Saturday, September 28, 2013

நாய்கள் புழங்கும் நகரம்
கோடம்பாக்கம் மேம்பாலத்தடியில், வரதராஜபேட்டைக்கும் சேகர் எம்போரியத்துக்கும் இடைப்பட்ட ஆற்காட்டு சாலையைக் கடப்பது, அலஹாபாத் திரிவேணி சங்கமத்தை நீந்திக்கடப்பதற்கு ஒப்பாகும். காவல்பணியில் நின்றிருந்த பெண்மணி கையசைத்து போக்குவரத்தை நிறுத்த, மின்னல்வேகத்தில் பிற பாதசாரிகள் விரைய, இரண்டாண்டுகளாய் என்னோடு இடக்கு செய்துகொண்டிருக்கும் இடதுகாலை இழுத்து இழுத்து நான் கடப்பதற்குள், கருநீலக்காருக்குள் ஸ்டியரிங் பிடித்திருந்த அந்த வடக்கத்திய இளம்பெண், பொறுமையின்றிப் பல்லைக் கடித்து, ஹாரனடித்து, ஆங்கிலத்தில் திட்டி அவசரப்படுத்தினாள். அவளது கோபத்தைப் பார்த்து, பின்சீட்டிலிருந்த அந்த வெள்ளைநிற நாய்க்குட்டியும் புவ்..புவ்வென்று குரைத்துத் தனது கண்டனத்தைத் தெரிவித்தது. எரிச்சலிலும் அந்த நாயின் எஜமான விசுவாசம் எனக்குப் பிடித்தே இருந்தது.

      சாலையைக் கடந்து,  நிரம்பிவழிந்த கூட்டத்தில் ஏறத்தாழ ஒருக்களித்துப் படுத்தவாறு வந்த 37Gக்குள் ஏறி, நெரிசலுக்குள் பிதுங்கி, திக்குத்திணறியபோது, உட்காருங்க சார்என்று அந்தப் பள்ளி மாணவன் / கல்லூரி மாணவன் எழுந்து இடம்கொடுத்தபோது ஒரு கணத்துக்கு முன்னர் விசுக்கென்று கிளம்பிய கோபம் காற்றில் பறக்க, ‘காட் ப்ளெஸ் யூஎன்று வேறேதும் சொல்லத் தெரியாமல் வாழ்த்தி அமர்ந்தேன். மனிதர்கள்!  

      வளசரவாக்கத்துக்கு டிக்கெட் வாங்கி, மெகாமார்ட்டில் இறங்கி, சற்று நேரம் தட்டுத்தடுமாறி சாலையைக் கடந்தபோது, காமராஜர் சாலையிலிருந்து திரும்பிய காரின் முன்சீட்டில் பரதநாட்டிய ஒப்பனையோடு ஒரு பெண் அமர்ந்திருக்க, அவளது மடியில், தரைதுடைக்கிற ‘மாப்பைப் போன்ற தலையோடு ஒரு நாய் அமர்ந்திருந்தது. நண்பரின் வீட்டுக்குச் செல்ல சி.வி.ராமன் தெருவில் நுழைந்தபோது, முக்கால் சராயும் டி-ஷர்ட்டும் அணிந்துகொண்டு ஒருவர் காதோடு செல்போனை வைத்தபடி நடந்துகொண்டிருக்க, அவர் பிடித்திருந்த பெல்ட்டோடு அவரையும் இழுத்தபடியே என் இடுப்புயரத்துக்கு ஒரு நாய், சொட்டச் சொட்ட நனைந்த காலுறைபோலிருந்த தனது நாக்கைத் தொங்கவிட்டபடி போய்க் கொண்டிருந்தது.

      இப்போதெல்லாம் சென்னையில் நாய்களின் ஜனத்தொகை அதிகரித்து வருகிறது. பல வீடுகளில் அவரவர் பெயர்ப்பலகைகளோடு ‘நாய்கள் ஜாக்கிரதை என்ற பலகையையும் சேர்த்தே பார்க்க முடிகிறது. இந்த சொகுசு நாய்கள் வசிக்கும் தெருக்களில் பெரும்பாலும் தெருநாய்கள் தென்படுவதில்லை. சொல்லப்போனால், இப்போதெல்லாம் அனாதரவான நாய்கள், பணக்காரவீட்டு நாய்களால் பணிப்பளு குறைந்ததால், சாமானியர்களைப் பார்த்துக் குரைப்பதைக்கூடக் குறைத்துக் கொண்டுவிட்டனவோ என்ற சந்தேகம் இருக்கிறது. பங்களா நாய்களுக்குத்தான் அதனதன் எஜமானர்களைப் போலவே, நடந்துபோகிறவர்களைப் பார்த்தால் அருவருப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றன. அதனாலோ என்னவோ, என் போன்றவர்கள் தெருவில் நடந்தால், எதிரே வரும் வளர்ப்பு நாய்களைப் பார்த்து வழிவிட்டு ஒதுங்கி நிற்க நேரிடுகிறது.

       நாய்களை வளர்ப்பவர்கள் பாக்கியவான்கள். பாசாங்குகளற்ற, கலப்படமற்ற, உள்ளன்பார்ந்த விசுவாசம் அவர்களுக்குக் கிடைக்கிறது. சின்னச் சின்னத் தவறுகளை நாய்கள் மன்னித்து விடுகின்றன. எந்தக் கட்டளையையும்  நாய்கள் உடனடியாக நிறைவேற்றுகின்றன. நாய்களோடு தெருவில் நடமாடுபவர்களுக்குக் கிடைக்கிற கவனம், தனியாகவோ, பிற மனிதர்களுடனோ நடக்கிறபோது பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆடம்பரமான வீடு, சொகுசுக்கார், விலையுயர்ந்த கைபேசி போல,  நாய்களும் பொருளாதார சுபிட்சத்தின் குறியீடுகளாகி விட்டன. எல்லாவற்றிலும் நமது வாழ்க்கையோடு உரசிக்கொண்டிருக்கும் உலகமயமாக்குதலின் தாக்கம், நாய்களின் கொள்முதலிலும் காணப்படுகிறது. உள்ளூர் நாய்களைக் காட்டிலும், இறக்குமதி செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்பவர்கள் வியக்கப்படுகிறார்கள். பல பழமைவாதிகளின் வீட்டில் கலப்பில் பிறந்த நாய்கள் கண்ணும் கருத்துமாய்ப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

       இந்த நாய்களும் கொடுத்து வைத்தவைகள்தான். இவைகளுக்குப் பெயர் தேர்ந்தெடுக்க இணையத்தில் வேட்டை நடக்கிறது. இவைகளுக்கென்று வீட்டுக்குள் ஒரு குட்டிவீடு நிர்மாணிக்கப்படுகிறது. இவைகள் விளையாடி மகிழ்வதற்கும் பொம்மைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவற்றின் எஜமானர்கள் தங்கள் செல்லத்துக்கென்று கடைகடையாய் ஏறியிறங்கி, கடனட்டைகளைத் தேய்த்து, பளபளப்பான டின்களில் விதவிதமான தீனிகளை வாங்கிச் செல்கிறார்கள். இந்த நாய்களின் கழுத்திலிருக்கிற பெல்ட்டுகள், பல பள்ளிக்கூடச் சீருடைகளோடு குழந்தைகளுக்குத் தரப்படுகிற இடுப்பு பெல்ட்டுகளைக் காட்டிலும் விலையுயர்ந்தவைகளாக இருக்கின்றன. நாய்களுக்கென்றே பூசுவதற்குப் பவுடர் தொடங்கி, தடவுவதற்குத் தைலம் வரை தாராளமாகக் கிடைக்கின்றன. சற்றே சோர்ந்து படுக்கிற நாய்கள், காரின் பின்சீட்டில் சவுகரியமாக அமர்த்தப்பட்டு மருத்துவர் வீட்டுக்குப் போய் சுகப்பட்டுத் திரும்பி வருகின்றன. வாலிப நாய்களுக்கும் வாளிப்பான நாய்களுக்கும் நாள் பார்த்து கந்தர்வ திருமணங்கள் நிகழ்த்தி வம்சவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது.

