Monday, February 28, 2011

பிற்பகல்

அருணுக்கு இரண்டு பழக்கங்கள் இருந்தன; அல்லது அருணின் பல பழக்கங்களில் இரண்டு வினோதமான பழக்கங்களும் இருந்தன என்றும் சொல்லலாம். முதலாவது, ஒவ்வொரு பயணத்தின்போதும், போக வேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள், கொண்டுசெல்ல வேண்டிய சாமான்கள் என விபரமாகப் பட்டியலிட்டு சரிபார்த்து அதனை அப்படியே பின்பற்றுவது. அடுத்தது? எதையாவது பார்த்தாலோ, கேட்டாலோ இயல்பாகவே அமைந்த உள்ளுணர்வு காரணமாக, ’இது உண்மையில்லை; பொய்,’ என்ற முடிவுக்கு வருவதுவோ அல்லது ’இது இப்படித்தான் முடியும்,’ என்று ஊகிப்பதும் அவனது இன்னொரு வழக்கம். சில விதிவிலக்குகள் தவிர, அவனது உள்ளுணர்வு அவனை ஏமாற்றியதில்லை என்றாலும், பல சமயங்களில் அவன் பயந்தது நடந்திருந்ததால் அவன் வருத்தமுற்றதுமுண்டு. இருந்தாலும், போலித்தனத்தை சட்டென்று இனம்காண முடிவதால் அவனுக்கு அது ஒரு குறையாகப் பட்டதில்லை.

போலித்தனம்- இதைப்பற்றி எண்ணுகிறபோதெல்லாம் ஏனோ அவனுக்கு மனோகரி சித்தி நினைவுக்கு வருவதுண்டு.

மனோகரி சித்தியை பத்து வருடங்களுக்கு முன்னர்தான் முதல் முதலாக பரோடா போயிருந்தபோது பார்த்திருந்தான். சித்தி அம்மாவைக் காட்டிலும் உயரம். திருமணமாகி விமானப்படையில் பணிபுரிந்த கணவரோடு வட இந்தியாவிலேயே வாழ்க்கையைக் கழிக்க நேர்ந்ததாலோ என்னவோ, பாளையங்கோட்டைக்காரி என்றால் நம்ப முடியாத அளவுக்கு சருமத்தில் வட இந்தியர்கள் போன்ற பளபளப்பு. சித்திக்கு இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள். நன்கு தமிழ் தெரிந்தும் வேண்டுமென்றே இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள்; தமிழ்நாட்டை, குறிப்பாக சென்னையை எள்ளிநகையாடுவதென்றால், அந்தக் குடும்பத்துக்கே வெல்லம் சாப்பிடுவதுமாதிரி. சென்னைக்காதலனாக இருந்தபோதிலும், அவர்களது எள்ளலைக் கேட்டு கோபம் கொள்வதற்குப் பதிலாக, அவனுக்கு அவர்கள் மீது தன்னிச்சையாக, ஒரு இனம்புரியாத அனுதாபமே ஏற்பட்டிருந்தது.

"பத்தா நஹீ யே கம்பக்த் மதறாஸ் மே லோக் கைஸே ரஹதே ஹை! வஹா தோ ஜான்வர் பீ ரஹ்னா முஷ்கில் ஹை!" (இந்தப் பாழாப்போன மெட்ராஸில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள்? மிருகங்கள் வாழ்வதே கடினமாயிற்றே!)

அருணுக்குப் புரிந்தது. ஆக்ரா, அலஹாபாத், பர்னாலா, அம்பாலா, இந்தூர், பட்டிண்டா என்று அவ்வப்போது ஊர் ஊராய்த் தூக்கியடிக்கப்பட்டவர்களுக்கு, ஒரே ஊரில் பலவருடங்கள் தொடர்ச்சியாக வசிப்பவர்கள்மேல், அவர்கள் உறவினர்கள் என்றாலும்கூட, ஒருவிதமான பொறாமை ஏற்பட்டு விடுகிறதோ என்னமோ?

"இவ்வளவு திட்டறீங்களே மெட்ராஸை! எனக்கென்னவோ ஒருநாள் நீங்க அங்கேயே வர வேண்டிவந்தாலும் வருமுன்னு தோணுது," என்று ஒரு புன்னகையோடு கூறினான் அருண். அவர்களுக்கு எரிச்சலூட்ட வேண்டும் என்று அப்படிச்சொல்லவில்லை; உண்மையிலே அவனுக்கு அப்படித் தோன்றியது.

"நெவர்! மெட்ராஸுலே வந்து அந்தக் கூவத்து நாத்தத்துலே வாழறதை விட நரகத்துக்குப்போகலாம்!" மனோகரி சித்தி இதைச் சொன்னபோது அவளது முகத்திலிருந்த கடுமையை அருண் கவனிக்கத் தவறவில்லை.

மனோகரி சித்தியின் குணாதிசயம் வினோதமானது. கணவன், குழந்தைகளையும், பிறந்தவீட்டு சொந்தங்களையும் கனிவோடும் பாசத்தோடும் கவனிக்கிறவள், ஏனோ கணவனின் தாயாரிடம் மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொள்வாள். வயோதிகத்திலும், மன உளைச்சலிலும், நோயாலும் கூனிக்குறுகிய அந்த மூதாட்டி, பார்த்தாலே பரிதாபம்சுரக்குமளவுக்கு மருமகளின் கொடுமையில் வெலவெலத்துப்போயிருந்தாள்.

"பசிக்குது!" என்று கையில் தட்டையும், தம்ளரையும் தூக்கிக்கொண்டு சமையலறைக்கு வந்து, உள்ளே வரத் துணிவின்றி அவள் வாசலிலேயே நிற்பாள். உடம்பிலிருந்த எண்ணற்ற உபாதைகளில் ஏதேனும் ஒன்றிற்கான மருந்து தீர்ந்துபோனால், அதை மகனிடம் சொல்ல மென்றுவிழுங்குவாள்; மருமகளிடம் கெஞ்சுவாள்.

விருந்தும் மருந்தும் மூன்றுநாட்கள் என்றால், அருணுக்கு ஒன்றரை நாளிலேயே வெறுத்துப்போனது. அந்தச் சூழலில் இருப்பது அடுப்பில் வசிப்பது போலிருந்தது. அந்தக் கிழவியின் அவலத்தைத்தவிர அந்தக் குடும்பத்தில் எதுவுமே உண்மையில்லை என்பது புழுங்கியது. வலுக்கட்டாயமாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, அங்கிருந்து விடைபெறத்துடித்தான். "சித்தி பாசாங்கு செய்வதுபோல இது மகிழ்ச்சியான குடும்பமல்ல; இவர்களது நடிப்புக்கு விரைவில் திரை காத்திருக்கிறது," என்று அவனது உள்ளுணர்வு சொன்னபோது, அவனுக்கே கிலியாக இருந்தது. அவர்களுக்காக பிரார்த்திப்பதைத் தவிர அவனால் செய்ய முடிந்தது வேறு எதுவுமில்லை.

ஆனால், சில வருடங்கள் கழித்து அவனது உள்ளுணர்வு மீண்டும் ஜெயித்தது. அவன் நொந்து கொண்டான்.

அந்தக் கிழவி கவனிப்பாரின்றி பிராணியைவிடவும் கேவலமாக செத்துப்போனாள். ஓய்வு பெற்ற சித்தப்பா, வயதுக்கு ஆகாத விபரீத சபலம் காரணமாக, எங்கோ போய் எப்படியோ, யாருடனோ வசிப்பதாகக் கேள்விப்பட்டான். நான்கு குழந்தைகளும் வளர்ந்து அவர்களின் வாழ்க்கைத்துணையை அவசரகோலத்தில் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு மூலையில் சிதறியபோது, மூத்தமகன், மருமகளோடு மனோகரி சித்தி சென்னைக்கே குடியேறினாள். ஒருமுறை அவர்களது ஆடம்பரமான வீட்டுக்கு அருண் போயிருந்தபோது, சித்தியின் முகத்தில் முந்தைய சிரிப்பில்லை; அவளது சருமமும் சற்றே இருளடைந்து விட்டதுபோலிருந்தது. ஆனாலும்.....

"அவனுக்கு ஆபீஸில் கொடுத்த வீடுப்பா இது. வாடகை இருபத்தி ரெண்டாயிரம் ரூபாய்! எல்லா ரூமுலேயும் ஏ.ஸி.இருக்குது! அவனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா, ஒன்னேகால் லட்சம். வாசல்லே ஹோண்டா சிட்டி நிக்குதே பாத்தியா? டிராபிக் ஜாம் அதிகமாயிருக்குன்னு அவன் சேன்ட்ரோ எடுத்திட்டுப்போறான்...," என்று சித்தி வழக்கம்போல பெருமைபேசிக்கொண்டிருந்தபோது, அருண் ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தான்; கட்டிடத்துக்குப் பின்னால் கருப்புக்கூவம் சூரிய ஒளியில் பளபளத்தது. சிரிக்கிறதோ?

"எப்படியோ, நான் சொன்னது நடந்திச்சா இல்லியா? மெட்ராஸை எவ்வளவு கருவுனீங்க? இப்போ வந்தீங்களா இல்லையா?"

"இல்லையே!" சித்தி சிரித்தாள். "இது இப்போ மெட்ராஸ் இல்லையே; சென்னை ஆயிடுச்சே!"

சித்தி மழுப்பினாலும், சிரித்தாலும் அவளது பதிலில் அடிபட்ட வலி தொனித்தது. அதற்கு அவனது கேள்வி மட்டும்தான் காரணமா...?

அருண் தனது வேடிக்கையை அத்தோடு நிறுத்திக்கொண்டான். எதையும் வெளிக்காட்டாமல் வழக்கம்போல வாங்கி வந்தவற்றை சித்தியிடம் ஒப்படைத்தபோது, அவள் வியப்பில் மாய்ந்து போனாள்.

"எத்தனை வருசமானாலும் இந்தப் பழக்கம் மட்டும் உன்னோடயே இருக்கு. எப்படித்தான் யார் யாருக்கு என்னென்ன பிடிக்குமுன்னு தெரிஞ்சு ஆசையாசையா வாங்கிட்டு வர்றியோ? நம்ம குடும்பத்துலே யாருக்கும் இந்த நல்ல பழக்கம் கிடையாது."

அருண் என்ன சொல்வான்? அவனது உள்ளுணர்வும் அத்தனை வருடங்களாகியும் அவனோடு இருந்து தொலைக்கிறதே?

"சித்தி, இத்தனை வருசம் கழிச்சு உங்களைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம். உங்க பிள்ளைகளை மாதிரி நான் பெரிய வேலையிலே இல்லை. ஏதோ, எப்ப உங்களைப் பார்க்க வந்தாலும் இதே மாதிரி எதையாவது வாங்கிட்டு வர்ற அளவுக்காவது இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க! போதும்."

அருண் சொன்னதன் பொருள் சித்திக்கு விளங்கியிருக்க வாய்ப்பில்லை. காரணம், அவனது உள்ளுணர்வு சொன்னதை அவள் எப்படி அறிவாள்? அவளும் அவனை ஆசீர்வதித்தாள்.

சித்தியின் போலித்தனம் ஒருபோதும் அவனுக்குக் கோபத்தை மூட்டியிருந்ததில்லை. இதுபோல நடிப்பு எல்லாருக்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது. சறுக்கி விழுந்து, முட்டியில் சிராய்த்துக்கொண்டு, உரிந்ததோலின் எரிச்சலும், சற்றே அச்சுறுத்தும் மிதமான இரத்தப்பெருக்கும் தருகிற கலவரத்தை வெளிக்காட்டாமல்,"ஒன்றுமில்லை...ஒன்றுமில்லை! சாதாரணக்காயம்தான்!" என்று சிரிக்க முற்படுகிற அசட்டுத்தனத்தையும் நடிப்பிலோ, போலித்தனத்திலோ சேர்க்கத்தானே வேண்டும்? சித்தியின் போலித்தனமும் அத்தகையதே! அவளை சந்தித்தாயிற்று; அவளிடம் ஆசி வாங்கியாயிற்று!

அவளது ஆசிகள் பலித்தன என்றுதான் சொல்ல வேண்டும். இதோ, அந்த சந்திப்புக்குப் பிறகு, சில வருடங்கள் கழிந்து மீண்டும் அவளை சந்திக்கப்போய்க் கொண்டிருக்கிறான். இப்போதும் அவளுக்காக சிலவற்றை வாங்கிச் செல்ல அவனால் முடிந்திருந்தது. அவனைப்பொறுத்தமட்டில், அவள் மனதளவில் நல்ல பெண்மணியாய்த்தானிருக்க வேண்டும்.

"சார், நீங்க சொன்ன புத்துநாகம்மன் கோவில் இதோ வந்திருச்சு சார்," ஆட்டோ ஓட்டுனர் வேகத்தைக் குறைத்தபடி கூறினார்.

"வலதுபக்கத்துலே ரெண்டாவது சந்துலே திரும்புங்க. வாசலிலேயே பெரிசா போர்டு போட்டிருக்கும். அன்னை சாரதா ஆதரவற்றோர் காப்பகம்-னு! அங்கே நிறுத்துங்க!"

அருணின் கையிலிருந்த பையில், சித்திக்காக அவன் ஆசைப்பட்டு வாங்கிய பொருட்களோடு, அவள் ஆசைப்பட்டு வாங்கி வரச்சொன்ன ஒரு எவர்சில்வர் தட்டும் தம்ளரும் இருந்தன.

Friday, February 25, 2011

மனைகள் விற்பனைக்கு!

ஃபார்ச்சூன் செவன் ரியாலிட்டி பிரைவேட்(டு) லிமிடெட் அலுவலகத்தில், பஸ் டே அன்றைக்கு பச்சையப்பா காலேஜ் சிக்னலில் மாட்டிய பயணியைப் போல கையைப்பிசைந்து கொண்டிருந்தார் குப்பண்ணா.

"சார், காலை எட்டு மணிக்கு பிளாட்டு பார்க்கக் கூட்டிட்டுப்போறதா சொன்னீங்க, இப்போ மணி பத்தாகப்போவுது," என்று குப்பண்ணா.

"வண்டி டிராபிக் ஜாம்லே மாட்டிக்கிச்சு போலிருக்கு சார், இதோ வந்திடும்," என்று கடையைத் திறந்தது முதல் காரணமேயில்லாமல் கடவாய்ப்பல் தெரியச் சிரித்துக்கொண்டிருந்த அந்த மேனேஜர் சொன்னார். ஞாயிற்றுக்கிழமையில் அதுவும் தண்டையார்பேட்டையில் ஜாமாவது, கெட்ச்-அப்பாவது என்று குப்பண்ணா யோசித்துக்கொண்டிருந்தபோதே, அசப்பில் ரோடு இன்ஜினைப் போலிருந்த ஒரு புராதனமான வேன் வந்து நின்றது.

"வந்திருச்சு சார், ஏறுங்க ஏறுங்க," என்று அந்த மேனேஜர் கூறவும், குப்பண்ணாவும் இன்னும் சிலரும் அந்த வண்டிக்குள் ஏறிக்கொண்டனர். ஒருவழியாக அந்த வண்டி கிளம்பியதும் ரேஷன் கடையில் சர்க்கரை வாங்கியதுபோல குப்பண்ணா நிம்மதிப்பெருமூச்சு விட்டார். ஆனால், பாதிவழியிலேயே இரண்டு நாட்களாக இரவுபெய்த மழையில் நனைந்திருந்ததுபோல, அந்த வண்டி ’ஹாச்சு..ஹாச்சு,’ என்று பலமாகத் தும்மியபடி நின்றே போனது. அப்புறம் என்ன?

