Tuesday, September 28, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.12மீனராசிப் பதிவர்களே!

கடைசி ராசியாக இருந்தாலும் கடாசி விட முடியாத ராசி மீனராசி. இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை மிகவும் அதிகம். இது சரக்கேயில்லாமல் அவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்தபோதே அனைவருக்கும் புரிந்திருக்கும். வெறும் தன்னம்பிக்கை மட்டுமின்றி, மீனராசிக்காரர்களுக்கு தன்னடக்கமும் மிகவும் அதிகம் என்பதால், யாராவது மிக அதிகமாகப் புகழ்ந்து பின்னூட்டமிட்டால்,’ஐயையோ, அது நான் எழுதினதில்லீங்க, சுட்டது!’ என்று உண்மையை ஒப்புக்கொண்டு விடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இந்த மீனராசிக்காரர்களுக்கு, அவரவர் சொந்த இடுகைகளைப் புரிந்து கொள்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம்; ஆனால், பிற ராசிக்கார பதிவர்களை மிக நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள். எனவே, யாருக்கு தமிழ்மணம் பிடிக்கும், யாருக்கு இண்டெலி ஓட்டுப் பிடிக்கும், யாருக்கு இரண்டுமே வேண்டும் என்று சரியாகக் கணித்து, இடுகையைப் படிப்பதற்கு முன்னரே போய் ஓட்டளித்துவிட்டு, பின்னங்கால் பிடறியில் பட ஓடுவதில் வல்லவர்களாயிருப்பார்கள்.

மீனராசிக்காரர்களுக்கு இயல்பாகவே மிகுந்த நகைச்சுவை உணர்வு இருக்கும் என்பதால், எல்லாரும் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பெல்லாம் ரணகளமாக்கி விடுவார்கள் என்பது வெளிப்படை. இவர்கள் பெரும்பாலும் நவரச நாயக/ நவரச நாயகிகளாக இருப்பார்கள். அனேகமாக இவர்களுக்குப் பிடிக்காதது விரசம் மற்றும் வேப்பம்பூ ரசம் இரண்டாகத் தானிருக்கும். இவர்களது நகைச்சுவை உணர்வு காரணமாகவே, எவரேனும் இடுகைகளுக்கு மைனஸ் ஓட்டுப் போட்டாலும் ’ஆத்தா, நான் பாஸாயிட்டேன்!" என்று உற்சாகமாகக் கூவி தங்களது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவார்கள்.

மீனராசிக்காரர்கள் பேசும்போதே அவர்கள் முகத்தில் பல்வேறு முகபாவனைகளும் அபிநயங்களும் தோன்றுவதும் இயல்பே. சிலர் பேசாமல் இருக்கும்போதும் இது போன்ற மாற்றங்கள் ஏற்படுவதுண்டு என்றாலும் அவை முகச்சுருக்கங்கள் காரணமாக ஏற்படுவது என்று அறிக!

இவர்கள் பெரும்பாலும் கடைக்குட்டியாக இருப்பார்கள். அப்படியில்லாவிட்டால், இட்டிலிக்கடையிலிருந்து டாஸ்மாக் கடை வரையிலான ஏதாவது ஒரு கடையோடு இவர்களுக்கு இணைபிரியாத தொடர்பு இருந்தே தீரும்.


நீங்கள் பிறந்த இடம், வளர்ந்த இடம், படித்த இடம் இவையெல்லாம் வேறு வேறாக இருக்கும். (இல்லையென்று எப்படிக் கூற முடியும்? ஆஸ்பத்திரி, வீடு, பள்ளி இவையெல்லாம் வேறு வேறு இடம் தானே? ஹிஹி!). உங்களுக்குக் கலை, விஞ்ஞானம் ஆகியவற்றின் மீது அளப்பரிய ஈடுபாடு இருக்கும் என்பதால் அவற்றைத் தொந்தரவு செய்ய மாட்டீர்கள். அறிவை விருத்தி செய்வதற்காக பல புத்தகங்களை வாங்குவீர்கள்; வாங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்வீர்கள் என்றும் உங்களது தசாபலன்கள் தெரிவிக்கின்றன.

உங்களை ஆரம்பத்தில் ஆதரித்தவர்களைக் காட்டிலும், ஆப்பு வைத்த சகபதிவர்களால் விரைவில் பிரபலமாகி விடுவீர்கள். சக்திக்கு மீறி பிராட்பேண்டைச் செலவழித்து விட்டு பில் வந்ததும் பேந்தப் பேந்த முழிப்பது உங்களது ராசியின் குணாதிசயங்களில் ஒன்று. உங்களது ராசிக்கு நிறைய தொடர்பதிவு எழுதுகிற வாய்ப்பு வரும் என்றாலும், உங்களைத் தொடர யாரும் பெரும்பாலும் வர மாட்டார்கள் என்பது பெரிய சோகம்.

நீங்கள் வெளுத்ததெல்லாம் பாலிடால் என்று நம்புவீர்கள் என்பதால், யாராவது தொடர்ந்து ஓட்டும் பின்னூட்டமும் போட்டால் அவர்களை ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் என்று நம்பி, அவர்களால் மீன்பாடி வண்டியில் எடுத்துக்கொண்டு போகப்பட்டு செமத்தியாக உதைபடுவீர்கள்.

உங்களுக்கு மிகவும் கூர்மையான அறிவு என்பதால், தொப்பிக்குப் பதிலாக ஹெல்மெட்டை அணிந்திருப்பீர்கள். இருந்தாலும் உங்களுக்குக் கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகமாயிருக்கும். யாராவது புகழ்ந்து பின்னூட்டம் போட்டால் கணினியை ஷட்-டவுண் பண்ணி விடுவீர்கள். ஆனாலும், மொக்கை போடுவதில் உங்களுக்கு இருக்கிற அபார திறமை காரணமாக, வலைப்பதிவு ஆரம்பித்த குறுகிய காலத்துக்குள்ளேயே நிறைய ஹிட்ஸ் மற்றும் ஏராளமான ஃபாலோயர்ஸ் ஆகிய சம்பத்திகளைப் பெற்று வளமோடு வாழ்வீர்கள்.

இதுவரையிலும் சனி பகவான் ஆறாவது இடத்தில் இருந்ததால், நீங்கள் சளைக்காமல் மொக்கை போட்டாலும் தமிழ்மணத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஓட்டுக்களும், இண்டெலியில் தொடர்ந்து பாப்புலராகவும் இருந்து வந்தீர்கள். ஆனால், இனிமேல் சனிபகவான் உங்களது ராசியின் களஸ்திர ஸ்தானமான ஏழாவது இடத்தில் கண்டச்சனியாக புது கெட்-அப்பில் வருவதால் சில சோதனைகள் காத்திருக்கின்றன.

இதனால், கொஞ்ச நாட்களுக்கு கூகிள் சாட்-டைத் தவிர்க்கவும். ரொம்பவும் போரடித்தால் உங்களோடு நீங்களே பேசிக்கொள்ளலாமே தவிர வேறு யாரோடும் சாட் செய்யாதிருத்தல் நல்லது. மேலும் தேவையில்லாமல் அடுத்தவர் பிரச்சினை குறித்து தனிமடல், மின்னரட்டைகளில் பேசினால் கியாரண்டியாக ஆட்டோ வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

முன்னைப்போல எட்டுமணி நேரத்திலேயே பாப்புலராவது சற்றுக் கடினமாக இருக்கும் என்பதால், அடிக்கடி F5 உபயோகித்து நொந்து போகவேண்டி வரலாம்.

இந்தச் சிக்கலான காலகட்டத்தில் அனாவசியமாகக் கவிதைகள் எழுதி சகபதிவர்களை பயமுறுத்தாமல் இருப்பது சாலச்சிறந்தது. இத்தனை நாள் மொக்கை போட்டதால் ஏற்பட்ட புண்ணியத்தின் பலன் காரணமாக, உங்களுக்கு வேண்டிய சகபதிவர்கள் எந்த சூழலிலும் உங்களைப் பற்றித் தவறாக எண்ணாமல் தொடர்ந்து பின்னூட்டம் போட்டு உங்களை உற்சாகப்படுத்துவார்கள்.

கணினியைக் கவனமாகப் பராமரிக்கவும். உங்களது பாஸ்-வர்டை டாஸ்மாக்கில் கூட உளறி விடாதீர்கள். அடிக்கடி மறக்கிறவர்கள் அடிக்கடி பாஸ்-வர்டை மாற்றாமல் இருப்பது நலம். இன்னும் முப்பத்தி மூன்று நாட்களுக்கு எந்தத் தொடர்பதிவுக்கும் சம்மதம் தெரிவிக்காதீர்கள்.

எந்த இடுகை எழுத ஆரம்பித்தாலும் அதை முடிக்கத் திணறுவீர்கள்; மற்றவர்கள் படிப்பதற்குத் திணறுவார்கள். இது போன்ற சில சில்லறைக் குறைபாடுகள் இருந்தாலும், சனிபகவான் ஏழாம் பார்வையாக ஜென்மராசியைப் பார்ப்பதால், மெட்ராஸ் ஐ, மலேரியா, பன்றிக்காய்ச்சல் போன்றவைகள் உங்களை அண்டாது. போகப்போக முன்னை விட தன்னம்பிக்கை அதிகமாகி, சாரு, ஜெயமோகன் பற்றியெல்லாம் இடுகை போடுவீர்கள்.

பதிவருக்குப் பார்க்குமிடமெல்லாம் சிரிப்பு என்ற பழமொழிக்கு ஏற்ப, உங்களை நம்பி பல புதிய பொறுப்புக்களை பலர் கொடுத்து கௌரவப்படுத்துவார்கள். (எனக்கே அக்டோபர் மாதம் ஒரு புதிய பொறுப்பு கிடைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்! ஹிஹி!)

அப்பாடா, இத்தோடு ஒருவழியாக பன்னிரெண்டு ராசிகளுக்கான பலன்களையும் சொல்லி முடித்து விட்டேன். இத்தோடு விடுவேன் என்று மட்டும் எண்ண வேண்டாம்.

விரைவில், வலைப்பதிவர்களுக்கான வாஸ்து வரவிருக்கிறது.


நீங்கள் மேஷ ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

நீங்கள் துலாம் ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் விருச்சிக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் தனுசு ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் மகர ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

நீங்கள் கும்ப ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

10 comments:

பனித்துளி சங்கர் said...

வழமை போல் இந்த ரசிபலனிலும் நகைச்சுவை வார்த்தைகளில் ததும்பி வழிகிறது நண்பரே . இது போன்று ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை வர்ணம் பூசி அனைவரின் எண்ணங்களையும் கொள்ளை கொள்வது ஒரு தனிக் கலைதான் போங்க . பகிர்வுக்கு நன்றி நண்பரே

Unknown said...

Natchathirathukku vazhthukal.

பிரபாகர் said...

இந்த வரிசையை கடைசியில் முடித்திருக்கிறீர்கள் நண்பா... இதோ படிக்கிறேன்...

பிரபாகர்...

பிரபாகர் said...

கலக்கல் நண்பா! F5 அருமை... ஆமாம் சொல்லவேயில்லை?

பிரபாகர்...

Anisha Yunus said...

அண்ணா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

என்னது நானு யாரா? said...

உண்மையான ராசிப் பலன் படிக்கிற எஃபெக்ட் ஏற்படுது சேட்டை. காமெடி நல்லா வர்றது உங்களுக்கு. வெளுத்து வாங்கறீங்க.

Anonymous said...

நான் மேஷம்.

இருங்க படிச்சிட்டு வரேன்.

தனி காட்டு ராஜா said...

:))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னிட்டேள்!

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,நான் மீன ராசிதான்.னிஜமா எல்லாம் பொருந்துது.வெறும் காமெடிதானா? ஜோசியமிம் இருக்கா?இதுல?எந்திரன் விமர்சனம் போடலையா?