Wednesday, August 28, 2013

பதிவர் திருவிழாவும் பாலகணேஷின் வாகனமும்
அண்ணா! ஃப்ரீயா இருக்கீங்களா?எனக்கு மிகவும் பரிச்சயமான பதிவர் மின்னல் வரிகள் பாலகணேஷ்  அலைபேசியில் அழைத்துக் கேட்கிற பரிச்சயமான கேள்வி இது.

      ரொம்ப ஃபீரியா, பனியனும் லுங்கியுமா இருக்கேன். என்ன விஷயம்?விஷயம் என்னவென்று ஊகித்திருந்தாலும் கேட்டு வைப்பேன்.

      எதுக்கு சஸ்பென்ஸ்? வெளியூரிலிருந்து சகபதிவர் யாராவது சென்னைக்கு வந்திருப்பார். அவரைப் போய்ச் சந்திக்கலாம்; வாருங்கள்என்று அழைக்கத்தான் பாலகணேஷ் அழைப்பார். இப்படி இவர் அழைத்து நான் சந்தித்த வெளியூர் பதிவர்களின் பட்டியல், எனது இடுகைகளை விடவும் நீளமாக இருக்கும். உதாரணத்துக்கு திரு.வெங்கட் நாகராஜ்திரு.ரமணி, திருமதி.மஞ்சுபாஷிணி...அத்தனை பேரையும் எழுதினால் முடிப்பதற்குள் பதிவர் திருவிழா 2013 முடிந்து போய்விடும்.

      அண்ணா! நீங்க உடம்பை ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க! நான் வீட்டுக்கு வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்!என்று தவறாமல் சொல்லுவார். ‘அதெல்லாம் வேண்டாம்! நான் கோடம்பாக்கம் பிரிட்ஜுக்கு வந்து விடுகிறேன். அங்கிருந்து சேர்ந்து போவோம்என்று சொல்லுவேன். (ஒரு கெத்து தான்!)

      கோவில் உற்சவங்களின்போது, மூஞ்சுறு வாகனத்தில் பிள்ளையார் ஊர்வலத்தில் வருவதைப் போல, தனது டி.வி.எஸ்.50-யில் அமர்ந்தவாறு, ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ஆயிரம் ரூபாய் ஆனாலும் சரி, நான் இருபது கி.மீ. வேகத்தைத் தாண்ட மாட்டேன்என்று சூப்பர் ஸ்லோ மோஷனில் கிளம்புவார். அவர் மாம்பலத்திலிருந்து தனது வாகனத்தில் கிளம்ப, நான் சூளைமேட்டிலிருந்து ஆமைவேகத்தில் நடந்து புறப்பட, ஆற்காடு சாலை சேகர் எம்போரியமருகே சந்திப்போம். அங்கிருந்து தனது இருசக்கர புஷ்பக விமானத்தில் அழைத்துக் கொண்டு போய், சந்திப்பு நடந்து பிரியாணி/ தயிர்சாதம் (எனக்கு) சாப்பிட்டு முடித்ததும், பத்திரமாகத் திரும்பவும் கொண்டுவந்து விடுவார். போகிற இடத்தில் மாடிப்படிகள் இருந்தால், ‘பார்த்து ஏறுங்கண்ணா. நான் வேண்ணாப் பிடிச்சுக்கட்டுமா? என்ற கேள்வி வேறு!

      ஊஞ்சல்பத்திரிகையில் எனது கதை வெளியானதிலிருந்து, நானும் கணேஷும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம். எனது வீடு, அவரது வீடு, டிரஸ்ட்புரம் மைதானம், கோடம்பாக்கம் யு.ஐ.காலனி, வள்ளுவர் கோட்டம் என்று நாங்கள் அடிக்கடி எங்காவது சந்தித்து உலகசுபிட்சம் தொடர்புடைய பல சங்கதிகளை மசால்வடை கடித்தும், கட்டிங் டீ குடித்தும் விவாதிக்கத் தொடங்கினோம்.

      அவரால் திரு.கே.பாக்யராஜ், திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து அறிமுகமாகிற வாய்ப்பு கிடைத்தது. நேரில் சந்திக்காவிட்டாலும், எனது இடுகைகளை வாசித்துவிட்டு, அவ்வப்போது எனக்கு மடல் எழுதும் எழுத்தாளர் திரு.கடுகு(பி.எஸ்.ரங்கநாதன்) அவர்களுடன் ஏற்பட்ட தொடர்புக்கும் கணேஷே பிள்ளையார் சுழி போட்டவர். இன்றைக்கு திரையுலகில் சிலரோடு எனக்கு இருக்கிற தொடர்புக்கும், ஒரு சில படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பங்களிக்க முடிந்ததற்கும், ஒரு விதத்தில் பாலகணேஷின் அறிமுகங்கள் மறைமுகமாக உதவி செய்தன என்றும் சொல்லலாம்.