"சார், ஒரு கை கொடுங்க சார்!"

"ஹலோ குட்மார்னிங்! எப்படி இருக்கீங்க?"

"என்ன சார்? கீழே இறங்கித்தள்ள ஒரு கை கொடுங்கன்னு சொன்னா, கைகுலுக்கி குட்மார்னிங் சொல்றீங்களே? வந்து தள்ளுங்க சார்!"

குப்பண்ணாவும் மற்றவர்களும் எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் அந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு போனார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை. ஆனால் மேனேஜர் மட்டும் "இன்னும் கொஞ்சதூரம் தான் சார், தள்ளுங்க, தள்ளுங்க..," என்று மாநாட்டுக்கு வந்த கட்சித்தொண்டனைப் போல, துண்டை காற்றில் சுழற்றியபடியே பின்னால் வந்து கொண்டிருந்தான்.

"யோவ், இன்னும் எவ்வளவு தூரம்யா தள்ளுறது? தேனாம்பேட்டையிலே தள்ள ஆரம்பிச்சது, இதோ குரோம்பேட்டையே வந்திரும்போலிருக்கு. இதுக்கு நாங்களே பஸ்சைப் பிடிச்சு வந்திருப்போமில்லையா?" என்று எரிந்து விழுந்தார் குப்பண்ணா. "என்னய்யா வண்டி வச்சிருக்கீங்க, நம்ம நாட்டு பொருளாதாரம் மாதிரி கண்டிசன் படுமோசமாயிருக்கே!"

"வண்டியோட கண்டிசன் நல்லாயிருக்கு; எங்க கம்பனி கண்டிசன் தான் சரியில்லை," என்று அசடுவழிந்தார் மேனேஜர். "அதோ பெட்ரோல் பங்க் வந்திருச்சு! ஆளுக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தீங்கன்னா, கொஞ்சம் டீசலைக் கண்ணுலே காமிச்சி வண்டியை நைஸ் பண்ணிக்கொண்டு போயிரலாம் சார்."

"நைஸ் பண்ணுறதா? என்னய்யா ஃபிகரைக் கரெக்ட் பண்ணுறா மாதிரி சொல்றியே, தலையெழுத்து," என்று குப்பண்ணா ஒரு நூறு ரூபாயை அழுது தொலைக்க, மற்றவர்களும் ஐம்பது, இருபத்தி ஐந்து என்று கொடுத்து டீசல் போடவும் வண்டி கொஞ்சம் உற்சாகமாக ஓடத்தொடங்கியது.

"மேனேஜர் சார், உங்க கம்பனி விளம்பரத்துலே சிவப்பா, ஒல்லியா, சிரிச்ச முகமா ஒரு பொண்ணு வருமே? அவங்க ஞாயிற்றுக்கிழமை டூட்டிக்கு வரமாட்டாங்களா?" குப்பண்ணா கிசுகிசுப்பாய்க் கேட்டார்.

"சார், அவங்க டிவி சீரியல் நடிகை சார்! நாளைக்கு ஆபீசுக்கு வந்தீங்கன்னா, மலர்க்கொடின்னு ஒரு ரிசப்ஷனிஸ்ட் இருப்பாங்க! அசப்புலே ஜெகன்மோகினி படத்துலே வர்ற...."

"நமீதா மாதிரி இருப்பாங்களா?"

"இல்லை, அதுலே வர்ற பிசாசு மாதிரி இருப்பாங்க!"

அப்போது வாயை மூடிய குப்பண்ணா, தாம்பரம் தாண்டும்வரை வாயே திறக்கவில்லை.

"சார், சென்னையருகிலே வீடுன்னு போட்டிருந்தீங்க! வண்டி பாட்டுக்குப் போயிட்டே இருக்கே, வண்டலூரே வந்திரும்போலிருக்கு...?"

"வண்டலூருலேயே எங்க புராஜக்ட் வரதா இருந்திச்சு. ஆனா, ஜூ இருக்கிறதுனாலே டிஸ்டர்பன்ஸா இருக்குமேன்னு பண்ணாம விட்டுட்டோம்." என்றார் மேனேஜர்.

"என்ன அப்படிச் சொல்றீங்க? இப்பவே எவ்வளவு வீடு வந்தாச்சு அங்கே? மிருங்களாலே யாருக்கு என்ன டிஸ்டர்பன்ஸ் இருக்க முடியும்?" என்று கேட்டார் குப்பண்ணா.

"நான் சொன்னது மனுசங்களாலே மிருகங்களுக்கு ஏற்படுற டிஸ்டர்பன்ஸ் சார்," என்று மேனேஜர் சொன்னதும் மீண்டும் வாயடைத்தார் குப்பண்ணா.

"அது சரி, வண்டியிலே என்னமோ எலிசெத்த நாத்தமடிக்குதே?"

"வேறொண்ணுமில்லே சார், உங்களுக்கு லஞ்ச் கொண்டுவந்திருக்கோமில்லே? புளிசோறும் அவியலும்!"

’இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இனி புளிசோறே சாப்பிடுவதில்லை,’ என்று குப்பண்ணா சாணக்ய சபதம் மேற்கொண்டபடியே, அசதி தாங்காமல் உறங்கியே போனார். கண்விழித்தபோது வண்டி ஒரு செம்மண் பாதையில் சென்று கொண்டிருந்தது.

"சைட்டு வந்திருச்சு; எல்லாரும் முழிச்சுக்கோங்க!"

எல்லாரும் கண்விழித்தார்கள். வண்டி நின்றதும் எல்லாரும் கீழே இறங்கினார்கள்.

"இது தான் சார் பிளாட்டு! எவ்வளவு அமைதியா இருக்கு பார்த்தீங்களா?" மேனேஜர் சிலாகித்துப் பேசத் தொடங்கினார்.

"பொட்டல்காடாயிருக்கே? அது போகட்டும், இது அப்ரூவ் ஆயிருச்சா?"

"அந்தக் கவலையே வேண்டாம் சார்!" மேனேஜர் சிரித்தார். "இது கார்ப்பரேஷன் லிமிட்டுலே வருதா, முனிசிபாலிட்டி லிமிட்டுலே வருதா, பஞ்சாயத்து லிமிட்டுலே வருதான்னு கண்டுபிடிக்கவே இன்னும் பத்து வருசமாகும் சார். முப்பாத்தம்மன் கோவிலிலே சீட்டுக்குலுக்கிப்போட்டுப் பார்த்து குத்துமதிப்பா இது பஞ்சாயத்து நிலமாத்தானிருக்குமுன்னு அப்ளிகேஷன் போட்டிருக்கோம். எல்லாம் சரியாயிடும்."

"தண்ணி வருமா?"

"ஓ! மழை பெஞ்சா வீட்டுக்குள்ளேயே தண்ணி கொட்டுறா மாதிரிதான் நாங்க கட்டுவோம்."

"மெட்ராஸ் இங்கேயிருந்து எவ்வளவு தூரம்!"

"ஜஸ்ட் அரைமணி நேரத்துலே வந்திடலாம். எங்க முதலாளி தினமும் வர்றாரே!"

"எதுலே வர்றாரு?"

"அவரு ஒரு ஹெலிகாப்டர் வச்சிருக்கிறாரு!"

"ஓ.கே! பள்ளிக்கூடம்?"

"அதுவும் அரை மணி நேரம்தான்!" என்ற மேனேஜர், "ஹெலிகாப்டரிலே இல்லை. பஸ்சிலே தான்," என்று விளக்கிக்கூறினார்.

"கடைகண்ணி, சந்தை...?"

"அரை மணிநேரம் தான்!"

"ஓ! அப்படியா? சரி, காலேஜ், தியேட்டரு, கல்யாண மண்டபம் எல்லாம் இருக்கா?"

"அரை மணி நேரம் பஸ்சிலே போனா எல்லாமே இருக்கு சார்!"

"ஆச்சரியமா இருக்கே? சென்னையிலே கூட இவ்வளவு சௌகரியம் கிடையாதே? அது போகட்டும், அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?"

"திருச்சிராப்பள்ளி!"

குப்பண்ணாவுக்கு நெஞ்சு வலிப்பது போலிருந்தது.

(அம்புட்டுத்தேன்!)

இது ஒரு வருடத்துக்கு முன்னர் நான் எழுதிய கானா. இலவச இணைப்பு மாதிரி மீள்பதிவாக இங்கே....


திடீர்நகர்

திருவள்ளூரு தாண்டினாக்காக் காடுதான்-அங்கே
திடீர்நகரில் கட்டலாமே வீடுதான்
சதுரஅடி தலா ரூபா பத்துதான்-நல்ல
சமயமிது வாங்கிப்போட்டா சொத்துதான்

தாசில்தாரு தந்துட்டாரு பட்டாதான்-மக்கள்
தலையில்கட்டு குவிஞ்சிடுமே துட்டாத்தான்
தமிழ்நடிகை மூஞ்சி காட்டி விளம்பரம்-பண்ணா
தலைதெறிக்க ஓட்டமாக சனம்வரும்

வெளநெலத்திலே மண்ணப்போட்டு ரொப்பலாம்-லஞ்சம்
வேணும்வரைக்கும் கொடுத்துப்புட்டாத் தப்பலாம்
கண்ணைக்கவரும் கலர்நோட்டீசு அடிக்கலாம்-மக்கள்
காசுலேதான் விஸ்கி,ரம்மைக்குடிக்கலாம்

அகப்பட்டதை ஆனவரை சுருட்டலாம்-யாரும்
அதுக்குமேலே கேள்விகேட்டா மிரட்டலாம்
மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே
மாரடிச்சு நடுத்தெருவில் புலம்புறார்

Monday, February 21, 2011

வத்தக்குழம்பு செய்வது எப்படி?

(எக்ஸ்கியூஸ் மீ, நீங்க சரியான அட்ரஸுக்குத்தான் வந்திருக்கீங்க!)

விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டசபைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்த சிறப்பு சமையல் குறிப்பு!

வத்தக்குழம்பு (அ) தேர்தல் அறிக்கைக்குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்


இலவசச்சலுகைகள் - 2 எலுமிச்சை அளவுக்கு
மொழிப்பற்று - 1 தேக்கரண்டி
சுயமரியாதை - 1/2 மூடி (துருவி நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்)
வறுமையொழிப்பு- 2 தேக்கரண்டி
ஈழம்-சிறிதளவு
இட ஒதுக்கீடு-1/2 தேக்கரண்டி
வரிக்குறைப்பு- 5 பல்
கொள்கை-சிறிதளவு
வளர்ச்சித்திட்டங்கள்-சிறிதளவு
சமூகநீதி-1/2 தேக்கரண்டி
மதச்சார்பின்மை-தேவையான அளவு
விவசாயம்-1 தேக்கரண்டி
மானியங்கள்-3 தேக்கரண்டி
சுயபிரதாபம்-1 கைப்பிடி

 • இலவசச்சலுகைகளை 2 டம்ளர் அடுக்குமொழியில் ஊறவைத்து, நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

 • வாணலியில் 1 தேக்கரண்டி விவசாயத்தை ஊற்றி, சமூகநீதி, மொழிப்பற்று, ஈழம் சேர்த்து வதக்கவும்.

 • மொழிப்பற்று சிவந்தவுடன், வறுமையொழிப்பு, இட ஒதுக்கீடு சேர்த்து வதக்கிய பின், இலவசச்சலுகைகள் கரைசலை ஊற்றி மதச்சார்பின்மை போட்டு கொதிக்க விடவும்.

 • வாணலியில் மானியங்களை ஊற்றி, சுயபிரதாபம் சேர்த்து, பொரிந்தவுடன், வரிக்குறைப்பை நசுக்கிப்போட்டு, அரைத்த சுயமரியாதை விழுது சேர்த்து, நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.

 • வதங்கியதும், கொதித்துக் கொண்டிருக்கும் இலவசச்சலுகைகள் கரைசலில் கொட்டி, கொள்கை சேர்த்து கொதிக்க விடவும்.

 • குழம்பு கொதித்து விவசாயம் பிரிந்துவரும் வரையிலும் அடுப்பில் வைத்து பிறகு எடுக்கவும்

அவ்வளவுதான்! சுவையான தேர்தல் அறிக்கைக் குழம்பு தயார்!

இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது. ஆகையால், தேவைக்கேற்ப குழம்பைச் செய்து வைத்துவிட்டால், அடுத்த சில தேர்தல்களுக்கும் இதே குழம்பை சுடவைத்து, ருசியுடன் பரிமாறி மகிழலாம்.

என்ன, உடனே வத்தக்குழம்பு செய்யக் கிளம்பிட்டீங்களா?

Sunday, February 20, 2011

சதிபதி

"அம்மா! ஒரு நிமிஷம்," என்று பார்வதியின் காதில் கிசுகிசுத்தாள் செல்வி. "அப்பாவும் அந்த அங்கிளும் சிதம்பரமும் தங்கபாலுவும் மாதிரி என்னவோ காதுலே கிசுகிசுப்பாப் பேசிட்டிருக்காங்க!"

"நானும் கவனிச்சேன்; எனக்கு அப்பவே சந்தேகம்," என்று ஆமோதித்தாள் பார்வதி. "வழக்கமா ஊருக்குப் போகட்டான்னு கேட்டா, ஆயிரம் நொள்ளை சொல்லுற மனிசன், தாராளமாப் போயிட்டு வா, ஒரு மாசமானாலும் ஆசைதீர அம்மா வீட்டுலே இருந்திட்டு வான்னு சொல்லும்போதே எனக்கு எங்கேயோ உதைக்குதேன்னு தோணிச்சு!"

"அதுமட்டுமில்லேம்மா, அடிக்கடி குவார்ட்டர்னு வேறே பேரு அடிபடுது!"

"அப்படியா சங்கதி? நீ லீவுமுடிஞ்சு போனதும், என்னையும் ஊருக்கு அனுப்பிட்டு வீட்டுலே தண்ணிபோட திட்டம்போலிருக்கு. அந்த முனுசாமி கிளம்பிப்போகட்டும். அவரை என்ன பண்ணறேன்னு பாரு!"

"ஐயையோ, அதுக்காக நீ டென்ஷனாகி பிரண்டை பரோட்டாவெல்லாம் பண்ணிராதே அம்மா. என்னாலே லீவை எக்ஸ்டெண்ட் பண்ண முடியாது!" என்று கலவரத்தோடு சொன்னாள் செல்வி.

"ஆமாண்டி, ஹாஸ்டல்-லே போடுற காஞ்சுபோன தோசையைத் தின்னுவே! ஆசையா அம்மா பிரண்டை அல்வா, முட்டக்கோசு பாயாசம்னு பண்ணிக்கொடுத்தா நக்கலா?"

"கோச்சுக்காதேம்மா! பாரு..பாரு...என்னவோ திரும்பக் கிசுகிசுக்கிறாங்க! வா...ஜன்னல்பக்கத்துலே போய் ஒளிஞ்சு கேட்கலாம்..!"

மனைவியும் மகளும் தன்னையும் சினேகிதரையும் துப்பறிவது தெரியாமல், நல்லசிவமும் அவரது நண்பர் முனுசாமியும் சுவாரசியமாக, ஈனசுரத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

"இத பாரு முனுசாமி! நமக்கு எது வேணுமோ அதை மட்டும் செலக்ட் பண்ணிடுவோம். சப்பை மேட்டரெல்லாம் வேண்டாம். நம்ம டேஸ்ட்டுக்குத் தகுந்தமாதிரி இருக்கணும்." என்று நல்லசிவம் கூறக்கேட்டதும் பார்வதி அதிர்ந்தாள்.

