Saturday, January 23, 2010

பெத்தமனம்

கட்டிடத்திற்கு நேர் எதிராக இருக்கிற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிற பெரும்பாலான பெண்மணிகளின் பெயர் முதற்கொண்டு எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமல்ல, அனேகமாக அவர்களைக் குறித்து அறிந்திராதவர்கள் தெருவில் மிகக்குறைவானவர்களே இருக்கக்கூடும். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இல்லத்தரசிகள்; குழந்தைபராமரிப்பு,கணவனை அலுவலகத்துக்கு அனுப்புதல், துணிகளை மொட்டைமாடியில் காயப்போடுதல், பால்கனியில் நின்றபடி அவரவர் வீட்டுச்சமையல்கள் குறித்த தகவல் பரிமாற்றங்கள்; குப்பை வண்டி சென்று சில நிமிடங்களானபிறகும் கைகளில் பிளாஸ்டிக் டப்பா சகிதம் நேற்று இரவு விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடருதல், ரேஷன், சமையல் கேஸ் குறித்த கவலைகள், மேல்நிலைத்தொட்டியில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனால் ஏற்படுகிற சில்லறை வாக்குவாதங்கள் என்று தங்களுக்கேற்ற உலகத்தைச் சமைத்துக்கொண்டு அதற்குள் மகிழ்ச்சியாக, மனக்குறைகளா என்ற மர்மத்தை வெளிப்படுத்தாமல் பெரும்பாலும் உரக்கப்பேசி, உரக்கச்சிரித்து உறவாடிக்கொண்டிருக்கிற ஜீவன்கள். ஒன்பது மணிக்கு மேல், ஆறு மணிவரை அவர்களின் வெடிச்சிரிப்பும் பேச்சும் பல சமயங்களில் எரிச்சலும் சில சமயங்களில் ஒரு இனம்புரியாத பரிதாபத்தையும் ஏற்படுத்துவதுண்டு. விடுப்பெடுத்து ஓய்வெடுக்கிற நாட்களில் இவர்களின் பேச்சுக்களைக் கூர்ந்து கேட்டு, அவர்களுக்குள்ளே இன்னும் பெண்களுக்கே உரித்தான அப்பாவித்தனம் இன்னும் மிச்சமிருக்கிறது என்று எண்ணி மனதுக்குள் சிரித்ததுமுண்டு.

காரணம் தெரியாது. ஆயினும், இவர்களின் இடைவிடாத பேச்சுக்களுக்கும், அபரிமிதமான உரத்த சிரிப்புக்களுக்கும் பின்னால், வெளியே சொல்ல விரும்பாத சில குடும்பத்துயரங்களோ அல்லது பிற பெண்களோடு ஒப்பிடுகையில் தாங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மையோ இருத்தல் சாத்தியமே.

அவர்களுக்குக் குறிப்பாக இன்னது தான் பேச்சுக்குரிய பொருளாக இருக்க வேண்டும் என்ற வரைமுறைகள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் மோர்க்குழம்பு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். எல்லாருக்கும் பொதுவாக இருப்பது, அவ்வப்போது அவர்கள் தங்களைப் பிடித்து வைத்திருக்கிற நான்கு சுவர்களின் மீதான கோபம் மட்டும் தான் என்று அடித்துச் சொல்லலாம். சில சமயங்களில் எரிச்சல்பட்டு "இதுங்களையெல்லாம் எங்கேயாவது வேலைக்கு அனுப்பித் தொலைச்சிருக்கக் கூடாதா?" என்று அவர்களின் எஜமானர்கள் மீது கோபம் ஏற்பட்டதுமுண்டு.

அந்தக் கட்டிடத்துக்கு அடிக்கடி காலை நேரங்களில் வந்துபோகிற ஒரு பாட்டியைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வரும்போதும் கையில் ஏதாவது கொண்டுவருவார். சில சமயங்களில் கீரை, சில சமயங்களில் வேறு ஏதாவதோ?

அந்தப் பாட்டி இரண்டு தெருக்கள் தள்ளி வசித்து வருகிறார் என்பதையும், அவரது மகன் திருமணமாகி, மனைவி மகளுடன் இந்தக் குடியிருப்பில் வசித்து வருகிறார் என்பதையும் சில நாட்கள் கழித்துத் தான் புரிந்து கொண்டேன். அவர் பெரும்பாலும் மாடிப்படியேற மாட்டார். கையில் எதையோ வைத்துக்கொண்டு, முதல் தளத்தில் இருக்கும் தன் மருமகளின் பெயரைச் சொல்லி அழைப்பார். சில சமயங்களில் ஓரிரு முறை அழைத்ததுமே மருமகளின் தலை பால்கனியில் தெரிந்து விடும். சில சமயங்களில் அந்தப் பாட்டி பலமுறை அழைக்க நேரிடுவதையும் கவனித்திருக்கிறேன். அவரது மருமகள் மாடிப்படியில் விரைந்தோடி வருவார்.

