Tuesday, January 26, 2010

நாய் வளர்ப்போமாக!

இதுவும் சில தினங்கள் முன்பு நடந்த உண்மை நிகழ்ச்சிதான்.....! பெயர்களை மாற்றியே தீர வேண்டும் என்பதால், செய்திருக்கிறேன்.

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு நேர் எதிராக இருந்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் என்னால் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியவில்லை. மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஐந்து ஆறை நிறுத்த இடமிருந்தும் எனது ஸ்ப்ளெண்டரை வாசலில் நிறுத்தி விட்டுத் தான் உள்ளே நுழைந்தேன்.ஒன்றுக்கு இரண்டாக பாதுகாவலர்கள். ஒருவர் என்னை ஆதியோடந்தமாக விசாரித்துக்கொண்டிருக்க, இன்னொருவர் வருகைப்பதிவேட்டில் எதையோ எழுதி, கயிறுகட்டிப் பாதுகாப்பாக இருந்த ஒரு பேனாவைக் கொடுத்துக் கையெழுத்துப்போடச் சொன்னார். சரி, இத்தோடு முடிந்ததா என்றால் இல்லை. லிஃப்ட் அருகே பல பொத்தான்கள் இருந்த ஒரு செவ்வகப்பெட்டியில் எதையெதையோ அழுத்தியதும் அதில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் எனக்குப் பரிச்சயப்பட்ட குரல் கேட்டது.

"சொல்லுங்க வாட்ச்மேன்!"

"உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கிறார்," என்று அந்த "வாட்ச்மேன்" எனது விபரங்களைச் சொல்லவும், "அடடே, எங்க ஊருக்காரர் தான்.மேலே வரச்சொல்லுங்க," என்று அனுமதியளித்தது எங்க ஊர்க்காரரின் குரல். லிஃப்டில் நுழைந்ததும் ஜாம்நகருக்கு விமானத்தில் போனதை நினைவூட்டும் வகையில் ஆங்கிலத்தில் பெண்குரலில் பதிவு செய்த சில அறிவிப்புக்கள். அந்த வளாகத்தில் நான் அதுவரை பார்த்தவற்றில் பாதுகாப்பு குறைவாயும், பகட்டு அதிகமாகவும் தான் தென்பட்டது. அல்லது இயல்பாகவே வசதியானவர்களின் மீது அவ்வப்போது ஏற்படுகிற வயிற்றெரிச்சலும், எப்போதும் ஏற்படுகிற பொறாமையும் தான் என்னை அப்படி எண்ண வைத்ததோ-தெரியவில்லை. பணக்காரர்களை வெறுக்கிற கம்யூனிஸ்ட் நானில்லையென்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அளவுக்கு அதிகமாக வசதியாயிருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாமலிருக்க, வயிற்றெரிச்சல் படாமலிருக்க-நான் ஞானியல்ல என்பதும் உண்மையே!

எங்க ஊர்க்காரரின் வீட்டுக்கதவருகிலிருந்த பொத்தானை அழுத்தியதும் மெல்லிய இசை கேட்டது. அதைத் தொடர்ந்து பெர்முடாவும், "Yes. I love cheese," என்று அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுமாக கதவைத் திறந்தவன் செண்பகராஜன்- எனது பால்ய சினேகிதனின் அண்ணன். செம்மண் தரையில் பம்பரம்,கோலி,குரங்குப்பெடல் போட்டு சைக்கிள் என்பன முதல் ஆண்டுக்கணக்காக பரஸ்பரம் பகிர்ந்த கணங்களின் ஒரு பகுதியானவன். எட்டு அல்லது ஒன்பது வருடங்கள் கழித்து சந்திக்கிறேன் அவனை. ஆனால்...