"என்னடி? இது வெறும் தண்ணியடிக்கிற பிளானில்லை போலிருக்கே? எனக்கு அடிவயித்துலே பந்து சுத்துறா மாதிரி இருக்கே?"

"இரும்மா, என்ன பேசறாங்கன்னு கேட்க விடு!" என்று செல்வி காதைத் தீட்டிக்கொண்டாள்.

"இது பத்தொன்பது! ஓ.கேவா?"

"பத்தொன்பதா? அதுதான் ஸ்டார்ட்டிங்கா? வேறே வழி? பார்த்திரலாம்."

"ஏண்டி செல்வி? என்னடீ பத்தொன்பது, பார்த்திரலாமுன்னு பேசிக்கிறாங்க?"

"முழுசாக் கேட்கவிடும்மா! அங்கே பாரு, முனுசாமி அங்கிள் எதையோ காட்டுறாரு பாரு அப்பாகிட்டே...!"

முனுசாமி எதையோ காட்ட நல்லசிவம் அதைக்கூர்ந்து கவனித்தார்.

"இருபத்தி நாலா? சூப்பராயிருக்கும் போலிருக்குதே?"

"அடுத்ததைப் பாருங்க. இது இருபத்தி அஞ்சு!"

"இதுவும் சூப்பர்தான் முனுசாமி! ஆனா, இந்த ரெண்டை விடவும் எனக்கென்னமோ இது ஓ.கேன்னு படுது!"

"அட நம்மாளு! இருபத்தி ஏழு, பரவாயில்லையா?"

"எனக்கு ஓ.கே!"

"அடப்பாவி மனுசா!" பார்வதி பல்லைக்கடித்தாள். "அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி என்னை ஊருக்கு அனுப்பிட்டு கூத்தடிக்கவா திட்டம் போடறே? மண்டையைப் பாரு, கிண்டி ரேஸ்கோர்ஸ் மாதிரி இருக்கு. உனக்கு இருபத்தி ஏழு கேட்குதா?"

"சும்மாயிரும்மா!" செல்வி அதட்டினாள். "முழுக்குட்டும் வெளியிலே வரட்டும். அவசரப்படாதே!"

"ஏன் முனுசாமி? இதுக்கப்புறம் ஒண்ணும் நம்ம சங்கதி இல்லியே?"

"ஏன் எப்பவுமே நம்மாளுன்னே அலையுறீங்க?"

"ஹிஹி! அதுலே பாருங்க முனுசாமி, எனக்கு நம்ம ஊரு மேட்டர்தான் எப்பவுமே பிடிக்கும்."

"அட உருப்படாத மனிசா," என்று கரித்துக்கொட்டினாள் பார்வதி. "நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு வெளியூரிலிருந்தா கிடைக்கும்?"

"உஸ்ஸ்ஸ்! சும்மாயிரும்மா.....!"

அங்கே.....

"சரி, உங்க விருப்பப்படியே பார்க்கலாம். இதுக்கே மொத்தம் எத்தனை ஃபுல்லு, எத்தனை ஹாஃப் தேவைப்படுமுன்னு பார்த்து ஏற்பாடு பண்ணனும்." என்று முனுசாமி யோசனையோடு தாடியைச் சொரிந்தார்.

"ரிஸ்கே எடுக்க வேண்டாம். குவார்ட்டருக்கப்புறம் ஃபுல்லாவே எடுத்திரலாம். ஹாஃப் எல்லாம் சரிப்படாது."

"எவ்வளவு தேவைப்படும்? வீட்டுலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?" முனுசாமி சந்தேகத்துடன் கேட்டார்.

"அதுக்குத்தானே அவளை ஊருக்கு அனுப்புறேன்," என்று சிரித்தார் நல்லசிவம். "அவ திரும்பி வரதுக்குள்ளே பார்க்க வேண்டியதெல்லாத்தையும் பார்த்திருவோமில்லே?"

"பார்ப்பே ஐயா பார்ப்பே," இடுப்பில் தலைப்பை இழுத்துச் செருகியவாறு வெளிப்பட்டாள் பார்வதி.

"பார்வதி....நீ....எப்போ...?" நல்லசிவம் தடுமாறினார்.

"ஏன்யா, பேரன்பேத்தி எடுக்கிற வயசுலே உனக்கேன்யா இந்த புத்தி? உனக்கு பத்தொன்பதுலேருந்து இருபத்தி ஏழுக்குள்ளே கேட்குதா? போதாக்குறைக்கு குவார்ட்டர் என்ன, ஹாஃப் என்ன, ஃபுல் என்ன? போனாப்போகுது, புருசன் மரமண்டையா இருந்தாலும், சுத்தபத்தமாயிருக்காரேன்னு நானும் சந்தோசப்பட்டுக்கிட்டிருந்தேன். இப்படி என் தலையிலே குண்டைத்தூக்கிப் போட்டுட்டியே! சே!"

"ஐயோ பார்வதி, நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலே! நீ தப்பா நினைக்கிறே!"

"என்னப்பா தப்பு?" இப்போது செல்வியும் சேர்ந்து கொண்டாள். "இவ்வளவு நேரம் என்ன பேசிட்டிருந்தீங்க?"

"உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கப்போகுதே, அதுலே எந்தெந்தத் தேதியிலே எந்தெந்த மேட்சு பாக்கலாம்..எதெது பார்க்க வேண்டாமுன்னு பேசிட்டிருந்தோம் செல்வி. பத்தொன்பது, இருப்பத்தி ஏழு எல்லாம் இந்தியா விளையாடுற தேதிம்மா! நீயுமா அப்பாவைத் தப்பா நினைக்கிறே?"

"அப்போ ஹாஃப், ஃபுல்லுன்னு பேசிட்டிருந்தீங்களே அது....?"

"அது வேறொண்ணுமில்லே, பாதி நாள் லீவு போடுறதா இல்லை முழுநாள் லீவு போடுறதான்னு பேசிட்டிருந்தோம்..." நல்லசிவம் பரிதாபமாக விளக்கினார்.

"பொய் சொல்லாதீங்க," பார்வதி சீறினாள். "சப்பை மேட்டர், நம்ம ஊரு அயிட்டமுன்னெல்லாம் பேசினீங்களே?"

"உனக்குத்தான் கிரிக்கெட் பார்த்தாலே பிடிக்காதே. அதுனாலே தான் கேனடா, நெதர்லாண்ட்ஸ், கென்யா மேட்செல்லாம் சப்பை மேட்டர்னும், இந்தியா ஆடுற எல்லா ஆட்டத்தையும் நம்ம ஊரு அயிட்டமுன்னும் ஜாடையாப் பேசிக்கிட்டோம்."

"இன்னும் முழுசா நம்பறதுக்கில்லை அப்பா," செல்வி வினவினாள். "அது சரி, குவார்ட்டர்னு எதையோ பேசினீங்களே? அது என்ன?"

"ஐயோ நாங்க நாலு குவார்ட்டர் ஃபைனல் மேட்சையும் பார்க்கணுமுன்னு திட்டம் போட்டிருக்கோம். அதைப் பத்தித் தான் பேசினோம். நீங்க ரெண்டு பேரும் வீட்டுலே இருந்தா சீரியல் பார்த்துக் கழுத்தறுப்பீங்கன்னு தான் உங்கம்மாவை ஊருக்குப்போகச்சொன்னேன். இப்படி என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அடுக்கடுக்கா குத்தம் சுமத்தறீங்களே...? நியாயமா?"

நல்லசிவம் அழவே தொடங்கிவிட்டார்.

"என்னை மன்னிச்சிடுங்க! உங்களை சந்தேகப்பட்டேன் பாருங்க. எனக்கு என்ன தண்டனை வேண்ணா கொடுங்க!" என்று உருகினாள் பார்வதி.

"தண்டனையா?" நல்லசிவம் அழுதவாறே கூறினார். "காலையிலே டிபனுக்குப் பண்ணினியே குல்பர்கா இட்லி; அதைச் சாப்பிடாம கட்டிலுக்குக் கீழே தட்டுப்போட்டு மூடி ஒளிச்சு வச்சிருக்கேன். அதைச் சாப்பிடு போதும்!"

Saturday, February 19, 2011

நாய்கள் ஜாக்கிரதை

அண்மைக்காலமாக தமிழ்த்திரைப்படத்தின் நாயகர்கள் எங்கேயோ பார்த்த முகங்களை ஞாபகப்படுத்துகிறார்கள் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், கௌதம் வாசுதேவ் மேனன் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற நாயகன் நாம் பரிச்சயப்படுத்திக்கொள்ள விரும்புகிற சாதாரணன் அல்லன். அவனது புகைப்படத்தைச் செய்தித்தாளில் பார்க்க நேரிட்டாலும் முகஞ்சுளித்துக் கடிந்துவிட்டு அவனை மறக்க முற்படுகிறோம். எத்தனை விகாரங்கள் இருந்தாலும், லட்சத்தில் எவனோ ஒருவனுக்கு இருக்கிற விபரீத குணாதிசயங்களை நம்மால் நியாயப்படுத்த முடிவதில்லை. அதை மெனக்கெட்டு சொல்ல எத்தனித்திருக்கிற psuedo intellectual-ன் படம் - நடுநிசி நாய்கள்! சமீராவுக்காகப் போய்விட்டேன்!

இந்த split personality, multiple personality disorder போன்ற மனநலக்குறைப்பாடுகள் மனிதனை அரக்கர்களாக்கி விடுவதுபோன்ற ஒரு அச்சுறுத்தலை இன்னும் எத்தனைநாளைக்குத் தரப்போகிறார்களோ தெரியவில்லை. ’சந்திரமுகி,’ ’அந்நியன்’ போன்ற படங்கள் ஜனரஞ்சகமானவை, அல்லது ஜனரஞ்சகமான இயக்குனர்களாலோ, நடிகர்களாலோ நம்மை வந்தடைந்தவை என்பதால், கொம்புமுளைத்த அறிவுஜீவிகள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கௌதம் மேனன் போன்றவர்கள் நிறைய அறிவையும் வர்த்தகத்தந்திரத்தையும் பிரயோகித்து தம்மை larger than life இயக்குனர்களாகக் காட்டிக்கொள்வதில் சமர்த்தர்கள். சான்று - நடுநிசிநாய்கள்!

சரி, பாடல்களோ பின்னணி இசையோ இல்லை; இந்தக் குறைபாடு தெரியாமல் படத்தை நகர்த்துவதற்கு இயக்குனர் உபயோகித்திருக்கிற கோந்து - வக்கிரம், வன்முறை..இன்னும் இந்த வரிசையில் வால்பிடித்து நிற்கிற சில குயுக்தியான கீழ்மைகள்! இவற்றையெல்லாம் நியாயப்படுத்தவும் சிலர் முனைவார்கள் என்கிற அபாயமும் நெருடலும் இருக்கத்தான் செய்கின்றன.

அண்ணி-கொழுந்தன், மாமனார்-மருமகள் பற்றியெல்லாம் படங்கள் எடுத்தபோதும் கூட,"அட வுடுய்யா, ஊருலே நடக்காததையா சொல்லிட்டான்?" என்று அசட்டை செய்ததுபோலவே இந்தப்படத்தின் சில அதிர்ச்சிகளையும் உதாசீனம் பண்ணிவிடலாம். இன்னும் சில மெத்தப்படித்த மேதாவிகள் ஜெயகாந்தனின் ’ரிஷிமூலம்’ கதையையும், கி.ராவின் ’கரிசல்காட்டுக் கதைகளையும் மேற்கோள்காட்டி ’அவிய்ங்களும் சொல்லியிருக்கிறாய்ங்க,’ என்று சொல்லி என் போன்ற அறிவிலிகளின் வாயை அடைத்துவிடலாம்.

கொச்சையாகத் திட்ட விருப்பப்படுகிறவர்களுக்கு பிரச்சினையில்லை; அவர்களின் வடிகட்டாத ஆத்திரத்தில்தான் உண்மையான ஆதங்கம் ஒளிந்துகொண்டிருக்கிறதோ என்றுகூட சில நேரங்களில் தோன்றிவிடுகிறது. Sometimes two wrongs do make one right!

இந்தப் படத்தைப் பார்க்கிறபோது எனக்கு எழுந்த கேள்வி; சென்சார் போர்டு என்ன பு.....க் கொண்டிருந்ததா?

225-ல் மொத்தம் 4 சினிமா விமர்சனங்களே எழுதியிருக்கிறேன். எதிர்காலத்தில் தமிழ்சினிமாவின் நவயுக இயக்குனர் எவரேனும் தாயும் மகனும் புணர்வதுபோல படம் எடுத்தால், சத்தியமாய் விமர்சனம் எழுத மாட்டேன் என்பது உறுதி. ஏனென்றால், அதுவும் நடக்கிறது என்று சப்பைக்கட்டு கட்ட புத்திஜீவிகள் ஏராளமாய் இருப்பர். அவர்களோடு முட்டிமோதுவதோ, அவர்களை ஜெயிப்பதோ நமது முழுநேர வேலையல்ல.

இந்தப் படத்துக்கு நடுநிசி நாய் என்று கௌதம் மேனன் ஒருமையில் பெயர் வைத்திருக்கலாம். எதற்கு தன்னுடன் இன்னும் சில நாய்களைக் கேவலப்படுத்த வேண்டும்?

Tuesday, February 15, 2011

சோனா, இது நிஜம் தானா?

"என்னய்யா அக்கிரமமாயிருக்கு! எவனோ ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கப்போறேண்ணு மெரட்டிக்கிட்டிருக்கான். எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்களே?" என்று எரிந்து விழுந்தபடி கூட்டத்தை விலக்கியபடி முன்னேறினேன்.

"யோவ்! அவன் கையிலே தீப்பெட்டி வச்சிருக்கிறான். சட்டை பேண்டேல்லாம் மண்ணெண்ணையிலே தொப்பலா நனைஞ்சிருக்கு. பக்கத்துலே போயிராதே! நீ வேறே அசப்புலே தீக்குச்சி மாதிரியே இருக்கே!"

கொஞ்சம் பீதியாகவே இருந்தாலும், அடக்கிக்கொண்டு அவனை நோக்கி அடிமேலடி எடுத்து வைத்தேன்.

"பக்கத்துலே வர்றாதே! நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன்!"

"வரலை ராசா வரலே! அட எடுபட்ட பயலே, இப்படி கிருஷ்ணவேணி தியேட்டருக்கு முன்னாலே கிருஷ்ணாயிலை உடம்பெல்லாம் ஊத்திக்கிட்டு கையிலே தீக்குச்சியோட நிக்குறியே! எதுக்காகத் தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொல்லிட்டாவது செய்யலாமில்லே? நாளைக்கு இத வச்சு ஒரு இடுகை போட்டு நானும் பொழச்சுக்குவேனில்லே?"

"அப்படீன்னா நீதான் சேட்டைக்காரனா?"

"எப்படி ராசா கண்டுபிடிச்சே?"

"பின்னே, என்னைப் பத்தி புத்திசாலியா இடுகை போடுவாங்க?"

"சே! முதல்லே என் வாயிலே குடியிருக்கிற சனியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பணும். அதை விடு, இப்போ எதுக்குத் தற்கொலை பண்ணிக்கப்போறே, அதைச் சொல்லு!"

"ரெண்டு நாளைக்கு முன்னாலே கலைமாமணி விருது கொடுத்தாங்க தெரியுமா சேட்டை?"

"ஓ! நல்லாத் தெரியுமே! அனுஷ்கா, தமன்னா, ஆர்யா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க! அதுக்கென்ன இப்போ? உனக்குக் கொடுக்க மறந்திட்டாங்களா? அதுக்காக நீ செத்துட்டா உனக்கு கலைமாமணி கிடைக்காதப்பு; தற்-கொலைமாமணி விருது தான் கிடைக்கும்!"

