Friday, July 30, 2010

ஜப்பான் சொன்னா கேட்டுக்கணும்!

"கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது,"ன்னு ஒரு பழமொழி இருக்குது. இந்த ஜப்பான்காரங்களை எடுத்துக்கோங்க! அவங்க தான் சின்ன சைஸுன்னா, அவங்க தயாரிக்கிற பொருள் அதை விட சிறுசா இருக்குது.

இப்படித்தான் ஒரு ஜப்பான்காரரு, ஒரு ஹோல்டாலை மாட்டிக்கினு அமெரிக்கா போனாரு. அங்கே ஒரு அமெரிக்கரு இவர்கிட்டே எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைக் காட்டி, "இதோ பார்த்தியா நைனா? இதுக்குப் பேருதான் எம்பயர் ஸ்டேட் பில்டிங்! இது மாதிரி ஒண்ணை உங்களாலே கட்ட முடியுமா?"ன்னு கேட்டாராம். உடனே இந்த ஜப்பான்காரரு ஹோல்டாலைத் தொறந்து விடுவிடுன்னு என்னத்தையோ எடுத்து நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ அல்லாத்தையும் போட்டு முறுக்கினா...! பாவி மனுசன், ஹோல்டாலுக்குள்ளே ஒரு பில்டிங்கையே கொண்டு வந்திருக்காருன்னு அமெரிக்காக்காரனுக்கு அப்போதான் தெரிஞ்சுதாம். அதுவும் எப்படி? எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட உசரமா ஒரு கட்டிடத்தை மடக்கி, சுருட்டி ஹோல்டாலுக்குள்ளே குள்ளன் கொணாந்திருக்காரு!

அத்தெல்லாம் சரி, இப்போ எதுக்கு ஜப்பான் புராணமுன்னு கேட்கறீங்களா? கேளுங்கய்யா இந்தக் கொடுமையை..! ஜப்பான் நாட்டு பிரதமர் நவோட்டா கான் பத்தி அவரோட மனைவி நொபூகாகான் ஒரு புத்தகம் எழுதியிருக்காங்களாம். பிரதமர் பதவிக்கு எனது கணவர் பொருத்தமானவர் அல்ல-ஜப்பான் பிரமதரின் மனைவி

"எங்க வூட்டுக்காரரு ஏதோ குருட்டாம்போக்குலே பிரதமராயிட்டாரு! இந்த மனிசனுக்கு இதெல்லாம் தோதுப்பட்டு வராது,"ன்னு பொட்டுலே அடிச்சாப்புலே புத்தகத்துலே சொல்லிப்புட்டாரு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையலே பார்த்தீங்களா?

பிரதம மந்திரி பாவம், நொந்து போயிட்டாரு! என்ன இருந்தாலும் புருசனை இப்படியா பொதுவுலே போட்டுக் கொடுக்குறது?

"இன்னும் என் பொஞ்சாதி உள்ளாற என்னென்னத்தை எழுதித்தொலைச்சிருக்குதோ, படிக்கவே பயமாயிருக்கு மக்கா,"ன்னு புலம்பிட்டுத் திரியுறாராம்.

(யாருய்யா அது,குத்துங்க எசமான், குத்துங்க; இந்தப் பொம்பளைங்களே இப்புடித்தான்,’ன்னு சவுண்டு விடுறது?)

இருந்தாலும் நமக்கெல்லாம் ஜப்பான் மோகம் கொஞ்சம் அதிகமாச்சே! இதைக் கேள்விப்பட்டவுடனே இங்கேயும் அந்த மாதிரி ஏதாவது டகால்டி வேலை பண்ணனும்முன்னு தோணுமா தோணாதா....?

ஆனா, நம்ம ஊருலே இப்படியெல்லாம் புத்தகம் எழுத முடியுமா? பொங்கி எழுந்திர மாட்டாங்க? அப்படியே யாராச்சும் எழுதினாலும் நாமதான் காசுகொடுத்து வாங்கிப் படிக்கப்போறமா? அப்புறம், தலீவருங்களோட மனைவிங்க எழுதவா போறாங்க?

சரி, நாமளே நம்ம தலீவருங்களைப் பத்தி ஆளுக்கு ஒண்ணா புத்தகம் போட்டா என்ன? சினிமாப் பெயரிலே புத்தகத்துக்குத் தலைப்பு வச்சா மெரீனாவுலே மிளகா பஜ்ஜி விக்குறா மாதிரி வித்துப்புடாது...? இதோ.....!

யார் புத்தகம் எழுதணுமுன்னு நினைச்சாலும் கீழே கொடுத்திருக்கிற பட்டியலிலேருந்து எடுத்துக்கோங்க! ஆனா, இதை நான் தான் கொடுத்தேன்னு மட்டும் வேறே யார் கிட்டேயும் சொல்லிராதீங்க? ஓ.கே??

என்ஜாய்! :-)

1. பிரதம மந்திரி மன்மோகன் சிங்-அன்னையின் ஆணை

2. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ-வரவு எட்டணா; செலவு பத்தணா

3. உணவுத்துறை-ஷரத் பவார்-லண்டன் ட்ரீம்ஸ் (இந்தி)

4. பாதுகாப்பு-ஏ.கே.ஆன்டனி-வேட்டி மடிச்சுக் கட்டு

5. உள்துறை-மாண்புமிகு.ப.சிதம்பரம்-யாருக்கு யார் காவல்?

6. சட்டத்துறை-வீரப்பமொய்லி-இரும்புத்திரை

7. இரயில்வே-மம்தா பேனர்ஜீ-கிழக்கே போகும் ரயில்

8. கப்பல்துறை-ஜி.கே.வாசன்-நங்கூரம்

9. ஜவுளித்துறை -தயாநிதி மாறன்-ஆசை அண்ணா அருமைத் தம்பி

10.தொலைதொடர்புத்துறை -ஏ.ராசா-பலே பாண்டியா

11.பெட்ரோலியத்துறை -முரளி தியோரா-பட்டாக்கத்தி பைரவன்

12.தகவல்துறை-அம்பிகா சோனி-கேஸ்லைட் மங்கம்மா

13.மனிதவளத்துறை-கபில் சிபல்-ஸ்கூல் மாஸ்டர்

14. சுற்றுச்சூழல்-ஜெயராம் ரமேஷ்-திக்குத் தெரியாத காட்டில்

15. ரசாயனத்துறை- மு.க.அழகிரி-ராஜா வீட்டுப்பிள்ளை

16.வெளியுறவுத்துறை எஸ்.எம்.கிருஷ்ணா-ஊமை விழிகள்

17. தமிழக முதல்வர். கலைஞர்.மு.கருணாநிதி-குடும்பத்தலைவன்

18. உ.பி.முதல்வர்.செல்வி.மாயாவதி-நான் கடவுள்

16.ஜே.டி.லாலு பிரசாத் யாதவ்-கோமாதா என் குலமாதா

17. முன்னாள் கவர்னர். திரு.என்.டி.திவாரி-ஓடி விளையாடு தாத்தா

18.அ.தி.மு.க.பொதுச்செயலாளர்.செல்வி.ஜெயலலிதா-மலைநாட்டு மங்கை

19. பா.ஜ.க.தலைவர். எல்.கே.அத்வானி-வாழ்வே மாயம்

20. எம்.என்.எஸ்.தலைவர். ராஜ் தாக்கரே-நான் பேச நினைப்பதெல்லாம்.

