Friday, April 16, 2010

மனிதநாயம்நீண்டநாட்களுக்குப் பிறகு, தபால்பெட்டியில் அவனுக்காக ஒரு கடிதம் காத்திருந்தது. ஆயுள் காப்பீட்டுக்கழகத்திலிருந்து வந்திருந்த வருடாந்திர நினைவூட்டல்! பெட்டியிலிருந்து எடுத்தவேகத்திலேயே இரண்டாய் மடித்து சட்டைப்பையில் திணித்துக்கொண்டு படியேறி அறைக்குச்சென்றான்.

இப்போதெல்லாம் கடிதங்கள் அபூர்வமாகி விட்டன. முன்போல இப்போதெல்லாம் பொங்கல்,தீபாவளி வாழ்த்துக்கள் வருவதில்லை. பரிச்சயமானவர்களின் கையெழுத்துக்கள் ஏறக்குறைய மறந்து போய்விட்ட யுகத்தில் வாழ்த்துக்களும் வார்த்தைப் பரிவர்த்தனைகளும் கைபேசியிலும், கணினியிலுமே தொடர்கின்றன. எனவே சம்பிரதாயத்துக்காகவேனும் ’அன்புள்ள’ என்று தொடங்கி, ’இப்படிக்கு உன் அன்புள்ள,’ என்று முடிகிற கடிதங்களின் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இன்னும் அவர்களுக்கெல்லாம் அன்பு இருக்க வேண்டுமே என்ற விசித்திரமான பயம் எங்காவது யாராவது அவர்களுக்கு வந்த கடிதத்தை வாசிக்கிறதைப் பார்க்கும்போது மேலிடுகிறது.

கடைசியாக தபால்காரரிடமிருந்து நேரடியாக எப்போது கடிதம் வாங்கினோம் என்று அவனால் உறுதியாக நினைவுகூர முடியவில்லை. இங்கு குடிபெயர்ந்தபிறகு சிலமுறை பார்த்த தபால்காரரின் முகம் மறந்து விட்டது. ஆனால்......

போஸ்ட்மேன் ஆவுடையின் முகம் மட்டும் எண்ணிய கணத்தில் முழுமையாக நினைவுக்கு வருகிறது. அவர் அவனது பால்யநினைவுகளின் ஒரு பகுதி!

கொளுத்தும் வெயிலில் சைக்கிளின் பாகங்கள் அலறிக் கட்டியம்கூற, கரிசல்மண்ணில் சக்கரங்கள் அழுந்த அழுந்த, வியர்க்க விறுவிறுக்க தபால்கொண்டு வருவார் தபால்காரர் ஆவுடை! வழியில் செருப்பின்றி நடக்கிற சிறுவனையோ, சிறுமியையோ பார்த்தால் முன்னால் உட்காரவைத்து வீடுவரை கொண்டுவிட்டுப் போகிற நல்ல மனிதர் ஆவுடை!

ஆவுடையைப் பற்றி யோசிக்க நிறையவே இருந்தும், அவனுக்கு நினைவு வந்ததெல்லாம் ஒரு பிள்ளைப்பிராய சம்பவம் தான்.

தெருநாய் போட்டிருந்த ஒரு குட்டியைக் குளிப்பாட்டுகிற சாக்கில், அதை ஐயனார் கோவில் சுனையில் அவனும் அவனது நண்பர்களும் வீசி எறிவதை வழக்கமாக வைத்திருந்தனர். குளிரிலும் பயத்திலும் நடுநடுங்கிய அந்தக் குட்டிநாய், நீந்தி குளத்தின் அக்கரைக்குச் செல்லுமுன்னரே, அங்கிருந்து இன்னொருவன் குளத்தில் கல்லெறிந்து அதை மேலும் கலவரப்படுத்துவான். சுற்றிலும் நின்றபடி கல்லெறிகிற சிறுவர்களுக்குப் பயந்த அந்த நாய்க்குட்டி குளத்துக்குள்ளேயே பல நிமிடங்கள் சோர்வைப் புறந்தள்ளிவிட்டு பயத்தோடு தொடர்ந்து நீந்திக்கொண்டிருக்கும். ஒருவழியாக இரக்கம் பிறந்ததும் அந்த நாய்க்குட்டியைக் கரைக்கு வரவிட்டு, பிறகு அது சுத்தமாகக் குளித்துவிட்டது என்று சந்தோஷப்படுவது அந்தச் சிறுவர்களின் வழக்கமாக இருந்தது.

