Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, October 21, 2017

த்ரீ-இன்-ஒன்:04


01. மெர்சலாயிட்டேன்

பிரதமர் மோடியின் ‘ஸ்வச் பாரத் திட்டம்’ பேசப்பட்ட நிலையில், தமிழகத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களையும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்ற படம் ‘ஜோக்கர்’ (எனக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம்). அந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது அளித்தது. காரணம், இன்று இந்தியாவில் அப்படத்தில் சித்தரிக்கப்பட்டதுபோல பல்லாயிரம் கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே, அரசு குறித்த நேரடியானதும் மறைமுகமானதுமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், அந்தப் படத்துக்கு ‘சிறந்த படம்’ என்ற மகுடத்தைச் சூட்டுவதில் யாதொரு தயக்கமும் அரசு காட்டியதாகத் தெரியவில்லை.

மெர்சல்’- சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற சிலர் பரப்புகிற புரளிகளைக் கையாண்டு வசனங்கள் எழுதுவது எவ்வளவு அபத்தமான அணுகுமுறை என்பதை நடைமுறையில் நிரூபித்த ஒரு படமாகத் திகழப்போகிறது. எதையும் சரிபார்க்காமல், மிக அலட்சியமாக வசனம் எழுதுகிற தமிழ்த் திரைப்படவுலகத்தின் சில இயக்குனர்களுக்கும் வசனகர்த்தாக்களுக்கும், இந்தப் படம் எதிர்கொண்ட கண்டனங்களும், இறுதியில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட வேண்டிய அளவுக்கு ஏற்பட்ட சூழல்களும் ஒரு படிப்பினையாகத் திகழும்.

அரசாங்கங்கள் குறித்த விமர்சனங்கள் என்பதுதான் கருத்துச் சுதந்திரமே தவிர, விபரீதமான கருத்துக்களைப் பரப்புவது அல்ல. அந்த விதத்தில் வெறும் கண்டனங்களின் மூலம், படத்தயாரிப்பாளர்களுக்கு தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளித்திருப்பதும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

வலைப்பதிவுகளிலும் சரி, முகநூலிலும் சரி, எதையாவது பிதற்றிவிட்டு, கேள்விகேட்டால் பதிலுமளிக்காமல் பதுங்கிறவர்கள் நிரம்பவே இருக்கிறார்கள். இவர்களின் பொறுப்பின்மையை திரைப்படத்துறையும் பின்பற்றாமல், முக்கியமான பிரச்சினைகள் குறித்து வசனங்களோ காட்சிகளோ அமைக்கும்போது, ஒரு சுய கட்டுப்பாட்டுடன், பாரபட்சமின்றி முயற்சி செய்தால் அது அவர்களது படத்துக்கு நிச்சயம் அதிகப்படியான சிறப்பைச் சேர்க்கும்.

தமிழக பாஜக ‘கருத்துச் சுதந்திரத்தை அடக்குகிறது’ என்று பல அரசியல் கட்சிகள் கூச்சலிடுவது வேடிக்கை. ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்காக, மதுரை தினகரன் அலுவலகத்துக்குள்ளே அத்துமீறிப் புகுந்து, அங்கிருந்த சில ஊழியர்களை அடித்தும் எரித்தும் கொன்ற தி.மு.க; இந்திய ஜனநாயகத்தில் எமர்ஜென்ஸி என்ற அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தி, பத்திரிகை ஆசிரியர்களைச் சிறையில் அடைத்து, பத்திரிகைகளை முடக்கிய காங்கிரஸ்; மே.வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது எண்ணற்ற பத்திரிகையாளர்களைக் கொன்ற கம்யூனிஸ்டுகள் - என கிளம்பியிருக்கிற இவர்களின் கடந்தகாலம் வரலாற்றின் கருப்புப்பக்கங்களாய் இன்னும் நிலைத்திருக்கிறது.

02. பாத்ஷாநாமா

தாஜ்மஹால் இடுகையின் முதல் மூன்று பகுதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு முன்னாள் வரலாற்று ஆசிரியரிடம் கொண்டுபோனேன். வாசித்துவிட்டு சற்றே புருவம் சுருக்கியவர், ’இது ரொம்ப ஸாஃப்ட்! ஷாஜஹானின் நிஜமுகம் தெரிய வேண்டுமென்றால் பாத்ஷா நாமா படிக்கணும். ரத்தம் கொதிக்கும்’ என்று அறிவுரைத்தார். அவரிடமிருந்ததோ உருதுவில் என்பதால் எனக்குப் பயனில்லை. ஒரு வழியாக ஆங்கில மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்து முதல் பத்துப் பக்கங்கள் வாசித்து முடிப்பதற்குள் ஒரு பக்கம் நிறைய குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டொரு நாட்கள் முன்பு அலைபேசி அழைப்பு....

‘இதை ஏன் ப்ளாகில் போடணும்? இதே நடையில் முழுமையாக எழுதியதும் ஒரு புத்தகமாகப் போடலாமே? தமிழில் புது முயற்சியாக இருக்குமே?’ என்றார்.

ஒரு நிமிடம் ‘தந்தன தந்தன தந்தன தந்தன....’ என்று பின்னணி கேட்க, வெள்ளையுடை தேவதைகள் ஆடுவதுபோல ஒரு கனா! ஆனால்....

‘முதலில் பிளாகில் எழுதுகிறேன் சார். அப்புறம் பார்க்கலாமே?”

‘உங்க விருப்பம்!’

ஆகவே, விரைவில் முதல் பகுதியை இங்கு காணலாம்.

ஒரு வேகத்தில் எழுதப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, கூகிள், சில ஆங்கிலப்புத்தகங்கள் ஆகியவற்றை வாசிக்கத்தொடங்கியபோது சில ஆச்சரியமான தகவல்களை அறிய நேர்ந்தது. அதில் ஒரு சில துளிகளை மட்டும் இங்கே பதிவிட விருப்பம்.

சில வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜீப்பை விடவும் ஷா ஹானை கொடுங்கோலன் என்று கருதுகிறார்கள். இது முதல் ஆச்சரியம்.

மஹால் என்பது பொதுவாக அரண்மனையையே குறிக்கும் என்பதால், இது கையகப்படுத்தபட்ட ஒரு அரண்மனையாகவும் இருக்கலாம் என்பது இரண்டாவது ஆச்சரியம்.

இது தேஜோ லிங்கம் எனப்படுகிற சிவன் தலமாக இருந்ததாக சில மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே சில தரவுகளுடன் வாதிடுவது மூன்றாவது ஆச்சரியம்.

மேம்போக்காக, கேட்டறிந்த தகவல்களை சற்றே அகழ்ந்து பார்த்தால், தோண்டத் தோண்ட பல உண்மைகள் வெளிவரும் என்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.

03.  நகைச்சுவை

கிட்டாமணி- பாலாமணி வரிசையில் ‘வாராது வந்த வரதாமணி’ என்ற அடுத்த நகைச்சுவைக் கதை தயாராகிக் கொண்டிருக்கிறது. 

‘இப்போதெல்லாம் நீங்கள் எழுதுகிற பொருளாதாரப் பதிவுகளே மிகவும் நகைச்சுவையாக இருக்கிறதே,’ என்று கலாய்த்தார் நான் சந்தித்த சகபதிவர். :-) 

இந்த வலை எனக்கு அளித்திருக்கிற மிகப்பெரிய வரம், நான் அவர்களிடமிருந்து முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களுடன் இருக்கிறேன்; அதற்காக களத்தில் இறங்கிப் பணியும் ஆற்றுகிறேன் என்று தெரிந்தும் என்னுடன் தொடர்ந்து நட்புடன் பழகுகிற பல நல்ல நண்பர்கள்.

சிலர், பாவம், என்ன செய்வதென்பது என்று தெரியாமல், எனது  ஃபேஸ்புக் பக்கத்தில் வந்து வசைபாடுகிறார்கள்.

அவரவர்க்குத் தெரிந்ததை, முடிந்ததைத்தானே அவரவர்கள் செய்வார்கள்? வாழ்த்துகள்.