"சும்மாயிரு சேட்டை! வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சாதே! எனக்குக் கொடுக்காட்டியும் பரவாயில்லை! ஆனா சோனாவுக்குக் கொடுக்காம அநீதி இழைச்சிட்டாங்களே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

"என்னது சோனாவா? யாருய்யா அது?"

"நடிகை சோனா யாருன்னா கேட்கறே? நீ அடுத்த பிறவியிலே உ.பியிலே டி.எஸ்.பியாத் தான் பொறக்கப்போறே!"

"அப்படியெல்லாம் சாபம் போட்டுராதே! என்னோட ஷூவையே நான் துடைக்கிறதில்லை; மாயாவதி ஷூவையெல்லாம் எப்படித்துடைக்கிறதாம்? சோனாவுக்கு எதுக்கு கலைமாமணி கொடுக்கணும்? அவங்களுக்கும் கலைக்கும் என்ன தொடர்பு? தெரியாமக் கேட்கிறேனப்பு...."

"என்னய்யா பெரிய தொடர்பு? எங்க சோனா ஹைடனைப் பத்தி என்னன்னு நினைச்சே? கலைஞர் வீட்டுக்குப் போயி நேருக்கு நேரா சந்திச்சு, போட்டோவெல்லாம் எடுத்திருக்காங்க தெரியுமா? இதோ பாரு!"


"அட ஆமா, அவரு வீட்டுக்கு எல்லாராலேயும் போக முடியுமா என்ன, இவ்வளவு பக்கத்துலே உட்கார்ந்துக்கிட்டு போஸெல்லாம் கொடுத்ததுக்கப்புறமும் கலைமாமணி கொடுக்கலியா? இது உண்மையிலேயே பெரிய அநீதி தானப்பு..!"

"சும்மா ஒண்ணும் போகலே! சொளையா அஞ்சுலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியிருக்காங்க தெரியுமா?"

"என்னது, அஞ்சு லட்சமா? அதுக்கு தமிழ்நாட்டுலே ஒரு குடும்பத்துக்கே டாக்டர் பட்டம் கிடைக்குமே?"

"டாக்டர் பட்டமெல்லாம் எங்க தலைவிக்கு எம்மாத்திரம் சேட்டை? அவங்களுக்கெல்லாம் ஒரு மரியாதையிருக்கு! அவங்க எவ்வளவு புரட்சிகரமான சிந்தனையுள்ள பெண் தெரியுமா? அவங்க வாயைத் திறந்தாப்போதும், உடனே இந்து மக்கள் கட்சி சிவசேனாவெல்லாம் போராட்டத்துலே இறங்கிருவாங்க! அவ்வளவு புதுமையான சிந்தனையுள்ள பெண்மணி அவங்க!"

"இத பாரப்பு, சிவசேனாவையெல்லாம் தமிழ்நாட்டுலே யாரும் சீரியஸா எடுத்துக்கமாட்டாங்க, இப்போ காதலர் தினம் கொண்டாடக்கூடாதுன்னு மதுரையிலே ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க தெரியுமா? அதுலே மொத்தமே முப்பது பேரு தான் இருந்தாங்களாம். அதுலேயும் இருபத்தி ஒன்பது பேரு போலீஸுன்னு பேசிக்கிறாங்க!"

"அப்படீன்னா புரட்சிப்பெண்களுக்கு தமிழ்நாட்டுலே மரியாதையே கிடைக்காதா?"

"எப்படிக் கிடைக்கும்? நாலு கோர்ட் ஏறி எறங்கியிருக்கணும். நாப்பது கேசு பார்த்திருக்கணும். தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரம், இப்படி எதுனாச்சும் பேசியிருக்கணும். அந்த மாதிரி ஏதாவது பண்ணியிருக்காங்களா?"

"ஓ! நிறையவே பேசியிருக்காங்க சேட்டை! ஆண்களை நம்பாதே ஆனால் ஆண்களில்லாமல் வாழ முடியாதுன்னெல்லாம் நிறையத் தத்துவங்களைக் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்காங்க. இதுக்காகக் கூட நொந்த மக்கள் கட்சி, அதாவது இந்து மக்கள் கட்சி போராட்டமெல்லாம் நடத்தியிருக்காங்க!

"அட, இவ்வளவு பெரிய ஆளா அவங்க? ஒருவேளை தமிழ் தெரியாதுன்னு கலைமாமணி கொடுக்காம விட்டுட்டாங்களோ?"

"ஆமாம் அவங்க ஆங்கிலோ இந்தியப்பொண்ணுதான்! ஏன் கொடுக்கக்கூடாதா? தமன்னா தமிழ்ப்பொண்ணா, அனுஷ்கா தமிழ்ப்பொண்ணா? தமிழ் சினிமாவுலே நடிக்க சரக்கே வேண்டாமுன்னு சொன்னா ஆர்யா தமிழனா? அவங்களுக்கெல்லாம் கொடுக்கும்போது இவங்களுக்கும் கொடுத்தா என்னவாம் சேட்டை?"

"கரெக்டு தான்! செலவோட செலவா சோனாவுக்கும் ஒரு கலைமாமணி கொடுத்திருக்கலாம். அவங்களும் நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன் கூட போட்டோ எடுத்துக்கிட்டிருப்பாங்க! தமிழ் இலக்கியமும் வளர்ந்திருக்கும். ஒரு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்க!"

"எல்லாத்தையும் கூட விட்டிரலாம் சேட்டை! ஆனா....ஆனா...," என்று குமுறிக்குமுறி அழுதார் அவர்.

"அழாம சொல்லுய்யா! இன்னும் என்ன...?"

"சோனா ஒரு தமிழ்ப்படம் எடுக்கிறாங்க! அதுக்கு ’கனிமொழி’ன்னு பேரு வச்சிருக்காங்க! அதோட பாடல்களைக் கூட கலைஞர் வெளியிடுவார்னு சொல்லிட்டிருந்தாங்க!"

"என்னது?" நான் அதிர்ந்தேன். "தம்பி, நீ கடைசியா சொன்னதைக் கேட்டதுக்கப்புறம் எனக்கே சோனா மேலே ஒரு பரிதாபம் வந்திருச்சு! ஆனா, அதுக்காக நீ சாகணுமா? நம்ம நாட்டுலே கண்டனம் தெரிவிக்க எத்தனையோ வழியிருக்கே? உதாரணத்துக்கு நம்ம மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுஹாண் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறதுக்காக, இருபது நிமிஷம் உண்ணாவிரதம் இருந்தாரு! நீங்களும் ஒரு அரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து அவரோட ரிகார்டை பிரேக் பண்ணியிருக்கலாமே?"

"அவரோட ரிகார்டை என்னாலே எப்படி பிரேக் பண்ண முடியும் சேட்டை?"

"ஏனப்பு, ஒரு அரைமணி நேரம் சாப்பிடாம இருக்க முடியாதா?"

"அது முடியும். ஆனா, அவரோட இருபது நிமிஷ உண்ணாவிரதத்துக்கு ஆன செலவு ரெண்டு கோடி ரூபாய். அதுக்கெங்கே போவேன்?"

"ஓஹோ! இப்படியொண்ணிருக்கோ?"

"இப்போ சொல்லு சேட்டை! எங்க தலைவி சோனாவுக்கு கலைமாமணி தராதது எவ்வளோ பெரிய கொடுமை? இது தெரியாம ஜெயகாந்தன் கூட ’இது தமிழர்களுக்கு பொற்காலம்,’னு சொல்லியிருக்காரே?"

"அதையெல்லாம் சட்டை பண்ணாதீங்க! ஜெயகாந்தன் "இது எனக்கு பொற்காலம்,"னு உண்மையையா சொல்ல முடியும் பாவம்? அதான் நம்ம முதல்வரே சொல்லிட்டாரே! அடுத்தவாட்டி கலைஞர் முதல்வரானா ஒவ்வொரு வருஷமும் 225 பேருக்கு கலைமாமணி விருது தருவாராம். அப்புறம் நீயும் கலைமாமணி; நானும் கலைமாமணியாயிடுவேன்."

"ஊஹும்! அதெல்லாம் செல்லாது! எங்க தலைவிக்கு இப்பவே கலைமாமணி வேணும். இல்லாட்டா நான் சாகப்போறேன்!"

"உம் சரி, நான் இவ்வளவு சொல்லியும் கேட்கலேன்னா என்ன பண்ணுறது? சரி, உன் இஷ்டம் போல சாவு!"

"இதை முதல்லேயே சொல்லியிருக்கலாமில்லே சேட்டை? பாரு, என் டிரஸெல்லாம் காய்ஞ்சு போச்சு! இரு இன்னும் ரெண்டு பக்கெட்டிருக்கு! அதையும் ஊத்திக்கிறேன்!"

"அடக் கிறுக்கா! தீக்குளிக்கிறேன்னு சொல்லிட்டு என்னடா வாளியிலே இருக்கிற தண்ணியை தலையிலே ஊத்திக்கிறே?" நான் அதிர்ந்தேன்.

"நல்லாப் பாரு சேட்டை! ரெண்டு சிவப்பு வாளியிலேயும் என்ன எழுதியிருக்கு? ’தீ’ன்னு தானே எழுதியிருக்கு? இதோ நான் தீக்குளிக்கப்போறேன்! தீக்குளிக்கப்போறேன்!"

ஐயோ சாமீ! இம்புட்டு நேரம் ஒரு லூஸோடவா பேசிட்டிருந்தேன்?

Sunday, February 13, 2011

பசு

அதிகாலையில் அந்தப் பசு குறுகிய சாலையின் நட்டநடுப்பில் அக்கடாவென்று படுத்திருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவ்வப்போது சுவரொட்டிகளையும் கிழித்து மெல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயங்களில் குப்பைத்தொட்டியருகே, சில சமயங்களில் தெருவிலிருக்கிற அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல்களில், சில சமயங்களில் மளிகைக்கடையருகே என்று அந்தத் தெருவில் அத்தனை பேருக்கும் அந்தப்பசு மிகவும் பரிச்சயமான ஒரு ஜீவனாக உலாவந்து கொண்டிருக்கும். சில தெருக்களுக்கு அங்கு வசிக்கிற மனிதர்கள் மட்டுமன்றி, அங்கே கண்ணில் தட்டுப்படுகிற வாயில்லா ஜீவன்களும் ஒரு அடையாளம் தான் போலும். அவைகளைக்கூட வேறு எங்கேனும் பார்த்தால் ’அட’ என்று ஆச்சரியப்படத்தான் செய்கிறோம்.

இப்போது இரண்டொருநாட்களாக அந்தப் பசு அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் வாசலே கதியாகக் கிடக்கிறது. அங்கிருக்கிற ஏதோ ஒரு வீட்டில் ஒரு திருமணம் நடைபெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், இரண்டு பெரிய வாழைமரங்களை ஒரு வண்டியில் ஏற்றிவந்து, போக்குவரத்தை ஒரு பத்து நிமிடம் நிலைகுலைய வைத்துக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. இப்போது அந்த இரண்டு மரங்களும் அந்தக் குடியிருப்பின் இரும்புக்கதவின் இரண்டு பக்கத்திலும், இரண்டு துவாரபாலகர்களைப் போல நின்று கொண்டிருந்தன. நேற்றுவரை உயிரற்ற கட்டிடமாய்த் தெரிந்த அந்தக் குடியிருப்புக்கே திடீரென்று ஒரு கல்யாணக்களை வந்துவிட்டது போலிருந்தது. போதாக்குறைக்கு வாசலில் சாலையைப் பாதி வளைத்துப் போடப்பட்ட பெரிய பெரிய கோலங்களை, அதிகாலையில் கடக்கிறபோது மிதிக்கவோ அல்லது வண்டியை அதன்மீது செலுத்தவோ சற்று சங்கடமாக இருக்கும். திருமணம் போன்ற சந்தோஷங்களின் போது போடப்படுகிற கோலங்களின் ஒவ்வொரு புள்ளியிலும் அவர்களது மகிழ்ச்சியின் குறியீடுகள் இருக்கும். அந்தக் கோடுகளும், வளைவுகளும் அவர்களது குதூகலத்தின் எளிமையான வெளிப்பாடுகளாயிருக்கும்.

இதுபோல சுபநிகழ்ச்சிகள் நடைபெறுகிறபோது, வீட்டு வாசலில் வாழைமரம் கட்டுவதற்கும் பல காரணங்கள், ஐதீகம் என்ற பெயரில் சொல்லப்படுகின்றன. வாழைமரம் ஒரே ஒரு முறைதான் பூக்குமாம்; ஒரே ஒரு முறைதான் குலைதள்ளுமாம். அது போல திருமணம் என்பதும் வாழ்க்கையில் ஒருமுறைதான் நடக்க வேண்டும் என்பதைக் குறிப்பால் அறிவிக்கவே வாழைமரம் வாசலில் கட்டப்படுகிறதாம். இன்னும் சிலர், வாழைத்தண்டு கருநாகத்தின் விஷத்தையும் கூட முறித்துவிடும் என்று சொல்கிறார்கள். அதைப்போலவே, வாழ்க்கையில் தீயதென்றும், கொடியவிஷமென்றும் சொல்லப்படுகிற சங்கதிகளை முறித்து, சுத்தமாக இருப்பதை வலியுறுத்தவே வாழைமரம் என்றும் சொல்வதுண்டு. வாழைமரத்தின் அடியில் வாழை முளைத்து எழுவது போல, வாழையடி வாழையாக வம்சவிருத்தி ஏற்பட்டு வாழ வேண்டும் என்று ஆசிகளைத் தெரிவிக்கவே வாழைமரம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் சடங்குகள் என்பதால், இவை இருப்பதாலோ, இல்லாமல் போனாலோ ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. குறைந்தபட்சம் வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு இந்த வாழைமரங்கள் ’இதுதான் கல்யாண வீடு,’ என்று காண்பிக்கவாவது முடிகிறதே! நகரங்களில் மனிதர்களால் வழிகாட்ட முடியாமல் போகிற முகவரிகளை சில சமயங்களில் வாழைமரங்களாவது காட்டிவிட்டுப்போகட்டுமே!

யாராக இருந்தாலும் சரி, திருமணமாகப்போகிற அந்தப் பெண்ணும், அவளது குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீடுநிரம்ப விருந்தாளிகளிருப்பது போல ஒரு மகிழ்ச்சியும் இருக்க முடியுமா? வயோதிகர்கள் தொடங்கி வாண்டுகள் வரைக்கும் எத்தனை குணாதிசயங்களை ஒரே நேரத்தில் காணமுடிகிறது? பழைய நினைவுகளைப் புதுப்பிப்பதற்கும், சற்றே ஆட்டம் கண்ட உறவுகளைப் பலப்படுத்தவும் திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகள் தானே உதவுகின்றன? அந்தமட்டில் அதன் ஆடம்பரங்களை மன்னித்து விடலாம்.

நேற்று மீண்டும் அந்தப் பசுவைப் பார்த்தேன். அந்தக் கதவின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டிருந்த வாழைமரத்தைக் கடித்து மென்று கொண்டிருந்தது. உள்ளேயிருந்து ஓடிவந்த காவலாளி அதை விரட்டுமுன்னரே வாய்நிறைய கடித்து இழுத்து அடைத்துக்கொண்டு அது சாலைக்குள்ளே பின்வாங்கியபோது எனது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து நிறுத்தி, அதன் மீது மோதாமல் தவிர்த்தேன். இரண்டு வாழை மரங்களுமே கீழிருந்து மேலாக பாதி உயரத்துக்கு அந்தப்பசுவாலும் அல்லது அதுபோன்ற பல மாடுகளாலும் மென்று முடித்திருந்ததால், பலவீனமுற்று எப்போது வேண்டுமானலும் ஒடிந்து விழுந்து விடுகிற அபாயம் இருப்பதை கவனித்தேன். ஒரு வேளை அப்படி நேர்ந்தால், அது திருமண வீட்டாரால் அபசகுனமாகவும் கருதப்படுகிற வாய்ப்பிருக்கிறது என்பதும் புரியாமலில்லை. ஆனால், முக்கிய சாலையில் கட்டப்பட்டிருந்த அந்த வாழைமரங்கள் மாடுகளின் பசிக்கு இரையாகாமல் இருக்க என்னதான் செய்ய முடியும்?

