Monday, November 29, 2010

எண்டே எடியூரப்பா....!


"சார், உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காரு!" என்று காரியதரிசி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் காதில் வந்து கிசுகிசுத்தார்.

"முடியவே முடியாது. நான் பதவி விலகவே முடியாது!" என்று இரைந்தார் எடியூரப்பா. "யார் வந்தாலும் இது தான் என் பதில்னு சொல்லி அனுப்பிடு போய்யா!"

"கோவிச்சுக்காதீங்க சார்! நீங்க பதவி விலக மாட்டீங்கன்னு தெரியும். அதுக்காக, வர்றவங்க போறவங்க கிட்டேயில்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லாதீங்க சார்! இன்னிக்குக் காலையிலே கூட ஒருத்தர்கிட்டே இப்படித்தான் கத்தினீங்க!"

"கத்தாம பின்னே என்னய்யா பண்ணச்சொல்றே? எல்லாப் பயபுள்ளையும் ஏன் இன்னும் ராஜினாமா பண்ணலேன்னு கேட்குறான்!"

"அதுக்காக பால்பாக்கெட் போடுறவன் கிட்டேயெல்லாமா கத்துவீங்க?"

"என்னது? பால்பாக்கெட் போட வந்தானா?" அதிர்ந்தார் எடியூரப்பா. "நான் பத்திரிகைக்காரன்னு நினைச்சு விரட்டிட்டேனே!"

"இப்படித்தான், பால்காரன், இஸ்திரிக்காரன், காய்கறிக்காரன்னு யார் வந்தாலும் கத்திக் கூச்சல்போட்டு விரட்டிடறீங்க சார்!"

"யோவ், முதல்லே அவங்களைக் கூப்பிட்டு சமாதானப்படுத்துய்யா. எனக்கோ நேரம் சரியில்லை. இப்பல்லாம் எனக்கு யார்தான் ஆப்பு வைக்கிறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லாமப் போயிட்டிருக்கு!"

"அதை நான் கவனிச்சுக்குறேன்; முதல்லே ஆர்யான்னு ஒரு நடிகர் வந்திருக்காரு! உள்ளே அனுப்பட்டுங்களா?"

"சீக்கிரம் அனுப்புய்யா!"

அடுத்த நிமிடமே....

"சாமியே சரணம் ஐயப்பா! என் பேர் ஆர்யா!"

"சாமியே சரணம்! உட்காருங்க ஆர்யா! என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?"

"நீங்க ஒரு தமிழ்ப்படத்துலே நடிக்கிறதா கேள்விப்பட்டேன். அதுனாலே தான் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்."

"ஓஹோ, ரொம்ப சந்தோஷம்! நான் கேமிராவுக்கு முன்னாலே நடிக்கிறது இது தான் ஃபர்ஸ்ட் டைம். கேமரா இல்லாம சமீபத்துலே கூட தில்லிக்குப்போயி பட்டையைக் கிளப்பியிருந்தேனே! நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி எல்லாரும் அசந்து போயிட்டாங்க!" என்று பெருமிதத்தோடு தெரிவித்தார் எடியூரப்பா.

"நானும் பார்த்தேனே! அதுலேயும் நீங்க பேசின வீரவசனம் இருக்கே? பழசிராஜாவுலே மம்முக்கா கூட அவ்வளவு ஆக்ரோஷமாப் பேசலே! உங்களுக்குத் தமிழ் சினிமாவுலே ஒரு நல்ல எதிர்காலம் காத்திட்டிருக்கு சார்!"

"ஹிஹி! என்ன சாப்பிடறீங்க? காப்பி, டீ...?"

"கட்டஞ்சாயா!"

"என்னது?"

"ஓ சாரி சார், கட்டஞ்சாயான்னா ப்ளாக் டீன்னு அர்த்தம் சார்! நான் தமிழ்ப்படத்துலே நடிச்சாலும் கட்டஞ்சாயா தான் சாப்பிடுவேன். தினமும் ப்ரேக்-ஃபாஸ்ட் கப்பக்கிழங்குதான்! தமிழனையெல்லாம் பாண்டின்னு தான் செல்லமாக் கூப்பிடுவேன். ஆனா, திங்குற சாப்பாடுமட்டும் தமிழன் போடுற காசுதான்! கறக்குற மாட்டோட வாலை முறுக்கறதுன்னா எங்களுக்கு சக்கப்பிரதமன் சாப்பிடுறா மாதிரி!"

"நான் மட்டுமென்ன? கும்பிடறதெல்லாம் சிதம்பரம், ஸ்ரீரங்கம்னு எல்லாம் தமிழ்நாட்டு சாமியைத் தான். ஆனா, காவிரித்தண்ணி மட்டும் கொடுக்கவே மாட்டேனே?" என்று எடியூரப்பா வாய்விட்டு சிரித்தார்.

"எனக்கொரு குறை சார், ஆந்திராக்காரன் தமிழனை ’அரவாடு’ன்னு கூப்பிடுறான். நாங்க தமிழனை ’பாண்டி’ன்னு கூப்பிடுறோம். நீங்க மட்டும் தமிழனுக்கு கன்னடத்துலே ஒரு நல்ல பெயர் இன்னும் வைக்காம இருக்கீங்களே, அது ஏன் சார்?"

"பேரு வைக்காட்டி என்ன, வருசா வருசம் காவெரி டெல்டாவிலே இருக்கிற தமிழனோட அடிவயித்துலே கைவைக்கிறோம்; ஏதாவது மொரண்டு பண்ணினா இங்கிருக்கிற தமிழன் முதுகிலே மொத்து வைக்கிறோமில்லே? அது போதாதா?"

"சரியாச் சொன்னீங்க சார்! நீங்க நடிக்கிற தமிழ்ப்படத்துக்கு ’பூலோக ரட்சகன்,’ன்னு பேரு வச்சிருக்காங்க! பூமியைக் காப்பாற்றுகிறவன்னு அர்த்தமாகுது! பூமிக்கும் உங்களுக்கும் இருக்கிற சம்பந்தம்தான் எல்லாருக்கும் தெரியுமே? சூப்பர் டைட்டில் சார்!"

"தேங்க் யூ!"

"ஆனா, பாருங்க சார், இந்தப் படத்துக்கு வரிவிலக்கு தரமாட்டாங்க தமிழ்நாட்டுலே! அதுனாலே அதோட பெயரை ’ஐ’ன்னு வச்சிருங்க! சிக்கலிருக்காது!"

"இது ஏதோ காமெடிப்பட டைட்டில் மாதிரியிருக்குதே! நான் நடிக்கிறது ஐயப்பசாமி பக்திப்படமாச்சே! சாமியைக் கொச்சைப்படுத்துறா மாதிரி இருக்காதா?"

"அட நீங்க வேறே, தமிழ்நாட்டுலே நிறைய பேரு ஒவ்வொரு சீசன்லேயும் ஐயப்பசாமியை வச்சுக் காமெடிதான் பண்ணிட்டிருக்காங்க! அங்க சாமியைக் கிண்டல் பண்ணினா சீக்கிரம் பெரிய ஆளாயிரலாம். கிடைச்ச சான்ஸை கோட்டை விட்டிராதீங்க சார்!"

"நான் கூட தமிழ் சினிமான்னதும் என்னமோ ஏதோன்னு பயந்து போயிருந்தேன். இன்னும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ஆர்யா!’

"சொல்றேன் கேளுங்க! சினிமாவுலே என்ன வேண்ணா வசனம் பேசலாம். ஆனா, வெளியிலே பேசும்போது கொஞ்சம் கவனமாப் பேசுங்க! இதை நானே இப்போ தான் புரிஞ்சுக்கிட்டிருக்கேன்."

"அடடா, என்னாச்சு?"

"அத ஏன் கேட்கறீங்க சார், தமிழனோட ரசனை சரியில்லேன்னு சொல்லிட்டேன். அதுக்குப் போயி பல்லடத்துலே செருப்பு மாலையெல்லாம் போட்டுட்டாங்க!"

"ஐயையோ!"

"பதறாதீங்க சார், செருப்பு மாலை என் போஸ்டருக்குத்தான். பாலாபிஷேகம்னாலும் சரி, செருப்புமாலைன்னாலும் சரி, அது போஸ்டருக்குத்தான்னு தமிழ்நாட்டுலே ரொம்பத் தெளிவாயிருக்காங்க!"

"கொஞ்சம் பயமாத்தானிருக்கு ஆர்யா!"

"இதுக்கெல்லாம் பயப்படலாமா? அடுத்தவாட்டி முதல்வருக்கு பாராட்டுவிழா நடக்கும்போது போய் ஒரு டான்ஸ் ஆடி, உடான்ஸ் விட்டா எல்லாம் சரியாயிடும்."

"அது எப்போ நடக்குமோ யார் கண்டாங்க?"

"அதுதான் அடிக்கடி நடக்குதே! மாசாமாசம் அமாவாசை வருதோ இல்லியோ, பாராட்டுவிழா கண்டிப்பா வந்தே தீரும். அந்த மாதிரி சீக்கிரமே ஒரு விழா வந்தா, என்னோட படமும் ரிலீஸ் ஆயிடும்."

"அட, தமிழ்நாட்டுலே அரசியல், சினிமா ரெண்டுமே படு ஈஸியா இருக்கும்போலிருக்குதே! இருந்தாலும், என்னோட முதல்படம்கிறதுனாலே நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்."

"கரெக்ட்! சினிமாவுலே வேண்ணா என்னத்தை வேண்ணா காட்டலாம். பொண்ணு பார்க்க வந்தவன் கிட்டே ஒருத்தி, தன்னை தோட்டக்காரன் உட்பட நாலஞ்சு பேரு கெடுத்திட்டாங்கன்னு சொன்னா அது காமெடி! ஒரு போலீஸ் ஸ்டேஷனிலே கள்ளப்புருசனும் கள்ளக்காதலியும், கூடவே இன்னும் மூணு கள்ளக்காதலங்களும் பஞ்சாயத்துக்கு வர்றா மாதிரி காட்டுனா அதுவும் காமெடி! கல்யாணமாகாத ஒருத்தன் ஒரு பொண்ணை பலவந்தம் பண்ணுறா மாதிரி காட்டுனா அதுவும் காமெடி! ஆனா, மேடையிலே மட்டும் பேசிட்டா, பொத்துக்கிட்டு வந்திரும். உடனே கொடும்பாவிதான்; செருப்புமாலைதான்!"

"அது சரி, உங்களுக்கு சங்கமெல்லாம் இருக்கே, அவங்கல்லாம் சப்போர்ட்டுக்கு வர மாட்டாங்களா?"

"அட நீங்க வேற, சங்கத்துலே பெரிய ஆளாயிருக்கிறவங்க வெவகாரமே சந்தி சிரிச்சிட்டிருக்கு. இதையெல்லாம் கவனிக்க நேரமில்லாம எல்லாரும் அவங்கவங்க கட்சிவேலையிலே மும்முரமாயிருக்காங்க! மிஞ்சி மிஞ்சிப்போனா ரெண்டு மூணு அறிக்கை வரும். அப்புறம் எல்லாரும் இளிச்சுக்கிட்டு போஸ் கொடுத்திட்டு போட்டோ எடுத்துப் போடுவாங்க! அவ்வளவு தான்!"

"அதுதானே பார்த்தேன். அப்போ, ஒண்ணும் வில்லங்கம் வராதுங்கறீங்க!"

"வரவே வராது. தமிழ்நாட்டுலே அரசியலும் சினிமாவும் ஒரே குட்டையிலே ஊறின மட்டைங்க! இதிலேருந்து அங்கே போனாலோ, அதிலிருந்து இங்கே வந்தாலோ பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லே! அதுனாலே தைரியமா நடிங்க! யாரு கண்டா? உங்களை வச்சு தமிழ்நாட்டுலே பா.ஜ.க.வளர்ந்தாலும் வளர்ந்திரும்."

"அப்போ தமிழ்நாட்டுலேயும் எங்க கட்சி இருக்கா?"

"அட என்னங்க இது, அதுக்கு எவ்வளவு இடம் வேணும்? அதுவும் ஒரு மூலையிலே பிசுக்கு மாதிரி ஒட்டிக்கிட்டுதானிருக்கு! ஓ.கே.சார்! ஆல் தி பெஸ்ட்!"

"ரொம்ப நன்றி ஆர்யா! உங்க படம் ரிலீஸ் ஆனா, என்னையும் கூட்டிக்கிட்டுப் போங்க! அது சரி, ரிலீஸ் ஆகுமா?"

"ஆகாம என்ன, அது ஸ்ரேயா நடிச்ச படம், அத ரிலீஸ் பண்ணலேன்னா சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போறதா சேட்டைக்காரன்னு ஒருத்தர் அறிவிச்சிருக்காரு! கண்டிப்பா ரிலீஸ் ஆகும். வரட்டுமா, சாமி சரணம்!"

"சாமி சரணம்!"

Thursday, November 25, 2010

லிவிங் டுகெதர்-வேதாளம்

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து உனக்குத் தெரிந்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கிறாய்! ஆனால், உனது இச்செய்கையைக் கண்டு உனக்கு வேறு எதுவுமே தெரியாது என்று பலர் எள்ளி நகையாடுவார்கள் என்று புரியவில்லையா? நீ எவ்வளவு முயன்றாலும் அதற்கு உரிய பலனும் கிடைக்காமல் போவதால் உன் மீது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. உண்மையிலேயே நீ அறியாமையால் இதைச் செய்கிறாயா அல்லது எதற்கு வம்பு என்று புதுமையாக எதையும் முயற்சிக்காமல் உன்வழியே நீ போய்க்கொண்டிருக்கிறாயா என்று குழப்பமாக இருக்கிறது. ஒரு கதை கூறுகிறேன் கேள்," என்றது.

ஒரே ஒரு ஊரில் சேட்டைக்காரன் என்று ஒருவன் இருந்தான். அவனை சிறந்த அறிவாளி என்று தோராயமாக ஒரு நாலைந்து பேர் கருதினர். ’ஆத்துலே போற தண்ணியை அய்யாகுடி அம்மாகுடி,’ என்பது போல இந்த சேட்டைக்காரனும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, வருந்தி வருந்தி இடுகைகள் எழுதி எல்லாரையும் வருத்தி, அதாவது மகிழ்வித்துக் கொண்டிருந்தான். மம்மியே வந்து கும்மினாலும், ’மொக்கையது கைவிடேல்’ என்ற கொள்கையிலிருந்து அவன் அம்மியைப் போல இம்மியளவும் நகராமல் இருந்தான்.

டிசம்பர் சீசன்,மாம்பழ சீசன், சபரிமலை சீசன், குற்றால சீசன் என்று இருப்பதுபோல, வலையுலகில் அவ்வப்போது ஏதாவது சீசன் வந்துபோய்க்கொண்டிருக்கும். ஒரு சீசனும் இல்லாவிட்டாலும், எவனையாவது அல்லது எவளையாவது வம்புச்சண்டைக்கு இழுத்தாவது புதுப்புது சீசனைக் கண்டிபிடிக்காவிட்டால், வலையுலகில் நிறைய பேருக்கு ஹிட்ஸ் கிடைக்காது; புதிதாகப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெங்காயவிலை போல குப்பென்று ஏறாது என்பது எழுதப்படாத விதி. சமீபகாலமாக வலையுலகில் சக்கை போடு போட்டுக்கொண்டிருப்பது லிவிங் டுகெதர் சீசன்!

சேட்டைக்காரனுக்கு அறிவு மிக அதிகம் என்பதால், அதை அவன் ஒருபோதும் உபயோகித்து இடுகைகள் எழுதுவதில்லை என்பதை அனைவரும் அறிவர். எனவே, அவன் வழக்கம்போல, ஸ்ரேயாவின் படத்தைப் போட்டு சிலபல மொக்கைகளை எழுதியும், இலவசமாகக் கிடைத்த ஒரு மென்பொருளை உபயோகித்து கச்சாமுச்சாவென்று சில படங்களைப் போட்டும் "நானும் ரவுடிதான்,’ என்று வலையுலகில் வலம்வந்து கொண்டிருக்கிறான்.

இந்த சூழ்நிலையில், சேட்டைக்காரனுக்கு மிகவும் வேண்டிய சகபதிவர்கள் ’லிவிங் டுகெதர்’ பற்றி ஒரு ரவுண்டு எழுதி முடித்து விடவே, அவனும் அவ்வப்போது தொகுதிக்குப் போகும் எம்.எல்.ஏ.போல சில இடுகைகளுக்குச் சென்று பின்னூட்டமும் எழுதித் தொலைத்துவிட்டான். ஆனால், லிவிங் டுகெதர் குறித்து தனது வலைப்பதிவில் அவன் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கவே, இதைக் கண்டித்து 25-11-2010 அன்று சென்னையில் நகரப்பேருந்துகள் எதுவும் ஓடவில்லை.

கூடிய விரைவில் ’லிவிங் டுகெதர்’ குறித்து சேட்டைக்காரன் இடுகை எழுதாவிட்டால், சென்னையிலுள்ள அனைத்து வலைப்பதிவர்களையும் ’விருதகிரி’ படத்தின் முதற்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக, அதன் தயாரிப்பாளர் தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வரவே, பல பதிவர்கள் தத்தம் கணினிகளைக் காயலான்கடைக்கு எடுத்துச் செல்வதாக காற்றுவாக்கில் செய்தி வந்தவண்ணம் உள்ளது.

"பொறுத்தது போதும்; பொங்கி எழுது,’ என்று சேட்டைக்காரனும் ’லிவிங் டுகெதர்’ குறித்து எழுதுவதற்காக வழக்கம்போலவே, தட்ஸ் டமில் மற்றும் மாலைமலர் இணையதளங்களுக்குச் சென்றபோது அவனது கண்களில் இந்தச் செய்திபட்டது.

"காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது: ரூ.7 லட்சம் நகை- பணம் பறிமுதல்

பெரம்பூர், நவ 24

சென்னை யானைக்கவுனி கல்யாணபுரத்தை சேர்ந்தவன் சோனிராஜ் (வயது 29). பிரபல கொள்ளையன். 2 முறை குண்டர் சட்டத்தில் சென்றவன். இவனது காதலி தனலட்சுமி.

காதலியுடன் உல்லாசமாக வாழ சோனிராஜ் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடி வந்தான். ஓட்டேரி ஈகின் கார்டன் ஜதர்கார்டன், வாளைமாநகர் பகுதியில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்தான்.

ஒட்டேரி உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி சோனிராஜை கைது செய்தனர். இவனிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்."

இந்தச் செய்தியைப் படித்ததும், இதையே தனது ’லிவிங் டுகெதர்’ இடுகையில் எழுதிவிடலாம் என்று உற்சாகத்தில் துள்ளிக்குதித்தான் சேட்டைக்காரன். அப்படியே எழுதியும் விட்டான்.

இக்கதையைக் கூறி முடித்த பின் வேதாளம், "விக்கிரமா? இந்தச் செய்தியில் திருமணத்துக்கு முன்னர் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே! வழக்கம்போல சம்பந்தா சம்பந்தமில்லமால் இந்த இடுகையிலும் சேட்டைக்காரன் கிறுக்குத்தனமாக இதை எழுதியிருப்பது ஏன்? மற்ற வலைப்பதிவர்களைப் போல ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதைப் பற்றி எழுதாமல், அத்துடன் கொஞ்சம் கூட தொடர்பில்லாத இந்த செய்தியை இடுகையாகப் போட்டு வாசகர்களின் உசிரை வாங்குவது ஏன்? இது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன் "அட வெவரம் கெட்ட வேதாளமே! உனக்கு சேட்டைக்காரனே தேவலாம் போலிருக்குதே! இந்தச் செய்தியிலே வர்ற திருடனோட பேரு சோனிராஜ்! பொதுவா சேட்டைக்கு சோனியா அகர்வால், சோனியா காந்தி தவிர, சோனியா இருக்கிறதும் பிடிக்கும்; சோனியா இருக்குறவங்களையும் புடிக்கும். அத்தோட இந்தத் திருடன் தன் வயித்துப் பசிக்காகத் திருடலே! தன் காதலி மேலேயிருந்த கண்மூடித்தனமான காதலுக்காக திருடினான். வலைப்பதிவாளர்கள் இப்போ விவாதிச்சிட்டிருக்கிறது: LIVING TOGETHER! ஆனா, சோனிராஜோட கொள்கையோ "LIVING-TO-GET-HER". ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி இடுகை எழுதினா மாதிரியும் ஆச்சு! ஒரு மொக்கை அதிகமாப் போட்டதாவும் ஆச்சு! புரிஞ்சுதா?"

விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவனது மவுனம் கலையவே, பழையபடி அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது. விரக்தியடைந்த விக்கிரமன் சேட்டைக்காரனை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்துப்போனான்.

Wednesday, November 24, 2010

இங்கே துப்பாதீர்கள்!


பீகார்! இந்தியாவின் ஏனைய பகுதியினரின் ஏளனத்துக்கும் அலட்சியத்துக்கும் எப்போதும் இலக்காகிற பீஹார்! சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று வேளச்சேரி நிலையத்திலிருந்து கடற்கரைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டபோது சென்னை நகரத்தில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு முளைத்து அடர்ந்து படரத்தொடங்கியிருக்கிற முரண்பாடுகளைக் கண்கூடாகப் பார்க்க நேரிட்டது.