இந்தக் கொடூரமான விளையாட்டை முதலில் கண்டித்தவர் ஆவுடைதான்.

"என்னலே பண்ணுதீய?" கேட்ட வேகத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு, சுனைப்பக்கம் வந்தவர் முகத்தில் அதுவரை கண்டிராத கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது.

"கோட்டிக்காரப்பய மக்கா! அது செத்துரும்லே!" என்று இரைந்ததும் சிறுவர்களின் சிரிப்பும், கல்லெறிதலும் நின்றுவிடவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று கரையேறிய அந்த நாய்க்குட்டி, குளத்தில் எறிந்த இவன் காலடிக்கே வந்து வாலாட்டியபடி நின்றது.

அடுத்து ஆவுடை செய்ததை இப்போது நினைத்தாலும் இவனுக்குக் குலைநடுங்கியது.

"தண்ணியிலே இறங்கு!" என்று உத்தரவிட்டார். இவனும் சுனைக்குள்ளே மெல்ல மெல்ல இறங்கினான். "இன்னும் பின்னாலே போ....இன்னும்...," ஆவுடை அதட்ட அதட்ட, இவன் இடுப்புவரை ஆழமாக இருந்த பகுதிவரைக்கும் போய்விட்டான்.

"இன்னும் போ...போ!" என்று கூறியதோடு நிறுத்தாத ஆவுடை, ஒரு கல்லை எடுத்து இவன் பக்கமாகத் தண்ணீரில் எறிந்தார்.

"ஐயோ...ஆழமாயிருக்கு...பயமாயிருக்கு....மீன் வேறே கடிக்கு....!"

"நல்லாக் கடிக்கட்டு....போலே இன்னும்...போ!"

"பயமாயிருக்கு...!" இவன் அழவே தொடங்கினான்.

"மேலே வா!" அழுகையும் அச்சமாகவும் இவன் கரையேறியதும், ஆவுடை இவனை சமாதானப்படுத்தினார். பிறகு, விளக்கினார்.

இவனைப்போல அழத்தெரியாத, இவனைப்போல பேசத்தெரியாத அந்த நாய்க்குட்டியின் உயிரோடு விளையாடிய குரூரத்தை ஆவுடை உணர்த்தினார். ஒருவேளை இவன் மூழ்குகிறாற்போலிருந்தால் உதவிக்கு வருகிறவர்கள் அந்த நாய்க்குட்டிக்காக வரமாட்டார்கள் என்பதையும் அவனுக்கு நினைவூட்டினார். இவனுக்குப் புரிந்ததோ இல்லையோ, தலையாட்டியிருந்தான்.

அது, பள்ளிக்கூடத்திலும் கிடைக்காத ஒரு பாலபாடம்! தபால்காரர் ஆசிரியரானார். அதன்பிறகு, பஞ்சதந்திரக்கதைகள் படித்தபோதெல்லாம் ஆவுடையின் முகம் கண்முன் தோன்றியது. நேரில் பார்த்ததைக் காட்டிலும், அவரது முகம் அடிக்கடி கற்பனையில் தென்படத்தொடங்கியது.

இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த சம்பவம் இவனுக்கு நினைவிருக்கிறது. புரிந்து கொள்ள முடியாத வயதில் ஆவுடை மீது கோபமிருந்தது; புரியத்தொடங்கியதும் வியப்பு மேலிட்டது. இப்போதும், ஆவுடை போன்றவர்கள் இருக்கலாம்; யார் கண்டது?

