Thursday, September 30, 2010

இது ஆவுறதில்லே....!


நெல்லை இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நடந்து கொண்டிருந்த கடுமையான சோதனைகளைப் பார்த்து என்னுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த களக்காடு கருமுத்து வியப்பில் ஆழ்ந்தான்.

"சேட்டை! வர வர திருநேலி போலீஸ்கூட அமெரிக்கா போலீஸ் மாதிரி ஆயிடுச்சு!"

"ஓ! நீ அமெரிக்கா கூட போயிருக்கியா?"

"நான் அம்பாசமுத்திரமே போனதில்லை இன்னும்," என்று ஒப்புக்கொண்ட கருமுத்து," அதாவது சேட்டை, சமீபத்துலே சிகாகோ விமானநிலையத்துலே நம்ம இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் பட்டேலையே குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டாங்களாமே!. அதே மாதிரி நம்மூரு ஆளுங்களும் ரொம்ப கண்டிப்பா மாறிட்டு வர்றாங்கன்னு சொல்ல வந்தேன்."

"ஹிஹி! நம்ம கதையே வேறேண்ணே! ஒரு போலீஸ்காரர் கிட்டே ஐ.டி.கார்டைக் கேட்டதுக்காக, பஸ் கண்டக்டரையே செருப்பாலே அடிச்சிட்டாராம். தெரியுமா?"

"ஐயையோ, என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?"

"சும்மாவா நம்ம வடிவேலு மருதமலை படத்துலே போலீஸை இந்தக் கலாய்ப்புக் கலாய்ச்சாரு?"

"பார்த்தேன் சேட்டை, ஆனாலும், போலீஸ்காரங்க ஜிப்புப் போடவும், ஜட்டி போடவும் மறக்கிறவங்கன்னு காட்டுனது எனக்குப் பிடிக்கலே!"

"சரிதான், உனக்கு விஷயமே தெரியாது போலிருக்கு! நம்மூருலே ஜெயில் கைதிங்களோட ஜட்டியைக் கூட விட்டு வைக்காம போலீஸ் அதிகாரிங்க திருடறாங்கன்னு செய்தி வந்ததே படிக்கலியா?"

"என்னது? ஜட்டியைத் திருடிட்டாங்களா? கருமம்! அது சரி, சைஸ்லே பிரச்சினை வராது?"

"நம்மூரு போலீஸ்காரங்களுக்கு எந்த சைஸ் போட்டாலும் டைட்டாத் தானிருக்கும்! அதுனாலே பிரச்சினையில்லை!"

"ஹும், இப்படியே போச்சுதுன்னா வடிவேலு காமெடி மாதிரியே யாராவது கிணத்தைக் காணோமுன்னு கம்ப்ளெயின்ட் பண்ணினாலும் பண்ணுவாங்க போலிருக்குது!"

"அட, கிணத்தை விடு கருமுத்தண்ணே! ஒரு ஊருலே ரோட்டையே காணோம், கண்டிபுடிச்சுக் கொடுத்தா பரிசு தர்றோமுன்னு பஞ்சாயத்துத் தலைவரு அறிவுச்சிருக்காரு தெரியுமா?

"ஐயோ சாமீ! போகட்டும், இப்போ நம்மளை சீக்கிரமா செக் பண்ணி அனுப்பணுமேன்னு கவலையா இருக்கு! இன்னிக்குன்னு பார்த்து கூட்டம் வேறே அதிகமாயிருக்கு! ஒரு வேளை சென்னையிலே ஏதாவது கூட்டம், மாநாடு நடக்குதோ?"

"இப்பல்லாம் எதுக்குத்தான் கூட்டம் போடுறதுன்னு வெவஸ்தையில்லாமப் போயிடுச்சில்லே? பாரேன், அக்டோபர் மூணாம் தேதியன்னிக்கு நம்ம விஜய டி.ராஜேந்தருக்குப் பிறந்தநாளாம். அன்னிக்கு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்னு அவரே அறிவிச்சிருக்காரு!"

"சேச்சே! அவரு பிறந்ததுக்கெல்லாம் மத்தவங்க கண்டனம் தெரிவிக்க முடியுமா? ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை மனுசனுக்கு?"

ஒரு வழியாக எங்களது பயணப்பைகளை போலீசார் சோதனை செய்யத் தொடங்கினர்.

"இந்தப் பிளாஸ்டிக் பையிலே என்ன இருக்கு?"

"சாம்பார் சாதம், தயிர் சாதம், மெதுவடை!"

"டிரெயின்லே என்னதான் கொண்டுபோறதுன்னு விவஸ்தையில்லியா சார்? மறக்காம கோவில்பட்டி வர்றதுக்குள்ளே சாப்பிட்டு முடிச்சிருங்க! இல்லாட்டி விருதுநகர்லே பிரச்சினையாயிடப்போகுது."

"ஏன் சேட்டை, நாம சாம்பார்சாதம் சாப்பிடாட்டா விருதுநகர்லே ஏன் பிரச்சினை வரப்போகுது? சம்பந்தமேயில்லாம என்னென்னமோ சொல்லுறாரு?"

"விடு கருமுத்து! சம்பந்தமேயில்லாம பேசறதை விடுங்க, இப்பல்லாம் சம்பந்தமேயில்லாம விருதுங்களே கொடுக்கிறாங்க!"

"தெரியுமே! பிரபுதேவா-நயன்தாராவுக்கு சிறந்த ஜோடி விருது கொடுத்தாங்களே, அதைத் தானே சொல்றே சேட்டை?"

"அது கூட பரவாயில்லை. நம்ம பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறந்த நிர்வாகின்னு விருது கொடுத்திருக்காங்களாம். எப்படியெல்லாம் அல்வாய் கொடுக்கிறாங்க பாரு!"

"சே! இப்போ ஞாபகப்படுத்தறியே சேட்டை! ஒரு கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கிட்டு வந்திருக்கலாம் அடுத்த வாட்டியாவது மறக்காம வாங்கிட்டு வர்றேன்."

"இதுக்கு ஏன் அடுத்த வாட்டி வர்ற வரைக்கும் காத்திருக்கணும்? ஊருக்குத் திரும்புனதும் தபால்லே அனுப்பிடேன்!"

"சேட்டை, வடிவேலு படத்துலே வத்தக்குழம்பை கொரியர்லே அனுப்புற காமெடி ஞாபகம் வந்திருச்சா? அல்வாயை எப்படித் தபால்லே அனுப்புறதாம்..?"

"நீ பேப்பர் படிக்கிறதே இல்லை போலிருக்குது! இனிமேலு அல்வாய், வத்தக்கொழம்பு, ஊறுகாய் எல்லாத்தையும் ஸ்பீட்-போஸ்டுலே அனுப்பலாமுன்னு தபால் துறை அறிவிச்சிருக்காங்களே, படிக்கலியா நீ?"

பேசிக்கொண்டே எங்கள் இருக்கையிருந்த பெட்டியை அடைந்தோம். வாசலிலேயே ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.

"பையிலே என்ன?"

"துணிமணி, ஷேவிங் செட்டு, சோப்பு,சீப்பு, கண்ணாடி, பிரஷ், பேஸ்ட்டு...!"

"அந்தப் பிளாஸ்டிக் பையிலே என்ன?"

"சாம்பார் சாதம், தயிர்சாதம், மெதுவடை!"

"கோவில்பட்டி வர்றதுக்கு முன்னாலே சாப்பி..."

"தெரியும், இல்லாட்டி விருதுநகருலே பிரச்சினையாகும்...!"

"போங்க சார், ஜாக்கிரதை..!" என்று எச்சரித்துவிட்டுப்போனார் அந்தப் போலீஸ்காரர்.

