman

தமிழக மீனவர் படுகொலைச் செய்தி வெளியானதும் எனது உணர்வுகளை "கடுதாசு போடுவோம் வாங்க!" என்ற இடுகையில் முன்னரே வெளிப்படுத்தியிருந்தேன். இது, இரண்டொரு நாட்களாக இணையத்தில் தமிழர்கள் மூட்டியிருக்கிற உணர்வுத்தீயில், ஒரு தமிழனாக நான் செலுத்த வேண்டிய ஆகுதி!

இயல்பில் நான் பெருங்கோபக்காரன். எனது சினத்தை பெரும்பாலும் ஏளனத்தில் பொதிந்து எழுதுகிறவன் என்றாலும், அவ்வப்போது சுருண்டுபடுத்திருக்கிற எனது கோபம் சீறியெழுந்து படமெடுப்பதுமுண்டு. ஒட்டுமொத்த வலைத்தமிழரும் ஒரே இலக்கினை நோக்கி தத்தம் கோபத்தை ஏவுகணைகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கையில், ஓரமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியவில்லை.

இந்த தேசம் தற்கொலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது; அதனால்தான் விருப்பமாக விஷத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப்பிரிவிலிருப்பவனிடம் "நீ பிழைத்துவிடுவாய்," என்று மருத்துவர் மழுப்புவது போல, ரைஸினாக்குன்றின் ராஜதந்திரிகள் பொய்யறிக்கைகளைச் சொல்லிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்டுத் தனிமைப்படுத்தி பெருமிதப்பட முடியாத அளவுக்கு, காணும் திசையெல்லாம் மிஞ்சிக்கிடப்பதெல்லாம் பொறுப்பின்மை ஒன்றுதான். இங்கே மனிதனின் உயிர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிற ஆணுறைகளைக் காட்டிலும் மலிவாகிவிட்டது.

அரசியல்- ஊழலை நேரடி முதலீடாகவும், மக்களின் மறதியை மறைமுக முதலீடாகவும் கொண்டு நடத்தப்படுகிற வர்த்தகமாகி விட்டது. எல்லா நம்பிக்கைப் பொறிகளின் மீதும் எச்சிலை உமிழ்ந்து உமிழ்ந்து அவை கொழுந்து விட்டு எரியவிடாமல் கொன்றுவிட்டார்கள். இத்தகைய சூழலில், இணையத்தில் நிகழ்பெறுகிற பெருமுயற்சி ஒரு பெருவேள்வியின் துவக்கம் என்று பெருமை கொள்ளலாம்; தவறில்லை!

உடலில் ஓடுகிற உதிரத்தில் உப்புச்சத்து மிச்சமிருக்கிற அரசியல்வாதி எவனேனும் இருந்தால், அவன் நம்மைச் சற்றேனும் கவனிப்பான் என்ற அற்ப நம்பிக்கை ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பிணமெண்ணிச் சோர்ந்துபோன விரல்கள் இப்போது ஒருங்குறியில் உம்மைக் குறிவைத்து ஒன்றன்பின் ஒன்றாய்ப் பாணங்களைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. குண்டுதுளைக்காத கற்சுவர்களுக்குப் பின்னால், காகிதக்குழிக்குள் கவிழ்ந்து கிடக்கும் உங்களை நோக்கி, காற்றுவழியாக எங்களது கண்டனக்கணைகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.

இன்று இணையத்தில் நடந்து கொண்டிருப்பது, என்றேனும் ஒருநாள், அதிகாரமதில்கள் அதிர அதிர உங்கள் அலங்காரவாயில்களிலும் ஒலித்தே தீரும். இது ஒரு அச்சாரம்!

எரிய மறுக்கிற எல்லா ஈரவிறகுகளுக்குமுள்ளே ஒரு மவுனத்தீ மயக்கமுற்றுக் கிடக்கிறது. எப்போதாகிலும் அது விழித்தெழுகிறபோது அதன் ஆவேசத்தீயின் நாக்குகள் அரசாங்கங்களையே சுருட்டி விழுங்கிவிடுகின்றன. சரித்திரப்பாடத்தின் இந்த சத்தியமான செய்தியை, புது தில்லியின் புத்திமான்களே, புறந்தள்ளி விடாதீர்கள்! இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிருக்கிற ஒலியை, உங்களது குறட்டையொலியின் பேரரவம் கேட்க அனுமதித்திராவிடில், தெறித்துக்கொண்டு வருகிற அதன் பொறிகள் உங்களைப் பொசுக்கிவிடுமென்பது விதி.

எங்களது கடற்புறத்தின் மணல்பரப்பு, எம் சகோதரரை எரித்த சாம்பலை உடுத்தி விதவைக்கோலம் பூண்டிருக்கிறது. காற்றில் அதன் துகள்கள் பறந்து ராஜதானிகளின் கற்கோட்டைகளின் மீது இன்னும் கவியாதிருப்பதற்கு, அந்த சாம்பல்படுகையின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் எம் கண்ணீரின் ஈரப்பதமே காரணம் என அறிக!

துயரமும், ஏமாற்றமும், இழப்புமாய்ச் சேர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிற ரசவாதத்தில், எமது கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் கருவுற்று பல காலாக்கினிகளை பிரசவிக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. எங்களையே சாணைதீட்டிக்கொண்டிருக்கிறோம்; ஏவுகணைகளாய் உம் மீது வந்து விழுவதற்காக...! அடிவயிற்றுத்தீக்கு எரிபொருளாய் அடக்கமாட்டாத கண்ணீர் ஆறாய்ப்பெருகிக்கொண்டிருக்கிறது.

இந்தியத்தமிழன் இலங்கையை நோக்கி உமிழ்ந்த எச்சிலை விடவும், தென்புலத்திலிருந்து திரண்டுவரும் எமது கண்ணீர்க்கணைகள் வலிமையானவை. இந்த அஸ்திரங்கள் சினமுற்ற தமிழனின் இருதயக்கூட்டுக்குள்ளே குருதிதடவிக் கூர்தீட்டப்பட்டவை! விந்தியத்தைப் பிளந்தபடி வீறுகொண்டு வருகிற எமது சொல்லீட்டிகளை உங்களது காகிதக்கவசங்களால் முனைமழுங்கச் செய்ய முடியாது. தேன்தடவிய வார்த்தைகளால் இனியும் தேற்றிவிடவோ, மாற்றிவிடவோ முடியாது.

இது நிழல்யுத்தமல்ல: நிஜங்களின் கிளர்ச்சி! கேள்விக்குறிகளின் கூனை நிமிர்த்திக் கூர்தீட்டுகிற முயற்சி! மடிந்த மீனவனுக்காகக் கேட்கப்படுகிற மடிப்பிச்சையல்ல இது; உரிமைக்குரல்

இம்முயற்சி தொடரும்! எமது தமிழர் தமது உள்ளக்கிடக்கையை இங்கு
எழுதியெழுதி உம்மைத் துயிலெழுப்புகிற முயற்சியைத் தொடர்வார்கள்.

உதிரிகளாய்ச் சிதறிக்கிடக்கிற குமுறல்களையெல்லாம் இங்கே ஓரிடத்தில் குவித்து அதன் உச்சியில் இருக்கிற எம்மை அரசியல்வியாதிகள் அண்ணாந்து பார்க்க வைப்போம்.

நாங்கள் அனுப்புகிற மனுக்கள் நீங்கள் வாசிப்பதற்கல்ல; இப்போதாவது யோசிப்பதற்கு!

செத்தவன்போல நடித்தது போதும்; சற்றே சொரணை கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களது இறையாண்மையை ஏதேனும் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்க நேரிடும்.

Thursday, January 27, 2011

மறக்க முடியுமா?

"என்னது இது? வழக்கமா நான் ஆபீஸ் போகும்போது காப்பி கொடுப்பே! இன்னிக்கு பால் கொடுக்கிறே?" என்று பரிதாபமாகக் கேட்டார் ஆவுடையப்பன்.

"இது பாதாம்பாலுங்க! நெய்யிலே வறுத்து மிக்ஸியிலெ அரைச்சு பாலிலே தண்ணிவிடாம காய்ச்சிக் கலந்தெடுத்திட்டுக் கொண்டு வந்திருக்கேன்," என்று அந்த பாலைச் சுரந்த பசுவைத் தவிர மீதமிருந்த எல்லா விபரங்களையும் கணவரிடம் ஒப்பித்தாள் காந்திமதி.

"என்ன கொடுமை? உன் புருசன் பெட்ரோல்லே ஓடுற வண்டி. திடீர்னு டீசலைப் போட்டா வண்டி எப்படி ஓடும்?" என்று கெஞ்சினார் ஆவுடையப்பன்.

"சும்மாயிருங்க! உங்களுக்கு மறதி அதிகமாயிருச்சு! தினமும் பாதாம்பால் சாப்பிடணுமுன்னு டாக்டர் சொன்னாரில்லே? இனிமே பாதாம்பால்தான்!" என்று பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டுப் பேசுகிற மத்திய மந்திரிபோலக் கண்டிப்பாகக் கூறினாள் காந்திமதி.

"சரி, நான் ஆபீசுக்குப் போயி காப்பி குடிச்சா என்ன பண்ணுவே?" என்று எரிச்சலோடு கேட்டார் ஆவுடையப்பன்.

"அதெல்லாம் குடிக்க மாட்டீங்க! நீங்க ஆபீஸுக்குப்போனா என்னையே மறந்திடறீங்க, காப்பியையா ஞாபகத்துலே வச்சுக்கப்போறீங்க?" என்று நக்கலடித்தாள் காந்திமதி.

’அதெப்படி காப்பியை மறப்பேன்? நான் என்ன அதைக் கல்யாணமா பண்ணிக்கிட்டேன்?’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார் ஆவுடையப்பன். வாய்விட்டு கேட்கவா முடியும்?

"அதெல்லாம் போகட்டும்! டிரைவர் கிட்டே வல்லாரை மாத்திரை கொடுத்திருக்கேன். எப்பெப்போ மறதி வருதோ அப்பப்போ போட்டுக்கோங்க," என்று அறிவுரை கூறினாள் காந்திமதி.

"மறதி வரும்போது மாத்திரை இருக்கிறதையே மறந்திட்டா?"

"கவலைப்படாதீங்க, சுத்தியிருக்கிறவங்க கண்டுபிடிச்சு டிரைவருக்குத் தகவல் சொல்லுவாங்க!"

"சரி, டிரைவர்னு சொன்னியே....." என்று காருக்குள் நோக்கினார் ஆவுடையப்பன். "உள்ளே ரெண்டு பேரு இருக்காங்களே? இதுலே யாரு டிரைவர்? முன்னாடி உட்கார்ந்திட்டிருக்கிறவரா, பின்னாடி உட்கார்ந்திட்டிருக்கிறவரா?"

"கடவுளே! பின்னாடி உட்கார்ந்திட்டிருக்கிறவரு உங்க பி.ஏ! முன்னாடி இருக்கிறவரு தான் டிரைவரு! ஐயையோ, ரொம்ப முத்திருச்சு போலிருக்கே!" என்று புலம்பினாள் காந்திமதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே! நான் வரட்டுமா இந்துமதி?" என்று கையில் பையை எடுத்துக்கொண்டார்.

"அப்பனே முருகா, என் பேரு காந்திமதி; இந்துமதி இல்லீங்க!" என்று தலையிலடித்துக்கொண்டாள்.

"ஏன் டென்சனாகிறே? மறந்துபோயிட்டேன்னு நினைச்சியா, வாய்தவறிச் சொல்லிட்டேன். வேணுமுன்னா என்னோட பெயரை ஒருவாட்டி கரெக்டா சொல்றேன் பார்க்கறியா?"

"ஒண்ணும் வேண்டாம்; நேரமாச்சு! கிளம்புங்க," என்று கணவனைப் பிடித்துத் தள்ளாதகுறையாக கார்வரையிலும் கூட்டிக்கொண்டு போனாள் காந்திமதி.

பாவம், அவளுக்கென்ன தெரியும், தன் கணவனுக்கு உண்மையிலேயே அவரது பெயரே மறந்து போனதென்று! கணவனுக்கு மறதிவியாதியென்று அவள் எண்ணியிருக்க, மற்றவர்களோ ஆவுடையப்பனுக்கு மறைகழண்டுவிட்டதென்றே எண்ணிக்கொண்டிருந்தனர். அதன்காரணமாகவே, முன்ஜாக்கிரதையாக எப்போது வேண்டுமானாலும் ’எஸ்’ ஆக வசதியாக, அவரது காரியதரிசியும் டிரைவரும் முதலிலேயே காருக்குள் தயாராக அமர்ந்திருந்தனர்.

ஆனால், கார் கிளம்பியதும் ஆவுடையப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. டிரைவரின் பெயர் என்ன? பி.ஏ-வின் பெயர் என்ன? இதெல்லாவற்றையும் விட அவருக்குத் தன் சொந்தப் பெயர் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

"டிரைவர்! உங்க லைசன்ஸைக் காட்டுங்க!"

"எதுக்கு சார்?"

"ஷட் அப் யுவர் ப்ளடி மவுத் அண்டு ஷோ மீ யுவர் லைசன்ஸ் இம்ம்மீடியட்லீ...," என்று மருதமலை வடிவேலுவே மயக்கம்போட்டு விழுகிறமாதிரி ஆங்கிலத்தில் இரைந்தார் ஆவுடையப்பன். வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு தனது லைசன்ஸை எடுத்து நீட்டினார். பிறகு வண்டி நகர்ந்தது.

"ம்ம்! பழனிச்சாமியா?"

"அது எங்கப்பா பேரு சார்!"

"ஐ நோ! ஐ நோ!! உலகளந்தபெருமாளா?"

"அது கையெழுத்துப்போட்ட ஆர்.டி.ஓ.பேரு சார்! என் பேரு கரிகாலன் சார்!"

"எனக்குத் தெரியாதா உங்க பேரு கரியபெருமாள்னு...?"

பி.ஏ தயங்கித் தயங்கி...

"சார், இது என்னோட டிரைவிங் லைசன்ஸ்! இது என்னோட ஐ.டி.கார்டு! என் பேரு சாமிக்கண்ணு சார்!"

"ஏன்யா உசிரை எடுக்கிறீங்க? எனக்கென்ன அவ்வளவு மறதியா? உங்க பேரு பெருமாள்கண்ணு. டிரைவரு பேரு ஐ.டி.கார்டுதானே?"

"ஆமா சார்! மாத்திரை தரட்டுமா சார்?"

"நீங்களா டிரைவர்? எங்கே உங்களுக்கு முன்னாலே ஸ்டீயரிங்கைக் காணோம்?"

"சார்...சார்...டிரைவரும் முன்னாலே இருக்காரு, ஸ்டீயரிங்கும் முன்னாலே இருக்கு. மாத்திரையும் அவர் கிட்டே தானிருக்கு சார்!"

"ஓ! சரிதான்! யெப்பா டிரைவர், ஒரு ஸ்டீயரிங்கைக் கொடுப்பா, அதாவது வந்து, ஒரு மாத்திரையைக் கொடுப்பா!" என்று தடுமாறினார் ஆவுடையப்பன்.

கரிகாலனுக்கும் சாமிக்கண்ணுவுக்கும் பதட்டமாகத்தான் இருந்தது. மாத்திரையைச் சாப்பிட்டவுடனேயே ஆவுடையப்பனுக்கு தன் பெயர் ஞாபகம் வருவது போலிருந்தது. முதல் எழுத்து கூட ஆவிலே ஆரம்பிக்கும்.

"பி.ஏ! ஆபீஸ் போறதுக்குள்ளே நாம ஒரு ஆட்டம் விளையாடுவோமா? எனக்குத் தெரிஞ்சவருக்கு ஆண்குழந்தை பொறந்திருக்கு! ஆவன்னாவிலே தொடங்குறா மாதிரி ஒரு பெயர் சொல்லுங்க பார்க்கலாம்!"

"ஆனந்த்?"

"ஊஹும்....அது..இது...இல்லை...வேறே சொல்லுங்க!"

"ஆறுமுகம்!"

"இது சரிப்பட்டு வராது போலத்தோணுது! சரி, விடுங்க! இப்போ நான் கேட்கிற கேள்வியைக் கேட்டு நீங்க பயப்படக்கூடாது! பதறாம நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும். சரியா?"

"ஓ.கே சார்!"

"என்னை ஆபீஸ்லே எல்லாரும் எப்படிக் கூப்பிடுவாங்க?"

"அது...வந்து....சார்!"

"தயங்காமச் சொல்லுங்க! பீ ய ஸ்போர்ட்! ஆபீஸ்லே என் பேரு என்ன?"

"ஓணான் சார்!"

"என்னது?"

"ஆமா சார், மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்டுலே உங்களை எல்லாரும் ஓணான்னு கூப்பிடுவாங்க சார்! அப்புறம் அக்கவுண்ட்ஸ்லே உங்களை அடைக்கோழின்னு கூப்பிடுவாங்க சார்! டெஸ்பாட்சுலே தான் உங்களுக்கு மரப்பல்லின்னு பேரு வச்சிருக்காங்க!"

