Sunday, July 31, 2011

ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Wednesday, July 27, 2011

ரஞ்சிதா செய்த தவறு என்ன?

பொதுவாக நான் இந்த பெண்ணியம், ஆணாதிக்கம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை போன்றவற்றிற்கு நேற்று பயணித்த பஸ் டிக்கெட்டுக்கு இன்று கொடுக்கிற மரியாதையைக் கூடத் தருவதில்லை. என்னுடன் இருப்பவர்கள், நான் சந்திப்பவர்கள் பலரிடமிருந்து சகமனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாரபட்சமின்றி மதிக்கக் கற்றுக்கொண்டு வருகிறேன்; முடிந்தவரை கடைபிடிக்க தொடர்ந்து என்னைப் பக்குவப்படுத்தி வருகிறேன். (இதுவரை முழுவெற்றியில்லை!) பார்த்தும், கேள்விப்பட்டும் சற்றே நிலைகுலைய வைக்கும் விசயங்களை புனைவாகவோ, சற்று தீவிரம் குறைவாயிருப்பின் நையாண்டிகளாகவோ எழுதுவதே எனது வாடிக்கை. அனேகமாக முதல்முறையாக, ஒரு விஷயம் குறித்த எனது கருத்துக்களை நேரடியாகச் சொல்ல விரும்புகிறேன்.

ரஞ்சிதா செய்த தவறு என்ன?’ - பல மாதங்களுக்கு முன்பு "பண்புடன்" குழுமத்தின் ஒரு விவாதத்தின்போது, இப்படியொரு கேள்வியை எழுப்பிய ஒரு சிலரில் நானும் ஒருவன். (கவனிக்கவும், நித்தியானந்தா செய்த தவறு என்ன என்று கேட்கவில்லை!).

சர்ச்சைக்குரிய அந்த வீடியோ வெளிவந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் பத்திரிகைகளிலும் வலைப்பதிவுகளிலும் நார் நாராகக் கிழித்துக் கொண்டிருந்தபோது "எனக்குப் பிடித்த பத்து பெண்கள்," என்ற தலைப்பில் ரஞ்சிதாவையும் குறிப்பிட்டு இடுகை எழுதியிருந்தேன். மீண்டும் நித்தி-ரஞ்சிதாவைப் பற்றிய செய்திகள் முழுவீச்சில் வெளிவந்து கொண்டிருக்கிற சூழலில், அப்போது நான் கேட்ட கேள்வியின் வீரியம் இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.

ரஞ்சிதா செய்த தவறு என்ன? - திருமணமான ஒரு பெண், ஒரு இளம் துறவியோடு (?) அந்நியோன்னியமாக இருந்தது தவறு! - இது கொஞ்சம் பட்டும் படாமல், நாசூக்காகச் சொல்கிற பதிலாக இருக்கலாம். இது போன்ற தவறுகளைச் செய்கிற பெண்களுக்கு வழங்குவதற்காக, வழிவழியாய் வகைவகையாய் பட்டங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை பகீரங்கமாய், பட்டவர்த்தனமாய் சொல்லி ’கண்ணியவான்,’ என்ற கவுரவத்தை வலுவில் இழக்க எந்தக் கலாச்சாரக்காவலர்களும் விரும்புவதில்லை. இந்தப் பட்டங்கள் என்னவோ, ரஞ்சிதா போன்ற பிரபலங்களுக்காவே ஏற்படுத்தப்பட்டவை அல்ல. ஆனால், நடிகை சம்பந்தப்பட்டால், அட்டையில் அதே நடிகையின் கவர்ச்சிப்படத்தைப் போட்டு விற்பனையை அதிகரிக்கிற வர்த்தக சாத்தியக்கூறு இருக்கிறது. கவனத்தை சட்டென்று ஈர்க்க உதவுகிறது. பட்டங்களுக்குப் பட்டைதீட்டி வண்ணக்காகிதத்தில் பொட்டலம் கட்டி கடைகடையாய் விற்கிறார்கள். அவ்வளவே!

காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலுக்குள் சல்லாபித்த பூசாரி தேவநாதனுக்கு இணங்கிய அந்தப் பெண்ணின் பெயரை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்? எனக்கே ஞாபகம் வரவில்லை; அதை கூகிளில் தேடுமளவுக்கு முக்கியமாகவும் தோன்றவில்லை. ஆனால், ரஞ்சிதாவை எளிதில் மறக்க முடியாத அளவுக்கு, பார்க்குமிடமெங்கும் நீக்கமற எழுதியும் பேசியும் நமது சமுதாயக்கடமையை நிறைவேற்றி விட்டோம்; இன்னும் எழுதுவோம் என்று நம்புகிறேன்.

பிரபலங்களின் செயல், பேச்சு நமது கவனத்தை சட்டென்று ஈர்த்துத் தொலைத்து விடுகிறது. ’திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வதில் தப்பில்லை; ஆனால், கவனமாய் இருங்கள்,’ என்று ஒரு நடிகை சொன்னால் தப்பு. அதையே எத்தனையோ தொலைக்காட்சிகளில் மருத்துவ நிகழ்ச்சிகளில் படித்துப் பட்டம்பெற்ற மருத்துவர்கள், சற்றே இங்கிலீஷும், நிறைய இங்கிதமும் கலந்து சொன்னால் நாம் கண்டு கொள்ள மாட்டோம். (யூ நோ திஸ் புரோகிராம் இஸ் வெரி இன்டரஸ்டிங் அண்ட் இன்ஃபர்மேடிவ்..!)

ஸ்தூ....! பண்பாடு, கலாச்சாரம் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லப்படுகிற விசயங்கள் பற்றியும், அவற்றின் குழப்பமான எல்லைகளை மீறுதல் குறித்தும் எனக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ சில நடந்து கொண்டிருக்கின்றன; இனியும் நடக்கும் என்பது தான் நிஜம்! இவற்றையெல்லாம் ஆதரித்து முற்போக்குவாதி என்ற பட்டம் பெறுவதில் எனக்கு எத்தனை விருப்பமில்லையோ, அதே அளவு இவற்றை முழுமூச்சாய் எதிர்த்து ’கலாச்சாரக்காவலன்,’ என்ற பட்டம் வாங்கவும் விருப்பமில்லை. எனக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் - அம்புட்டுத்தேன்! சரி, எங்கேயோ அரசல்புரசலாய் நடப்பதை இன்னும் வெளிச்சம்போட்டு நடத்திக்கொள்ளட்டுமே என்று சொன்னால் - ஸாரி, எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது!

"அவன் இருக்கானே, மச்சக்காரண்டா! ஒரு பொண்ணு கண்ணுலே பட்டாலே போதும்!" என்று ஒரு ஆண்மகனின் வசீகரத்தையும், அவனது டெஸ்டோஸ்டெரோனின் மகிமை குறித்தும் சிலாகித்துச் சொல்லும்போது, அந்த மச்சக்காரன் ஒரு நல்லவளையாவது தடம்புரள வைத்திருப்பான் என்பது உறைப்பதில்லை. ஆனால், அந்தப்பெண்ணை எங்கேனும் பார்த்தால் தன்னிச்சையாகவே நமது உதடுகளில் ஒரு அலட்சியப்புன்னகை எட்டிப்பார்க்கிறது. (டெக்னிக்கலாக, இதையும் ஆணாதிக்கம் என்று சொல்கிறார்கள்! )

தொடர்ந்து ரஞ்சிதாவைக் குறித்துப் பலர் எழுதுவதை வாசிக்கும்போது ஒன்று நன்றாகப் புரிகிறது. நாம் பிரபலங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்; அவர்கள் பிறழும்போது நமக்கு அதிக ஏமாற்றம் ஏற்படுகிறது. (சிலருக்கு "வடை போச்சே" என்ற ஆதங்கம் கூட எரிச்சலை உண்டாக்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்படாமல் இல்லை!)

சொல்லப்போனால் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், அரசாங்கம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒவ்வொருவரிடமும் ஏமாந்த கோபம் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நான் வாசித்த இடுகைகளை எழுதியவர்கள் அனைவரிடமும் இந்தக் கோபக்குவியலை நான் இப்போதோ அல்லது இதற்கு முந்தைய இடுகைகளிலோ பார்த்திருக்கிறேன். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ திரைப்படங்கள் அரசியல், ஆன்மீகம் போன்றவற்றைக் காட்டிலும் நம்மிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத்துக்கு....

எனக்குத் தெரிந்த ஒரு பதிவர் ஒரு சில வருடங்களாய் அருமையாகக் கவிதைகள் எழுதி வருகிறார். ஆனால், அவர் ’தில்லாலங்கடி,’ படத்துக்கு விமர்சனம் எழுதியதும் தான் முதன் முதலாக அவரது இடுகை இண்டெலியில் பிரபலம் (Popular) ஆனது. இது திரைப்படங்களையோ, அவை குறித்து அதிகம் எழுதி, அதிகம் வாசிப்பவர்களின் ரசனையையோ, குறைத்து மதிப்பிடுவதற்காக எடுத்துக் காட்டப்படவில்லை. அரசியல், ஆன்மீகம் இவற்றைக் காட்டிலும், திரைப்படங்கள் எளிதாக நமது அண்மையில் இருக்கின்றன; அவற்றைக் காட்டிலும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவையாய், சிக்கல்களற்று இருக்கின்றன என்பதையே சொல்ல விருப்பம்.

அதனால்தான், ஹைதராபாத்தில் சீதையாக நடிக்கிற ஒரு நடிகையின் ’தகுதி’யை திருப்பூரில் இருக்கிற ஒரு லெட்டர்-பேட் கட்சி கேள்விகேட்க முடிகிறது. ஏதோ ஒரு விருந்தில், இரண்டு நடிகைகள் மதுவருந்தி ஆடினால், அந்தப் புகைப்படங்கள் சகட்டுமேனிக்கு இஷ்டமித்திர பந்துக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ’நான் சம்பாதிக்கிறேன்; குடிக்கிறேன். உனக்கென்ன?’ என்று பெரிய நகரங்களில் சில பெண்கள் கேட்கிற உரிமை கூட நடிகைகளுக்கு இல்லை.

ராமனாக நடிக்கிறவன் ஏகபத்தினி விரதனாய் இருத்தல் வேண்டும் என்று எந்த இந்துக்கட்சியும் கொடிபிடிப்பதில்லை. டாஸ்மாக்கில் குடித்துவிட்டு நடுரோட்டில் புரள்கிறவனைக் கேள்வி கேட்க எவனுக்கும் துப்பில்லை. பேருந்துப்பயணத்தில் பெண்களிடம் அத்துமீறுகிறவன் பிடறியில் ஒன்று போடுகிற துணிச்சல் நமக்கு எளிதில் வருவதில்லை. ஆனால், பல தூண்டுதல்களுக்கும், சுரண்டல்களுக்கும் பஞ்சமில்லாத ஒரு துறையில், புகழ், பணம் என்பதெல்லாம் போய், ’பிழைப்பு’ என்ற குறைந்தபட்ச காரணத்துக்காக அல்லாடுகிற பெண்களை ஏகடியம் செய்வதில் நமக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி கிடைக்கிறது.

துறவிகள், அவர்களின் பட்டத்துக்குப் பொருத்தமாக உலகவாழ்க்கையின் சவுகரியங்கள் அனைத்தையும் துறந்திருக்க வேண்டும். தரிசனத்துக்குக் கட்டணம், பட்டுப்பீதாம்பரம், தேர்வடம் போன்ற தங்கச்சங்கிலி, வெளிநாட்டுக்கார்கள், சொகுசு பங்களாக்கள், வெளிநாட்டு வங்கிகளில் அளவற்ற அந்நியச்செலாவணி என்று போனவர்களை துறவிகள் என்று நம்புகிற மூர்க்கத்தனமான பக்தி இன்னும் பரவலாய் இருக்கிறது. இவர்களில் சிலர் பணம்பறிப்பதோடு, அத்துமீறி நடக்கிற செய்திகளும் புதிதல்ல. இருந்தாலும் சீட்டுக்கம்பனிகள் எவ்வளவு ஏமாற்றினாலும், திரும்பத் திரும்ப புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுகிறவர்களைப் போலவே, புதிதாய்க் கிளம்புகிற சாமியார்களிடம் ஏமாறுகிற கூட்டமும் இன்னும் இருக்கிறது. அவர்களது பலவீனத்தை, தங்களது சாதுரியத்தாலோ அல்லது பலாத்காரமாகவோ பயன்படுத்துகிற ஆன்மீகவாதிகளுக்கு நித்தியைப் போன்ற ஒரு உதாரணம் இருக்க முடியாது.

ஒருவனின் படுக்கையறைக்குள் திருட்டுத்தனமாய் கேமிராவை வைத்து, அவனது அந்தரங்கத்தைப் படம் பிடிக்கிறவனின் மனதில் எவ்வளவு அழுக்கு இருக்க வேண்டும் என்று யோசித்தால் குமட்டுகிறது. ஆனால், அத்தகைய செயலைச் செய்தவர் மாவீரனாக சித்தரிக்கப்பட்டு, துணிச்சலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய சாகசத்தை நிகழ்த்தியவர் போலப் பெருமிதம் கொள்கிறார்.

குழந்தைகளும் பெண்களும் இருக்கிற குடும்பங்களின், குறைந்தபட்சப் பொழுதுபோக்கான தொலைக்காட்சியில், எங்கோ யாரோ யாருடனோ சல்லாபம் செய்த காட்சிகள் சற்றும் திருத்தப்படாமல், சங்கோஜம் சிறிதுமின்றி சர்வசாதாரணமாகத் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகின்றன. அதை இன்னொரு பத்திரிகை வர்ணனையோடு எழுதிப் பூரிப்படைகிறது.

சமீபத்தில் நிகழ்ந்த இரு பெரிய ரயில் விபத்துக்களில் பலியானோரின் சடலங்களை ஊடகங்கள் காட்டியபோது, திரையில் சில பகுதிகளை மொஸைக் மூலம் மறைத்துக்காட்டினார்களே ஏன்? பார்க்கிறவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகத்தானே? பத்திரிகைகளிலும் சில புகைப்படங்களை முழுமையாகப் போடாமல் இருக்கிறார்களே? ஆனால், நித்தி-ரஞ்சிதா வீடியோவை தொலைக்காட்சியில் காட்டியபோதும், பத்திரிகையில் புகைப்படங்களாய்ப் போட்டபோதும் இந்த கண்ணியம், பொறுப்புணர்ச்சி எல்லாம் எங்கு போயின? அவை கடைபிடிக்கப் படாமல் போனதற்கு, எப்படியாவது பரபரப்பை உண்டாக்க வேண்டும் என்ற அற்ப அரிப்பைத் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்?

