Thursday, October 27, 2011

ரா-ஒன்! வேணாம், வலிக்குது!

மு.கு: அஞ்சலி பக்தர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் அவஸ்தைப்பட வேண்டியது தான்!
நிறைய எதிர்பார்ப்புகளுடன் சினிமாவுக்குப் போகிற வழக்கத்தை நிறுத்தி பல ஆண்டுகளாகின்றன. நல்ல வேளை, ஹாலிவுட் படங்களை அதிகம் பார்க்கிற வழக்கமில்லை என்பதால், சில ஈயடிச்சான் காப்பிகளைக்கூட புதிதாய்ப் பார்ப்பதுபோல ரசிக்க முடிகிறது. இருந்தாலும், திகட்டத் திகட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்படுகிற படங்கள் பிரமிப்புக்குப் பதிலாக சலிப்பூட்டுவதுமுண்டு என்பதற்கு ஒரு நல்ல (அ) மோசமான உதாரணம் ரா-ஒன்!

இந்தியாவில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ’ரா-ஒன்’என்று சொல்கிறார்கள். கொஞ்சம் மூளையையும் செலவழித்திருக்கலாமோ என்ற கேள்வி இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்து விட்டு வெளியேறுகிறபோது எழுந்தது. ஷாருக் கான் முழுக்க முழுக்க தனது ஸ்டார் வேல்யூவையும், கம்பியூட்டர் கிராஃபிக்ஸையும் மட்டுமே நம்பி ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார் போலிருக்கிறது. ’அவதார்’ படத்தைக் காட்டிலும் அதிக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கையாளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நான் அவதார் பார்க்காததாலோ என்னமோ, ரா-ஒன் படத்தின் சில காட்சிகளில் திறந்த வாய் மூடாமல் பிரமித்தது உண்மைதான். அப்படியெல்லாம் ரசிகர்களை பிரமிப்பிலேயே உட்கார்த்தி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல திருஷ்டி கழிப்பது போலப் பல விஷயங்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

படத்தின் சூப்பர் ஹீரோ ஜி-ஒன் இடைவேளைக்கு ஐந்து நிமிடங்கள் முன்பு வருகிறார். இயக்குனர் அனுபவ் சின்ஹா படம் ஆரம்பித்து இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் கழித்தும் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. கதாநாயகன் சேகர் தென்னிந்தியன் என்பதைக் காட்ட, அவனை தயிர்சாதம் சாப்பிட வைத்து, அடிக்கொரு தடவை ’ஐயோ’ என்று சொல்ல வைத்து, தங்களது லாஜிக்-தாகத்தைக் காட்டியிருக்கிறார்கள். வில்லனுக்கு(அர்ஜுன் ராம்பால்) ’ரா-ஒன்’ என்றும் ஹீரோவுக்கு(ஷாருக்கான்) ஜீ-ஒன் என்றும் பெயரிட்டவர்கள் கதாநாயகிக்குக் கூட கே-ஒன் என்று பெயரிட்டிருக்கலாம். (K என்றால் என்னவென்று சொல்லி பென்ஷன் வாங்குகிற பெண்மணிகளின் கோபத்தைக் கிளற நான் தயாராயில்லை.)

கைநிறைய கழுதை விட்டை என்பது போல, சிறப்புத் தோற்றத்தில் சஞ்சய் தத், ப்ரியங்கா சோப்ரா மற்றும் நம்ம சூப்பர் ஸ்டார் வருகிறார்.(ரஜினியைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது.) இது தவிர பிரமிப்பூட்டும் இரண்டு சண்டைக்காட்சிகள் மற்றும் ஒரு சம்மக் சம்மக் சலோ தவிர படத்தோடு ஒன்றுகிற மாதிரி எதையும் யாரும் முயற்சித்ததாய்த் தெரியவில்லை. முதல்பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆபாச வசனம் வேறு!

புரூஸ் லீ, ஜெட் லீ போன்று பெண் கேரக்டர்களுக்கு இஸ்கீ லீ, உஸ்கீ லீ, சப்கீ லீ என்று பெயரிட்டிருப்பதை வட இந்தியாவில் பெண்கள் முகம் சுளிக்காமல் பார்ப்பார்களா என்பது கேள்விக்குறி! அதே போல ஒரு கஸ்டம் அதிகாரி ஜீ-ஒன்னை அருவருக்கத்தக்க வகையில் நோட்டமிடுவது போலக் காட்டியிருப்பதெல்லாம் கண்றாவியான கற்பனை! இப்படியொரு விவஸ்தை கெட்ட திரைக்கதையை நான்கு புத்திசாலிகள் எழுதியிருக்கிறார்களாம். Too many cooks spoil the sprout!  

அர்ஜுன் ராம்பால் (ரா-ஒன்) மற்றும் அர்மான் (ஷாருக்-கரீனா தம்பதியின் மகன்) ஆகிய இருவரும் ஓரளவு படத்தை முழுமையாகத் தொய்ந்து விடாமல் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள் என்றாலும், ஒரு சொதப்பல் படத்தை எவ்வளவுதான் தேற்ற முடியும்?

எந்திரன் படத்தோடு ரா-ஒன் படத்தை ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சிட்டி, பிறர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவதை முதலில் டிவியை உடைப்பது, கொச்சி ஹனீபாவின் கையை வெட்டுவது என்று முதலில் காண்பித்து, பிறகு டாக்டர் வசீகரனையே கத்தியால் குத்த வந்து திகிலூட்டுவது என்று அழகாய் பில்ட்-அப் செய்திருந்தார்கள். ஆனால், இதில் "artificial intelligence' என்று இரண்டொரு முறை சொல்லி பார்வையாளர்களை "பொத்திக்கிட்டு போ’ என்று மறைமுகமாக சொல்லியிருப்பது போலிருக்கிறது. ஒரு சயன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் திரைக்கதைக்கு எந்த அழகில் உழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள்!

கதை என்று பார்த்தால், எனக்கு பாக்யராஜ்-நக்மா நடித்த ஒரு படத்தின் கருவே ஞாபகத்துக்கு வருகிறது. வீடியோ கேம் விற்பன்னரான சேகர் சுப்ரமணியம் (ஷாருக் கான்) மகன் பிரதீக் (அர்மான் வர்மா) ஆசைப்பட்டபடி, ஒரு ரா-ஒன் என்ற சூப்பர்-வில்லனை(அர்ஜுன் ராம்பால்) உருவாக்க, சூப்பர்-வில்லன் அக்கிரமம் செய்யத்தொடங்கியதும், ஜி-ஒன் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே கதை! கதாநாயகி சோனியா (கரீனா கபூர்) எல்லாக் கவலைக்கு மத்தியிலும் மிகக் கவர்ச்சியாய் உடையணிந்து வந்து கடுப்பேற்றுகிறார்.

ஷாருக் கானின் "ஓம் சாந்தி ஓம்" படத்தில் இரண்டாவது தீபிகா படுகோனின் அறிமுகக் காட்சி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அதே போல, பெயரை மாற்றிக் கொள்ள விரும்புவதாக ஷாருக் நம்பர்.ஒன் சொன்னதும், கிரண் கேர் எழுபதுகளின் மெலோடிராமாக்களை நினைவூட்டும் வகையில் உரத்த குரலில் அழும்போது திரையரங்கத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள். அது போன்ற நகைச்சுவை கூட ரா-ஒன் படத்தில் இல்லை. போதாக்குறைக்கு ஜி.ஒன் ஷாருக்கின் முகபாவம் அவரது படுசீரியஸ் படமான ’மை நேம் இஸ் கான்’ படத்தில் வந்த முகபாவத்தை மிகவும் நினைவூட்டுகிறது.

ஹிருதிக் ரோஷன்-ப்ரியங்கா சோப்ரா நடித்த ’கிருஷ்ஷ்’ படத்தைக் காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால், ’எந்திரன்’ படத்தோடு ஒப்பிட்டால் ரா-ஒன்னைப் பார்ப்பதற்கு ராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.

"ரா-ஒன்" - தண்டச்செலவு

பி.கு: அஞ்சலி பக்தனான என் நண்பர் சந்துரு சொன்னது: எங்கேயும் எப்போதும் இன்னொருவாட்டி பார்க்கலாண்டா!

22 comments:

கும்மாச்சி said...

சேட்டை படம் பார்க்கலாம் என்றிருந்தேன், இப்பொழுது என்னுடைய பொன்னான மூன்று மணி நேரத்தை வீணடிக்க இஷ்டம் இல்லாததால் சரக்கடிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் வடை எனக்குதான்.

சார்வாகன் said...

அருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

'ரா’வா இருக்கு....

Unknown said...

மாப்ள அம்புட்டு மோசமா இருக்குது!

Jayadev Das said...

படம் எப்படியோ, விமர்சனம் நல்லாயிருக்கு!

அம்பலத்தார் said...

விமர்சனத்திற்கு Thanks. வருகிற வார இறுதியில் நம்ம ஊரிலும்போடுறாங்கள் போகலாம் என்று நினைத்திருந்தேன். அப்பாடா உங்க புண்ணியத்தில் தப்பித்தேன்.

சென்னை பித்தன் said...

ஊத்திக்கிச்சா?

kasupanamthutu said...

நானும் படம் பார்த்தேன். படம் சின்னக் குழந்தைகளுக்கு எடுத்த படம் போல் இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

படம் பார்க்க நினைத்தவர்களைக் காப்பாற்றும் விமர்சனம்..

Shanmugam Rajamanickam said...

விமர்சனம் படிக்கிறதுக்கு ஒரே இன்ட்ரெஸ்ட்டா இருக்குது,,,,,

வெங்கட் நாகராஜ் said...

ஓ... படம் பார்த்தாச்சா... :)))

சரி சரி...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்

ஹி, ஹி ஹி ஹி ........இதுதான் ரா-ஒன் ரகசியமா!!!!
ஆனாலும் விமர்சனம் சும்மா " தீ" மாத்ரி இருக்கு .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்

ஹி, ஹி ஹி ஹி ........இதுதான் ரா-ஒன் ரகசியமா!!!!
ஆனாலும் விமர்சனம் சும்மா " தீ" மாத்ரி இருக்கு .

பால கணேஷ் said...

எமது பொன்னான இரண்டரை மணி நேரத்தையும், வீண் செலவையும் தவிர்த்த உமது சேவை போற்றத்தக்கது. வாழ்க வளமுடன்!

CS. Mohan Kumar said...

Interesting review. I think we can see it DVD after some time, so that kids will enjoy to some extent.

சத்ரியன் said...

சரி விடுங்கண்ணே! அடுத்த தீபாவளிக்கு நல்ல படமா வந்தா பாத்துக்கலாம்!

VISA said...

ரைட்டு. உஷாராயிக்குறோம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க விமர்சனம் ஓகே. அம்புட்டு சரியில்லையா?

Sivakumar said...

ஐயய்யோ..ரிசர்வ் பண்ணிட்டனே. நீங்க ஒன்ஸ் மோர் பாக்கணும்னா டிக்கட் ரெடி.

ரிஷபன் said...

அப்ப பார்க்க வேணாமா..
ம்ம்..

settaikkaran said...

@கும்மாச்சி
@சார்வாகன்
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
@விக்கியுலகம்
@Jayadev Das
@அம்பலத்தார்
@சென்னை பித்தன்
@sivalingamtamilsource
@இராஜராஜேஸ்வரி
@சண்முகம்
@MANASAALI
@வெங்கட் நாகராஜ்
@யானைகுட்டி @ ஞானேந்திரன்
@கணேஷ்
@மோகன் குமார்
@சத்ரியன்
@VISA
@தமிழ்வாசி
@! சிவகுமார் !
@ரிஷபன்
@வெளங்காதவன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வழக்கம்போல பணிப்பளுவில் சிக்கிச் சின்னாபின்னமாகியதால், தனித்தனியே பதிலளித்து நன்றி தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். பொருட்படுத்தாமல், தொடர்ந்து வருகை புரிந்து மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பற்பல!

தமிழ்கிழம் said...

சோனமுத்தா ...............

போச்சா..............