Friday, April 9, 2010

ஏன்?

அந்த அழகான அழைப்பிதழை ஒரு அருவருப்பான பொருளைப் பார்ப்பது போல நாங்கள் நண்பர்கள் வெறித்துக்கொண்டிருந்தோம்.

"நான் வரலேடா! அந்த பொம்பளையைப் பார்த்தா அடிச்சாலும் அடிச்சிருவேன்," என்று பற்களைக் கடித்தபடி கூறிய சுரேந்திரன், முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டான்.

"நானும் அவங்க முகத்திலே விழிக்க விரும்பலே," என்று சொல்லிவிட்டு, இது குறித்து இனியும் பேச விருப்பமில்லை என்பது போல நான் எழ முயன்றேன்.

"இருங்கடா! எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்," என்று அழுத்தமான குரலில் பேசினான் வைத்தி. "என்னாச்சு உங்களுக்கு? நீங்க ஏதோ குத்தம் பண்ணினா மாதிரி எதுக்கு ஓடி ஒளியறீங்க?"

"டேய், நமக்கு குமார் தான் நண்பன்! அவன் வீட்டு விசேஷத்துலே அவனே கலந்துக்கப்போறதில்லை. லீவு கிடைக்கலேன்னு கத்தாருலே உட்கார்ந்திட்டிருக்கான். நமக்கு மட்டும் அங்கே என்ன வேலை?" சுரேந்திரனின் கேள்வியில் எனக்கு நியாயம் இருப்பதாகப் பட்டது.

"இன்விடேஷன் அனுப்பியிருக்காங்க! ஃபோன் பண்ணிக் கூப்பிட்டிருக்காங்க! உள்ளூருலே இருந்துகிட்டு போகலேன்னா நல்லாயிருக்குமா? இப்பவே நாம அங்கே எட்டிக்கூடப் பார்க்குறதில்லேன்னு மிசஸ் குமார் ரொம்பக் குறைப்பட்டுக்கறாங்க தெரியுமா?" சுரேந்திரன் விடுவதாயில்லை.

"ஐயையோ, ரொம்பப் பாசம் பொங்கி வழியுதாக்கும்?" என்று நான் கேலியாகச் சிரித்தேன். "நான் வந்தா அவங்களப் பார்த்து போலியாச் சிரிக்கணும், போலியா மரியாதை கொடுக்கணும். சத்தியமா வரமாட்டேன்."

"அந்தப் பொம்பளை முகத்துலே முழிக்கிறது கூட பாவண்டா!" என்று சுரேந்திரன் பொருமினான்.

"சுரேன், அது அவங்களோட குடும்ப விஷயம். புருஷன் பெண்டாட்டி சமாச்சாரம். நாம அதப்பத்திப் பேசக்கூடாது!" வைத்தியின் குரலில் சற்றே காட்டம் கூடியது.

"நம்ம கிட்டே சொன்னவனே குமார் தானே?" என்று சுரேந்திரனுக்கு நான் வக்காலத்து வாங்கினேன். "ஞாபகமிருக்கா, எப்படி குமுறி குமுறி அழுதான் அன்னிக்கு?"

பொதுவாக எங்கள் மூவருக்குள்ளே விவாதங்களில்லாத நாட்களில்லை. ஆனால், அந்த விவாதம் இயல்பைக்காட்டிலும் உரத்ததாகவும், வழக்கத்துக்கு மாறாக சூடாகவும் இருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலும், கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதே விஷயத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசினோம்; காரசாரமாக விவாதித்தோம். அன்று இரவு, குமாரே தொலைபேசியில் அழைத்துப் பேசினான்.

"மூணு பேரும் போயிட்டு வாங்க!" என்றான் குமார். "நான் காரணத்தோட தான் சொல்லுறேன். தவறாம மூணு பேரும் போயிட்டு வாங்க! இல்லேன்னா, நீங்க அவளை தவிர்க்கிறீங்களோன்னு அவளுக்கு சந்தேகம் வரும். உங்க கிட்டே நான் சொன்னதையெல்லாம் ஒரு நாளைக்கு மறந்திடுங்க! எதையும் தெரிஞ்சதா காண்பிச்சுக்க வேண்டாம். எனக்காக போய் தலையைக் காட்டிட்டு வந்திடுங்க!"

குமாரோடு பேசிமுடித்ததும் எனக்கும் சுரேந்திரனுக்கும் இன்னும் குழப்பமே அதிகமாயிருந்தது.