      எனது இடுகையொன்றை வாசித்துவிட்டு, ஐயா புலவர் இராமானுசம்  அவர்கள் ‘உங்களை உடனடியாகப் பார்க்கணும்என்று பின்னூட்டமே போட்டிருந்தார். கணேஷை அழைத்து ‘புலவர் ஐயா முகவரி வேணுமே? என்றதும் ‘விடுங்கண்ணா, நான் கூட்டிட்டுப் போறேன் என்று அழைத்துச் சென்று அந்த மாமனிதரை அறிமுகம் செய்வித்தார். அதன்பிறகு, புலவர் ஐயாவின் வீட்டில் அவ்வப்போது நடைபெறும் சந்திப்புகளில் பெரும்பாலானவற்றில் நான் பங்கு கொண்டிருக்கிறேன்.

      தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது என்னுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பவர் அவர் ஒருவர் மட்டும்தான். ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் எனது உடல்நலம் குன்றியபோது, தகவல் அறிந்ததிலிருந்து என்னை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கும் மிகச்சிலரில் முதன்மையானவர் அவர்தான். ஒருமுறை, பதிவர்.மதுமதி மற்றும் ‘மெட்ராஸ் பவன்சிவகுமாரையும்  அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

      மதிப்புக்குரிய வானம்பாடிகள் ஐயா ஒருமுறை என்னிடம், “நீங்க இந்த சேட்டைக்காரன் என்கிற altar-ல் நிழல் தேடிக்கொண்டிருப்பது சரியல்ல! என்று சொல்லியிருந்தாலும், எனது அடையாளத்தை பகீரங்கப்படுத்த நான் மிகவும் தயங்கிக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில், சரியாக ஓராண்டுக்கு முன்னர் நடந்த நிகழ்வைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

      பதிவர்களெல்லாம் சந்திக்கிறா மாதிரி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்கண்ணா! நீங்க மட்டும் ஏன் இப்படி யாருக்குமே முகம்காட்டாம ஒதுக்கமா இருக்கீங்க? உங்களை அறிமுகப்படுத்திக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதே?

      யாருக்கும் அறிமுகமாகாமல் இருந்த என்னை, சென்ற ஆண்டின் பதிவர் திருவிழாவில் பங்கேற்க வைத்தது கணேஷின் இந்தத் தூண்டுதல்தான். வருகிறேன்என்று சொல்லிவிட்டாலும், எங்கே கடைசி நிமிடத்தில் நான் கடுக்காய் கொடுத்து விடுவேனோ என்ற பயத்தில், சகோதரி ‘தென்றல்சசிகலா வின் கவிதை நூலின் முதல் பிரதியை நான் பெற்றுக்கொள்வதாக நிகழ்ச்சி நிரலை அமைத்து விட்டிருந்தார்கள் விழாக்குழுவினர். சென்ற ஆண்டின் பதிவர் திருவிழா என்னைப் பொறுத்தவரை, ஒரு மறக்க முடியாத நிகழ்வு. அந்த அரங்கில் எனக்குக் கிடைத்த நட்புகள் மிக மிக அதிகம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அந்த நட்பு இன்னும் வளர்கிறது; மேலும் வளரும்.

      இந்த ஆண்டும் பதிவர் திருவிழா குறித்த ஆலோசனைகள் நடைபெறத் துவங்குவதற்கு முன்பிருந்தே, கணேஷ் என்னைச் சந்திக்கும் போதெல்லாம், சற்றும் சலிக்காமல் சொன்ன ஒரு விஷயம்: உங்க எழுத்தையெல்லாம் ஒரு புத்தகமாப் போடலாம்ணா! ‘உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க! மத்ததை நான் பார்த்துக்கிறேன்.

