Wednesday, August 31, 2011

’சில்க்’ வித்யாபாலன்

வித்யா பாலனை முதலில் பார்த்தது மணிரத்னத்தின் ’குரு’ படத்தில் தான். சற்றே உபரியாக நீண்ட நாசியுடன், பெரும்பாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, குறைவான பாத்திரத்தில் ஏறக்குறைய நிறைவாய் நடித்திருந்தாலும், கத்ரீனாவுடனோ, கரீனாவுடனோ அவசரப்பட்டு ஒப்பிடத் தோன்றவில்லை. அடுத்ததாய், ’பா’திரைப்படத்தில் முழுக்க முழுக்க படுபாந்தமாக புடவையில் வலம்வந்த வித்யாவைப் பார்த்தபோது, ’அட!’ சொல்ல வைத்தார். சமீபத்தில் சோனியில் ’பூல்புலையா(சந்திரமுகி)" பார்த்தபோது, சில காட்சிகளில் "மணிச்சித்ரதாழ்" ஷோபனாவை நினைவூட்டினார். ஆனால், மல்லிகா ஷெராவத் பரிவாரங்களுக்கு மத்தியில்,இந்தி சினிமாவில் மிக அரிதாகக் காணக்கிடைக்கிற அடுத்த வீட்டுப்பெண் தோற்றத்தோடு வித்யா பரிச்சயமாய்க் காணப்படுகிறார் என்பது நிறைய வியப்பு.

அந்த வியப்பு விரைவில் உடையப்போகிறது என்பது, ஒரு வினோதமான ஆர்வத்தையே உண்டாக்கியிருக்கிறது. டிசம்பர் 2, 2011 அன்று வித்யா பாலனை அவரது ’டர்ட்டி பிக்சர்’ இந்திப்படத்தில், இதுவரை கண்டிராத ஒரு பாத்திரப்படைப்பில் பார்க்கவிருக்கிறோம். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிற இந்தப் படத்தில் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தை வித்யா ஏற்று நடிக்கிறார். டிசம்பர் 2 சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளாம்!

அண்மைக்காலமாக சகவாசதோஷத்தால், நிறைய இந்திப்படங்களைப் பார்க்க நேரிடுகிறது. பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறார்கள்; நவீனத் தொழில்நுட்பங்கள் சில படங்களில் மயிர்க்கூச்செரிய வைக்கின்றன. ஆனால், பத்தில் ஒன்பது படங்களில் அடிப்படை சங்கதிகளில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்பதே சலிப்பூட்டுகிறது; அதை விட மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற தமிழ்ப்படங்கள் ஒப்பீட்டில் தேறிவிடுகின்றன. பாலிவுட்டில், நாராசமான வசனங்களும், திணிக்கப்படுகிற அநாவசியமான ஆபாசமும்தான் எதார்த்தமான படமென்று யாரோ மரத்தடியில் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. No one killed Jessica படத்தில் ராணி முகர்ஜீயின் பாத்திரப்படைப்பும், அவர் பேசிய வசனங்களும் (?) அப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி வந்த சுவடு தெரியாமல் சுருண்ட "Not a love story" படமும் எதார்த்தம் என்ற பெயரில் அவலை நினைத்து உரலையிடித்த அவலம்தான்! ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி உண்மைச்சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கிற முரண்டு தொடர்வதையே அறிய முடிகிறது. இதோ, ஷியாம் பெனகலும் பிபாஷா பாசுவை கதாநாயகியாகப் போட்டு, பாலிவுட் நடிகைகளைப் பற்றி ஒரு படம் இயக்கப்போவதாக செய்தியை வாசித்தேன்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் சினிமாக்காரர்களை சுவாரசியப்படுத்துகிற ’rags to riches' கதையிருக்கிறது; சராசரி சினிமாவில் இடைவேளைக்கு முன்பு ஏழையாயிருக்கிற கதாநாயகன், திடீரென்று பணக்காரனாகி, கூலிங் கிளாஸுடன் ஹோண்டா சிட்டியிலிருந்து இறங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆகவே, சில்க் ஸ்மிதாவின் கதை சினிமாக்காரர்களை ஈர்த்திருப்பதில் பெரிய வியப்போ, அது குறித்த சர்ச்சைகளில் விளம்பரயுக்தியோ இல்லை என்று சொல்வதற்கில்லை. எங்கோ ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பள்ளிப்படிப்புக்கும் வசதியின்றி, சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, சினிமாவில் நுழைந்து, அப்போதைய நாயகர்களின் நட்சத்திர மதிப்பை ’பூ’ என்று ஊதித்தள்ளியவர் சில்க் ஸ்மிதா. ’மூன்றாம் பிறை’ போன்று ஏறக்குறைய கவிதையாயிருந்த படத்திலும், கமல்ஹாசனை கற்புக்கரசனாகக் காண்பிக்க ஒரு சில்க் ஸ்மிதா தேவைப்பட்டார். ’நேத்து ராத்திரி யெம்மா...," பாடலைக் கழித்துப் பார்த்தால், ’சகலகலாவல்லவன்,’ படத்தின் வெற்றியிலிருந்து ஒரு இருபத்தைந்து நாட்களை தாராளமாகக் கழிக்க நேரிடும். ’அடுத்த வாரிசு,’ ’பாயும் புலி,’ ’தங்கமகன்,’ போன்ற பல படங்கள் சில்க் ஸ்மிதா இல்லாமல் போயிருந்தால், சத்தியமாக ரஜினியின் வெற்றிப்படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. பச்சடியைப் போல படத்தில் தொட்டுக்கொள்ள மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட சில்க் ஸ்மிதாவை பிரியாணியாக்கி, கதாநாயகி என்ற அந்தஸ்தை அவரது தலையில் சுமத்தியதுதான் அவரது வீழ்ச்சியின் முதல் அறிகுறி என்று அறிய முடிகிறது.

திடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை என்பதற்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இன்னோர் உதாரணம்.

அலுக்க அலுக்க, ஒவ்வொரு படத்திலும் சில்க் ஸ்மிதாவின் நடனத்தைச் சேர்த்து, அமுதமும் நஞ்சாகி ஒரு கட்டத்தில் ஷகீலாவுக்கு முன்னோடியாக மலையாளத்துக்கு துரத்தப்பட்டு, சொந்தப்படம் எடுத்து நஷ்டமடைந்து, மனமுடைந்து ஒரு விபரீத தருணத்தில் தற்கொலை செய்து பரிதாபத்துக்குப் பாத்திரமானார் சில்க் ஸ்மிதா. இப்படி முற்றிலும் எதிர்மறையான முரண்பாடுகள் நிறைந்தவரின் வாழ்க்கை, திரைக்கதாசரியர்களை இவ்வளவு தாமதமாய் ஈர்த்ததில்தான் ஆச்சரியம். உண்மையில், கவர்ச்சிக்காக அறியப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வேடத்தில், வித்யா பாலன் போன்ற நடிகை நடிப்பது வேண்டுமானால், முதலில் கேட்பதற்கு சற்றே வியப்பைத் தரலாம்.

ஆயிரம் நொள்ளை சொன்னாலும், இந்தித் திரைப்படங்களில் இந்த ஒரு அம்சம் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைக்கிறது. திரைப்பட விழாக்களிலும், தூரதர்ஷனிலும் அவ்வப்போது காணக்கிடைக்கும் பல இந்திப்படங்களில் ஸ்மிதா பாட்டீல், ஷபானா ஆஸ்மி போன்ற நடிகைகள் துணிச்சலாக சராசரியான கதாநாயகிகளிடமிருந்து விலகி நடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களைத் தொடர்ந்து தபு, கரீனா கபூர், ஐஷ்வர்யா ராய், ராணி முகர்ஜீ போன்ற நடிகைகள் ’இமேஜ்" என்ற மாயவளையத்திலிருந்து விடுபட்டு கதாபாத்திரங்கள் தருகிற சவாலை மட்டும் ஏற்று சர்ச்சைக்குரிய பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த பல படங்களை உதாரணங்களாக அறிவோம். இவற்றில் சில படங்கள் வியாபாரரீதியாக வெற்றியடையாதபோதிலும், அந்த நடிகைகளின் நடிப்புக்கு ஒரு நல்ல காட்சிப்பொருளாக அமைந்தன என்பது உண்மை. ஆகவே, Dirty Picture வெளிவர முழுதாய் இரண்டு மாதங்கள் இருக்கிறபோதிலும், இப்போதே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது! வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவை உடைவிஷயத்தில் பின்பற்றியிருப்பதைப் பறைசாற்றும் படங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களைப் போல, பார்வையாளர்களின் பச்சாதாபத்தைக் குறிவைத்து மட்டுமே தயாரிக்கப்படுமா அல்லது இயல்பாக அவர்களது முரண்பாடுகளை எவ்வித சப்பைக்கட்டுமின்றி சொல்லுகிற பாசாங்கற்ற முயற்சியாய் இருக்குமா?

டிசம்பரில் தான் விடை தெரியும்!

Tuesday, August 30, 2011

மொட்டைத்தலையும் முழங்காலும்

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Sunday, August 28, 2011

என்னது, ஜெயிச்சுட்டோமா?

விக்கிரமன் இயக்கிய படங்களைப் பார்த்திருக்கிறோம். படம் முழுக்க கதாநாயகனுக்கு இடைவிடாமல் தொல்லையளிக்கிற வில்லன் இறுதிக்காட்சியில் மனம்திருந்திவிடுவார். பிறகு, எஸ்.ஏ.ராஜ்குமாரின் பின்னணி இசை "லா..லாலா..லாலாலா" என்று கோரஸில் ஒலிப்பதோடு ’வணக்கம்’ போடுவார்கள். அப்படியொரு விக்கிரமன் படம் நேற்று ராம்லீலா மைதானத்தில் தேசியகீதத்துடன் இனிதே நிறைவுற்றது. ஆனால், ’வணக்கம்’ போடுவதற்கு பதிலாக ’இடைவேளை’ கார்டு போட்டிருக்கிறார்கள் என்பதால் இன்னும் நிறைய கோரஸ் கேட்கவேண்டியிருக்கிறது. ஆகவே, கையில் பாப்கார்னை வைத்துக்கொண்டு ’வெற்றி வெற்றி’ என்று குதிப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. பாவம், இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் கொடிபிடித்தவர்களுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட கொடுக்காமல் இருக்க முடியுமா? என்ஜாய்! :-)

நான் எனது முந்தைய இடுகையில் எழுதியிருந்தது போல, பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து, அண்ணா வலியுறுத்திய மூன்று அம்சங்களை லோக்பால் சட்டத்தில் (ஜன் லோக்பால் அல்ல) அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒரு அவையின் உணர்வை (Sense of the House), வாக்களிப்பின்றி "தீர்மானமாக" ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைத்தான் "வெற்றி!வெற்றி!!" என்று அண்ணாவின் கோஷ்டியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். (பாவம், இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்துத் தோல்வியடைந்து கொண்டிருக்கையில், இருக்கிற பட்டாசுகளை நமுத்துப்போகவா விட முடியும்?)

அந்த மூன்று அம்சங்களில் சுலபமாய் எந்த சிக்கலுமின்றி அமலுக்குக் கொண்டுவரத்தக்கது, Citizen's Charter என்று கருதுகிறேன். ஒரு அரசு அலுவலகத்தில், ஒரு குறிப்பிட்ட அலுவலை, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செய்யாவிட்டால், அதற்கான தண்டனை என்ன என்று அறிவிப்புப்பலகையாக வைப்பது. இதை ஏற்கனவே மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உ.பி. போன்ற மாநிலங்களில் சட்டங்களாகவே நிறைவேற்றி அமல்படுத்தியிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் சொன்னார்கள். ஆகவே, அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஆட்சேபிக்காதவரையில், இதை மத்திய அரசு சுலபமாக வரையறுத்து சட்டமாக்கி விடலாம். இதை மத்திய அரசு ஏன் இவ்வளவு பெரிதாகக் கருதி, நிலுவையில் வைத்திருக்கிறது என்பது புரியவில்லை.

லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கடைநிலை ஊழியர்களையும் கொண்டுவருகிற இரண்டாவது அம்சத்திலும் கூட, நடைமுறைச் சிக்கல்கள் தவிர பெரிய பிரச்சினை இருக்கும் என்று தோன்றவில்லை. மத்திய அரசு மனதுவைத்தால், இதற்கு உடனடித்தீர்வு காணலாம். இதுவும் ஒரு பிரச்சினை இல்லை.

நடைமுறைப்படுத்துவதில் மிகவும் கடினமானது என்றால், அது ஒவ்வொரு மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாவை அமைப்பதுதான். அதிகம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு சமீபகால நிகழ்வுகளைப் பார்த்தாலே போதும்.

  1. சென்ற வாரம்வரைக்கும் ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க. திடீரென்று அண்ணாவுக்கும், ஜன் லோக்பாலுக்கும் ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. அதே பா.ஜ.க, மத்திய அரசு குஜராத்தில் லோக் ஆயுக்தாவைத் ’திணித்திருப்பதாக’ ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்கள்.
  2. உ.பி முதலமைச்சர் மாயாவதி ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்ப்பதோடு, "முடிந்தால் அண்ணா ஹஜாரே தேர்தலில் நின்று ஜெயித்து ஜன் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரலாமே?" என்று நையாண்டி செய்திருக்கிறார்.

