Saturday, January 30, 2010

நடந்தாலும் நடக்கும்!

இருபது வருசம் கழிச்சு உலகத்திலே என்ன நடக்குமோ, இந்தியாவிலே என்ன நடக்குமோ தெரியாது. ஆனா, தமிழ்நாட்டுலே மட்டும் ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும். அது என்னான்னு இப்பவே சொல்லிடறேன்; இருபது வருசம் கழிச்சு எல்லாரும் சரிபார்த்துக்குங்க!

நீங்க சென்னையிலிருந்து ஒரு பேருந்துலே நீண்டதூர பிரயாணம் பண்ணிட்டிருக்கங்கன்னு கற்பனை பண்ணிக்குங்க! ஆர்வமோ, தாகமோ கொஞ்சம் அளவுக்கதிகமாத் தண்ணியைக் குடிச்சுட்டு மதுராந்தகம் தாண்டினதுலேருந்தே இடுப்புவலி வந்த கர்ப்பஸ்த்ரீ மாதிரி சீட்டுலே நெளிஞ்சிட்டிருப்பீங்க! இந்த விழுப்புரத்துக்கு வெளியிலே வண்டியை நிறுத்துவாங்களேன்னு பக்கத்துலே இருக்கிற ஆளுகிட்டே "அண்ணே, விளுப்புரம் எப்பண்ணே வரும்?"ன்னு கேட்பீங்க! அந்தாளு பொறுமையிழந்து,"யோவ், பேசாமத் தூங்கய்யா. விளுப்புரம் வந்தா எளுப்பறோம்,"னு சொல்லுவாரு.

உங்களுக்கு ஒரு கெடுதலும் பண்ணாத அந்த பஸ் டிரைவரை அன்னிக்கு மனசுக்குள்ளே நீங்க திட்டுறா மாதிரி, பின்லேடன் கூட புஷ்ஷைத் திட்டியிருக்க மாட்டாரு! உண்மையிலே பார்த்தீங்கன்னா, உங்களை விட பாவம், அந்த டிரைவருக்குத் தான் இன்னும் அவசரமாயிருக்கும்; செந்திலைக் கவுண்டமணி மிதிச்சதை விடவும் அழுத்தமா அவரு ஆக்ஸிலேட்டரை மிதிச்சிட்டிருப்பாரு! ஆனாலும் "ஏனிந்த ஆளு வில்லுவண்டி மாதிரி ஓட்டிட்டிருக்காரு?"ன்னு மனசுக்குள்ளே துர்வாசர் மாதிரி சபிச்சிட்டிருப்பீங்க!

விஞ்ஞானம் இவ்வளவு முன்னேறிடுச்சு; எய்ட்ஸ் மாதிரி நோய்க்கெல்லாம் கூட மாத்திரை கண்டுபிடிச்சிட்டாங்க! ஆனா, ஒவ்வொரு தடவையும் பஸ்ஸிலே போகும்போது இப்படிப் புடுங்கியெடுக்கிற அவஸ்தைக்கு எவனாவது மாத்திரை கண்டுபுடிச்சானான்னு உலகத்திலே இதுவரைக்கும் பொறந்த, இனிமே பொறக்கப்போற எல்லா விஞ்ஞானிகளையும் மனசுக்குள்ளே திட்டிக்கிட்டு இருப்பீங்க! இதுவரைக்கும் "நோபல்" பரிசு வாங்குனவங்களையெல்லாம் வரிசையா நிக்க வைச்சு, பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்து அவங்களுக்கு "No பல்" விருது கொடுக்கலாமான்னு தீவிரமா யோசிப்பீங்க! ஒழுங்கா முன்னாலேயே ரயில்லே டிக்கெட்டை வாங்கியிருந்தா சௌகரியமாப் படுத்திட்டும் போயிருக்கலாம்; இயற்கை உபாதை வந்தா இப்படி சீட்டு மேலேயே சித்ரா விஸ்வேஸ்வரன் மாதிரி பரதநாட்டியமும் ஆட வேண்டி வந்திருக்காதேன்னு உங்களையும் நல்லாத் திட்டிக்குவீங்க! சில சமயங்களிலே ஜன்னல் வழியா வெளியே குதிச்சிரலாமான்னு கூட தோணும் சிலபேருக்கு!

ஒரு வழியா பஸ் ஸ்லோவாகி, ஏகத்துக்கும் குழல்விளக்கு போட்டிருக்கிற அந்த ஹோட்டல் வாசலுக்கு முன்னாலே நிக்குறதுக்கு முன்னாடியே நீங்க கண்டக்டரோட முதுகோட முதுகா உராய்ஞ்சுகிட்டு வண்டி எப்போ நிக்கப்போவுதுண்ணு "பத்து, ஒன்பது, எட்டு, ஏழு....,"ன்னு ரிவர்சிலே எண்ணிட்டிருப்பீங்க!

"வண்ண்டி பத்த்த்துநிமிஷம் நிக்க்க்கும்; காப்ப்ப்பி,ட்ட்ட்ட்டீ,ட்ட்ட்டிபன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாப்பிடலாம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸார்ர்ர்ர்...," என்று வண்டியின் மீது கும்மாங்குத்தாகக் குத்திக் குத்தி,அடுத்த பிறவிக்கும் சேர்த்து இப்போதே குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருப்பவர்களையும் எழுப்புகிற சிறுவர்கள் பற்றியோ, "மீனாட்சி...மீனாட்சி...," என்று ஒலிபெருக்கிப்பெட்டியில் இருந்து பிளிறுகிற தேவாவின் கானாவையோ பற்றிக் கவலைப்படாமல் "எங்கே? எங்கே??" என்று உங்களது கண்கள் கட்டணக்கழிப்பறையைத் தேடி அலையும்.

இதுவே இப்போதைய தமிழகமாக இருந்தால், ஒரு ரூபாய் கொடுத்து விட்டு அதுவரை உங்களது உடம்புக்குள்ளிருந்து ஆட்டிவைத்த பிசாசை வெளியேற்றிவிட்டு "அப்பாடா, வாட் ய ரிலீஃப்?" என்று வேலூர் சிறையிலிருந்து விடுதலையான கைதி போல மகிழ்ச்சியடையலாம். ஆனால், நாம் இருபது வருடங்கள் கழித்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்தல்லவா நமது திவ்விய திருஷ்டியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்? எனவே, இருபது வருடம் கழித்து நீங்கள் பேருந்திலிருந்து துள்ளியிறங்கியதும், சகபயணிகள் ஓடோடிச் சென்று ஒரு வரிசையில் நிற்பதைப் பார்ப்பீர்கள். ஒரு சிலர் மட்டும் சற்றும் அலட்டிக்கொள்ளாமல் நேராகக் கட்டணக்கழிப்பறையை நோக்கிச் சென்று, அங்கு வாசலில் வைக்கப்பட்டிருக்கிற "ஸ்வைப்பர் ஸ்லாட்டில்" ஒரு அட்டையை வைத்துத் தேய்த்ததும், கதவு திறந்து அவர்களுக்கு வழிவிடுவதைப் பார்த்து அதிசயிப்பீர்கள்!

உங்களது அவசரத்துக்கு அது என்ன கார்டு என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமோ, பொறுமையோ இருக்காதென்பதால், மைக்கேல் ஜோர்டானை விடவும் வேகமாக ஓடுவீர்கள். ஆனால், கழுத்தில் டை கட்டிய ஒரு இளைஞர் உங்களை வழிமறிக்கக் கூடும்.

"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்! கார்டு வச்சிருக்கீங்களா?"

"ஓ! விசா கார்டு, மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு, ஏ.டி.ஏம்.கார்டு, டேட்டா கார்டு, சவுண்டு கார்டு, போஸ்ட் கார்டு எல்லாம் வச்சிருக்கேன்," என்று பொறுமையிழந்து ஒப்பிப்பீர்கள்.

"ஓ! சாரி சார், உங்க கிட்டே பி.சி.கார்டு இருந்தாத் தான் இந்த என்ட்ரன்ஸ் வழியாப் போக முடியும். இல்லாட்டி அதோ பாருங்க, நிக்குதே க்யூ, அதுலே போயி நூறு ரூபாய் கொடுத்து ஒரு டோக்கன் வாங்கிட்டுப் பின்பக்கமாப் போகணும்."

பி.சி.கார்டு என்றால்? பப்ளிக் கன்வீனியன்ஸ் கார்டாம்!

"என்னய்யா அநியாயம் இது? இதுக்கெல்லாமா கார்டு வச்சிருக்கணும்!"

"சார், ப்ளீஸ் டோன்ட் வேஸ்ட் டைம்! வரிசை பெரிசாயிட்டிருக்கு! சீக்கிரம் போயி டோக்கன் வாங்கிட்டு வாங்க!" என்று அந்த இளைஞர் மிகவும் சமூக அக்கறையோடு அறிவுரை கூறுவார். அவர் சொல்வது உண்மைதான் என்று புரிந்து கொண்டு நீங்களும் அந்தக் க்யூவில் போய் கடைசியாக நிற்பீர்கள்.

"யோவ்! நடுவுலே பூராதேய்யா! பின்னாடி நிக்குறவனெல்லாம் மனுசனாத் தெரியலியா?" என்று சிலர் முன்னாலே குரல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். அதே நேரம் உங்களுக்குப் பின்னால் அதற்குள் இன்னும் பத்து பேர் வந்து நின்றிருப்பார்கள். அதில் ஒருவர் உங்களது முதுகைச் சுரண்டியபடி, "எக்ஸ்க்யூஸ் மீ சார், நம்பர் ஒன்,நம்பர் டூ ரெண்டுக்குமே இதே வரிசையா, இல்லே தனித்தனியா வச்சிருக்காங்களா?" என்று கேட்டு ஏற்கனவே கலங்கியிருக்கிற உங்களது வயிற்றை மேலும் கலங்க வைப்பார்.

"ரெண்டுக்கும் ஒரே க்யூ தான்! நான் நேத்துக் கூட வாங்கினேனே," என்று அவருக்குப் பின்னாலிருந்து ஏற்கனவே டோக்கன் வாங்கி அனுபவப்பட்டவர் சொல்லவும் ஆறுதலடைவீர்கள். டோக்கன் கொடுக்கிற கவுன்ட்டர் நெருங்க நெருங்க முதல் நாள் ரஜினி படம் பார்க்கப்போன ரசிகனைப் போல உங்களை ஒரு பரபரப்பு பற்றிக்கொள்ளும். "இங்கே ஹவுஸ்ஃபுல் போர்டு போடாம இருக்கணுமே," என்று ஓவர்-ஃப்ளோ ஆகக் காத்துக்கொண்டிருக்கிற உங்கள் மனமானது எல்லா தெய்வங்களிடத்தும் குடலுருகப் பிரார்த்தனை மேற்கொள்ளும்.

"ரெண்டு ஃபுல், ஒரு ஹாஃப், ஒரு சீனியர் சிட்டிசன்.எல்லாமே நம்பர் ஒன்." என்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருப்பவர் டிக்கெட் வாங்குவதைப் பார்த்து, இதில் இவ்வளவு சட்டதிட்டங்கள் இருக்கிறதா என்று மனதுக்குள் வியப்பீர்கள்.

ஒரு வழியாக நூறு ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கியதும், உங்கள் முகத்தில் தோன்றுகிற புன்னகைக்கும் ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் புன்னகைக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க ஒரு போட்டியே வைக்கலாம். எப்படியோ, மதுராந்தகத்தில் தொடங்கி உங்களுக்குத் தீராத மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த உபாதையை ஒருவழியாகத் தணித்து விட்டு நீங்கள் வெளியே வரும்போது, ஊருக்குத் திரும்பியதும் முதல் வேலையாக பி.சி.கார்டுக்கு விண்ணப்பித்து விட வேண்டியது தான் என்று முடிவெடுப்பீர்கள்.

"எக்ஸ்க்யூஸ் மீ! புதுசா ஒரு பிசி.கார்டு வாங்கணுமுன்னா என்ன ஃபார்மாலிட்டீ?" என்று அந்த டை கட்டிய இளைஞனிடம் கேட்பீர்கள். அவன் புன்னகையோடு ஒரு சிறிய படிவத்தை எடுத்துக் கொடுத்து, "இதை நிரப்பி, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அட்ரஸ் புரூஃப், ஐந்நூறு ரூபாய்க்கான காசோலையோட சேர்த்து, பின்னாலே இருக்கிற அட்ரஸுக்கு பதிவுத் தபால்லே அனுப்புங்க! வெப்சைட்டிலே போயி ஆன்லைனிலேயே கூட அப்ளை பண்ணலாம். அதிகபட்சம் இருபது நாளுக்குள்ளே வீடுதேடி வந்திடும்!" என்று பொறுமையாக விளக்குவான்.

"ஹூம்!" என்று பெருமூச்சு விடுவீர்கள் நீங்கள். "தமிழ்நாட்டுலே வீட்டுக்கு வீடு மாருதி கார் இலவசமா எப்படிக் கொடுக்குறாங்கன்னு யோசிச்சிட்டிருந்தேன்.. இந்தப் பணம் தானா அது?"

4 comments:

சிநேகிதன் அக்பர் said...

பயங்கர சேட்டைதான்.

அசத்தல்.

settaikkaran said...

//பயங்கர சேட்டைதான்.

அசத்தல்//

மிக்க நன்றிங்க, வருகைக்கும் கருத்துக்கும்! அடிக்கடி வாங்க!

Yoganathan.N said...

சிரிக்க, சிந்திக்க வைத்த பதிவு. நல்ல கற்பனை. :)

settaikkaran said...

//சிரிக்க, சிந்திக்க வைத்த பதிவு. நல்ல கற்பனை. :)//

நன்றி திரு.யோகநாதன், இந்தக் கற்பனை உண்மையாகாம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு.