Saturday, April 10, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.08

அடுத்து நாம் காணவிருக்கும் விருச்சிக ராசி வலைப்பதிவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.(இதை அடிக்கடி அவர்களே டிஸ்கியாக எழுதுவார்கள்!).அவ்வப்போது ஜூரம் வந்தது மாதிரி பதிவுகளில் அனல்பறக்கும் கருத்துக்கள் இருக்கும் என்பதால் ஏப்ரல்,மே மாதங்களில் இவர்களின் பதிவுகளைப் படிப்பதைத் தவிர்த்தல் நலம் பயக்கும். மீறிப்படித்தால் உடனே குளித்தல் இன்னும் நலம். அவ்வப்போது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிவது போல, எதையோ எழுத ஆரம்பித்து இறுதியில் பதிவை விடவும் பின்னூட்டங்களைக் குறித்தே சர்ச்சைகளும் சண்டைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகராசிக்கார வலைப்பதிவர்களின் வழி தனிவழி! ஓட்டு விழுந்தாலும் விழாவிட்டாலும் தான் பிடித்த முயலுக்கு மூணு வால் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்த ஹேஷ்யங்கள் எழுதுவது பிடிக்கும் என்பதால் "எதுவும் உருப்படாது; எல்லாம் நாசமாகப் போகும்," என்ற தத்துவார்த்தமான செய்திகளை இவர்களின் பதிவுகளில் அடிக்கடி வாசிக்க முடியும்.

இந்த ராசியைச் சேர்ந்த பெண் வலைப்பதிவாளர்கள் ஒருசிலர் ஆண்களின் மீது அநியாயத்துக்கு ஆத்திரம் கொண்டிருப்பார்கள் என்பதால், பின்னூட்டமிடுகிற ஆண்கள்:

"ஆஜர் அக்கா!"

"உள்ளேன் அம்மா!"

"வந்துட்டேன்!" போன்ற தங்களது மேலான கருத்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு முடிந்தால் மண்புழு விருது,எட்டுக்கால் பூச்சி விருது ஒட்டக விருது போன்ற விருதுகளை சுலபமாக ஃபோட்டோஷாப்பில் உருவாக்கிக் கொடுத்து விட்டு, மின்னரட்டையில் அவர்களோடு ஜொள் விட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பின்னூட்டமிடாமல் இருந்தால் "பக்கி,பறக்காவட்டி," போன்ற பட்டங்கள் தேடிவரும். அத்துடன் இந்தப் பதிவர்களின் ஒண்ணு விட்ட சித்தி, ஒண்ணுமே விடாத பெரியப்பா ஆகியோரின் புதிய வலைப்பதிவுகளுக்குப் போகச்சொல்லி, பின்னூட்டமிடவைத்து பதிலுக்கு நையாண்டி செய்கிற ஆபத்தும் காத்திருக்கிறது.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, விருச்சிகராசிக்கார பதிவர்களுக்கு தத்துவம், வேதாந்தம் ஏன்றால் கொள்ளை இஷ்டம் என்பதால் "கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு," என்பது போன்ற உயரிய உண்மைகளை உரைக்கிற பதிவுகளை இவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்து வாசகர்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் தவிர, சரவணபவனில் சாப்பிட்ட குழி இட்டிலி மற்றும் முதல் முதலாக மூக்கைச் சிந்திய அனுபவம் போன்ற பிறபதிவுகளுக்கு மற்றவர்கள் போடும் பின்னூட்டங்களைப் பற்றி இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

விருச்சிகராசிக்கார பதிவர்களுக்கு டெம்பிளேட் தோஷம் ஏற்பட்டிருப்பதால், அடிக்கடி ஏதாவது பலகாரம், மன்னிக்கவும், பரிகாரம் செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்குப் பழமையின் மீது அலாதியான ஈடுபாடு இருக்கும் என்பதால், மிகவும் புராதனமான பதிவுகளை மெனக்கெட்டுத் தேடியெடுத்துத் தூசிதட்டிப்போட்டு, சந்தடி சாக்கில் எல்லாரையும் ஒரு பிடி பிடிப்பார்கள்.

இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திகூர்மையுடையவர்கள் என்பதால், ஏதாவது சர்ச்சைக்குரிய பதிவை எழுதிவிட்டால், அது குறித்து மற்றவர் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கும்போது, சந்தடி காட்டாமல் அடுத்த பதிவைப் போட்டு விட்டு அமைதியாக இருப்பார்கள்.

இவர்களுக்குப் புதுமையான விஷயங்கள் என்றால் மிகவும் பிடித்தமானது என்பதால் "மணாளனே மங்கையின் பாக்கியம்," போன்ற படங்களைக் குறித்த பதிவுகளை எழுதக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அளப்பரிய அறிவுத்திறனும், வளமான கற்பனையும், புதுமையான சிந்தனையும் இந்த ராசிக்காரர்கள் கொண்டிருப்பார்கள் என்பதால், அவற்றைச் செலவழிக்காமல் பத்திரமாக பாதுகாப்பார்கள். ’பரதநாட்டியம் மற்றும் கராத்தே தவிர உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள இவர்களது வலைப்பதிவுகளுக்கு நீங்கள் போனாலே போதும். எனவே, இந்த வலைப்பதிவாளர்கள் "சைக்கிள் ஓட்டுவது எப்படி?" என்று பதிவு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விருச்சிகராசிக்காரர்களுக்கு மந்திரம், தந்திரம் மற்றும் எந்திரன் குறித்து நிறைய தகவல்கள் தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் என்றால், இவர்களது கோபம் அடுத்தவரின் மூக்குக்கும் மேலே வருகிற அபாயம் உள்ளது.