பெருங்குடி, தரமணி, திருவான்மியூர் என ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், தமிழில் பேசுவது பஞ்சமாபாதகம் என்பது போல நுனிநாக்கு ஆங்கிலமும், ஆடம்பரமான அலைபேசிகளும், அலட்சியமான உடைகளுமாக ஏறிய பன்னாட்டு நிறுவனங்களின் நவயுகக் கொத்தடிமைகள்!

அவர்களுடன் அலைபேசியின் பண்பலைகளை அலறவிட்டபடி ’டோச்சே..டொரிகிண்டி டோச்சே...அந்தமைன நிதிடோச்சே’ என்று ரஹ்மானின் தெலுங்குப்புயலில் தலையாட்டியபடி வந்து கொண்டிருந்தவர்களும் உடன் ஏறிக்கொண்டிருந்தனர்.

இவர்களுக்கும், ஏனைய சென்னைவாசிகளுக்கும் சற்றும் தொடர்பில்லாமல், செம்பட்டைத் தலைகளுடனும், புகையிலை குதப்புகிற வாய்களுமாய், முடைநாற்றமடிக்கிற உடைகளோடு கூட்டம் கூட்டமாக ஏறிக்கொண்டு உடன்வந்த பீகாரிகள்!

திருமயிலை நிலையம் வரைக்கும் ரயில் நிலையங்களில், இருபுறங்களிலும் சுவர்களில் பான்-பராக், புகையிலை மென்று குதப்பித் துப்பிய கறைகள், சென்னையில் கட்டிடவேலைகள் பெருமளவு நடக்குமிடங்களிலெல்லாம் சாரிசாரியாய் வந்து குடியேறத்தொடங்கியிருக்கும் பீகாரிகளின் எண்ணிக்கையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க.....


"மும்பையைக் கெடுத்தது போதாதுன்னு இங்கேயும் வந்திட்டானுங்க! சே!"

"என்ன பண்ணுவாங்க சார்? அது ஒரு உருப்படாத ஸ்டேட்! சோத்துக்கு வழியில்லேன்னா வெளியே போய்த்தானே தீரணும்?"


"இந்த ஆறுமாசமா ரொம்ப அதிகமாயிருக்கு சார்! கன்ஸ்ட்ரக்சன் தொடங்கி டீக்கடை வரைக்கும் பத்தடிக்கு ஒரு பீகார்க்காரன் இருக்கான்!"


"அதுக்கென்ன பண்ண? நம்மாளு நாளைக்கு மூன்னூறு ரூபாய் கூலி கேட்குறான். அஞ்சு மணியாயிடுச்சுன்னா ஆபீசர் மாதிரி கிளம்பிடுவான். சம்பளத்தை வாங்கினான்னா நாலு நாளு ஆளையே பார்க்க முடியாது. கமல், ரஜினி சினிமா ரிலீஸ் ஆனா லீவு போட்டிருவான். தண்ணியடிச்சிட்டு மேஸ்திரி கூட சண்டை போடுவான். ஏதாவது சொன்னா, வட்டம் மாவட்டமுன்னு எவனாச்சும் ரவுடியைக் கூட்டிக்கிட்டு வந்து வேலையை நிறுத்துவான். இந்த பீகார்ப்பசங்க அப்படியா? நூறு நூத்தி இருபத்தஞ்சு ரூபா கூலியும், ஒரு வேளை சோறும் போட்டா, எருமை மாடு மாதிரி உழைக்கிறான். ஏழு மணிவரைக்கும் வேலை பார்க்கிறான். ஓவர்டைம் தர்றேன்னு சொன்னா, ராப்பூரா வேலை பார்க்க தயாராயிருக்கான். இவனுங்க நிறைய பேரு வந்து, நம்மாளுங்களுக்கு வேலை கிடைக்காமத் திண்டாடினாத் தான் புத்திவரும்!"


என் முதுகுக்குப் பின்னால் நடந்துகொண்டிருந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

எனக்கு முன்னால், கழுத்தில் பரமசிவன் டாலர் தொங்கிய கறுப்புக்கயிறணிந்து கொண்டிருந்த அந்த பீகார்க்கார இளைஞன் ஒவ்வொரு நிலையம் வந்தபோதும், ஜன்னல் வழியே பிளாட்பாரத்தில் துப்பிக்கொண்டே வந்தான். அசல் சென்னைவாசியாய் லட்சணமாய், நான் எழுந்து போய் எதிர்ப்பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

அந்தப் பயணம் முடிந்து பலமணி நேரங்கள், அந்த பீகாரி இளைஞன் துப்பிக்கொண்டிருந்ததையும், இரயில் நிலையங்களின் கறைபடிந்த சுவர்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருந்ததும் இப்போது நினைவுக்கு வந்தது.
ஆனால், இன்று.....! வன்முறை, சாதிக்கொடுமை, தீவிரவாதம் என பல கொடுநோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் பீகார் என்ற மாநிலம், ஜனநாயகத்தின் கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

’இது தேறாது!" என்று கழித்துக்கட்டப்பட்ட ஒரு மாநிலம், பண்பலம், அடக்குமுறை, குடும்ப அரசியல், மதச்சார்பு என்ற பல்வேறு ஆயுதங்களை மழுங்கடித்து, சுரண்டியவர்களையெல்லாம் துரத்தியடித்திருக்கிறது.

அதைக்காட்டிலும்.....


"நிதிஷ்குமாருக்கு எனது பாராட்டுகள்! எனது நல்வாழ்த்துகள்! இவ்வளவு மோசமான தோல்வியை ஏன் அடைந்தோம் என்று நாங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது,’ என்று தொலைக்காட்சியில் ஒப்புக்கொண்ட லாலு பிரசாத் யாதவ்.


"எங்கள் கட்சியை இனி துவக்கநிலையிலிருந்துதான் பீகாரில் மேம்படுத்த வேண்டும் போலிருக்கிறது,’ என்று மென்றுவிழுங்காமல், மழுப்பாமல் தோல்வியை ஏற்றுக்கொண்ட திருமதி.சோனியா காந்தி.


இந்தத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து அம்மாநில அளவிலும் சரி, தேசீய அளவிலும் சரி, தலைவர்கள் வெளிப்படுத்துகிற நாகரீகமான கருத்துக்களும், ’இந்த தேசம் உருப்படுமா?’ என்று தொடர்ந்து எழும் கேள்வியின் வேகத்தைச் சற்றே கட்டுப்படுத்தியிருக்கிறது.


இலவசமாய் எதையோ தருகிறேன் என்று எந்தக் கட்சியும் பிரசாரம் செய்யவில்லை! தோல்வியுற்ற பிறகு, கள்ள ஓட்டுப்போட்டு ஜெயித்து விட்டார்கள் என்று அழுகுண்ணியடிக்கவில்லை. ஜனநாயகத்தைப் பணநாயகம் வென்றுவிட்டது என்று மக்களின் தீர்ப்பை யாரும் கொச்சைப்படுத்தவில்லை.

இவையெல்லாவற்றையும் விட, வாக்குப்பதிவு நடைபெறும் இடமொன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தும் மக்கள் பெருவாரியாக வாக்களித்து தங்களது அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.


திடீரென்று பீகாரையும், பீகார்க்காரர்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது. இனி ஒவ்வொரு முறை, பான்பராக் துப்பிய கறையைப் பார்த்தாலும், எனக்கு பீகார் மக்களின் நம்பிக்கை நினைவுக்கு வரும்.

அத்துடன், இந்தச் சுவர்களை சுத்தப்படுத்துவது பற்றி நம்மூரில் யாரும் கவலைப்படப்போவதில்லை என்பதிலும் மாற்றமில்லை என்பதால், இனி சென்னையில் இருக்கும்போதெல்லாம் பீகாரிகளைப் பற்றியே அதிகம் யோசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Friday, November 19, 2010

புள்ளாகொழம்பு

"சேட்டை, மணி ஒண்ணாச்சே? சாப்பிடப்போகலாமா?"

"வரதாச்சாரி சார், நீங்க வெளியிலே சாப்பிடவே மாட்டீங்களே?" நான் வியப்புடன் கேட்டேன். "என்னாச்சு இன்னிக்கு?"

"நோக்கு விஷயமே தெரியாதா? இன்னிக்கு ஆண்கள் தினமோன்னோ?" என்று உற்சாகமாகக் கூறினார் வரதாச்சாரி. "அதுனாலே தான் இன்னிக்கு எல்லாமே ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு பார்க்கிறேன்."

"அப்படீன்னா இன்னிக்கு ஒருநாள் உங்க வீட்டுலே மாமி சமையலா?"

"என்ன கொழுப்பா? ஒரு நாள் அவ பண்ணற புள்ளாகொழம்பையும் பருப்பு உசிலியும் சாப்பிட்டுப் பாரு! அடுத்த கோரமண்டலைப் புடிச்சு விசாகப்பட்டணத்துக்கே ஓடிப்போயிடுவே!"

"அதென்ன சார் புள்ளாகொழம்பு? கேள்விப்பட்டதேயில்லையே?"

"புளியில்லாக் கொழம்புடா அசடு! வளவளன்னு பேசிண்டிருக்காம எந்துண்டுவா! நேக்கு கபகபன்னு பசிக்கறது."

ஹும், பிஸ்மில்லாவிலிருந்து அரை பிளேட் பிரியாணி ஆர்டர் செய்யலாம் என்ற ஆசையில் மண் விழுந்தது. இன்றைக்கு ராம பவனோ, சங்கீதாவோ போய் சாப்பாடுதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு வரதாச்சாரியோடு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

"சேட்டை, இந்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம்னு ஒண்ணு இருக்காமே? நோக்குத் தெரியுமா?"

"கேள்விப்பட்டிருக்கேன் சார். என்ன விஷயம்?"

"அவா கிட்டே சொல்லி இந்த புள்ளாகொழம்பை தடைபண்ணறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா? நேக்கு நாக்கு செத்துப்போயிடுத்துடா!"

"சார், அவங்க எவ்வளவு பெரிய பெரிய விஷயங்களுக்காகவெல்லாம் போராடிட்டிருக்காங்க! போயும்போயும் உங்க புள்ளாகொழம்பு மேட்டருக்கெல்லாம் அவங்களை இழுக்கறீங்களே?"

"அதுவும் சரிதான், அவாளெல்லாம் எங்கே புள்ளாகொழம்பு சாப்பிட்டிருக்கப் போறா? கொடுத்து வச்சவா!"

"சார், அவங்கல்லாம் பெண்களாலே ரொம்ப பாதிக்கப்பட்டவங்க சார்!

