Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, February 21, 2021

திருஷ்யம்-2 (Review)


 

குஜராத் கட்ச் பகுதியில் பணி நிமித்தமாகச் சென்றபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்த்ததிருஷ்யம்அதாவது காட்சி ஒன்றுண்டு. பெண்மணிகள் தங்களது தலைகளில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஐந்தாறு,ஏன், ஏழெட்டு தண்ணீர்க்குடங்களைக்கூட சுமந்து சென்று கொண்டிருப்பார்கள். இத்தனை குடங்களையும் எப்படியோ ஏற்றிக்கொண்டு விட்டார்கள், சரி, ஆனால்,எப்படி இறக்கி வைக்கப்போகிறார்கள் என்று யோசித்ததுமுண்டு. 

திருஷ்யம்-2’ படத்தின் முதல் பாதியைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுகூட எனக்கு அதே மலைப்பும், ஆங்காங்கே சின்னச் சின்ன சஞ்சலமும் ஏற்பட்டது மிகவும் உண்மை. துணுக்குகளாய் புதிது புதிதாக முளைக்கின்ற கதாபாத்திரங்கள், நாயகனின் கதாபாத்திரத்தில் சொல்லப்பட்ட உபரியான பரிமாணங்கள் ஆகியவை வெறும் நிரப்பல்களா அல்லது படத்தின் பிந்தைய காட்சிகளுடன் நேரடியான, மறைமுகமான தொடர்புகள் உள்ளவையா என்ற புதிரை முதல்பாதியின் முடிவிலேயே அவிழ்க்கத் தொடங்கி விடுகிறார்கள். 

ஜார்ஜ்குட்டியின் குடும்பம் ஆறு வருடத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வாழ்ந்து வருகிறது. ஜார்ஜ்குட்டி ஒரு திரையரங்க உரிமையாளர் ஆகியிருக்கிறார்; ஆனால், கடன் இருப்பதாக மனைவி ராணி குத்திக் காட்டுகிறாள். மூத்த மகளுக்கு வலிப்பு நோய் வந்திருக்கிறது; இளையமகள் கான்வென்ட் ஆங்கிலத்தில் அம்மாவை அலட்சியம் செய்கிறாள். ஜார்ஜ்குட்டியின் அக்கம்பக்கத்தார் மாறியிருக்கிறார்கள். அந்த டீக்கடைக்காரர் தவிர்த்து, மற்றவர்கள் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

‘If it can be written or thought, it can be filmed’ என்று மறைந்த ஹாலிவுட் இயக்குனர் ஸ்டான்லி க்யூபரிக் சொன்னது பெரும்பாலான படங்களில் வெறும் ஏட்டுச்சுரைக்காய்களாகவே இருக்கையில், ஜித்து ஜோசஃப் தனது திரைக்கதைக்குப் பின்புலமாக அமைந்திருக்கிற எண்ணங்கள், எழுத்துக்களின் வலுவை படம் நெடுக காண முடிகிறது.

முந்தைய படத்தின் முக்கிய நிகழ்வுகள், சின்னச் சின்ன சம்பவங்கள், வசனங்கள் ஆகியவற்றுடன் இரண்டாம் பாகத்தின் கதையோட்டத்தைப் பிணைத்திருப்பதில் முனைப்பு நன்றாகவே தெரிகிறது. முதல் பகுதியில் தியேட்டர் கட்டப்போவதாக ஜார்ஜ்குட்டி சொல்லுகிற வசனம், இப்படத்தில் பலித்திருக்கிறது. ஒரு cult திரைப்படத்தை இயக்கிவர்களுக்கு உள்ள இந்த சௌகரியத்தை அனாயசமாகக் கையாண்டிருப்பது, விட்ட இடத்திலிருந்து கதையைப் பார்க்கிற உணர்வை அளிக்கத் தவறவில்லை.

முந்தைய படத்தின் ஒரு முக்கியக் கதாபாத்திரமான ஜார்ஜ்குட்டியின் உதவியாளர் இப்படத்தில் இல்லை; அதை ஒரு வசனத்தில் சரிசெய்தாகி விட்டது. 2.0-வில் டாக்டர் வசீகரனுக்கு வருகிற அலைபேசி அழைப்பின்போது, ‘சனாஎன்று அழைப்பவர் பெயரையும் ஐஸ்வர்யா ராய் படத்தையும் காட்டியதுபோன்ற சாமர்த்தியம்.

ஏதோ கொலை செய்துவிட்டு, படுகுஷியாக, செல்வச்செழிப்போடு ஜார்ஜ்குட்டி நடமாடுவதுபோல காட்டாமல், அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரித்து, குற்றம் என்று ஒன்றிருந்தால் அதற்கு தண்டனையென்று ஒன்றும் உண்டு என்பதை வசனத்தில் முயலாமல், காட்சிப்படுத்தியிருப்பது அபாரம்.

விமர்சனம் வாசித்துவிட்டு, அரை சுவாரசியத்தோடு படத்தைப் பார்க்கிற பரிதாபத்துக்கு யாரையும் தள்ளிவிட விருப்பமில்லை என்பதால், கதை குறித்து விவரிக்க விரும்பவில்லை. முதல் படத்தில் நடந்த குற்றத்தின் விளைவு இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால், இதிலும் ஜார்ஜ்குட்டி ஜெயிக்க வேண்டுமென்ற பதைபதைப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்தி, இரண்டாம் பகுதியில் ஒரு சில காட்சிகளில் சற்றே அவநம்பிக்கை உண்டாக்கி, இறுதியில் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கிறார்கள் என்பதே படத்தின் சிறப்பு.

இந்தப் படத்தின் நாயகன் திரைக்கதை! ஆனால், அந்த நாயகன்மீது வெளிச்சம் வீசுகிற வேலையை மோகன்லால் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். குட்டிக் குட்டி கதாபாத்திரங்களுக்குமே படத்தில் ஒரு பங்கு இருக்கிறது என்பதால், இறுதி 25-30 நிமிடங்களில் அவர்கள் வந்து கதையை முடிவை நோக்கி முடுக்குகின்றபோது, சில காட்சிகள் வாயடைத்துப்போகச் செய்கின்றன என்பதே உண்மை.

இத்தகைய படங்களில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றின் பங்கு அளவிட முடியாதது. அந்த எதிர்பார்ப்பு பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பின்னணி இசை மலையாளப்படங்களின் இயல்பிலிருந்து அவ்வப்போது பிறழ்ந்து ஆங்காங்கே இறைச்சலாக அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

குறைகளே இல்லாத படமென்று சொல்ல முடியாது! முதல் பாதியில் ஒவ்வொரு செங்கலாகக் கதையை எடுத்து வைத்துக் கட்டுகிறபோது சில தொய்வான கணங்கள் ஏற்படுவதைக் கவனிக்காமல் விடுவதற்கில்லை. ஆனால், இரண்டாம் பகுதி அளிக்கிற விறுவிறுப்பு, விமர்சனப்பார்வைகளின் கூர்மையையும் தாண்டி, சராசரி ரசிகனாக்கி உற்சாகமூட்டுவதாகவே இருக்கிறது.