"ஷட் அப் யுவர் பிளடி மவுத் அண்டு டெல் மீ மை ரியல் நேம்!" என்று ஆத்திரத்தில் இரைந்தார் ஆவுடையப்பன்.

"ஆவுடையப்பன் சார்!"

"ஆவுடையப்பன்? மீ? ஆர் யூ ஷ்யூர்? நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்க, எனக்கென்னமோ என் பேரு இன்னும் கொஞ்சம் மாடர்னா இருந்தா மாதிரி ஞாபகம்!"

"இல்லை சார், உங்க பேரு ஆவுடையப்பன் தான் சார்! உங்க பாஸ்போர்ட்டுலே கூட அந்தப் பெயருதானிருக்கு !"

"என்னது? பாஸ்போர்ட்டா? அப்போ நான் வெளிநாடெல்லாம் போயிருக்கேனா?"

"என்ன சார் இப்படிக் கேட்குறீங்க? போனவாரம் கூட ஜெனிவா கான்ஃபிரன்ஸுக்காக நீங்க காத்மாண்டு போயிட்டு வந்தீங்களே?"

"என்னய்யா உளர்றே? ஜெனிவா கான்பிரன்ஸுக்கு எதுக்கு காத்மாண்டு போனேன்?"

"அந்த ஃபிளைட்டுலே தான் டிக்கெட் கிடைச்சுதுன்னு போயிட்டீங்க சார்!"

"டிரைவர், இன்னொரு மாத்திரையைக் கொடுய்யா!"

சிறிது நேரம் கார் பயணம் அமைதியாகக் கழிந்தது.

"டிரைவர், அதென்னய்யா இம்புட்டுப் பெரிய பில்டிங்? எப்போ கட்டினாங்க?"

"சார், மவுண்ட் ரோடு எல்.ஐ.ஸி.பில்டிங் சார்!"

"ஓ சரி சரி, மிஸ்டர் ஆவுடைக்கண்ணு!"

"என் பேரு சாமிக்கண்ணு சார், நீங்க தான் ஆவுடையப்பன்!"

"அதுனாலென்ன, ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்துலே உட்கார்ந்திருக்கிறதுனாலே குழம்பிட்டேன். ஒண்ணு பண்ணுவோமா? எனக்கு தூக்கம் வர்றா மாதிரி இருக்கு! இன்னிக்கு நான் லீவு போட்டுரட்டுமா?"

"யூ ஆர் மோஸ்ட் வெல்கம் சார்!"

"தேங்க்யூ மிஸ்டர்....மிஸ்டர்.....!"

"பரவாயில்லே சார், கஷ்டப்படாதீங்க! டிரைவர், வண்டியைத் திருப்பு! பாஸுக்கு தூக்கம் வருதாம். வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுத்துக்கட்டும்..!"

கரிகாலன் உற்சாகமாக காரைத் திருப்பி வந்தவழியே செலுத்தினான். அப்பாடா, சனி விட்டது!

"பி.ஏ சார், வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு கேட்கறேன்!"

"வேண்டாம் சார், எதுவாயிருந்தாலும் இன்னிக்குத் தூங்கிட்டு நாளைக்குக் கேளுங்க சார்!"

"ப்ளீஸ்....ஒரே ஒரு கேள்வி! அதுக்கப்புறம் நான் வீடு போயிச் சேருற வரைக்கும் எதுவுமே கேட்கமாட்டேன்."

"சரி சார், ஒரே ஒரு கேள்விதான் அலவ்டு! சிம்பிளாக் கேளுங்க சார், என்னை நம்பி பிள்ளைகுட்டிங்கெல்லாம் இருக்காங்க சார்!"

"ஓ.கே! ஓ.கே!!" என்று குரலைத் தாழ்த்தியவாறு கேட்டார் ஆவுடையப்பன். "என் பொஞ்சாதி பேரு சந்திரமதிதானே?"

பி.ஏ.சாமிக்கண்ணு மூர்ச்சையடைந்தார்.

டிஸ்கி: மக்களே! தினசரி குறைந்தபட்சம் ஏழுமணி நேரமாவது தூங்கணும். வேளாவேளைக்கு சாப்பிடணும். இல்லாட்டி நாமும் ஆவுடையப்பன் மாதிரி மறதி மாடசாமியாகி விடுவோமாம். (சே, எப்படி இதுலே ஒரு மெசேஜ் கொண்டு வந்திட்டேன் பார்த்தீங்களா? )

Wednesday, January 26, 2011

கருத்துச் சுதந்திரம்

"வாங்க வாங்க!" என்று சிரித்தமுகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்றார் கல்லுளிமங்கன் என்ற கே.எம். அவரருகே நின்று கொண்டிருந்தவர் நொள்ளக்கண்ணன் என்ற என்.கே.

"அட, என்.கே சார், நீங்க எப்படி?" ஆச்சரியத்தோடு கேட்டேன்.

"நான் கே.எம்முக்குத் தாய்மாமன்!" என்று கைகுலுக்கியவாறே புதிய தகவலை அளித்தார் என்.கே.

"அட அப்படியா?" ஆஹா, நமது சகபதிவர்கள் உறவினர்கள் என்று அறிவது எவ்வளவு மகிழ்ச்சி. "கே.எம்.சார், இன்னிக்கு குடியரசு தினத்துக்கு நீங்க போட்ட இடுகை படு சூப்பர்!"

"சந்தோஷம் சேட்டை, பின்னூட்டம் போட்டீங்களா?" என்று அசட்டுச்சிரிப்பு சிரித்தவாறே கேட்டார் கே.எம்.

"ஓ, பார்க்கலியா நீங்க? முதல் பின்னூட்டமே என்னுதுதான். ’வடை எனக்கே’ன்னு போட்டிருந்தேனே?"

"நன்றி சேட்டை!" என்று இன்னும் அகலமாகச் சிரித்த கே.எம், "மாமா, நம்ம சேட்டையைக் கூட்டிக்கிட்டுப்போயி டிபன் சாப்பிட வையிங்க! வடைக்காக ரொம்ப அலையுறாரு! நான் மத்தவங்களை கவனிச்சுக்கிறேன்." என்றார்.

"வாங்க சேட்டை," என்று என்னை என்.கே உள்ளே அழைத்துச் சென்றார். "இடுகையா போட்டிருக்கான் இடுகை? அதுக்குப் போயி பின்னூட்டம் வேறே போட்டிருக்கீங்களே சேட்டை?"

"உங்க இடுகை கூட பார்த்தேன் சார். அதுவும் சூப்பர்தான்," என்று சமாளித்தேன் நான். "அவருக்கு நாட்டு நடப்பு மேலே இருக்கிற ஆதங்கத்தை அவரு எழுதியிருக்காரு! நீங்க குடியரசு தினம் ஒரு நாளைக்காவது நாட்டைத் திட்ட வேணாமேன்னு கொஞ்சம் பாந்தமா எழுதியிருக்கீங்க! இதைப் போயி பெரிசு பண்ணுவாங்களா? விடுங்க சார்!"

"சரி அதை விடுங்க சேட்டை! சாப்பிட்டுப்புட்டு மேடையிலே ஏறி ரெண்டு வார்த்தை நீங்க பேசியே ஆகணும். உங்களுக்கு அப்புறமா சப்பைமூக்கனும் பேசப்போறாரு!" என்று தலையில் குண்டைத் தூக்கிப்போட்டார் என்.கே.

"ஐயையோ, மேடையிலே பேசறதா? பழக்கமில்லீங்க," என்று பதறினேன். விட்டால் தானே? சாப்பிட வைத்தபின், என்னை மேடையில் ஏற்றியே விட்டார். வேறு வழி? பேசியே ஆக வேண்டும்.

"பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரர்களே, சகோதரிகளே, பதிவர்களே! இன்று அறுபதாம் கல்யாணம் காணுகிற என் அன்புக்குரிய சகபதிவர் கல்லுளிமங்கனின் தந்தை ரெட்டைமண்டை அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். அவரது துணைவியும் எனது சகபதிவர் நொள்ளக்கண்ணனின் மூத்த சகோதரியுமான திருமதி. சகுண்டலா ஒரு மாதர்குல திலகம். இந்த ரெட்டை மண்டை-சகுண்டலா ஜோடியைப் போன்றதோர் ஆதர்ச தம்பதியினரை அகிலம் முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!" என்று பழைய தமிழ் சினிமாவைப் போல பதினெட்டு ரீல்களை அவிழ்த்து விட்டு, மொய்யெழுதிவிட்டு கீழே இறங்கினேன்.

"அடுத்து பேசவிருப்பவர் திரு.சப்பைமூக்கன்!"

"எல்லாருக்கும் வணக்கம்!" என்று சுருக்கமாக ஆரம்பித்தார் சப்பைமூக்கன். "இந்த மேடையில் அமர்ந்திருக்கிற தம்பதியினரைப் பார்க்கும்போது, ஆப்பிரிக்காவிலிருந்து நீந்திவந்த ஒரு காண்டாமிருகத்துக்கும், வண்டலூர் மிருகக்காட்சிசாலையிலிருந்து தப்பித்துவந்த ஒரு நீர்யானைக்கும் மாலை போட்டு உட்கார வைத்திருப்பது போலிருக்கிறது!"

கூட்டத்தில் சலசலப்பு. "யோவ் சப்பை!" என்று அலறியபடி கல்லுளிமங்கன் ஓடிவந்தார். கூடவே நொள்ளக்கண்ணனும். "என்னய்யா பேசறே? கீழே இறங்குய்யா!"

"இறங்க மாட்டேன்," என்று மைக்கை விடாப்படியாக இறுக்கிக்கொண்டு பேசினார் சப்பைமூக்கன். " உனக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா? நீ குடியரசு தினத்தன்னிக்கு நம்ம நாட்டைத் திட்டி எழுதினேல்லே? நான் உங்கப்பா அறுபதாம் கல்யாணத்தன்னிக்கு அவரைத் திட்டுறேன். கேட்டுக்கோ!"

"இப்போ கீழே இறங்கலே, கொலை விழும்!" என்று முட்டியை மடக்கினார் நொள்ளக்கண்ணன்.

"அட போய்யா, நீ கூடத்தான் உன் அக்கா புருசன் வடிகட்டின கஞ்சன், கடைஞ்செடுத்த பொறுக்கி, மொள்ளமாறி, முடிச்சவிக்கின்னு எத்தனை வாட்டி என் கிட்டேயே சொல்லியிருக்கே?"

"யோவ், அதையெல்லாம் இன்னிக்கு ஏன்யா சொல்றே? எதை எப்போ பேசுறதுன்னு ஒரு நேரம் காலமே கிடையாதா? கீழே இறங்குய்யா," என்று பதட்டத்தோடு கெஞ்ச ஆரம்பித்தார் என்.கே.

"என்னது? எங்கப்பாவைப் பத்தியா அப்படிச் சொன்னீங்க மாமா?" இப்போது கே.எம்-மின் கோபம் தாய்மாமன் மீது பாய்ந்தது. "நீயே ஒரு தண்டச்சோறு! நீ எப்படிய்யா எங்கப்பாவைப் பத்திப் பேசலாம்?"

"யாரு தண்டச்சோறு?" நொள்ளக்கண்ணன் ஆத்திரத்தில் குதித்தார். "எங்க அக்காவை மட்டும் கல்யாணம் பண்ணிக்கலேன்னா, உங்கப்பன் தெருத்தெருவா பிச்சையெடுத்திட்டிருப்பான். அவன் யோக்யதை எங்களுக்குத் தெரியாது?"

"என்னலே சொன்னே?" மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு பொங்கி எழுந்தார் ரெட்டை மண்டை. "நான் ஏமுலே பிச்சை எடுக்கணும்? உங்க அக்காவைக் கட்டிக்கோன்னு உங்க ஐயன் தாம்லே என் காலுலே வந்து விழுந்தாரு! இல்லாட்டி இந்த சவத்து மூதியை எவம்லே கட்டுக்குவான்?"

"நானா சவத்து மூதி?" இப்போது சகுண்டலா மாலையைக் கழற்றிவிட்டு, புருசன் மீது பாய்ந்தார். "நீரு வெங்கலப்பானையிலிருந்து பித்தளைச்சொம்பு வரைக்கும் அடகு வச்சுத்தின்ன குடும்பத்திலேருந்து தானே வாரீரு? உம்ம யோக்யதைக்கு எங்கப்பனை விட்டா வேறே எவன் பொண்ணு கொடுப்பான்...?"

"ஆமா, இவ பெரிய பத்மினி பாரு!"

"நீரு பெரிய ஜெமினி கணேசன் பாரும்!"

ஐயையோ, அறுபதாம் கல்யாணம் நடக்கிற வீட்டில் அடிதடி நடந்து விடும் போலிருக்கிறதே! நான் மேடையில் ஏறி சப்பைமூக்கனை கீழே இறக்குவதற்குள்ளாக, கணவன்-மனைவி-மகன்-தாய்மாமன் ஆகியோரின் குடும்ப ரகசியங்கள் அசிங்க அசிங்கமாக அம்பலத்தில் ஏறின. சப்பைமூக்கனை வெளியே இழுத்துச் செல்ல முயன்றபோது, அவருக்கு விழுந்த அடியில் சில என் முதுகின் மீதும் விழுந்தன. ஒருவழியாக அவரை வெளியே கொண்டுவந்து, ஒரு ஆட்டோவைப் பிடித்து அங்கிருந்து நகர்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

"என்னண்ணே, இப்படிப் பேசிப்புட்டீங்க? உங்களாலே எனக்கும் ரெண்டு அடி விழுந்திருச்சே!"

"சேட்டை, நான் ஏன் இப்படிப் பேசினேன்னு எனக்கே தெரியலே! ஏதோ ஒரு வேகத்துலே பேசிப்புட்டேன். கருத்து சுதந்திரத்தை வலைப்பதிவோட நிறுத்திக்கணுமுன்னு எனக்கு இப்போத்தான் தெரிஞ்சுது! நல்ல வேளை, என் உசிரைக் காப்பாத்திட்டீங்க!" என்று நன்றி கூறினார் சப்பைமூக்கன்.

"நல்ல வேளையா? என் முதுகுலே எவனோ இதுதான் சாக்குன்னு நல்லா மொத்திட்டாண்ணே! உங்களை வீட்டுலே விட்டுப்புட்டு நானு டாக்டரு கிட்டே போகணும். கருத்து சுதந்திரமாமில்லே கருத்து சுதந்திரம்! ஆளை விடுங்க சாமி! இனிமே நானுண்டு என் மொக்கையுண்டுன்னு இருக்கப்போறேன் சாமி! உங்க சங்காத்தமே வேண்டாம்!"

நாளையிலிருந்து ஒழுங்கு மரியாதையா இருக்கணும். யோசித்தபடியே வெளியே வேடிக்கை பார்த்தபோது கடையில் தொங்கிக்கொண்டிருந்த செய்தித்தாள் தலைப்புச்செய்தி கண்ணில் பட்டது. "ரஜினியோடு தீபிகா நடிப்பாரா?"

அப்பாடா, நாளக்கு இடுகை எழுத மேட்டர் கிடைச்சாச்சு. நம்ம கிட்டே தீபிகா படம் நல்லதா இருக்கா தெரியலியே? எப்படி கருத்து சுதந்திரத்தைக் காப்பாத்துறது?

Monday, January 24, 2011

கடுதாசு போடுவோம் வாங்க!

இப்பொழுதெல்லாம் இணையத்திலேயே அதிகம் புழங்குகிறோம். அலைபேசிகள் கையடக்கப்பதிவு கணினிகளைப் போலாகிவிட்டதால், நமது தகவல் தொடர்புகள் அனைத்தும் எழுதுகோலின் உதவியின்றியே விசைகளின் உதவியால் மிகவும் எளிமையாகி விட்டன. அதனால், கடிதம் எழுதுவது என்ற பழக்கமே வழக்கொழிந்து போய் விட்டது. இனிவரும் காலங்களில் தபால் நிலையங்களை மாநில அரசு குத்தகைக்கு எடுத்து டாஸ்மாக் கடைகளாகவும் மாற்றுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே, அனைவரும் மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதுவது என்ற பாரம்பரியக்கலைக்குப் புத்துயிர் அளிக்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோமாக. இல்லாவிட்டால், இதையெல்லாம் பிற்கால சென்னை சங்கமத்தில் தான் பார்க்க நேரிடும்!

கடிதம் எழுதத் தேவையான பொருட்கள்: ஒரு காகிதம், ஒரு எழுதுகோல் மற்றும் ஒரு தபால் உறை. (தபால் நிலையங்களில் ஐந்தே ஐந்து ரூபாய் கொடுத்தால் தருவார்கள்!) இது மட்டுமிருந்தால் போதாது அல்லவா? உங்களது உறவினர், நண்பர்களுக்கு கடிதம் எழுதினால் "சுத்தப் பழைய பஞ்சாங்கமாக இருக்கிறாயே?" என்று உங்களை ஏளனம் செய்ய வாய்ப்பிருக்கிறது. இதற்காக முன் பின் பரிச்சயமில்லாதவர்களுக்கு கடிதம் எழுதினாலும் விவகாரம்தான். ஆக, யாருக்குத் தான் கடிதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்படுகிறது அல்லவா?