Wednesday, October 4, 2017

த்ரீ-இன்-ஒன்:02


1. மணிமண்டப விவகாரம்:


தனிப்பட்ட முறையில், சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றுக்குப் பணத்தைச் செலவிடுவது அரசாங்கங்களுக்கு வெட்டிவேலை என்பதே என் கருத்து. தமிழகத்தைப் பொறுத்தவரையில், வெட்டிச்செலவு செய்வதையே மக்கள்பணியென்று அடித்துச் சொல்கிற அரசியல்கட்சிகளைத்தான் நாம் பன்னெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு, ஒரு அரசு முன்னெடுக்கிற திட்டங்களை அரசியல் காரணமாக இன்னொரு அரசு நிறுத்தி வைப்பதும் இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை; புதிய தலைமைச்செயலகம்; மெட்ரோ ரயில் என்று பல திட்டங்களில் தலைவர்களின் ஈகோ காரணமாக நமது வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை, கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்தும் மௌனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். அப்போதெல்லாம், இப்போது சிவாஜி மணிமண்டபமா? மக்கள் வரிப்பணம் என்னாவது? என்று பொங்குகிறவர்கள் பவ்யமாகப் பொத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஜெயலலிதா செத்தவுடன் அவனவன் அரசியல் பேசுவதுபோல, இப்போதுதான் பொத்தி வைத்திருந்த பலரது பொறுப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்புகிறது பலருக்கு.


சிவாஜி விஷயத்தில் அவரது ரசிகனாய் எனக்கு ஒரு வருத்தமுண்டு. அவருக்குரிய அங்கீகாரத்தை, அவர் உயிருடன் இருந்தபோது மத்திய மாநில அரசுகள் அளிக்கவேயில்லை என்பதே அது. இறந்தபிறகாவது அந்த உன்னதக்கலைஞனுக்கு உரிய மரியாதை செய்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு அரசு சிலை நிறுவ, அதை அலைக்கழித்து, மூலையில் கழியவிட்டு, அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு எந்த அரசுக்கும் இதுவரை துப்பில்லாமல் போய்விட்டது. ஒரு கோடி ரூபாய்! உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறவே, மன்மோகன் சிங், சோனியா காந்தி வருகிறார்கள் என்பதற்காக, திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணியை அழைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு தற்காலிகமான கூரையை அமைக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம், நாம் கூவினோமா என்றால் இல்லை.


ஆகவே, சிவாஜியை அவமானப்படுத்துகிற பாரம்பரியத்தை அவரது எதிரிகளுடன் சேர்ந்து அறிவுஜீவிகளும், திடீர் சமூகப்பொறுப்பாளிகளும் இனிதே தொடர்கின்றார்கள். அவர்கள் வாழ்க!


2. பொருளாதாரம் குறித்த பதிவுகள்(?)


முன்னெல்லாம் வலைப்பதிவுகளில் திடீர் கவிஞர்கள், திடீர் திரைக்கதை விற்பன்னர்கள், திடீர் இலக்கியவாதிகள் கிளம்புவார்கள். தற்போது ‘திடீர் பொருளாதார நிபுணர்கள்’ சீசன் போலிருக்கிறது. ஒருவர் இந்தியாவை எத்தியோப்பியாவுடன் ஒப்பிட்டே, ‘சோலி முடிஞ்சுது’ என்று மோர் ஊற்றி விட்டார். யாரும் கவலைப்படத் தேவையில்லை; இந்தியப் பொருளாதாரம் கட்டுப்பாடாக, வலுவான அடிப்படைகளின் ஆதாரத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.


டிமானிடைசேஷனுக்குப் பிறகு 2% GDP தான் வருமென்று மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் பூச்சாண்டி காட்டினார்கள். அவர்கள் வாதம் பொய்த்துப் போய்விட்டது. Fiscal Deficit அதாவது பற்றாக்குறை என்பது பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பொருளாதார நிபுணர்களுக்கே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகம் போரடிக்காமல், சில உதாரணங்களை மட்டும் கூறி, சில பொருளாதாரக்குறியீடுகள் இருபுறமும் கூர்வாய்ந்த கத்தி என்பதை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.


ஜூலை 17 மாத இறுதியில் தொடங்கி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருந்து, மிக சமீபத்தில்தான் பலவீனமடைந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு டாலரின் மதிப்பு ரு.63/ ஆக வலுப்பெற்றது. இதனால், யாருக்கு லாபம்? இறக்குமதி செய்பவர்களுக்கு. யாருக்கு நஷ்டம்? ஏற்றுமதி செய்பவர்களுக்கு. விளைவு? Balance of payments என்று சொல்லக்கூடிய நிலுவைத்தொகை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஆனால்,உண்மையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வலுவடைவதுதானே விரும்பத்தக்கது? இதுபோன்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்கு அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


டிமானிடைசேஷன் மூலம் windfall gains வருமென்று யாரும் ஆருடம் கூறவில்லை. பல தொடர்- நடவடிக்கைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால், அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், ஹவாலாப் பணப்புழக்கம், தீவிரவாதத்துக்கு உதவுதல், கள்ள நோட்டுப்புழக்கம், கருப்புச்சந்தைகள் ஆகியவற்றைப் பெருமளவு குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. இன்ஸ்டண்ட் வெற்றியா என்றால் இல்லை; அவ்வளவே!  நேற்றைய செய்தியின் படி கடந்த 15 நாட்களில், சுமார் 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் சட்டப்படி முடக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.


GST! இது வரிவிதிப்பு என்று ஒரு பொய்ப்பிரச்சாரம்! பல அடுக்குகளிலிருந்த பலமுனை வரிகளை எளிமையாக்கி, ஒரே விதிப்பாக்குவதுதான் இதன் நோக்கம். இதை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்களை அழைத்துப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பான்மையானோரின் சம்மதம் கிடைத்தபின்னர், முறைப்படி லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான காலாண்டுக்கான புள்ளி விபரங்களை வைத்து ஜி.எஸ்.டியால் தொழில்துறை முடங்கிவிட்டது என்று பேசுவதெல்லாம் அவசரக்குடுக்கைத்தனம். டிஸம்பர் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.


3. தமிழ்மணம்


தமிழ்மணத்துடன் எனக்கு ஒரு மனக்கசப்பும் இல்லை; அவ்வளவு பெரிய பதிவன் அல்ல நான். ஆனால், ஒவ்வொரு பதிவிலும் ‘த.ம.ஓ. ந;1’ என்று பல பதிவுகளில் பலர் குறிப்பிடுவது, எழுதியவருக்கும் அவர் எழுத்துக்கும் செய்கிற அவமரியாதை என்று நான் கருதுகிறேன். எனது எழுத்து பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்கு ஒரு ஓட்டுப்போட்டால்தான் மரியாதை என்பதும், போடவில்லையென்றால் என் எழுத்துக்கு மரியாதை இல்லை என்று சிலர் புலம்புவதும் சகிக்கவில்லை. இப்படி நான் எழுதுவது ஏற்கனவே என்னுடன் மனக்கசப்பு கொண்டிருக்கிற பலரை இன்னும் விலக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன். If you don't like it, I simply don' care.

Sunday, July 9, 2017

பாலாமணியும் பாகு’பல்லி’யும்

பாலாமணியும் பாகு’பல்லி’யும்


பாலாமணி அடுக்களையிலிருந்து விரைந்து வந்த அதிர்வில், கிட்டாமணியின் மூக்குக்கண்ணாடி நழுவி நாக்குக்கண்ணாடியானது.


”வீட்டைப் பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம, ஆதித்யா டிவியைப் பார்த்து கெக்கெபிக்கேன்னு சிரிச்சிட்டிருக்கீங்களே! இது உங்களுக்கே நல்லாயிருக்கா?”


காஸ்ட்யூம் மாற்றிவந்த காஞ்சனா பேய் போல, மூச்சிரைத்தவாறு முழியை உருட்டி நின்ற மனைவியைப் பார்த்த கிட்டாமணி ஒரு கணம் வெலவெலத்தாலும் சுதாரித்துக் கொண்டான்.


”அபாண்டமாப் பேசாதே!” கிட்டாமணி வெடுக்கென்று பதிலளித்தான். “வாய்விட்டுச் சிரிச்சா ஆதித்யா டிவி பார்க்கறேன்னு அர்த்தமா? நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். சரியாப் பாரு!”


”போதும் உங்க தேசவிசாரம்!” பாலாமணி கோபத்துடன் இரைந்தாள். “ஒரு நிமிஷம் அடுக்களைக்கு வந்து பாருங்க அநியாயத்தை!”


”அநியாயமா?” கிட்டாமணி குழம்பினான். “அடுக்களையிலே 25 வருஷமா  நீதானே அநியாயம் பண்ணிட்டிருக்கே?”


”என் சமையலையா கிண்டல் பண்றீங்க?” பாலாமணியின் குரல் பாரதிராஜா குரல்போல கரகரத்தது. ”காராமணி மாதிரி இருந்த உடம்பு கல்யாணத்துக்கு அப்புறம்தான் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி உப்பியிருக்கு. மறந்திடாதீங்க!”


”பார்த்தியா? உன் சமையலைப் பத்திப்பேசினா, நீயே குப்பைத்தொட்டியைப் பத்திப் பேசறே!”


”நீங்களா இப்படி வாயடிக்கிறீங்க?” பாலாமணியின் குரலில் அதிர்ச்சியும் வியப்பும்  சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்கலந்திருந்தது.


“சரிசரி, அடுக்களையிலே என்ன அநியாயம் சொல்லித்தொலை! நான் புதுசா டாண்டெக்ஸ் ஜட்டி வாங்கினதை ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடணும்.”


”ஜட்டி வாங்கினதையெல்லாமா ஃபேஸ்புக்குல ஸ்டேடஸாப் போடுவாங்க?”


”நீ வேற, அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”


”எப்படியோ போங்க! இப்ப கிச்சனுக்கு வாங்க! இப்படியே போச்சுன்னா இனிமே நான் அடுக்களைப்பக்கமே போக மாட்டேன்.”

”அட, இன்னிக்கு நல்ல செய்தி வரும்னு ஹரிகேசவ நல்லூர் வெங்கட்ராமன் இதைத்தான் டிவியிலே சொன்னாரா?”


”முதல்லே அடுக்களைக்கு வந்து பாருங்க! உங்க பேச்சு சுத்தமா நின்னுடும்!”


‘வழக்கமா சாப்பிட்டதுக்கப்புறம்தானே பேச்சு நிக்கும்?’ குழம்பியபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கிட்டாமணி.


”ஜன்னல் கதவு திறந்திருக்கு பார்த்தீங்களா?”


”இதுவா அநியாயம்? இது திறந்திருக்கப்போய்த்தானே பக்கத்துவீட்டுல விஜிடபிள் பிரியாணியா சிக்கன் பிரியாணியான்னு கண்டுபிடிக்க முடியுது?”


”ஏன்? நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?”


“மறக்க முடியுமா?” கிட்டாமணி பெருமூச்சு விட்டான். ”அதுக்கப்புறம்தானே கோழிக்கறியையும் தடைபண்ணுங்கன்னு மோடிக்கு மகஜர் அனுப்பினேன்.”


“அன்னிக்கு விழுந்து விழுந்து சாப்பிட்டீங்க! இது சிக்கன் - 65 இல்லை; சிக்கன் 302ன்னு புகழ்ந்தீங்க!”


“உனக்கு ஐ.பி.ஸி.கோட் தெரியலேன்னா நான் என்ன பண்ணட்டும்?”


”ஜெயலலிதா இல்லேன்னதும் ஆம்பிளைங்க ஓவராப் பேச ஆரம்பிச்சிட்டாங்க!.” பாலாமணி கரித்துக் கொட்டினாள். “முதல்லே இந்த அநியாயத்தைப் பாருங்க!”


”என்ன அநியாயம்?” எரிச்சலில் கூச்சலிட்டான் கிட்டாமணி.”திரும்பத் திரும்ப அநியாயம் அநியாயம்னு டீஸர் ரிலீஸ் பண்றியே தவிர மெயின் பிக்சரை ரிலீஸ் பண்ணவே மாட்டேங்கிறியே?”


”சுவத்துல என்ன இருக்கு பாருங்க!”


”சுவத்துலயா?  ஒட்டடை இருக்கு! வழக்கமா நம்ம வெடிங் ஆனிவர்சரி வரும்போதுதானே ஒட்டடையடிப்பேன்? அப்பப் பார்த்துக்கலாம்.”


”நான் சொல்ல வந்ததே வேறே!” என்று பல்லைக்கடித்தாள் பாலாமணி. “ஆமாம், ஏன் நம்ம கல்யாண நாளன்னிக்கு மட்டும் வீட்டை ஒட்டடை அடிக்கிறீங்க?”


”என் ரேஞ்சுக்கு நான் அதைத்தானே அடிக்க முடியும்.”


”சரிசரி, முதல்ல இந்த அநியாயத்தை….”


”கடுப்பேத்தாதே பாலா!” கிட்டாமணி இடைமறித்து எட்டுக்கட்டையில் கூவினான். “மரியாதையா என்ன மேட்டர்னு சொல்றியா இல்லே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்குக் கூட்டிட்டுப் போட்டுமா?”


”சுவத்துல கருகருன்னு ஒரு பல்லி இருக்கு பாருங்க!”


அப்போதுதான் கவனித்தான். சுவற்றில் கருப்பாக, அசிங்கமாக, டிவி சீரியல் ஹீரோவைவிடக் கண்றாவியாக ஒரு பல்லி இருந்தது.


”ஆமாம்; பல்லி!”


”அப்பாடா! இப்பவாச்சும் பார்த்தீங்களே?”


”நேரடியா அடுக்களையிலே ஒரு பல்லியிருக்குன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு ஏன் ரஜினிகாந்த் மாதிரி சுத்திவளைச்சுப் பேசி கழுத்தை அறுக்கிறே?”


”எனக்குப் பல்லின்னாலே ரொம்ப பயம்,” பாலாமணி கிட்டாமணியிடம் ஒண்டிக்கொண்டாள். “அதுலயும் இந்தப் பல்லியைப் பாருங்க, குண்டுகுண்டா, கொழுக்மொழுக்குன்னு பாகுபலி பிரபாஸ் மாதிரியே இருக்கு.”


”அப்ப அனேகமா அனுஷ்கா பல்லியும் இருந்தாகணுமே!”


”ரொம்ப முக்கியம்! முதல்லே அந்தப் பல்லியைத் துரத்துங்க!”


”ஒரு காப்பி போடேன்!”


”பல்லியைத் துரத்தறதுக்குக் காப்பி குடிக்கணுமா?”


”குடிக்க வேண்டாம். நீ காப்பி போட்டா அந்த வாசனைக்கே அது கூவத்தூருக்குக் குடிபோயிடும்.”


”ஒரு பல்லிக்கு முன்னாலே என்னை அவமானப்படுத்தாதீங்க! இந்தப் பல்லி இருக்கிறவரைக்கும் வீட்டுல அடுப்புப் பத்த வைக்க மாட்டேன். அப்புறம் வெளியிலேதான் சாப்பாடு.”


”எனக்கு அரை டஜன் இட்லிபோதும்; உனக்கென்ன வாங்கிட்டு வரட்டும்?”


”ஒண்ணும் வேண்டாம்! பல்லி போறவரைக்கும் நீங்க சமையல் பண்ணுங்க! ஓ.கேயா?”


”அப்ப போனவாட்டி வாங்கின ஜெலூசில் இன்னும் ஸ்டாக் இருக்கா?”


“இப்பத்தான் புரியுது,” அரசியல்வாதி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிபோலச் சிரித்தாள் பாலாமணி. “உங்களுக்குப் பல்லின்னா பயம். அதான் எதெதையோ சொல்லி ஜகா வாங்கறீங்க.”


”நான் பாம்பையே அடிச்சிருக்கேன் தெரியுமா?” இல்லாத மீசையை இருக்கிற விரலால் முறுக்கினான் கிட்டாமணி.