நல்ல வேளை, மாலை திரும்பியபோது, யாரோ ஒரு புத்திசாலித்தனம் செய்திருந்தார்கள். வாழைமரத்தின் கீழ்ப்பகுதியில், உரச்சாக்கு ஒன்றை சுற்றி கயிறுபோட்டு மீண்டும் இறுக்கிக் கட்டியிருந்தார்கள். பரவாயில்லையே என்று மனதுக்குள் மெச்சிக்கொண்டு என்வழியே போனேன். மனிதனுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் எளிமையான தீர்வு தெரிந்திருக்கிறது என்பது சந்தோஷப்படுகிற விஷயம்தானே?

இன்று அதே சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, மீண்டும் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. புதுமணப்பெண்ணும், மாப்பிள்ளையும் உறவினர்களோடு ஒரு சில வாகனங்களில் வந்திருந்ததால், அந்தக் குறுகலான சாலையைக் கடப்பது பொறுமையை சோதிப்பதாக இருந்தது.

பூரிப்பும் பெருமிதமுமாய் அந்த மணப்பெண்ணும், செயற்கையான சிரிப்பும், சற்றே ஆயாசமுமாய் அந்த மணமகனும் வாசலில் நின்றிருக்க, பெண்கள் ஆரத்தி எடுத்துக்கொண்டிருந்தனர். தற்செயலாக எனது கண்கள் அந்த வாழைமரங்களைப் பார்வையிட்டபோது, அதில் கட்டப்பட்டிருந்த உரச்சாக்கும் கடிபட்டுச் சேதமுற்றிருந்ததையும் கவனிக்க முடிந்தது. நல்ல வேளை, திருமணம் முடிகிற வரையிலுமாவது அந்த மரங்கள் தாக்குப்பிடித்திருக்கின்றனவே என்று எண்ணிக்கொண்டு கடக்க முயன்றபோது, எதிர்ப்பக்கத்தில் அந்தப் பசுவைப் பார்த்தேன்.

அது, வாயிலிருந்து நுரை தள்ளியவாறு, தனது கடைசிக்கணங்களுடன் போராடியவாறு அரைமயக்கத்தில் கிடந்தது.

Saturday, February 12, 2011

காதலர்தின சிறப்பு ராசிபலன்கள்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது தொலைக்காட்சியில் சிறப்பு ராசிபலன்கள் சொல்வதுபோல காதலர் தினத்தன்று ஏன் சொல்வதில்லை? அந்தோ, நெஞ்சு பொறுக்குதில்லையே! அதுக்கென்ன, இதுவரைக்கும் நம்ம கையிலே அகப்படாதது காதல் ஒண்ணுதான்; சும்மா விட்டிருவமா? இதோ ஜோதிடகலாநிதி ஆருடஜோதி சேட்டைக்காரன் வழங்கும் காதலர்களின் பன்னிரெண்டு ராசிகளுக்குமான பலன்கள்.

மேஷம் Aries

இன்னும் யாரையும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி; விரைவில் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள ஒருவர் வரப்போகிறார்.

ஏற்கனவே காதலித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இனிமேல் சோதனைதான்! விரைவில் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்.

ரிஷபம் Taurus

இந்த ராசிக்காரக் காதலர்களுக்கு விரைவில் ஒரு பெரிய கோஷ்டியுடன் எங்காவது ஒரு பார்க்கிலோ, பீச்சிலோ நிறைய காஸ்ட்யூம்களை மாற்றிக்கொண்டு டூயட் பாட ஒரு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது. உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்களில் ஒன்றை மனப்பாடம் செய்து கொள்வது நலம் பயக்கும்! குத்துப்பாட்டெல்லாம் நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான்! பல ரோடுகள் சேதமடைந்திருப்பதால், கல்லுக்கு எங்கும் பஞ்சமில்லை.

இதுவரை காதலிக்காதவர்களுக்கு! சுக்கிரனின் பார்வை இப்போது உங்கள் மீது விழுந்திருப்பதால், விரைவில் டவுண் பஸ், ஷேர்-ஆட்டோ, ரயில் பயணங்களின்போதோ, ஸ்பென்ஸர்ஸ், அண்ணா நகர், திருவான்மியூர் போன்ற சிக்னல்களிலோ உங்களது எதிர்காலத் துணையை சந்திக்கிற வாய்ப்பு ஏற்படப்போகிறது. (கவனம்: ஐயா, சாமீ தர்மம் பண்ணுங்க என்று வருகிறவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்!)

மிதுனம் Gemini

’காதலாவது கத்திரிக்காயாவது,’ என்று மார்னிங் ஷோ சினிமா பார்த்தோமா, சரவணபவனில் மினிமீல்ஸ் சாப்பிட்டோமா, ஒன்-ட்வென்ட்டி பான் மென்றோமா என்று இருந்த உங்களுக்கு சனிதசை தொடங்கியிருப்பதால், விரைவில் காதல்வயப்பட்டு கவிழ்த்துப்போட்ட கரப்பான்பூச்சி மாதிரி கஷ்டப்படப் போகிறீர்கள். உங்கள் தசாபலன்களின்படி இந்த கண்டத்திலிருந்து தப்பிப்பது கடினம் என்றாலும், சில நாட்களுக்கு கைபேசி,கணினி போன்ற அனுகூலசத்ருக்களிடமிருந்து விலகியிருந்தால், சனியின் உக்கிரம் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது; அதாவது பாதிப்பு சற்று தாமதிக்கலாம்.

ஒரேயடியாக மீள்வதற்கு வழியில்லையா என்று கேட்பவர்களுக்கு: ’உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம்,’ என்று சொன்னால் மலைபோல வரும் துன்பம் பனிபோல போக வாய்ப்பிருக்கிறது.

கடகம் Cancer

சும்மா சொல்லக்கூடாது. உங்க ராசிப்படி உங்கள் வாழ்க்கைத்துணையை உங்க வீட்டிலேயே பார்த்து முடிவு பண்ணி விடுவார்கள் என்பதால் நிறைய அலைச்சல், செலவு, உளைச்சல் மிச்சமாகும். அதற்கெல்லாம் சேர்த்துவைத்து திருமணத்திற்குப் பிறகு மூன்றும் சேர்ந்து மும்முனைத் தாக்குதல் நடத்தும்.

சிம்மம் Leo

இந்த ராசிக்காரர்கள் எல்லா கிரெடிட் கார்டு பாக்கியையும் விரைவில் அடைத்து விடுவார்கள் என்பதால், புதுக்கார்டுகள், புதுக்கடன், புதுக்காதல் எல்லாம் கைகூடுகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சூட்டோடு சூடாக, கடன் தலைக்கு மேல் மீண்டும் போவதற்கு முன்னர், திருமணத்தை முடித்துக்கொள்வது உசிதம்.

கன்னி Virgo

’தெரியாத்தனமாகக் காதலித்துத் தொலைத்துவிட்டோமே, இதெல்லாம் நமக்குத் தேவையா என்று தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள். இவ்வளவு நாட்கள் இடைவிடாத சண்டையும் சச்சரவுமாக காதலித்துவிட்டதால், போனால் போகிறது என்று இனி திருமணம் செய்து கொண்டு விடலாம். இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்காதவர்களுக்கு பூர்வஜென்ம தொடர்புகள் ஏற்படுகிற வாய்ப்புகள் இருப்பதால், மலைப்பிரதேசங்களுக்குப் போக வேண்டிய பல வாய்ப்புகள் ஏற்படலாம். (கு..றிஞ்சி மலர் மலையில் தானே பூக்கும்!)

துலாம் Libra

இந்த ராசிக்காரர்கள் அனேகமாக அவரவர் பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. விரைவில் டும்டும் கொட்டப்போகிறது என்பதால், ப்ரிவிலேஜ் லீவ், லோன் ஆகியவற்றிற்கான ஊத்தப்பங்களை, மன்னிக்கவும், விண்ணப்பங்களை தயார் செய்து கொள்ளவும். தன்னந்தனியாக இருப்பவர்களே! திரும்பிப் பாருங்கள் - வில்லங்கம் விரைவு வண்டியிலே வந்திட்டிருக்கு!

விருச்சிகம் Scorpio

இதுவரைக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட காப்பாற்றாத காதலர்கள் இனிமேல் புதிய வாக்குறுதிகளை அளித்து விடுவார்கள். காதலுக்கு தைரியமும் திராணியும் மிக அவசியம். எனவே, யாரையாவது பார்த்து காதல் வந்தால், தைரியமாகச் சொல்லிவிடுங்கள். பிரச்சினை வந்தால், இருக்கவே இருக்கிறது திராணி! திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுங்கள்!

தனுசு Sagittarius

இதுவரை சதா சண்டை,சச்சரவு,கோபம் என்றிருந்த காதலர்களுக்கு, இனிமேல் அதுவே பழகிப்போய் விடும். ஆகையால் இனிமேல் ஒருநாள் சண்டை போடாவிட்டாலும், மனம் பதைபதைத்து "உடம்புக்கு ஒண்ணுமில்லையே?" என்று அக்கறையோடு விசாரிப்பீர்கள்.

உங்களது கனவுக்கன்னி அல்லது கனவுக்காதலன் எப்படியிருக்க வேண்டும் என்று கற்பனை செய்பவர்கள், மறந்து விடுவதற்கு முன்னர் எழுதிவைத்துக்கொண்டு தேடுதல் நன்மை பயக்கும்.

மகரம் Capricorn

பன்னிரெண்டு ராசிகளிலும் காதலர்களுக்கு மிகவும் மோதகமான, அதாவது சாதகமான ராசி இது தான். உங்கள் காதலைப் பற்றி வீட்டில் யாராவது போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்பதால் இனிமேல் பயமின்றி சந்திக்கலாம். இதுவரை காதலிக்காதவர்களிடம் யாராவது வந்து அசடுவழிந்து அகமகிழச்செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கும்பம் Aquarius

இந்த ராசிக்காரக் காதலர்கள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம். ஒன்று தங்களுக்குள்ளே ஏற்பட்ட மனக்கசப்புகளையெல்லாம் ஒரு மசால்தோசை சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுவார்கள். இல்லாவிட்டால், ஆளுக்கு ஒரு கப் அருகம்புல் ஜூஸ் குடித்துவிட்டு ஆளை விடு சாமீ என்று போய்விடுவார்கள். இதுவரை காதலிக்காதவர்கள், எப்போது சினிமாவுக்குப் போனாலும் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் எடுப்பது நல்லது. குருட்டாம்போக்கில் ஜோடி சேர்ந்தாலும் சேரும்.

மீனம் Pisces

இந்த ராசிக்காரர்களிடம் கோடம்பாக்கம் போக வழிகேட்டால், பதில் சொல்வதற்குள்ளாக நீங்கள் கோயம்புத்தூருக்கே போய்வந்து விடலாம். ஆனால், திடீரென்று லெட்டர்-பேட் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அடைவது போன்ற சுறுசுறுப்பை இவர்கள் அடையவும் வாய்ப்பிருக்கிறது. எனவே காதலில் ஒரு லிரில் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் ஏற்படும். புதிதாகக் காதலிக்க விரும்புகிறவர்கள் யுவன் சங்கர் ராஜா பாடல்களை தினமும் குளித்துவிட்டுப் பாராயணம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும்:

ராசியான நிறம்: சிவப்பு
ராசியான உடை: முக்காடு
ராசியான எண்கள்: 'பிஸி’ யாக இல்லாத எல்லா எண்களும்.

டிஸ்கி: எனக்கு ஜோதிடம் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள், இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும் - எனக்குக் காதலைப் பற்றியும் சுத்தமாகத் தெரியாது. ஆகையால், ஜோதிடர்களும் காதலர்களும் என்னை மன்னிப்பார்களாக!

Wednesday, February 9, 2011

அந்தநாய் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

களக்காடு கருமுத்து: வணக்கம் நேயர்களே! இது உங்களது அபிமான சேட்டை டிவியின் "இன்னாபா, நல்லாகீறியா?" நிகழ்ச்சி. இன்று நம்முடன் கலந்துரையாடவும், நேயர்களின் சந்தேகங்களைப் போக்கவும் டாக்டர்.பைரவன் வந்திருக்கிறார். வணக்கம் டாக்டர்!

டாக்டர்: வணக்கம் களக்காடு கருமுத்து!

களக்காடு கருமுத்து: டாக்டர், நீங்க சமீபத்துலே சென்னையிலே நாய்களுக்குன்னே ஒரு ஆஸ்பத்திரி ஆரம்பிச்சிருக்கீங்க. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

டாக்டர்: இன்னிக்கு நான் இந்த நிலைமையிலே இருக்குறதுக்குக் காரணமே ஒரு நாய் தான். எங்க மாமனார் வீட்டுலே ஒரு நாய் இருந்திச்சு! அது எனக்கு முன்னாடி என் மனைவியைப் பொண்ணு பார்க்க வந்தவங்களையெல்லாம் பார்த்து பயங்கரமாக் குரைச்சுதாம். ரெண்டு மூணு பேரைக் கடிச்சே தொரத்திருச்சாம்! ஆனா, என்னைப் பார்த்ததும் சந்தோஷமா வாலாட்டிச்சு! அடுத்த முகூர்த்தத்துலேயே எங்க மாமனாரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டாரு!

களக்காடு கருமுத்து: ஐயையோ, நாய்க்கா?

டாக்டர்: இல்லை, அவரோட பொண்ணுக்குத்தான்!

களக்காடு கருமுத்து: ஏதோ விட்டகுறை, தொட்ட குறை போலிருக்குது! இப்பவும் உங்க மாமனார் வாலாட்டுறாரா, அதாவது மாமனார் வீட்டு நாய் வாலாட்டுதா?

டாக்டர்: இல்லீங்க! ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுன்னு சொல்வாங்களே! அது மாதிரி இப்போ அந்த நாய் தினமும் பிரேக்-ஃபாஸ்ட்டுக்கு அப்புறம் அரை மணிநேரம், டின்னருக்கு முன்னாடி அரை மணிநேரம் என்னைப் பார்த்து ஓவரா குரைக்க ஆரம்பிச்சிருச்சுங்க! தீபாவளி, பொங்கல்னு போனா கடிச்சுப் பிறாண்டிரும்!

களக்காடு கருமுத்து: அப்புறம் எதுக்கு நாய்க்குன்னு ஆஸ்பத்திரி கட்டினீங்க?

டாக்டர்: நாய்ங்க நல்லா இருந்தாத்தான் நாமளும் நல்லாயிருக்க முடியும். உங்க வீட்டுலே இருக்கிற நாய் ஆரோக்கியமா இருந்தாத்தானுங்களே, யாரு திருடன், யாரு மாப்பிள்ளைன்னு கரெக்டா அடையாளம் கண்டுபிடிக்கும்? நீங்களும் எத்தனை ஊசிதான் போட்டுக்குவீங்களாம்?

களக்காடு கருமுத்து: அதுவும் சரிதான்! ஆனா, அதுக்குன்னே ஆஸ்பத்திரி கட்டுறதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா?