ஆக, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி அரசியல் காரணங்களால் இந்த லோக்-ஆயுக்தாவை இந்தியா முழுக்கவும் நிறுவுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம். மீறி, மத்திய அரசு குஜராத்தைப் போல பிற மாநிலங்களில் திணித்து, அது நீதிமன்றத்துக்குப் போனால், தீர்ப்பு வருவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இது தவிர, லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தினாலேயே ஊழல் ஒழிந்துவிடும் என்பது நகைப்புக்குரியது என்பதை அண்ணாவின் மாநிலமான மகாராஷ்டிரத்தையே உதாரணமாகக் காட்டி எனது "வாங்க, கூரையேறிக் கோழிபிடிப்போம்" இடுகையில் விளக்கியிருக்கிறேன்.

மேலும் பாராளுமன்றத்தில் மேற்கூறிய மூன்று அம்சங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிற விதம் அண்ணாவின் குழுவில் பலருக்கே முழுத்திருப்தியளிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். "இது பாதி துரோகம்(part betrayal)" என்று மேதா பாட்கர் தெரிவித்திருக்கிறார். அண்ணா ஹஜாரேயை விடவும் மேதாத்தாய் பல போராட்டங்களையும், ஏன், அடக்குமுறைகளையுமே சந்தித்தவர் என்பதால் அவரது கணிப்பில் தொனிக்கிற அச்சத்தை அலட்சியப்படுத்துவதற்கில்லை.

உலகத்தையே இந்தியாவின் பக்கம் அண்ணாவின் உண்ணாவிரதம் ஈர்த்திருக்கிறது என்பதை அவரது மோசமான விமர்சகனும் ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

அதற்குக் காரணம் - ஒரு 74 வயது முதியவர் "சாகும்வரை உண்ணாவிரதம்," என்று ஆரம்பித்து, அதற்குப் பின்புலத்தில் ஊடகங்களும், Facebook, Twitter போன்ற சமூகத்தளங்களில் நடந்த பிரச்சாரமும், சில பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியும், எதிர்க்கட்சிகளின் தொண்டர்படையும்தான்.

இவர் சாகும்வரை உண்ணாவிரதம் அல்ல; காலவரையற்ற உண்ணாவிரதம் என்றெல்லாம் சொதப்ப ஆரம்பித்தபோது உலக ஊடகங்களும் விமர்சித்து எழுத ஆரம்பித்து விட்டன. இவ்வளவு ஏன், பாராளுமன்றத்தில் பிரதமர் கோரிக்கை விடுத்தபிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தபோது, உள்ளூர் ஊடகங்களுமே கேள்விகேட்கத் தொடங்கிவிட்டன. அண்ணாவின் பஜனைகோஷ்டியில் ஏற்பட்ட பிளவுகள் இப்போது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

ஆக, "ஆகஸ்ட் 30-க்குள் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் சிறைநிரப்புப் போராட்டம்," என்று சூளுரைத்த அண்ணாவுக்கு, ஒரு A4 சைஸ் பேப்பரில் "கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறோம்," என்று டைப் அடித்துக் கொடுத்திருப்பதும், ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று அதை வெற்றியாக ஏற்றுக்கொண்டிருப்பதுமே இந்தப் போராட்டத்தின் குழப்பத்தைத் தெள்ளத்தெளிவாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், நேற்று இறுதிக்கட்டத்தில் "ஓட்டெடுப்பு வேண்டும்," என்று இவர்கள் கேட்டதைக் கூட அரசு நிறைவேற்றவில்லை! கொள்கையளவில் ஒப்புக்கொண்டிருக்கிற மூன்று விஷயங்களுமே கூட, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நிலைக்குழுவிற்குப் பரிந்துரைத்தவைதான்.

சுருக்கமாகச் சொன்னால், சமச்சீர் கல்வி தீர்ப்பு குறித்து தி.மு.க வெற்றிவிழா நடத்துவதற்கும், "TOTAL VICTORY FOR ANNA" என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா கொண்டாடுவதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள்: The proof of the pudding is in the eating!

பாராளுமன்ற நிலைக்குழு(Standing Committee) வுக்கு லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற 60+30+30 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இறுதிவடிவம் பெற்ற லோக்பால் சட்டம், அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, சட்டமாக இயற்றப்பட்டு அமல்படுத்தப்படும் வரையிலும் இது யாருக்கும் வெற்றி என்று கூத்தாடுவது - சுத்த சின்னப்பிள்ளைத்தனம்!

கிரிக்கெட்டில் இந்தியா ’டாஸ்’ வென்றதும் ஆட்டத்தையே வென்றுவிட்டதுபோல ரசிகர்கள் மைதானத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், புத்திசாலிகள் மேட்ச் முடியும்வரை காத்துக்கொண்டிருப்பார்கள்! :-)

மக்களுக்கு ஊழல் குறித்த கோபம் வந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்கள் மூன்று மிகப்பெரிய ஊழல்கள். 2G, காமன்வெல்த் ஊழல் மற்றும் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல். அந்த ஆதர்ஷ் ஊழலில் தொடர்புபடுத்தப்பட்டு, பதவியிழந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கிடமிருந்து பிரதமரின் கடிதத்தைப் பெற்று, ’போராட்டம் முடிந்தது,’ என்று அண்ணா ஹஜாரே அறிவித்தது தான் உச்சகட்ட நகைச்சுவை! இதுக்குப் பேருதான் கொள்கைப்பிடிப்பு போலிருக்குது!

என்னைப் பொறுத்தவரையில், லோக்பால் சட்டம் ஊழலை ஒழிக்க முடியாது என்று நம்புகிற அளவுக்கு - இது அண்ணா ஹஜாரேயின் வெற்றியில்லை என்பதையும் உறுதியாக நம்புகிறேன். காரணம், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

Thursday, August 25, 2011

ஆட்டம் முடிஞ்சுது டோய்!

MASSIVE VICTORY FOR ANNA - "டைம்ஸ் நௌ" தொலைக்காட்சியில் அமர்க்களமாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

என்னவாம்?

ஜன் லோக்பால் மசோதாவை அரசு ஏற்றுக்கொண்டு விட்டதா என்ன?


ஊஹும்!

மறைந்த ராஜ்கபூரைப் பற்றி பெரும்பாலானோர்கள் அறிந்திருப்பீர்கள். பல பெரும் வெற்றிப்படங்களை அளித்திருந்தபோதிலும், அவரது லட்சியப்படமாகக் கருதப்பட்ட "மேரா நாம் ஜோக்கர்(என் பெயர் கோமாளி)," என்ற படம் படுதோல்வியடைந்ததாம். அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது படத்தின் நீளம். படத்தில் இரண்டு இடைவேளைகளாம்; தாங்குமா?

ஏறக்குறைய அதே போல இன்னொரு "மேரா நாம் ஜோக்கர்," தில்லியின் ராம்லீலா மைதானத்தில் தோல்வியைத் தழுவும் தறுவாயில் இருக்கிறது. ஊடகங்களின் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு, கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களின் உணர்ச்சிபூர்வமான வசனங்கள், உள்நாட்டு தொண்டு (?) நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரம்மாண்டமான தயாரிப்பு, முக்கிய எதிர்க்கட்சியின் விறுவிறுப்பான இயக்கம், நெஞ்சை உருக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள், பரபரப்பூட்டும் சண்டைக்காட்சிகள், குளிர்ச்சியான குத்து டான்ஸ், வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை - ஆகிய அத்தனை சிறப்பான அம்சங்கள் இருந்தும், தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாயிருந்தும், அண்ணா ஹஜாரேயின் ’சாப்பிட மாட்டேன் போ,’ திரைப்படம் விரைவில் அரங்கத்தை விட்டுத் தூக்கப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மொக்கைப்படங்களையும் கூட "வசூலில் சாதனை," என்று நம்மூரில் போஸ்டர் அடிப்பதுபோல, அண்ணா ஹஜாரேயின் இந்த உண்ணாவிரதத்தையும் "வெற்றி!" என்று சிலர் கொண்டாட வாய்ப்பிருக்கிறது. பாவம், அவர்களின் அந்த அற்பசந்தோஷத்தையும் கெடுப்பானேன்?

ஆகஸ்ட் 16 தொடங்கி, (அனேகமாக) இன்றோ நாளையோ அதிகாலையிலோ முடியப்போகிற அண்ணா ஹஜாரேயின் உண்ணாவிரதம் சாதித்தது என்ன? ஜன் லோக்பால் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்போம் என்று பிரதமர் வாக்குறுதியளித்திருக்கிறார். (வெறும் விவாதம்தான்; ஓட்டெடுப்பு இல்லை). எனவே......

  • ஜன் லோக்பால் மசோதாவை இந்தப் பாராளுமன்றத் தொடரில் அரசு நிறைவேற்றப்போவதில்லை.

  • அடுத்த பாராளுமன்றத்தொடரிலோ அல்லது இதற்கென்று தனியாக ஒரு தொடரை அழைத்தோ, அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.

  • அண்ணா ஹஜாரேயின் வரைவை மட்டுமின்றி, அருணா ராய் தயாரித்திருக்கிற மசோதா மற்றும் அரசின் மசோதா ஆகியவற்றுடன்தான் ஜன் லோக்பால் மசோதாவும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

  • அண்ணா ஹஜாரே வலியுறுத்துகிற நிபந்தனைகளையெல்லாம் பாராளுமன்ற விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் விவாதிக்கப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அண்ணாவுக்கு மறைமுகமாக ஒரு ஆப்பு வைத்தாயிற்று! ’நீங்கள் என்னதான் உச்சாணிக்கொம்பிலிருந்து கூப்பாடு போட்டாலும் எந்தவொரு சட்டத்தையும் பாராளுமன்றம் மட்டுமே நிறைவேற்ற முடியும். அதை மைதானங்களில் கூடுகிற கூட்டங்களால் வற்புறுத்த முடியாது,’ என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். சபாஷ்!

இதையும் மீறி ’MASSIVE VICTORY FOR ANNA' என்று ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் தலைப்புச்செய்தி போடுகிறார்களென்றால், அது பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் அண்ணா ஹஜாரேயைப் புகழ்ந்து பேசியதற்காகவோ அல்லது மணீஷ் திவாரி அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்டதற்காகவோ இருக்கலாமே ஒழிய, தனது பத்துநாள் உண்ணாவிரதம் வெற்றியென்று சத்தியமாக அண்ணாவாலேயே பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. ஆனால், 74 வயதான அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தை நிறுத்தினால், அது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் என்பதில் மட்டும் எவ்வித சந்தேகமில்லை.

கடந்த 24 மணி நேரங்களில் நடந்தேறிய சம்பவங்களைக் கோர்வையாக கவனித்தால், இரு தரப்பிலுமே அவரவர் பிடிவாதங்களைத் தளர்த்தியிருப்பது புலப்படுகிறது. அத்துடன் மிகத் தெளிவாகப் புலப்படுவது இன்னொன்று - அண்ணா ஹஜாரேயின் அணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனது ’பல்பு வாங்கலியோ பல்பு,’ இடுகையிலேயே அண்ணாவின் அணியில் விரிசலின் அறிகுறிகள் தென்படுவதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அந்த விரிசலை உறுதிபடுத்துவது போன்ற நிகழ்வுகள் இரண்டொரு நாட்களில் அரங்கேறியிருப்பதை சற்றே பின்னோக்கிப் பார்ப்போமாக!

"Anna is street-smart; he knows when and how to stop,' என்று நேற்று சி.என்.என்-ஐ.பி.என்னில் ராஜ்தீப் சர்தேசாய் சொன்னதை அவர் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.

சல்மான் குர்ஷீத், பிரணாப் முகர்ஜீ ஆகியோருடன் பேச்சுவார்த்தை முடிந்ததும், ராம்லீலா மைதானத்துக்குத் திரும்பிய அர்விந்த் கேஜ்ரிவால்,"அண்ணாவுக்கு ஏதாவது ஏற்பட்டால், அதற்கு அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க நேரிடும்," என்று முழங்கியபோதே அண்ணா ஹஜாரேவுக்குப் பொறிதட்டியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (அர்விந்த கேஜ்ரிவால் குறித்து இன்னொரு இடுகை விரைவில் எழுத வேண்டும்; பார்க்கலாம்.)

அதைத் தொடர்ந்து, ஊடகங்களில் அண்ணா அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. அத்துடன், கிரண் பேடி ட்விட்டரில் பரப்பி வரும் செய்திகளால் அண்ணா சங்கடத்துக்குள்ளாகியிருப்பதாகவும், அரசுடன் சமரசமாகப் போகவிடாமல் கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் இருவரும் இடையூறாக இருப்பதாகவும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் தகவல்கள் வெளியாகின.

