Sunday, June 13, 2010

இப்போதைக்கு விடைபெறுகிறேன்

வலையுலகம் சலித்து விட்டது!

இறைவன் சித்தமும் எனக்கு விருப்பமுமிருந்தால் திரும்ப வருவேன்!

ஆதரித்த அனைவருக்கும் நன்றி!

Friday, June 11, 2010

கல்யாணமாம் கல்யாணம்

ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம்,’ என்று என் தலையில் இடிபோல வந்திறங்கிய செய்திக்கும் இந்த இடுகைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதைக் கண்ணீர்மல்க உருக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; நான் பொருத்தமானவருக்காகக் காத்திருக்கிறேன்,’ என்று ஸ்ரேயாவே பேட்டியளித்து என் வயிற்றில் ஒரு பால்பூத்தையே வார்த்து விட்டார்.

ஆனா, இந்த இடுகைக்கும் ஸ்ரேயாவின் மாநிலத்துக்கும் தொடர்பு இருக்கு! இப்போ உத்தராஞ்சலாக மாறிட்டாலும், ஸ்ரேயா பிறக்கும்போது அது உத்திரப்பிரதேசம் தானே? இதனாலோ என்னவோ, யாராவது உ.பியைப் பற்றி மட்டமாப் பேசினா, எனக்கு ரொம்பக் கோபம் வரும். உ.பி.காரங்கன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா? அவங்க எவ்வளவு அறிவாளிங்க தெரியுமா? ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க!

உபியிலே ஒரு அப்பா மகனைக் கூப்பிட்டு அதட்டுறாரு! "என்னடா தீப்பெட்டி வாங்கிட்டு வந்திருக்கே? ஒரு குச்சி கூட எரிய மாட்டேங்குதே?

அதுக்கு, அவரோட மகன் எவ்வளவு புத்திசாலித்தனமா பதில் சொல்றான்னு கவனிங்க! "அப்பா, நீங்க இப்படிக் கேட்பீங்கன்னு நான் கடையிலேயே எல்லாக் குச்சியையும் உரசிக் கொளுத்திப் பார்த்திட்டுத் தான் வாங்கிட்டு வந்தேன்!"

இப்படிப்பட்ட அறிவுக்கொழுந்துகள் சுடர்விட்டுப் பிரகாசிக்கிற மாநிலத்தைப் பற்றி திரும்பவும் எல்லாரும் கேலியும் கிண்டலும் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க! அதுக்குக் காரணம் என்ன? இரத்தம் கொதிக்குதுங்க; நீங்களே கேளுங்க இந்த அநியாயத்தை!

உ.பி.பஹ்ரைச் காவல் நிலையத்துலே கங்காராம் திவாரின்னு ஒருத்தர் ஒரு புகார் கொடுத்திருக்காரு! (பாருங்க, இன்னமும் உபியிலே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி புகார் கொடுக்கிறவங்க இருக்கத் தான் செய்யுறாங்க!). கங்காராம் திவாரிக்கு முப்பது வயசுக்கு மேலே ஆயிடுச்சுங்க! எலெக்ட்ரிஷியனா இருக்காரு! எலெக்ட்ரிசிட்டியே இல்லாத மாநிலத்துலே எலக்ட்ரிஷியனா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்? அவரு வாழ்க்கையே ஃபியூஸ் ஆயிடுச்சிங்க! அதுனாலே அவருக்குக் கல்யாணமே ஆகாம இருந்தது! யாரோ ரெண்டு பேரு வந்து ’உனக்கு ஏத்த பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்! ஒரு முப்பதாயிரம் ரூபாய் கொடு!’ன்னு சொல்லவும், இவரும் கல்யாண ஆசையிலே கொடுத்திட்டாரு! கல்யாணமும் நடந்திருச்சு! கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் கல்யாணப்பொண்ணு விஷயத்துலே நல்லா ஏமாந்திட்டோமுன்னு கங்காராமுக்குத் தெரிஞ்சிருக்கு! எப்படீன்னு கேளுங்க!

அதாவது, அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு பெண்ணையே இல்லை! ஒரு பதினெட்டு வயசுப் பையன்! முகத்தை கூங்கட்டு போட்டு மூடி ஏமாத்திக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க! இது தெரியாம இவரு மணப்பெண்ணை(?!) கிள்ளிக் குறும்பெல்லாம் வேறே பண்ணியிருக்காரு பாவம்! கனவுலே "துஜே தேக்கா தோ யே ஜானா சனம்!’னு ஷாருக்கான் பாட்டெல்லாம் பாடியிருக்காரு! கல்யாணம் பண்ணிக்கிட்டு முசோரி,நைனிதால்னு தேனிலவு போக வேண்டிய ஆளு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்திட்டிருக்காரு! ஒரு எலெக்ட்ரீஷியனோட வாழ்க்கையிலேயே இப்படி ஷார்ட்-சர்க்யூட் ஆகுமுன்னு அவரென்ன கனவா கண்டாரு?

மணப்பெண் மாதிரி நடிச்ச மணப்பையன், இது மாதிரி ஏற்கனவே 18 பேரை ஏமாத்தியிருக்கானாம். இவரையும் சேர்த்து பத்தொன்பது. இன்னும் ஒருத்தர் சேர்ந்திட்டா ஒரு சங்கமே ஆரம்பிக்கலாம். ஹிந்தி தெரியாதுன்னுறதுனாலே அதுக்கு நம்மாலே பேரு வைக்க முடியாது! தமிழ்நாடா இருந்தா ’சொந்தச் செலவுலே சூனியம் வைத்துக்கொள்வோர் சங்கம்,’னு வைச்சிருக்கலாம்; எதுக்கும் முன்னாடி ’அகில இந்திய,’ன்னு போட்டுக்கிட்டா பிற்காலத்துலே தேர்தல் வரும்போது உதவும்!