அவனை முந்திக்கொண்டு என்னை வரவேற்கத் தாவியது, பஞ்சுப்பொதி போலிருந்த ஒரு வெள்ளைநாய்க்குட்டி. அது குரைத்த சப்தம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. குழந்தைகளின் மழலைப்பினாத்தலைப் போல இருந்தது அதன் குரைப்பு.

அண்மையில் வட இந்தியாவிலிருந்து ஒரு தனியார் வங்கியில் உயர்பதவியோடு மாற்றலாகி சென்னை வந்திருக்கிற செண்பகராஜனை மரியாதை நிமித்தம் காணச்சென்றிருந்தேன். அவனது நடையுடைபாவனைகள் நாகரீகமாகத் தென்பட்டாலும், இன்னும் பம்பரத்துக்கு ஆக்கர் அடிக்கப் பரபரத்த கிராமத்துப்பிராயத்தின் சிற்சில ரேகைகள் அவன் கண்களில் இருந்தன.

அந்த நாய்க்குட்டி சிறிது நேரம் கழித்து என்னை விருந்தாளி என்று ஒப்புக்கொண்டு வாலாட்டியது. அது குரைத்துக்கொண்டிருந்ததால் எங்கள் பேச்சு தடைப்படவே, அதனிடம் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கொடுக்கப்பட்டதும் அது விளையாடத் தொடங்கியது. ஆனால், பேச்சை விடவும் அந்த நாய் பிளாஸ்டிக் பாட்டிலோடு ஆடிய விளையாட்டு சுவாரசியமாகவும் உயிரோட்டமாகவும் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

செண்பகராஜனின் பேச்சில் இருந்த கரிசனம்; அவன் மனைவி தேவையில்லாமல் குழந்தைகளிடம் பேசிய ஆங்கிலம் மற்றும் இந்தி; அந்தக் குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்தபோது அவர்கள் முகத்தில் தோன்றிய புன்னகை; தேநீருடன் வைத்த பலகாரங்களைச் சாப்பிடச் சொல்லிய உபசாரம் - எல்லாவற்றிலுமே பாசாங்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

பாசாங்கு செய்வதற்குரிய திறமை அன்றாடங்காய்ச்சிகளுக்கு வராது. அது பணம் செய்கிற ரசவாதங்களில் ஒன்று. நாசூக்காக பசியை ஒதுக்கி வைத்து விட்டு, நாகரீகமாக சாப்பிடுவது பசித்தும் சாப்பாடு கிடைக்காதவர்களால் செய்ய முடியாத ஒன்று. இந்த பாசாங்குகளும் ஷோ-கேஸ்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி அடுக்கப்படுகிற பொம்மைகளைப் போல பார்க்கிறவர்களைக் குழப்புகிற ஒரு குயுக்தியான தந்திரம்.

செண்பகராஜன் செய்த பாசாங்குகளிலேயே மிகவும் கொடுமையானது, தனது உடன்பிறந்த தம்பியும், எனது நெருங்கிய நண்பனுமான செல்வத்தைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட விசாரிக்காதது தான். அண்ணன் திருமணத்தின்போது பெண் வீட்டுக்காரனைப் போல சுழன்று சுழன்று வேலை பார்த்த செல்வத்துக்கும் செண்பகராஜனுக்கும் சில வருடங்களாகக் கருத்து வேறுபாடு என்பது மட்டும் தெரியும். அதற்கு என்ன காரணம் என்று மூக்கை நுழைக்கிற அநாகரீகத்துக்குப் பயந்து, அண்ணன் பணக்காரன், தம்பி பரம ஏழை என்ற வர்க்கபேதம் தான் காரணமாக இருக்கக்கூடும் என்று ஒப்புக்கு ஒரு காரணத்தை எனக்கு நானே சொல்லி வைத்திருக்கிறேன். இதுவும் என்னிடம் இருக்கும் இன்னொரு அசிங்கமான பழக்கம்- காரணங்கள் புரியாத சிக்கல்களுக்கு ஏதாவது சுலபமான காரணத்தைக் கற்பித்து அது குறித்துக் கவலைப்படுவதன் அத்தியாவசியத்தைக் குறைத்துப்போட்டு விடுவேன்.