அண்ணாவின் விருப்பப்படியே பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வருவதற்கு அரசும், அரசின் விருப்பப்படி நீதித்துறையை லோக்பால் வரையறையிலிருந்து விலக்குவதற்கு அண்ணாவின் குழுவும் ஒப்புக்கொண்டு விட்ட சூழலில், அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் பேச்சுக்கள் நடுநிலையாளர்களுக்கும், சில செய்தித்தொலைக்காட்சிகளுக்கும் எரிச்சலூட்டத்தொடங்கின. "டைம்ஸ் நௌ" தவிர அனைத்துத் தொலைக்காட்சிகளுமே அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகிய இருவரின் அணுகுமுறையை குறைசொல்ல ஆரம்பித்தனர். (பென்னெட் அண்டு கோல்மேன் கம்பனியின் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு ஏன் இந்த அற்பத்தனம் என்று புரியவில்லை.)

’டெக்கான் க்ரோனிகிள்’ செய்தித்தாள் அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் குறிக்கோள்கள் குறித்து சந்தேகங்களை எழுப்பி ஒரு இடுகையே எழுதியது.

"உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் அண்ணாவின் உயிரைக்குறித்து அரசு கவலைப்படாது," என்று பிரணாப் முகர்ஜீ சொன்னதாக, கிரண் பேடி புரளி கிளப்பியதையும், என்.டி.டிவி, சி.என்.என்.ஐ.பி.என் போன்ற தொலைக்காட்சிகள் வெளிப்படுத்தின. ஆக, தன்னை வைத்து, கேஜ்ரிவாலும் கிரண் பேடியும் புரியாத ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள் என்பதை, பல அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிற அண்ணா ஹஜாரே புரிந்து கொண்டார். அதன் விளைவே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாயிருக்கும் விலாஸ்ராவ் தேஷ்முக் தூதுவராக வந்தபோதும், தயங்காமல் அவருடன் பேசியிருக்கிறார் - கேஜ்ரிவால், கிரண் பேடி துணையின்றி!

தனது சகாக்களின் மீது அண்ணாவுக்கு சந்தேகம் வந்திருப்பதைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் சாமர்த்தியமாக அடுத்த காயை நகர்த்தியது. சர்வகட்சித்தலைவர்களும் அண்ணாவை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரினர். அவ்வளவு எளிதாக கைவிட்டு விட்டால் அசடு வழிய நேரிடுமே என்று அண்ணா மீண்டும் சில நிபந்தனைகளை விதித்தார். "அவ்வளவுதானே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவருவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம்," என்று அரசு தரப்பில் இருந்து பதில் பறந்தது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, "தீர்மானம் கைக்கு வந்ததும், அண்ணா உண்ணாவிரதத்தைக் கைவிடுவார்," என்று கிரண் பேடி அறிவித்திருக்கிறார். ஆக, வீரதீரசூரபராக்கிரமங்களெல்லாம் வெத்துவேட்டாகி, "அடைந்தால் ஜன்லோக்பால்; இல்லையேல் கள்ளிப்பால்," என்று கொக்கரித்ததெல்லாம் போய், ’என்னமோ கொஞ்சம் பார்த்துப் போட்டுக் கொடுங்கப்பா," என்று கேட்கிற நிலைமைக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் வந்தாயிற்று!

இதை "அண்ணாவுக்குக் கிடைத்த வெற்றி,’ என்று யாராவது கொண்டாடினால், அதையும் இன்னொரு கேலிக்கூத்தாகப் பார்த்து, ரசித்து, சிரித்து விட்டுப்போகலாம். ஏனென்றால், நான் முந்தைய இடுகைகளில் எழுதியது போல, அண்ணா ஹஜாரேயின் அடுத்த நாடகம் பாராளுமன்றக் குளிர்காலத் தொடரின்போதோ அதற்கு முன்னமோ கூட மீண்டும் அரங்கேறலாம். அப்படி அரங்கேறினால், காங்கிரஸ் இப்போது இருந்ததை விடவும் சற்று புத்திசாலித்தனமாக இருக்கும் என்பதோடு, அண்ணா ஹஜாரேயும் கேஜ்ரிவால், கிரண் பேடி போன்றவர்களிடம் முன்னைவிட ஜாக்கிரதையாக இருப்பார் என்பது உறுதி.

இனி?

அண்ணாவின் உண்ணாவிரதம் நிறைவுற்ற பிறகும், கேஜ்ரிவால் & கம்பனி போராட்டத்தைத் தொடர்ந்தாலும் தொடரலாம். ஏற்கனவே ’சலோ தில்லி’ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.

அப்படி ஏதாவது நடந்தால், எனக்கு ஜாலி! அண்ணாவின் உண்ணாவிரதத்தால், தில்லியில் சமோசா, பேல்பூரி, தேசியக்கொடி, காந்தித்தொப்பி, கலர் பலூன் போன்ற வியாபாரங்கள் கொழிக்கிறதாம். காசா பணமா, நானும் இன்னும் சில இடுகைகளை எழுதிவிட்டுப்போகிறேன். ஆத்துலே போற தண்ணியை ஐயாகுடி அம்மாகுடி!

என்ன, இப்போதைக்கு யாருக்கு வெற்றி என்று சொல்வது கடினம். யாருக்குத் தோல்வி என்று கேட்டால் - இவர்களின் பேச்சை நம்பி நாடெங்கும் கொடிபிடித்துப் போராடிய கொள்கைக் கொழுந்துகளுக்கு மட்டும்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

இவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, "நம்மளை வச்சுக் காமெடி பண்ணிட்டாங்கப்பா," என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சும் என்பது சத்தியம்.

Tuesday, August 23, 2011

வாங்க, கூரையேறிக் கோழிபிடிப்போம்


(இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல; யாருக்காவது குத்தினால் நான் பொறுப்பல்ல!)

தங்களை என்னைவிடவும் தேசபக்தர்கள் என்று கருதுபவர்கள், அநாவசியமாக எனது ஹிட்ஸ்களை அதிகமாக்கி, என்னைப் பிரபலமாக்காமல், அவர்கள் விரும்புகிற ராம்லீலா பஜனைப்பதிவுகளைச் சென்று வாசிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்ற நட்புகளுக்கு சம்பிரதாயமான வரவேற்போ வந்தனமோ எப்போதுமே அவசியப்பட்டதில்லை! இனியும் அவசியப்படாது என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.

ஒரு தனியார் நிறுவன ஊழியன் என்ற முறையில், அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்குச் செல்லுகிற அருவருப்பான கட்டாயம் எனக்கு இருக்கிறது. காறித்துப்பவும் லாயக்கற்ற சிலர்முன்பு கைகட்டி, பல்லைக்காட்டி ஒவ்வொரு கட்டத்திலும் எனது சுயமரியாதையின் குரல்வளையை நானே நெறிக்க வற்புறுத்தப்படுகிறேன். "த்தூ! இந்தப் பொழப்புக்கு......’ என்று மனதுக்குள் சபிப்பதைத் தவிர வழியின்றி, சகித்துக்கொண்டு, ஏட்டுச்சுரைக்காய் கொள்கைகளுடன் சமரசம் செய்துகொண்டு, மலத்தை மிதித்த அசூயையுடன்தான் ஒவ்வொருமுறையும் அரசு அலுவலகங்களை விட்டு வெளியேற நேரிடுகிறது. இந்த அவஸ்தையை அனுபவித்தவர்களிடம் கேளுங்கள் - ஊழல் ஒழிய வேண்டும் என்று அவர்கள் எப்படி உள்ளுக்குள் புழுங்கி, தினமும் தங்களது சாம்பலைத் தாங்களே அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதை! என் போன்றவர்களின் நெற்றியில் ஒரு கண்ணிருந்தால், அரசு அலுவலகங்களுக்காகப் புதிதாய்க் கட்டிடங்கள் எழுப்பத் தேவைப்பட்டிருக்காது; இருக்கிற கட்டிடங்களில் பலதும் வெறிச்சோடிப்போயிருக்கும்.

எவனுக்கய்யா தனது வருங்கால சந்ததியை, அதிகாரவர்க்கத்தின் கலாசிகளின் கருணைப்பார்வைக்காக கால்கடுக்க, கைகட்டி நிற்க வைக்க வேண்டுமென்று தோன்றும்? எங்கிருந்தாவது ஒரு நேர்மைக்கீற்றுவந்து, குப்புறப்படுத்துச் சாகக்கிடக்கிற நம்பிக்கையைத் தொட்டுத்தூக்கி எழுப்பிவிடாதா என்ற நப்பாசை எவனுக்கு இல்லை? உறங்கி எழுந்ததும் குடும்பத்தாரின் முகத்தைப் பார்க்கிற ஒவ்வொருவனுக்கும், அவர்களையாவது அந்த சாக்கடையில் விழாமல் காப்பாற்ற வேண்டுமே என்று தோன்றாமலா போய்விடும்? விருப்பமின்றி லஞ்சம் கொடுக்கிறவனின் மனம்படுகிற அவஸ்தைக்கும், ஒரு வழிப்பறித்திருடனிடம் பணத்தைப் பறிகொடுத்தவனின் அவஸ்தைக்கும் யாராவது வந்து ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம்!

அப்புறம், நான் தேசபக்தனென்று எவருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. பத்து ரூபாய் கொடியை சட்டையில் குத்தியதும், எனது தேசபக்தி அங்கீகரிக்கப்படும் என்றால், அந்த தேசபக்திக்குச் செலவழிக்கிற பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு, நான் பிரகடனப்படுத்தப்பட்ட தேசத்துரோகியாய் இருக்க சம்மதிக்கிறேன். இன்று தேசமெங்கும் கொடிபிடித்துக் கோஷமிடுகிறவர்கள்தான் என்னைக்காட்டிலும் தேசபக்தியுடைவர்கள் எனில், அவர்களது தற்பெருமைக்குத் தலைவணங்கிவிட்டு, வழிவிட்டு ஒதுங்கி நிற்கச் சம்மதிக்கிறேன். ஆனால், நான் எறியப்போகிற சில கேள்விகளுக்கு, எவரேனும் ஒரு சுத்தமான அக்மார்க் தேசபக்தன் நேர்மையாகப் பதில் தேடுவார் என எதிர்பார்க்கிறேன்.

  • முந்தைய தி.மு.க.ஆட்சியின் போது உங்களுக்கு சென்னையில், உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, உங்களது ஊழல் எதிர்ப்பு உணர்வும் தேசபக்தியும் எந்த டாஸ்மாக்கில் குவார்ட்டர் அடித்துக்கொண்டிருந்தது? இன்றைக்கு மத்தியில் இருக்கிற அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் ஒரு மாநில அரசு என்பதால்தான், இந்த திடீர் எழுச்சியும் குறைப்பிரசவத்தில் பிறந்த கொள்கைப்பிடிப்பும்! இல்லாவிட்டால், மண்புழுக்கள் சீறியிருக்குமா?

  • உதாரணத்துக்கு, இன்றைக்கு அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிற ரஜினி அன்றைக்கு என்ன செய்து கொண்டிருந்தார்?(நான் ரஜினியின் பரமவிசிறி (அ) வெறியன் என்றாலும் முன்பொரு முறை பால்தாக்கரேயை அவர் ’தெய்வம்’ என்று சொன்னபோதே காறித்துப்ப வேண்டும் போலிருந்தது.)

இந்த வரிசையில் நான் கேட்க விரும்புகிற கேள்விகளின் அணிவகுப்பு மிகவும் நீளமானது என்பதால் முக்கியமான கேள்விக்கு வருகிறேன்.

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்,’ என்பது போல சென்னையிலும் ஜன்லோக்பாலை ஆதரித்து ஒரு பட்டினிப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சந்தோஷம்! நம்மை தேசபக்தர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கோ, ஆட்சேபிக்கிறவர்களுக்கு ’தேசத்துரோகி,’ என்ற பட்டம் சுமத்துவதற்கோ, இத்தகைய பொன்னான வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதனால், நடத்துங்க ராசா....!

லோக்பால் அல்லது ஜன் லோக்பால் என்பது வந்துவிட்டால் தேசத்தில் ஊழல் ஒழிந்து விடும் என்று நம்புகிறவர்களுக்கு எனது வாழ்த்துகள்! ஏதாவது ஒரு நம்பிக்கை இருப்பது நல்லதுதான். நான் கூட செவ்வாய், வெள்ளியென்றால் அன்னை காளிகாம்பாளை தரிசிக்காமல் அலுவலகம் செல்வதில்லை. என்னுடைய நம்பிக்கையும் என்றாவது ஒருநாள் நிறைவேறாமலா போய்விடும்? யார் கண்டார்கள், இன்ஃபோசிஸில் காலியாகியிருக்கும் நாராயணமூர்த்தியின் இருக்கையில் என்னை அன்னை காளிகாம்பாள் அமர்த்தினாலும் அமர்த்தலாம். நான் காத்திருக்கத்தயார்! அம்பாள் ஆர்டரை அனுப்புவாளாக! அண்ணா ஊழலை ஒழிப்பார் எனும்போது எதுவும் நடக்கலாம்.

முதலில் லோக்பால் என்பது மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்பதையாவது என் போன்றவர்களின் தேசபக்தியைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிற புண்ணியவான்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புவோமாக! ஆக, நீங்கள் அண்ணா நகர் ஆர்ச்சில் சார்ஜண்டுக்குக் கொடுத்த ஐம்பது ரூபாய்க்காகவோ, DL வாங்க வட்டாரப்போக்குவரத்துத் துறைக்குக் கொடுத்த கையூட்டுக்காகவோ, சாதிச்சான்றிதழ் வாங்கக் கொடுத்த லஞ்சத்துக்காகவோ லோக்பாலின் கதவைத் தட்டமுடியாது என்பதை ஒப்புக்கொள்ளுவீர்களா புண்ணியவான்களே?

அதற்கு நீங்கள் அணுக வேண்டியது லோக்பாலை அல்ல; லோக் ஆயுக்தாவை! துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் இன்றுவரை லோக் ஆயுக்தா நிறுவப்படவில்லை. ஆகவே, அண்ணா ஹஜாரேயின் ஜன்லோக்பால் வந்தாலும் நீங்கள் இங்கே லஞ்சம் கொடுப்பது நிற்கப்போவதில்லை. (நீங்கள் நிறுத்தாத வரை!) ஆகையால், முதலில் லோக் ஆயுக்தாவை தமிழகத்துக்குக் கொண்டுவர முயற்சிப்போமா?

சொல்லுங்கள், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர எந்த தேசபக்தன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்?

எவனாவது வருவான், அவன் முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருந்து, கண்மூடித்தனமாய்க் கல்லெறிந்துவிட்டு ஓடத்துடிக்கிற திடீர் வீரர்களே, இப்பொழுது நடக்கிற உண்ணாவிரதத்தை ’தமிழகத்தில் லோக் ஆயுக்தா வரும்வரைக்கும்,’ நீட்டிக்கும் போராட்டமாய் யார் முன்னெடுக்கிறீர்கள்?

அட, லோக் ஆயுக்தா வந்தால் தமிழகத்தில் லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விடுமா? என்று கேட்கிறவர்களுக்கு, இந்த தேசவிரோதியின் சில செய்திகள் கீழ்வருமாறு:

"என் வாழ்க்கையில் முப்பது வருடங்களை, மஹாராஷ்டிராவில் ஊழலை ஒழிப்பதற்காகவே செலவழித்திருக்கிறேன். எனது உண்ணாவிரதங்களால் மொத்தம் ஏழு ஊழல் தடுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன," என்று மார்தட்டிய அண்ணல் அண்ணா ஹஜாரேயின் சொந்த மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே முதல்முதலாக லோக் ஆயுக்தா நிறுவப்பட்டது. இப்போது அந்த லோக் ஆயுக்தாவின் கதி என்ன? இதோ......

அண்ணாவின் சொந்த மாநிலத்தில் லோக் ஆயுக்தா வெறும் காகிதப்புலி!
Lokayukta a 'paper tiger' in Anna's home state

மகாராஷ்டிரா - ஊழலில் நம்பர்.1
Most corruption cases in Maharashtra, Rajasthan 2nd

அண்ணா ஹஜாரேயின் மாவட்டத்தில்தான் அதிக ஊழல்
Most corrupt Maharashtra babus caught in Hazare territory

லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் துடைத்துப்போட முடியாதபடி ஊழல் மலிந்திருப்பதற்கு, என் போன்ற தேசவிரோதிகளுக்கு இருக்கிற பங்கு எங்களது தேசப்பற்றைச் சந்தேகிக்கிறவர்களுக்கும் இருக்கிறது. இதை என் போன்ற தேசவிரோதிகள் எப்படி சொடுக்குப்போட்டு நிறுத்த முடியாதோ, அதே போல அண்ணா ஹஜாரே போன்ற அவதாரபுருஷர்களாலும் நிறுத்த முடியாது.

தொடைநடுங்கி நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தின் திடீர் வீரத்தைப் பரணிபாடி உங்களுக்கு நீங்களே சொரிந்து விட்டுக்கொள்ளுமுன்னர், ஊழலில் உங்களின் பங்கென்ன என்று ஒரு கணக்குப்போட்டு வைத்துக்கொள்ளுங்கள்!

இதை நிறுத்த வேண்டியது நாம்; நாம் மட்டும்தான்!

அதற்கு அண்ணா ஹஜாரே 21-08-11 அன்று பேசியபடி, அனைவரும் தியாகம் செய்யத் தயாராயிருங்கள்; துணிவுடன் இருங்கள்; அற்பசந்தோஷங்களைப் புறந்தள்ளுங்கள்; தேசத்துக்காக எதையும் செய்யச் சித்தமாயிருங்கள்!

செய்வீர்களா தேசபக்தர்களே? இந்தியாவை ஒரு ராலேகாவ் சித்தியாக்குவீர்களா?

இதுவரை நான் எழுதிய இடுகைகளில் இருக்கும் ஒரு ஆதாரத்தையும் மறுதலிக்கும் விதமாக பதில் எழுத அண்ணா ஹஜாரேயின் பக்தகோடிகளில் பலருக்குப் பொறுமையில்லை என்பது பின்னூட்டங்களைப் பார்த்தாலே புலப்படுகிறது.

பணக்காரனையும் சந்தா வசூலித்துக் கொள்ளையடிக்கிறவனையும், பொருளாதாரத்தைச் சீரழிக்கிற பணமுதலைகளையும், கள்ளச்சந்தைப் பேர்வழிகளையும் தண்டிக்க முடியாத ஒரு ஜன் லோக்பாலை வைத்துக்கொண்டு சாமானிய மனிதனுக்கு உதவப்போகிறது என்று ஆசைகாட்டுகிற தேசபக்தர்களுக்கு ஒரு அறிவுரை!

வாதத்துக்கு எதிர்வாதம் எடுத்து வைக்கத் துப்பில்லாதவர்கள், கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்கும் உங்களது தேசபக்திப் பட்டங்களைக் கழிப்பறையில் காப்பாற்றி வைத்திருங்கள்! பின்னால் தேவைப்படும்!

Monday, August 22, 2011

ரௌத்திரம் - பௌத்திரம்

கிராமத்தில் தாத்தா (பிரகாஷ்ராஜ்) வெறும் முட்டியால் சிலபலரை சின்னாபின்னமாக்குவதைப் பார்த்த பேரன் வளர்ந்து பெரியவனாகி, நகரத்தில் அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து.....(என்னாது, மீதிக்கதை புரிஞ்சிருச்சா? இருங்க, இருங்க ஸ்தூ! ஸ்தூ!! ரொம்ப நாளைக்கப்புறம் ஸ்ரேயா படம் போட்டு எழுதியிருக்கேனில்லா? அவசரப்பட்டு ஓடினா எப்படீண்ணேன்?)

திறமையும் இளமையுத்துடிப்பும் உள்ள ஜீவா கதைகளையும் பாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் முன்னர் செக்கு எது, சிவலிங்கம் எது என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு உரைகல் - ரௌத்திரம்! அவரது நல்ல நேரம், ஒரு டம்மி கதாநாயகியாலும், பெரிதாகக் குறிப்பிடும்படி வாய்ப்பில்லாத மற்ற கதாபாத்திரங்களாலும், படத்தில் அவரைப் பற்றி மட்டுமே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கஷ்டம்! ஒரு கட்டத்தில் அதுவும் லேசாய் அலுப்புத்தட்டத் தொடங்குகிறது.

அவரு பார்க்கிற பார்வையாகட்டும்; வசனத்தை அடிக்குரலிலேருந்து நிறுத்தி நிதானமாப் பேசுறதாகட்டும் - பார்க்கிறவங்களுக்கு படத்தோட பேரு "ரௌத்திரம்" தானா அல்லது "பௌத்திரமா (constipation)" என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரி gimmicks தான் நடிப்பு என்ற முடிவுக்கு ஜீவாவும் வந்து விடுவாரோ என்று தோன்றுகிறது.

பாதகம் செய்வோரைக் கண்டால் பயந்திடாத கதாநாயகன். ரவுடிகளோடு ரவுடியாய் சண்டை போடுகிறவனிடம் மனதைப் பறிகொடுக்கிற படித்த நகரத்துக்காதலி! விர்ருவிர்ரென்று ஆகாயவிமானம் நீங்கலாக அனைத்து வாகனங்களிலும் சீறி வந்து அநியாயம் இழைக்கும் வில்லன்கள். "உவ்வ்வ்வே....ஊவ்வ்வ்வ்வ்! ஆவ்வூ!" என்று சத்தமிட்டபடி நியூட்டனின் விதிகளை மீறிப் பறந்து விழும் வில்லனின் கையாட்கள்! ’யோவ், படத்துலே ஒரு ஹீரோயின் போட்டிருக்கோமய்யா," என்று தயாரிப்பாளர் ஞாபகப்படுத்திய கருமத்துக்காக ’போனால் போகிறது,’ என்று டூயட் பாடல்கள். பாசத்தைப் பிழியும் மிக்சர்களாய் அப்பா,அம்மா, தங்கை! சாமீ, இன்னும் எத்தினி நாளைக்கு இந்த மாதிரி படங்களைப் பார்க்கப்போறோம்னு தெரியலியே! ஆனால், ஜீவாவின் அப்பாவாக வருபவர் மனதில் நிற்கிறார்!

ஸ்ரேயா இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. (எதிர்பார்த்துப் போனால்தானே ஏமாறுவதற்கு?) ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது. எனவே வண்ண வண்ண சுடிதார்களுடன், குல்பி சிரிப்புடன் அவ்வப்போது வந்து, வழக்கம் போல டுயட் பாடிவிட்டுப் போகிறார்.

இந்தப் படத்தில் மொத்தம் எத்தனை ரவுடிக்கும்பல்கள், யார் யாரை எதற்கு அடிக்கிறார்கள் என்பதைக் குழப்பமில்லாமல் சொல்பவர்களுக்கு ஒரு டப்பா டைகர்பாம் பரிசாக வழங்கலாம். இந்திய ராணுவத்திடம் கூட இருக்குமா என்று சந்தேகப்படும்படியான ஆயுதங்களையெல்லாம் வைத்துக்கொண்டிருக்கிற ரவுடிகள், கதாநாயகனின் கையாலே அடிபட்டுச் சுருண்டு விழுவது, இயக்குனர் தன் கையிலிருக்கிற பூ மற்றும் ரசிகர்களின் காதுகளின் மீது வைத்திருக்கிற அபார நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இசையைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்றாலும் "மாலை மயங்கும்" ஓசியில் பாப்கார்ன் கிடைத்த ஆறுதலைத் தருகிறது. (ஸ்ரேயா படு க்யூட்டாகத் தெரிகிறார்!) இப்போதெல்லாம் படுதிராபையான படங்களைக் கூட ஒளிப்பதிவாளர்கள் ஒப்பேற்றி விடுவதற்கு ரௌத்திரமும் இன்னொரு உதாரணம். ஆங்காங்கே கொஞ்சம் கணிசமாய்க் கத்திரி போட்டிருந்தால் படத்தில் எடிட்டிங் என்ற ஒரு கெரகம் இருக்கிறது என்றாவது உறைத்திருக்கும். வசனகர்த்தா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்ததாக விஜய்காந்த் படத்துக்கு வாய்ப்பு கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருக்கிறது. ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடுகிற படத்தில் வசனத்தையாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

வர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்கொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

ரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். (வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்-சில் படம்பார்க்காத குறையும் தீர்ந்தது.)

சிபாரிசு: இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு, பேசாமல் அண்ணா ஹஜாரேயின் அறிக்கைகளையாவது வாசிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவாவது முடியும்.

Sunday, August 21, 2011

காவிக்கும் கதருக்கும் கல்யாணமாம்..!

எனது "உண்ணா ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்," என்ற இடுகையில் சில கருத்துக்களை வேண்டுமென்றே தவிர்த்தேன். காரணம், அண்ணாவின் போராட்டத்திற்கு விபரீதமான சாயம்பூச முயல்கிறேனோ என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு! ஆனால், நேற்றைய தினம் அண்ணா ஹஜாரே தனது அடுத்த அண்டப்புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதற்கு மேலும், எனக்குத் தெரிந்ததை எழுதாமல் இருப்பது சரியல்ல.

"எங்களது போராட்டத்துக்கு பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் ஆதரவளிக்கிறார்கள் என்று சொல்பவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் ," என்று முழங்கியிருக்கிறார் அண்ணா ஹஜாரே!

யாரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டுமாம்? அண்ணாவின் போராட்டத்தில் வலதுசாரிகளின் மறைமுகமான ஆதரவு இருக்குமோ என்று வெளியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையையா?

முதலில் ஒரு சாம்பிள்! ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதற்கு தில்லி காவல்துறை முதலில் மறுத்தபோது, பா.ஜ.கவின் கட்டுப்பாட்டிலிருக்கும் தில்லி மாநகராட்சி அண்ணா ஹஜாரேவுக்கு அனுமதி வழங்கியிருந்தது என்பதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இனி, விபரமாகப் பார்க்கலாம்.