இது போன்ற குழப்பங்களைத் தீர்ப்பதற்கென்றே, இப்புண்ணிய பூமியில் ஒரு ஆதர்ஷ புருஷர் அவதரித்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல; இந்தியாவின் பிரதம மந்திரி மாண்புமிகு டாக்டர்.மன்மோகன் சிங்! யார் கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணினாலும், டாக்டர்.மன்மோகன் சிங், புது தில்லி என்று இரண்டு வரிகளில் சிக்கனமாக முகவரி எழுதினாலே போதும்.

ஆயிற்று, கடிதம் எழுத என்னென்ன தேவையென்று அறிந்துகொண்டோம். யாருக்குக் கடிதம் எழுதுவது என்பதும் முடிவாகிவிட்டது. இனி கடிதம் எழுத ஏதாவது விஷயம் வேண்டாமா? இங்குதான் நாம் அனைவரும் அவரவரது புத்திகூர்மையை உபயோகிக்க வேண்டும்.

இந்திரா காந்தி அம்மையார் காலத்திலிருந்து ஒவ்வொரு காங்கிரஸ் அரசிலும் அமைச்சரவைகளில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிற ஒரு மத்திய மந்திரி "அரசியல் சாசனத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் போய் சேருங்கள்" என்று ஒரு பொதுமேடையில் பேசியது சரியா? என்று கேட்டு கடிதம் எழுதிவிடாதீர்கள். தப்பு!

உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய ஒரு மத்திய அமைச்சரையே, உச்சநீதிமன்றம் கண்டிக்கிற அளவுக்குப் பொறுப்பற்றுப் பேசியது சரியா? என்று கேட்டு கடிதம் எழுதி விடாதீர்கள். பெரிய தப்பு!

ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதுபோல, மேற்கூறியவை எல்லாம் உதாரணங்கள் தான். இது தவிர, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியலமைப்பு, மதச்சார்பின்மை போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்தெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதி அவரது பொன்னான நேரத்தை வீணடித்து விடாதீர்கள். அவருக்கு கெட்ட கோபம் வந்து விடும்.

"நான் ஒன்றும் ஜோசியரில்லை!" என்று முகத்தில் அடிக்கிற மாதிரி பதில் எழுதி விடுவாராக்கும். கபர்தார்! ஆதாரமில்லாமல் சொல்வதற்கு நானொன்றும் காங்கிரஸ்காரன் அல்ல; சேட்டைக்காரன். இதோ பாருங்கள் ஆதாரத்தை...!

2008-ல் இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு வருமா என்று கேட்டபோது பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன பதில்: "நான் ஒன்றும் ஜோசியரில்லை!"

2009-ல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தட்பவெட்பநிலை மாறுதல் குறித்துக்கேட்டபோது அவர் சொன்ன பதில்: "நான் ஒன்றும் ஜோசியரில்லை!"

2011-ல் விலைவாசிகள் எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கேட்டபோது பிரதமர் சொன்ன பதில்: "நான் ஒன்றும் ஜோசியரில்லை!"

(இப்படி தான் ஜோசியர் இல்லையே என்று புலம்புகிற டாக்டர் மன்மோகன் சிங், கேம்ப்ரிட்ஜுக்கும் ஆக்ஸ்ஃபோர்டுக்கும் போய் பொருளாதாரம் படித்ததற்கு பதிலாக, பேசாமல் கடலங்குடிக்குப் போய் ஜோசியத்தைப் படித்திருக்கலாமோ?)

ஆக, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை பாரதப் பிரதமரால் தீர்க்க முடியாது; அதற்கு நீங்கள் காழியூர் நாராயணன், க.ப.வித்யாதரன் போன்ற ஜோதிட விற்பன்னர்களை அணுக வேண்டும்; இல்லாவிட்டால் ஒருநடை திருநள்ளாறு போன்ற திருத்தலங்களுக்குப் போய்வர வேண்டும் என்பதை இப்போதாவது அறிக!

அப்படியென்றால், பிரதமருக்கு எதைப் பற்றித்தான் கடிதம் எழுதுவது? ஐந்து ரூபாய் வீண் தானா- என்று கேட்கிறீர்களா? அது தான் இல்லை. நீங்களும் நமது மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி போல "இலங்கைக் கடற்படைக்காரன் தமிழக மீனவனைக் கொன்று விட்டான்." என்று கடிதம் எழுதுங்கள். காரணம், அதற்கு பதில் எழுதுவது நமது பிரதமருக்கு கைவந்தகலை! கண்களை மூடிக்கொண்டு கூட பதிலெழுதுமளவுக்கு நமது பிரதம மந்திரி அதில் தேர்ச்சி பெற்றவராக்கும். அதுமாதிரி இதுவரை எத்தனை கடிதங்களுக்கு அவர் பதிலளித்திருக்கிறார் தெரியுமா? ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால், அதன் மீது ஏறிநின்று இலங்கை கப்பற்படை நமது மீனவர்களைப் படுகொலை செய்வதை நேரடியாகப் பார்க்கலாம்.

ஆகவே, அனைவரும் வாரீர்! ஐந்து ரூபாய் செலவில் தமிழக மீனவன் நடுக்கடலில் மடிகிற காட்சியையாவது கண்டுகளிக்கலாம். என் பங்குக்கு நானும் எழுதுகிறேன் - கடலங்குடி ஜோதிட நிலையம் தபால்வழிக் கல்வி விபரங்களையும் சேர்த்து அனுப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாருங்கள், கடிதம் எழுதலாம். (என்னது, இளைஞன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், பார்த்தபின்னர் பிழைத்துக்கிடந்தால் வாரீர்!)

வாருங்கள் தமிழர்களே! பிரதமருக்கு கடிதம் எழுதுவோம் வாருங்கள்!!

Sunday, January 23, 2011

நம்ம துரை ரொம்ப நல்ல துரை

திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய், கடம்பூர் போளி - இந்த வரிசையில் இன்னொன்றும் இருக்கிறது தெரியுமா? தூத்துக்குடி மெக்ரோன். அடடா, அதுவும் தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள புகழ்பெற்ற கணேஷ் பேக்கரியின் மெக்ரோனை ருசிக்காதவர்கள் ஆயுள்முழுக்க சேட்டைக்காரனின் வலைப்பதிவை வாசிக்கக் கடவது. (கொஞ்சம் கடுமையான சாபமோ?) அப்படியிருக்கும்போது, தூத்துக்குடி வரைக்கும் போய்விட்டு, அந்த மெக்ரோனைச் சாப்பிடாமல் வந்தால், என்னை விக்கிரவாண்டி ரோட்டோர ஓட்டல் பரோட்டா மாஸ்டர் கூட மன்னிக்க மாட்டார். எனவே, சாப்பிட்டுவிட்டுத்தான் மறுவேலை என்று போய், முண்டியடித்து வாங்கி, ஒன்றை வாயில் போட்டு அதன் முந்திரிவாசனையில் கட்டுண்டு எந்திரிக்க முடியாமல் லயித்தபடி சாலையை நோக்கியபோதுதான் அது நிகழ்ந்தது.

பளபளவென்று ஒரு சிவப்புநிற டாடா சுமோ கிராண்டே வந்து நின்றதும், தற்செயலாக எனது பார்வை வாகனத்தின் இலக்கத்தின் மீது விழுந்தது.

"TN-69-P-BOSS"

இப்போதெல்லாம் போஸ்டருக்கு மிக அருகே போய்ப் பார்த்தால்தான் என் கண்ணுக்கு அதிலிருப்பது தமன்னாவா திரிஷாவா என்று தெரிகிறது. எல்லாம் ஒரு வருடமாக என் கண்களை பாதித்திருக்கிற ஸ்ரேயோஃபியா என்ற வினோதமான பார்வைக்குறைபாட்டினால் தான். எனவே, ஒரு வாகனத்தில் நம்பருக்கு பதிலாக ’BOSS' என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும், சற்றே ஆவல் அதிகமாகி, ஒரு தாவல் தாவி, அந்த வாகனத்தை நெருங்கியதும்தான் அது "BOSS" இல்லை "6055" என்பது புரிந்தது. ’அட!என்னவொரு ரசனை?’ என்று மனதுக்குள் மெச்சியபடி மெக்ரோனோடு நான் அப்பீட் ஆக எண்ணியபோதுதான் அது நிகழ்ந்தது. கதவைத் திறந்தவாறே, கருப்புக்கண்ணாடியணிந்தபடி, கம்பீரமாக, முகமெல்லாம் மீசையாக இறங்கிய அந்த உருவத்தை இதற்கு முன்னர் நான் எங்கோ பார்த்திருக்கிறேனே? எங்கே??

மெக்ரோன் தொண்டைக்குள்ளும், அவரது உருவம் என் மண்டைக்குள்ளும் இறங்கிக்கொண்டிருக்க, யோசிக்க ஆரம்பித்தேன். அடிக்கடி பார்த்த முகம்; ஆனால் எங்கே? பொதுவாகவே நான் டியூப் லைட் என்பது நானிலத்தோர் நன்கறிந்ததே; சமீபத்திய விஞ்ஞானவளர்ச்சியால் நான் டியூப் லைட்டிலிருந்து ஸோடியம் வேப்பர் லைட்டாகி விட்டேனோ என்று எனக்கே தோன்றுமளவுக்கு குழம்பிக்கொண்டிருக்க, அவர் வண்டியை சாத்திவிட்டு, அருகே எங்கோ செல்வதைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

அடடா, இது...அவரல்லவா? "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற பெயரில் ஓசையின்றி ஒரு அற்புதமான வலைப்பூவில் அற்புதமாக எழுதிக்கொண்டிருக்கும் ந.உ.துரை! தமிழ்த்தென்றல் கூகிள் குழுமத்தின் நிர்வாகி! அனேகமாக, கூகிளில் உள்ள அனைத்துத் தமிழ்க்குழுமங்களிலும் அவரையும், அவரது க(வி)தைகளைக் காணலாம். பல குழுமங்களில் பல சந்தர்ப்பங்களில் அவரது புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆஹா, மறக்கிற முகமா அது? முதலிலேயே அடையாளம் தெரிந்திருந்தால் போய் அறிமுகம் செய்து கொண்டிருக்கலாமே? இப்போது அவர் எங்கு போனாரோ? எப்போது திரும்புவாரோ? சரி, கையில் இன்னும் சில மெக்ரோன்கள் இருந்தன. அவற்றை விழுங்கி முடிக்கும் வரைக்கும் காத்திருப்போம். அவர் திரும்பி வந்தால் போய் அறிமுகம் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் ஜூட் என்று முடிவெடுத்து, எனது திட்டத்தின்படியே அடுத்த மெக்ரோனை வாயில் தள்ளி ஆடு தழை குதப்புவது போலக் குதப்பத் தொடங்கினேன். அப்படியே, துரை அவர்களைப் பற்றி நானறிந்த பல தகவல்களை அசைபோடத்தொடங்கினேன்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் - ந.உ.துரை அவர்கள் "அடக்கம் அமரருள் உய்க்கும்," என்ற திருக்குறளுக்கு மிகச்சரியான உதாரணம். அவரைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கு, இப்போதெல்லாம் திருக்குறளைப் பற்றியும் எண்ணாமல் இருக்க முடியாது. காரணம், திருக்குறளோடு தொடர்புடைய அவரது சமீபத்திய முயற்சி எதிர்காலத்தில் வியந்து பேசப்படப்போகிற ஒரு சீரிய சாதனை. திருக்குறளின் விளக்கத்தை, அவர் குறள் வெண்பாவின் வடிவத்திலேயே எழுதியிருப்பதைப் பார்ப்பவர்களுக்கு, அவர் இதற்காக மேற்கொண்ட முயற்சி, சிந்திய வியர்வை, வாசித்த நூல்கள், இழந்த உறக்கம், செலவழித்த நேரம் - இவையெல்லாவற்றையும் தாண்டி அவருக்குள்ளிருந்த அசைக்க முடியாத உறுதி ஆகியவை புலப்படும்.

சீதாம்மா என்னிடம் ஒரு முறை கூறியிருந்தார்: "துரையா? அவர் காலையில் தூத்துக்குடியில் இருப்பார். மாலையில் கோயம்புத்தூர். இரண்டு நாட்கள் கழித்துக் கேட்டால் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்பார். ஆனால், எவ்வளவு பயணம் செய்தாலும், எங்கே போனாலும் குழுமத்தில் தினம் ஒரு மடலாவது போடாமல் இருக்க மாட்டார். அவ்வளவு ஆர்வம் அவருக்கு!"

புதுக்கவிதைகள், ஹைக்கூ, மரபுச்செய்யுள்கள் என அவர் முயன்றிராத களங்களே இல்லை எனலாம். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, தனது மூன்றாவது கண்ணான கேமிரா கொண்டும், "எனது கோண(ல்)ம்" தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

முன்னைப் போல என்னால் தமிழ்க்குழுமங்களில் எழுத முடியாமல் போனாலும், நான் அவசியம் வாசிக்கிறவர்களில் முதன்மையானவர் ந.உ.துரை அவர்கள்! இதிலென்ன வியப்பு தெரியுமோ? உண்மையில் அவர் ஒன்றும் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் படித்துத் தேர்ந்தவர் அல்லர். அவர் ஒரு கட்டிடக்கலைப் பொறியாளர் என்பதுதான் அவரது ஒவ்வொரு முயற்சியையும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது.

பரீட்சையில் ’பிட்’ அடித்துத் தேறியவர்கள் பலர்; பிட் அடித்தும் தோற்ற மிகச்சிலரில் அடியேனும் ஒருவன். எனக்கு பக்கத்திலிருப்பவனைப் பார்த்தும் ஒழுங்காகப் எழுத வராது. ஒருமுறை பக்கத்திலிருந்தவனுக்கும் ஒன்றும் விளங்காமல் அவன் விடைத்தாள் முழுக்க ’சரவணபவ...சரவணபவ’ என்று எழுதிக்கொண்டிருக்க நான் அதைப் பார்த்து ’ஆரியபவன்...ஆரியபவன்’ என்று எழுத ஆரம்பித்து விட்டேன். இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

இப்போது ந.உ.துரை அவரது வலைப்பூவில் எளிய முறையில் "கற்போம் கற்பிப்போம்" என்று ஒரு புதிய தொடர் எழுதி வருகிறார். இது போல யாராவது எனது கல்லூரிக்காலத்தில் சொல்லிக்கொடுத்திருந்தால், நான் மூன்று வருடத்திலேயே இளங்கலைப் படிப்பை முடித்திருப்பேன். (அப்படீன்னா, எனக்கு எத்தனை வருசமாச்சுன்னா கேட்கறீங்க? அதெல்லாம் அரசாங்க ரகசியம்! விக்கிலீக்ஸ்லே பார்த்துக்கோங்க!)

இப்படியாகத்தானே, ந.உ.துரை அவர்களைப் பற்றி தொடர்ச்சியாக சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே, மீண்டும் அவர் தனது வாகனத்தை நோக்கி வருவதைப்பார்த்தேன். பேசலாமா வேண்டாமா? - ஒரு சிறிய தயக்கத்தோடு இருந்த நான், அவர் தன் கார் கதவைத் திறப்பதைப் பார்த்ததும், துள்ளிக்குதித்து எழுந்து அவரை நெருங்கினேன்.

"வணக்கம்! நான் தான் சேட்டை!"

வியப்பும் மகிழ்ச்சியுமாய் எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் இருக்கிறதே! மறக்க முடியாத அனுபவம்! இணையத்தில் எனக்குக் கிடைத்த சில நல்ல பரிச்சயங்களை நேரில் சந்தித்து, அளவளாவும் வாய்ப்பு அண்மையில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பும் இன்னும் நம்மைச் சுற்றிலும் நிறைய அன்பும், வாஞ்சையும் இருக்கின்றன என்ற நம்பிக்கைக்கு உரமேற்றுகிறது.

அந்த வகையில் ந.உ.துரை அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பும், எனக்கு மேலும் பல புதிய நம்பிக்கைகளை உருவாக்கியிருக்கின்றன என்பது மட்டும் மறக்க முடியாத உண்மை.

ந.உ.துரை அவர்களின் முயற்சிகள் வெல்லும் நாள் தொலைவில் இல்லை! காரணம், அவரை விட முயல்பவர்கள் எவரையும் நான் அறிந்ததில்லை.

டிஸ்கி: இதை எழுத அவரிடம் அனுமதி பெறவே ஏறக்குறைய ஒரு வாரமாகி விட்டதுங்க!

Saturday, January 22, 2011

குறட்டைச்சத்தம் கேக்கலியா?

பிரபல காது,மூக்கு,தொண்டை மருத்துவர் தொண்டைமானின் கிளீனிக்கில், நர்சரி ஸ்கூலில் குழந்தைக்கு அட்மிஷன் கேட்டு வந்த பெற்றோர்களைப் போல, நோயாளிகள் நீளமான வரிசையில் நின்றிருந்தனர். நல்ல வேளை, முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்ததால், சிறிது நேரத்திலேயே நாங்கள் உள்ளே...