"என்ன பாதிப்பாம்? கொஞ்சம் விபரமாத்தான் சொல்லேன். நானும் தெரிஞ்சுப்பேனோல்லியோ?"

"அதாவது சார், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் இருக்கில்லையா, அதுலே பொய் கேஸ் போட்டு, மாமனார், மாமியார் எல்லாரையும் கூண்டோட ஜெயிலுக்கு அனுப்பிடறாங்களாம்!"

"யாரு பொம்மனாட்டிகள் தானே? பண்ணுவா...பண்ணுவா! நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ? என் கல்யாணத்தப்போ ஜானவாசத்துக்கு கோட்டு தர்றேன்னு சொன்னா. நானும் ஜெமினி கணேசன் மாதிரி கோட்டெல்லாம் போட்டுண்டு போட்டோவுக்குப் போஸ் கொடுக்கலாம்னு ஆசையா காத்திண்டிருந்தா, நேக்கு ரெயின்-கோட்டை வாங்கிக் கொடுத்துட்டாடா!"

"அதுனாலேன்ன சார், அடுத்த நாள் காசியாத்திரைக்குக் குடையும் கொடுத்திருப்பாங்களே? மழைக்காலத்துலே உங்களுக்கும் ஒரு செலவு மிச்சம் தானே?"

"அதுபோனாப் போறதுன்னு நானும் விட்டுட்டேன்னு வையேன். ஆனா, இந்தப் புள்ளாகொழம்புதான் டாலரேட்டே பண்ணமுடியலேடாப்பா! அது போகட்டும், ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இன்னம் வேறே என்னென்னத்துக்குப் போராடறா?"

"இந்தக் குடும்ப வன்முறைச்சட்டம்னு ஒண்ணு இருக்கு சார்! புருசன் அடிச்சிட்டான்னு புகார் சொல்லி போலீஸ்லே புடிச்சுக்கொடுத்திடறாங்களாம்."

"நன்னாத்தானிருக்கு போ! இவா பண்ணற வயலென்ஸ் எதுலே சேர்த்தியாம்? போனமாசம் நான் ஆடி அசந்து ஆத்துக்குள்ளே போயி ’அடியே பங்கஜம், ஒரு வாய் காப்பி போட்டுத்தாயேன்,’னு கேட்டதுக்குப் பிலுபிலுன்னு பிடிச்சுண்டுட்டா...!"

"அப்படியா?"

"ஆமா, அங்கே அகிலா கேன்சர்லே செத்துண்டிருக்கா. உங்களுக்கு காப்பி கேக்கறதான்னு சண்டைக்கு வந்துட்டான்னா பாரேன்!"

"அடடா, யாரு சார் அகிலா?"

"எல்லாம் டிவி.சீரியல் ஹீரோயின் தான்! நேக்கென்னமோ அந்த அகிலா அடுத்த வைகுண்ட ஏகாதசி வரைக்கும் சாவாள்னு தோணலை. இப்போத்தான் டாக்டர் வந்து பார்த்துட்டு அம்பதாயிர ரூபாய் பணம் கேட்டிருக்கார். அவா பாத்திரம் பண்டத்தையெல்லாம் வித்துக் காசாக்கிண்டு வர்ற வரைக்கும் நான் காப்பி சாப்பிடாம இருக்க முடியுமோ?"

"அது சரி! கடைசியிலே காப்பி கொடுத்தாங்களா இல்லையா?"

"கொடுக்காம என்ன, ஒரு கப் காப்பியைக் கொடுத்துட்டு சீரியல் முடியுற வரைக்கும் வாயத்திறக்கப்படாதுன்னு வேறே சொல்லிட்டா...!"

"அட பாவமே, நீங்களும் வாயைத் திறக்காமலே இருந்தீங்களாக்கும்?"

"எப்படிடா திறப்பேன்? அவ காப்பியிலே சர்க்கரைக்குப் பதிலா ரவையைப் போட்டுக் கொடுத்திட்டாடா! இந்த லோகத்துலேயே தம்ளரிலே உப்புமா சாப்பிட்டவன் நான் ஒருத்தன் தான் தெரியுமோ?"

"அச்சச்சோ! உண்மையிலேயே இது ரொம்பக் கொடுமைதான்!"

"ஏதோ, தெனமும் புள்ளாகொழம்பு சாப்பிட்டு சாப்பிட்டு நேக்கு எல்லாமே இம்யூன் ஆயிடுத்தோ தப்பிச்சேனோ!"

"நீங்க சொல்லுறதைப் பார்த்தா எனக்கே ஒருவாட்டி உங்கவீட்டுப் புள்ளாகொழம்பு சாப்பிடணும் போலிருக்கு சார்!"

"நோக்கு ஏண்டா இந்த விபரீதமான ஆசையெல்லாம்? ஏதோ இது நைன்டீன் ஃபிஃப்டீ பாடிங்கிறதுனாலே தாக்குப்பிடிச்சிண்டிருக்கு! அப்புறம் இன்னொரு விஷயம்! ஆத்துக்காரி தளிகை பண்றச்சே, நான்தான் காய்கறியெல்லாம் நறுக்கிக் கொடுப்பேன் தெரியுமா?"

"சார், இதெலென்ன சார் தப்பு? நம்மாலானத நாமும் செஞ்சா அவங்களுக்கு உதவியாத்தானே இருக்கும்?"

"முழுசாக்கேளுடா அபிஷ்டு! அதுலே வெண்டைக்காய், கத்திரிக்காயெல்லாம் ஈஸியா நறுக்கிடலாம். அதை அவ பண்ணிட்டு, முட்டக்கோசு, சேனைக்கிழங்கு மாதிரி கஷ்டமான காய்கறியெல்லாம் என்னைக் கொடுத்து நறுக்கச் சொல்லுறாடா!"

"என்ன சார் அழுகுண்ணியடிக்கிறீங்க? இதெல்லாம் ஒரு மேட்டரா?"

"அப்படிச்சொல்லாதே சேட்டை! சேனைக்கிழங்கை வெட்டிப்பாரு தெரியும். அன்னிக்குப்பூரா உடம்பு அரிச்சிண்டே இருக்கும். சொறிஞ்சு சொறிஞ்சு இப்பல்லாம் நங்கநல்லூர்லே எல்லாரும் என்னை வரதாச்சொறின்னு தான் கூப்பிடறா தெரியுமோ?"

"கஷ்டம் தான் சார்! ராமபவனுக்கே போயிடலாமா?"

"ஓ யெஸ்! அப்புறம் சேட்டை, நீ எப்பவாச்சும் எங்காத்துக்கு வந்தேன்னா, நான் சொன்னதை மாமி கிட்டே சொல்லிடாதே! அவளுக்கு யாராவது என்னைப் பத்தித் தப்பாச் சொன்னாக் கூட கோபம் வராது; ஆனா, புள்ளாகொழம்பப் பத்தித் தப்பாச் சொன்னா துவம்சம் பண்ணிடுவா!"

"அடிப்பாங்களா சார்?"

"சேச்சே! அன்னிக்கு சாயங்காலம் பிரண்டை அல்வாய் பண்ணி சாப்பிட்டே ஆகணுமுன்னு அடம் பிடிப்பா! என் சம்பளத்துலே பாதி மல்லிகா பத்ரிநாத் புஸ்தகத்துக்கும், டாக்டருக்குமே போறதுடா!"

"கவலைப்படாதீங்க சார்! சொல்ல மாட்டேன்!"

"நீ சொல்ல மாட்டேன்னு தெரியும்! இருந்தாலும்....ஹிஹி!"

"நான் கூட ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு ஒரு மேட்டர் சொல்லணும் சார்! நடிகை சோனா அரசியலுக்கு வர்றாங்களாம். அவங்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாதுன்னு ஒரு தீர்மானம் நிறைவேற்றச் சொல்லணும்."

"நேக்கு சோனாவெல்லாம் தெரியாதப்பா! நான் கடைசியாப் பார்த்தபடம் குலேபகாவலி!"

"என்ன சார்? முதலமைச்சரைப் பார்த்து அஞ்சு லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்திருக்காங்க! ரஜினியோட குசேலன் படத்துலே நடிச்சிருக்காங்க! பொறந்தநாளைக்கு அனாதைக்குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டிருக்காங்க! பேப்பருலே போட்டோ போட்டு நியூஸ் வந்திச்சே?"

"ஓ! அப்படியா? அப்படீன்னா, எலெக்ஷனிலே நின்னு ஜெயிச்சு சீஃப் மினிஸ்டராயிட வேண்டியதுதான். தப்பில்லை!"

"அப்படிச் சொல்லாதீங்க சார்! அவங்க கொள்கை என்ன தெரியுமா? "ஆண்களை நம்பாதே!" அவங்களுக்கு ஆம்பிளைங்க ஓட்டுப்போடலாமா சார்?"

"நான் போடுவேன். புள்ளாகொழம்பைத் தடை பண்ணினா, நான் கண்டிப்பாப்போடுவேன்!"

பேசிக்கொண்டே ராமபவனுக்குள் நுழைந்து சாப்பாட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம்.

"நாராயணா..நாராயணா! ஹோட்டல்லே சாப்பிட்டு எவ்வளவு வருஷமாச்சு தெரியுமோ? இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப்போறேன் பாரேன்!" வரதாச்சாரி ஆர்வத்தோடு முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டுக்கொண்டு உட்கார, ஹோட்டல் சிப்பந்திகள் பரிமாறத்தொடங்க, திடீரென்று வரதாச்சாரியின் முகம் மாறியது.

"சேட்டை, என்னடா இது?"

"என்னாச்சு சார்?"

"இங்கேயும் புள்ளாகொழம்பா? பெருமாளே.....!"

Tuesday, November 16, 2010

தோம் தாத்தா!

"சித்ரகுப்தா! அனேகமாக நாம் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்,’ முகத்தைச் சுளித்தபடியே கூறினார் எமதர்மராஜன்.

"எப்படி சொல்கிறீர்கள் பிரபோ?" வினவினார் சித்ரகுப்தன்.

"கப்பு தாங்கமுடியலேடா சாமீ!"

"பிரபோ! தங்களுக்கு விஷயம் தெரியாதா? இந்தியாவில் அறுபது கோடி மக்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது என்று சென்ற ஆண்டு ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே!

"ஆகாயமார்க்கமாக வரும்போதே கவனித்தேன். அதனால் தான் மக்கள் சாலையோரங்களிலும், ரயில்வே தண்டவாளங்களருகிலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களா? நம் நரகத்தை விட இது மோசமாக இருக்கும் போலிருக்கிறதே சீனா கூனா?"