சத்தியமா ரீல் விடலீங்க! இதைப் படிச்சுப் பாருங்க; உங்களுக்கே தெரியும்!

பஹ்ரைச் எஸ்.பியே அசந்து போயிட்டாராம். ’என் சர்வீஸிலே இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததே இல்லே!"ன்னுட்டாரு! (எல்லா ஊரு போலீஸும் இந்த ஒரு டயலாக்கை மட்டும் விடவே மாட்டீங்களே! சே!!) அந்த எஸ்.பி.யோட பேரு அதை விடக் கொடுமை! ராம் பரோஸே! அதாவது கடவுளை நம்புன்னு அர்த்தம்! உ.பியிலே கடவுளை நம்பாம போலீஸையா நம்புவாங்க?

ஆனாலும் இதை ஒரு காரணமா வைச்சு ஸ்ரேயா பிறந்த மாநிலத்தை எல்லாரும் கிண்டல் பண்ணுறது ரொம்பத் தப்புங்க! நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! அது ஏமாத்திப் பண்ணின கல்யாணம்! அதுனாலே பொண்ணுக்குப் பதிலா பையனைக் கல்யாணம் பண்ணி வைச்சாங்க! ஆனா, நம்ம தமிழ்நாட்டுலே மட்டும் ரொம்ப ஒழுங்கா?

ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாலே சிவகங்கை மாவட்டத்துலே செல்வகுமார்னு ஒருத்தரு, செல்விங்கிற நாயைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு! செல்வகுமார்-செல்வி! என்ன பெயர்ப்பொருத்தம் பாருங்களேன்! லட்சத்துலே ஒருத்தருக்குத் தான் இது மாதிரி அமையும்! நான் கூட வரதட்சணை வாங்காமக் கல்யாணம் பண்ணணும்கிறதுக்காக இப்படிப் பண்ணிட்டாரோன்னு நினைச்சேன். ஆனா, இதுலே ஒரு ஃபிளாஷ்-பேக் இருக்குதுங்க!(நாய்க்கு இல்லை; செல்வகுமாருக்கு!) அதாவது இவரு சின்ன வயசுலே ரெண்டு நாய்ங்களை அடிச்சுக் கொன்னுட்டாராம்! அந்தப் பாவம் போறதுக்காக ஜோசியர் பேச்சைக் கேட்டுக்கிட்டு தோஷம் போறதுக்காக ஒரு நாயையே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்!

இதைப் படிச்சதுலேருந்து நான் கொசு அடிக்கிறதையே நிறுத்திட்டேனுங்க! இவர் கணக்குப் படி இரண்டுக்கு ஒண்ணுங்கிற விகிதாச்சாரத்துலே போனாலும் நான் தினமும் நூறு கொசுவையாவது கல்யாணம் பண்ணிக்கணும். ஒரு கொசுவை உயிரோட பிடிச்சு, அதோட கழுத்தைக் கண்டுபிடிச்சுத் தாலிகட்டுறதெல்லாம் ஆவுற காரியமா? ’இதுக்கு என்னையும் சாவடிச்சிருக்கலாமே?’ன்னு கொசு கேட்காதுன்னு என்ன நிச்சயம்?

ஏதோ, இந்த மாதிரி வேலையெல்லாம் தமிழ்நாட்டுலேயும், உ.பியிலேயும் தான் நடக்குதுன்னு நினைச்சிராதீங்க!

நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ஒரிசாவுலே ஒரு பெண்மணி ஒரு பாம்பைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! அந்தப் பெண்மணி பேரு பிம்பளா தாஸ்! எதுக்குப் பாம்பைப் போயிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு கேட்டா, ’அது வாயில்லா ஜந்துவுங்க! பாலை வச்சாக் குடிச்சுட்டு அதுபாட்டுக்கு சுருண்டு ஒரு மூலையிலே போய் படுத்துக்கும்! இப்படியொரு புருசன் எல்லாருக்கும் கிடைப்பாங்களா?"னு எதார்த்தமா ஒரு கேள்வி கேட்டிருக்காங்க! ஆனாலும், அவங்களுக்கு ஒரே ஒரு குறை! என்னான்னா அவங்க கல்யாணத்தன்னிக்கு மாப்பிள்ளையே வராம இருந்திட்டாரு! அர்ஜெண்டா தவளை பிடிக்கப் போயிருக்கலாமுன்னு ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

நம்ம இந்தியா இவ்வளவு மோசமாப் போயிருச்சான்னு அங்கலாய்க்காதீங்க அண்ணாச்சியோவ்! வழக்கம்போல இதெல்லாமும் கூட மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பு தான்! எப்படீன்னு கேட்கறீங்களா?

ஷரன் டென்ட்லர்-னு ஒரு 41 வயது பிரிட்டிஷ் பெண்மணி ஒரு டால்ஃபின் மீனைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காங்க! உலகத்துலேயே ஒரு மீனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட முதல் பெண்மணி இவங்க தானாம்! எவ்வளவு பெருமை! அத்தோட அவங்களோட பெருந்தன்மையைக் கவனிங்க!

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவரு கடலுக்குள்ளே அவருக்குப் பிடிச்ச மத்த டால்ஃபின்களோட சந்தோஷமாயிருக்கலாம்! நான் சக்களத்திச் சண்டையெல்லாம் போட மாட்டேன்!"