டாக்டர்: என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? கொஞ்ச வருசங்களுக்கு முன்னாலே என் கம்பவுண்டர் ஒருத்தன், ஏதோ ஒரு கோபத்துலே எங்க வீட்டு நாயைக் கடிச்சு அது ஸ்பாட்டுலேயே செத்துப்போயிடுச்சு! அதுனாலே தான் மனிசங்க கிட்டேருந்து நாயைக் காப்பாத்தணுமுன்னு ஆஸ்பத்திரி கட்டினேன்.

களக்காடு கருமுத்து: என்ன டாக்டர், மனிசன் நாயைக் கடிச்சா நாய் செத்திருமா?

டாக்டர்: மனிசன் கடிச்சா மனிசனே செத்திருவான். நாய் சாகாதா?

களக்காடு கருமுத்து: எதுக்கும் கொஞ்சம் தள்ளியிருந்தே பதில் சொல்லுங்க டாக்டர். அது போகட்டும், சென்னையின் மையப்பகுதியில் பல அடுக்குமாடிக்குடியிருப்புகள் இருக்கிற பகுதியில் உங்களது நாய் மருத்துவமனை இருக்கிறதே! இதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிப்பதில்லையா?

டாக்டர்: இல்லை! சொல்லப்போனா, குடும்பச்சண்டையிலே பொஞ்சாதியைப் போட்டு உதைக்கிற ஆசாமிங்க, பார்ட்டிக்குப் போயிட்டு மோட்டார் சைக்கிள்லே ரோட்டுலே கூவிட்டுப் போற இளைஞர்கள், அர்த்தராத்திரியிலே வெஸ்டர்ன் மியூசிக் அலறவச்சுக்கிட்டு அலப்பறை பண்ணுற சின்னப்பொண்ணுங்க, இவங்களோட ஒப்பிட்டா, நாய்ங்க எவ்வளவோ மேல். "ஸ்லீப்" ன்னு சொன்னாப் போதும், படுத்துத் தூங்கிடும்.

களக்காடு கருமுத்து: எங்க எம்.டி. ஒரே விஷயத்தை பத்துவாட்டி சொன்னாலும் எனக்குப் புரிய மாட்டேங்குது. ஆனா, நாய்களுக்கு நாம போடுற உத்தரவு எப்படி டக்குன்னு புரியுது?

டாக்டர்: நாய்ங்களுக்கு ஐ.க்யூ அதிகம்! அதுங்களாலே ஆயிரம் வார்த்தைகளை ஞாபகத்துலே வச்சுக்க முடியும். அதுனாலே யாராவது ஒரு வார்த்தையை அடிக்கடி சொன்னா, என்ன செய்யணுமுன்னு புரிஞ்சுக்கிட்டு அடுத்தவாட்டி உடனே செஞ்சிடும்.

களக்காடு கருமுத்து: மகிழ்ச்சிங்க! இப்போ நேயர் தொலைபேசியிலே அழைக்கிறாங்க! பதில் சொல்லுவோமா? ஹலோ...இது சேட்டை டிவி இன்னாபா நல்லாகீறியா! உங்க கேள்வி என்னங்க?

தொ.பே.நேயர்: ஹலோ டாக்டருங்களா? எங்க வீட்டு நாய்க்கு தினமும் கறியும் மீனும் ஆக்கிப்போடறேனுங்க. இருந்தாலும், அதை வெளியே கூட்டிக்கிட்டுப்போனா, குப்பைத்தொட்டிக்குப் போயி எச்சி இலையைத் தேடுதுங்க! என்னங்க பண்ணட்டும்?

டாக்டர்: உங்க வீட்டுக்காரரு என்னம்மா பண்ணுறாரு?

தொ.பே.நேயர்: புடவையை அலசிட்டிருக்காருங்க!

டாக்டர்: அதைக் கேட்கலேம்மா, என்ன தொழில் பண்ணுறாரு?

தொ.பே.நேயர்: வட்டச்செயலாளரா இருக்காருங்க!

டாக்டர்: ஓ அரசியலா? அப்போ உங்க நாயும் அப்படித்தானிருக்கும். தேர்தல் முடிஞ்சதும் எச்சி இலை தின்னுறதை நிறுத்திடும். கவலைப்படாதீங்க!

களக்காடு கருமுத்து: டாக்டர், செகண்ட் ஷோ சினிமா பார்த்திட்டுப் போனா, தெருநாயெல்லாம் எதுக்குக் குரைக்குது? ஏன் கடிக்குதுங்க?

டாக்டர்: நாய்ங்களுக்கு பிரைவஸியே கிடையாது சார்! நம்மளை மாதிரி அதுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு ஹனிமூனா போவுதுங்க? மிஞ்சிப்போனா மந்தவெளி நாய் மயிலாப்பூரு டேங்க் வரைக்கும் போயி கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணும். அந்த நேரத்துலேயும் நீங்க டிஸ்டர்ப் பண்ணினா எப்புடி?

களக்காடு கருமுத்து: ஓஹோ! நாய்ங்களைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கிறா மாதிரி நாய்க்குக் கூட தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். புதுசு புதுசா தகவல் சொல்றீங்களே!

டாக்டர்: இப்போ சமீபத்துலே சென்னையிலே இந்தியாவுலேயே முதல் முறையா ’அகில இந்திய மிருக நல்வாழ்வு மாநாடு" நடந்திச்சு தெரியுமா? அதுலே நானும் கலந்துக்கிட்டேன்.

களக்காடு கருமுத்து: அப்படியா? அங்கே நீங்க எதைப் பத்திக் குரைச்சீங்க, ஐ மீன், எதைப் பத்திப் பேசினீங்க?

டாக்டர்: நாயை வளர்க்கிறவங்க தினமும் காலையிலே வாக்கிங் போகணும். வேளா வேளைக்குச் சாப்பிடணும். காலாகாலத்துலே தூங்கப்போகணும். இல்லாட்டா உடம்புலே கொலாஸ்ட்ரல் அதிகமாயி ஹார்ட் அட்டாக் வந்திடும்.

களக்காடு கருமுத்து: இது எல்லா டாக்டரும் சொல்லுறது தானே?

டாக்டர்: நான் ஹார்ட் அட்டாக் வருமுன்னு சொன்னது நாய்க்கு! அதாவது, விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா, எஜமான் எப்படி இருக்காங்களோ, அவங்க வளர்க்குற நாய்ங்களும் அப்படியே இருக்குமாம். எஜமானுக்கு இருக்கிற எல்லா குணமும் நாய்க்கும் வருமாம். உதாரணத்துக்கு ஒரு சினிமா ஸ்டார் வீட்டுலே வளர்ற நாயின்னு வச்சுக்குவோம்....

களக்காடு கருமுத்து: அதுவும் கட்சி ஆரம்பிச்சிருமா?

டாக்டர்: இல்லை இல்லை! அது கறி கிடைக்கிறவரைக்கும் வாலாட்டிக்கிட்டே இருக்குமாம். திடீர்னு கறி கொஞ்சம் குறைஞ்சு போனாலோ, நின்னு போனாலோ, குரைக்க ஆரம்பிச்சிடுமாம்.

களக்காடு கருமுத்து: ஓஹோ! அடுத்த நேயர் தொலைபேசியிலே! ஹலோ, யாருங்க?

தொ.பே.நேயர்: ஹலோ டாக்டர், எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். எல்லா நாயும் இங்கிலீஷ் பேசுனா புரிஞ்சுக்குது; தமிழிலே பேசினா கண்டுக்கவே மாட்டேங்குதே? என்ன காரணமுங்க?

களக்காடு கருமுத்து: ஆமா டாக்டர், இப்பல்லாம் மனிசங்களே தமிழிலே பேசினா கண்டுக்க மாட்டேங்குறாங்களே, ஏன்?

டாக்டர்: அதாவது இதுக்கு விஞ்ஞானபூர்வமான காரணம் சொல்றதை விடவும், வரலாறுபூர்வமா ஒரு காரணம் சொல்றேன். நம்ம நாட்டை வெள்ளைக்காரன் ஆண்டபோது அவன் அங்கங்கே போர்டு வச்சிருந்தான். ’நாய்களும் இந்தியர்களும் உள்ளே வரக்கூடாது,’ன்னு....! இப்போ வெள்ளைக்காரன் இல்லை; நாயும் அவன் விட்டுட்டுப்போன இங்கிலீஷும் தானிருக்கு! அதுனாலே அவன் மேலேயிருக்கிற கோபத்தை நாயோட இங்கிலீஷ்லே பேசி மக்கள் தீர்த்துக்கிறாங்க!

களக்காடு கருமுத்து: உண்மை தான் டாக்டர், நன்றியுள்ள பிராணி மட்டுமில்லை; நாய் புத்திசாலியும் கூட! எத்தனை கொலை கேசுலே நாயை வச்சுத் துப்புக் கண்டுபிடிச்சிருக்காங்க! அதோட மோப்பசக்தி மாதிரி வருமா?

டாக்டர்: கரெக்ட்! நாய்ங்க போலீஸ்காரங்களுக்கு மட்டும்தான் மோப்பம் பிடிச்சு உதவுமுன்னு தானே கேள்விப்பட்டிருக்கீங்க? இப்பல்லாம் எங்களை மாதிரி டாக்டருங்களுக்கும் ஒத்தாசை பண்ண ஆரம்பிச்சிருச்சு தெரியுமா?

களக்காடு கருமுத்து: எப்படி டாக்டர், பிரைவெட் ஆஸ்பத்திரிங்களிலே பணம் கட்டாதவங்க வேட்டியை உருவ நாயை பயன்படுத்தறீங்களா?

டாக்டர்: சேச்சே! அந்த வேலைக்கெல்லாம் நாயை விட சீப்பா மனிசங்க தாராளமா கிடைக்கிறாங்களே! நான் சொல்றதே வேறே...!

களக்காடு கருமுத்து: என்ன டாக்டர்?

டாக்டர்: நாயோட மோப்ப சக்தியாலே ஒரு விதமான புற்றுநோயைக் கூட கண்டுபிடிக்க முடியுமுன்னு இப்போ சமீபத்துலே கண்டுபிடிச்சிருக்காங்க!

களக்காடு கருமுத்து: பிரமாதம் டாக்டர்! உண்மையிலேயே நாய் மனிதனின் உற்ற நண்பன் தான். இதோ, அடுத்த நேயர் தொலைபேசியிலே....ஹலோ...

தொலைபேசியில்: லொள்...லொள்...லொள்...லொள்!லொள்...லொள்ளோ லொள்...

களக்காடு கருமுத்து: ஐயையோ, என்ன டாக்டர் லைனிலே நாயே வந்திருச்சு!

டாக்டர்: யூ டோண்ட் வொர்ரி! நான் டீல் பண்ணுறேன் பாருங்க! ஹலோ....!

தொலைபேசியில்: லொள்...லொள்...லொள்...லொள்....!

டாக்டர்: லொள்? லொள்லொள்..லொள்??

தொலைபேசியில்: லொள்...லொள்...லொள்!

டாக்டர்: லொள்? லொள்லொள்??

களக்காடு கருமுத்து: ஆஹா, குரைக்கிற நாய் கடிக்காதும்பாங்க! இந்த டாக்டரு குரைக்கிறதோட நிறுத்திக்குவாரா இல்லாட்டிக் கடிப்பாரா தெரியலியே! இதுக்கா இம்புட்டு நாள் கழிச்சு டிவியை தூசி தட்டி ஆரம்பிச்சோம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Tuesday, February 8, 2011

பேல்பூரி

கேட்டதும் கேட்க விரும்புவதும்

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தாமல் கருணாநிதி கவனமாக இருக்கிறார்-அன்பழகன்

சந்தோசம்! வருகிற மார்ச் 31 2011 நிலவரப்படி தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ.1,01,541 கோடிகளாக இருக்குமாமே! முடிஞ்சா அந்தச் சுமையையும் இறக்குங்க பார்க்கலாம்.

கருப்புப் பண முதலைகள் 17 பேருக்கு நோட்டீஸ்-பிரணாப் தகவல்

நல்ல காரியம் பண்ணினீங்க! அவங்க முன்ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா பாவம்?

பிப்ரவரி 14-ம் தேதி பெட்ரோல் போடாமல் இருப்போம்-கமல் வேண்டுகோள் விடுத்தார்.

என்னது இது? இன்னும் ’மன்மதன் அம்பு’ கடுப்பு தீரலியா? ’காதலர் தினம்,’ அதுவுமா பெட்ரோல் போடாதீங்கன்னா, எப்படி ஃபிகருங்களோட ஊரைச் சுத்துறதாம்?

காங்கிரஸில் இணைந்தது சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி!

இனிமேல் "மஜா" ராஜ்யம் தான்னு சொல்லுங்க!

"திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்", ஸ்ரேயா

இந்த நல்ல புத்தி முன்னமே வந்திருந்தா, நான் அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தைக் கலைச்சிருக்க மாட்டேனே?

தில்லியில் வாழைப்பழம் விலை கடும் உயர்வு

வயிறு தெரியாமத் தின்னுப்புட்டு அஜீரணத்தாலே அவதிப்படுறவங்க (கல்மாடி வகையறா...) எண்ணிக்கை அதிகமாயிடுச்சோ? எதுக்கும் வருமான வரித்துறையை வாழைப்பழமண்டி எல்லாத்தையும் ஒரு சோதனை பண்ணச்சொல்லுங்கப்பா!

ஜனவரியில் டெல்லியில் 82,368 பாட்டில் ஸ்காட்ச் விற்பனை

சந்தேகமேயில்லை! இந்தியா வல்லரசுதான்!

படித்ததும் மகிழ்ந்ததும்!

நண்பர் பிரபாகர் சிங்கப்பூரிலிருந்து வந்ததும் இருமுறை சந்தித்தாகி விட்டது. கடைசியாய், ஒரு நாள் முழுக்க சென்னை நகர்வலம் வந்து, அயனோக்ஸில் "ஆடுகளம்" பார்த்து, பாண்டிபஜார் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இனிப்பு, கார போளியும், ஃபில்டர் காப்பியும் குடித்து உலகப்பொருளாதாரம், பின்நவீனத்துவம் நீங்கலாக எல்லாவற்றையும் பற்றி அரட்டையடித்தோம். இப்போதெல்லாம் நான் அவரிடம் கேட்பது:

"சிங்கப்பூரை விட்டுட்டீங்க; இங்கே வந்திட்டீங்க! சந்தோஷம்! ஏன் எழுதுறதை விட்டீங்க?"

’விடவில்லையே!’ என்பது போல ஒரு இடுகை எழுதியிருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சியாக இருந்தது. வந்தனம் நண்பரே!

பார்த்ததும் நெகிழ்ந்ததும்!

பார்பி பொம்மை போன்றதொரு சிறுமி! எதிரேயிருக்கும் பள்ளிமுடிந்து, தாயின் கையைப் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்கும் தறுவாயில், கண்மூடித்தனமாக கடந்த பல்ஸர் ஒன்று மோதி, ஓரிரெண்டு அடிகள் இழுத்துச் சென்றதில் கணுக்காலருகே சதை பிய்ந்துவிட்டது. கடவுள் புண்ணியத்தில், உயிருக்கு ஆபத்தில்லை. உடனடியாக, சைல்ட் டிரஸ்ட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுமிக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சின்னக்குழந்தையாயிருந்தாலும், தைரியமாக படுக்கையில் உட்கார்ந்தபடி ஓரிரு தினங்களில் பள்ளியில் நடைபெறவிருந்த விளையாட்டு தினத்துக்காக நடனப்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

"எனக்கு ஒண்ணுமில்லேம்மா! நான் கண்டிப்பா டான்ஸ் ஆடுவேன்!"