தபால்காரருக்காகக் காத்திருந்த நாட்கள் முடிந்து விட்டது போலிருந்தது. இந்தத் தெருவுக்கு யாரேனும் தபால்காரர் வருவாரா என்று பார்க்கவேண்டும் போலிருந்தது. ஜன்னல் வழியாக நோட்டமிட்டான். தெருவின் ஒரு பக்கத்தை அவனால் முழுமையாகப் பார்க்க முடிந்தது.

அதே கட்டிடத்தின் வாசலில், துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்தவனும், அவனது மனைவியும் சிரித்துப்பேசியபடி நின்று கொண்டிருந்தனர். இருப்பவர்களும், இல்லாதவர்களும் ஏதோ ஒரு விதத்தில் சிரிப்பதற்கான காரணங்களை வைத்திருக்கிறார்கள் போலும்! ஆனால்...

இவர்களின் சிரிப்பில் ஏதோ நெருடியது. என்னவென்று பார்த்தபோது, தூரத்தில் அவ்வப்போது தான் பார்த்த அந்த மனநிலை சரியில்லாத தாடிக்காரன் சென்று கொண்டிருப்பதையும், அவ்வப்போது நின்று தரையைக்க்கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். என்ன நடக்கிறது என்பதைப்புரிந்து கொள்ள இவனுக்கு சில கணங்கள் பிடித்தன; ஆனால், புரிந்ததும் இரத்தம் மூளைக்குள்ளே கொதிப்பாகப் பாய்வது போலிருந்தது.

அந்த மனநோயாளியின் மீது இந்த இஸ்திரிக்காரன் கல்லை எறிந்து கொண்டிருந்தான்; அதைப் பார்த்து அருகிலிருந்து அவனது மனைவி சிரித்துக்கொண்டிருந்தாள். தன் மீது எவரோ கல்லெறிகிறார்கள் என்பதை மட்டும் உணரமுடிந்த அந்த பைத்தியக்காரன், தரையில் விழுந்த கல்லையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். யார் தன் மீது கல்லெறிகிறார்கள் என்று திரும்பிப்பார்க்கிற சொரணையோ, அறிவோ அவனுக்கு இல்லை போலும்! அவனது கண்கள் தன் மீது விழுந்த கல்லை மட்டுமே கோபத்தோடு வெறித்துக்கொண்டிருந்தன.

இவர்களின் சிரிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது - அந்தப் பைத்தியக்காரன் தெருமுனையில் திரும்பி, கண்ணுக்குத்தென்படாமல் போனபிறகும் கூட!

அவர்கள் சிரிப்பது இவனுக்குத் தன்மீது யாரோ கல்லெறிவது போலிருந்தது; ஜன்னலைச் சாத்தினான். கண்களை மூடியபடி யோசித்தான்.

அந்த நாய்க்குட்டி நிச்சயம் பலவருடங்களுக்கு முன்னாலேயே இறந்திருக்கக் கூடும்; தபால்காரர் ஆவுடை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று இவனால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் அவனால் உறுதியாகச் சொல்ல முடிந்தது.

இந்த உலகத்தில் உயிரோடு இருப்பவர்கள் இவன்; அந்தப் பைத்தியக்காரன்; அவன் மீது கல்லெறிந்த இஸ்திரிக்காரன்; அதைப்பார்த்து சிரித்த அவனது மனைவி ஆகியோரும் அவர்களைப்போன்றோரும் தான்!

46 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

me the first..ஹா.. ஹா

pudugaithendral said...

தாபால்காரர் தபால் என ஆரம்பித்து நல்ல மெசெஜ்.

எல் கே said...

அப்பப்ப இந்த மாதிரி எழுதி மனச கலங்க வைக்கற சேட்ட

Chitra said...

ஒண்ணும் அப்படி - இல்ல, இப்படியா?
ஓவரா சிரிக்க வைக்கிறீங்க - இல்ல, கலங்க வைக்கிறீங்க.

அகல்விளக்கு said...

:-(

சைவகொத்துப்பரோட்டா said...

(மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது) கல் எரிபவர்கள்தான்
"காப்பகத்தில்" சேர்க்கப்பட வேண்டியவர்கள்.