      எல்லாவற்றையும் விட, வளர்க்கிற நாயை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எஜமானர்கள் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள்.  நாய்க்குக் கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையும், நாய் கோபமாக இருந்தால் அதற்குப் பிடிக்காத எதையும் செய்யாமலிருக்க வேண்டும் என்ற முன்னெச்செரிக்கையும் எஜமானர்களிடம் காணப்படுகின்றன. வளர்க்கப்படும் நாய்கள், வளர்க்கும் எஜமானர்களின் இங்கிதத்தை வளர்க்கின்றன. குறைந்தபட்சம், நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானோர் மிருகங்களிடமாவது சற்றுப் பரிவை வெளிப்படுத்துகிறார்கள்.

      பல குடும்பங்களில் வளர்ப்பு நாய்கள் தலைச்சன் குழந்தையாக இருக்கின்றன. பிற வீடுகளிலும் நாய்கள் குழந்தைகளைப் போலவே செல்லமாகச் சீராட்டப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில், அவரவர் நாய்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் போடுவதில் வளர்ப்பவர்களுக்குப் பெருமிதம் கிடைக்கிறது. பல வீடுகளில் குழந்தைகளைக் காட்டிலும் நாய்களுக்கே, முதுகை வருடுவதற்கும், முத்தம் கொடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படுகின்றன. பெற்ற குழந்தைகளைப் பிறர்முன்பு கொஞ்சும்போது ஏற்படுகிற சங்கோஜம், நாய்களைக் கொஞ்சும்போது கிஞ்சித்தும் ஏற்படுவதில்லை. நாய்கள் தங்களை நாக்கால் வறட்வறட்டென்று நக்கும்போது பலருக்கு ஏற்படுகிற பூரிப்பும் புளகாங்கிதமும், குழந்தைகள் வந்து தோளைத் தழுவும்போது ஏற்படுவதில்லையென்றே தோன்றுகிறது.  நாய் வளர்ப்பவர்களுக்கு, விரும்பாத விசேடங்களுக்குப் போகாமல் இருக்க அது ஒரு நல்ல காரணமாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர், குளிரூட்டப்பட்ட ரயில்களில் நாய்க்கும் ஒரு ஜன்னலோர இருக்கையை முன்பதிவு செய்து அழைத்துச் செல்கின்றனர். சில சமயங்களில் நாய்களைத் தற்காலிகமாகப் பராமரிக்க, வேலையாட்களைத் தற்காலிகமாகப் பணியிலமர்த்தி, மனிதர்களைப் போல நாயையும், நாயைப்போல மனிதர்களையும் நடத்துகிற விசித்திரமும் நிகழ்வதுண்டு.

      சோபா கண்ட இடமே சொர்க்கம் என்று வாழும் இந்த நாய்களுக்கு, எஜமானர்களின் மனவோட்டம் எளிதில் புரிந்து விடுகிறது. பல நாய்களுக்கு ஆங்கிலமே கேட்டுக்கேட்டுப் பழகியதால், தமிழில் பேசுகிற எல்லாரையுமே ‘அம்மா, தாயேஎன்று வரும் பிச்சைக்காரர்களாய் எண்ணிக் குரைக்கின்றன. பல பணக்காரக்குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச மாலைவகுப்புகளுக்குப் போகையில், அவர்கள் வீட்டு நாய்கள் வீட்டிலிருந்தபடியே ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு விடுகின்றன. சில நாய்கள் ஆங்கிலத்தொடர்கள் பார்ப்பதாகக் கூடச் சொல்லி மாய்ந்துபோகிறார்கள் மாளிகைவாசிகள்.

       நாய்களின் எண்ணிக்கை பெருகியும், ஊரில் திருட்டுகள் குறைந்ததாகத் தெரியவில்லை. தலைமுறை தலைமுறையாக மனிதர்களின் மாண்பு சிறுகச் சிறுகக் குறைந்ததுபோலவே நாய்களின் எதிர்ப்புணர்ச்சியும் குறைந்திருக்கலாம். அல்லது இந்த அவசரயுக மாந்தர்களின் அன்னியோன்னியத்தில் நாய்களின் மரபணுக்களில் மனிதகுணம் கலந்து மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். வசதியான நாய்கள், குரைப்பது மட்டும்தான் எம் பணி என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. மெல்ல மெல்ல நாய்களும் நம்மை நோக்கி வருவதுபோல ஒரு கலவரம் பற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.

      தெருவில் சுற்றித் திரிகிற நாய்களுக்கு என்ன மகிழ்ச்சி, என்ன ஆறுதல் இருந்துவிட முடியும்? சுதந்திரமாக இருக்கிறோம்; எவனுக்கும் அடிமையில்லை என்ற பெருமைதவிர, அவைகளால் ஆனதென்ன, இனியாகப் போவதென்ன? இந்த வெட்டி சுதந்திரத்தில், தினம்தினம் வயிற்றுக்காக அலைந்து திரிந்து அவலத்தில் உழன்றும், ‘எனக்கு சுதந்திரம் இருக்கிறதுஎன்று பீற்றிக்கொள்வதால் என்ன? வயிறு நிறைய உணவு, வாஞ்சையான கவனிப்பு, வசதியான இருப்பிடம் இவை கிடைத்தால், அடிமையாக இருந்தாலென்ன குறைந்து விடும்? ஏன் இப்படி சுதந்திரம், சுதந்திரம் என்று தெருவில் சுற்றி, அடிபட்டுச் செத்து, காக்கைகள் கொத்தி, அப்புறப்படுத்தவும் ஆளில்லாமல் போக வேண்டும்? பெரும்பாலான மனிதர்களைப்போலவே, பெரும்பாலான நாய்களுக்கும் வாழும் வழி தெரியவில்லை போலும்.

      இது நடந்து சில மாதங்கள் கடந்து விட்டன. திடீரென்று கொட்டித்தீர்த்த மழைக்காக, ட்ரஸ்ட்புரம் மைதானமருகேயிருந்த கட்டிடத்தில் நான் ஒதுங்கியபோது, எதிரேயிருந்த மரத்தடியில் டென்னிஸ் பந்துகளைப் போல, சின்னஞ்சிறியதாக ஆறு அல்லது ஏழு நாய்க்குட்டிகள் சொட்டச்சொட்ட நனைந்தவாறு ஒரே குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. மழை சற்றே ஓய்ந்ததும் நெருங்கிச்சென்று பார்த்தபோது, அவற்றில் எந்தக் குட்டிக்கும் இன்னும் முழுமையாகக் கண்கள்கூடத் திறக்கவில்லை என்பது புரிந்தது. வீட்டுக்குச் சென்றதும் இணையத்தில் துழாவி, ப்ளூ கிராஸைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

      அந்தக் குட்டிங்களோட மதர்-டாகை( தாய் நாய்)ப் பார்த்தீர்களா?

      இல்லை மேடம்! குட்டிங்க மட்டும் தனியா இருக்குதுங்க!

      நீங்க சொல்றதைப் பார்த்தா அதுங்க பால்குடிக்கிற குட்டிங்க போலிருக்குது. இப்போ அதை தாய்கிட்டேயிருந்து பிரிச்சா செத்துடும்.

