Wednesday, February 24, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.04


அடுத்து நாம் காணப்போகும் கடகராசிக்கார வலைப்பதிவர்கள் கடியில் கட்டெறும்பு என்றாலும் சுறுசுறுப்பானவர்கள். மிகுந்த விழிப்புணர்ச்சி கொண்டவர்கள் என்பதால், அயர்ந்த உறக்கத்திலிருந்து அலறிப்புடைத்து கண்விழித்து அரைமணி நேரத்தில் அடுத்த பதிவை எழுதுபவர்கள். இவரது பதிவுகளுக்கு வாடிக்கையாக கருத்தெழுதுகிறவர்கள் இவரது கண்பார்வையிலிருந்து எளிதில் தப்பி விட இயலாது. பின்னூட்டமிட மனமேயில்லாமல், கடனே என்று ஆங்கிலத்தில் "good," என்று ஒரே வார்த்தை எழுதினாலும், அதற்கு இரண்டுவரிநீள நன்றி சொல்லச் சளைக்கவே மாட்டார்கள். மறுமொழிகளில் இவ்வளவு தாராளம் காட்டினாலும் உங்களுக்குப் பரிச்சயமானவர்கள் உங்களை "பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய கஞ்சன்," என்று உங்கள் காதுபடவே கூறுவார்கள். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் எதிர்கொண்டாலும் கொள்கையிலிருந்து சற்றும் பிறழாமல் தொடர்ந்து முன்னைவிட மொக்கைபோடுவதில் சக்கைபோடு போடுவார்கள்.

கடகராசிக்காரர்களுக்கு இயல்பாகவே ஞாபக சக்தி அதிகம் என்பதால், தங்கள் பதிவை மறந்தாலும், மறுமொழி எழுதிக் கடுப்படித்தவர்களை எளிதில் மறக்க மாட்டார்கள். எதையுமே எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு அதிகம் என்பதால், பல சமயங்களில் டிரைலர் பார்த்தும், சில சமயங்களில் போஸ்டர் பார்த்துமே திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி ஜமாய்த்து விடுவார்கள். பொதுவாக பதிவு போடுவதற்கு முன்னர் மிகவும் யோசிக்கிற வழக்கமுள்ள இவர்கள், பதிவு போட வேண்டும் என்று முடிவெடுத்தால் பதிவு போடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தோ அல்லது அடுத்து தாங்கள் போடவிருக்கும் ஒரு பதிவு குறித்தோ ஒரு விபரமான பதிவைப் போட்டே தீருவார்கள். இயல்பிலேயே மிகுந்த துணிச்சலுள்ளவர்கள் என்பதால் இந்த ராசிக்காரர்கள் தாங்கள் எழுதுகிற ஹைக்கூ கவிதைகளை தைரியமாக "நையாண்டி," பிரிவில் சேர்த்து விடுவார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு அவர்களது சகபதிவர்களே அனுகூலசத்ருக்களாக இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் தாயகத்தை விட்டு ஒரு கடலாவது தாண்டியே வசிப்பார்கள். கடந்த சில பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தபோதிலும், இந்த ராசிக்காரர்களுக்கு இதுவரையிலும் தோராயமாக மிகவும் கஷ்டதசையே இருந்து வந்தது. வாசகர்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து வாயெல்லாம் பல்லாகி, விழுந்தடித்து எழுதிய அடுத்த பதிவுகளுக்குத் தாங்களே போட்டுக்கொண்ட ஒரு ஓட்டுக்கு மேல் மறு ஓட்டு விழுந்திருக்காது.

சுருக்கமாகச் சொல்வதானால், அச்சுதன் டீ ஸ்டாலுக்குப் போய் ஆர்டர் கொடுத்து விட்டு, கிளாஸை கைதவறிக் கீழே போட்டு உடைத்து, டீயும் குடிக்காமல் பத்து ரூபாய் தண்டம் மட்டும் அழுதுவிட்டு வருவது போல, சும்மாயிருந்தாலும் வில்லங்கம் விசிட்டிங் கார்டு கொடுத்து விருந்துக்குக் கூப்பிடுகிற ராசியாக இருந்தது இவர்களுக்கு. ஆனால், இனிமேல் அப்படியிருக்காது; டீ சாப்பிட்டு விட்டு ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்தாலே போதும்.

ராகுவும், கேதுவும் பெரும்பாலான கடகராசிக்காரர்களைப் போலவே வாடகை வீட்டில் வசிக்கிறவர்கள் என்பதால், அவ்வப்போது அளவுக்கு மீறி ஆணியடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதனால், திருமணமான பதிவர்களுக்கு அவர்களது பதிவு காரணமாக வீட்டில் சில சின்னச் சின்ன பூசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. (இதில் "இந்தப் பதிவு உண்மையிலேயே நீங்கள் எழுதியது தானா?" என்று வழக்கமாகக் கேட்கிற கேள்வி அடங்காது). அதே சமயம் திருமணமாகாதவர்களுக்கு அவர்களின் பதிவு காரணமாக, திருமணம் ஆவதற்குரிய அறிகுறிகள் தென்படலாம் என்பதால் வாசகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளாமல் இருத்தல் மிக அவசியம்.

கேதுவுக்கு குருபார்வை கிடைக்கும் என்பதால், உள்ளூர் இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்புகள் வருவதன் மூலம் பின்னூட்டம் எழுத மேலும் இரண்டிலிருந்து மூன்று பேர்கள் மாட்டிக்கொள்வதற்கான லட்சணங்கள் இருக்கின்றன. இதனால், சில பதிவர்களுக்கு திடீரென்று ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்படுகிற அபாயமும் இருக்கிறது. சுக்கிரன், சனி இவர்களது தூண்டுதலால் கடகராசிக்காரர்கள் அரசியல் ஆரூடங்கள் சொல்வதற்கான வாய்ப்பும் இருக்கின்றது.

"சிங்கம் பசித்தாலும் சிங்கிள் டீ குடிக்காது," என்பதை சிந்தனையில் நிறுத்தி விடாமுயற்சியுடன் நீங்கள் அடாத பல பதிவுகளை அடிக்கடி எழுதினால், நட்சத்திரப்பதவி உறுதி!

உங்களது ஜன்மராசியில் நிற்கிற கேதுவை ராகு கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருப்பது உங்களின் அதிர்ஷ்டம். இனி நீங்கள் எழுதப்போகிற பதிவுகளெல்லாமே பட்டையைக் கிளப்பப்போகின்றன. வி.ஐ.பிக்கள் அதாவது விடாமல் இம்சிக்கிற பதிவர்கள் உங்களது படைப்புக்களைப் பாராட்டப்போகிறார்கள். நீங்கள் பின்னூட்டம் போடாததால் டூ விட்ட நண்பர்கள் திடீரென்று உங்கள் வலைப்பக்கம் வந்து பாராட்டி உங்களை மகிழ்விப்பார்கள்.

மேலும் இதுவரை நீங்களே வடிவமைத்துக்கொண்ட பல விருதுகளை உங்கள் வலைப்பதிவின் முகப்பில் போட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, உண்மையிலேயே சகபதிவர்கள் "ஃபோட்டோ ஷாப்," பயிற்சிக்காக தாங்கள் உருவாக்கிய மாதிரி சான்றிதழ்களை, "பாழாய்ப் போவதை பசுவுக்குக் கொடு," என்ற பழமொழியின் அடிப்படையில் உங்களுக்கு அனுப்பி வைக்கிற வாய்ப்புகளும் காணப்படுகின்றன. மொத்தத்திலே கடகராசிக்காரர்கள் காட்டில் அடைமழை பெய்யும் நேரமிது.

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

மற்ற ராசிக்காரர்களா? எங்கேயும் செல்ல வேண்டாம்!தயவு செய்து காத்திருக்கவும்!


23 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சேட்டை..
நல்லா ப்ளோவா வருது எழுத்துக்கள்..

//வில்லங்கம் விசிட்டிங் கார்டு கொடுத்து விருந்துக்குக் கூப்பிடுகிற ராசியாக இருந்தது இவர்களுக்கு.//


எனக்குப் பிடித்த வரிகள்...
அடிச்சு ஆடுங்க...

மங்குனி அமைச்சர் said...

நாலு வாரம் சனிகிழம சனிகிழம சனீஸ்வரன் கோவிலுக்கு போய் விளகேதிட்டு வந்தா இந்த மாதிரி காத்து கருப்பு புடிச்சதெல்லாம் சரியாயிடு. ட்ரை பன்னு சேட்டை

சைவகொத்துப்பரோட்டா said...

வி.ஐ.பி- என்றால் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா, ரைட்டு, கலக்கல் சேட்டை.

angel said...

நான் இப்பிடி இல்லையே mmm konjam apdi thano?

அண்ணாமலையான் said...

”மற்ற ராசிக்காரர்களா? எங்கேயும் செல்ல வேண்டாம்!தயவு செய்து காத்திருக்கவும்!” நடத்துங்க.. சேட்ட..

Rekha raghavan said...

//ஜன்மராசியில் நிற்கிற கேதுவை ராகு கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருப்பது உங்களின் அதிர்ஷ்டம்//

கொன்னுட்டீங்க தலீவா.

ரேகா ராகவன்.

pudugaithendral said...

நிஜமாவே பலன் எழுதப் போகலாம். :)

settaikkaran said...

//சேட்டை..
நல்லா ப்ளோவா வருது எழுத்துக்கள்..//

ஹி..ஹி! இதை வைச்சுத் தானே அண்ணே படம் காட்டிக்கிட்டு இருக்கேன்..!