21. சிவ்சேனா தலைவர்.பால் தாக்கரே-காசி யாத்திரை

22. பா.ம.க.நிறுவனர். டாக்டர்.ராமதாஸ்-சுகம் எங்கே?

23. டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்-நல்லதுக்குக் காலமில்லை

24. ம.தி.மு.க.தலைவர் வை.கோ-யாருக்காக அழுதான்?

25.கம்யூனிஸ்ட் தலைவர்.தா.பாண்டியன்-மிருதங்கச் சக்கரவர்த்தி

26. நடிகர்.சரத்குமார்(கட்சி பேரு மறந்திட்டேன்!)-அழைத்தால் வருவேன்

27. பா.ஜ.க.மாநிலச்செயலாளர்.இல.கணேசன்-ஒற்றையடிப் பாதையிலே

28.மேற்குவங்க முதல்வர். புத்ததேவ் பட்டாச்சார்யா-வறுமையின் நிறம் சிவப்பு

29. நடிகை விஜயசாந்தி-சவுக்கடி சந்திரகாந்தா

30. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்-ஆளுக்கொரு ஆசை

31. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்-வாய்க்கொழுப்பு

32. இந்தியக் குடிமகன்-வாயில்லாப் பூச்சி


கடைசியாக......

33. சேட்டைக்காரன் -நாளை உனது நாள்

(ஆட்டோ அல்லது உளவுத்துறை வருமில்லே!)

Wednesday, July 28, 2010

பதிவுலகில் நான் ஒரு ?????

இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்தவர் நண்பர் முகிலன்! இரண்டாவது முறையாக என்னை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். (இந்த ஊரு இன்னுமா என்னை நம்புது?)

"ஒன்றை நினைக்கின், அது ஒழிந்திட்டு, ஒன்று ஆகும்
அன்றி அது வரினும், வந்து எய்தும்; ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்." -ஔவையார்

இதற்கு "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் சுருக்கமாகச் சொன்ன உரை:

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது."

ஒரு மனிதன் வாழ்க்கையிலே கேட்கும் மிகச் சிறந்த கேள்வி, அவன் தன்னிடமே கேட்ட முதல் கேள்விதான்,’ என்று ஒரு தலைசிறந்த அறிஞர் சொல்லியிருக்கிறார். (அது யாருன்னு கேட்காதீங்க, எனக்கு புகழ்ச்சியே பிடிக்காது!)

இந்த வலையுலக வாழ்க்கையில் என்ன சாதித்து விட்டாய்? என்ற கேள்வியை என்னை நான் கேட்டதே அதிகம். அந்தக் கேள்விக்கு விடை தெரியாமல், தூக்கக்கலக்கத்தில் காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக ரவையைப் போட்டுக் குடித்தவனைப் போல அசடுவழிந்து, ஏறக்குறைய ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, நான் மீண்டும் எனது வலைப்பதிவை ஒட்டடையடிக்க வந்தபோதுதான் இது போன்ற பல பதிவுகள் உலாவந்து கொண்டிருந்தன!

"வலையுலகத்தில் நான் யார்?" இது தான் தலைப்பு!

சுயபரிசோதனை செய்ய இப்படியும் ஒரு வழியிருக்கா? தவற விட்டுட்டோமென்னு உச்சுக்கொட்டிக் கொண்டிருக்கையில், முகிலன் ஒரு இடுகைபோட்டு எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

அவருக்கு எனது பணிவான, உளமார்ந்த நன்றிகள்!

கேள்வி-பதில் படலம் ...’ரம்பம்!’

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சேட்டைக்காரன்

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயரில்லை! இப்படியொரு பெயரை திம்மஞ்சேரலா டுமீல் ரெட்டி தனது டப்பிங் படத்துக்கே வைக்கமாட்டாரே!

வேட்டைக்காரன்,’ படத்தைப் பார்த்துவிட்டு, விளக்கெண்ணையை நக்கிய வெள்ளெலி மாதிரி வெளிவந்தபோது ஏற்பட்ட வெறியின் வெளிப்பாடே இது. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி......

கணினி இருந்தது; இணையம் இருந்தது; தமிழ் தட்டச்சு மென்பொருளோ தண்ணீர்பட்ட பாடாய்க் கிடைக்கிறது. காசா பணமா? ’எங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு,’ங்குறா மாதிரி வந்திட்டேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணுமே பண்ணலீங்க!

பெரியவங்களாப் பார்த்து கைகொடுத்துத் தூக்கி விட்டுட்டாங்க!

சகோதரி அநன்யா மகாதேவன் தான் தமிழ்மணம், தமிழீஷ் போய் பதிவு பண்ணச் சொன்னாங்க!

அருமை நண்பர் பிரபாகர் என்னைப்பற்றி ’வலைச்சரம்’ இடுகையில் அறிமுகப்படுத்தினாரு! அதைத் தொடர்ந்து.....

ஜெட்லீ,

ஸ்டார்ஜன்,

அக்பர்.......

என்று பல அனுபவசாலிகள் என்னைப் பற்றி அவரவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும்போது குறிப்பிட ஆரம்பிச்சாங்க!

பொதுவா தெரிஞ்சவங்க என்னை வெளங்காமூஞ்சி© -ன்னு சொல்லுவாங்க! (© இந்தப் பெயரிலே யாராச்சும் வலைப்பதிவு ஆரம்பிக்காம இருக்கணுமே!). ஆனால், வலையுலகைப் பொறுத்தமட்டில் மேற்கூறிய பதிவர்களின் வழிநடத்துதல், ஆதரவு எல்லாவற்றையும் மேலாக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் ஒரு அம்மாவின் தொடரும் அன்பு, நான் வணங்கும் சென்னை காளிகாம்பாளின் கருணை....எவ்வளவு காரணங்கள்!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

முதலில் எழுதியதுண்டு; இப்போது இல்லை! காரணம், எனது தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டி, எனக்கு நானே வக்கீலாகிவிடும் வாய்ப்புகள் அதிகம்! மேலும் ஒரு மெல்லிய நூலில் கட்டுண்டு கிடக்கும் முரண்பாடுகளின் மூட்டை நான்! எதையோ எழுதி யாரோ வாசித்து என்காரணமாய் அவர் தனது பலவீனங்களோடு சமரசம் செய்து கொள்வதற்கு ஏன் வழி செய்ய வேண்டும்?

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

வலைப்பதிவு மூலம் சம்பாதிக்க முடியுமா? மெய்யாலுமேவா?

எனக்குத் தெரிந்த சம்பாத்தியம்.........

கணக்கில் இலாபம்:-

பொதுவாக சொல்வதென்றால், எத்தனையோ சகபதிவர்களின் அன்பும், நட்பும்.....

குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ’வலைச்சரம்’ ஆசிரியராக ஒரு வாரம் இருந்தது. பல பதிவர்களை அறிமுகம் செய்ய முடிந்தது. நான் யார், எனது முகவரி என்ன, நல்லவனா கெட்டவனா என்று கூடத் தெரியாத நிலையில் பெருந்தன்மையோடு அன்புக்கும் மரியாதைக்குமுரிய சீனா ஐயா அவர்கள் எனக்களித்த வாய்ப்பினை அவரது ஆசியாகவே இன்றளவிலும் கருதுகிறேன்.