"பிரபோ! இது குறித்து பேசுவதால் முகம் சுளிக்க மாட்டீர்கள் என்றால் ஒரு தகவல் சொல்கிறேன். சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத பல பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் இருட்டில் தங்களது இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போது திருடர்கள், சமூக விரோதிகள் போன்றோரிடம் அகப்பட்டு வருகிறார்களாம்."

"அது மட்டுமல்ல சீனா தானா! சுகாதாரமற்ற சூழலில் இருப்பதால் தினமும் ஐந்து வயதுக்குட்பட்ட ஆயிரம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்களாமே! அதனால் தான் மேலோகத்தில் எப்போதும் இந்தியர்களின் பெரும்பான்மையே அதிகமாக இருக்கிறது."

"என்ன கொடுமை பிரபோ? ஒரு பக்கம் இந்தியாவுக்கு வருகை புரிந்த அமெரிக்க ஜனாதிபதி ’இந்தியா எழுச்சி பெற்ற நாடு’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இங்கோ கோடானுகோடி மக்களுக்கு காலையில் ’இருக்கவே’ இடமில்லை போலிருக்கிறதே?"

"சரி சரி, இங்கு வந்த முகூர்த்தமோ அல்லது இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்ததாலோ, எனக்கும் உடனடியாக கழிப்பறைக்குப் போக வேண்டும் போலிருக்கிறது சித்ரகுப்தா!"

"அதோ பாருங்கள் பிரபோ! நவீன இலவசக் கழிப்பறை!"

எமதர்மராஜனும், சித்ரகுப்தனும் தங்களது இயற்கை உபாதைகளை முடித்து விட்டு வெளியேறியபோது வாசலில் இருந்த அந்த ஆசாமி, ’தலைக்கு ரெண்டு ரூபா கொடு!" என்றார்.

"என்னது? வெளியே இலவசம் என்று தானே போட்டிருக்கிறீர்கள்?" என்று குழப்பத்தோடு கேட்டார் எமதர்மராஜன்.

"யோவ்! இலவசமா கொடுக்க இது என்ன கலர் டிவியா? கேஸ் அடுப்பா? காசைக் கொடுத்திட்டுப் போவியா, சட்டம் பேசிட்டிருக்கே...?"

"இது அநியாயம்,’ என்று பொருமினார் சித்ரகுப்தன். "வெளியே இலவசம் என்று சொல்லி உள்ளே காசு வசூல் செய்கிறீர்களே?"

"என்ன அநியாயத்தைக் கண்டுட்டே? நம்ம நாட்டைக் கூடத்தான் ஜனநாயக நாடுன்னு சொல்லுறாங்க! உள்ளே அப்படியா இருக்கு? இந்த மூத்திர செட்டுக்கு லட்ச ரூபாய் கொடுத்து குத்தகைக்கு எடுத்திருக்கேன் தெரியுமா? மாசா மாசம் போலீஸ், கார்பரேஷன், ஹெல்த் இன்ஸ்பெக்டருன்னு மாமூல் வெட்டினாத் தான் பொழைப்பு நடத்த முடியும். சும்மா பேசாதே நைனா...நாலு ரூபாயைக் கொடுத்திட்டுப் போ!"

"நரனே, இவர் யார் தெரியுமா? எமதர்மராஜன்! பாசக்கயிற்றை வீசி உன் உயிரைப் பறித்து விடுவார் ஜாக்கிரதை!" என்று சித்ரகுப்தன் எச்சரித்ததும் அந்த ஆசாமி முதல் முறையாக இருவரையும் ஏறிட்டுப் பார்த்து விட்டு சற்றே கலக்கமடைந்தான்.

"கோச்சுக்காதே வாத்யாரே! அசப்புலே கவுண்டமணி-செந்தில் மாதிரி இருந்தீங்களா, அதான் உங்க கிட்டே காசு வாங்குனாத் தப்புல்லேன்னு கேட்டுட்டேன். நீ போ வாத்யாரே, காசெல்லாம் வேண்டாம்!"

"என்ன கொடுமை சித்ரகுப்தா? இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடு என்கிறார்கள். இப்படி அடிப்படை வசதிகளுக்குக் கூட பொதுமக்களை அல்லல்படுத்திக் கொண்டிருக்கிறார்களே? அப்புறம் எப்படி வெளிநாட்டிலிருந்து வருகிற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயரும்? சும்மாவா இன்னும் பல நாடுகள் இந்தியாவை சுகாதாரமற்ற நாடு என்று கேலி பேசுகிறார்கள்?"

"பிரபோ! பொதுமக்கள் இது குறித்துப் பேசவோ குரல் எழுப்பவோ சங்கோஜப்படுகிறார்கள். இதுவே திருமணமில்லாமல் சேர்ந்து வாழ்வது பற்றியோ அல்லது ஓரினச்சேர்க்கை பற்றியோ இருந்தால் மணிக்கணக்கில் பேசுவார்கள்; எழுதுவார்கள்; வழக்குப் போடுவார்கள்; தொலைக்காட்சியில் பேட்டியளிப்பார்கள். ஆனால், ஒரு சாதாரண மனிதனின் அன்றாடத்தேவையோடு சம்பந்தப்பட்ட இது பற்றி யாரும் வாய்திறந்து பேசுவதை அநாகரீகம் என்று எண்ணுகிறார்கள்." என்று விசனப்பட்டார் சித்ரகுப்தன்.

"அட மாங்காய் மடையர்களா? ஒரு மனிதன் படுக்கையறைக்குப் போகிறானோ இல்லையோ, கழிவறைக்குக் கண்டிப்பாகப் போகத்தானே வேண்டும்?" என்று பொரிந்தார் எமதர்மராஜன்.

"இவர்களுக்கு ஹரியானா மாநிலம் எவ்வளவோ தேவலாம் பிரபோ! அங்கே மணமகனின் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால் பெண் கொடுப்பதில்லை என்று ஒரு விழிப்புணர்ச்சிப் பிரசாரம் நடந்து வருகிறது!NO TOILET: NO BRIDE" என்று தகவலளித்தார் சித்ரகுப்தன்.

"பலே பலே! பொதுவாக ஆண்கள் பெண்களிடம் வரதட்சணை கேட்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியானாவில் பெண்கள் ஆண்களிடம் போறதட்சணை கேட்கிறார்களா?" என்று வாய்விட்டு சிரித்தார் எமதர்மராஜன்.

"சரியாகச் சொன்னீர்கள் பிரபோ!"

"சீனா கூனா! இந்தியாவில் கைபேசியிருக்கிற பலருக்குக் கழிப்பறை வசதியில்லை என்று கூட ஐ.நா.சபை ஒரு முறை சொல்லியிருக்கிறது. தெரியுமா?" என்று தலையிலடித்துக் கொண்டார் எமதர்மராஜன்.

"பிரபோ! இதனால் இதுபோன்ற சூழலில் வசிப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. காற்று, நீர் என்று அசுத்தம் எங்கெல்லாமோ பரவி அதன் காரணமாக பெரும்பாலான இந்தியர்கள் இளவயதிலேயே பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்களது ஆயுள் குறைந்து வருகிறது!"

"உண்மைதான் சீனா தானா! அந்தக் காலத்துப் பெரியவர்கள் தொண்ணூறு வயதுவரையிலும் கூட மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அதன் ரகசியம் என்ன என்று தெரியுமா?"

"என்ன பிரபோ?" சித்ரகுப்தன் ஆர்வத்தோடு கேட்டார்.

"நாளைக்கு இரண்டு; வாரத்துக்கு இரண்டு; மாதத்துக்கு இரண்டு; ஆண்டுக்கு இரண்டு."

நாளைக்கு இரண்டு முறை உடலிலிருக்கிற கழிவை அப்புறப்படுத்துவது...
வாரத்துக்கு இரண்டு முறை எண்ணை தேய்த்துக் குளிப்பது.
மாதத்துக்கு இரண்டு முறைதான் தாம்பத்திய உறவு.
வருடத்துக்கு இரண்டு முறை விளக்கெண்ணையை உட்கொண்டு குடலைச் சுத்தம் செய்து கொள்வது!

இவற்றில் முதலும் கடைசியுமாய் இருப்பவை, ஏறக்குறைய ஒன்றுதான்! மனிதனின் உடலில் சேருகிற கழிவை அகற்றுவது, ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு மிக முக்கியமானது என்பது தான் அது! ஆனால், பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்களாகி, ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், சுகாதாரமற்ற சூழலில் வசிக்கிற மக்கள் அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடைக்கல் தான்! இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் விரைவில் புரிந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது. இல்லாவிட்டால், பச்சிளம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு லட்சக்கணக்கில் இரையாவதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை!"

"பிரபோ! இதற்காகத் தான் உலகெங்கும் நவம்பர் 19-ம் தேதி ’உலகக் கழிப்பறை தினம்(WORLD TOILET DAY),’ என்று கருதப்படுகிறது. மனிதனின் இந்த அத்தியாவசியத் தேவையை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சங்கோஜம் பார்க்காமல் இந்தியர்களும் இந்த நாளைக் கவனத்தில் கொண்டு, அவரவர்களால் இயன்ற அளவு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்."

"சீனா கூனா! நம்மாளுங்க காதலர் தினம் தான் கொண்டாடுவாங்க! கழிப்பறை தினம் கொண்டாடுவாங்களா?"

"என்ன செய்வது பிரபோ? இந்தத் தலைமுறை கழிப்பறை தினம் குறித்து அறிந்து, உரியதைச் செய்யாவிட்டால், அடுத்த தலைமுறை ’கல்லறை தினம்’ நிறைய கொண்டாட வேண்டி வரும்."

"தோம் தாத்தா...!"

ஒரு வேண்டுகோள்: முதலில், இதை ஒரு தொடர்பதிவாக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதை வாசிக்கிறவர்கள் அனைவரும் இந்த முக்கியமான விஷயம் குறித்து இடுகைகள் எழுதி இயன்றவரை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த உதவுமாறு இப்போது உங்கள் அனைவரிடமும் கோரிக்கை வைக்கிறேன். நன்றி!

Monday, November 15, 2010

கை கொடுக்கும் கை!

வழக்கத்துக்கு மாறாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் காலை முதலே தொலைபேசியின் மணி அடித்துக்கொண்டேயிருந்தது.

"ஹலோ! நாங்க தினப்புளுகு பத்திரிகையிலிருந்து பேசுறோம்! தலைவரு இருக்காருங்களா?"

"கட்சித்தலைவரா? கோஷ்டித்தலைவரா?"

"ஓ! அதை மறந்திட்டேனுங்க சார்! சரி, இன்னி தேதியிலே உங்க கட்சியிலே எத்தனை கோஷ்டிங்க இருக்கு. சும்மா தோராயமா சொன்னாப் போதுங்க!"