"ஏன் சேட்டை, நாம என்னவோ ஆர்.டி.எக்ஸ் கொண்டு போற மாதிரியில்லே துளைச்சுத் துளைச்சுக் கேள்வி கேட்குறாங்க! இந்த அயோத்தித் தீர்ப்புக்கும் சாம்பார் சாதத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா?"

எங்கள் இருக்கையை அடைந்தபோது, அங்கே ஒரு வயதான தம்பதியினர் புளியோதரை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"எக்ஸ்கியூஸ் மீ! இந்தப் போலீஸ்காரங்க தொல்லை தாங்க முடியலே! நானும் இத்தனை வருசமா புளியோதரை எடுத்துக்கிட்டு பயணம் பண்ணிட்டிருக்கேன். ஆனா, இன்னிக்கு மாதிரி இது புளியோதரை இது புளியோதரைன்னு வைகுண்ட ஏகாதசியன்னிக்கு அகண்டநாமஜெபம் மாதிரி ஒவ்வொரு போலீஸ்காரர் கிட்டேயும் நான் சொன்னதேயில்லை. அதான், கையோட சாப்பிட்டாத் தொல்லை விட்டது பாருங்க!"

"கருமுத்தண்ணே! எதுக்கு இப்படி சாப்பாடு விசயத்தைப் பத்தித் துருவித் துருவிக் கேட்கறாங்க?"

"தெரியலே சேட்டை! ஆனா, இன்னிக்கு யாரோ ஒரு வி.ஐ.பி. இந்த ட்ரெயினிலே வர்றாருன்னு மட்டும் நல்லாத் தெரியுது. அதுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"

"ஏதாவது மிரட்டல் வந்திருக்குமண்ணே! சமீபத்துலே கூட ஜெயலலிதா மேடத்துக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் -னுற பேருலே மிரட்டல் வந்திருக்காம்."

"நல்ல வேளை, ’எந்திரன்’ பேருலே வரலே! இல்லாட்டா இதை வச்சே பதிவர்கள் ஒரு பெரிய ரவுண்டு கட்டியிருப்பாங்க!"

பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு போலீஸ்காரர் வரவும், அவரிடம் பல்லைக்காட்டி நைசாக விசாரித்தோம்.

"என்ன சார், இன்னிக்கு கெடுபிடி ரொம்ப அதிகமாயிருக்கே? சாப்பாட்டு பார்சலைப் பத்திக் கூட துருவித் துருவி விசாரிக்கிறாங்களே? என்ன விசயம்?"

"அது வேறே ஒண்ணுமில்லே தம்பி! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தரு மப்புலே வண்டியிலே ஏறி பயணம் பண்ணியிருக்காரு. திடீர்னு பார்த்தா அவரு கொண்டுவந்த பையைக் காணோம். உடனே அந்தாளு சட்டுன்னு சங்கிலியைப் பிடிச்சு நிறுத்திட்டாரு! இன்னிக்கு ஒரு வி.ஐ.பி. வர்றாரு! அதுனாலே தான் யாராவது அதைக் காணோம், இதைக் காணோமுன்னு வழியிலே சங்கிலியைப் பிடிச்சு நிறுத்தக் கூடாதேன்னு தீவிரமா விசாரிச்சு அனுப்புறோம்." என்றார் போலீஸ்காரர்.

"அதெல்லாம் சரி! ஆனா, எதுக்காக சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பத்தி ஸ்பெஷலா விசாரிக்கிறீங்க?"

"அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கறீங்க தம்பி? அன்னிக்கு பையைக் காணோமுன்னு சங்கிலியைப் பிடிச்சு இழுத்து ரயிலை நிறுத்தினாரில்லே, அவரு பையிலே என்ன இருந்தது தெரியுமா? அல்வாயும் கருவாடும்! அதைக் காணோமுன்னு வண்டியை நிறுத்தி எல்லா பாசஞ்சருக்கும் அல்வா கொடுத்திட்டாரு! அதுனாலே தான் இன்னிக்கு சாப்பாட்டுப் பொட்டலத்தை ஸ்பெஷலா விசாரிக்கச் சொல்லி ஆர்டர் வந்திருக்கு!"