மோகன்லால்என்ன சொல்ல இந்த மனிதரின் நடிப்பைப்பற்றி? மொத்தப்படத்தின் சுமையையும் எளிதாகச் சுமந்துகொண்டு கடந்து போகிறார். மீனாவின் பாத்திரம்குழப்பமும் பயமும் கலந்து வாழும் ஒரு சராசரி குடும்பத்தலைவியின் பரிணாமத்தை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மலையாளம் தெரியாதவர்களும் அவசியம் பார்க்கலாம்; பார்க்க வேண்டும்.

திருஷ்யம்-2! பரவச அனுபவம்!

Monday, September 26, 2016

பின்க் – உரத்த அறிவுரை


பின்க் – உரத்த அறிவுரை
இந்தியாவில் ‘கோர்ட்-ரூம் டிராமா’ வகையிலான படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதில்லை என்று அவ்வப்போது எதார்த்த சினிமா விரும்பிகள் ஆதங்கப்படுகையில், எண்பதுகளில் தில்லி சாணக்யா திரையரங்கில் ‘க்ராமர் வர்ஸஸ் க்ராமர்’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்து பிரமித்தது நினைவுக்கு வரும். ஆனால், பாலிவுட்டில் இவ்வகைப் படங்கள் 60-களிலேயே வரத் தொடங்கியதாக ஞாபகம். ‘வக்த்’ ‘மேரா சாயா’ போன்ற படங்களின் குறிப்பிடத்தக்க காட்சிகள் நீதிமன்றத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தன. 80-களில் கூட ‘மேரி ஜங்’(தமிழில் ‘ஒரு தாயின் சபதம்’), 90-களில் ‘தாமினி’ (தமிழில் ப்ரியங்கா) போன்ற படங்கள் வெளியாகத்தான் செய்தன. 2014-ல் வெளியான மராத்திப்படம் ‘கோர்ட்’ ஆஸ்கார்வரைக்கும் போனது. ஆனால், ஏனைய மசாலாப்படங்களில் கோர்ட் சீன் என்ற பெயரில் நடத்திய கேலிக்கூத்துகள் காரணமாக, கோர்ட் சீன் என்றாலே ஒரு விதமான நக்கல் விளைவது இயல்பாகி விட்டது. கடுப்பேத்துறார் மைலார்ட்!
அந்த வகையில், ‘பின்க்’ திரைப்படம் நிச்சயம் குறிப்பிடத்தக்க, பிரமிப்பூட்டுகிற, சமகால நிகழ்வுகளுடன் இயைந்த ஒரு உண்மையான திரைப்படம் என்று முதலிலேயே ஒப்புக் கொள்ள வேண்டும். படம் முடிந்து வெளியேறுகையில் கணிசமான நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதால், இந்தப் படத்தை இன்னும் சிறிது நாட்களுக்கு நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன்.
      ஒரு நிகழ்ச்சியில் மூன்று இளம்பெண்கள் மூன்று வாலிபர்களைச் சந்தித்து, மானபங்கத்திலிருந்து தப்பிக்கிற முயற்சியில் ஒருவனுக்குப் படுகாயம் ஏற்படுத்தி, அடுத்தடுத்து சந்திக்கிற சிக்கல்களைச் சித்தரிக்கிற முயற்சியில், பாலின சமன்பாடு குறித்த ஒரு அழுத்தமான செய்தியை, இயன்றவரை பிரச்சார நெடியின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதை வலியுறுத்த சில ‘நச்’ வசனங்கள்.
      ”ஷராப் கோ யஹான் கலத் கேரக்டர் கி நிஷானி மானா ஜாதா ஹை; ஸிர்ஃப் லட்கியோன் கே லியே! லட்கோன் கே லியே தோ யே ஸிர்ஃப் ஏக் ஹெல்த் ஹஜார்ட் ஹை!
      ”மது அருந்துவது ஒழுக்கக்கேடாகக் கருதப்படுகிறது; பெண்களைப் பொறுத்தவரை மட்டும். ஆண்களைப் பொறுத்தவரை அது ஒரு உடல்நலக் கேடாகவே கருதப்படுகிறது.
      பெரும்பாலானோருக்கு இந்தக் கருத்து நெருடலாக இருக்கலாம் என்றாலும், இதில் இருக்கிற எதார்த்தம் உறைக்காமல் இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை, இந்தப் படத்தின் முக்கியமான செய்தியே வேறு என்று தோன்றுகிறது.
’நா’ ஸிர்ஃப் ஏக் ஷப்த் நஹி! அப்னே ஆப் மே பூரா வாக்ய ஹை! இஸே கிஸி தர்க், ஸ்பஷ்டிகரண் யா வ்யாக்யா கி ஜரூரத் நஹீ!
      ”’வேண்டாம்’ என்பது ஒரு வார்த்தை இல்லை; அதுவே ஒரு முழு வாக்கியம் ஆகும். இதற்கு ஒரு பதவுரை, விளக்கம், பொழிப்புரை அவசியம் இல்லை.
      ”வசந்த மாளிகை’ படத்தில் சிவாஜி சொல்வாரே! ‘சரீன்னா யாரா இருந்தாலும் விடப்படாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடப்படாது.”
      யெஸ்! இந்தப் படத்திலிருந்து முக்கியமாகச் சென்றடைய வேண்டிய செய்தி இதுவாகத்தான் இருக்க வேண்டும். விருப்பமில்லாத பெண்களை பலாத்காரமாக அடைய நினைக்கிற மூர்க்கத்தனம், குடிப்பழக்கத்தைக் காட்டிலும் தீமை விளைவிப்பது, ஆபத்தானது என்று அடித்துச் சொல்லலாம்.
      சுருக்கமான கதை!
      மினல்(தாப்ஸி), ஃபலக்(கீர்த்தி குல்ஹாரி) மற்றும் ஆண்ட்ரியா(ஆண்ட்ரியா தரியங்) மூவரும் தில்லியில் ஒரே அறையில் வசிக்கிற இளம்பெண்கள். ஒவ்வொருவர் பின்புலத்திலும் ஒரு குட்டிக் கிளைக்கதை இருக்கிறது; அவர்களுக்கென்று ஒரு கடந்தகாலம் இருக்கிறது. அது குறித்து கச்சிதமாக ஆங்காங்கே இயக்குனர் தொட்டுக் காட்டியிருக்கிறார். (மினல் 19 வயதில் தன் கன்னித்தன்மையை இழந்து, அதன்பிறகும் பிற ஆடவர்களுடன் சில முறை உடலுறவு கொண்டதாக நீதிமன்றத்திலேயே ஒப்புக் கொள்வது ஒரு சாம்பிள்). அவர்கள் வசிக்கிற குடியிருப்புக்காரர்கள் சிலர் இவர்களது நடத்தையை சந்தேகத்துக்குரியதாகக் கருதுகிறார்கள். ஆனால், இதெல்லாம் அவர்களை வலுக்கட்டாயமாக சுகிக்க அனுமதிக்கிற டிக்கெட்டுகள் இல்லை அல்லவா?
