Sunday, August 7, 2011

மீண்டும் பாமா விஜயம்

"டிபன் ரெடியாயிருக்கு! சூடாச் சாப்பிடாம எங்க போனான் உங்க அண்ணன்?" என்று எரிந்து விழுந்த கமலா, "டேய் சுரேஷ்! டிபன் சாப்பிட வாடா!" என்று குரல் கொடுத்தாள்.

"அவன் மொட்டைமாடியிலே எக்சர்சைஸ் பண்ணிட்டிருக்காம்மா," என்று நமுட்டுச்சிரிப்போடு சொன்னாள் சுஜாதா. "என்னமோ தெரியலே, எதிர்வீட்டுலே நடிகை பாமா குடிவந்ததுலேருந்து மொட்டைமாடியை விட்டுக் கீழே இறங்கவே மாட்டேங்குறான் அண்ணன்!"

"அபாண்டமா பேசாதே!" கமலம் மகளைக் கடிந்து கொண்டாள். "என் புள்ளையைப் பத்தி ஏதாவது பேசினே, அப்புறம் மதியானம் மணத்தக்காளி போட்டு மோர்க்குழம்பு தான்! அவன் தங்கக்கம்பி!"

"போதுமே! மொட்டைமாடியிலேருந்து பார்த்தா பாமா வீட்டு ஹால் தெரியுது. பால்கனி தெரியுது. அதான் உன் புள்ளை எக்சர்சைஸ் பண்ணறேன் பேர்வழின்னு மொட்டைமாடியே கதியாக் கிடக்கிறான்! தெரியுமா?"

"சரிசரி, உங்கப்பா வர்றாரு! அவரு காதுலே விழுந்தா வெளிநடப்பு பண்ணிட்டு டிவிக்குப் பேட்டி கொடுக்கிற எதிர்க்கட்சிங்க மாதிரி கத்த ஆரம்பிச்சிடுவாரு! சும்மாயிரு!" என்று மகளை அதட்டினாள் கமலா. மனைவியும் மகளும் ரகசியமாக எதையோ பேசிக்கொண்டிருப்பதைக் கவனிக்காத குப்புசாமி, டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

"என்னது, நியூஸ் பேப்பரைக் காணோம்? கையிலே பேப்பர் இல்லாம நான் என்னிக்கு டிபன் சாப்பிட்டிருக்கேன்?" என்று எரிச்சலுடன் கேட்டார் குப்புசாமி.

"சாப்பிடும்போது என்ன பேப்பர் வேண்டிக்கிடக்கு?" என்று கடிந்துகொண்டாள் கமலம். "இப்படித்தான், நேத்திக்கு பேப்பர் படிச்சிட்டே சாப்பிடும்போது, ஏதோ ஜோக்கைப் படிச்சிட்டுச் சிரிச்சதுலே உங்களுக்குப் புரையேறிடுச்சு!"

"அது ஜோக் இல்லை; டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டிருந்தாரு!" என்றார் குப்புசாமி.

"இன்னிக்கு ஒரு நாள் பேப்பர் வேண்டாம்பா," என்றாள் சுஜாதா. "அம்மா தோசை பண்ணியிருக்காங்க! வித்தியாசம் தெரியாம நீங்க பாட்டுக்குப் பேப்பரைத் தின்னுட்டீங்கன்னா, அப்புறம் நாளையிலேருந்து தோசை சாப்பிட மாட்டீங்க!"

"ஆனாலும் கிண்டல் ஓவர்தான் உனக்கு," என்று கறுவியபடியே கணவன் கையில் செய்தித்தாளைக் கொடுத்தாள் கமலம். "இன்னிக்கு தோசை எவ்வளவு நல்லா வந்திருக்குன்னு சாப்பிட்டுப்பாரு! அதுனாலே தான் வழக்கம்போல பக்கத்துலே கத்திரிக்கோல் கூட வைக்கலை!"

குப்புசாமி பேப்பர் படித்தவாறே, டிபன் சாப்பிடத்தொடங்கிய சிறிது நேரத்தில் சுரேஷ் மாடிப்படி வழியாக இறங்கிவந்து சாப்பிட உட்கார்ந்தான்.