கணக்கில் நஷ்டம்:-

சில சூழல்களில் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டதால் ஏற்பட்ட விரோதம். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பொழுதுபோக்குக்காகத் தான் எழுத ஆரம்பித்தேன்! ஆனால், என்னை பலர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது இன்னும் விளங்காத வினோதம்!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

குறுஞ்செய்தி, நகைச்சுவைத் துணுக்குகள், கேலிச்சித்திரங்கள் என்று முழுக்க முழுக்க நகைச்சுவையாய் ஒரு வலைப்பதிவு வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இப்போதைக்கு ’சேட்டைக்காரன்’ மட்டுமே!

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சில சர்ச்சைக்குரிய பதிவுகளைப் படித்து சில சமயங்களில் கோபம் ஏற்படுவதுண்டு. அந்தப் பட்டியலை வெளியிட இன்னொரு வலைப்பதிவுதான் ஆரம்பித்தாக வேண்டும்.

பொறாமை!(பெரிய எழுத்தில் படிக்கவும்!) பல வலைப்பதிவர்கள் மீதுண்டு! தமிழறிவு, சொல்வீச்சு, கருத்துக்களின் ஆழம், நகைச்சுவை உணர்வு, துணிச்சல் என்று பல அரிய குணங்களைக் கொண்டிருக்கிற பதிவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ’இவங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சரக்கைக் கொடுத்தாய் இறைவா?’ என்று பொறாமைப் படுவது இப்போதும் உண்டு. இந்தப் பட்டியலும் மீக நீளமானது.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

சகோதரி. முத்துலெட்சுமி!

அட, நம்ம இடுகைக்கு கருத்தா?’ என்று போய்ப்பார்த்தேன். அவரது பெயரைச் சொடுக்கி அவரது வலைப்பதிவைப் பார்த்ததும் நான் வாய்பிளந்தபோது, நல்லவேளையாக யாரும் அருகில் கால்பந்து ஆடவில்லை! இல்லாவிட்டால் என் வாய்க்குள்ளே கோல் போட்டு கப்பு வாங்கியிருப்பார்கள்.

நண்பர். கந்தவேல் ராஜன்-எனது வலைப்பதிவை பின்தொடர்ந்த முதல் நண்பர்! கைராசிக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும்! கணினி சார்ந்த தொழிலை மேற்கொண்டிருப்பவர். கூகிள் குழுமங்களில் பெரிதும் மதிக்கப்படுபவர். எனக்கு அவர் உற்சாகமூட்டிக் கொண்டிருப்பது இன்றளவிலும் தொடர்கிறது.

10) கடைசியாக...........விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஒரே வாக்கியத்தில்.....நான் ஒரு மோசமான முன்னுதாரணம்!

அடுத்தது இதைத் தொடரப் போகிறவர்கள்........!

1. சகோதரி முத்துலெட்சுமி
2. நண்பர் அஹமது எர்ஷாத்
3. சகோதரி அஷீதா
4. நண்பர் இரா.எட்வின்
5. நண்பர் நான் ஆதவன்

அம்புட்டுத்தேன்! மோர் ஊத்தியாச்சு! :-)

Tuesday, July 27, 2010

இன்னும் ஒரு கவிதை!


குதித்துச்செல்லும் நதி
குளிரடிக்கும் காற்று!
குவிந்து படர்ந்த மேகம்
குதூகலமான வாழ்க்கை!

இரவுபெய்த மழையில்
ஈரமான மரங்கள்!
இலைகள் சொட்டிய நீருடன்
மரம் வடித்த கண்ணீர்....!

நதியின் ஓட்டமும்
காற்றின் கதகதப்பும்
மேகத்தின் குவியலும்
வாழ்க்கையின் சிரிப்பும்
என்றோ ஒருநாள்
எங்கோ நிற்கும்!

இதோ...

ஒவ்வொருவரும் என்னைப்போல்
ஒளிந்திருக்கிறார்கள்!

பெரிய இருட்டுக்கு அஞ்சி
சின்ன இருட்டுக்குள்ளே
சிறையிருக்கிறோம்!

வசந்தத்துக்காகத் திறந்து வைத்தது
இதோ..!

அந்தம் வந்து கதவருகே
அழைப்புமணியடிக்கிறது!

காலிக்கோப்பைகள் கேலியாய்க்
கண்சிமிட்டுகின்றன

இன்றைக்குக் காலையில்
இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?

பறவைகளின் பள்ளியெழுச்சி...
படர்ந்த காலைப்பனி...
தூளியிலிருந்து விழுந்த பூக்கள்
தூரத்தில் கேட்ட கோவில்மணி...!

இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?

ஆசையில் வாங்கிய உடமைகள்
அன்னியமானது போல...

இன்று மட்டும் தான்
கண்ணாடியே என்னைக்
காண்பதுபோலிருக்கிறது!

எனது புகைப்படத்தை
ஏன் இத்தனை நேரம்
வாஞ்சையோடு வருடுகிறேன்?

கண்களைத் திருப்பிக்கொள்கிறேன்
கடியாரம் தெரியவில்லை!
ஆனாலும்...
முட்கள் ஒடுகிற சத்தம் மட்டும்
முன்னை விட உரக்க....உரக்க...!

Monday, July 26, 2010

வா வாத்யாரே வூட்டாண்ட!

(சிரிங்க; சீரியஸா எடுத்துக்காதீங்க!)

வகுப்புக்கு செல்லாத அரசு கல்லூரி ஆசிரியர்களை பிடிக்க தனிப்படை: உயர்கல்வி மாமன்றம்

"தமிழக உயர்கல்வி மாமன்றம் பிறப்பித்துள்ள இந்த அவசரச்சட்டம் தனிமனித உரிமை மீறல்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பேராசிரியர், முகவரி எழுதாத ஒரு கடிதத்தில் ஸ்டாம்பு கூட ஒட்டாமல் அனுப்பி நமக்குத் தெரிவித்துள்ளார்.

பெருமதிப்புக்குரிய சேட்டைக்காரன் (மெய்யாலுமே அவர் அப்படித்தான் எழுதியிருக்காரு!)

வலையுலகில் இன்றைக்கு மிகவும் நடுநிலையை நீங்கள் ஒருவர்தான் கடைபிடிக்கிறீர்கள் என்று உங்கள் சித்தப்பா, மன்னிக்கவும், பெருவாரியான பொதுமக்கள் கருதுகிற காரணத்தால் அண்மையில் உயர்கல்வி மாமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து உங்களது கவனத்தை ஈர்க்கிறேன்.