பிரபாகர் said...

பல்வேறு விஷயங்களை எழுதி சிரிக்க, கலங்க வைக்கும் என் நண்பா! உமது நட்பால் பெருமை கொள்கிறேன்.

தொலைந்த போன விஷயங்களில் கிராமபோன், கேசட் போல இந்த தபாலும் இருக்கிறது என என்னும்போதே மனம் வலிக்கிறது.

தன்னை என்னை செய்கிறார்கள் என்பதைக்கூட உணர முடியாத நிலையில் இதுக்கும் அவரை கல்லால் அடித்து சிரித்த அந்த நாய்களை.... மன்னிக்கவும் என் அந்த இனத்தை கேவலப்படுத்தவேண்டும்? மனிதர்களை என்ன செய்தாலும் தகும்.

படித்து கொஞ்சமல்ல, நிறையவே மன சஞ்சலம்...

பிரபாகர்...

செ.சரவணக்குமார் said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.

vasu balaji said...

யே யப்பா! அபாரம். பாராத ஆவுடைய மறக்கயேலாது.

Unknown said...

என்ன தலீவா நீ இப்ப்பிடியும் எழுதுவியா

நக்கல் இல்லாம ]

சுதாகர் said...

//அந்த மனநோயாளியின் மீது இந்த இஸ்திரிக்காரன் கல்லை எறிந்து கொண்டிருந்தான்; அதைப் பார்த்து அருகிலிருந்து அவனது மனைவி சிரித்துக்கொண்டிருந்தாள்.//
இப்படியும் சில மனிதர்கள்...... இந்த உலகத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... இப்படி பட்டவர்களை பார்க்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகத்திற்க்கு வரும்.
”இதுவும் கடந்து போகும்”......

முகுந்த்; Amma said...

அண்ணாச்சி மனசை தொட்டுடீங்க. அந்த ஆவுடை எப்படி இருப்பார்ன்னு நினைக்க தோணுது. நீங்கள் சொன்னது போல பள்ளிக்கூடம் இல்லாமல் பாடம் நடத்தி புரிய வைத்து இருக்கிறார். அந்த இஸ்திரி காரனும், அவன் மனைவியும் மனிதர்கள் அல்ல நாய்க்கும் கேவலமான ஜந்துக்கள்.

Unknown said...

மனதைத் தொடும் கதை..

//இந்த உலகத்தில் உயிரோடு இருப்பவர்கள் இவன்; அந்தப் பைத்தியக்காரன்; அவன் மீது கல்லெறிந்த இஸ்திரிக்காரன்; அதைப்பார்த்து சிரித்த அவனது மனைவி ஆகியோரும் அவர்களைப்போன்றோரும் தான்//

சத்தியமான வார்த்தைகள்

manjoorraja said...

டச்சிங்.

மசக்கவுண்டன் said...

நல்ல பதிவு. ஒவ்வொருவரும் உணரவேண்டிய பாடம். தன்னுயிர் போல் மன்னுயிரை நினைத்தால் உலகில் வேறு சட்டம் தேவையில்லை.

ரோஸ்விக் said...

ஐயோ வேற பிளாக்குக்கு வந்துட்டனோ??

இல்லையே நம்ம சேட்டை பிளாக்கு தான்...

ஆத்தாடி இவரு இப்புடியும் எழுதுவாரா??

உண்மையில் / உண்மையால் கலங்க வைத்த நிகழ்வு.

ஸ்ரீராம். said...

அருமை. மிக அருமை.
நாகேஷ் படம் பார்த்து நகைச்சுவை எதிர்பார்த்து வந்தேன். மனசைத் தொட்டு விட்டீர்கள்

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு சிறுகதை.
அடிக்கடி இது போலும் எழுதுங்கள் சேட்டை.

sathishsangkavi.blogspot.com said...

சேட்டை நண்பா....

சேட்டை இல்லாமல் மனதை தொடும் அழகான பதிவு....

settaikkaran said...