ஆனால், அவள் ஆடவில்லை! உடல் முழுமையாகத் தேறும்வரைக்கும் ஆடுகிற நிலையில் அந்த பிஞ்சு தேகம் இல்லை. அந்த விபத்திலிருந்து அவள் மீண்டுவிட்டாள். அவளது ஏமாற்றத்திலிருந்து......?

மோட்டார் சைக்கிள் மாவீரர்களே! உங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும், அடுத்தவர்களைப் பற்றி கொஞ்சம் யோசித்தால், ஆக்ஸிலேட்டரை அதிகம் முறுக்க மாட்டீர்கள்.


மெட்டில் ஒரு குட்டு

நாக்பூர் பட விழாவில் நான் கடவுள் திரையிடப்படுவதாக அறிந்தேன்.

நான் கடவுள்’ என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று. படம் முழுக்கவும் ஆறுதலே இன்றி அழுத்தமாக அகோரிகள் தொடங்கி, பிச்சைக்காரர்கள் வரையிலும் படத்தின் தென்பட்டவர்களோடு நெளிந்தபடி உட்கார்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்ச்சிபூர்வமான அசவுகரியத்தை அனுபவித்தேன். ஆனால், அது தானே உண்மை என்பதை வலுக்கட்டாயமாக புறந்தள்ள முயன்றும் தோற்றுப்போனேன். இளையராஜா- நான் இறந்து போவதற்குள் ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிற ஒரு யுகபுருஷன்.

இப்போது ஐ.எஸ்.ஆர்.ஒ-விலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அப்படிப்பட்டதொரு மகத்தான ஊழலைப் பற்றி, இசைஞானியின் இசையில் நக்கலும் குத்தலுமாய் ஒரு பாடலைக் கேட்டால் எப்படியிருக்கும்? கீழே தரப்பட்டுள்ள சுட்டியைச் சொடுக்கி, பாருங்கள், கேளுங்கள்!

நாஞ்சில் வேணுவின் வலைப்பூ: பழங்கஞ்சி

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்


கடைசிப்பத்தி:

"-------------- புத்தகம் வாங்கிட்டேன்!"

"அந்தாளு எழுதினதையா? லூஸா நீ?"

"-------------- புத்தகமும் வாங்கினேன்."

"ஓ! நீ அந்த ஊருக்காரனா?"

"சரியாப் போச்சு! -------------- புத்தகம் எப்படி?"

"அடப்பாவி! அவனா நீ?"

"அப்போ எதைத் தான் படிக்கிறதாம்? -------------- பரவாயில்லையா?"

"இனம் இனத்தோட தானே சேரும்! அது போகட்டும், பொன்னியின் செல்வன் படிச்சியா?"

"இல்லேப்பா, நம்மளாலே அம்புட்டுப் பெரிய புத்தகமெல்லாம் படிக்க முடியாது."

"நீயெல்லாம் தமிழன்னு சொல்லிக்கிறதே தப்புடா!"

நீதி: புத்தகம் வாங்க விரும்பினால், வாங்கினோமா படித்தோமா என்று சத்தம்காட்டாமல் இருப்பதே சாலச்சிறந்தது. வாங்கின புத்தகத்தைப் பற்றி நண்பர்களிடம் உரையாடினால் (அ) பீற்றிக்கொண்டால் சிக்கல்தான். இப்போது எனக்கு ’பொன்னியின் செல்வன்’ வாங்கி தமிழன்தான் என்று நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.

அமரர் கல்கி காக்க காக்க!
அருண்மொழிவர்மன் காக்க காக்க!!

Saturday, February 5, 2011

பிரியாணி புராணம்

போன இடுகை கர்நாடக அரசியல்வாதி பற்றியது என்றால் இந்த இடுகை ஆந்திரா அல்லது தெலுங்கானா அல்லது ஆந்திரானா பற்றியது. தமிழ்நாட்டுலே ஸ்டாக் தீர்ந்து போயிடுச்சான்னு கேட்கறீங்களா? இந்த இரண்டு நாளிலே நம்மாளுங்களைப் பத்தி, ஒவ்வொருத்தரும் எழுதுற இடுகையைப் பார்த்தா, "நல்ல வேளை, நாம இவங்க வாயிலே மாட்டிக்கலே; இல்லாட்டி போதுண்டா சாமின்னு இளைஞன் படத்தை தொடர்ந்து ஒண்ணேகால் வாட்டி பார்த்து செத்துப்போயிருப்பேன்,"னு தோணுது. ஏன்னா, எனக்கு சூடு சூலாத்தா, சொரணை சொர்ணாத்தா ரொம்ப அதிகம்!

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் பத்தி யாராச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா? அவரு தான் தெலங்கானா ராஷ்டிர சமிதின்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு ஆந்திராவைப் பிரிச்சே ஆகணுமுன்னு பத்துப் பதினஞ்சுவாட்டி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்திட்டாரு! ஒருவாட்டி கூட...ஊஹும்! சரி, அதுக்கும் பிரியாணிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்கறீங்களா? சம்பந்தா சம்பந்தமில்லாம பேசறதுக்கு நானென்ன பிரணாப் முகர்ஜீயா? நிறைய சம்பந்தம் இருக்கு! என்னென்ன ஒற்றுமைன்னு பார்ப்போம்.

ஹைதராபாத் பிரியாணியோ, தெலங்கானாவோ ஒரே ஒருத்தராலே பண்ண முடியாது. ரெண்டுக்குமே சூடாயிருக்கும்போதுதான் மவுசு அதிகம். என்னை மாதிரி, ஒழுங்கா காப்பி கூட போடத்தெரியாதவன் மல்லிகா பத்ரிநாத் புத்தகத்தை வாசிச்சுக்கிட்டே ஹைதராபாத் பிரியாணி பண்ணினா எப்படியிருக்குமோ, அப்படித்தான் இன்னிக்கு ஆந்திராவுலே தெலுங்கானாவும் சொதப்பிருச்சு! எப்படி ஆரம்பிக்கணும், எப்படி முடிக்கணும்னே யாருக்கும் தெரியலே! பிரியாணிக்கு அரிசி,மட்டன்,நெய்,மசாலா சாமானெல்லாம் கரெக்டா போடுறா மாதிரி, தெலங்கானாவுக்கும் இருக்கிற எல்லா கட்சியோட பங்களிப்பும் கரெக்டா இருந்திருந்தா இன்னேரம் பிரியாணி மாதிரி தெலங்கானாவும் கமகமன்னு வந்திருக்கும்.

பிரியாணி எனப்படுவது யாது? அஃதின் பதவுரை, பொழிப்புரை எவையெவை-ன்னு யாருக்குமே தெரியாது. அதே மாதிரி தெலங்கானான்னா இன்னான்னு கேட்கிறவங்களுக்கும் தெரியலே; தரமாட்டோமுன்னு சொல்றவங்களுக்கும் தெரியலே! ஆனா, ஆந்திரான்னு சொன்னாலே இந்த ரெண்டும்தான் டக்குன்னு ஞாபகத்துக்கு வரும். எப்படி பிரியாணிக்கு மேலே டெகரேஷனெல்லாம் பண்ணுறது அவசியமோ, அதே மாதிரி தெலங்கானாவுக்கும் விஜயசாந்தி மாதிரி அலங்காரம் அவசியமாயிருச்சு!

இந்த தெலங்கானா போராட்டமெல்லாம் கொஞ்ச வருசமாத்தான் நடந்திட்டிருக்கு. ஆனா, ஹைதராபாத் பிரியாணி எத்தனை வருசமா இருக்குன்னு எந்த கொலம்பஸும் கண்டுபிடிக்கலே! ஆரம்பத்துலே நிஜாம்களோட அரண்மனையிலே செய்ய ஆரம்பிச்ச பிரியாணி, காங்கிரஸ் கட்சியோட ஊழல் மாதிரியே பரம்பரை பரம்பரையா தொடர்ந்துக்கிட்டு வருது. முதல்லே மட்டன் பிரியாணி மட்டும் தான் இருந்ததாம். அப்பாலே, சிக்கன் வந்தது. இப்போ கல்யாணி பிரியாணி, லால் பிரியாணி, ஷாஹி பிரியாணி, முகலாய் பிரியாணி, ஜஃப்ராணி பிரியாணி, காஜூ பிரியாணின்னு ஏகப்பட்ட வரைட்டி வந்திருச்சு. சமீபகாலமாக, ஆவக்காய் பிரியாணி என்ற புதுரகமும் சக்கைபோடு போடுகிறதாம். இதே பெயரில் ஒரு படமும் வெளியாகியதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ஆனா, தெலங்கானா மட்டன் தெலங்கானாவாகவே, அதாவது வெறும் தெலங்கானாவே தானிருக்கு!

(பிரியாணியைப் பத்தி எழுதி எழுதி நாக்குலே எச்சி ஊறுது. திங்கட்கிழமை மூர் தெருவுக்குப் போயி பிஸ்மில்லாவுலே ஒரு பிளேட் வாங்கி உள்ளே தள்ளியே தீரணும்!)

ஒருவழியா, பிரியாணிக்கும் ஆந்திராவுக்கும் இருக்கிற ஒற்றுமையெல்லாம் (கொஞ்சம் அங்கங்கேயிருந்து சுட்டு) சொல்லிட்டேன். இப்போ மேட்டருக்கு வர்றேன். (யாரது ’இனிமேத்தானா?’ன்னு கேட்குறது?)

நம்ம கல்வ குண்டல சந்திர சேகர் ராவ் இருக்கிறாரே, அந்த மனுசன் பிரியாணியைப் பத்தி எதையோ சொல்லப்போக, தெலங்கானா பிரச்சினையிலே ஒரு திடுக்கிடும் திருப்பமே ஏற்பட்டிருச்சாம். கொஞ்ச நாளைக்கு முன்னாலே அவரு, "பிரியாணின்னா ஹைதராபாத் பிரியாணிதான்! பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னாயிருக்கு!!"ன்னு நரசுஸ் காப்பி விளம்பரத்துலே உசிலைமணி சொன்ன மாதிரி சொல்லியிருக்காரு. அத்தோட விட்டிருந்தா பரவாயில்லை. "ஆந்திராவுலே பண்ணுறதெல்லாம் பிரியாணியா? மாட்டுச்சாணி மாதிரியில்லே இருக்கு?"ன்னு கேட்டாரய்யா ஒரு கேள்வி. (இத்தனைவாட்டி இந்தாளு உண்ணாவிரதம் இருந்தும் எப்படி இவ்வளவு திடகாத்திரமா இருக்காருன்னு இப்போ புரியுது! இவரு வீட்டுப் பக்கத்துலே எவனும் இனிமே மாட்டை மேயக்கூட அனுப்ப மாட்டான்!)

"பிரியாணியைப் பழித்தவரை பிரியாணியே தடுத்தாலும் விடேன்," என்று தெலங்கானா விரோதக் கட்சிகளெல்லாம் பிரியாணியை ஒரு பிடி பிடிக்கிறா மாதிரியே நம்ம ராவ்காருவையும் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க!

"எங்கள் பிரியாணி புராதனமானது; வரலாற்றுச் சிறப்பு மிக்கது," என்று ஆந்திராக்காரர்கள் கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அத்தோடு விட்டார்களா, ஆந்திராவின் குண்டூர், விஜயவாடா போன்ற பகுதிகளிலிருந்து பல பெண்கள் பிரியாணி தயாரித்து,"முதலில் இதைச் சாப்பிட்டு விட்டு அப்புறம் பேசுங்கள்," என்று கல்வ குண்டல சந்திர சேகர ராவுக்கு பார்சலில் அனுப்பி வைத்திருக்கிறார்களாம். கொரியர் இரண்டு நாட்கள் தாமதமாகப் போய், அந்தப் பார்சலை ராவ் திறந்திருந்தால் அது எவ்வளவு பெரிய விபரீதமாயிருக்கும்? நல்ல வேளை!

தெலுகு தேசக்கட்சியைச் சேர்ந்த கொரண்டலா புச்சையா என்ற பிரமுகர் (இவங்க பெயரையெல்லாம் டைப் பண்ணினா, கீ-போர்டுக்கே சுளுக்கு வந்திருது!) பிரியாணியை இழித்துப் பேசிய ராவுக்குக் கண்டனமே தெரிவித்திருக்கிறார்.

"சந்திர சேகர் ராவின் தாத்தா எங்களது பிரியாணியைத் தானே சாப்பிட்டார்? அவர் எங்களது பிரியாணியைப் பற்றி அவதூறாக ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று பழைய அரசு ஆவணங்களையெல்லாம் தேடிப்பார்த்து ஆதாரங்களோடு கேள்வி எழுப்பியிருக்கிறார். "சந்திர சேகர் ராவின் மருமகளுக்கு பிரியாணி சமைக்கத் தெரியாது என்பதற்காக, பிரியாணியைப் பற்றி அவதூறாகப் பேசுவதா?" என்று குடும்பத்தையே இழுத்து விட்டதால், சந்திர சேகர் ராவின் மருமகள் இன்றுவரையிலும் மூன்று வேளையும் பிரியாணியாகவே சமைத்துப் போட்டு இம்சித்து வருவதாக ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து தெலங்கானா கோரிக்கை போலவே பிரியாணி தேசம் என்ற தனிமாநிலம் வேண்டுமென்று சிலர் கோரிக்கை விட வாய்ப்பிருப்பதாக, அரசியல் சமையல்காரர்கள், அதாவது அரசியல் சமநிலைவாதிகள் கருதுகிறார்களாம். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடாமல் இருக்க, மத்திய அரசு ஒரு மூன்று நபர் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்பி, பிரியாணி குறித்த விபரமான அறிக்கையைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மாநிலம் கேட்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ஆந்திராவில் ஆடுகள் மற்றும் கோழிகள் மிகவும் கலவரமடைந்திருக்கின்றன. (அனுஷ்கா ஆந்திராவா, தெலுங்கானாவா என்று தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று முன்யோசனையோடு அவர் படத்தையும் போட்டிருக்கிறேன்.)

Thursday, February 3, 2011

விடாது கருப்பு

ஜோதிட நிலையத்துக்குள் நுழைந்தபோது, அவர் மதிய உணவு டப்பாவுக்குள்ளிருந்த தயிர்சாதத்தை தேக்கரண்டியால் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

"வணக்கம் ஜோசியரே, என்னாச்சு, தயிர் சாப்பாட்டுக்குள்ளே புதையல் தேடறீங்களா?" என்று கேட்டவாறே நான் அமரவும், என்னுடன் வந்தவரும் உடனமர்ந்தார்.

"வா சேட்டை, சாதத்துக்குத் தொட்டுக்க ஊறுகாய் வைக்கச் சொல்லியிருந்தேன். வைச்சாளா இல்லியான்னு தேடிட்டிருக்கேன்," என்று அசடுவழிந்தார் ஜோசியர்.

"நீங்க எவ்வளவு பெரிய ஜோசியரு? டப்பாவைப் பார்த்ததுமே உள்ளே ஊறுகாய் இருக்கான்னு ஜோசியம் சொல்ல முடியாதா?" என்று நான் கேட்டதும் அவரது கண்கள் விருதகிரி விஜயகாந்த் போலச் சிவந்தன.

"சரி சரி, அப்புறமா சாப்பிட்டுக்கறேன். யாரோ வி.ஐ.பி.யைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னியே? இவர்தானா?" என்று டப்பாவை மூடியபடியே என்னுடன் சென்றவரை ஏறிட்டு நோக்கினார்.

"ஆமா ஜோசியரே, இவரு யாரு தெரியுமா? கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இருக்காரே, அவரோட ஒண்ணு விட்ட தம்பி," என்று அறிமுகப்படுத்தினேன்.

