Tuesday, February 25, 2014

அரசியல்லே இதெல்லாம்…...

களக்காடு கருமுத்து:

என் இனிய சேட்டை டிவி நேயர்களே!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘விட்டேனா பார்நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! அண்மையில் அமெரிக்காவின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யம் நாதெல்லா நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரிக்காய் பெரியசாமியும், பா.ஜ.கவைச் சேர்ந்த இம்சை இளவரசியும் நமது அரங்குக்கு வந்திருக்கிறார்கள். அண்மையில், தண்டையார்பேட்டையில் வெண்டைக்காய் பேர ஊழலை எதிர்த்து தோப்புக்கரணப் போராட்டத்தில் ஈடுபட்ட, ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் கட்டப்பஞ்சாயத்து கண்ணப்பனும் வந்திருக்கிறார். அனைவருக்கும் வணக்கம்!

(அனைவரும் வணக்கம் சொல்கிறார்கள்)

க.கருமுத்து:

திரு.பே.பெரியசாமி! உலகத்தின் சிறந்த நிறுவனமான மைக்ரோஸாஃப்ட்டில் ஒரு இந்தியர் உயர்பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்தென்ன?

பே.பெரியசாமி

நாங்க சொல்றது இருக்கட்டும்! அமெரிக்கா போறதுக்கு விசாவே கிடைக்காதவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க!

இம்சை இளவரசி

எங்களைப் பார்க்க அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரே குஜராத்துக்கு வர்றாங்க! அதைச் சொல்லுங்க சார்!

க.கருமுத்து

இதுலே எதுக்கு அரசியலைக் கொண்டு வர்றீங்க? சத்யத்தைப் பற்றி மட்டுமே பேசுவோமே?

இம்சை இளவரசி

காங்கிரஸுக்கும் சத்தியத்துக்கும் ரொம்ப தூரம் சார்!

பே.பெரியசாமி

தவறான தகவல்! எங்க சத்தியமூர்த்தி பவனிலேருந்து சத்யம் காம்ப்ளெக்ஸுக்கு அஞ்சு நிமிசத்துலே போயிடலாம். உங்களோட பொய்ப்பிரச்சாரத்துக்கு ஒரு அளவேயில்லையா?

கட்டப்பஞ்சாயத்து கண்ணப்பன்

இவங்க சண்டை போடறாங்கன்னு தப்பா நினைக்காதீங்க சார்! நான் இந்த புரோகிராமிலே பேசக்கூடாதுன்னு சண்டை போடுறா மாதிரி சும்மா பாவ்லா காட்டறாங்க! இவங்க நடிப்பை மக்கள் நம்ப மாட்டாங்க! இவங்க தலைகீழா நின்னாலும் எங்களை மாதிரி யாரும் நடிக்க முடியாது.

க.கருமுத்து

இருங்க சார்! எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டிருக்கோம்.  நடுவுலே வந்து ஜோக்கடிச்சிட்டிருக்கீங்களே! அவங்களைப் பேச விடுங்க!

பே.பெரியசாமி

சகோதரி இம்சை குறுக்கிடுவதன் காரணம் புரிகிறது. என்னவோ இந்தியாவில் குஜராத்தில் மட்டும்தான் வளர்ச்சி என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தைப் பரப்புகிறவர்கள் அல்லவா? அந்த குஜராத்திலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல், எங்களால் உருவாக்கப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த சத்யம் நாதெல்லாவை சகோதரர் பில் கேட்ஸ் தேர்ந்தெடுத்திருக்கிறார் பார்த்தீர்களா?

இம்சை இளவரசி

சும்மாயிருங்க ஸார்! உங்க மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரத்தைப் பத்திப் பேசுவோமா? இந்தியாவுலேயே குஜராத்துலேதான் 8,76,543 இரும்புக்கதவுங்க இருக்குன்னு தெளிவா சொல்லியிருக்குது. இவ்வளவு grill gates இருக்கும்போது ஒரு பில் கேட்ஸைப் பத்தி நாங்க ஏன் கவலைப்படணும்?

க.ப.கண்ணப்பன்

குப்புற விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலேன்னு சொல்றாங்க!