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியும், பத்திரிகையும் அவரவர் எல்லைகளை மீறியிருக்கின்றனர் என்பது அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டதைக் காட்டிலும் அருவருப்பான உண்மை. இப்படியெல்லாம் வெளிச்சம்போட்டுக் காட்டினாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற மிதப்பு அவர்களுக்கு வந்திருப்பது, பொதுமக்களைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கிற மட்டமான கருத்தின் அறிகுறியல்லவா? அதை நிரூபிப்பதுபோலவே, ஒரு சிலர், குறிப்பாக ரஞ்சிதாவை மட்டும் வரம்புமீறி படுவிரசமாய் விமர்சித்து எழுதியதும், எழுதிக்கொண்டிருப்பதும் நாம் நமது வரம்பை மீறியிருக்கிறோம் என்பதன் அறிகுறி இல்லையா?

துறவி அல்லது குரு என்பவனுக்கென்று சில கடுமையான வரைமுறைகள் இருக்கின்றன. ஊடகங்களுக்கென்று எழுதப்பட்ட ஒரு நெறிமுறை இருக்கிறது. நியாயப்படி பார்த்தால், இவர்கள்தான் மிகப்பெரிய விதிமீறல்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால், திரைப்பட நடிகைக்கு என்று ஏதாவது விதிமுறை இருக்கிறதா? இறுக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டு கடமையாற்ற வேண்டியவர்களே அதை மீறுகிறபோது, தொழில்முறையாக எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு நடிகையை மட்டும் ரவுண்டு கட்டி அடிப்பது ஏன்?

திருமணமான பெண் கணவனுக்குத் துரோகம் இழைத்தால், அவளுக்கு என்ன தண்டனை என்று கருடபுராணத்தில் சொல்லியிருக்கிறது. (பழுக்கக்காய்ச்சிய இரும்பு பொம்மைகளைத் தழுவ வேண்டுமாம்; பெயர் ஞாபகமில்லை!) ஆக, இது யுக யுகமாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? கருடபுராணத்தை விடுவோம். கணவனுக்கு மனைவி துரோகம் செய்தால், அவளுக்கு சட்டப்படி அளிக்கப்படுகிற தண்டனை, விவாகரத்து ஒன்றுதான்! அந்த தண்டனையை அளிக்க வேண்டியது அவளது கணவனும் நீதிமன்றமும்.

பொது இடங்களில் கைபேசி கேமிரா மூலம் அனுமதியின்றி பெண்களைப் படமெடுப்பது சட்டப்படி குற்றம். Sting Operation என்ற பெயரில் தனிமனிதர்களின் உரிமைகளில் தலையிடுவதை உச்சநீதிமன்றமே வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஆனால், சன் டிவிக்கோ, நக்கீரனுக்கோ யார் தண்டனை கொடுப்பது? அவர்கள் செய்தது தவறு இல்லையென்றால், இனி கேமிராக்கள் எவர் வீட்டுப் படுக்கையறைக்குள்ளும் ரகசியமாய் வருவதற்கான அபாயம் காத்திருக்கிறது.

அவர்கள் எந்த உறுத்தலும் இன்றி உலவுகிற ஒவ்வொரு கணமும், அதன் விளைவாய் தனிமனித ஒழுக்கம் குறித்து அறிவுரை சொல்கிற சாக்கில் கண்ணியமேயில்லாமல் எழுதுகிறவர்கள் இருக்கிற வரையிலும், நான் தைரியமாகச் சொல்வேன்.

ரஞ்சிதா எந்தத் தவறும் செய்யவில்லை!


டிஸ்கி.1: இன்னும் சொல்வதற்கு மிச்சமிருக்கிறது. முடிந்தால் இன்னொரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்.

டிஸ்கி.2: ஒருபோதிலும் நான் எவரது இடுகைக்கும் எதிர் இடுகை எழுதுகிறவன் இல்லை. எனவே, இது யாருடைய எசப்பாட்டுக்கும் எதிரான எதிர்ப்பாட்டு அல்ல.

டிஸ்கி.3: எனது சகபதிவர்களின் கருத்தோடு பல சமயங்களில் ஒத்துப்போகாத போதிலும், அவர்களது உரிமையை நான் மதிக்கிறேன். இது எனது உரிமை என்பதை அவர்களும் மதிப்பார்கள் என நம்புகிறேன்.

Monday, July 25, 2011

பேல்பூரி

ஒரு சபாஷ்!

சாதாரணமான மனிதர்களால் என்ன செய்ய முடியும்? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? சட்டம் குடிமகனுக்கு உதவுமா? என்றெல்லாம் எதிர்மறையான கேள்விகள் நிறைய இருந்தாலும், அவ்வப்போது நம்பிக்கையூட்டும் சில செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

சுபாஷ் அகர்வால் என்ற தனிநபர், தகவல் உரிமைச் சட்டத்தை உபயோகப்படுத்தி, இந்தியக்குடியரசுத்தலைவர் திருமதி. பிரதிபா பாட்டீலின் சொத்துக்கணக்கையும், அந்த விபரங்களை அரசு இணையதளத்தில் வெளியிடுவது குறித்தும் அனுப்பிய மனு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் விளைவாய், குடியரசுத்தலைவரின் சொத்துக்கள் குறித்த விபரம் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அல்லாம் சும்மா கண்தொடப்பு நைனா,’ என்று அங்கலாய்ப்பவர்கள் இருக்கலாம் என்றாலும், சுபாஷ் அகர்வால் போன்ற தனிநபர்கள் சட்டத்தின் துணையோடு உயர்பதவி வகிப்பவர்களை கேள்வி கேட்க முடிகிறது என்பது கவனிக்கத்தக்கது.

சுபாஷ் அகர்வாலுக்கு ஒரு சபாஷ்!

நியூஸ் ரீல்!

2ஜி ஏலம்: பிரதமர்-ப.சிதம்பரம் ஒப்புதல் தந்தனர்: நீதிமன்றத்தில் ராசா பரபரப்பு வாதம்!

மறுபடியும் முதல்லேருந்தா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

அப்படிச் சொல்லுங்க! ஒரு உறையிலே ரெண்டு கத்தி எதுக்குண்ணேன்!

திமுகவை அழிக்க கருணாநிதி குடும்பத்தால் மட்டுமே முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆமாம், அது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஆனா, உங்க கட்சியை அழிக்க உங்க கேப்டன் பேசினாலே போதும்! வெரி வெரி சிம்பிள்!

ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவேன்: அன்புமணி

அதானே, அவரும் எவ்வளவு நாள் தான் சும்மாயிருப்பாரு பாவம்?

கல்மாடிக்கு மறதி நோயாம்!

எல்லாம் இந்த ஆமீர்கானாலே வந்த வினை. அவரை யாருய்யா இந்தியிலே ’கஜினி’ படத்தை எடுக்கச் சொன்னது?

சந்தேகம்:

13-07-11 அன்று மும்பையில் நிகழ்ந்த குண்டு வீச்சில் 21 பேர்கள் உயிரிழந்து, 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா தொடங்கி, பாகிஸ்தான் வரைக்கும் அனைத்து தேசத்தலைவர்களும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்த இந்த பயங்கரவாதச்செயலுக்கு இந்தியாவின் ஒரு பிரபலம் இந்த நிமிடம் வரைக்கும் எவ்விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் ஒரு மராட்டியர்; ஊருக்கெல்லாம் அகிம்சையைப் போதிப்பவர். சொடுக்குப் போட்டால் உயிரை விடத் தயார் என்று அறிக்கை விடுபவர்.

யார் அந்த மகாத்மா? வேறு யார், நம்ம அண்ணாஜி ஹஜாரே தான்! பிரபல எழுத்தாளரான ஷோபா டே கூட தனது வலைப்பதிவில் "ஏன் அண்ணாஜி இது குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை?" என்று கேட்டிருக்கிறார்.

’அடப்போ சேட்டை, அவரு வெறும் காந்தீயவாதியில்லை! ஊழலை மட்டும் எதிர்க்கிற சூப்பர் ஸ்பெஷாலிட்டி காந்தீயவாதி! பயங்கரவாதத்தைப் பற்றியெல்லாம் அவரு பேச மாட்டாரு,’ என்று சொல்றீங்களா? அதுவும் சரிதான்! ஒருவேளை, உண்ணாவிரதம் இருந்த நேரம் போக, மீதியிருக்கிற நேரமெல்லாம் அவரு மவுனவிரதம் இருப்பாரோன்னு ஒரு டவுட்டு இருந்தது.

அப்போ, ’மிட்-டே’ பத்திரிகை நிருபர் ஜோதிர்மய் டே-யை கூலிப்படையினர் சுட்டுக்கொன்ற போது பொங்கியெழுந்து, ’இது ஜனநாயகப்படுகொலை!’ என்று பிரதமருக்கு கடுதாசு எழுதினாரே என்று யாரும் கேட்கக்கூடாது. இதையெல்லாம் எதுக்குய்யா ஞாபகத்துலே வச்சிருக்கீங்க?பத்திரிகைக்காரங்களும் சாதாரண அப்பாவிக் குடிமக்களும் ஒண்ணாக முடியுமா?

அண்ணாஜி ’நாமம்’ வாழ்க!

ரசித்த வீடியோ

தமிழ் ’சிங்கம்’ படத்தை இந்தியிலும் ’சிங்கம்’ என்ற பெயரில் வெளிவந்து சக்கைபோடு போட்டுக் கொண்டிருப்பது பழைய செய்தி. இந்த சிங்கத்தோட டிரெயிலரை ’டெல்லி பெல்லி’ படம் பார்த்தபோது, பி.வி.ஆரில் பார்த்தேன். அதே டிரெயிலர் இப்போது இணையத்தை வேறு காரணத்துக்காக கலக்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன காரணம்னு கேட்குறீங்களா?

வீடியோவைப் பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க!சிங்கம்லே.....!

Sunday, July 24, 2011

சேட்டை டிவியில் டாக்டர்

"வாங்க டாக்டர்! எங்கே வராம இருந்திடுவீங்களோன்னு பயந்திட்டிருந்தேன்,’ என்று வாயை சித்தூர் செக்-போஸ்ட் போலத் திறந்தபடி வரவேற்றாள் சேட்டை டிவியின் நிகழ்ச்சி இயக்குனர் பவி என்ற பாவாத்தா.

"இந்தவாட்டியாவது யாராவது போன் பண்ணி கேள்வி கேட்பாங்களாம்மா?" என்று சந்தேகத்துடன் கேட்டவாறே இருக்கையில் அமர்ந்தார் பிரபல மகளிர் மகப்பேறு மருத்துவ நிபுணர் குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம். "போனவாட்டி சும்மா போகக்கூடாதேன்னு பூசணிக்காய் கொழுக்கட்டை செய்வது எப்படின்னு புரோகிராம் பண்ணிட்டு போனேன். ஞாபகமிருக்கா?"

"அப்படியெல்லாம் ஆயிடக்கூடாதுன்னுதான் எங்க ஆளுங்களையே ரெடிபண்ணி அஞ்சு நிமிசத்துக்கு ஒருத்தர் போன் பண்ணுறா மாதிரி செட்-அப் பண்ணியிருக்கோம் டாக்டர்! பேட்டியை ஆரம்பிக்கலாமா டாக்டர்?"

"ஆல்ரைட்! ஸ்டார்ட் பண்ணுங்க!"

"வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டிவியின் "இன்னாபா நல்லாகீறியா?" நிகழ்ச்சி! இன்று நமது நேயர்களின் தொலைபேசிக் கேள்விகளுக்கு பதிலளிக்க வந்திருக்கிறார் பிரபல மகளிர் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர்.குஜலகுமுதா...ஓ ஸாரி..டாக்டர் குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம்! வணக்கம் டாக்டர்!"

"வணக்கம் பாவி, ஓ ஸாரி, வணக்கம் பவி!"

"இதோ நேயரோட முதல் அழைப்பு வந்திருச்சே! ஹலோ, சேட்டை டிவி! யாரு பேசறீங்க?"

"வணக்கம்! நான் புளியந்தோப்புலேருந்து வனஜா பேசறேங்க! டாக்டர் இருக்காங்களா?"

"சொல்லுங்க வனஜா! என்ன சந்தேகம் உங்களுக்கு?"

"ஐயோ, எனக்கு சொல்லவே கூச்சமாயிருக்குதுங்க டாக்டர்! கொஞ்ச நாளா என் புருசன் நடவடிக்கை ஒண்ணும் சரியில்லீங்க டாக்டர்! காலையிலேருந்து அடிக்கடி வாந்தியெடுக்கிறாரு, தலை சுத்துதுன்னு சொல்லுறாரு!"

"ஹலோ வனஜா! இது பெண்கள் சம்பந்தப்பட்ட...," என்று எதையோ சொல்ல வந்த பவியை இடைமறித்தார் டாக்டர்.

"வனஜா, உங்க புருசன் நேத்து என்ன சாப்பிட்டாரு?"

"ஒரு குவார்ட்டரும் மிக்சிங்குக்கு வாட்டரும்..!"

"அதுதான் காரணமாயிருக்கும். ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு கொடுங்க, சரியாயிடும்!"

"ஐயையோ, டாக்டர்! முழுசாக் கேளுங்க! இன்னிக்குக் காலையிலே அவரு திருட்டுத்தனமா சாம்பலை சாப்பிட்டதை என் கண்ணாலே பார்த்தேன்! வயிறு வேறே உப்பிக்கிடக்குது! ஊரு இருக்கிற இருப்புலே ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிருச்சோன்னு பயமாயிருக்கு டாக்டர்!"

"பயப்படாதீங்கம்மா! சதா பாரும் பீருமா இருக்கிறவங்க வயித்தைப் பாத்தா வாயும் வயிறுமா இருக்காங்களோன்னு சந்தேகம் வர்றது சகஜம்தான். அனேகமா நேத்து கடையிலே சைட்-டிஷ் சரியாக் கிடைக்காததுனாலேயோ, காலையிலே ஒருவேளை நீங்க டிபனுக்கு ரவா உப்புமா பண்ணினதுனாலேயோ சாம்பல் சாப்பிட்டிருப்பாரு! கவலைப்பட ஒண்ணுமில்லீங்க!"