"ஒரு பத்து நிமிஷம் கழிச்சுக் கூப்பிடறீங்களா? இன்னும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வரலே!"

"பரவாயில்லே சார்! எனக்கு ஒரே ஒரு தகவல் தெரியணுங்க! உங்க ஆபீஸ் வாசல்லே ஒரே கூட்டமாயிருக்கே, யாராச்சும் தில்லியிலேருந்து உங்க தலைவருங்க வராங்களா?"

"தில்லியிலேயிருந்து வந்தா இங்கே ஏன் வர்றாங்க? அவங்க பாட்டுக்கு கோபாலபுரத்துக்குப் போயி சி.எம்மைப் பார்த்திட்டு அடுத்த ஃபிளைட்டைப் புடிச்சு திரும்பிப் போயிருவாங்களே?"

"ஒ! நன்றி சார்!"

தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்ட மறுகணமே, மீண்டும் சிணுங்கியது.

"ஹலோ! காங்கிரஸ் ஆபீஸா? நாங்க சேட்டை டிவியிலேருந்து பேசுறோம்! உங்க ஆபீஸ் வாசல்லே ஒரே கூட்டமா இருக்குதாமில்லே? ஏதாவது பெரிய கோஷ்டிப்பூசலா? சண்டை சச்சரவு ஏதாவது நடக்குமுன்னா, நாங்களும் வாடகைக்கு ஒரு கேமிராவை வாங்கிட்டு உடனே வந்திடுவோம் சார்! என்ன சார் மேட்டர்?"

"என்னய்யா கிண்டலா? நாங்க என்ன இன்னி நேத்திக்கா கோஷ்டிச்சண்டை போடுறோம்? எங்க பராம்பரியம் தெரியாமக் கேள்வி கேட்காதீங்க! போனை வையுங்கய்யா!"

போனை வைத்துவிட்டு அந்தத் தொண்டர் வெளியே நோட்டமிட்டார். ’அட ஆமாம், வாசல்லே என்ன திடீர்னு இவ்வளவு கும்பல்?’

மீண்டும் தொலைபேசி.....! ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

"ஹலோ! சார், எனக்கு ஒரு லோடு சிமென்டு வேணும் சார்! வண்டியை அனுப்பட்டுங்களா?"

"ஹலோ! இது கட்சி ஆபீஸ்! சிமென்ட் கடையில்லை! எங்க கிட்டே சிமென்ட் இருந்திருந்தா, கட்சியிலே இருக்கிற பொத்தலையெல்லாம் அடைச்சிருக்க மாட்டோமா? வைய்யா போனை...!"

ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

"ஹலோ!"

"ஹலோ! அண்ணே! ஒரு வண்டி ஜல்லி கிடைக்குங்களா? கான்க்ரீட் வேலை அப்படி அப்படியே நிக்குதுண்ணே!"

"அடாடாடா! காலங்கார்த்தாலே ஏன்யா கழுத்தறுக்கறீங்க? ராங் நம்பர் போட்டிருக்கீங்கய்யா....!"

தொண்டர் ஆசுவாசமாகப் பெருமூச்சு விட்டுக்கொண்டார். "இன்று யார் முகத்தில் விழித்தோம்?"

ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

"ஹலோ! ஒரு மூட்டை பொன்னி பச்சரிசி; பத்து கிலோ அஸ்கா சர்க்கரை; துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஒவ்வொரு கிலோ; அப்படியே பெருங்காயம் ஒரு சின்ன டப்பா...."

"யாருலே அது? இதென்ன மளிகைக்கடையா? கட்சி ஆபீசுலே! நம்பரை சரியாப் பார்த்துக் கூப்பிடுங்க...!"

ட்ரிங்...ட்ரிங்ங்ங்........

தொண்டருக்கு உறைத்தது. ’என்னவோ தவறு நடந்திருக்கிறது; அதனால் தான் கட்சி அலுவலகத்தின் வாசலில் இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதோ? போய் என்னவென்று கேட்டு விடலாம்...!"

"இந்தாம்மா! இப்படி வாங்க, என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

"தலைவரைப் பார்க்க தண்டையார்பேட்டையிலேருந்து வந்திருக்கேங்க!"

"அது சரி, எதுக்கு கையிலே ரெண்டு மூணு பையோட வந்திருக்கீங்க?"

"ஒரு மாசத்துக்குத் தேவையான அரிசி,பருப்பு வாங்கணுமில்லே?"

"என்னம்மா சொல்றீங்க?"

இதற்குள் கூட்டத்திலிருந்து இன்னொரு பெண்மணி முண்டியடித்து முன்னேறி வந்தார்.

"ஐயா மகராசா! நீங்க நல்லாயிருக்கணும்! அடுத்த வாரம் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். பாழாப்போன வெங்காயம் கிலோ நாப்பது ரூபாய் விக்குது. கிலோ மூணு ரூபாய்க்குச் சீரழிஞ்சிட்டிருந்த முருங்கைக்காய் இப்போ நூறு ரூபாய்க்கு விக்குது! தலைவர் கிட்டே சொல்லி நீங்கதானய்யா ஏதாவது சல்லிசா வாங்கித்தரணும்...!"

தொண்டருக்குத் தலை சுற்றியது.

"என்னம்மா எங்க கட்சி ஆபீஸ்லே வந்து காமெடி பண்ணிட்டிருக்கீங்க? அதுக்கெல்லாம் இங்கேயே நிறைய பேரு இருக்காங்க தெரியுமா? இங்கே மளிகை சாமானும் காய்கறியும் விக்குறோமுன்னு யாரு சொன்னாங்க? நாங்கல்லாம் கொள்கையைக் கூட விக்குறதில்லே தெரியுமா? ஸ்டாக் எப்பவோ தீர்ந்து போச்சு! போங்கம்மா, வீட்டுக்குப் போயிச் சேருற வழியைப் பாருங்க!"

"என்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க? உங்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தானே ’சிமென்ட் விலை குறையலேன்னா, சலுகை விலையிலே சத்தியமூர்த்தி பவன்லே காங்கிரஸ் விற்பனை செய்யும்,’னு அறிக்கை விட்டாரு! சிமென்ட், ஜல்லி, மணல் மட்டும் வித்தாப்போதுமா? மளிகை, காய்கறி விலையுந்தான் தினமும் ஏறிக்கிட்டே போகுது! அதையும் இங்கேயே சலுகை விலைக்கு வித்தீங்கன்னா, எங்களுக்குப் பணமும் மிச்சம்; கோயம்பேடு போற அலைச்சலும் மிச்சமாகுமில்லே?"

தொண்டர் மூர்ச்சையடைந்தார்.

Wednesday, November 10, 2010

கையிலே காசு; வாயிலே தோசை!

எக்ஸ்க்யூஸ் மீ! ஒரே ஒரு சீரியஸ் பத்தி...(அப்புறம் மிச்சம் மொக்கையென்று சொல்லவா வேண்டும்?)

"ஓய்வுநேரத்தில் சம்பாதிக்க வேண்டுமா?"

அண்மைக்காலமாக, பேருந்துகளிலும், ரயில்வண்டிகளிலும் இதுபோன்ற நோட்டீஸ்கள் பல்கிப் பெருகிவிட்டன. பத்து ரூபாய் சம்பாதிக்க சிங்கியடிக்க வேண்டியிருக்கிற இந்தக் காலகட்டத்தில், உட்கார்ந்தவாறே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டுகிற ஆசாமிகள் பெருகிவருவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது. அதே சமயம், எனது சட்டைப்பையில் எவனிடமோ நான் ஏமாந்து வாங்கித் தொலைத்த ஐநூறு ரூபாய் கள்ளநோட்டு இடியாகக் கனத்துக் கொண்டிருந்தது. உழைத்த காசு கையில் தங்க மாட்டேனென்கிறது; உழைக்காமல் காசு சம்பாதிக்க விரும்புகிற கூட்டமும், அவர்களின் பேராசையை பயன்படுத்தி மொட்டையடிக்கிற கும்பலும் தைரியமாக செல்போன் நம்பருடன் நோட்டீஸ் அடித்து சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கிறது.

ஜெய் ஹோ!


அலுங்காமல் குலுங்காமல் காசு சம்பாதிக்க அப்படி என்னதான் வழி இருக்க முடியும்? ஒரு தடவை கேட்டுத்தான் பார்ப்போமே?

உடனே அந்த நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருந்த அலைபேசி எண்களில் ஒன்றைத் தொடர்பு கொண்டேன்.

"குட்மார்னிங்!" என்று ஸ்ரேயாவைப் போல இனிமையான குரல் மறுமுனையில் எதிரொலித்தது. (’அடப்பாவி, நீ ஸ்ரேயாவை விட மாட்டியா?’ என்று கறுவாதீர்கள்! நான் சொன்னது பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல்!)

"என் பேர் சேட்டைக்காரன்! உங்க நோட்டீஸ் பார்த்தேன். அதான் என்ன விபரம்னு தெரிஞ்சுக்கலாமேன்னு தான்....."

"தேங்க்ஸ் ஃபார் காலிங் மிஸ்டர் சேட்டைக்காரன்! நீங்க இப்போ என்ன பண்ணிட்டிருக்கீங்க?"

"வேர்க்கடலை தின்னுக்கிட்டிருக்கேன்!"

"அதைக் கேட்கலே! நீங்க என்ன வேலை பார்த்திட்டிருக்கீங்கன்னு கேட்டேன் சார்!"

"ஓ அதுவா? பேசின் பிரிட்ஜ் ஷெட்டுலே ரயில் டயருக்குப் பஞ்சர் ஒட்டுற வேலை பார்த்திட்டிருக்கேன்!"

"இங்கிலீஸ் பேசுவீங்களா?"

"ஓ! இங்கிலீஸ்லே பாடவே செய்வேன்! ரிங்கா ரிங்கா ரோசஸ்.....!"

"அவ்வளவு தான் தெரியுமா?"

"இல்லையே...டிங் டாங் பெல்..புசீஸ் இன் த வெல்....ஹூ புட் ஹர் இன்...?"

"கம்ப்யூட்டர் தெரியுமா?"

"பழக்கமில்லீங்க; யாருங்க அவரு?"

"செல்போன் வச்சிருக்கீங்களா?"

"இல்லீங்க! இது பக்கத்து பாசஞ்சர் கிட்டேயிருந்து ஆட்டையைப் போட்டது!"

"கல்யாணம் ஆயிருச்சா?"

"அவரு தூங்கிட்டிருக்காரு! எழுப்பிக் கேட்கட்டுங்களா?"

"அவருக்கில்லே சார்! உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா?"

"இன்னும் ஒருவாட்டி கூட ஆவலீங்க!"

"அப்புறம் ஏன் பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படறீங்க?"

"அது வந்துங்க, ஒரு நாளாவது பார்க் ஹோட்டல்லே போய் பாயா சாப்பிடணுமுன்னு ஆசைங்க!"

"ஓ.கே! குட் அம்பிஷன்! எங்க அட்ரஸை நோட் பண்ணிக்கோங்க! எப்படி பணம் சம்பாதிக்கிறதுன்னு ஒரு டூ அவர்ஸ் டிரைனிங் கொடுப்போம். அதுக்கு டெலிகேட் ஃபீஸ் ஒரு நானூத்தித் தொண்ணூத்தி ஒம்பது ரூபாய் கேஷ் எடுத்திட்டு வாங்க!" என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் எனக்கு முகவரியைச் சொல்ல நான் குறித்துக் கொண்டேன்.

"உங்க பேர் என்ன மேடம்?"

"கலாவதி!"

"தேங்க்ஸ் மேடம்!"

சரி, கையிலிருக்கிற ஐநூறு ரூபாய் கள்ளநோட்டையும் பைசல் பண்ணிவிடலாம்; அப்படியே கலாவதியையும் பார்த்து விடலாம். போனஸாக, உழைக்காமல் பணம் சம்பாதிக்கிற யோசனை கிடைத்தால், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு டியூப்ளெக்ஸ் அபார்ட்மென்ட் வாங்கி, வாசலில் ஒரு ஃபோர்டு ஐகானையும் நிறுத்தி விடலாம். ஒரு ஐப்போட்! அப்புறம் ஒரு 3G கைபேசி! வைத்தியையும், சுரேந்திரனையும் அழைத்துக் கொண்டு எஸ்கேப்பில் படம்...இப்படியே யோசிக்க யோசிக்க, கனவில் கலாவதி கருப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு கடற்கரையில் நடக்க, நான் பின்னால் பாடிக்கொண்டே போவது மாதிரி ஒரு காட்சி கண்முன்னே தோன்றி மறைந்தது.

"வா செல்லம் வா வா செல்லம்......! நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே?"

குறிப்பிட்ட நாளில், லயோலா கல்லூரிக்குப் பின்பக்கத்திலே, மகாலிங்கபுரம் போகிற வழியில் இருந்த அந்தக் கட்டிடத்தின் மாடிக்குள் நுழைந்தபோது, எனக்கு முன்னாலேயே ஜீன்ஸ் போட்ட இளைஞர்கள் முதல் ஜிப்பா போட்ட பெருசுகள் வரை, ஆண்களும் பெண்களுமாய் ஒரு நூறு பேர் உட்கார்ந்தபடியும், நின்றபடியும் நின்றிருந்தனர். கலாவதியைக் காணோமே? யாரிடம் கேட்கலாம்?

"யெஸ் மிஸ்டர்! உங்க பேர் என்ன?"

குரல்வந்த திசையில் பார்த்தபோது, அர்ஜெண்டாக ஒரு பல்செட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்ததுபோல, அசப்பில் என் அப்பத்தா போல ஒரு பெண்மணி! என்னை நோக்கி அவள் புன்னகைத்ததில் என் வயிற்றுக்குள் யாரோ புளியோதரை பிசைவது போலிருந்தது.

"ஐயாம் கலாவதி!"

என்னது? கலாவதியா? இல்லை..நீ காலாவதி!

"என் பேர் சேட்டைக்காரன்!"

"ஓ! உட்காருங்க! இந்த அப்ளிகேஷனை ஃபில்-அப் பண்ணுங்க!"

மூளைக்குள்ளே ’வா செல்லம் வா வா செல்லம்,’ பாட்டு நின்றுபோக, பரவை முனியம்மா கண்முன்தோன்றி ’யே இந்தா..யே இந்தா..யே இந்தா...,’ என்று நக்கலாகப் பாடுவது போலிருந்தது. போதாக்குறைக்கு இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால், என் முறை வருவதற்கு ரொம்ப தாமதமாகும் போலப் பட்டது. வேறு ஏதாவது அதிரடியாகச் செய்து சீக்கிரமாக அங்கிருந்து ’எஸ்’ ஆக வேண்டியது தான்.

"மிஸ் கலாவதி! பார்த்ததுமே கேட்கணுமுன்னு நினைச்சேன்! நீங்க தானே அலங்கோலங்கள் சீரியல்லே ஹீரோயினா வர்றீங்க?"

"நோ!" என்று கலாவதியின் முகம் கூச்சத்தில், பொறித்த ஜவ்வரிசி வடாம் போல சிவக்கவும், ஓமன் படத்தை ஒண்டியாகப் பார்ப்பது போல எனது அடிவயிற்றில் கிலி படர்ந்தது. "அது நானில்லை; நடிகை தேவாங்கினி!"

"அசப்பிலே தேவாங்கு மாதிரியே...ஐ மீன்..தேவாங்கினி மாதிரியே இருக்கீங்களா, அதான் சந்தேகப்பட்டுக் கேட்டேன்!"

அவ்வளவு தான்! காலாவதி சரணாகதியாகி விட்டாள்.

"மேடம்! கடோத்கஜன்னு எனக்குத் தெரிஞ்ச ஒரு டைரக்டர் ’குடும்பம் ஒரு குருமா’னு சீரியல் எடுக்குறாரு! அதுலே ரெண்டு அம்மா, மூணு அக்கா, நாலு தங்கை, அஞ்சு அண்ணி, ஆறு அத்தை, ஒரே ஒரு அப்பா வர்ற மாதிரி கதை! உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லேன்னா, நான் சிபாரிசு பண்ணறேன்."

"நெஜமாவா? அந்த டைரக்டரோட நம்பர் தெரியுமா?"

"இப்போ ரிலீஸ் ஆயிட்டாரு! அதுனாலே எல்லாரும் பேர் சொல்லித்தான் கூப்பிடறோம் . அது போகட்டும்! உழைக்காமலே பணம் சம்பாதிக்கலாமுன்னு சொல்லுறாங்களே! அது எப்படீங்க? வீடு வீடாப் போயி ஏதாவது சோப்பு விக்கணுமா? இன்சூரன்ஸுக்கு ஆள் பிடிக்கணுமா?"

"நீங்க வேண்டியவருங்குறதுனாலே சொல்றேன். எதையும் விக்க வேண்டாம். சுத்தமா உழைக்கவே வேண்டாம்!"

"எப்படீங்க? சுத்தமா உழைக்காம பிச்சையெடுத்துத்தான் காசு சம்பாதிக்க முடியும்!"

"யூ ஆர் ராங் ! பிச்சையெடுக்கிறதுக்கு சங்கீத ஞானம் வேண்டும். "தில்லையம்பல நடராஜா’ விலேருந்து ’அரிமா..அரிமா’ வரைக்கும் எல்லாப் பாட்டும் மனப்பாடமாத் தெரிஞ்சிருக்கணும். நடிக்கத் தெரிஞ்சிருக்கணும். வாய்ஸ் மாடுலேஷன் ரொம்ப முக்கியம். நாங்க சொல்லுற தொழில்லே அதெல்லாம் அவசியமே இல்லை."

"அப்படீன்னா, ஏதாவது சீட்டுக்கம்பனி ஆரம்பிக்கணுமா?"

"அதுக்கு ஒரு ஐயாயிரம் ரூபாயாவது இருந்தாத்தானே கரண்ட் அக்கவுண்டே ஆரம்பிக்க முடியும்? எங்க தொழிலுக்கு அதுவும் தேவையில்லை!"

"அப்படீன்னா, வீடு வீடாப்போகவும் வேண்டாம்! உழைக்கவும் வேண்டாம்! முதலீடும் வேண்டாம்! நீங்க சொல்லுறதைப் பார்த்தா, என்னை மாதிரி ஒருத்தரை ஹீரோவாப் போட்டு படம் எடுக்கப் போறீங்களோ?"

"சேச்சே! நடக்குற காரியமா அதெல்லாம்? இந்தக் காலத்துலே மிருகங்களை வச்சு யாரு படம் எடுக்கிறாங்க?"

"புரிஞ்சு போச்சு! ஆசிரமம் ஆரம்பிச்சு, சாமியார் வேசம் கட்டினா, அஞ்சாறு வருசத்துலே மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங்க் காலேஜ்னு ஆரம்பிச்சு பணம் கோடி கோடியாக் கொட்டும். சரிதானா?"

"ஐயையோ! உங்களுக்கு விசயமே தெரியலே! சாமியாராப் போனவங்க எல்லாராலும் சம்பாதிக்க முடியாது. அதுக்கு அட் லீஸ்ட் ஒரு பாம்புப்புத்து, ஆலமரத்தடியாவது வேணுமே? நாங்க சொல்லுறதுக்கு எதுவுமே வேண்டாம்!"

"அப்போ அரசியலா?"

"வெளையாடறீங்களா! அரசியலுக்கு எவ்வளவு முதலீடு பண்ணனும். குறைஞ்சபட்சம் யார் வீட்டுக்காவது அனுப்புறதுக்கு ஒரு ஆட்டோவாவது வேணாமா? ஒரு பத்து ஃபிளக்ஸாவது வைக்க வேண்டாமா?"

"ஓஹோ! கலாவதி மேடம்! கண்டிப்பா உழைக்காம நேர்மையா யாராலேயும் லட்சாதிபதியாவோ, கோடீஸ்வரனாவோ சீக்கிரமா ஆக முடியாது. இருக்கிற மொள்ளமாறித்தனம் எல்லாத்தையும் சொல்லிட்டேன். அதெல்லாம் இல்லேன்னு நீங்களும் சொல்லிட்டீங்க! அப்புறம் எப்படித்தான் சீக்கிரம் பணக்காரனாவுறதாம்? தயவு செய்து சொல்லுங்களேன்!"

"மிஸ்டர் சேட்டைக்காரன்!" என்று கிசுகிசுப்பாகக் கூறினாள் கலாவதி. "நாங்க ரயில், பஸ் எல்லா இடத்திலேயும் அடிச்சோமில்லே! அதே மாதிரி நோட்டீஸ் நிறைய அடிச்சு அதுலே உங்க செல்போன் நம்பரைப்போட்டு நீங்களும் எல்லா இடத்துலேயும் ஒட்டுங்க! அதைப் பார்த்திட்டு நிறைய பேரு ஐநூறு ரூபாயை எடுத்துக்கிட்டு இங்கே வருவானுங்க! அதுலே உங்களுக்கு நூறு ரூபாய் கமிஷன்! ஒரு வாரத்துக்கு நூறு கேணயன் வந்தா உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய்! மாசத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய்! எப்படி?"

அடப்பாவீங்களா!