      மேடம்! அதை இப்படியே விட்டா மழையிலே நனைஞ்சே செத்துடும்!

      அந்த அம்மணிக்கு அதற்குமேல் கேட்கப் பொறுமையில்லாமல், பேச்சைத் துண்டித்து விட்டார். மறுநாள்     அந்த இடத்தைக் கடந்துபோனபோது, ஏழில் ஒரு குட்டி, ஏதோ ஒரு வண்டியில் அடிபட்டு நசுங்கிக் கிடந்தது. மற்ற குட்டிகளைப் பற்றிய கவலை ஏற்படவே, அடுத்த நாளிலிருந்து நான் அந்த வழியே போய்வருவதைத் தற்காலிகமாக நிறுத்தினேன். இப்போது என்றேனும் அந்த வழியே போக நேர்கையில், எந்த மரத்தடியையும் நான் கவனிக்காமல் போய்க் கொண்டிருக்கிறேன்.
      இதுவே, ஒரு பங்களா நாயாக இருந்து, அது ஏழு குட்டி போட்டிருந்தால், அது ஏதோ ஒரு வீட்டின் ஏ.சியில் வளர்ந்திருக்கும். ஒவ்வொரு நாய்க்கும் ஒரு நாள் வரும் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு! அதற்கு இப்படியும் ஒரு பொருளுண்டு போலும் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
     
      ஆனாலும், சில சமயங்களில் ஏதோ ஒரு காரணத்தால், கழுத்திலிருக்கிற பட்டியையும் கழற்றாமல், ஆசையாசையாய் வளர்த்த நாய்களை எஜமானர்கள் துரத்தி விடுகிறார்கள் என்பதையும் அவ்வப்போது காண முடிகிறது. வாழ்ந்து கெட்ட நாய்கள் குப்பைத்தொட்டியருகே வந்து தெருநாய்களின் சங்கத்தில் இணைந்து கொள்ளும்போது, பழைய விரோதங்களை மறந்து ஒரே எச்சில் இலையைப் பகிர்ந்து நக்குகிற பக்குவம் தெருநாய்களுக்கு இருப்பதாகவே பார்த்தவரையில் படுகிறது.

      நாய் வளர்க்கிற எஜமானர்கள் நிரம்ப புத்திசாலிகள்! தங்கள் வீடுகளை மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டு, வளர்க்கிற நாய்களை தெருமுனைகளில் அசுத்தம் செய்யக் கற்பிக்கிறார்கள். எஜமானரின் வீட்டை அசுத்தப்படுத்தக்கூடாது என்பதைப் புரிந்து கொண்ட நாய்கள், தங்களது கழிவுகளைத் தெருவுக்கு அளித்துவிட்டு, மீண்டும் சுத்தமான வீட்டுக்குத் திரும்பி சுகமாக வாழ்க்கை நடத்துகின்றன.

       நகரத்தின் பல தெருக்களில் நாய்களின் அசுத்தம் தென்படுகிறது. அதைக் கடக்கிறபோதெல்லாம், அந்தந்தத் தெருக்களில் விசுவாசமான நாய்களும் விவஸ்தைகெட்ட எஜமானர்களும் வசிக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.

******************

Thursday, September 26, 2013

கல்யாணம் பண்ணியும் வரதாச்சாரி
பார்த்தசாரதி கோவில் தரிசன க்யூவில் பக்தர்கள் மல்டிப்ளக்ஸில் படம்பார்க்க வந்தவர்களைப்போல மரியாதையாக நின்றிருக்க, புளியோதரை ஸ்டால் மட்டும் ஆதார் அட்டை சிறப்புமுகாம்போல அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாள் கோவிலில் ஆஜர்போட்டு, புளியோதரையை வயிற்றில்போட்டால், வழியில் எங்கும் நிற்காத வாகனத்திலேறி வைகுண்டம் போய்விடலாம் என்று எப்போதோ படித்த ஞாபகம். எனக்கு வைகுண்டம் கொடுத்து வைத்திருக்கிறதோ இல்லையோ, புளியோதரை கொடுத்து வைக்கவில்லை! சரி, இந்தக் கூட்டத்தில் இடிபடுவதைவிட, பெரிய தெருவிலிருக்கும் அக்கவுண்டண்ட் அம்புஜவல்லி வீட்டுக்குப்போனால், புளியோதரை கிடைத்தாலும் கிடைக்குமென்று  நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு நடையைக் கட்டினேன். ஆனால்...

      அம்புஜவல்லியின் மாமியார் அம்சவேணி வாசலில் அலறிக்கொண்டிருந்ததைக் கேட்டு, எனது அடிவயிற்றுக்குள் யாரோ சாண்ட்ரோ காரை சடன்பிரேக் போட்டு நிறுத்தியதுபோல அதிர்ச்சி ஏற்பட்டது.

      வா சேட்டை! இப்படி ஆயிடுத்தே பார்த்தியா?அம்சவேணி அம்மா அம்பத்தூர் ஃபேக்டரியின் ஆறுமணிச்சங்கு போல அலறினார். “நொடிக்கு நூறுதடவை வரது வரதுன்னு இனிமே யாரைக் கூப்பிடுவேன்!

      வரதுஎன்பது அம்புஜவல்லியின் கணவன் / அம்சவேணியின் மகன்  வரதாச்சாரியின் செல்லப்பெயர். இன்னும் சிலர் அவரை வரதா என்றும் கூப்பிடுவதுண்டு.

      என்னாச்சு மாமி? வரதுக்கு என்ன?

      என்னன்னு சொல்லுவேன் சேட்டை? உள்ளே போயிப் பாரு அந்தக் கொடுமையை!

      அடாடா! என்னவோ விபரீதம் போலிருக்கிறதே! அம்புஜவல்லியின் சமையலைச் சாப்பிடுகிறவர்களின் ஆயுள், அவள் அரைக்கிற சட்னியைவிடக் கெட்டியாயிற்றே! என்னவாயிருக்கும் வரதுவுக்கு! உள்ளே நுழைந்ததும் நான் கண்ட காட்சியால் எனக்குத் தலைசுற்றி, ஒரு கணம் எனது முதுகை நானே முழுசாகப் பார்க்க முடிந்தது.

      கத்திரிக்காய் சாம்பாரில் போட்ட கரண்டியைப்போல, சோபாவில் வரதாச்சாரி கம்பீரமாக அமர்ந்திருக்க, அம்புஜவல்லி ஏதோ ஒரு அழுக்குப்பிடித்த புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள்.

      அம்பு! வரது!

      சேட்டை!ஆச்சரியத்தில் அம்புஜவல்லியின் முகம் எண்ணையில்போட்ட அப்பளம்போல எக்கச்சக்கமாக உப்பியது. “வா சேட்டை! என்ன திடீர்னு...?

      சும்மா, உன்னையும் உன் புளியோதரையையும்...ஐ மீன், உன் புருஷனையும் பார்த்திட்டுப்போகலாம்னு வந்தேன்.!

      ஐயையோ!வெளியேயிருந்து அம்சவேணியம்மாள் அலறுவது கேட்டது. “இப்படியொரு அநியாயம் உண்டா? பெருமாளே! நான் என்ன பண்ணப்போறேன்?

      எதுக்கு அம்சவேணியம்மா இப்படிக் கத்தறாங்க? தயக்கமாய்க் கேட்டேன்.  என் புளியோதரைக்கனவு டாஸ்மாக் கடையின் பிளாஸ்டிக் தம்ளர்போல நசுங்கியது.

      அவங்க அம்சவேணியில்லை; இம்சைவேணி!அம்புஜவல்லி பல்லைக்கடித்த சத்தம் பெரியதெருவிலிருந்து பெருங்களத்தூர்வரை கேட்டிருக்கும்.
                               