”போதும் போதும்!” அங்கலாய்த்தாள் பாலாமணி. ”சென்னையிலே தண்ணிப்பஞ்சம் வருது. ஒழுங்காப் பம்பு அடிக்கக் கத்துக்குங்க. பாம்பை அடிக்கிறாராம்.”


கிட்டாமணி கிளர்ந்தெழுந்தான்.


”அனாவசியமா என் வீரத்தைக் கிளப்பிவிடாதே! இன்னும் அரைமணி நேரத்துல இந்தப் பல்லியை வீட்டை விட்டு விரட்டறேன் பாரு! இந்த வீட்டுல ஒண்ணு நான் இருக்கணும்; இல்லை இந்தப் பல்லி இருக்கணும். இரண்டில ஒண்ணு பார்த்திடறேன்.”


ஐந்து நிமிடத்தில் கிட்டாமணி வீட்டை விட்டுக் கிளம்பினான்.


”என்னங்க, வீட்டுல இருக்கிற பிரச்சினைக்கு வெளியே போனா எப்படி? கொஞ்சம் பொறுமையா இருங்க!”


”சும்மாயிரு பாலா, இந்தக் கிட்டாமணி முன்வைச்ச காலைப் பின்வைக்க மாட்டான்.”


”ஐயோ! சொல்றதைக் கேளுங்க,” எரிச்சலுடன் கூறினாள் பாலாமணி. “ நீங்க வேஷ்டின்னு நினைச்சு பெட்ஷீட்டைக் கட்டிக்கிட்டு வெளியே கிளம்பறீங்க!”


கிட்டாமணிக்குத் தனது வரலாற்றுப்பிழை புரிந்தது. மீண்டும் அறைக்குச் சென்று, பெட்ஷீட்டை அவிழ்த்துவிட்டு, வேஷ்டியை எடுத்தவன், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று, பெட்ஷீட் இருந்த இடத்திலிருந்து ஒரு பத்து அடி தள்ளி நின்று கட்டிக்கொண்டு கிளம்பினான்.


”அடுக்களையிலே இருக்கிற பல்லியை விரட்டச்சொன்னா, இவர்பாட்டுக்கு வெளியே கிளம்பிட்டாரே, ஒருவேளை வள்ளூவர்கோட்டம் பக்கத்துல போய் போராட்டம் பண்ணுவாரோ?”


அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்போல குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி. சில நிமிடங்கள் கழித்து, கிட்டாமணி கையில் சில அட்டை டப்பாக்களுடன் வீடு திரும்பினான்.


”என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?”


”சீக்ரட்!” என்று கம்பீரமாகக் கூறியவாறே அடுக்களைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான் கிட்டாமணி. சிறிது நேரத்துக்கு உள்ளேயிருந்து கடமுடா கடமுடாவென்று சத்தம் கேட்டது. பிறகு, வெளியே வந்து கிட்டாமணியைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தான். அவனது முகத்தில், வாஷர் போன குழாயிலிருந்து தண்ணீர் ஒழுகுவதுபோல பெருமை ஒழுகியது.


”இனிமேல் பல்லி மட்டுமில்லை; புழுபூச்சி கூட நம்ம வீட்டுக்குள்ளே வராது.”


பாலாமணிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், சில நிமிடங்கள் கழித்து அடுக்களைக்குள் சென்றபோது, பல்லியைக் காணவில்லை. வழக்கமாக ‘சின்க்’ பக்கம் அணி அணியாய்ப் பிரிந்து ஐ.பி.எல்.விளையாடும் கரப்பான் பூச்சிகள் கூடக் காணாமல் போய்விட்டன.


இரவு வந்தது. பழைய படங்களில் வரும் ஃபர்ஸ்ட் நைட் காட்சிபோல, கையில் பால் டம்ளருடன் கணவரை நெருங்கினாள் பாலாமணி.


“ஆனாலும் நீங்க ரொம்ப கெட்டிக்காரர்தான்,” குக்கரில் வேகவைத்த குதிரைவால் அரிசிபோலக் குழைந்தாள் பாலாமணி. “அரை மணி நேரத்துல பல்லி, பாச்சா எல்லாத்தையும் விரட்டி அடுக்களையைச் சுத்தமாக்கிட்டீங்களே!  உங்களுக்கு உடம்பெல்லாம் ஊளைன்னுதான் இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன்; உடம்பெல்லாம் மூளைன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுது.”


கிட்டாமணி ரொமாண்டிக்காக மனைவியைப் பார்க்க, ஒரு கணம் அவளுக்குக் காணாமல்போன பல்லி ஞாபகம் வந்தாலும், சமாளித்தாள்.


“சொல்லுங்க, என்ன வாங்கிட்டு வந்தீங்க? என்ன பண்ணி பல்லி, கரப்பான் பூச்சியை எல்லாம் விரட்டினீங்க? ப்ளீஸ், சொல்லுங்க!”


“கொஞ்சம் செலவு பண்ணினேன் பாலா,” சிரித்தான் கிட்டாமணி. ”ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போயி ரெண்டு சி.சி.டிவி கேமராவும், மைக்ரோபோனும் வாங்கிக் கொண்டுவந்து சும்மா அடுக்களையிலே மறைவா வைச்சேன். அதைப் பார்த்திட்டு பல்லி பயந்து ஓடிப்போயிடுச்சு.”


“எனக்குப் புரியலியே!” பாலாமணி மீண்டும் குழம்பினாள். “சிசிடிவியும், மைக்கும் வைச்சா பல்லி ஏன் பயப்படணும்?”


“ஏன்னா, கேமிராவையும் மைக்கையும் பார்த்ததும் பல்லிக்கு, நாம அதை வைச்சு ‘பிக்-பாஸ்’ மாதிரி ரியாலிட்டி ஷோ நடத்தறோமோன்னு சந்தேகம் வந்திருச்சு. ஆயிரம் இருந்தாலும் பிராணிகள் இல்லையா? மனுசங்களை மாதிரி சீப்பான பப்ளிசிடிக்காக அதுங்களோட வக்ரத்தையும் பலவீனத்தையும் மத்தவங்க பார்க்கவிடறது அதுங்களுக்கே அசிங்கமா இருக்காதா? இதுக்கப்புறமும் இந்த வீட்டுல இருந்தா, நமக்கும் மனுசங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு தோணியிருக்கும். அதான், பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் டீசண்டா வீட்டைக் காலிபண்ணிட்டுப் போயிருச்சு!”

பி.கு: பிரபாஸ் பல்லி படம் கிடைக்காததால், தமன்னா பல்லி படம் மேலே தரப்பட்டுள்ளது என அறிக.

Monday, September 26, 2016

பின்க் – உரத்த அறிவுரை


பின்க் – உரத்த அறிவுரை
இந்தியாவில் ‘கோர்ட்-ரூம் டிராமா’ வகையிலான படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதில்லை என்று அவ்வப்போது எதார்த்த சினிமா விரும்பிகள் ஆதங்கப்படுகையில், எண்பதுகளில் தில்லி சாணக்யா திரையரங்கில் ‘க்ராமர் வர்ஸஸ் க்ராமர்’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்து பிரமித்தது நினைவுக்கு வரும். ஆனால், பாலிவுட்டில் இவ்வகைப் படங்கள் 60-களிலேயே வரத் தொடங்கியதாக ஞாபகம். ‘வக்த்’ ‘மேரா சாயா’ போன்ற படங்களின் குறிப்பிடத்தக்க காட்சிகள் நீதிமன்றத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தன. 80-களில் கூட ‘மேரி ஜங்’(தமிழில் ‘ஒரு தாயின் சபதம்’), 90-களில் ‘தாமினி’ (தமிழில் ப்ரியங்கா) போன்ற படங்கள் வெளியாகத்தான் செய்தன. 2014-ல் வெளியான மராத்திப்படம் ‘கோர்ட்’ ஆஸ்கார்வரைக்கும் போனது. ஆனால், ஏனைய மசாலாப்படங்களில் கோர்ட் சீன் என்ற பெயரில் நடத்திய கேலிக்கூத்துகள் காரணமாக, கோர்ட் சீன் என்றாலே ஒரு விதமான நக்கல் விளைவது இயல்பாகி விட்டது. கடுப்பேத்துறார் மைலார்ட்!
அந்த வகையில், ‘பின்க்’ திரைப்படம் நிச்சயம் குறிப்பிடத்தக்க, பிரமிப்பூட்டுகிற, சமகால நிகழ்வுகளுடன் இயைந்த ஒரு உண்மையான திரைப்படம் என்று முதலிலேயே ஒப்புக் கொள்ள வேண்டும். படம் முடிந்து வெளியேறுகையில் கணிசமான நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதால், இந்தப் படத்தை இன்னும் சிறிது நாட்களுக்கு நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன்.
      ஒரு நிகழ்ச்சியில் மூன்று இளம்பெண்கள் மூன்று வாலிபர்களைச் சந்தித்து, மானபங்கத்திலிருந்து தப்பிக்கிற முயற்சியில் ஒருவனுக்குப் படுகாயம் ஏற்படுத்தி, அடுத்தடுத்து சந்திக்கிற சிக்கல்களைச் சித்தரிக்கிற முயற்சியில், பாலின சமன்பாடு குறித்த ஒரு அழுத்தமான செய்தியை, இயன்றவரை பிரச்சார நெடியின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதை வலியுறுத்த சில ‘நச்’ வசனங்கள்.
      ”ஷராப் கோ யஹான் கலத் கேரக்டர் கி நிஷானி மானா ஜாதா ஹை; ஸிர்ஃப் லட்கியோன் கே லியே! லட்கோன் கே லியே தோ யே ஸிர்ஃப் ஏக் ஹெல்த் ஹஜார்ட் ஹை!
      ”மது அருந்துவது ஒழுக்கக்கேடாகக் கருதப்படுகிறது; பெண்களைப் பொறுத்தவரை மட்டும். ஆண்களைப் பொறுத்தவரை அது ஒரு உடல்நலக் கேடாகவே கருதப்படுகிறது.
      பெரும்பாலானோருக்கு இந்தக் கருத்து நெருடலாக இருக்கலாம் என்றாலும், இதில் இருக்கிற எதார்த்தம் உறைக்காமல் இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை, இந்தப் படத்தின் முக்கியமான செய்தியே வேறு என்று தோன்றுகிறது.
’நா’ ஸிர்ஃப் ஏக் ஷப்த் நஹி! அப்னே ஆப் மே பூரா வாக்ய ஹை! இஸே கிஸி தர்க், ஸ்பஷ்டிகரண் யா வ்யாக்யா கி ஜரூரத் நஹீ!
      ”’வேண்டாம்’ என்பது ஒரு வார்த்தை இல்லை; அதுவே ஒரு முழு வாக்கியம் ஆகும். இதற்கு ஒரு பதவுரை, விளக்கம், பொழிப்புரை அவசியம் இல்லை.
      ”வசந்த மாளிகை’ படத்தில் சிவாஜி சொல்வாரே! ‘சரீன்னா யாரா இருந்தாலும் விடப்படாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடப்படாது.”
      யெஸ்! இந்தப் படத்திலிருந்து முக்கியமாகச் சென்றடைய வேண்டிய செய்தி இதுவாகத்தான் இருக்க வேண்டும். விருப்பமில்லாத பெண்களை பலாத்காரமாக அடைய நினைக்கிற மூர்க்கத்தனம், குடிப்பழக்கத்தைக் காட்டிலும் தீமை விளைவிப்பது, ஆபத்தானது என்று அடித்துச் சொல்லலாம்.
      சுருக்கமான கதை!
      மினல்(தாப்ஸி), ஃபலக்(கீர்த்தி குல்ஹாரி) மற்றும் ஆண்ட்ரியா(ஆண்ட்ரியா தரியங்) மூவரும் தில்லியில் ஒரே அறையில் வசிக்கிற இளம்பெண்கள். ஒவ்வொருவர் பின்புலத்திலும் ஒரு குட்டிக் கிளைக்கதை இருக்கிறது; அவர்களுக்கென்று ஒரு கடந்தகாலம் இருக்கிறது. அது குறித்து கச்சிதமாக ஆங்காங்கே இயக்குனர் தொட்டுக் காட்டியிருக்கிறார். (மினல் 19 வயதில் தன் கன்னித்தன்மையை இழந்து, அதன்பிறகும் பிற ஆடவர்களுடன் சில முறை உடலுறவு கொண்டதாக நீதிமன்றத்திலேயே ஒப்புக் கொள்வது ஒரு சாம்பிள்). அவர்கள் வசிக்கிற குடியிருப்புக்காரர்கள் சிலர் இவர்களது நடத்தையை சந்தேகத்துக்குரியதாகக் கருதுகிறார்கள். ஆனால், இதெல்லாம் அவர்களை வலுக்கட்டாயமாக சுகிக்க அனுமதிக்கிற டிக்கெட்டுகள் இல்லை அல்லவா?
      ஒரு ராக் இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் இந்த மூன்று பெண்களும் மதுவருந்திய நிலையில், ராஜ்வீர் என்ற பெரிய இடத்துப் பையன் மினலை மானபங்கப்படுத்த முயல, தன்னைக் காப்பாற்றிக் கொள்கிற முயற்சியில் அவனை ஒரு பாட்டிலால் தாக்கி காயப்படுத்துகிறாள் மினல். மூன்று பெண்களும் அங்கிருந்து தப்பித்து, ஒரு சில நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு, தங்களைப் பழிவாங்கத் துடிக்கிற அந்தப் பணக்கார இளைஞர்களிடமிருந்து தப்பிக்க, காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். வழக்கம்போல, பெரிய இடத்துத் தலையீடுகளால் பிராது கொடுத்த மினலே கைது செய்யப்படுகிறாள். உடல்நிலை குலைந்து, வக்கீல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, உயிருக்குப் போராடுகிற தன் மனைவிக்கும் சேவை செய்து கொண்டிருக்கும் தீபக் செஹ்கல்(அமிதாப் பச்சன்) என்ற வக்கீலின் உதவியுடன், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுபடுகிறாள். இந்தப் போராட்டத்தின் இடையில் அவர்கள் சந்திக்கிற அவமானங்கள், அவர்கள்மீது சுமத்தப்படுகிற களங்கங்கள், அபாண்டங்கள், கண்ணீர், வேதனை இவையெல்லாம்தான் இந்தப் படத்தின் சதையும் நரம்பும் இரத்தமுமாய் படம் நெடுக!
                ரத்தக்காயங்களுடன் அந்தப் பணக்கார வாலிபன் ஹோட்டலிலிருந்து மருத்துவமனை நோக்கி விரைகிற முதல்காட்சி தொடங்கி, இறுதியில் டைட்டிலில் நடந்த நிகழ்வுகளைப் பக்கவாட்டில் காட்டி முடிப்பதுவரை, இத்தனை விறுவிறுப்பாக கதை சொல்லிய ஒரு இந்திப்படத்தை அண்மையில் நான் பார்த்ததாக நினைவுகூர முடியவில்லை. அபாரம்! ஒரு குற்றசாட்டு; ஒரு வழக்கு; வாதப்பிரதிவாதங்கள் என்ற அளவில் நேர்கோட்டில் பயணித்தாலும், அவ்வப்போது பொதுப்புத்தியை    நினைவூட்டுகிற வசனங்களும், காட்சியமைப்புகளும் திரைக்கதைக்கு வலு சேர்ப்பதுடன், கதையோட்டத்துடன் முற்றிலும் ஒன்ற வைத்து விடுகிறது. ஒரு வறண்ட ஆவணப்படத்தைப் போல, நிறைய பெண்ணியத்தைத் தாளித்துக்கொட்டி, அனாவசியமான மூன்றாம்தரமான வசனங்களைச் சேர்த்து, படம் பார்க்க வந்தவர்கள் முகத்திலேயே காறித்துப்புவது மாதிரி (உதாரணம்: ஜோக்கர்) தன்னை ஒரு யோக்கியசிகாமணி என்று படத்தின் இயக்குனர் எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்த முயலவில்லை. அதுதான் இந்தப் படத்தின் மிகமுக்கியமான அம்சம்.
      கிட்டத்தட்ட இதே கருவுடன் வெளிவந்த ‘தாமினி’ படத்தில், ‘நீ உங்கம்மாகிட்டேயிருந்து எந்த வழியா வந்தியோ அங்கே கைவைச்சான். உங்கம்மாகிட்டே எங்கிருந்து பால்குடிச்சியோ அங்கே கைவச்சான்’ என்றெல்லாம் பச்சைகொச்சையாய் வசனம் எழுதி, படபடவென்று கைதட்டலுக்காக ஆலாய்ப் பறக்கவில்லை. தர்மசங்கடமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு உணர்ச்சிப்பெருக்குடன் கூடிய பதில்கள் கொட்டப்படுகின்றன. ஆனால், கேள்விகளிலும் பதில்களிலும் இருக்கிற உண்மை சுடுகின்றது.
                அமிதாப் பச்சன்! 90களில் பல சிக்கல்களுக்குள் ஆட்பட்டு, செக்கு எது, சிவலிங்கம் எது என்று தெரியாமல், மனீஷா கோய்ராலாவுடனும் ரம்யா கிருஷ்ணனுடனும் டூயட் பாடி, ‘இனிமே பச்சன் படம்னா எடு ஓட்டம்’ என்று எண்ணவைத்தவர், ஒரு ஆறேழு வருடங்கள் கழித்து, தன் வயதுக்கொத்த பாத்திரங்களை ஏற்று, இன்று திலீப்குமாருக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த நடிகர் என்று பெரும்பாலானோரால் ஏற்கப்படுமளவுக்கு தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! (நம்மூரு சூப்பர் ஸ்டாரும் இப்படி நடிக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்! ஹும்!)
      ‘மருந்துகளில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்; என்னால் வாதிட முடியாது’ என்று மனைவியிடம் சொல்வது; அதற்கேற்றாற்போல கோர்ட்டில் முதல் நாளன்று தடுமாறுவது; அதன்பிறகு, மெல்ல மெல்ல தனது சமயோசிதத்தையும் வாதத்திறமையையும் வெளிக்கொணர்வது என்று அந்தக் கதாபாத்திரத்துக்குள் கூடுகட்டி வாழ்ந்திருக்கிறார். அந்தக் குரல்; அந்த உச்சரிப்பு; அந்த முகபாவங்கள்! ‘சிவாஜி என்ற சிங்கம் உயிரோடில்லை; அந்த சிங்கத்தின் இடத்தை இந்த சிங்கம்தான்  நிரப்ப முடியும்’ என்று கமல்ஹாசன் சொன்னது எவ்வளவு உண்மை!
      தாப்ஸி பன்னு! சத்தியமாக நம்பவே முடியவில்லை. முதல் இந்திப்படம், அதிலும் அமிதாப் பச்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிற படம். அதில் தனக்கென்று ஒரு தனித்துவத்துடன் நடித்து மெய்யாலுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்துக் கணிக்கக் கூடாது என்பதை உணர்வோமாக!
      ஃபலக் அலியாக வரும் கீர்த்தி குல்ஹாரி, நீதிமன்றத்தில் ‘ நாங்கள் பணம் வாங்கிக்கொண்டோம்’ என்று கதறுகிற காட்சியில், சற்றே இளகிய மனம் கொண்டவர்கள் நிச்சயம் அழுவதற்கான வாய்ப்பிருக்கிறது. மேகாலயா பெண்ணாக வருகிற ஆண்ட்ரியாவின் பாத்திரத்தின் மூலம், வடகிழக்கு இந்தியப் பெண்கள் குறித்த அலட்சிய மனோபாவத்தையும் ஓரிரு வசனங்களில் குத்திக் காட்டியிருக்கிறார்கள்.
      பொதுவாக நீதிமன்றக்காட்சிகளுக்கு வலுவூட்ட, வசனங்களில் கூர்மை மிக அத்தியாவசியமாகும். இந்தப் படத்தில் அண்மைக்கால இந்திப்படங்களிலேயே மிகவும் சிறப்பான வசனம் திறம்பட எழுதப்பட்டிருக்கிறது.
      ”ஹமாரா யஹா கடி கீ ஸூயி கேரக்டர் டிஸைட் கர்தீ ஹை”
      ”இங்கே கடிகாரத்தின் முள் ஒழுக்கத்தை நிர்ணயிக்கின்றன.”

      ”ராத் கோ லட்கியான் ஜப் அகேலி ஜாத்தீ ஹை தோ காடியா ஸ்லோ ஹோஜாத்தி அவுர் உன்கே ஸீஷே  நீச்சே ஹோஜாத்தே ஹை! தின் மே யே மஹான் ஐடியா கிஸீ கோ நஹீ ஆத்தா
      ”இரவில் பெண்கள் தனியாகப் போனால், வாகனங்களின் வேகம் குறைந்து, அதன் கண்ணாடிகள் கீழே இறக்கப்படுகின்றன. பகலில் யாருக்கும் இந்தச் சிறந்த எண்ணம் வருவதில்லை.

      ”ஜோ லட்கியான் பார்ட்டி மே ஜாத்தீ ஹை அவுர் ட்ரிங்க் கர்த்தீ ஹை, வோ புஷ்தைனி ஹக் பன்ஜாத்தீ ஹை ஆப் கா
      ”பார்ட்டிக்குப் போய், மதுவருந்தும் பெண்கள் உங்களுக்கு எளிதான உரிமைப்பொருள் ஆகிவிடுகிறார்கள்.

      ”ஆஜ்தக் ஹம் ஏக் கலத் டைரக்‌ஷன் மே எஃபர்ட் கர்தே ரஹே! வீ ஷுட் ஸேவ் அவர் பாய்ஸ்; நாட் கேர்ள்ஸ்! பிகாஸ் இஃப் வீ ஸேவ் அவர் பாய்ஸ், அவர் கேர்ள்ஸ் வில் பீ ஸேஃப்
      ”இன்றுவரை நாம் தவறான திசையில் முயற்சி செய்து வருகிறோம். நாம் நம் ஆண்களைப் பாதுகாக்க வேண்டும்; பெண்களை அல்ல. ஏனெனில், ஆண்கள் பாதுகாக்கப்பட்டால், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.”
      சமீபகாலங்களாகவே, இந்தியில் மீண்டும் நல்ல படங்கள் வரத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் ‘No one killed Jessica’, ‘Jolly LLB’, ‘Shaurya’ போன்ற படங்களின் வரிசையில் சட்டம், நீதிமன்றம் தொடர்புடைய படமாக இருந்தாலும், சலிப்பின்றி அலுப்பின்றி, ஒருவித பதைபதைப்புடன் பார்க்க முடிகிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றி!
      இறுதியாக….
These boys must realise that ’No’ கா மத்லப் No ஹோத்தா ஹை!. உஸே போல்னேவாலி லட்கி கோயி பரிச்சித் ஹோ, ஃப்ரெண்ட் ஹோ, கேர்ள்ஃப்ரெண்ட் ஹோ, கோயி செக்ஸ் வொர்க்கர் ஹோ யா அப்னி பீவி க்யூ நா ஹோ! ‘No’ means no and when someone says No, you stop!”
      வேண்டாம் என்று சொல்லும் பெண் அறிமுகமானவரோ, தோழியோ, காதலியோ, பாலியல் தொழிலாளியோ அல்லது உங்கள் மனைவியோ, வேண்டாம் என்றால் வேண்டாம். நிறுத்துங்கள்
       சினிமாவால் சமூகத்தைத் திருத்த முடியும் என்று நம்புகிற இளிச்சவாயன் அல்ல நான். ஆனால், இந்தப் படம் ஒரு நபரையாவது திருத்தினால் நன்றாக இருக்குமே என்று நப்பாசைப்படுகிறேன்.
       பின்க் – ஒரு தேவையான படம்.

***********************************************************************************************************

Tuesday, February 16, 2016

இறுதிச்சுற்று???????



      பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் கதையாகப்பட்டது, தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிக் கிளம்புகிற மின்சார ரயில் வண்டிகளைப் போன்றது. அவ்வப்போது சைதாப்பேட்டைக்கு முன்னாலும், கோட்டை தாண்டியும் புசுக்கென்று நின்று சில நிமிடங்கள் கழுத்தறுத்தாலும், எப்படியும் கடற்கரையில் இறக்கி விடுவது உறுதி. என்ன, சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத பிளாட்பாரத்தில் வண்டி போய் நின்று கடுப்பேற்றுவதும் நடக்கிற சங்கதிதான்.

                'இறுதிச்சுற்று' - ஒரு பார்வையாளராக என்னை ஏமாற்றவில்லை. ஒவ்வொரு காட்சியிலும், 'அடுத்து இது வரும்' என்ற எனது எல்லா ஊகங்களையும் உண்மையாக்கி காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வைத்த படம்ஆனால், ஒரு திரைப்படத்திலிருந்து நாம் எதிர்பார்ப்பது இதற்கு முற்றிலும் எதிர்மறையானது. கதையின் போக்கைக் கணிக்க முடிவதற்கும், காட்சிகளின் அடுக்கை ஊகிக்க முடிவதற்கும் இருக்கிற வித்தியாசம் மிகப் பெரியது. அவ்வகையில் 'இறுதிச்சுற்று' சரவணபவனில் இரண்டாவது முறை சாப்பிடுகிறகுவிக் மீல்ஸ்போல தவிர்க்க முடியாத ஒரு அலுப்பைத் தந்திருக்கிறது என்பதே உண்மை.

இந்தப் படத்தை மைக் டைசன் பார்க்க விரும்புவதாக செய்திகள் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கின்றன சில பத்திரிகைகள். நியாயம் தான்; இந்தப் படத்தில் வரும் சில below-the-belt சங்கதிகளை, அத்தகையunsporting antics நிறைய ஆடிய மைக் டைசன் நிச்சயம் பார்த்துப் பாராட்டுவார். ரெப்ரீ சண்டையை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் லூ சாவரீஸை துவம்சம் செய்ததோடு அல்லாமல், ரெப்ரீ ஜான் கோய்லையும் அடித்து வீழ்த்தியவர் அல்லவா டைசன்? அவருக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

'விகடன்' விமர்சனத்தில், இயக்குனர் சுதா கொங்கரா இரண்டரை ஆண்டுகளாய், மகளிர் குத்துச்சண்டை குறித்து மிகுந்த ஆராய்ச்சி மேற்கொண்டதாக சொல்லிப் பாராட்டியிருப்பதை வாசித்து எனக்கு சிரிப்பே வந்து விட்டது. குத்துச்சண்டைகள்  எப்படி நடைபெறுகின்றன என்று எந்த அளவு இயக்குனர் வீட்டுப்பாடம் செய்திருக்கிறார் என்பதற்கு, படத்தின் இறுதியில் வருகிற உலக சாம்பியன்ஷிப் தொடர்புடைய காட்சிகளே ஒரு சோறு பதம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பட்டியலில் உள்ள எந்த விளையாட்டின் சர்வதேச போட்டியிலும், ஊக்க மருந்து பரிசோதனைகளை ஒரு சர்வதேச கமிட்டியே மேற்பார்வை செய்து நிர்வகிக்கும். ஒரு குத்துச்சண்டை வீரனாக இருந்து பயிற்சியாளராகும் கதாநாயகனுக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாதது போல, அவரை வில்லன் மிரட்டுவது போல காட்சி அமைத்திருப்பது நகைப்பூட்டுவதாக இருக்கிறது. மேலும், அரை இறுதியில் ஜெயித்த ஒரு வீரர் அல்லது வீராங்கனை, காயம் உட்பட பிற மருத்துவ காரணங்களுக்காகத் தானே முன்வந்தால் ஒழிய அவரை இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள விடாமல் எந்தக் கொம்பனும் தடுக்க முடியாது. இந்த பூச்சாண்டிக்குப் பயந்து கதாநாயகன் ராஜினாமா செய்வது போல காட்சி அமைத்திருப்பதிலேயே, குத்துச்சண்டை குறித்து எவ்வளவு விபரம் திரட்டியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

குத்துச்சண்டையில் இடுப்புக்குக் கீழே அடிப்பது, நடுவரை அடிப்பது, ஜட்ஜுகளைத் தாக்குவது என்பதெல்லாம் 80-களிலேயே கடுமையான குற்றங்களாக்கப் பட்டு விட்டன. லாரி கோம்ஸ், மைக் டைசன் ஆகியோரின் குத்துச்சண்டை வரலாற்றை மேலோட்டமாக வாசித்திருந்தால் கூட, அவர்கள் இத்தகைய குற்றங்களுக்காக என்ன பாடு பட்டார்கள் என்று புரியும். அப்படியிருக்கையில், தொடர்ந்து இத்தகைய விளையாட்டு விதிமீறல்களை செய்கிற habitual offender கதாநாயகியை, மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு உலக சாம்பியன்ஷிப் ஆட, குத்துச்சண்டை அனுமதித்திருப்பதாய்க் காட்டியிருப்பது அபத்தத்திலும் அபத்தம்

'இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்களுக்காக படத்தை மோசம் என்பதா?' என்று கேட்பவர்களுக்கு - நிச்சயம் இது மோசமான படம் இல்லை; ஆனால், இந்த அளவுக்கு வியந்து விகசிக்குமளவுக்கு இது ஒரு காவியமும் இல்லை. குறிப்பிட்ட நுணுக்கங்களில் கவனம் செலுத்தி, கதைக்கட்டிலும் பாத்திரப்படைப்பிலும் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால், இது இந்தியாவிலேயே இதுவரை தயாரிக்கப்பட்ட Sports Drama-க்களில் மிகச் சிறந்த படம் ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது. தற்போதைக்கு, இந்தப் படம் 'மேரி கோம்' படத்தின் கால்நுனி நிழல் அளவுக்கே இருக்கிறது என்பதே வேதனை. சுருக்கமாக சொன்னால், இது குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட - ஒரு அடக்கி வாசிக்கப்பட்ட romantic melodrama; அவ்வளவே!

சினிமா தவிரவும் உலக விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவன் என்ற முறையில், இந்தப் படத்தில் சித்தரித்திருப்பதைப் போல, எங்கிருந்தோ யாரோ ஒரு பெண்ணை பயில்வித்து, ஒரு ஹெவி-வெயிட்டுடன் மோதி, தோல்வியடையச் செய்து, பிறகு நேரடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கே அழைத்துப்போவதெல்லாம், விட்டலாச்சாரியா உயிரோடு இருந்தால் அவர் படங்களில் நடக்கிற சங்கதிகள். மாவட்டம், மாநிலம், மண்டலம் அப்புறம் தேசிய அளவிலான போட்டிகள் என்று ஏழுகடல், ஏழுமலை தாண்டாமல், ஐந்து நிமிடப் பாட்டில் ஹீரோ கோடீஸ்வரன் ஆவதுபோல, காட்டியிருப்பதேல்லாம் திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம் என்று அடித்துச் சொல்லலாம்