விருச்சிகராசியில் இதுவரையில் பத்தாம் இடத்தில் இருந்த சனிபகவான், பதினோராம் வீட்டுக்கு சுவரேறிக் குதித்துச் செல்லவிருப்பதால், சில மாற்றங்கள் நிகழும். இதனால் இவர்களின் வலைப்பதிவுகளுக்கு புதிது புதிதாக வாசகர்கள் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. (பிற ராசிக்கார ஆண்களுக்கு: ஒருசில பெண்பதிவர்களின் வலைப்பதிவுக்குப் போய்ப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு "ஜொள்ளுப்பேர்வழி" என்ற பட்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்பதால், பிரதி திங்கட்கிழமைதோறும் விட்ஜெட் பகவானுக்கு நாலணா கற்பூரம் ஏற்றுதல் தோஷம் ஏற்படாமல் தவிர்க்கும்.)

இந்த ராசிக்கார பதிவர்களை இதுவரையில் "தம்பட்டக்கேசு" என்று சொன்னவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு, "அண்ணே,அக்கா,ஐயா,அம்மா" என்று பின்தொடருவார்கள். நேற்றுவரை "சரியான ஜொள்ளு," என்று பட்டம் வாங்கிய பதிவர்களுக்கு ’சகோதரப்பட்டம்" கிடைக்கும்.

நியாயமாகக் கருத்து சொல்லுகிறேன் என்ற பெயரில் குறைகளைச் சுட்டிக்காட்டுகிற வாசகர்கள் விலகிச்செல்வார்கள் என்பதால், இவர்களின் வலைப்பதிவுகளில் "நிலா நிலா ஓடி வா" பாட்டைப் போட்டாலும் நெக்குருகிப் பின்னூட்டம் போடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது போன்ற பதிவுகளுக்குப் பொன்னகரம் இடைத்தேர்தலில் விழுந்ததைக் காட்டிலும் அதிக ஓட்டுகள் விழ வாய்ப்புள்ளன.

மொத்தத்தில், விருச்சிகராசிக்காரர்கள் காட்டில் இனி கனமழைதான்! :-)))


நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் துலாம் ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

ஏனைய ராசிக்காரர்களே! எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொள்ளுங்கள்! அதிவிரைவில் உங்களது ராசிக்கான பலன்களும் வந்தே தீரும்!

13 comments:

அகல்விளக்கு said...

ஹெக்ஹே..........

செம கலாட்டா....

Sangkavi said...

இப்பதான் சேட்டை களை கட்டுது...

பிரபாகர் said...

ஹி...ஹி... நாம விருச்சிகம் இல்ல!

இது ஒரு ஸ்பெஷல் பலன் மாதிரி தெரியுது சேட்டை நண்பா!

பிரபாகர்...

Chitra said...

Present sir. ha,ha,ha,ha.....!!!
super assessment!

முகுந்த் அம்மா said...

sema kalakkal.

Good one with a message

மசக்கவுண்டன் said...

எனக்கு ராசி பலன் வொர்க் அவுட் ஆகறதில்லை.

சேட்டைக்காரன் said...

//ஹெக்ஹே..........

செம கலாட்டா....//

ஹி..ஹி! மிக்க நன்றிங்கண்ணே! :-)))

சேட்டைக்காரன் said...

//இப்பதான் சேட்டை களை கட்டுது...//

எல்லாம் உங்களைப் போன்றோர் அடிக்கடி வந்து உற்சாகப்படுத்துவதனால் தான் அண்ணே! மிக்க நன்றி!!!

சேட்டைக்காரன் said...

//ஹி...ஹி... நாம விருச்சிகம் இல்ல!//

அதனால் என்ன, உங்க ராசி எதுவாயிருந்தாலும் அதையும் விட்டு வைக்கப்போறதில்லையே! :-))

//இது ஒரு ஸ்பெஷல் பலன் மாதிரி தெரியுது சேட்டை நண்பா!//

ஆஹா! புரிஞ்சுக்கிட்டீங்களா? :-)))))

மிக்க நன்றிங்க!!!!

சேட்டைக்காரன் said...

//Present sir. ha,ha,ha,ha.....!!!
super assessment!//

நான் சொல்லலீங்க! ராசிகளோட தசாபலன்கள் சொல்லுது. :-)

மிக்க நன்றிங்க!!

சேட்டைக்காரன் said...

//ema kalakkal.//

மிக்க நன்றிங்க! :-)

//Good one with a message//

ஆமாம், இதுலே குறைந்தது ஒரு செய்தியாவது இருக்கு! கண்டுபிடிச்சிட்டீங்க!! :-))))))

சேட்டைக்காரன் said...

//எனக்கு ராசி பலன் வொர்க் அவுட் ஆகறதில்லை.//

ஏன் கவுண்டரே? என்ன ராசின்னு சொல்லுங்க, தனியா பலன் அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றிங்கோ!! :-)))

கண்ணகி said...
This comment has been removed by the author.