      அம்புஜம்! எங்கம்மாவைப்பத்தி ஏதானும் பேசினே, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்!வரதாச்சாரி கர்ஜித்தார்.

      நான் சொல்றதை நீங்க பண்ணலேன்னா, நானும் மனுஷியா இருக்க மாட்டேன்!

      என்ன நடக்குது இங்கே?கொஞ்சம் குரலை உயர்த்தினேன். “அந்தம்மா வாசல்லே சத்தம் போட்டிட்டிருக்காங்க. உள்ளே நீங்க சண்டை போட்டுட்டிருக்கீங்க! யாரு காப்பி போடப்போறீங்க?“

       “சாரி சேட்டை! இதோ காப்பி போட்டுக்கொண்டு வரேன், என்று கிளம்பினாள் அம்புஜவல்லி.

       “வரது சார்! என்ன பிரச்சினை?“ கிசுகிசுப்பாய்க் கேட்டேன். “ஆம்பளையா லட்சணமா அடக்கவொடுக்கமா இல்லாம வொய்ஃபோட சண்டை போடலாமோ? பாருங்க, அம்புஜவல்லி கோபிச்சுக்கிட்டுக் காப்பிபோடப் போயிட்டாங்க!

       “சேட்டை! கேட்கறேனேன்னு தப்பா நினைக்காதே! ஒரு நல்ல ஆம்பிளைப் பெயராச் சொல்லேன்!

      அட! குழந்தையா? வரதாச்சாரியின் கையைப் பிடித்துக் குலுக்கினேன். “கங்கிராட்ஸ்! இந்த சந்தோஷமான விஷயத்துக்கா இவ்வளவு சண்டை? அம்புஜம் என்கிட்டே கூட சொல்லலியே?

      சேட்டை! இது குழந்தைக்கு இல்லை!வரதாச்சாரியின் குரல், கடவாய்ப்பல்லில் கடிபட்ட கடலைமிட்டாய்போல உடைந்தது. எனக்குத்தான் புதுப்பெயர் வைக்கணும்னு அம்புஜம் ஒத்தைக்காலிலே நிக்கிறா!

      ஏன் சார்? இத்தனை வயசுக்கு மேலே எதுக்குப் பெயரை மாத்தணும்?

      நன்னாக் கேளு சேட்டை! அம்சவேணியம்மாள் உள்ளே நுழைந்தார். “எட்டு கழுதை வயசுக்கப்புறம் யாராவது பேரை மாத்துவாளா?

      யாருக்கு எட்டு கழுதை வயசாச்சு?பொருமினார் வரதாச்சாரி.

      விடுங்க சார்!சமாதானப்படுத்தினேன் நான். “வயசானவங்க, தப்புக்கணக்குச் சொல்றாங்க! ஒண்ணு ரெண்டு கழுதை விட்டுப்போனா என்ன குடியா முழுகிடும்?”

      பெருமாளே!அம்சவேணியம்மாள் கைகூப்பினார். “என் நாட்டுப்பொண்ணுக்கு நல்ல புத்தியைக் கொடு! கடைசிப் புரட்டாசி சனிக்கிழமைக்கு அக்கார அடிசல் பண்றேன்.

      கரெக்ட் மாமி!அக்கார அடிசலின் பெயரைக் கேட்டதும் என் வாயில் நிற்காமல் எச்சில் ஊறியது. “ஆனா, பச்சைக்கற்பூரம் கொஞ்சமாப் போடுங்கோ! எனக்கு ஆகாது!

      தோ பாருடா வரது!மடிசார் கட்டிய மமதா பானர்ஜி போல அம்சவேணி அறைகூவல் விடுத்தார். “அவ சொல்றா இவ சொல்றான்னு பெயரை மாத்தினே, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.

      மொத்தத்துலே இந்த வீட்டுலே யாருமே மனுஷாளா இருக்கப்போறதில்லையா?நொந்துகொண்டேன் நான். “பேசாம வண்டலூருக்கு வாலண்டரி டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிடுங்க.

      அம்சவேணி அங்கிருந்து நகர்ந்ததும், வரதாச்சாரி வராத பெருமூச்சை வரவழைத்து விட்டார்.

      சேட்டை! கல்யாணமான புதுசுலே, காதல் மயக்கத்துலே அம்புஜம் சொல்றாளேன்னு பேரை மாத்திக்கச் சம்மதிச்சது உண்மைதான். ஆனா இப்போ ரேஷன்கார்டு, பான்கார்டு, ஏ.டி.எம்.கார்டு, விசிட்டிங் கார்டு எல்லாத்துலேயும் வரதாச்சாரின்னு போட்டிருக்கே! பேரை மாத்தறது எவ்வளவு கஷ்டம்?

      பாவம் சார் நீங்க!நான் உச்சுக்கொட்டினேன். “கார்டு வாவாங்குது; வீடு போபோங்குது.

      ஒரே குழப்பமாயிருக்கு!வரது தலையைச் சொரிந்தார். “அதுலேயும் வரதாச்சாரிங்குறது எங்க தாத்தாவோட பேரு!

      அடப்பாவி! வரதாச்சாரிங்குறது உம்ம பேருன்னில்லே நம்பிட்டிருந்தேன்? இன்னொருத்தர் பேரை எதுக்குவேய் வைச்சுண்டிருக்கீர்?

      இருக்கிற இம்சை போதாதுன்னு நீ வேறே படுத்தாதே சேட்டை!வரதாச்சாரி எரிந்துவிழுந்தார். “அம்புஜவல்லி ஏதாச்சும் டப்பாப்பேரை வைக்கிறதுக்கு முன்னாடி நானே ஒரு புதுப்பெயர் செலக்ட் பண்ணனும். வாயிலே நுழையறா மாதிரி ஒரு பேரு சொல்லேன் சேட்டை!

      வாயிலே நுழைஞ்சாப் போதுமா? அப்ப டூத்பிரஷ்-னு பேரு வைச்சா ஒத்துப்பீரா? மனசுலே நுழையுற மாதிரி பேரு வைச்சுக்கணும்!

      சரி, அப்படியே சொல்லு சேட்டை!

      ஜிம்மி, டாமி, சீஸர்.....!

      நாராயணா நாராயணா!வரதாச்சாரி தலையிலடித்துக் கொண்டார். “செல்லப்பிராணிக்கு வைக்கிற பேரெல்லாம் சொல்றியே?

      அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே! இந்தப் பெயரையெல்லாம் பிராணிக்கும் வைக்கலாம்; உம்மை மாதிரி அப்பிராணிக்கும் வைக்கலாம்.

                உன்னை மாதிரி சாம்பிராணிகிட்டே கேட்டேன் பாரு!சலித்துக் கொண்டார் வரதாச்சாரி.

      என்ன புலம்பறார் எங்காத்துக்கார்?என்று கேட்டவாறு, காப்பியுடன் வந்தாள் அம்புஜவல்லி.

      இப்ப எதுக்காக இவரோட பேரை மாத்தணும்கிறே?எச்சரிக்கையாக முதலில் காப்பியை வாங்கிக்கொண்டு, துணிச்சலாகக் கேட்டேன். “அதுக்கெல்லாம் எவ்வளவு சட்டம் இருக்கு தெரியுமா? கெஜட் நோட்டிஃபிகேஷன்லாம் தேவைப்படும். பேப்பர்லே போடணும்.

      அப்படியாவது இவர் பேரு பேப்பர்லே வந்தா சரிதான்!என்று முகத்தை நொடித்தாள் அம்புஜவல்லி. “இத பாரு சேட்டை! இவர் பேராலே எவ்வளவு பிரச்சினை தெரியுமா?

      என்ன பிரச்சினை?