       நீண்ட யோசனைக்குப் பிறகு நான் சம்மதித்தேன். அப்படி யோசித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது, கணேஷ் வடிவமைத்திருக்கிற புத்தகத்தைப் பார்த்தபோது எனக்கு சுள்ளென்று உறைத்தது. வெட்கத்தைவிட்டுச் சொல்வதென்றால், எனது கண்களில் நீர் தளும்பியது. எனது இப்போதைய கவலையெல்லாம், கணேஷின் முயற்சி வெற்றியடைய வேண்டுமே என்பது மட்டுமே! பதிவர் திருவிழா-2013 அன்று (01-09-2013) மாலை நான்கு மணிக்கு எனது “மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தின் வெளியீடு நடைபெறவுள்ளது. இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

      ஒரு நாகேஷ் படத்தைப்போட்டுக்கொண்டு நான் எழுதிய காலத்தில்கூட, ஒவ்வொரு இடுகையையும் வாசித்து, ஆக்கபூர்வமான விமர்சனங்களை அளித்து, மனமாறப் பாராட்டி என்னை ஊக்குவித்த சகபதிவர்கள் ஏராளம். என் நிஜப்பெயர், வயது, வசிப்பிடம் எதுவுமே தெரியாமல், எனது இடுகைகளை மட்டுமே ரசித்து என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டிய வாசகர்களாகிய சகபதிவர்கள்தான் எனது புத்தகம் வெளியிடக் காரணமாக இருப்பவர்கள். ஆகவே, உங்கள் அனைவரின் பிரதிநிதிகளாக, நண்பர் ஆர்.பிரபாகர்  அவர்கள் எனது நூலை வெளியிட, சகோதரி. அனன்யாமகாதேவன்  முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளவிருக்கிறார். எனது வேண்டுகோளை ஏற்று, நிகழ்ச்சிக்கு வர சம்மதித்திருப்பதன் மூலம், இவ்விருவரும் எனது நன்றிக்கடனை மேலும் அதிகரித்திருக்கிறார்கள்.

      சென்ற பதிவர் திருவிழாவை விட இந்த ஆண்டு, ஏற்பாடுகள் மிகவும் சீரும் சிறப்புமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் குறுகிய காலத்தில் இப்படியொரு முயற்சியை, இவ்வளவு பெரிய அளவில் நடத்திக்காட்டுவதற்காக, விழாக்குழுவினர் பலர் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பதை நானறிவேன். அரசியல் மாச்சரியங்களுக்கோ, தனிமனித பாரபட்சங்களுக்கோ, சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ இடமளிக்காமல், பதிவர்கள் அனைவரும் ஒரு நாளில் சந்தித்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளுடன் விடாமுயற்சி மேற்கொண்டிருக்கும் பதிவர் திருவிழா-2013 நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கு நாம் தரும் வெகுமானம், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்களுக்குத் தோள்கொடுத்து, அவர்களது அயராத முயற்சிகளை அங்கீகரிப்பது ஒன்றுமட்டுமே! வயது வித்தியாசம் பாராமல், சற்றும் குறையாத உற்சாகத்தோடு, இந்த நிகழ்ச்சியை நம் அனைவரது வீட்டில் நிகழும் ஒரு விசேடத்தைப் போல, செவ்வனே நடத்தத் திட்டமிட்டு அதன்படி செயலாற்றும் அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

      அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிப்பதில் எனக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது. வாழ்க! வாழ்க!!      கூகிள் குழுமங்களில், சினிமாப்பாடல்களின் வரிகளை மாற்றி, நக்கல் நையாண்டி செய்த என்னை ஊக்குவித்தவர்கள் எத்தனையோ பேர்! ‘பண்புடன் அண்ணாச்சிஆசீப் மீரான், ‘தமிழ்த்தென்றல்குழுமத்தின் ந.உ.துரை என்று தொடங்கி கல்யாணச் சமையலுக்கான மளிகைப்பட்டியல் போல அதுவும் மிகவும் நீளமானது. அவர்களை நினைக்காமல், அவர்களுக்கு நன்றி தெரிவிக்காமல், இந்தத் தருணத்தின் மகிழ்ச்சியில் நான் திளைத்திட வாய்ப்பேயில்லை. 

      பாலகணேஷின் டி.வி.எஸ்.50 என்னை, நானே எதிர்பாராத பல நட்புகளிடம் சென்று சேர்த்ததுபோலவே, இந்த பதிவர்திருவிழா 2013-ம் பல புதிய நட்புகளை ஈட்டுவதற்கும், இருக்கிற நட்பை பலப்படுத்துவதற்கும், பல புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு வியக்கத்தக்க கருவியாகச் செயல்படும் என்பது எனது நம்பிக்கையாகும். ஆகவே, இந்த ஆண்டு நிகழவிருக்கும் இந்த வைபவத்தை மிகப்பெரிய வெற்றியாக்க வேண்டும் என்று அனைவரையும் இருகரம் கூப்பி, சிரம்தாழ்த்தி, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, August 21, 2013