"குட்மார்னிங் டாக்டர்!"

"குட்மார்னிங்! சொல்லுங்க, என்ன பிரச்சினை?"

"இவன் பேரு வைத்தி!"

"அதுதான் பிரச்சினையா? பேரை மாத்திருங்களேன்!"

"அதில்லை டாக்டர், ராத்திரியிலே ரொம்ப குறட்டை விடுறான். நேத்து இவன் விட்ட குறட்டைச் சத்தத்தைக் கேட்டு, ஊருக்குள்ளே புலி வந்திருச்சுன்னு யாரோ ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணிட்டாங்க!"

"அடடா! ஏன் மிஸ்டர் வைத்தி? எத்தனை நாளா இப்படிக் குறட்டை விடுறீங்கன்னு சொல்ல முடியுமா?"

"அவனைக்கேட்டா எப்படி? கூட இருக்கிற எங்களைக் கேளுங்க! எங்களுக்குத் தெரிஞ்சு ஏழெட்டு வருசமா இவன் குறட்டை விடுறான். சில சமயங்களிலே எங்க காதுலேயே டைரக்டா குறட்டை விடுறான் டாக்டர். எங்களாலே தூங்கவே முடியுறதில்லை!"

"இது சகஜம்தான்! ஆராய்ச்சிக்காரங்க என்ன சொல்லுறாங்கன்னா, ஒவ்வொரு மனிசனோட வாழ்க்கையிலும் அடுத்தவங்களோட குறட்டையைக் கேட்டே ரெண்டு வருசம் வீணாப்போகுதுன்னு..."

"ஐயையோ!"

"பதறாதீங்க! குறட்டை விடுறது ஒரு குறைபாடுதான்! அதுனாலே குறட்டை விடுறவங்களுக்கு எந்த ஆபத்துமில்லை!"

"நாசமாப் போச்சு! அவனுக்கு ஆபத்தில்லை! எங்க காது ஜவ்வு கிழிஞ்சிரும் போலிருக்கே டாக்டர்?"

"இங்க பாருங்க தம்பி, சர் வின்ஸ்டன் சர்ச்சில் தெரியுமா? அவரு ஓவரா குறட்டை விடுறாருன்னு அவரோட வேலை பார்த்த ஆளுங்க அதிகாரபூர்வமா புகார் தெரிவிச்சிருக்காங்க. அது மட்டுமா? பிரின்ஸ் சார்லஸ் குறட்டை சத்தம் தாங்காம லேடி டயானா நிறையவாட்டி ரூமை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடியிருக்காங்களாம்."

"ஏன் டாக்டர், பொம்பிளைங்க குறட்டை விட மாட்டாங்களா? ஒரே ஆம்பிளை பேரா சொல்றீங்க?"

"பொம்பிளைங்களும் குறட்டை விடுவாங்க. ஆனா, இந்த விஷயத்துலே பொம்பளைங்க எட்டடி பாய்ஞ்சா ஆம்பிளைங்க பதினாறடி பாய்வாங்க!"

"ஆனாலும் கடவுள் மனிசனுக்கு மட்டும் இந்த குறட்டையை வச்சுத் தொலைச்சிருக்க வேண்டாம்!"

"யாரு சொன்னாங்க? நாய், பூனையெல்லாம் கூட குறட்டை விடும்? வேண்ணா ஒருவாட்டி கவனிச்சுப் பாருங்க!"

"இவன் ஒருத்தன் குறட்டையைக் கவனிச்சே மாசத்துலே ரெண்டுநாள் ஸிக்-லீவ் போட வேண்டியிருக்கு. அது போதாதா? ஏன் டாக்டர், மனிசங்க ஏன் குறட்டை விடுறாங்க?"

"அதாவது சுவாசத்துவாரத்துலே ஏற்படுற அடைப்புக் காரணமாத்தான் குறட்டை விடுறாங்க! இதை அவங்களாலேயே கட்டுப்படுத்த முடியாது. ரொம்ப ஸிவியரான கேஸாயிருந்தா ஒரு ஆபரேஷன் பண்ணினாப் போதும்..."

"என்ன ஆபரேஷன் டாக்டர?"

"அதுக்குப் பேரு யுவுலோபலட்டோபாரிங்கோப்பிளாஸ்ட்டி."

"ரொம்ப பெரிய ஆபரேஷனோ? பெயரே இவ்வளவு நீளமாயிருக்கு? நீங்க சொல்லி முடிக்கிறதுக்குள்ளே எனக்கே குறட்டை வர்றா மாதிரி இருந்திச்சு!"

"அது நீங்க இல்லை! உங்க வைத்திதான் குறட்டை விட ஆரம்பிச்சிட்டாரு!"

"ஐயையோ, உட்கார்ந்து தூங்கும்போதும் குறட்டை வருமா டாக்டர்?"

"உறுதியா சொல்ல முடியாது. சில சமயம் குறட்டை வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம்."

"என்ன டாக்டர், நம்ம ரமணன் வானிலை அறிக்கை மாதிரி சொல்றீங்க?"

"இருங்க! ஹெட்-ஃபோனை மாட்டிக்கிட்டு கேட்கிறேன்."

"காது பத்திரம் டாக்டர்! இவனாலே சேலையூரிலே பாதிபேரு செவிடா அலையுறாங்க!"

"ம்ம்ம்ம்ம்! உங்க வைத்தி உண்மையிலேயே சூப்பராக் குறட்டை விடுறாரு! சபாஷ்! பலே!"

"என்னது, என்னவோ நாரத கான சபாவிலே நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி கேக்குறா மாதிரி சொல்றீங்க? முதல்லே இவனோட தனி ஆவர்த்தனத்தை நிறுத்துங்க டாக்டர்!"

"என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்லே இப்படியொரு கேஸை நான் பார்த்ததேயில்லை. இவரோட குறட்டை இவருக்கு நிறைய பேரும் புகழும் கொண்டுவரப்போகுது."

"எப்படி டாக்டர்? அடுத்த ஜனாதிபதியாகப்போறானா?"

"உங்க வைத்தியோட குறட்டை சாதாரணமான குறட்டையில்லை!"

"பின்னே என்ன மசாலா குறட்டையா?"

"அதாவது இந்த உலகத்துலேயே ரொம்ப சத்தமான குறட்டை யாருது தெரியுமா? இங்கிலாந்துக்காரர் மெல்வின் ஸ்விட்சர். இவர் சாதனை கின்னஸ் புஸ்தகத்துலே வந்திருக்குது. அவரோட குறட்டைச்சத்தம் 92 டெசிபல். அதுக்கடுத்தபடியா ஃபுட் பெளெண்டர், ஜேக் ஹாமர், செயின் ஸான்னு நிறைய பேரு இருக்காங்க! உங்க வைத்தி மனசு வைச்சா இவங்க ரிகார்டையெல்லாம் பிரேக் பண்ணிருவாரு!"

"பாவம், ரஞ்சி டீமுலே விளையாடி செஞ்சுரி செஞ்சுரியா அடிச்சு ரிக்கார்ட்-பிரேக் பண்ணனுமுன்னு ஆசைப்பட்டான். கடைசியிலே குறட்டை விட்டா சாதனை பண்ணனும்?"

"வருத்தப்படாதீங்க! இனிமேல் உங்க நண்பர் குறட்டை விட்டா அதை என்கரேஜ் பண்ணுங்க! இவரோட பேரு கின்னஸ் புத்தகத்துலே வந்தா அது பெருமையா இல்லையா?"

"சரி டாக்டர்!"

அன்று இரவில்...

"வைத்தி! வைத்திக்கண்ணு! இந்தாடா உனக்காகவே ஏலக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூரம் எல்லாம் போட்டு எருமைப்பால் கொண்டுவந்திருக்கேன். குடிச்சிட்டு நல்லா சத்தம்போட்டு குறட்டை விட்டு சமர்த்தாத் தூங்கணும். சரியா?"

"ஏண்டா உசிரை வாங்குறீங்க? முன்னெல்லாம் குறட்டை விட்டா, எழுப்பி அப்புவீங்க? திடீர்னு என்னடா ஆச்சு?"

"எல்லாம் காரணமாத்தான்!"

வைத்தி தூங்க ஆரம்பித்ததும், நானும் சுரேந்திரனும் பிளாஸ்க் நிறைய சுக்குக்காப்பியும், கையில் வாய்ஸ்-ரிகார்டருமாக தூங்காமல் கண்விழித்து படுக்கையருகில் அமர்ந்து, குறட்டையை பதிவு செய்து கொண்டிருந்தோம். அன்று முதல்.....

கின்னல் புத்தகத்தில் எங்கள் நண்பனின் பெயரைக் கொண்டுவருகிற எங்களது முயற்சி தொடர்கிறது. உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்களும் இதற்கான பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால், பயிற்சி வீட்டோடு இருந்தால் நல்லது. பணியிடத்தில் பயிற்சி மேற்கொண்டால், விளைவு விபரீதமாகி விடலாம். கீழே இருக்கிற காணொளியில் நடப்பது போலே...!


Friday, January 21, 2011

கார்த்தி வலைப்பூ வாசிப்பவரா?

கார்த்தி வலைப்பூ வாசிப்பவரா? இல்லாவிட்டாலும் அவருக்கு நெருங்கிய ரசிகர்களில் ஒருவரோ அல்லது திரைப்படத்துறையில் இருப்பவர் எவரேனும் இந்த இடுகையை வாசிக்கலாம் என்ற ஒரு அசட்டு நம்பிக்கையில் இந்த இடுகை.

நேற்று வாசித்த செய்தி இது: பெட்டிக் கடைகளில் சிறுத்தை பட திருட்டு சிடிக்களை விற்கின்றனர்-கார்த்தி புகார்

தற்போது அரசியல் சூடுபிடித்திருக்க, நடிகர் சங்கத்துப் பெருந்தலைகள் கட்சிப்பணியாற்றிக் கொண்டு இருப்பதால், கார்த்தி திரைப்படத்துறையின் பிரதிநிதியாக இந்த புகாரை அளித்திருக்கிறாரா? அல்லது இந்தப் படம் அவரது உறவினர் தயாரித்தபடம் என்பதாலா என்பது போன்ற கேள்விகளை ஒதுக்கி வைத்து விட்டு பார்க்கலாம்.

அவரது புகார் மிகவும் நியாயம் தான். கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தை எடுத்து, தியேட்டர் பிடித்து, வெளியிட்டு போட்ட முதலாவது திரும்பக்கிடைக்காதா என்று கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் அல்லாடுகிற இந்த சூழலில் திருட்டு சிடிக்கள் விற்பனை பெரிய குற்றம் தான். யாரோ முதல்போட, யாரோ அதிகம் மெனக்கெடாமல் பணத்தை அள்ளிக்கொண்டு போவது அநியாயம் தான். இரும்புப்பிடி கொண்டு அடக்குகிற சட்டங்கள் இருந்தும், அவை குறித்து சட்டை செய்யாமல் ஒரு கும்பல் சுளுவாக காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கொள்ளைப்பணம் சம்பாதிப்பது அட்டூழியம் தான். மாவைத்தின்றால் பணியாரம் கிடைக்காது என்பதுபோல, திருட்டு சிடிக்கள் வியாபாரத்தை விட்டுவைத்தால் அது நாளடைவில் திரைப்படத்தொழிலை முற்றிலும் ஒழித்து விடும் என்பதும் அபாயம்தான். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்தான்.

இது நாணயத்தின் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம்....? திருட்டு சிடிக்கள் ஏன் விற்பனையாகின்றன? ஏன் பொதுமக்கள் வாங்குகிறார்கள்?

திருட்டு சிடி விற்பது குற்றமென்றால், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதும் குற்றம் தானே?

கமல்,ரஜினி தொடங்கி, கார்த்தி வரையில் அத்தனை நடிகர்களும் அவ்வப்போது திருட்டு சிடிக்கள் குறித்து அறிக்கைகள் விடுகிறீர்கள்; காவல்துறை ஆணையரைச் சென்று சந்தித்துவிட்டு, தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளிக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளில் எந்த நடிகராவது காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று,"திரையரங்கங்களில் புதுப்படங்கள் வெளியாகிறபோது, ஒன்றுக்கு இரண்டு, மூன்று, நான்கு மடங்கு விலையில் விற்பனை செய்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துங்கள்," என்று கோரிக்கை வைத்திருப்பீர்களா? பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்கிற ரவுடிக்கும்பலை அடக்கி வைக்குமாறு கேட்டிருப்பீர்களா? இதில் யார் யாருக்கு எத்தனை பங்கு இருக்கிறது என்பது கூட அறியாத குழந்தையல்ல கார்த்தி என்று நம்புவோமாக!

இரண்டுமே சட்டவிரோதமான செயல்கள். உங்களது ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்? காரணம் பெரிய சிதம்பர ரகசியமல்ல. உங்களுக்கு நீங்கள் போட்ட முதலீடு மட்டும்தான் பணம். நீங்கள் சிந்துவது மட்டும்தான் வியர்வை. உங்களுக்கு ஏற்படுவது தான் நஷ்டம்!

ஆனால், திரையரங்கத்துக்கு படம் பார்க்க வருகிற ரசிகன் கேனயன். அவன் திரையரங்கிலேயே நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கவுன்டரில் விற்பனை செய்தாலும் சரி, பிளாக்கில் முன்னூறு ரூபாய்க்கு விற்றாலும் சரி, வாங்குவான்; படம் பார்ப்பான். அப்படித்தானே?

ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு சினிமாவுக்குப் போனால் ஆகிற செலவு என்ன என்று தெரியுமா? குறைந்தபட்சம் எண்ணூறு ரூபாய்! டிக்கெட் மட்டுமல்ல; குளிர்பானங்கள், தின்பண்டங்கள் முதற்கொண்டு சகலமும் திரையரங்கங்களில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்கிறார்கள்! ஒரு பாப்-கார்ன், ஒரு பெப்ஸி வாங்கினால் எழுபத்தி ஐந்து ரூபாய் காலி! மாதத்துக்கு ஒரு சினிமா பார்த்தாலே கூட பட்ஜெட் எகிறி விடும் அவனவனுக்கு! ஒரு சினிமா பார்க்கிற பணத்தில் ஒருமாத பால்கணக்கை பைசல் பண்ணிவிடலாம். மின்சாரக்கட்டணத்தையோ அல்லது தொலைபேசிக்கட்டணத்தையோ கட்டிவிடலாம்.

வெங்காயம் என்ன விலை? சமையல் வாயு என்ன விலை? பெட்ரோல் என்ன விலை? சராசரி மனிதனின் வாங்கும் திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிற இந்த சூழ்நிலையில், அவனால் சினிமாவுக்கென்று எப்படி பணத்தை ஒதுக்க முடியும்? அவன் இருபது ரூபாய்க்கு சிடி கிடைத்தால், வாங்கத்தான் செய்வான். பார்க்கத்தான் செய்வான். காரணம், உங்களுக்கு அவன் மீது இல்லாத அக்கறை அவனுக்கு உங்கள் மீதும் இருக்க வாய்ப்பில்லை. அதை எதிர்பார்க்காதீர்கள்!

சரி, ஓரளவு வசதியானவர்கள் என்று வைத்துக்கொள்வோம். எத்தனை திரையரங்குகளில் நான்கு சக்கரவாகனங்களை நிறுத்துகிற வசதியிருக்கிறது? எத்தனை திரையரங்கங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன? ஒன்றா இரண்டா நெருடல்கள்? எழுத ஆரம்பித்தால் நாறி விடும்!

என்னவோ உலகத்தீவிரவாதிகளின் கொட்டம் தமிழகமெங்கும் பரவிவிட்டது போல, குடிக்கிற தண்ணீரையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. பாதுகாப்புக் காரணங்களாம்- புடலங்காய்!

சில திரையரங்கங்களில் பாதுகாப்பு என்ற பெயரில் பண்ணுகிற அலப்பறை இருக்கிறதே, சொல்லி மாளாது. கமலா திரையரங்கில் ஆண்களைத் தடவித் தடவி பரிசோதித்து விட்டுத்தான் உள்ளே அனுப்புகிறார்கள். சிகரெட் வைத்திருந்தால் உள்ளே அனுமதி இல்லையாம். இத்தனை உளவு கேமிராக்கள், புகை கண்டுபிடிப்புக் கருவி, சீருடையணிந்த பாதுகாவலர்கள் அத்தனையும் மீறி எவன் உள்ளே புகை பிடிப்பது? பிடித்தால் அவனை காவல்துறையிடம் ஒப்படையுங்கள்; அபராதம் போடச்சொல்லுங்கள்! சிகரெட் பாக்கெட்டை வெளியே போட்டால்தான் அனுமதியாம். "சர்தான் போய்யா," என்று டிக்கெட்டைக் கைமாற்றி விட்டு அதே சிகரெட் பாக்கெட்டுடன் இன்னொரு திரையரங்கில் போய் அதே ராவணனைப் பார்த்தேன். அதென்னய்யா, ஆண்களை மட்டும் தடவுகிறீர்கள்? நாங்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

இதையெல்லாம் தாண்டி, திரைப்படத்துறை அழியாமலிருக்க வேண்டும் என்ற சமூகநோக்கோடு (?!) ஒரு பெருந்தொகையைச் செலவழித்து பொதுமக்கள் ஏன் சினிமா பார்க்க வேண்டும்? நீங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கா அல்லது அவரவர் குடும்பத்தோடு பொழுதைக் கழிப்பதற்கா?

தமிழ் சினிமாக்கள் தொடர்ச்சியாய்த் தோல்வியடைவதற்கு காரணம் திருட்டு சிடி மட்டும் தானா? தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று அனைவருக்கும் இருக்கிற பேராசைதான்! இது தவிர நீங்கள் எடுக்கிற படங்களின் லட்சணத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், அது பட்டி விக்கிரமாதித்தன் கதை போலாகி விடும். மன்மதன் அம்பு போல இன்னும் இரண்டு படங்களை எடுத்தால், சினிமா பார்க்கிற ஆசையே மனிதனுக்கு இல்லாமல் போய்விடும். (மருத்துவர் ராமதாஸ் சந்தோஷப்படுவார் பாவம்!)

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கிடையாது. தமிழ்நாட்டைப் போல, எந்த மாநிலத்திலும் திரைப்படத்துறைக்கு இத்தனை சலுகைகளும் கிடையாது. இத்தனை சலுகைகளைப் பெற்ற நீங்கள், அதில் ஒரு சிறுபகுதியையாவது பொதுமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து அவர்களைத் திரையரங்குக்கு வர ஊக்கப்படுத்தியதுண்டா? உங்களைப் பொறுத்தவரையில் தமிழக சினிமா ரசிகன் ஏமாந்த சோணகிரி-அம்புட்டுத்தேன்!

உண்மையில், சினிமா பார்க்க வருகிற ரசிகர்களை, நடிகர்கள் மதிக்கிறவர்களாயிருந்தால் செய்ய வேண்டியது இரண்டு:

பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்!
திரையரங்கங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்! உள்ளே விற்பனையாகிற பொருட்களின் விலைகளை ஒரு சீரான கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள்! - இவற்றின் மூலம் முன்போல, எல்லா வர்க்கத்தினரும் திரையரங்குக்கு வந்து சினிமா பார்க்க வழிவகை செய்யுங்கள்!

முடியலியா, படத்தில் நடித்தோமா, பணத்தை வாங்கினோமா என்று போய்க்கொண்டேயிருங்கள்.

நான் கிளம்புகிறேன்- பெட்டிக்கடைக்கு!

Thursday, January 20, 2011

உங்கள் விரலே உங்கள் கண்ணை....!

Your PC is watching you, 24X7

எனது இடுகைகளுக்காக பல செய்தித்தாள்களின் இணையதளங்களுக்கு செல்வது எனது வாடிக்கை. அப்படிச் சென்றபோது எனது கண்களில் பட்ட ஒரு செய்தியை வாசித்து அதிர்ந்து போய்விட்டேன். அதை உங்களிலும் பலர் வாசித்திருக்கலாம்; வாசிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்காக, அந்த செய்தியின் சுட்டியை அளித்திருக்கிறேன். அத்துடன், செய்தியின் சுருக்கமான மொழிபெயர்ப்பையும்..........

"நிகேதா சிங் (பெயர் மாற்றம்) என்ற 26 வயதுப் பெண்மணிக்கு ஒரு நாள் அலுவலகத்தில் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அவரது சக ஊழியர் ஒருவர், நிகேதா தனது வீட்டில் உடைமாற்றிக்கொண்டிருக்கிற வீடியோவை பல நண்பர்கள் இணையத்தில் பார்த்துத் தகவல் கூறியதாகத் தெரிவித்தார். உடனே, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், விசாரணையில் நிகேதாவின் வீட்டுக் கணினியில் இருந்த வெப்-கேமிராவில் அவரது தினசரி நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சிதருகிற தகவல் என்னவென்றால், கணினியை அணைத்து வைத்தபிறகும், வெப்-கேமிரா மட்டும் தனியே இயங்க வழி செய்கிற மென்பொருள் ஒன்றை நிகேதாவின் காதலனே நிறுவியிருக்கிறார் என்பதுதான். நிகேதாவின் படங்களைத் திருட்டுத்தனமாகப் படமெடுத்து, அதை இணையத்தில் வியாபாரம் செய்திருக்கிறார்."

இது எப்படி சாத்தியம் என்று புரியாதபோதிலும், இது போன்ற பல தில்லுமுல்லு மென்பொருட்கள், ஆபாசக் குறுந்தகடுகளுக்கு அடுத்தபடியாக சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இந்த மென்பொருட்கள் புது தில்லியின் மையத்தில் இருக்கிற பாலிகா பஜார் என்ற நவீன வணிக வளாகத்தில் சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது என்று வாசித்தபோது எனக்கு பெரிதாக ஆச்சரியம் ஏற்படவில்லை. 2008-ல் புது தில்லி சென்றிருந்தபோது ஆபாச குறுந்தகடுகள் வெளிப்படையாக அங்கு பாலிகா பஜாரிலும், கன்னாட் சர்க்கஸிலும் விற்பனை செய்யப்படுவதை என் கண்ணாலேயே பார்த்தேன். இதே போல, மும்பை லாமிங்டன் ரோட்டிலும், சென்னை பாரிமுனை, பர்மா பஜாரிலும் ஆபாச சிடிகள் விற்பனை செய்யப்படுவதை அனைவரும் அறிவர். (கேரளாவைப் பற்றி சொல்லவே வேண்டாம்!)

இது போன்ற மென்பொருட்களின் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்றால், கணினியே இல்லாமல் வீடியோக்களை இணையத்தில் பரவ விடுகிற அளவுக்கு முன்னேற்றம் (?) ஏற்பட்டிருக்கிறதாம். அந்தரங்கங்களைப் படமெடுத்து அம்பலத்தில் புழங்கவிடுகிற இது போன்ற மென்பொருட்களின் விலை வெறும் இருநூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஐநூறு ரூபாய் தானாம். என்ன கொடுமை இது?

ஒன்றல்ல; இரண்டல்ல- இது போல பற்பல மென்பொருட்கள் கிடைப்பதால், அதை ஒரு கணினியில் நிறுவினால் போதுமாம். அதன் பிறகு, கணினியை முடக்கினாலும் வெப்-கேமிரா மட்டும் இயங்குவதோடு நடப்பதை பதிவும் செய்து விடுமாம். ஸ்பாம் மின்னஞ்சல்கள் மூலமாகவும் இத்தகைய மென்பொருட்கள் உங்களது கணினியில் தானே தரவிறக்கமாக வாய்ப்புகளும் உள்ளதாம். (கணினி குறித்து அறிந்தவர்கள் இதுபற்றி இன்னும் விரிவாக எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்)

செல்போன் கேமிராக்களின் மூலம், பெண்களை பொது இடங்களில் படம்பிடித்து இணையத்தில் பரவ விடுகிற வக்கிரப்புத்திக்காரர்கள் குறித்து நாம் அவ்வப்போது வாசித்துக்கொண்டு தானிருக்கிறோம்.

இன்டெர்நெட் மையங்களில், ரகசியக் கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அங்கு வருகிற பெண்கள் மற்றும் காதல்ஜோடிகளைப் படம் பிடித்து விற்பனை செய்கிற கூட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திராவில் கைது செய்தார்கள். இது குறித்து இணையத்தில் எனக்குப் பரிச்சயமான சகோதரி ஒருவர், தனக்கு வந்த ஒரு மடலை எனக்கு எழுதி, அதை இடுகையாக எழுதும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான் இணையத்தில் ஒரு தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு சிறிய இடைவேளை விட்ட நேரம். மேலும், இது போன்ற இடுகைகளை எழுதினால், ’அட, இப்படியும் கூட செய்யலாமா?’ என்று ஓரிருவர் கிளம்பினாலும் விபரீதமாகி விடுமே என்ற அச்சத்தில் எழுதாமல் இருந்தேன். இது குறித்து சில பெண் பதிவர்களிடம் ஆலோசனையும் கேட்டிருந்தேன். எங்கள் அனைவருக்குமே இது குறித்து எழுத மிகுந்த தயக்கமாக, இல்லை இல்லை, பயமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், இந்த செய்தியை நம் நட்புகளோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று பட்டதால், உடனே எழுதி விட்டேன். வீட்டில் கணினி, வெப்-கேமிரா வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்!

உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது.

Tuesday, January 18, 2011

புத்தக விமர்சனம்-மு.சோ.ம.எ?

"புத்தகக்கண்காட்சி பக்கமே போகாம, மூணு வாட்டி போனேன், நாலுவாட்டி போனேன்னு உடான்ஸா வுட்டுக்கினு இருக்கே? கீசிடுவேன் கீசி!" என்று என் அருமை நண்பன் சல்பேட்டா சபாபதி, மிகவும் பணிவன்புடன் எனக்கு மடல் எழுதியிருந்தான். எனவே, எனது டங்குவாரைக் காப்பாற்றிக்கொள்ள, இந்தப் புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கிய ஏதாவது ஒரு புத்தகத்தின் விமர்சனத்தை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாண்டு நான் வாங்கிய புத்தகங்களில் கபில் சிபல் எழுதிய "முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி?" என்ற முழுநீள நகைச்சுவைப் புத்தகத்தைப் பற்றிய எனது விமர்சனத்தை உங்களது மேலான பார்வைக்கு அளித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ள டுபாக்கூர் பதிப்பகம் "இந்தியா-ஊழலற்ற தேசம்," "பாவம் தீர்க்கும் கூவம்," "அகில உலக சூப்பர் ஸ்டார் போண்டாமணி," போன்று பற்பல சிறந்த நூல்களை வெற்றிகரமாக வெளியிட்டவர்கள் ஆவார்கள். ஆங்கிலத்திலிருந்து இதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிற நொள்ளக்கண்ணன் இதற்கு முன்னர் இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோக்கியின் சுயசரிதையை "ஒரு அப்பாவியின் கதை," என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் மூலத்தை ஆங்கிலத்தில் எழுதிய கபில் சிபல் என்ன சாமானியப்பட்ட எழுத்தாளரா? இத்தனை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்துள்ள இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருப்பவர் மட்டும் லேசுப்பட்டவராக இருக்க முடியுமா என்ன? அண்டப்புளுகூர் அலப்பறைவளவன் என்றாலே சமகால இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவராலும் அறியப்பட்டவரல்லவா? அணிந்துரையில் தனக்கே உரித்தான முத்திரையை தாறுமாறாகக் குத்தியிருக்கிறார். அதிலும், அவர் பூசணிக்காய், சோறு ஆகியவை குறித்து சில்லறையாகவும் மொத்தமாகவும் தொகுத்து எழுதியிருக்கிற விபரங்களை வாசிப்பவர்கள், அவரவர் மூக்கில் விரல்வைப்பதோடு அடுத்தவர்கள் மூக்கிலும் விரல்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"இந்தியக் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது பூசணிக்காய். ஆக்ரா என்றால் அனைவருக்கும் தாஜ்மகால் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவிலேயே முதன்முதலாக பூசணிக்காயை வைத்து அல்வா தயாரித்தது ஆக்ராவில்தான் என்று எத்தனை பேர் அறிவர்? சில ஆராய்ச்சியாளர்கள் மும்தாஜ் மரணத்துக்குக் கூட இந்த பூசணிக்காய் அல்வா தான் காரணம் என்று வாதிக்கிறார்கள் என அறிக."

"அது மட்டுமா? கண்திருஷ்டி படாமல் இருப்பதற்காக, பூசணிக்காயின் மண்டையின் மீது நாலணா கற்பூரத்தை கொளுத்தி அதை நாலைந்து சுற்று சுற்றி கீழே போட்டு உடைத்தால் கம்ப்யூட்டரை வைரஸ் அண்டாது என்று அறுதியிட்டுச் சொல்லலாம். தமிழகத்தில் வாசலில் சாணிபோட்டு மெழுகி, கோலமிட்டு அதில் பூசணிப்பூவால் அலங்கரிப்பது வழக்கம். எனவே காசினியில் சிறந்தது பூசணி என்பது உள்ளங்கை பூசணிக்கனியாய்ப் புரிகிறதன்றோ?"

"சோறு என்பதும் நமது வாழ்க்கையில் இன்றியமையாதது. தமிழகத்தில் வேலைவெட்டியில்லாதவர்களை "தண்டச்சோறு," என்று அழைப்பது வழக்கம். ஆனால், வட இந்தியாவில் "தண்டச்சப்பாத்தி," என்றோ "தண்டப்பூரி" என்றோ அழைப்பதில்லை என்பதிலிருந்தே சோற்றின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும். தமிழ்நாட்டோடு பூசணிக்காயும், சோறும் இவ்வளவு தொடர்புடையதாக இருப்பதால்தான், இங்கு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் பலர் விற்பன்னர்களாக இருக்கின்றனர்," என்று சரித்திரச்சான்றுகளுடன் எழுதியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்துவரும் கபில் சிபலின் முன்னுரையில், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் முழுப்பூசணிக்காய்களை சோற்றில் மறைப்பதென்பது காலத்தின் கட்டாயம் என்பதைத் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கிறார். சுதந்திர இந்தியாவில் இதுவரை எத்தனை கிலோ முழுப்பூசணிக்காய்கள் எத்தனயெத்தனை டன் சோற்றால் மறைக்கப்பட்டிருக்கின்றன என்று கோயம்பேடு குமாஸ்தா சங்கம் கொடுத்துள்ள புள்ளிவிபரங்களை எள்ளிநகையாடியிருக்கிறார். புத்தகத்தை எழுதுவதில் காட்டியிருக்கிற முயற்சியை அவர் முன்னுரையிலும் காட்டியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

முதல் அத்தியாயத்தில், தேவையான பொருட்கள் குறித்த விபரங்களை எழுதியிருக்கிறார் ஆசிரியர் கபில் சிபல். அதிலும், முதல் பொருளாக அவர் அண்டாவை எழுதியிருப்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. அத்தோடு, இதற்காக துளையேதுமில்லாத அண்டாக்களைத் தேடி அலைய வேண்டாம் என்றும் ஆங்காங்கே ஒருசில துளைகள் இருக்கிற அண்டாவை வாங்கினாலே போதும் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது, அவர் எவ்வளவு திறமையான வழக்குரைஞர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது.

"ஒரு பெரிய அண்டாவை எடுத்து, அதிலே ஒரு முழுப்பூசணிக்காயைப்போட்டு, அதன் மேலே சோற்றைக் கொட்டி நிரப்பினால், அது மறைந்து விடும்," என்று சுருக்கமாகச் சொல்லாமல், அண்டா, பூசணிக்காய், சோறு ஆகியவை குறித்து அவர் விபரமாக எழுதியிருப்பதை வாசிக்கும்போது, ’என்ன இருந்தாலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதை நிரூபித்துவிட்டார்," என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்தப் புத்தகத்தின் தனித்தன்மையே அதிலிருக்கும் புகைப்படங்கள் தான். அதிலும், ஒரு ஆளுயர அண்டாவுக்குள்ளே இருந்தவாறே தலையை மட்டும் வெளியே நீட்டியபடி அமர்ந்து கொண்டு கபில் சிபல் புன்னகை புரிகிற புகைப்படம் கண்ணைக்கவர்கிறது. காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் இருப்பதால், அந்த அண்டாவுக்குள்ளே கண்டிப்பாக ஒரு முழுப்பூசணிக்காய் நிச்சயமாய் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிற யுக்தி இதுவரை எந்த் எழுத்தாளராலும் பின்பற்றப்படாதது என்பது வியப்பு மேலிடும் தகவல்.

இறுதியாக, "இந்தப் புத்தகத்துக்கும் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கும் யாதோரு தொடர்புமில்லை," என்று முத்தாய்ப்பாக ஆசிரியர் குறிப்பிடுகிறபோது, விழுந்து விழுந்து சிரித்ததில் எனது விலா எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. ஆனாலும், ஒரு மனிதருக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு ஆகவே ஆகாது!

மொத்தத்தில், இந்தப் புத்தகம் பூசணிக்காய் விரும்பிகள் அவசியம் விரும்பி வாங்கிப்படிக்க வேண்டியதொரு அரிய பொக்கிஷமாகும். தமிழகத்தில் பொதுத்தேர்தல் வருகிற இந்த சமயத்தில் இதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட டுபாக்கூர் பதிப்பகத்தின் சமயோசிதமான சேவை பாராட்டத்தக்கது.

எளிய மொழியில், எல்லா ஊழல்களும் பூசணிக்காய்கள், எல்லா அறிக்கைகளும் சோறு, எல்லா அமைச்சகங்களும் அண்டாக்கள் என்று வெளிப்படையாகச் சொல்லியிருப்பதோடு, சோறு வடிக்கப் பயன்படும் அடுப்பு அரசியல் என்பதையும், அடுப்பு எரிக்கப் பயன்படுகிற விறகுகள் பொதுமக்கள் என்பதையும் குறிப்பாலுணர்த்தியிருக்கிற ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மலிவு விலைப்பதிப்பாக இதை வெளியிட்ட டுபாக்கூர் பதிப்பகத்துக்கு எனது நன்றிகள்.

