Sunday, April 4, 2010

பகவானும் ஊத்தப்பமும்

அந்த பக்தசிரோன்மணியின் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் ஆறாகப் பெருகி, மொசைக் தரையெங்கும் ஈரமானதால், கடமை தவறாத அவரது கணவர் மடித்த வேட்டியும், கடித்த பல்லுமாய் மாப்பால் துடைத்துக்கொண்டிருந்தார். மனைவியின் ஆனந்தக்கண்ணீரில் எவனேனும் வழுக்கி விழுந்து மண்டையை உடைத்துக் கொள்ளக்கூடாதே என்ற அக்கறையோடு அவர் செய்து கொண்டிருந்த தொண்டை கவனித்து எனக்குத் தொண்டை அடைத்தது.

"நீங்க சொல்லுங்கம்மா!" என்று பயபக்தியுடன் கையதுகொண்டு மெய்யது பொத்தி, செக்-போஸ்டில் நிற்கும் வைக்கோல் லாரி டிரைவரைப்போல பவ்யமாக இருந்தேன்.

"இவருக்கு ஊத்தப்பம்னா ரொம்பப் பிடிக்கும்," என்று அம்மணி, படுசின்சியராக தரையைத் துடைத்துக் கொண்டிருந்த தனது கணவரைக் காட்டினார். ’பார்த்தாலே தெரியுது,’ என்று சொல்ல நினைத்தும், பக்திப்பரவசத்தில் ஆழ்ந்திருந்த அந்தப் பெண்மணி சிரித்து விடக் கூடாதே என்பதற்காக ’ஓஹோ’ என்று என்னவோ ’பிக்-பேங் தியரி’ பற்றி முதல் முதலாகக் கேட்பவன் போல, நான் போலியாக வியந்ததில் எனது புருவங்கள் உயர்ந்து பின்மண்டைவழியாக பிடறி வரைக்கும் சென்று விட்டன.

"அன்னிக்கு வியாழக்கிழமை! பஜனையை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் இவர் ஊத்தப்பம் செய்துகொடுன்னு கேட்டாரா? பகவானே கட்டளையிட்டது மாதிரி தோணிச்சு!" என்று கண்களை மூடிக்கொண்டார் அம்மணி. ’அட, பகவான் ஊத்தப்பமெல்லாம் கூட கேட்கத் தொடங்கி விட்டாரா?’ என்று ஒரு கணம் என் மனது சரவணபவன் சரக்கு மாஸ்டருக்காக சந்தோஷப்பட்டது.

"கல்லிலே மாவை ஊத்திட்டுக் கால்கடுக்க நிக்குறேன் நிக்குறேன். ஊத்தப்பம் வேகவேயில்லை." அம்மணியின் குரலில் ஐ.பி.எல்.கமெண்டரி போல ஒரு திடீர் பரபரப்பு.

"அட!"

"கண்ணை மூடிக்கிட்டுக் கடவுளை வேண்டினேன். இதென்ன சோதனை? ஏன் ஊத்தப்பம் வேக மாட்டேங்குது! ரெண்டு மணிநேரம் பஜனை பண்ணித் தொண்டை புழல் ஏரி மாதிரி வத்திப்போயிருச்சு! கையைத் தட்டி தட்டி ரேகையெல்லாம் அழிஞ்சு போயிருச்சு! இப்படி உன் மேலே பக்தியா இருக்கிற என்னை ஏன் இப்படி சோதிக்கிறே பகவானேன்னு என்னையுமறியாம அழுதிட்டேன்."

"ஐயையோ! பாவம் நீங்க!"

"அப்பத்தான் அந்த அதிசயம் நடந்தது. பகவான் திடீர்னு சிரிச்சாரு!"

"எங்கே? எங்கேயிருந்து சிரிச்சாரு?"

"ஊத்தப்பத்திலிருந்து சிரிச்சாரு..!"

"என்னது? ஊத்தப்பத்திலேருந்து...பகவான் சிரிச்சாரா....?"

"நம்ப முடியலே இல்லியா? இரு வர்றேன்," என்று அம்மணி எழுந்து கொண்டு போய், ஃபிரிட்ஜிலிருந்து தட்டுப் போட்டு மூடிய எதையோ எடுத்துக் கொண்டு வந்தார்.

"சொன்னா நம்ப மாட்டாங்கன்னு தான், இந்த ஊத்தப்பத்தை நாலு நாளா குப்பையிலும் போடாம, சாப்பிடவும் செய்யாம ஃபிரிட்ஜிலே பத்திரமா வச்சிருக்கேன்," என்றார் அம்மணி.

அந்த அம்மா மேல்தட்டைத் திறந்ததும், கொருக்குப்பேட்டையில் கொசுவண்டி நுழைந்தது போல ஒரு பயங்கரநெடி வீசியது. ஒரு கணம் என் கண் முன்னால், இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னால் செத்துப்போன என் தூரத்து சொந்தக்காரர்களெல்லாம் பக்கத்தில் வந்து நிற்பது போலிருந்தது.

"என்ன இப்படி நாறுது?"

"பழைய மாவு! அதான்!" என்றார் அம்மணி. இதற்குள்ளாக அம்மணியின் கணவர் சுதாரித்துக்கொண்டு, சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு சிட்டாகப் பறந்தே போய்விட்டார்.

"இதோ பாரு! இது என்னது?" என்று அவர் காட்டிய தட்டில், ஊத்தப்பம் போல சுமாராக வட்டமாக மாவு இருந்தது.

"இது ஊத்தப்பம் மாதிரித்தான் இருக்கு!" என்றேன் நான். மாவு என்று சொல்லித்தொலைத்தால், அம்மணி காவு வாங்கி விடுவாளோ என்ற கவலை எனக்கு.

"நல்லாப்பாரு! பகவானோட முகம்தெரியுதா?"

"ஊத்தப்பத்திலேயா? எனக்குத் தெரியலியே....?"

"நல்லாப் பாரு! இது பகவானோட கண்ணு! இது பகவானோட காது...இது பகவானோட வாயி...," என்று மாவில் இருந்த சிறிய பெரிய ஓட்டைகளைச் சுட்டிக் காண்பித்து அம்மணி எனக்கு விளக்கினாள். நல்ல வேளை இது பாஸ்போர்ட் சைஸ் ஊத்தப்பமாக இருந்ததால் தப்பித்தேன். இதுவே ஃபுல் சைஸாக இருந்தால் என் கதி என்ன?

பகவான் தான் காப்பாற்றியிருக்கிறார் என்னை! கையெடுத்துக் கும்பிட்டேன்.

"தெரியுதா இப்போ!" உற்சாகத்தில் அம்மணி குதித்தார். "நான் சொன்னதும் யாருமே நம்பலே! பார்த்ததுக்கப்புறம் எல்லாரும் தன்னையுமறியாம, உன்னை மாதிரியே கையெடுத்துக் கும்பிட்டாங்க! எல்லாம் பகவானோட லீலை!"

கிலோ இருபத்தியோரு ரூபாய்க்கு, குமரன் ஸ்டோரில் வாங்கின புளித்த மாவில் பகவான் தெரிகிறாரா? அம்மா காளிகாம்பா, என்னை ஏன் இந்த மாதிரி ஆளுங்க கிட்டே மாட்டி விடுறே?

"தெரியுதுங்க! பகவான் சிரிக்கிறாரு! நல்லாவே தெரியுது!" என்று ஒப்புக்கொண்டு தொலைத்தேன்.

"எங்க தாத்தா பெரிய பகவான் பக்தர் தெரியுமா? அவரு மூக்குப்பொடி போடுவாரு!"

"யாரு? பகவானா?"

"இல்லை, எங்க தாத்தா! ஒரு நாள் பகவான் படத்துலேருந்து மூக்குப்பொடியா கொட்ட ஆரம்பிச்சுது! அதை வச்சு எங்க தாத்தா கடை ஆரம்பிச்சு, பெரிய ஆளாகிட்டார். இப்போ கூட அவரை மூக்குப்பொடி முத்துசாமின்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க!"

"ஓஹோ!" அக்கம்பக்கத்துலே இருக்கிற சாமீங்களா, யாராவது ஒரு ஆம்புலன்ஸோட வந்து என்னைக் கூட்டிக்கிட்டுப் போக மாட்டீங்களா?

"அது மட்டுமா?" அம்மணி விடுவதாக இல்லை. "எங்கப்பா ஒரு வியாழக்கிழமையன்னிக்குப் பசுமாடு வாங்கினாரு. அந்த மாடு போட்ட சாணியை வரட்டியாத் தட்டுனபோது, அதுலே பகவானோட முகம் தெரிஞ்சுதுப்பா! அதுக்கப்புறம் அந்த சந்தையிலே மாட்டுக்கு ரொம்ப கிராக்கி ஏற்பட்டிருச்சு! அதுக்கு முன்னாடி ’எத்தனை லிட்டர் பால்கறக்குமுன்னு கேட்டவங்க, எத்தனை கிலோ சாணி போடும்,’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம். எல்லாம் பகவான் லீலை!"

நான் மீண்டும் கையெடுத்துக் கும்பிட்டேன். ’ஆளை விடுங்க, நான் போறேன்.’ என்ற தொனியில்.

"இந்தக் காலத்துலே உன்னை மாதிரி பக்தி சிரத்தையா இருக்கிற பிள்ளைங்க ரொம்பக் குறைவு. அதனால தான் உன்னைக் கூப்பிட்டுக் காட்டணுமுன்னு இதை அப்படியே வச்சிருக்கேன்," என்று நாதழுதழுக்கக் கூறினார் அம்மணி.

"அதான் பார்த்திட்டேனில்லே! முதல்லே அதை சேலையூர் தாண்டி எங்கேயாவது கண்காணாத இடத்துலே போட்டிருங்க! இல்லாட்டி புதுசா ஊத்தப்பக்காய்ச்சல்னு வந்து தொலைச்சிடப்போகுது. நான் வர்றேன்," என்று பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவரது வீட்டிலிருந்து கிளம்பி வாசலுக்கு வந்தபோது, துண்டால் மூக்கைப் பொத்தியபடி அம்மணியின் கணவர் நின்று கொண்டிருந்தார்.

"அப்பாடா! கிளம்பிட்டீங்களா? இனிமே ஊத்தப்பத்தை திரும்ப ஃபிரிட்ஜிலே வச்சிருவா. நான் வீட்டுக்குள்ளே தைரியமாகப் போகலாம்," என்று போக முயன்றவரை நிறுத்தினேன்.

"சார், மேடம் சொல்லுறதெல்லாம்...," என்று இழுத்தேன்.

"இதையெல்லாம் நம்புறியா தம்பி நீ? ஊத்தப்பத்திலே பகவான் தெரிவாரா? சரி, அவ பண்ணுற ஊத்தப்பத்தை பகவானை நம்பித் தான் சாப்பிடணுமுங்கிறது வேறே விஷயம். உடனே, அதுலே அவரோட முகம் தெரியுது, மூக்கு தெரியுதுன்னா சொல்றது...?"

"வேகவேயில்லையாமே?"

"எப்படி வேகும்? அவ அடுப்பைப் பத்த வைக்கவே மறந்திட்டாளே?"

நான் அதிர்ந்தேன். அன்று இரவு வரைக்கும் ஊத்தப்பத்தைப் பற்றியே சிந்தித்தேன். இனிமேல் வாழ்நாளில் ஒருபோதும் ஊத்தப்பமே சாப்பிடக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அப்போது மின்வெட்டு ஏற்படவே, சலித்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறி மொட்டைமாடிக்குப் போனேன். வானத்தில் ஒரு பெரிய ஊத்தப்பம், மன்னிக்கவும், நிலவு தெரிந்தது. காலையில் நடந்த சம்பவங்கள் மீண்டும் நினைவுக்கு வரவே, நான் நிலவையே உற்று நோக்கிக்கொண்டிருந்தபோது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது...

ஆஹா! நான் காண்பது என்ன கனவா, நினைவா?

நிலவில் ஸ்ரேயாவின் முகம் தெரிந்தது. உடனே அதைப் படம் பிடித்தேன். பெரியோர்களே, தாய்மார்களே! ஏப்ரல் ஒன்றாம் தேதி நிலவில் எனக்குத் தெரிந்தது போல உங்களுக்கும் ஸ்ரேயாவின் முகம் தெரிந்ததா?

பி.கு: ஒரு பகவான் பக்தையிடம் நான் மாட்டிக்கொண்டு பட்ட நிஜ அவஸ்தையால் உந்தப்பட்டு எழுதிய பதிவு இது. எத்தனை நித்தியானந்தாக்கள் வந்தாலும்......., வேண்டாம், எதையாவது சொல்லி விடப்போகிறேன்.

42 comments:

manjoorraja said...

ஸ்ரெயாவின் முகம் சூப்பர்.

ஆனா நான் மொட்டை மாடிக்கு போய் பார்க்கலெ. இதோ இங்கே தான் பார்த்தேன்.

நகைச்சுவை என்றாலும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

Chitra said...

////ஏப்ரல் ஒன்றாம் தேதி நிலவில் எனக்குத் தெரிந்தது போல உங்களுக்கும் ஸ்ரேயாவின் முகம் தெரிந்ததா?/////

....நாங்க பார்க்க வருவதற்குள், ஸ்ரேயா போய் தமன்னா வந்து விட்டதாக வட்டார மக்கள் பேசிக் கொண்டார்கள், மக்கா!

அஷீதா said...

சேட்டை...கலக்கிடீங்க.
நகைச்சுவையாகவும் ஒரு நல்ல கருத்து உள்ளதாகவும் இருந்தது.

//நல்ல வேளை இது பாஸ்போர்ட் சைஸ் ஊத்தப்பமாக இருந்ததால் தப்பித்தேன். இதுவே ஃபுல் சைஸாக இருந்தால் என் கதி என்ன?//

உங்க humor சான்ஸ் இல்லைங்க... சிரிச்சிட்டேன். :))

நீங்க சொல்ல வந்தது நான் சொல்லிடறேன் ..எத்தனை நித்தியானந்தாக்கள் வந்தாலும் நம்ம ஆளுங்க திருந்த மாட்டாங்க..இந்த அம்மா பகவன் போனா, சும்மா பகவன், சித்தி பகவன், சித்தப்பா பகவான், அங்கிள் பகவான் ஆன்டி பகவான்' ன்னு ஆயிரம் பகவான்கள் உருவாகி கொண்டு தான் இருப்பார்கள் இப்படி பட்ட ஆளுங்க இருக்கற வரைக்கும்.

வாழ்த்துக்கள்!

Ahamed irshad said...

::)

Ananya Mahadevan said...

//ஒரு நாள் பகவான் படத்துலேருந்து மூக்குப்பொடியா கொட்ட ஆரம்பிச்சுது//

//அதுக்கு முன்னாடி ’எத்தனை லிட்டர் பால்கறக்குமுன்னு கேட்டவங்க, எத்தனை கிலோ சாணி போடும்,’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம். //

அய்யோ சிரிச்சு சிரிச்சு முடியல! சூப்பர்ப்!

பெசொவி said...

//"வேகவேயில்லையாமே?"

"எப்படி வேகும்? அவ அடுப்பைப் பத்த வைக்கவே மறந்திட்டாளே?"
//

Peak of the comedy.

உங்க காமெடியும் புடிச்சுது.....சொல்ல வந்த கருத்தும் புரிஞ்சுது.....வாழ்த்துகள்!

எல் கே said...

mudiala. ama ippa oothappam sapidareengala illaya atha sollunga :D

உமர் | Umar said...

एल्लाम बागवान अरुल!

மசக்கவுண்டன் said...

இப்படித்தான் எங்க வீட்டுக்குப்பக்கத்திலே ஒரு பெண்மணி தான் சுட்ட சப்பாத்தியில் ஷீரடி சாயிபாபா முகம் தெரிகிறது என்று ரொம்ப நாள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நான் போய்ப்பார்க்கவில்லை.

Unknown said...

நல்ல காமெடி.. :)

சிநேகிதன் அக்பர் said...

எங்களுக்கெல்லாம் நமிதாவே தெரிஞ்சாங்க.

கலக்கல் சேட்டை.

சைவகொத்துப்பரோட்டா said...

ஆமா, நிலாவுல சிரேயாவோட
ஷூட்டிங் எப்ப வச்சாங்க :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்க பார்க்க வருவதற்குள், ஸ்ரேயா போய் தமன்னா வந்து விட்டதாக வட்டார மக்கள் பேசிக் கொண்டார்கள், மக்கா//

நல்லா கிளப்ப்றீங்க பீதியை..:)

நான் முதல்லயே கடவுள் ஏன் சிரிச்சார்னு கண்டுபிடிச்சிட்டேன்.. சரியான விடை கீழ இருந்தது .. :)

முகுந்த்; Amma said...

பார்க்கிற அனைத்திலும் பகவான் கண்டுபிடித்த அந்த அம்மாவை கிண்டல் செய்த சேட்டையை நிலவில் உள்ள ஸ்ரேயானந்த சுவாமிகள் சீக்கிரம் தண்டிப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

பிரபாகர் said...

ஆஹா, நீங்களும் பார்த்தீரா? ஸ்ரேயா சிரிப்பதற்குள் அந்த பாழாய்ப்போன மேகம் மறைத்துவிட்டது...

கலக்கல்...

பிரபாகர்...

பித்தனின் வாக்கு said...

ஆகா வழக்கம் போல சேட்டைதான். ஜிம்மாயணம் எப்ப தொடரும். பாகம் 4க்கு வெயிட்டிங்.

ஆமா நிலாவுல ஏப்ரல் ஒன்னாம் தேதி நமிதா முகம்தானே தெரிந்தது.

பேப்பா உனக்கு சரியா பார்க்கத் தெரியவில்லை. எதுக்கும் உங்க ஊட்டு அம்மினி கிட்ட சொல்லி வைக்கனும்.

சென்ஷி said...

ஆஹா.. உடம்பு சரியில்லாம போனது ஊத்தப்பத்துல பகவானை பாத்ததாலதானா :)

ஹுஸைனம்மா said...

நிலாவுல தெரியறது ஸ்ரேயாவா? அடப்பாவமே, நானு வயசான பத்மினியம்மான்னுல்ல நினைச்சேன்!!

அன்புடன் மலிக்கா said...

கனவுல வரது போதாதுன்னு இப்ப நிலவுலேயேவா
என்ன பிம்பம் சேட்டையிது!

மங்குனி அமைச்சர் said...

சேட்ட எங்க ஊர் நிலாவில எப்ப பாத்தாலும் ஒரு பாட்டி நெல்லு குட்டிகிட்டே தான் இருக்கு

settaikkaran said...

//ஸ்ரெயாவின் முகம் சூப்பர்.ஆனா நான் மொட்டை மாடிக்கு போய் பார்க்கலெ. இதோ இங்கே தான் பார்த்தேன்.//

நீங்க பரவாயில்லேண்ணே! நிறைய பேருக்கு இதுலே ஸ்ரேயா முகம் தெரியலேன்னு அடம் பிடிக்கிறாங்க. கொஞ்சம் கூட பக்தியே இல்லாதவங்க.! :-)

//நகைச்சுவை என்றாலும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.//

ஆமாம். அப்படியொரு கசப்பை விழுங்கியதால் தான் இந்தப் பதிவு! மிக்க நன்றி!!

settaikkaran said...

//....நாங்க பார்க்க வருவதற்குள், ஸ்ரேயா போய் தமன்னா வந்து விட்டதாக வட்டார மக்கள் பேசிக் கொண்டார்கள், மக்கா!//

அடடா, பக்தி முத்திப்போச்சுன்னு சொல்றது இதைத் தானா? :-)))

மிக்க நன்றிங்க!

settaikkaran said...

//சேட்டை...கலக்கிடீங்க.
நகைச்சுவையாகவும் ஒரு நல்ல கருத்து உள்ளதாகவும் இருந்தது.//

மிக்க நன்றிங்க!

//உங்க humor சான்ஸ் இல்லைங்க... சிரிச்சிட்டேன். :))//

ஹி..ஹி! சிரிக்க வைக்கணும்கிறது தான் நம்ம குறிக்கோளே! :-)

//நீங்க சொல்ல வந்தது நான் சொல்லிடறேன் ..எத்தனை நித்தியானந்தாக்கள் வந்தாலும் நம்ம ஆளுங்க திருந்த மாட்டாங்க..இந்த அம்மா பகவன் போனா, சும்மா பகவன், சித்தி பகவன், சித்தப்பா பகவான், அங்கிள் பகவான் ஆன்டி பகவான்' ன்னு ஆயிரம் பகவான்கள் உருவாகி கொண்டு தான் இருப்பார்கள் இப்படி பட்ட ஆளுங்க இருக்கற வரைக்கும்.//

கரெக்ட்! இதுலே ஒரே சௌகரியம் என்னான்னா, வலைப்பதிவுலே எழுதறதுக்கு மேட்டருக்கு பஞ்சமே இருக்காது. அவ்வளவு தான்! நன்றிங்க!!

வாழ்த்துக்கள்!

settaikkaran said...

//::)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அஹ்மது இர்ஷாத் அவர்களே! அடிக்கடி வாங்க!

settaikkaran said...

//அய்யோ சிரிச்சு சிரிச்சு முடியல! சூப்பர்ப்!//

ஹி..ஹி! ரொம்ப நன்றிங்க!!

settaikkaran said...

//Peak of the comedy.

உங்க காமெடியும் புடிச்சுது.....சொல்ல வந்த கருத்தும் புரிஞ்சுது.....வாழ்த்துகள்!//

தொடரும் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் எனது நன்றிகள்!:-)

settaikkaran said...

//mudiala. ama ippa oothappam sapidareengala illaya atha sollunga :D//

ஐயையோ, ஊத்தப்பமா? ஆளை விடுங்க சாமீ! :-))

நன்றிங்க!

settaikkaran said...

//एल्लाम बागवान अरुल!//

ஐயையோ, எனக்கு தெலுங்கு தெரியாதுங்களே! என்ன எழுதியிருக்கீங்க?

எதுவாயிருந்தாலும் நன்றிங்க!! :-)

settaikkaran said...

//இப்படித்தான் எங்க வீட்டுக்குப்பக்கத்திலே ஒரு பெண்மணி தான் சுட்ட சப்பாத்தியில் ஷீரடி சாயிபாபா முகம் தெரிகிறது என்று ரொம்ப நாள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நான் போய்ப்பார்க்கவில்லை.//

அந்த சப்பாத்தியை இன்னும் வச்சிருக்காங்களா கவுண்டரே? :-)) ஜாக்கிரதை! இன்னும் கண்டத்துலேருந்து நீங்க தப்பிக்கலீங்கோ!

நன்றிங்க

settaikkaran said...

//நல்ல காமெடி.. :)//

மிக்க நன்றி முகிலன் அவர்களே! :-)

settaikkaran said...

//எங்களுக்கெல்லாம் நமிதாவே தெரிஞ்சாங்க.//

அதாவது நாம யாரைப் பத்தி அடிக்கடி நினைக்கிறோமோ, அவங்க தான் தெரிவாங்களாம். :-))))))))

//கலக்கல் சேட்டை.//

மிக்க நன்றிங்க!

settaikkaran said...

//ஆமா, நிலாவுல சிரேயாவோட
ஷூட்டிங் எப்ப வச்சாங்க :))//

யாருக்குத் தெரியுமுண்ணே? ஆனா பாருங்க படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாடியே ஸ்டில் நெட்டுலே ரிலீஸ் ஆயிருச்சு! :-))

நன்றிங்க!!!

settaikkaran said...