வனஜாவோடு பேசி முடித்ததும் பவி சிரித்தாள். "என்ன டாக்டர், முத கேள்வியே வில்லங்கமாயிருக்கே? எங்கேயாவது ஆம்பிளைங்களுக்கு மசக்கை வருமா?"

"ஏன் வராது? ஆம்பிளைங்களும் கர்ப்பம் தரிக்கலாம் தெரியுமா? ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாலே ஓப்ரா வின்ஃப்ரே ஷோவுலே ஒரு கர்ப்பஸ்திரீ..சாரி, ஒரு கர்ப்பப்புருஷன் வந்து பேட்டி கொடுத்தாரே? "ஜூனியர்" படத்துலே நம்ம ஆர்னால்டு ஷ்வார்ஸ்னேகர் கூட ஒரு புள்ளை பெத்துக்கிறா மாதிரி கதை வந்துதே! ஆம்பிளைங்களும் பிள்ளை பெத்துக்க விஞ்ஞானத்துலே வாய்ப்பு இருக்கு; ஆனா, அது பெரும்பாலும் அவங்க உயிருக்கே ஆபத்தா முடியும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க!

"சரி டாக்டர், அடுத்த நேயரோட சந்தேகத்தைக் கேட்போமா?"

"ஹலோ, சேட்டை டிவியா? நான் வரதராஜபேட்டையிலேருந்து உலகம்மா பேசறேன் டாக்டர்! எங்க பாட்டிக்கு எழுபது வயசாகுது. இப்பப்போயி முழுகாம இருக்குது!"

"அடடா, அவங்களை உடனே ஒரு நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போங்க!"

"அப்ப சரிங்க, மிச்சத்தையும் அந்த நல்ல டாக்டர் கிட்டேயே கேட்டுக்கிறேன்!" இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.

"டாக்டர், இங்கே என்ன நடக்குது?" பவியின் முகத்தில் பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது. "ஒருத்தர் புருசன் வாயும் வயிறுமா இருக்கிறதா சொல்றாங்க. இன்னொருத்தர் பாட்டி முழுகாம இருக்கிறதா சொல்றாங்க!"

"உலகத்திலேயே அதிகமான வயசுலே பிள்ளை பெத்த பாட்டி நம்ம நாட்டுலே தான் இருக்காங்க தெரியுமா? அதுவும் ஒண்ணு இல்லே, ஒரே பிரசவத்துலே மூணு பிள்ளை பெத்தாங்க அந்தப் பாட்டி! ராஜோதேவின்னு பேரு; ராஜஸ்தானிலே இருக்காங்க!"

"எனக்குத் தலை சுத்துது டாக்டர்!"

"எத்தனை நாளா? சொல்லவேயில்லை..?"

"அட நீங்க வேறே, புதுசு புதுசா திடுக்கிடும் தகவலா சொல்றீங்களா, அதிர்ச்சியா இருக்குன்னு சொன்னேன்! அடுத்த கேள்விக்குப் போகலாமா?"

"ஓ.எஸ்!"

"டாக்டர்! நான் வத்தலக்குண்டுலேருந்து திரிபுரசுந்தரி பேசறேன்! எனக்கு மகப்பேறு பத்தி நிறைய சந்தேகம் இருக்கு டாக்டர்!"

"ஒவ்வொண்ணா கேளுங்கம்மா!"

"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"

"என்..என்னது? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு கேட்குறா மாதிரியிலே இருக்குது? ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தேகம்?"

"ஓஹோ! அடுத்த சந்தேகம் டாக்டர், ஒரு அறுபது வயசுப் பாட்டி ஒரே வருசத்துலே ரெண்டு குழந்தை பெத்துக்க முடியுமா?"

"என்னது?" டாக்டர் அதிர்ந்தார். "ஒரே பிரசவத்துலே ரெண்டு பொறக்கலாம். மத்தபடி....!"

"அடுத்த சந்தேகம் டாக்டர்! ஒரு வருசத்துலே ஒருத்தருக்கு 24 குழந்தைங்க பொறக்க வழியிருக்கா டாக்டர்?"

"பவி! டெலிபொனை கட் பண்ணுங்க," என்று கோபத்துடன் கூறினார் டாக்டர். "கேள்வி கேட்க என்ன ஆளு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க? ஒருத்தராவது உருப்படியா கேட்குறாங்களா?"

"ஐயோ, இவங்க நான் செட்-அப் பண்ணினவங்க இல்லை!" பவி அலறினாள். "அவங்களாயிருந்தா இதை விட கேவலமா கேட்டிருப்பாங்க!"

"திரும்ப மணியடிக்குது!" என்று டாக்டர் கால்களை சீட்டின் மீது வைத்துக் கொண்டு பின்வாங்கினார். "திரும்ப ஒரு வருசத்துலே இருபத்தி நாலு குழந்தை பெத்துக்க முடியுமா? ஒரே பிரசவத்துலே முப்பது குழந்தை பொறக்குமான்னு கேட்கப்போறாங்க!"

"இருங்க டாக்டர், என்னதான் கேட்குறாங்கன்னு பார்க்கலாமே? ஹலோ, சேட்டை டிவி பவி!"

"என்னங்க பொசுக்குன்னு கட் பண்ணிட்டீங்களே? ஒரு விபரம் தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டா, இப்படியா அலட்டிக்குவீங்க?"

"இதோ பாருங்கம்மா திரிபுரசுந்தரி, டாக்டர் கிட்டே பேசறதுக்காக நிறைய பேரு காத்திட்டிருப்பாங்க! இந்த விளையாட்டுக்கெல்லாம் இப்போ நேரமில்லை!"

"யாரும்மா விளையாடுறாங்க? நீங்க பேப்பரே படிக்கிறதேயில்லையா?"

"என்னது பேப்பர்லே...?"

"ராஜஸ்தான்லே 32 ஆம்பிளைங்களுக்குக் குழந்தை பொறந்திருக்குதாம்! டைம்ஸ் ஆஃப் இந்தியாவை வாசியுங்க தெரியும்!"

"என்னது?"

"ஆமாம்மா, அதுவும் ஒரே ஆம்பிளைக்கு நிறைய வாட்டி குழந்தை பொறந்திருக்குதாம்!"

"ஓ காட்!"

"இதுக்கே காட்-னா எப்படி? சொல்றேன் கேளுங்க, அதே ஆஸ்பத்திரியிலே ஒரு அறுபது வயசுப் பாட்டிக்கு ஒரே வருசத்துலே ரெண்டு பிரசவம் ஆகி, ரெண்டு குழந்தை பொறந்திருக்குதாம். அப்புறமா, சீதான்னு ஒரு ஒருத்தருக்கு ஒரே வருசத்துலே 24 குழந்தை பொறந்திருக்குதாம்! தெரியுமா?"

"டாக்டர், என்ன கண்றாவி இது?" பவி பதறினாள்.

"இன்னும் இருக்கும்மா கண்றாவி! அந்த ஆஸ்பத்திரி வார்டு சூபர்வைசருக்கே ஒரு வருசத்துலே 11 குழந்தை பொறந்திருக்குதாம். இதுக்கு என்ன சொல்றீங்க?"

"பவி, நான் கெளம்பறேன்!" டாக்டர் எழுந்து கொண்டார். "பொதுவா சேட்டை டிவிக்கு வந்திட்டுப் போனாலே, திரும்ப எம்.பி.பி.எஸ்-லேருந்து படிக்கணும் போலத்தோணும். இன்னிக்கு திரும்ப எல்.கே.ஜிலேருந்து படிக்கணும் போலிருக்கு! ஆளை விடு, நான் போறேன்!"

"யெம்மா திரிபுரசுந்தரி, டாக்டர் எஸ் ஆயிட்டாங்க," என்று இணைப்பைத் துண்டித்தாள் பவி. அடுத்த கணமே மீண்டும் மணியடித்தது. ’அட, நம்ம ஆளு இப்பத்தான் கேள்வி கேட்க போன் பண்ணுறாங்களா?’ என்று சலித்தபடியே பேசினாள் பவி.

"ஹலோ!"

"ஹலோ! சேட்டை டிவியா? நான் சோளிங்கநல்லூரிலேருந்து சொரிமுத்து பேசறேங்க டாக்டர்! ’ராணா’ எப்போ ரிலீஸ் ஆகும் டாக்டர்?"

"ராணாவா?" பவி பல்லைக்கடித்தாள். "சேட்டை டிவிக்காரங்களையெல்லாம் உள்ளே போட்டாத்தான் அதை ரிலீஸ் பண்ணுவாங்களாம்."

Friday, July 22, 2011

கேப்டனுக்கு ஜே!


"அப்பனே முருகா!" என்று கைகூப்பியபடி, சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த ’ராணி முத்து’ கேலண்டர் முருகனைப் பார்த்தபடியே கண்விழித்தார் கேப்டன்தாஸ்! (தே.மு.தி.க-வில் சேர்வதற்கு முன்னர் இயற்பெயர் மாசிலாமணி!). ஒவ்வொரு நாளும், கடவுள் படத்தையோ அல்லது ஏதாவது அழகான பொருளையே முதலில் பார்த்துவிட்டுத்தான் கண்விழிப்பார். இதனாலேயே அவர் தனது அறையில் முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அவரது மனைவியும் அறைக்கு காப்பி கொண்டு வருவதில்லை.

வழக்கப்படி எழுந்தவர், தினசரிக் காலண்டரில் தேதி கிழித்து விட்டு அன்றைய தினம், அவரது ராசிக்கென்று என்ன பலன் போட்டிருக்கிறது என்று பார்த்தார். "சோதனை"

"ஆஹா, இன்றைக்கு எந்த வில்லங்கத்திலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. யாரிடமும் கோபித்துக் கொள்ளக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும், " என்று மனதுக்குள் எண்ணியபடியே பாத்ரூமுக்குள் நுழைந்தவர், அடுத்த வினாடியே மனைவியை அழைத்தார்.

"பாமா, என்னோட டூத் பிரஷ், பேஸ்ட் எங்கே?"

"அதெல்லாம் இல்லீங்க!" மனைவியின் குரல் கேட்டது. "பாருங்க, நிறைய வேப்பங்குச்சி வச்சிருக்கேன். அதாலே பல்லை வெளக்கிட்டு வாங்க!"

"என்னது?" என்று குரலை உயர்த்தியவர் சட்டென்று நிதானத்துக்கு வந்தார். "பொறுமை! பொறுமை! இன்னிக்கு சோதனைன்னு போட்டிருக்கு! பேசாம இருக்கணும்!"

பல்லை விளக்கிவிட்டு, டைனிங் டேபிளுக்கு வந்தார் கேப்டன்தாஸ். "பாமா, காப்பி கொண்டா!"

"காப்பி இல்லீங்க! வெளக்கெண்ணை தானிருக்கு!"

’ரெண்டும் ஒண்ணுதானே!’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டவர், "வேண்டாம், நான் வெளியிலே போயி சாப்பிட்டுக்கறேன்! ஏய் டிரைவர்...!"

"டிரைவர் இன்னிக்கு லீவாம்! தோட்டக்காரன்தான் வண்டியோட்டுவாரு!"

"என்னது?" என்று வெகுண்டெழுந்த கேப்டன்தாஸ், "பொறுமை! பொறுமை!!" என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். "யாரும் வேண்டாம். நானே ஓட்டிக்கிட்டுப்போறேன்!"

காரை நெருங்கியபோது தோட்டக்காரன் ஓடிவந்தார். "சார் சார், வண்டி எடுக்கப்போறீங்களா? டாங்க் காலியாயிருச்சு சார்!"

"முருகா!" என்று பல்லைக் கடித்தார் கேப்டன்தாஸ். "எப்பவும் ஒரு கேன்-லே பெட்ரோல் வச்சிருக்கச் சொல்லியிருக்கேனே. அதை எடுத்திட்டு வா போ!"

"கேன்-லே பெட்ரோல் இல்லை சார்; பினாயில் தான் இருக்கு, பரவாயில்லையா?"

"நான் நடந்தே போறேன்," என்று கிளம்பினார் கேப்டன்தாஸ். ’சே! காலங்கார்த்தாலே மூடைக் கெடுக்கிறாங்க! கடை வேறே பத்து மணிக்குத்தான் திறக்கும்."

தெருவில் இறங்கியதும் பிள்ளையார் கோவில் குருக்கள் எதிரே வருவதைக் கண்டார்.

"வணக்கம் சாமி! இன்னிக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு சாமி! மனசே சரியில்லை," என்று காலைத்தொட்டு வணங்கினார். "ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி!"

"ஆசீர்வாதமெல்லாம் இல்லை," என்ற குருக்கள். "நீ நாசமாப் போக, மண்ணாப் போக, உருப்படாமப் போக!" என்று சாபமிட்டு விட்டுக் கிளம்பினார்.

கேப்டன்தாஸ் நொந்து நூலாகி விட்டார். தெருமுனை டீக்கடைக்குப் போய் அமர்ந்தார்.

"தம்பி, சூடா ஒரு காப்பி போடுப்பா!"

"ஜில்லுன்னு டீ தான் இருக்கு!" என்று சட்டென்று பதில் வந்தது.

"என்னாய்யா நடக்குது இங்கே? போற இடமெல்லாம் எடக்குமடக்காவே பதில் சொல்றீங்க! நான் யாரு தெரியுமா? எங்க தலைவரு கேப்டன்கிட்டே சொல்லி என்ன பண்ணுறேன்னு பாருங்க!" என்று இரைந்தார் கேப்டன்தாஸ்.

"சும்மாயிருங்க சார்! உங்க கேப்டன் மட்டும் என்ன ஒழுங்கா? சமச்சீர் கல்வியைப் பத்தி அவரு என்ன சொல்லியிருக்காருன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே?"

"அப்படியென்னையா சொல்லிட்டாரு?"

"குதிரை கிடைக்கலேன்னா கழுதைன்னு சொன்னாரா இல்லையா?" அதைக் கேட்டுக்கிட்டு நாங்களே சும்மாயிருக்கோம். காப்பியில்லே, டீ தான் இருக்குன்னு சொன்னா உங்களுக்கு மட்டும் பொத்துக்கிட்டு வருதாக்கும்?"

கேப்டன்தாஸ் வாயடைத்து நின்றார்.

Tuesday, July 19, 2011

தலைக்கு வந்தது

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Sunday, July 17, 2011

முன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

முன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அந்த மூன்றெழுத்துக்கள் எவையெவை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், அது ’மொ-க்-கை’ என்று முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது அல்லவா? இப்படியொரு திடீர் ஒப்புதல் வாக்குமூலத்தைச் சொல்லவேண்டி வந்ததற்கு என்ன காரணம்?

சகோதரி புதுகைத்தென்றல் "முத்தான மூன்று" என்ற பெயரில் ஒரு தொடர்பதிவு எழுதி என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து அதைத் தொடரச் சொல்லி அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவருக்கு முதற்கண் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (அண்மைக்காலமாக, ஆளில்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கிற எனக்கு என்ன கசக்கவா போகிறது?)

ஒரு சிக்கல்! எண் மூன்றைக் குறித்து ஒரு முன்னுரை மாதிரி எழுதலாம் என்றால், மூன்றுடன் சம்பந்தப்பட்ட எல்லாத்தகவல்களையும், இதற்கு முன்பு எழுதிய புண்ணியவான்கள் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். புதிதாய்ச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றாலும், சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா?

மூன்று! இந்த எண்ணுக்கு ஒரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால், இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்! (நல்ல வேளை, ராமானுஜம் உயிரோடு இல்லை!)

1. விரும்பும் 3 விஷயங்கள்

1. கையில் செய்தித்தாளுடன் ஜன்னலோர இருக்கையில் இரயில் பயணம்
2. இளையராஜாவின் இசை
3. சின்னக்குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்வது.

2.விரும்பாத 3 விஷயங்கள்

1. சென்னையில் ஆட்டோ பயணம்
2. சாமியார்கள், ஜோசியம், வாஸ்து இத்யாதிகள்....
3. வாகனம்/பேனா இரவல் கொடுப்பது

3.பயப்படும் 3 விஷயங்கள்

1. அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகளுடன் சினேகம்
2. பான்பராக் போடுபவர்கள் பக்கத்தில் அமர்வது.
3. எஸ்கலேட்டரில் ஏறுவது / இறங்குவது*
(*இது குறித்து ஒரு இடுகை எழுத உத்தேசம்)

4.புரியாத 3 விஷயங்கள்

1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்
2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது
3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது

5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

1. காலாவதியாகிவிட்ட கணினி
2. அன்னை காளிகாம்பாள் படம்
3. ஆசைப்பட்டு வாங்கி தூசடைந்த ஒரு டைரி

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

1. நாகேஷ் நகைச்சுவை
2. சில அரசியல்வாதிகளின் அறிக்கைகள்
3. டைம்ஸ் நௌ-வில் அருணாப் கோஸ்வாமியின் கூச்சல்

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

1. ஜெயமோகனின் ’ரப்பர்’ வாசிப்பு
2. அடுத்து என்ன மொக்கை போட? -யோசனை
3. கூகிள் ப்ளஸ் புண்ணியத்தில் நிரம்பியிருக்கிற மின்னஞ்சல் பெட்டியைக் காலி செய்தல் (சும்மா இருக்கவே முடியாதா இவங்களாலே?)

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்

1. ஒரு சொந்தவீடு
2. ஸ்ரேயாவைப் பற்றி எழுதாமல் இருப்பது.
3. புகைபிடிப்பதை நிறுத்துவது.

9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்

1. இம்மென்றால் இடுகை; ஏன் என்றால் ஏகடியம்
2. எளிதில் நட்புகொள்வது.
3. நம்பி ’பல்பு’ வாங்குவது

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

1. போட்டோஷாப் / கோரல் ட்ரா
2. தெலுங்கு & குஜராத்தி
3. அவமானங்களைச் சகித்துக் கொள்ளுதல்

11.பிடித்த 3 உணவு விஷயங்கள்

1. மெரீனாவில் மிளகாய் பஜ்ஜி / சுக்குக்காப்பி
2. ரத்னா கபே இட்லி சாம்பார்
3. அதிகாலை டிகிரி காப்பி

12.கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

1. பந்தாவுக்காகப் பேசுகிற ஆங்கிலம்
2. கலைஞர் டிவியில் வரும் "தமிழர்களே...தமிழர்களே..!"
3. தனியார் வங்கிகள் கைபேசியில் அழைத்துப் பண்ணுகிற அலப்பறை (லோன் வேணுமா?)

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

1. பூமாலை வாங்கிவந்தான் பூக்கள் இல்லையே
2. சின்னச் சின்ன ரோஜாப்பூவே
3. பூவில் வண்டுகூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

14.பிடித்த 3 படங்கள்:

1. மூன்றாம் பிறை
2. மூன்றுமுகம்
3. த்ரீ இடியட்ஸ்
(எப்படி? "மூன்று" வந்திருச்சா?)

15.இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

1. என்னைப் புரிந்து கொண்டவர்களின் அன்பு
2. பிள்ளைப்பிராயத்து ஞாபகங்கள்
3. (இனிமேல்) சில மருந்து/மாத்திரைகள்

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:

1. அட்ரா சக்க - சி.பி.எஸ்

2. "ஸ்டார்ட் மியூசிக்-பன்னிக்குட்டி ராம்சாமி"

3. "பாகீரதி"-எல்.கே

சி.பி.எஸ்ஸும் எல்.கேயும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். பானா ராவன்னாவிடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான அனுமதி வராவிட்டாலும், உரிமையோடு அழைத்திருக்கிறேன்.

மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, July 15, 2011

இருளும் ஒளியும்

அறைக்குள் பவித்ரா நுழைந்தவுடன், தலைமை ஆசிரியையின் முகத்திலிருந்த கடுமை அவளை சுரீரென்று தாக்கியது.

“ப்ளீஸ் ஸிட் டவுண்! என்று சொல்லியவர், பவித்ரா உட்காருமுன்னரே தனது முதல் கேள்வியைத் தொடுத்தார். “என்ன, அஜிதாவைக் கூட்டிட்டுப்போக வந்திருக்கீங்களா? இன்னிக்கு யாரு சீரியஸா இருக்காங்க?

“மேடம்!

“இங்கே பாருங்கம்மா, குழந்தைகள் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்கொடுக்க வேண்டியவங்க நீங்க! ஆனா, ஒவ்வொரு தடவையும் நீங்களே புதுசு புதுசாப் பொய்சொல்லி, உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போயிடிருக்கீங்க! ஆஸ்பத்திரின்னு சொல்லிட்டு ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போறீங்க! போன வருஷம் வரைக்கும் கிளாஸ்லே முதல் அஞ்சு ரேங்குக்குள்ளே வந்திட்டிருந்த பொண்ணு இப்போ இருபத்தி ரெண்டுக்குப் போயாச்சு! அடிக்கடி லீவு! போதாக்குறைக்குப் பர்மிஷன் வேறே! ஆனா, மியூசிக் கிளாசுக்கும், டான்ஸ் அகாடமிக்கும் தவறாம அனுப்பறீங்க! எங்க ஸ்கூலுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது! இன்னிக்குக் கூட்டிட்டுப் போங்க! ஆனா, இன்னொருவாட்டி இந்த மாதிரி ஆப்ளிகேஷனோட வந்து நிக்காதீங்க!

“மேடம் ப்ளீஸ்! அஜிதாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க! அதான்......!பவித்ராவை மேற்கொண்டு பேசவிடாமல் தலைமை ஆசிரியை இடைமறித்தார்.

“எதிர்காலமா? என்ன அது? நீங்க குதிரையை வண்டிக்குப் பின்னாடி கட்டிட்டிருக்கீங்கன்னு தோணுது! அவ டிவியிலே பாடி ஜெயிச்சபோது சந்தோஷமாத்தான் இருந்திச்சு! அசம்பிளியிலே அவளை மேடையேத்தி நானே பாராட்டினேன். ஆனா, ஒரு பத்து வயசுப்பொண்ணு தலையிலே எவ்வளவு சுமையை ஏத்துவீங்க? சரி, உங்க குழந்தை; என்னமோ பண்ணுங்கன்னு விட்டா, தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கீங்க! ஹௌ அடாஷியஸ், எங்க ஸ்கூல் சுவத்திலேயே போஸ்டர் ஒட்டியிருக்கீங்க!

“சாரி மேடம்! தெரியாம....!

“தெரியாமலா போஸ்டர் அடிச்சீங்க? உங்களாலே மத்த பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்திருச்சு! அஜிதாவுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்டான்னு பேரன்ட்ஸ் சண்டைக்கு வர்றாங்க! எங்க ஸ்கூலிலே எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸுக்கு நிறைய செய்யறோம். அதுக்காக, படிக்கற பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பாம, சோப்பு விளம்பரத்துலேயும் கோவில் திருவிழாவுலேயும் ஆட வைக்கிறீங்களே? சின்ன வயசுலே அவ எதையெதை இழந்திட்டிருக்கான்னு கூடவா தெரியலே?

“மேடம், இந்த ஒருவாட்டி....!

“அதான் கூட்டிட்டுப்போங்கன்னு சொல்லிட்டேனே. கோ அஹெட்!என்று கடுமையாகக் கூறிய தலைமை ஆசிரியை, பவித்ராவைப் பார்க்க விரும்பாதவர் போல, மேஜை மீதிருந்த எதோ ஒரு ரிஜிஸ்தரை, குறிக்கோளின்றிப்புரட்டவும், தலைகுனிந்தபடி வெளியேறினாள் பவித்ரா.

அஜிதா வகுப்பிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தபோது, செல்போன் சிணுங்கியது.

“ஹலோ! சார்..ஸ்கூலிலே தானிருக்கேன் சார்! கிளம்பிட்டேயிருக்கோம்!

“சீக்கிரம் வாங்கம்மா! டைரக்டர் அவுட்-டோருக்காகப் பொள்ளாச்சிக்குக் கெளம்பிட்டிருக்காரு!

“அரைமணியிலே இருப்போம் சார்! ப்ளீஸ்!

பதட்டத்தில் நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்த பவித்ரா, மகள் அஜிதா வருவதைப் பார்த்ததும் எழுந்து அவளை நோக்கி ஓடினாள்.

“சனியனே, அங்கே டைரக்டர் காத்திட்டிருக்காரு! நீ பாட்டுக்கு அழகர் ஆத்துலே இறங்குறா மாதிரி ஆடி அசைஞ்சு வந்திட்டிருக்கியே! வந்து தொலை!

பவித்ரா அஜிதாவை இழுத்துக் கொண்டு ஏறக்குறைய ஓடுவதை ஜன்னல்வழியாகப் பார்த்த தலைமை ஆசிரியை பெருமூச்சு விட்டாள்.

“கந்தசாமிண்ணா, வண்டியைக் கோடம்பாக்கம் யுனைட்டட் இந்தியா காலனிக்கு விடுங்க,என்று கூறியவாறே, அஜிதாவையையும் அவளது புத்தகப்பையையும் காருக்குள் தள்ளியபடியே ஏறினாள் பவித்ரா.

அடியே, யூனிபார்மோட போனா சரியா வராது. கலர் டிரஸ் கொண்டுவந்திருக்கேன். மாத்திக்கோ! மகளின் காதில் கிசுகிசுத்தாள் பவித்ரா.

“வண்டிலேயா? டிரைவர் அங்கிள் இருக்காரே..?

“குனிஞ்சு மாத்திக்கடி! அவரு ரோட்டைப் பார்த்துத்தானே ஓட்டிட்டிருக்காரு? நீ சின்னப்பொண்ணுதானே?

கார் நின்றதும், பவித்ரா மீண்டும் மகளை இழுத்துக் கொண்டு ஓடினாள். இருட்டும் அழுக்கும் பரவியிருந்த ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் மாடிப்படிகள் தடதடக்க, தாயும் மகளும் விரைந்தனர். அழைப்பு மணியை அழுத்தியதும், கதவு திறந்து, சிகரெட் வாசனை வரவேற்றது.

“என்ன இம்புட்டு லேட்டா வர்றீங்க? டைரக்டர் கெளம்பிட்டாரு!என்று சொன்னபடி உள்ளே திரும்பிச் சென்ற ராஜன் என்ற உதவி இயக்குனரின் பின்னால், பவித்ரா பதைபதைப்புடன் சென்றாள்.

“அதை ஏன் கேட்கறீங்க ராஜன் சார்? ஸ்கூலிலேருந்து கூட்டிட்டு வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிருச்சு! லயோலா காலேஜ் பக்கத்துலே ஹெவி டிராபிக் ஜாம் வேறே!

“சரி சரி உட்காருங்க,என்று கூறிய ராஜன், அஜிதாவை தலைமுதல் கால்வரை நோக்கினான். “ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்குதேம்மா! நிறைய வசனம் பேசணுமே?

அவ ஸ்கூலிலே ஜான்சி ராணியா நடிச்சிருக்கா சார்! நல்லா வசனம் பேசுவா! இதோ பாருங்க சார், அவளோட போர்ட்-போலியோ!

பவித்ரா கொடுத்த ஆல்பத்தைப் புரட்டினார் ராஜன். “யாரும்மா படம் எடுத்தது, கீரீன் ஹார்ஸ் சுரேஷ் நாயரா?

“ஆமா சார்!

“படத்தோட குவாலிட்டியே சொல்லுதே! என்ன ஒரு முப்பதினாயிரம் வாங்கியிருப்பாரே?

“ஏறக்குறைய அம்பதாயிருச்சு சார்!

“ஓ!ராஜனின் அந்த ஒரு “ஓவுக்குள் புதைந்திருந்த பொருளை பவித்ரா புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.

“சரிங்க, டைரக்டர் திரும்பி வந்ததும் தகவல் சொல்றேன். வந்து பாருங்க! கண்டிப்பா பாப்பாவைத் தான் செலக்ட் பண்ணுவாருன்னு தோணுது!ராஜன் புன்னகையுடன் கூறவும், பவித்ராவின் முகம் மலர்ந்தது.

“தேங்க்யூ சார்! ஷூட்டிங் எப்போ சார் ஆரம்பிப்பாங்க? ஏன் கேட்கிறேன்னா அடுத்த மாசம் அவளுக்கு மிட்-டெர்ம் பரீட்சை ஆரம்பிச்சிருவாங்க!

“ஒரு நல்ல ஆபீஸ் தேடிட்டிருக்கோம்! சாலிக்கிராமத்துலே ஒரு ஆபீஸ் பார்த்திட்டோம். டெபாசிட்டுக்கு ஒரு முப்பதாயிரம் குறையது. அதான் இழுத்தடிச்சிட்டிருக்கு! புரொட்யூசர் வேறே ஊருலே இல்லை!

“முப்பதாயிரமா? செக் தரலாமா சார்?

“அட நீங்க எதுக்கும்மா பணம் தரணும்?

“பரவாயில்லை சார்! புரொட்யூசர் பணம் தந்ததும் திருப்பிக் கொடுத்திருங்க! யாரு பேருலே செக் எழுதட்டும்?

“ம்ம்ம், பேசாம பேரர் செக்கா கொடுத்திருங்கம்மா!

பவித்ராவிடமிருந்து செக்கை வாங்கிக்கொண்ட ராஜன், “கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா, டைரக்டரையும் பார்த்திருக்கலாம். பாவம் இதுக்குன்னு இன்னொரு வாட்டி வரணும் நீங்க!என்றார்.

“அதுக்கென்ன சார், சனி, ஞாயிறுன்னா பிரச்சினையில்லை. இல்லாட்டிப்போனா, ஸ்கூலிலே கெஞ்சிக்கூத்தாடி பர்மிஷன் வாங்க வேண்டியதுதான்!

“உங்க ஹஸ்பண்ட் என்ன பண்ணுறாரு?

“அவருக்கு இந்த கலையார்வமெல்லாம் கிடையாதுங்க! ரொம்ப கன்சர்வேட்டிவ்! அப்போ நாங்க கிளம்பறோம் ராஜன் சார்!

பவித்ராவும் அஜிதாவும் வெளியேற முற்பட்டபோது, அந்த அறைக்குள் இன்னொரு ஆசாமி நுழைந்தார். அவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருந்துவிட்டு, ராஜனிடம் கேட்டார்.

“யாருய்யா இவங்க?

“அதாண்ணே, நம்ம படத்துலே ஒரு குழந்தை கேரக்டர் வருதில்லே, அதுக்கு சான்ஸ் கேட்டு வந்திட்டுப் போறாங்க!

“என்ன வயசு?

“ஒன்பதோ பத்தோ இருக்கும்!

“யோவ் லூசு, யாருய்யா குழந்தையோட வயசைக் கேட்டாங்க?

அந்தக் கேள்வியைத் தொடர்ந்து அந்த அறையில் வெடித்த குபீர்ச்சிரிப்பை பவித்ரா கேட்டிருக்க வாய்ப்பில்லை.

Wednesday, July 13, 2011

இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்!
அண்மைக்காலத்தில் நம்மை மிகவும் பாதித்த ஒரு கொடூரம் - சிறுவன் தில்ஷனை ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுட்டுக் கொன்றதாகத் தானிருக்கும் என்று நம்புகிறேன். ஒரு பதிமூன்று வயதுச் சிறுவனின் மண்டையில் ஒருபக்கமாய் நுழைந்த குண்டு மறுபக்கமாய் வெளிவந்து சுவற்றிலும் ஒரு தடயச்சின்னம் ஏற்படுத்தியிருப்பதாகப் படித்தபோது, இயல்பாகவே ஆத்திரம் பொத்துக் கொண்டுவந்தது. முழுமையாகத் துப்புத் துலங்கி, சுட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டபிறகும், புதிய புதிய கேள்விகள் எழும்புகின்றன. மிக முக்கியமாக, ஒரு ராணுவ ஆயுதக் கிடங்கில் பணியாற்றிய அதிகாரி, ராணுவத்துக்குத் தெரியாமல் ஒரு அதிநவீன துப்பாக்கியை, ராணுவக் குடியிருப்பிலேயே வைத்திருக்க முடிகிறதே! இவர்களின் லட்சணம் இவ்வளவுதானா?

’என் மகனைச் சுட்டவனை அதே மாதிரி சுட வேண்டும்,’ என்று தில்ஷனின் தாயார் சொன்னதை வாசித்தபோது, திடுக்கிடவில்லை. பெற்ற வயிறு! அந்தத் தீ சுடத்தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கைது செய்யப்பட்ட அந்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். பதிமூன்று வயது சாகிற வயதில்லை; குற்றவாளி செய்தது எவ்வித பச்சாதாபத்துக்கும் உகந்ததுமில்லை.

அடுத்து....

இன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கோவையில் ஒருவரை பட்டப்பகலில், போக்குவரத்து நிறுத்தத்தில் நான்கு பேர் அடித்துக் கொன்றதையும், அதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றதையும் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். காவல்துறையின் கண்காணிப்புக் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியே, காவல்துறைக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறது. கொன்றவர்களின் குரூரத்தைப் பார்க்கையில் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அதை விடவும், பச்சை விளக்குக்காகக் காத்திருப்பவர்கள், ஏதோ படப்பிடிப்பைப் பார்ப்பவர்கள் போல, செயலற்றுப்போய் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நான்கு கொலையாளிகளும், கைது செய்யப்பட்டிருப்பது சற்றே ஆறுதலாய் இருக்கிறது.

ஆனால், இத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகளை வாசித்தபோது சற்றே ஆயாசமாக இருந்தது. முதலாவது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் பிணத்தை வாங்க மறுத்து, மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியது. இரண்டாவது, சந்தோஷ்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஐந்து லட்சம் நஷ்ட ஈடும் தர வேண்டும் என்று அவரது உறவினர்கள் போராட்டம் செய்தது.

சந்தோஷ்குமாருக்கு வயது 29 தான். இப்படி நடுத்தெருவில் நான்குபேர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கொடுமைதான்; அவரது குடும்பத்துக்குப் பெரும் இழப்புதான். அந்த நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாதுதான். ஆனால், நஷ்ட ஈடு? அரசு வேலை...??

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஆட்சி மலர்ந்தபிறகு, இது போல எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன? ஆனால், இந்தக் கொலையைப் பற்றி ஊடகங்கள் பெரிதுபடுத்துவதற்கு முக்கியமான காரணம், இது அவர்களுக்கு மிகவும் வசதியாக, காணொளியாக மீண்டும் மீண்டும் காண்பிக்கத்தக்கதாகக் கிடைத்திருப்பதுதான். பீஹாரில் நடுத்தெருவில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டபோது, இவர்கள் அவளைக் காப்பாற்றாமல் படமெடுத்துச் செய்தியாகப் போட்டதை மறக்க முடியுமா?

இந்த நாசமாய்ப் போன டாஸ்மாக் கடைகள் சந்துபொந்தெல்லாம் வந்துவிட்ட பிறகு, குடிபோதையில் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை! அந்த வகையில் பார்த்தால், கொலையுண்ட சந்தோஷ் ஒருவிதத்தில் குற்றவாளியே!

பொதுமக்கள் நினைத்திருந்தால் அவர் இறந்தததை தடுத்திருக்கலாம் என்பது உண்மைதான்! பொதுமக்கள் நினைத்தால், அதை மட்டும்தானா தடுத்திருக்க முடியும்?

சந்தோஷின் படுகொலை, டாஸ்மாக் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிற சீரழிவின் ஒரு அப்பட்டமான அளவுகோல். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தான் தெரிவிக்க முடியுமே தவிர, அரசு வேலை, நஷ்ட ஈடு என்று மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடக் கூடாது.

ஒரு சாலைவிபத்தில் கூட, மதுபோதையில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். குடித்துச் செத்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலைக்கு தமிழகத்தைக் கொண்டு செல்ல யாரும் அனுமதிக்கக் கூடாது.

சந்தோஷின் குடும்பத்தினர் அனுதாபத்துக்குரியவர்கள்; அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியவை.

Sunday, July 10, 2011

டெல்லி பெல்லி - சிக்கன் சில்லி


அம்பா ஸ்கை-வாக் மாலுக்கு இன்று காலைதான் முதன்முதலாய் போக முடிந்தது.

கசகசவென்று கூட்டமிருந்தாலும், ரசிக்கத் தக்கதாய், சுவாரசியமாய் இருந்தது. மெக்டொனால்டில் கண்களில் காதலும், வாயில் பர்கருமாய் கசிந்துருகிய காதல் ஜோடிகள்! லேண்ட்-மார்க்கில் ஒரு ரவுண்ட் வந்து ஜெயமோகனின் ’ரப்பர்’ வாங்கினேன். (வாங்கிட்டாலும்...!). எல்லா மால்களிலும் எல்லாத் துணிக்கடைகளிலும் கூட்டம் கூட்டமாய்த் துணிகளை வாரியெடுத்துக்கொண்டு போகின்றனர். செல்போனுடன் பிறந்த சென்னைவாசிகள் விதிவிலக்கின்றி எல்லா இடத்திலும் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தனர். கண்ணில் தென்பட்ட எல்லாக் குழந்தைகளின் முகத்திலும் பிரமிப்பும், எதிர்பார்ப்பும் வழிந்தோடிக்கொண்டிருக்க, பெற்றோர்கள் வாயுத்தொந்தரவு வந்தவர்கள் போல புருவஞ்சுருக்கியபடி தத்தம் குழந்தைகளை இழுத்துக்கொண்டு போயினர். பொதுவாக, மால்களில் தமிழில் பேசுவது இழுக்கு என்று சென்னையில் ஒரு புதிய விதி உருவாகியிருப்பதை இங்கும் காண முடிந்தது. டி-ஷர்டுகளில் அபத்தமான வாசகங்களுடன் கோதுமைபட்சிணிகள் பிதாஜியின் காசுகளை விரயமாக்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. ரங்கநாதன் தெருவைப் போலவே, இங்கும் எவள்மீதாவது உராய்ந்து ஜன்மசாபல்யம் பெறுவதற்காக, பல விடலைகள் சுற்றிக்கொண்டிருந்தனர். இந்த மால்களில் எதை வைத்தாலும் மாய்ந்து மாய்ந்து வாங்கிக்கொண்டு போகிற மர்மம் இன்னும் துலங்கவில்லை. இன்னும் சென்னையில் மூன்று மால்கள் வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையின் பணப்புழக்கம் மும்பை, தில்லியை மிஞ்சிவிட்டதாகப் படித்தபோது நம்ப முடியவில்லை; பார்த்தால் நிஜமாயிருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

வந்த நோக்கமென்னவோ சினிமா பார்க்கத்தான்! அதிகம் யோசிக்காமல் ’டெல்லி-பெல்லி’க்கு டிக்கெட் வாங்கி பிவி.ஆருக்குள் நுழைந்தேன். (தியேட்டரும் நல்லாத்தானிருக்கு!). இனி, டெல்லி-பெல்லி விமர்சனம்!

கொஞ்ச காலமாகவே எனக்கு ஆமீர்கான் என்றால் ரொம்பப் பிடித்திருக்கிறது. இயக்குனராக அவர் வெற்றிக்கொடி நாட்டிய ’தாரே ஜமீன் பர்,’ ஆமீர் மாறுபட்டுச் சிந்திக்கிறவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியது. அவரது தயாரிப்பில் வெளிவந்த ’பீப்ளி-லைவ்’ படம், அவர் வர்த்தக கட்டாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியது. இவ்விரண்டு படங்களும் வெவ்வேறு தளங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைப் பார்த்தபோது முழுமையாய் லயித்ததை மறுக்க முடியாது. அதன்பிறகு அவர் தயாரிப்பில் வந்த ’டோபி-காட்’ படம் சற்றே ஆமைவேகமாய், சற்றே சலிப்பாய் இருந்தது உண்மைதான் என்றாலும், அந்தக் கதாபாத்திரங்கள் நிஜம்போல, நேற்றுப்பார்த்தவர்கள் போலிருந்ததும் உண்மை. ஆகவே, ஆமீர்கானின் தயாரிப்பில் வெளிவந்திருக்கிற ’டெல்லி பெல்லி,’ படத்தைப் பார்க்கப்போனபோது, ஒரு பெரிய பாப்கார்ன் பொட்டலம் போன்ற எதிர்பார்ப்புகளுடன்தான் போயிருந்தேன்.

கொஞ்சம் ஆபாசம்; கொஞ்சம் நகைச்சுவை கலந்த ஒரு முழுநீளப் பொழுதுபோக்குப்படம் என்று சுருக்கமாகச் சொல்லத்தக்க படம். இப்படத்தின் ’பாக் பாக் டி.கே.போஸ்,’ என்ற பாடல் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருப்பதும், இது போன்று இரட்டை அர்த்தமுள்ள பாடல்களில் தான் ஒருபோதும் நடித்திருக்கவே மாட்டேன் அன்று அமிதாப் பச்சன் கூறியிருப்பதும் கொசுறுத்தகவல்கள். எதற்கும் குடும்பஸ்தர்கள் இப்படத்தைத் தனியாகப் பார்ப்பது உசிதம் என்று எச்சரித்துத் தொலைத்து விடுகிறேன். (எப்படியெல்லாம் பாசாங்கு பண்ண வேண்டியிருக்குதுப்பா!)

சங்கரின் ’பாய்ஸ்’ படத்தின் ஆரம்பக்காட்சிகளை இப்படத்தின் முதல் சில நிமிடங்களில் ஏனோ நினைவுகூர நேர்ந்தது. சாதாரணமாக ’சீச்சீ!’ என்று பெரும்பாலானோர் அங்கலாய்க்கிற மாதிரி பல சங்கதிகளை சர்வசாதாரணமாகக் காண்பித்திருக்கிறார்கள். நான்கெழுத்து ஆங்கிலக் கெட்டவார்த்தை தண்ணிபட்ட பாடாய் இருக்கிறது. (’மன்மதன் அம்பு’ பார்த்தவர்களுக்கு அது என்ன என்று சொல்ல அவசியமில்லை!). இருந்தாலும், நாயகன் இம்ரான் கானின் துடிப்பான நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை, ஏகமாய்த் தூவியிருக்கிற நகைச்சுவை எல்லாமாகச் சேர்ந்து ’டெல்லி பெல்லி’யையும் ஒரு சராசரி படத்தைக் காட்டிலும் சற்றே உயர்த்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

விளாடிமிர் என்ற ஒரு வைரக்கடத்தல் பேர்வழி, சோனியா என்ற ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு பாக்கெட்டைக் கொடுத்து அதை யாரிடமோ சேர்க்கச் சொல்கிற காட்சியோடு படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏறக்குறைய 100 நிமிடங்கள் அந்தப் பாக்கெட் இடம் மாறுவதால் ஏற்படுகிற சிக்கல்களையும், துரத்தல்களையும், அடிதடிகளையும், நிறைய நகைச்சுவை தாளித்துச் சொல்லியிருக்கிறார்கள். (நகைச்சுவை என்ற பெயரில் நிறையவே பலர் முகம் சுளிக்கிற விஷயங்களைச் சேர்த்து). சரி, கதைக்கு வருவோம்! விளாடிமிரிடமிருந்து பாக்கெட்டை வாங்கிய சோனியா, காதலன் தஷியின் இருப்பிடத்துக்கு வருகிறாள்.