      கொஞ்ச நாளைக்கு முன்னாடி நானும் இவரும் தெருவுலே போயிண்டிருந்தோமா? எங்க பின்னாடியே ஒரு எருமை மாடு வந்திண்டிருந்தது. நாங்க கவனிக்கலை. எதுத்தாப்புலே வந்த ஒருத்தர் இவரைப் பார்த்து ‘எருமை வரது, எருமை வரதுன்னு சொல்லிட்டாரு! அப்படியே கோபம் பொத்துண்டு வந்துடுத்து.

      எருமைக்கா?

      இல்லை; நேக்கு! அவர் பின்னாலே வந்திட்டிருக்கிற எருமையைத்தான் வரது வரதுன்னு சொல்றார்னு தெரியாம, முன்னாலே போயிண்டிருந்த இந்த வரதுவைத்தான் எருமை எருமைன்னு சொல்றார்னு தப்பா நினைச்சிண்டு சண்டைக்குப் போயிட்டேன்.

      அதுக்குன்னு சண்டைக்குப் போவாங்களா? எருமையே சும்மாயிருக்கும்போது, அதாவது, வரதுவே சும்மாயிருக்கும்போது நீ எதுக்குச் சண்டைக்குப் போறே?

                தப்புத்தான் சேட்டை! ஐயோ பாவம்னு நல்ல எண்ணத்துலே சொன்னவரோட சண்டைக்குப் போயி, ஆயிரம் சாரி சொல்ல வேண்டியதாயிடுத்து!

      ஹை! எனக்கு அடுத்த இடுகைக்கு நல்ல தலைப்புக் கிடைச்சிடுச்சே! ஆயிரம் சாரி கேட்ட அபூர்வ அம்புஜவல்லி!

      எங்க கஷ்டம் உனக்கு ஜாலியா இருக்கா?எகிறினாள் அம்புஜவல்லி. “எருமைக்குத் திண்டாட்டம்; காக்காய்க்குக் கொண்டாட்டம்கிற மாதிரியில்லே இருக்கு?

      நீ எருமையை விட மாட்டியா?இடையில் புகுந்தார் வரதாச்சாரி. “சேட்டை! என்னமோ என்னை எல்லாரும் வரது வரதுன்னு சொல்றது கஷ்டமாயிருக்குன்னு சொல்றாளே! என் பேரை யூஸ் பண்ணி எங்கப்பாவை வீட்டுக்கு வர விடாமப் பண்ணிட்டா தெரியுமா?

      எப்படி?

      ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நாள் நான் குளிச்சிண்டிருந்தேன்.

      ஐயையே! நீர் ரெண்டு மாசத்துக்கு ஒருவாட்டிதான் குளிப்பீரா?

      பிராணனை வாங்காதே சேட்டை! வரதாச்சாரி எரிந்து விழுந்தார். “நான் குளிச்சிண்டிருக்கச்சே எங்கப்பா செல்லுலே கூப்பிட்டிருக்காரு!

      அதை அம்புஜவல்லி எடுக்கவேயில்லையா?

      அப்படிப் பண்ணியிருந்தாப் பிரச்சினையே வந்திருக்காதே. இவ போனை எடுத்திருக்கா? எங்கப்பா வரதான்னு என்னைக் கூப்பிட்டாரா, அவர் ஊருலேருந்து கிளம்பி வரதான்னு கேட்கறார்னு நினைச்சுண்டு, இவ ‘வர வேண்டாம்னு சொல்லி போனை டிஸ்கனெக்ட் பண்ணிட்டா!

      ஐயையோ!

                என் நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு சேட்டை!

      வாட் நான்சென்ஸ்!நான் சீறினேன். “நீங்க எந்த நிலைமையிலே குளிச்சிட்டிருந்தீங்கன்னு நான் எதுக்கு யோசிச்சுப் பார்க்கணும்?

      ஐயோ பெருமாளே!அலறினார் வரதாச்சாரி. இவா ஆஃபீஸ்லே ஒரு புத்திசாலிகூடக் கிடையாதா?

      தோ பாருங்கோ!அம்புஜவல்லி ஆட்காட்டி விரலை ஆட்டினாள். “எங்க ஆபீஸைப்பத்தித் தப்பாப் பேசினேள்.......?

      அம்புஜவல்லி மனுஷியாவே இருக்க மாட்டா...!என்று எடுத்துக் கொடுத்தேன் நான்.

      போதுமே உங்க ஆஃபீஸ் பிரதாபம்!வரதாச்சாரி நக்கலடித்தார். “உனக்கெல்லாம் அக்கவுண்டண்ட் போஸ்ட் கொடுத்திருக்காளே, இதுலேருந்தே அவா எவ்வளவு புத்திசாலியா இருப்பான்னு தெரியறதே!

      வரது! திஸ் இஸ் டூ மச்! அம்புஜவல்லி உறுமினாள். “எங்க ஆபீஸ்காரா ஒவ்வொருத்தரும் சூப்பர் இண்டெலிஜெண்ட்! எல்லாரும் சேட்டை மாதிரின்னு தப்பா நினைச்சுறாதேள்.

      என்னது?நான் எகிறினேன். “புளியோதரை சாப்பிடாமலே வயித்தைக் கலக்கறியே! இதுக்குமேலே நான் இருந்தா என் மரியாதை கெட்டிரும். நான் கிளம்பறேன்.

      சேட்டை, நில்லு!என்று வரதுவும் அம்புஜவல்லியும் வருவதைப் பற்றி சட்டை செய்யாமல் வெளியேறினேன். என்னவானாலும் சரி, வரதாச்சாரியின் பெயரை மாற்ற விடக்கூடாது என்பதோடு, நானும் புத்திசாலிதான் என்பதை அம்புஜவல்லிக்கு நிரூபிக்க வேண்டும்;  அதுவரை புளியோதரை சாப்பிடுவதில்லை என்று சபதம் மேற்கொண்டேன்.

      இரண்டொரு நாட்கள் கழித்து, எனது திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு, அதிகாலை எட்டுமணிக்கு அம்புஜவல்லிக்குப் போன் போட்டேன்.

      அம்புஜவல்லி! இன்னிக்குப் பேப்பர் பார்த்தியா? லெட்டர்ஸ் டு தி எடிட்டர்லே வரதாச்சாரி சூப்பரா எழுதியிருக்காரே?

      என்னது? இவரா?வத்தக்குழம்பில் மிதக்கும் மணத்தக்காளிபோல, அம்புஜத்தின் குரலில் ஆச்சரியம் மிகுந்து காணப்பட்டது. “அது வேறே யாராவது புத்திசாலி வரதாச்சாரியா இருப்பார்!

      என்ன அப்படிச் சொல்லிட்டே? அவர்தான் அட்ரஸ்லேயே, வரதாச்சாரி, ஹஸ்பண்ட் ஆஃப் அம்புஜவல்லி, பெரியதெரு, ட்ரிப்ளிகேன்னு போட்டிருக்காரே!

      நெஜமாவா?

      முதல்லே பேப்பரை எடுத்துப் பாரு!என்று போனைத் துண்டித்துவிட்டு, எல்லா நண்பர்களுக்கும் குறும்செய்தி அனுப்பினேன். ஆபீஸுக்குச் சென்றுசேர்ந்ததும் வரதாச்சாரியிடமிருந்து போன் வந்தது.

      சேட்டை! இதெல்லாம் என்ன கூத்து? நான் ஒரு லெட்டரும் எந்தப் பேப்பருக்கும் எழுதலியே? இதென்ன புதுசாப் புரளி கிளம்பியிருக்கு?

      ஓய்! உம்ம பேருலே நான்தான் எழுதினேன்! அதை விடும்! அம்புஜவல்லி என்ன பண்ணினா, அதைச் சொல்லும்!