நான் பார்த்தவரையிலும் தமிழகத்தில் அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பலருக்கு ஜன் லோக்பால் சட்டத்தைப் பற்றியே கூட சரியாகத் தெரியவில்லை. ஜன் லோக்பால் சட்டம் அமலுக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிற கருப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்து தேசத்தையே சுபிட்சமாக்கி விடலாம் என்றெல்லாம் பேசியும் எழுதியும் வருகிறார்கள். (ஒருவேளை அண்ணா ஹஜாரே இதைச் சாக்கிட்டு ஒவ்வொரு வெளிநாடாகப் போய் அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பார் போலிருக்கிறது.) ஆக, அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தின் குறிக்கோள் (?) பற்றியே சரிவர அறிந்திராதவர்களுக்கு, அந்தப் போராட்டம் தில்லியில் எப்படி நடக்கிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ராம்லீலா மைதானத்தில் நாளொரு நகைச்சுவையும், பொழுதொரு வேடிக்கையும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அங்கே மேடையில் பேசுகிறவர்களிடத்தில் ஊழல் குறித்த புரிதல் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை உற்றுக்கவனித்தால், அது நான் வழக்கமாக எழுதுகிற மொக்கைகளை விடவும் படுகேவலமாக இருக்கிறது. (போகிற போக்கில் அண்ணா என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவாரோ என்று பயமாயிருக்கிறது.)

ஒருவர் இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தையும் ஊழல் என்று சாடியிருக்கிறார். இன்னொருவர் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மின் அடையாள அட்டை வழங்குவதையும் ஊழல் என்று பேசியிருக்கிறார். (பாவம் நந்தன் நிலகேனி, இனி அண்ணாவின் போராட்டத்தைப் பற்றிக் குறைகூறுவாரா?)

ராம்லீலாவில் வந்து குவிகிற ஆதரவுக்கூட்டம், ஒட்டுமொத்தமாக நம்பிக்கையையே இழந்துபோய், இனி அண்ணாவை விட்டால் வேறு விமோசனமேயில்லை என்று சரணாகதியான கூட்டம். அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டம் வந்தால், இருபது நிமிடத்தில் வீட்டுக்குப் பிஸ்ஸா வருவது போல ஊழலற்ற சமுதாயம் வந்துவிடும் என்று நாக்கைத் தொங்கப்போட்டபடி காத்திருக்கிறார்கள். இவர்களை நன்கு புரிந்து கொண்டுவிட்டதாலோ என்னமோ, கிரண் பேடி நேற்றொரு பொன்மொழியை உதிர்த்திருக்கிறார்.

"அண்ணா என்றால் இந்தியா; இந்தியா என்றால் அண்ணா!" (Anna is India; India is Anna)."

இந்திரா அம்மையாரின் எமர்ஜன்ஸியின் போது, காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப்பூசாரி டி.கே.பரூவா "Indira is India; India is Indira" என்ற துதியை உருவாக்கியது ஞாபகத்துக்கு வருகிறதா? இது கூட பரவாயில்லை. அடுத்து, கிரண் பேடி சொல்லியிருப்பதைக் கேட்டால், பலர் சிரித்துச் சிரித்துச் சுருண்டு விழுந்து செத்தே போய் விடுவார்கள்.

"அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும்!" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர் கிரண் பேடி! கூடுகிற மக்களை அடிமுட்டாள்கள் என்று முடிவே கட்டிவிட்டார்கள் என்பதற்கு இந்தப் பிதற்றலைத் தவிரவும் வேறு சான்று வேண்டுமா?

அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்? அண்ணா ஹஜாரேயின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஆளாளுக்கு முடிந்தவரையில் அண்டப்புளுகுகளை அள்ளி இறைக்கிறார்கள். அதற்கு சிகரம் வைத்தாற்போல், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் முயற்சிதான் - "எங்களுக்கு பா.ஜ.கவின் ஆதரவோ ஆர்.எஸ்.எஸ்சின் ஆதரவோ இல்லை," என்பதும்!

அந்தக் கணக்குப்படி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அடுத்தபடியாக, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய இருவர் வருண் காந்தியும், சுஷ்மா ஸ்வராஜும்! அவர்கள் இருவரும் எப்போது ’ஆம்புலன்ஸ்’ வருமோ என்ற அச்சத்தில் கதவுகளைச் சாத்திக்கொண்டு அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக அவரவர் வீட்டில் "உள்ளிருப்புப் போராட்டம்," நடத்துவதாகக் கேள்வி!

வருண் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் என்ற தனிப்பட்ட தகுதியில் அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகிறார் என்பதை அனைவரும் அறிவர். ஒரு வேளை, பா.ஜ.க அண்ணாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், வருண் காந்தியின் இந்தத் தன்னிச்சையான செய்கை கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவது ஆகாதா? அவர்கள் கண்டித்திருக்க மாட்டார்களா?

எதற்குக் கண்டிக்க வேண்டும்? பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்கரி அண்ணா ஹஜாரேவுக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டார். நீதித்துறையை லோக்பாலில் கொண்டுவருவது போன்ற ஒரு சில விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித்தலைவரான அருண் ஜேட்லியும் ஆதரவு தெரிவித்தாகி விட்டது.

லோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பதில் அளித்தபோது அண்ணாவுக்கான தங்களது ஆதரவை வெளிப்படையாக ஒத்துக்கொண்டும் விட்டார். அத்தோடு நிறுத்தினாரா என்றால் அதுதான் இல்லை.

"India Against Corruption என்ற அமைப்பே பெருவாரியான ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர்களால் துவங்கப்பட்ட அமைப்புதான். ஆகவே, யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறது," என்று பாராளுமன்றத்திலேயே அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார். (India Against Corruption அரசியல் சார்பற்றது என்று புளுகி வந்தவர்களே, சுஷ்மா ஸ்வராஜ் சொல்லியிருப்பதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வக்கிருக்கிறதா?)

அண்ணாவின் உண்ணாவிரதம் நம்பர் 1-ன் போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த உமா பாரதியைத் திருப்பி அனுப்பிய கொள்கைவீரர்கள், சுஷ்மா ஸ்வராஜின் இந்தப் பேச்சுக்கு இன்னும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க!

நான் ஏற்கனவே எழுதியிருந்ததுபோல, மத்திய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி அண்ணாவின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கியிருந்தால், இம்முறை அவரது சாயம் வெளுத்திருக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பதினைந்து முறை அண்ணா ஹஜாரேயின் போராட்டங்களை பிசுபிசுக்கச் செய்த விலாஸ்ராவ் தேஷ்முக்கையோ, ஷரத் பவாரையோ கலந்தாலோசிக்காமல், குழப்படி மன்னர்களான சிதம்பரம், கபில் சிபல் ஆகியோரின் தவறான ஆலோசனைகளைக் கேட்டு, படுதோல்வியடைந்திருக்க வேண்டிய ஒரு போராட்டத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிய பெருமை, மத்தியிலிருக்கிற விவஸ்தை கெட்ட காங்கிரஸ் அரசையே சாரும்!

ஆக, பா.ஜ.கவின் ஆதரவு அண்ணாவுக்கு இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆர்.எஸ்.எஸ்-ஸின் அனுமதியின்றி பா.ஜ.கவால் காதுகுடையவும் முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே! முழுக்க நனைந்தபிறகு முக்காடுபோட்டு மறைக்க முற்படுகிற அண்ணாவின் அண்டப்புளுகு இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும்?

ஆரம்பகாலத்தில் அண்ணா ஆர்.எஸ்.எஸ்-சில் இருந்தார்.அதனால் தான் தனது தொண்டு நிறுவனத்துக்கு ’ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட்’ என்று பெயரிட்டார். பா.ஜ.க-சிவ சேனா கூட்டணி ஆட்சி ஆரம்பத்தில் அவருக்குப் பின்புலத்தில் இருந்தது. அவர் மாணவர்களுக்கு சத்ரபதி சிவாஜியைப் பற்றியும் வீர் சாவர்க்கரைப் பற்றியும்தான் போதித்து வருகிறார் என்பதையும் நினைவூட்டியே ஆக வேண்டும்.

"அண்ணா ஹஜாரேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் தொடர்பிருந்தால், சிவசேனா அவருக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?’ என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்புகிறார்கள். பால் தாக்கரேவுக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் இருக்கிற கருத்து வேறுபாடு, கொள்கை அடிப்படையிலானது அல்ல; தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள். அதனால் தான், முதலில் ’அண்ணா ஹஜாரே ஒரு தாலிபான் காந்தி,’ என்று முழங்கிய சிவசேனா, அடுத்த நாளே உத்தவ் தாக்கரேயின் அறிக்கையின் மூலம் அண்ணாவுக்கு ஆதரவு அளிப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. அது மட்டுமா? அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா ஒரு நாள் "குளியாப் போராட்டம்," நடத்தியிருக்கிறது.


இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியிருப்பவர் சிவசேனாவின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் அவ்தி!

இது மட்டுமா? சங்பரிவாரின் இளைஞர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நாடெங்கிலும் போராடி வருவதை பல செய்திகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ABVP supports Hazare's campaign in MP-India Today

ABVP bandh on Anna shuts colleges for a day in UP

இதே போல அஸாம், குஜராத், பீஹார், கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் ABVP ஆதரவாளர்கள் அண்ணா ஹஜாரேவுக்காக பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் வலுக்கட்டாயமாக மூடிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அத்துடன், அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தைக் காரணமாக வைத்து சிறுபான்மையினரால் நடத்தப்படுகிற ஸ்தாபனங்களின் மீது சில தாக்குதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. உதாரணத்துக்கு....

Jharkhand: ABVP cadres ransack missionary school over Anna protest

நாடெங்கிலும் அண்ணாவுக்கு ஆதரவான போராட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்தேறின என்று பெருமைப்பட்டுக்கொள்கிற அண்ணாவின் பஜனைகோஷ்டி, ABVP யின் இந்த அராஜகத்தைக் கண்டுகொள்ளவில்லை; கண்டிக்கவில்லை என்பதற்கு என்ன பொருள்? அவர்களுக்கு எப்படியாவது நாடுமுழுவதும் போராட்டம் சூடுபிடிக்க வேண்டும்; யார் கூட்டத்தைக் கூட்டினாலும் பரவாயில்லை; எப்படிக் கூட்டினாலும் பரவாயில்லை; என்ன அசம்பாவிதம் நடந்தாலும் பரவாயில்லை என்ற அலட்சியம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? (அது சரி, சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்களிடம் எதிர்பார்ப்பது எப்படிப் பொருத்தமாயிருக்கும்?)

பா.ஜ.க அண்ணா ஹஜாரேவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறதல்லவா? அவர்களது சிவில் சொஸைட்டியிலேயே ஒரு முக்கியப் பிரமுகரான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, எடியூரப்பாவின் சுரங்க ஊழலை லோகாயுக்தாவின் மூலம் அம்பலப்படுத்தியபோதும், அந்த ஊழலில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு உதவிபுரியும் ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையும் சம்பந்தப்பட்டிருந்தபோதும், அமைதி காத்த புண்ணியவான்கள் அல்லவா அண்ணாவின் பஜனை கோஷ்டி? இந்த கைமாறு கூட செய்யாவிட்டால் எப்படி?

சரி, அண்ணாவின் போராட்டத்தில் மதச்சார்புடைய அமைப்புக்கள் குதித்துவிட்டன என்பது ஒரு புறம் இருக்கட்டும். அத்தோடு முடிந்ததா?

இப்போது தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிற சாகும்வரை அல்லது காலவரையற்ற அல்லது முடிந்தவரை உண்ணாவிரதத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பது யார்? கிராந்திகாரி மனுவாதி மோர்ச்சா(KMM).

கிராந்திகாரி என்றால் புரட்சிவாதிகள்; மனுவாதி என்றால் மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள். இந்த KMM-இன் அடிப்படைக் கொள்கையே ஜாதி அடிப்படையில் இட ஓதுக்கீடு கூடாது என்பதுதான். அந்தக் கட்சியின் நிறுவனர் ஆர்.கே.பரத்வாஜ் கடந்த இரண்டு மாதங்களில் 30 நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியிருக்கிறார். ஊழல் ஒழிப்புக்கும் மனுதர்மத்துக்கும் என்ன தொடர்பு?

"மனுதர்மத்தைப் புரட்சியின் மூலம் நிலைநிறுத்தினாலொழிய ஊழல் ஒழியாது. காரணம், ஊழலுக்கு அடிப்படைக்காரணமே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுதான். சலுகை பெறுகிறவர்கள் பதவிக்குப் போய் ஊழல் செய்கிறார்கள். சலுகை பெறத் தகுதியற்றவர்கள் புழுங்குகிறார்கள்." - இதுவே ஆர்.கே.பரத்வாஜின் விளக்கம்

திக்விஜய் சிங் அண்ணா ஹஜாரேயைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் ஆரம்பத்தில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அதை நானே அதிகப்பிரசங்கித்தனம் என்று கருதினேன். ஆனால், இப்போது இந்த ஆதாரபூர்வமான செய்திகளை வாசிக்கும்போது, நடுநிலையிலிருந்து யோசித்தால் அவர் சொன்னதில் என்ன தவறு என்று யோசிக்கத்தோன்றுகிறது. அதே போல, அண்ணாவின் போராட்டத்தை உலக ஊடகங்கள் கண்டுகொள்ளத்தொடங்கியதும் பாரதீய ஜனதாக் கட்சியும் முன்பு எப்போதுமில்லாத முனைப்புடன் லோக்பால் சட்டத்தைக் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கத் தொடங்கியிருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தத்தானே செய்கிறது?