நம்ம திர்லக்கேணி மாதிரி பழைய தில்லியில் ஒண்டுக்குடித்தனத்தில் பத்திரிகை நிருபரான தஷி, தனது இரண்டு நண்பர்களுடன் வசித்து வருகிறான். சோனியா பேக்கு மாதிரி பாக்கெட்டை உரிய இடத்தில் ஒப்படைக்கும் பொறுப்பை காதலனிடம் கொடுத்து விட்டு 'எஸ்' ஆகிறாள். இங்கிருந்து கைமாற்றம் சங்கிலித்தொடராகிறது.

தஷியின் இரு நண்பர்களில் நிதின் போட்டோகிராபர் என்ற பெயரில் பிளாக்-மெயில் செய்கிற பேர்வழி; இன்னொருவன் அருப் ஒரு கார்ட்டூனிஸ்ட்! சோனியா கொடுத்த பாக்கெட்டை, தஷி நிதினிடம் கொடுக்க, அதைக் கொடுக்கப் போகிற வழியில், தெருவோரக்கடையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட நிதினின் வயிற்றில் ஜப்பானில் ஏற்பட்டது போலவே பெருத்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிதின் அந்தப் பாக்கெட்டை ஒப்படைக்கும் பொறுப்பை, அருப்பிடம் ஒப்படைக்க, வைரங்கள் அடங்கிய பாக்கெட் ஒரு இரத்தப்பரிசோதனை நிலையத்துக்கும், கடத்தல் கும்பலின் கையில் பரிசோதனைக்காக நிதின் எடுத்து வைத்திருந்த அவனது மலமும் இடம் மாறிச்சென்று சேர்கிறது. விடுவாரா வில்லன்? அடிதடி, கடத்தல், மாறுவேஷம் என்று சர்வசாதாரணமாக 80-க்களில் வந்த பல சண்டைப்படங்களின் அனைத்து மசாலாக்களையும் கலந்துகொட்டி, நகைச்சுவையால் சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

ஆக, கதை என்று பிரமாதமாய் ஒன்றுமில்லை. துப்பட்டாவெல்லாம் சிந்தியபடி ஐஸ்-க்ரீம் விழுங்கிய அந்த வட இந்தியப் பெண் ’யே தோ Hangover நாம் கி பிக்சர் ஸே பனாயி கயீ ஹை,’ என்று வாஸ்கோடகாமி போல தன் சஹேலியிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். இதை மட்டும் தமிழில் எடுத்து, வசனம் எழுதுகிற பொறுப்பை கிரேஸி மோகனிடம் கொடுத்தால், பார்த்தபிறகு இரண்டு நாட்கள் சிரித்துக் கொண்டிருப்போம் என்று தோன்றுகிறது.

கைமாறும் ஒரு போதை மருந்துப் பாக்கெட்டால் ஏற்படுகிற குளறுபடிகளை வைத்துக் கொண்டு, கண்ணாமூச்சி விளையாடி இறுதியில் நல்லவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்பது போல முடியும் வாடிக்கையான கதைதான்! இதை பெரும்பாலும் பரிச்சயமில்லாத நடிக,நடிகையரை வைத்து, ஏறக்குறைய புத்திசாலித்தனத்தோடு சிரிக்க வைத்துச் சொல்லியிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட, (குறிப்பாக போதைக்கும்பலின் தலைவனும், கையாட்களும்) சட்டென்று மனதில் நிற்கிறார்கள்.

வசனங்கள் கொஞ்சம் டூ-மச் தான்! (என்னை மாதிரி தனியாய்ப் போய் ரசித்து விட்டு, வெளியே வந்து ’அபச்சாரம், அபச்சாரம்,’ என்று கூப்பாடு போட நல்ல வாய்ப்பு!). அதே மாதிரி ஆமீர்கானின் கௌரவத்தோற்றம் கொஞ்சம் திகட்டுமளவுக்கு இழுத்தடிக்கப்பட்டு விட்டது என்றே பட்டது. பாடல்கள் பிரபலமாகி விட்டன என்றே தோன்றுகிறது. பி.வி.ஆரில் நிறைய பேர் கூடவே பாடுவதைக் கேட்க முடிந்தது. இம்ரான்கான் திரையில் தோன்றியதும், இளம்பெண்கள் எழுப்பிய உற்சாகக்குரலைக் கேட்க, காதுகள் கோடி வேண்டும். அதே சமயம், தில்லியில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற இந்திக் கெட்ட வார்த்தையை, இத்தனை முறை, இவ்வளவு அப்பட்டமாய், இதற்கு முன்னர் எந்தப் படத்திலும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

படத்தில் பல நெருடல்கள்; சில....

திருமணம் நிச்சயமாகி, சீதனமாக ஒரு காரும் கிடைத்திருக்க, திடுதிப்பென்று தஷி, காதலியை கிடப்பில் போட்டுவிட்டு, சக நிருபர் (நிருபி?) மேனகாவை முத்தமிடுவது புரியவில்லை. அதுவும், காதலி சோனியா வில்லன்களிடம் மாட்டியிருக்கிற சிக்கலான தருணத்தில்! அதே போல, புர்கா அணிந்து கொண்டு, நகைக்கடைக்குச் சென்று வைரங்களை அபகரிக்கிற காட்சி காதில் ஒரு பூந்தோட்டத்தையே வைப்பது போலிருக்கிறது. ஆனால், இவை குறித்தெல்லாம் யோசிக்க விடாமல், அடிக்கடி வசனங்களாலும், காட்சியமைப்புகளாலும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

கொஞ்ச வசனமே இந்தியிலும், பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்திலும் இருப்பது படு சௌகரியமாய் இருக்கிறது. அதிலும், அந்தச் சிறிய காரைப் பார்த்து, "If a donkey $#*s a rickshaw, this is what you get," என்று பொரிகிறபோது, பி.வி.ஆர்.அதிர்ந்தது. ஆங்கில மொழிப்படம் என்பதாலோ என்னமோ, பொதுவாக இந்தியப் படங்களில் பார்க்க முடியாத சில சங்கதிகளும் (கொஞ்சமாய்), கேட்க முடியாத சில சொற்றொடர்களும் வசதியாய் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாய், ஒரு காட்சியில் மேனகாவை ஒரு பெண்மணி, "லெஸ்போ" என்று இன்னொருத்தியிடம் போட்டுக் கொடுப்பதும், இன்னொரு காட்சியில் மேனகாவின் கணவனே மனைவியைப் பார்த்து அந்த வார்த்தையைச் சொல்வதும்...! ம், புரட்சி தான்!

ஆனால், மேனகாவின் கணவனிடமிருந்து தப்பிக்க, தஷியும் மேனகாவும் ஒரு நட்சத்திர ஓட்டல் அறைக்குள் புகுந்து நடத்துகிற கூத்துகளும், வசனங்களும் விரசத்தின் உச்சக்கட்டம்!

மொழிக்கு மொழி, சென்சார் போர்டின் விதிமுறைகள் மாறுபடுகின்றன என்பது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. தெலுங்குப்படங்களில் கதாநாயகர்களின் கைகளுக்கு சென்சார் போர்டு அளித்திருக்கிற சுதந்திரம், பாவம் தமிழ் நாயகர்களுக்குக் கிடையாது. (இவ்வளவு ஏன், தெலுங்கு மா டிவியில் வருகிற சில தொடர்கள் ஷகீலா படங்களுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல!) மலையாளத்தைப் பற்றிச் சொல்லி, நான் ஒரு மலையாளித்துவேஷி என்று பலர் கருதுவதை உறுதிப்படுத்த விரும்பவில்லை.

டெல்லி-பெல்லியில் நகைச்சுவை தவிரவும், சில சின்னச் சின்ன விஷயங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அழுக்கும் நெரிசலுமாய் பார்த்தாலே மூச்சுத்திணறும் பழைய தில்லியைப் படம் பிடித்திருக்கிற விதம் அபாரம். பின்னணி இசை, எடிட்டிங் பற்றியெல்லாம் எழுத சி.பி.எஸ்ஸிடம் ஒரு க்ரேஷ்-கோர்ஸ் படித்தால்தான் முடியும் என்பதால் விட்டு விடுகிறேன்.

ஆனால், புது தில்லி மற்றும் பழைய தில்லி இவ்விரண்டிற்கும் இடையிலான பாரபட்சங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றை சந்தடிசாக்கில் இடித்துக் காட்டியிருக்கிறார்கள். (தர்யா-கஞ்ச் லாட்ஜிலிருந்து நேரு ப்ளேசுக்குப் போகிறபோது இந்த முரண்பாட்டை பலமுறை நானே பார்த்திருக்கிறேன்)

ஆமீர்கானின் படம் என்பதால் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இது நிறைய மெனக்கெட்டு எடுக்கப்பட்ட ஒரு மிக சாதாரணமான ஆனால் புத்திசாலித்தனமான படம்! இதைப்போல தமிழில் யாராவது எடுத்தால், செருப்புமாலைகளும், துடைப்பங்களுமாய் நமது பண்பாட்டுக் காவலர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் ’பாய்ஸ்’ படத்தை ’சீ!" என்று துப்பியது போலத் துப்பியிருப்பார்கள்.

அங்கேயும் டி.கே.போஸ், தஷி போன்ற பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இங்கேயும் அவன்-இவன் படத்தின் சில சங்கதிகளைப் பற்றி முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர். எல்லாமே படுபுனிதம்; தீண்டாதே என்று சீறுகிறவர்கள் மத்தியில், இவ்விரண்டு படங்களும் வெளிவந்து ஓடிக்கொண்டிருப்பது, மக்களின் சகிப்புத்தன்மை அதிகரிப்பதன் அடையாளமா அல்லது நிஜம் அதை விட மோசமா என்பதுதான் விடையறியப்படாத கேள்வி என்று தோன்றுகிறது.

டெல்லி பெல்லி-சிக்கன் சில்லி - அசைவர்களுக்குப் பிடிக்கும்

(குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் பிரியர்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம்!)

Friday, July 8, 2011

அண்ணாஜிப்பழம்-பாகம்.04

முதல் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

இரண்டாம் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

மூன்றாம் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

(படிக்காவிட்டால் குடியா முழுகிவிடும் என்று கேட்பவர்களுக்காக கீழே ஃபிளாஷ்பேக் தரப்பட்டுள்ளது.)

முன்கதைச் சுருக்கம்

குடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அண்ணாஜிக்கு ’போரடிக்கவே’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்கிறார், கு.மு.கவின் பொருளாளர் நெப்போலியன் நெடுவளவனும், சேட்டையும் கிருஷ்ணசாமியுடன் அண்ணாஜியைப் பற்றி அளவளாவுகிறார்கள். ஒரு வழியாக, பேட்டியை முடித்துக்கொண்டு அண்ணா ஹஜாரே கு.மு.கவுடன் கலந்தாலோசிக்க உள்ளே வருகிறார்.

"நமஸ்தே அண்ணாஜி!" என்று நெப்போலியன் நெடுவளவன் வரவேற்று, கு.மு.கவின் கட்சிப் பொறுப்பாளர்களை அண்ணாஜிக்கு அறிமுகம் செய்தார். அண்ணாஜி சேட்டையை ’யார் இந்த அற்பப்பதர்?’ என்பதுபோல ஏறிட்டுப் பார்க்கவும், நெடுவளவன் புரிந்து கொண்டார்.

"இவரு பேரு சேட்டை! நீங்க ரெண்டு மூணுமாசமா நாட்டுலே இன்னா பண்றீங்களோ அத்தைத்தான் நம்ம சேட்டை பிளாக்-லெ பண்ணிக்கினுகீறாரு! அதாவது மொக்கை போட்டுக்கினுகீறாரு! இப்போ நடந்திச்சே தேர்தல், அதுலே எங்க கட்சிக்கு ஓட்டுப்போட்ட ஒரே ஆள் இவர்தான்!"

"அச்சா!" என்று அமுல்பேபி போல அழகாய்ச் சிரித்தார் அண்ணாஜி. "எங்க ஜன்லோக்பால் சட்டத்துக்கு உங்க கட்சியோட ஆதரவு கேட்டு வந்திருக்கேன். இதுக்காக தொடர்ந்து மூணு நாளும் சாப்பிட்டுக்கிட்டே வந்திருக்கிறேன். அதுக்காகவாச்சும் நீங்க ஆதரவு தரணும்." என்றார் அண்ணா ஹஜாரே.

"ஏன் அண்ணாஜி? உங்க மகாராஷ்டிராவுலே 25 வயசானவங்க மட்டும்தான் தண்ணியடிக்கலாமுன்னு சட்டம் போட்டிருக்காங்களாமே?"

"சேட்டை, என்ன சொல்றே?" என்று பதறினார் கிருஷ்ணசாமி. "இதை முன்கூட்டியே என்கிட்டே சொல்லியிருக்கலாமில்லே?"

"உங்களுக்குத் தெரியாதா? அந்தச் சட்டம் தப்பு. பதினெட்டு வயசானவங்கல்லாம் தாரளமாத் தண்ணியடிக்கலாம்னு சட்டத்தைத் திருத்தச் சொல்லி அமிதாப் பச்சன்லேருந்து யார் யாரோ பேசியிருக்காங்களே? அட நம்ம ஸ்ரேயா கூட இது தனிமனித உரிமையைத் தட்டிப்பறிக்கிற சட்டம்னு சொல்லியிருக்காங்களே?"

"ஐயோ சேட்டை! அண்ணாஜி உண்ணாவிரதத்தை விட்டாலும் நீ ஸ்ரேயாவை விட மாட்டியா? தலீவரே, அந்தச் சட்டம் நம்ம ஊருக்கு இன்னும் வரலே! முதல்லே அண்ணாஜியைப் பைசல் பண்ணி அனுப்பிரலாம்!" என்று எரிச்சலுடன் கூறினார் நெடுவளவன்.

"அண்ணாஜி, கட்சி ஆரம்பிச்சா தமிழ்நாட்டுலே கு.மு.கவோட தானே கூட்டணி?"

"கியா?" அண்ணாஜி மட்டுமல்ல, கிருஷ்ணசாமி, நெடுவளவன், பக்கிரிசாமி மற்றும் களக்காடு கருமுத்து என அனைவரும் அதிர்ந்தனர்.

"க்யா பாத் கர்தா ஹை? எனக்கு கட்சி, தேர்தல், பதவியெல்லாம் அவசியமே கிடையாது," என்று சீறினார் அண்ணாஜி.

"லூசா விடுங்க அண்ணாஜி! ’நானோ என் குடும்பத்தாரோ கட்சியிலே பதவிக்கு வந்தா செருப்பாலே அடிங்க,’ன்னு சொன்னவங்களையெல்லாம் நாங்க பார்த்தாச்சு! அரசியலிலே நீங்களும் வயசுக்கு வந்தாச்சு! அதாவது, உங்களுக்கும் நம்ம நாட்டுலே பிரதமர் ஆகிற வயசுதானே ஆவுது?"

"சேட்டை, இன்னா சொல்றே?" நெடுவளவன் திகைத்தார்.

"இருங்கண்ணே, அண்ணாஜி பதில் சொல்லட்டும்! சொல்லுங்க அண்ணாஜி, கட்சி ஆரம்பிச்சா கு.மு.கவோட கூட்டணி வைப்பீங்களா?"

"டீக் ஹை!" என்று சிரித்தார் அண்ணாஜி. "ஆனா ஒரு கண்டிஷன்! நான் கட்சி ஆரம்பிக்கிற வரைக்கும், ஊழலைப் பத்தி என்னைத் தவிர வேற யாரும் வாயே திறக்கக் கூடாது."

"சேச்சே! இது தமிழ்நாடு! அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவே மாட்டோம்."

"ஊழல் பண்ணுறவங்களைத் தூக்குலே போடுன்னு நான் சொல்லுவேன். வேறே யாரும் சொல்லக் கூடாது! குறிப்பா என் அனுமதி இல்லாம யாரும் டிவிக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது. ஓ.கேயா?"

"டிவி பார்க்கலாமா அண்ணாஜி?"

"பாருங்க! ஆனா, கபில் சிபல், பிரணாப் முகர்ஜீ இவங்கல்லாம் பேசினா, காதுலே பஞ்சை வைச்சு அடைச்சுக்கணும். நான் என்ன பேசினாலும் குத்தம் சொல்லக்கூடாது. சரியா?"

"சரி அண்ணாஜி! ஆனா, இந்தக் கட்சி குடிகாரர்களோட நல்வாழ்வுக்காக ஆரம்பிச்ச கட்சி! உங்க காந்தீயத்துக்கும் எங்க கட்சிக்கும் ஒத்து வருமா?"

"அட இதை விட மோசமான கட்சி கிட்டேயேல்லாம் போய் ஆதரவு கேட்டிட்டிருக்கேனே!"

"அப்போ சரி!"

"என்ன சேட்டை? கட்சித்தலைவரு நான் ஒருத்தன் இருக்கேன்," என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. "என்ன சொல்றே நீ? லோக்பால் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்கச் சொல்றியா?"

"தலைவரே, லோக்பால் சட்டத்துக்கு எதிர்ப்புச் சொன்னா, நீங்க ஊழல்கட்சின்னு ஜனங்க நினைச்சுக்குவாங்க. அதுனாலே, பேசாம லோக்பால் சட்டம் அவசியம் கொண்டுவரணுமுன்னு ஒரு அறிக்கை விட்டிருங்க! அண்ணாஜியோட ஒரு போட்டோ எடுத்து எல்லா பேப்பரிலேயும் போட்டிருங்க! மக்கள் உங்களை ரொம்ப நல்ல புள்ளைன்னு நம்பிருவாங்க! அம்புட்டுத்தேன்!"

"உளறாதே சேட்டை!" இரைந்தார் கிருஷ்ணசாமி. "லோக்பால் சட்டம் வந்தா என்னாகுறது?"

"அது எப்படி வரும்? நம்ம அண்ணாஜி எவ்வளவு சாமர்த்தியமா அவரோட போராட்டத்தை ஆரம்பிச்சிருக்கிறாரு? எப்படியாவது ஒண்ணு ரெண்டு உதிரிக்கட்சி எதிர்த்தாலும் போதும், இந்தச் சட்டத்தைக் கெடப்புலெ போட்டிருவாங்கன்னும் தெரியும். அத்தோட,இவரு உண்ணாவிரதமுன்னு தில்லியிலே அடிச்ச கூத்துலே ஜனங்கல்லாம் என்னமோ அண்ணா ஹஜாரே தான் லோக்பால்-னு ஒரு சட்டத்தையே கண்டுபிடிச்சா மாதிரி பிரமிச்சுப் போயிருக்காங்க! அப்படியே மக்களுக்கு கொஞ்சம் மப்பு குறைஞ்சாலும், உடனே இன்னொரு உண்ணாவிரதம்னு ஆரம்பிச்சு, திரும்பக் கூட்டத்தைக் கூட்டிருவாரு!"

"அட ஆமாம்!" என்று வியந்தார் கிருஷ்ணசாமி. "அப்போ அண்ணாஜிக்கு ஆதரவுன்னு அறிக்கை கொடுத்திரலாமா?"

"தன்யாவாத்..தன்யாவாத்.." என்று கைகுவித்தார் அண்ணா ஹஜாரே.

"என்ன சொல்றாரு அண்ணாஜி?"

"தனியாவாத்து! அதாவது இப்படியொருத்தரு தனியா ஆரம்பிச்ச கூத்துக்கு வாத்துமடையனுங்க மாதிரி தலையாட்டுறிங்க இல்லையா? அதைத்தான் அண்ணாஜி சுருக்கமா ’தனியா வாத்து...தனியா வாத்து,’ன்னு சொல்றாரு!"

மறுநாள்! எல்லா தினசரிகளிலும் ’அண்ணாஜிக்கு கு.மு.க.ஆதரவு’ என்ற செய்தி, அண்ணாஜியும் கிருஷ்ணசாமியும் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் வெளியாகின. எல்லா ஆங்கில தொலைக்காட்சிகளிலும் இருவரும் கைகுலுக்கும் காட்சிகள் ஓளிபரப்பாகின.

"இந்தாளு பெரிய எம்டன்யா! கண்டிப்பா ஊழலை ஒழிச்சிருவாரு பார்த்திட்டேயிருங்க!" என்று கஜேந்திரா டீ ஸ்டாலில் கூடியிருந்த பொதுமக்கள் சிலாகித்துப் பேசிக்கொண்டனர்.

(முற்றும்)

Wednesday, July 6, 2011

அண்ணாஜிப்பழம்-பாகம்.03

முதல் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

இரண்டாம் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.


(இவ்வளவு ’ரிஸ்க்’ எடுத்துப் படிக்கணுமா? என்று கேட்பவர்களுக்கு - அதுவும் சரிதான், படிக்காவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது!)

முன்கதைச் சுருக்கம்

குடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அவரை வெளியே காத்திருக்கச் சொல்லுமாறு கு.மு.கவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் நெப்போலியன் நெடுவளவன் உத்தரவிட்டு விட்டு, கிருஷ்ணசாமிக்கு அண்ணாஜியைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அப்போது அண்ணாஜியின் ஒரு செய்தியோடு கு.மு.க-வின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி உள்ளே வருகிறார்.

அண்ணா ஹஜாரேவுக்கு வெளியே காத்திருப்பது ’போரடிப்பதால்’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்க, சேட்டை டிவியின் ஒரே நிருபர் களக்காடு கருமுத்து அண்ணா ஹஜாரேயின் மாய்மாலங்களைப் புட்டுப் புட்டு வைக்கிற கேள்விகளாய் கேட்கிறார்.

இனி, சேட்டைக்காரனின் ’என்ட்ரீ’!

"வா சேட்டை!" கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி வாயெல்லாம் சிங்கப்பல்லானார். "என்ன நீ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம வெளியூர் போயிட்டே? உன்னைப் பார்க்காம எங்களுக்கெல்லாம் பைத்தியம் தெளிஞ்சா மாதிரி ஆயிடுச்சு! தெனமும் ரெண்டு ஃபுல் அடிச்சும் பெருமாள் கோவில் தீர்த்தம் சாப்பிட்ட எஃபெக்ட் தானிருக்கு!"

"அதிருக்கட்டும் அண்ணே! உங்க ஆபீஸுக்கு அண்ணாஜி வந்திருக்கிறாரு போலிருக்கே?"

"அட சேட்டை! உனக்குக் கூட அவரைத் தெரியுமா?"

"என்ன அப்பிடிக் கேட்டுட்டீங்க அண்ணே? நானும் அவரோட தொண்டன். மெரீனாவுக்குப் போயி மெழுகுவத்தியெல்லாம் ஏத்தினேன் தெரியுமா?"

"நீயுமா சேட்டை?" கிருஷ்ணசாமியின் முகம் வெளிறியது.

"ஆமாண்ணே! அவர்தானே ஊழலை ஒழிக்க வந்த மகான்? பாருங்கண்ணே, எனக்கு மும்பையிலேருந்து வர்றதுக்கு ’பர்த்’ கிடைக்கலே! கல்யாண் வந்ததும் டி.டி.ஈக்கு இருநூறு ரூபா கொடுத்தேன்! லோனாவாலா வர்றதுக்குள்ளே பர்த் கிடைச்சிருச்சு! அது மட்டுமா, உங்களைப் பார்க்க வர்ற அவசரத்துலே ஹெல்மெட் போட்டுக்கலே! போலீஸ் பிடிச்சிட்டாங்க! நூறு ருபா கைலே வச்சு அமுக்கிட்டு வந்தேன்! நாட்டுலே எம்புட்டு லஞ்சம் பாருங்கண்ணே! அண்ணா ஹஜாரே சொல்லுற சட்டம் வந்தாத்தான் லஞ்சம் ஒழியும். அதுக்காகவே அவருக்கு சப்போர்ட் பண்ணுறேன்!"

"அதுவரைக்கும்...?"

’அதுவரைக்கும் நான் ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டிட்டே இருப்பேன். டி.டி.ஈக்கு லஞ்சம் கொடுத்து ’பர்த்’ வாங்கிட்டே இருப்பேன். ஏன்னா, லஞ்சத்தை ஒழிக்கிறது என் வேலையில்லையே?"

"என்ன சேட்டை?லஞ்சத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒண்ணும் பண்ண வேண்டாமா?"

"அது அரசாங்கமும் அண்ணா ஹஜாரேயும் சேர்ந்து சட்டம்போட்டு பண்ண வேண்டிய வேலை! நானு மிஞ்சிமிஞ்சிப் போனா, மெரீனாவுக்குப் போயி ஒரு மெழுவத்தியோ ஊதுபத்தியோ ஏத்துவேன்! தொண்டைத்தண்ணி வத்துற வரைக்கும் கத்துவேன்! அப்பாலிக்கா மொளகா பஜ்ஜியும், சுக்குக்காப்பியும் குடிச்சிட்டு வூட்டுக்குப் போயிடுவேன்! அம்புட்டுத்தேன்! எப்படியும், நான் ஒருத்தன் லஞ்சம் கொடுக்காம இருந்திட்டா லஞ்சம் ஒழிஞ்சிருமா?"

"ரொம்பத் தெளிவாயிருக்கே சேட்டை!" கிருஷ்ணசாமி மகிழ்ந்தார். "மக்கள்லே நிறைய பேரு உன்னை மாதிரியே தெளிவாயிருக்கிற தைரியத்துலே தான் அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவ் மாதிரி ஆளுங்க சுலபமா பெரிய ஆளாயிடறாங்க! அண்ணாஜிக்கும் அவரு சொல்லுற மாதிரி சட்டம் வராதுன்னு தெளிவாத் தெரிஞ்சிருக்கு! மொத்தத்துலே எல்லாரும் நம்ம தலையிலே நாமளே மொளகாய் அரைச்சிட்டு இருக்கோம்!"

"மத்தவங்க தெளிவாகுறது இருக்கட்டும் அண்ணே! கு.மு.க.தலைவரு நீங்க தெளிவாயிட்டா கட்சியே அம்பேலாயிடும்ணே!"

"ஹிஹி!" என்று சிரித்தபடியே அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி. "ஏன் சேட்டை, தில்லி, மும்பையிலே அண்ணாஜிக்கு இத்தனை ஆளுங்க கூட்டம் சேர்றது இருக்கட்டும். எப்படி நம்மூருலே இவ்வளவு கூட்டம் சேருது?"

"நமக்கு வடக்குன்னா எப்பவுமே ஒரு பிடிப்பு இருக்குண்ணே! நம்மூருலே நமீதா, தமன்னா, நக்மா, குஷ்பூவுக்குத்தானே அதிக மவுசு இருக்குது. கோவில் கூட கட்டியிருக்கோமே? நான் கூட திரிஷா, சினேகாவையெல்லாம் விட்டுப்புட்டு ஸ்ரேயாவைப் பத்தித்தானே அதிகம் எழுதுறேன். அதே மாதிரிதான் இந்த அண்ணாஜி மேட்டரும்! நம்முருலே பெட்டிஷன் ராமசாமின்னு ஒருத்தர் இருக்கிறாரு! தனிமனுசனா அரசாங்கத்தோட கண்ணுலே விரலை விட்டு ஆட்டுக்கிட்டு இருக்கிறாரு! அண்ணா ஹஜாரேவுக்காக மெழுகுவத்தியைத் தூக்கிட்டுப் போனவங்கள்ளே யாராவது அந்தப் பெட்டிஷன் ராமசாமிக்காக ஒரு தீக்குச்சியாவது கொளுத்தியிருப்பான்னா நினைக்கிறே? மாட்டாங்க! ஏன்னா, பெட்டிஷன் ராமசாமியைப் பத்தி மயிலாப்பூர் டைம்ஸ்-லே கூட யாரும் எழுத மாட்டாங்க! ஆனா, அண்ணா ஹஜாரேன்னா சி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டிவி, டைம்ஸ் நௌ, ஹெட்லைன்ஸ் டுடே மாதிரி பெரிய பெரிய இங்கிலீஷ் சேனல்லே காண்பிப்பாங்க!"

"ஓஹோ!"