//நல்லா கிளப்ப்றீங்க பீதியை..:)

நான் முதல்லயே கடவுள் ஏன் சிரிச்சார்னு கண்டுபிடிச்சிட்டேன்.. சரியான விடை கீழ இருந்தது .. :)//

ஆஹா! நீங்க இது மாதிரி எத்தனை பதிவு படிச்சிருப்பீங்க? எல்லாரோட லாஜிக்கும் உங்களுக்கு அத்துப்படியாகியிருக்குமே! :-)))

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//பார்க்கிற அனைத்திலும் பகவான் கண்டுபிடித்த அந்த அம்மாவை கிண்டல் செய்த சேட்டையை நிலவில் உள்ள ஸ்ரேயானந்த சுவாமிகள் சீக்கிரம் தண்டிப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன்.//

அம்மா, உங்க சாபம் உண்மையிலேயே பலிக்கப்போவுது. அந்த ஊத்தப்பத்தை எனக்கு கொரியரிலே அனுப்பறாங்களாம். :-((((

மிக்க நன்றிங்க! :-)))))))

settaikkaran said...

//ஆஹா, நீங்களும் பார்த்தீரா? ஸ்ரேயா சிரிப்பதற்குள் அந்த பாழாய்ப்போன மேகம் மறைத்துவிட்டது...//


அதுக்கென்னங்க? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று நிலவில் ஸ்ரேயா முகம் தெரியும். (அன்னிக்குத் தான் அன்னாரின் பிறந்தநாள்!) :-)))

//கலக்கல்...//

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//ஆகா வழக்கம் போல சேட்டைதான்.//

மிக்க நன்றிங்க!!! :-))

//ஜிம்மாயணம் எப்ப தொடரும். பாகம் 4க்கு வெயிட்டிங்.//

ரெடியாயிட்டிருக்கு! விடுறதாயில்லை!


//ஆமா நிலாவுல ஏப்ரல் ஒன்னாம் தேதி நமிதா முகம்தானே தெரிந்தது.
பேப்பா உனக்கு சரியா பார்க்கத் தெரியவில்லை. //

நமீதா முகம் தெரியணுமுன்னா, புதுசா ஒரு எக்ஸ்ட்ரா-லார்ஜ் நிலவு வேணுமே? :-)

//எதுக்கும் உங்க ஊட்டு அம்மினி கிட்ட சொல்லி வைக்கனும்.//

இதென்ன புதுப்புரளியா இருக்குது? :-)))))

settaikkaran said...

//ஆஹா.. உடம்பு சரியில்லாம போனது ஊத்தப்பத்துல பகவானை பாத்ததாலதானா :)//

ஆமாங்க! அதை ஒரு வாய் விண்டு சாப்பிட்டாத்தான் உடம்பு சரியாகுமாம். தெய்வகுத்தமாயிடுச்சாம்! :-(((

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//கனவுல வரது போதாதுன்னு இப்ப நிலவுலேயேவா என்ன பிம்பம் சேட்டையிது!//

என்னங்க பண்ணச்சொல்றீங்க? சிலருக்கு பகவான் தெரியுறாங்க; எனக்கு ஸ்ரேயா தெரியுறாங்க! மனம்போல பிம்பம்!! :-)))

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//சேட்ட எங்க ஊர் நிலாவில எப்ப பாத்தாலும் ஒரு பாட்டி நெல்லு குட்டிகிட்டே தான் இருக்கு//

ஆமாண்ணே, கிராமத்து நிலவுன்னா அப்படித்தான்! சிட்டி நிலவுலே தான் ஸ்ரேயா,தமன்னா எல்லாரும் தெரிவாங்க! :-)))

நன்றிண்ணே!!

☀நான் ஆதவன்☀ said...

கலக்குறயே மக்கா :))))

settaikkaran said...

//கலக்குறயே மக்கா :))))//

ஹிஹி! மிக்க நன்றிங்க! :-))))

Aba said...

யோவ் சிரிச்சு சிரிச்சு தங்க முடியல.... வீட்டுல எல்லாரும் என்னைய லூசுன்னே முடிவு கட்டிட்டாங்கய்யா.....

அது சரி, மிஸ்டர்.சேட்டை, புதுசா ஏதாவது சாட்டிலைட் வாங்கிட்டிங்களா? வாழ்த்துக்கள்... (யோவ், படத்துக்கு கீழ பாருய்யா...)