//எனக்குப் பிடித்த வரிகள்...அடிச்சு ஆடுங்க...//

நன்றி அண்ணே.! :-)

settaikkaran said...

//நாலு வாரம் சனிகிழம சனிகிழம சனீஸ்வரன் கோவிலுக்கு போய் விளகேதிட்டு வந்தா இந்த மாதிரி காத்து கருப்பு புடிச்சதெல்லாம் சரியாயிடு. ட்ரை பன்னு சேட்டை//

இப்படியொண்ணு இருக்கோ? சரி அண்ணே! அனுபவஸ்தருங்க சொன்னா அவசியம் கேட்க வேண்டியது தான்! :-))

settaikkaran said...

//வி.ஐ.பி- என்றால் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா, ரைட்டு, கலக்கல் சேட்டை.//

ஆமாண்ணே! இது மாதிரி பல அரிய கண்டுபிடிப்புக்கள் வரப்போவுது பாருங்களேன்..நன்றி அண்ணே..!

settaikkaran said...

//நான் இப்பிடி இல்லையே mmm konjam apdi thano?//

வாங்க வாங்க! பதினாலு பயசுலே இவ்வளவு குழப்பமா? இருந்தாலும் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...

settaikkaran said...

//நடத்துங்க.. சேட்ட..//

ஹி..ஹி! ரொம்ப நன்றிங்க...!

settaikkaran said...

//ஹி..ஹி! ரொம்ப நன்றிங்க...! //

ஆஹா! ரொம்ப நன்றிங்க..! :-)

settaikkaran said...

//நிஜமாவே பலன் எழுதப் போகலாம். :)//

கடைக்கு இடம் பார்த்திட்டிருக்கேனுங்க! :-))
நன்றிங்க..!

Unknown said...

யோவ் கலக்குறயேய்யா..

கிட்டத்தட்ட ஒத்துப்போகுது.. இப்பிடித்தான் டி.வியிலயும் சொல்றாய்ங்களா??

ஆமா, ஆயில்யன மனசுல வச்சித்தான எழுதினீங்க?
(அப்பாடா பத்த வச்சாச்சி)

settaikkaran said...

//யோவ் கலக்குறயேய்யா..

கிட்டத்தட்ட ஒத்துப்போகுது.. இப்பிடித்தான் டி.வியிலயும் சொல்றாய்ங்களா??//

ஹி..ஹி! நன்றிங்க! இதெல்லாம் ஒரு தொழில் ரகசியங்க! அப்பாலே சொல்லுறேன்.:-)

//ஆமா, ஆயில்யன மனசுல வச்சித்தான எழுதினீங்க?
(அப்பாடா பத்த வச்சாச்சி)//

ஐயையோ! இதென்ன புதுப்புரளி? ஆயில்யன் பெயரைச் சொல்லி கிருஷ்ணாயிலை ஊத்திடாதீங்கய்யா! :-(((

நன்றிங்கையா, வருகைக்கும் கருத்துக்கும்....! ;-))

Chitra said...

"சிங்கம் பசித்தாலும் சிங்கிள் டீ குடிக்காது," என்பதை சிந்தனையில் நிறுத்தி விடாமுயற்சியுடன் நீங்கள் அடாத பல பதிவுகளை அடிக்கடி எழுதினால், நட்சத்திரப்பதவி உறுதி!


.............. ha,ha,ha,...... சேட்டையின் செம்மொழி......super!

Ananya Mahadevan said...

//அயர்ந்த உறக்கத்திலிருந்து அலறிப்புடைத்து கண்விழித்து அரைமணி நேரத்தில் அடுத்த பதிவை எழுதுபவர்கள்// - அப்போ நீ கடக ராசி தானா? சொல்லவே இல்ல? சூப்பரு!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாத்தான் யோசிக்கிறீங்க சேட்டை.

உங்களுக்கு ஜோதிட சக்கரவர்த்தி கலைமாமணி விருது கொடுக்கலாம்.

settaikkaran said...

//.............. ha,ha,ha,...... சேட்டையின் செம்மொழி......super!//

மிக்க நன்றி சித்ரா அவர்களே! :-))

settaikkaran said...

//அப்போ நீ கடக ராசி தானா? சொல்லவே இல்ல? சூப்பரு!//

அக்கா, நானே குத்துமதிப்பா எதையோ எழுதிட்டிருக்கேன். அதுக்காக இப்படியா? நன்றிக்கா!

settaikkaran said...

//நல்லாத்தான் யோசிக்கிறீங்க சேட்டை.

உங்களுக்கு ஜோதிட சக்கரவர்த்தி கலைமாமணி விருது கொடுக்கலாம்.//

ரொம்ப நன்றிண்ணே! மீதியிருக்கிற ராசிங்களையும் ஒருகை பார்த்திடறேன். :-))

Thuvarakan said...

கடிக்கிரியே பாஸு.... really superb. keep going...