Saturday, August 13, 2011

பாளையங்கோட்டையும் பால்ய சேட்டையும்

சுதந்திரதினம் குறித்து புதிதாய் என்ன எழுத இருக்கிறது? நிரம்ப வாசித்து, ஆழமாய் யோசித்து, சமநிலையிலிருந்து சுதந்திர இந்தியாவை நோக்குபவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஒதுங்கி நின்று அரவமெழுப்பாமல் வாசித்துப்போவதே எனது அறியாமையை அம்பலப்படுத்தாமலிருக்க சரியான வழி! ஒவ்வொரு ஆகஸ்ட் 15-ம் ஒரு நினைவூட்டல் என்றளவில், அத்துடன் தொடர்புடைய கொண்டாட்டங்களையும், அதுகுறித்த எதிர்மறை எகத்தாளங்களையும், தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளையும் இயன்றவரை சலனமின்றி கவனித்துப்போவது போதுமென்று தோன்றுகிறது. ஆனால், இந்த சுதந்திரதினம், தேசபக்தி போன்ற பெரிய வார்த்தைகளைப் பதம்பிரித்துப் பொருள்விளக்கிய பால்ய நினைவுகளை எப்படி மறப்பது?

முதன்முதலாய் ’தேசபக்தி’ என்றால் என்ன என்ற கேள்வி எப்போது எழும்பியது என்று யோசித்தால், பாளையங்கோட்டை தான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது.

எனது பள்ளிப்பிராயத்தின் பெரும்பாலான கோடை விடுமுறைகள் பாளையங்கோட்டையில் தான் கழிந்தன. நெல்லையிலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் படிக்கட்டுகளுடன் உயரமான பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டபொம்மன் சிலையைக் காணாமல் செல்ல முடியாது. கடைசியாய்ப் போயிருந்தபோதும், அந்தக் கட்டபொம்மன் சிலையைக் கண்டு, பரிச்சயமாய் புன்னகைத்தது ஞாபகமிருக்கிறது.

அந்தச் சிலையை ஒட்டி அமைந்திருந்த (அல்லது, இன்னும் அமைந்திருக்கும் என்று நான் நம்புகிற) ஐயாச்சாமி காம்பவுண்டில்தான் என் கொள்ளுப்பாட்டியின் வீடு இருந்தது. அதற்கு அடுத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் அமைந்திருந்தது. கொஞ்சம் எட்டி நடந்தால் சரோஜினி பூங்கா! இன்னும் கொஞ்சம் காலாற நடந்து, சேவியர்ஸ் கல்லூரியைத் தாண்டினால் இன்னுமோர் பூங்கா!

மாற்றாக, நெல்லை ஜங்ஷனை நோக்கி நடந்தால் வ.உ.சி.விளையாட்டு மைதானம். கால்பந்து,கிரிக்கெட், என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கும். கையில் கொஞ்சம் சில்லறையிருந்தால், காளி மார்க் வரை நடந்து சென்று போவண்டோ குடிக்கலாம். பாளை பேருந்து நிலையத்தில் வாழைப்பழம், நொங்கு போட்ட நன்னாரி சர்பத் அல்லது வெள்ளரிப்பிஞ்சுடன் குளிர்மோர்! இரயில் பார்க்கும் ஆசையில் ஏறக்குறைய பாளை சிறை வரைக்கும் பலமுறை நடந்து போயிருக்கிறேன். பாளை அசோக்கில் மேட்னி ஷோ! சில சமயங்களில் டவுண் பஸ் பிடித்து ஜங்ஷனுக்குப் போய், சாலைக்குமார சாமி கோவில்! லட்சுமிவிலாஸ் புராதன மிட்டாய்க்கடையில் சுடச்சுட அல்வாய்! சென்ட்ரல் கபேயில் தூள் பக்கோடாவும் பாதாம் கீரும்! சிவாஜி ஸ்டோர்ஸ்! உட்லண்ட்ஸ் ஹோட்டல்! இந்துக்கல்லூரி மைதானத்தில் நிகழும் பொருட்காட்சிகள்; சொற்பொழிவுகள்! கெட்-வெல் ஆஞ்சநேயர்! ஆஹா, அது ஒரு வசந்தகாலம்.

சிறுவனாக முதலில் என்னை ஈர்த்தது வீட்டருகேயிருந்த கட்டபொம்மன் சிலைதான். முதலில் படிக்கட்டின் கீழிருந்து பார்க்க முயன்று, மெல்ல மெல்ல துணிச்சலுற்று மேலே சென்று, புல்லும் புதரும் மண்டிக்கிடந்தாலும், நெஞ்சு நிமிர்த்தி உறைவாளைப் பிடித்து நிற்கும் அந்த உருவத்தைப் பார்த்தபோது கொஞ்சம் பயந்ததுண்டு. அது ஒரு முச்சந்தி என்பதால், சந்திப்பின் நடுவில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் நிழற்குடையில் நின்றிருப்பார். அடிக்கடி படிக்கட்டில் ஏறும் என்னை அவர் எப்போதாவது கவனித்தால், எனக்குக் குலைநடுங்கும். அதன் பிறகும், ஒவ்வொரு முறையும் படியேறுமுன்னர் அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஏறுவேன். போகப்போக கட்டபொம்மன் சிலையைப் பார்த்து நான் பயப்படுவதை நிறுத்தினேன். அப்பாவிடமும், மாமாவிடமும் கட்டபொம்மன் குறித்துத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, கட்டபொம்மன் சினிமாவைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் ஒரு இனம்புரியாத பெருமிதம் எனக்கு ஏற்பட்டதுண்டு.

என்னமோ தெரியவில்லை; கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலையை ஒருமுறை பார்க்க நேரிட்டபோது சிவாஜியைப் பார்ப்பதுபோலத் தோன்றியதேயன்றி கட்டபொம்மனை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

ஆனால், கல்லூரிப்பருவத்தில் கட்டபொம்மன் மீதிருந்த கவனம் கணிசமாய்க் குறைந்து விட்டிருந்தது. சொல்லப்போனால், "ஈரபாண்டிய எட்டப்பொம்மன்," என்று கல்லூரி விழாவில் ஓரங்க நாடகம் போடுகிற அளவுக்கு, பால்யத்தில் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு நீர்த்துப் போயிருந்தது. அதன் பிறகு எனது நெல்லை விஜயங்களின் போது சாரா டக்கர் மகளிர் கல்லூரி வாசல், பூர்ணகலா, சென்ட்ரல், ஸ்ரீரத்னா, நியூ ராயல் திரையரங்கங்களும், நெல்லை சந்திப்பிலும், டவுணிலும் விடலைப்பயல்களுடன் நாக்கைத் தொங்கப்போட்டபடி சுற்றுவதுமாக திசைமாறியது.

இப்போது கட்டபொம்மன் குறித்து கூடுதலாய் சில தகவல்கள் தெரிந்திருந்தாலும், எனது பிள்ளைப் பிராயத்தில் முதன்முதலாய் அண்ணாந்து பார்த்த அந்த உருவத்தின் மீதிருக்கும் பிரமிப்பும், மரியாதையும் நிறைய மிச்சமிருக்கிறது. அடுத்த முறை நெல்லைக்குப் போனால், கண்டிப்பாக கட்டபொம்மன் சிலையைப் பார்த்து, நானும் எப்போதோ பிள்ளையாய் இருந்திருக்கிறேன் என்பதை மீண்டுமொரு முறை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்போலிருக்கிறது.

இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!

15 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்...

சிறுவயது நிகழ்ச்சிகளை அசைபோடுவதில் தான் என்ன ஒரு சுகம்...

உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

Unknown said...

அருமையான பகிர்வு பாஸ்! செம்ம டச்சிங்!
நீங்கள் பால்யத்தை நினைவு கூர்ந்த விதம் எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரையொன்றை வாசிக்கும் தாக்கத்தைக் கொடுத்தது!

தமிழ்வாசி பிரகாஷ் said...

இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!

Unknown said...

நண்பரே உங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!

ராம்ஜி_யாஹூ said...

பாளை பஸ் ஸ்டாண்ட், கட்டபொம்மன் சிலை, எல் ஐ சி பஸ் ஸ்டாப், புனித இன்ஜாசியர் பெண்கள் கான்வென்ட், கிருஷ்ணா ஹோட்டல் என அற்புதமான பகுதிகள் அவை.

மரியா கேண்டீனில் இருந்து (இன்னும் சொல்லப் போனால் ஹை க்ரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து) பாளை பஸ் ஸ்டாண்ட் வரை வரும் சாலை எனக்கு மிகவும் படித்த சாலி

naanani said...

நீங்க சொல்லாம விட்டதையெல்லாம் ராம்ஜி யாஹூ சொல்லிவிட்டார். பரணி பாடும் தாமிரபரணி ஆற்றையும் அதில் போட்ட 'முங்கையும்' சொல்லலையே? பதிவு மிகவும் அருமையாயிருந்தது. மண் பாசமல்லவா? அங்கேயே பிறந்து வளர்ந்து படித்து உருண்டு புரண்டு வந்தவள் அல்லவா? உங்களோடு நானும் பயணித்தேன். பாராட்டுக்கள்!!

Sivakumar said...

கட்டபொம்மன், வ. உ .சி. போன்ற பல சுதந்திரப்போராட்ட வீரர்களின் வேடங்களை ஏற்று நடித்த சிவாஜி கணேசன் இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறார். நன்றி!

சுபத்ரா said...

பாளை பஸ்நிலையத்துக்கு அருகில் இருக்கும் ட்ராபிக் க்ராஸிங்கிற்கு எதிரில் ஒரு பல் மருத்துவமனை மற்றும் ஒரு கண் மருத்துவமனை, இரண்டுக்கும் நடுவில் செல்லும் தெருவில் சென்றுகொண்டே இருந்தால் கடைசியில் வரும் ஏரியாவில் எங்கள் வீடு! :)

முதன்முதலில் எனக்கு ‘ஜன கன மன’ பாடலைக் கேட்டு உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வந்தது பாளை வ.உ.சி. மைதானத்தில் வருடாவருடம் நிகழும் சுதந்தர தின விழா ஒன்றில்(ஆகஸ்ட் 15,2002) வைத்துத் தான்!

நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் சுற்றித்திரிந்த பெருமை எங்களுக்கும் இருக்குல்லா.. :)

சுபத்ரா said...

இனிய சுதந்தர தின நல்வாழ்த்துகள்!

Ponchandar said...

மரியா கேண்டீன் அருகே இருக்கும் மிலிட்டரி கேண்டீன் மாதம் ஒரு முறை நான் செல்லுமிடம். விமானப் படையிலிருந்து ஓய்வு பெற்றபின் சரக்கு மற்றும் பொருட்கள் வாங்க செல்லுமிடம். வாலிப வயதில் தென்காசியிலிருந்து நெல்லைக்கு சைக்கிளில் வந்து இரண்டு படங்கள் பார்த்துவிட்டு இரவில் திரும்பியிருக்கிறேன். இனிமையான நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டீர்கள் ! ! பாராட்டுகள் ! !

இங்கே வடையெல்லாம் கிடைக்காது! - இதற்கு தனியாக ஸ்பெஷல் பாராட்டு

G.M Balasubramaniam said...

முதலில் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். பின்னூட்டமிட்டவர்களின் நினைவுகளையும் கிளறி விட்டீர்கள் என்பதை உணர முடிகிறது. அரும்பாடு பட்டுக் கிடைத்த சுதந்திரம் அருமை உணரப்படவில்லையோ என்று சில சமயம் தோன்றுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு நாம் முன்னேற வில்லை என்றாலும். என் போன்றோர் கணிசமான முன்னேற்றத்தைக் காண்கிறோம். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். I am afraid that we have only learnt to take things for granted.

ஸ்ரீராம். said...

நெல்லைக் காரரா....விகடனில் சுகா கட்டுரை வாசித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். கட்டபொம்மனும், வ வு சி யும் சிவாஜி உருவில்தான் நமக்குப் பழக்கம். உண்மை உருவில் சிலையோ படமோ கண்டால் ஏற்க மறுக்கும் மனம்!

ரிஷபன் said...

சிவாஜிதான் வ.உ.சி., கட்டபொம்மன் என்று அடையாளம் காட்டினாலும் வளர்ந்த பின்னர் நமக்கான புரிதல்கள் வந்து விட்டதே சேட்டை..

M.R said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்