இந்த உத்தரவு ஏற்கனவே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணமாக, கீழ்க்காணும் சம்பவங்களை உங்களது கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

சம்பவம்: 1

சென்னையின் பிரபல கல்லூரியில் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் அண்ணாவி, அவியல் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தபோது, கையும் காயுமாகப் பிடிபட்டு, கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்றுவரை கல்லூரி முதல்வர் அந்தக் காய்கறிகளை அண்ணாவியிடம் திருப்பியளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது போன்ற அராஜகங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன என்பதை உங்களது வலைப்பூ வாயிலாக தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு எடுத்துரைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சம்பவம். 2

மயிலாப்பூர் தெப்பக்குளம் பேருந்து நிலையமருகே நின்றிருந்த ஒரு புரோகிதரை அதிரடிப்படையினர், அவர் மாறுவேடத்தில் வந்திருக்கும் ஆசிரியராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, ’அட அபிஷ்டூ, நான் காலேஜ் வாத்தியார் இல்லேங்காணும்; கல்யாணம் பண்ணி வைக்கிற வாத்தியார்! பிரதோஷமாச்சேன்னு கோவிலுக்கு வந்தேன். அலாக்கா அள்ளிண்டு வந்துட்டேளே!" என்று அங்கலாய்த்ததாகத் தெரிகிறது.

இந்த அதிரடி உத்தரவு எந்த அளவுக்கு தனிமனித உரிமைகளை மீறியிருக்கிறது என்பதற்கு இதனைக் காட்டிலும் தக்க சான்றும் வேண்டுமோ?

எனவே இந்த அவசர உத்தரவைத் திரும்பப் பெறுமாறு, நீங்களும் உங்களைப் போல தமிழுலகத்துக்குத் தளராமல் தொண்டாற்றிவரும் சகபதிவர்களும் (அப்படியா? சொல்லவேயில்லை...?) பல்வேறு பதிவுகளை எழுதி, ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு: உங்களுக்கு நான் கடிதம் எழுதியதாக வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் கல்லூரி நேரத்தில் தபால் நிலையம் போனதற்காக எங்களது கல்லூரி முதல்வர் என்னை பெஞ்ச் மீது ஏறி நிற்கச் சொல்லிவிடுவார்.

இந்தக் கடிதத்தில் இருப்பது உண்மைதானா என்று கண்டறிய, நமது தலைமை நிரூபர் (நேத்துத் தான் ’டை’ அடிச்சாரு தலையிலே!) களக்காடு கருமுத்துவைக் களத்திலே இறக்கினோம். அவர் தெரிவித்துள்ள ’பகீர்’ தகவல்களாவன:

 • அரசு உத்தரவுப்படி கையெழுத்துப் போட்டு விட்டு, சொந்தவேலை செய்கிற கல்லூரி ஆசிரியர்களுக்காகவென்றே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், இனி எல்லாக் கல்லூரி தஸ்தாவேஜுகளிலும் ஆசிரியர்கள் கைநாட்டு தான் போட வேண்டும் என்று அகில இந்திய ஆசிரியர் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாம்.

 • இது மட்டுமன்றி, இந்த அவசர உத்தரவு காரணமாக, பல ஆசிரியர்கள் திருந்தி ஒழுங்காக கல்லூரி செல்லத் தொடங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் வாஷிங் மெஷின்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வாத்தியார்களின் சொந்தவேலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது என்று ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.

 • கல்லூரி நேரத்தில் மதிய உணவு சாப்பிடுவதையும் ஆசிரியர்களின் ’சொந்த வேலை’யாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பெட்டிஷன் குப்புசாமி பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளதால், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

 • இத்துடன் பல்கலைக்கழகங்களில் இருந்து கொண்டே வகுப்புக்குச் செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை, மன்னிக்கவும், ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வகுப்பில் தள்ள, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா இரண்டு மாநகராட்சி லாரிகளை அரசு வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

 • மேலும் பகல்காட்சி, மதியக்காட்சி நேரங்களில் பழைய லாம்பி, பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் புல்லட் போன்ற வாகனங்களில் திரையரங்குகளுக்கு வருகிறவர்களைக் கண்காணிக்க ரகசிய படை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஓட்டை உடைசல் வண்டிகளில் வருகிறவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகத் தான் இருப்பார்கள் என்று அண்மையில் போக்குவரத்துத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.

இது குறித்து களக்காடு கருமுத்து சட்ட நிபுணர் ’லாலா"ப்பேட்டை லட்சுமணனிடம் கேட்டபோது:

"இது கண்டிப்பாக மனித உரிமை மீறல் தான்! இதனால் அதிகம் பாதிக்கப்படப்போகிறவர்கள் மாணவர்கள் தான். காரணம், ஆசிரியர்கள் வராதவரைக்கும் அவர்கள் சுயமுயற்சி எடுத்து எதையோ படித்து எப்படியோ பரீட்சைகளில் தேறி வந்தார்கள். இந்த அவசர உத்தரவு காரணமாக, மாணவர்களுக்கு மீண்டும் பாடங்களில் குழப்பம் ஏற்பட்டு, சந்தேகங்கள் வலுக்க வாய்ப்பிருக்கின்றது. இதனால் இனி வருகிற வருடங்களின் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தாலும் வியப்பதற்கில்லை! மேலும் போஸ்ட் கிராஜுவேஷன் முடித்தபோது படித்த பழைய மொக்கை ஜோக்குகளையே, திரும்பத் திரும்ப ஆசிரியர்கள் வகுப்பில் போடுவார்கள் என்பதால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகம். மொத்தத்தில் இது மாணவர்களின் மனித உரிமை மீறல் என்று தான் தோன்றுகிறது."

எனவே, வலையுலகத்தில் உள்ள அனைவரும் இந்தக் கறுப்புச்சட்டத்தை (ஆட்டோ வரும்வரை!) எதிர்த்து தங்கள் கருத்தை பதிவு செய்து ஜனநாயகத்தை நிலையுறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடைசியாகக் கிடைத்த தகவல்: "இதே போன்று சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் போகாமல் டிமிக்கி கொடுக்கிற அரசியல்வாதிகளைப் பிடிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் படுமா?" என்ற கேள்வி எழுப்பியதற்கு, லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sunday, July 25, 2010

ஒரே கணம்

இத்தனை நாட்களாக ஒவ்வொரு தினமும் தேடிச் சலித்த அந்த ஒரு கணம் அனேகமாக அன்று வந்தே விட்டது போலிருந்தது அவனுக்கு. இதுகுறித்து பல நாட்களாய்த் திட்டமிட்டும், தைரியத்துக்கும் கோழைத்தனத்துக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தான் அவன். இப்போது, அவனுக்குள் தைரியம் வலுத்திருந்தது - சாவதற்கு!

ஊற்றைச் சரீரத்தை ஆபாசக்கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றைத் துருத்தியை சோறிடும் தோற்பையைப் பேசரிய
காற்றுப் பொதிந்த பாண்டத்தைக் காதலினால்
ஏற்றுத் திரிந்துவிட்டேன் இறைவா...............................................

இடம் கூடத் தேர்ந்தெடுத்து விட்டான்! எழும்பூரிலிருந்து கிளம்பியதும் மின்சார ரயில் உற்சாகமாக சேத்துப்பட்டு வரை அதிவேகத்தில் செல்லும். வலதுபக்கக் கதவில் நின்று கொண்டு, எதிரே ரயில் வருகிறதா என்று பார்த்து, கண்களை இறுக்க மூடிக்கொண்டு குதித்து விட வேண்டியது தான்!

அம்மா! வந்து விட்டேன்!

வலிக்குமோ என்று முன்பிருந்த பயம் அன்று அவனுக்கில்லை. அதிகபட்சம் ஒரு நொடிப்பொழுதுதான். தலையிலோ கழுத்திலோ ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் வருகிற ரயிலின் அந்த கனத்த சக்கரம் ஏறி இறங்குகிற ஒரு நொடி மட்டும் வலியைப் பொறுத்துக்கொண்டால் போதும். அவ்வளவு தான்! எத்தனை தடவை காய்ச்சலின் போது ஊசி போட்டுக் கொண்டிருக்கிறோம்? அது போல சுருக்கென்று அந்த ஒரு கணப்பொழுது மட்டும் வலிக்கலாம். அதன் பிறகு, எதுவும் இருக்காது! அவமானம், தன்னிரக்கம், கோபம், பயம், பசி, தாகம், ஏமாற்றம், கயமை, காமம் எல்லாவற்றிற்கும் இரத்தப்பொட்டு வைத்து வழியனுப்பி விடலாம்.

எதுவும் துரத்தாது! எல்லாரும் விரைவில் மறந்து விட நல்ல வழி! ஏற்கனவே மறந்தவர்களுக்கு இறுதியாக ஒருமுறை நினைவூட்டி விட்டு, மீண்டும் அவர்களை மறதியில் ஆழ்த்துகிற வழி! இதனால், அதிகபட்சம் பயணிகளுக்கு சில நிமிடங்கள் தாமதம் ஏற்படுவதன்றி, வேறெந்த இடைஞ்சலோ வேதனையோ ஏற்படப்போவதோ இல்லை! வேண்டாவெறுப்பாக ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிச் செல்லுகிற ரயில்வே ஊழியர்கள் கொஞ்சம் திட்டலாம்! தொலையட்டும்!

இதற்கு முன்னரும் இப்படியெல்லாம் தோன்றியதுண்டு. அப்போதெல்லாம் ஏதாவது சிந்தனைகள் வந்து கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றன. மனம் பெரியதும் சிறியதுமாகப் பல எண்ணக்குழப்பங்களுக்குள்ளே புதைந்து இழுத்துப் போட்டு அமுத்தி விடுகிறது.

காலையில் இஸ்திரிக்காரனிடம் துணி கொடுத்திருக்கிறோமே? வண்டிக்கடன் இன்னும் ஐந்து தவணை பாக்கியிருக்கிறதே! இன்னும் பதினெட்டு நாட்களுக்கு பாஸ் இருக்கிறது. மூர்த்தியிடம் இரவல் வாங்கிய கதாவிலாசம் திருப்பிக் கொடுக்கவில்லை. இன்னும், காரணமா சப்பைக்கட்டா என்று விளங்காத பல வினாக்கள் கொக்கி போட்டு அவனைச் சாவினருகே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், அன்றோ, சின்னச் சின்னக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது விரயம் என்ற ஞானோதயம் வந்தது போலிருந்தது.

ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தபோது தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறவர்களிடம் விடைபெற்றுக்கொள்வது போலிருந்தது. நாளை இதே இருக்கையில் எவனோ ஒருவன் உட்கார்ந்து கொண்டு, மூன்றுக்கு மூன்று சென்டி மீட்டர் பரப்பில் தனது தற்கொலைச் செய்தியை வாசித்துக் கொண்டிருப்பான் என்று தோன்றியது. ஆபீஸிலிருந்து விளம்பரம் செய்தாலும் செய்வார்கள்! எப்பொழுதோ கையொப்பமிட்ட பச்சை, சிவப்புக்காகிதங்கள் முடுக்கப்பட்டு ஒரு பெரிய தொகை நிரம்பிய காசோலை அரசாங்கத்தின் அழுக்கு உறையில் ஊருக்குப் பயணிக்கும். சற்று நேரம் முன்பு வரை தான் பணிபுரிந்த இருக்கையில் யாரேனும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு வேலைக்கு வரலாம். நண்பர்கள் சேர்ந்து சௌந்திரா அச்சகத்தில் கருப்பில் சுவரொட்டியடித்து சானட்டோரியம் முழுக்க ஒட்டலாம்.

சல்லி சல்லியாய் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிதறு தேங்காய் போல என்னென்னமோ சிந்தனைகள்.....!

வண்டி கோட்டையில் நின்றதும் முண்டியடித்துக் கொண்டு ஏறிய கூட்டம் சற்று கவனத்தைக் கலைத்தது. அவனுக்கருகிலும் எதிரிலும் ஒரு பெரிய குடும்பம் வந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது. இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்குழந்தை, சாக்லேட் அப்பிய கன்னங்களும், குதிரைவால் சடையுமாய் அவனோடு உரசி நின்று ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கியது. மெத்துமெத்தென்று பஞ்சுபோலிருந்த அந்தக் குழந்தையின் ஸ்பரிசத்தில் ஒரு கணம் மெய்சிலிர்த்தது.

"ஏய், ஜன்னலைத் தொடாதே; அசிங்கம்!" என்று கடிந்து கொண்டார் குழந்தையின் அப்பா போலிருந்த அந்த நபர்.

"இங்கே வா, அம்மா மடியிலே உக்காச்சி!" என்று அந்தப் பெண்மணி பிடித்து இழுக்க முயன்றார்.

ஜன்னலோரத்தில் உட்காரவேண்டும் என்ற அந்தக் குழந்தையின் சின்ன ஆசை அவர்களுக்குப் புரிபடவில்லை போலும். பெரியவர்களான பின்னும் எல்லாருக்கும் ஜன்னல் இருக்கை மாதிரி சில அற்ப சந்தோஷங்கள், யாரையும் உறுத்தாத கையடக்கக் கனவுகள் தொடர்கின்றன; அவை பெரும்பாலும் மறுக்கவும் படுகின்றன. அந்தச் சின்ன ஏமாற்றங்களின் துளிகள்தான் பின்னாளில் வாழ்க்கையை நீலம் பாரிக்கச் செய்து விடுவதுமுண்டு.

அவனுக்கு அந்தக் குழந்தையை ஏமாற்ற மனமில்லை! அவனோடு முடியட்டும் ஏமாற்றங்கள்!!

"பாப்பா! உன் பேர் சொல்லு! ஜன்னல் சீட் தர்றேன்!"

அந்தக் குழந்தையின் கண்களில் தெரிந்தது ஆர்வமா, அவநம்பிக்கையா புரியவில்லை.

"கக்..கக்..கா!" என்று மழலையில் சொன்னது.

"என்னது...?" அவனையுமறியாமல் சிரிப்பு வந்தது. "கக்கக்காவா...?"

"நட்சத்ரா!" என்று திருத்தி, பெருமையோடு சிரித்தார் அப்பா.

"நட்சத்ரா! அங்கிள் பக்கத்துலே உட்கார்ந்துக்குவீங்களா? ஜன்னலைத் தொடக்கூடாது, சரியா?"

கண்கள் அகல அகல நட்சத்ரா தலையாட்டியபோது, அள்ளியெடுத்து மடியில் உட்காரவைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஜன்னலோரத்தில் நட்சத்ராவை அமர்த்தியதும், அதன் ஒரு கை அவனது தொடையின் மீது விழ, ஒரு கணம் கண்களை மூடி சிலாகித்தான். இறுதிக்கணங்களில் இப்படியும் ஒரு சுகமா?

அவ்வப்போது அந்தக் குழந்தை தனது பஞ்சுப்பொதி போன்ற கையால் தட்டித் தட்டி, இவனைப் பார்த்து ’அக்கி..அக்கி..’ என்று அழைத்து எதையோ காட்டியது. அக்கி என்றால் அங்கிளாம்!

பூங்காவில் திபுதிபுவென்று கூட்டம் ஏறியது. வேலை முடித்துத் திரும்புகிறவர்கள், வெளியூரிலிருந்து வருகிறவர்கள் என்று களைத்துப்போனவர்களின் கூட்டம்! அடைத்து அடைத்துக் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்தும் உட்கார இடம் கிடைக்காதா என்று பேராசையுடன் உள்ளே நோட்டமிடுகிற கூட்டம்!

இதோ, எழும்பூர் வந்து விடும்! அவனுக்கு லேசாகப் படபடப்பது போலிருந்தது. அதிகபட்சம் இன்னும் நான்கு நிமிடங்கள்! அதன்பிறகு, ரயில் கிறீச்சிட்டு நிற்கப்போகிறது.

"எவனோ குதிச்சிட்டாண்டா....!"

நட்சத்ரா என்ன செய்வாள்? அழுவாளோ?

எழும்பூர் வந்தது. இறங்குகிற கூட்டமும் ஏறுகிற கூட்டமும் முட்டி மோதிக்கொள்ள, நட்சத்ராவின் பிஞ்சுவிரல் நடைமேடையிலிருந்த குளிர்பானக்கடையைப் பார்த்து நீண்டது.

"ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!"

"அது உவ்வே! வீட்டுக்குப் போயி அம்மா ஊஸ்ஸ் பண்ணித் தரேன்!"

"ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!" நட்சத்ரா சிணுங்கத் தொடங்கினாள்.

ரயில் நகரத்தொடங்கியது. அவன் எழுந்து கொண்டான். இறுதியாக ஒரு முறை நட்சத்ராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது; பார்த்தான். கூட்டத்தைப் பிளந்து கொண்டு கதவை நோக்கி நடந்துபோகத் தொடங்கினான். ரயில் இன்னும் ஊர்ந்து கொண்டிருக்க, எழும்பூரின் நடைமேடை பின்வாங்கிக்கொண்டிருக்க....

"அட நாசமாப் போறவனே!"

"ஏண்டா இப்படி ஓடற வண்டியிலே ஏறுறீங்க? விழுந்து கிழுந்து செத்துத் தொலைச்சா யாரு கொடுப்பா...?"

சீருடையில், முதுகில் புத்தகப்பையோடு ஓடுகிற வண்டியில் ஏறமுயன்று, நிலைதடுமாறி விழப்போன அந்த விடலைச்சிறுவனை கதவருகே நின்றிருந்தவர்கள் கைத்தாங்கலாய்ப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டிருக்க, அந்தச் சிறுவன் முகம் வெளிறி, உடல் படபடக்க, நெற்றியில் வியர்வையுடனும், கண்களில் மரணபயத்துடனும் வெடவெடத்துக் கொண்டிருந்தான்.

"வீட்டுலே சொல்லிட்டு வந்திட்டியா? என்ன அவசரம் தம்பி? அடுத்த ரெண்டு நிமிசத்துலே இன்னொரு வண்டி வருதில்லே...?"

சாவுக்கு மிக அருகே சென்று மீண்ட அதிர்ச்சியில், கணப்பொழுதில் நடந்து முடிந்தவற்றை செரிக்க முடியாமல் விக்கித்துப்போயிருந்த அந்தச் சிறுவன் பதிலேதும் சொல்லாமல், தன்னைக் கைகொடுத்து உள்ளே இழுத்தவர்களுக்கு நன்றியும் சொல்ல முடியாமல் நின்றிருந்தான்.

அவனது கண்களில் ஒரு செய்தி தெரிந்தது; அவனுக்கு மரணம் அச்சத்தைத் தந்திருக்கிறது. அவனுக்குச் சாக விருப்பமில்லை! அவன் அதற்காக ஓடுகிற ரயிலில் ஏறவில்லை! அது அவனது வீறாப்பாகாவோ அல்லது விளையாட்டாகவோ கூட இருந்திருக்கக் கூடும்! ஆனால், நிச்சயம் அவனது குறிக்கோள் மரணமாக இருக்க வாய்ப்பேயில்லை!

கதவருகே போனவனின் கண்கள், அந்தச் சிறுவனையே வெறித்தன. எங்கே குதிக்க வேண்டுமென்று அவன் எண்ணியிருந்தானோ, அந்த இடம் கடந்து போய், வண்டி சேத்துப்பட்டு நிலையத்தில் நின்றபோது, குழப்பத்தோடும் குறிக்கோளில்லாமலும் கீழே இறங்கினான்.

"அக்கி..அக்கி...!" என்று ஜன்னலிலிருந்து நட்சத்ரா அழைத்து பிஞ்சுக்கையால் ’டாட்டா’ காட்டியது.

அவன் பார்த்துக்கொண்டேயிருக்க, ’பிறகு சந்திப்போம்,’ என்று சொல்வது போல கூவியபடி, தடதடவென்று தண்டவாளங்கள் அதிரச் சத்தம் எழுப்பிக்கொண்டே, அவன் வந்த ரயில் அது போக வேண்டிய இலக்கை நோக்கிக் கிளம்பியது.

Friday, July 23, 2010

யாயும் நாயும் யாராகியரோ?


இந்தியாவிலேயே நாய்களுக்கான முதல் ரத்த வங்கி சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது நமக்கும் நாய்களுக்கும் மிகவும் பெருமையளிக்கக் கூடிய செய்தியல்லவா?


நாய் என்றால் கேவலமா?

"நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார் வயிற்றில் நரனாய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே."

என்று பட்டினத்தாரே நாயின் பெருமையை ஒரு பாடல்மூலம் விளக்கியிருக்கிறார் என்று காண்க! மேலும் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொண்டை நாட்டுப்புலவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார், தனது கட்டுச்சோற்றை நாய் திருடியதும் பாடிய செய்யுளும் குறிப்பிடத்தக்கதாகும்.

"சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து
பாராறு நான்முகன் வாகனந் தன்னைமுன் பறறிக்கவ்வி
நாரா யணனுயர் வாகன மாயிற்று நமமைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே."

நாயை "சீராடையற்ற வயிரவன்," என்று அந்தகக்கவி வீரராகவ முதலியார் அப்போது சொன்னதை நினைவுகூர்ந்தே இப்போது நாய்களெல்லாம் விதவிதமாக ஆடையணிந்து அழகுப்போட்டிகளில் கலந்து கொள்கின்றன என்பதை அவ்வப்போது செய்திகள் வாயிலாக நாமெல்லாம் அறிந்து வருகிறோம். இன்னும் சில நாட்களில், உலக அழகிப்போட்டிகளில் நமது நாய்கள் கலந்து கொண்டு, இன்னொரு சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, லாரா தத்தா வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றால் மறுக்கவா முடியும்? நாய் நற்பணி மன்றங்களும் வரலாம்!

கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமா? அவனை ஒரு நாயைப் போல நேசியுங்கள் என்று பெண்கள் இணையத்தில் எழுதித்தள்ளுகிறார்கள். Want to keep your man happy? Treat him like a dog

இதை வாசித்துவிட்டு சில ஆண்களுக்கு அநாவசியமாக கோபம் வந்து, அவர்கள் பங்குக்கு அவர்களும் மனைவியையும், நாயையும் ஒப்பிட்டு ஜோக் அடித்திருக்கிறார்கள். (இந்த ஆண்கள் எப்போ தான் சீரியஸ் ஆவார்களோ?). உதாரணமாக, இந்தியா போன்ற நாடுகளில் ஆண்கள் ஏன் இரண்டாவது திருமணம் செய்வதைக் காட்டிலும், இன்னொரு நாய் வளர்ப்பதையே விரும்புகிறார்கள் என்று ஒருவர் காரணங்களை அடுக்குகிறார் பாருங்களேன்!

 • வீட்டுக்கு எவ்வளவு லேட்டா வர்றோமோ, நாய் அவ்வளவு சந்தோஷப்படும்.
 • வாய்தவறி ஒரு நாய்கிட்டே இன்னொரு நாய் பேரைச் சொன்னா அதுக்குக் கோபம் வராது.
 • நாயோட அப்பா,அம்மா உங்க வீட்டுக்கு வர மாட்டாங்க
 • நல்லாத் தூங்கிட்டிருக்கும்போது எழுப்பி,’நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவே?’ன்னு நாய் கேட்கவே கேட்காது.
 • நாயைப் பின்சீட்டுலே உட்காரச் சொன்னா, சமர்த்தா உட்கார்ந்துக்கும்.
 • நாய்க்கு ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு உபயோகிக்கத் தெரியாது

இன்னும் நிறைய இருக்கு; அனுபவஸ்தருங்களை மேலும் நோகடிக்க வேணாமுன்னு இத்தோட நிறுத்திக்குவோம்.

என்னதான் பழிக்குப் பழி என்று எழுதினாலும், ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு தம்மோடு மனிதர்களை ஒப்பிட்டிருப்பது நாய்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமா இல்லையா? நாய்க்கும் மனிதனுக்கும் ஆதிகாலத்திலிருந்து இருந்து வருகிற உறவு பற்றி பல நாய்வுகள், மன்னிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சமீபத்துலே பாருங்க, நம்ம திரிஷா ஹைதராபாத்துலே தெருவிலே அடிபட்டுக் கிடந்த ஒரு நாயை அமலா கிட்டே கொண்டுபோய்க் கொடுத்திருக்காங்க! உடனே தெலுங்குப் பத்திரிகை எல்லாத்துலேயும் திரிஷாவோட படத்தைப் போட்டு ஜிலேபி ஜிலேபியாப் பிழிஞ்சு தலைப்புச்செய்தி போட்டுட்டாங்க!

நேத்து பழவந்தாங்கல் சப்-வேயிலே அடிபட்டுக் கிடந்த பாட்டியை இட்டுக்கினு போக ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரமாச்சு!

சேலத்துலே ஒருத்தர் வீட்டு நாய் காணாமப் போனதும், அவர் போஸ்டரெல்லாம் அடிச்சு ஒட்டி, விளம்பரமெல்லாம் கொடுத்து நாயைக் கண்டுபிடிச்சு எல்லாப் பேப்பரிலேயும் கடவாய்ப்பல் தெரிய போஸ்கொடுத்து போட்டோ போட்டாங்க!

நம்ம மதுராந்தகம் பக்கத்துலே ஒரு முதியோர் இல்லத்துலே பாகீரதின்னு ஒரு அம்மா இருக்காங்க! ஒரு கண்ணு பார்வை வேறே இல்லை!

"புள்ளை வெளிநாடு போயிருக்கச்சே மாட்டுப்பொண்ணு தொரத்திட்டாடா! என்னை இங்கேருந்து கூட்டிண்டு போயி ஏதாவது கோயில் குளத்துலே விடேன்; நோக்குப் புண்ணியமாப் போகட்டும்!" என்று சொன்னது நேற்றுக் கேட்டது போலிருக்கிறது. (சே! இதுலே சென்டிமென்ட் வரக்கூடாதுன்னு நினைச்சேன்!)

சரி, நாய் இரத்த வங்கி மேட்டருக்கு வருவோம்! உயர்ஜாதி நாய்களின் இரத்தத்தைச் சேகரித்து வைத்து, விபத்தில் சிக்குகிற நாய்களுக்கு அளித்து உயிர் காப்பாற்றப் போகிறார்களாம். மிகவும் சீரிய செயல் தான் இது! ஆனால், சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது; குறிப்பாக தமிழர் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் விஷயத்திலாவது....

பெரும்பாலும் பணக்கார வீட்டு நாய்களுக்கு டயாபடீஸ், ஹைப்பர்-டென்ஷன் போன்ற உயர்ஜாதி வியாதிகளும் இருக்கலாம். அதையெல்லாம் தெருநாய்களுக்கும் பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மிக முக்கியமானது, தெருநாய்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே பணக்கார வீட்டு நாய்களின் இரத்தத்தை தெருநாய்களுக்கு அளித்துத் தொலைத்தால், அவைகளும் ஆங்கிலத்தில் குரைக்கத் தொடங்கிவிடும். ஸ்னோயி, சீஸர், டைகர் என்று அவைகளும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

பெயர்ப்பலகையை தமிழில் எழுதுவது, தமிழில் பெயர் வைப்பது எல்லாம் சரிதான்! ஆனால், நாயிடம் தமிழில் தான் பேச வேண்டும் என்று ஒரு சட்டத்தை இயற்றித் தொலைத்திருக்கலாம்! அடையாறு, திருவான்மியூர் ஏரியாவில் தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த இரத்த வங்கிகளால் நாய்களுக்குள் மொழிப்பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், நாய்க்கு எது தெரியுமோ இல்லையோ, கடிக்கத் தெரியும்!

Saturday, July 17, 2010

குருபார்வை!

ஒரு குப்பைத் தொட்டியால், எங்களது தெருவின் ஒரு கட்டிடத்தில் ஒரு மினி உலகப்போரே நடந்து ஒய்ந்திருக்கிறது. பாவம், மூடி பிளந்து, வாய் கிழிந்து நீலமா, கருப்பா என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு நிறம் மாறிப்போயிருந்த அந்தப் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியைக் காரணமாக வைத்து, சில வெள்ளை வேட்டிகள் ஒரு வாரகாலத்தை வாக்குவாதத்திலேயே செலவழித்து முடித்தார்கள்.

அப்படி அந்த பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி செய்த பஞ்சமாபாதகம் தான் என்ன?

"யாராவது காம்பவுண்டு வடகிழக்குப் பக்கத்துலே கொண்டு போய் குப்பைத் தொட்டியை வைப்பாங்களா? அது ஈசான மூலை சார்! வாஸ்துப்படி பார்த்தா அங்கே எந்தப் பொருளையும் வைக்கக் கூடாது! அதுலேயும் குப்பை கொஞ்சம் கூட சேரவே விடக்கூடாது!"