மதசார்புடைய கட்சிகளோ, ஜாதீய உள்நோக்கமுடைய அமைப்புகளோ ஊழலை எதிர்த்துப் போராடக்கூடாதா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாகப் போராடுங்கள். ஆனால், அவர்களும் உங்களோடு இருக்கிறார்கள் என்ற உண்மையை மூடிமறைக்க அண்ணாவின் பஜனைகோஷ்டி பிடிவாதமாக முயல்வது ஏன்?

எல்லா அரசியல்வாதிகளும் திருடர்கள்,’ என்று பொத்தம்பொதுவாகக் குற்றம் சாட்டிய அண்ணா ஹஜாரே, அதே திருடர்களின் ஒத்தாசையோடு போராடிக்கொண்டிருப்பது ஏன்?

ஆகஸ்ட் முப்பதுக்குள் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யாவிட்டால் சிறைநிரப்பும் போராட்டம் என்று சூளுரைத்த சிங்கம், திடீரென்று ’அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்,’ என்று யார் கொடுத்த தைரியத்தில் புதிய மிரட்டலை விடுத்திருக்கிறார்?

யோசிக்க விரும்புகிறவர்கள் யோசிக்கட்டும். மற்றவர்கள் கிரண் பேடி சொன்னது போல ’அண்ணா தான் இந்தியா; இந்தியா தான் அண்ணா,’ என்று குருட்டுத்தனமாக அந்த மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கட்டும்.

டிஸ்கி: பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு, வசைமாரி பொழியக் காத்திருக்கும் அண்ணாவின் தொண்டர்களுக்கு ஒரு நற்செய்தி! அண்ணாவின் நாடகம் முடியும்வரை தொடர்ந்து அவ்வப்போது எழுதிக்கொண்டே இருப்பேன் - அவரைப் பற்றி! :-)))))))))

Thursday, August 18, 2011

பல்பு வாங்கலியோ பல்பு


ஆக, தேசமெங்கணும் மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாது, செவ்வியருமையும் பாராது, அவமதிப்பும் கொளாது அண்ணாவின் ஆணையை ஏற்று உண்ணாவிரதங்களிலும் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு "ஊழலை ஒழிக்காமல் ஓய மாட்டோம்," என்று சூளுரைத்த கொள்கைச் சிங்கங்களுக்கு, பலவிதமான பல்புகளைப் பரிசாக அளிக்கவிருக்கிறதாம் அண்ணாவின் பஜனைகோஷ்டி!

சந்தேகமாயிருப்பின், இன்று மாலை மட்டும் வந்த செய்திகளை சாம்பிள்களாக வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பல்பு.நம்பர்.1: ஜன்லோக்பால் மசோதாவில் நீதித்துறையைக் கொண்டுவருவது குறித்து அண்ணாவின் பஜனைகோஷ்டி வற்புறுத்தாது.

தற்போதைய பாராளுமன்றத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் Judicial Accountability Bill போதுமானதாக இருக்கும்பட்சத்தில், ஜன்லோக்பாலில் நீதித்துறையைக் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம் என்று அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அட, இதைத்தானே மத்திய அரசு நான்கு மாதங்களாக மாங்கு மாங்கென்று சொல்லிக்கொண்டிருந்தது?

நீதிபதிகள் வெங்கடசலையா, ஜே.எஸ்.வர்மா முதற்கொண்டு பல சட்டவல்லுனர்கள் ஜன்லோக்பாலில் நீதித்துறையைக் கொண்டு வரக்கூடாது என்று எப்போதோ சொன்னார்களே?

'அப்போதெல்லாம் கேட்காமல் அடம்பிடித்த அண்ணாவின் குழுவின் இந்த அந்தர் பல்டிக்குக் காரணம் என்ன?’ என்று கேட்கிறீர்களா?

அப்படிக் கேட்பவர்கள் எல்லாரும் காங்கிரஸின் கைக்கூலிகள்! தேசத்திலிருந்து ஊழலை விரட்டக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறவர்கள். நாங்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டுகிற பணத்தைக் கொண்டுபோய் லஞ்சம் என்ற பெயரில் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர, அண்ணா ஹஜாரேயின் ஜன்லோக்பாலை நிறைவேற்ற விட மாட்டோம் என்று அழும்பு பண்ணுகிற பிடிவாதக்காரர்கள் - என்று நான் சொல்லவில்லை; அண்ணாவின் பஜனை கோஷ்டி சொல்வார்கள் ஜாக்கிரதை!

பல்பு.நம்பர்.2. சரி, நீதித்துறையை விலக்கினால் விலக்கி விட்டுப்போகிறார்கள். ’என்ன ஆனாலும் சரி, லோக்பால் மசோதாவில் பிரதம மந்திரியை உட்படுத்தியே ஆக வேண்டும்,’ என்று அண்ணா ஹஜாரே முழங்கி வந்திருக்கிறார் அல்லவா? அப்படி, லோக்பாலில் பிரதமரைக் கொண்டுவந்தாலும் போதுமே என்று அண்ணாவின் சீடர்கள் பெருமூச்சு விடுகிறீர்களா?

ஐயோ பாவம்! ’நான் நினைத்தால் அண்ணா ஹஜாரேயிடம் பேசி பிரதமரை லோக்பாலுக்குள் கொண்டுவராமல் இருக்க முடியும்," என்று கர்நாடகாவின் முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியிருக்கிறார்.

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, ஜன் லோக்பால் மசோதா வரைவுக்கு வடிவம் கொடுத்ததில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதை அனைவரும் அறிவார்களே? :-)


என்னது இது? பிரதமரும் வர மாட்டார்; நீதித்துறையும் வராது என்றால் இந்த ஜன் லோக்பாலுக்கும் அரசின் லோக்பாலுக்கும் என்ன வித்தியாசம்? அப்புறம் எதற்கு இந்த உண்ணாவிரத நாடகம்? என்று கேட்கிறீர்களா?

இதோ........

பல்பு.நம்பர்.3: அண்ணா ஹஜாரே ’சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை; காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்," என்று கிரண் பேடி அறிவிப்பு

திஹார் சிறையில் இருந்து கொண்டு எல்லா நிபந்தனைகளையும் தளர்த்தினால் தான் வெளியே வருவேன் என்று கொள்கைப்பிடிப்போடு இருந்த ஊழலை ஒழிக்க வாராது வந்த மாமணியாம் நமது அண்ணா ஹஜாரே, முன்று நாட்களா முடியாது, ஒரு வாரமா, ஒப்புக்கொள்ள மாட்டேன், பதினைந்து நாட்களா, பக்கத்திலேயே வராதே என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் என்பதற்கு ஒப்புக்கொண்டார்.

பிறகு, மருத்துவப்பரிசோதனை முடிந்தபிறகு, சாவகாசமாக பதினைந்து நாட்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை; காலவரையற்ற உண்ணாவிரதம். இடையில் அண்ணாவின் உடல்நிலையைப் பொறுத்து, அவரை மருத்துவமனைக்கு (உண்ணாவிரத்தை நிறுத்தி) எடுத்துச் செல்லவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று அதே கிரண் பேடி சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் இது அண்ணா ஹஜாரே பில்ட்-அப் பண்ணியது போல "சாகும்வரை உண்ணாவிரதம் இல்லை," என்பது உறுதியாகி விட்டதா என்று கேட்டால், அதுவும் இல்லை. ஒரு வேளை அண்ணா ஹஜாரே இன்று ஒப்புக்கொண்டதுபோல, பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால், அவரது வயது காரணமாக, அவரது உடல்நிலை சீர்குலைய வாய்ப்பிருக்கிறது என்பதனை அனைவரும் அறிவோம். பதினைந்தே நாட்களில் இப்படியென்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் என்றால் அவரது உடல்நிலை தாக்குப்பிடிக்குமா? என்று கேட்கிறீர்களா?

"அண்ணாவின் உடல்நிலை சீராக இருக்கும்வரைக்கும் உண்ணாவிரதம் தொடரும். அவரது உடல்நிலை சீர்குலைய அனுமதிக்க முடியாது," என்று கிரண் பேடி கூறியிருக்கிறார். அதாவது, சாகும்வரை உண்ணாவிரதம் என்று சொன்னதெல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு, அவரால் முடியாமல் போனால் உடனே மருத்துவ உதவியளிப்போம் என்பது தான் இதன் பொருள்.

அடடா, என்னாச்சு நமது கொள்கை வீரர்களுக்கு? நாடே பொங்கிப் பூரித்துக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தை நழுவ விட்டு விட்டார்களே? இப்படி எல்லாவற்றிற்கும் சமரசம் செய்து கொள்ளவா கடைகடையாய் ஏறி, மூவர்ணக்கொடி, காந்தி தொப்பி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி(மெழுகுவர்த்தி கொளுத்தத்தான்!) வாங்கி, "பாரத் மாதா கீ ஜே! வந்து ஏமாத்தறோம் அதாவது வந்தே மாதரம்" என்றெல்லாம் கோஷம் போட்டோம் என்று தலைதலையாய் அடித்துக் கொள்கிறீர்களா? கவலைப்படாதீங்க!

அர்விந்த கேஜ்ரிவால் சொல்லிட்டாரு: "அண்ணாவுக்கு உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனீங்க, அப்பாலே நடக்குறதே வேறே!"

/The RTI activist and team Hazare member, Arvind Kejriwal, also said if Anna Hazare is forcibly taken away from the Ramlila Maidan on the grounds of ill health then the social activist would even stop drinking water.//

அதாவது, கிரண் பேடி என்ன சொல்றாங்கன்னா, அண்ணாவின் உடல்நிலை மோசமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம் என்று! அர்விந்த் கேஜ்ரிவால் என்ன சொல்றாருன்னா, அண்ணாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், மற்ற செயல்வீரர்கள் தண்ணீர் குடிப்பதை நிறுத்துவார்கள் என்று!

அவுங்களுக்குள்ளேயே அடிச்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க டோய்!

எப்படி, நல்லாயிருக்கா காமெடி? :-))

இன்னும் தொடர்ந்து இந்த மாதிரி காமெடி நிறையா நடக்கும். பார்த்துக்கினே இருங்க!

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பொதுமக்களே, நீங்கள் தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையாய்க் கருதி, கூட்டம்போட்டு, கொடிபிடித்து, பல்பு மீது பல்பு வாங்குமாறு, அதாவது வெற்றி மீது வெற்றி காணுமாறு அண்ணாவின் பஜனை கோஷ்டி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Flash News ( SETTAI SPECIAL)

பல்பு.நம்பர்: 4

"அண்ணா ஹஜாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஒருபோதும் சொன்னதில்லை" என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். :-))

On Anna’s indefinite strike Kejriwal said “Anna uses the word indefinite fast because it is more spiritual”. He added that Anna never used the word fast-unto-death.

பல்பு. நம்பர்.5: அண்ணாவின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சாகும்வரை உண்ணாவிரதம் என்று ஊடகங்கள் செய்தி பரப்பி விட்டன அர்விந்த் கேஜ்ரிவால்!

http://expressbuzz.com/nation/%E2%80%98fast-may-go-beyond-the-period%E2%80%99/305720.html

"He blamed the media for using the word fast unto death."

ஊடகங்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.


இந்த பல்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :-))

கிருஷ்ணலீலை

பிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகம் நைட்-ஷோ முடிந்த டூரிங் கொட்டாயைப் போல வெறிச்சோடிக் கிடந்ததைப் பார்த்து சற்று பயந்தபடியே தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளே நுழைந்தார்.

"வாங்க கிருஷ்ணாஜீ! உட்காருங்க!" என்று கூறிய பிரதமர், "ஒரு முக்கியமான விஷயமாப் பேசலாமுன்னுதான் உங்களைக் கூப்பிட்டேன்," என்று பீடிகை போடவும், கிருஷ்ணாஜீக்கு அடிவயிற்றுக்குள் பிரேக் இல்லாத லாரியொன்று, டிரைவர் இல்லாமல் ஓடுவது போலிருந்தது.

"முக்கியமான விஷயமா? அப்போ நானும் ஆட்டத்துலே இருக்கேனா?" என்று குழப்பத்தோடு கேட்டார். "அதுக்கெல்லாம் எப்பவும் நீங்க சிதம்பரம்ஜீ, கபில் சிபல்ஜீ, அந்தோணிஜி, பிரணாப்ஜீயைத்தானே கூப்பிடுவீங்க?"

"எதுக்குப் பதட்டப்படறீங்க கிருஷ்ணாஜீ? இன்னும் ரெண்டு மூணு நாளுலே நாமல்லாம் பங்களா தேஷுக்குப் போறோமில்லே? அது விஷயமாப் பேசத்தான் கூப்பிட்டேன்," என்று ஆசுவாசப்படுத்திய பிரதமர் மணியை அழுத்தினார். "யாரங்கே? கிருஷ்ணாஜிக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாங்க!"

உள்ளே வந்த சிப்பந்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, "காப்பி கொண்டு வரட்டுங்களா? டீ கொண்டு வரட்டுங்களா?" என்று வினவினார்.

"பால் கொண்டுவாங்க," என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"வெறும்பாலா? மசாலாபாலா?"