      ஒரு ராக் இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் இந்த மூன்று பெண்களும் மதுவருந்திய நிலையில், ராஜ்வீர் என்ற பெரிய இடத்துப் பையன் மினலை மானபங்கப்படுத்த முயல, தன்னைக் காப்பாற்றிக் கொள்கிற முயற்சியில் அவனை ஒரு பாட்டிலால் தாக்கி காயப்படுத்துகிறாள் மினல். மூன்று பெண்களும் அங்கிருந்து தப்பித்து, ஒரு சில நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு, தங்களைப் பழிவாங்கத் துடிக்கிற அந்தப் பணக்கார இளைஞர்களிடமிருந்து தப்பிக்க, காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். வழக்கம்போல, பெரிய இடத்துத் தலையீடுகளால் பிராது கொடுத்த மினலே கைது செய்யப்படுகிறாள். உடல்நிலை குலைந்து, வக்கீல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, உயிருக்குப் போராடுகிற தன் மனைவிக்கும் சேவை செய்து கொண்டிருக்கும் தீபக் செஹ்கல்(அமிதாப் பச்சன்) என்ற வக்கீலின் உதவியுடன், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுபடுகிறாள். இந்தப் போராட்டத்தின் இடையில் அவர்கள் சந்திக்கிற அவமானங்கள், அவர்கள்மீது சுமத்தப்படுகிற களங்கங்கள், அபாண்டங்கள், கண்ணீர், வேதனை இவையெல்லாம்தான் இந்தப் படத்தின் சதையும் நரம்பும் இரத்தமுமாய் படம் நெடுக!
                ரத்தக்காயங்களுடன் அந்தப் பணக்கார வாலிபன் ஹோட்டலிலிருந்து மருத்துவமனை நோக்கி விரைகிற முதல்காட்சி தொடங்கி, இறுதியில் டைட்டிலில் நடந்த நிகழ்வுகளைப் பக்கவாட்டில் காட்டி முடிப்பதுவரை, இத்தனை விறுவிறுப்பாக கதை சொல்லிய ஒரு இந்திப்படத்தை அண்மையில் நான் பார்த்ததாக நினைவுகூர முடியவில்லை. அபாரம்! ஒரு குற்றசாட்டு; ஒரு வழக்கு; வாதப்பிரதிவாதங்கள் என்ற அளவில் நேர்கோட்டில் பயணித்தாலும், அவ்வப்போது பொதுப்புத்தியை    நினைவூட்டுகிற வசனங்களும், காட்சியமைப்புகளும் திரைக்கதைக்கு வலு சேர்ப்பதுடன், கதையோட்டத்துடன் முற்றிலும் ஒன்ற வைத்து விடுகிறது. ஒரு வறண்ட ஆவணப்படத்தைப் போல, நிறைய பெண்ணியத்தைத் தாளித்துக்கொட்டி, அனாவசியமான மூன்றாம்தரமான வசனங்களைச் சேர்த்து, படம் பார்க்க வந்தவர்கள் முகத்திலேயே காறித்துப்புவது மாதிரி (உதாரணம்: ஜோக்கர்) தன்னை ஒரு யோக்கியசிகாமணி என்று படத்தின் இயக்குனர் எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்த முயலவில்லை. அதுதான் இந்தப் படத்தின் மிகமுக்கியமான அம்சம்.
      கிட்டத்தட்ட இதே கருவுடன் வெளிவந்த ‘தாமினி’ படத்தில், ‘நீ உங்கம்மாகிட்டேயிருந்து எந்த வழியா வந்தியோ அங்கே கைவைச்சான். உங்கம்மாகிட்டே எங்கிருந்து பால்குடிச்சியோ அங்கே கைவச்சான்’ என்றெல்லாம் பச்சைகொச்சையாய் வசனம் எழுதி, படபடவென்று கைதட்டலுக்காக ஆலாய்ப் பறக்கவில்லை. தர்மசங்கடமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு உணர்ச்சிப்பெருக்குடன் கூடிய பதில்கள் கொட்டப்படுகின்றன. ஆனால், கேள்விகளிலும் பதில்களிலும் இருக்கிற உண்மை சுடுகின்றது.
                அமிதாப் பச்சன்! 90களில் பல சிக்கல்களுக்குள் ஆட்பட்டு, செக்கு எது, சிவலிங்கம் எது என்று தெரியாமல், மனீஷா கோய்ராலாவுடனும் ரம்யா கிருஷ்ணனுடனும் டூயட் பாடி, ‘இனிமே பச்சன் படம்னா எடு ஓட்டம்’ என்று எண்ணவைத்தவர், ஒரு ஆறேழு வருடங்கள் கழித்து, தன் வயதுக்கொத்த பாத்திரங்களை ஏற்று, இன்று திலீப்குமாருக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த நடிகர் என்று பெரும்பாலானோரால் ஏற்கப்படுமளவுக்கு தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! (நம்மூரு சூப்பர் ஸ்டாரும் இப்படி நடிக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்! ஹும்!)
      ‘மருந்துகளில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்; என்னால் வாதிட முடியாது’ என்று மனைவியிடம் சொல்வது; அதற்கேற்றாற்போல கோர்ட்டில் முதல் நாளன்று தடுமாறுவது; அதன்பிறகு, மெல்ல மெல்ல தனது சமயோசிதத்தையும் வாதத்திறமையையும் வெளிக்கொணர்வது என்று அந்தக் கதாபாத்திரத்துக்குள் கூடுகட்டி வாழ்ந்திருக்கிறார். அந்தக் குரல்; அந்த உச்சரிப்பு; அந்த முகபாவங்கள்! ‘சிவாஜி என்ற சிங்கம் உயிரோடில்லை; அந்த சிங்கத்தின் இடத்தை இந்த சிங்கம்தான்  நிரப்ப முடியும்’ என்று கமல்ஹாசன் சொன்னது எவ்வளவு உண்மை!
      தாப்ஸி பன்னு! சத்தியமாக நம்பவே முடியவில்லை. முதல் இந்திப்படம், அதிலும் அமிதாப் பச்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிற படம். அதில் தனக்கென்று ஒரு தனித்துவத்துடன் நடித்து மெய்யாலுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்துக் கணிக்கக் கூடாது என்பதை உணர்வோமாக!
      ஃபலக் அலியாக வரும் கீர்த்தி குல்ஹாரி, நீதிமன்றத்தில் ‘ நாங்கள் பணம் வாங்கிக்கொண்டோம்’ என்று கதறுகிற காட்சியில், சற்றே இளகிய மனம் கொண்டவர்கள் நிச்சயம் அழுவதற்கான வாய்ப்பிருக்கிறது. மேகாலயா பெண்ணாக வருகிற ஆண்ட்ரியாவின் பாத்திரத்தின் மூலம், வடகிழக்கு இந்தியப் பெண்கள் குறித்த அலட்சிய மனோபாவத்தையும் ஓரிரு வசனங்களில் குத்திக் காட்டியிருக்கிறார்கள்.
      பொதுவாக நீதிமன்றக்காட்சிகளுக்கு வலுவூட்ட, வசனங்களில் கூர்மை மிக அத்தியாவசியமாகும். இந்தப் படத்தில் அண்மைக்கால இந்திப்படங்களிலேயே மிகவும் சிறப்பான வசனம் திறம்பட எழுதப்பட்டிருக்கிறது.
      ”ஹமாரா யஹா கடி கீ ஸூயி கேரக்டர் டிஸைட் கர்தீ ஹை”
      ”இங்கே கடிகாரத்தின் முள் ஒழுக்கத்தை நிர்ணயிக்கின்றன.”