விகடன் விமர்சனத்தில் மேலுமொரு நகைச்சுவைக் குறிப்பு: "'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!". படத்தின் ஆரம்பத்தில், 'கதையில் குறிப்பிடப்படும் சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே' என்று போட்ட டிஸ்க்ளைமர் கார்டை விகடன் விமர்சனக் குழு பார்க்கவில்லை போலிருக்கிறது. ஒரு படத்தைப் பாராட்டுவது என்று முடிவு செய்தால், என்னவெல்லாம் பாசாங்கு பண்ணுறீங்க சாமிகளா! விகடன் விமர்சனத்தில் குறிப்பிட்ட "இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்" தான் இப்படம் குறித்த பெரும்பாலான மிகையான புகழுரைகளுக்குக் காரணமே தவிர, இது இந்த அளவுக்குக் கொண்டாடத்தக்க ஒரு படமே அல்ல. “ஒரு ஏழைப்பெண் எப்படி தனது சூழலிலிருந்து விடுபட்டு, வெற்றியின் உச்சியை அடைகிறார்? அவரது பாதையில் அவர் கடக்க நேரிடுகிற முட்கள் எத்தனை? துயரங்கள் எத்தனை? தியாகங்கள் எத்தனை?” என்ற சலித்துப்போன போலிப் பெண்ணியப் பிரச்சாரத்தின் ஒரு நாசூக்கான வடிவம்தான் 'இறுதிச்சுற்று".
மற்றபடி, இந்தப் படத்தின் வருகிற எந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் திரையில் முதன்முதலாய்ப் பார்த்தீர்கள்? மனைவியைப் பிரிந்து மது,மாது என்று வாழ்கிற கதாபாத்திரம் புதுமையா? குடும்பத்துக்காக தியாகம் செய்கிற நாயகி புதுமையா? தனது ஊதாரித்தனத்துக்காக மகள் சம்பாத்தியத்தை ஏப்பமிடுகிற தகப்பன் புதுமையா? சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் மீது காதல்வயப்படுகிற பெண் புதுமையா? பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்த வேண்டும் என்று அலைகிற வில்லன் புதுமையா? நாயகி மீன் விற்கிற பெண் என்பதும், நாயகன் குத்துச்சண்டை பயிற்சியாளர் என்பதும் தவிர்த்துப் பார்த்தால், இந்தப் படத்துக்கும் யுகயுகமாய் நாம் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு வீடு திரும்பிய மற்ற படங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று சத்தியமாய் எனக்குப் புரியவில்லை.
மாதவனின் கதாபாத்திரம் - 'இக்பால்' படத்தின் நசீருத்தீன் ஷா மற்றும் 'சக்தே இந்தியா' ஷாரூக்கான் இருவரது கதாபாத்திரங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் சுரண்டியெடுத்து பூசப்பட்டிருக்கிறது என்பதுதானே உண்மை? ஒரு பயிற்சியாளருக்கும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைக்கும் இருக்கக் கூடிய மெல்லிய உறவை 'மேரி கோம்' படத்தில் நாம் பார்க்கவில்லையா? சில இடங்களில் 'மிலியன் டாலர் பேபி' -கிளின்ட் ஈஸ்ட்வுட் -ஹிலாரி ஸ்வான்க் ஞாபகம் வருகிறது. (ஐயையோ, ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகிற வியாதி என்னையும் தொற்றிக் கொண்டதே, கடவுளே!)

            இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான இப்படத்தில், இருக்கிற விரல்விட்டு எண்ணத்தக்க கதாபாத்திரங்களைச் சரிவரச் செதுக்கி, திரைக்கதையைச் செம்மையாய் அமைத்திருந்தால், இன்று கொண்டாடுகிறவர்களின் புகழ்ச்சிக்கு இந்தப் படம் உண்மையிலே தகுதியுடையதாய் இருந்திருக்கும். ஒரு பொன்னான வாய்ப்பு பறிகொடுக்கப் பட்டிருக்கிறது. வாட் ய ஷேம்!

      மாதவனை எனக்குப் பிடிக்கும். ’ஆய்த எழுத்து’, ‘அன்பே சிவம்’, ‘ரன்’ போன்ற படங்களில் ஏற்கனவே விதவிதமாய் நடித்து நிரூபித்தவர்தான் என்றாலும் ‘தம்பி’ மாதிரி அனாவசியமாக முறைத்து, அளவுக்கதிகமாக இரைந்து நடித்திருப்பாரோ என்று ஒருவிதமான பயத்துடன் போயிருந்தேன். மனிதரின் அமெரிக்கையான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்தின் பல சறுக்கல்களையும் தாண்டி மனதுக்குள் ஐஸ்க்ரீம் போல் இறங்கியது. நிஜத்தில், மாதவன் என்ற கோந்து ஒன்றுதான் இந்த உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்திருக்கிறது. ஆனால், அந்த அசுர உழைப்பும், அமெரிக்கையான நடிப்பும்கூட ஒரு தெளிவான பிம்பத்தை இறுதியில் அளிக்கவில்லை என்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. சிவாஜி,கமல்,அமிதாப்,மம்மூட்டி போன்ற பல நடிகர்கள், தங்களது நேர்மையான உழைப்பால் பல சொதப்பல் படங்களையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது மாதவனும் சேர்ந்து, தன் தோள்களில் ஒரு படத்தின் மொத்தச்சுமையையும் தாங்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

       நாசர், ராதாரவி இருவரது நடிப்பும், அனுபவசாலிகளுக்கும் புதியவர்களுக்கும் இருக்கிற அடிப்படை வித்தியாசத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ராதாரவி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்க, நாசர் அந்தக் கலகலப்பான பாத்திரத்துக்கு ஜீவன் அளித்திருக்கிறார்.

      மேற்கூறிய மூவர் தவிர்த்து பிறரின் நடிப்பு பெரும்பாலும் மிகவும் சீரியல்தனமாய் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. ரித்திகா சிங் அவ்வப்போது கிறீச்சிடுவதையும், மூக்கு விடைக்க, முகம்சுளிக்க வசனத்தை இரைந்து சொல்வதையும் நடிப்பு என்ற கணக்கில் சேர்க்க, நான் வேறோரு படத்தில், இதைவிட மோசமான நடிப்பைப் பார்த்தாக வேண்டும். அக்காக்காரியாக வரும் மும்தாஜ் சர்க்காரின் பொறாமை ஒரு புதிராக இருக்கிறது என்பதால், அவரது மாறுகிற உணர்ச்சிகள் எண்ணைமேல் தண்ணீர்த்துளிகள்போல ஒட்டாமலே இருக்கின்றன. அந்தப் பொறுப்பில்லாத அப்பாவின் நடிப்பு படத்தில் இன்னொரு நகைச்சுவையாய் இருந்தாலும், கொஞ்சம் புன்னகைக்க வைக்கிறது.

      இசை சந்தோஷ் நாராயணன். படத்தில் இன்னொரு ஆறுதல். ஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டுக்குரியது – குறிப்பாக குத்துச்சண்டை காட்சிகளின்போது சில கோணங்கள் பிரமிக்க வைக்கின்றன.

      குத்துச்சண்டை என்றால், கையில் உறைபோட்டு, தலையில் கவசமணிந்து ரத்தம் வரக்குத்துவது மட்டுமல்ல; கால்களுக்கு குத்துச்சண்டையில் இருக்கிற முக்கியப்பங்கையும் காட்டியிருக்கலாம். ராக்கி தொடர்படங்களில் சில்வஸ்டர் ஸ்டாலோன் கால்களின் அசைவை அற்புதமாகப் படமாக்கிக் காட்டியிருப்பார்கள். இவ்வளவு ஏன்? ‘காவல்காரன்’ படத்தில் வாத்தியார் குத்துச்சண்டை பார்க்கவில்லையா? படத்தில் மாதவனே சொல்லுவதுபோல, குத்துச்சண்டையில் விரல்விட்டு எண்ணத்தக்க உத்திகளே உள்ளன. அதுதவிர, உடல் இயக்கம், பார்வை ஒருமைப்படுத்துதல் என்று அறிவுடன் தொடர்புடைய சங்கதிகள் உள்ளன. அவற்றை விஷுவலாகக் காட்ட பெருமளவு தவறி, ஒரு செங்கிஸ்கான் கதையை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள் – இக்பால் படத்தில் வருகிற ‘சக்ரவியூகம்’ போல.

      இந்தப் படத்தின் திரைக்கதையின் ஓட்டைகளை அடைக்க ஐம்பதுகிலோ அம்மா சிமெண்ட் வேண்டும். அது அனாவசியமானது; ஏனென்றால், நாயகன் தவிர்த்து மீதமுள்ள கதாபாத்திரங்களை செதுக்குகிற முயற்சியில் சேதாரமாக்கியிருக்கிறார்கள். திரைக்கதை குறித்த எனது தியரிக்கு, இப்படத்தில் சில மோசமான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

      சிகரம்தொட்டிருக்க வேண்டிய படம்; அடிவாரத்திலேயே கொடியேற்றிவிட்டு அற்பசந்தோஷம் அடைந்திருக்கிறது.