Monday, April 26, 2010

பயணத்தில் ஓர் நாள்!

எனது நண்பர்களும் சகபதிவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி: அடுத்து என்ன எழுதப்போகிறாய் சேட்டை?

பெரும்பாலும் என்னிடம் பதில் தயாராகவே இருந்து வந்திருக்கிறது. அனுபவசாலிகளுடன் கிடைத்திருக்கிற நட்பு காரணமாய், அவர்களின் அறிவுரை காரணமாய், எனது கண்கள் எப்போதும் அகலத் திறந்து என் நாலாபக்கங்களிலும் நடக்கிற நிகழ்ச்சிகளை அவதானித்து, அசைபோட்டு, சில நேரங்களில் துணிந்து எழுதவும் தூண்டியிருக்கின்றன. ஆனால், இது, நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்து, தள்ளிப்போட்டு, இதில் வண்டல் படிவதற்கு முன்னர் எழுதிவிடலாம் என்று இப்போது முடிவெடுத்து எழுதியது.

இந்தப் பதிவை எழுத நான் படித்த இரு பதிவுகளும் காரணம். ஒன்றை எழுதியவர் பெண்; மற்றொன்றை எழுதியவர் ஆண்! இருவருமே சொல்ல வந்த கருத்து பெரும்பாலோனோரின் ஆதங்கத்தின் மற்றோர் வெளிப்பாடுதான்! ஆனால், வாசிப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட எழுத்துக்குயுக்தி அருவருப்பானது. அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்காக வார்த்தைகள் போர்த்த வேண்டிய கண்ணியத்தைத் துகிலுரிந்து அரைநிர்வாணமாக ஆட விட்டிருந்தது அவர்களது நோக்கத்தைக் கொச்சைப்படுத்தியிருந்தது என்பதே என் முடிபு.

ஒரு விதத்தில் சென்னையில் நானும் ஒரு தினசரி கூட்டுவண்டிப்பயணியாக இருப்பது எழுத மிகவும் உதவியாக இருக்கிறது. தினசரிப்பயணங்களின் போது பல குணாதிசயங்கள் என்னுடன் பயணிக்கின்றன; பக்கத்தில் அமர்ந்து செய்தித்தாளையோ, கந்தர் சஷ்டி கவசத்தையோ, முரசொலியையோ அல்லது ஏதேனும் கேள்விப்பட்டிராத ஆங்கிலப்புத்தகத்தையோ விரித்துப் படித்துக் கொண்டு வருகிற மனிதர்கள்! ’இது எக்மோரா பார்க்கா?’ என்று ஜன்னல் வழியாகக் கேட்டு விட்டு, பெட்டிக்குள்ளே தட்டுத்தடுமாறி ஏறி மைக்கைப் பிடித்துக்கொண்டு ’பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த...,’ என்று பாடிப் பிச்சையெடுக்கிற பார்வையற்றவர்கள்! பத்து ரூபாய்க்கு சென்னை வரைபடம் விற்பவர்கள்! எழும்பூரிலும், பூங்காவிலும் இறங்கி யாரையோ வழியனுப்பவோ அன்றி வரவேற்கவோ செல்லுகிற நடுத்தரக் குடும்பங்கள்! நெரிசலில் உச்சுக்கொட்டியபடி நின்று பயணிக்கிறவர்கள்! உரக்க உரக்க வானொலி கேட்டுக்கொண்டு வருகிறவர்கள்! கதவருகே காற்றில் கேசம் பறக்க நின்று ஆபத்தாய் பயணிக்கிற மாணவர்கள், மாணவிகள்! இவர்களைப் பற்றி எழுதுவதற்கே இன்னுமோர் ஆயுளும், இன்னும் சில நூறு பதிவுகளும் தேவைப்படலாம் போலிருக்கிறது.

அப்படியொரு கூட்டுவண்டி நெரிசலில் தான் அந்தக் குடும்பத்தைப் பார்த்தேன். சொந்த வேலை காரணமாக, அரை நாள் விடுப்பு எடுத்திருந்ததால், நண்பகலில் நான் ஏறிய வண்டியில், மாம்பலத்தில் அந்தக் குடும்பமும் ஏறியது.

அந்தத் தம்பதியருக்கு வயது நாற்பதுக்குள் இருக்க வேண்டும். இரட்டை ஜடையுடன் ஒரு பள்ளி மாணவி-சீருடையைக் கழற்றாமலே! உடன் அவளை விடவும் இளைய ஒரு சிறுவன் - அவனும் சீருடையில் தானிருந்தான். அவர்கள் இருவரது புத்தகப்பைகளையும் பெற்றோர்கள் ஆளுக்கு ஒன்றாக வாங்கி வைத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களது தமிழ் உச்சரிப்பு, மற்றும் பேச்சில் அடிபட்ட "காந்திபுரம் பஸ் நிலையம், பீளமேடு, அவிநாசி சாலை’ போன்ற பெயர்களிலிருந்து அவர்கள் கோவைக்காரர்களாய் இருக்கலாம் என்று தோன்றியது. அந்தப் பெண்ணும், அந்தச் சிறுவனும் உற்சாகக்குவியலாகப் பேசிக்கொண்டே வந்து கொண்டிருக்க, அவர்களின் அம்மாவின் முகத்தில் மிகுந்த மலர்ச்சியும், அப்பாவின் முகத்தில் சற்றே அடக்கமுயன்றும் அடங்காப் பெருமிதமும் தென்படுவதை என்னால் கவனிக்க முடிந்தது. மகிழ்ச்சியான குடும்பங்களை அல்லது மகிழ்ச்சியாக இருப்பவர்களாய்த் தென்படுகிற குடும்பங்களைக் காண்பதிலும் ஒரு அலாதி சுகம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கலகலவென்று சிரித்துப்பேசுகிற குழந்தைகளை, அவர்களுக்கு இரண்டுங்கெட்டான் வயதாகியிருந்தாலும் காண்பது ஒரு சுகானுபவம் தான்!

அவர்கள் நால்வர் முகத்திலும் நின்றுகொண்டே பயணம் செய்வது குறித்த வருத்தமிருப்பதாய்த் தெரியவில்லை. அனேகமாக அவர்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்திருக்கலாம்; எழும்பூரிலோ பூங்காவிலோ இறங்கி, எங்கிருந்தோ வருகிற அல்லது எங்கேயோ போகிற யாரையோ பார்க்க சென்று கொண்டிருக்கலாம். அந்தக் குழந்தைகளின் சீருடைகளைப் பார்த்தபோது, இப்படித் தான் இருந்தாக வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.