      ”ராத் கோ லட்கியான் ஜப் அகேலி ஜாத்தீ ஹை தோ காடியா ஸ்லோ ஹோஜாத்தி அவுர் உன்கே ஸீஷே  நீச்சே ஹோஜாத்தே ஹை! தின் மே யே மஹான் ஐடியா கிஸீ கோ நஹீ ஆத்தா
      ”இரவில் பெண்கள் தனியாகப் போனால், வாகனங்களின் வேகம் குறைந்து, அதன் கண்ணாடிகள் கீழே இறக்கப்படுகின்றன. பகலில் யாருக்கும் இந்தச் சிறந்த எண்ணம் வருவதில்லை.

      ”ஜோ லட்கியான் பார்ட்டி மே ஜாத்தீ ஹை அவுர் ட்ரிங்க் கர்த்தீ ஹை, வோ புஷ்தைனி ஹக் பன்ஜாத்தீ ஹை ஆப் கா
      ”பார்ட்டிக்குப் போய், மதுவருந்தும் பெண்கள் உங்களுக்கு எளிதான உரிமைப்பொருள் ஆகிவிடுகிறார்கள்.

      ”ஆஜ்தக் ஹம் ஏக் கலத் டைரக்‌ஷன் மே எஃபர்ட் கர்தே ரஹே! வீ ஷுட் ஸேவ் அவர் பாய்ஸ்; நாட் கேர்ள்ஸ்! பிகாஸ் இஃப் வீ ஸேவ் அவர் பாய்ஸ், அவர் கேர்ள்ஸ் வில் பீ ஸேஃப்
      ”இன்றுவரை நாம் தவறான திசையில் முயற்சி செய்து வருகிறோம். நாம் நம் ஆண்களைப் பாதுகாக்க வேண்டும்; பெண்களை அல்ல. ஏனெனில், ஆண்கள் பாதுகாக்கப்பட்டால், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.”
      சமீபகாலங்களாகவே, இந்தியில் மீண்டும் நல்ல படங்கள் வரத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் ‘No one killed Jessica’, ‘Jolly LLB’, ‘Shaurya’ போன்ற படங்களின் வரிசையில் சட்டம், நீதிமன்றம் தொடர்புடைய படமாக இருந்தாலும், சலிப்பின்றி அலுப்பின்றி, ஒருவித பதைபதைப்புடன் பார்க்க முடிகிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றி!
      இறுதியாக….
These boys must realise that ’No’ கா மத்லப் No ஹோத்தா ஹை!. உஸே போல்னேவாலி லட்கி கோயி பரிச்சித் ஹோ, ஃப்ரெண்ட் ஹோ, கேர்ள்ஃப்ரெண்ட் ஹோ, கோயி செக்ஸ் வொர்க்கர் ஹோ யா அப்னி பீவி க்யூ நா ஹோ! ‘No’ means no and when someone says No, you stop!”
      வேண்டாம் என்று சொல்லும் பெண் அறிமுகமானவரோ, தோழியோ, காதலியோ, பாலியல் தொழிலாளியோ அல்லது உங்கள் மனைவியோ, வேண்டாம் என்றால் வேண்டாம். நிறுத்துங்கள்
       சினிமாவால் சமூகத்தைத் திருத்த முடியும் என்று நம்புகிற இளிச்சவாயன் அல்ல நான். ஆனால், இந்தப் படம் ஒரு நபரையாவது திருத்தினால் நன்றாக இருக்குமே என்று நப்பாசைப்படுகிறேன்.
       பின்க் – ஒரு தேவையான படம்.

***********************************************************************************************************

Thursday, August 25, 2016

ஜோக்கர் – எதிர்மறை கோடல்


இது - திரைப்படம் என்பது அடிப்படையில் கேளிக்கையாக இருத்தல் போதுமானது என்ற எளிமையான அணுகுமுறையுடன் சினிமா பார்த்து வருகிற ஒரு சராசரி மனிதனின் விமர்சனம். ஆகவே, ‘சினிமா விமர்சனத்துக்கு நாங்கள்தான் அதாரிட்டி’ என்று கூரைமேல் ஏறி நின்று கூவுகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல், அடுத்த படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதி சமூகத்தொண்டு ஆற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம், அடியேன் காலிவுடத்திலிருந்து(Hollywood) கரைபுரண்டோடி வருகிற ஆங்கிலப்படங்களைக் கண்டுகளித்துக் கொண்டிருப்பவனல்லன்; கொரிய மொழிதனில் கொட்டிக்கிடக்கிற அரிய படங்களை அள்ளித்தின்று அஜீரணத்தில் அவதிப்படுபவனும் இல்லை; கிறித்தோபர் நோலனார்(Christopher Nolan), இசுடீவன் இசுபீலபர்க்(Steven Spielberg) இன்னாரன்னோரின் இணையற்ற திரைக்காவியங்களைக் கண்டு இன்புற்றவனும் அல்லன். சிதபீளடர்(Sydfield) எழுதிய திரைக்கதைச் சாத்திரத்தைக் கரைத்துக் குடித்து, அனைத்து சினிமாக்களுக்கும் பிரேதப்பரிசோதனை செய்கிற திறனும் எனக்கில்லை. சராசரி, அல்லது அதற்கும் கீழான ரசிகன் என்பதில் எனக்கு ஒரு வெட்கமும் இல்லை.
சத்யத்ஜித் ரே, மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், பார்த்தோ கோஷ், கிரீஷ் கர்னாட் போன்ற அதிமேதாவிகளின் படங்களைப் பார்ப்பது எனக்கு அல்சரில் அவதிப்படுவதற்கு ஒப்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிறைவேறாத ஆசையுடன் அகாலமரணம் அடைந்த இந்த ‘ஆர்ட் ஃபிலிம்’ என்பதன் ஆவி, அவ்வப்போது தலைகாட்டியபோதெல்லாம் அந்தப் பக்கம் நான் நடமாடுவதையே தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவது வழக்கம்.
மனோதத்துவத்துவத்தில் ‘எதிர்மறை கோடல்(Negative Bias)’ எனப்படுகிற ஒரு சங்கதி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சில அழகான ஓவியங்களையும் சில அலங்கோலமான ஓவியங்களையும் காட்டுகிறபோது, இரண்டாம் ரக ஓவியங்கள் மூளையில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சற்று உடல்கூறியலும் தெரிந்தவர்களிடம் உரையாடினால், இந்த எதிர்மறை கோடல் எனப்படுவது மனிதனின் தற்காப்பு உணர்ச்சியை வளர்த்துக் கொள்வதற்காக இயற்கையாகவே சற்று அதிகப்படியாக அளிக்கப்பட்டிருப்பதை அறிய நேரிடும். ‘ஜோக்கர்’ திரைப்படம் என்னைப் பொறுத்தமட்டில், அனேகமாக தமிழ்த் திரையுலக வரலாற்றில், அலுப்பூட்டுகிற அளவுக்கு எதிர்மறைக்கோடலைக் கையாண்ட படமாக இருக்கிறது. ஒரு எழவு வீட்டுக்குச் சென்று வந்தது போலிருக்கிறது.
அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமங்கள் இந்த நாட்டில் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இந்த ஒற்றைக்கருவை வைத்துக் கொண்டு, அதில் உலகமயமாக்கல், மணல் கொள்ளை, நிலத்தடி நீர் பிரச்சினை, மூட நம்பிக்கை, லஞ்சம், ஊழல், அலட்சியம் என்று எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் தலா ஒரு துளி சேர்த்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட இருளோவியத்தை வரைந்து, ‘எல்லாரும் ஜோக்கர்கள்’ என்று முடித்திருக்கிறார்கள்.
4ஜி செல்போன் புழங்குகிற கிராமத்தில் கழிப்பறை கிடையாது. அதனால், நாயகி திருமணத்துக்கு முதலில் மறுத்து, பிறகு சம்மதித்து, அதே கழிப்பறையில் காயமுற்று கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறாள். உடனே நாயகன், ஒரு செல்போன் கோபுர உச்சியிலிருந்து நாட்டின் குடியரசுத்தலைவராகப் பிரகடனம் செய்து கொண்டு, உத்தரவுகளாகப் பிறப்பித்துத் தள்ளுகிறார். இந்த அபத்தமான கற்பனையின் அடிப்படையில், ஒரு மேடை நாடகத்தின் பாணியில் எல்லாரையும் கலாய்த்து, எல்லாவற்றையும் குற்றம்சாட்டி ஒரு மிகையான ஆவணப்படத்தை எடுத்து இம்சித்திருக்கிறார்கள். நல்ல வேளை, பாத்திரப்படைப்பில் இருக்கிற குறைபாடுகள் தெரியாதபடி, நடித்தவர்கள் மெனக்கெட்டு ஒப்பேற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு நம்மை பாப்பிரெட்டிபட்டியில் வலம்வரச் செய்திருக்கிறது. பாடல்கள் சற்றே கேட்கும்படியாக இருக்கிறது. (பின்னணி இசை நாராசம்)
அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட பல வசனங்களை எடுத்துக் கையாண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. திரையரங்கில் பலர் வலிந்து வலிந்து கைதட்டினார்கள். இது போன்ற படங்களில் அமங்கலமான வார்த்தைகளைப் புழங்க விடுவது ஒரு நல்ல வர்த்தக உத்தி. ’இங்கே வாழறதுதான் கஷ்டமா இருக்குன்னா, இப்ப பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்க’ என்று ஒரு வசனம் ஒரு சாம்பிள். என்னவோ இதையெல்லாம் ராஜு முருகன் சொல்லித்தான் தமிழ்கூறும் நல்லுலகமே புரிந்து கொண்டிருப்பதுபோல, அதற்கு ஜல்லியடிக்கிற ஒரு முகநூல் கும்பல் வேறு!
நிலத்தடி நீரை பாட்டிலில் அடைக்கிற தொழிற்சாலையில் வேலைபார்த்து, லாரியில் ஏறி அரசியல் கூட்டங்களுக்குப் போய், முண்டியடித்து குவார்ட்டரையும் பிரியாணியையும் வாங்குகிற நாயகனுக்கு, தன் வீட்டில் ஒரு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான், ஞானோதயம் பிறக்கிறது. இவனுக்கும் சராசரி மசாலாப்பட நாயகனுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறதோ தெரியவில்லை. (யாராவது ஆராய்ச்சி பண்ணி எழுதுவார்கள் என்று நம்புவோம்). ஒவ்வொரு சராசரி மனிதனும் தனக்கு ஒரு இடையூறு ஏற்படுகையில்தான், எதிர்க்கிற எண்ணம் துளிர்க்கும் என்பது இயல்பு. சில சினிமாக்காரர்கள் அவரவர் படங்களின் திருட்டு விசிடி வந்தால் குய்யோ முய்யோவென்று கத்துவார்கள் இல்லையா, அது போல! உலகமெங்கும் இதே விதிப்படித்தான் மனித சமூகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
ஏதோ ஒரு ஊரில் எவனோ ஒரு கிறுக்கன் எதையெதையோ உளறித் திரிவதையெல்லாம் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பக்ருதீன் அலி அகமது அவசரநிலைப் பிரகடனத்தைப் பிறப்பித்தார் என்பதை வைத்து நாயகன் தன்னை ஜனாதிபதியாக அறிவிப்பதாகக் காட்டியிருப்பதெல்லாம் சரியான காமெடி. ஆகவேதான், மன்னர் மன்னன் நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதாக அறிவிக்கிறபோதும் எனக்கு ஒரு நமுட்டுச் சிரிப்பே வந்தது. டைரக்டர் சார், ராணுவ ஆட்சி அமல்படுத்தினால், நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று எந்த வரலாற்றில் படித்தீர்கள்? ஒரு எமர்ஜென்ஸி இந்த நாட்டை எப்படிப் புரட்டிப் போட்டது என்று தெரியுமா?
மன்னர் மன்னனை அனைவரும் காமெடிப்பீஸ் என்று கருதுவதில் எந்தத் தவறும் இல்லையென்றே நான் கருதுகிறேன். ஒரு கழிப்பறை விஷயத்தில்கூட இந்த நாட்டில் பல அவலங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது என்பதுவரையில் மறுப்பதற்கில்லை. ஆனால், அங்கிருந்து பிரச்சினைகளை நேர்கொள்ள நாயகன் மேற்கொள்ளுகிற உத்திகள், அவனது குறிக்கோள் தீர்வுகள் காண்பதா அல்லது வெறும் விளம்பரம் தேடலா என்பதைத் தெளிவாகச் சொல்லித் தொலைத்திருக்கலாம். காரணம், அவ்வப்போது ‘ஃபேஸ்புக்’ ‘வாட்ஸாப்’ நிலவரங்களை அறிந்து கொள்கிறார். சரி, அவருக்குத்தான் மறைகழண்டு போயிருக்கிறது என்றால், அவரது அபத்தமான போராட்டங்களுக்கு ரெண்டு பேர் சப்போர்ட் வேறு! தும்மினால் வழக்குப்போடுகிற பொன்னூஞ்சல் என்ற கதாபாத்திரம், திடீரென்று ஒருவன் ‘ நான் பிரெசிடெண்ட் பேசுகிறேன்’ என்று போன் செய்தவுடன், அகமும் முகமும் மலர்ந்து ‘சொல்லுங்க பிரெசிடெண்ட் சார்’ என்று அவரது தலைமையில் போராட்டத்தில் குதிக்கிறாராம். இப்படியொரு அபத்தத்தை ஒரு பக்கா மசாலாப்படத்தில்கூட நான் பார்த்ததில்லை.
மன்னர் மன்னனாக நடித்திருக்கும் சோமசுந்தரம், மல்லியாக வருகிற ரம்யா பாண்டியன், இசையாக வரும் காயத்ரி கிருஷ்ணா, பொட்டி கேஸ் பொன்னூஞ்சலாக வருகிற ராமசாமி இவர்கள் இந்தப் படத்துக்கு தங்களது நடிப்பால் நிறையவே ஆக்ஸிஜன் ஏற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இடைவேளையோடே தேவி பாலாவை விட்டு தலைதெறிக்க ஓடித் தப்பித்திருப்பேன்.
ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்புகளிலும் வருகிற ‘மீம்ஸ்’களைத் தொகுத்து ஒரு படம் எடுத்தால், அது எப்படியிருக்கும் என்பதற்கு இந்த ‘ஜோக்கர்’ ஒரு உதாரணம். வேடிக்கை என்னவென்றால், கடவுள் தொடங்கி கடைக்கோடி குடிமகன் வரை அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் இயக்குனர் நிறுத்தியிருப்பதால், நிறைய பேருக்கு ‘இந்தப் படம் பிரமாதம்’ என்று சொல்லுவதன்மூலம் தங்களைத் தாமே தூக்கிப் பிடிக்க வசதியாக இருக்கிறது. ஆனால், நம்மைச் சுற்றி நிகழும் பல அவலங்களுக்கு நானும் பொறுப்பானவன் என்ற சொரணை எனக்கு இருப்பதால், இதுபோன்ற பொத்தம்பொதுவான மூர்க்கத்தனமான விமர்சனங்களை ‘பலே’ என்று பாராட்டி, ‘இது திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போடப்போடுகிற படம்’ என்றெல்லாம் கொடிதூக்கிக் கூவ முடியவில்லை.