"இல்லியா பின்னே? அது பிரஹஸ்பதி இருக்கிற இடமோன்னோ? குருஸ்தானம்! அதுலே கொண்டு போய் குப்பையைக் கொட்டுவாளோ? என்ன அப்பார்ட்மெண்ட் கல்ச்சரோ என்னமோ போங்கோ!"

"கேட்டீங்களா சாமி என்ன சொல்றாருன்னு...? மாம்பலம் பிருந்தாவன் ஸ்ட்ரீட்டுலே ஒரு வாஸ்து எக்ஸ்பர்ட் இருக்காரு! அவரு என்ன சொல்லுறாருன்னா, ஈசான மூலையிலே ஒரு ஃபவுண்டனோ அல்லது குழாயோ வைக்கணுமாம்! அப்பத்தான் குருபார்வை முழுமையாக் கிடைக்குமாம்!"

"கிழிஞ்சது! இங்கே கார்ப்பரேஷன் தண்ணிக்கே தத்திங்கிணத்தோம் போட்டுக்கிட்டிருக்கோம்! இதுலே ஃபவுண்டன் கேட்குதா உங்களுக்கு? போங்கய்யா, எந்தக் காலத்துலே என்னத்தைப் பேசிட்டிருக்கீங்க?"

ஆஹா! நின்று கேட்டால், நிறைய சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும்போலிருக்கிறதே என்று ஒரு அரிப்பு ஏற்படவே, மேன்சன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, எதிர்க் காம்பவுண்டில் நடந்து கொண்டிருந்த காரசாரமான சம்பாஷணையைக் கேட்கத் தொடங்கினேன்.

"சார்! உங்களுக்கோ கோவில்,குளம் எதிலும் நம்பிக்கை கிடையாது. நாங்க அப்படியா? புள்ளை குட்டியோட குடியும் குடித்தனமுமா இருக்கோம்? இங்கே இருக்கிற குப்பைத் தொட்டியை எதிர்ப்பக்கம் வைக்கச் சொன்னா அது ஒரு தப்பா?"

"சாமீ! அங்கே எப்பவும் ரெண்டு கார் நின்னுட்டிருக்கு! அதுக்கு நடுவுலே புகுந்து போயா குப்பை கொட்டுறது? போதாக்குறைக்கு அங்கே ஒண்ணுக்கு ரெண்டு மோட்டார் வேறே வச்சிருக்கீங்க! இங்கே தான் இருக்கட்டுமே, என்ன குடிமுழுகிடப்போகுது?"

வெறும் பன்னிரெண்டு வீடுகள் கொண்ட குடியிருப்பில், ஒரு சாதாரண குப்பைத்தொட்டி விஷயத்தில் கூட ஒத்த கருத்து இன்றி, தெருவே வேடிக்கை பார்க்கிற மாதிரி உரக்கக் கத்தி சண்டை போடுகிற அளவில் தானே நாம் இருக்கிறோம்?

"இந்த நாலு வருசத்துலே இந்த பில்டிங்குலே என்னென்ன நடந்திருக்கு தெரியுமா? முதல்லே மூணாம் நம்பர் வீட்டுப் பெரியவர் செத்துப்போனாரு!"

"யோவ், என்னய்யா பேசறே? அவருக்கு வயசு எண்பத்தி ஒம்பது! இங்கே வரும்போதே உடம்பிலே குழாயைச் சொருகிக்கிட்டுத் தானேய்யா குடிவந்தாரு?"

"அதை விடுங்க! ஒண்ணாம் நம்பர் வீட்டுப் பையன் தூக்குப் போட்டு செத்தானே, அதுக்கு என்ன சொல்றீங்க?"

"அவன் லூசுப்பய! அதான் பெத்தவங்களே சனியன் ஒழிஞ்சதுன்னு தலைமுழுகிட்டு சந்தோசமாயிருக்காங்க!"

"அஞ்சாம் நம்பர் வீட்டுக்காரங்களோட ஸ்கூட்டி காணாமப் போச்சு!"

"ஆமாய்யா, தெருவிலே வண்டியை சாவியோட விட்டுட்டுப் போனா திருடத்தான் செய்வாங்க! இதெல்லாம் ஒரு பிரச்சினையா?"

"நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்கோ! பேசாம இந்தக் குப்பைத்தொட்டியை காம்பவுண்டுக்கு வெளியிலே வச்சிடலாம்! ஈசான மூலையும் காலியாயிடும்; இருக்கிறவா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிண்டு கேட்டுக்கு வெளியே போயி குப்பையைக் கொட்டினாப் போதும். என்ன சொல்றேள்?"

"என்னவோ பண்ணுங்கய்யா!"

"சாமீ சொல்றது தான் கரெக்ட்! உடனே அந்த கருமம் பிடிச்ச குப்பைத்தொட்டியை எடுத்து வெளியிலே வச்சிடலாம்."

அப்பாடா! ஒரு வழியாக சமாதானமாயிற்றே!

அன்று இரவு சாப்பிட்டு விட்டுத் திரும்பியபோது, காம்பவுண்டுக்கு வெளியே அந்தக் குப்பைத் தொட்டி கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. பாவம் அந்தக் குப்பைத்தொட்டி; இத்தனை நாள் பிரஹஸ்பதி இருந்த இடத்தில் இருந்தது, இப்போது நடுத்தெருவில் சீரழிந்து கொண்டிருந்தது.

"இதெல்லாம் ஒரு மேட்டரா? பெத்த அப்பன், ஆத்தாளையே ஒரு நாள் வீதியிலே கொண்டுவந்து நிறுத்துற காலம்டா இது!" என்று என் நண்பன் சொன்னபோது, உறைத்தது.

மறுநாள் காலை! அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது மீண்டும் எதிர்க் கட்டிடத்தில் கூட்டம்! இன்னும் பிரச்சினை தீரவில்லையா?

"சே! கலி முத்திரிச்சுன்னு கேள்விப்பட்டிருக்கேன்! அதுக்காக இப்படியா? போயும் போயும் ஒரு ஒடஞ்சு போன பழைய குப்பைத் தொட்டி! அதையுமா திருடிட்டுப் போவானுங்க?"

"அதை இன்னேரம் ஏதாவது பழைய பேப்பர்காரன் கிட்டே போட்டுக் காசாக்கியிருப்பானுங்க! எல்லாம் உம்மாலே வந்தது. உடனே செக்ரட்டரி கிட்டே சொல்லி புது குப்பைத் தொட்டி வாங்கி வைக்கச் சொல்லுங்க!"

"வாங்கி எங்கே வைக்கிறது?"

"முன்னே எங்கே வச்சிருந்தோமோ, அங்கேயே தான்! இனிமே யாராவது ஈசானமூலை, லூசானமூலைன்னு பேசினீ!ங்க..நடக்கறதே வேறே!"

பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நான் அவர்களைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்து நடையைக் கட்டினேன்.

அப்பாடா! குருபார்வை யாருக்குக் கிடைத்ததோ இல்லையோ, அந்தக் குப்பைத்தொட்டிக்குக் கிடைத்து விட்டது.