Sunday, October 9, 2011

பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்-மேஷராசி

முன்பு ’வலைப்பதிவர்களுக்கான ராசிபலன்" என்று நான் எழுதியிருந்ததற்குப் பரவலாகக் கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வலைப்பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை எழுதினாலென்ன என்று சகபதிவர்கள் பலர் யோசனை தெரிவித்திருந்தார்கள். (மெய்யாலுமே!)

சனிபகவான் கன்னிராசியிலிருந்து துலாம்ராசிக்கு விரைவில் குடிபெயரப் போகிறார். இதனால், வலைப்பதிவர்களுக்கு ஏற்படப்போகிற சாதக பாதகங்கள் குறித்து பிரபல ஜோசியர் நங்கநல்லூர் நரசிம்மனிடம் தட்சிணையின்றி கேட்டு வாங்கிப் பெற்ற பலன்களை இங்கே தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து மீதமுள்ள ராசிகளுக்கான பலன்களும் விரைவில்....!

மேஷ ராசி பதிவர்களே!

மேஷம் என்பது ஆடு என்பதை அறிக! ’ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்தான் ஆண்டவன்,’ என்பது மெதுவடை, அதாவது சொலவடை. மேஷராசிப் பதிவர்கள் பெரும்பாலும் இடுகையைத் தட்டச்சு செய்தவுடனே வாசித்தும் பார்க்காமல், வலைப்பதிவில் உடனுக்குடன் ஏற்றுபவர்கள் என்பதால் சந்திப்பிழைகளுக்குப் பஞ்சமேயிருக்காது. இருப்பினும், உங்கள் இடுகைக்கு வந்து பின்னூட்டம் இடுபவர்களின் இடுகைகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் எழுதி ஓட்டுப்போடுகிற உயர்பண்புடையவர்கள்.

மேஷராசிக்காரப் பதிவர்கள் இருவகைப்படுவர்.

முதல்வகையைச் சேர்ந்தவர் தானுண்டு தன் இடுகையுண்டு என்றிருந்தாலும், தெரியாத்தனமாக ஏதேனும் உள்குத்துப் பதிவை வாசித்துவிட்டு, அப்பாவித்தனமாக பின்னூட்டம் போட்டுவிட்டு, அன்றாடம் விளக்கம்கேட்டு வரும் தனிமடல்களுக்குப் பயந்து, ஜீமெயிலைத் திறப்பதற்கே அஞ்சுகிற பலி ஆடுகளாய் இருப்பதற்கான வாய்ப்புகள் படுபிரகாசமாக இருக்கிறது.

இரண்டாம் வகையைச் சேர்ந்த பதிவர்கள் படுபுத்திசாலிகள்! இவர்கள் எந்த இடுகையையும் வாசிக்காமலே, யாராவது பின்னூட்டம் போட்டிருந்தால், அதைக் கொஞ்சம் உட்டாலக்கிடி செய்து ’கலக்கலான பதிவு!’ என்று இரண்டு வார்த்தைகளும், போனால் போகிறது என்று ஒரு நகைப்பானும் போட்டு விட்டு, தலை தப்பித்தது கூகிளார் புண்ணியம் என்று எஸ்கேப் ஆகிறவர்கள். ’ஊருடன் ஒத்துவாழ்’ என்ற தத்துவத்தைக் கடைபிடிப்பவர்கள் என்பதால், முயலுக்கு ஒண்ணே முக்காலே கால் என்று யாரேனும் இடுகை போட்டாலும், வாசித்து விட்டு ’தகவலுக்கு நன்றி,’ என்று பின்னூட்டம் போட்டு விடுவார்கள்.