"என்னண்ணா, எக்சர்சைஸ் முடிஞ்சுதா?" என்று நக்கலாய்க் கேட்டாள் சுஜாதா.

"ஓவரா எக்ஸர்சைஸ் பண்ணாதேடா! அப்புறம் பேண்ட், சட்டையெல்லாம் எக்ஸ்ட்ரா சைஸ் பண்ண வேண்டிவரும்!" என்று மகனைக் கிண்டலடித்தாள் கமலம்.

"ஐயையோ!" என்று திடீரென்று அலறிய குப்புசாமி, கையிலிருந்த பேப்பரை அப்படியே போட்டுவிட்டு மாடிப்படியை நோக்கி விரைந்து கடகடவென்று படிகளில் ஏறிப்போனார்.

"என்னங்க ஆச்சு, ஏன் இப்படித் தலைதெறிக்க ஓடறீங்க?" என்று பதட்டத்துடன் கமலம் கேட்டது குப்புசாமி காதுகளில் எங்கே விழுந்திருக்கப்போகிறது?

"என்னம்மா ஆச்சு?" என்று சுரேஷும் குழம்பியபடி கேட்டான்.

"அம்மா! உனக்கு எத்தனை வாட்டி சொல்றது, இந்த மாதிரி புதுசு புதுசா வாழைத்தண்டு சட்னி, சேப்பங்கிழங்குத் துவையலெல்லாம் பண்ணாதேன்னு! பாரு, அப்பா மாடியிலேருந்து கீழே குதிக்கப் போயிட்டிருக்காரு!" என்று கருவினாள் சுஜாதா.

"அடியே நீ வேறே என் வயத்துலே சாம்பார்பொடி அரைக்காதே! டேய் சுரேஷ், போய் உங்கப்பா என்ன பண்ணறாருன்னு பார்த்திட்டு வாடா!"

"சீக்கிரம் போண்ணா! அப்பா இன்னும் உயில் கூட எழுதலை!" என்று சுஜாதாவும் அவசரப்படுத்தவே, சுரேஷ் டிபனை விட்டுவிட்டு மாடிப்படியை நோக்கி விரைந்தான்.

"நேத்திக்கு ராயலசீமா ரவாகேசரி பண்ணினபோதுகூட சத்தம்போடாமச் சாப்பிட்டுட்டுப் போனாரே, இன்னிக்கு என்ன ஆச்சு இந்த மனிசனுக்கு?"

"அந்தப் பேப்பர்லே எதையோ படிச்சிட்டுத்தான் மாடிக்கு ஓடினாரு, அப்படி என்ன நியூஸ் வந்திருக்குன்னு பார்த்திடுவோம்," என்று அப்பா விட்டுச் சென்ற செய்தித்தாளை எடுத்து, மடித்து வைத்திருந்த பக்கத்தைப் பார்த்து வாசித்தாள் சுஜாதா.

"நடிகை பாமா இந்தியா திரும்பினார்! ’கிராமத்துக் கிளி’ படத்துக்காக சுவிட்சர்லாந்தில் வெளிப்புறப்படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகை பாமா இன்று அதிகாலை சென்னை திரும்பினார்!"

"என்ன அநியாயண்டி இது?" கமலம் மலைத்துப்போய் நின்றாள். "அதுக்குத்தான் தலை தெறிக்க மொட்டை மாடிக்கு ஓடுறாரா இந்த மனுசன்? பேரன், பேத்தியெடுக்கிற வயசுலே இவரு புத்தி ஏன் இப்படிப்போகுது?"

"சும்மாயிரும்மா, அண்ணன் வந்திட்டிருக்கான். என்னான்னு கேட்போம்!"

"என்னடா ஆச்சு?" மகன் சுரேஷின் முகத்தைப் பார்த்து அதிக கவலையுற்றவளாக கேட்டாள் கமலம். "ஏண்டா முகம் பேயறைஞ்சா மாதிரியிருக்கு?"

"பேயறைஞ்சா பரவாயில்லேம்மா! அப்பா அறைஞ்சிட்டாரு!"

"எதுக்குடா அறைஞ்சாரு?"

"அப்பா பின்னாடியே போனேனா? அவரு மொட்டைமாடியிலே போயி சம்மணம் போட்டு உட்கார்ந்துகிட்டாரு! ஏம்பா இப்படி ஓடிவந்து வெயில்லே உட்கார்ந்திட்டிருக்கீங்கன்னு எழுப்பப் போனேனா, அதுக்கு அவரு எடியூரப்பா மாதிரி என்னை ஓங்கி அறைஞ்சிட்டாரும்மா!"

"மொட்டைமாடியா? அப்பாவுமா?" அதிர்ந்தாள் சுஜாதா.

"கடவுளே! ஏதோ என் புள்ளைதான் வயசுப்பையன், சினிமாநடிகையைப் பார்க்கணுமுன்னு மொட்டை மாடிக்கு ஒடுறான்னா, இந்த முக்கால் கிழத்துக்கு இதெல்லாம் அவசியமா?" என்று வாய்விட்டுப் புலம்பினாள் கமலம்.

"என்னம்மா சொல்றே? நான் ஒண்ணும் பாமாவைப் பார்க்க மொட்டைமாடிக்குப் போகலை! எனக்கு பின்மண்டையிலே லேசா சொட்டை விழ ஆரம்பிச்சிருக்கு! தினமும் சூரிய ஒளிபட்டா, விட்டமின் டி சேர்ந்து முடிவளருமுன்னு வாரமலர்-லே போட்டிருந்தது. அதுக்குத் தான் போய் வெயில்லே நிக்குறேன். நானாவது அந்த சப்பை ஃபிகரைப் பார்க்கிறதாவது...?" என்று பொரிந்து தள்ளினான் சுரேஷ்.

"ஆனா, உங்கப்பா மண்டையிலே சூரிய ஒளிபட்டா முடியா வரப்போவுது? மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு யூனிட் எலெக்ட்ரிசிட்டி கிடைச்சாலும் கிடைக்கும். கண்டிப்பா அவரு பாமாவைப் பார்க்குறதுக்குத்தான் போயிருக்காரு!" என்று கமலம் அழுதுபுலம்பத் தொடங்கியபோதே வாசலில் அழைப்புமணிச் சத்தம் கேட்டது. சுரேஷ் போய் கதவைத் திறந்ததும்....

"நான் கட்டிட மேஸ்திரி! இவரு இன்ஜினியர்! உங்க வீட்டு மொட்டைமாடியிலே ஒரு பாத்ரூம் அர்ஜெண்டாக் கட்டணுமுன்னு குப்புசாமி இப்பத்தான் போன் பண்ணியிருந்தாரு! அப்புறம் உங்க வீட்டு டைனிங் ஹாலிலேருந்து மொட்டை மாடிக்கு புதுசா ஒரு ஹைட்ராலிக் கன்வேயர் வைக்கணுமாம்! காப்பி, டிபன், சாப்பாடு எல்லாத்தியும் அதுலே வச்சு பட்டனை அமுத்தினா அது ஜிங்குன்னு மொட்டைமாடிக்குப் போயிரும்! அதான் வேலையை ஆரம்பிக்க வந்திருக்கோம்!"

அவர்கள் போனதும்,"உங்கப்பா நம்மளையெல்லாம் விட்டுட்டு மாடியிலே தனிக்குடித்தனம் போயிருவாரு போலிருக்குதே!" என்று அரற்றினாள் கமலம். அப்போது மீண்டும் அழைப்புமணி!

"ஐயாவோட சோபா, மேஜை, நாற்காலி எல்லாத்தியும் மொட்டைமாடியிலே கொண்டு வைக்கச்சொல்லி இப்பத்தான் போன் பண்ணினாரு!" என்று கூறியபடி வந்தவர்கள் சாமான்களை நகர்த்தியபடி மாடிப்படி ஏறத்தொடங்கினார்கள்.

"நல்ல வேளை, காரை மொட்டைமாடிக்குக் கொண்டுவரச் சொல்லலை அப்பா!" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான் சுரேஷ்.

இப்போது, கமலத்தின் செல்போன் சிணுங்கியது. குப்புசாமி...!

"கமலம்! நான் மொட்டைமாடியிலே இருக்கேன்! டிபனையும் காப்பியையும் அனுப்பி வைக்கிறியா?"

"என்னங்க, என்னமோ காஞ்சி ஹோட்டல்லே ரூம் சர்வீசுக்கு போன் பண்ணுறா மாதிரியில்லே பண்ணுறீங்க? என்னாச்சு உங்களுக்கு? நல்லாத்தானே இருந்தீங்க? தேர்தல்லே தோத்ததும் புத்தி பேதலிச்சிருச்சா?" என்று கமலம் கேள்விக்கணை தொடுத்துக்கொண்டிருக்கும்போதே குப்புசாமி இணைப்பைத் துண்டித்திருந்தார்.

"ஊஹும்! வந்த ஆளுங்கல்லாம் போனதும் இதுக்கு உடனே ஒரு முடிவு செஞ்சாகணும்! நானா பாமாவா ரெண்டுலே ஒண்ணு பார்த்தாகணும்! நீங்க ரெண்டு பேரும் வளர்ந்த புள்ளைங்க, என் கூட வந்து அப்பாவுக்குப் புத்திமதி சொல்லணும். சரியா?"

"சரிம்மா!" என்று ஆமோதித்த அண்ணனும், தங்கையும் சிறிது நேரம் கழித்து கமலத்துக்குத் துணையாக மொட்டைமாடிக்குச் சென்றபோது, குப்புசாமி கைகட்டியபடி மொட்டைமாடியின் குட்டைச்சுவரருகே நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

"அடப்பாவி மனிசா! உங்களுக்கு என்னய்யா குறை வச்சேன்? இந்த வயசுலே சினிமா நடிகை பாமாவை, அதுவும் என் கண் முன்னாடியே பார்த்து இளிச்சிக்கிட்டு நிக்குறீங்களே? இது உங்களுக்கே நல்லாயிருக்கா?" என்று கதறிய கமலத்தின் கண்களிலிருந்து கார்ப்பரேஷன் தண்ணீர் டாங்கர் போல ஒழுகி ஆறாய்ப் பெருக்கெடுத்தது.

"அப்பா, நீங்க இப்படிப்பட்ட ஆளாயிருப்பீங்கன்னு நான் கனவுலே கூட நினைக்கலே!" என்று சுரேஷ் தொடர்ந்தான். "இந்த வயசுலே இப்படியெல்லாமா விபரீத ஆசை வரும்? அதுவும் போயும் போயும் நடிகை பாமாவை...உங்க ரசனை ஏம்பா இவ்வளவு மட்டமா இருக்கு?"

"அப்பா! நான் பேச வேண்டிய டயலாக் ஒண்ணுமில்லேப்பா! இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போறீங்க?" என்று சுஜாதாவும் சேர்ந்து கொண்டாள்.

"வாயை மூடுங்க எல்லாரும்!" என்று சீறினார் குப்புசாமி. "நானும் போனாப்போகுன்னு பேச விட்டா, மூணு பேரும் திக்விஜய் சிங்கை விட அபத்தமாப் பேசிட்டிருக்கீங்களே? நான் எதுக்கு மொட்டைமாடிக்கு வந்திருக்கேன்னு தெரியுமா?"

"தெரியுமே, நடிகை பாமா வெளிநாட்டுலேருந்து திரும்பியாச்சுன்னு பேப்பர்லே நியூஸைப் படிச்சிட்டுத்தானே இப்படி பரபரக்க ஓடி வந்திங்க?" என்று ஜேட்மலானியின் ஜேஷ்டபுத்திரி போல வினவினாள் கமலம்.

"நாசமாப் போச்சு! அதே பேப்பர்லே, அதே பக்கத்துலே இன்னொரு நியூஸ் வந்திருக்குதே, அது உங்க கண்ணுலே படலியா?" என்று கொந்தளித்தார் குப்புசாமி.

"என்ன நியூஸ்?"