      ஆபீஸுக்குப் போற வழியிலே பத்துப் பதினஞ்சு பேப்பர்வாங்கி, தெரிஞ்சவாளுக்கெல்லாம் கொடுத்துப் படிக்கச் சொல்லப்போறாளாம்.

      ஹாஹாஹா!” சிரித்தேன் நான். “இத்தோட விடப்போறதில்லை. எல்லாப் பேப்பருலேயும் உங்க பேருலே லெட்டர் போடப்போறேன். அடுத்தபடியா எல்லாப் பத்திரிகை, பேப்பர்லேயும் உம்ம பேரு வரப்போறது. அப்புறம் உம்ம பேரை மாத்தச் சொல்லுவாளா அம்புஜவல்லி?

      என்ன உளர்றே? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

      ஒரு நிமிஷம்!செல்போனைப் பொத்திக்கொண்டு திரும்பியபோது, அம்புஜவல்லி ஆபீஸுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். “என் ஹஸ்பண்ட் வரதாச்சாரி எழுதின லெட்டர் டு தி எடிட்டர் இன்னிக்குப் பேப்பர்லே வந்திருக்கு. படியுங்கோஎன்று சொல்லியவாறு கண்ணில் அகப்பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

      ஓய் வரதாச்சாரி! மூச்சுக்கு முன்னூறு வாட்டி இனிமே வரதாச்சாரி வரதாச்சாரின்னு சொல்லப்போறா அம்புஜவல்லி!

      அதெல்லாம் சரி சேட்டை! என்னைப் படிக்க விடாம அவ பேப்பரை எடுத்திண்டு போயிட்டா! என் பேருலே அப்படியென்ன விஷயத்தைப் பத்திப் பேப்பர்லே லெட்டர் எழுதினே?

      அதுவா? திருவல்லிக்கேணி தெருவுலே பாதசாரிகளுக்குத் தொந்தரவா நிறைய எருமை வரதுன்னு எழுதினேன்.

**********************************

Thursday, September 19, 2013

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!
ஆங்கில ஊடகங்களில் அண்மைக்காலமாக, வெங்காய விலையேற்றத்துக்கு அடுத்தபடியாகப் பேசப்படுவதுசச்சின் தெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியை எங்கு விளையாடுவார்? மும்பை வான்கெடே மைதானத்திலா, கொல்கத்தாவிலா அல்லது மும்பை சிவாஜி பார்க்கிலா?-என்பது பற்றித்தான். அக்‌ஷய்குமார் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்று கேட்பதைப் போல, மிகவும் அபத்தமாக இருக்கிறது இந்தக் கேள்வி! அவர் எந்தப் படத்தில் ஐயா நடித்திருக்கிறார்? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? மும்பையோ, கொல்கத்தாவோ எந்த மைதானமாக இருந்தாலும், சச்சின் ‘விளையாடினால் போதாதா என்றுதானே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நொந்து நூடுல்ஸாகியிருக்கும் அவரது ரசிகசிகாமணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

      சச்சின் கடைசியாக சதமடித்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாற்பத்து ஏழு ரூபாய் பதினெட்டு பைசாவாக இருந்தது. இப்போது அறுபத்தி இரண்டு ருபாயாக அநியாயத்துக்கு உயர்ந்திருக்கிற டாலர் மதிப்பைக் குறைக்கவாவது சச்சின் ஒரு சதம் விளாச மாட்டாரா என்று கிரிக்கெட் ரசிகர்களுடன், பொருளாதார வல்லுனர்களும், ரிசர்வ் வங்கியும் கவலையுடன் காத்திருப்பதை அறியாமல், சச்சினைப் பற்றித் தேவையற்ற சர்ச்சைகள் தேவைதானா?

      இதில் 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என்று சில விஷமிகள் அவதூறு பரப்புவதைக் கேட்டு, விளம்பரக் கம்பெனிகள் எல்லாம் விளக்கெண்ணை குடித்தது போலக் கட்டணக் கழிப்பறைகளுக்குள் காலவரையின்றிப் போராட்டம் நடத்துவதாகக் கேள்வி. இப்படியெல்லாம் அவசரப்பட்டு சச்சினை ஓய்வுபெறச் சொன்னால், அப்புறம் இந்தியாவுக்குள் எப்படி ஐயா அன்னிய நேரடி முதலீடு வரும்? இந்தியப் பொருளாதாரம் தேறவேண்டும் என்று இம்மியளவாவது உங்களுக்கு எண்ணம் இருக்கிறதா?

      மற்ற விஷயத்தில் எப்படியோ, சச்சின் ஓய்வு என்று சொன்னவுடன் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் (பாராளுமன்றத்துறை அமைச்சராம்)  ராஜீவ் சுக்லா, தேசப்பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ‘சச்சின் விரும்புகிறவரை அவர் கிரிக்கெட் ஆடலாம். அவர் எப்போது விரும்பினாலும் ஓய்வு பெறலாம்என்று பேட்டியளித்திருப்பதிலிருந்தே, சச்சின் கிரிக்கெட் தொடர்ந்து ஆடுவது, ஐந்து மாநிலங்களில் நடைபெறப்போகிற சட்டசபைத் தேர்தலை விடவும், பெருகுகிற பணவீக்கத்தை விடவும், ஏறுகிற விலைவாசியை விடவும், நிலக்கரி ஊழலில் காணாமல்போன கோப்புகளைவிடவும் முக்கியம் என்றுகூடவா இந்த அறிவிலிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை! வாட் ய ஷேம்...பப்பி ஷேம்!

      இதே கருத்தைத்தான் சவ்ரவ் கங்குலி, சையத் கிர்மானி, அனில் கும்ப்ளே, கார்ஸன் காவ்ரி போன்ற முன்னாள் வீரர்களும் சொல்லியிருக்கிறார்கள். ‘சச்சின் விரும்புகிறவரைக்கும் அவர் கிரிக்கெட் தொடர்ந்து ஆடலாம்.இந்தியக் கிரிக்கெட் அணியில் யார் ஆடுவது, யார் ஆடக்கூடாது என்பதை அந்தந்த வீரர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பதை மிகுந்த தொல்லைநோக்கோடு, மன்னிக்கவும், தொலை நோக்கோடு இவர்களே சொன்னபிறகு, வீணாக சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று விதண்டாவாதம் செய்பவர்களை, இணையமைச்சர் நாராயணசாமியிடம் பிடித்துக் கொடுப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சச்சின் அவர் விரும்புகிறவரை விளையாடுவார்; மக்கள் விருப்பத்துக்கெல்லாம் அவர் அசரவோ அஞ்சவோ மாட்டார், அதெல்லாம் ரிக்கி பாண்டிங், இன்ஜமாம்-உல்-ஹக், ஸ்டீவ் வாவ் போன்ற கத்துக்குட்டிகள் செய்கிற வேலை   என்பதை இப்போதாவது புரிந்துகொண்டு புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.