யாராவது இந்த அம்மாவுக்கு தேம்ஸ் நதிக்கரையிலே ஒரு சிலை வைக்கச் சொல்லுங்கப்பா! அப்படியே பக்கிங்ஹாம் அரண்மனையிலே இவங்களோட பொன்மொழியைக் கல்வெட்டா எழுதி வைச்சா, பின்னாலே வரப்போற தலைமுறை படிச்சுப் பயன் பெறுமில்லையா?

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சிண்டி என்ற பெண்மணி ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, ஃபிரட் என்ற குதிரையைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாகவும், அதைக் கூட்டிக்கிட்டு அல்லது ஓட்டிக்கிட்டு தேனிலவு போகப்போறதாகவும் எழுதியிருந்தாங்க! அவங்களுக்குக் கல்யாணமாயிருச்சா, அந்தக் குதிரை பாவம் எப்படியிருக்குன்னு சரியாத் தகவல் இல்லே! எங்கேயாவது குதிரையும் குடித்தனமாவும் இருந்தாச் சரிதான்!

சரி, பாம்பு, மீன், குதிரை எல்லாத்தையும் கல்யாணம் பண்ணினதோட நிறுத்துனாங்களான்னா, அது தானில்லை!

தாய்வான் நாட்டுலே சாங்-சீ-சும் (என்னய்யா பேரு இது?) என்ற 46 வயது நபர், பதினோரு அங்குல பார்பீ பொம்மையைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு! இருபது வருசத்துக்கு முன்னாலே தற்கொலை பண்ணிக்கிட்ட மனைவியோட ஆத்மா சாந்தியடையணுமுன்னு, பொம்மையைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காராம்! இவராலே தாஜ்மஹால் கட்ட முடியாததுனாலே, வீட்டை Toy மஹால் ஆக்கிட்டாரு போலிருக்கு!

தாய்வானிலேயே இப்படீன்னா, ஜப்பானைப் பத்தி சொல்லவா வேணும்? அங்கே sal9000-னு ஒரு ஆளு நேனே-அனே-கசாக்கி-ன்னுற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு! இதுலே என்ன ஸ்பெஷாலிட்டின்னு கேட்கறீங்களா? ஐயா சாமீ, அந்தப் பொண்ணு ஒரு வீடியோ கேமில் வருகிற கேரக்டர்! ஜப்பான் வழக்கப்படி பூசாரியெல்லாம் வந்து மந்திரமெல்லாம் சொல்லி, பாட்டுக்கச்சேரியெல்லாம் வைச்சு அமர்க்களமா கல்யாணம் நடந்திருக்கு! இந்த இழையைச் சொடுக்கிப் பார்த்தீங்கன்னா, அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழலாம்.

இந்த ஜப்பான்காரரு இப்படீன்னா, இன்னொரு ஜப்பான் காரர் யாரைக் கல்யாணம் பண்ணியிருக்காரு தெரியுமா? ஒரு தலையணையை! ஜப்பானிலே அந்தத் தலையணைக்கு டக்கிமர்க்குரா-ன்னு பேராம்! அதுலே ஃபட்டே-டெஸ்ட-ரோசா-ன்னு ஒரு கார்ட்டூன் கேரக்டரோட உருவம் பிரிண்ட் ஆயிருக்குதாம். அவரு எங்கே போனாலும் டக்கிமர்க்குராவையும் கூட்டிக்கிட்டே போறாராம்! அதுக்குன்னு தனி சீட்டு வேறே! அதுக்கு அரை டிக்கெட்டா முழு டிக்கெட்டா தெரியலே! இவரே அறிவுலே அரை டிக்கெட் மாதிரி இருக்கிறதாலே மொத்தம் ஒண்ணு வாங்கினாப் போதுமில்லா? இதுலே ஒரு நல்ல விஷயம் என்னான்னா, இனிமேலாவது அவர் அடிக்கடி தலையணைக்கு உறையை மாத்தி, தோய்ச்சு சுத்தமா வச்சிருப்பாருன்னு நம்பலாம்! அவருக்குப் பொஞ்சாதி சோறு போடாட்டியும், சுத்தம் சோறு போடுமில்லா?

சேச்சே! இப்படியெல்லாமா கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு கேட்கறீங்களா? இன்னும் இருக்கு சாமியோவ்!

ஜெர்மனியிலே எஜ்ஜா-ரிட்டா-பெர்லினர்-மார் என்ற பெண்மணி பெர்லின் சுவரை 29 வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். (இவ்வளவு நீளமா, வாயிலே நுழையாத பேரா வச்சுக்கிட்டா மனிசன் கட்டிக்குவானா?) எல்லாரும் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு அப்புறமா சுவத்துலே போய் முட்டிக்குவாங்க! இவங்க என்னடான்னா முன்யோசனையா முட்டிக்கிற சுவத்தையே கல்யாணம் பண்ணிட்டிருக்காங்க! ஏதோ, ஒரு வேலை மிச்சம் அவங்களுக்கு! இதுலே லொள்ளு வேறே! "சீனப்பெருஞ்சுவர் தொந்தியும் தொப்பையுமா குண்டா அசிங்கமாயிருக்கு! என் புருசன் தான் ஒல்லியா ஸ்மார்ட்டா இருக்கார்!"னு அம்மணி அலப்பறை வேறே பண்ணுது! டூப் இல்லீங்க! போய்ப் படிச்சுப் பாருங்க, உங்களுக்கே புரியும்!