புத்தக விபரம்:

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி?
ஆசிரியர்: கபில் சிபல், மொழிபெயர்ப்பு: நொள்ளக்கண்ணன்
வெளியீடு: டுபாக்கூர் பதிப்பகம்
420, குப்புறப்படுத்தான் தெரு,
கேனயம்பாக்கம்
சென்னை-600420
விலை: ரூ.1.76 பைசா

Sunday, January 16, 2011

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

சினிமா விரும்பிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாமா? செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் பழையது முதல் புதியது வரை, பல்வேறு மொழிகளில் படங்களைப் பார்க்கிற வாய்ப்பு; பிறர் சொல்லக் கேட்டு, விசாரித்து வாங்கிவந்து வீட்டிலேயே டி.வி.டியில் பல படங்களைப் பார்க்கிற வசதி. இதுவும் போக, உபரி சவுகரியமாக, இருபது ரூபாய்க்கு திருட்டு டிவிடிக்கள் வேறு! அப்புறம் இருக்கவே இருக்கிறது இணையதளங்கள், டோரண்டுகள்!

ஆனால், இவற்றில் சரிபாதி வசதிகளும் இல்லாத காலத்தில் வெளிவந்த பல படங்களும், அந்தப் படங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் படைத்த வரலாறுகளும், அதன் நாயகர்களும் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடாமல் நம்மோடு அவ்வப்போது உரசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. அதில் நமக்கு மிகவும் அன்னியோன்னியமானவர் ஒருவர் உண்டேன்றால், அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று தைரியமாகச் சொல்லலாம்.

நேர்மறையான ஆற்றல் (Positive Energy) என்ற உந்துசக்தியை நமக்குள் உருவாக்க பலவழிகள் கூறப்பட்டுள்ளன:

தியானம் செய்; சகமனிதனை மதித்துவாழ்; தளைகளை அறுத்தெறி; நல்லதையே பார்; அமைதியை விரும்பு; கவலை தவிர்...இன்னும் எத்தனையோ? இது குறித்துத் தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்? என்னென்ன வியாக்கியானங்கள்? பலருக்கு இவை புரியாமல், கைக்கெட்டாமல் இருக்கலாம். ஆனால், இவற்றிற்கு எல்லாரும் அறிந்த ஒரு உதாரணத்தை சட்டென்று சொல்வதென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் என்று துணிந்து அடித்துக் கூறிவிடலாம்.

"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை-அவர்
கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்."

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய அனுபவத்தினைப் பெறுவதற்காக, நண்பர்கள் சிலருடன் "எங்க வீட்டுப் பிள்ளை,’ திரைப்படத்தை அரங்கினில் சென்று பார்த்த நாளை மறக்க முடியவில்லை. படம் முடிந்துவந்த போது அரங்கினிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.அபிமானிகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? சற்றே சீர்தூக்கிப் பார்த்தால், ’நாடகத்தனமான வசனங்கள், அதிகப்படியான ஒப்பனை, செயற்கையான காட்சியமைப்புகள், பொருத்தமில்லாத உடையலங்காரங்கள்,’ என எத்தனையோ நெருடல்கள் இருந்தபோதிலும், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் இன்னும் பெரும்பாலானோர் மக்களின் மனதில் பசுமையாய் இருப்பதற்கு காரணம் என்ன? தொழில்நுட்பத்தின் அடிப்படை வசதிகள் கூட கால் ஊன்றியிராத அந்தப் படங்களில் தென்பட்ட அதே குறைகள் இன்றும், இந்த அதிநவீன யுவசினிமா காலத்திலும் தொடர்கிறது எனும்போது, அவை மட்டும் ஒரு சாராரால் எள்ளப்படுவது ஏன்?

அதன் பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களை மோஸர் பேயரின் புண்ணியத்தால் நேரம் கிடைத்தபோதெல்லாம் பார்க்க நேர்ந்தது. மதுரை வீரன், மன்னாதி மன்னன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி..இன்னும் பல.....!

திரைத்துறையில் பணிபுரியும் சிலரோடு எம்.ஜி.ஆர் படங்கள் குறித்து பலமுறை உரையாடியபோதெல்லாம், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. மேற்கத்திய பாணியில் வசனங்களைக் குறைத்து, கேமிராவின் உபயோகத்தை அதிகமாக்கிப் படங்களை எடுத்த ஸ்ரீதர்; புராண இதிகாசங்களின் அடிப்படையில் பல படங்களைத் தயாரித்து இயக்கிய ஏ.பி.நாகராஜன்; பெரிய நட்சத்திரங்கள், நிறைய பாடல்கள், கணிசமான கண்ணைக் கசக்கவைக்கும் உருக்கமான காட்சிகளோடு படங்களை இயக்கிய ஏ.பீம்சிங்; பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஜெமினி எஸ்.எஸ்.வாசன்; அதிரடி படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ்...என்று பல்வேறு விதமான திரைப்படங்களை எடுத்தவர்களும் எம்.ஜி.ஆருடன் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

அண்மையில் புத்தகக்கண்காட்சியில் தமிழ்த்திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது, எம்.ஜி.ஆர் குறித்து பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. இது தவிர, எம்.ஜி.ஆர் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களையும் பார்வையிட நேரிட்டது.

’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.

எம்.ஜி.ஆர் பல விதங்களில் இன்று முன்னோடி! திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி - அவர் அடைந்த வெற்றி இன்றளவிலும் மலைப்புடன் வியந்து நோக்கப்படுகின்றது. பலருக்கு அவர் லட்சிய புருஷனாகவும், சிலருக்கு வியாபார தந்திரமாகவும், இன்னும் சிலருக்கு கேடயமாகவும் இன்னும் இருப்பது தான் காலங்கடந்தும் நிலைத்திருக்கிற அவரது புகழின் அடையாளங்கள்!

’அவரு ஒருத்தருக்குத்தான்யா படம் பார்க்க வர்றவங்களோட பல்ஸு தெரிஞ்சிருந்தது,’ என்று ஒற்றை வாக்கியத்தில் ஒரு திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர் கூறியபோது, அது சத்தியம் என்று விளங்கியது.

அவரது பாடல்களில் இழையோடிய கருத்துக்கள்; நேர்மறையான சிந்தனை; சமூக அக்கறை; கிஞ்சித்தும் தவறான முன்னோடிகளை உருவாக்கி விடாமலிருப்பதற்காக அவர் மேற்கொண்ட எச்சரிக்கை - இவற்றில் ஒரு குந்துமணியளவு இன்றைக்கு "நாளைய முதல்வர்" என்று சுவரொட்டி அடித்துக் கொள்கிற அல்பங்களுக்கு இருந்தால், இன்னேரம் தமிழகத்தின் திரையுலகமும், அரசியலும் ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்தித்திருக்கக் கூடும்.

எம்.ஜி.ஆரைப் பற்றி ஆய்வு செய்கிற பொறுமையோ, அவர் குறித்த தகவல்களைத் தொகுத்தளிக்கிற முயற்சியோ இல்லாதுபோனாலும், இன்றும் வரலாறாய், ஏழை எளிய மக்களின் மன அரியணையில் வீற்றிருக்கும் அந்த யுகபுருஷனை, அவரது பிறந்தநாளன்று வணங்குகிறேன்.

இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்சொல்ல வேண்டும்!
இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!

வாத்தியார் வாத்தியார் தான்!

Friday, January 14, 2011

காணாப் பொங்கல்!

அது ஒரு கனாக்காலம்!

பொங்கல் நெருங்க நெருங்க, தினசரி தபால்காரர் கொண்டுவரும் வண்ண வண்ண வாழ்த்துக்களை வாங்கி, அச்சிடப்பட்ட எழுத்துகளுக்குக் கீழே உருட்டி உருட்டியெழுதப்பட்டிருக்கிற வாசகங்களில், எழுதி அனுப்புபவர்களின் முகத்தைக் கற்பனையாய்த் தேடிப்பார்த்து ரசித்து, சில சமயங்களில் கண்ணோரங்களில் ஈரம் கோர்த்த காலம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய், அனுப்புகிறவர்களின் அன்பின் அளபீடுகளாய், சில சமயங்களில் அவர்களது கையிருப்பை மறைமுகமாய் உணர்த்துகிற அடையாளச்சின்னங்களாய், வருடினால் அவர்கள் கையொப்பமிட்ட விரல்களின் ஸ்பரிசத்தை உணரவைத்த காலம்.

சில சமயங்களில் எவரது வாழ்த்துக்களையோ வாங்கியதும், மனதுக்குள் குற்ற உணர்ச்சி முள்ளாகித் தைத்ததுண்டு. அடடா, இவ்வாண்டு இவனுக்கோ அல்லது இவளுக்கோ வாழ்த்து அனுப்ப மறந்து விட்டோமே?

சில சமயங்களில் இந்த வாழ்த்துக்கள், இறுக்கமான உறவுகளின் புழுக்கத்தைத் தணிக்கிற இதமான காற்றாகவும், சில சமயங்களில் இவை காதல் கடிதங்களுக்கு ஒரு முன்னேற்பாடாகவும், சில சமயங்களில் மறைமுகமான மன்னிப்புக் கோரிக்கைகளாகவும், சில சமயங்களில் இவை புதைபட்டுக் கிடக்கிற கசப்பான அனுபவங்களை அகழ்ந்தெடுக்கிற ஆயுதங்களாகவும் இருந்ததுண்டு.

ஒவ்வொரு ஆண்டும், இன்னாருக்கெல்லாம் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுவதும், ஆற அமர ஒரு பட்டியலிடுவதும், கடைத்தெருவில் தொங்குகிற வாழ்த்துக்களைக் காணும்போதெல்லாம் அந்தப் பட்டியலை மனக்கண்ணால் சரிபார்த்து, அதில் சில பெயர்களைக் கோர்த்தும் நீக்கியும், இறுதிப்பட்டியல் தயாராகும் வரையில் நாட்கணக்காக தயார்ப்படுத்திக் கொண்டேயிருந்ததுமுண்டு.

ஒவ்வொருவரது ரசனைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றையும் மனதில்கொண்டுதான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.

விரித்தால் மொட்டு மலர்வது போல விரியும் தாமரை போலிருக்கிற வாழ்த்துகள்...

ஓரங்களில் சரிகைத்தூள் ஒட்டிய வாழ்த்துகள்...

தெய்வங்கள், தலைவர்கள், நடிக நடிகையர், கேலிச்சித்திரங்கள், மிருகங்கள், பறவைகள், இயற்கைக்காட்சிகள் என்று ஒவ்வொருவருக்கென்றும் ஒவ்வொரு வாழ்த்து வாங்கிவந்து, இதற்கென்று நேரத்தை ஒதுக்கி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் இரண்டுவரிகளேனும் எழுதி அனுப்பியதுண்டு.

அதே போல,

வருகிற ஒவ்வொரு வாழ்த்தையும், கிளிஞ்சல்களைச் சேகரிக்கிற குழந்தையைப் போல பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதும், இடம்பெயரும்போதெல்லாம் அவற்றைச் சுமையாகக் கருதாமல் உடனெடுத்துச் செல்வதும், எப்போதாகிலும் எவருடனேனும் கருத்து வேற்றுமை ஏற்படுகிறபோது, மூண்டெழுகிற சினத்தை அவர்கள் அனுப்பிய வாழ்த்துகளைக் கிழித்து வெளிப்படுத்துவதும்...இவையெல்லாமே அந்தக் கனாக்காலத்தோடு பின்னிப்பிணைந்த ஞாபகச்சித்திரங்களாய் இருந்து வந்திருக்கின்றன.

ஆனால், சேகரித்து வைத்த இந்த வாழ்த்துகளை ஒன்றாய்ப் பரப்பி அழகுபார்க்கையில், வாழ்க்கையில் எத்தனை நட்புகளை ஈட்டியிருக்கிறோம், எத்தனை இதயங்களிலிருந்து நமக்கென்று சில மணித்துளிகளை இரவல் வாங்கியிருக்கிறோம் என்றெல்லாம் வரவுசெலவுக்கணக்குப் போட்டு மலைத்துப்போகிறோமா இல்லையா?

இப்போதெல்லாம் பொங்கல் வாழ்த்துகள் ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டன. மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் இரண்டொரு வார்த்தைகளில் வாழ்த்துச் சொல்கிற சம்பிரதாயத்தை மிகவும் எளிதாக்கி விட்டு விடுகின்றன.

இப்போது கடைகடையாய் ஏறி வாழ்த்துகளைத் தேர்ந்தெடுத்து, வகைப்படுத்தி, கையொப்பமிட்டு, அஞ்சல்தலையொட்டி அனுப்புமளவுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. அப்படியெல்லாம் எப்போதோ இருந்திருக்கிறோம் என்பதற்கு அடையாளமாய், ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு பழைய பெட்டியில், வந்து சேர்ந்த வாழ்த்துக்களெல்லாவற்றையும் ஒரு பைக்குள் திணித்து பத்திரமாய் வைத்திருக்கிறோம்.

அவைகள் அப்படியே இருக்கட்டும். இன்னும் நாம் அன்புகொடுத்து அன்புவாங்கி வாழ நினைக்கிறவர்கள் என்பதற்கு இருக்கிற ஆதாரங்கள் அவை.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! :-)

Thursday, January 13, 2011

தீயவனே, திரும்பிப்பார்!

டிவியில் ஒரு கொடுந்தொடர், அதாவது நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

"ஏண்டா, உன்னைப் பத்துமாசம் சுமந்து பெத்து வளர்த்த தாயைப் பார்த்தா இப்படிக் கேட்குறே? இதைக் கேட்டுக்கிட்டு நான் இன்னும் உசிரோட இருக்கேனே, அதைத்தாண்டா என்னாலே தாங்க முடியலே!"

என்னாலேயும் தான் தாங்க முடியலே! இந்த டிவி சீரியல் அம்மாக்களெல்லாம் ஏன் எல்லா சேனலிலும் ஒரே வசனத்தைச் சொல்றீங்க? எடு ரிமோட்டை; மாத்து சேனலை...!

"இந்த எந்திரத்தை உங்கவீட்டு பாத்ரூமிலே புதைச்சீங்கன்னா, சரியா பதினோராவது நாளிலே பல அற்புதங்கள் நடக்கும்! இதே பாத்ரூமிலே உங்க மாமியார் வழுக்கி விழுந்து மண்டையைப் போட்டிருவாங்க!"

சே, அமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..!

"நான் மறத்தமிளன். தமிளுக்கு ஒரு கலங்கம்வந்தா அதை சுக்குநூறா உடைக்கிற கள்ளாயிடுவேன் நான்!"

அமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..!

"ஹலோ, குட்மார்னிங்! திஸ் இஸ் டார்ட்டாய்ஸ் மஸ்க்கிட்டோ காயில் டமில் சாங்க்ஸ்!"

அமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..!

"ஆஜ் சன்சத் மே விபக்சி தலோன்னே டூ ஜீ ஸ்பெக்ட்ரம் மாம்லே கோ லேக்கர் ஹங்காமா கடா கர்தியா!"

சே! ஒண்ணுக்கு நூறு சேனல் இருக்கு! ஒண்ணிலே கூட ஒரு உருப்படியான புரோகிராம் இல்லையே! இதுக்குத்தான் நாம சேட்டை டிவின்னு ஆரம்பிச்சா, கூர்க்காவுக்கே முதல்மாசம் சம்பளம் கொடுக்க முடியாம இழுத்துப் பூட்ட வேண்டியதாயிருச்சு! இவனுங்கெல்லாம் டிவியா நடத்துறாங்க? கொடுமை! எனக்கு வர்ற கோபத்துக்கு இந்த ரிமோட்டை.....

"ஐயோ....அம்மா...!"

உரத்த கூச்சலைத் தொடர்ந்து, தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட, சடைமுடியுடன் ’நான் கடவுள்’ ஆர்யாவைப் போல ஒருவர் வெளிப்பட்டார். ஐயையோ, நான் வீசியெறிஞ்ச ரிமோட்டு இந்த சாமியார் மண்டையிலே பட்டு, இரத்தமாக் கொட்டுதே? டிவி ரிமோட் பட்டா மண்டையிலிருந்து இரத்தம் வருமா? ஏன் வராது, டிவியை சும்மா பார்த்தாலே சிலவாட்டி கண்ணுலேருந்து இரத்தம் கொட்டுதே!

"இந்த சடாதாரி முனிவனை இரத்தம் சிந்த வைத்த அடாதசெயலைச் செய்தவன் எவன்?"

"சாமீ, தெரியாமப் பண்ணிட்டேன் சாமி! சாபம்கீபம் போட்டுராதீங்க! ஏற்கனவே நாளைக்கு ஒருத்தன் இளைஞன் படத்துக்கு வந்தே ஆகணுமுன்னு பயமுறுத்தியிருக்கான். இதுக்கு மேலே கஷ்டம் வந்தா என்னாலே தாங்க முடியாது சாமீ!"