கோடம்பாக்கத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பி நுங்கம்பாக்கத்தை ரயில் சென்று சேரும்வரை, சிலர் புருவங்களை உயர்த்திப் பார்க்கிற அளவுக்கு அந்தப் பெண்ணும், அவள் தம்பியும் உரக்கச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

கொடுமை! அவர்களது சிரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை!

ரயில் நுங்கம்பாக்கம் நிலையத்தில் நின்றதும் திபுதிபுவென்று கல்லூரி மாணவர்களின் கூட்டம் பெட்டிக்குள்ளே பிழியப் பிழிய ஏறி நிரம்பினர். அதன்பிறகு, அந்தக் குடும்பத்தை என்னால் பார்க்க முடியாத அளவுக்கு ரயிலில் கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ, பூங்கா ரயில் நிலையம் வரும்வரையில் அந்தப் பெண்ணும், அவளது தம்பியும் பேசிய பேச்சோ, சிரித்த சிரிப்போ எனது காதுகளில் விழவில்லை. எழும்பூர் வரும்வரையில் அவர்கள் எங்கிருப்பார்கள் என்று என்னால் பார்க்கவே முடியவில்லை.

எழும்பூரில் சற்றுக் கூட்டம் குறைந்தது. தற்செயலாக நான் பார்த்தபோது, அந்தப் பெண்ணை அவளது தாயார் ஆதுரமாக அணைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சிறுமி அழுது கொண்டிருப்பது போலிருந்தது. அந்தச் சிறுவன் அப்பாவுடன் நின்றவாறே, அழுது கொண்டிருந்த தனது அக்காவையும், அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த அம்மாவையும் மலங்க மலங்க வெறித்துக்கொண்டிருந்தான்.

’என்ன நடந்திருக்கும்’ என்று உறுதியாக என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், அந்தப் பெட்டியில் இன்னும் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒரு சில கல்லூரி மாணவர்கள் இவர்களைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது.

எழும்பூரிலிருந்து ரயில் கிளம்பி பூங்காவை அடைந்ததும், அந்தக் குடும்பம் இறங்கிச் சென்றது. இப்போது, அந்தப் பெண்ணின் தோளைப் பிடித்து அணைத்தவாறே அந்த அப்பா, அவளுக்கு ஏதோ ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். அந்தச் சிறுவன் அம்மாவிடம் ’என்னம்மா நடந்தது?’ என்று கேட்கிறான் என்று ஊகிக்க முடிந்தது; ஆனால், அம்மா பதில் சொல்லாமல் கணவனைப் பின்தொடர்ந்து செல்வதை ரயில் கிளம்பும் வரையில் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலும் ஏறக்குறையக் காலியாகியிருந்தது.

பூங்காவை விட்டு ரயில் கிளம்பியதும், அந்த ஒரு சில கல்லூரி மாணவர்கள் உரக்கச் சிரித்தனர். அவர்களின் சிரிப்பு எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிய வைத்தது.

அப்பாவித்தனமாக கலகலவென்று சிரித்துப்பேசி வந்து கொண்டிருந்த அந்தச் சிறுமியிடம் இந்த மாணவர்களில் ஒருவனோ அன்றி இவர்கள் அனைவருமோ ஏதேனும் சில்மிஷம் செய்திருக்கக்கூடும் என்பது புரிந்தது. சிறுமியிலிருந்து குமரியாகப்போகிற அந்த இடைப்பட்ட இக்கட்டான வயதில், அந்தப் பெண்ணை அதிர்வுக்குள்ளாக்கி, அழவைக்கிற அளவுக்கு அவளை அந்த சில்மிஷம் தாக்கியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

நடுத்தரக்குடும்பங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. ’நம் பெண் நமக்குத் தான் குழந்தை; மற்றவர்களுக்கு அல்ல,’ என்று உறைத்திருக்கும் அவர்களுக்கு! அனேகமாக அதன் பிறகு அந்தப் பெண்ணால் முன்னைப் போல கலகலவென்று சிரித்து விளையாட முடியாமல் போகலாம். அந்தச் சிறுவனுக்கே கூட பெற்றோர்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் - அக்காவேயானாலும் கூட, சிலபல எல்லைக்கோடுகள் வரையப்படலாம்.

நேற்றுவரை குழந்தையாயிருந்தவள், திடீரென்று பெண்ணாகி விட்டாள் என்ற திடுக்கிடும் உண்மையை அந்தச் சம்பவம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். அவர்களது பொறுப்பை அதிகரித்திருக்கும்; சுமையைக் கூட்டியிருக்கும். நான்கு சுவர்களைத்தாண்டி வருவதென்றால் என்னவென்று அந்தப் பெண்ணுக்கு சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் துருவித் துருவிப் பல கேள்விகளைக் கேட்டிருக்கலாம் - ஏன் அக்கா அழுகிறாள் என்பது தொடங்கி! அனேகமாக, அந்தத் தகப்பன் மவுனத்தைத் தவிர வேறு எதையும் பதிலாகச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால்...! கண்டிப்பாக அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா சொன்னால் நல்லது. கலகலவென்று சிரித்துக்கொண்டு வந்த அக்காவைக் கண்ணீர் விடச் செய்தது எது என்று விளக்கிச் சொன்னால் நல்லது. அவனுக்கும் நல்லது! எதிர்காலத்தில் அவன் பேருந்திலோ, ரயிலிலோ பார்க்கப்போகிற பெண்களுக்கும் நல்லது!

அன்று சொல்லியிருக்காவிட்டாலும் பரவாயில்லை; பிறிதொரு சந்தர்ப்பத்தில், அவன் சற்று முதிர்ச்சியடைகிற போது சொல்ல வேண்டியது, அவரது கடமையென்றே நினைக்கிறேன்.

அந்தத் தகப்பன் ரயில்வே காவல்நிலையத்தில் ஏன் புகார் செய்யவில்லை? நீ ஏன் அந்த மாணவர்களைத் தட்டிக் கேட்கவில்லை? - இது போன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை! நானும் உருண்டு சென்று கொண்டிருக்கும் கூழாங்கற்களில் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கிறேன்.

ஆனால், இனி ஒவ்வொரு முறை அந்தப் பெண் ரயிலில் போனாலோ, ரயிலின் சத்தம் கேட்டாலோ, தொலைக்காட்சியில் பார்த்தாலோ கூட அவளும், அவள் குடும்பத்தாரும் வெம்புவார்களோ என்னவோ? அந்தப் பெண்ணுக்கு தன்னைத் தீண்டியவனின் விகாரம் கண்முன்னே விசுவரூபமெடுத்து நிற்குமோ என்னவோ?