இம்சை இளவரசி

இல்லை. எனக்கு மீசையே இல்லேன்னு சொல்றேன்!

பே.பெரியசாமி

அமெரிக்காவுக்கே காங்கிரஸ் ஆளும் ஹைதராபாத்தில்தான் திறமையான ஆட்கள் கிடைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அஹமதாபாத்திலோ, அலஹாபாத்திலோ அல்லது பகாளாபாத்திலோ இன்னொரு சத்யம் நாதெல்லா இல்லையென்பதுதானே பொருள்! எங்களது பத்தாண்டு ஐ.மு.கூ ஆட்சியில் நாட்டில் அத்தனை வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

இம்சை இளவரசி

பொய் சொல்றாங்க கருமுத்து! ஆதாரத்தோட விவாதிக்கத் தயாரா?

பே.பெரியசாமி

இப்படிச் சொல்லுவாங்கன்னுதான் நான் புள்ளி விபரத்தோட வந்திருக்கிறேன். வாஜ்பாய் ஆட்சியிலே என் பேரன் எல்.கே.ஜி.தான் படிச்சிட்டிருந்தான். இப்போ அவன் காலேஜ்லே படிக்கிறான். இது வளர்ச்சி இல்லையா?

இம்சை இளவரசி

இவர் சொல்ற புள்ளிவிபரத்தை நம்பாதீங்க! வாஜ்பாய் ஆட்சியிலே என் பாட்டி உசிரோட இருந்தாங்க. மன்மோகன் சிங் ஆட்சி வந்ததும் 98 வயசுலே அல்பாயுசுலே செத்துப்போயிட்டாங்க! இதுவா வளர்ச்சி? வளர்ச்சின்னாலே எங்க குஜராத் மாடல்தான்!

க.கருமுத்து

நிகழ்ச்சிக்குத் தொடர்பில்லேன்னாலும் ஒரு கேள்வி கேட்கலாமா இம்சை? அடிக்கடி நீங்க குஜராத் மாடல், குஜராத் மாடல்னு சொல்றீங்களே? அப்படீன்னா என்ன?

பே.பெரியசாமி

நல்லாக் கேளுங்க! இன்னிக்குக் கூட நான் டிவியிலே வர்ற எல்லா விளம்பரத்தையும் பார்த்தேன். அதுலே வர்ற பொண்ணுங்கல்லாம் பஞ்சாபி மாடலும், பெங்காளி மாடலும்தான். குஜராத்தி மாடல் ஒருத்திகூட கண்ணுலே தென்படலை.

க.கருமுத்து

விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஒரு கமர்ஷியல் ப்ரேக் விடலாமா?
கட்டப்பஞ்சாயத்து கண்ணப்பன்

ஏன் சார் ஆம் ஆத்மி பார்ட்டியோட கருத்தையே கேட்க மாட்டேங்கறீங்க?

க.கருமுத்து

ஐயையோ! உங்க கருத்தைத்தான் நான் கமர்ஷியல் ப்ரேக்னு சொன்னேன். இப்பல்லாம் நீங்கதானே எல்லா டிவி சேனலுக்கும் நல்ல எண்டெர்டெயின்மெண்ட்? சொல்லுங்க!

க.ப.கண்ணப்பன்

இந்த மைக்ரோஸாஃப்ட் விஷயத்திலே பெரிய ஊழல் நடந்திருக்கு! அமெரிக்காவின் தொழில் அதிபர் வாறன் பஃபெட்டோட பணம் விளையாடியிருக்கு! இது விஷயமா எங்க பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டுலே கேஸ் போட்டு, பில் கேட்ஸ் மேலே எஃப்.ஐ.ஆர் போட்டு, ஒபாமாவுக்கு அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கப்போறோம்!

இம்சை இளவரசி

இவங்க தலைவர் கேஜ்ரிவாலுக்கு பில் கேட்ஸ் வேலை கொடுக்கலேன்னு சொல்றாங்க! அர்விந்த் கேஜ்ரிவாலையும் பில் கேட்ஸ் இண்டெர்வியூவுக்குக் கூப்பிட்டிருந்ததாகத் தகவல் வெளிவந்திருக்கு. LAN-ன்னா என்னான்னு பில் கேட்ஸ் கேட்டதுக்கு, LOCAL AREA NETWORK-ன்னு சொல்றதுக்குப் பதிலா, LOKPAL AREA NETWORK-ன்னு சொன்னதாலே அவருக்கு அந்த வேலை கிடைக்கலேன்னு சொல்லப்படுது!

பே.பெரியசாமி

சகோதரி தவறான தகவலை அளித்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார். உண்மையிலே அர்விந்த் கேஜ்ரிவாலை இண்டெர்வியூவுக்கு அழைக்கவேயில்லை. காரணம், அவர் அப்ளிகேஷனை அனுப்புவதற்குப் பதிலாக எடுத்த எடுப்பிலேயே ராஜினாமாவை அனுப்பி விட்டதாகத்தான் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

க.ப.கண்ணப்பன்

அப்பட்டமான பொய்! வாய்கூசாமல் பொய் சொல்லுகிறவர்கள் எல்லாம் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகிவிட முடியாது. வரவிருக்கிற நாடாளுமன்றத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் டெபாஸிட்டை இழந்தாலும் கேஜ்ரிவால் பிரதமராகி வாஷிங்டனிலும் லண்டனிலும் டிம்பக்டூவிலும் தர்ணாவில் அமர்ந்து மக்களுக்குச் சேவையாற்றுவார்.

க.கருமுத்து

கண்ணப்பன் சார்! அப்படியென்றால் உங்கள் கேஜ்ரிவால் மைக்ரோஸாஃப்ட் வேலைக்கு விண்ணப்பமே போடவில்லையா?

க.ப.கண்ணப்பன்

இல்லவே இல்லை! எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி பிரதமர் மன்மோகன்சிங் தான் பில் கேட்ஸுடன் போனில் பேசி வேலை கேட்டிருக்கிறார். ‘MS Officeஎன்றால் என்னவென்று பில் கேட்ஸ் கேட்டதற்கு ‘Madam Sonia Officeஎன்று மன்மோகன்சிங் பதிலளித்திருக்கிறார். இந்த டெலிபோன் ஒலிநாடாவை விரைவில் எங்கள் தலைவர் வெளியிடுவார்.

க.கருமுத்து

அப்படியென்றால் நரேந்திர மோடி மட்டும்தான் இந்த வேலைக்கு முயற்சி செய்யவில்லையா?

பே.பெரியசாமி

யார் சொன்னார்கள்? பில் கேட்ஸுக்கு மோடிதான் முதலில் அப்ளிகேஷன் அனுப்பியிருக்கிறார். ஆனால், MICROSOFT என்ற பெயரை மாற்றி MICRO-HARD என்று வைக்க வேண்டும் என்று கேட்டதால்தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று திக்விஜய்சிங் கண்டுபிடித்திருக்கிறார்.

இம்சை இளவரசி

கருமுத்து! இவர்கள் இருவரும் பொய் சொல்றாங்க! ராகுல் காந்திக்கு இந்த வேலை ஏன் கிடைக்கவில்லை என்று வெளிப்படையாக உண்மையை ஒப்புக் கொள்ளத்தயாரா?

க.கருமுத்து

அட ராமா! இது வேறயா?

இம்சை இளவரசி

கேளுங்க! மைக்ரோஸாஃப்ட் கம்பெனி வளர்ச்சிக்காக என்ன செய்வீங்கன்னு கேட்டா, எல்லா சிஸ்டத்தையும் மாத்தணும்னு சொல்லியிருக்காரு! பாவம் பில் கேட்ஸ், இப்பத்தான் நிறைய காசுபோட்டு ஏகப்பட்ட புது சிஸ்டம் வாங்கி இன்ஸ்டால் பண்ணியிருக்காரு! எல்லாத்தையும் மாத்தணும்னா நிறைய செலவாகும்னுதான் ராகுலுக்கு வேலை கிடையாதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு!

க.ப.கண்ணப்பன்

எங்க தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் அம்பாலா தொகுதியிலே ஜெயிச்சு அமெரிக்காவுக்கு ஜனாதிபதியானா மைக்ரோஸாஃப்ட் கம்பனியிலே யார் வேண்ணாலும் உள்ளே போய் அவங்களுக்குத் தேவைப்படுறா மாதிரி ஸாஃப்ட்வேர் பண்ணி எடுத்திட்டுப் போலாம்னு சட்டம் கொண்டு வருவோம். இது குறித்து கூடிய சீக்கிரம் எங்க கேஜ்ரிவால் ஃபேஸ்புக்குலே அறிக்கை வெளியிடுவார்.

இம்சை இளவரசி

வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு பேசறதே இந்த ஆம் ஆத்மி பார்ட்டிக்குப் பொழைப்பாப் போச்சு!

க.ப.கண்ணப்பன்

சார்! ஆம் ஆத்மி பார்ட்டியை ‘மாங்காய் மடையன்ன்னு சொல்றாங்க. இத நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.

கருமுத்து

அவங்க பழமொழிதானே சொன்னாங்க!

க.ப.கண்ணப்பன்

இல்லை சார்! ‘ஆம்ன்னா ஹிந்தியிலே மாங்காய்ன்னு இன்னொரு அர்த்தமிருக்கு! தெரியுமா?

இம்சை இளவரசி

உங்களைப் போயி யாராவது மாங்காய்ன்னு சொல்லுவாங்களா? மாங்காயை வைச்சு ஊறுகாயாவது போடலாம்.

பே.பெரியசாமி

இதுலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னான்னா, சகோதரி மாங்காய்ன்னு சொன்னதை ஒரு பேச்சுக்கு ஒப்புக்கொண்டாலும், இவர் ஏன் கூடவே மடையனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்?


க.ப.கண்ணப்பன்

எங்க கட்சியிலே நாங்க யாரை வேண்ணாச் சேர்த்துக்குவோம். அதைப் பத்திப் பேச காங்கிரஸுக்கோ, பா.ஜ.கவுக்கோ அருகதை கிடையாது.

கருமுத்து

ஐயோ! கண்ணப்பன் சார்! உங்களை யாருமே மாங்காய் மடையன்னு சொல்லலை சார்!

க.ப.கண்ணப்பன்

இவங்க சொல்லாட்டி மக்களுக்குத் தெரியாதா? சந்தேகமிருந்தா தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திக் கேளுங்க!  

க.கருமுத்து

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கா முடிஞ்சிடுச்சே! சரி, வந்ததுக்கு இறுதியாக உங்களது கருத்தைச் சொல்லுங்க! இந்த சத்யம் நாதெல்லா மைக்ரோஸாஃப்ட்டுலே சேர்ந்ததைப் பத்தி நீங்க என்னதான் நினைக்கறீங்க?

பே.பெரியசாமி

அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் 2014-ல் எங்கள் ஆட்சி அமைந்தால், இந்தியாவிலிருந்து பல சத்யம் நாதெல்லாக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டுவார்கள்.

இம்சை இளவரசி

சும்மாயிருங்க சார்! மீண்டும் உங்க ஆட்சி நடந்தா இங்கேயிருக்கிற புத்திசாலிகள் எல்லாம் வேறே நாட்டுக்குப் போய்த்தான் பொழப்பு நடத்தணும். எங்க ஆட்சி வந்தா இந்தியா அமெரிக்காவாயிடும். காங்கிரஸுக்கு 60 வருஷம் வாய்ப்பு கொடுத்தீங்க. எங்களுக்கு 60 மாசம் வாய்ப்புக் கொடுங்க போதும்!

க.ப.கண்ணப்பன்

எங்களுக்கு 60 மாசமெல்லாம் வேண்டாம். 60 நாளே போதும். அதுவே தாக்குப்பிடிக்கிறது கஷ்டம்.

க.கருமுத்து

நேயர்களே! சத்யம் நதெல்லா குறித்து பல சுவையான தகவல்களை விவாதித்தோம். மேலும் ஒரு விவாதத்தில் சந்திக்கும்வரை, சேட்டை டிவியின் சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறோம்.

 **************************************************