இப்போது, இந்த ராசிக்காரப் பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போமா?
சனிபகவான் உச்சத்தில் சஞ்சரிக்கப்போவதால், உங்களது வலைப்பதிவுகளுக்கு திடீரென்று ஹிட்ஸ் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதுவரை இரண்டு இலக்கத்திலிருந்த ’ஃபாலோயர்ஸ்’ எண்ணிக்கை மூன்று இலக்கத்துக்குச் செல்லலாம். இருப்பினும், தினமும் பத்துப் பதினைந்து இடுகைகளை வாசித்து அதற்கு தக்க பின்னூட்டம் இட வேண்டும் என்பதால், அடிக்கடி ஆபீசில் 'வயிற்றுவலி, பாட்டி பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார்,' என்று பொய் சொல்லி கேஷுவல் லீவோ அல்லது பர்மிஷனோ போட வேண்டி வரலாம். அதே போல வீட்டில் கணினியில்லாதவர்கள் ஒழுங்காக ஆபீஸ் செல்ல நேரிடும் என்பதால், இந்தச் சனிப்பெயர்ச்சி மூலம் உலகப்பொருளாதாரம்  முன்னேறவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

புதிய டெம்பிளேட்டுகள், விட்ஜெட்டுகளை உங்கள் வலைப்பதிவில் சேர்க்க உசிதமான தருணம் இது. பிரபல முன்னணிப் பதிவர்கள் உங்கள் இடுகைகளை வாசித்து பின்னூட்டம் இடக்கூடும். கவிதை எழுதாதவர்கள் துணிந்து எழுதலாம் - வாசிக்கிறவர்களுக்குப் புரியாதவரை!

அரசியல் இடுகைகள் எழுதினாலும் மைனஸ் ஓட்டு விழாது. உலக அரசியல் குறித்து, வியாழக்கிழமை எமகண்டத்தில் ஒரு இடுகையாவது எழுதுவது சாலச் சிறந்தது. அடுத்தடுத்து புதுப்படங்கள் வெளியாகவிருப்பதால், விமர்சனங்கள் எழுதுவோர் காட்டில் அடைமழை அவியலோடு பெய்யும்.

நகைச்சுவையாக எழுதுபவர்கள் அதிகம் மெனக்கெடாமல் உள்ளாட்சித் தேர்தல் குறித்த செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு வாசகர்களை வயிறுவலிக்கச் சிரிக்க வைப்பார்கள்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த பதிவர்களுக்கு கற்பனை அதிகமாக ஊறி வாரத்துக்கு பத்து இடுகை எழுதுவார்கள். பரணி நட்சத்திரப் பதிவர்கள் டெம்பிளேட்டை மாற்றுவதை தற்காலிகமாக ஒத்திவைப்பது நல்லது. கார்த்திகை (1-ம் பாதம்) நட்சத்திரப்பதிவர்களின் இடுகைகள் திடீரென்று தமிழ்மணம் முகப்பில் தோன்றலாம் என்பதால், அதிக பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுதல், பின்னூட்டம் போட்டவர்களின் இடுகைகளுக்குப் பின்னூட்டம் போடுதல், அந்தப் பின்னூட்டத்துக்கு அவர்கள் எழுதிய பதிலுக்கு பதில் எழுதுதல் என்று சற்றே அலைச்சல் ஏற்படலாம்.

மேஷராசிப்பதிவர்களுக்கான வழிபாடு

கூகிளாண்டவர் போற்றி என்று தினமும் பதினோரு முறை சொல்லிவிட்டே கணினியை முடுக்க வேண்டும். நேரம் இருப்பவர்கள் பில்கேட்ஸ் கவசம் சொல்வதும் நன்மைபயக்கும். எளிமையான வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் தினமும் கணினி முன்பு மூன்று தோப்புக்கரணம் போடலாம்.

(தொடரும்)

29 comments:

நாய் நக்ஸ் said...

Template comment pottukkolavum !!!

நாய் நக்ஸ் said...

Sani ungalukku uchathil
iruppathaal nalla mokkai +
comedy pathivu mattum
podavum......
Illai entral google thangal
blog-i block panna
vaippu ullathu.....

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு கன்னி ராசி ஹி ஹி...

கோகுல் said...

பிரபல ஜோதிடகுங்குமம்,ராசிபலன்ராக்கெட்,நாடிஜோசிய நாயகன்,கைரேகைகிங்,வாஸ்துவில் வெளுக்கும் வேந்தன்,நியூமராலஜியின் சிகரம் "சேட்டைக்காரன்" எழுதிய இந்த வருட சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்து விட்டீர்களா..........?

த. ஜார்ஜ் said...

சிர்ர்ர்ர்ரிரிரிச்ச்ச்ச்சி...முடிச்சப்புறம் சொல்றேன்...

Yoga.s.FR said...

வெளிவந்து விட்டது சேட்டை?!க்காரன் எழுதிய "பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்".உடனே வாங்கி உங்கள் பலன்?களை அறிந்து கொள்ளுங்கள்!முற்றிலும் இலவசம்!!!!§§§இங்கே வடையெல்லாம் கிடைக்காது! வெரி வெரி சாரி!////அப்ப போண்டா குடுங்க!

Yoga.s.FR said...

உங்களது பொன்னான கருத்துக்கு முன்கூட்டியே நன்றிகள்! (எதுவாயிருந்தாலும் பார்த்து எழுதுங்க!)////"பாத்து" எழுதுறதுக்கு இது என்ன பி.யூ.சி எக்ஸாமா?

த. ஜார்ஜ் said...

ஜோதிட திலகம் நாகர்கோவில் விஜயம் எப்போது. [பாரம்பரிய ஜோதிடர்கள் கல்லாபெட்டியை காலியாக்கி விடுவீர்கள் போலிருக்கிறது.]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்படியே ப்ளாக்கில் பல்லி விழும் பலனும் போடுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ராசி பதிவர்களுக்கு ப்ளாக் டெலிட்டாகுறது, தமிழ்மணத்துல இருந்து நீக்கப்படுறது மாதிரி ஏதாவது கண்டங்கள் இருக்கா?

Unknown said...

மாப்ள பதிவ எழுதிட்டு இம்புட்டு பிரச்சனை சந்திக்க வேண்டி வருமா ஆத்தாடி!

வெங்கட் நாகராஜ் said...

அட அடுத்து சனிப்பெயர்ச்சி பலன்களா! கலக்குங்க சேட்டை....

Sivakumar said...

//அரசியல் இடுகைகள் எழுதினாலும் மைனஸ் ஓட்டு விழாது//

ஏன்? அரசியல்வாதிகள் ப்ளாக் படிப்பதில்லையா?

உணவு உலகம் said...

செமையா கலக்கியிருக்கீங்க. நான் கடைசி ராசியைத்தான் பார்க்கணும்.

பால கணேஷ் said...

ராசி பலனையும் விட்டுவெக்காம கைவரிசை காட்டிட்டிங்களே... நான் சிம்ம ராசி. எனக்கு என்ன சொல்லப் போறீங்களோ...

SURYAJEEVA said...

இத தான் சேட்டைன்னு சொல்லுவாங்க... அனேகமா எல்லாம் மரத்தடி ஜோசியக்காரனும் இழுத்து மூடிட்டு குருவே அப்படின்னு உங்க காலில் விழப் போறாங்கன்னு நினைக்கிறேன்...

Unknown said...

இராசி பலன் நல்லாவே சொல்றிங்க
என் !ஜாதக்ம் பாத்து சொல்வீங்களா..

புலவர் சா இராமாநுசம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரியான ரூட்டை பிடிச்சியிருக்கீங்க...

அப்படியே நடத்துங்க..
ரசிக்கும்படி இருக்கிறது...

வெளங்காதவன்™ said...

///இந்தச் சனிப்பெயர்ச்சி மூலம் உலகப்பொருளாதாரம் முன்னேறவும் அதிக வாய்ப்பிருக்கிறது////

ஹா ஹா ஹா ஹா!

நச்!

kaialavuman said...

மேஷ ராசிக்காரர்கள் எந்த வண்ணத்தில் எழுத வேண்டும் என்பதை எழுதவில்லையே!!!

“சோதிடத் திலகம்” அண்ணன் சேட்டை வாழ்க!! வாழ்க!!

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ராசி பதிவர்களுக்கு ப்ளாக் டெலிட்டாகுறது, தமிழ்மணத்துல இருந்து நீக்கப்படுறது மாதிரி ஏதாவது கண்டங்கள் இருக்கா?


எங்கே போனாலும் நம்மை வம்புக்கிழுப்பீங்களோ? அவ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல நேரம் சதீஷ் உங்க ளை தேடிட்டு இருக்காராம் ஹா ஹா

settaikkaran said...

//NAAI-NAKKS said...

Template comment pottukkolavum !!!//

done! :-)

//Sani ungalukku uchathil
iruppathaal nalla mokkai +
comedy pathivu mattum
podavum......
Illai entral google thangal
blog-i block panna
vaippu ullathu.....//

எனக்குச் சொல்லிட்டீங்களோன்னு டென்ஷன் ஆயிட்டேன். :-)
மிக்க நன்றி!

//MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு கன்னி ராசி ஹி ஹி...//

அண்ணாச்சி, பார்த்து எழுதுவோமில்லா...? :-)
மிக்க நன்றி!

//கோகுல் said...

பிரபல ஜோதிடகுங்குமம்,ராசிபலன்ராக்கெட்,நாடிஜோசிய நாயகன்,கைரேகைகிங்,வாஸ்துவில் வெளுக்கும் வேந்தன்,நியூமராலஜியின் சிகரம் "சேட்டைக்காரன்" எழுதிய இந்த வருட சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்து விட்டீர்களா..........?//

படிக்காட்டி ஆரு விடப்போறாங்க? அடுத்த பதினோரு ராசிக்கும் எழுதியே தீருவோமில்லே...? மிக்க நன்றி நண்பரே! :-)

//த. ஜார்ஜ் said...

சிர்ர்ர்ர்ரிரிரிச்ச்ச்ச்சி...முடிச்சப்புறம் சொல்றேன்...//

ஓ.கே! :-)

//ஜோதிட திலகம் நாகர்கோவில் விஜயம் எப்போது.//

டவர் ஜங்ஷனிலே ஒரு நல்ல லாட்ஜ் தேடிக்கிட்டிருக்கேன். :-)

//[பாரம்பரிய ஜோதிடர்கள் கல்லாபெட்டியை காலியாக்கி விடுவீர்கள் போலிருக்கிறது.]//

ஹிஹி! அதெல்லாம் ரொம்ப கஷ்டம்! அவங்க புரோபெஷனல்! நானு அமெச்சூர்! :-)

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//Yoga.s.FR said...

வெளிவந்து விட்டது சேட்டை?!க்காரன் எழுதிய "பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்".உடனே வாங்கி உங்கள் பலன்?களை அறிந்து கொள்ளுங்கள்!முற்றிலும் இலவசம்!!!!//

ஆஹா! இதுக்கெல்லாம் கூடவா பைரஸி பண்ணுறாங்க? அட கடவுளே!

//§§§இங்கே வடையெல்லாம் கிடைக்காது! வெரி வெரி சாரி!////அப்ப போண்டா குடுங்க!//

உலக வங்கியிலே கடலைமாவு வாங்க கடன் கேட்டிருக்கேன். வந்ததும் ஏற்பாடு பண்றேன்.

//உங்களது பொன்னான கருத்துக்கு முன்கூட்டியே நன்றிகள்! (எதுவாயிருந்தாலும் பார்த்து எழுதுங்க!)////"பாத்து" எழுதுறதுக்கு இது என்ன பி.யூ.சி எக்ஸாமா?//

ஓஹோ! நீங்க பி.யூ.சி.காலத்துக்காரரா? ஹிஹி! மிக்க நன்றி!

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்படியே ப்ளாக்கில் பல்லி விழும் பலனும் போடுறது?//

அது தனியா புஸ்தகமா போட்டு பிராட்வே-லே விக்கலாமுன்னு உத்தேசம். :-)

//இந்த ராசி பதிவர்களுக்கு ப்ளாக் டெலிட்டாகுறது, தமிழ்மணத்துல இருந்து நீக்கப்படுறது மாதிரி ஏதாவது கண்டங்கள் இருக்கா?//

வழிபாட்டை முறையா கடைபிடிச்சா கண்டம் தப்பலாம். இல்லாட்டா, கஷ்டம்தான் பானா ராவன்னா! :-)
மிக்க நன்றி!

//விக்கியுலகம் said...

மாப்ள பதிவ எழுதிட்டு இம்புட்டு பிரச்சனை சந்திக்க வேண்டி வருமா ஆத்தாடி!//

பதிவா? ஒரு பின்னூட்டத்தைப் போட்டு நான் பட்ட பாடு இருக்கே! ஐயையையையையையோ! :-)
மிக்க நன்றி! :-)

//வெங்கட் நாகராஜ் said...

அட அடுத்து சனிப்பெயர்ச்சி பலன்களா! கலக்குங்க சேட்டை....//

கடையை நடத்தியாகணுமே வெங்கட்ஜீ? தமிழ்மணம் நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்! திருமதியார் வலைச்சரம் ஆசிரியர் ஆனதுக்கும் வாழ்த்துகள்! வருகைக்கு நன்றி! :-)

//! சிவகுமார் ! said...

ஏன்? அரசியல்வாதிகள் ப்ளாக் படிப்பதில்லையா?//

அவங்க என்னிக்கு மைனஸ் ஓட்டுப் போட்டிருக்காங்க? ஒண்ணுக்கு ரெண்டு ஓட்டுத்தானே பழக்கம் அவங்களுக்கு? :-))

மிக்க நன்றி! :-)

//FOOD said...

செமையா கலக்கியிருக்கீங்க. நான் கடைசி ராசியைத்தான் பார்க்கணும்.//

அப்படியா? சொல்லிட்டீங்கல்லே? கவனிச்சுக்கிறேன்! :-)
மிக்க நன்றி!

//கணேஷ் said...

ராசி பலனையும் விட்டுவெக்காம கைவரிசை காட்டிட்டிங்களே...//

ஆக்சுவலி நான் வாஸ்து பத்தித்தான் எழுதுறதாயிருந்தேன். :-)

//நான் சிம்ம ராசி. எனக்கு என்ன சொல்லப் போறீங்களோ...//

இப்படியே எல்லாரும் அவங்கவங்க ராசியைச் சொல்லிட்டீங்கன்னா, எனக்கும் கொஞ்சம் மேட்டர் கிடைக்கும். மிக்க நன்றி! :-)

//suryajeeva said...

இத தான் சேட்டைன்னு சொல்லுவாங்க... அனேகமா எல்லாம் மரத்தடி ஜோசியக்காரனும் இழுத்து மூடிட்டு குருவே அப்படின்னு உங்க காலில் விழப் போறாங்கன்னு நினைக்கிறேன்...//

நானே நங்கநல்லூர் நரசிம்மன் கிட்டே சுட்டதைத்தான் போட்டிருக்கிறேன் நண்பரே! :-) இருந்தாலும் உங்க வாக்குப்பலிக்கட்டும்!
மிக்க நன்றி!

//புலவர் சா இராமாநுசம் said...

இராசி பலன் நல்லாவே சொல்றிங்க
என் !ஜாதக்ம் பாத்து சொல்வீங்களா..//

இதை முடித்துவிட்டு அடுத்தது அதுதான் புலவர் ஐயா!
மிக்க நன்றி! :-)

//கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரியான ரூட்டை பிடிச்சியிருக்கீங்க...அப்படியே நடத்துங்க..//

ஆரம்பித்தாகி விட்டது. மீதி பதினொன்றையும் போட்டுத்தானே தீர வேண்டும்? :-)

//ரசிக்கும்படி இருக்கிறது...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

மேஷ ராசிக்காரர்கள் எந்த வண்ணத்தில் எழுத வேண்டும் என்பதை எழுதவில்லையே!!!//

’பச்சை’யா எழுதாமல் இருந்தால் போதும்! :-)

//“சோதிடத் திலகம்” அண்ணன் சேட்டை வாழ்க!! வாழ்க!!//
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

எங்கே போனாலும் நம்மை வம்புக்கிழுப்பீங்களோ? அவ்வ்வ்//

தல, காய்ச்ச மரம்தான் கல்லடி படும்! :-)

//நல்ல நேரம் சதீஷ் உங்க ளை தேடிட்டு இருக்காராம் ஹா ஹா//

அவரு பாராட்டுவாரு! ராசிபலன் எழுதினபோதும் பாராட்டினாரே? :-)
மிக்க நன்றி தல! :-)

முகுந்த்; Amma said...

பதிவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன் சொல்லி புண்ணியம் தேடிக்கொள்ளும் ஜோதிட சிகாமணி சேட்டைகார அண்ணாச்சி வாழ்க...

// நேரம் இருப்பவர்கள் பில்கேட்ஸ் கவசம் சொல்லவும்/

பில்கேட்ஸ் கவசம் எங்க கிடைக்கும்னு சொல்லுங்க.. நானும் டெய்லி படிக்கலாம்னு இருக்கேன்.

பெசொவி said...

//யாராவது பின்னூட்டம் போட்டிருந்தால், அதைக் கொஞ்சம் உட்டாலக்கிடி செய்து ’கலக்கலான பதிவு!’ என்று இரண்டு வார்த்தைகளும், போனால் போகிறது என்று ஒரு நகைப்பானும் போட்டு விட்டு, தலை தப்பித்தது கூகிளார் புண்ணியம் என்று எஸ்கேப் ஆகிறவர்கள். ’ஊருடன் ஒத்துவாழ்’ என்ற தத்துவத்தைக் கடைபிடிப்பவர்கள் என்பதால், முயலுக்கு ஒண்ணே முக்காலே கால் என்று யாரேனும் இடுகை போட்டாலும், வாசித்து விட்டு ’தகவலுக்கு நன்றி,’ என்று பின்னூட்டம் போட்டு விடுவார்கள்//

:))

G.M Balasubramaniam said...

என் ராசி எனக்கே தெரியாதே. அப்புறம் எப்படி ராசி பலன் பார்ப்பது.? இந்த பின்னூட்ட சமாசாரங்களும் சரியாகப் புரியவில்லை. அதென்ன வடையெல்லாம் கிடைக்காது என்று. ?அது எங்கே கிடைக்கும்.?

settaikkaran said...

//முகுந்த் அம்மா said...

பதிவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன் சொல்லி புண்ணியம் தேடிக்கொள்ளும் ஜோதிட சிகாமணி சேட்டைகார அண்ணாச்சி வாழ்க...//

வாங்க டாக்டர்! எனக்கும் ஒரு டாக்டர் பட்டம் தரக்கூடாதா? :-)

//பில்கேட்ஸ் கவசம் எங்க கிடைக்கும்னு சொல்லுங்க.. நானும் டெய்லி படிக்கலாம்னு இருக்கேன்.//

விரைவில் பி.டி.எஃப். கோப்பாக்கி அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றி! :-)

//பெசொவி said...

:))//

மிக்க நன்றி! :-)

//G.M Balasubramaniam said...

என் ராசி எனக்கே தெரியாதே. அப்புறம் எப்படி ராசி பலன் பார்ப்பது.? இந்த பின்னூட்ட சமாசாரங்களும் சரியாகப் புரியவில்லை. அதென்ன வடையெல்லாம் கிடைக்காது என்று. ?அது எங்கே கிடைக்கும்.?//

ஐயா, வடையைப் பற்றி விலாவரியாக ஒரு இடுகை விரைவில் எழுதி வலையுலகத்துக்கு சேவை ஆற்றப்போகிறேன். அதுவரை பொறுங்கள் ஐயா! :-)

மிக்க நன்றி!

கும்மாச்சி said...

சேட்டை அடுத்தது என் ராசிங்க, கொஞ்சம் ஏதோ பார்த்து செயுங்க, சீ எழுதுங்க, கூடுதல் தகவல் நம்ம தமிழீன தலைவரும் அதே ராசிதாங்க.