"பெட்டிஷன் ராமசாமி மாதிரி ஊருக்குப் பத்து பேரு இருப்பாங்க நம்ம தமிழ்நாட்டுலே! ஆனா, அவங்களுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணினா ஒரு புண்ணாக்கும் புரயோஜனம் கிடையாது. அவரு பொதுநல வழக்குப் போடுறாரு! நாம நம்ம வழக்கையே போடப் பயந்துகிட்டு ’எல்லாம் தலைவிதி,’ன்னு சொல்லிட்டு, அண்ணா ஹஜாரே மாதிரி யாராவது வந்து காப்பாத்துவாருன்னு குப்புறப்படுத்திட்டிருக்கோம். இந்த வீக்னஸைப் புரிஞ்சுக்கிட்டுத்தானே அரசாங்கம் ஏய்க்கிறது போதாதுன்னு இந்த மாதிரி அலப்பறைங்களும் சேர்ந்துக்கிட்டு நம்மளை ஏய்க்கிறாங்க?"

"வாய்யா சேட்டை!" என்று தள்ளாடியவாறு உள்ளே நுழைந்தார் நெப்போலியன் நெடுவளவன். "உன் தோஸ்து கள்காடு கருமுத்து அண்ணா ஹஜாரேக்குத் தண்ணி காட்டிக்கினுகீறான்யா!"

"அவனுக்கு மூணுமாசமா சம்பளம் கிடைக்கலேன்னு கடுப்பு! அதான் சேட்டை டிவி மேலே இருக்கிற கடுப்பை அண்ணாஜிட்டே காட்டுறான்னு நினைக்கிறேன்!"

"சும்மாயிருய்யா நெப்ஸு! சேட்டை கொஞ்சம் உருப்படியா பேசிட்டிருக்கான். எதையாவது பேசி அவனைக் குழப்பிட்டேன்னா, அவனும் அண்ணா ஹஜாரே மாதிரி உளற ஆரம்பிச்சிடப்போறான்!" என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. "ஏன் சேட்டை, ஒரு மனிசன் சோறுதண்ணியில்லாம சாவப்போறேன்னு சொல்றது எம்புட்டுப் பெரிய விஷயம்? அதைக் கேட்குறவனுக்கு நம்பளுக்காண்டி ஒருத்தரு சாவுறேன்னு சொல்றானேன்னு தோணாதா? அதைக் கூட நையாண்டி பண்ணுறியே சேட்டை?"

"தலீவரே, ’ரமணா’ படம் பார்த்தீங்களா?"

"ஓ!"

"அந்தப்படத்தைப் பார்த்திட்டு வாறையிலே ’சே, இந்த மாதிரி உண்மையிலேயே ஒருத்தன் வரணுண்டா,’ன்னு நெனச்சேன். அதே மாதிரி ’முதல்வன்’,’அந்நியன், ’சிவாஜி’ன்னு ஒவ்வொரு சங்கர் படத்தையும் பார்த்திட்டு ’மெய்யாலுமே இந்த மாதிரி ஒருத்தன் இருந்தா நல்லாருக்குமே,’ன்னு யோசிப்பேன். ஒருவாட்டி கூட ’அந்த ஒருத்தன் ஏன் நானா இருக்கக் கூடாதுன்னு யோசிக்க மாட்டேன் தெரியுமா? அதிகபட்சம் நான் பண்ணுனது என்னா தெரியுமா? எதுத்த வூட்டு மாமியைப் பார்த்து ’ஐயங்காரு வீட்டு அழகே,’ன்னு பாடி மாமா கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டதுதான். அந்த மாதிரித்தான் எல்லா ஜனமும் ’எவனாவது வந்து எல்லாத்தையும் திருத்தணும்’னு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு வூட்டுலே உட்கார்ந்திட்டிருக்கு! நாம இப்படித் தொடைநடுங்கிங்களா இருக்கிறவரைக்கும் லோக்பால் வந்தாலும் நம்மளை ஏமாத்துறவன் ஏமாத்திட்டுத்தான் இருப்பான்!"

"இன்னா சேட்டை அப்படிச் சொல்லிட்டே?"

"பின்னே என்னய்யா? கொலை பண்ணா ஆயுள்தண்டனை, தூக்குத்தண்டனைன்னு நம்ம நாட்டுலே சட்டமிருக்கு! கொலை நடக்காமலா இருக்கு? ஹாரர் மூவியிலே வர்றதை விடவும் கொடூரமா கொலை நடக்குதுய்யா! முதல்லே நாம உருப்படியா இருந்தா, மேலே இருக்கிறவனுக்குப் பயம் வரும். ஜனங்க முழிச்சிட்டிருக்கான்னுற சொரணை வரும். சும்மாவா சொன்னாய்ங்க? People get the Government they deserve! அரசியல்வாதி. ஊழல் பண்ணுறான்னு நாமளும் லஞ்சம் வாங்குறோம்; கொடுக்குறோம். போலீசைக் கண்டதும் பொம்பிளையோட பொம்பளையா ஒளிஞ்சு ஓடுற பரதேசிப்பன்னாடைங்களையெல்லாம் ஹீரோன்னு சொல்லுறோம். ஒரு நாளு மெழுகுவர்த்தி கொளுத்தினாப் போதுமாய்யா? வேணுங்கிறது கிடைக்கிறவரைக்கும் ஜனங்க போராடணும்யா! எல்லாம் அண்ணாஜி பார்த்துக்குவாருன்னு வூட்டுலே தின்னுட்டுத் தூங்கினா வந்திருமா லோக்பால்? மண்குதிரையை நம்பி ஆத்துலே இறங்கிட்டிருக்கோமய்யா!"

"சேட்டை, டென்ஷன் ஆவாதே! அண்ணாஜி பேட்டியை முடிச்சிட்டு வர்றாரு போலிருக்குது. நம்ம ஆதரவு கேட்டா என்ன சொல்றது?" என்று கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி கேட்கவும் பகார்டி பக்கிரிசாமி அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்.

(முற்றும்- அப்படீன்னு போடுவேன்னு எதிர்பார்த்தீங்களா?
ஹிஹி...தொடரும்)

Monday, July 4, 2011

அண்ணாஜிப்பழம்-பாகம்.02

முன்கதைச் சுருக்கம் (முழுமையாக வாசிக்க "இங்கே" சொடுக்கவும்)

குடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அவரை வெளியே காத்திருக்கச் சொல்லுமாறு கு.மு.கவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் நெப்போலியன் நெடுவளவன் உத்தரவிட்டு விட்டு, கிருஷ்ணசாமிக்கு அண்ணாஜியைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அப்போது அண்ணாஜியின் ஒரு செய்தியோடு கு.மு.க-வின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி உள்ளே வருகிறார்.

அண்ணா ஹஜாரேவுக்கு வெளியே காத்திருப்பது ’போரடிப்பதால்’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்கலாமா என்று அனுமதி கேட்பதாக, பக்கிரிசாமி தெரிவிக்கிறார்.

"இன்னாபா படா ரோதனையா கீது? நேத்துத்தானே அல்லா டிவிலேயும் பேட்டி கொடுத்தாரு?" என்று எரிச்சலடைந்தார் நெடுவளவன். "யோசிச்சுச் சொல்லுறோமுன்னு போய்ச் சொல்லு!" என்று பக்கிரிசாமியை திருப்பி அனுப்பினார். "இந்த அண்ணா ஹஜாரேயாலே நாட்கணக்கா சாப்பிடாம இருக்க முடியுது. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு தபா டிவியிலே மூஞ்சியைக் காட்டலேன்னா கெடந்து அல்லாடுறாருபா!"

"இந்த டிவிக்காரங்களும் அலுக்காம போறாங்களே!" என்று நொந்து கொண்டார் கிருஷ்ணசாமி.

"தலீவரே, லவ் பண்ண ஆளை பிளேடாலே முன்னூறு துண்டா வெட்டிப் போட்ட பொம்பளையோட பேட்டியையே டிவிக்காரனுங்க போடுறானுங்க! இந்த அண்ணாஜியையும், பாபா ராம்தேவையும் மாத்தி மாத்திக் காட்டுறானுங்களே, கங்கையை க்ளீன் பண்ணச்சொல்லி உண்ணாவிரதம் இருந்த ஆளு அம்பேலாயிட்டாரு! எந்த நாயும் அந்த சாமியை ஒரு போட்டோ கூட எடுக்கலே! இந்த டிவிக்காரனுங்களுக்கு யாராச்சும் கூட்டம் கூட்டுனாத்தான் கல்லா களைகட்டுது!"

"சனமும் ஆயிரக்கணக்குலே கூடுதேய்யா?"

"ஏன் கூடாது? ரெண்டாவது சுதந்திரப்போராட்டம்-ன்னில்லே பில்ட்-அப் கொடுத்தானுங்க?"

"ரெண்டாவது சுதந்திரப்போராட்டமா? அப்போ, இந்திரா காந்திக்கு எதிரா ஜெயபிரகாஷ் நாராயணன், ஆசார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய் எல்லாரும் போராடி ஜெயிலுக்குப்போனதெல்லாம் ரெண்டாவது சுதந்திரப்போராட்டமில்லியாமா?"

"அட இரு தலீவரே, இன்னும் கொஞ்ச நாளு போனா, அண்ணா ஹஜாரே தான் இந்தியாவுக்கு சுதந்திரமே வாங்கிக்கொடுத்தாருன்னு பேசுனாலும் பேசுவாங்க!"

"அது போகட்டும்! இப்போ நம்ம ஆபீசுலே அண்ணாஜி பேட்டி கொடுக்க விடுறதா வேண்டாமா?"

"பேட்டி கொடுக்கட்டும் தலீவரே! நீ இன்னா பண்றே, சேட்டை டிவிக்குப் போன்போட்டு நம்ம களக்காடு கருமுத்துவை ஒரு தபா வந்து கண்டுக்கினு போவச்சொல்லு! இந்த அண்ணா ஹஜாரேயை நாக்கைப் புடுங்குறா மாதிரி நாலு கேள்வி கேக்கச்சொல்லு!"

"அப்படியே சேட்டையையும் வரச் சொல்றேன்! நம்ம கு.மு.க.கட்சியைப் பத்தி அவன் ஒருத்தன் தான் நாலு வார்த்தை அப்பப்போ எளுதுறான்!"

கு.மு.க.அலுவலகத்தில் பேட்டி கொடுக்கலாம் என்ற தகவலை அண்ணா ஹஜாரேயிடம் தெரிவித்ததும், அவர் முகமலர்ச்சியோடு எல்லா டிவி நிருபர்களையும் அழைத்தார். அவர்களுடன் களக்காடு கருமுத்துவும் சேட்டை டிவியின் மைக்கோடு உள்ளே சென்று அண்ணாஜியிடம் கேள்வி கேட்கத் தொடங்கினான்.

"அண்ணாஜி! பிரதமர் மன்மோகன் சிங் ரொம்ப நல்லவரு. ஆனா, சோனியா காந்தி சகவாசத்தாலே தான் அவராலே ஒண்ணும் பண்ண முடியலேன்னு இதுவரைக்கும் மூணு வாட்டி சொல்லியிருக்கீங்க! அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப சோனியா காந்திக்கே லெட்டர் போடறீங்க? நல்லவங்களுக்கு லெட்டர் போட மாட்டீங்களோ?"

"ஹிஹிஹி!" என்று இளித்தார் அண்ணா ஹஜாரே. "அவங்கதானே காங்கிரஸ் கட்சித்தலைவி. அதுனாலே தான் அப்படி...ஹிஹிஹி!"

"அவங்க அரசாங்கம் முழுக்க பொய்யனுங்களும், பித்தலாட்டக்காரனுங்களும் இருக்காங்கன்னு சொன்னீங்களா இல்லையா? அப்புறம் ஏன் அவங்க கிட்டே தொங்கறீங்க?"

"ஹிஹிஹி! என்ன இருந்தாலும் அவங்க தானே ஆளுங்கட்சித் தலைவி! அதுனாலே தான்..ஹிஹிஹிஹி!"

"அவங்களுக்கு ராஜ்யசபாவுலே பலம் கிடையாதே! பா.ஜ.க.ஆதரவில்லாம லோக்பால் சட்டத்தை கொண்டுவர முடியாதே? நீங்க கேக்குறா மாதிரி லோக்பால் சட்டத்துலே பிரதமரையும் கொண்டுவரணுமுன்னு முன்னே பா.ஜ.க.அரசு ஆட்சியிலே இருக்கும்போதே ஒத்துக்கிட்டாங்களே! அப்புறமா எதுக்கு பா.ஜ.கவை ஓரங்கட்டினீங்க?"

"ஹிஹிஹி! பா.ஜ.கவை ஓரங்கட்டினாத்தானே காங்கிரஸ் நான் சொல்றதைக் கேட்கும்? இது கூட தெரியலியா?"

"அப்புறம் எதுக்கு ஓய் பா.ஜ.க.கூட்டணியிலே இருக்கிற நிதிஷ் குமார் கிட்டே போய் முதமுதலா ஆதரவு கேட்டீங்க?"

"ஏன்னா காங்கிரஸ் கைவிட்டுட்டாங்களே? என்ன பண்ணித்தொலைக்கிறதாம்?"

"காங்கிரஸ் மட்டுமா? பா.ஜ.க, பிஜு ஜனதா தள், கம்யூனிஸ்ட் எல்லாருமே உங்க அடாவடி செல்லுபடியாகாதுன்னு சர்வகட்சிப் பொதுக்கூட்டத்துலே சொல்லிட்டாங்களே?"

"அதுக்கென்ன, இன்னும் நிறைய கட்சி மிச்சம் இருக்கே?"

"அப்போ நீங்க பண்ணுறது சுத்தமான அரசியல்னு ஒத்துக்கறீங்களா?"

"இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்டா அப்புறம் ஊழலை எப்படி ஒழிக்கிறதாம்?"

"அண்ணாஜி! எங்க ஊருலே ஒரு தலைவரு இலங்கைத்தமிழனுக்காக மூணு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததை விடவும் உங்க உண்ணாவிரதம் படுகாமெடியா இருக்குதே! அரசியல் கட்சிகளோட ஆதரவில்லாம லோக்பால் சட்டம் வராதுன்னு தெரிஞ்சே, அவங்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுறீங்க! சட்டத்தை நிறைவேத்தலேன்னா திரும்ப உண்ணாவிரதம்னு சொல்றீங்க! திரும்ப அரசாங்கம் கூப்பிட்டுப் பேசுவாங்க; திரும்ப டிவிக்காரனுங்க உங்க பின்னாலே அலைவாங்க! இப்படி இன்னும் எத்தனை வருஷம் டிராமா போடுறதா உத்தேசம்?"

"நான் ஒரு காந்தீயவாதி!"

"காந்தீயவாதியா? எந்த காந்தி? மகாத்மாவா சோனியாவா?"

(தொடரும்)