Monday, February 1, 2010

"செல்"யாணம்

புதுசா செல்போன் வாங்குறதும், கல்யாணம் பண்ணுறதும் ஏறக்குறைய ஒரே மாதிரி ஆகிப்போச்சுங்க!

புதுசா கல்யாணம் ஆச்சுன்னு வையிங்க, தினமும் புருசனும் பொஞ்சாதியும் எங்கிட்டாவது போயிக்கிட்டும் வந்துக்கிட்டும் இருப்பாங்க! என்னவோ, இவரு பொஞ்சாதியைக் காக்கா கொத்திட்டுப் போயிருமோன்னு பயப்படுறவரு போல கையைப் பிடிச்சுக்கிட்டே தான் போவாக; வருவாக! அடுத்த வீட்டுக்குப் போறதுக்குக் கூட அழகா அலங்காரம் பண்ணிக்கிட்டுத் தான் போவாக! கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்குள்ளே ஊருலே இருக்கிற ஹோட்டல், தியேட்டர், பார்க், பீச், கோவில் குளம் குட்டை ஒண்ணு விடாமக் கூட்டிக்கிட்டுப் போயி போட்டோ எடுத்துப்பாக! ஷோ-கேசுலே பார்த்தீங்கன்னா, என்சைக்ளோபீடியா மாதிரி இருபத்தியாறு வால்யும் போட்டோ ஆல்பம் அடுக்கி வச்சிருப்பாங்க! பால்காரர், பேப்பர்காரர், காய்கறிக்காரம்மா, கேஸ்காரத்தம்பி தவிர யாரு வந்தாலும் எல்லா ஆல்பத்தையும் அள்ளிக்கிட்டு வந்து முன்னாலே போட்டு "பார்த்திட்டிருங்க,"ன்னு தண்டனை வேறே! இவங்க கல்யாண ஆல்பத்தை முழுசாப் பார்த்து முடிக்கிறதுக்குள்ளே அம்மணிக்கு சீமந்தமே வந்திரும். இந்த அவஸ்தையை வெளியே காட்டிக்கவா முடியும்? இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இளிச்சுக்கிட்டு எல்லா போட்டோவையும் பார்த்தே ஆகணும். சரி, கொஞ்சம் வேகமா புரட்டித் தப்பிக்கலாமுண்ணா விட மாட்டாங்க!

"இது தான் எங்க சித்தப்பா! மஸ்கட்டுலே பிஸ்கெட் விக்குறாரு! இது எங்க மாமா! போன மாசம் கோமாவிலே படுத்திருந்து எந்திருச்சாரு! இவரு எங்க பெரியப்பா! ஜெனரல் கரியப்பா வீட்டுலே கார் துடைச்சிட்டிருந்தாரு! இதோ சுவரோட சுவரா சாய்ஞ்சு நிக்குறாரே, இவர் தான் அவரோட அப்பா! கையிலே கவரோட பக்கத்துலே நிக்குறவங்க இவரோட அம்மா!," என்று இவங்க ஒவ்வொருத்தரையா நமக்கு அறிமுகம் வேறே பண்ணுவாங்க!

சரி, ஆல்பத்தோட நிறுத்தினாக் கூடப் பரவாயில்லே! வீடியோவை வேறே போட்டுக்காட்டிடறாக! இப்படித்தான், இந்தப் பொங்கலுக்கு எங்க அக்கவுண்டண்ட் மாமி வீட்டுக்குப் போயிருந்தோமா, அவங்க கல்யாண வீடியோவைப் போட்டுட்டாங்க! வீடியோ எடுத்த ஆளு இதுக்கு முன்னாலே இராம நாராயணன் படத்துலே வேலை பார்த்திருப்பாரோ என்னவோ, இருக்கிற அவஸ்தை போதாதுன்னு கிராஃபிக்ஸ் வேறே! குளோஸ்-அப் எடுக்க வேண்டியது தான் வேண்டாங்கலே; அதுக்காக இப்படியா? அசந்தா நாதஸ்வர வித்துவானோட தொண்டைக்குள்ளேயே நம்மளையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போயிருவாரோன்னு பயந்திட்டோம்.

இதுலே மிக்ஸிங் வேறே! மாமி மணப்பெண் அலங்காரத்தோட வரும்போது "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ,"ன்னு பாட்டு! பொறுக்க முடியாம நான் வாய் விட்டுக் கேட்டுப்புட்டேன்.

"ஏன் மாமி? இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலியா? நீங்க ரோசாப்பூவா? காலிஃபிளவர் மாதிரி இருந்துக்கிட்டு ஏன் கடுப்பேத்தறீங்க?"ன்னு வயித்தெரிச்சல் தீரக் கேட்டுப்புட்டேன்.

மாப்பிள்ளை காருலே ஊர்வலமாப் போகுறபோது பின்னாடி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்,"ன்னு பாட்டுப் போட்டாங்க! சத்தியமா சொல்றேண்ணே! அவரை நேரிலே பார்த்ததும் அந்த இடத்துலேயே தோப்புக்கரணம் போடலாம் போலிருந்தது- இவரெல்லாம் அழகன் முருகனா?

புது செல்ஃபோனும் புது மனைவியும் ஏறக்குறைய ஒண்ணுதான்னு தோணுதுங்க! ஒரு வருஷம் கழிச்சு போன் வாங்கினவனுக்கும் சரி, கல்யாணம் பண்ணிக்கிட்டவனும் சரி, ஒரே மாதிரித் தான் கவலைப்படுறான்.

"சே! அவசரப்பட்டுட்டோமே! கொஞ்சம் பொறுத்திருந்தா இதை விட நல்ல மாடலா கிடைச்சிருக்குமே!"

(இன்னும் வரும்)

3 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல பதிவு..
இதுபோல எங்க மாமங்கிட்ட ஒரு தடவை மாட்டி ,வீடியோவப் போட்டு
மூடு அவுட் பண்ணி ,

சே.. பெரிய கதை சார்.
தக்காளி.. அன்னைக்கு முடிவு பண்ணுனேன்....

இனிமேல திருட்டு வி.சி.டி தவிர எதுவுமே பார்க்கறதில்லைனு...

settaikkaran said...

//நல்ல பதிவு..

இதுபோல எங்க மாமங்கிட்ட ஒரு தடவை மாட்டி ,வீடியோவப் போட்டு
மூடு அவுட் பண்ணி ,

சே.. பெரிய கதை சார்.
தக்காளி.. அன்னைக்கு முடிவு பண்ணுனேன்....

இனிமேல திருட்டு வி.சி.டி தவிர எதுவுமே பார்க்கறதில்லைனு...//

ஆமாண்ணே! இவங்க பட்ட அவஸ்தையெல்லாத்தையும் நமக்கும் போட்டுக் காட்டி வெறுப்பேத்துறாக! :-))

Punnakku Moottai said...

Same blood me too!

திருமணம் என்பது ஒரு சொறி மாதிரி. சொறியும்போது ரொம்ப சொகமா இருக்கும். சொறிஞ்சி நிப்பாட்டினதுக்கு அப்புறம் ஒரு மாதிரி எரியும்.

என்ன பண்ண? விதி வலியது.