"என்னம்மா?"

"மாம்பலத்துலே கீரை மலிஞ்சு கிடந்ததுன்னு இவர் வாங்கிட்டு வந்தார். அவனுக்கு கீரைன்னா உயிரு! அடுப்படியிலே வேலை அதிகமாயிருந்தது,இல்லாட்டி ஆய்ஞ்சே கொண்டு வந்திருப்பேன்."

"நீங்க ஏம்மா இந்தக் காலோட ரெண்டு தெரு நடந்து வர்றீங்க?"

"அதுக்கென்ன? டாக்டர் வாக்கிங் போகணுமுன்னு சொல்லியிருக்காரே! அதான் அப்படியே இதையும் கொடுத்திட்டுப்போகலாமுன்னு...."

"சரிம்மா! இருங்க, உங்க பிள்ளை கிட்டே சொல்லி உங்களைக் கொண்டு விடச் சொல்லுறேன்."

"அதெல்லாம் வேண்டாம். பாவம், பத்து மணிக்கு வந்தானோ பதினோரு மணிக்கு வந்தானோ? அவனைத் தொந்தரவு பண்ணாதே! எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் போயிடுவேன்."

கையில் கீரைக்கட்டோடு மருமகள் மாடிப்படியில் வந்ததை விட வேகமாக ஏறுவதையும், அந்தப் பாட்டி வாசல் வரைக்கும் வந்து அடி-பம்பைப் பிடித்துக்கொண்டு ஒரு சில கணங்கள் இளைப்பாறி விட்டு மெல்ல மெல்ல நடந்து தெருமுனையில் திரும்புவதையும் ஒரு சில தடவை பார்த்தேன்.

அப்புறம், இந்தக் காட்சியையும் ஒரு நாள் பார்த்தேன்.

"ஏம்மா? மஞ்சள் கொத்து பிள்ளையார் கோவில் வாசல்லேயே கிடைக்குது. இதை நீ கொண்டு வந்து கொடுக்கலேன்னு யார் அழுதா? ரோடு முழுக்கக் குண்டும் குழியுமா இருக்கு. விழுந்து கிழுந்து தொலச்சா என்னாகிறது? உன்னோட பெரிய ரோதனையா இருக்குதும்மா..."

அந்தப் பாட்டி எதையோ சொல்ல முயல, கணவரின் முதுகுக்குப் பின்னாலிருந்து மருமகள் "எதுவும் பேசாதீர்கள்," என்பது போல சைகை செய்வதைப் பார்த்து மௌனமாவதையும், அதன் பின்னர் மகன் கடுகடுவென்ற முகத்தோடு தனது மோட்டார் சைக்கிளை முடுக்கி அம்மாவை உட்கார வைத்துக்கொண்டு வீட்டில் கொண்டு விடச் செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

"அவரே ஆயிரம் டென்சன்லே இருக்காரு! இவங்களை யாரு இப்போ மஞ்சக்கொத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க? காலங்கார்த்தாலே அவரோட மூடை ஸ்பாயில் பண்ணிட்டாங்க வந்து! இன்னிக்கு நாள் முழுக்க அவர் சிடுசிடுன்னு எரிஞ்சு விழுவாரு!" என்று அந்த மருமகள் சற்றும் விதரணையின்றி இன்னொரு பெண்மணியிடம் சொல்லிக் குறைப்படுவதையும் கேட்டிருக்கிறேன்.

ஆனால், எல்லாக் கடைகளிலும் ஏதோ ஒரு தாய் எதையோ வாங்கிக்கொண்டிருப்பதை தினசரி பார்க்கிறேன். அவர்கள் வாங்குகிற பொருள் எதுவாகினும், அதைப் பார்த்ததும் அவர்களுக்குத் தங்களது பிள்ளையோ, பெண்ணோ ஞாபகம் வருகிறார்கள் போலிருக்கிறது.

அவர்களில் பெரும்பாலானோர்கள் அந்தப் பாட்டியைப் போலவே தங்களது பாசத்தை வெளிப்படுத்தி மகனின் மூடை ஸ்பாயில் செய்திருப்பார்களோ என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

No comments: