Wednesday, September 8, 2010

புர்ச்சித்தலைவி ராக்கி சாவந்த்

சென்னை கடற்கரை ரயில் நிலையம். ஜன்னலோர இருக்கையில் நான். பக்கத்தில் லக்கேஜ் பெட்டியில் போயிருக்க வேண்டிய ஒரு நபர்!

"சே! எந்தப் பத்திரிகையை வாங்கினாலும் சினிமாக்காரிங்க படம்தானா? நாம எங்கே சார் போயிட்டிருக்கோம்?"

"தாம்பரத்துக்கு...!"

"அதைச் சொல்லலே சார்! நம்ம நாடு எங்கே போயிட்டிருக்குன்னு கேட்டேன்! அப்பப்பப்பா, இந்த மாதிரி சினிமா மோகத்தை நான் வேறே எந்த நாட்டுலேயும் பார்த்ததில்லே!"

"நீங்க எந்தெந்த நாட்டுக்கெல்லாம் போயிருக்கீங்க சார்?"

"ஒரத்தநாடு, வல்லநாடு எல்லா நாட்டுக்கும் போயிருக்கேன்!" என்று இளித்தார் அவர். "ஏன் சார் இந்த தேசம் இப்படிக் குட்டிச்சுவராயிருச்சு? விகடன் சக்தியிலே கூட நடிகை படமா?"

"சார், நீங்க வாங்கியிருக்கிறது விகடன் சக்தியில்லை; அவள் விகடன்!" என்று சுட்டிக்காட்டினேன்.

"ஓ காட்! அதுலே பாருங்க சார், கண்ணாடி கொண்டுவர மறந்திட்டேன். அதுனாலே தான் சின்ன குழப்பம்!"

"பரவாயில்லே சார், சினிமாக்காரங்கன்னா ஏன் சார் கரிச்சுக் கொட்டறீங்க? ஒரு சினிமா நடிகை கூடிய சீக்கிரம் கொலை, கொள்ளை, திருட்டு, போதைமருந்து, கள்ளக்காதல்! விலைவாசியேற்றம், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல்...னு நாட்டுலே இருக்கிற எல்லா பிரச்சினைக்கும் அரை மணி நேரத்துலே தீர்வு சொல்லப்போறாங்க தெரியுமா?"

"மெய்யாலுமா? யாரு சார் அது?"

"ராக்கி சாவந்த்!"

"ஐயையே! ராக்கி சாவந்தா??? இந்திப்படத்துலே குத்தாட்டம் போடுவாங்களே, அவுங்களா?"

"ஓஹோ, அப்போ ஒரு படம் விடுறதில்லேன்னு சொல்லுங்க!" என்று சிரித்தேன். "நீங்களே பாருங்க சார், நம்ம நாட்டோட பிரச்சினையெல்லாம் அக்டோபர் ஒண்ணாம் தேதி வரைக்கும் தான். அக்டோபர் ரெண்டாம் தேதியிலிருந்து ராக்கிசாவந்த்ராக்கி கா இன்சாப்னு ஒரு நிகழ்ச்சி நடத்தப்போறாங்க ! அதுக்கப்புறம் நம்ம நாட்டுலே பிரச்சினையே இருக்காது பாருங்க!"

"காந்தி ஜெயந்தியிலேருந்தா?" என்று வாய்பிளந்தார் அவர். "வேறே நாளே கிடைக்கலியா?"

"ராக்கி சாவந்துக்கு காந்தின்னா ரொம்பப் பிடிக்குமாம்!"

"வேணும் வேணும்! காந்திக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!"

"அதுனாலே காந்தி ஜெயந்திலேருந்துதான் நிகழ்ச்சியை நடத்தணுமுன்னு ராக்கி கண்டிப்பா சொல்லிட்டாங்களாம்!"

"சரி, அட் லீஸ்ட் டிரஸ் விஷயத்துலேயாவது ரெண்டு பேருக்கும் நிறைய ஒத்துமை இருக்கு! போகட்டும்! என்ன மாதிரி நிகழ்ச்சி?"

"பொதுமக்களோட அன்றாடப் பிரச்சினைகளுக்கெல்லாம்சவுக்கடி சந்திரகாந்தா’ மாதிரி தீர்வு சொல்லப்போறாங்களாம்."

"இவ்வளோ பெரிய தேசத்தோட பிரச்சினையை இவங்க ஒருத்தரு, அதுவும் ஒரு டிவி நிகழ்ச்சியிலே தீர்த்துடுவாங்களா?"

"கண்டிப்பா! அவங்க ராஜ்தாக்கரேயை விட எவ்வளவோ உசத்தி தெரியுமா?"

"யாரு சொன்னாங்க அப்படி?"

"அவங்களே தான்! ராஜ்தாக்கரேயாலே முடியாததை நான் முடிச்சுக்காட்டறேன்னு சொல்லியிருக்காங்க பாருங்க! "

"அவங்க ரெண்டு பேருமே வாயாலே கெட்டவங்க தானே? ரெண்டு பேரும் பேசறது ஒண்ணு, செய்யுறது ஒண்ணு! ஏன், இந்தம்மா இதே டிவியிலே முன்னாலே ஒருவாட்டி சுயம்வரம் நடத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்களிலேருந்து ஒரு இளிச்சவாயனைத் தேர்ந்தெடுத்து, அவரையும் அம்போன்னு விட்டவங்களாச்சே! இவங்களாலே நாட்டுக்கு என்ன நல்லது செய்ய முடியும்?"

"இத பாருங்க சார்! 'நாங்க ஆட்சிக்கு வந்தா நூறு நாளுலே சுவிஸ் வங்கியிலிருக்கிற பணத்தையெல்லாம் திரும்பிக் கொண்டுவருவோம்,’னு சொல்லி ஒரு தலைவர் கோடான கோடி மக்களை இளிச்சவாயனுகளா ஆக்கும்போது இதே கேள்வியை கேட்டீங்களா? மக்களை அரசியல்வாதிங்க தான் ஏமாத்தலாமா, நடிகர், நடிகைகளுக்கு அந்த அடிப்படை உரிமை கூட இல்லையா?"

"என்ன சார் இது? யாரு கூட யாரை ஒப்பிடறீங்க? சே!"

"ஓஹோ! புரியுது சார், இவங்க ஒரு பெண்ணுங்கிறதுனாலே எளக்காரமாயிருக்கா? நீங்கல்லாம் அக்கா,தங்கச்சியோட பொறக்கலியா? உங்க பேரு, விலாசம் சொல்லுங்க! போட்டோ போட்டு உங்களை ஆணாதிக்கவாதின்னு கிழிகிழின்னு கிழிச்சிடறேன்!"

"ஐயையோ, எனக்கு அதெல்லாம் தெரியாது சார்! என் பொஞ்சாதியைக் கூட நான் திருப்பி அடிச்சது கிடையாது. நான் கேட்கிறது என்னான்னா, ’என்னை இதுவரை எந்த ஆம்பிளையும் காப்பாத்தலே, அதுனாலே நான் கடவுள் ஒருத்தருக்குமாத்திரம்தான் ராக்கி கட்டுவேன்,’னு சொன்னவங்களாச்சே? இவங்களாலே மத்தவங்க பிரச்சினையைப் புரிஞ்சுக்க முடியுமா?"

"அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவுக்கு வராதீங்க! மனைவியை அடிச்சு உதைச்சு, போதைப்பொருள் வழக்குலே மாட்டிக்கிட்ட ராகுல் மகாஜனுக்கே ராக்கிசாவந்த் அறிவுரை சொல்லி திருத்தத் தயாரா இருக்காங்களாம் . அப்புறம் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாதா?"

"என்னவோ சார், நாட்டுலே என்னென்னமோ கேலிக்கூத்து நடக்குது, இதுவும் நடக்கட்டுமே?"

"ஏன் சலிச்சுக்கறீங்க? நாளைக்கே நமீதா முல்லைப்பெரியாறு பிரச்சினையைத் தீர்த்து வச்சா வேண்டாம்னா சொல்லப்போறீங்க?"

"என்ன விளையாடறீங்களா சார்?"

"அனுஷ்கா கிருஷ்ணா தண்ணி கொண்டுவந்தா குடிக்க மாட்டீங்களா?"

"இதெல்லாம் டூ மச்!"

"தமன்னா காவிரிப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடாதா?"

"சார், சரக்கு அடிச்சிட்டு வண்டியிலே ஏறியிருக்கீங்களா?"

"த்ரிஷாவாலே மாநில சுயாட்சி கிடைச்சாக் கசக்குமா?"

"மிஸ்டர்! உங்க பேரு கூட எனக்குத் தெரியாது. அனாவசியமா என்னை டென்சன் பண்ணாதீங்க! உங்களை மாதிரி சினிமாக்காரங்களுக்கு ஓட்டுப்போட்டுத்தான் நாடு இப்படி கெட்டுக் குட்டிச்சுவராக் கிடக்குது. கெடுத்தது வரைக்கும் போதும். மேற்கொண்டு சினிமாக்காரங்க பத்திப் பேசாதீங்க, எனக்குக் கெட்ட கோபம் வரும்!"

"அப்படியா? சரத்பவார் சினிமாக் காரரா?"

"இல்லை, அவரு முழுநேர அரசியல்வாதி!"

"யோவ், ஒரு கோர்ட் உத்தரவுக்கும், பரிந்துரைக்கும் கூட வித்தியாசம் தெரியாம இருக்காரே, இவருக்கு சினிமாக்காரங்க மேல் இல்லையா?"

"அதெப்படி?"

"மன்மோகன்சிங் சினிமாக்காராரா?"

"அவரு பொருளாதார நிபுணர்!"

"என்ன நிபுணர்? லட்சக்கணக்கான டன் கோதுமை எலி தின்னிட்டிருக்கு! மக்கிப்போயிட்டிருக்கு! சுப்ரீம் கோர்ட்டு சொன்னப்புறமும் அதை இல்லாதவங்களுக்குக் கொடுக்க மாட்டேன்னு அழும்பு பிடிக்கிறாரே? எலி தின்னுறதை மனுசன் தின்னக்கூடாதா? இவருக்கு சினிமாக்காரங்க மேல் இல்லையா?"

"என்ன சார் பேசறீங்க? அரசியல்னா ஒரு அனுபவம் வேணாம்? சினிமாக்காரங்களாலே நிர்வாகம் எப்படிப் பண்ண முடியும்? அதிகாரிகளை எப்படிக் கட்டி மேய்க்க முடியும்?"

"யோவ் பெருசு! நம்ம நாட்டுலேயே நடந்த மிகப்பெரிய ஊழலுக்குத் துணையா இருந்த ஆளுக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியைக்கொடுத்திருக்காங்களே? இதை விட கேவலமாவா சினிமாக்காரன் நிர்வாகம் பண்ணுவான்?"

"சார்!"

"நீங்கல்லாம் தூக்கி வச்சுக்கிட்டு ஆடுற அரசியல்வாதிகளை விடவும் கஞ்சா கருப்பு, லொடக்கு கருணாஸ் மாதிரி காமெடியன்களை மந்திரியாக்கினாலும் நல்லாப் பண்ணுவாங்க! தாம்பரம் வர்ற வரைக்கும் வாயை மூடிட்டு வா, பெரிய புத்திசாலி மாதிரி சினிமா மோகம், அது இதுன்னு பேசினே, மாம்பலம் ஸ்டேஷன்லே ரெண்டு மசால்வடை வாங்கி உன் வாயிலே அடைச்சிருவேன்! அப்புறம் வீட்டுக்குப்போயி பாதாளக்கரண்டி போட்டுத்தான் எடுக்கணும். தெரியுதா?"

14 comments:

எல் கே said...

seekiram auto illa flight varum veetuku

க.பாலாசி said...

கலக்கல் போஸ்ட் பாஸ்... செம நக்கலு... உண்மை....

பெசொவி said...

புர்ச்சித் தலைவன் சேட்டை வாழ்க, வாழ்க!

vasu balaji said...

அதென்ன சேட்டை எலக்ட்ரிக்ட்ரெயின் இடுகைன்னா மட்டும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிடி வருது:)

அச்சு said...

புர்ச்சித்தலைவி ராக்கி சாவந்த் பத்தி ஏதாவது புதுசா இருக்கும்னு வந்து பாத்தா நாட்டுல இருக்கிற எல்லா டுபாகூருங்களை பத்தியும் எழுதிட்டீரே. கலக்கல்.
காமெடி கொஞ்சம் கம்மிதான் ஆனாலும் சூப்பரா இருக்கு..

velji said...

நகைச்சுவையாய் தெரிந்தாலும் டீட்டெய்ல்ஸ் இருக்கு.இப்படி எழுதுறது கொஞ்சம் சிரமமும் கூட.
well done!

suneel krishnan said...

"ஓஹோ! புரியுது சார், இவங்க ஒரு பெண்ணுங்கிறதுனாலே எளக்காரமாயிருக்கா? நீங்கல்லாம் அக்கா,தங்கச்சியோட பொறக்கலியா? உங்க பேரு, விலாசம் சொல்லுங்க! போட்டோ போட்டு உங்களை ஆணாதிக்கவாதின்னு கிழிகிழின்னு கிழிச்சிடறேன்!"
ரைட்டு , ரைட்டு !!
காந்தி மகானுக்கும் தலைவி ராக்கிக்கும் ஒற்றுமை அந்த விஷயத்துல மட்டும் தான் :( சேட்டை :)

Anonymous said...

வயிறு வலிக்குது.ஹாஹா.

Chitra said...

"யோவ் பெருசு! நம்ம நாட்டுலேயே நடந்த மிகப்பெரிய ஊழலுக்குத் துணையா இருந்த ஆளுக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியைக்கொடுத்திருக்காங்களே? இதை விட கேவலமாவா சினிமாக்காரன் நிர்வாகம் பண்ணுவான்?"


......அரசியல் புளப்பு சிரிப்பா சிரிக்குதே!

Anonymous said...

//நாம எங்கே சார் போயிட்டிருக்கோம்?"

"தாம்பரத்துக்கு...!"//

:) :) :)

//"நீங்க எந்தெந்த நாட்டுக்கெல்லாம் போயிருக்கீங்க சார்?"

"ஒரத்தநாடு, வல்லநாடு எல்லா நாட்டுக்கும் போயிருக்கேன்!" என்று இளித்தார் அவர்//

:) :) :)

//என் பொஞ்சாதியைக் கூட நான் திருப்பி அடிச்சது கிடையாது//

ஐயோ.. ஐயோ... :)

//மாம்பலம் ஸ்டேஷன்லே ரெண்டு மசால்வடை வாங்கி உன் வாயிலே அடைச்சிருவேன்! அப்புறம் வீட்டுக்குப்போயி பாதாளக்கரண்டி போட்டுத்தான் எடுக்கணும். தெரியுதா?//

முடியல சேட்டை...

இந்த இடங்களில் எல்லாம் சிரித்தேன். மற்ற இடங்களை எல்லாம் ரசித்தேன்.

தொடரட்டும் உங்கள் சேட்டை!!

மதுரை சரவணன் said...

நல்ல நக்கல். வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

சும்மா விளாசித்தள்ளிட்டிங்க.

பொருளாதார நிபுணர் செஞ்ச வேலையை நினைச்சா ரத்தம் கொதிக்குது.

என்னது நானு யாரா? said...

பேருக்கும் Profile படத்துக்கும் ஏத்தபடி, பெரிய சேட்டைகாரராகத் தான் இருக்கீங்க.

பதிவு ரொம்ப கலக்கல்! உங்க Follower ஆயிட்டேன். அருமையா நகைசுவையோடு எழுதறீங்க.

நேரம் இருக்கும்போது நம்ப கடை பக்கம் வாங்க! நான் இப்பத்தான் 1 மாசம் ஆச்சி கடை திறந்து. கொஞ்சம் நகைசுவையோட எழுத முயற்ச்சி செய்றேன்.

வருவீங்க இல்ல சேட்டைகார நண்பா?

வெங்கட் நாகராஜ் said...

ஒருத்தரையும் விட மாட்டீங்களா சேட்டை! கலக்கல் தொடரட்டும்.

வெங்கட்.