"அற்பமானிடனே! ரிமோட்டாயுதம் கொண்டு இந்த ரிஷியின் மண்டையை ரிப்பேர் ஆக்கி விட்டாயே? பிடி சாபம்! இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் தூரதர்ஷன் தவிர வேறு சேனல்களே இல்லாத குக்கிராமத்துக்கு உன்னை கம்பல்ஸரி டிரான்ஸ்ஃபர் செய்யக்கடவது!"

"ஐயோ சாமீ!" என்று நெடுஞ்சாண்கிடையாக அவரது காலில் விழுந்தேன். "அவசரப்பட்டு சாபம் போட்டுட்டீங்களே? தயவு செய்து வாபஸ் வாங்கிக்குங்க! ஒரு சேனலிலே கூட நல்ல புரோகிராம் இல்லியேன்னு கோபப்பட்டு இப்படிப் பண்ணிப்புட்டேன்."

"புகாரி ஹோட்டல் பல்குத்தும் குச்சியைப் போலிருந்து கொண்டு உனக்கு இத்தனை கொழுப்பா? தீயவனே, திரும்பிப் பார்! முன்னொரு காலத்தில், உன் கிராமத்து வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில்லாதபோது, அடுத்த வீட்டு டிவியை ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்ததை மறந்து விட்டாயா?" சாமியார் உறுமினார்.

"எப்படி மறக்க முடியும் சாமீ? நான் தூரதர்ஷனிலே ஷோபனா ரவி நியூஸ் வாசிக்கிறதை ஒளிஞ்சிருந்து பார்த்ததை, அந்த வீட்டு அம்மா தப்பா நினைச்சு அவங்க வீட்டுக்காரர் கிட்டே போட்டுக்கொடுத்து, அவரு என்னைத் தெருவிலே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே சாமீ?" நான் கதறினேன்.

"அதுமட்டுமா? பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது, அவர்களது கூந்தல் உண்மையிலேயே இத்தனை நீளமா அல்லது சவுரியா என்று சரிபார்க்க, நீ டிவிக்குப் பின்னால் போய்ப் பார்த்தாயே ஞாபகமிருக்கிறதா?"

"ஆமா சாமீ! எல்லாத்தையும் விக்கி லீக்ஸ் மாதிரி கரெக்டா சொல்றீங்களே?"

"விம்பிள்டன் போட்டியில் ஷரபோவா விளையாடுவதைப் பார்க்க அனுமதிப்பதற்காக, அடுத்த வீட்டு அம்மணியைக் காக்காய் பிடிக்க, ஐந்து மணிநேரம் ரேஷன் கடை வரிசையில் நின்று மண்ணெண்ணை வாங்கிக்கொடுத்தாயே?"

"சாமீ, உங்க ஞானதிருஷ்டியிலே ஏதோ ஃபால்ட்டு இருக்கு! அது ஷரபோவா இல்லை! மோனிகா செலஸ்!"

"ஏதோ ஒன்று! உனக்கு நினைவிருக்கிறதா, உன் வீட்டில் தொலைக்காட்சி வந்த அன்று என்ன நடந்தது?"

"ஞாபகமிருக்குது சாமி! பழைய படத்துலே கொலை சீன்லே வர்றா மாதிரி ஜோன்னு மழை கொட்டிச்சு! டிவி ஷோரூமிலேருந்து வந்தவங்க, ஆன்டனாவை மழை பெய்யும்போது வைக்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க! ஏதோ ஒரு ரோஷத்துலே நானே ஆன்டனாவை வைக்கிறேன்னு சொல்லிட்டு கூரை மேலே ஏறிட்டேன். ஆனா, கீழே இறங்கத்தெரியாம நான் ’ஓ’ன்னு அழ, மொத்த கிராமமே கீழேயிருந்து பார்த்திட்டிருந்திச்சு சாமீ! கடைசியிலே ஃபயர் சர்வீஸ்காரங்களுக்கு போன் பண்ணி வரவழைச்சுத்தான் என்னைக் கீழே இறக்கினாங்க!"

"அத்தோடு விட்டாயா? மீண்டும் ஒருமுறை அதே தவறைச்செய்தாயே?"

"ஆமாம் சாமீ, இன்னொரு ஆண்டனாவை உசரத்திலே கட்டுனா, ஸ்ரீலங்கா டிவி தெரியுமுன்னு சொன்னாங்கன்னு துணிஞ்சு ஏறிட்டேன். நான் ஏறின உசரத்துலேருந்து பார்த்தா எனக்கு ஸ்ரீலங்காவே தெரிஞ்சுது. ஆனா, டிவியிலே தான் ஸ்ரீலங்கா டிவி தெரியவேயில்லை!"

"உம்! கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்த பொடிப்பசங்களிடம் தலைக்கு நாலணா வசூல் செய்தாயே? அத்துடன் விட்டாயா? உனது டிக்கெட்டை நீயே பிளாக்கில் விற்றாயே?"

நான் என்ன பதில் சொல்ல? நீரா ராடியா போல விழித்துக்கொண்டு நின்றிருந்தேன்.

"நீ இன்னும் சில நாட்கள் மீண்டும் தூரதர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கடவாயாக!"

"சாமீ சாமீ! எனக்கு விமோசனமே இல்லையா?"

"இருக்கிறது. என்றைக்கு தூரதர்ஷன் தில்லி செய்தி வாசிப்பாளர் சல்மா சுல்தானா ரிட்டயர் ஆகிறார்களோ, அன்றே நீ மீண்டும் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி விடுவாய்!"

"சாமீ, இது நடக்குற காரியமா? தீர்ப்பை மாத்துங்க...ப்ளீஸ்! தினத்தந்தியிலே கன்னித்தீவு கூட முடிஞ்சிரும். ஆனா, சல்மா சுல்தானா ரிட்டயர் ஆகுறது இந்த ஜென்மத்துலே நடக்காது சாமீ! போகாதீங்க சாமீ! ப்ளீஸ்! ப்ளீஸ்! இரக்கம் காட்டுங்க சாமீ!"

இறைவா! பரம்பொருளே! ஞானப்பண்டிதா! எனக்கு விமோசனமே இல்லையா?


அருமை "சினேகிதன்" அக்பர் "டிவியும், டிரை சைக்கிளும் பின்னே நானும் (தொடர்பதிவு)" என்று ஒரு இடுகை போட்டு, என்னையும் தொடரச் சொல்லியிருந்தார். நான் எழுதிவிட்டேன். இதை யார் தொடர வேண்டும் என்று விரும்பினாலும், தொடரலாம். அப்படித் தொடராதவர்கள் வீட்டுக்கு இந்த இடுகையில் வந்த சாமியாரை அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை! :-)

Tuesday, January 11, 2011

பணவீக்கமா? யார் சொன்னது??

இடம்: புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீடு

பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிரிக்கெட் துறை, மன்னிக்கவும், உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அஹுலுவாலியா ஆகியோர் ஐ.பி.எல்லில் விலைபோகாத கிரிக்கெட் வீரர்கள் போல சோகமாக உட்கார்ந்திருக்கின்றனர்.

பிரதமர்: எல்லாரும் வந்திட்டீங்களா? மீட்டிங் ஆரம்பிக்கலாமா?

சரத் பவார்: சார், டாஸ் போட வேண்டாமா?

பிரதமர்: ஹலோ, இது கேபினெட் மீட்டிங்! மறந்திட்டீங்களா? எல்லாரும் அவங்கவங்க செல்போனை சுவிட்ச்-ஆஃப் பண்ணுங்க!

ப.சிதம்பரம்: சார் சார், தெலுங்கானா கலவரம் ரன்னிங் கமெண்டரி வரும்.நான் மட்டும் செல்போனை ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

பிரணாப் முகர்ஜீ: சார் சார், கொல்கத்தாவுலே புத்ததேவ் பட்டாச்சாரியா ஏதாவது ஸ்டேட்மெண்ட் விடுவாருன்னு தோணுது.. நானும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

சரத் பவார்: சார், இன்னிக்கு கிரிக்கெட் சூதாட்ட விசயமா ஐ.சி.சி. தீர்ப்பு சொல்லப்போறாங்க! நானும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

பிரதமர்: சரியாப் போச்சு! அப்படீன்னா என்னோட போனையும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

அஹ்லுவாலியா: நீங்களே பல வருசமா ஸைலண்ட் மோட்-லே தானேயிருக்கீங்க! மீட்டிங்கை ஆரம்பிங்க சார்!

பிரதமர்: சரி, மிஸ்டர் பவார்! என்னது விலைவாசியெல்லாம் இப்படி சகட்டு மேனிக்கு ஏறியிருக்குது!

சரத் பவார்: ஆமா சார்! கௌதம் கம்பீருக்கே 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்துத்தான் வாங்கினோம். இந்த நியூசீலாந்துலே நேதன் மெக்கல்லமுன்னு ஒரு கிளிமூக்கன், அந்தாளுக்கே ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் கொடுக்க வேண்டியதாப்போச்சு!

பிரதமர்: ஐயா சாமீ பவார்! இந்த எளவெடுத்த கிரிக்கெட்டைப் பத்தி எவன்யா கேட்டான்? நீங்க உணவு அமைச்சர் தானே? விலைவாசியெல்லாம் இப்படி ஏறியிருக்குதே? இதுக்கு என்ன பண்ணினீங்க?

சரத் பவார்: என்ன சார் நீங்க? சோனியா காந்தி மேடமே விலைவாசியைக் குறைக்கிறதெல்லாம் மாநில அரசோட வேலைன்னு சொல்லிட்டாங்க. நீங்க புதுசாக் கேக்கறீங்களே?

பிரதமர்: மேடமே அப்படிச் சொல்லிட்டாங்களா? இதை முதல்லேயே சொல்லியிருந்தா இப்படியொரு மீட்டிங்கே போட்டிருக்க வேண்டாமில்லே? எத்தனை பிளேட் சமோசா வேஸ்டு? எல்லாம் மக்களோட வரிப்பணமில்லையா?

ப.சிதம்பரம்: பேசாம விலைவாசியைக் கட்டுப்படுத்தியே தீரணும்னு எல்லா முதலமைச்சர்களுக்கும் ஒரு லெட்டர் போட்டிரலாம். அவங்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாலே அதை எல்லா டி.வி.சேனலுக்கும் கொடுத்திருவோம். அப்பத்தான் நம்மளை விரைந்து செயல்படுற அரசுன்னு சொல்லுவாங்க!

பிரணாப் முகர்ஜீ: மிஸ்டர் சிதம்பரம்! மத்தவங்க பதில் போடாட்டிக் கூட பரவாயில்லை! ஆனா, புத்ததேவ் பட்டாச்சார்யா கண்டிப்பா பதில் எழுதியே ஆகணுமுன்னு சொல்லுங்க!

ப.சிதம்பரம்: ஏற்கனவே மம்தா பேனர்ஜீ சொல்லிட்டாங்க! அதுனாலே, லெட்டர் எழுதறதுக்கு முன்னாடியே ஏன் பதில் போடலேன்னு முதல்லேயே கேட்டு லெட்டர் போட்டுட்டேன்.

பிரதமர்: யாருய்யா குறட்டை விடுறது? மிஸ்டர் மான்டெக் சிங்! எழுந்திருங்க!

அஹ்லுவாலியா: இன்ஃப்ளேஷன்...க்ராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்....மைக்ரோ எகணாமிக்ஸ்..மேக்ரோ எகணாமிக்ஸ்..ஹிஸ்டரி..ஜ்யாகிரபி...நாண்டீட்டைல்ட்....!

பிரணாப் முகர்ஜீ: ஹலோ, நாங்கெல்லாம் இருக்கும்போது நீங்கல்லாம் ஓவர்-ஆக்டிங் பண்ணப்படாது.

பிரதமர்: மிஸ்டர் பவார், உங்க டிப்பார்ட்மென்டு தான் பெரிய தலைவலியா இருக்குது! போன வருசம் என்னான்னா, கோதுமையை வைக்க இடமில்லாம ரோட்டுலே கொட்டி மக்கிப்போச்சு! இந்த வருசமாவது இடத்தையெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?

சரத் பவார்: ஆமா சார், பூனேயிலே பாதியை எங்க கட்சி ஆளுங்க வளைச்சுப்போட்டுட்டாங்க!

பிரதமர்: அதை யாரு கேட்டாங்க? நான் சொல்லுறது கோடவுன் பத்தி!

சரத் பவார்: உங்களுக்கு விஷயமே தெரியாதா சார்? எங்க ஊருலே மொத்த வெங்காயத்தையும் பதுக்கி வைக்கிற அளவுக்கு அத்தனை கோடவுன் இருக்குது சார்!

பிரணாப் முகர்ஜீ: ஆமா சார், நாங்க கூட வருமானவரிக்காரங்களை அனுப்பி வெங்காய மண்டியிலே ரெய்டெல்லாம் பண்ணினோம். அடுத்த வாரம் தக்காளி ரெய்டு, அதுக்கடுத்த வாரம் வெண்டைக்காய் ரெய்டு, அதுக்கடுத்த வாரம் முள்ளங்கி ரெய்டு...இப்படி வாரா வாரம் ரெய்டு மேலே ரெய்டு பண்ணினா விலைவாசி குறைஞ்சிடும் சார்!

ப.சிதம்பரம்: உங்களுக்கு ஆளு பத்தலேன்னா சொல்லுங்க! எங்க சி.பி.ஐ. கூட ரெண்டு நாளா சும்மாத்தானிருக்காங்க! பேச்சுத்துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

சரத் பவார்: அதெல்லாம் விடுங்க சார்! ஜனங்களோட கவனத்தைத் திசைதிருப்ப நான் ஒரு சூப்பர் ஐடியா வச்சிருக்கேன். ஐ.பி.எல் மாதிரியே வி.பி.எல், அதாவது வெஜிடபிள் ப்ரீமியர் லீக்-னு ஒண்ணு ஆரம்பிக்கப்போறோம். அதுலே சென்னை கேபேஜ், டெல்லி டிரம்ஸ்டிக்ஸ், கொல்கத்தா கோரியாண்டர் லீவ்ஸ், பேங்களூர் பிரிஞ்சால்ஸ், கொச்சி கோக்கனட்ஸ்-னு நிறைய டீம் உருவாக்கி, இன்னும் நிறைய கிரிக்கெட் ப்ளேயருங்களை ஏலத்துலே எடுத்து அட்டகாசமா ஒரு டூர்ணமண்ட் நடத்தினாப்போதும். ஜனங்க எல்லாத்தையும் மறந்திருவாங்க!

பிரதமர்: இப்படியே பேசிட்டிருங்க! பாகிஸ்தானிலேருந்து வெங்காயம் வர ஏன் இவ்வளவு லேட்டு? பால் தாக்கரே கூட ஒண்ணும் சொல்லலியே? என்ன பிரச்சினை? மக்களுக்கு என்ன சொல்லப்போறீங்க?

ப.சிதம்பரம்: நான் வேண்ணா, வெங்காயத்துக்குப் பதிலா பாகிஸ்தான் வெங்காய வெடி அனுப்பிட்டாங்கன்னு ஒரு அறிக்கை விடட்டுமா?

அஹ்லுவாலியா: சார், எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!

பிரதமர்: தூங்குவீங்கய்யா தூங்குவீங்க! அடுத்தவாட்டி உங்களை பிரதமராக்க சொல்றேன். அப்புறம் எப்படிப் பொருளாதாரம் பேசுறீங்கன்னு பார்க்கிறேன்.

ப.சிதம்பரம்: சார், புத்ததேவ் பட்டாச்சார்யா தில்லிக்கு வரமுடியாதுன்னு எஸ்.எம்.எஸ்.அனுப்பியிருக்காரு! நான் உடனே போயி அடுத்த லெட்டர் எழுதணும். (போகிறார்)

பிரதமர்: மிஸ்டர் பவார்! ஏதாவது நல்ல செய்தியா சொல்லுங்க! எப்படி விலைவாசியைக் கட்டுப்படுத்தப்போறீங்க? எதிர்க்கட்சிக்காரங்க ரொம்ப கூச்சல் போடுறாங்களே?

சரத் பவார்: ஏன் கூச்சல் போடுறாங்க? விலைவாசியெல்லாம் அப்படியொண்ணும் ஏறலே தெரியுமா? சொல்றேன் கேளுங்க...! ஒரு டீயோட விலை ஒரு ரூபாய்!

பிரதமர்: நெஜமாவா?

பிரணாப் முகர்ஜீ: ஆமா சார், ஒரு சூப் அஞ்சரை ரூபாய். ஒரு சைவச் சாப்பாடு பன்னிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா! அசைவச் சாப்பாடு இருபத்திரெண்டு ரூபாய்!

பிரதமர்: என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே? உண்மையாவா?

சரத் பவார்: அட ஆமா சார், தயிர் சாதம் பதினோரு ரூபாய், கலந்த சாதம் எட்டு ரூபாய், சிக்கன் பிரியாணி முப்பத்தி நாலு ரூபாய். மீன்கறி சோறு பதிமூணு ரூபாய்!

பிரதமர்: மான்டெக் சிங் ஜீ! இவங்க சொல்றது உண்மையா?