இதுபோன்ற படங்கள் நிறைய வர வேண்டும் என்று ஊடகங்களில் நிறைய எழுதுகிறார்கள். அப்பாடா, சினிமாவை இப்படி ஒழித்தால்தான் உண்டு; நடக்கட்டும். 

Tuesday, February 16, 2016

இறுதிச்சுற்று???????



      பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் கதையாகப்பட்டது, தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிக் கிளம்புகிற மின்சார ரயில் வண்டிகளைப் போன்றது. அவ்வப்போது சைதாப்பேட்டைக்கு முன்னாலும், கோட்டை தாண்டியும் புசுக்கென்று நின்று சில நிமிடங்கள் கழுத்தறுத்தாலும், எப்படியும் கடற்கரையில் இறக்கி விடுவது உறுதி. என்ன, சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத பிளாட்பாரத்தில் வண்டி போய் நின்று கடுப்பேற்றுவதும் நடக்கிற சங்கதிதான்.

                'இறுதிச்சுற்று' - ஒரு பார்வையாளராக என்னை ஏமாற்றவில்லை. ஒவ்வொரு காட்சியிலும், 'அடுத்து இது வரும்' என்ற எனது எல்லா ஊகங்களையும் உண்மையாக்கி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வைத்த படம்ஆனால், ஒரு திரைப்படத்திலிருந்து நாம் எதிர்பார்ப்பது இதற்கு முற்றிலும் எதிர்மறையானது. கதையின் போக்கைக் கணிக்க முடிவதற்கும், காட்சிகளின் அடுக்கை ஊகிக்க முடிவதற்கும் இருக்கிற வித்தியாசம் மிகப் பெரியது. அவ்வகையில் 'இறுதிச்சுற்று' சரவணபவனில் இரண்டாவது முறை சாப்பிடுகிறகுவிக் மீல்ஸ்போல தவிர்க்க முடியாத ஒரு அலுப்பைத் தந்திருக்கிறது என்பதே உண்மை.

இந்தப் படத்தை மைக் டைசன் பார்க்க விரும்புவதாக செய்திகள் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றன சில பத்திரிகைகள். நியாயம் தான்; இந்தப் படத்தில் வரும் சில below-the-belt சங்கதிகளை, அத்தகையunsporting antics நிறைய ஆடிய மைக் டைசன் நிச்சயம் பார்த்துப் பாராட்டுவார். ரெப்ரீ சண்டையை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் லூ சாவரீஸை துவம்சம் செய்ததோடு அல்லாமல், ரெப்ரீ ஜான் கோய்லையும் அடித்து வீழ்த்தியவர் அல்லவா டைசன்? அவருக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