"என்னடா இந்த குமார்? எத்தனை நாளைக்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?"

"இனிமேல் இது பத்தி விவாதிக்க வேண்டாம். குமாரே சொல்லியாச்சு! நாம மூணு பேரும் அவசியம் இந்த கிரஹபிரவேசத்துக்குப் போறோம்."

வைத்தி உறுதியாகச் சொல்லிவிட்டான். மறுநாள் அவனே சிறியதாக ஒரு வெள்ளிவிளக்கும் வாங்கி வந்தான். யாருக்குப் பரிசு கொடுப்பதென்றாலும், மூவரும் பகிர்ந்து கொள்வதே முறையாக இருந்தும், இம்முறை அவனே முடிவெடுத்தது சற்று நெருடலாக இருந்தது.

சரி, விஷத்தை விழுங்குவது போல, மூவரும் போய் மரியாதைக்கு சிறிது நேரம் இருந்துவிட்டு வந்துவிட வேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டேன்.

ஒருவழியாக, கிரஹபிரவச நாளும் வந்தது. மூவரும் போயிருந்தோம். உறவினர்களும் நண்பர்களும் ஏகமாகத் திரண்டு வந்திருந்ததால், குமாரின் மனைவியை அங்கு போய் சில நிமிடங்கள் கழித்தே பார்க்க முடிந்தது. குமார் இல்லாததால், அவனது பெற்றோர்கள் பூஜையில் அமர்ந்திருந்தனர். குமாரின் மனைவியின் விருந்தோம்பலில் எவ்விதப் பாசாங்கும் தென்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், மனம் ஒட்டவில்லை. பரிசைக் கொடுத்து விட்டு, வற்புறுத்தினார்களே என்பதற்காக, பந்தியில் அமர்ந்து கொஞ்சம் கொறித்து விட்டு கிளம்பினோம். வரும்வழியில் சுரேந்திரன் தான் முதல்முதலாய்ப் பேசினான்.

"வைத்தி! இது தான் கடைசி தடவை! இனிமேல் குமாரே சொன்னாலும் அவங்க வீட்டுக்கு நான் வரமாட்டேன்."

"ஏன்?"

சிறிது நேர மவுனத்துக்குப் பின்னர், சுரேந்திரன் சொன்னான்.

"அவங்களை நம்ம சினேகிதனோட சம்சாரமாப் பார்க்கிறவரைக்கும் மனசுலே மரியாதை இருந்தது. இப்போ அவங்களைப் பார்க்கிறபோது, கெட்ட எண்ணம் வருது! வேண்டாம் இந்த விஷப்பரீட்சை!"

எனக்கும் மனதில் சுருக்கென்று தைத்தது. தவிர்க்க முடியாமல் குமாரைப் பற்றி நினைவு வந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு ஞாயிறன்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எங்களை அவனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு எழுப்பியது.

"குமார்! என்னடா விஷயம்...?"

"சோம்பேறிங்களா! இன்னுமா தூக்கம்? யாராவது வண்டியெடுத்துக்கிட்டு ஏர்போர்ட் வாங்க!"

"என்னது?"

அடுத்த பத்துநிமிடங்களில் மாயாஜாலம் போல, நாங்கள் மூவருமே தயாராகி அவரவர் வாகனங்களில் விமானநிலையத்துக்கு விரைந்தோம். நாசூக்கு,நாகரீகம் என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் ஓவென்று இரைந்தோம்; ஆரத்தழுவிக்கொண்டோம்.

"என்னடா திடீர்னு? வேலையை விட்டுத்தூக்கிட்டாங்களா?"

"பாவி! என்னை கத்தாருக்கு மாத்திட்டாங்கடா! சந்தடி சாக்குலே ஒருவாரம் லீவு போட்டுட்டு எல்லாரையும் அசத்தலாமுன்னு தான் சொல்லாமக் கொள்ளாம வந்தேன்!"

"அண்ணி கிட்டேயாவது சொன்னியாடா பாவி?"

"டேய் வைத்தி! உங்க கிட்டேயே சொல்லாதபோது, அவ கிட்டே மட்டும் சொல்லவா போறேன்?" என்று குமார் சிரித்தான். அனேகமாக அவன் சிரித்து நாங்கள் கடைசியாகப் பார்த்தது அப்போது தான்.