சிங்கம் IIIசிங்கம் III

      அபேஸ்புரம் காவல் நிலைய வாசலில் அந்த போலீஸ் ஜீப் வந்து நின்று சடன் பிரேக் போட்டதும் அதன் நம்பர் பிளேட், பம்பரோடு கழன்று விழுந்தது. முன்னிருக்கையிலிருந்து இறங்கி, உடுக்கு மீசையுடன் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி நடந்த பொறைசிங்கம், தடுக்கிவிழப்போக கான்ஸ்டபிள் மலைவிழுங்கி இடுக்கிப்பிடி போட்டு அவரைத் தாங்கிப் பிடித்தார். சுதாரித்துக் கொண்ட பொறைசிங்கம் உதாராகக் கேட்டார்.

      த்ரீ நாட் சிக்ஸ்! வாசல்லே யாருய்யா அந்தக் கெழவி?

      வீட்டுலே திருடு போயிடுச்சுன்னு புகார் கொடுக்க வந்திருக்கு சார். டிவிக்காரங்களுக்காகக் காத்திருக்குது. எப்படியும் திருடுபோனது திரும்பக் கிடைக்காது. நியூஸ்லே மூஞ்சியாவது வரட்டுமேன்னு  நின்னுட்டிருக்கு!

      கடுப்புடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த பொறைசிங்கத்தைப் பார்த்து, இன்ஸ்பெக்டர் பிச்சைக்கண்ணு டென்ஷனுடன் அட்டென்ஷனுக்கு மாறி சல்யூட் அடித்தார்.

      வயர்லெஸ் கொடுங்க..அர்ஜெண்ட்!என்றார் பொறைசிங்கம்.

      சாரி சார்! வயர்லெஸ் ரிப்பேராயிடுச்சு!என்று தொப்பியைச் சொரிந்தார் பிச்சைக்கண்ணு.

      வாட்? எப்படி ரிப்பேராச்சு?

      நேத்து டிவியிலே சோப்புப்பவுடர் விளம்பரம் வந்துச்சு சார். அதுலே வாஷிங் மெஷின்லே ஏரியல் போட்டா துணி நல்லா அழுக்குப்போகும்னு சொல்லியிருக்காங்க. என் பொஞ்சாதி தப்பாப் புரிஞ்சுக்கிட்டு என் வயர்லெஸ்ஸுலே இருந்த ஏரியலைப் புடுங்கி வாஷிங் மெஷின்லே போட்டுட்டா. இப்போ வயர்லஸும் போச்சு; வாஷிங் மெஷினும் போச்சு!

      டி.வி.சீரியலில் வரும் மூன்றாவது கதாநாயகியின் ஆறாவது சித்தப்பாவைப் போலத் தலையிலடித்துக் கொண்ட பொறைசிங்கம் செல்போனை எடுத்தார். பிச்சைக்கண்ணுவும் மலைவிழுங்கியும் நீயா நானாவில் மைக்குக்காகக் காத்திருக்கும் பேச்சாளர்கள் போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருக்க, பொறைசிங்கம் கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டார்.

      கண்ட்ரோல் ரூம்? கொய்யாமண்டி கோவிந்தசாமி டெலிபோனை ஒட்டுக் கேட்கச் சொன்னேனே? கேட்டீங்களா?

      யெஸ் சார்!

      என்ன பேசினாங்க?

     வெவ்வெவ்வெ!

      வாட்?பொறைசிங்கத்தின் மீசை அறுந்துபோன பல்லியின் வாலைப் போலத் துடித்தது. “ஐயாம் பொறைசிங்கம் ஐ.பி.எஸ். பீ சீரியஸ்! சரியா பதில் சொல்லுங்க!

      சாரி சார்! அவங்க பேசினதைத்தான் சொன்னேன் சார்! ஒருத்தர் போனை எடுத்து ‘வெவ்வெவ்வெ?ன்னு கேட்டாரு. இன்னொருத்தர் பதிலுக்கு ‘வெவ்வெவ்வென்னு சொன்னாரு. உடனே டிஸ்கனெக்ட் பண்ணிட்டாங்க. அவ்ளோதான் சார்!

      ஐ ஸீ!என்று பேச்சை முடித்துக்கொண்ட பொறைசிங்கம், அரசுப் பேருந்து கண்டக்டரிடம் ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாயை நீட்டுபவரைப் போலத்  தலையைச் சொரிந்தார்.

      சார்?பிச்சைக்கண்ணு தயக்கமாய்க் கேட்டார். “என்ன தகவல் கிடைச்சுது சார்?

      வெவ்வெவ்வெ!என்றார் பொறைசிங்கம்.

      என்ன சார்? ஒரு சுப்பீரியரா இருந்துக்கிட்டு என்னைப் பார்த்துப் பழிப்புக் காட்டறீங்களே சார்?

      இம்சை பண்ணாதீங்கய்யா!அலுத்துக் கொண்டார் பொறைசிங்கம். “ரெண்டு பேரும் மொத்தம் பேசினதே இம்புட்டுத்தான்; வெவ்வெவ்வெ.”

      வரவர வில்லனுங்கல்லாம் காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க சார்!என்றார் மலைவிழுங்கி. “எவனாவது போன் பண்ணி வெவ்வெவ்வென்னு பழிப்புக் காட்டுவாங்களா?

      இது ஏதோ மர்மம் இருக்குது,என்றவாறு பொறைசிங்கம் தொப்பியைக் கழற்ற அவரது அவரது சொட்டைத்தலை அஞ்சப்பரில் போட்ட ஆஃப் பாயில் போலப் பளபளத்தது. “இந்த வெவ்வெவ்வெ அந்தக் கிரிமினஸ் போலீஸுக்கு விட்டிருக்கிற சவால். இந்த மர்மத்தை மூளையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கணும்.

      அப்போ நாங்க வேணாமா சார்? அடூர் கோபாலகிருஷ்ணனின் ஆர்ட் ஃபிலிமிலிருந்து இடைவேளையில் தப்பித்த ரசிகரைப்போல மலைவிழுங்கியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

      ஸ்டுப்பிட்! நாம மூணுபேரும் சேர்ந்துதான் இந்த மர்மத்தைத் துப்புத்துலக்கப்போறோம்!உறுமினார் பொறைசிங்கம். “இதுக்கு நான் வச்சிருக்கிற பேரு ஆபரேஷன் பக்கோடா!

      வேறே பேரு வைக்கலாமே!பிச்சைக்கண்ணு வழிந்தார். “எனக்கு வாய்வுக்கோளாறு.

      ஏன்யா? நெருப்புன்னா வாய் வெந்திருமா?

      நெருப்புலே விழுந்தவன் நெருப்புன்னு கத்தி யாரும் காப்பாத்தலேன்னா எல்லாமே வெந்திரும் சார்!

      மலைவிழுங்கி!பொறைசிங்கம் பொறுமையிழந்த சிங்கமாகிக் கத்தினார். “நான் சொல்றதை மட்டும் செய்யுங்க. நம்ம ஏரியாவுலே பழைய கஞ்சா வியாபாரி நடத்துற பள்ளிக்கூடம் இருக்கில்லே? நீங்க உடனே அங்கே போங்க.

      எதுக்கு ஸார்? அவர் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சதுக்கப்புறம் இந்தக் கஞ்சா, கள்ளநோட்டு, கள்ளக்கடத்தல் மாதிரிச் சில்லறை வியாபாரத்தையெல்லாம் விட்டுட்டாரு சார்!

      ஸ்டாப் இட் அண்ட் லிஸன் டு மீ!இரைந்தார் பொறைசிங்கம்.

      யோவ் மலைவிழுங்கி! சும்மாயிருய்யா!எல்டாம்ஸ் ரோடு சிக்னலில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தவர் போல இடையில் புகுந்தார் பிச்சைக்கண்ணு. “அனாவசியமா ஸாரை இங்கிலீஷ் பேச வைக்காதே! அது உனக்கும் நல்லதில்லை; இங்கிலீஷுக்கும் நல்லதில்லை.

      கரெக்ட்!என்றார் பொறைசிங்கம். “மலைவிழுங்கி! அந்த ஸ்கூலுக்குப் போயி எல்லாக் குழந்தைகளையும் ஒருவாட்டி பழிப்புக் காட்டச் சொல்லுங்க. எத்தனை குழந்தைங்க ‘வெவ்வெவ்வென்னு பழிப்புக் காட்டுதுங்கிற ரிப்போர்ட் எனக்கு இம்மீடியட்டா வேணும்.

      எஸ் சார்!என்று மலைவிழுங்கி மலைப்பாம்புபோல ஊர்ந்து வெளியேற, பொறைசிங்கம் டி.ஐ.ஜியைத் தொடர்பு கொண்டு கண்ட்ரோல் ரூமிலிருந்து கிடைத்த தகவலைக் கூறினார். டி.ஐ.ஜிக்கு ஒரே வியப்பு!

      அப்படியா? அவங்க என்னதான் பேசினாங்க?”

     வெவ்வெவ்வெ!

     வாட்? எனக்கா வெவ்வெவ்வெ? உங்களை இம்மீடியட்டா டாஸ்மாக் இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணறேன்.

      ஐயோ சார்! அதுதான் அவங்க பேசினது சார்!

      ஓ!டி.ஐ.ஜி அவரது தலையைச் சொறிகிற சத்தம் டிஜிட்டல் சவுண்டில் டோல்பி எஃபெக்டுடன் கேட்டது. “மேட்டர் ரொம்ப சீரியஸா இருக்கும் போலிருக்குதே?

      ஆமா. இதைக் கண்டுபிடிக்க நான் ஆபரேஷன் பக்கோடாவை ஆரம்பிச்சிட்டேன்.

      வெரிகுட்! இது சம்பந்தமா உங்களுக்கு பக்கோடாபலமா....ஐ மீன்...பக்கபலமா நம்ம டிபார்ட்மெண்ட் இருக்கும். ப்ரொஸீட்!

      பேசிமுடித்த பொறைசிங்கம் பிச்சைக்கண்ணுவிடம் கூறினார்.

      ஒரு வொயிட் பேப்பர் கொடுங்க!

      ஐயையோ! ராஜினாமாவா? அவசரப்பட்டு ஒரு முடிவெடுக்காதீங்க சார்! அதிகமா ஸ்பீடு போற குவாலீஸும் அதிகமா ரோஷப்படுற போலீஸும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை சார்! ப்ளீஸ் ரிஸைன் பண்ணாதீங்க சார்!

      யோவ்! ரிஸைன் பண்ணறதுக்கில்லைய்யா. அந்த கிரிமினல்களை எப்படிப் புடிக்கிறதுன்னு டிஸைன் பண்ணப்போறேன். கொடுய்யா பேப்பரை!

                பிச்சைக்கண்ணுவிடமிருந்து வாங்கிய பேப்பரில் பொறைசிங்கம் திரும்பத் திரும்ப ‘வெவ்வெவ்வெ’ ‘வெவ்வெவ்வெஎன்று எழுத ஆரம்பித்தார்.

      சார்! இதுக்கு ஓம் சக்தின்னு எழுதி மேல்மருவத்தூருக்கு அனுப்புனா பிரசாதத்தையாவது போஸ்ட்டுலே அனுப்புவாங்க.என்று தயக்கத்துடன் கூறினார் பிச்சைக்கண்ணு.

      இங்கே பாருங்கய்யா! இந்த வெவ்வெவ்வேயிலே எம்புட்டு விஷயமிருக்கு பாருங்க! இதைத் திருப்பி எழுதினாலும் வெவ்வெவ்வெ தான். அது மட்டுமில்லை. இதுலே மொத்தம் அஞ்சு எழுத்து இருக்கு. எனக்குக் கிடைச்ச தகவல் சரியா இருந்தா, அஞ்செழுத்து இருக்கிற பேருள்ள எதையோ கடத்தப்போறாங்க.

      சார், உங்க மூளையை மியூசியத்துலே வைக்கணும் சார்!
      முதல்லே தேடிக் கண்டுபிடிக்கணும்.

      என்னது?

      அதாவது இந்தக் கள்ளக்கடத்தலோட தொடர்புடையவங்களைத் தேடிக்  கண்டுபிடிக்கணும்னு சொன்னேன்.

      சிறிது நேரம் கழித்து மலைவிழுங்கி திரும்பினார்.

      சார்! நாம சந்தேகப்பட்டது சரியாப்போச்சு! குழந்தைங்க வெவ்வெவ்வென்னு தான் பழிப்புக் காட்டறாங்க.என்று மூச்சிரைக்கச் சொல்லுவதற்குள் அவரது சட்டை பட்டன்களில் இரண்டு பட்டாசு போல வெடித்துப் பறந்தது.

      ரியலீ? எல்லாக் குழந்தைகளுமா...?

      அட குழந்தைகளை விடுங்க சார்! டீச்சருங்க கூட எவ்வளவு அழகா வெவ்வெவ்வென்னு பழிப்புக் காட்டறாங்க தெரியுமா?இளித்தார் மலைவிழுங்கி.

      டூட்டியில் லூட்டியடித்து விட்டு வந்த மலைவிழுங்கியை பொறைசிங்கம் கண்டிக்க வாயெடுக்கும் முன்னர், செல்போன் அழுதது.

      கண்ட்ரோல் ரூமா? சொல்லுங்க!என்று பேசியவாறே, பேப்பரில் எதையெதையோ கிறுக்கினார் பொறைசிங்கம். பேசி முடித்தவுடன்...

      இந்தவாட்டி என்ன பேசினாங்க சார்?பிச்சைக்கண்ணு ஆர்வத்துடன் கேட்டார்.

      நவம்பர் 14-ம் தேதி கல்யாணம்னு பேசியிருக்காரு!

      கோவிந்தசாமிக்கு ஏற்கனவே ரெண்டு கல்யாணம் ஆயிருச்சே? இன்னுமா புத்தி வரலே?

      அது மட்டுமில்லை; அன்னிக்கு ஊரே அதிரப்போகுதுன்னு சொல்லியிருக்காரு! பொறைசிங்கம் சிந்தனையோடு மீசையைத் தடவினார்.

      நவம்பர் 14-க்கும் வெவ்வெவ்வெக்கும் என்ன சம்பந்தம்? மலைவிழுங்கி வாயில் ஆட்காட்டி விரலைவைத்து மோர்சிங் வாசித்தார்.

      எனக்குத் தெரியும் சார்!கூவினார் பிச்சைக்கண்ணு. “நவம்பர் 14 குழந்தைகள் தினம் சார்...குழந்தைங்க...ஸ்கூல்..வெவ்வெவ்வெ.

      ப்ரில்லியண்ட்!அலறினார் பொறைசிங்கம். “அப்போ குழந்தைகள் தினத்தன்னிக்குத்தான் ஊரையே அதிரவைக்கப்போறாரு. அஞ்சு எழுத்து...வெவ்வெவ்வெ...அது என்னவா இருக்கும்?

      ஒருவேளை ‘வெலே தொடங்குற அஞ்செழுத்து வார்த்தையா இருக்குமோ?

      வெடிகுண்டுஎன்று கொக்கரித்தார் பொறைசிங்கம். “நம்ம ஆபரேஷனுக்குப் பக்கோடான்னு பேரு வைச்ச மாதிரி, அவங்க வெடிகுண்டுக் கடத்தலுக்கு வெவ்வெவ்வென்னு பேரு வச்சிருக்காங்க. பீ அலர்ட்! உடனடியா கொய்யாமண்டி கோவிந்தசாமியோட போனை வாட்ச் பண்ணனும்.

      மீண்டும் செல்போன்; மீண்டும் கண்ட்ரோல் ரூம்.

      சார், சரக்கு ஊரு எல்லைக்கு வந்திருச்சாம் சார்! கோவிந்தசாமி பணத்தோட காத்திருக்காராம்.

      பிச்சைக்கண்ணு! மலைவிழுங்கி! கெளம்புங்க!

      ஜீப் கிளம்பியது! ஆபரேஷன் பக்கோடாவின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை உணர்ந்த பொறைசிங்கம், துப்பாக்கியில் தோட்டா இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்; அதற்கு முன்னர் துப்பாக்கி இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. ஐந்து நிமிடங்களில் ஊர் எல்லையை அடைந்தபோது, லார்ட் மவுண்ட்பேட்டனின் கொள்ளுப்பாட்டன் காலத்து லாரியொன்று நின்றிருக்க, அதன் டிரைவரோடு கொய்யாமண்டி கோவிந்தசாமி பேசிக்கொண்டிருந்தார்.

      ஹாண்ட்ஸ் அப்!பேண்ட் கிழிவதுபற்றிக் கவலைப்படாமல், ஜீப்பிலிருந்து குதித்தார் பொறைசிங்கம். “என் ஏரியாவுலே வெடிகுண்டா கடத்தறீங்க? தார்ப்பாலினை அவுத்து லாரியிலே என்ன சரக்கு இருக்குன்னு காமியுங்க!

      வெடிகுண்டா?கோவிந்தசாமி கதறினார். “இதுலே வெடிகுண்டு இருக்குன்னு யாரு சார் சொன்னாங்க?

      வெவ்வெவ்வெ!கொக்கரித்தார் பொறைசிங்கம். “உங்க ரகசியமெல்லாம் தெரிஞ்சு போச்சு. வெவ்வெவ்வெ....அஞ்செழுத்து! அது வெடிகுண்டுதான்னு கண்டுபிடிச்சிட்டோம்.

      அது வெடிகுண்டில்லை சார்!மண்டியிட்டான் லாரி டிரைவர். “வெங்காயம்.

      என்னது? வெங்காயமா?

      அட! வெங்காயமும் அஞ்செழுத்துத்தான்!என்று கிசுகிசுத்தார் பிச்சைக்கண்ணு.

      இந்த பொறைசிங்கத்தை ஏமாத்த முடியாது! நவம்பர் 14ம் தேதி என்ன நடக்கப்போகுது?

      என் பொண்ணுக்கு நவம்பர் 14-ம் தேதி கல்யாணம் சார்!

      யோவ்!எரிந்து விழுந்தார் பொறைசிங்கம். “கல்யாணத்துக்கும் வெங்காயத்துக்கும் என்ன சம்பந்தம்?

      இருக்கு சார்!இடைமறித்தார் மலைவிழுங்கி. “ரெண்டாலேயும் கண்ணுலே தண்ணி தண்ணியா வரும்.

      ஷட் அப்!என்று கடிந்துகொண்ட பொறைசிங்கம், “யோவ் கோவிந்தசாமி! நவம்பர்லே நடக்கப்போற கல்யாணத்துக்கு இப்பவே எதுக்குய்யா வெங்காயத்தைக் கடத்திட்டு வர்றே?

      மன்னிச்சுக்குங்க ஐயா! எல்லாரும் பத்திரிகையோட ஆப்பிள், ஆரஞ்சுப்பழமெல்லாம் கொடுத்து அழைப்பாங்க. இன்னி தேதிக்கு வெங்காயம் தான் ஸ்டேட்டஸ் சிம்பல். அதான் கொஞ்சம் ஆடம்பரமா இருக்கட்டுமேன்னு எல்லாருக்கும் வெங்காயத்தோட பத்திரிகை வைக்கலாம்னு பார்த்தேன் சார்! கோவிந்தசாமி பலப்பத்தைத் தொலைத்தப் பள்ளிச்சிறுவன் போல விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார்.

      அழாதேய்யா! வெங்காயம் வாங்கறதை ஒழுங்காப் பண்ண வேண்டியதுதானே? என்னமோ ராணுவ ரகசியத்தைக் கடத்தறமாதிரி எதுக்குய்யா ரகசிய வார்த்தையெல்லாம்?“

       “அதையேன் சார் கேக்கறீங்க? நிச்சயதார்த்தத்துக்கு பெல்லாரியிலேருந்து அஞ்சு மூட்டை வெங்காயம் வரவழைச்சேன் சார். இன்னிக்கு வெங்காயம் விக்குற விலைதான் தெரியுமே? வர்ற வழியிலே எல்லா செக்-போஸ்ட்டுலேயும் ஆளுக்கு ரெண்டு கிலோன்னு பிடுங்கிட்டுத்தான் விட்டாங்க!“ கோவிந்தசாமி அழுவதைப் பார்த்து பொறைசிங்கத்தின் இதயம் உருகி அவரது வயிற்றுக்குள் வடிய ஆரம்பித்தது.

       “அழாதீங்க! உங்களாலே எவ்வளவு நேரம் விரயமாயிடுச்சு? வெங்காய லாரியை வெடிகுண்டு லாரின்னு நினைச்சு சேஸிங்கெல்லாம் பண்ணினது வேஸ்டாயிடுச்சே! போங்கய்யா!சலிப்புடன் ஜீப்பில் ஏறினார் பொறைசிங்கம்.

      எந்த நேரத்துலே ஆபரேஷன் பக்கோடான்னு பேரு வைச்சீங்களோ, இப்படி நமுத்துப் போயிருச்சே சார்?

      வண்டியை விடுய்யா! போயி அந்தக் கெளவி கேஸையாவது கவனிக்கலாம்.

      விரக்தியுடன் அபேஸ்புரம் காவல் நிலையத்துக்கு அவர்கள் திரும்பியபோது, அந்தக் கிழவி ஓவென்று அழுது கொண்டிருந்தாள்.

      ஐயையோ! களவாணிப்பயலுவ எல்லாத்தையும் தூக்கிட்டுப் போயிட்டானே? இந்த அநியாயத்தைக் கேட்க எந்த டிவிக்காரங்களும் இல்லையா?

                பெரியாத்தா! எதுக்கு ஒப்பாரி வைக்கிறே? என்னல்லாம் களவுபோச்சு?

      ஐயோ...பத்து பவுனு தங்கம்..மூணு கிலோ வெங்காயம்...எல்லாம் போச்சே....ஐயையோ!

      வெங்காயமா?பொறைசிங்கத்துக்குத் தலைசுற்றியது. “வெ...வெவ்...வெவ்வெ...வெவ்வெவ்வெ....!

**********
இந்த டிரெயிலரைப் பாருங்கள்!


விரைவில் வெள்ளித்திரையில்......