செண்பகராஜன் வீட்டு நாய் பிளாஸ்டிக் பாட்டிலோடு விளையாடிச் சோர்ந்து போவதற்கு முன்னர், எங்களது பழங்கதைகளில் சிலவற்றை நினைவு கூர்ந்து விட்டிருந்தோம். அந்த நாய் ஏர்-கண்டிசனரை நெருங்கி தனது நகத்தால் பிறாண்டத்தொடங்கியது.

"பதினோரு மணியாச்சுன்னா செல்லத்துக்குத் தூக்கம் வந்திருமே!," என்று செண்பகராஜனின் மகள் சொல்லவும், அவளின் அப்பாவும் மகளும் உலகமகா நகைச்சுவையைக் கேட்டது போல சிரித்தனர். செண்பகராஜனின் மனைவி ஏ.சியை முடுக்கி விடவும் அந்த நாய் தொலைக்காட்சிப்பெட்டிக்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலியின் கீழ்த்தட்டில் துள்ளியேறி சுருண்டு படுத்துக்கொண்டது. சிறிது நேரத்தில் உறங்கவும் ஆரம்பித்து விட்டது.

ஏறக்குறைய முப்பது நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறியபோது, வாசலில் வைத்தாவது செல்வத்தைப் பற்றி விசாரிக்க மாட்டானா என்ற எனது நப்பாசை நிறைவேறவில்லை. வெளியேறி வண்டியை முடுக்கிக் கொண்டு அறைக்குத் திரும்பியபோது, தெருவில் அனாமத்தாக ஓடித்திரிந்து கொண்டிருந்த சில தெருநாய்களைக் காண நேர்ந்தது.

அடுத்த முறை செல்வத்தை சந்திக்கும்போது அவனிடம் "உன் அண்ணனுக்கு நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம்," என்று சொல்வதா வேண்டாமா என்ற புதுக்கேள்வியுடன் புகைமண்டலமாயிருந்த சென்னையின் தெருவில் என் வண்டி விரைந்தது.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. :(

நாயின் விளையாட்டு மற்றும் ஷோகேஸ் பொம்மைகளைப் பற்றி சொன்ன இடங்கள் பிடித்தது.

Thekkikattan|தெகா said...

:-)) இதுவும் பிழைப்பு வாதத்தில் ஒரு வகைதானோ?? நல்லா சொல்லியிருக்கீங்க, சேட்டை.

settaikkaran said...

//ஹ்ம்.. :(

நாயின் விளையாட்டு மற்றும் ஷோகேஸ் பொம்மைகளைப் பற்றி சொன்ன இடங்கள் பிடித்தது//


நீங்க அடிக்கடி வந்து நாலு வார்த்தை நல்லதா சொல்லுறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப நன்றிங்க

settaikkaran said...

//:-)) இதுவும் பிழைப்பு வாதத்தில் ஒரு வகைதானோ?? நல்லா சொல்லியிருக்கீங்க, சேட்டை.//

நான் கண்டிப்பா ஒத்துக்குவேன். :-) வந்ததுக்கும் நாலு வார்த்தை நல்லதாச் சொன்னதுக்கும் ரொம்ப நன்றிங்க!

சென்ஷி said...

அசத்தலுங்கண்ணா... இப்பத்தான் மொதோ தபா வர்றேன்... எல்லாத்தையும் படிச்சிட்டு வர்றேன்.

settaikkaran said...

//அசத்தலுங்கண்ணா... இப்பத்தான் மொதோ தபா வர்றேன்... எல்லாத்தையும் படிச்சிட்டு வர்றேன்.//

வந்திட்டீங்கல்லே, இனிமே கலக்கல் தான்!

ரொம்ப நன்றிங்க!!