என்னய்யா? செங்கலும் சுண்ணாம்பும் வைச்சுக்கட்டுன சுவத்தைப் போயி யாராச்சும் கல்யாணம் பண்ணிக்குவாங்களான்னா கேட்கறீங்க? இப்படி யாராவது கேட்பீங்கன்னு தெரிஞ்சு தான் எரிக்கா-லா-டூர்-ஈஃபில் என்ற பெண்மணி இரும்பாலே கட்டப்பட்ட, 1000 அடி உயரமான, பாரீஸின் ஈஃபில் கோபுரத்தையே கல்யாணம் பண்ணிட்டிருக்காங்க! இந்த அம்மணி ஆவணப்படமெல்லாம் எடுக்கிறவங்களாம்! (நிறைய பேரு ஆவணப்படம் பார்த்துட்டு அதெல்லாம் சாவணப்படம்னு ஏன் வாழ்க்கை வெறுத்துப் போறாங்கன்னு இப்பத்தானே புரியுது!) நல்ல வேளை, நம்ம ஊரு மாதிரி பாரீசிலே மாலை மாத்திக்கிற பழக்கம் கிடையாது! யாரு கண்டாங்க, இந்தம்மா மேலே போயி மாலை போட்டுட்டு கீழே இறங்குறதுக்குள்ளே டைவோர்ஸ் பண்ணியிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!

இந்தக் கம்ப்யூட்டர் யுகத்துலே இப்படியுமா ஆளுங்க இருப்பாங்கன்னு தானே கேட்கப்போறீங்க? ஸ்தூ! ஒரு அம்மணி கம்ப்யூட்டரையே கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு சொன்னா அதை விட பெரிய வயித்தெரிச்சல் வேறே என்ன இருக்க முடியும்?

ஹெர்மியோன் வே-ன்னு ஒரு பிரிட்டிஷ் கார அம்மணி அவங்களோட 17 அங்குல மடிக்கணினியைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்களாம்! அதுக்கு அலெக்ஸ்-னு பேரு வேறே வச்சிருக்காங்க! புள்ளைங்களுக்கு எல்லாரும் பேரு வைக்கிறாங்க; ஆனா, உலகத்திலேயே புருசனுக்கு பெயரு வைச்ச புரட்சிப்பெண் இவங்க தானய்யா! இரண்டு வருசமா இவங்க இணைபிரியாத ஜோடியா இருக்காங்களாம்! ’நான் என்ன டிரஸ் போட்டுக்கிட்டாலும் அலெக்ஸ் ஒண்ணுமே சொல்ல மாட்டாரு! ரொம்ப தங்கமான குணம்,’னு புருசனுக்குப் பாராட்டு வேறே! புருசனுக்கு வைரஸ் வராம கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டா சரி!

இந்த மாதிரி ஆடு, பன்றி, கார்-னு பல வினோதக்கல்யாணங்கள் நடந்திட்டிருக்கு! எல்லாத்தையும் எழுதினா கொட்டாவி தான் வரும்! அதுனாலே முத்தாய்ப்பா நாம பார்க்கப்போறது, ஜெனிஃபர் ஹோஸ் என்ற பெண்மணியை! இவங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அல்லது எதைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு கேட்கறீங்களா? ஊஹூம்! அவங்க வேறே யாரையோ எதையோ கல்யாணம் பண்ணிக்கலே! அவங்களை அவங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்காங்க! அதாவது அவங்களுக்கு அவங்களையே ரொம்பப் பிடிச்சதுனாலே அவங்க, அவங்களைத் தவிர வேறே எவங்களையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாமுன்னு, அவங்களையே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவங்க அவங்களோட வாழ்க்கை நடத்திட்டிருக்காங்களாம்.

என்ன கொடுமை சரவணா?

இனிமேலாவது சும்மா உ.பி,தமிழ்நாட்டையே கிண்டல் பண்ணிட்டிருக்காதீங்க! பாருங்க, மேற்கத்திய நாடெல்லாம் எவ்வளவு அட்வான்ஸாப் போயிட்டிருக்கு, இங்கே சும்மா நாய், தவளையைக் கல்யாணம் பண்ணினதும் எல்லாரும் சவுண்டு விடுறதை நிறுத்துங்க! மணமக்கள் சீரும் சிறப்புமா எந்த ரிப்பேரும் இல்லாம வாழணமுன்னு மனசார வாழ்த்துவோம். அது தான் நம்ம பண்பாடு!

அட, வாழ்த்துன்னதும் தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது! நம்ம மனீஷா கொய்ராலாவுக்கு வர்ற 19-ம் தேதி கல்யாணம் தெரியுமா? (இனிமேல் தானான்னு நக்கலா கேட்காதீங்க!) அதுக்கும் இந்த இடுகைக்கும் தொடர்பு ஒண்ணும் கிடையாதுங்க! அவங்க பேருக்கு ஏத்தா மாதிரி ’மனிஷ’னைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க! நல்லாயிருக்கட்டும்! ஆனா, ரொம்ப நொந்து போயித்தான் கல்யாணம்கிற விபரீத முடிவை எடுத்திருப்பாங்கன்னு தோணுது!

இருக்காதா பின்னே? ஏதோ போனாப்போகுதுன்னு ஒரு படத்துலே தனுஷுக்கு மாமியார் வேஷத்துலே நடிக்க சம்மதிச்சதுக்காக, இன்னொரு படத்துலே ராமராஜனுக்குப் பாட்டியா நடிக்கக் கூப்பிட்டா, கோபம் வருமா வராதா?

மனீஷாவுக்கும் இனி மணமுடிக்கப்போற எல்லாருக்கும் நமது இனிய திருமண வாழ்த்துக்கள்! எங்கிருந்தாலும் வாழ்க!

Wednesday, June 9, 2010

வருது வருது! விலகு விலகு!