"அப்படீன்னா இவரு பேரு எடியூர் சித்தப்பாவா?" என்று மொக்கையடித்தார் ஜோசியர். "ஒண்ணு விட்ட தம்பின்னு சொல்றே. முகஜாடை அப்படியே இருக்கே?"

"அது வந்து ஜோசியரே, எடியூரப்பா பொறந்து ஒரு வருஷம் கழிச்சு இவரு பொறந்தாரு, அதான் ஒண்ணு விட்ட தம்பின்னு சொன்னேன்," என்றேன் நான். "பேரு இடியூரப்பா"

"அது சரி, இவருக்கு தமிழ் தெரியுமா?"

"கொத்து!" என்றார் இடியூரப்பா.

"என்னது கொத்துன்னுறாரு? யாரைக் கொத்தணுமாம்?"

"இல்லை ஜோசியரே, கன்னடத்துலே கொத்துன்னா தெரியுமுன்னு அர்த்தம். இவருக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்! ஆனா கன்னடத்துலே தான் பேசுவாரு!"

"எனக்கு தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி மூணு பாஷையும் தெரியும்," என்று பீற்றிக்கொண்டார் ஜோசியர். "வெயிலிலே வந்திருக்கீங்க! குடிக்கத் தண்ணி கொடுக்கட்டுமா?"

"பேக்கு!" என்றார் இடியூரப்பா.

"என்ன சேட்டை, வந்ததுலேருந்து விவகாரமாவே பேசிட்டிருக்காரு, நானா பேக்கு? கஞ்சிக்கோடு ஜோசியர் கல்யாணசுந்தரமுன்னா பாலக்காடு டிஸ்ட்ரிக்டே பதறிடும் தெரியுமா?" என்று உறுமினார் ஜோசியர்.

"அட நீங்க வேறே, கன்னடத்துலே பேக்குன்னா வேணுமுன்னு அர்த்தம் ஜோசியரே," என்று தலையிலடித்தபடி விளக்கினேன்.

"ஓ! அப்படியா?" என்று ஆசுவாசப்பட்ட ஜோசியர், "சொல்லு சேட்டை, இவருக்கு என்ன பிரச்சினையாம்?"

"இவரு அண்ணனுக்கு, அதாவது எடியூரப்பாவுக்குத் தான் பிரச்சினையாம். யாரோ அவருக்கு பில்லி சூனியம் வைச்சுக் கொல்லப்பார்க்குறாங்களாம். அறிக்கை கூட விட்டிருந்தாரே பார்க்கலியா?"

"அப்படியா? யாரு வச்சிருப்பாங்க?" என்று அதிர்ந்துபோய்க் கேட்டார் ஜோசியர்.

"இவங்களுக்கு கவர்னர் பரத்வாஜ் மேலே தான் சந்தேகம்! ஒரு நாளைக்கு இவங்க காதுலே விழுறா மாதிரியே அவரு ’பில்லி கோ சூப் பிலாவோ,’ன்னு சொன்னாராமே?" என்று எடுத்துக் கொடுத்தேன்.

"கஷ்டம்! சேட்டை, இந்தியிலே பில்லின்னா பூனைன்னு அர்த்தம். அவரு பூனைக்கு சூப்பு வைக்கச் சொல்லியிருக்காரு, இந்தப் பில்லி அந்தப் பில்லி சூனியமில்லை!" என்று விளக்கினார் ஜோசியர்.

"என்னா மனுசன், பூனைக்கு சூப்பு வைக்கிறாரு, மனுசனுக்கு ஆப்பு வைக்கிறாரு! சரி அது போகட்டும், இன்னொரு நாளைக்கு அவர் யார்கிட்டேயோ ’ஆகே சூனிய லகாக்கே நம்பர் டயல் கரோ,"ன்னு சொன்னாராமே? அதுக்கென்ன சொல்றீங்க?"

"நாசமாப்போச்சு, அவரு யாருக்கோ செல்போனிலே எஸ்.டி.டி பண்ணச்சொல்லியிருப்பாரு, ஹிந்தியிலே சூனியன்னா ஜீரோன்னு அர்த்தம். முதல்லே ஜீரோ போட்டு டயல் பண்ணுன்னு சொல்லியிருக்காரு!"

"அப்போ யாருதான் பில்லி சூனியம் வச்சிருப்பாங்க ஜோசியரே?"

"கவலைப்படாதே சேட்டை, எங்கிட்டே வந்திட்டீங்க இல்லே, நான் கவனிச்சுக்கிறேன். இவரு அண்ணனோட ஜாதகத்தைப் பார்த்து நாகதோஷம், செவ்வாய்தோஷம், சனிதோஷம், ஜலதோஷமுன்னு இருக்கிற எல்லா தோஷத்துக்கும் ஒரு சாந்தி பண்ணிரலாம்."

"பாவம், இவங்க சந்தோஷமும் அம்பேலாயிருச்சு ஜோசியரே. ஏதாவது பண்ணுங்க!"

"பண்றேன்! என்னை நல்லா கவனிச்சிப்பாங்களா? சொல்றபடி செய்வாங்களா? கேட்கிறதைக் கொடுப்பாங்களா?"

"மாடுதினி," என்றார் இடியூரப்பா.

"என்னது மாட்டுத்தீனியா? என்னைப் புண்ணாக்குன்னு சொல்லுறாரா இந்த ஆளூ?"

"ஐயோ ஜோசியரே, கன்னடத்துலே மாடுதினின்னா செய்யுறேன்னு அர்த்தம்!"

"சரி ஜாதகம் எங்கே?" என்று கேட்டு வாங்கினார் ஜோசியர். "என்னது ஜாதகம் ஜெர்மனிலே எழுதியிருக்கு?"

"அது இங்கிலீஷ்லே தானிருக்கு! நீங்கதான் தலைகீழாப் பார்த்திட்டிருக்கீங்க!"

"ஓ! மூக்குக்கண்ணாடி கொண்டுவர மறந்திட்டேன் சேட்டை!" என்று ஜாதகத்தைக் கூர்ந்து பார்த்தார் ஜோசியர். "எல்லாம் நல்லாத்தானே இருக்கு. சனிமேடு, சுக்கிரமேடு எல்லாமே அமர்க்களமா இருக்கே?"

"எதுக்கும் சூளைமேடு எப்படியிருக்குன்னு பாருங்களேன்!"

"சேட்டை, விளையாடாதே! நான் ஒரு தகடு தர்றேன். அதைக் கொண்டு போய் வீட்டுலே மொட்டை மாடியிலே மூணு அடி தோண்டி புதைச்சா ஒரு காத்து கருப்பு கூட அண்டாது."

"சரி ஜோசியரே! அப்பாலே...?"

"இந்தப் பில்லி சூனியம் பண்ணுறவங்க, தலை சீவும்போது கீழே விழுற மயிரை எடுத்திட்டுப்போயி சுடுகாட்டுலே பூஜை பண்ணி மந்திரிச்சிருவாங்க! ஜாக்கிரதையா இருக்கணும்!"

"அவர் தலையிலே கீழே விழுற அளவுக்கு பெரிசா இல்லை ஜோசியரே! சொல்லப்போனா, பெங்களூருவிலே ரெண்டாவது ஏர்போர்ட்டுக்கே இடம் லீஸ்லே விடலாம். இருந்தாலும் இனிமே அவரு தலையே சீவக்கூடாதுன்னு சொல்லச் சொல்லிடறேன்!"

"அவரு குளிக்கும்போது சோப்பு, ஷாம்பூ எதுவும் போடாமப் பார்த்துக்கோங்க! இல்லாட்டி தண்ணியோட மயிர் போச்சுன்னா பெரிய ஆபத்து!"

"கவலையை விடுங்க, இனிமே அவரு குளிக்கவே மாட்டாரு!"

"நடக்குறபோது அவரு காலடியிலே ஒட்டுற தூசியைக் கூட யாராவது எடுத்துட்டுப்போயி சூனியம் வச்சிருவாங்க!"

"இனிமே அவரு வீல்-சேரிலே தான் போகணுமுன்னு சொல்லிடலாமா ஜோசியரே?"

"அவருக்கும் வாரிசுங்க இருக்காங்களாமே, அவங்களே அவரை வீல்-சேரிலே உட்கார வச்சிருவாங்க. நீ ஏன் அவசரப்படுறே சேட்டை? இனிமே அவரு எங்கே போனாலும் யாராவது ரெண்டு பேரு தூக்கிட்டுத்தான் போகணுமுன்னு சொல்லிடு. ஒரு பில்லி சூனியம் அண்டாது."

"சரிங்க ஜோசியரே!"

"அப்புறம், தினமும் அவரு நரிமுகத்துலே விழிக்கணும். அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க சேட்டை!"

"நரி?" என்று இடைமறித்தார் இடியூரப்பா.

"யெஸ்! நரி மீன்ஸ் ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்!" என்று விளக்கிக் கூறினேன்.

"சேட்டை, உங்கலுக்கு பெங்கலூருவிலே உத்யோகம் வாங்கித்தரட்டுமா?" என்று கேட்டார் இடியூரப்பா.

"யோவ் இடியூரப்பா, போனாப்போகுதுன்னு ஒத்தாசை பண்ணினா, நரிக்கு பதிலா என் மூஞ்சியிலே முழிக்க வைக்கலாமுன்னா பார்க்குறே? ஜோசியரே, இந்தாளை சும்மா விடாதீங்க, உங்க சம்சாரம் அனுப்பின தயிர்சாதத்தைக் கொடுங்க, அப்போத்தான் இந்தாளுக்கு புத்தி வரும்...!" என்று ஆத்திரத்தோடு கூறினேன்.

"பேடா..பேடா...நானு பர்தினி...நானு பர்தினி.." என்று எழுந்து ஓடத்தொடங்கினார் இடியூரப்பா.

"என்னய்யா சொல்லிட்டே ஓடுறாரு?"

"பட்டினியே கிடந்தாலும் உங்க வீட்டு சமையலைச் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டுப்போறாரு!" என்றேன் நான்.

Tuesday, February 1, 2011

யாருடன் கூட்டணி?-கு.மு.க.அறிவிப்பு

குடிமக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்குழு அவசரமாகக் கூட்டப்பட்டது தெரிந்ததே! கூட்டத்தின் போது நடந்த விவாதங்கள் குறித்து விலாநோகச் சிரிக்கவைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டு என்று தமிழகத்தின் கட்சிகள் வெளியிட்டுவரும் பல அறிக்கைகள், ’த்ரீ இடியட்ஸ்’ படம்குறித்த வதந்திகளை விடவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பா.ம.க.தமிழகத்தில் 45 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், கு.மு.க.தொண்டர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, தலைமறைவாக இருக்குமாறு கொள்கைப்பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி ரகசியச்சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. மீறுகிற கு.மு.க.தொண்டர்களை பா.ம.க.வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று வேட்பாளர்களாக நிறுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கழகம் பொறுப்பேற்காது என்று சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர் விழுப்புரம் திண்டிவனம் பகுதிகளில் தலையில் துண்டுபோட்டபடி டாஸ்மாக் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கைத்தறி வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும், பா.ம.கவின் டாஸ்மாக் விரோதப்போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கு.ம.க.தொண்டர்கள் அருகிலிருக்கும் மதுபானக்கடைகளில் "ரிப்பீட்டு" போராட்டம் நடத்தவுள்ளதாக, கட்சியின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி அறிக்கை அளித்திருப்பதும், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.எஸ். கலைஞருக்கு "வ.உ.சி" விருது வழங்குவதாக அறிவித்தது போலவே கு.மு.க தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமிக்கு "ஓ.சி" விருதோ அல்லது "டி.எஸ்.பி" விருதோ வழங்க முன்வரலாம் என்ற வதந்தி காரணமாக, தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று திரு.கிருஷ்ணசாமி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும் கு.மு.க.தொண்டர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக டாஸ்மாக் கடைதவிர வேறெங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வருகிற பொதுத்தேர்தலில் குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:


வருகிற பொதுத்தேர்தலில் கு.ம.க எந்த நம்பிக்கையில் போட்டியிடுகிறது? மக்கள் ஆதரிப்பார்களா?

 • கண்டிப்பாக ஆதரிப்பார்கள். காரணம், அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், குடிகாரர்கள் குடித்தால் மட்டுமே உளறுவார்கள்.
 • அரசியல்வாதிகளைப் போல குடிகாரர்கள் அடிக்கடி ’பிராண்டை’ மாற்ற மாட்டார்கள்.
 • அரசியல்வாதிகள் தங்களது கொள்கைகளை அழித்து வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பவர்கள்; குடிகாரர்கள் அவரவர் சொத்தை கொள்கைக்காக செலவழித்து அழிப்பவர்கள்.
 • குடிகாரர்கள் தங்களது சொந்த வேட்டியைத் தான் அவிழ்ப்பார்களே தவிர, அடுத்தவர் வேட்டியை அவிழ்க்க மாட்டார்கள்.
 • குடிகாரர்களுக்கு தமிழகமெங்கும் தனிப்பெரும்பான்மை இருந்தாலும், பிரிவினை பேச மாட்டார்கள்.
 • குடிகாரர்களால் அரசின் கஜானா நிரம்புகிறது. அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியை நிரப்புகிறார்கள்.
 • குடிகாரன் பேச்சும், அரசியல்வாதி பேச்சும் விடிஞ்சா போச்சு - என்பது தவிர இருவருக்கும் கிஞ்சித்தும் ஒற்றுமையில்லை. எனவே, கொள்கைரீதியில் இவ்வளவு அடிப்படை வேறுபாடுகள் உள்ள காரணத்தால், வருகிற தேர்தலில் கு.மு.க.போட்டியிட்டால், பல இடங்களைக் கைப்பற்றும் என்பது உறுதி.
இந்தத் தேர்தலில் எந்தெந்தத் தொகுதிகளில் கு.மு.க. வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூற முடியுமா?

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் கு.மு.க. வளர்ச்சியடைந்திருக்கிறது. இருந்தாலும் விஸ்கினாபுரம், பிராந்தியம்பாளையம், ரம்மாக்குடி, ஜின்னாளம்பட்டி, பீரவநல்லூர், ஒயினாப்பள்ளி, வாட்காகுளம் போன்ற ஊர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

கு.மு.க.கட்சியில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் யார் யாராக இருப்பார்கள்?

கு.ம.க.தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி ராவெல்லாம் ராவாய்க் குடிப்பவர் என்பதை அனைவரும் அறிவர். இது தவிர கோல்கொண்டா கோவிந்தசாமியும் மிகத் திறமையானவர். இதுவரை பல டாஸ்மாக்குகளில் நூற்றுக்கணக்கான கிளாஸ்களை உடைத்து சாதனை புரிந்தவர்.

நெப்போலியன் நெடுவளவன் பல்விளக்கமாலே பாட்டிலை விழுங்குபவர். இதுதவிர, பகார்டி பக்கிரிசாமி பத்தாண்டுகளாக ஓசியிலேயே குடித்துக்கொண்டிருப்பவர் என்ற நற்பெயரும் இருக்கிறது. இது போல ஓ.ஸி உலகநாதன், டி.எஸ்.பி.திருவேங்கடம் போன்ற நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் உள்ளனர்.

கு.மு.க. வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு என்ன நன்மை கிடைக்கும்?

தமிழகத்தில் உண்மையான குடியாட்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுமக்களே! கு.மு.க.வின் அரசியல் எதிர்காலம் குறித்த வதந்திகள் உண்மைதானா இல்லையா என்பதை தேர்தல் வரையிலும் பொறுத்திருந்து பார்ப்போமா? வணக்கம்!