"கலாவதி மேடம்! என்ன பேத்தறீங்க? ஒரு நோட்டீசை ஒட்டுனா, வாரத்துக்கு நூறு கேணயன் வந்திருவானா?"

"ஏன் வர மாட்டான்? இப்போ நீங்க வரலியா....?"

ஐயோ சாமீ! யாராச்சும் எனக்கொரு AK-47 வாங்கித்தாரீயளா?

Sunday, November 7, 2010

டியர் மிஸ்டர் நரகாசுரன்

"மிஸ்டர் சேட்டை! கண்ணைத்திறந்து பாருங்க!"
எதிரே வெள்ளை வெள்ளையாக ஓரிரு உருவங்கள் தெரியவும், ஏதோ கனவுக்காட்சி போலிருந்தது.

"யாரு? ஸ்ரேயாவா?"

"டேய் உருப்படாதவனே!" என்று கேட்ட குரல் வைத்தியுடையது. "இது ஆஸ்பத்திரிடா! காலையிலே தீபாவளி லேகியம் சாப்பிட்டதும் நீ மயக்கம் போட்டு விழுந்திட்டே! அடிச்சுப்புடிச்சு ஆம்புலன்ஸ்லே போட்டுத் தூக்கிட்டு வந்தா, நர்ஸைப் பார்த்து ஸ்ரேயாவான்னு கேட்குறியேடா?"

"அடப்பாவீங்களா! லேகியமாடா அது? ரோட்டுக்குப் போடுற தாரை உருட்டி ஒரு உருண்டை கொடுத்து, ஆஸ்பத்திரிக்கு வரவைச்சிட்டீங்களே? உருப்படுவீங்களாடா?"

"மிஸ்டர் சேட்டை! இது ஆஸ்பத்திரி; இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது!" என்று கிட்டத்தட்ட டாக்டர் மாதிரியே, வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ்கோப்புமாக இருந்த ஒருவர் கடிந்து கொண்டார். "நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க? உங்க வயித்தைப் பார்த்து டிராபிக் போலீஸோன்னு சந்தேகப்பட்டுட்டேன்."

"டாக்டர், இவன் என்ன சாப்பிடலேன்னு கேளுங்க!" இது சுரேந்திரனின் குரல். "ஒரு அடையாறு ஆனந்த பவனையே முழுங்கியிருக்கான். ஓஸியிலே கிடைச்சாலும் சாப்பிட ஒரு அளவு வேண்டாமா?"

"கவலைப்படாதீங்க, ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்திரலாம்!" என்றார் டாக்டர்.
"என்னது, ஸ்கேனா? நான் என்ன கர்ப்பமாவா இருக்கேன்?"

"மிஸ்டர் சேட்டை, உங்களுக்கு வயிறு எவ்வளவு வீங்கியிருக்கோ, அதே மாதிரி வாயும் பெரிசாயிருக்கு! நர்ஸ், இந்த ஆளுக்கு ஒரு ஊசிபோட்டுத் தூங்க வையுங்க! எல்லா நரம்பும் க்ளியராத் தெரியுது பாருங்க! வெயினிலேயே போட்டுருங்க!"

"ஊசியா? ஐயையோ....!"

என் பேச்சை அலட்சியம் செய்தபடி, ஒரு ஜாடையில் சுனைனா மாதிரியிருந்த அந்த நர்ஸ், எருமைக்கு ஜூரம்வந்தால் போடுகிற மாதிரி ஒரு பெரிய ஊசியை எனது மணிக்கட்டருகே போட, எனது கண்கள் மெல்ல மெல்ல சொருகிக்கொள்ள, மயக்கமாக வந்தது.

"பாவி நரகாசுரா....!" நான் அரைமயக்கத்தில் முணுமுணுத்தேன்.

"சேட்டை!" என்று யாரோ இருட்டிலிருந்து அழைப்பது போலிருந்தது.

"யாருய்யா அது? நானே மயக்கத்திலிருக்கேன்!"

"நான் தான் நரகாசுரன்! நீ கூப்பிட்டே, நான் வந்திட்டேன்! சொல்லு சேட்டை, எதுக்காக என்னைத் திட்டுனே?"

"திட்டாமக் கொஞ்சுவாங்களா? இதுவரைக்கும் எத்தனை அசுரர்கள் இருந்திருக்காங்க, செத்திருக்காங்க! நீ ஒருத்தன் தான்யா இந்த மாதிரி பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு வரம் வாங்கி எங்க உசிர வாங்கியிருக்கே! அதுலேயும் தீபாவளிக்குன்னு ஸ்பெஷல் லேகியம் வேற! அதைப் பார்த்ததுமே எனக்கு செத்துப்போன பாட்டி,தாத்தாவெல்லாம் ஞாபகத்துக்கு வந்திட்டாங்க தெரியுமா?"

"சேட்டை, அனாவசியமா என் மேலே பழியைப் போடாதே! பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு சொன்னது என்னவோ வாஸ்தவம் தான்! அதுக்காக ஊருப்பட்ட பலகாரத்தைப் பண்ணி, மூக்கு முட்டத்தின்னுங்கன்னா சொன்னேன்? அந்தக் காலத்துலே ஆஸ்பத்திரி, டாக்டர், நர்ஸெல்லாம் கிடையாதுன்னு தான் அஜீரணம் வராம இருக்க, லேகியம் பண்ணிச் சாப்பிட்டாங்க!"

"இந்த ரோஷத்த்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! எக்மோரிலேருந்து திருநெல்வேலிக்குப் போக பிரைவேட் பஸ்ஸிலே எண்ணூறு ரூபாய் வாங்குறான்! ஆடித்தள்ளுபடியிலே அம்பது ரூபாய்க்கு வித்த டி-ஷர்ட்டை ரங்கநாதன் தெருவிலே ஐந்நூறு ரூபாய்க்கு விக்குறாங்க, அதையும் ஜனம் முண்டியடிச்சுக்கிட்டுப் போய் வாங்குது! பாழாப்போன குருவி வெடிக்கு வந்த வாழ்வைப் பாருய்யா, ஒரு பாக்கெட் இருபது ரூபாய்! அவனவன் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடுறான்! எல்லாத்துக்கும் நீ தான் காரணம்!"

நரகாசுரன் சிரித்தான்.

"ஏன்யா இப்படி சிரிக்கிறே? நீயும் எந்திரன் பார்த்துட்டியா?"

"சேட்டை, உங்க தாத்தா, பாட்டியெல்லாம் கடன் வாங்கியா பண்டிகை கொண்டாடுனாங்க? பண்டிகைன்னா ஆடம்பரத்தைக் காட்டுறதுக்கில்லே கண்ணா! சொந்தமும் பந்தமும் ஒண்ணா உட்கார்ந்து சந்தோஷமாப் பேசி, இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, வருசத்துலே ஒரு நாளாவது முடிஞ்சவரைக்கும் பாசாங்கில்லாம இருக்கிறது தான். ஆனா, நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? பண்டிகைன்னாலே பாசாங்குன்னு ஆக்கிட்டீங்க! பக்கத்து வூட்டுக்காரன் ஆயிர ரூபாய்க்குப் பட்டாசு வாங்குனா, நீங்க ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு வாங்குகுறீங்க! எதிர்வூட்டுலே காஞ்சீபுரம் பட்டு வாங்குனா, உங்க வூட்டுலே பெனாரஸ் பட்டு வாங்குறீங்க! வூட்டுலெ பலகாரம் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு, கடையிலே போய் கண்டதையும் அவன் சொல்லுற விலைக்கு வாங்கித் தின்னறீங்க! அப்புறம் பத்துநாளைக்கு அஜீரணத்துக்கு மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க! பண்ணுறதெல்லாம் நீங்க; பழி என் மேலயா?"

"யோவ் நரகாசுரா! இந்த தீபாவளியையெல்லாம் தமிழன் கொண்டாடவே கூடாதுன்னு நிறைய பேரு சொல்லிட்டிருக்காங்க தெரியுமா?"

"ஆமாய்யா, உங்க வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க பொறந்தநாளுக்கு சந்து,பொந்தெல்லாம் கட்-அவுட் வைக்கிறீங்க! லவுட்-ஸ்பீக்கர் போட்டு இருக்கிறவன் காதையெல்லாம் செவுடாக்கறீங்க! சினிமாக்காரனுக்குப் பொறந்தநாளுன்னு பேப்பர்லே முழுப்பக்கம் விளம்பரம் போடுறீங்க! அதையெல்லாம் தமிழன் பண்ணினாத் தப்புல்லே! வழிவழியா கொண்டாடுற தீபாவளியைக் கொண்டாடிட்டா, உங்க பண்பாடு, கலாச்சாரமெல்லாம் அப்பீட்டு ஆயிருமா?"

"மிஸ்டர் நரகாசுரன், ’சம்சாரம் அது மின்சாரம் படத்துலே விசு சொல்லுறா மாதிரி உன்னை சம்ஹாரம் பண்ணின அன்னிக்கு திவசம் மாதிரி கொண்டாடி எள்ளுருண்டை புடிக்கணுமய்யா! இப்போ பாரு, உன்னாலே நான் தீபாவளி ரிலீஸ் படம் ஒண்ணு கூட பார்க்க முடியாம, ஆஸ்பத்திரியிலே படுத்துக்கெடக்கேன்."

"சேட்டை, பார்த்தியா? என் பேரைச் சொல்லி எத்தனை படம் ரிலீஸ் ஆவுது? இன்னிக்குக் கூட டிவியிலே புதுப்புதுப்படமா போடுறாங்க...? உனக்குப் புரியுறா மாதிரியே சொல்லுறேன்..கேட்டுக்கோ....! இன்னிக்கு ஒரே நாளிலே ரெண்டு ஸ்ரேயா படம்...!"

"என்னது? மெய்யாலுமா....?"

"ஆமா சேட்டை! அழகிய தமிழ்மகன்! சிவாஜி! ரெண்டு ஸ்ரேயா படம் போடுறாங்களே! நரகாசுரனைத் திட்டுனியே! நான் இல்லாட்டா ஒரே நாளிலே ரெண்டு ஸ்ரேயா படம் பார்த்திருக்க முடியுமா?"

"ஐயையோ, ரெண்டு ஸ்ரேயா படமா? இது தெரியாம கண்டதையும் தின்னுட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்திட்டிருக்கேனே? யோவ் நரகாசுரா, என்னை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லுய்யா! அடேய் வைத்தி, சுரேந்திரா! யோவ் டாக்டரு! அம்மா தாயே, நர்ஸு....! ரெண்டு ஸ்ரேயா படம் பார்க்கணும்...டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா...."

"பை சேட்டை!" என்று சிரித்தபடியே நரகாசுரன் மறைந்தான்.