அவனை தெருமுனை வரைக்கும் கொண்டு விட்டு, இங்கிதம் தெரிந்த நண்பர்களாக நாங்கள் திரும்பிய அடுத்த ஒரு மணிநேரத்தில், வெளிறிய முகத்தோடு குமார் எங்கள் அறைக்கு வந்தான். உள்ளே நுழைந்தவன், தானே கதவைச் சாத்தித்தாளிட்டு, நாற்காலியில் அமர்ந்து, முகத்தை இரண்டு கைகளிலாலும் பொத்தியபடி குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான். பதற்றத்தில் அவனை எப்படி சமாதனம் செய்வது என்று கூட விளங்காமல் அமர்ந்திருந்த நாங்கள், அவனிடம் பேச முயன்றபோது அவன் திரும்பத் திரும்பச் சொன்னதெல்லாம்.......

"ஐயோ...அவளுக்கு எப்படிடா மனசு வந்தது? எப்படிடா?"

அன்று மாலைதான் அவன் தன் வீட்டுக்குப்போனான். அதற்குள் அவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கேட்டு அதுவரை நாங்கள் அண்ணி என்று அன்போடு அழைத்து வந்த அந்தப் பெண்மணியின் பிம்பம் கண்ணுக்கும் தட்டுப்படாத கணக்கற்ற துகள்களாய் உடைந்துபோய் விட்டிருந்தது.

எட்டுவருடமாக நகமும் சதையுமாய்ப் பழகிய ஒரு நண்பனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை எங்களால் தாங்க முடியவில்லை என்றாலும், அதிலிருந்து முதலில் மீண்டவன் வைத்தி தான்.

"அவன் நம்ம கிட்டே சொல்லிட்டான்னுறதுனாலே இதுலே தலையிடவோ, இது பத்தி அபிப்ராயம் சொல்லவோ நமக்கு அதிகாரம் இருக்கிறதா அர்த்தமாயிடாது. அது அவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அவங்க தான் தீர்த்துக்கணும். குமார் புத்திசாலி! இதுலேருந்து மீண்டு வருவான்!"

குமார் அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை. பெற்றோர்களின் உடல்நிலையைக் காரணம் காட்டி, கிராமத்திலிருந்து சென்னைக்கு வரவழைத்தான். அவனுடன் அவ்வப்போது பேசியபோதெல்லாம், அவன் எவ்வளவு மீண்டிருக்கிறான் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தனது துரோகத்தை குமார் கண்டுபிடித்துவிட்டான் என்பதை மட்டும் இன்றுவரையிலும் அந்த மனைவி அறிந்திருக்கவில்லை.

அவ்வப்போது எண்ணுவதுண்டு: ஏன் குமார் தன் மனைவியை மன்னித்து விட்டான்?

கிரஹபிரவேசம் முடிந்து அறைக்குத் திரும்புகிற வழியில் கூட அந்தக் கேள்வி மீண்டும் எழுந்தது. அறைக்குத் திரும்பியதும், சிறிது நேரம் கழித்து வைத்தியை குமார் தொலைபேசியில் அழைத்து நெடுநேரமாகப் பேசினான். பேசி முடித்ததும் வைத்தி ஒரு நீளமான பெருமூச்சு விடுத்தான்.

"என்னடா சொன்னான் குமார்?"

"அவன் ஒரு கேள்வி கேட்டான்; என்ன பதில் சொல்றதுன்னு நான் திகைச்சுப்போய் நின்னுட்டேன்!"

"என்னது...?" நான் வினவினேன்.

"என் குழந்தைங்க எப்படியிருக்காங்கன்னு கேட்டான்!" என்று கூறிய வைத்தி, தன் முகத்தை எங்களிடம் காட்ட விரும்பாமல் அறையை விட்டு வெளியேறி படியிறங்கிச் சென்றான்.

55 comments:

அகல்விளக்கு said...

அடப்பாவி மக்கா...

ஏதோ கலாய்க்கப் போறேன்னு வந்தேன்...

இப்படிப் பண்ணிட்டயே.....

இதுவும் நல்லாத்தான் இருக்கு...

அடிக்கடி எதிர்பார்க்கிறேன்...

எல் கே said...

nalla irukenne

பிரபாகர் said...

நல்லாருக்கு நண்பா! படித்த பின் மனம் கனத்திருக்கிறேன் வைத்தி சுரேந்திரன் சேட்டை போல நானும்...

பிரபாகர்...

நாமக்கல் சிபி said...

குட் நரேஷன்!

Raju said...

நல்ல ப்ளோ..!

விக்னேஷ்வரி said...

அருமையான நடை. ரொம்ப நல்லாருக்கு.

Thamiz Priyan said...

:) :(

pudugaithendral said...

ஏதோ கலாய்க்கறீங்கன்னு தான் நினைச்சேன். நல்லா இருக்கு கதை.
(இப்பல்லாம் இப்படி நடப்பதா கேள்விப்படுறதால மனசும் பதறுது)

மசக்கவுண்டன் said...

உண்மையான கதையாக இருந்தால் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கற்பனையாக இருந்தால் பாராட்டுக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்
பாவம்தான் அந்த நண்பர்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன் சேட்டை.. என்னாச்சு?..

காமெடில இருந்து சீரியஸ் ஆயிட்டீங்க..

ஆமா, இது கற்பனையென நினைத்துக்கொள்கிறேன்.

Unknown said...

புனைவுதான் என்று நம்புகிறேன்...

மனதைப் பாதித்தது..

Ananya Mahadevan said...

ivlo nasookkaa kooda indha maadhiri vishayathai pathi ezhudha mudiyumaa? vaazhthukkal settai. kudos!

Chitra said...

மனதை கனக்க வைக்கும் பதிவு. எத்தனை பேர், இப்படி சோகங்களை துரோகங்களை மனதில் புதைத்து விட்டு வாழ்கிறார்களோ?

முகுந்த்; Amma said...

Very good Post. I admire your way of writing in these kind of delicate issues. Hats of to your friend. Very touching.

குலவுசனப்பிரியன் said...

புரியவில்லை. குடும்பம் என்ற வரட்டு கௌரவத்திற்காக, பெரும் துரோகத்தை பொருத்துக் கொள்வது எப்படி சரியாகும்? இந்த சூழ்நிலையில் குழந்தைகள் எப்படி நல்லபடியாக வளரமுடியும்? விவாகரத்து வாங்கிக் கொள்வதில் என்ன மனத்தடை?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இது கதையாக மட்டும் இருக்கட்டும்.

vasu balaji said...

குமாருக்கு மட்டுமே பதில் தெரிந்த ஏன்?. அருமையாச் சொல்லியிருக்கீங்க சேட்டைக்காரன். அந்த அழுத்தம் எழுத்தில்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதுக்கும்,ரெண்டு பேரு மைனஸ் ஓட்டு போட்டிருக்காங்க...
சேட்டை.. என்னானு பாருங்க..

Paleo God said...

பாதிக்கப்பட்ட நடையாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ்வுகளில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படும். ப்ச்..!

sathishsangkavi.blogspot.com said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு...

settaikkaran said...

//அடப்பாவி மக்கா...ஏதோ கலாய்க்கப் போறேன்னு வந்தேன்...இப்படிப் பண்ணிட்டயே.....//

ஹா..ஹா! நானும் சராசரி உணர்ச்சிக்குவியல் தானுங்களே?

//இதுவும் நல்லாத்தான் இருக்கு...
அடிக்கடி எதிர்பார்க்கிறேன்...//

அவசியம் எதிர்பாருங்கள்! இதுவும் தொடரும்! :-)

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//nalla irukenne//

மிக்க நன்றி!

settaikkaran said...

//நல்லாருக்கு நண்பா! படித்த பின் மனம் கனத்திருக்கிறேன் வைத்தி சுரேந்திரன் சேட்டை போல நானும்...//

பல விதமான பதிவுகளை எழுதச்சொல்லி என்னை ஊக்குவிப்பவர்களில் நீங்கள் முதன்மையானவர். :-)

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//குட் நரேஷன்!//

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//நல்ல ப்ளோ..!//

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//:) :(//

:-( :-)

settaikkaran said...

//ஏதோ கலாய்க்கறீங்கன்னு தான் நினைச்சேன். நல்லா இருக்கு கதை.//

பெரும்பாலும் நகைச்சுவையை மையப்படுத்தி எழுதுகிறபோது, சில சமயங்களில் வாசிப்பவர்களைக் குழப்பி விடுவதுண்டு. அதிலிருந்து மீள்கிற ஒரு முயற்சியே இது.

//(இப்பல்லாம் இப்படி நடப்பதா கேள்விப்படுறதால மனசும் பதறுது)//

உண்மை! இதுவும் ஒரு நிஜம் விட்டுப்போன நிழல்தான்!!

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//அருமையான நடை. ரொம்ப நல்லாருக்கு.//

உற்சாகமூட்டுகிற உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

//உண்மையான கதையாக இருந்தால் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கற்பனையாக இருந்தால் பாராட்டுக்கள்.//

அப்படியென்றால், உங்கள் அனுதாபங்களை ஏற்றுக்கொள்கிறேன் கவுண்டரே!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்
பாவம்தான் அந்த நண்பர்.//

ஆமாம். ரொம்பப் பாவம்! அவருக்காக பல இதயங்களில் இன்னும் குருதி நில்லாமல் வடிந்து கொண்டிருக்கிறது.

மிக்க நன்றி!!

settaikkaran said...

//ஏன் சேட்டை.. என்னாச்சு?..காமெடில இருந்து சீரியஸ் ஆயிட்டீங்க..//

அண்ணே! அனுபவம் என்ற தினுசில் இதுவரை நிறைய இது மாதிரி எழுதியிருக்கிறேனே? :-)

//ஆமா, இது கற்பனையென நினைத்துக்கொள்கிறேன்.//

ஹூம்! உங்களால் நினைத்துக்கொள்ள முடிகிறது. எங்களால் முடியவில்லையே! :-((

மிக்க நன்றிண்ணே!!

settaikkaran said...

//புனைவுதான் என்று நம்புகிறேன்...

மனதைப் பாதித்தது..//

இது ஒரு வடுவுக்குக் கொடுத்த வடிவம்.

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//ivlo nasookkaa kooda indha maadhiri vishayathai pathi ezhudha mudiyumaa? vaazhthukkal settai. kudos!//

இதை நாசூக்காகத் தான் கையாள வேண்டும். எழுதும்போதும் சரி, எதிர்கொள்ளும்போதும் சரி!

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//மனதை கனக்க வைக்கும் பதிவு. எத்தனை பேர், இப்படி சோகங்களை துரோகங்களை மனதில் புதைத்து விட்டு வாழ்கிறார்களோ?//

அந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதாகத் தான் கேள்விப்படுகிறோம். அந்த அச்சுறுத்தலைக் கண்டு தான் இதையும் பதிவு செய்தேன்.

மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//Very good Post. I admire your way of writing in these kind of delicate issues. Hats of to your friend. Very touching.//

இது போன்ற விஷயங்களை மென்மையாகக் கையாள வேண்டியிருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றியிருந்தால் அதுவே போதும் இல்லையா?

மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//புரியவில்லை. குடும்பம் என்ற வரட்டு கௌரவத்திற்காக, பெரும் துரோகத்தை பொருத்துக் கொள்வது எப்படி சரியாகும்? இந்த சூழ்நிலையில் குழந்தைகள் எப்படி நல்லபடியாக வளரமுடியும்? விவாகரத்து வாங்கிக் கொள்வதில் என்ன மனத்தடை?//

இதே தவறை கணவன் செய்து, அதை மனைவி பொறுத்துக்கொண்டிருக்கிற காட்சியை நாம் காண்கிறோமா இல்லையா? அதை அவள் சகித்துக்கொண்டு போக வேண்டும் என்று தான் இன்றும் அவள் காதில் ஓதப்படுகிறது. அதையே அவள் செய்தால் விவாகரத்து செய்ய வேண்டுமா? புரியவில்லையே இந்த நியாயம்!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இது கதையாக மட்டும் இருக்கட்டும்.//

அப்படித்தான் நானும் விரும்புகிறேன்! இது கடைசிக்கதையாக இருக்கட்டும் என்பதே நமது பிரார்த்தனையாக இருத்தல் அவசியம்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

//குமாருக்கு மட்டுமே பதில் தெரிந்த ஏன்?. அருமையாச் சொல்லியிருக்கீங்க சேட்டைக்காரன். அந்த அழுத்தம் எழுத்தில்.//

வலைப்பதிவுகள் நடத்துவோர்களுக்கு இருக்க வேண்டிய குறிக்கோளை உங்களைப் போன்றோரின் வருகை அவ்வப்போது நினைவூட்டி, நல்வழிப்படுத்துகிறது ஐயா! உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிதமிஞ்சிய உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி!

settaikkaran said...