"என்ன மனுசன்யா? அப்புறம் என்னாச்சு?"

"என்னாகும்? புடிச்சு உள்ளே போட்டோம்! அல்வாய் பிடிக்கப் போயி களியிலே முடிஞ்சுது அவர் கதை!"

யெப்பா சாமீ! இது ஆவுறதில்லே!

16 comments:

பிரபாகர் said...

முதலா?

சம்பவங்களை அழகாய்க் கோர்த்து உங்களுக்கே உரித்தான பாணியில் கலக்கலாய் காமடியாய் கலாய்த்திருக்கிறீர்கள்.

பிரபாகர்...

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா செட்ட கொஞ்சம் சின்ன பதிவா போடக்கூடாதா ? படிக்கிறதுக்குள்ள டையர்டு ஆகிடுது , ஒரு டீ சொல்லு

பொன் மாலை பொழுது said...

//சம்பவங்களை அழகாய்க் கோர்த்து உங்களுக்கே உரித்தான பாணியில் கலக்கலாய் காமடியாய் கலாய்த்திருக்கிறீர்கள்.//

பிரபாகர்...

இதை நான் ஆமோதிக்கிறேன் சேட்டை.
இருந்தாலும் நம்ம போலீசு டாணா காரர்களை அங்கங்கே தட்டி இருபது வழக்கம் போல சிரிப்புதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

excellent

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா.. .சிரிக்க வெச்சே நெறைய நியூஸ்ம் சொல்லி இருக்கீங்க... சூப்பர்...

vasu balaji said...

நியூஸ் பிட்ட வெச்சே படம் போடுறதுல எக்ஸ்பர்ட். ஒன்னொன்னு வித்யாசமான ஹிட்டு:))

முகுந்த்; Amma said...

போலிசு காரவுங்கள வம்புக்கு இழுக்காதீக அண்ணாச்சி, முட்டிக்கு முட்டி தட்டிட போறாக.

Anisha Yunus said...

//"சேச்சே! அவரு பிறந்ததுக்கெல்லாம் மத்தவங்க கண்டனம் தெரிவிக்க முடியுமா? ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை மனுசனுக்கு?"//

இந்த வரிஅயி பார்த்ததும் அடக்க முடியாம சிரிச்சுட்டிருந்தேன்....கூடவே எங்க வீட்டு வாலுவும் சேர்ந்து சிரிச்சது...ஏன் எதற்குன்னு தெரியாமலே....இன்னும் சிரிப்பு அடக்க முடியலைங்ணா...பார்க்க பார்க்க மேல மேல சிரிப்பு அதிகமாகுது. செம காமெடி...!! :))

மாதேவி said...

நையாண்டி...சூப்பர்.

Anonymous said...

ம்ஹூம்..
இது ஆவுறதில்ல..

Unknown said...

நகைச்சுவையான பதிவு..சிரிக்க வெச்சே நெறைய நியூஸ்ம் சொல்லி இருக்கீங்க... நல்லா இருக்குங்க .

sathishsangkavi.blogspot.com said...

எப்படி உங்களாள மட்டும் இப்படி எழுதமுடியுது....

சங்கர் said...

//வானம்பாடிகள் says:
பிட்ட வெச்சே படம் போடுறதுல எக்ஸ்பர்ட். //

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க சேட்டை :)

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணே,பத்திரிக்கை நியூசை வெச்சே காமெடியில் இவ்வளவு கலக்க முடியும்னு நிரூபிச்சு இருக்கீங்க,வாழ்த்துக்கள்

Unknown said...

மிக நல்ல பதிவு


http://denimmohan.blogspot.com/

சுபத்ரா said...

மீன ராசிக்காரங்களைப் பத்தி புட்டுப் புட்டு வச்சு எங்க குட்டு-ஐ வெளிப்படுத்திய சேட்டைக்குத் தலையில் ஒரு செல்ல குட்டு ;-)