இதுவரைக்கும் விஞ்ஞானம் ஒண்ணு தான் என் கிட்டேயிருந்து தப்பிச்சிருந்தது. இன்னியோட அதுக்கும் சனி ஆரம்பம்! அதுக்காக, அவசரப்பட்டு குறுந்தாடி வைச்ச கிண்டி ஆசாமிங்க யாரும் விபரீத முடிவுக்குப் போயிராதீங்க! சரி, மேட்டருக்கு வருவோமா?

Dzmitry Tsetserukou - இந்த பெயரை ஒரே அட்டம்ப்டுலே நாக்கு சுளுக்காம வாசிக்க முடியுமா? இல்லே முடியுமாங்குறேன்? டிஸ்-மிஸ்-ட்ரீ-ட்ஸெட்-செரு-கௌ! ட்ரீயை எதுக்கு டிஸ்மிஸ் பண்ணணுமுன்னு கேட்கறீங்களா?

இது ஒண்ணும் கப்ஸா பேரு இல்லை! ஜப்பான் டொயோஹோஷி பல்கலைக்கழகத்திலே பேராசியராப் பணிபுரியுற ஒரு பெண்மணியோட பேரு! (சுத்தம், இவரு காலையிலே அட்டண்டன்ஸிலே கையெழுத்துப் போடறதுக்கு முன்னாலே சாயங்கால மணியே அடிச்சிடாது?) அது என்னாங்க, மத்த ஊருலேயெல்லாம் குழந்தை பொறந்தாப் பேரு வைப்பாங்க; ஜப்பானிலே பேரை வைச்சுப்புட்டு அதை ஏன் பரோட்டா மாதிரி பிய்ச்சுப் பிய்ச்சுப் போடறாங்க? ஒவ்வொரு பேருலேயும் ரெண்டெழுத்துக்கு நடுவுலே ஒரு ’டேஷ்’ வேறே! சில பெயரைப் பார்த்தீங்கன்னா எழுத்தை விடவும் டேஷ் தான் அதிகமாயிருக்கு!

நல்ல வேளை, நான் மட்டும் ஜப்பானிலே பொறந்திருந்தா என் பேரு என்னா தெரியுமா?

அரி-குச்சி-சிக்க-கிமி-மிகா-தோ (வெளங்கிடும்!)

எப்படீன்னு கேட்கறீங்களா? அவங்கவங்க பெயரை ஆங்கிலத்துலே எழுதி வச்சுக்கோங்க! எழுதிட்டீங்களா? அப்புறம், ஒவ்வொரு எழுத்துக்கும் ஜப்பான் உச்சரிப்பு என்னான்னு கீழே கொடுத்திருக்கேன் பாருங்க! அந்த முறையிலே எழுதிப் பாருங்க! இதோ, உங்களது ஜப்பானியப் பெயர் தயார்!

A-ka; B-tu; C-mi; D-te; E-ku; F-lu; G-ji; H-ri; I-ki; J-zu; K-me; L-ta; M-rin; N-to; O-mo; P-no; Q-ke; R-shi; S-ari; T-chi; U-do; V-ru;
W-mei; X-na; Y-fu; Z-zi

S=ari,E=ku,T=chi,T=chi,A=ka,I=ki,K=me,K=me,A=ka,R=shi,A=ka,N=to
ari-ku-chi-chi-ka-ki-me-me-ka-shi-ka-to =அரி-குச்சி-சிக்க-கிமி-மிகா-தோ

எதுக்கு இந்த வேலையத்த வேலைன்னு கேட்கறீங்களா? இதைத் தான் ஜப்பான் காரங்க கிட்டேயும் கேட்கணும். கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைப் பிடிச்சு மணையிலே வைன்னுறா மாதிரி, ஜப்பானிலே இருக்கிற டொயோஹோஷி பல்கலைக்கழகத்துலே ஒரு புது ரோபோ கண்டுபிடிச்சிருக்காங்க! இணையத்தில் ஸ்பரிச உணர்வைத் தருகிற இயந்திரக்கருவி-செய்தி!

இதுக்கு ஐ-ஃபீல்-ஐ.எம்.(iFeel-IM device)னு பேர் வச்சிருக்காங்க! இந்த ரோபோவாலே என்ன புரயோசனமுண்ணு கேட்கறீங்களா?

இதை உங்க கணினியிலே இணைச்சிட்டீங்கன்னா, அதுக்கப்புறம் நீங்க யார் கூடவாச்சும் மின்னரட்டை(chat) பண்ணும்போது, அவங்களோட இதயத்துடிப்பு, அணைப்பு, அடிவயத்துலே பட்டாம்பூச்சி, முதுகுத்தண்டுலே சில்லிடறது மாதிரி பல உணர்ச்சிகளை நம்மாலே உணர முடியுமாம். (அட இருங்கப்பா, அதுக்குள்ளே இது இந்தியாவுக்கு வந்திருச்சா, ரிச்சி ஸ்ட்ரீட்டுலே கிடைக்குமான்னு கேட்டு அலப்பறை பண்ணாதீங்க!)

இணையத்துலே ஒரு மனிதபூர்வமான தொடுதல் (human touch-ன்னா இது தானே?) இருக்கட்டுமேன்னு இப்படியொரு கண்டுபிடிப்பை இந்த டிஸ்மிஸ்ட்ரீ அம்மணி கண்டுபிடிச்சிருக்காங்களாம்! உணர்ச்சிபூர்வமா இணையத்தை உபயோகிக்கிறவங்களை இணைக்கிற ஒரு முயற்சியாம் இது! இதுக்காக அஞ்சு வருஷம் ஆராய்ச்சி பண்ணி, (கொழுப்பைப் பாருங்களேன்) இதுலே ஏகப்பட்ட சென்ஸார், மோட்டார், வைப்ரேட்டர், ஒலிபெருக்கியெல்லாம் சேர்த்து ஒருவழியா முடிச்சிருக்காங்களாம்.