அஹ்லுவாலியா: ஆமா சார்!

சரத் பவார்: தக்காளி சாதம் ஏழு ரூபாய்.

பிரணாப் முகர்ஜீ: மீன் வறுவல் பதினேழு ரூபாய்

சரத் பவார்: கோழி வறுவல் இருபது ரூபாய் ஐம்பது பைசா

பிரணாப் முகர்ஜீ: கோழி மசாலா இருபத்தி நாலு ரூபாய் ஐம்பது பைசா!

சரத் பவார்: சப்பாத்தி ஒரு ரூபாய்!

பிரணாப் முகர்ஜீ: அரிசிச்சோறு ரெண்டு ரூபாய்!

பிரதமர்: யோவ், என்னய்யா ஆச்சு உங்களுக்கு? நல்லாத்தானே இருந்தீங்க??

அஹ்லுவாலியா:தோசை நாலு ரூபாய், பாயாசம் அஞ்சு ரூபாய் ஐம்பது பைசா!

பிரதமர்: நீங்களுமா சர்தார்ஜீ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அஹ்லுவாலியா: சார், அவங்க சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை. உண்மையிலே இதுக்கெல்லாம் இவ்வளவு தான் விலை!

சரத் பவார்: சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே? இப்போ திருப்தியா? அப்படீன்னா நான் லண்டனுக்குக் கிளம்பறேன். கிரிக்கெட் வர்ல்டு கப்பு வருது. தலைக்கு மேலே வேலையிருக்கு! (கிளம்புகிறார்!)

பிரணாப் முகர்ஜீ: நானும் கிளம்பறேன் சார், பட்ஜெட் வேலை இருக்கு. நிறைய டூப்பு விடணும். ஒரு வாட்டி மெட்ராஸ் போயிட்டு வந்தாத்தான் செட் ஆகும். வரட்டுமா? (கிளம்புகிறார்)

பிரதமர்: சே, சப்பாத்தி ஒரு ரூபாயா? இவ்வளவு மலிவா கிடைக்கும்போது ஏன்யா எதிர்க்கட்சிக்காரங்க இப்படிக் குதிக்கிறாங்க?

அஹ்லுவாலியா: கிடைக்குறது என்னவோ உண்மைதான். எங்கேன்னு கேக்கலியே நீங்க?

பிரதமர்: எங்கே?

அஹ்லுவாலியா: பாராளுமன்ற கேன்டீன்-லே, மாசம் எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நம்ம எம்.பிக்களுக்குத் தான் இதெல்லாம் இந்த விலையிலே கிடைக்குது.

பிரதமர்: ஐயையோ! போனவங்களையெல்லாம் திருப்பிக் கூப்பிடுங்கய்யா! மீட்டிங் இன்னும் முடியலே...ஹலோ, நீங்க எங்கே போறீங்க? ஹலோ..ஹலோ....

செய்தி: விலைவாசி, பண வீக்கம் உயர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

Monday, January 10, 2011

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...!

09-01-2011

நீங்கள் அசந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது, அதுவும் அதிகாலையில், அர்த்தராத்திரியில் அடுத்தவீட்டு முருங்கைமரத்தை உலுக்குவது போல உலுக்கினால் எப்படியிருக்கும்? இன்று எனக்கும் அப்படித்தான் எரிச்சல் ஏற்பட்டது.

"ஏண்டா உசிரை எடுக்கறீங்க? ஞாயித்துக்கிழமையும் அதுவுமா ஏண்டா காலங்கார்த்தாலே பதினோரு மணிக்கே எழுப்பறீங்க?"

"டேய், நீதானேடா புத்தகக்கண்காட்சிக்குப் போகணும்! காலையிலே பத்தரை மணிக்கே அலாரம் வைக்கச் சொன்னே?"

அட ஆமாம்! புத்தகம் வாங்குறோமோ இல்லையோ, புத்தகக்கண்காட்சி பற்றி ஒரு இடுகை கூட எழுதலேன்னா, நாளைக்கு நாலு பேரு நாக்கு மேலே பல்லுப்போட்டு கேள்வி கேக்க மாட்டாங்களா?

அடுத்த ஐந்தாவது நிமிடமே குளித்துத் தயாராகி, அவசர அவசரமாக டீ குடித்துவிட்டு, இரண்டு பேருந்துகள் மாறி, சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிற இடத்தை அடைந்தோம்.

"சேட்டை, நீ எந்த புத்தகம் படிப்பே?"

"நான் எந்தக்காலத்துலே புத்தகமெல்லாம் படிச்சிருக்கேன்? ஆனா, வெளியிலே அப்படியெல்லாம் சொல்லப்படாது. அதுனாலே நான் என்ன பண்ணுறேன்னு கவனிச்சிட்டே இரு, சரியா?"

"ஓ.கே! டேய் அது யாருடா உன்னைப் பார்த்து கையாட்டுறது?"

"ஓ அவரா, கல்லுளிமங்கன்!"

"டேய் டேய், எவ்வளவு பிரியமா உன்னைப் பார்த்துக் கையாட்டுறாரு, அவரைப் போயி திட்டுறியே?"

"யார்றா திட்டுனா, அவரு கல்லுளிமங்கன்-கிற பேருலே வலைப்பதிவு எழுதுறாருடா! ஹலோ, கே.எம் சார், என்ன புஸ்தகம் வாங்க வந்தீங்களா?"

"பின்னே என்ன புண்ணாக்கு வாங்கவா வந்தேன்? அது போகட்டும், என்னென்ன புத்தகம் வாங்கப்போறதா முடிவு பண்ணியிருக்கீங்க சேட்டை?"

"ஓ அதுவா! சமகாலச்சமூகவியலில் பொருளாதாரத்தின் வீச்சு குறித்த முற்போக்கு சிந்தனைகளும், பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பீடுகள் செய்யத்தக்க இடைச்சங்ககாலத்தின் இலக்கியத்தோடு ஒத்தகருத்துடைய பின்நவீனத்துவத்துடனான ஆய்வுகளடங்கிய புனைவுகளின் சாயலுடன்....."

"போதும் சேட்டை, கேட்கிறபோதே ஆஸ்மா வரும்போலிருக்கு. நீங்க இவ்வளவு ஆழமா யோசிக்கிற ஆளுன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்க அபிமான எழுத்தாளர் யாரு?"

"தவளையூரான்"

"கேள்விப்பட்டதேயில்லையே?"

"நானும்தான்!"

"என்னது?"

"அதாவது எனக்கும் அவரைப்பத்தி சப்பைமூக்கன்னு ஒரு பதிவர் சொல்லுறவரைக்கும் தெரியாதுன்னு சொல்ல வந்தேன்."

"ஆஹா, நம்ம சப்பைமூக்கன் இப்போத்தான் உள்ளே போறதைப் பார்த்தேன்! ஏன் சேட்டை, இந்தத் தவளையூரான் எழுதினதுலேயே பெஸ்ட் புத்தகம் எது?"

"தவிட்டுப்பானைக்குள் ஒரு செவிட்டுப்பூனை-ன்னு ஒரு நெடுங்கதை எழுதியிருந்தாரு! அந்த ஒரு புத்தகத்தை மட்டுமே மூணு தலைமுறை படிக்கலாம்."

"அவ்வளவு நல்லாயிருக்குமா?"

"இல்லை, அவ்வளவு பெரிய புத்தகம்!"

"சரி சேட்டை, அவசியம் வாங்கிப்படிக்கிறேன். அப்புறம் சேட்டை, எனக்கு உங்க மேலே ஒரே ஒரு வருத்தம். இவ்வளவு இலக்கிய ஆர்வமிருக்கிற நீங்க இதுவரைக்கும் பிரபல எழுத்தாளர்கள் பத்தி ஒரு இடுகை கூட எழுதாம இருக்கிறது ரொம்பத் தப்பு. எங்களுக்கெல்லாம் ரொம்ப வருத்தம். ரொம்பவெல்லாம் வேண்டாம். அமாவாசைக்கு அமாவாசை அவங்களைத் திட்டியாவது ஒரு இடுகை போடலாமில்லே?"

"நெசந்தான். தை பொறக்கட்டும். முயற்சி பண்ணுறேன் கே.எம்.சார்!" என்று ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் சொன்னதும் கல்லுளிமங்கன் நகர்ந்தார்.

"என்னடா சேட்டை, நீ பாட்டுக்கு ரீல் விடுறே? அந்தாளு உண்மையிலேயே போயி அந்தப் புத்தகம் இருக்கான்னு கேட்டா...?"

"கவலையே படாதே! அவரு உள்ளே போயி கடலங்குடி பதிப்பகத்துலே மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்களை வாங்கிட்டு அடுத்த பஸ்ஸைப் பிடிச்சுப் போயிருவாரு!"

"என்னடா இது, ஆளாளுக்கு மலைமலையா புத்தகம் வாங்கிட்டுப்போறாங்க? இங்கே வந்ததுக்கு ஞாபகார்த்தமா நாமளும் ஏதாவது வாங்க வேண்டாமா?"

"முதல்லே தலைக்கு அஞ்சு ரூபா கொடுத்து ரெண்டு டிக்கெட் வாங்கு."

டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்ததும், சனி சப்பைமூக்கன் வடிவில் காத்திருந்தது; கூடவே கல்லுளிமங்கனும்...

"சேட்டை அண்ணாச்சி! சௌக்கியமா?"

போச்சுரா, இப்போது சப்பைமூக்கன் வந்து தவளையூரான் பற்றி நான் கல்லுளிமங்கனிடம் சொன்னது குறித்துக் கேட்டால் என்ன செய்வது...?

"சௌக்கியம் அண்ணே! என்னண்ணே மூட்டை மூட்டையா புஸ்தகம் வாங்கிட்டீங்க போலிருக்கே?"

"ஹிஹி! அது புஸ்தகமில்லே சேட்டை! இருக்கிற நானூறு ஸ்டாலுக்கும் போயி கேடலாக் வாங்கியிருக்கேன். என்ன கொடுமைன்னா, நம்ம தவளையூரான் புத்தகமெல்லாமே அவுட்-ஆஃப்-பிரிண்ட்டாமே?"

"என்..என்னது...?"

"என்ன தெரியாத மாதிரி கேக்கறீங்க சேட்டை?" கல்லுளிமங்கன் இடைமறித்தார். "கொஞ்சநேரம் முன்னாடி நீங்கதானே சப்பைமூக்கன் அண்ணாச்சி உங்களுக்கு சிபாரிசு பண்ணினதா வெளியே வச்சு சொன்னீங்க! புத்தகம் பேரு கூட சொன்னீங்களே..? தவிட்டுப்பானைக்குள் ஒரு செவிட்டுப்பூனை.."

"ஆ...ஆமாண்ணே!"

"அடாடாடாடா!" சப்பைமூக்கன் சிலாகித்தார். "எப்படிப்பட்ட புத்தகம் அது? தமிழ் இலக்கிய உலகில் இருக்கிற நுண்ணரசியல் காரணமாத்தான் அது பெரிசாப் பேசப்படலே! இல்லாட்டா நியாயமாப் பார்த்தா அதுக்குத்தான் இந்தவாட்டி சாஹித்ய அகாதமி பரிசு கொடுத்திருக்கணும்..!"

"டேய் சேட்டை," என் நண்பன் காதில் கிசுகிசுத்தான். "டேய், நீ தான் 420-ன்னா இந்த சப்பைமூக்கன் 840-யா இருப்பாரு போலிருக்கே?"

"சேட்டை, குறிப்பா அந்தப் பூனை தவறிப்போயி அந்தத் தவிட்டுப்பானைக்குள்ளே விழுற காட்சியை எழுதியிருப்பாரு பாருங்க! அந்தப் பூனையே பேனா புடிச்சு எழுதினா மாதிரி அவ்வளவு ரியலா இருக்கும். இவருக்கு முன்னாலே கு.ப.ரா, தி.ஜ.ர, ந.பிச்சமூர்த்தி, ஜானகிராமனெல்லாம் ஒண்ணுமேயில்லே! இருந்தாலும் இன்னிக்கு தவளையூரான்னு சொன்னா, தமிழன் ஒருத்தனுக்குக் கூட தெரியலியே! சே!"

"சேட்டை, எனக்கு வர்ற எரிச்சலுக்கு இந்தாளு மூஞ்சியிலே குத்தி உண்மையிலேயே சப்பைமூக்கனாக்கிடுவேன்," என்று மீண்டும் காதில் கிசுகிசுத்தான் நண்பன்.

"பேசாம இருடா, இந்த சப்பைமூக்கன் அடிக்கடி இலக்கியம் பத்தியெல்லாம் எழுதுவாருன்னு நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டிருந்தேன். என்னை விட மொக்கையா இருப்பாரு போலிருக்கேடா?"

"மிஸ்டர் கல்லுளிமங்கன்! தவளையூரான் சிப்பாய் கலகத்தை மையமா வச்சு வேலூர் பின்னணியிலே ஒரு காதல் கதை எழுதியிருந்தாரு. அதைத் தான் கமல் காப்பியடிச்சு ’ராஜ பார்வை’ன்னு எடுத்தாரு தெரியுமா?"

அடப்பாவி மக்கா....!

"அது மட்டுமா? தவளையூரான் எழுதின ’நொட்டாம்புளி’ கதையைப் பார்த்துத்தான், இந்தியிலே ’ஷோலே’ படமே எடுத்தாங்க! இதைப் பத்தி 1976 குமுதத்துலே முப்பத்தி எட்டாம் பக்கத்துலே எழுதியிருக்காங்க தெரியுமா?"

"என்ன கொடுமை சப்பை?" கல்லுளிமங்கன் சப்பல் காணாமல் போனதுபோல,கன்னத்தில் கைவைத்தார்.

"சரிங்க சப்பைமூக்கண்ணே, கல்லுளிண்ணே, நாங்க போய் சுத்திப்பார்க்கிறோம். அப்புறமா சந்திக்கலாம்!" என்று விடைபெற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்தோம்.

"சேட்டை, நீங்கெல்லாம் எப்பவுமே இப்படித்தான் உளறுவீங்களா? இல்லாட்டி இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் அக்கேஷனா...?"

"மத்தவங்களைப் பத்தித் தெரியாதுரா...எனக்கு இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் அக்கேஷன் தான்!"

"ஐயா சாமீ, ஒருவேளை நீ என்னைக்காட்டி ’இவர்தான் தவளையூரான்,’னு சொல்லியிருந்தா அதையும் நம்பியிருப்பாங்களோ?"

"நம்புறதா? உன்னோட போட்டோ எடுத்துக்கிட்டு நாளைக்கு இதை வைச்சே ஒரு இடுகை போட்டிருப்பாங்க!"

"சரியாப் போச்சு! உன்னை நம்பி ஐ.பி.எல். ஏலம் லைவ்-டெலிகாஸ்டை விட்டுப்புட்டு இங்கே வந்தேன் பாரு."

"இந்தவாட்டி மந்திரா பேதியை யாருடா ஏலத்துலே எடுத்திருக்காங்க...?"

"சேட்டை, நீ கிரிக்கெட் பத்திப் பேசமாட்டேன்னு ஏற்கனவே உங்க கொள்ளுப்பாட்டி மேலே சத்தியம் பண்ணியிருக்கே!"

"கிரிக்கெட்டைப் பத்தி யாருடா பேசினாங்க? மந்திரா பேதி, ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே இவங்கல்லாம் டிவியிலே வருவாங்களான்னு ஒரு கவலை, அம்புட்டுத்தேன்!"

"சரி, இன்னிக்கு ஏதோ ஸ்பெஷல் அக்கேஷன்னு வேறே சொல்லிட்டே. அதுனாலே விடுறேன்."

"என்ன ஸ்பெஷல் அக்கேஷன்னு கேக்க மாட்டியா?"

"என்னது சேட்டை?"

"ஹிஹி! வேறோண்ணுமில்லேடா! இன்னியோட எனக்கு ஒரு வயசு முடிஞ்சு ரெண்டாவது வயசு ஆரம்பமாகுது!"

"என்னது??? என்னடா உளர்றே?"

"அதாவது, நான் சேட்டைக்காரன்-ன்னு வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒருவருசம் முடிஞ்சு போச்சு!"

"அப்படியா சமாச்சாரம்! அப்படீன்னா இன்னிக்காவது ஒரு உருப்படியான காரியம் பண்ணு சேட்டை!"

"என்னாது?"

"இங்கே உண்மையிலேயே நிறைய புத்தகப்பிரியர்கள் வந்திருப்பாங்க. அவங்களைத் தொந்தரவு பண்ணாம, அப்படியே வெளியே போயி டீயைக் குடிச்சிட்டு வேடிக்கை பார்த்திட்டு வந்த சுவடு தெரியாமப் போயிரலாமா? இல்லாட்டி உன் ஃபிரண்டு, யாராவது ரெட்டைமண்டைன்னு வந்துரப்போறாரு!"

"உன் வாயிலே அருகம்புல் ஜூஸைத்தான் ஊத்தணும். அதோ பாரு, உண்மையிலேயே ரெட்டைமண்டை வந்திட்டிருக்காரு!"