//இதுக்கும்,ரெண்டு பேரு மைனஸ் ஓட்டு போட்டிருக்காங்க...
சேட்டை.. என்னானு பாருங்க..//

அண்ணே! ஓட்டுகளை விடவும், இதை வாசித்துப் பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்கும் உங்களைப் போன்றோரின் ஆதரவு தானே அத்தியாவசியமானது? :-))

இது போதுமண்ணே! மற்றவர்களின் விருப்பு வெறுப்புகள் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? மிக்க நன்றிண்ணே!!

settaikkaran said...

//பாதிக்கப்பட்ட நடையாகவே தெரிகிறது. இம்மாதிரி நிகழ்வுகளில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படும். ப்ச்..!//

சில காட்சிகள் கண்ணில் இறங்கிய முட்களாகி, காலங்கடந்தபின்னும் வலிப்பதில்லையா? அதன் வெளிப்பாடே இது! மிக்க நன்றிங்க!!

settaikkaran said...

//இதுவும் நல்லாத்தான் இருக்கு...//

மிக்க நன்றிங்க! :-)

பிரேமா மகள் said...

சேட்டை.. இது உண்மையான சம்பவமா?....

Anonymous said...

கதை போகிற போக்கில் எங்கே சுரேந்திரனை வில்லனாக்கிடிவீங்ளோன்னு பயந்தேன்.. நல்லவேளை நா பிழைச்சேன். நன்றி...


http://ksurendran.wordpress.com/

ஜெய்லானி said...

இதுப்போல வாழ்கையில எத்தனைப்பேரோ!! நினைச்சாலே மனசு பாரமா ஆகுது....>>>>

அச்சு said...

kalakalaa irukunga setai.

Cable சங்கர் said...

பல சமயம் நிதர்சனங்கள் இயல்பாய் தாண்டிப்போகத்தான் செய்யும்.

settaikkaran said...

//kalakalaa irukunga setai.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//பல சமயம் நிதர்சனங்கள் இயல்பாய் தாண்டிப்போகத்தான் செய்யும்.//

உண்மை! எல்லார்க்கும் இதை செரிப்பது கடினமாய் இருக்கலாம். மிக்க நன்றி!

settaikkaran said...

//சேட்டை.. இது உண்மையான சம்பவமா?....//

"ஆமாம்" என்று மிக வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. :-((

மிக்க நன்றிங்க!

settaikkaran said...

//கதை போகிற போக்கில் எங்கே சுரேந்திரனை வில்லனாக்கிடிவீங்ளோன்னு பயந்தேன்.. நல்லவேளை நா பிழைச்சேன். நன்றி...//

ஆஹா! இப்படியொரு சந்தோஷமா? :-))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! சுரேந்திரன் என்ற பெயரை நான் உச்சரிக்காத நாளே இல்லை.

சாமக்கோடங்கி said...

சத்தியமாக மனம் நொந்தேன்.. உங்கள் நண்பருக்கு என் ஆறுதல் தேவையில்லை.. அவர் நிச்சயமாகப் பெரிய மனிதர்.. மன்னித்தாரோ இல்லையோ, விலகி இருக்கிறார் அல்லவா..

அனால் இரட்டை வேடம் போடும் அந்த மனைவியைப் பற்றி நான் என்ன சொல்ல..

வெளிப்படையாகப் பேசிப் பிரிய வேண்டும் அல்லது உணர்ந்து திருந்தி ஒன்றாக வேண்டும்..

இப்படியே வாழ்வது குழந்தைகளையும், இவர்கள் எதிர்காலத்தையும் கண்டிப்பாக பாதிக்கும்..

நன்றி..

சுதாகர் said...

மனதை பாதித்த பதிவு......

settaikkaran said...

//மனதை பாதித்த பதிவு......//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுதாகர்! அடிக்கடி வாங்க!

ஹுஸைனம்மா said...

//இதே தவறை கணவன் செய்து, அதை மனைவி பொறுத்துக்கொண்டிருக்கிற காட்சியை நாம் காண்கிறோமா இல்லையா? ... அதையே அவள் செய்தால் விவாகரத்து செய்ய வேண்டுமா? புரியவில்லையே இந்த நியாயம்!//

கதையைவிட இந்த நியாயம் நல்லாயிருக்குது!! தவறைச் செய்பவரைவிட, தவறு செய்யத் தூண்டியவன்தான் பெரிய குற்றவாளி. பணம் மட்டுமே வாழ்வில்லையே!!