இதுக்கான மென்பொருளைக் கண்டுபிடிச்சவங்க பேரு அலீனா நெவியாரௌஸ்கயா (பல்லே சுளுக்கிருச்சு!)! இந்த மென்பொருள் என்னா பண்ணுமுன்னா, நீங்க தட்டச்சு பண்ணுறதை அப்படியே ஃபீலீங்காக்கிடுமாம்! ஃபீலிங்கா, என்னா ஃபீலிங்குன்னு கேட்கறீங்களா? இதோ....

சந்தோஷம், பயம், ஆர்வம், குற்ற உணர்ச்சி, கோபம்-னு இன்னும் என்னென்னமோ ஃபீலிங்க்ஸையெல்லாம் 90 சதவிகிதம் துல்லியமா வெளிப்படுத்திருமாம். இது எப்படியிருக்கு?

ஆனா, நம்மாளுங்களைப் பத்தி நல்லாத் தெரிஞ்சதுனாலேயே என்னமோ, இந்த ஜொள்ளு மேட்டரை மட்டும் டிஸ்மிஸ்ட்ரீ சேர்த்துக்கலே! அதுனாலே, யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை! உங்களை யாரும் ஜொள்ளுப்பேர்வழின்னு சொல்ல வாய்ப்பேயில்லை! ஹிஹி! என்ஜாய்!!!

பண்ணுறதையெல்லாம் பண்ணிப்புட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கூகிள் சாட்டுலே வந்து அசடு வழியுற வங்களுக்கு நீங்க கோபமா இருக்கீங்கன்னு தெரிஞ்சிடும். சில சமயங்களிலே அவங்களுக்கு இரத்தம் கூட வரலாம். ஒண்ணுமில்லாட்டியும் ஒரு வீக்கம் கண்டிப்பா கேரண்டி!

யாரையாவது ஆன்லைனிலே பார்த்தா, ’ஹை, நான் ஒரு பின்நவீனத்துவ கவிதை எழுதியிருக்கேன்! படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லு,’ன்னு கேட்டிருவாங்களோன்னு நீங்க பயப்படுறதும் அவங்களுக்கும் தெரிஞ்சிடும். "கவலைப்படாதே, என்னோட அடுத்த இடுகை கவிதையில்லே,"ன்னு அவங்களே சொல்லிடுவாங்க! அத்தோட விட்டுடணும்! ’கவிதை எழுதலியா? அப்படீன்னா நம்மளைத் திட்டி இடுகை போடப்போறானா?’ன்னு நீங்க பயந்தா, அதுவும் அவருக்கு உடனடியா தெரிஞ்சிடும்.

சதா உங்க பதிவுக்கு வந்து கடுப்பேத்துற ஆளு ஆன்லைனிலே வந்தா, வழக்கம்போல பல்லைக் கடிக்காதீங்க! அது அந்த ஆளுக்கு முறுக்கு நொறுக்குறா மாதிரி நறுக்குன்னு கேட்கும்!

மொத்தத்திலே இந்த ஐ-ஃபீல் ஐ.எம்.டிவைஸ் வந்திருச்சுன்னா, எல்லாரோட வண்டவாளமும் உடனுக்குடனே, சுடச் சுட தண்டவாளத்துலே ஏறிடும்!

இவ்வளவு ஏன்? அங்கே அவரு பொடி போட்டா இங்கே உங்களுக்குத் தும்மல் வரும்!

அங்கே அவருக்கு உங்க இடுகையைப் பார்த்துப் பொறாமை வந்தா, இங்கே உங்களுக்கு வயித்தை வலிக்கும்!

ஆன்லைனிலே நீங்க எதிர்பார்த்திட்டிருக்கிற அவங்க வந்ததும் நீங்க துள்ளிக்குதிச்சா, அவங்க நாற்காலி அதிரும்.

மொத்தத்துலே 90% எல்லாருக்கும் எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சிரும்!

ஐயையோ, இதென்ன விபரீதம்? அப்படீன்னா இனிமே அவங்கவங்க பிளாகுலே பீலா விட முடியாதா? எப்படிப் பொழைப்பை நடத்தறதுன்னா கேட்கறீங்க? அதுக்கு ஏதாவது அல்லது யாராவது கிடைக்காமலா போயிருவாங்க! கடவுள் கைவிட மாட்டார்! என்ன ஆனாலும், கூகிளாண்டவர் பூஜையை கைவிடாதீங்க!

இந்த ரோபோ மட்டும் செல்ஃபோன் மாதிரி இந்தியாவிலே மலிவாக் கிடைச்சா, நாம எல்லாருமா சேர்ந்து மெரீனாவுலே டிஸ்மிஸ்ட்ரீ அம்மணிக்கு ஒரு சிலை வைக்கணும். அடுத்தவாட்டி சந்திக்கும்போது அந்த சிலை பக்கத்துலேயே சந்திக்கலாம்! முடிஞ்சா ஒரு வடைமாலை சாத்திட்டு கூட்டம் முடிஞ்சதும் ஆளுக்கு ஒண்ணா பிய்ச்செடுத்திட்டு டீயோட குடிச்சா, போடுற இடுகைக்கு புண்ணியம் கிடைக்கும்!