அதே சமயம், எங்கோ ஒரு ரயிலிலோ, பேருந்திலோ, எவனோ ஒருவன் தனது வக்கிர விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கக்கூடும் என்பதும் உறைக்காமலில்லை!

68 comments:

எல் கே said...

intha mathiri kayavargal thookil tongavidapada vendiyavargal

ஜில்தண்ணி said...

சென்னை வாசிகளின் ஆதங்கம் தங்கள் பதிவில்
தெரிகிறது

\\அன்று சொல்லியிருக்காவிட்டாலும் பரவாயில்லை; பிறிதொரு சந்தர்ப்பத்தில், அவன் சற்று முதிர்ச்சியடைகிற போது சொல்ல வேண்டியது, அவரது கடமையென்றே நினைக்கிறேன்.\\

கண்டிப்பாக இந்த சமுதாயத்தை பற்றி அந்த பெண்ணுக்கு சொல்லிதான் ஆகனும்

சைவகொத்துப்பரோட்டா said...

இது மாதிரி நடந்து கொள்பவர்கள், ஒரு
நிமிடம் தங்கள் சகோதரிகளை நினைத்து கொண்டால்
மனிதனாக மாற வாய்ப்பு உள்ளது.

செ.சரவணக்குமார் said...

மிக அருமையான பதிவு சேட்டைக்காரன். இந்த சம்பவத்திற்குப் பிறகான அந்தக் குழந்தையின் மனநிலையை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

//ஆனால்...! கண்டிப்பாக அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா சொன்னால் நல்லது. கலகலவென்று சிரித்துக்கொண்டு வந்த அக்காவைக் கண்ணீர் விடச் செய்தது எது என்று விளக்கிச் சொன்னால் நல்லது. அவனுக்கும் நல்லது! எதிர்காலத்தில் அவன் பேருந்திலோ, ரயிலிலோ பார்க்கப்போகிற பெண்களுக்கும் நல்லது!

அன்று சொல்லியிருக்காவிட்டாலும் பரவாயில்லை; பிறிதொரு சந்தர்ப்பத்தில், அவன் சற்று முதிர்ச்சியடைகிற போது சொல்ல வேண்டியது, அவரது கடமையென்றே நினைக்கிறேன்.//

சரியாகச் சொன்னீர்கள்.

பனித்துளி சங்கர் said...

/////ஆனால்...! கண்டிப்பாக அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா சொன்னால் நல்லது. கலகலவென்று சிரித்துக்கொண்டு வந்த அக்காவைக் கண்ணீர் விடச் செய்தது எது என்று விளக்கிச் சொன்னால் நல்லது. அவனுக்கும் நல்லது! எதிர்காலத்தில் அவன் பேருந்திலோ, ரயிலிலோ பார்க்கப்போகிற பெண்களுக்கும் நல்லது!//////

மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே . அவர் மட்டும் அல்ல இது போன்ற கொடுமைகளை சந்திக்கப் போகும் அல்லது இதுபோன்ற அநாகரிகமான செயல்களை செய்ய நினைக்கும் பலருக்கு இந்த பதிவும் ஒரு பாடமாக இருக்கட்டும் . மிகவும் சிறப்பான பதிவு நண்பரே . பகிர்வுக்கு நன்றி .

தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சத்ரியன் said...

// நானும் உருண்டு சென்று கொண்டிருக்கும் கூழாங்கற்களில் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கிறேன்.//

அவரவர் குடும்பச்சூழலை நினைத்தே ’இதுபோன்ற துர் செயல்களை’ கண்டும் காணாததுபோல் செல்லவேண்டிய நிர்பந்தம்.

இப்பதிவு ‘சேட்டையின்’ மறுபக்கம்!

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க. பாவமா இருக்கு அந்த குடும்பத்த நினைச்சா. இது மாதிரி மத்த இடங்கள்ளயும் நடந்திட்டுருக்குமுன்னு நினைச்சா :-((((

Chitra said...

Losing the age of innocence!

இந்த இடுகையை படித்து முடித்த போது, கண்களும் மனமும் கலங்கி விட்டன. கல்லூரி மாணவர்களே இப்படி நடந்து கொண்டார்கள் என்றால்.......???
என்ன ஒரு குரூர புத்தி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
இந்தப் பதிவை எழுத நான் படித்த இரு பதிவுகளும் காரணம். ஒன்றை எழுதியவர் பெண்; மற்றொன்றை எழுதியவர் ஆண்! இருவருமே சொல்ல வந்த கருத்து பெரும்பாலோனோரின் ஆதங்கத்தின் மற்றோர் வெளிப்பாடுதான்
//

யாருண்ணே அது.. சொல்லுங்க...என்னானு பார்த்துபுடலாம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அந்த சம்பவம் நடந்த பொது . யாரும் எதிர்க்கவில்லையா சேட்டை..?

இந்த அக்கிரமம் , செய்தவனின் கூடப்பிறந்தவர்களுக்கு நடந்தால்.. என்ன செய்வான்..?
மனித போர்வை போர்த்திய மிருகங்கள் அவர்கள்...

பிரபாகர் said...

சேட்டை...

என்ன சொல்ல. இது போல் பல விஷயங்கள் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. என் தம்பிகளிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான். உன் தங்கைகளை நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் கண்டிக்கவேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள் என்றுதான். சகோதரிகளிடமும் அவ்வாறே...

சுய ஒழுக்கம் இல்லாததுதான் காரணம் நண்பா!

நிறைய கஷ்டாமாயிருக்கிறது இந்த இடுகையினைப்படித்து...

பிரபாகர்...

மின்மினி RS said...

ரொம்ப வருத்தமான சம்பவம்; இவர்களைமாதிரி எத்தனபேர் ரயிலிலும் பஸ்ஸிலேயும் பெண்களை சில்மிசம் பண்ணறதுக்குன்னே வாராங்க. அவங்களுக்கு இது தப்புன்னு உணரும் காலம் வராமலா போயிரும்?..

நல்ல பகிர்வு.

கிரி said...

கோபப்படுவதை தவிர எதுவும் செய்ய முடியிவில்லை :-( இது போல எங்கும் நடந்து கொண்டு இருக்கிறது

Unknown said...

மனித மிருகங்கள்

vasu balaji said...

தினம் ரயிலில் நான் பார்க்கும் கொடுமையிது. கல்லூரி மாணவர் போலிருக்கும் காலிகளும் இதற்காகவே வருபவர்கள். அதனாலேயே தினசரி வருபவர்கள் எதுவும் கேட்க முடிவதில்லை. காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இந்தக் காலித்தனம் மட்டும் மாறவில்லை. 30 வருடங்களாக, பஸ்ஸிலும் ரயிலிலும் ஏன் பண்டிகைக் காலங்களில் ரங்கநாதன் தெருவிலும், கடைகளிலும் நடக்கும் வன்புணர்வு இது. இந்த ஒரு இடுகை போதும் உங்கள் எழுத்தாற்றலுக்கு.

Unknown said...

மனசை வலிக்க செய்யும் பதிவு சே ரா

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை அருமையா சொல்லிருக்கீங்க.. இந்தமாதிரி ஆட்கள் நிறையபேர் உலாவுகிறார்கள்.. என்னத்த சொல்ல...

Prasanna said...

தொடர் கொலைகள் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை.. இப்படி செய்கிறவர்களும் Psycho தான்..

ஸ்ரீராம். said...

சமூக அக்கறையுள்ள பதிவு. ஆனால் இதுபோன்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும் பெரும்பான்மையான பொதுஜனம் இதைத் தட்டிக் கேட்பதில்லை.

Rekha raghavan said...

பதிவை படித்து முடித்ததும் மனசு கணத்தது .

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

☀நான் ஆதவன்☀ said...

விருப்பமில்லா பெண்ணைகளையும், சிறுமிகளையும் பாலியலில் ஈடுபடவோ தொந்தரவோ கொடுக்கும் ஆண்களுக்கு வளைகுடா நாடுகளின் உச்சபட்ச தண்டனையை கொடுக்கலாம் தான். ஆனால் பாழாய் போன செக்ஸ் வறட்சி மாணவர்களை என்ன செய்ய தூண்டும்?

நமக்கு யாரும் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை தரவில்லை. கடந்து வந்ததால் நமக்கு இதெல்லாம் புரிகிறது. நாமாவது நமது குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை தரவேண்டும்.

சிநேகிதன் அக்பர் said...

மிக கொடுமை.

நடுத்தர வர்க்கத்தினராக பிறந்துவிட்டதால் கொடுக்கப்படும் தண்டனையா இது?

ஆண்டாண்டுகாலமாக இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சொல்ல வந்ததை மிக அழகாக புரியும் விதத்தில் மனதில் பதிந்து விட்டீர்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இது போன்ற செயல்களுக்குப் பல காரணங்களை யோசிக்க முடிகிறது.

சமூக அமைப்பு, புரிதல்களில் கோளாறு, வளர்ப்பு, நாயகர்களைத் தொடர்தல் என்று எத்தனையோ.. இருந்தாலும்.. இவர்கள் செய்தது பெருங்குற்றும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஆனால்...! கண்டிப்பாக அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா சொன்னால் நல்லது. கலகலவென்று சிரித்துக்கொண்டு வந்த அக்காவைக் கண்ணீர் விடச் செய்தது எது என்று விளக்கிச் சொன்னால் நல்லது. அவனுக்கும் நல்லது! எதிர்காலத்தில் அவன் பேருந்திலோ, ரயிலிலோ பார்க்கப்போகிற பெண்களுக்கும் நல்லது///

நல்ல விசயம்..

ஆனால் பார்க்கிற பெண்களை சகோதரியாய் நினைக்கச் சொலலறதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லை, சகோதரியா நினைச்சா சைட்டோ கிண்டலோ அவங்களால் அடிக்கமுடியாதும்பாங்க.. ஆனா மேலே கைவைப்பது அசிங்கமான வேலை ,கேவலமானங்களாக தங்களை மாத்திக்கிறதை அவங்க தவிர்க்கலாம். இதுக்கு நீங்க சொன்ன அப்பாவின் வழிகாட்டுதல் கண்டிப்பா அவசியம்.

சுதாகர் said...

என்னத்த சொல்லுறது சேட்டை....எல்லா இடத்துலேயும் இப்படிபட்ட அத்து மீறல்கள் நடந்துகிட்டுதான் இருக்குது.....
இன்னும் ஓர் நெகிழ்சியான பதிவு

Paleo God said...

// ’நம் பெண் நமக்குத் தான் குழந்தை; மற்றவர்களுக்கு அல்ல,’//

எல்லாவற்றிற்குமான பதில் இதுதான்.

கூடி இருப்பவர்கள் மரண அடி குடுத்தாலொழிய இவர்கள் திருந்த மாட்டார்கள்.

கண்ணகி said...

ஒவ்வொரு வயதிலும் பெண்கள் கடக்கும் சொல்லமுடியாத்துயர்களில் இதுவும் ஒன்று...

மங்குனி அமைச்சர் said...

என்னாப்பா சேட்ட,மனசே சரியில்லப்பா , நல்லா சொல்லிருக்க ,

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

//
இந்தப் பதிவை எழுத நான் படித்த இரு பதிவுகளும் காரணம். ஒன்றை எழுதியவர் பெண்; மற்றொன்றை எழுதியவர் ஆண்! இருவருமே சொல்ல வந்த கருத்து பெரும்பாலோனோரின் ஆதங்கத்தின் மற்றோர் வெளிப்பாடுதான்
//

யாருண்ணே அது.. சொல்லுங்க...என்னானு பார்த்துபுடலாம்...////


ஆமா சேட்டா , யார்ன்னு சொல்லேன்

ஹுஸைனம்மா said...

//’நம் பெண் நமக்குத் தான் குழந்தை; மற்றவர்களுக்கு அல்ல//

இதைப் பல பெற்றோர்கள் காலம் கடந்தே உணர்கிறார்கள். இப்பவெல்லாம், (ஆண்/பெண்)குழந்தைகளை ரொம்பக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கீறது.

//அந்தப் பெண்ணின் தோளைப் பிடித்து அணைத்தவாறே அந்த அப்பா, அவளுக்கு ஏதோ ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். //

நிச்சயம் அச்சிறுமி இவ்வதிர்ச்சியிலிர்ந்து விரைவில் மீண்டு விடுவாள் என்ற நம்பிக்கை வருகிறது!!

அநாகரீக குத்துப்பாடல்களுக்கு அரைகுறை ஆடையோடு பிள்ளைகளைக் குத்தாட்டம் ஆடவிடும் பெற்றோர்கள் உணரவேண்டும் இவ்வபாயத்தையும்!!

Unknown said...

இந்த இடுகையை இதே நடையுடன் கல்லூரியில் , பள்ளியில் உள்ள இளம் வயது வாத்தியார்கள் சொன்னால் நிச்சயம் மாணவர்கள் திருந்துவார்கள். கல்லூரி , பள்ளி மாணவர்கள் நல்லதைச் சொன்னால் கேட்கக்கூடியவர்களே.

நமது தங்கைக்கும், அண்ணன்கள் இல்லாத ஒரு பெண்ணூக்கும் இதே மாதிரி நடந்தால் என்ன விளைவு, அவர்கள் மனம் என்ன பாடுபடும் , யாரிடம் சொல்வார்கள் என்பதை யோசிக்கச் சொன்னால் இளம் வயது மாணவர்கள் கண்டிப்பாக திருந்துவார்கள்.

பிரேமா மகள் said...

சபாஷ் சேட்டை....

மிக அருமையான பதிவு...

நடுத்தர குடும்பத்தில் மட்டுமல்ல... எல்லா தரப்பிலும் இப்படி இளம் வயதில் பெண்களுக்கு கொடுமை நடந்திருக்கிறது.. ஏன் நானே இது போன்ற கொடுமைகளை கடந்து வந்திருக்கலாம்.. வெளியே சொல்லாமல் போலியாய் நடிக்கலாம்... என் அப்பாவோ, என் கணவராகப் போகிறவரோ கூட இப்படி மற்றோரு பெண்ணிடம் நடந்திருக்கலாம்..

அதற்காக நான் ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்தை குற்றம் சாட்டவில்லை.. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை பயன்படுத்தும் சுயநல வாதிகள் ஆண்கள்.. அந்த வர்க்கத்துக்கே ஒரு வித திமிரும் மெத்தனமும் இருக்கிறது.. அது அவர்கள் ஜீனில் ஊறிப் போனதாக இருக்கலாம்...

ஆனால் இந்த நிலை மட்டும் மாறும் என்று தோன்றவில்லை..

ரிஷபன் said...

கண்டிப்பாக அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா சொன்னால் நல்லது. கலகலவென்று சிரித்துக்கொண்டு வந்த அக்காவைக் கண்ணீர் விடச் செய்தது எது என்று விளக்கிச் சொன்னால் நல்லது. அவனுக்கும் நல்லது! எதிர்காலத்தில் அவன் பேருந்திலோ, ரயிலிலோ பார்க்கப்போகிற பெண்களுக்கும் நல்லது!
யெஸ்!.. அப்படியே ஆமோதிக்கிறேன்..

நீச்சல்காரன் said...

அண்ணே,
இந்த பதிவில உங்கள் நடையும் சூப்பரா இருக்கு
வாழ்த்துக்கள்

settaikkaran said...

LK said...

//intha mathiri kayavargal thookil tongavidapada vendiyavargal//

கடுமையான தண்டனைகளைக் காட்டிலும், சரியான புரிதல்கள் சரியான பிராயத்தில் போதிக்கப்படுவது பலனளிக்கும் என்பது என் அபிப்ராயம். மிக்க நன்றி!

settaikkaran said...

ஜில்தண்ணி said...

//சென்னை வாசிகளின் ஆதங்கம் தங்கள் பதிவில் தெரிகிறது//

சென்னை மட்டுமல்ல; இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தான் அதிகம் என்று அண்மையில் ஒரு புள்ளி விபரத்தைப் பார்த்தேன். மனம் நொந்தேன்!

//கண்டிப்பாக இந்த சமுதாயத்தை பற்றி அந்த பெண்ணுக்கு சொல்லிதான் ஆகனும்//

அந்தப் பெண்ணுக்குச் சொல்வதும், அதை விட முக்கியமாக அவள் தம்பிக்கு உறைக்கிற மாதிரி புரியவைப்பதும் மிக மிக முக்கியமாகும்.

மிக்க நன்றி!

settaikkaran said...

சைவகொத்துப்பரோட்டா said...

//இது மாதிரி நடந்து கொள்பவர்கள், ஒரு நிமிடம் தங்கள் சகோதரிகளை நினைத்து கொண்டால் மனிதனாக மாற வாய்ப்பு உள்ளது.//

அப்படி சகோதரிகள் போல எண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே நம் போன்றவர்களின் தொடர்ந்த ஏக்கமாக இருந்து வருகிறது.

மிக்க நன்றி!

settaikkaran said...

செ.சரவணக்குமார் said...

//மிக அருமையான பதிவு சேட்டைக்காரன். இந்த சம்பவத்திற்குப் பிறகான அந்தக் குழந்தையின் மனநிலையை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.//

கண்டிப்பாக, அந்தக் குடும்பம் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளச் சில நாட்கள் பிடித்திருக்கக் கூடும். ஆனால், சில விபரீத அனுபவங்களைத் தள்ளிவிட்டு நடப்பது குழந்தைகளுக்கு இயலாத காரியமாய் இருக்குமோ?

//சரியாகச் சொன்னீர்கள்.//

மிக்க நன்றி!!

settaikkaran said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே . அவர் மட்டும் அல்ல இது போன்ற கொடுமைகளை சந்திக்கப் போகும் அல்லது இதுபோன்ற அநாகரிகமான செயல்களை செய்ய நினைக்கும் பலருக்கு இந்த பதிவும் ஒரு பாடமாக இருக்கட்டும் . மிகவும் சிறப்பான பதிவு நண்பரே . பகிர்வுக்கு நன்றி.//

விரிவான பின்னூட்டத்துக்கும் உயர்வான கருத்துக்கும் தொடரும் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி! :-)

தொடருங்கள் மீண்டும் வருவேன்

settaikkaran said...

’மனவிழி’சத்ரியன் said...

//அவரவர் குடும்பச்சூழலை நினைத்தே ’இதுபோன்ற துர் செயல்களை’ கண்டும் காணாததுபோல் செல்லவேண்டிய நிர்பந்தம்.//

அதே! கண்டும் காணாமல் சென்றுவிட்டு, உறுத்துகிற மனதை உறங்க வைக்க கவனத்தைத் திசைதிருப்புவதே வாடிக்கையாகி வருகிறது நண்பரே!

//இப்பதிவு ‘சேட்டையின்’ மறுபக்கம்!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

கபீஷ் said...

//நல்லா எழுதியிருக்கீங்க. பாவமா இருக்கு அந்த குடும்பத்த நினைச்சா. இது மாதிரி மத்த இடங்கள்ளயும் நடந்திட்டுருக்குமுன்னு நினைச்சா :-((((//

இந்த மாதிரி அனுதினமும் நடந்து கொண்டிருப்பதாகவே, பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த விளையாட்டு குடும்பங்களின் நிம்மதியைக் குலைக்கிற விபரீதத்தை இவர்கள் உணர்ந்தால் தான் உருப்பட முடியும்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

Chitra said...

//Losing the age of innocence!

இந்த இடுகையை படித்து முடித்த போது, கண்களும் மனமும் கலங்கி விட்டன. கல்லூரி மாணவர்களே இப்படி நடந்து கொண்டார்கள் என்றால்.......???
என்ன ஒரு குரூர புத்தி!//

இது ஒரு தொடர்கதையாய், தினசரிக்காட்சியாய் மனதைப் பிய்த்துத் தின்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வென்று தான் புரியாமல், இது போல புலம்பிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

மிக்க நன்றி!!

settaikkaran said...

பட்டாபட்டி.. said...

//அந்த சம்பவம் நடந்த பொது . யாரும் எதிர்க்கவில்லையா சேட்டை..?//

இப்படியொரு நிகழ்வு நடந்ததையே எல்லாம் முடிந்தபிறகு தானே புரிந்து கொள்ள முடிகிறது? :-(

//இந்த அக்கிரமம் , செய்தவனின் கூடப்பிறந்தவர்களுக்கு நடந்தால்.. என்ன செய்வான்..?//

முதலில் அவர்களின் சகோதரிகள் இவர்களிடம் சொல்வார்களா? அந்த தைரியத்தில் தானே இவர்கள், நம் சகோதரிகள் மட்டும் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதி இப்படி விளையாடுகிறார்கள்?

//மனித போர்வை போர்த்திய மிருகங்கள் அவர்கள்...//

சந்தேகமின்றி....!

//யாருண்ணே அது.. சொல்லுங்க...என்னானு பார்த்துபுடலாம்...//

அவர்களுக்கு நாம் ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? தனிமடலில் அனுப்புகிறேன்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

பிரபாகர் said...

//என்ன சொல்ல. இது போல் பல விஷயங்கள் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. என் தம்பிகளிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான். உன் தங்கைகளை நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் கண்டிக்கவேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள் என்றுதான். சகோதரிகளிடமும் அவ்வாறே...//

சரியாகச் சொன்னீர்கள்!

இச்சம்பவம் நடந்தபோது அதைத் தெரிவித்த விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் நீங்களும் ஒருவர். இதை எழுதுவதா வேண்டாமா என்று அலைபாய்ந்து, இறுதியில் எழுதியே தீர்வது என்று இப்போது தான் போட முடிந்திருக்கிறது எனக்கு.

//சுய ஒழுக்கம் இல்லாததுதான் காரணம் நண்பா!//

தவறான புரிதல்களும், பின்விளைவுகள் குறித்துக் கவலைப்படாத அலட்சியமும், அசட்டுத்துணிச்சலும் தான் இந்த மிருகத்தனத்துக்கு மேலும் காரணங்கள்! மிக்க நன்றி!!

நிறைய கஷ்டாமாயிருக்கிறது இந்த இடுகையினைப்படித்து...

settaikkaran said...

கிரி said...

//கோபப்படுவதை தவிர எதுவும் செய்ய முடியிவில்லை :-( இது போல எங்கும் நடந்து கொண்டு இருக்கிறது//

மிகவும் உண்மை! எத்தனை நாள் தான் பொறுப்பதோ?

மிக்க நன்றி!!

settaikkaran said...

மின்மினி said...

// ரொம்ப வருத்தமான சம்பவம்; இவர்களைமாதிரி எத்தனபேர் ரயிலிலும் பஸ்ஸிலேயும் பெண்களை சில்மிசம் பண்ணறதுக்குன்னே வாராங்க. அவங்களுக்கு இது தப்புன்னு உணரும் காலம் வராமலா போயிரும்?..//

அது தவறென்று புரிய வைக்கிற கடமை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்டு என்று எண்ணுகிறேன். கல்வி என்பது ஓரளவு தனிமனித ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால், நலன் பயக்குமல்லவா?

மிக்க நன்றி!!

நல்ல பகிர்வு.

settaikkaran said...

முகிலன் said...

//மனித மிருகங்கள்//

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

வானம்பாடிகள் said...

//கல்லூரி மாணவர் போலிருக்கும் காலிகளும் இதற்காகவே வருபவர்கள். அதனாலேயே தினசரி வருபவர்கள் எதுவும் கேட்க முடிவதில்லை.//

உண்மை! காலிகளின் கூட்டம் நகரெங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இவர்களை அடையாளம் காணுவதே கடினமாகி வருகிறது ஐயா.

//30 வருடங்களாக, பஸ்ஸிலும் ரயிலிலும் ஏன் பண்டிகைக் காலங்களில் ரங்கநாதன் தெருவிலும், கடைகளிலும் நடக்கும் வன்புணர்வு இது.//

ஐயோ, ரங்கநாதன் தெருவின் அலங்கோலங்களை எழுதினால், தாள முடியாது. அவ்வளவு அருவருப்பான மிருகங்கள் இதற்கென்றே திட்டமிட்டு வருகின்றன.

//இந்த ஒரு இடுகை போதும் உங்கள் எழுத்தாற்றலுக்கு.//

மனதுக்கு இப்போது கிடைத்துள்ள நிறைவை, வார்த்தைகளால் சொல்ல இயலாது. மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

joe said...

//மனசை வலிக்க செய்யும் பதிவு சே ரா//

வாருங்கள் ஜோசப் குரியன்! உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிகுந்த உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி!

settaikkaran said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//சேட்டை அருமையா சொல்லிருக்கீங்க.. இந்தமாதிரி ஆட்கள் நிறையபேர் உலாவுகிறார்கள்.. என்னத்த சொல்ல...//

ஆம் அண்ணே, இதைப் பொழுதுபோக்காக எண்ணுகிறவர்களை என்னவென்று சொல்வது?

மிக்க நன்றிண்ணே!

settaikkaran said...

பிரசன்னா said...

//தொடர் கொலைகள் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை.. இப்படி செய்கிறவர்களும் Psycho தான்..//

ஒருவகையில் நீங்கள் சொல்வது சரியே! இதுவும் ஒருவிதமான உளவியல் சித்திரவதையே!

மிக்க நன்றி!!

settaikkaran said...

ஸ்ரீராம். said...

//சமூக அக்கறையுள்ள பதிவு. ஆனால் இதுபோன்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும் பெரும்பான்மையான பொதுஜனம் இதைத் தட்டிக் கேட்பதில்லை.//

நிரம்ப சரி! ஒரு அபயக்குரல் கொடுத்தால் கூட்டம் சேர்ந்து விடும்! ஆனால், பாதிக்கப்பட்டவர்களும் குரல் கொடுப்பதில்லை; பார்ப்பவர்களுக்கும் அக்கறை வருவதில்லை! பெருமூச்சுக்களே மிச்சம்!

மிக்க நன்றி!!

settaikkaran said...

Blogger KALYANARAMAN RAGHAVAN said...

// பதிவை படித்து முடித்ததும் மனசு கணத்தது .//

எழுதுவதற்குள் பலமுறை மனம் கனத்தது; வலித்தது.

மிக்க நன்றி!!

settaikkaran said...

☀நான் ஆதவன்☀ said...

//விருப்பமில்லா பெண்ணைகளையும், சிறுமிகளையும் பாலியலில் ஈடுபடவோ தொந்தரவோ கொடுக்கும் ஆண்களுக்கு வளைகுடா நாடுகளின் உச்சபட்ச தண்டனையை கொடுக்கலாம் தான். ஆனால் பாழாய் போன செக்ஸ் வறட்சி மாணவர்களை என்ன செய்ய தூண்டும்?//


மிகவும் சரியாகக் கணித்திருக்கிறீர்கள். அரைகுறையாகப் புரிந்து கொண்டு எது சரி, எது தவறு என்ற குழப்பத்தில் இந்த விபரீதத்தில் இறங்குகிறவர்கள், அதை விளையாட்டாய்க் கருதுகிறார்கள்.

// நமக்கு யாரும் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை தரவில்லை. கடந்து வந்ததால் நமக்கு இதெல்லாம் புரிகிறது. நாமாவது நமது குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை தரவேண்டும்.//

ஆமோதிக்கிறேன். இதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரு கடமையாய் எண்ணிச் செய்ய வேண்டும்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

அக்பர் said...

//மிக கொடுமை.

நடுத்தர வர்க்கத்தினராக பிறந்துவிட்டதால் கொடுக்கப்படும் தண்டனையா இது?//

பொதுவிடங்களிலும் பேருந்துகளிலும் ரயில்களிலும் அல்லாடுகிறவர்கள் அவர்களும் அவர்களுக்குக் கீழே இருப்பவர்களும் தானே பாவம்?

// ஆண்டாண்டுகாலமாக இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.//

ஆமாம். எப்போது நிற்கும் என்பதே கேள்வி!

// சொல்ல வந்ததை மிக அழகாக புரியும் விதத்தில் மனதில் பதிந்து விட்டீர்கள்.//

மிக்க நன்றி!

settaikkaran said...

ச.செந்தில்வேலன் said...

//சமூக அமைப்பு, புரிதல்களில் கோளாறு, வளர்ப்பு, நாயகர்களைத் தொடர்தல் என்று எத்தனையோ.. இருந்தாலும்.. இவர்கள் செய்தது பெருங்குற்றும்..//

மிகவும் சரி! காரியங்கள் தீயவை என்றாலும் கூட, காரணங்களையும் களையெடுத்தாலொழிய, இது நிற்காமல் தொடருகிற ஆபத்து இருக்கிறது.

மிக்க நன்றி!!

settaikkaran said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...


//நல்ல விசயம்..ஆனால் பார்க்கிற பெண்களை சகோதரியாய் நினைக்கச் சொலலறதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லை, சகோதரியா நினைச்சா சைட்டோ கிண்டலோ அவங்களால் அடிக்கமுடியாதும்பாங்க..//

:-)

இது மிக மிக உண்மை! பார்க்கிற பெண்களை சகோதரியாக எண்ணுவது முடியாது தான். ஆனால், இது போன்று நிகழ்ந்தால் அது எத்தகைய மனவலியை ஏற்படுத்துமென்பதையாவது சகோதரிகளின் அனுபவங்கள் மூலம் அறிதல் நலம்.

//ஆனா மேலே கைவைப்பது அசிங்கமான வேலை ,கேவலமானங்களாக தங்களை மாத்திக்கிறதை அவங்க தவிர்க்கலாம். இதுக்கு நீங்க சொன்ன அப்பாவின் வழிகாட்டுதல் கண்டிப்பா அவசியம்.//

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு வந்து வழமை போல உங்களது கருத்துக்களைத் தெள்ளத்தெளிவாய் எழுதியமைக்கு மிக்க நன்றி!!

settaikkaran said...

சுதாகர் said...

//என்னத்த சொல்லுறது சேட்டை....எல்லா இடத்துலேயும் இப்படிபட்ட அத்து மீறல்கள் நடந்துகிட்டுதான் இருக்குது.....//

ஆமாம், வருத்தத்துடனும் அச்சத்துடனும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

//இன்னும் ஓர் நெகிழ்சியான பதிவு//

மிக்க நன்றி!!

settaikkaran said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//எல்லாவற்றிற்குமான பதில் இதுதான்.//

சில நேரங்களில் நம் மனதின் அடித்தளத்தில் படிந்திருக்கும் வன்சிந்தனையை இது போன்ற நிகழ்வுகள் கிளறி விட்டு விடுகின்றன. அப்போதெல்லாம் இப்படி சிந்திக்கத் தோன்றுகிறது.

//கூடி இருப்பவர்கள் மரண அடி குடுத்தாலொழிய இவர்கள் திருந்த மாட்டார்கள்.//

வீட்டில் அடங்காத பிள்ளையை ஊரில் அடக்குவார்கள் என்று பழமொழி சொல்வார்கள். சரி தான்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

கண்ணகி said...

//ஒவ்வொரு வயதிலும் பெண்கள் கடக்கும் சொல்லமுடியாத்துயர்களில் இதுவும் ஒன்று..//

இதிலிருந்து மீள வேண்டும்; விரைவில் மீள வேண்டும்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

மங்குனி அமைச்சர் said...

//என்னாப்பா சேட்ட,மனசே சரியில்லப்பா , நல்லா சொல்லிருக்க//

எனக்கும் தாண்ணே! என்ன செய்யுறது, எழுதிப்புட்டேன்.

//ஆமா சேட்டா , யார்ன்னு சொல்லேன்//

உங்களுக்கு(ம்) தனிமடலில் தெரிவிக்கிறேன்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

ஹுஸைனம்மா said...

//இதைப் பல பெற்றோர்கள் காலம் கடந்தே உணர்கிறார்கள். இப்பவெல்லாம், (ஆண்/பெண்)குழந்தைகளை ரொம்பக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கீறது.//

ம்! பெற்றோர்களின் அன்புமிகுதி காரணமாக, குழந்தைகளின் உடல் வளர்ச்சி அவர்களுக்குத் தாமதமாகப் புலப்படுகிறதோ?

//நிச்சயம் அச்சிறுமி இவ்வதிர்ச்சியிலிர்ந்து விரைவில் மீண்டு விடுவாள் என்ற நம்பிக்கை வருகிறது!!//

நாம் அனைவரும் நம்புவோம். அதுவே அந்தப் பெண்ணுக்கு அத்தியாவசியமானது.

//அநாகரீக குத்துப்பாடல்களுக்கு அரைகுறை ஆடையோடு பிள்ளைகளைக் குத்தாட்டம் ஆடவிடும் பெற்றோர்கள் உணரவேண்டும் இவ்வபாயத்தையும்!!//

உண்மை! கலையார்வம் என்ற பெயரில் குழந்தைகளின் மனதில் விஷத்தைக் கலக்குகிற பெற்றோர்களும் இதில் குற்றவாளிகளோ என்னவோ?

மிக்க நன்றி!!

settaikkaran said...

வாய்ப்பாடி குமார் said...

//இந்த இடுகையை இதே நடையுடன் கல்லூரியில் , பள்ளியில் உள்ள இளம் வயது வாத்தியார்கள் சொன்னால் நிச்சயம் மாணவர்கள் திருந்துவார்கள். கல்லூரி , பள்ளி மாணவர்கள் நல்லதைச் சொன்னால் கேட்கக்கூடியவர்களே.//

அந்த நம்பிக்கை இன்னும் சமூகத்திற்கு இருக்கிறது நண்பரே. இன்றைய இளைஞர்கள் நிறைய வாசிக்கிறார்கள்; நிறைய யோசிக்கிறார்கள். விடலைப்பருவத்து விளையாட்டுக்களின் விபரீதம் குறித்து உரிய முறையில் விளக்கினால், புரிந்து கொள்ளும் சமயோசிதம் மிக்கவர்களே!

// நமது தங்கைக்கும், அண்ணன்கள் இல்லாத ஒரு பெண்ணூக்கும் இதே மாதிரி நடந்தால் என்ன விளைவு, அவர்கள் மனம் என்ன பாடுபடும் , யாரிடம் சொல்வார்கள் என்பதை யோசிக்கச் சொன்னால் இளம் வயது மாணவர்கள் கண்டிப்பாக திருந்துவார்கள்.//

வருகைக்கும், விபரமான சமநோக்குடனான கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

பிரேமா மகள் said...

//நடுத்தர குடும்பத்தில் மட்டுமல்ல... எல்லா தரப்பிலும் இப்படி இளம் வயதில் பெண்களுக்கு கொடுமை நடந்திருக்கிறது.. ஏன் நானே இது போன்ற கொடுமைகளை கடந்து வந்திருக்கலாம்.. வெளியே சொல்லாமல் போலியாய் நடிக்கலாம்... என் அப்பாவோ, என் கணவராகப் போகிறவரோ கூட இப்படி மற்றோரு பெண்ணிடம் நடந்திருக்கலாம்..//

சரியாகச் சொன்னீர்கள்! இது போன்ற அவலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியே சொல்வதைக் கூட தவிர்க்கிற அளவுக்குத் தான் இன்றும் நாம் இருக்கிறோம் என்பதே அச்சுறுத்தும் நிஜமாய் இருக்கிறது.

//அதற்காக நான் ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்தை குற்றம் சாட்டவில்லை.. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை பயன்படுத்தும் சுயநல வாதிகள் ஆண்கள்.. அந்த வர்க்கத்துக்கே ஒரு வித திமிரும் மெத்தனமும் இருக்கிறது.. அது அவர்கள் ஜீனில் ஊறிப் போனதாக இருக்கலாம்...//

இது ஆணின் உடற்கூறு சம்பந்தப்பட்டதாக இருப்பினும், அதை எதிர்மறையாகத் தூண்டி விடுகிற சில செயற்கை உந்துதல்கள் மலிந்து விட்டிருப்பதும் இந்த விபரீதம் பெருகுவதற்குக் காரணமாயும் இருக்கலாம்.

//ஆனால் இந்த நிலை மட்டும் மாறும் என்று தோன்றவில்லை..//

மாற வேண்டும் என்பதே நமது அவாவாக இருக்கட்டுமே! மாறுதல்கள் ஏற்பட்டே தீரும்!

மிக்க நன்றி!!

settaikkaran said...

ரிஷபன் said...


//யெஸ்!.. அப்படியே ஆமோதிக்கிறேன்..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

settaikkaran said...

நீச்சல்காரன் said...

//இந்த பதிவில உங்கள் நடையும் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்//

வருகைக்கும் உங்களது பாராட்டுக்கும் மிக்க நன்றி!

manjoorraja said...

பலருக்கும் புரியும் வண்ணம் மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். இப்படியும் எழுத முடியும் சொல்ல வந்த கருத்தை சொல்ல முடியும் என சிலருக்கு புரிந்தால் சரி.

நீங்கள் சொல்லவந்த விசயம் இன்று நேற்று நடப்பதல்ல. 1980களிலேயே இதுபோல சென்னை ரயில்களில் பார்த்திருக்கிறேன்.

ஒரு முறை கிரிக்கெட் காணப்போய் வெளியில் வரும்போது ஒரு கும்பல் வேண்டுமென்றே பெண்களை இடித்துக்கொண்டும் சில்மிஷம் செய்துக்கொண்டும் வந்ததை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டு மனம்புண்படும்படி அவர்கள் திட்டியதை கேட்டுக்கொண்டு போகவேண்டி வந்தது.

Unknown said...

மிக கொடுமையான விசயம், நான் இப்பொழுதுதான் படிக்கிறேன், சுய ஒழுக்கம் இல்லாத மனித மிருகங்கள் இப்படித்தான் செய்யும், நாளை அவர்கள் குடும்பத்திலோ இல்லை அவர்களின் மனைவி பெண்ணுக்கோ இந்த நிலை வந்தால் மட்டுமே புரியும் :-(