"யோவ்!" என்று சீறினார் பிரதமர். "நீ லோக்பால் தவிர எது வேண்டுமானாலும் கொண்டுவாய்யா! சும்மா நொய்நொய்னு அருண் ஜேட்லி மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு.."

சிப்பந்தி போனதும் பிரதமர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"அது போகட்டும், தமிழ்நாட்டுக்காரங்களைத் தப்பாப் பேசின அந்த அதிகாரியைப் பத்தி அமெரிக்காவுக்கு லெட்டர் எழுதச் சொன்னேனே, எழுதிட்டீங்களா?"

"எழுதிட்டேனே! இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது-ன்னு எழுதியிருக்கிறேன்," என்று மலர்ந்த முகத்தோடு சொன்னார்.

"சபாஷ்! இப்படித்தான் மொண்ணையா எழுதணும்," என்று மகிழ்ந்தார் பிரதமர்.

"பொதுவா தமிழங்க விஷயம்னாலே இப்படித்தானே எழுதிட்டிருக்கோம்?" என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"வெரி குட்!" என்றார் பிரதமர். "பங்களாதேஷுக்கு நம்ம கூட சிதம்பரம்ஜீ, பிரணாப்ஜீ, மம்தாஜீ எல்லாரும் வர்றாங்க. அவங்க என்ன ஃபீல் பண்ணுறாங்கன்னா, போறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சின்ன கிளாஸ் எடுக்கணுமாம்!"

"கிளாஸா? எனக்கா? எதுக்கு சார்?" எஸ்.எம்.கிருஷ்ணா பதறினார்.

"என்ன பண்ணறது கிருஷ்ணாஜீ, நீங்க யாராவது எதுனாச்சும் கேட்டா சம்பந்தா சம்பந்தமில்லாத பதிலா சொல்றீங்களே?"

"அதுனாலே தானே சார் இத்தனை வருசமா கட்சியிலே இருக்கேன்? அடிமடியிலேயே கைவைக்கறீங்களே?"

"அதுக்காக இப்படியா? அன்னிக்கு பார்லிமெண்டுலே நம்ம நாட்டுச் சிறையிலே இருக்கிற பாகிஸ்தான் கைதியைப் பத்திக் கேட்டா, நீங்க பாகிஸ்தானிலே இருக்கிற நம்ம நாட்டுக்கைதியைப் பத்திப் பதில் சொல்றீங்க! நடுவுலே நான் புகுந்து கரெக்ட் பண்ண வேண்டியதாகிப்போச்சு!"

"நான் வேணும்னா இனிமே எழுதிவச்சு வாசிக்கிறேன் சார்!" கிருஷ்ணா கெஞ்சினார்.

"அதைக் கூட சரியாப் பண்ண மாட்டேங்கறீங்களே? ஐ.நா.சபையிலே போயி, போர்ச்சுக்கல் அமைச்சர் பேச வேண்டியதைப் பேசியிருக்கீங்களே?"

"எதுக்கு சார் என்னை மட்டும் குத்தம் சொல்றீங்க? காமன்வெல்த் கேம்ஸ்லே..."

"இப்போ எதுக்குய்யா அதை ஞாபகப்படுத்தறீங்க?" என்று எரிந்து விழுந்தார் பிரதமர்.

"முழுசாக் கேளுங்க சார், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியோட துவக்க விழாவுலே என்னாச்சு? சுரேஷ் கல்மாடி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்னு சொல்லுறதுக்குப் பதிலா அப்துல் கலாம் ஆசாத்னு சொன்னாரா இல்லியா?"

"கிருஷ்ணாஜி...!"

"ப்ளீஸ், பேச விடுங்க சார்! அதே சுரேஷ் கல்மாடி பிரின்ஸ் சார்லஸ் வந்தாருன்னு சொல்றதுக்குப் பதிலா, பிரின்சஸ் டயானா வந்தாங்கன்னு சொன்னாரா இல்லையா?"

"கிருஷ்ணாஜி, இப்போ எதுக்கு ஜெயில்லே இருக்கிறவரை ஞாபகப்படுத்தறீங்க?" பிரதமர் எரிச்சலுற்றார்.

"என்னது? பிரின்ஸ் சார்லஸ் ஜெயில்லேயா இருக்காரு? ஏன் சார்?"

"ஐயோ உம்மோட பெரிய ரோதனையா இருக்கு. நான் சொன்னது சுரேஷ் கல்மாடியை! பிரின்ஸ் சார்ல்ஸ் ரொம்ப வருசத்துக்கப்புறம் இப்போத்தான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு! அது போதாதுன்னு ஜெயிலுக்கு வேறே போகணுமா?"

"சார், அவரு உசிரோட இருக்கிறவங்களைப் பத்தி சொல்றதுக்கு பதிலா, செத்தவங்க பேராச் சொன்னாரு. அட் லீஸ்ட், நான் உசிரோட இருக்கிறவங்க பேராத்தானே சொன்னேன்?"

"சொன்னாக் கேளுங்க கிருஷ்ணாஜி! ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது. நீங்க என்ன பண்ணறீங்கன்னா, பங்களா தேஷ் ஜனாதிபதி யாரு, பிரதமர் யாரு, வெளியுறவுத்துறை மந்திரி யாருன்னு ஒரு நாற்பது பக்கம் நோட்டுலே நூறுவாட்டி எழுதிப் பழகிக்கோங்க! அங்கே போய் குழப்பம் வராம இருக்கும்!" என்றார் பிரதமர்.

"என்ன சார் இம்போசிஷன் எழுதச் சொல்றீங்களே?"

"நானாவது இம்போசிஷன் எழுதச் சொல்றேன். மேடம் திரும்பி வந்தா பெஞ்சு மேலே நிக்க வைச்சிருவாங்க! அதுனாலே நான் சொல்றா மாதிரி செய்யுங்க, சரியா?"

"சரி சார்! நான் வேண்ணா திரும்பி வர வரைக்கும் பேசாம இருந்திரட்டுமா?" கிருஷ்ணாஜீ பரிதாபமாகக் கேட்டார்.

"நாமல்லாம் வெளிநாடு போனாத்தான் ஏதோ கொஞ்சம் பேசறோம். அங்கேயும் போய் வாயே திறக்காம இருந்தா எப்படி? அதுவும் நீங்க வெளியுறவுத்துறை அமைச்சர். கண்டிப்பாப் பேசியே ஆகணும்."

"சரி சார்!"

"உங்க வலது பக்கத்துலே பிரணாப்ஜீ இருப்பாரு! இடது பக்கத்துலே நானிருப்பேன்! அவங்க பெங்காலியிலே பேசினா பிரணாப் பதில் சொல்லுவாரு, இந்தியிலே பேசினா நான் பதில் சொல்லுவேன். இங்கிலீஷ்னா சிதம்பரம் பதில் சொல்வாரு!" என்று அடுக்கினார் பிரதமர்.

"நான் பஞ்சாபியிலே பேசட்டுமா சார்?" கிருஷ்ணாஜீ வினவினார்.

"அவங்களுக்குப் பஞ்சாபி தெரியாதே கிருஷ்ணாஜி!"

"எனக்குக்கூடத்தான் தெரியாது!"

"அதெல்லாம் வேண்டாம்! ஒண்ணு செய்யலாம். நான் தாடியைச் சொறிஞ்சா "ஓ.யெஸ்"னு சொல்லுங்க!"

"ரெண்டு நாளுக்குள்ளே எனக்குத் தாடி வளராதே சார்?"

"நான் என் தாடியைச் சொன்னேன் கிருஷ்ணாஜி! தாடியைச் சொரிஞ்சா ’எஸ்". தொடையைக் கிள்ளினா "நோ"ன்னு சொல்லுங்க. என் தொடையை இல்லை; உங்க தொடையை.."

"என்ன சார் இது, கிள்ளறதுன்னா எனக்கு, சொரியறதுன்னா உங்களுக்கா? நம்ம கட்சி திருந்தவே திருந்தாதா சார்?"

"நோ மோர் டிஸ்கஷன்! நீங்க இப்பலேருந்தே இம்போசிஷன் எழுத ஆரம்பிச்சிடுங்க! நாளைக்கு உங்களுக்கு கிளாஸ் இருக்கு! சிலேட்டு, பலப்பமெல்லாம் கொண்டு வந்திருங்க!"

"ஓ.கே.சார்!" என்று சலிப்புடன் சொன்னார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"பீ சியர்ஃபுல் கிருஷ்ணாஜி! கரெக்டா பதில் சொன்னா ராகுல்ஜீ சாக்லெட் கொடுப்பாரு!"

"தேங்க்யூ சார்!" என்று எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சிப்பந்தி பால் கொண்டு வந்தார்.

"லஸ்ஸிலே ஐஸ் போடலே தானே?" என்று கேட்டார் கிருஷ்ணா.

"நீங்க பால்தானே கேட்டீங்க சார்?" சிப்பந்தி குழம்பினார்.

"ஓ ஐ.ஸீ! அதுக்கென்ன பரவாயில்லே! பால் இல்லாட்டி லஸ்ஸி ஏது?" என்று வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார் எஸ்.எம்.கிருஷ்ணா.

"ஐயையோ, இவரை வச்சுக்கிட்டு பங்களாதேஷ்லே என்ன பண்ணப்போறேன்னு தெரியலியே?" என்று அங்கலாய்த்தார் பிரதமர்.

"சார், கிருஷ்ணாஜியோட செக்ரட்டரியேட்டிலிருந்து லெட்டர் வந்திருக்கு சார்!" என்று வைத்து விட்டுக் கிளம்பினார் சிப்பந்தி. பிரதமர் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார்.

"துரதிருஷ்டவசமானது!" பிரதமர் வாசித்தார். "பரவாயில்லை, கிருஷ்ணாஜி தேறிட்டாரு!"

அப்படியே கடிதத்தின் மேல்பகுதியைப் பார்த்தவர் அடுத்த கணமே அதிர்ந்து அலறினார்.

"யாரங்கே? கிருஷ்ணாஜியைக் கூப்பிடுங்கய்யா! அவரு பாட்டுக்கு அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய லெட்டரை பங்களாதேஷுக்கு அனுப்பிட்டாருய்யா! திரும்ப வரச்சொல்லுங்க அவரை! அப்படியே டாக்காவுக்கு லைன் போட்டுக்கொடு!"


Monday, August 15, 2011

"உண்ணா" ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

மத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதிய வரலாறு படைத்தது என்பது, இன்று வடபழநி கோவிலில் காதுகுத்தி மொட்டையடித்துக் கொண்ட ஒருவயதுக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அண்ணாவின் உண்ணாவிரததுக்குப் பயந்து, பற்பல நிபந்தனைகளையெல்லாம் விதித்து, இப்போது "அனுமதியெல்லாம் கிடையாது," என்று தில்லி காவல்துறையின் மூலம் சொல்ல வைத்திருப்பது காங்கிரஸின் கடைந்தெடுத்த கையாலாகாத்தனம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எவ்வித நிபந்தனைகளுமின்றி அண்ணா ஹஜாரேயை அனுமதித்திருக்க வேண்டும். இம்முறை அண்ணாவின் உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் படுகேவலமாகத் தோல்வியடைந்திருக்கும். அதன்மூலம், அவருக்கு பல்பு கொடுக்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் அரசு தவற விட்டுவிட்டது.

ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில், வெறும் 6 தான் அண்ணாவின் பஜனைகோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன? "5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்று நாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது," என்றுதான் நேற்று காலைவரையில் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்," என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், இன்று திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள் என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்ப விதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள். முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும், முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும் உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான் அண்ணா ஹஜாரேயின் குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!

ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று அண்ணாவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்று சட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும். அப்படியே இருந்தாலும், அதுகுறித்து அண்ணா ஹஜாரே கவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவே அவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

பி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணா ஹஜாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது. "சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமான தீர்ப்புக்களைப் பெற முடியும்," என்று அப்போது அண்ணா தெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை 2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப் பெற வைத்திருக்கிறார் என்பதையும் நினைவூட்ட வேண்டும்)

அதே போல "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த் கமிட்டியால் அண்ணா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை நேற்று காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும், அண்ணாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று அடுத்த சவடால்!

அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அண்ணா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அண்ணாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?

இவருக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்ன யோக்யதை இருக்கிறது? அதை மதிப்பவர்களாயிருந்தால், பாராளுமன்றக்குழுவுக்கு முன் சென்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இப்போது இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன? அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏகடியம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?

சரி, இந்த மனிதருக்கு அரசியல் சட்டம், பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவர் கூறிக்கொள்வது போல உண்மையிலேயே இவர் காந்தீயவாதியா?

இவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறிய கிராமத்தில் தன்னிறைவு ஏற்பட அண்ணா ஹஜாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பதும் நிஜம். ஆனால், ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை ஏன் ஊடகங்கள் வெளியிடாமல் இருக்கின்றன?

யாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம் அண்ணா ஹஜாரே! "இப்படிச் சொன்னால்தான் இவர்கள் திருந்துவார்கள்," என்பது இவரது வாதம். நான் சொல்லவில்லை; ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.

இவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவ்வளவு ஏன், ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார். கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார். தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர் வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.

ராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரது பிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதி வருகிறார்கள்.

இதுவா காந்தீயவாதம்? பெல்ட்டால் அடிக்கிறவரா அஹிம்சாவாதி?

காந்தி மட்டுமல்ல; மக்களால் பெரிதும் போற்றப்படுகிற எந்தத் தலைவர்களைப் பற்றியும் எழுத எனக்கு எப்போதும் தயக்கமுண்டு. இருந்தாலும், கேட்கிறேன்!

காந்தி எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்தார்? மூன்று முறை! அதில் எத்தனை முறைகள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? ஒரு முறை கூட இல்லை! அவர் பிளவுபட்ட சமுதாயங்களை ஒன்றிணைக்க உண்ணாவிரதம் இருந்தார். இந்த அண்ணா ஹஜாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்று விரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒரு எதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.

அது உண்மைதானே?’ என்று கேட்பவர்களுக்கு! என்ன செய்யலாம்? 120 கோடி மக்களும் கடலில் போய் விழுந்துவிடலாமா? இல்லை மீண்டும் பிரிட்டிஷாரை வந்து ஆளச்சொல்லலாமா? அல்லது, ஜன் லோக்பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?

"ஆ.ராசா போன்றவர்களைத் தூக்கில் போட வேண்டும்," இது அண்ணா ஹஜாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து. அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதே கூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா? அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட், மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா? இதுவா காந்தீயவாதியின் லட்சணம்?

"ஹிஹிஹி! அதுலே பாருங்க, நான் காந்தீயவாதிதான். ஆனால், அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன்," என்று இதற்கு நேற்று ஒரு விளக்கம் வேறு!

சத்ரபதி சிவாஜியின் கொள்கை என்றால் சிவசேனாவின் கொள்கையென்று வைத்துக்கொள்ளலாமா? அப்படியென்றால், திக்விஜய் சிங் சொன்னது போல இது சங்க்பரிவாரின் ஆசீர்வாதம் பெற்ற போராட்டமா? (ஆர்.எஸ்.எஸ்.ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டது என்பதையும் நினைவில் கொள்க!)

சுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின் முதலமைச்சர் மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில் விடுதலையானவர் அல்லவா நமது காந்தீயவாதி அண்ணா ஹஜாரே?

பின்னாளில் நரேந்திர மோதியைப் பாராட்டி கடிதம் எழுதினார். "நரேந்திர மோதியைப் பாராட்டினால் இந்தப் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை," என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும், மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோதியின் ஆட்சியை விமர்சித்து "நான் ரொம்ப நல்லவனாக்கும்," என்று எல்லாரையும் நம்ப வைக்க முயன்ற இந்தப் போலியா காந்தீயவாதி?

ராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா ஹஜாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபா ஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும் இருந்திருக்கிறார்கள். வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள்! அண்ணா ஹஜாரேயின் ஒரு தம்பிடி கூட செலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான் தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணா ஹஜாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

காங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார் ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும் ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்து காரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

இதெல்லாம் தான் காந்தீயத்தின் அடையாளங்களா?

ஜன் லோக்பால் - அரசு லோக்பால் இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதை விட ஊழலை ஒழிக்க புகாரி ஹோட்டலில் கிடைக்கிற பல்குத்தும் குச்சியைப் பயன்படுத்தலாம்.

ஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...? "ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.

"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."

ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இது யாரை ஏமாற்றுகிற வேலை?

Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?

ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத் மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்க முடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி போன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.

ஏன்? ஏன்?? ஏன்???

சரி, அரசு கொணர்ந்துள்ள லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (Non Government Organisations) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன. ஆனால், அவற்றை அண்ணா ஹஜாரேயின் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா? அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்?

மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல் மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானது கூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.

இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அண்ணா சொல்வது ஏன்?

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஒழிக்க அண்ணா ஹஜாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!

ஏப்ரல் மாதம் தொடங்கி, இன்று வரையில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தேடுவதில் செலவழித்த நேரத்தில், ஒருவராவது ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பார்களா? இம்முறை உண்ணாவிரதம் முடிந்ததும், அடுத்த உண்ணாவிரதம் வரைக்கும் கைகளைக் கட்டிக்கொண்டு, "அண்ணா என்ன சொல்கிறார் பார்ப்போம்?" என்று காத்திருக்கப் போகிறார்களா?

இன்னும் ஒரே ஒரு டிராபிக் ராமசாமி தானே இருக்கிறார்?

தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவை நடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி, பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்ற அடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம் போட்டு, பேனர் தூக்கியது தவிர என்ன கிழித்திருக்கிறார்கள்?

இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்ற பெருமூச்சுடன்! ஆனால், அண்ணாவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறு என்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டாமா?

அனேகமாக, இது அண்ணாவைப் பற்றி நான் எழுதுகிற கடைசி இடுகையாய் இருக்கும். வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள், எத்தனை பேர் follow செய்வதை நிறுத்துவார்கள், எத்தனை பேர் தனிமடலில் திட்டப்போகிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.

ஊழலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. கொடுக்கல்-வாங்கல்! முதலில் கொடுப்பதை நிறுத்துவோம் என்று உறுதி மேற்கொண்டாலொழிய, ஊழல் ஒழியவே ஒழியாது - எத்தனை ஆயிரம் லோக்பால் சட்டங்கள் வந்தாலும் சரி!

பி.கு: இதை பதிவிடும் நேரத்தில் ராஜ்காட்-டில் அண்ணா அமர்ந்திருப்பதாக அறிகிறேன். பாபா ராம்தேவ் விஷயத்தில் நடைபெற்றதுபோல எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அண்ணாவின் உண்ணாவிரதம் அமைதியாக நடந்தேற விரும்புகிறேன். அப்போதுதான், அடிக்கடி இது போன்ற கேலிக்கூத்துகளை வேடிக்கை பார்க்க முடியும்.


Saturday, August 13, 2011

பாளையங்கோட்டையும் பால்ய சேட்டையும்

சுதந்திரதினம் குறித்து புதிதாய் என்ன எழுத இருக்கிறது? நிரம்ப வாசித்து, ஆழமாய் யோசித்து, சமநிலையிலிருந்து சுதந்திர இந்தியாவை நோக்குபவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஒதுங்கி நின்று அரவமெழுப்பாமல் வாசித்துப்போவதே எனது அறியாமையை அம்பலப்படுத்தாமலிருக்க சரியான வழி! ஒவ்வொரு ஆகஸ்ட் 15-ம் ஒரு நினைவூட்டல் என்றளவில், அத்துடன் தொடர்புடைய கொண்டாட்டங்களையும், அதுகுறித்த எதிர்மறை எகத்தாளங்களையும், தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளையும் இயன்றவரை சலனமின்றி கவனித்துப்போவது போதுமென்று தோன்றுகிறது. ஆனால், இந்த சுதந்திரதினம், தேசபக்தி போன்ற பெரிய வார்த்தைகளைப் பதம்பிரித்துப் பொருள்விளக்கிய பால்ய நினைவுகளை எப்படி மறப்பது?

முதன்முதலாய் ’தேசபக்தி’ என்றால் என்ன என்ற கேள்வி எப்போது எழும்பியது என்று யோசித்தால், பாளையங்கோட்டை தான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது.

எனது பள்ளிப்பிராயத்தின் பெரும்பாலான கோடை விடுமுறைகள் பாளையங்கோட்டையில் தான் கழிந்தன. நெல்லையிலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் படிக்கட்டுகளுடன் உயரமான பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டபொம்மன் சிலையைக் காணாமல் செல்ல முடியாது. கடைசியாய்ப் போயிருந்தபோதும், அந்தக் கட்டபொம்மன் சிலையைக் கண்டு, பரிச்சயமாய் புன்னகைத்தது ஞாபகமிருக்கிறது.

அந்தச் சிலையை ஒட்டி அமைந்திருந்த (அல்லது, இன்னும் அமைந்திருக்கும் என்று நான் நம்புகிற) ஐயாச்சாமி காம்பவுண்டில்தான் என் கொள்ளுப்பாட்டியின் வீடு இருந்தது. அதற்கு அடுத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் அமைந்திருந்தது. கொஞ்சம் எட்டி நடந்தால் சரோஜினி பூங்கா! இன்னும் கொஞ்சம் காலாற நடந்து, சேவியர்ஸ் கல்லூரியைத் தாண்டினால் இன்னுமோர் பூங்கா!

மாற்றாக, நெல்லை ஜங்ஷனை நோக்கி நடந்தால் வ.உ.சி.விளையாட்டு மைதானம். கால்பந்து,கிரிக்கெட், என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கும். கையில் கொஞ்சம் சில்லறையிருந்தால், காளி மார்க் வரை நடந்து சென்று போவண்டோ குடிக்கலாம். பாளை பேருந்து நிலையத்தில் வாழைப்பழம், நொங்கு போட்ட நன்னாரி சர்பத் அல்லது வெள்ளரிப்பிஞ்சுடன் குளிர்மோர்! இரயில் பார்க்கும் ஆசையில் ஏறக்குறைய பாளை சிறை வரைக்கும் பலமுறை நடந்து போயிருக்கிறேன். பாளை அசோக்கில் மேட்னி ஷோ! சில சமயங்களில் டவுண் பஸ் பிடித்து ஜங்ஷனுக்குப் போய், சாலைக்குமார சாமி கோவில்! லட்சுமிவிலாஸ் புராதன மிட்டாய்க்கடையில் சுடச்சுட அல்வாய்! சென்ட்ரல் கபேயில் தூள் பக்கோடாவும் பாதாம் கீரும்! சிவாஜி ஸ்டோர்ஸ்! உட்லண்ட்ஸ் ஹோட்டல்! இந்துக்கல்லூரி மைதானத்தில் நிகழும் பொருட்காட்சிகள்; சொற்பொழிவுகள்! கெட்-வெல் ஆஞ்சநேயர்! ஆஹா, அது ஒரு வசந்தகாலம்.

சிறுவனாக முதலில் என்னை ஈர்த்தது வீட்டருகேயிருந்த கட்டபொம்மன் சிலைதான். முதலில் படிக்கட்டின் கீழிருந்து பார்க்க முயன்று, மெல்ல மெல்ல துணிச்சலுற்று மேலே சென்று, புல்லும் புதரும் மண்டிக்கிடந்தாலும், நெஞ்சு நிமிர்த்தி உறைவாளைப் பிடித்து நிற்கும் அந்த உருவத்தைப் பார்த்தபோது கொஞ்சம் பயந்ததுண்டு. அது ஒரு முச்சந்தி என்பதால், சந்திப்பின் நடுவில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் நிழற்குடையில் நின்றிருப்பார். அடிக்கடி படிக்கட்டில் ஏறும் என்னை அவர் எப்போதாவது கவனித்தால், எனக்குக் குலைநடுங்கும். அதன் பிறகும், ஒவ்வொரு முறையும் படியேறுமுன்னர் அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஏறுவேன். போகப்போக கட்டபொம்மன் சிலையைப் பார்த்து நான் பயப்படுவதை நிறுத்தினேன். அப்பாவிடமும், மாமாவிடமும் கட்டபொம்மன் குறித்துத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, கட்டபொம்மன் சினிமாவைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் ஒரு இனம்புரியாத பெருமிதம் எனக்கு ஏற்பட்டதுண்டு.

என்னமோ தெரியவில்லை; கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலையை ஒருமுறை பார்க்க நேரிட்டபோது சிவாஜியைப் பார்ப்பதுபோலத் தோன்றியதேயன்றி கட்டபொம்மனை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

ஆனால், கல்லூரிப்பருவத்தில் கட்டபொம்மன் மீதிருந்த கவனம் கணிசமாய்க் குறைந்து விட்டிருந்தது. சொல்லப்போனால், "ஈரபாண்டிய எட்டப்பொம்மன்," என்று கல்லூரி விழாவில் ஓரங்க நாடகம் போடுகிற அளவுக்கு, பால்யத்தில் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு நீர்த்துப் போயிருந்தது. அதன் பிறகு எனது நெல்லை விஜயங்களின் போது சாரா டக்கர் மகளிர் கல்லூரி வாசல், பூர்ணகலா, சென்ட்ரல், ஸ்ரீரத்னா, நியூ ராயல் திரையரங்கங்களும், நெல்லை சந்திப்பிலும், டவுணிலும் விடலைப்பயல்களுடன் நாக்கைத் தொங்கப்போட்டபடி சுற்றுவதுமாக திசைமாறியது.

இப்போது கட்டபொம்மன் குறித்து கூடுதலாய் சில தகவல்கள் தெரிந்திருந்தாலும், எனது பிள்ளைப் பிராயத்தில் முதன்முதலாய் அண்ணாந்து பார்த்த அந்த உருவத்தின் மீதிருக்கும் பிரமிப்பும், மரியாதையும் நிறைய மிச்சமிருக்கிறது. அடுத்த முறை நெல்லைக்குப் போனால், கண்டிப்பாக கட்டபொம்மன் சிலையைப் பார்த்து, நானும் எப்போதோ பிள்ளையாய் இருந்திருக்கிறேன் என்பதை மீண்டுமொரு முறை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்போலிருக்கிறது.

இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!