டிஸ்மிஸ்ட்ரீ வாழ்க! ஐ-ஃபீல் ஐ.எம்.டிவைஸ் புகழ் ஓங்குக!!

Wednesday, June 2, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.10மகர ராசிக்காரர்களே!
கொஞ்ச காலமாகவே உங்கள் பாடு சற்று திண்டாட்டமாக இருந்து வந்திருக்கிறது. சகபதிவர்களெல்லாம் சகட்டுமேனிக்கு சண்டைபோட்டுக்கொண்டிருக்கையில், அதாவது, சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் மட்டும் பின்னூட்டங்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தீர்கள். இருப்பினும், இணையத்தின் உலகப்போரில் எழுதப்பட்ட உங்களது சமீபத்திய பின்னூட்டங்கள் வரலாற்றில் இடம்பெறுகிற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக பின்னூட்டத்தாலேயே மீண்டும் பிரபலமடைந்து, புதிய இடுகைகளை எழுதுகிற உற்சாகத்தைப் பெறுவீர்கள். ’இது சாத்தியமா?’ என்று ’வினவு’வதை விட்டு விட்டு சோளிங்கருக்கு ஒரு முறை சென்று ’நர்சிம்’மரை தரிசித்து வந்தால் அடுக்கடுக்காகப் பல புதிய இடுகைகளை எழுதி அசத்த முடியும். தோஷம் முற்றிலும் விலகும்வரை அறிஞர் அண்ணா எழுதிய ’வேலைக்காரி,’ மற்றும் கலைஞர் எழுதிய ’பூக்காரி,’ போன்ற கதைகளைப் பற்றிய விமர்சனத்தைக் கூட தவிர்த்தல் நன்மை பயக்கும்.

உங்களது ஜென்மராசியில் அனானி போல வந்து அலப்பறை செய்து கொண்டிருந்த குருபகவான், அலுத்துப் போய் இடம்பெயர்ந்து விட்டபடியால், இனி புதுப்புது இடுகைகளாய் எழுதி புரட்சி செய்வீர்கள் என்பது திண்ணம். குங்குமம், சந்தனம், மல்லிகை,முல்லை போன்ற பெயர்களில் பின்னூட்டம் எழுதுபவர்கள் மற்றும் எதிர்பதிவு எழுதுபவர்களிடம் கவனமாய் இருத்தல் நன்மை பயக்கும். அதே பெயரில் வராவிட்டாலும் விபூதி, ஊமத்தம்பூ போன்ற வெவ்வேறு பெயர்களிலும் பின்னூட்டம் வர வாய்ப்புகள் உள்ளமையால் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த வேண்டிவரலாம்.

அது மட்டுமல்ல! ரிஷபம், கடகம், கன்னி, மீன ராசி பதிவர்களுடன் சேர்ந்து ’கயிதே,கஸ்மாலம்,பொறம்போக்கு,பேமானி,சோமாறி,’ போன்ற அருந்தமிழ்ச்சொற்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இதுவே உகந்த தருணம். இது போன்ற பதிவுகளுக்கு தலா நூறு பின்னூட்டங்களாவது கிடைக்கும் என்று உங்களது தசாபலன்கள் உறுதிபடுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் ’சாக்கடையில் கல்லெறிவது எப்படி?’, ’மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது எப்படி?’ போன்ற அறிவுபூர்வமான தொடர் இடுகைகளை எழுதி தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டாற்றுகிற அருமையான வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்!

அடுத்த சில தினங்களுக்கு அவரவர் பதிவுகளில் போடுகிற அன்றாடச் சண்டைகளைத் தவிர, பிற பதிவர்களின் இடுகைகளுக்கும் பின்னூட்டம் போடுகிற சாக்கில் குடுமிப்பிடி சண்டை போடுகிற பொன்னான வாய்ப்பு நிறைய பேருக்குக் கிடைக்கும். எதற்கும் இரண்டொரு நாட்கள் கேஷுவல் லீவு எடுத்து வைத்துக் கொள்வது உத்தமம். ஊருடன் ஒத்து வாழ் என்ற பழமொழிக்கேற்ப கார்ப்பரேட் கணிகைகள், கக்கூஸ் மகாத்மியம் போன்ற புதுமையான, இனிவருகிற பதிவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கப்போகிற இடுகைகளை எழுதி, இதுவரை நாம் எள்ளி நகையாடிய அரசியல்வாதிகளும் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிற அளவுக்கு வலையுலகத்தையே வெடிச்சிரிப்பில் ஆழ்த்தப்போகிறீர்கள்!

விஜய் அரசியல் பிரவேசம், ராவணன் வெளியீடு மற்றும் பிரண்டை அல்வாய் செய்வது எப்படி என்பன போன்ற இடுகைகளை இன்னும் ஒருசில நாட்களுக்கு ஒத்திவைத்து விட்டு, அவரவர் பதிவுகளில் யாரையாவது நாலு வார்த்தை நல்லதாக எழுதித் திட்டுவது சாலச் சிறந்தது. இதை விட்டால், கோஷ்டி சேர்ந்து கொண்டு கும்மியடிக்க அடுத்த வாய்ப்பு கிடைப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களாகலாம் என்பதால், காற்றுள்ளபோதே தூற்றி, கண்ணில் படுகிறவர்களையெல்லாம் தூற்றி எழுதி அனைவரும் பிரபலமாகி விடலாம் என்பது உறுதி.