//me the first..ஹா.. ஹா//

மிக்க நன்றி பட்டாபட்டி அண்ணே!

settaikkaran said...

//தாபால்காரர் தபால் என ஆரம்பித்து நல்ல மெசெஜ்.//

மிக்க நன்றி புதுகைத்தென்றல்!

settaikkaran said...

//அப்பப்ப இந்த மாதிரி எழுதி மனச கலங்க வைக்கற சேட்ட//

ஹும், என்ன செய்வது, எழுதத் தோன்றிவிடுகிறதே! :-(

மிக்க நன்றி LK!

settaikkaran said...

//ஒண்ணும் அப்படி - இல்ல, இப்படியா?
ஓவரா சிரிக்க வைக்கிறீங்க - இல்ல, கலங்க வைக்கிறீங்க.//

நம்மை பாதிக்கிற விஷயத்தையும் எழுத வேண்டியிருக்கிறது; அதிலிருந்து மீள்கிற முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது! அதனால் தான்...

நன்றி சித்ரா!!

settaikkaran said...

:-(

நன்றி அகல்விளக்கு!

settaikkaran said...

//(மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது) கல் எரிபவர்கள்தான்
"காப்பகத்தில்" சேர்க்கப்பட வேண்டியவர்கள்.//

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனது நிலைப்பாடும் அதுவே.

மிக்க நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

settaikkaran said...

//பல்வேறு விஷயங்களை எழுதி சிரிக்க, கலங்க வைக்கும் என் நண்பா! உமது நட்பால் பெருமை கொள்கிறேன்.//

இந்த நான்கு மாதங்களில் உங்களைப் போன்றவர் அளிக்கிற ஊக்கமே எனது பதிவுகளின் சூத்திரம்.

//தொலைந்த போன விஷயங்களில் கிராமபோன், கேசட் போல இந்த தபாலும் இருக்கிறது என என்னும்போதே மனம் வலிக்கிறது.//

நானும் அதை வழிமொழிகிறேன். கையெழுத்துக்களைக் கண்ணில் ஒற்றிய காலம் எங்கு போனது???????

//தன்னை என்னை செய்கிறார்கள் என்பதைக்கூட உணர முடியாத நிலையில் இதுக்கும் அவரை கல்லால் அடித்து சிரித்த அந்த நாய்களை.... மன்னிக்கவும் என் அந்த இனத்தை கேவலப்படுத்தவேண்டும்? மனிதர்களை என்ன செய்தாலும் தகும்.//

மிகவும் உண்மை. ஆத்திரத்தின் வெளிப்பாடு சில சமயங்களில் எவ்வளவு நியாயமாகப் படுகிறது நமக்கு?

//படித்து கொஞ்சமல்ல, நிறையவே மன சஞ்சலம்...//

எழுதும்போது எனக்கும் மிக வலித்தது.

மிக்க நன்றி பிரபாகர்!!

settaikkaran said...

//மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.//

மிக்க நன்றி செ.சரவணகுமார்! தொடர்ந்து உற்சாகமூட்டுகிறீர்கள்!

settaikkaran said...

//யே யப்பா! அபாரம். பாராத ஆவுடைய மறக்கயேலாது.//

தொடரும் உங்களது வருகையும், கருத்துக்களும் என்னை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. நன்றி வானம்பாடிகள் ஐயா!

settaikkaran said...

//என்ன தலீவா நீ இப்ப்பிடியும் எழுதுவியா நக்கல் இல்லாம//

ஓ! அனுபவம் என்ற தலைப்பிலும், கட்டுரை என்ற தலைப்பிலும் எழுதியிருக்கிறேனே! நன்றி A.சிவசங்கர்!!

settaikkaran said...

//இப்படியும் சில மனிதர்கள்...... இந்த உலகத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... இப்படி பட்டவர்களை பார்க்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகத்திற்க்கு வரும்.
”இதுவும் கடந்து போகும்”......//

இதுவும் கடந்து போகும் என்பதோடு, கடந்து போயே தீர வேண்டும் என்ற ஆத்திரமும் சேர்ந்து ஏற்படுகிறதன்றோ? மிக்க நன்றி சுதாகர்!!

settaikkaran said...