      அடுத்த ஆண்டு சச்சின் இங்கிலாந்தில் விளையாடுவார்என்று ரவி சாஸ்திரி சொல்லியிருக்கிறார். ‘அதற்கு அடுத்த ஆண்டு அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவார்என்று நாளை சுனில் காவஸ்கர் சொல்லலாம். எனக்குக்கூட சச்சின் போத்ஸ்வானா, உகாண்டா, கஜாகஸ்தான், உஜெபெகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆடி அங்குள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு விக்கெட் தானம் செய்ய வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. இப்படி முன்னாள் வீரர்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களும்  தலா ஒவ்வொரு வருடம் ஆடச்சொன்னாலே, சச்சின் 2234-ம் ஆண்டு வரை விளையாட வேண்டியிருக்கும் என்னும் சின்னக் கணக்குக் கூடவா சச்சினின் விமர்சகர்களுக்குப் புரியவில்லை? இராமானுஜம், சரோஜாதேவி, மன்னிக்கணும், சகுந்தலா தேவி போன்ற கணிதமேதைகள் பிறந்த இந்தியாவில் ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத சச்சினின் விமர்சகர்களை என்னவென்று சொல்வது? எதற்கும் கடந்த மூன்றாண்டுகளில் சச்சின் அடித்த ஸ்கோர்களை வரிசைப்படி மனப்பாடம் செய்தால், அதற்கும் ஒன்றாம் வாய்ப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதையாவது புரிந்து கொள்வார்கள்.

      நான் விரும்புகிறவரைக்கும் விளையாடுவேன்; ஓய்வு பற்றியெல்லாம் நான் யோசிக்கவேயில்லைஎன்று சச்சினும் எத்தனை தடவை சொல்லுவார். அனாவசியமாக இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிற நேரத்தில் அவர் பாட்டுக்கு  காங்கிரஸுக்காகப் பிரசாரமாவது செய்திருக்க மாட்டாரா? லியாண்டர் பயஸ் நாற்பது வயதில் டென்னிஸ் ஆடி ஜெயிக்கலாம்; சச்சின் நாற்பது வயதில் கிரிக்கெட் விளையாடி சொதப்பக்கூடாதா? என்ன நியாயம் உங்கள் நியாயம்?

      இப்படியெல்லாம் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி, சச்சினையும் அவரது ரசிகப்பெருமக்களையும் நோகடிக்காதீர்கள். அவரே பயந்துபோய், ‘அணியில் வீரர்களைத் தேர்வு செய்யும்போது அந்த வீரரின் தொடர்ச்சியான ஆட்டம் (form) பற்றிக் கவலைப்படக் கூடாது. அந்த வீரர் யார் என்பதைப் பார்த்துத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று சொல்ல நேர்ந்து விட்டது. ‘நான் இரண்டரை வருடங்களாகச் சொதப்பினாலும், என்னை செலக்ட் பண்ணாம விட்டிராதீங்கப்பா. என்னையும் ஆட்டத்துலே சேர்த்துக்கோங்கஎன்று அவர் பகீரங்கமாகவா கேட்க முடியும்? ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது. Form இல்லாதவங்களை அணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று மகேந்திரசிங் தோனி கூறியிருப்பது எவ்வளவு பெரிய அடாவடி! இந்தியக் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்த கேப்டன் என்றாலும், உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், திறமைக்குத்தான் மதிப்பு, பழைய பெருங்காய டப்பாக்களை வைத்துக்கொண்டு பொழைப்பு நடத்த முடியாது என்று உண்மையைச் சொல்வதற்கு தோனிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டிருக்காரு அந்த ஆளு!

      சரி, சச்சின் சொல்வதுபோலத்தான், அவர் கேப்டனாக இருந்தபோது, திறமையைப் பற்றிக் கவலைப்படாமல் ஏனோதானோவென்று வீரர்களைப் பொறுக்கி ஆடினார்களா?என்று மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டும் வகையில் கேட்கிறவர்களுக்கு இந்த பதில். ஆமாம்! முன்னாள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஜெய்வந்த் லேலே எழுதியிருக்கிற The Memoirs of a Cricket Administrator’ என்ற புத்தகத்தில் அப்படியொரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மைதான். அதாவது நிலேஷ் குல்கர்னி என்ற மும்பை வேகப்பந்து வீச்சாளர், ஒரு ரஞ்சி சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும், அதனால் அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேப்டன் சச்சின் தெண்டுல்கர் கேட்டது உண்மைதான்; அதற்கு தேர்வுக்குழு தலைவர் ‘யப்பா சச்சின், அவரு 25 விக்கெட் எடுத்தது போன வருசம். இந்த வருசம் அவரு மும்பை ரஞ்சி டீமிலேயே இல்லைப்பாஎன்று சொல்ல, சச்சின் அசடு வழிந்ததும் உண்மைதான். அதற்காக, சச்சினுக்கு அவரது மும்பை ரஞ்சி அணியில் யார் விளையாடுகிறார் என்பதுகூடவா தெரிந்திருக்கவில்லை என்று எடக்காகக் கேட்பது பஞ்சமாபாதகம். அவருக்குக் கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் வேலையா? நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை!

      1998-99 ல் மேற்கு இந்தியத் தீவுகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, சரியாக ஆடவில்லை என்ற காரணத்தில் அணியிலிருந்து முகமது அசாருதீன் உட்பட சில வீரர்களை சச்சின் நீக்கச் சொல்லியிருந்தாரே, அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சா என்றெல்லாம் கேட்கப்படாது ஆமாம். அவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக்கும். எப்படி காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும்போது ஒரு மாதிரியும், இல்லாதபோது ஒரு மாதிரியும் பேசுமோ, அதே போல கேப்டனாக இருக்கும்போது ஒருமாதிரியும், இல்லாதபோது வேறு மாதிரியும் சச்சினும் பேசக்கூடாதா? இப்படித்தான் கிரிக்கெட் சூதாட்டப் புகார்கள் எழுந்தபோது, சந்திரசூட் கமிஷனில் ஒரு மாதிரியும், சி.பி.ஐ-யின் மாதவன் குழுவின் முன்னால் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்தார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா!

      சாம்பியன்ஸ் லீக் டி-20 கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வென்றால், அது சச்சினுக்குப் புகழாரம் சூட்டுவதுபோலிருக்கும்என்று அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே சொல்லியிருக்கிறார். இதே போல ‘ராகுல் காந்தியைப் பிரதமராக்குவது சச்சினுக்குப் புகழாரம்என்று ஒரு காங்கிரஸ் ஆசாமி கிளம்பலாம். சேனைக்கிழங்கில் அல்வாய் செய்வதில் தொடங்கி, சேட்டைக்காரன் உருப்படியாக எழுதுவது வரைக்கும் சச்சினுக்குப் பெருமை சேர்க்க எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? அதெல்லாம் முடிவதற்கு இன்னும் நூறாண்டுகளானாலும், அதுவரை அவர் ஆடிக்கொண்டிருக்கட்டுமே? இவங்க ஏன் இப்படி லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க? வயித்தெரிச்சல்!

      இப்படியே சச்சின் யுகக்கணக்கில் விளையாடிக்கொண்டே போனால், அப்புறம் சேத்தேஷ்வர் பூஜாரா, ரோஹித் ஷர்மா போன்ற இளம்வீரர்கள் எப்படி அணியில் நிரந்தர இடம்பிடிப்பது, எப்படி புதிய ரத்தத்தைப் பாய்ச்சுவது, எப்படி இந்திய அணியின் வருங்காலத்தை வலுப்படுத்துவது என்றெல்லாம் ரூம்போட்டு யோசித்துக் கேள்வி கேட்கிறார்கள் விமர்சகர்கள். அதெல்லாம் சச்சின் ஆடுவதை விடவா முக்கியம்? மொத்தம் பதினோரு வீரர்களில் ஒருவர், அதுவும் இருப்பதிலேயே மிகவும் வயதானவர் சொதப்பினால், ‘ஏதோ வயசானவர், சொதப்பிட்டுப்போறாருஎன்று அனுமதிக்கிற பெருந்தன்மை கூடவா இல்லை நமக்கு? இந்த நாடு எப்படிப்பட்ட நாடு? எவ்வளவு வயோதிகர்களைப் பிரதமர்களாகவும், முதல்வர்களாகவும், ஒன்றுமில்லாவிட்டாலும் கவர்னர்களாகவும் அமரவைத்து அழகுபார்த்த நாடு! இந்தப் பட்டியலில் இன்னுமொருவர் கிரிக்கெட் ஆடினால், அது நமது பாரம்பரீயத்தின் வெளிப்பாடு என்றல்லவா கருத வேண்டும்? எப்பப் பார்த்தாலும், இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம், இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார்களே! இவங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா?

      முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப் பாய்காட் கூடப் பொருமியிருக்கிறார். “தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் திடீரென்று சுருக்கி, மேற்கு இந்தியத் தீவை இந்தியாவுக்கு வரவழைத்திருப்பது, சச்சினுக்காகவேஎன்று. (டி.ஆர்.எஸ் தொடங்கி, கிரிக்கெட் தேர்தல் சீர்திருத்தம் வரையிலான பல அதிரடி நடவடிக்கைகள் விசயமாக முன்னாள் ஐ.சி.சியின் தலைவரும் இன்னாள் தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஹரூன் லாகாட்டுக்கும் நம்ம இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கும் இருக்கிற குடுமிப்பிடிச் சண்டை இன்னொரு பக்கம் இருந்தாலும்).

      ஆமாம் சாமி! முன்னை மாதிரி சச்சினால் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. அதுவும் தென் ஆப்பிரிக்கா மாதிரிக் கடினமான ஆடுகளத்தில் டெயில் ஸ்டெயின் போன்றவர்களின் பந்தையெல்லாம் அவரால் ஆட முடியாது என்றுதான் இந்தியாவில் உள்ள மொக்கை ஆடுகளங்களில் அவரை ஆடவைத்து, 200-வது டெஸ்டை நடத்தவிருக்கிறோம் என்று உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே? ஏழாம் கிளாஸ் பாஸ் பெரிசா, எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயிலு பெரிசா?

      வரப்போகிற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு, சுழல்பந்து என்றால் சிம்மசொப்பனம் என்பதால் எப்படியும் தொடரை வென்று விடலாம். அப்படியே சச்சின் ஓய்வு என்று அறிவித்தாலும், ‘நான் விளையாடிய இறுதி டெஸ்ட் தொடரையும் வென்றுவிட்டோம் என்று ஏதோ தன்னால் தொடர் வென்றமாதிரி ஒரு அற்ப சந்தோஷத்தை அவர் அடைந்தால் அடைந்து விட்டுப்போகட்டுமே? அப்படித்தானே, 2011- உலகக்கோப்பை வென்றபோதும், 2013 ஐ.பி.எல்லை மும்பை இந்தியன்ஸ் வென்றபோதிலும் பில்ட்-அப் கொடுத்தார்கள். உயிரைக் கொடுத்து ஆடிய இளம் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘மானே தேனேஎன்று தொடர்ந்து சச்சினையே புகழ்ந்துகொண்டே இருப்பவர்களின் நப்பாசையை ஏன் கெடுக்க வேண்டும்?

      இந்த அணியில் இளைஞர்கள் வரவில்லையென்று யார் அழுதார்கள்? ஏதோ, 80களின் இறுதியில் சில அனுபவசாலி வீரர்கள் ‘ஆட்டமெல்லாம் போதும்; வீட்டுக்குக் கிளம்புவோம்என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாக, அணியின் நன்மை கருதி முடிவெடுத்ததால், சச்சின், மஞ்ச்ரேகர், காம்ப்ளி, ஆம்ரே போன்ற இளம்வீரர்கள் வந்தார்கள். அதற்காக, ‘நமக்கு வாய்ப்புக் கிடைத்த மாதிரி மற்ற இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால், நாமும் நமது வயதுகருதி, அணியின் எதிர்காலம் கருதி, தேசநலன் கருதி,  கவுரவமாக ஒதுங்க வேண்டும்,என்று சச்சினும் பெருந்தன்மையோடு யோசிக்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லையே? இருபது வருடங்களாக, தனது ஆட்டத்திறனால், தான் சம்பாதித்த நற்பெயரை, ஒரு மனிதர் தானே சின்னாபின்னப்படுத்த விருப்பப்பட்டால், அதைத் தடுக்க யாரால் முடியுங்காணே?

      இப்போது சச்சினை ‘பாஜி(அப்பா)என்று அழைக்கிற இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், அவரை ‘தாவ்ஜி(தாத்தா) என்று அழைத்தாலும் சரி, அவர் ஆடாவிட்டாலும், இவர்கள் ஆடி ஜெயித்து, அவரைத் தோளின்மீது உட்காரவைத்து மைதானத்தை வலம்வந்தாலும் சரி, ‘இதைவிட கவுரவமாக விடைபெற முடியாதுஎன்பதைப் புரிந்து கொண்டு அவராக அறிவிக்காதவரையில், அவர்பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருக்கட்டும்! இப்படியே எல்லாரும் நாற்பது வயதுவரைக்கும் ஆடுவேன் என்று அடம்பிடித்து அழுதால், இரானி கோப்பையிலும், ரஞ்சியிலும், கங்கா லீகிலும், டைம்ஸ் ஷீல்டுகளிலும் அடித்து ஆடுகிற துடிப்பான இளைஞர்கள் இந்தியாவுக்காக ஆடுகிற கனவை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு பாவ்-பாஜி சாப்பிடட்டும்!

      முன்னாள் டென்னிஸ் வீரர் இவான் லெண்டல் ஒரு முறைகூட விம்பிள்டனில் ஜெயித்ததில்லை. கிரிக்கெட்டிலேகூட, சுனில் காவஸ்கர் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சர்வதேச சதமும் அடித்ததில்லை. எல்லா வீரர்களும், எத்தனையோ சாதனைகள் செய்தும் விட்டகுறை, தொட்டகுறை நிறையவே இருந்து வந்திருக்கின்றன. அப்படியெல்லாம் எதையும் விட்டுவைத்து விடாமல், எல்லா சாதனைகளையும் செய்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சச்சின் எண்ணுவதில் என்ன தப்பு இருக்கிறது? ஒரு தப்புமில்லை. கிரிக்கெட் வாரியம் உங்களது; இந்தியக் கிரிக்கெட் உங்களது தனிச்சொத்து. நீங்களோ கிரிக்கெட்டின் கடவுள்! கடவுளுக்கு ரிட்டயர்மெண்ட், பென்சன், ஈ.எஸ்.ஐ, க்ராஜுவிட்டி, பி.எஃப் எல்லாம் உண்டா என்ன? ஆகவே, மராட்டிய மார்க்கண்டேயரே, விடாதீங்க! நீங்கபாட்டுக்குத் தொடர்ந்து அவுட் ஆகுங்க, அதாவது, ஆடுங்க ராசா! இவனுக இப்படித்தான் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பானுங்க! யூ ப்ளீஸ் கண்டின்யூ!

      மற்ற விசயங்களில் என்னவோ மக்கள் விருப்பத்துக்கு எல்லாரும் மதிப்பளிப்பது மாதிரியும், நல்ல முன்னுதாரணங்களைக் கடைபிடிக்கிற மாதிரியும், கிரிக்கெட்டில் மட்டும், அதுவும் சச்சின் விஷயத்தில் மட்டும் அவர் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

       நல்ல வேளை, ‘என்னை எம்.பியாக்கிய காங்கிரஸ் கட்சி 45 ஆண்டுகள் ஆட்சியே செய்திருக்கிறது. நான் 45 ஆண்டுகள் ஆடினால் என்ன குறைந்து போய் விடும்? என்று அவர் கேட்காதவரை, ‘ஆடப்பிறந்தவரே ஆடிவா!என்று அவரை வாழ்த்துவோம்.