'விகடன்' விமர்சனத்தில், இயக்குனர் சுதா கொங்கரா இரண்டரை ஆண்டுகளாய், மகளிர் குத்துச்சண்டை குறித்து மிகுந்த ஆராய்ச்சி மேற்கொண்டதாக சொல்லிப் பாராட்டியிருப்பதை வாசித்து எனக்கு சிரிப்பே வந்து விட்டது. குத்துச்சண்டைகள்  எப்படி நடைபெறுகின்றன என்று எந்த அளவு இயக்குனர் வீட்டுப்பாடம் செய்திருக்கிறார் என்பதற்கு, படத்தின் இறுதியில் வருகிற உலக சாம்பியன்ஷிப் தொடர்புடைய காட்சிகளே ஒரு சோறு பதம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பட்டியலில் உள்ள எந்த விளையாட்டின் சர்வதேச போட்டியிலும், ஊக்க மருந்து பரிசோதனைகளை ஒரு சர்வதேச கமிட்டியே மேற்பார்வை செய்து நிர்வகிக்கும். ஒரு குத்துச்சண்டை வீரனாக இருந்து பயிற்சியாளராகும் கதாநாயகனுக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாதது போல, அவரை வில்லன் மிரட்டுவது போல காட்சி அமைத்திருப்பது நகைப்பூட்டுவதாக இருக்கிறது. மேலும், அரை இறுதியில் ஜெயித்த ஒரு வீரர் அல்லது வீராங்கனை, காயம் உட்பட பிற மருத்துவ காரணங்களுக்காகத் தானே முன்வந்தால் ஒழிய அவரை இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள விடாமல் எந்தக் கொம்பனும் தடுக்க முடியாது. இந்த பூச்சாண்டிக்குப் பயந்து கதாநாயகன் ராஜினாமா செய்வது போல காட்சி அமைத்திருப்பதிலேயே, குத்துச்சண்டை குறித்து எவ்வளவு விபரம் திரட்டியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

குத்துச்சண்டையில் இடுப்புக்குக் கீழே அடிப்பது, நடுவரை அடிப்பது, ஜட்ஜுகளைத் தாக்குவது என்பதெல்லாம் 80-களிலேயே கடுமையான குற்றங்களாக்கப் பட்டு விட்டன. லாரி கோம்ஸ், மைக் டைசன் ஆகியோரின் குத்துச்சண்டை வரலாற்றை மேலோட்டமாக வாசித்திருந்தால் கூட, அவர்கள் இத்தகைய குற்றங்களுக்காக என்ன பாடு பட்டார்கள் என்று புரியும். அப்படியிருக்கையில், தொடர்ந்து இத்தகைய விளையாட்டு விதிமீறல்களை செய்கிற habitual offender கதாநாயகியை, மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு உலக சாம்பியன்ஷிப் ஆட, குத்துச்சண்டை அனுமதித்திருப்பதாய்க் காட்டியிருப்பது அபத்தத்திலும் அபத்தம்

'இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்களுக்காக படத்தை மோசம் என்பதா?' என்று கேட்பவர்களுக்கு - நிச்சயம் இது மோசமான படம் இல்லை; ஆனால், இந்த அளவுக்கு வியந்து விகசிக்குமளவுக்கு இது ஒரு காவியமும் இல்லை. குறிப்பிட்ட நுணுக்கங்களில் கவனம் செலுத்தி, கதைக்கட்டிலும் பாத்திரப்படைப்பிலும் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால், இது இந்தியாவிலேயே இதுவரை தயாரிக்கப்பட்ட Sports Drama-க்களில் மிகச் சிறந்த படம் ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது. தற்போதைக்கு, இந்தப் படம் 'மேரி கோம்' படத்தின் கால்நுனி நிழல் அளவுக்கே இருக்கிறது என்பதே வேதனை. சுருக்கமாக சொன்னால், இது குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட - ஒரு அடக்கி வாசிக்கப்பட்ட romantic melodrama; அவ்வளவே!

சினிமா தவிரவும் உலக விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், இந்தப் படத்தில் சித்தரித்திருப்பதைப் போல, எங்கிருந்தோ யாரோ ஒரு பெண்ணை பயில்வித்து, ஒரு ஹெவி-வெயிட்டுடன் மோதி, தோல்வியடையச் செய்து, பிறகு நேரடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கே அழைத்துப்போவதெல்லாம், விட்டலாச்சாரியா உயிரோடு இருந்தால் அவர் படங்களில் நடக்கிற சங்கதிகள். மாவட்டம், மாநிலம், மண்டலம் அப்புறம் தேசிய அளவிலான போட்டிகள் என்று ஏழுகடல், ஏழுமலை தாண்டாமல், ஐந்து நிமிடப் பாட்டில் ஹீரோ கோடீஸ்வரன் ஆவதுபோல, காட்டியிருப்பதேல்லாம் திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம் என்று அடித்துச் சொல்லலாம்

விகடன் விமர்சனத்தில் மேலுமொரு நகைச்சுவைக் குறிப்பு: "'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!". படத்தின் ஆரம்பத்தில், 'கதையில் குறிப்பிடப்படும் சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே' என்று போட்ட டிஸ்க்ளைமர் கார்டை விகடன் விமர்சனக் குழு பார்க்கவில்லை போலிருக்கிறது. ஒரு படத்தைப் பாராட்டுவது என்று முடிவு செய்தால், என்னவெல்லாம் பாசாங்கு பண்ணுறீங்க சாமிகளா! விகடன் விமர்சனத்தில் குறிப்பிட்ட "இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்" தான் இப்படம் குறித்த பெரும்பாலான மிகையான புகழுரைகளுக்குக் காரணமே தவிர, இது இந்த அளவுக்குக் கொண்டாடத்தக்க ஒரு படமே அல்ல. “ஒரு ஏழைப்பெண் எப்படி தனது சூழலிலிருந்து விடுபட்டு, வெற்றியின் உச்சியை அடைகிறார்? அவரது பாதையில் அவர் கடக்க நேரிடுகிற முட்கள் எத்தனை? துயரங்கள் எத்தனை? தியாகங்கள் எத்தனை?” என்ற சலித்துப்போன போலிப் பெண்ணியப் பிரச்சாரத்தின் ஒரு நாசூக்கான வடிவம்தான் 'இறுதிச்சுற்று".
மற்றபடி, இந்தப் படத்தின் வருகிற எந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் திரையில் முதன்முதலாய்ப் பார்த்தீர்கள்? மனைவியைப் பிரிந்து மது,மாது என்று வாழ்கிற கதாபாத்திரம் புதுமையா? குடும்பத்துக்காக தியாகம் செய்கிற நாயகி புதுமையா? தனது ஊதாரித்தனத்துக்காக மகள் சம்பாத்தியத்தை ஏப்பமிடுகிற தகப்பன் புதுமையா? சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் மீது காதல்வயப்படுகிற பெண் புதுமையா? பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்த வேண்டும் என்று அலைகிற வில்லன் புதுமையா? நாயகி மீன் விற்கிற பெண் என்பதும், நாயகன் குத்துச்சண்டை பயிற்சியாளர் என்பதும் தவிர்த்துப் பார்த்தால், இந்தப் படத்துக்கும் யுகயுகமாய் நாம் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு வீடு திரும்பிய மற்ற படங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று சத்தியமாய் எனக்குப் புரியவில்லை.
மாதவனின் கதாபாத்திரம் - 'இக்பால்' படத்தின் நசீருத்தீன் ஷா மற்றும் 'சக்தே இந்தியா' ஷாரூக்கான் இருவரது கதாபாத்திரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் சுரண்டியெடுத்து பூசப்பட்டிருக்கிறது என்பதுதானே உண்மை? ஒரு பயிற்சியாளருக்கும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைக்கும் இருக்கக் கூடிய மெல்லிய உறவை 'மேரி கோம்' படத்தில் நாம் பார்க்கவில்லையா? சில இடங்களில் 'மிலியன் டாலர் பேபி' -கிளின்ட் ஈஸ்ட்வுட் -ஹிலாரி ஸ்வான்க் ஞாபகம் வருகிறது. (ஐயையோ, ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகிற வியாதி என்னையும் தொற்றிக் கொண்டதே, கடவுளே!)

            இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான இப்படத்தில், இருக்கிற விரல்விட்டு எண்ணத்தக்க கதாபாத்திரங்களைச் சரிவரச் செதுக்கி, திரைக்கதையைச் செம்மையாய் அமைத்திருந்தால், இன்று கொண்டாடுகிறவர்களின் புகழ்ச்சிக்கு இந்தப் படம் உண்மையிலே தகுதியுடையதாய் இருந்திருக்கும். ஒரு பொன்னான வாய்ப்பு பறிகொடுக்கப் பட்டிருக்கிறது. வாட் ய ஷேம்!

      மாதவனை எனக்குப் பிடிக்கும். ’ஆய்த எழுத்து’, ‘அன்பே சிவம்’, ‘ரன்’ போன்ற படங்களில் ஏற்கனவே விதவிதமாய் நடித்து நிரூபித்தவர்தான் என்றாலும் ‘தம்பி’ மாதிரி அனாவசியமாக முறைத்து, அளவுக்கதிகமாக இரைந்து நடித்திருப்பாரோ என்று ஒருவிதமான பயத்துடன் போயிருந்தேன். மனிதரின் அமெரிக்கையான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் பல சறுக்கல்களையும் தாண்டி மனதுக்குள் ஐஸ்க்ரீம் போல் இறங்கியது. நிஜத்தில், மாதவன் என்ற கோந்து ஒன்றுதான் இந்த உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்திருக்கிறது. ஆனால், அந்த அசுர உழைப்பும், அமெரிக்கையான நடிப்பும்கூட ஒரு தெளிவான பிம்பத்தை இறுதியில் அளிக்கவில்லை என்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. சிவாஜி,கமல்,அமிதாப்,மம்மூட்டி போன்ற பல நடிகர்கள், தங்களது நேர்மையான உழைப்பால் பல சொதப்பல் படங்களையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது மாதவனும் சேர்ந்து, தன் தோள்களில் ஒரு படத்தின் மொத்தச்சுமையையும் தாங்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

       நாசர், ராதாரவி இருவரது நடிப்பும், அனுபவசாலிகளுக்கும் புதியவர்களுக்கும் இருக்கிற அடிப்படை வித்தியாசத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ராதாரவி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்க, நாசர் அந்தக் கலகலப்பான பாத்திரத்துக்கு ஜீவன் அளித்திருக்கிறார்.

      மேற்கூறிய மூவர் தவிர்த்து பிறரின் நடிப்பு பெரும்பாலும் மிகவும் சீரியல்தனமாய் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. ரித்திகா சிங் அவ்வப்போது கிறீச்சிடுவதையும், மூக்கு விடைக்க, முகம்சுளிக்க வசனத்தை இரைந்து சொல்வதையும் நடிப்பு என்ற கணக்கில் சேர்க்க, நான் வேறோரு படத்தில், இதைவிட மோசமான நடிப்பைப் பார்த்தாக வேண்டும். அக்காக்காரியாக வரும் மும்தாஜ் சர்க்காரின் பொறாமை ஒரு புதிராக இருக்கிறது என்பதால், அவரது மாறுகிற உணர்ச்சிகள் எண்ணைமேல் தண்ணீர்த்துளிகள்போல ஒட்டாமலே இருக்கின்றன. அந்தப் பொறுப்பில்லாத அப்பாவின் நடிப்பு படத்தில் இன்னொரு நகைச்சுவையாய் இருந்தாலும், கொஞ்சம் புன்னகைக்க வைக்கிறது.

      இசை சந்தோஷ் நாராயணன். படத்தில் இன்னொரு ஆறுதல். ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டுக்குரியது – குறிப்பாக குத்துச்சண்டை காட்சிகளின்போது சில கோணங்கள் பிரமிக்க வைக்கின்றன.

      குத்துச்சண்டை என்றால், கையில் உறைபோட்டு, தலையில் கவசமணிந்து ரத்தம் வரக்குத்துவது மட்டுமல்ல; கால்களுக்கு குத்துச்சண்டையில் இருக்கிற முக்கியப்பங்கையும் காட்டியிருக்கலாம். ராக்கி தொடர்படங்களில் சில்வஸ்டர் ஸ்டாலோன் கால்களின் அசைவை அற்புதமாகப் படமாக்கிக் காட்டியிருப்பார்கள். இவ்வளவு ஏன்? ‘காவல்காரன்’ படத்தில் வாத்தியார் குத்துச்சண்டை பார்க்கவில்லையா? படத்தில் மாதவனே சொல்லுவதுபோல, குத்துச்சண்டையில் விரல்விட்டு எண்ணத்தக்க உத்திகளே உள்ளன. அதுதவிர, உடல் இயக்கம், பார்வை ஒருமைப்படுத்துதல் என்று அறிவுடன் தொடர்புடைய சங்கதிகள் உள்ளன. அவற்றை விஷுவலாகக் காட்ட பெருமளவு தவறி, ஒரு செங்கிஸ்கான் கதையை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள் – இக்பால் படத்தில் வருகிற ‘சக்ரவியூகம்’ போல.

      இந்தப் படத்தின் திரைக்கதையின் ஓட்டைகளை அடைக்க ஐம்பதுகிலோ அம்மா சிமெண்ட் வேண்டும். அது அனாவசியமானது; ஏனென்றால், நாயகன் தவிர்த்து மீதமுள்ள கதாபாத்திரங்களை செதுக்குகிற முயற்சியில் சேதாரமாக்கியிருக்கிறார்கள். திரைக்கதை குறித்த எனது தியரிக்கு, இப்படத்தில் சில மோசமான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

      சிகரம்தொட்டிருக்க வேண்டிய படம்; அடிவாரத்திலேயே கொடியேற்றிவிட்டு அற்பசந்தோஷம் அடைந்திருக்கிறது.