//அண்ணாச்சி மனசை தொட்டுடீங்க. அந்த ஆவுடை எப்படி இருப்பார்ன்னு நினைக்க தோணுது. நீங்கள் சொன்னது போல பள்ளிக்கூடம் இல்லாமல் பாடம் நடத்தி புரிய வைத்து இருக்கிறார். அந்த இஸ்திரி காரனும், அவன் மனைவியும் மனிதர்கள் அல்ல நாய்க்கும் கேவலமான ஜந்துக்கள்.//

சில புனைவுகளுக்குப் பின்புலத்தில் சில நிழல்களும், கொஞ்சம் கற்பனையும் இருக்கும். ஆவுடை அப்படியொரு கதாபாத்திரம். இஸ்திரிக்காரனும் அவன் மனைவியும் நாம் அன்றாடம் காண்கிற மனிதர்களின் பிரதிநிதிகள். அவ்வளவே!

வருகைக்கும் ஆணித்தரமான கருத்துக்கும் நன்றி முகுந்த் அம்மா!

settaikkaran said...

//மனதைத் தொடும் கதை..//

மிக்க நன்றி!

\\//இந்த உலகத்தில் உயிரோடு இருப்பவர்கள் இவன்; அந்தப் பைத்தியக்காரன்; அவன் மீது கல்லெறிந்த இஸ்திரிக்காரன்; அதைப்பார்த்து சிரித்த அவனது மனைவி ஆகியோரும் அவர்களைப்போன்றோரும் தான்//\\

//சத்தியமான வார்த்தைகள்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகிலன்!

settaikkaran said...

//டச்சிங்.//

மிக்க நன்றி மஞ்சூர் அண்ணே!

settaikkaran said...

//நல்ல பதிவு. ஒவ்வொருவரும் உணரவேண்டிய பாடம். தன்னுயிர் போல் மன்னுயிரை நினைத்தால் உலகில் வேறு சட்டம் தேவையில்லை.//

உண்மைதான்! ஜீவகாருண்யம் என்பது பொதுவானது. மனிதனோ மிருகமோ அனைவரிடத்திலும் செலுத்த நம்மிடம் இருப்பது அன்பு மாத்திரம் தானே?

மிக்க நன்றி மசக்கவுண்டரே!

settaikkaran said...

//ஐயோ வேற பிளாக்குக்கு வந்துட்டனோ?? இல்லையே நம்ம சேட்டை பிளாக்கு தான்...ஆத்தாடி இவரு இப்புடியும் எழுதுவாரா??//

இப்படி நீங்கள் ஆச்சரியப்படுமளவு இந்த இடுகை வந்திருக்கிறதென்றால், அதற்கு உங்களைப் போன்றோர் அளித்த ஊக்கமும் ஒரு காரணம். :-))

//உண்மையில் / உண்மையால் கலங்க வைத்த நிகழ்வு.//

மிக்க நன்றி ரோஸ்விக்! :-))

settaikkaran said...

//அருமை. மிக அருமை.
நாகேஷ் படம் பார்த்து நகைச்சுவை எதிர்பார்த்து வந்தேன். மனசைத் தொட்டு விட்டீர்கள்//

நாகேஷ் எனது மான்சீக துரோணர்! நகைச்சுவையாகவும் பல இடுகைகள் எழுதியிருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்! அடிக்கடி வாருங்கள்!!

settaikkaran said...

//நல்லதொரு சிறுகதை.
அடிக்கடி இது போலும் எழுதுங்கள் சேட்டை.//

உற்சாகமளிக்க நீங்கள் இருக்கும்போது என்ன கவலை? தொடர்ந்து இது போல அவ்வப்போது எழுதுவேன்! மிக்க நன்றி அக்பர்! :-))

settaikkaran said...

//சேட்டை நண்பா....