இலக்கியம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இடுகைகளை எழுதுபவர்கள் தற்காலிகமாக அவரவர் வலைப்பதிவுகளிலிருந்து சன்னியாசம் பெறுவது உசிதம். ஏழிலிருந்து பதினைந்து நாட்கள் வரைக்கும் வலைப்பதிவுலகத்தில் நாட்டாமைகளின் வழிபாடு ஜோராக நடக்குமென்பதால், மிச்சம் மீதமுள்ள பதிவர்களும் அர்ச்சனை,அபிஷேக ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொண்டு பிளாகேஸ்வரரின் பேரருள் பெற்று உய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

அதன் பிறகு.....!

ஜென்மராசியில் குரு இருந்தவரையில் வீட்டில் இணைய இணைப்பின்றி, பென் டிரைவில் மெனக்கெட்டு சுமந்து கொண்டு வந்து அலுவலகக் கணியிலிருந்து இடுகைகளைப் போட்டு அல்லல்பட்டிருப்பீர்கள். இனிமேல் வீட்டிலும் அலுவலகத்திலும் இருந்து அலுக்காமல் சளைக்காமல் பல இடுகைகளைப் போட்டு தூள் கிளப்பப்போகிறீர்கள். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பதிவர்களுக்கு மின்வெட்டு காரணமாக இந்த குருபெயர்ச்சியின் பலன் முழுமையாகக் கிடைக்காது.

மேலும் வீட்டில் கணினியும் இணைப்பும் இருந்தும்கூட, அனுகூலசத்ருக்களாக உங்களை இடுகை போட விடாமல் தடுத்த பிற குடும்ப உறுப்பினர்களின் தொல்லை இனி முன்போல் இருக்காது என்பதால் உங்கள் காட்டில் மழைதான்!

அண்மைக்காலமாக உங்களது வளர்ச்சியொ, மொக்கையோ அல்லது இரண்டுமோ பொறுக்காத வயிற்றெரிச்சல் பதிவர்கள் ஓரிருவர் கோஷ்டி சேர்த்துக்கொண்டு உங்களது வலைப்பூவை இதுவரை பகிஷ்கரித்து வந்திருப்பார்கள். உங்கள் பதிவுக்கு வந்து வாசித்தால் ஜலதோஷம் உட்பட பலதோஷம் வரும் என்று ஒரு சிலர் புரளியும் கிளப்பியிருக்கலாம். ஆனால், இப்போது பல புதிய பதிவர்கள் உங்கள் வலைப்பூவுக்கு வந்து தொடர்ந்து பின்னூட்டமிடுவதோடு பின்தொடரவும் தொடங்குவார்கள்.

நீங்களே மறந்து போன உங்களது பழைய இடுகைகளையும் பலர் படித்துப் பின்னூட்டமிட்டு உங்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன. இதன் காரணமாக, இதுவரை பெரும்பாலும் மொக்கை இடுகைகளைப் போட்டுக்கொண்டிருந்தவர்களும், திடீரென்று பொறுப்புணர்ச்சி ஏற்பட்டு சுயமாகச் சிந்தித்து சுமாராகவேனும் எழுத முயற்சிப்பார்கள். சகபதிவர்களின் பல இடுகைகளைத் தொடர்ந்து படித்து, ’இவர்களே எழுதும்போது நான் எழுதக்கூடாதா,’ என்ற தன்னம்பிக்கை பிறக்கும். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தமிழ்மணத்திலும் தமிழீஷிலும் எப்போதும் முகப்பிலேயே இருப்பீர்கள்.

குருப்பெயர்ச்சி காரணமாக நீசபங்கம் ஏற்பட்டு இதுவரை உங்களைக் கவலையில் ஆழ்த்திய வைரஸ்தோஷம் முற்றிலுமாக நீங்கும்.

அரசுப்பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு ஏற்படும் என்பதால், இனிமேல் இடுகைகளுக்குப் பஞ்சமேயிருக்காது. மேலும் புதிதாக பலருக்கு வேலைவாய்ப்பும் கணினியும் கிடைக்கிற தருணமென்பதால், பல புதிய வலைப்பதிவாளர்களும் இனிவரும் நாட்களில் உருவாக வாய்ப்பிருக்கிறது.

மேலும் பிற ராசிக்காரர்களுக்கு இடுகை போடுவதில் சற்றே அசுவாரசியம் ஏற்படும் என்பதால், உங்கள் பதிவு சனிக்கிழமை டாஸ்மாக் போல எப்போதும் ஜேஜே என்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திருமணமாகாத பதிவர்களுக்கு திருமணம் நடந்தேறும் என்பதால், பழைய கவிதைகளையெல்லாம் இடுகையாகப் போடுகிற அபாயம் இருக்கிறது. ஆனால், திருமணமான பதிவர்கள் எப்போதும் போலவே குலுங்கிக் குலுங்கி அழவைக்கும் பல நகைச்சுவை இடுகைகளை இடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பின்னூட்டங்களுக்கு சோம்பல் பார்க்காமல் நன்றி எழுதி நற்பெயரை அடைவீர்கள். சகபதிவர்கள் பிரச்சினையில் இருப்பார்கள் என்பதால் உங்கள் பிரச்சினையை சுலபமாக மறந்து மனம் போல் இடுகையிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

பிரச்சினைகளை சமாளித்து வெற்றி கண்டு பாராட்டுகளையும் புகழையும் பெறுவீர்கள். அனானிகளின் கவனம் இன்னும் சில காலத்துக்கு உங்கள் வலைப்பதிவில் இருக்காது என்பதால் இனி உங்கள் காட்டில் அடைமழை மட்டுமல்ல; அடையோடு அவியல்மழையும் சேர்ந்தே பொழியும்!

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் துலாம் ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் விருச்சிக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் தனுசு ராசிக்காரரா? இங்கே செல்லவும்!