"நம்ம சி.எம்.அம்மா ஹெலிகாப்டருலே சிட்டியைச் சுத்திப் பார்க்குறாங்களாம்.. எதிர்க்கட்சியிலே இத்தனை வருசமிருந்து ஒரு புண்ணியமுமில்லை. எப்போ சம்மன் வருமோ, எப்போ வாரண்ட் வருமோன்னு பயந்திட்டிருக்கேன். அதுனாலே தான் அம்மா ஹெலிகாப்டர்லே நம்ம வீட்டுப்பக்கமாப் போனா ஒரு பெரிய கும்பிடு போட்டு, மொட்டைமாடியிலேருந்து அப்படியே லாயிட்ஸ் ரோட்டுக்குள்ளே குதிச்சுக் கட்சிதாவலாமான்னு யோசிச்சேன். அதைப் புரிஞ்சுக்காம, என்னைப் பத்தித் தாறுமாறாப் பேசிட்டீங்களே?" என்று குமுறிக் குமுறி அழத்தொடங்கினார் குப்புசாமி.

"ஐயையோ, தப்பு நடந்திருச்சுங்க! இத்தனை வருசம் உங்களோட குடித்தனம் நடத்தியும், இந்த மாதிரி விசயத்துலே எல்லாம் உங்களுக்கு சாமர்த்தியம் கிடையாதுன்னு புரிஞ்சுக்காமப் பேசிட்டேனுங்க!" என்று விசும்பினாள் கமலம்.

"சாரி அப்பா!" என்று சுரேஷும், சுஜாதாவும் மன்னிப்புக் கோரினர்.

"என்னையும் மன்னிச்சிருங்க! உங்க ஆசைப்படியே டிபனை மொட்டைமாடிக்கே கொண்டு வரேனுங்க! உங்களுக்காக ஸ்பெஷலா தோசைக்குத் தொட்டுக்க கபூர்தலா காரச்சட்னி பண்ணியிருக்கேனுங்க!"

"அம்மா! என்னைக் காப்பாத்துங்கம்மா! இவளோட இம்சைச் சமையலைச் சாப்பிடறதுக்கு பதிலா, என்னையும் ஏதாவது கேசுலே புக் பண்ணி உள்ளே போட்டிருங்க தாயே!" என்று வானத்தை நோக்கிக் கைகூப்பினார் குப்புசாமி.

33 comments:

நாய் நக்ஸ் said...

ஹாப்பி பிரிண்ட்ஷிப் டே

சாந்தி மாரியப்பன் said...

செம சேட்டை :-)))))

நிரூபன் said...

வணக்கம் சகோ,
என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்,

நிரூபன் said...

"என்னமோ தெரியலே, எதிர்வீட்டுலே நடிகை பாமா குடிவந்ததுலேருந்து மொட்டைமாடியை விட்டுக் கீழே இறங்கவே மாட்டேங்குறான் அண்ணன்!"//

ஆமா,,,எந்த அண்ணன்?
நம்ம சேட்டை அண்ணன் இல்லைத் தானே?

நிரூபன் said...

அப்புறம் மதியானம் மணத்தக்காளி போட்டு மோர்க்குழம்பு தான்! அவன் தங்கக்கம்பி!"//

ஆகா...இந்த மாதிரித் தண்டனையினை, கமலம் வீட்டில் கொடுப்பது போன்று ஜெயிலில் கொடுத்தால், பல குற்றவாளிங்க தொகை குறையுமே;-)))

நிரூபன் said...

போதுமே! மொட்டைமாடியிலேருந்து பார்த்தா பாமா வீட்டு ஹால் தெரியுது. பால்கனி தெரியுது. அதான் உன் புள்ளை எக்சர்சைஸ் பண்ணறேன் பேர்வழின்னு மொட்டைமாடியே கதியாக் கிடக்கிறான்! தெரியுமா?//

அப்படீன்னா அவங்க ஜன்னல் வைச்ச ஜாக்கட் தெரியுதென்று தானே
அர்த்தம்;-))))

நிரூபன் said...

"இப்படித்தான், நேத்திக்கு பேப்பர் படிச்சிட்டே சாப்பிடும்போது, ஏதோ ஜோக்கைப் படிச்சிட்டுச் சிரிச்சதுலே உங்களுக்குப் புரையேறிடுச்சு!"//

ஐயோ....ஐயோ...காளியம்மா என்னைக் காப்பாத்து.
செம டைம்மிங் காமெடி.

நிரூபன் said...

"அது ஜோக் இல்லை; டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விட்டிருந்தாரு!" என்றார் குப்புசாமி.//

சீமான் அனல் பறக்கப் பேசியிருந்தார் என்பதையும் சேர்த்திருக்கலாமில்லே.

நிரூபன் said...

"அம்மா! உனக்கு எத்தனை வாட்டி சொல்றது, இந்த மாதிரி புதுசு புதுசா வாழைத்தண்டு சட்னி, சேப்பங்கிழங்குத் துவையலெல்லாம் பண்ணாதேன்னு! பாரு, அப்பா மாடியிலேருந்து கீழே குதிக்கப் போயிட்டிருக்காரு!" என்று கருவினாள் சுஜாதா.//

அவ்...இந்தத் தண்டனையும் சூப்பரா இருக்கே.

நிரூபன் said...

"என்ன அநியாயண்டி இது?" கமலம் மலைத்துப்போய் நின்றாள். "அதுக்குத்தான் தலை தெறிக்க மொட்டை மாடிக்கு ஓடுறாரா இந்த மனுசன்? பேரன், பேத்தியெடுக்கிற வயசுலே இவரு புத்தி ஏன் இப்படிப்போகுது?"//

அடடா....மகன் பார்க்க வேண்டிய நடிகையை, தகப்பன் தேடி ஓடுறாரே..
இந்தக் காலத்துப் பெருசுங்களைப் பற்றி நன்றாகப் புரிந்து தான் எழுதியிருக்கிறீங்க.

நிரூபன் said...

எனக்கு பின்மண்டையிலே லேசா சொட்டை விழ ஆரம்பிச்சிருக்கு! தினமும் சூரிய ஒளிபட்டா, விட்டமின் டி சேர்ந்து முடிவளருமுன்னு வாரமலர்-லே போட்டிருந்தது. அதுக்குத் தான் போய் வெயில்லே நிக்குறேன். நானாவது அந்த சப்பை ஃபிகரைப் பார்க்கிறதாவது...?" என்று பொரிந்து தள்ளினான் சுரேஷ்.//

ஆகா...இந்த ஐடியாவும் சூப்பரா இருக்கே.

நிரூபன் said...

சமையலால் சங்கடப்படும் குடும்பத்தின் நிலையினையும், பெரிசுகளுக்கு- இந்த வயதிலும் நடிகைகள் மீதுள்ள தீராக் காதலினையும் அழகாக நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீங்க. ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சேட்டை.... :) இரண்டு செய்திகளையும் முடிச்சுப் போட்டு ஒரு நகைச்சுவை இடுகையாக மாற்றி இருப்பது நன்றாக இருக்கிறது நண்பரே. தொடரட்டும் உங்கள் சேட்டை.

Anonymous said...

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

நிரூபன் said...

நம்ம ஊரில் ஒரு கதை சொல்லுவார்கள். உங்கள் பதிவினைப் படித்ததும் தான் நினைவிற்கு வந்திச்சு,
எங்கள் ஊரில் வெற்றிகரமாக ஒரு படம் ஓடிக் கொண்டிருந்திச்சாம்,
நடிகை குளிக்கும் குளம்,
ரயில் தண்டவாளத்திற்கு மறு கரையில் இருக்கும் வண்ணம் படத்தில் ஒரு காட்சி வரும்.

அதாவது நடிகை குளிப்பதற்காக ஆடையினை அவிழ்க்கும் சமயத்தில்
ரயில் வேகமாக வந்து, நடிகையினைப் பார்க்க முடியாதவாறு மறைத்து விடுமாம்.

ஒருத்தன் மட்டும் அதே படத்தைப் பார்க்கப் போறானே எனச் சந்தேகம் கொண்ட அவனது நண்பர்கள்,.
ஏண்டா மச்சி நீ மட்டும் ஏன் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்கிறியே என்று கேட்டார்களாம்?
அதற்கு அவன்,
நடிகை குளிப்பதற்காக ஆடையினை அவிழ்க்கும் சமயம் நாசமாப் போன ரயில் வருது, எப்பவாச்சும் ஒரு நாள் இந்த ரயில் விலகி நடிகையினை முழுமையாகப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற ஆசையில் தான் தியேட்டருக்குப் போறேன் என்றாராரம் அந்த அப்பாவி;-)))))

ரிஷபன் said...

இத்தனை வருசம் உங்களோட குடித்தனம் நடத்தியும், இந்த மாதிரி விசயத்துலே எல்லாம் உங்களுக்கு சாமர்த்தியம் கிடையாதுன்னு புரிஞ்சுக்காமப் பேசிட்டேனுங்க

இதைக் கேட்ட பிறகுமா அவர் குதிக்கல?

Anonymous said...

லாயட்ஸ் ரோட்டை அவ்வை சண்முகம் சாலைன்னு மாத்திட்டாங்களே சேட்டை. உஷாரு. ராமதாஸ் கிட்ட மாட்டிக்க போறீங்க!

இராஜராஜேஸ்வரி said...

"அம்மா! என்னைக் காப்பாத்துங்கம்மா! இவளோட இம்சைச் சமையலைச் சாப்பிடறதுக்கு பதிலா, என்னையும் ஏதாவது கேசுலே புக் பண்ணி உள்ளே போட்டிருங்க தாயே!" என்று வானத்தை நோக்கிக் கைகூப்பினார் குப்புசாமி./

நண்பர் தின நல்வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"சீக்கிரம் போண்ணா! அப்பா இன்னும் உயில் கூட எழுதலை!" என்று சுஜாதாவும் அவசரப்படுத்தவே, சுரேஷ் டிபனை விட்டுவிட்டு மாடிப்படியை நோக்கி விரைந்தான்.//

நல்ல நகைச்சுவை விருந்து.
வாழ்த்துக்கள். அன்புடன் vgk

சேலம் தேவா said...

அரசியல் துணுக்குகளை கோர்த்தவிதம் அருமை சேட்டை..!! :)

ஈரோடு கதிர் said...

||தினமும் சூரிய ஒளிபட்டா, விட்டமின் டி சேர்ந்து முடிவளருமுன்னு||

மெய்யாலுமா சார்!?

settaikkaran said...

//NAAI-NAKKS said...

ஹாப்பி பிரிண்ட்ஷிப் டே//

ஸேம் டு யூ! மிக்க நன்றி!

settaikkaran said...

//அமைதிச்சாரல் said...

செம சேட்டை :-)))))//

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் சகோ,என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்,//

வாங்க சகோ! மனம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துகள் உங்களுக்கும்!

//ஆமா,,,எந்த அண்ணன்? நம்ம சேட்டை அண்ணன் இல்லைத் தானே?//

ஆகா, அடிமடியிலேயே கைவைக்கறீங்களே சகோ...! :-)

//ஆகா...இந்த மாதிரித் தண்டனையினை, கமலம் வீட்டில் கொடுப்பது போன்று ஜெயிலில் கொடுத்தால், பல குற்றவாளிங்க தொகை குறையுமே;-)))//

அங்கே களியும் கீரைச்சுண்டலும் தானாம். சேட்டை, உனக்கு எப்படித் தெரியும்னு கேட்டிராதீங்க சகோ! கேள்விப்பட்டது.

//அப்படீன்னா அவங்க ஜன்னல் வைச்ச ஜாக்கட் தெரியுதென்று தானே அர்த்தம்;-))))//

ஐயையோ, நான் பார்க்கலீங்க, சுரேஷையோ குப்புசாமியையோ தான் கேட்கணும்! :-)

//ஐயோ....ஐயோ...காளியம்மா என்னைக் காப்பாத்து. செம டைம்மிங் காமெடி.//

அது என் கையிலே வந்து மாட்டணுமுன்னு காளியம்மா கட்டளை போலிருக்குது! :-)

//சீமான் அனல் பறக்கப் பேசியிருந்தார் என்பதையும் சேர்த்திருக்கலாமில்லே.//

அவர் என்னிக்கு பனியுருகப் பேசியிருக்கிறாரு சகோ? :-))

//அவ்...இந்தத் தண்டனையும் சூப்பரா இருக்கே.//

உங்களுக்கு சூப்பராயிருக்குது சகோ, அவங்களுக்கு எப்படியிருக்கும் பாவம்?

//அடடா....மகன் பார்க்க வேண்டிய நடிகையை, தகப்பன் தேடி ஓடுறாரே..
இந்தக் காலத்துப் பெருசுங்களைப் பற்றி நன்றாகப் புரிந்து தான் எழுதியிருக்கிறீங்க.//

குப்புசாமியோட மனைவி தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க, இதுக்குப் பேருதான் மிசஸ்-அண்டர்ஸ்டாண்டிங்! :-)

//ஆகா...இந்த ஐடியாவும் சூப்பரா இருக்கே.//

ஓஹோ! உங்களுக்குமா? புரியுது புரியுது...! :-)

//சமையலால் சங்கடப்படும் குடும்பத்தின் நிலையினையும், பெரிசுகளுக்கு- இந்த வயதிலும் நடிகைகள் மீதுள்ள தீராக் காதலினையும் அழகாக நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறீங்க. ரசித்தேன்.//

மிக்க நன்றி சகோ! எழுதிய வரிகளை எடுத்துப்போட்டு, அதை வருணித்து ரசித்து பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே! :-))

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல சேட்டை.... :) இரண்டு செய்திகளையும் முடிச்சுப் போட்டு ஒரு நகைச்சுவை இடுகையாக மாற்றி இருப்பது நன்றாக இருக்கிறது நண்பரே. தொடரட்டும் உங்கள் சேட்டை.//

வாங்க வெங்கட்ஜீ! உண்மையிலேயே இது மாதிரி எழுதி ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங் இருந்தது. உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது மகிழ்ச்சி! மிக்க நன்றி வெங்கட்ஜீ!
:-))

settaikkaran said...

//Reverie said...

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...//

வருக! இதயம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துகள்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

நம்ம ஊரில் ஒரு கதை சொல்லுவார்கள். உங்கள் பதிவினைப் படித்ததும் தான் நினைவிற்கு வந்திச்சு, எங்கள் ஊரில் வெற்றிகரமாக ஒரு படம் ஓடிக் கொண்டிருந்திச்சாம், நடிகை குளிக்கும் குளம், ரயில் தண்டவாளத்திற்கு மறு கரையில் இருக்கும் வண்ணம் படத்தில் ஒரு காட்சி வரும்......//

சகோ, அந்தக் கதையை நானும் கேட்டிருக்கிறேன். அப்புறம், அது ரஜினிகாந்த்-ரேவதி நடிச்ச ’கை கொடுக்கும் கை,’ படத்தில் வசனமாய் வரும். நினைவூட்டியதற்கு மிக்க நன்றி சகோ! :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

\\//இத்தனை வருசம் உங்களோட குடித்தனம் நடத்தியும், இந்த மாதிரி விசயத்துலே எல்லாம் உங்களுக்கு சாமர்த்தியம் கிடையாதுன்னு புரிஞ்சுக்காமப் பேசிட்டேனுங்க\\//

//இதைக் கேட்ட பிறகுமா அவர் குதிக்கல?//

குதிக்கிற ஆளாயிருந்தா ராயலசீமா ரவாகேசரிக்கே குதிச்சிருப்பாரே? :-))
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

லாயட்ஸ் ரோட்டை அவ்வை சண்முகம் சாலைன்னு மாத்திட்டாங்களே சேட்டை. உஷாரு. ராமதாஸ் கிட்ட மாட்டிக்க போறீங்க!//

அதுக்கென்ன, இன்னும் மவுண்ட் ரோடுன்னு சொல்றதில்லையா? :-))
உண்மையிலேயே ராமதாஸ் கிட்டே மாட்டிக்கக்கூடாது. கட்சியிலே சேரச் சொல்லிட்டாருன்னா...? :-)))

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//இராஜராஜேஸ்வரி said...

நண்பர் தின நல்வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவை விருந்து.//

மிக்க நன்றி சார்! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

அரசியல் துணுக்குகளை கோர்த்தவிதம் அருமை சேட்டை..!! :)//

வாங்க, மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//ஈரோடு கதிர் said...

||தினமும் சூரிய ஒளிபட்டா, விட்டமின் டி சேர்ந்து முடிவளருமுன்னு||

மெய்யாலுமா சார்!?//

வாங்க கதிர், வாரமலர்-லே போடுறதைக் கூட நம்பலாம். என் நக்கலையெல்லாம் நம்பலாமா? :-))
மிக்க நன்றி கதிர், ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க! :-)