சேட்டை இல்லாமல் மனதை தொடும் அழகான பதிவு....//

உற்சாகமூட்டுகிற உங்களது வார்த்தைகளே பெருமகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி சங்கவி! :-)

ரிஷபன் said...

உங்க சேட்டை ஒரு பக்கம் கலக்கல்னா இது நெகிழ வைத்து விட்டது.. அப்பப்ப இந்த மாதிரியும் மனசத் தொடுங்க..

ஹுஸைனம்மா said...

//ஜன்னலைச் சாத்தினான். கண்களை மூடியபடி யோசித்தான்.//

ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?

settaikkaran said...

//ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?//

ஆவுடையின் காலம் வேறு; இவனது காலம் வேறு!

இங்கு கடிதங்களின் வரத்து குறைந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அதற்குள் இந்தக் காலமாற்றத்தையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கருத்துக்கு நன்றி! :-)

settaikkaran said...

//ஆவுடை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு போனார்?//

ஆவுடையின் காலம் வேறு; இவனது காலம் வேறு!

இங்கு கடிதங்களின் வரத்து குறைந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அதற்குள் இந்தக் காலமாற்றத்தையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். கருத்துக்கு நன்றி! :-)

ஹுஸைனம்மா said...

//ஆவுடையின் காலம் வேறு; இவனது காலம் வேறு! //

எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்கணும். கேட்டா சரி; இல்லை, முயற்சி செய்தோம்கிற எண்ணமாவது இருக்கும்.

settaikkaran said...

//எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்கணும். கேட்டா சரி; இல்லை, முயற்சி செய்தோம்கிற எண்ணமாவது இருக்கும்.//

இது ஒரு புனைவு என்பதை நினைவூட்டுக்கிறேன்!

இடுகையின் முடிவிலும் ’அவன்’ மனநிலை குறித்துத் தான் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவன் அதிநாயகனல்லன்; சாமானியன்! சகித்துக்கொண்டு வாழப்பழகிக்கொண்டிருக்கிறவன். அவனால் செய்ய முடிந்தது அவ்வளவே!

இது நகரவாழ்க்கையின் அவலங்களின் ஒரு துளியை மையமாகக் கொண்ட ஒரு புனைவு!

அம்புட்டுத்தேன்!

settaikkaran said...

//எந்தக் காலமானாலும், ஒரு குரல் கொடுத்துப் பார்க்கணும். கேட்டா சரி; இல்லை, முயற்சி செய்தோம்கிற எண்ணமாவது இருக்கும்.//

இது ஒரு புனைவு என்பதை நினைவூட்டுக்கிறேன்!

இடுகையின் முடிவிலும் ’அவன்’ மனநிலை குறித்துத் தான் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவன் அதிநாயகனல்லன்; சாமானியன்! சகித்துக்கொண்டு வாழப்பழகிக்கொண்டிருக்கிறவன். அவனால் செய்ய முடிந்தது அவ்வளவே!

இது நகரவாழ்க்கையின் அவலங்களின் ஒரு துளியை மையமாகக் கொண்ட ஒரு புனைவு!

அம்புட்டுத்தேன்!

சாமக்கோடங்கி said...

ஆவுடை போல் வாழ்பவர்கள் நிறையே பேர் இருக்கின்றனர்.. இந்த இடுகையின் மூலம் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்..

////இந்த உலகத்தில் உயிரோடு இருப்பவர்கள் இவன்; அந்தப் பைத்தியக்காரன்; அவன் மீது கல்லெறிந்த இஸ்திரிக்காரன்; அதைப்பார்த்து சிரித்த அவனது மனைவி ஆகியோரும் அவர்களைப்போன்றோரும் தான்//
// ஏன் நாமெல்லாம் இல்லையா...? கண்டிப்பாக நம்மால் முடிந்ததைச் செய்வோம்... நமக்கான கடமையை உணர்வோம்.. மிருகங்களுக்குப் பரிவு காட்டுதல் உதவி அல்ல.அவர்களுக்கும் வாழ்வுரிமை உள்ளது.. எனவே அது நமது கடமை..

நன்றி...